ஞாயிறு, 28 மே, 2017

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம்  செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்கியம்  அனுபவியுங்கள்.......!    

🌿🌱🌴🌿🌱🌴🌿🌱🌴🌿🌱

புதன், 24 மே, 2017

பிறர் துன்பம் நீக்கினால் தன் துன்பம் தானே நீங்கும் !


பிறர் துன்பம் நீக்கினால் தன் துன்பம் தானே நீங்கும் !

பல ஆண்டுகளாக நாம் செய்த தீய காரியங்கள் தீய வினைகளாக நம்முடைய ஆன்மாவில் பதிவாகி,தீராத துன்பம் விளைவிக்கின்றது .

அதனால் நமக்கு கிடைக்க வேண்டிய ஆன்ம லாபம் கிடைக்காமல் போய் விடுகின்றது.ஆன்ம லாபம் என்பது ! இறைவன் இடம் இருந்து நியாயமாகப்   பெற வேண்டிய அருள் என்பதாகும்.அந்த அருள் கிடைக்காமல் நரை ,திரை,பிணி,மூப்பு, பயம்,மரணம் போன்ற துன்பங்கள் வந்து , மாண்டு மறைந்து போகின்றோம்.

அந்த துன்பங்களில் இருந்து  விலக வேண்டுமானால் ,மற்ற ஜீவர்களுக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கினால் மட்டுமே!  நம்முடைய ஆன்மாவில் பதிவாகி உள்ள  துன்பங்கள் நம்மை விட்டு விலகிவிடும்.வேறு வகையால் துன்பங்கள் தீராது ! தீர்க்க முடியாது என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் சாதி,சமய,மதங்களில் பற்று வைத்து ,துன்பங்களை தீர்ப்பதற்காக பலபல வழிப்பாட்டு முறைகளிலும் ஈடுபட்டு ,பலப்பலஆச்சார, சங்கற்ப,விகற்பங்களும்,அதற்குண்டான பரிகாரங்களும்,பிரார்த்தனைகளும்  செய்து கொண்டு வருகின்றோம்,அதனால் அற்ப வினைகள் தீருமேத் தவிர முழுமையான வினைகள் தீரவே தீராது .

ஆன்மாவில் பதிவாகி உள்ள வினைகள் என்னும் திரைகளை விளக்கிக் கொள்ள வேண்டுமானால் .பிறர் துன்பங்களைப் போக்கும் ஜீவ காருண்யமே வழி என்பதலால் அதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார் .
அறிவு விளங்கிய  மனிதர்கள் !

அறிவு விளங்கிய ஜீவர்கள் எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடாக பின் பற்ற வேண்டும் என்றும் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவ காருண்யமே போட்ச வீட்டின் திறவு கோல் என்றும்.ஜீவ காருண்யமே சுத்த சன்மார்க்கம் என்றும் ---சுத்த சன்மார்க்கமே அருளைப்  பெரும் வழியாகும் என்பதை வள்ளலார் மிகத் தெளிவாக சொல்லியும் எழுதியும் வைத்து உள்ளார் .
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை.!

வள்ளலார் சொல்லியதோடு அல்லாமல் .எழுதி வைத்ததோடு அல்லாமல் வடலூரில் சத்திய  தருமச்சாலையை தோற்றி  வைத்து உள்ளார் .

உலகில் மக்கள் பட்டினி,பசி ,வறுமையில்  வாடிக் கொண்டு தங்கள்  உயிர்களை இழந்து மாண்டு  கொண்டு உள்ளார்கள் ,,அதுவும் தமிழ் நாட்டில் வள்ளலார் கண்முன்னே இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டு இருந்தன .

அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் . .

1867-5-23,24,25,ஆம் நாள் தமிழ் வருடம் பிரபவ வருடம் வைகாசி திங்கள்  11,ஆம் நாள் வியாழக்கிழமை அன்று  ..வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை''நிறுவினார் வள்ளலார் ..

அன்றே ஜீவ காருண்யத்தின் முக்கியத்தை ,அதன் விளக்கமான , ஜீவ காருண்ய ஒழுக்கத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் முதற் பிரிவாகிய நூலை வெளியிட்டார்.
அப்பகுதியை சிதம்பரம் வேங்கட சுப்பு தீஷிதர் அவர்களைக் கொண்டு வழிபாடு முதலியன செய்வித்து அதனை வாசிக்க செய்தார் .

சத்திய தருமச்சாலை ஸ்தாபித்த நாள் தொடங்கி மூன்று நாட்கள் வரை ஒவ்வொரு நாட்களிலும்,16,பதினாறு ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அன்னம் அளிக்கப் பட்டது.அத்துடன் நிற்காமல் ,எப்பொழுதும் அந்த தருமச்சாலையை நோக்கிப் பசியோடு வருபவர்களுக்கு எவ்விதக் குறைவும் இலாது அன்னதானம் ,வள்ளலார் கட்டளைப்படி நடந்தேறி வருகின்றது .''எப்போதும் அடுப்பு அணையாமல் புகைந்து கொண்டே இருக்க வேண்டும் ''என்ற வள்ளல்பெருமான் வாக்கின்படி இன்று வரை அவ்வாறே நடந்து கொண்டு  வருவது அனைவரும் அறிந்ததே !

வருகின்ற 25-5-2017,ஆம் நாள் சத்திய  தருமச்சாலை தோற்றுவித்து 151,வது துவக்க விழா வடலூரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது .அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் பெற வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம் ..அதுசமயம் மூன்று நாட்கள்,திருஅருட்பா இசைக் கச்சேரியும் நடைபெறுகின்றது.என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பசியின் கொடுமை !

ஜீவ காருண்ய ஒழுக்கத்தின் முக்கியமான பகுதியை வள்ளலார் தெரிவிப்பது !

கல்வி கேள்விகளால் பகுத்து அறியத்தக்க அறிவுடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வந்தனம் செய்து அறிவிக்கை ;---

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க பிரயோசனத்தைக் காலம் உள்ள போதே அறிந்து அடைய வேண்டும்.

அந்தப் பிரயோஜனம் யாதோ? எனில் !

எல்லா அண்டங்களையும்.. ,எப்பாப் புவனங்களையும்,எல்லாப் பொருள்களையும்,...எல்லலாச் சீவர்களையும்,////எல்லாச் செயலகளையும், எல்லாப் பயன்களையும்,...தமது பரிபூரண இயற்கை விளக்கமாகிய அருட் சத்தியால் தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினாராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று ..எக்காலத்தும் ----எவ்விடத்தும் ....எவ்விதத்தும் ----எவ்வளவும் ....தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை அடைவதே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க பிரயோஜனம் என்று அறிய வேண்டும் ..

இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடையவேண்டும் ? எனில்.;---

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடைய வேண்டும் .என்று அறிய வேண்டும் ..

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக் கூடும் ? எனில் ;-

ஜீவ காருண்ய ஒழுக்கத்தால் கடவுள் அருளைப் பெற வேண்டுமே அல்லாது வேறு எந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது  என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

ஜீவ காருண்யத்தின் முக்கிய லட்சியம் ஆவது எது ? எனில் ;---

எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்விக்கின்றதே  முக்கிய லட்சியம் என்று அறிய வேண்டும்

பசியின் கொடுமை ;-- உலகம் முழுவதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனுக்கும் ---உலகம் முழுவதும் ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரனுக்கும் ---மூன்று ஆசைகளையும் ஒழித்து உண்மை அறிந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஜீவன் முத்தர்களுக்கும்,பசி நேரிட்ட போது மனம் இளைத்தும் ----வலி குலைந்தும் ---அனுபவம் தடைப்பட்டும் ---வருந்துகின்றார்கள் என்றால் எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டால் என்ன பாடு படுவார்கள் ..

என்பதை விளக்கி ..அதனுடன் பசி அதிகரித்த காலத்தில் மனித உடம்பில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை வள்ளலார் விளக்குகின்றார் .

முகம் புலர்ந்து போகின்றது !
உச்சி வெதும்புகின்றது !
பிரமரந்த்திரம் அடைபடுகின்றது !
காது கும்மென்று செவிடு படுகின்றது !
கண் பஞ்சடைந்து எரிந்து நீர் உலர்ந்து குழிந்து போகின்றது !
நாசி அழன்று கலைமாறி பெரு மூச்சு விடுகின்றது !
நாக்கு நீர் உலர்ந்து தடிப்பு ஏறுகின்றது !
மெய் முழுதும் கருகி சக்தி அற்று ஸ்மரணை கெடுகின்றது !
வாக்குக் குழறித் தொனி மாறுகின்றது !
கைகளும் கால்களும் தட தடத்துச் சோர்ந்து தடுமாறு கின்றது !
மல சல வழி வெதும்பி வேறுபடுகின்றது !
உரோமம் வெறிக்கின்றது !
பற்கள் கருகித் தளர்கின்றன !
இரத்தமும் சலமும் சுவறுகின்றது !
சுக்கிலம் தன்மை மாறி வரளுகின்றது !
எலும்புகள் குழைந்து நோக்காடு உண்டாகின்றது !
நாடி நரம்புகள் வலி இழந்து மெலிந்து கட்டுவிக்கின்றது !
வயிறு பகீர் என்கின்றது !
மனம் தளர்ந்து நினைவு மாறுகின்றது !
புத்தி கெட்டு நிலை மாறுகின்றது !
சித்தம் கலங்கிப் திகைப்பு ஏறுகின்றது !
அகங்காரம் குலைந்து அச்சம் உண்டாகின்றது !
பிரகிருதி சுருங்குகின்றது !

கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும் மறைபடுகின்றது ---தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன ,

இவ்வளவு அவத்தைகளும் எக்காலத்திலும் உண்டாகின்றன ,இது எல்லாச் சீவர்களுக்கும் பொதுவாகவே இருக்கின்றது .

ஆகாரம் உண்டு பசி நீங்கிய தருணத்தில் தத்துவங்கள் எல்லாம் தழைத்தது ''கடவுள் விளக்கமும் ,ஆன்ம விளக்கமும்'' அகத்திலும் முகத்திலும்,வெளிப்பட்டு திருப்தி இன்பம் உண்டாகின்றது .

ஆகலில் இந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு கடலூர் மாவட்டம் கூடலூர் தாலுக்காவைச் சார்ந்த ''வடலூர் என்கின்ற பார்வதி புரத்தில்'' ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை'' என்று ஒரு தருமச்சாலை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது .

அது பலர் சகாயத்தினாலேயே நிலை பெற வேண்டும் ஆதலால் ,ஜீவ தயவு உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடிய வரையில் பொருள் முதலிய உதவி செய்து ''அதனால் வரும் லாபத்தைப் பாகம் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை'';--

இங்கனம்
பிரபவ ஆண்டு வைகாசி திங்கள் 11.நாள்
சத்திய தருமச்சாலை
வடலூர் ....

மேலே கண்டபடி ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால் என்ன ? என்பதைப் பற்றி சுருக்கமாக சத்திய தருமச்சாலை துவங்கிய அன்று மக்களுக்கு  வள்ளலார் தெரிவித்து உள்ளார் .மேலும் முழு விபரங்கள் அடங்கிய விளக்கத்தை  ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ளன படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு தோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உள்ளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தனன் !

இந்த ஒரு பாட்டுப் போதும் !

விரிக்கில் பெருகும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896 ...
 
திங்கள், 22 மே, 2017

கதவுத் திறக்கப்படும் !

கதவுத் திறக்கப்படும் !

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் ஏசுபிரான் !

கேட்டாலும் கிடைக்காது ! தட்டினாலும் திறக்காது ! என்கின்றார் வள்ளலார் !

இறைவன் கொலுவிருக்கும் கோட்டையின்  மேல் வீட்டுக் கதவு சாத்தப்பட்டு ,வெளியில் பூட்டுப் போடப்பட்டு உள்ளது .உள்ளே தாள் போட்டு உள்ளது.!

அந்தக் கதவைத்  தட்டினால் எப்படித் திறக்கும்.? வெளியே தான்  பூட்டுப் போட்டு உள்ளதே ! பூட்டைத் திறக்க சாவிதானே வேண்டும் .சாவி இல்லாமல் கதவைத் தட்டினால் எப்படி கதவு திறக்கும் .கதவைத் திறக்க வேண்டுமானால் முதலில் பூட்டைத் திறக்க ,திறவு கோல் என்னும் சாவி வேண்டும் என்கின்றார் வள்ளலார் .

ஒன்றைக் கொடுத்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பதை ஏசுபிரான் அவர்கள்,தானும் உணரவில்லை, மக்களுக்கும்  தெரிவிக்க வில்லை.!

வள்ளல்பெருமான் ஒருவர்தான் மக்களுக்கு தெளிவான அறிவு விளக்கமும்,அருள் விளக்கமும்  தந்து உள்ளார் !

ஜீவ காருண்யம் !

ஜீவர்கள் எல்லாம் ,ஒரு தன்மையாகிய இயற்கை உண்மை ஏக தேசங்களாய்ச் சர்வ சத்தி உடைய கடவுளால் சிருஷ்டிக்கப் பட்டபடியால் ஓர் உரிமை உள்ள சகோதரர்கள் ஆவார்கள் .ஆதலால் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப் படுகின்ற போதும் ,துக்கப்படுவார் என்று அறிந்த போதும்,அவரைத் தமது சகோதரர் என்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கம் உண்டாவது சகோதர உரிமை ஆகலின்

ஒரு ஜீவன் ( உயிர் ) துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதும் ,துக்கப் படும் என்று அறிந்த போதும்,மற்றொரு ஜீவனுக்கு உருக்கம்( இரக்கம் ) உண்டாவது பழைய ஆன்ம உரிமை என்று அறியவேண்டும் .

அந்த ஆன்ம நேய ஒருமைக் கொண்டு துன்பப்படும் ஜீவர்களுக்கு உயிர் இரக்கம் கொண்டு உபகாரம் செய்தால் மட்டுமே , ''இறைவன் கொலுவிருக்கும்,அருள்  கோட்டையின் கதவைத் திறக்கும் திறவு கோல் என்னும் சாவி கிடைக்கும்''' எனவே முதலில் சாவி என்னும் திறவு கோல் நம் கையில் கிடைக்க ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் வேண்டும் ..

இவைதான் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவதாகும்.எனவே தான் ''ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்'' என்றார் வள்ளலார் .அதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் என்று பெயர் வைத்து உள்ளார் !

சாவி கிடைத்தால் மட்டுமே கதவு திறக்குமா ? என்றால் பூட்டுத்தான் திறக்கும்.கதவுத் திறக்காது , கோட்டையின் கதவுக்கு வெளியே ஒரு பூட்டும்  உள்ளே ஒரு  தாள்( தாழ் ) போட்டு இருக்கின்றது .

கோட்டைக்குள் இருக்கும் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' வந்து உள்ளே தாழ்ப்பாளை திறந்தால்  மட்டுமே கதவுத் திறக்கப் படும்.அவர் அனுமதி இன்றி உள்ளே செல்ல முடியாது .அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார் .

சத் விசாரம் !

''சத் விசாரம்'' என்பது ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை என்பதாகும் ,ஜீவ காருண்ய ஒழுக்கத்தால் சாவி கிடைத்து விடும் .அதற்குமேல் நான்கு ஒழுக்கங்கள் இருக்கின்றது ,அவைதான் இந்திரிய ஒழுக்கம்,,,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் ,என்பதாகும்.இறைவனை இடைவிடாது நினைந்து கொண்டு இருப்பதாகும் .அதற்கு ஞான சரியை ,கிரியை,யோகம்,ஞானம் என்பதாகும் .அதற்கு ஞான சரியை என்னும் 28.பாடல்கள் எழுதி வைத்துள்ளார் வள்ளலார் .அதில் கண்டுள்ளபடி நாம் சத்விசாரம் செய்து நமது வாழ்க்கையை நெறி படுத்திக் கொள்ள  வேண்டும்.

அவற்றில்  உள்ள முதல்  பாடலே மிகவும் அழுத்தமான பாடலாகும்.!

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து உற்று எழுங் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந் தருணம் இதுவே !

தன்னையும்,தன்னைப் படைத்த  இறைவனையும் இடைவிடாது நினைந்து, உணர்ந்து, நெகிழ்ச்சி அடைகின்ற போது தான்,நாம் யார் ? என்பதும்,நம்மைப் படைத்த இறைவன் யார் ? என்பதும் அறிந்து, இறைவன் மேல் அளவில்லாத  அன்பு கொண்டு  அதன் உண்மை தெரிந்து இடைவிடாத அழுகை உண்டாகி உடம்பு முழுவதும் கண்ணீர் வடிந்து நனைந்து நனைந்து  உடம்பின் உள்ளே அசுத்த நீர் வெளியேறி விடும்,அதன்பின் அசுத்த நீர்  இல்லாத வெற்று உடம்பாக மாற்றம் அடைகின்றது.

அப்போதுதான் உடம்பின் உள்ளே அன்பு நிறைந்து ,ஆன்ம உஷ்ணம் என்னும் சுத்த உஷ்ணம் உடம்பு முழுவதும் பரவுகின்றது.அகத்தில் இருக்கும், ஆன்ம உஷ்ணமானது,அதாவது  சுத்த  உஷ்ணமானது  அனகமாக விரிந்து உடம்பு முழுவதும் நிறைகின்றது.  அந்த சுத்த உஷ்ணத்தினால் அசுத்த பூத காரிய தேகம், சுத்த பூத காரிய தேகமாக மாற்றம் அடையச் செய்யும். அந்த சுத்த உஷ்ணத்தினால் சூடு அதிகமாக ,அதிகமாக திரைகள் எல்லாம் விலகி ,முளை மலர்ந்து ஆன்மா விரிந்து ,அதனுள் இருக்கும் அமுதம் சுரக்கும்,.அந்த அமுத சுரப்பினால் ,காகாத் தலையாக ,வேகாக் காலாக ,போகப் புனலாக மாற்றம் அடைகின்றது.அதன்பின் ஆன்ம தேகமாக மாற்றம் அடையும் .அதற்கு பின்  சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்ற மாற்றம் அடைகின்றது .

ஐந்து  பூதங்களும் விலக ஐந்து வகையான அமுத ஸ்தானங்கள் சுரக்கும் ,ஐந்தாவது அமுதத்தை உண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள் என்கின்றார் வள்ளலார் ..அதை விரிக்கில் பெருகும்.

இந்த அருள் சுரப்பினால் உண்டாகும்  மாற்றத்தை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவுப் படுத்துகின்றார் வள்ளலார் ....


 • 725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் 
  மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட 
 • 726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட 
  மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட 
 • 727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம் 
  உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட 
 • 728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம் 
  உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட 
 • 729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட 
  தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட 
 • 730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக் 
  கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட 
 • 731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற் 
  கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட 
 • 732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக் 
  கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட 
 • 733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட 
  இனம்பெறு சித்த மியைந்து களித்திட 
 • 734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச் 
  சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட 
 • 735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப் 
  பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் 
 • 736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச் 
  சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட 
 • 737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட 
  அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட 
 • 738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட 
  என்னுளத் தோங்கிய என்றனி யன்பே 
 • 739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே 
  என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே 
 • 740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால் 
  என்னைவே தித்த என்றனி யன்பே 
 • 741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து 
  என்னுளே விரிந்த என்னுடை யன்பே 
 • 742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து 
  என்னுளே கனிந்த வென்னுடை யன்பே 
 • 743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே 
  என்னுளே நிறைந்த என்றனி யன்பே 
 • 744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை 
  யின்புறு வாக்கிய என்னுடை யன்பே 
 • 745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா 
  என்னுளங் கலந்த என்றனி யன்பே 
 • 746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி 
  என்வசங் கடந்த என்னுடை யன்பே 


 மேலே கண்ட  மாற்றம் அடைந்தவர்களுக்கு மட்டுமே ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்  கோட்டையின் ''உள் தாள்'' நீக்கப் பட்டு  கதவுத் திறக்கப்படும் அதற்குப் பெயர்தான் பேரின்ப சித்திப்  பெரு வாழ்வு என்பதாகும் .அந்தப் பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்றவர்தான் நமது அருட்பிரகாச வள்ளலார் ...

கேட்டால் கிடைக்காது !,..தட்டினால் திறக்காது ! .அருள் பெற்றால் மட்டுமே கதவுத் திறக்கப்படும் ! என்பதை வள்ளலார் அருள் பெற்று  வாழ்ந்து காட்டி உள்ளார்.

ஜோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம்
மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன் --ஓதரிய
ஏகா அனேகா எழிற் பொதுவில் வாழ ஞான
தேகா கதவைத் திற ! .

என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான்
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் --என்னிடத்தே
தந்தான் அருட் சிற்சபை அப்பா என்று அழைத்தேன்
வந்தான் வந்தான் உள் மகிழ்ந்தே !

நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் சற்றே அறை !

என்ற பாடல்களின் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

இன்னும் விரிக்கில் பெருகிக் கொண்டே இருக்கும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.    


   

வெள்ளி, 19 மே, 2017

இறைவன் படைத்த உலகம் !

இறைவன் படைத்த உலகம் !

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..படைத்த உலகத்தையும்,உயிர்களையும் ஆள்வதற்கும் ,ஆட்சி செய்வதற்கும் ,

மாண்டுபோகும் மனிதர்கள் ஆசைப் படுகின்றார்கள்.எத்தனை காலம் தான் இவர்களால் ஆட்சி செய்ய முடியும்.

மக்களின் குறைகளை எவராலும் எக்காலத்திலும் நீக்க முடியாது..அவை அனைத்தும்  இறைவன் கையில் உள்ளது.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ, முடிசூடா  மன்னர்கள்,ராஜாக்கள்,எஜமானர்கள்,அரசியல் வாதிகள் .ஆன்மீக வாதிகள்,நாட்டை ஆண்டு பார்த்தார்கள் .அவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல்,மாண்டு, அழிந்து போய் விட்டார்கள்.

மக்களுக்கு நன்மை செய்வதற்கு ஆட்சியில் அமர வேண்டிய அவசியம் இல்லை.எந்த வழியிலும்
நன்மை செய்யலாம்.

மக்கள் உழைப்பையும், பணத்தையும்  பெற்று மக்களுக்கு நன்மை செய்வது நல்லதுதான் .ஆனால் இறைவன் பார்வையில் அவை நல்லது அல்ல !

அவரவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு,ஏழை .எளிய மக்களுக்கு  நன்மை செய்வதுதான் நல்லது அதுவே உயர்ந்தது ,அதைத்தான்  ஜீவ காருண்யம் என்று வள்ளலார் சொல்லுகின்றார்.

ஜீவ காருண்யம் உள்ள மனிதர்களே உயர்ந்த மனிதர்கள் .ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்கின்றார் வள்ளலார் ..

ஒவ்வொரு தனி  மனிதனும் அன்பும் ,தயவும் கருணையும்,ஒழுக்கமும்  உள்ளவர்களாக மாறினால் மட்டுமே நாட்டில் உள்ள மக்களின்  குறைகள் நீங்கி..எல்லோரும்  மகிழ்ச்சியுடன் வாழ முடியும்..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர் கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

என் தந்தை நினது அருட் புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்த சுவ மார்க்கம்

திகழ்ந்து ஒங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

என்றும் ;----மேலும்

அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றே அகங் களித்தல் வேண்டும்

தேத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாய்ச்  செய்வித்தல் வேண்டும்

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்

எத்தாலும் அழியாத வடிவத்திலே நானும்

எந்தையும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே !

என்னும் பாடல்களின் வாயிலாக எளிய தமிழில் பதிவு செய்துள்ளார் .விளக்கம் தேவை இல்லை என நினைக்கின்றேன் ...

வள்ளலாரின் இந்த அருட் பாடல்களை   இந்த அரசியல் வாதிகளுக்கும்,ஆன்மீக வாதிகளுக்கும் மக்களுக்கும் எப்போது  தான்  புரியப் போகின்றதோ தெரியவில்லை.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் இவர்களை காப்பாற்ற வேண்டுமாய், வேண்டிக் கொள்வதைத்  தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை .

நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும் என்ற வழியில் செல்வதுதான் நம்முடைய வழிபாடாக,வேண்டுதலாக  செயல்பட வேண்டும் .

எல்லா உயிரக்ளும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896. 

வியாழன், 18 மே, 2017

தெருவில் உருண்டு வந்த அவதானியார் !

தெருவில் உருண்டு வந்த அவதானியார் !

வள்ளல்பெருமான் வடலூருக்கு அடுத்த  கருங்குழி என்னும் ஊரில் தங்கி இருந்தார் .அந்த வீட்டின் உரிமையாளர் மகன் .புருசோத்தம ரெட்டியார் என்பவர் கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள ''திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளது ''மடத்திற்குப் போய் விட்டார் .அவற்றை அறிந்த அவரது தாய் தந்தையர் .,வள்ளல்பெருமானிடம், தம் மகனை அங்கிருந்து அழைப்பித்து அருள வேண்டும் என வேண்டினர் .

அவர்களின் வேண்டுதலை ஏற்று ,நிறைவேற்ற வேண்டும் எனக் கருத்தில் கொண்டவராய் .அம்  மடத்தில் உள்ள தம்முடைய மாணவராகிய திருசிற்றம்பல ஞானியார் அவர்களுக்கு எளிய தமிழ் நடையில் .அங்குள்ள புருசோத்தம ரெட்டியாரை அனுப்பி வைக்குமாறு கடிதம் ஒன்று எழுதினார் .

அந்த கடிதமானது ,அந்த திருச்சிற்றம்பல ஞானியாரும்,  கணக்கில் அவதானி தேவிபட்டினம் ,முத்துசாமி பிள்ளையும் உரையாடிக் கொண்டு இருக்கின்ற வேளையில் போய்ச் சேர்ந்தது... அக் கடிதத்தை அம் முத்துசாமி பிள்ளையும்,  படித்துப் பார்த்தார். ..படித்துப் பார்த்து விட்டு திருசிற்றம்பல ஞானியாரை நோக்கி, ''வள்ளலார் பெரிய மேதாவி'' என்று சொன்னீர்கள்  ''பெரிய மேதாவி ஒருவர்  எழுதிய கடிதம் இலக்கண இலக்கியச் செறிவு இன்றி இவ்வாறு இருக்கின்றதே'' என்று பதறி ஞானியாரைக் கேட்டார் .

அதற்கு ஞானியார் '' வள்ளலார் வார்த்தையாடிக் கொண்டு  இருக்கும் காலங்களில் சிந்திய இலக்கணமே இந்த உலகில் பரவி இருக்கின்றது'' என்று அவ் விடையை மறுக்க ,..அதற்கு அந்த அவதானியார் 'அங்கனமாயின் அம்மாதிரி ஒரு கடிதம் அவரிடம் இருந்து வரவழையுங்கள் ''என்று கூறினார் .

உடனே ஞானியாரும் ,அவ்வாறே  ஒரு கடிதம் எழுதி அனுப்புமாறு ,இங்கு நடந்த வரலாற்றையும் உடன் கூட்டி எழுதி  வள்ளல்பெருமானுக்கு அனுப்பி வைத்தனர்...அக் கடிதத்தைக் கண்ட சுவாமிகள் வெறுப்புடன் அதனை ''பிச்'' என்று சொல்லி கீழே வைத்து விட்டனர்...ஆனால் அச்சமயம் உடன் இருந்த தொழுவூர் --வேலாயுத முதலியாருக்கு ஆற்றாமையால் அவர் ,வள்ளலாரிடம் பதில் கடிதம் ஒன்று  இலக்கண இலக்கியத்தோடு  எழுதி அனுப்புமாறு விண்ணப்பஞ் செய்து கொள்ள ....வள்ளலார் இரண்டு வரிகள் மாத்திரம் எழுதி அவரிடம் தந்து மீதத்தை ''நீரே எழுதிவிடும் ''என்று கூறி விட்டார் .

அவ்வாறே அக் கடிதத்தை தொழுவூர் ''வேலாயுத முதலியார் எழுதி முடித்து அனுப்பி வைத்தார் ..( மிகவும் நீளும் என்பதால் அந்த  கடிதத்தை பின் அனுப்பி வைக்கிறேன்)  அக்கடிதம் ஆறாம் திருமுறையில் உள்ளன .

அக்கடிதம் ;--அன்பர்களின் விருப்பத்திற்கு கீழே தந்துள்ளேன்.!

இலக்கண வியனடை  !

உணர்ந்தோரானியில் வகையவின்ன வென்றவற்றிற் பின் மொழிமதிக்கு முன்மொழி மறைக்கு முதலீறு விளங்க முடிப்பதாய் பின் மொழியடை சார் முன் மொழி ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு ;--

பொய்யற் கெதிர்சார்புற்ற மூலியொன்று வளைத்து வணக்கஞ் செய்த ககன நீரெழிலென்றும் ,வான் வழங்கு பண்ணிகாரமென்றும் நாகச்சுட்டு மீனென்றும்
வேறு குறிப்பதொன்று ...

அண்மைச் சுட்டடுத்த வேழாவதன் பொருண்மை யும்மை யடுத்த பல்லோர் வினாப் பெயர்ப் பொருள் குறிஞ்சி யிறைச்சிப் பொருளொன்றைனோடு புணர்ப

சேய்மைச் சுட்டடுத்த வத்திறத்தியல் யாது ?

இரண்டனுருபொடு  புணர்ந்த தன்மைப் பன்மை யாறாவதன்  பொருட்டாக்கினார்க் குய்த்த கற்பிய லதிகரிப்பின் வருந்தலை மகட் பெயர விரண்டிரண்டூகக் கழிவிலைப் பெயரவு மாகார வீற்று முதனிலைத் தனிவினைச் செயவென் வாய்ப்பாட்டு வினையெச் சத்தனவாகக் கலம்பகச் செய்யுளுறுப்பாற் சிறத்தும்

இருவகை முதற்பொரு ளொன்றன பாகுபாட்டு றுப்பிற் குறித்த வைபெரும் பூதத்தோர் விசேடனத் தெதிர் மறை நடுக்குறை யியற் சொற் பெயர வுயிர்ப் பெயராக வேதிர்காலாங் குறித்து நின்றது ..

சில  வினைச் சார்பான் ,விலங்கு சூடிய வரையில் வெளியாம் இதனோடு இரு வகைப்பட்ட வோர்சார் புதுநிலஞ் செல வுய்த்தனம் ,வேண்டுழி வேண்டியாங் குய்க்க ,மற்றைய பின்னர் வரைதும்
இற்றே விசும்பிற் கனைச்சலம்.

இங்கனம்
நங்ககோச் சோழன்
வீரமணிச் சூடியார் திருவாணைப் படிக்கு
அடிமை
தொழுவூர் -வேலாயுதம் .
பார்வதிபுரம் ,
சுக்கிலவருடம்
துலா ரவி 27,

என்ற விசாலம் இட்டு கடிதத்தை அனுப்பினார் ....

அக் கடிதத்தை ஞானியார் அவர்கள் அவ் அவதானியார் இடம் காட்டினார் .அவர் பன் முறை படித்துப் பார்த்தும் பொருள் விளங்கவில்லை ..பொருள் விளங்காமை கண்டு ...''வேண்டும் என்றே ஒரு வித்வான் பூட்டிப் போட்டால் அந்த வித்வான்தான் அதைத் திறக்க வேண்டும்.''என்று கூறினார் .

அதைக் கேட்ட ஞானியார் புன்னகையுடன் ,அங்கனம் ஆயின் தாங்களும் '' வேண்டும் என்றே ஒரு பூட்டுப் போடுங்கள் '' என்றார்கள்.

அவ்வாறே அவதாநியாரும் ..

தகர வரிக் குழல் காமாதி யைந்திற் றங்கும்
தகரவரி நாலைந்து சாடும் ---தகரவரி
மூவொற்றி யூர் பதங்கள் மூன்று மங்கை யேந்து மொரு
சேவொற்றி யூர் பதத்தைச் சேர்

என்ற கவியினை எளிதில் பொருள் விளங்காதவாறு  எழுதித் தந்தார் ...அந்தக் கவியினை ஞானியார் நம் பெருமானுக்கு அனுப்ப , அக்கடிதத்தை கண்ணுற்ற  பெருமான் அவர்கள்,.அதற்கு உரிய உரையினையும் அவர் ,உணராத மற்றோர் தத்துவ உரையையும் எழுதி அனுப்பினார் .

வள்ளல் பெருமான் எழுதி அனுப்பிய உரையினைக் கண்ட அவதானியார்,உடனே அங்கு இருந்து புறப்பட்டு ,வள்ளலார் தங்கி இருக்கும் கருங்குழிக்கு வந்து சேர்ந்தார் .,,சேர்ந்தவர் வள்ளலார் இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு அவ்வீதிக் கோடியிலேயே இருந்து இரு கரங்களைச் சிரமேற் குவித்துக் கொண்டு தெருவிலே உருண்டு வந்து வள்ளல்பெருமான் திருவடிகளில் அடியற்ற மரம் போல் விழுந்து வணங்கினார்.

''யான் செய்த பிழைகளை எல்லாம் பொறுத்து அருளல் வேண்டும் ...நீங்கள்  வித்வான் என மதித்து இருந்தேன்  '''பூரண ஞானி என உணர்ந்திலேன் '''என்று அழுது  புலம்ப ...தாயினும் தயவுடைய நம் வள்ளல்பெருமான் அவரை மன்னித்து ஆட்கொண்டார் ..

இச்செய்தி புயல் காற்றுபோல் தமிழகம் எங்கும் பரவியது..தமிழ் நாட்டில் உள்ள ஆதினங்கள்,மற்றும் இலக்கணம் இலக்கியம் தெரிந்த  யாவரும் கருங்குழிக்கு  வந்து வள்ளலாரை நேரில் கண்டு ஆசி பெற்றனர் .வள்ளல்பெருமான் தான் அருள் பெற்ற பூரண ஞானி என்பதை வெளியில் எங்கும் காட்டிக் கொள்ளவே இல்லை.அவையே அவருடைய பெருங் கருணையாகும்.அவருடைய பெரும் அடக்க ஒழுக்கமாகும் .

கையுற வீசி நடப்பதைக் நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால்
மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்
வையமேல் பிறர் தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப் படிப்பேன் !

காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன்
பாட்டு அயல் கேட்டுப் பாடவும் பயந்தேன்
பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து
நன்குறக் களித்துக் கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை
நினைக்கவும் பயந்தனன் எந்தாய் !

என்றும்  பல நூறு  பாடல்களின் வாயிலாக பதிவு செய்து உள்ளார் . தன்னுடைய அடக்கத்தையும்..,உண்மை ஒழுக்கத்தையும் ,இடைவிடாது கடைபிடித்து வாழ்ந்து வந்தவர் தான் நமது வள்ளலார் ..அவர்போல் நாமும் கடைபிடித்தால் மட்டுமே,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்   பூரண  அருள் பெற்று மரணத்தை வென்று வாழ முடியும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896புதன், 17 மே, 2017

தமிழை காதலித்தேன் !

தமிழை காதலித்தேன் !

தமிழை நேசித்தேன் தமிழ் என்னை நேசித்தது !

தமிழிடம் அன்பை காட்டினேன் தமிழ் என்னிடம் அன்பைக் காட்டியது !

தமிழை காதலித்தேன் தமிழ் என்னை காதலித்தது !

தமிழை கரங்களால் தொட்டேன் தமிழ் என்னை கட்டித் தழுவியது !

தமிழே அமிழ்தம் தா என்றேன் தயக்கம் இல்லாமல் தந்த்து !

நீ என்னை விடமாட்டாய். நான் உன்னை விட மாட்டேன் !

இருவரும் ஒன்றானோம் இன்பமுடன் வாழ்கின்றோம் !!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 16 மே, 2017

சித்தர்கள் என்பவர்கள் யார் !


சித்தர்கள் என்பவர்கள் யார் !

சித்தர்களில் மூன்று வகையாக பிரிக்கின்றார் வள்ளலார் !

கர்ம சித்தர் ..யோக சித்தர் ...ஞான சித்தர் என மூன்று வகையான சித்தர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.இவர்கள் பக்தி மார்க்கத்தை தாண்டி உயர்ந்தவர்கள் .

பக்தி மார்க்கம் !

பக்தி மார்க்கத்திலும் உயர்ந்தவர்கள் இருக்கின்றார்கள்,அவர்கள் பக்தியின் வாயிலாக தத்துவ உருவங்களைக்  கடவுளாக எண்ணி,அதிலே மூழ்கி   உருவ வழிப்பாட்டால்,பக்தியில் முக்தி அடைந்தவர்களேத் தவிர  சித்தி அடையவில்லை. அவர்கள் எழுவகைப் பிறவியாகிய தாவரம் ,ஊர்வன,பறப்பன ,மிருகம்,நரகர்,தேவர் ,மனிதர் ,இவர்களை தன்வசமாக மாற்றும் ஆற்றல் படைத்தவர்கள்.

அவர்கள் வேத ஆகமக் கலைகளில் ,சரியையில் உள்ள ,கிரியை  யோக ஞான சாத்திரங்களில் ,பற்று வைத்து சமய,  மத ஆச்சார நூல்களில் பலப்பல வகையான கடவுள் கொள்கைகளையும்,,தத்துவங்ககளையும்,சாதி,சமய மத பற்றுகளைக் பின்பற்றி,வழிபட்டு ஆச்சிரம  ஆச்சார சங்கற்ப விகற்பங்களில் ஈடு பட்டு, சிறு  குழந்தை விளையாட்டுகள் போல்,பல பல அபிஷேக ஆராதனைகள்,,சாத்திரங்கள்,இடத்திற்கு தகுந்தாற் போல் மந்திர உபவாசங்களை உச்சரித்து,  ,உயர்வு ,தாழ்வு போன்ற செயல்களில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு  அவர்களுக்கு உரிய , சிலை  உருவங்களை பல்லக்கில்  சுமந்து ஊர்வலம் வந்தும்   கடவுளுக்குத் திருமணம் செய்விக்கும் வரை ,கோயிலில் உள்ள உருவ வழிபாடு வரையும்,புற நிலைச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு  வருகின்றார்கள்.

மேலும் சின்ன சின்ன அற்ப சுகமே லட்சியமாகக் கொள்வதும் அதற்குத்தகுந்த பலவிதமான முயற்ச்சிகள் செய்வதும்,களித்து ஆடுவதும்,ஆடாமல் அடங்கி பக்திப் பாடல்கள் பாடி கிடப்பதும், பக்தி மார்க்கத்தின் செயல்பாடுகளாக உள்ளன, இவர்களின் ஆயுட்காலம் சுமார் நூறு வருஷ காலம் மட்டுமே வாழ்பவர்கள் .

அதன்பின் மரணம் அடைந்து  மீண்டும் பிறப்பு எடுப்பார்கள்.அதற்க்கு மேல் அவர்களின் அடுத்த பிறப்பு என்னவென்று அவர்களுக்கேத்  தெரியாது. அவர்களுக்கு ஆணவம் .மாயை ,கன்மம்,என்னும் மும்  மலங்கள் மூன்றும் சராசரி மனிதர்களை விட குறைந்து இருந்தவனவே  ஒழிய முற்றிலும் மலங்களை நீக்கிக் கொள்ள அவர்களால் முடியவில்லை .

கர்ம சித்தர்களின் விபரம் ;--- கிரியையில் உள்ள  யோக ஞான சித்திகளைப் பெற்றவர்கள் . தேகத்தைக் கல்பசித்தி செய்து கொள்ளுதல் .அதவாது ''அபர மார்க்கி'' என்றுபெயர் .சதாசிவானந்த அனுபவம்,சதாசிவகால வரை....இறந்த உயிர்களை நாசம் அடையா முன்  எழுப்பும் சக்தி உடையவர்கள்,அதன் சித்தி காலம் மூன்றே முக்கால் நாழிகை முதல் மூன்றே முக்கால் வருடம் வரையே நிலைக்கும்,அந்த சித்தியை பயன் படுத்தினால் மறுபடியும் சராசரி மனித நிலைக்கு வந்து விடுவார்கள்.மேலும் அவர்கள் எந்த சித்தியும் பெறமுடியாமல் மரணம் அடைந்து விடுவார்கள்.

அவர்கள்  பக்தி மார்க்கத்தை கடந்து உருவ வழிப்பாட்டைக் கடந்து, தேகத்தையும் உயிரையும் நீட்டிக்கும் வகையான உபாய மார்க்கத்தைக் கண்டவர்கள்.. மூலிகைகளைக் கொண்டு மந்திர ,தந்திர முறைகளில்  காய கல்பம் செய்து,தியானம் தவம் செய்து,ஏக தேச அருளைப் பெற்றவர்கள்.  தன்னுடைய உடம்பை பலப் படுத்திக் கொண்டு உடம்பும் உயிரும் இயங்காமல் ,நிறுத்தி ''சமாதி நிலை'' அடைந்தவர்கள்,கன்ம மலத்தை வென்றவர்கள்.அதற்கு சுத்த தேகம் என்று பெயராகும் கர்ம சித்தர் என்றும் கர்ம சித்திப் பெற்றவர்கள் என்றும் சொல்லப் படுவார்கள்.

அவர்களும் ,தாவரம்,ஊர்வன,பறப்பன ,நடப்பன,தேவர்,நரகர்,மனிதர் ,இவர்களை தான் சொல்லுவதை கேட்டு அதன்படி இயங்க வைத்துக் கொண்டு உள்ளவர்கள்.அவர்களுக்கும்  அற்ப சித்தி கிடைத்துள்ளது,அதற்குமேல் அவர்களுக்கு சித்தி கிடைக்க வாய்ப்பே இல்லை.அவர்களுக்கு நூறு வயது முதல் 500,ஆண்டுகள் வரை உடம்பை அழிக்காமல் சமாதி நிலையில் வைத்து  இருப்பார்கள்.அவர்களும் மீண்டும் இறந்து பிறப்பு எடுப்பார்கள்.

யோக சித்தி விபரம் ;---யோக ஞான சித்திப் பெற்றவர்கள். இவர்கள் பக்தி மார்க்கத்தை தாண்டி கர்ம சித்திகளைப் பெற்று அதற்குமேல் ஆன்மாவைத் தொடர்பு கொண்டு இடைவிடாது தன்னை மறந்து யோக ஞான  நிலையில் இருப்பவர்கள்.64,சித்திகளையும் தன் சுதந்தரத்தில் நடத்துபவர்கள் அதாவது 64 ,கலைகளையும் அறிந்து அவற்றை  தன் வசமாக மாற்றி உடம்பையும் உயிரையும் இயங்க விடாமல்,அவற்றை அழிக்காமல்  இறைவன் அருளைப் முக்கால் பங்கு பெற்றவர்கள் .

இவர்களுக்கு சங்கல்ப ,குளிகை,பூரண கல்பதேகி என்று பெயர் . பிரமகாலம்,   ''பராபர மார்க்கி'' என்று பெயர்,அதாவது பஞ்ச பூத அணுவால் பின்னப்பட்ட,ஸ்தூல  உடம்பை ,மாற்றி சூட்ச்சும உடம்பில் ,ஆதாவது உருவம் இல்லாத உடம்பாக மாற்றிக் கொள்வார்கள்,கூடு விட்டு கூடு செல்லும் சக்தி பெற்றவர்கள். அவர்களுடைய சித்தி காலம் 12,வருடம் முதல் 108,வருட காலம் .வரை இறந்து  புதைத்த தேகத்தை நாசம் அடையாமுன் உயிர்ப்பிக்கும் சக்தி என்னும் ஆற்றல் படைத்தவர்கள்..அந்த சித்தியை பயன் படுத்தாமல் இருந்தால் சுமார் ஆயிர வருடத்திற்கு மேல் ஐந்து ஆயிரம் வருட காலத்திற்கு மேல்  வாழ்வார்கள் .அதற்குமேல் அவர்களுக்கும் இறப்பு பிறப்பு உண்டு ,இவர்களுக்கு பிரணவ தேகம் என்று பெற்றுக் கொண்டவர்கள் என்றும்,யோக சித்திப் பெற்றவர்கள் என்றும் சொல்லப்படும்.

ஞான சித்தர்களின் விபரம் ;-- இறைவன் அருளை முழுமையாகப் பெற்று 64000 அறுபத்து நான்கு ஆயிரம் சித்திகளையும் தன் சுதந்தரத்தால் நடத்தும் வல்லமைப் பெற்றவர்கள்.647,கோடி பேதமாகிய மகா சித்திகளையும் தன் இஷ்டம் போல் நடத்தும் பேர் அறிவும் ஆற்றலும் பெற்றவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு காலம் கடந்த நிலை ,அடிநிலை,முடிநிலை,சுத்த கர்ம ,சுத்த யோக ,சுத்த ஞான சித்தி வல்லபங்களைப் தன் சுதந்தரத்தால் நடத்தும் வல்லமைப் பெற்றவர்கள்...இவர்களுக்கு சுத்த பிரணவ ஞானதேகம் பெற்றவர்கள் என்பதாகும்.இவர்கள் மரணத்தை வென்றவர்கள்.அவர்களும் தனக்கு கிடைத்த சித்தி வல்லபத்தை தவறாக பயன் படுத்தினால் இறப்பு வந்து விடும் .மீண்டும் மனிதப் பிறப்பு எடுக்க வேண்டியது  வரும். இவர்கள் ஆணவம் மாயை ,கன்மம்,மாமாயை,பெருமாயை என்ற ஐந்து மலங்களையும் வென்றவர்கள்.

ஆனால் இவர்கள் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டார்களா ? என்றால் ஒருவராலும் காண முடியவில்லை. அருளைப் பெற்றது என்னவோ உண்மையாகும்  ,அந்தக் உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தான் அருள்  வழங்கப்பட்டது .ஆனால் அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  சமூகத்தை கண்டு உள்ளார்கள்.அவரின் உருவத்தை நேரில் காண இவர்களால் முடியவில்லை.இவர்களுக்கு காட்சியும் அவர் கொடுக்க வில்லை.

வள்ளலார் சத்திய ஞான விண்ணப்பத்தில் சொல்லுகின்றார் !

மரணத்தை வென்று  ஞான சித்திப் பெற்றவர்களை வள்ளலார் சென்று கேட்கின்றார் .

இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாகிய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் திருவுள்ளம் பற்றி திருவாய் மலர்ந்து ''திருவார்த்தை அளித்து அருளல் வேண்டும் '' என்று விண்ணப்பிக்கும் தோறும் திருவார்த்தை அளித்தல் இன்றிப் பெருங் கருணைத் ''திருக் கண்களில் ஆனந்தநீர் ''பொழிந்து சும்மா இருக்கின்றனர் என்றும் .உணர்ந்தோர் வியந்து உரைப்பக் கேள்வியுற்று இயற்கைத் திரு அருட் சமூகம் இருந்த வண்ணம் என்னையோ ! என்னையா !! என்று குலாவிக் குலாவிக் கூவு கின்றவன் ஆனேன் என்கின்றார் .

விரிக்கில் பெருகும் சுருக்கமாக விளக்குகின்றேன் !

மேலும் வள்ளலார் ;--  ஒ ! ஒப்பு உயர்வு இன்றி விளங்குகின்ற ஒருவரே !
தேவரீர் திருவண்ணமும் ,திருஅருட் சமூகத் திருவண்ணமும் அறிதற்கும்,கருதுதற்கும் துதித்தற்கும் ,எத்திரத்தானும் கூடாவாயினும் அடிமை அளவிற்கு இயன்றபடி அறியாது ,அறிந்தும்,கருதாது கருதியும்,துதியாது துதித்தும்,எனது உரிமையை ஊற்றஞ் செய்கின்றனன் ஆனேன் ! வந்தனம்,! வந்தனம் ! என்று அருட்பெரும்ஜோதி திருவுரு உண்மையை அறிய வேண்டும் என்று கேட்கின்றார்.

சுத்த பிரணவ ஞான சித்தர்கள் ஞான யோகத்தில் பூர்த்தி அடைந்தவர்கள் பூரண அருளைப் பெற்றவர்கள் மரணத்தை வென்று இருக்கின்றார்கள் ,பஞ்ச பூதங்களில் கலந்து இருக்கின்றார்கள்.ஆனால் அருளைக் கொடுத்த அருட்பெரும்ஜோதியைக் காண முடியவில்லை,அருட்பெருஞ்ஜோதியுடன் கலக்க முடியவில்லை. .என்கின்றார் வள்ளலார் . .

வள்ளல்பெருமானுக்கு மட்டுமே ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்சி கொடுத்தார்.கலந்து கொண்டார் ! .அதைத்தான் கண்டேன் ! களித்தேன் !! கலந்து கொண்டேன்!!! என்கின்றார் ..

வள்ளலார் பாடல் !;-- திருவடிப் புகழ்ச்சி 4,ல்  ஏழாவது பாடல் !

திருத்த மிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டி செய்யும் திறத்தர்களும் காக்கும்
அறுத்த மிகு தலைவர்களும் அடக்கிட வல்லவரும்
அலை புரிகின்றவர்களும் உள் அனுகிரப் பவரும்
பொறுத்த மற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள் எதுவோ எனத் தேடிப் போக அவரவர் தங்
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால்
கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன்,கலந்து கொண்டேன் களித்தேன் !

என்கின்றார் .. மேலும் ஒருபாடலில் பதிவு செய்கின்றார் !

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மா தவம் பன்னாட் புரிந்து மணி மாடநடுவே
தேன் இருக்கும் மலர் அணைமேற் பளிக்கறையின் ஊடே
திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே
நல்ல திருவருள் அமுதம் நல்கியது அன்றி என்
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன்
உள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந்தனையே !

பல்லாயிரம் ஆண்டுகளாக,தேன் சுரக்கும் மலர்களை கொண்டு மலர் அணை  அமைத்து அதன் மேல் இறைவன் பாதம் படும்படி பரப்பி , மாபெரும் தவம் செய்து காத்துக் கொண்டு  இருக்கும் பிரம்மா ,விஷ்ணு,சங்கரன்,போன்ற கர்த்தாக்ளுக்கும்,மேலும்  சத்தி சத்தர்களும்,சுத்த,பிரணவ,.ஞான சித்தர்களும்,தன்னுடைய திரு உருவைக் காட்டாமலும்,அவர்கள் விரும்பி காத்துக் கொண்டு இருந்த  இடத்திற்குச் செல்லாமலும்,நான் இருக்கும் குடிசையில் தானே வலிந்து நுழைந்து .எளியேன் உள்ளம் எனும் சிறு குடிசையான உடம்பில் புகுந்து கலந்து கொண்டாயே !

என்று தெளிவாக சொல்லுகின்றார்.எவருக்கும் காட்டாதே என்மட்டில் காட்டிய  அந்தக் கள்வனை போற்றுகின்றார்.  எவருக்கும் காட்டாத தன் உருவை ,''அருட்பெரும்ஜோதி ஆண்டவர்''  தனக்கு காட்டியது மட்டும் அல்லாமல் .தன்னுடம்பிலே கலந்து கொண்டார் என்கின்றார் ..ஏன் ? வள்ளலாருக்கு   மட்டும் காட்சி கொடுக்க வேண்டும் ,கலந்து கொள்ள வேண்டும் .என்பதை வள்ளல்பெருமானே விளக்கம் தருகின்றார் !

மேலும் வள்ளலார்..ஆறாம் திருமுறை   நடராஜபதி மாலையில் 26,ஆவது பாடல் !

துன்பம் எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது
நினைச் சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் மாக்கி மெய்
வாழ்வு எலாம் பெற்று மிகவும்
மன்னு உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி
விளையாடுக அருட் ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திருவாக்கு அளித்து என் உள்ளே
கலந்து இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
இலங்கு நடராஜ பதியே !

என்ற பாடலின் வாயிலாக தெளிவுப் படுத்து கின்றார்.

வள்ளலார் தாவரம் முதல் மனிதர்கள் வரை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற எண்ணங் கொண்டு,கருணையே வடிவமாக ! இரக்கமே வடிவமாக ! தயவே வடிவமாக! பூரண  கருணையோடு வாழ்ந்து, ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ்ந்து ,வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடிய காரணத்தால் ! ... தான் யார் ? என்ற உருவைக் காட்டி .என்றும் அழியாத  சுத்த பிரணவ ஞான தேகத்தையும் கொடுத்து ஐந்து தொழில் வல்லபத்தையும் கொடுத்து .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !...வள்ளலார் உடம்பிலே கலந்து  தன் நிலைக்கு வள்ளலாரை மாற்றிக் கொண்டார் ..

அதைத்தான் வள்ளலார் ''கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்'' என்பதை தெளிவாகச் சொல்லிய தோடு அல்லாமல்,இறைவன் சொல்லியபடி !.இறைவன் ஆணைப்படி ! வாழ்ந்து காட்டியவர் தான் நமது திரு அருட்பிரகாச வள்ளலார் .

மரணத்தை வென்றவர்கள் இருக்கின்றார்கள் ! .கடவுளைக் கண்டவர்கள் இல்லை !

கடவுள் பூரண அருள் பெற்றவர்கள் உண்டு !  கடவுளோடு கலந்து கொண்டவர்கள் இல்லை !

ஒரு தொழிலைப் பெற்றவர்கள் உண்டு ! ஐந்து தொழிலைப் பெற்றவர்கள் இல்லை !!

ஒளி உடம்பு பெற்றவர்கள் உண்டு ! எல்லா உயிர்களிலும் கலந்து கொண்டவர்கள் இல்லை !

அருட்பெருஞ்ஜோதி யாகவே தன்னை மாற்றிக் கொண்டவர் தான்  நமது வள்ளல்பெருமான் ஆவார்கள்  !! .

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு !
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு !!
மருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு !!!
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு !!!!

நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி,அன்பு,தயவு, கருணையோடு வாழ்ந்து அருள் பூரணத்தைப் பெற்று,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம்,என்னும் முத்தேக சித்தியைப்  பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

விரிக்கில் இன்னும் பெருகும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..
9865939896,..


 .


அரசியலுக்கு யார் வரவேண்டும் ?

அரசியலுக்கு யார் வரவேண்டும் ?

நல்ல படித்த அறிவும் திறமையும் உள்ள இளைஞர்கள் வரவேண்டும்.
அதுவும் நாட்டின் மீதும் மக்கள் மீதும் பற்றும் அக்கரையும் உள்ள சுயநலம் இல்லாத துடிபுள்ள இளஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்
அவர்களால்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் நல்ல ஆட்சி நடத்த முடியும்.

அதை விட்டு வாழ்நாள் முழுவதும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சம்பாதித்து விட்டு வயது முதிர்ந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் அரசியலுக்கு வருகிறேன் என்று யார் சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள கூடாது.

அவர்கள் நடிகராக இருந்தாலும் சரி..வியாபாரியாக இருந்தாலும்..அரசியல்வாதியாக இருந்தாலும் சரி.மக்களை ஏமாற்றுபவர்களே ஆவார்கள்..

இப்போது பொருளாதரம்.அரசியல்,சமூகம்,வேதியல் .அறிவியல்.விஞ்ஞானம் படித்துவிட்டு திறமை உள்ள இளஞர்கள் நிறையபேர் நமது நாட்டில் உள்ளார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே

சாதி.சமய.மதம் என்ற வேறுபாடு இல்லாத பொது நோக்கத்தோடு நல்லாட்சி நடத்த முடியும்..எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வழிவகை செய்ய முடியும்..

இதுவரை மக்களை அரசியல் வாதிகளும்.சினிமாகார்ர்களும்,நடிப்பாலும் ,பேச்சாலும் மக்களை ஏமாற்றி விட்டார்கள்.ஏமாந்து விட்டீர்கள்.இனிமேல் ஏமாந்து விடாதீர்கள் உஷாராக இருங்கள்.

வருங்காலம் நல்ல காலமாக அமைய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருள்புரிவார்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 15 மே, 2017

தமிழ் நாட்டின் நிலை !

தமிழ் நாட்டின் நிலை !

தமிழ் நாட்டை மனிதர்கள் தான் ஆளுகின்றனரா வேறு ஏதாவது ஆளுகின்றதா என்பதே தெரியவில்லை.

தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும்,போராட்டம்,சாலை மறியல்,,ரயில் மறியல்,மதுக்கடை நிறுத்த போராட்டம், ,குடிக்க தண்ணீர் இல்லை, ,விவசாயம் செய்ய மழை இல்லை, சட்டப்படி தண்ணீர் கிடைக்க வழி இல்லை.என போராட்டத்திற்கு பஞ்சமே இல்லை .


அராசாங்க வேலை செய்யும் போக்கு வரத்து உழியர்களுக்கு 7000. கோடி ரூபாய் பாக்கி ,அவர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது .அரசாங்கமே கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் ,அவர்களும்,வேலை நிறுத்த போராட்டம் .அதனால் தமிழக மக்கள் படும் துன்பம் அளவில் அடங்காத துயரத்திற்கு ஆளாகி மக்கள் அலை மோது கின்றார்கள்..


மக்களின் பணத்தில் உல்லாச ஏசி பங்களாக்களிலும் உல்லாச ஏசி வாகனங்களிலும் பவனி வரும் ஆட்சி யாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் படும் துன்பத்தைப் போக்க வழித் தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளார்கள்..தமிழக கஜானா காலியாகி விட்டது .மக்களின் பணத்தை ஆட்சியாளர்களே கொள்ளை அடித்து விட்டார்கள்.

இவர்களை என்ன செய்வது என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

மக்களே விழித்து எழுங்கள் நீங்கள் தான் இந்த நாட்டின் எஜமானர்கள்.பொருத்தது போதும் பொங்கி எழுங்கள் .நாட்டைக் காப்பாற்ற நல்லவர்களைத் தேர்வு செய்யுங்கள்..

அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக --நச்சரவம்
ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீண்டு !

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து !...வள்ளலார் ...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 14 மே, 2017

எந்த நாள் சிறந்தநாள் !

எந்த நாள் சிறந்தநாள் !

மனிதர்கள் சிறந்த நாட்களாக நிறைய நாட்களைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள் .

பிறந்த நாட்களை கொண்டாடுகின்றார்கள்..இறந்த நாட்களைக் நினைவு நாட்களாக கொண்டாடி மகிழ்கின்றார்கள் .

அன்னையர் தினம்,..தந்தையர் தினம்,காதலர் தினம் .சுதந்திர தினம்,குடியரசு தினம் என பல்வேறு தினங்களை கொண்டாடி மகிழ்கின்றோம்.

மேலும் அறிவும் அன்பும் நிறைந்த மனிதர்கள்,நல்ல ஒழுக்கம் நிறைந்து வாழ்வில் நல்ல செயல்களைப் புரிந்து அறம் செய்த மகாத்மாக்கள்,மற்றும் நற்குணம் கொண்ட தலைவர்கள்..,செயற்கரிய செயல் புரிந்த செம்புலச் செலவ ஞானியர்கள்,திருவடி மறவாத அடியார்கள்,இறைவன் திருவடியில் சரணாகதி அடைந்த பரம பக்தர்கள்,

மற்றும் யோக ஞான சித்திகள் பெற்ற சித்தர்கள், யோகிகள், இந்திராதி தேவப் பதவிகள்,பெற்ற தேவர்கள்,கடவுள் அருளால் ஆக்கல் ,காத்தல்,அழித்தல் தொழில் நடத்தும் அருள பெற்ற மூர்த்திகள்,முத்தொழில்,ஐந்தொழில்ஆற்றல் பெற்று கர்ம சித்தி யோக சித்தி ,ஞான சித்திப் பெற்று கொண்டு என்றும் இன்பத்தில் வாழும் சுத்த சன்மார்க்க ஞான சித்தர்கள் .போன்ற அனைத்து அருளாளர்களையும் அவர்களின் ஆற்றல் பெற்ற நாட்களை,சித்திப் பெற்ற நாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். உண்மையில் மகிழ்ச்சிதான் .

எல்லாம் வல்லவரை மறந்து விட்டோம் !

மேலே சொல்லி உள்ள உயர்ந்த அறிவும் ஆற்றலும்,அருளும் பெற்ற அனைத்து ஜீவர்களும் அவர்களே அந்தப் பெருமையைக் பெற்றுக் கொள்ளவில்லை.அவர்களுக்கு மேல் எல்லாம் வல்லவர் ஒருவர் உள்ளார். அவரவர்களின் தகுதிக்குத் தகுந்தவாறு அன்பும்,அறிவும்,அருளும் ,கருணையும் வழங்கியவர் ஒருவர் உண்டு என்பதை நாம் எல்லோரும் நினைந்து ,நினைந்து ,உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அறிந்து கொள்ளவில்லை ...

அவர்தான் எல்லாம வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

அவர்தான் எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு உள்ளவர்.அவர் அருள் இல்லை என்றால் உலகமே செயல்படமுடியாது அவர் இல்லை என்றால்,நாமும் இல்லை, நாம் எவரையும் போற்றிப் புகழ முடியாது .சிறந்த நாட்களாக கொண்டாட முடியாது.

அந்த உண்மைக் கடவுளை கண்டு பிடித்தவர்தான் நமது அருட்பிரகாச வள்ளலார் .

அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றி பதிவு செய்த பாடல்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன .அதிலே ஒருபாடல் '--

அகர நிலை விளங்கும் சத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்த சத்தி மார்கள் அனைவருக்கும் அவராற்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும்
இகரமுறு உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும்
எப் பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும்
சிகரமுதற் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

என்ற பாடலின் வாயிலாக நமக்குத் தெரியப்படுத்து கின்றார் .

மேலே கண்ட போற்றுதலுக்கு உரிய அனைவருக்கும் ஒளி வழங்கிக் கொண்டு இருப்பவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .

அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் அனைத்து உயிர்களையும் ,தாயாகவும்,தந்தையாகவும் உள் ஒளியாக (ஆன்மாவாக ) இருந்து இயக்கி இயங்கிக் கொண்டு உள்ளவராகும் .அவரை இடைவிடாது நினைந்து தொடர்பு கொள்ளும் நாட்கள் எல்லாம் சிறந்த நாட்களாகும்...

வள்ளலார் பாடல் ;--

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்த பெரும் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வ மகா தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !

என்னும் பாடல் வாயிலாக மிகத் தெளிவாக எளியத் தமிழில் பதிவு செய்து உள்ளார் நமது அருட்பிரகாச வள்ளல்பெருமான் ..

எனவே நமது உடம்பில் உள் ஒளியாக இருந்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நாளும் சிறந்த நாட்களே ஆகும்.

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

அடங்கு நாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே
தொடங்கு நாள் நல்லதன்றோ --நெஞ்சே
தொடங்கு நாள் நல்லதன்றோ...

வல்லவா எல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்ல நாள் எண்ணிய நாள் ---நெஞ்சே
நல்ல நாள் எண்ணிய நாள் ...

காலம் கடந்த கடவுளைக் காணற்க்கு
காலம் கருதுவதேன் --நெஞ்சே ---
காலம் கருதுவ தேன் !

என்னும் பாடல் வரிகளின் வாயிலாகத் தெரியப் படுத்தி உள்ளார் .

காலங்கள் எல்லாம் கடந்தவர் ,காலத்தை உண்டாக்கியவர் காலத்தை கடந்து நின்று இயங்கிக் கொண்டு உள்ளவர் , அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..அவரை நினைக்கும் தொடர்பு கொள்ளும்,ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நாளும் சிறந்த நாட்களே ஆகும்.

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என்னுளத்தே
நீதியிற் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்து !...வள்ளலார் ..

மேலும் இவ்வுலகில் சிறந்த நாளாக நாம் கொண்டாட வேண்டிய ஒரு நாள் உள்ளது அந்த நாள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவ்வுலகிற்கு வந்த நாள் .அந்தநாள் வள்ளலார் சித்திப் பெற்ற நாள் ..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து வள்ளலார் உடம்பில் கலந்த நாள் ...அந்தநாள் தான் 1874 -1-30, தமிழ் ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19.ஆம் நாள் வெள்ளிக் கிழமை இரவு 12,மணியாகும்.

அந்த நாளை ஆண்டவர் வருகை புரிந்த சிறந்த நாளாகக் போற்றி புழ்ந்து கொள்ளலாம் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்த அந்த நாளில் வள்ளலார் பதிவு செய்து உள்ள இறுதிப்பாடல் ;--

என்சாமி எனது துரை என் உயிர் நாயகனார்
இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக் குள்ளே எனது
பேர் உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான் தான்
சாற்றுகின்றேன் அறிந்தது இது தான் சத்தியமே
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின் தனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

மேலே கண்ட பாடல் வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து தம்மை ஆட்கொண்டு தம் உடம்பின் உட் புகுந்து கலந்து கொண்டு ..வள்ளலாரும் அருட்பெருஞ்ஜோதியாக மாற்றம் கொண்ட நாளாகும் .அந்த நாளை சிறந்த நாளாக போற்றி புகழ்ந்து வணங்கி ..நமக்கும் இதுபோன்ற சிறந்த நாள் கிடைக்க வேண்டும் என்றும் வழங்க வேண்டும் என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது வேண்டி விரும்பி,கேட்டு அவர் திருவடியில் சரண் அடைவோம் ...அதுவே சிறந்த நாளாகும் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 .