வெள்ளி, 30 அக்டோபர், 2015

முதியோர்கள் இருக்கும் இடம் !

முதியோர்கள் இருக்கும் இடம் !

நம்முடைய பண்டைய கால பழக்க வழக்கங்கள் .

தாய் தந்தையர்கள் முதுமை அடைந்து விட்டால் மகன் வீட்டில்தான் இருக்க வேண்டும் மகள் வீட்டில் இருந்தால் கேவலம்,மரியாதை இருக்காது என்பதை எல்லாம் சொல்லி வைத்து விட்டார்கள் அவை முற்றிலும் தவறான செய்தி களாகும் .

தாய் தந்தையர்கள் சொத்து சம்பாதித்து வைத்து இருந்தால் ,அதில் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து,சீர் செலுத்தி விட்டால் போதுமானது .மீதி உள்ள சொத்துக்கள் யாவும் மகனுக்கு சொந்தமாகி விடும் .
இவை நம் நாட்டிலே தொன்று தொட்டு நடந்து வருகின்றது.

சொத்து அனைவருக்கும் சமம் என்று சட்டம் சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை .

தாய் தந்தையர் சொத்தை மகன் அனுபவிக்கிறான் என்பதால் மகனும் மருமகளும் இறுதிவரை நம்மை கண் கலங்காமல் காப்பாற்றுவார்கள் என்பதால் முதியோர்கள்  மகன் வீட்டிலே தங்கி அவர்களுடைய காலத்தை கழித்து வந்தார்கள்.

இப்போது அப்படி இல்லை காலம் மாறிவிட்டது முதியோர்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதியோர்கள் முதியோர் இல்லங்கள் .அநாதி இல்லங்கள் தேடி கண்ணீரும் கவலையுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

எவ்வளவுதான் பணம் இருந்தாலும் அன்பு காட்ட ,ஆசை வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள ஆட்கள் இல்லாமல் அவதிப் படுகின்றார்கள்.

இந்த நிலை மாற வேண்டும் /

தாய் தந்தையர்கள்  மகன் வீட்டில் இருக்க நினைத்தால் முதியோர்கள்,அனாதியர் இல்லங்களைத் தேடி அலைய வேண்டியதுதான் .

முதியோர்கள் மகள் வீட்டில் இருப்பதுதான் சாலச்சிறந்தது .

முதியோர்கள் சம்பாதித்த சொத்தை மகன் மகள் என்ற பேதம் இல்லாமல் அனைவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுத்துவிட்டு,தங்கள் பாதுகாப்பிற்கு ஒரு பங்கை எடுத்துக் கொண்டு மகள் வீட்டில் இருந்தால் பிரச்சனைகள் வராது .

மகள் எப்போதும் தாய் தந்தையர் மீது அதிக. பாசம் அன்பு வைத்து காப்பாற்றுவார்.ஏன் என்றால் அவர்களுடைய இரத்த சம்பந்தம்

மருமகன் தடுத்தாலும் அதை மகள் ஏதாவது ஒரு வகையில் சரி செய்து விடுவாள்

மகளுக்கும் தாய் தந்தையர் பாசத்துடன் துணையாக இருக்க வாய்ப்பு உண்டாகும்.

மகன் தாய் தந்தையர மீது அதிக பாசம் வைத்து இருந்தாலும் .மருமகளுக்கு அந்த அளவிற்கு பாசம் இருக்காது .இது இயற்கையின் நியதி .

அதே மருமகளுக்கு அவள் தாய் தந்தையர் மீதுதான் அதிக பாசம் இருக்கும்.இதுதான் உண்மை இதை யாரும் மறுக்க முடியாது .

எனவே முதியோர்கள் மகன் வீட்டில் இருக்க நினைத்தால் முதியோர் இல்லங்களுக்கும் .அநாதி விடுதிகளுக்கும் செல்ல நேரிடும்.

முதியோர்கள் பழைய பழக்க வழக்க குப்பைகளை தூக்கி எரிந்து விட்டு கவுரவம் பார்க்காமல்,வயது முதிர்ந்து விட்டால் ,தங்களிடம் இருப்பதை மகளிடம் கொடுத்து விட்டு  மகள் வீட்டில் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கையாகும் .

இறுதிவரை மகன் வீட்டில் இருக்கலாம் என்று நினைத்தால் அன்பு காட்ட ஆள் இல்லாமல் ஆதரவு காட்ட ஆள் இல்லாமல் ,நேரத்திற்கு உணவு கொடுக்க ஆள் இல்லாமல் அவமானம் உண்டாகி அலைச்சல் பட  நேரிடும்.

இனி இளமை மறைந்து முதுமை வரும் முதியோர்களே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

இது யாரையும் குறை கூ றுவது அல்ல இது காலத்தின் கட்டாயம் .

காலங்கள் மாறும்போது நாமும் மாற வேண்டியதுதான் .

முதியோர்கள் மகன் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் மகள் வீட்டில் இருப்பதுதான் சிறந்தது என்பதை உணர்ந்து வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள் .

முதியோர் இல்லங்களுக்கும் அநாதி இல்லங்களுக்கும் சென்று அனாதிகளாய் இல்லாமல் மகள்,மருமகன்  பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழுங்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

வியாழன், 29 அக்டோபர், 2015

முட்டாளுக்கும் அறிவாளிக்கும் என்ன வித்தியாசம் !

முட்டாளுக்கும் அறிவாளிக்கும் என்ன வித்தியாசம் !

முட்டாள் எதையும் படிக்காமல் பேசுவான் .

அறிவாளி படித்ததைப் பேசுவான் .(அதாவது உண்டதை  வாந்தி எடுப்பது போல் )

இரண்டு பேருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

அனுபவமும் அறிவும் இரண்டு பேருக்கும் இல்லை .

அனுபவமும் அறிவும் பெற்றவனே அறிவு உள்ளவன்.

பிறர் எழுதியதைப் படிக்காமலும் பிறர் பேசுவதைக் கேட்காமலும் ஆன்ம அறிவினால்,உண்மை  அனுபவத்தை அறிந்தவனே .முற்றும் தெரிந்த அறிவு பெற்றவன் .

அவன்தான் ஞானி ..அவன்தான் அருளாளன் ...அவன் சொல்லுவது எல்லாம் அறிவு சார்ந்த உண்மை அனுபவமாய் இருக்கும்...

ஆன்ம அறிவைக் கொண்டு, கடவுள் இடம் அருள் அறிவைப் பெற்று உலகத்திற்கு உண்மையைச் சொன்ன ஒரே நபர் வள்ளல்பெருமான் ஒருவரே !

அவர் போதித்த ''சுத்த சன்மார்க்க கொள்கைகள்'' ஒன்றுதான் அறிவும் அனுபவமும் சார்ந்தது ,அவற்றைப் பின் பற்றினால் நாமும் அறிவும் அனுபவமும் பெறலாம்.

வள்ளலார் சொல்லியது ;--

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி

நான் உரைக்கும் வார்த்தை அன்று நாட்டீர் நான் - ஏனுரைப்பேன்

நான் யார் எனக்கு என ஞான உணர்வு ஏது சிவம்

ஊனாடிநில்லா வழி !

என்பார் .மனிதனுக்கு உண்மையை அறியும் அறிவு இருக்கின்றது ஆனால் ஞான அறிவு என்பது இல்லை .

அந்த ஞான அறிவை இறைவன் இடம் இருந்துதான் பெற வேண்டும்.என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஞான அறிவைப் பெற்றதினால் நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் இறைவனிடம் பெற்றது என்கின்றார் .

நாமும் வள்ளலாரைப் போல் இறைவனிடம் ஞான அறிவைப் பெறலாம்.ஞான அறிவைப் பெற்றவனே உண்மையை அறிந்தவன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

புதன், 28 அக்டோபர், 2015

நான் சிலைகளை வணங்குவது இல்லை !

நான் சிலைகளை வணங்குவது இல்லை !

நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ,மற்றவர்களைப் போல் ...கடவுள் சிலைகளில் உள்ளார் என்று நினைந்து எல்லா சிலைகளையும் வணங்கினேன்.

அப்போது எனக்கு அறிவு என்பதே இல்லாமல் இருந்தது..

வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பாவைப் படித்துப் பார்த்து உணர்ந்து ,அறிந்து கடவுள் சிலைகளில் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்

உயிர் உள்ள இடத்தில் கடவுள் உள்ளார் !

உயிர் உள்ள எல்லா ஜீவன்களிலும் கடவுள் உள்ளார் என்பதை அறிந்தேன்

''ஆன்ம என்னும் உள் ஒளி'' இல்லை என்றால் உயிர் தோன்றாது என்பதை அறிந்தேன்.

ஆன்மா என்னும் உள் ஒளிதான் கடவுளின் ஒரு சிறிய கூறாகும்.அதுதான் கடவுளின் ஏக தேசம் என்பதாகும் என்பதாகும் அறிந்தேன்.

எனவே உயிர் உள்ள ஜீவன்களை நேசிக்க கற்றுக் கொண்டேன்.எல்லா உயிர்களும் என்னுடைய சகோதரர்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.

உயிர்களை இயக்கும் ஆன்மா தான் கடவுள் என்பதை அறிந்தேன் .அந்த உண்மை தெரிந்த பிறகுதான் ''ஆன்ம நேய ஒருமைப்பாடு''என்னும் மகா உண்மையை அறிந்தேன் .

நான் வணங்குவது உயிர் உள்ள ஜீவன்களை !.

நான் வழிபடுவது அருட்பெருஞ்ஜோதியை !

எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டவன் எவனோ அவனே அறிவு உள்ளவன் அவனே கடவுள் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.

எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ !

இந்த பாடல்தான் என்னுடைய அறிவுக் கண்ணை திறந்தது ,

வள்ளலார் சொல்லிய வழிபாடு ஜீவகாருண்யம் .

உயிர்களில் இறைவன் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்பதை அறிந்து ,உயிர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குவதே கடவுள் வழிபாடு என்பதை தெரிந்து உயிர்களுக்கு உதவி செய்து வருகின்றேன் .

இதுதான் நான் தினமும் செய்யும் ,என்னுடைய வழிபாடாகும்.

இந்த வழிப்பாட்டால்  எனக்கு அளவு இல்லாத இன்பம் கடவுள் கொடுத்துக் கொண்டே உள்ளார் .

சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை .நீங்களும் முயன்று பாருங்கள் அதனால் உண்டாகும் ஆன்ம லாபத்தை உணர்வீர்கள்.

எனவே சிலைகளை வணங்குவதால் எந்த பயனும் இல்லை.உயிர்களுக்கு உதவி செய்யுங்கள் ..

உங்களுக்கு வரும் துன்பம் துயரம்,அச்சம் .பயம்,பிணி போன்ற எந்த விதமான துயரங்களும் உங்களை நெருங்காது.

உயிர்களுக்கு உதவி செய்தால் உண்மையான இறைவன் உங்களுக்கு பாது காப்பாக இருந்து உங்களை காப்பாற்றுவார் .

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நன்மை என்னவென்று பின்னால் விளங்கும்.

நான் நாற்பது ஆண்டுகளாக வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் கோடு தவறாமல் செயல்பட்டுக் கொண்டும் வாழ்ந்தும் வருகின்றேன்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறேலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

குரு என்பவர் யார் ?

குரு என்பவர் யார் ?

நம் நாட்டில் எதற்கு எடுத்தாலும் குருவைத் தேடி அலைந்து கொண்டு உள்ளார்கள்.

மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்று சொல்லி வைத்துள்ளார்கள் .

அதற்கு அர்த்தம் என்னவென்று புரிந்து கொள்ளாமல் குரு ,குரு என்று அலைந்து கொண்டு உள்ளார்கள்.

மாதா .பிதா,குரு என்ற மூவர்க்கும் தெய்வம்தான் துணையாக இருக்கின்றது.குருவாக இருக்கின்றது என்பது பொருளாகும்.

குருவின் அடையாளம் !

அருளைப் போதிப்பவன் தான் குரு .பொருளை சம்பாதிக்க போதிப்பவன் குருவல்ல .

குரு என்பவருக்கு .நரை,திரை,பிணி ,மூப்பு,பயம் மரணம் என்பது வரக்கூடாது .

சாதி,சமயம்,மதம் என்ற பேதம் இருக்கக் கூடாது.

குரு என்பவர் பஞ்ச பூத உணவை உட் கொள்ளக் கூடாது.

குரு என்பவருக்கு சுக்கிலம் (விந்து) உண்டாகக் கூடாது.

குரு என்பவருக்கு தூக்கம் ( உறக்கம்) வரக் கூடாது.

எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எந்நேரமும் தனித்துத்தான் இருக்க வேண்டும்.

பயம் அறவே வரக் கூடாது.

மலம் ஜலம் வரக் கூடாது .

காற்றை சுவாசிக் கூடாது

அமுதக் காற்றைத்தான் சுவாசிக்க வேண்டும்.

பஞ்ச பூதங்களும் அவருடைய உடம்பை விட்டு விலகிச் செல்ல வேண்டும்.

சூரியன் ,சந்திரன்,நட்சத்திரம் போன்ற கிரகங்கள் அவருடைய உடம்பை தாக்கக் கூடாது.

அவரை யாரும் தொட முடியாது .அவரை நேருக்குநேர் யாரும் பார்க்க முடியாது.

மேலே கண்ட அடையாளங்கள் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதை விடுத்து பணம் சம்பாதிப்பவனையும் ,கொள்ளை அடிப்பவனையும் பொய் சொல்லுபவனையும், போலியானவர்களையும், குருவாக ஏற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்.

நமக்கு குரு --எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும்,அவருடைய அருளைப் பெற்ற ,வள்ளல் பெருமான் மட்டுமே குரு.

வள்ளலாருக்கு குரு யார் ?

மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே
அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !

பிறிவு ஏது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம்
அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி .!

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி !

பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து என
அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !

சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி !

என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக விளக்கி உள்ளார் .

வள்ளல்பெருமானுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே குருவாக இருந்து எல்லா நன்மைகளையும் செய்து உள்ளார் .

அதேபோல் நாமும் அருட்பெருஞ் ஜோதியையே குருவாக ஏற்றுக் கொண்டால் எல்லா உண்மைகளையும்,நன்மைகளையும் கொடுத்துக் கொண்டே இருப்பார் .

மேலும் வள்ளல்பெருமான் சொல்லியது ;--

ஆதி அந்தமும் இல்லாத தோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செல்லும் வீதி ௧

என்று தெளிவாக நமக்காக விளக்கி உள்ளார் .

நாம் அருட்பெருஞ்ஜோதியை மான சீக குருவாக ஏற்றுக் கொண்டால் தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் தெரிவிப்பார்.

நீதி கொண்டு உரைக்கின்றேன் என்கின்றார் ,நாம் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக சத்தியம் வைத்து சொல்லுகின்றேன் என்கின்றார் நம்முடைய வள்ளல்பெருமான் .

நாம் மேலே செல்லவேண்டுமானால் மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்தான் குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மற்ற சமய மத மார்க்கங்களைப் போல் சன்மார்க்கத்திலும் போலி குருமார்கள் நிறைய தோன்றி உள்ளார்கள் .அவர்கள் பணம் பறிக்க ஆயுத்தமாகி விட்டார்கள் அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்

மனித குருவைத் தேடி அலையாதீர்கள் .மாண்டு போவீர்கள் .

அருள் குருவைத் (அருட்பெருஞ்ஜோதி )தேடுங்கள் கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திங்கள், 26 அக்டோபர், 2015

சுத்த சன்மார்க்க சொற்பொழிவு !

சுத்த சன்மார்க்க சொற்பொழிவு !

சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரியில் உள்ள சின்னகாவனத்தில் சத்விசாரம் !
25--10--2015.அன்று ஈரோடு கதிர்வேல் அவர்களின் சன்மார்க்க ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகின்றது .
திரு அருட் பிரகாச வள்ளல்பெருமான் தாயார் சின்னம்மை சத்திய தருமச்சாலை, ஞான சபை இல்லத்தில் .
ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக் கிழமை மாலை 4-30 to 7..30,வரையில் வள்ளல்பெருமான் மக்களுக்கு சொல்லிய வாழ்க்கை நெறிகளைப் பற்றி சத்விசாரம் நடைபெறும் .
அதுசமயம் ஒவ்வொரு மாதமும் ஈரோடு கதிர்வேல் அவர்கள் அருள் உரை நிகழ்த்துகின்றார் ..
சென்னையில் உள்ள அன்பர்களும் ,அருகில் உள்ள அன்பர்க்களும்,மற்றும் அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் ,அருள் லாபம் அடைய அன்புடன் அழைக்கின்றோம்.
இங்கனம் .
சின்னகாவனம் ,சன்மார்க்க அன்பர்கள்.
வள்ளலார் தாயார் சின்னம்மையார் அறக்கட்டளை.
சின்னகாவனம் கிராமம்,பொன்னேரி வட்டம்
திருவள்ளுவர் மாவட்டம்,,சென்னை .
செல் ;--7811823355,
ஈரோடு கதிர்வேல் செல் ;--9865939896 ,

பகுத்தறிவு என்றால் என்ன ?

பகுத்தறிவு என்றால் என்ன ?

உண்மையும் அனுபவமும் நிறைந்தது தான் பகுத்தறிவு என்பதாகும்.

கடவுள் இல்லை என்பதும் ,கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்பதும் தான் பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.

கடவுள் இல்லை என்பவனும் அறிவு இல்லாதவன் தான்

கடவுள் பல உண்டு என்பவனும் அறிவு இல்லாதவன் தான்

எல்லோருமே படித்ததும், கண்டதும்,கேட்டதும், ,கற்றதும் , களித்ததும் தெரிந்ததையும் வைத்துக்குக் கொண்டு பகுத்தறிவு என்று பேசிக் கொண்டு உள்ளார்கள்.

பகுத்தறிவு என்பது ,தன்னை உணர்வது,தன்னைப் படைத்த மெய்ப்பொருள் எது? என்பதை அறிவது.

மற்றவர்கள் சொல்லியதை,எழுதியதை படிக்காமல் கேட்காமல் ,கற்காமல் அறியும் அறிவே பகுத்தறிவு என்பதாகும்.

உலகைப் படைத்தவன் யார் ? உயிர்களைப் படைத்தவன் யார் ?,அணுக்களைப் படைத்தவன் யார் ? பஞ்ச பூதங்களைப் படைத்தவன் யார் ? சூரியன் ,சந்திரன,நட்சத்திரங்கள் போன்ற கிரகங்களைப் படைத்தவன் யார் ?

அவைகளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பு என்ன ? நாம் ஏன் பிறக்கின்றோம் .இறக்கின்றோம்.அவை இயற்கையா ? செயற்கையா ? இதுதான் வாழ்க்கையா ? இதற்குமேல் என்ன இருக்கின்றது ? அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது போன்ற ,அறிவும் ஆராய்ச்சியும் உள்ளவன் எவனோ அவனே பகுத்தறிவாளன்.

இந்த உலகத்தில் வள்ளலாரைத் தவிர வேறு எவரும் பகுத்தறிவு உள்ளவன் அல்ல >

வள்ளல்பெருமான் ஒருவரே உலக உண்மைகளை அறிந்தவர் தெரிந்தவர் ,உலகுக்கு  வெளிச்சம் போட்டு காட்டியவர் .

பகுத்தறிவும் அனுபவமும் பெற்று, கண்டு தெரிந்து வாழ்ந்தவர் .வாழ்ந்து காட்டியவர் ,வாழ்ந்து  கொண்டும் இருப்பவர்.

பகுத்தறிவும் அனுபவமும் எப்போது கிடைக்கும் ? அருளைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்.

அருள் எங்கே இருக்கின்றது .? மனிதனின் தலைப்பாகத்தில் ஆன்மா இருக்கும் உள் ஒளியில் அருள் நிறைந்து இருக்கின்றது.

அந்த அருளைப் பூரணமாகப் பெற்றவன் எவனோ அவன் மட்டுமே பகுத்தறிவாளன்.

கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களும் .கடவுள் பல உண்டு என்று அலைந்து திரிந்து, நினைந்து வழிபடுபவர்களும் .அறிவு இல்லாதவர்கள் ,பகுத்தறிவு இல்லாதவர்கள் என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் ;---

கண்டது எல்லாம் அனித்தியமே கேட்டது எல்லாம் பழுதே

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே

உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே

விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க

மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்

இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

எவன் ஒருவன் இறைவன் அருளைப் பெற்று இறவாமல் வாழ்கிறானோ அவனே பகுத்தறிவாளன் .அவனே முற்றும் தெரிந்தவன் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

வெள்ளி, 23 அக்டோபர், 2015

சாதனம் ஒன்றும் வேண்டாம் !

சாதனம் ஒன்றும் வேண்டாம் !

நம்முடைய துன்பம் நீங்குவதற்கும் ,இறைவன் அருளைப் பெறுவதற்கும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும்...தியானம்,தவம்,யோகம்,விரதம்,வழிபாடுகள் போன்ற சாதனம் எதுவும் தேவை இல்லை.

அப்படி ஏதாவது ஒரு சாதனத்தை மற்றவர்கள் சொல்லியபடி கேட்டுச் செய்தால் அதனால் சிறு நன்மைகள் கிடைப்பது போல் தோன்றும்.

அதைக் கண்டு பல் இளித்து இறுமாந்து கெட்டுப்போக நேரிடும்.

ஆதலால் காலம் தாழ்த்தாது ,எல்லா உயிர்களையும் தன்னுடைய உயிர் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொண்டால் அதுவே பெரிய சாதனம்.

எல்லா உயிர்கள் இடத்தில் தயவும்,( ஜீவ காருண்யம் )ஆண்டவரிடத்தில் அன்புமே முக்கிய சாதனமாகும்.

மேலும் வள்ளல்பெருமான் சொல்லியது ''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக மற்று எல்லாம் மருள் நெறி என கொள்ளல் வேண்டும்''

அந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் முழுமையான அருளைப் பெற்றவன் ,அவனே சிறந்த மனிதன்.அவனே இறந்தவர்களை எழுப்புகின்ற வல்லமைப் பெற்றவனாகும்.

மரணத்தை வெல்லும் தகுதிப் பெற்றவன்.

அவனே ஆண்டவனை நேரில் கண்டவன். .அவனே ஆண்டவனும் ஆவான்.

ஒருவன் பிரார்த்தனை செய்ய வேண்டுமானால் அவனுக்காக மட்டும் செய்யக் கூடாது .

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டும்.அப்படிச்செய்தால் அதில் அவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன.

இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.;--

பாதி இரவில் எழுந்து அருளிப் பாவி ஏனை எழுப்பி அருட்
ஜோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓத முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே !

என்பதே பிரார்த்தனை சாதனம் என்பதாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்  

புதன், 14 அக்டோபர், 2015

பசி அதிகரித்த காலத்தில் உண்டாகும் அவத்தைகள் !

பசி அதிகரித்த காலத்தில் உண்டாகும் அவத்தைகள் !

உடலில் ஏற்படும் மாற்றங்கள் ;--

1,ஜீவ அறிவு விளக்கம் இல்லாமல் மயங்குகின்றன.

2,அது மயங்கவே அறிவுக்கு அறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றன.

3,அது மறையவே புருட தத்துவம் சோர்ந்து விடுகின்றது .

4,அது சோரவே பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது

5,அது மழுங்கவே குணங்கள் எல்லாம் பேதப்படுகின்றன.

6,மனம் தடுமாறிச் சிதறுகின்றது

7,புத்தி கெடுகின்றது.

8,சித்தம் கலங்குகின்றது .

9,அகங்காரம் அழிகின்றது.

10,பிராணன் சுழல்கின்றது .

11,பூதங்கள் எல்லாம் புழுங்குகின்றன.

12,வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை தடுமாறுகின்றன.

13,கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது.

14,காது கும்பென்று செவிடு படுகின்றது

15,நா உலர்ந்து வரளுகின்றது.

16,நாசி குழைந்து அழல்கின்றது .

17,தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது. .

18,கை கால் சோர்ந்து துவளுகின்றன

19,வாக்குத் தொனி மாறிக் குளறுகின்றது .

20,பற்கள் தளருகின்றன .

21,மல சல வழி வெதும்பு கின்றது ,

22,மேனி கருகுகின்றது ,

23,ரோமம் வெறிக்கின்றது

24,நரம்புகள் குழைந்து நைகின்றன .

25,நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன .

26,எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்கு விடுகின்றன .

27,இருதயம் வேகின்றன.

28,மூளை சுருங்குகினது .

29,சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது.

30,ஈரல் கரைகின்றது.

31,இரத்தமும் சலமும் சுவருகினறன .

32,மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றன .

33,வயிறு பகீல் என்று எரிகின்றது.

34,தாப சோபங்கள் மென்மேலும் உண்டாகின்றன .

35,உயிர் இழந்து விடுவதற்கு மிகவும் சமீபித்த அடையாளங்களும் ,அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன .

36,பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது ,ஜீவர்களுக்கு எல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.

இவ்வளவு அவத்தைகளும் ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசி நீங்க,, நீங்குகின்றன .

அப்போது தத்துவங்கள் எல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து ,அறிவு விளங்கி ,அகத்திலும்,முகத்திலும் ஜீவ களையும் கடவுள் களையும் துளும்பி ஒப்பில்லாத திருப்தி இன்பம் உண்டாகின்றது .

புண்ணியம் ;--

இப்படிப்பட்ட இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணை என்று சொல்லலாம் ?.சொல்லுவது ?

இந்த புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம் ? சொல்லுவது ?

''எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சம் என்றே சத்தியமாக அறிய வேண்டும்'''..

மேலே கண்ட, பசியினால் வரும் அவத்தைகளைப் போக்குவதே''கடவுள் வழிபாடு'' என்பதைத்தான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார் ..

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு  !.

ஜீவர்களின் பசியைப் போக்குவதே கடவுள் வழிபாடு !

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் கதவைத் திறக்கும் திறவு கோள் என்றார், நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

மோட்ச வீடு என்பது நம்முடைய தலைப்பாகத்தில் உள்ள ஆன்மாவின் இருப்பிடம்.

ஆன்மாவின் உள்ளேதான் அருள் என்னும் திரவம் நிரம்பி உள்ளது.அதை மறைத்துக் கொண்டு உள்ள அறியாமை என்னும் திரைகளை  நீக்கினால்தான் அமுதம் சுரக்கும்.

அதை நீக்கும் வழியைக் கண்டு பிடித்தவர்தான் வள்ளல்பெருமான்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே அத்திரைகளை நீக்க முடியும்.வேறு எந்த வழியாலும் நீக்க முடியாது என்பதை வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக மக்களுக்கு விளக்கி உள்ளார் .

மனிதர்களாகிய நாமும் வள்ளலார் காட்டிய புனிதமான சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி ஜீவ காருண்ய வழியில் நின்று அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்பம் என்னும் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

செவ்வாய், 13 அக்டோபர், 2015

சுத்த சன்மார்க்கிகள் யார் ?

சுத்த சன்மார்க்கிகள் யார் ?

வள்ளலார் காட்டிய  சுத்த சன்மார்க்கக் கொள்கையை முழுமையாக பின்பற்றி கடைபிடிப்பவர்கள் அனைவரும்  ஒரே கடவுள் என்ற உண்மையை ஆழமாக,.முழுமையாக  உணர்ந்து அறிந்து இருக்க வேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மைக் கடவுளைத் தவிர வேறு பொய்யான தத்துவக் கடவுள்களை வழிபடக் கூடாது.

சாதி சமய மதப் பற்றுகளை முழுதும் பற்று அற கை விட்டவர்களும் காமக் குரோதம் முதலிய வைகளை ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்கள் மட்டுமே சுத்த சன்மார்க்கிகள் என்பவர்களாகும்.

அதைவிடுத்து எல்லாத் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வணங்கிக் கொண்டு இருப்பவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்ல,

அவர்கள் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டு உள்ளவர்களாகும்.

அப்படி உள்ளவர்களை சன்மார்க்கிகள் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து உணர்ந்து சன்மார்க்கிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள்.காலம் இல்லை.

கற்பனைக் கடவுகளை தூக்கி அப்புறப் படுத்திவிட்டு உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்யுங்கள்.

மற்றவர்களுக்கும் நல்ல வழியைக் காட்டுங்கள் .

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுக நிலைப் பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

இதயத்தைக் கொடுத்த இறைவன் !

இதயத்தைக் கொடுத்த இறைவன் !

இதயத்தைக் கொடுத்த இறைவனுக்கு உன் இதயத்தை திறந்து வை .

இதயத்தைக் கொடுத்த இறைவனுக்கே உன் இதயத்தைக் கொடு.

இதயம் வெற்று இடமாக இருந்தால் மட்டுமே இறைவன் வந்து அமர்ந்து கொள்வார்.

உன் இதயத்தில் இறைவன் வந்து அமர்ந்தால் அவர்  உமக்கு அருளை வாரி வாரி வழங்குவார்.

அருளைப் பெற்றால் நீ இறைவனாக மாறிவிடுவாய்.

உலகம் எங்கும் அண்டங்கள் எங்கும் எந்தக் கருவிகளின் துணை இல்லாமல் .எந்த தடைகளும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லும் ஆற்றல் என்னும் சக்திக்  கிடைக்கும்.

நீங்கள் இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்லலாம்.

இறைவன் யார் என்பது அப்போதுதான் தெரியும்.

மனிதனின் இதயத்தில் மட்டுமே இறைவன் வந்து அமர்வார்.

உயர்ந்த அறிவுள்ள மனிதன் இதயத்தை திறந்து வைத்தால் மட்டுமே இறைவன் வருவார்,வந்து அமர்ந்து கொள்வார். என்பதை அறிந்து கொண்டு வாழுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

இதயத்தின் வழியாகத்தான் எண்ணங்கள் உதயமாகின்றன.எண்ணங்கள் வழியாகத்தான் இறைவனைத் தேட வேண்டும்.

இதயம் உண்மையான இறைவனைத் தேட வேண்டும் .

வள்ளலார் உண்மையான இறைவனை அறிமுகப் படுத்தி உள்ளார்.

அவர்தான் நமக்கு இதயம் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வராகும்.

உண்மை அன்பால் தேடுங்கள் உடனே இதயத்தில் வந்து அமர்ந்து கொள்வார்.,

அப்புறம் பாருங்கள் உங்களின் வாழ்க்கை எப்படி மாற்றம் அடைகின்றது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்..

உங்களை நீங்களே மறந்து விடுவீர்கள்.

இதயத்தை திறந்து வையுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

எதை தேடவேண்டும் !

எதை தேடவேண்டும் !

எது வசதியானதோ அதைசெய்யாதீர்கள்.  அதை தேடாதீர்கள்

எது சரியானதோ அதைசெய்யுங்கள்.அதை தேடுங்கள்

உண்மை எங்கோ மறைந்து இருக்கின்றது.அதை தேடுங்கள் அவை நிச்சயம் கிடைக்கும்.

உண்மையை  வெளியே தேடாதீர்கள் அவை கிடைக்காது

உள்ளே தேடுங்கள் உண்மை நிச்சயம் கிடைக்கும்.

உன்னுள் இருந்து உன்னை இயக்கும் ''உள் ஒளி உன் சிர நடுவில்'' உள்ளது .

அதை தொடர்பு கொள்ளுங்கள் அதை தேடுங்கள் வாழ்க்கையின் அனைத்து ரகசியங்களும் உள்ளே குவிந்து கிடைக்கின்றன.

அந்த சிர நடுவில்தான் அறிவு என்னும் சுடர் இயங்கிக் கொண்டு உள்ளது.

அறிவைக் கொண்டு அறிவைத் தேடுங்கள் .அருள் என்பதுத் தெரியும்.

மேலும் அருளைக் கொண்டு அருளைத் தேடுங்கள் .இறைவனின் அருள் நடனம் என்னவென்று தெரியும்.

அருள் நடனம் தெரிந்தால் என்றும் அழியாமல் மரணத்தை வென்று வாழலாம் .

தட்டாதீர்கள் கிடைக்காது.தேடுங்கள் கிடைக்கும்.

கருணையும்,அன்பும்,தயவும் கொண்டு தேடுங்கள் .நிச்சயம் இறைவன் அருள் கிடைக்கும்.

வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

அருளாளர்களின் பொதுக் கூட்டம் !


அருளாளர்களின் பொதுக் கூட்டம்.!

30-1-1874,அன்று உலகில் உள்ள அருளாளர்கள் அனைவரையும் .உலகத்தை ஆட்சி செய்யும் அருளாளர்கள் அனைவரையும்  (ஆட்சியாளர்கள் ) அழைத்து அவசரப் பொதுக் கூட்டம் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமையில் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த பரவெளியில் கூட்டப்பட்டது.

அதில் கலந்து கொண்டவர்கள் ;--

உருத்திரர்கள் ஒரு கோடி,பேர்கள்.
நாரணர்கள் பல கோடி பேர்கள்  ,
பிரம்மாக்கள் பல கோடி பேர்கள் ,
இந்திரர்கள் பல கோடி.பேர்கள்

மற்றும் தேவர்கள் ,முனிவர்கள் அளவில்லாத அருளாளர்கள் பலர் கோடிக்கணக்கில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும் உலக அதிபர்கள்...அண்ட அதிபர்கள்...பகிரண்ட அதிபர்கள்...வியோமா  அதிபர்கள்,...பலகோடி பேர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் கரும சித்தர்கள் ,யோக சித்தர்கள்,ஞான சித்தர்கள்,கோடிக் கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

அவர்களை அடுக்கு அடுக்காக,முன்று அடுக்கு வரிசையில்  அமரவைத்தார்கள்

அருளாளர்களின் கூட்டத்தில் நிறை வேற்றப் பட்ட தீர்மானங்கள்.!

இதுவரையில்;;எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள் களையும்,மற்றை எல்லா வற்றையும் ஆட்சி  செய்யும் அதிகாரங்களான ..தோற்றுவித்தல்,...விளக்கம் செய்வித்தல் ...துரிசு நீக்குவித்தல் ...பக்குவம் வருவித்தல் ...பலன் தருவித்தல் என்னும் தலைமைப்பொறுப்பில் இருந்த ஐந்தொழில் கர்த்தாக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில் ;--

இன்று முதல் உங்கள் பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெற்றுக் கொள்ளப் படுகின்றது .நீங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.உங்களுக்கு வேண்டிய ஒய்வு ஊதியம் வழங்கப்படும் .. எனவே உங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விடுங்கள் என்ற தீர்மானம் நிறை வெற்றப் பட்டது,

உங்கள் பதவிகளை ஏன் எதற்க்காக திரும்பப் பெறப்படுகின்றன என்றால்?  .நீங்கள் இதுவரைக்கும் உங்களுக்குக் கொடுத்த பதவிகளை முழுமையாக செயல் படுத்தவில்லை.உயிர்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்யவில்லை,ஒரு உயிர்கள் கூட அருளைப் பெற்று மரணத்தை வெல்லவில்லை,

கதைகளாகவும் கற்பனைகளாகவும் .பொய்யான செய்திகளை போதித்து ஜாதி,சமயம்,மதம்,என்ற பிரிவினைகளை உருவாக்கி உயிர்களை அழித்துக் கொண்டு வந்துள்ளீர்கள் .

சாகாக் கல்வியைப் பற்றியும் அருளைப் பெரும் வழியைப் பற்றியும் ,நீங்கள் ஒருவரும் உயிர்களுக்கு போதிக்க வில்லை.எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,அழிந்து கொண்டே உள்ளன்.ஆதலால் உங்கள் பதவிகள் இன்று பறிக்கப் பட்டன,என்பதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைவருக்கும் தெரிவித்தார்.

அந்த ஐந்தொழில் வல்லபத்தை இன்று உங்களின் முன்பாக ஒருவருக்கு வழங்கப் போகிறேன்.அவர் யார் ? என்பதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .என்பதை தெரிவித்து ''அருள் ஆட்சி'' என்னும்  சட்டத் திருத்தம் செய்து, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வெளியிட்டார் .

சட்டத் திருத்தம் செய்த நகல் அனைத்து அருளாளர்களுக்கும்.ஆட்சி யாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

சட்டத் திருத்தம் செய்து ஐந்தொழில் செய்யும் வல்லப்பத்தின் நகலின் விபரம்.;--

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்து இருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன் .
களித்திடுக இனி உனை நான் கைவிடோம் என்றும்
மை பிடித்த விழி உலகர் எல்லோரும் காண
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !

என்று பதிவு செய்துள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .

இதுவரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் ஒருவர் கூட உண்மையை உயிர்களுக்கு பொறுப்புடன் சொல்லவில்லை.பொய்யே உண்மை என்று சொல்லி உயிர்களை அழித்துக் கொண்டு வந்தனர் .

வள்ளல்பெருமான் ஆகிய நீ ஒருவர்தான் உயிர்களுக்கு உண்மையைப் போதித்து.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்என்றும்...கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும் என்றும் ,அதற்கு உண்டான  வழிமுறைகளையும் தந்து உள்ளாய் , அதன் கொள்கைகளை ( உயிர்களுக்கு) மக்களுக்கு புரியும்படி போதித்து உள்ளாய்.

எனவே இன்றில் இருந்து ஐந்தொழில் வல்லபத்தையும்  உனக்கே வழங்குகின்றேன்.ஐந்து தொழிலையும் நீயேதான் நிர்வாகம் செய்ய வேண்டும். என்றும் ,உன்னைவிட்டுப் பிரியாமல் உன்னுடன் இருந்தே உமக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் செய்வேன் என்று சொல்லி  ஆட்சி பீடத்தில் வள்ளல்பெருமானை ''அருட்பெருஞ்ஜோதியான உண்மைக் கடவுள்'' அமர்த்தி உள்ளார்.

அதற்கு வள்ளல்பெருமான் அளித்துள்ள முதல் அறிவிப்பு செய்தி.;--

சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உருவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனி வரும் தினங்கள் எல்லாம் இன்பமுறும் தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லு கின்ற தாமே .

என்பதை உலக உயிர்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .

வள்ளல்பெருமானின் ஐந்தொழில் ஆட்சி 30-1-1874,தேதியில் இருந்து நடந்து கொண்டு வருகின்றது.

வள்ளல்பெருமானின் கொள்கைகளை உலக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக  ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்னும் தலைப்பில் ,தலைமைச் சங்கத்தை வடலூரில் தோற்றுவித்து உள்ளார்.

மனிதர்களாகிய நாம் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து,அதன்படி வாழ்ந்து,உலக மக்களுக்கு கொண்டு செல்வது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமையாகும்.

ஒவ்வொரு கிராமங்கள் ,நகரங்கள் தோறும்,பெயர் மாற்றம் செய்யாமல்  ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற அமைப்பை உருவாக்கி  மக்களுக்கு சுத்த சன்மார்க்கக் கொளகைகளை பறை சாற்ற வேண்டும்.

பட்டம் பதவிகளுக்கு பற்று வைக்காமல் ஒழுக்கம் நிறைந்த சன்மார்க்கிகளாய் வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று மற்ற உயிர்களுக்கும் போதிக்க முடியும்.என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக அறிவித்து உள்ளார்கள்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்கச் சுகநிலை  பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

சனி, 3 அக்டோபர், 2015

பாசம் என்றால் என்ன ? அன்பு என்றால் என்ன ?

பாசம் என்றால் என்ன ? அன்பு என்றால்  என்ன ?

பாசம் என்பதும் உறவு என்பதும் ஒன்றுடன் ஒன்று . தொடர்பு உடையது .

அன்பு என்பது தொடர்பு இல்லாத ஒன்றை தேடிக் கண்டுபிடித்து அதன்மேல் அளவில்லாத பற்று வைப்பது அன்பு என்பதாகும்..

உதாரணத்திற்கு ;--நம்முடைய உடல் ரீதியாக தாய் மீது பாசம் வைத்துள்ளோம் அன்பு வைப்பதில்லை.

அதே நேரத்தில் ஆணோ பெண்ணோ திருமணம் செய்யும் வரையில் தாய் தந்தை மீது பாசம் வைத்துள்ளோம் அதற்கு இரத்தபாச உறவு என்று பெயர்

திருமணம் முடிந்தவுடன் ஆணும் பெண்ணும் உடல் இன்பத்தை அனுபவித்தபின் கணவன் மனைவி அதிக பாசம் கொள்கின்றனர் .தாய் தந்தைப் பாசத்தை தள்ளி வைத்து விடுகின்றார்கள் .அங்கே அன்பு என்பது இல்லை.

மனைவி ஒன்றை விரும்புகின்றார் .கணவன் ஒன்றை விரும்புகின்றார் .இரண்டு பேருக்கும் வேறு வேறு எண்ணங்கள் உருவாகின்றன.

மனைவி காரில் போகவேண்டும் என்று விரும்புகின்றார்.கணவன் நமக்கு அவ்வளவு வசதி இல்லை அப்படியும் வாங்கினால் பின்னால் நமக்குத்தான் பணக்கஷ்டம் வரும் வேண்டாம் என்கின்றார்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருகின்றது.உடல் ரீதியான இன்பத்தில் பாசம் இருந்தாலும்.மன ரீதியான வெறுப்பு உண்டாகின்றது.

வெறுப்பு என்பது வரும்போது பாசம் சோகமாக மாறுகின்றது.சோகம் பிரிவினையான எண்ணங்களை உண்டாக்குகின்றது.அதனால் இருவருடைய மனமும் வேதனை அடைகின்றது.இதனால் வாழ்க்கையில் வேறுபாடும் துன்பமும் நிம்மதி இல்லா சூழலும் உருவாகின்றது.

எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும்..இதுபோன்ற பல பிரச்சனைகள் எண்ணங்களுக்கு நேர்மாறாக வரும்போது தீர்வு என்ற முறையில்
மூளைக்கு அதிக வேலைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்திலே ஆழ்ந்து விடுகின்றோம்.

இவைதான் பாசம் என்பதும் உறவு என்பதும் ஆகும் .
இதனால் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்து அழிந்து விடுகின்றோம்.

அன்பு.என்பது !

சுய நலம் இல்லாமல் தன்னை உணரும் உணர்வும்.நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நம்மை இயக்கும் ஒன்றின் மேல் பற்று  வைப்பதற்கு பெயர் அன்பு என்பதாகும்.

எதையும் எப்போதும் எதிர்பார்க்காமல் விரும்புவதற்குப் பெயர் அன்பு என்பதாகும்.

நம்முடைய உடம்பில் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியை தொடர்பு கொண்டு வாழ்வதுதான் உண்மையான அன்பு என்பதாகும்.

பாசம் என்பதும் உறவு என்பதும் நிலையானது அல்ல !
அன்பு என்பது என்றும் நிலையானதாகும் அதுதான் இறைவன் என்பதாகும்.

தன்னை உணர்ந்து இறைவன் மீது பற்று வைப்பது நிலையான இன்பத்தைத் தரும் பேர் அன்பு என்பதாகும்.

இதைத்தான் வள்ளலார் ;--

அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளி அறிவே
அன்பெனும் அணுவுள்அமைந்த பேரொளியே
அன்பு உருவாம் பரசிவமே !

மேலும்  

தன்னை உணர்ந்து இன்பம் உற வெண்ணிலாவே
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே .என்று இறைவனை வேண்டுகின்றார்.

மேலும்.;--

உற்றவரும் பெற்றவரும்,மற்றவரும்,பிறரும் ,உடமைகளும் உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே
மேய்ப்பயனே கைப்பொருளே விலை அறியா மணியே !

என்றும் அன்பிற்கு வள்ளல்பெருமான் விளக்கம் தருகின்றார்.

நாம் அழிந்துபோகும் பாசத்தை உறவை விரும்பாமல் என்றும் அழியாத அன்பை இறைவன் மேல் வைத்து நெருக்கம் கொண்டால் நம்முடைய வாழ்க்கை ஒளிமயமாய் விளங்கும்.

இறைவன் மேல் அன்பு வைத்தால் ,பாசம் உறவுகள் எல்லாம்  நம்முடைய சொல்வழி கேட்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

வியாழன், 1 அக்டோபர், 2015

செயற்கை கோள் ! .இயற்கை கோள் !

செயற்கை கோள் ! .இயற்கை கோள் !

மனிதன் தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கண்டு பிடிக்க அணு கருவிகளைக் கொண்டு கண்டு பிடித்திருக்கின்றான் .அதற்கு செயற்கை கோள் என்று பெயர்.

வள்ளலார் தன்னுடைய உடம்பின் அணுக்ககளைக் கண்டு பிடித்து பஞ்ச பூத ஊன உடம்பை,அருளினால் அணுக்களை ஒளியாக,அதாவது ஒளி உடம்பாக மாற்றி .அண்டங்கள் எல்லாம் எந்த தடையும் இன்றி செல்லும் வழியைக் கண்டுபிடித்தார்

தன்னுடைய உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டால் மனிதன் எங்கு வேண்டுமாலும் சென்று வாழலாம் என்பதைக் கண்டு பிடித்தவர்தான் வள்ளலார் .

செயற்கை உடம்பை இயற்கை உடம்பாக மாற்றியவர் வள்ளலார்.
எந்தவிதமான கருவிகளும் இல்லாமல் மனிதன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதைக் கண்டு பிடித்தவர் ,தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்தவர் அருள் ஞானி ,அருள் விஞ்ஞானி,வள்ளலார் என்பவராகும்

இயற்கையாக செல்லும் இயற்கைக் கோளைக் கண்டுபிடித்தவர் வள்ளலார் அதற்கு பெயர் இயற்கை கோள் என்று பெயர்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.