சனி, 21 பிப்ரவரி, 2015

பாடு பட்டீர் பயன் அறியீர் !

பாடு பட்டீர் பயன் அறியீர் !

காடு வெட்டி நிலம் திருத்தி காட்டெருவும் போட்டுக்
கரும்பை விட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடு விட்டுப் போயின பின் எது புரிவீர் எங்கே
குடி இருப்பீர் ஐயயோ நீர் குறித்து அறியீர்
பாடு பட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் களித்தீர்
பட்டது எல்லாம் போது இது பரமர் வருதருணம்
ஈடு கட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்
எண்மை உரைத்தேன் அலன் நான் உண்மை உரைத்தனனே .!

திருஅருட்பாவில் ''உறுதி கூறல்'' என்ற தலைப்பில் இரண்டாவது பாடல் .--
நினைத்து பார்க்க முடியாத கல்லும் மண்ணும் காடுகளும் நிறைந்த இடத்தை ,அறிவுள்ள மனிதன் அதை பண்படுத்தி சமமாக்கி கிணறு வெட்டி அல்லது போர் குழாய் வைத்து,தண்ணீர் வரவழைத்து ,நல்ல காட்டு எருவைப் போட்டு,மக்களுக்கு தேவையான நன்செய் நிலமாக மாற்றி,அதிலே நெல்,கரும்பு,வாழை,தென்னை போன்ற நன்செய் பயிர்களை வைக்காமல் ''கடுகு " என்னும் விஷத்தை விதைத்து பயிர் வைத்து களித்து மகிழ்ச்சி அடைகின்றான் .

பாடுபட்டு அதனுடைய நற் பயனை அனுபவிக்காமல் வீணான உழைப்பாகி விட்டது.

அதே போல் மனித தேகம் பலகோடி பிறவிகளின் முயற்ச்சியினால் கிடைத்த அருமையான அற்புதமான பிறவியாகும்.
இந்த பிறவி கிடைத்ததின் அருமை தெரியாமல்,புரியாமல் உடம்பை விட்டு உயிர் பிரிந்து விடுகின்றதே அதாவது மரணம் வந்து விடுகின்றது. மரணம் வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்.மறுபடியும் என்னாவாகப் பிறக்கப் போகின்றீர்கள் .எங்கு செல்லப் போகின்றீர்கள் .எதுவுமே தெரியாது

கிடைபதற்கு அறிய மனித தேகம் கிடைத்தும் அதை பயன் படுத்தத் தெரியாமல் ,மேலும் ஏதும் தெரியாமல் மாண்டு போகின்றீர்கள் .
இனிமேல் அதைப் பற்றி கவலைப் படவேண்டாம் .!
மனிதன் எப்படி வாழ வேண்டும் ,எங்கு செல்ல வேண்டும் என்ற உண்மையைத் தெரியப்படுத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து உரைக்கின்றார் .

நான் சொல்லுவதைக் கேட்டு ஈடு கட்டி வாழ்ந்தால் எல்லா நன்மைகளும்,கிடைக்கும் இதுவரையில் கிடைத்த இன்பத்தைவிட,லாபத்தை விட பெரிய இன்பமும் லாபமும் கிடைக்கும் வாருங்கள் என உலக மக்களை வள்ளல்பெருமான் கூவி அழைக்கின்றார் .

நான் பொய் சொல்லவில்லை உண்மையை சொல்லுகிறேன் நான் அடைந்த பேரின்ப லாபத்தை ,மரணம் இல்லாப் பெருவாழ்வை ,நீங்களும் பெறலாம் அதற்கு எந்த தடைகளும் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லுகின்றேன். என்கின்றார் நமது வள்ளல்பெருமான் .

வள்ளல்பெருமான் சொல்லியபடி நாமும் வாழ்வோம் மற்றவர்களையும் வாழ வைப்போம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

ஆண்டவர் சொல்லியது !

ஆண்டவர் சொல்லியது !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகிறேன் தயவினொடும் கேட்பீர்
என் மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கதவர் போல் வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்குச் சுத்த சிவம் ஒன்றே
தன்னாணை என்னாணை சார்ந்து அறிமின் நீண்டே !

எல்லாம் வல்ல சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ் ஜோதி தனித்தலைமைப் பெரும் பதியாகிய ஆண்டவரை நோக்கி வேண்டித் தபசு
( தவம் ) செய்து சிருட்டிக்கும் ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்ட,பிரம்மாவும் ,இரண்டு சித்தியை உடைய விஷ்ணுவும் ,மூன்று சித்தியை உடைய ருத்திரனும் .இது போன்ற மற்றையர்களும்,

இவர்கள் ஏற்படுத்திய சமய ,மத மார்க்கங்களை அனுஷ்டித்து இருக் கின்றவர்கள் .இவர்களை அந்த அந்த சமய,மதங்களுக்குத் தெய்வங்களாக பாவித்து வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்.

இம் மூர்த்திகள் உடைய சித்திகள் சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ்ஜோதி கடவுளின் சித்தியின் இலேசங்கள்.அதில் ஏக தேசம் கூட அல்ல ! ஆகையால் இவர்கள் அந்தச் சர்வ சித்தி உடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள் .

கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள்.ஆகையால் சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து ,அந்தச் சமயத் தெய்வங்களிடம் பெற்றுக் அற்ப சித்தியில் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலே ஏறவேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு நிற்றல் போல் நில்லாமல்.

சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும்.அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டும் என்றும்.கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்க சங்கத்தவர்கள் உடைய கொள்கையாகும்.

இதை ஆண்டவர் தெரிவித்தார் என்று வள்ளல்பெருமான் சன்மார்க்க சங்கத்தவர்கள் தாள் வணங்கி சொல்லுகின்றார்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.     

வியாழன், 19 பிப்ரவரி, 2015

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு !

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு !

மூவரும் தேவரும்,முத்தரும்,சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை
அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ் ஜோதி.
உலகு உயிர்த் திரள் எலாம் ஒளிநெறி பெற்றிட
இலகும் ஐந்து தொழிலையும் யான் செய்யத் தந்தனை .
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி !

வள்ளல் பெருமான் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வை இன்று வரையில் யாரும்,எவரும் பெறவில்லை.

இந்த உலகத்தில் உள்ள உயிர்களை படைத்து ,காத்து,அழித்துக் கொண்டு இருக்கும்,பிரம்மா விஷ்ணு சங்கரன்,என்னும் தத்துவங்களும்.முத்திப் பெற்றவர்களும்,சித்திப் பெற்றவர்களும் ,மற்றும் உள்ள மதத்தலைவர்களும்,பதத் தலைவர்களும் , அருளாளர்களும், எவருமே பெறமுடியாத,எவராலும் அழிக்க முடியாத மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப வாழ்க்கையைக் கொடுத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்கின்றார் வள்ளல்பெருமான்.

அறிவு !

அறிவு என்பது விரிந்து கொண்டே இருக்கும். உலக அறிவு என்பது தாவரங்கள் முதல் ஒவ்வொரு அறிவாக விளங்கி இறுதியில் அருள் அறிவு விளங்க வேண்டும்.

அருள் அறிவு என்பது கடவுள் அறிவாகும் .அருள் அறிவு விளங்கும் போதுதான் கடவுளின் பூரண அருளைப் பெறமுடியும்.

கடவுள் அறிவு என்னும் அருள் அறிவை ,பூரணமாகப் பெற்று அருள் பூரணத்தையும் பெற்று அனுபவித்து ,சித்துக்கள் எவையும் செய்யாமல் ,அருளைப் பாதுகாத்தவர்தான் வள்ளல்பெருமான்.

அவருடைய எண்ணம் சொல் யாவையும் உலக உயிர்கள் மேலே இருந்தது..அதைவிட மேலாக ஆன்மாக்கள் யாவும் ஆன்மநேயம் இல்லாமல் ,ஒருவரை ஒருவர் யார் ? என்பதை புரிந்து,அறிந்து கொள்ளாமல்,உயிர்களை அழித்துக் கொண்டே உள்ளார்கள் .

உயிர்கள் வந்த விதத்தையும் ,உடம்பு வந்த விதத்தையும்,மனித குலத்தின் மேன்மையும் உண்மையானக் கடவுள் யார் என்பதையும்.. மக்களுக்குப் போதித்து ,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் ஒளிவு மறைவு இல்லாமல்,மக்களுக்கு தெரிவித்து, தெளிவுப் படுத்தியவர் வள்ளல்பெருமான்.

கருணை ஒன்றால் தான் கடவுளைக் காணமுடியும்,கருணை ஒன்றால்தான் ,அன்பு,தயவு என்னும் அறிவு விளக்கம், உண்டாகும்,அறிவு விளக்கத்தால்தான் அருளைப் பெரும் அருள் அறிவு உண்டாகும் .அந்த அருளைப் பூரணமாகப் பெற்றால்தான் மரணத்தை வெல்லமுடியும்.என்ற உண்மையை வெளிப்படையாக சொல்லி,சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டியவர் வள்ளல்பெருமான்.

கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டவர் .அதற்கு ''கடவுள் நிலை அறிந்து அதன் மயமாதல்'' என்ற தலைப்பையும் தெரிவித்து உள்ளார்.

எனவே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தன்னுடைய ஐந்தொழில் வல்லபத்தையும்,வள்ளல்பெருமானிடம் ஒப்படைத்து தானும் அவரும் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து.கடவுள் வேறு, தான் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இப்போது இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை அறிவு சார்ந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் எவரும் பெறமுடியாத அருளையும் ஆற்றலையும் ஐந்தொழில் வல்லப்பத்தையும் கொடுத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்கின்றார்.நமது வாளால்பெருமான்.

''நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்சான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் ---தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே அறை ! ''

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மருட்டு உலகில் இருட்டு உலகில் மடிவது அழகு அல்ல !

மருட்டு உலகில் இருட்டு உலகில் மடிவது அழகு அல்ல !

பொருட்டல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது தான்
புகலுவது ஏன் நாள் தோறும் நும் புந்தியில் கண்டதுவே
மருட்டு உலகீர் இருட்டு உலகீர் மடிவது அழகலவே
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வம்மின் இங்கே
பொருள் திறஞ் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின் சிற்சபை அமுதம் அருந்துமின் அன்புடனே
அருள் திறஞ் சேர்ந்து எண்ணியவாறு ஆடுமினோ உம்மை
அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்றிலையே !

வள்ளல்பெருமான் ''ஞான சரியை'' தலைப்பின் 23,வது பாடல்.
இந்த உலக வாழ்க்கையில் நாம் தினந்தோறும் மரணம் அடைந்து மாண்டு போவதைப் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.

பார்த்துக் கொண்டே இருந்தும் மரணம் ஏன் வருகின்றது ?என்பதை சிந்திக்கவே இல்லை. மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவான இயற்கையானது என்று தவறாக எண்ணிக் கொண்டு உள்ளோம்.

மரணம் என்பது இயற்கை அல்ல ! மரணம் செயற்கையானது !
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் ...தவறு செய்யாமல் இருந்தால் மரணம் இல்லாமல் வாழும் வழி ஒன்று இருக்கின்றது..

இந்த மருட்டு ,இருட்டு உலகத்தில் பொருளைக் கொண்டு வாழும் வாழ்க்கை மரணத்திற்குக் கொண்டு செல்லும்.அருளைப் பெரும் வழியும் வாழ்க்கையும் இவ்வுலகத்திலே உள்ளது..அருளைப் பெற்றால் மரணத்தை வெல்லலாம் .

அருளைப் பெரும் வழியை வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக படித்து,கேட்டு, உணர்ந்து,பின் அதை அனுவித்து அருளைப் பெற்று பேரின்பம் என்னும் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு வழியைக் காட்டுகின்றது .வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார் வள்ளல்பெருமான்.

இதுவரையில் சாகும் கல்வியைக் கற்று மடிந்து கொண்டே உள்ளீர்கள் .இங்கு ''சாகாக் கல்வி ''கற்றுக் கொடுக்கப்படுகின்றது.

இந்த கல்வியைக் கற்றுக் கொள்ள உங்களுக்கு எந்த தடைகளும் கிடையாது பொருள் செலவுகள் கிடையாது.உங்களை யாராலும் எவராலும் தடுக்கவும் முடியாது. நீங்கள் எண்ணியது எண்ணியபடி வாழலாம் .

நீங்கள் சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்தால் உங்களைப் பார்த்து அனைத்து மக்களும் பின் தொடர்ந்து சாகாமல் வாழும் அருள் செல்வத்தை பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி என்றும் நிலைப் பெற்ற மரணம் இல்லாப் பேரின்ப வாழ்க்கை வாழலாம் வாழ்வீர்கள் ..

எனவே இந்த இருள் சூழ்ந்த ,மருள் சூழ்ந்த உலகத்தை விட்டு வெளியே வாருக்கள்.நேரிடையாக இறைவன் அருளைக் கொடுக்க காத்துக் கொண்டு இருக்கின்றார் என்று வள்ளல்பெருமான் அழைகின்றார்.இனி தயக்கம் என்ன ?

சமய மதங்கள் சாகும் கல்வியை சொல்லித் தந்தது .சுத்த சன்மார்க்கம் சாகாக் கல்வியைத் சொல்லித் தருகின்றது.

இதுவரையில் படித்தது சந்தைக் கலவி .இனிமேல் படிப்பது சொந்தக் கல்வியாகும்.

பொருளை அருளாக மாற்றும் கல்வி ....

வாருங்கள் உடனே வந்து சேருங்கள் .அருளைப் பெறுங்கள். மரணத்தில் இருந்து விடுபடுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

வாழையடி வாழை என வந்தவரா ? வள்ளலார் !வாழையடி வாழை என வந்தவரா ? வள்ளலார் !

தமிழ் படித்த சான்றோர் பெருமக்கள் ,வள்ளல்பெருமான் கொளகைகளை பின்பற்றி வரும் சன்மார்க்க பெருங் குணத்தவர்கள் ,சமய ,மத,சான்றோர்கள் மேடைகளிலும்,புத்தகங்களிலும் ,பேசிக் கொண்டும்,எழுதிக் கொண்டும் வருபவர்கள்,அனைவரும் வள்ளல்பெருமான் வருகையைப் பற்றி நன்கு ஆராய்ந்து,அருட்பாவில் உள்ள அருட் பாடல்களில் உள்ள உண்மைகளை படித்தால் நன்றாக,தெளிவாக விளங்கும்.

வருவித்த நோக்கம் !

உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், வள்ளல்பெருமானை இந்த உலகத்திற்கு எதற்க்காக வருவிக்க உற்றார்,( அனுப்பி வைத்தார் ) என்பதை வள்ளல்பெருமானே திருஅருட்பாவில் சொல்லுகின்றார்.

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தை அடைவித்து அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

இந்த உலகில் உள்ள, உயர்ந்த அறிவு படைத்த மனித இனம் ,தாங்கள் வாழும் வாழ்க்கை எத்தகையது என்று தெரியாமல்.வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அகம் என்னும் ஆன்மா வெளுத்து பரிசுத்தமாய் இருந்து இறைவன் அருளைப் பெறவேண்டும் என்பது இறைவன் கொடுத்த அனுமதியாகும்.இறைவனின் சட்டமாகும்..ஆனால் மனிதர்களோ ! அகம் கருத்து ,புறம் வெளுத்து வாழ்ந்து ,அருளைப் பெற முடியாமல்,பரம் என்னும் அருள் உலகத்திற்கு செல்ல முடியாமல்,இறுதியில்  மரணம் என்னும் பெரும்பாவி வந்துவிடுகின்றது அதை தடுக்க முடியாமல்,தடுக்க வழி தெரியாமல் இறந்து இறந்து,பிறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள் .

ஆதலால் மனித தேகம் படைத்த உலகில்  உள்ள அனைத்து மக்களையும்.திருத்துவதற்கு  ,சுத்த சன்மார்க்கம் என்னும் ஓர் பொதுவான அருள் நெறியை தோற்றுவித்து ,அதன் வழியாக இந்த இகத்திலேயே பரத்தை பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.அவ்வண்ணமே  நானும் இகத்தே இருந்தே ( இந்த உலகத்தில் இருந்தே)  அருளைப் பெற்று மரணத்தை வென்று ,மற்ற ஆன்மாக்களையும் அருளைப் பெறவைத்து,மரணத்தை தவிர்த்து வாழ வைக்க வேண்டும்.

 அவற்றைக் கண்டு இறைவன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே,இறைவன் என்னை இந்த உலகிற்கு வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் என்கின்றார் வள்ளல்பெருமான்.

வள்ளல்பெருமானின் பிறப்பின் சகசியம் !

      வள்ளலார் மற்ற ஞானிகள் போல் (அருளாளர்கள் ) ஆண் பெண் உறவு கொண்டு பிறந்து  வந்தவர் அல்ல ! என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .

வள்ளலார் வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட மரபினில் வந்தவர் என்று, விபரம் தெரியாதவர்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள்.வள்ளலார் எழுதிய திரு அருட்பாவில் ''பிரியேன் என்றல்''என்ற தலைப்பில் எழுதியுள்ள பாடலை வைத்து கருத்து தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.அந்தப் பாடலில் வரும் வார்த்தைகள் கருத்துக்களை ஊன்றி பார்க்க வேண்டும் .

பாடல் !

வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட
மரபினில் யான் ஒருவன் அன்றோ ? வகையறியேன் இந்த
ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ ?
இது தகுமோ ? இது முறையோ ? இது தருமம் தானோ ?
மாழைமணிப் பொதுநடஞ் செய் வள்ளால் யான் உனக்கு
மகன் அலனோ ? நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ ?
கோழை உலகுயிர்த் துயரம் இனிப் பொருக்க மாட்டேன்
கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே !

என்று இறைவனிடம் கேட்கிறார் வள்ளலார் ....இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன ? நான் மற்றவர்கள் போல் வந்தவர்களில் ஒருவன் அல்ல ! அப்படி வந்தவன் போல் நினைத்து எனக்கு அருளைக் கொடுக்க தாமதம் செய்கிறாயா?  என்று ஒரு கேள்வியை இறைவனிடம் எழுப்புகிறார்.  அப்படி வந்தவன் நான் அல்ல ! என்கிறார்  ...இறைவா நான் யார் என்பது உமக்குத் தெரியாதா ? தெரிந்தும் கால தாமதம் செய்வது சரியா ? இது உனக்குத்  தகுமோ ?, இது முறையா ? இது தருமம் தானோ ! ...எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள்களையும் ,மற்றும் உள்ள அனைத்து இயக்கங்களையும் ,தோற்றுவித்து,  வாழ்வித்து,  குற்றம் நீக்குவித்து ,  பக்குமவம் வருவித்து,   விளக்கம் செய்வித்து,அனைத்து செயல் பாடுகளையும் நேர்மையாகவும். சரியாகவும், ஒழுங்காகவும், பாராபட்சமின்றி,அனைத்து இயக்கங்களையும்,  பொதுவாக நீதி தவறாமல்,எக்காலமும் இயக்கிக் கொண்டு இருக்கும் கருணை மிகுந்த அருள் வள்ளல் அல்லவா ? நான் உன்னுடைய மகன் என்பதை மறந்து விட்டாயா?

நீங்கள் தான் என்னை அனுப்பி வைத்தாய் என்பதை மறந்து விட்டாயா? நீங்கள் தான் எனக்கு உண்மையான தந்தை என்பதை மறந்து விட்டாயா ? இந்த உலக உயிர்களின் துன்பங்களை ஒழித்து,(போக்கி ) நன்மை உண்டாக்குவதற்குத்  தானே என்னை அனுப்பி வைத்தாய் .  இனியும் உலக உயிர்களின் துன்பத்தை பார்த்துக் கொண்டு இருக்க என்னால் இயலாது.,அதனால் உடனே உங்களிடம் உள்ள அருள ஒளியை கொடுத்து அருளல் வேண்டும்,அருள் கிடைத்தால் தானே நீங்கள் கொடுத்த பணியை என்னால் முழுமையாக செய்ல் படுத்த முடியும் .ஆதலால் காலம் தாழ்த்தாமல் இப்பொழுதே உன்னுடைய முழுமையான அன்பு  தயவு,கருணை என்னும் அருளை எனக்குக்  கொடுத்தருளல் வேண்டும் என்று கேட்கிறார் வள்ளலார் .

மற்ற அருளாளர்களுக்கு சோதனைக் கொடுத்து,...வேதனையைக் கொடுத்து, துன்பத்தைக் கொடுத்து.. துயரத்தைக் கொடுத்து,அச்சத்தைக் கொடுத்து,பயத்தைக் கொடுத்து,பின் அவரவர் தகுதிக்குத் தகுந்தாற்ப்போல்  அருளைக் கொடுத்தது போல் ..என்னை நினைத்து விடாதே .நானோ நீ அனுப்பியவன் என்பதை மறந்து விட்டாயா ? நான் உன் மகன் என்பதை மறந்து விட்டாயா ? நான் உன் மகன் அல்லவா , நீ எனக்கு வாய்த்த தந்தை அல்லவா ? ஏன் காலம் தாழ்த்துகிறாய் என்று ஆண்டவரையே கேள்வி கேட்கிறார் இவைதான் அந்த பாடலில் உள்ள கருத்துக்களாகும்.

பக்குவம் உள்ள ஆன்மா !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பி  வைக்கப்பட்டவர் தான்  வாள்ளலார் என்னும் உயர்ந்த பக்குவம் உள்ள ஆன்மா என்னும் ...அணு ஒளியாகும்.! அதுவே உயிரையும் உடம்பையும் எடுத்து இவ்வுலகிற்கு உண்மையான வழியைக் காட்ட  வந்த ஜீவ தேகமாகும் 

அந்த தேகம் வள்ளலார் என்ற பெயரைத் தாங்கி உள்ளது  அது உயர்ந்த பக்குவம் உள்ள  ஆன்ம அணுவாகும் இந்த உலகத்திற்கு,எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய ''அருட்பெருஞ்ஜோதி '' {அருள் அணுவால் } ஆண்டவரால்  அனுப்பி வைக்கப்பட்டதாகும்  ...ஏன் ? எதற்காக? அனுப்பி வைக்கிறார் .

பாடலைப் பாருங்கள் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும் அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

இந்த பாடல் வாயிலாக இறைவனே இந்த உலகத்திற்கு வள்ளலார் என்னும் உருவம் தாங்கிய அருளாளரை  அனுப்பி வைத்து உள்ளாறேத் தவிர,வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் ஒருவராக வந்தவர் அல்ல என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.மேலும் ஒரு பாடலைப் பாருங்கள்.

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் மோர்
பவநெறி இதுவரை பரவியது ஆதலினால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான்
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற என்னரசே
தனி நடராஜ என் சற்குரு மணியே !...

என்றும் மேலும் ஒருபாடலைப் பாருங்கள் ,

தெய்வங்கள் பலபல் சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்புகின்றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றும் இல்லார்
மேல்விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

உலகில் பொய்யான சாதி,சமயம்,மதம்,போன்ற கொள்கைகளை மக்கள் மத்தியில் சமய ,மத வாதிகள் விதைத்து விட்டார்கள் , ஆதலால் தாம் யார் ? என்ற உண்மை தெரியாமல் மக்களைப் பிரித்து வைத்து விட்டார்கள்.மேலும் பொய்யான தத்துவ உருவங்களை தெய்வங்களாகப் படைத்து கற்பனைக் காட்சி பொருள்களாக  வைத்து, ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள்.உண்மையானக் கடவுளைக் காட்டாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.அதனால் மக்கள் தன்னுடைய ஆன்மாவில் உள்ள அருளைப் பெரும் தகுதியை இழந்து அறியாமையால் சரியை,கிரியை,யோகம் போன்ற ஆச்சார சங்கற்ப,விகற்ப  கர்மங்களை காட்டி உள்ளார்கள்.அவற்றை உண்மை என்று பின்பற்றி வீணாக வாழ்க்கையை அழித்துக் கொண்டு உள்ளார்கள்.

அருளைப் பெரும் ஞானத்தை பற்றி தெரிந்து கொள்ளவில்லை.

ஆன்மீக சிந்தனையாளர்கள்,அருளாளர்கள்  என்று சொல்பவர்களுக்கும் உண்மையான அறிவு தெளிவு இல்லை,அதைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களுக்கும் உண்மையான அறிவு தெளிவு வெளிப்பட வில்லை .ஆதலால் அவர்கள் அனைவருக்கும் உண்மையான அறிவை தெளிவுப் படுத்த வேண்டும் என்பதற்காக என்னை இறைவன், மிக மிக முக்கிய அவசியத்தைக் கருதி  அவசரமாக அனுப்பி வைத்துள்ளார் .நான் நேரடியாக ஆண்டவர் அருளால் மனிதப் பிறப்பை பெற்றுக் கொண்டவன். 

எனக்கு முன் பிறப்பும் இல்லை,பின் பிறப்பும் இல்லை.நான் இறைவனால் வருவிக்க உற்றவன் அவருடைய உண்மையான அருளைப் பெற்றவன் என்பதால்,நான் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் இறைவனுடைய வார்த்தைகளாகும் என்பதை தெளிவாக விளக்கம் அளிக்கிறார் வள்ளல் பெருமான் . 

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள்.!

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
நம்பும்மினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான் உரைத்த மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான்
வரவெதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேனுரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினை நீர் அடைதல் குறித்தே !

நான் யார் ?எனக்கு என ஒரு ஞான அறிவு ஏது ? நான் உரைக்கும் செய்திகள் அனைத்தும் எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய ,எந்தந்தையாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லும் வார்த்தைகளாகும்.
என்னுடைய தலையின் மத்தியில் ஆன்மா என்னும் ஒளியில் அமர்ந்து கொண்டு ,தேன்போல் இனிக்கும் திருஅருட் பாசுரங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டு உள்ளார்.

அதனால் என உயிர் இனிக்க உளம் இனிக்க உடல் பொருள் ஆவி எல்லாம் இனிக்க எழுதுகின்றேன் ,ஏன் எழுதுகின்றேன் உரைக்கின்றேன் என்றால் ஆன்ம நேய உரிமை உள்ள என்னுடைய ஆன்ம நேய சகோதர உரிமை உள்ள மனிதர்கள் என்பதால் உரைக்கின்றேன்.யான் அடையும் அருள் சுகத்தினை நீங்கள் அனைவரும் அறிந்து தெரிந்து ,அருளைப் பெற்று பேரின்ப வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற அன்பினால் தயவால்,கருணையால் இரக்கத்தால் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன் என்கின்றார்.

மேலும் ஒரு பாடலைப்பாருங்கள் !

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர் 
எண்மையினால் எனை நினையீர் எல்லாம் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவிர்
தணமையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியிற்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்கக்
கண்மை தரும் ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகழும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

என்னை இந்த உலகத்திற்கு அனுப்பியவன் இறைவன் .அனுப்பியதோடு அல்லாமல் என்னுள் இருந்து செயல் பட்டுக் கொண்டு உள்ளார் .அதனால் நான் உரைக்கும் வார்த்தைகள் எல்லாம் என்னுடைய நாயகன் என்னும் இறைவனுடைய வார்த்தைகளாகும்.அதனால் நான் உண்மையை உரைக்கின்றேன்.

மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளில் பொய்யே இருக்கும்  என்னுள் இருந்து இறைவன் உரைப்பதால்,புனைந்து உரையேன் ,பொய் புகலேன் சத்தியம் சொல்கிறேன்.  உண்மையைத் தவிர பொய்யேதும் என்னுடைய வார்த்தையில் வாராது.அதனால் என்னுடைய உரையில் உங்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது.என்னுள் இறைவன் இருந்து இசைக்கின்றான்.ஆதலால் நீங்கள் இந்த உண்மையை உணர்ந்து அவசியம் தெரிந்து அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்று விக்கப் பட்ட ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற ஒரு உண்மையான பொது நெறியான ,அருள் நெறியை பின்பற்றி ஒழுக வேண்டும் .அந்த உண்மை நெறியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே .தலைமை ஏற்று நடத்திக் கொண்டும் இயக்கிக் கொண்டும்  உள்ளார். அதில் சேர்ந்து உறுப்பினராகி அன்பையும் தயவையும்,கருணையும் ,அருளையும்,பெற்று, சாகாக் கல்விக் என்னும் பேரின்பக் கல்வியை கற்கவேண்டும் கற்று பேரின்பம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம் வாருங்கள் .இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரில் வந்து அருள் என்னும் கருணை நிதி,வழங்குகின்ற தருணமாக உள்ளது என உலக மக்களை அழைக்கின்றார்.   

வள்ளலார் பிறப்பின் ரகசியம் !

இயற்கை உண்மை,இயற்கை,விளக்கம்,இயற்கை இன்பம்,!

இறைவன் என்பவர் சர்வ வல்லமைப் படைத்தவர்,சர்வ சித்தியை உடையவர் என்பது ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த உண்மையான இறைவன் இருக்கும் இடம் அருள் நிறைந்த அருள் பெரு வெளியாகும் . அந்த பெருவெளியின் நடுவில் உள்ள அருட்பெரும் பீடத்தில் அமர்ந்துள்ளவர் தான்  அருடபெருஞ் ஜோதியாகும். அந்த அருட்பெரு வெளி அருள் நிறைந்து அனாதியாக இயற்கை உண்மையாக இருக்கிறது.அதே போல் அதற்குக் காரணமான காரியமான அருட்பெருஞ் ஜோதிக கடவுள் அனாதியாக இயற்கை விளக்கமாக இருக்கின்றது. அங்கு எங்கும் பூரணமாக இயற்கை இன்பம் நிறைந்து இருக்கின்றது .

அதற்கு கடவுள் சமூகம் என்று பெயர்...அந்த கடவுள் சமுகம் என்னும் இடத்தில் ஆன்ம ஆகாசம் என்னும் ஓர் தனி கூடம் இருக்கிறது .அங்கேதான்  ஆன்மாக்கள் என்னும் அணுக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன...அங்குள்ள அணுக்கள் மூன்று விதமான மூன்று குணங்கள் உடையதாகும்.1,பக்குவ ஆன்மா ..2,பக்குவ அபக்குவ ஆன்மா ..3,அபக்குவ ஆன்மா என்பதாகும்.

உலகின் சிருஷ்டிகள் ஐந்து வகைப்படும் . 1,அணுபட்ஷம,2,பரமாணு பட்ஷம்,3,சம்பு பட்ஷம்,4,விபு பட்ஷம்,5,பிரகிருதி பட்ஷம்,
இவற்றில் சம்பு ,விபு இவ்விரண்டிற்கும் அபக்குவம் இல்லை ...மற்ற மூன்றிற்கும் பக்குவ அபக்குவம் உள்ளது . சம்பு ,விபு என்ற இரண்டும் இறைவனால் நேரடியாக உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ,அவை பக்குவமுள்ள ஆன்ம அணுககளாகும் .   

1, அணு பட்ஷம் என்பது ;--அபக்குவ ஆன்மாக்கள் தாவரங்கள்,(பவுதிகங்களாலும் ),ஆகார மூலமாய் மிருகங்கள்,மற்றும்  பெண் ஆண் சம்பந்தத்தோடு உண்டாக்குவது.
மேற்படி பக்குவ அபகுக்குவ சிருஷ்டியாவது புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பது போல் தன அஸ்தத்தால் ஸ்திரீயைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு தேக சம்பந்தஞ் செய்வித்து உண்டாக்குவது.

2,பரமாணு பட்ஷம்  அபக்குவ சிருஷ்டி தேகத்தைக் கரத்தால் பரிசித்து ஊன்றிப் பார்த்த உடனே கருத்தரித்தல்.

மேற்படி பட்ஷத்தில் பக்குவம் என்பது  கண்ணால் பார்த்தவுடனே புணர்ச்சியின்றிக் கருத்தரித்தல்.

3,, சம்பு பட்ஷம் என்பது அருள் நிறைந்தவர்கள் (ஆண்டவர் ) வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல்....

4,பிரகிருதி பட்ஷத்தால் ...சங்கற்பித்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிண்டம் கீழ்த் தோன்றல்.

5,விபு பட்ஷ சிருஷ்டி ...பார்த்தவுடன் திரண முதலானவற்றையும்  நரனாகச் செய்வித்து அநேக விசித்திரங்கள் உண்டு பண்ணுவது .

மேற்கண்ட இவைகள் கடவுளால உண்டாக்கப்பட்ட சிருஷ்டி முறைகளின் வழிகளாகும்.

இந்த சிருஷ்டி முறைகளில் வள்ளலார் சம்பு பட்சத்தில் பிறந்தவராகும்...கடவுள் நேரடியாக இந்த உலகத்திற்கு வந்து ஒரு தகுதி உடைய பெண்ணை தேர்வு செய்து, அந்த பெண்ணிடத்தில் உனக்கு ஒரு ஆண் குழைந்தை பிறக்கும் என்று வாக்கால் சொன்னவுடன் கருத் தரிப்பதாகும் ,அந்த முறையில் தேர்வு செய்தவர் தான் ,வள்ளல்பெருமானின் தாயார் சின்னம்மை என்பவராகும்.   .

மருதூர் ....

உலகத்தை திருத்துவதற்கு ஒரு பக்குவமுள்ள ஆன்மாவைக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிவனடியாராக உருவங் கொண்டு ,தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்திற்கு வருகின்றார்....மருதூர் கணக்குப் பிள்ளையாக ராமைய்யாவும் .அவரது ஆறாவது மனைவியாக சின்னம்மை யாரும் வாழ்ந்து வரும் காலத்தில்,அவர்களுக்குச சபாபதி,பரசுராமன் ,என்னும் இரு ஆண்குழந்தைகளும், உண்ணாமலை,சுந்தராம்பாள் ,என்னும் இரு பெண்மக்களும் பிறந்து உள்ளனர் ..

1822 ,ஆம் ஆண்டு மருதூருக்கு ... சிவனடியாராக இராமய்யா வீட்டிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார் .அப்போது இராமைய்யா மனைவி சின்னம்மை  மட்டும் வீட்டில் இருக்கிறார்.அம்மா பசிக்கிறது என்று ஒரு குரல் கேட்டு சின்னம்மை வெளியே வருகிறார்.அழகிய கம்பீர தோற்றமுடன் காவி உடை அணிந்து நிற்கும் சிவனடியாரைப் பார்த்து கைக்கூப்பி வந்தனம் சொல்லி,மகிழ்ச்சியுடன்  வாருங்கள் வாருங்கள் ,என்று அழைத்து அவரது இல்லத்தில் பாய் விரித்து அமரச்சொல்லி ,அறுசுவை உணவு படைக்கிறார் .உணவு உண்டு பசியாறிய சிவனடியார் எனக்கு பசியாற உணவு அளித்த உனக்கு

உலகத்தில் உள்ளோர் அனைவருடைய பசியையும் போக்க வல்ல, ஒரு அருள் ஞானமுள்ள  ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

கள்ளம் கபடம் அற்ற ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண்ணாக,யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் உணவு வழங்கும் கருணை நிறைந்த பெண்ணாக இருக்கும் சின்னம்மை அவர்கள், சிவனடியாரைக்   கண் இமைக்காமல் உற்றுப் பார்த்து கொண்டு கைக்கூப்பி வணக்குகிறார். .அவர் 
சொல்வதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தார் ,திடீர் என்று சிவனடியார் மறைந்து விட்டார் என்பது வரலாறு .

சிவனடியாராக உருவம் தாங்கி வந்தவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் . அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு பிறந்த குழந்தைதான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனுப்பிய பக்குவமுள்ள ஆன்ம அணுவை தன வயிற்றில் சுமந்தவர் சின்னம்மையாகும் அந்த வயிற்றில் கருவாகி,பிண்டமாகி,உருவாகி  முழு குழந்தையாகி இவ்வுலகத்திற்கு கொண்டு வந்தவர்தான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகும். வள்ளலார் இந்த உலகத்தில் வருவதற்கு  உபகாரக் கருவியாக இருந்தவர் தான் சின்னம்மையாகும். அப்பா அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகும் என்பதை நாம் அறிந்து,தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் சிவனடியாராக வரவேண்டும் ..சின்னம்மைக்கு சிவனடியார்கள் என்றால் தெரியும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தெரியாது ,ஆதலால் சின்னம்மை புரிந்து கொள்ளும் பொருட்டு தன்னுடைய உருவத்தை சிவனடியாராக மாற்றிக் கொண்டு வருகிறார் என்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சிதம்பரம் கோவில் !

ஆண்டவர் அருள் சத்தியால், அவர் அருள் வாக்கால், சொன்ன மாத்திரத்தில் ''சம்பு பட்சத்தால்'' கருவாகி பிறந்த ஞானக் குழந்தைதான் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் ..குழந்தை பிறந்ததும் கோவிலுக்கு எடுத்து செல்வது வழக்கம் அதேபோல் அக்குழந்தை ஐந்து மாதம் இருக்கும் போது ,பெயரளவில் இருந்த தந்தை இராமய்யாவும் ,உபகாரக் கருவியான அம்மா சின்னம்மையும் பூர்வ ஞான சிதம்பரம் என்னும் கோவிலுக்கு,..தங்களுடைய குடும்பத்துடன், அருள் வள்ளல் என்னும் இராமலிங்கத்தையும்,மற்ற குழந்தைகளையும்   அழைத்துக் கொண்டு செல்கின்றனர் .அங்கே கண்ட காட்சி மிகவும் அதிசயமானது,ஆதாரமானது ,அற்புதமானதாகும்..

சிதம்பரக் காட்சி !

சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜர் சிலைக்கும்,பெருமால்சிலைக்கும் மற்றும் உள்ள சிலைகளுக்கு எல்லாம் அபிஷேக ஆராதனை  செய்து விட்டு ,இறுதியாக நடராஜ சன்னதியின் சுவற்றில் திரையால் மறைத்து வைக்கப்  பட்டு இருக்கும், சிதம்பர ரகசியத்தை அப்பையா தீட்சதர் என்பவர்  திரை தூக்கி தரிசனம் காட்டியபோது,...சின்னம்மை கையில் உள்ள அந்த சிறு குழந்தை கல கல வென்று கணீர் கணீர் என்ற குரலில் சிரித்தது ,அங்குள்ள மக்கள் அனைவரும் அந்த குழந்தையைக் கண் கொட்டாமல் பார்த்தனர். அதைக் கண்ட அப்பைய்ய தீட்சதர் ,அதிசயமும் ஆச்சரியமும்,ஆனந்தமும்  அடைகின்றார் .

இராமய்யா சின்னம்மையிடம் வந்து ஐயா அம்மா நீங்கள் இந்த குழந்தையை எடுத்துக் கொண்டு எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றார்.அவருடைய அன்பை ஏற்றுக் கொண்டு அப்பய்ய தீட்சதர் வீட்டிற்கு செல்கிறார்கள். குழந்தையை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து ,பாய் விரித்து குழந்தையை படுக்கவைத்து,சாஸ்டாங்கமாக குழந்தையின் காலில் விழுந்து வணங்கி...ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டு , இக்குழந்தை உங்கள் குழந்தை அன்று, ஆண்டவரின் ஞானக் குழந்தை,இக்குழந்தை என்வீட்டிற்கு வருவதற்கு நான் பலகோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.நான் புண்ணியம் செய்தவன் என்று ஆனந்த கண்ணீர் மல்கி பிரசாதம் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியை வள்ளலார் தன்னுடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் தான் எழுதிய திருஅருட்பாவில்  பதிவு செய்துள்ள ''அருள் விளக்க மாலையில்'' 44,வது பாடலாக பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

தாய் முதலோரோடு சிறு பருவத்தில் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கித் தரிசித்த போது
மேய் வகைமேல் காட்டாதே என்தனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய்யுருவாம் பொருளே
காய்வகை இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியுஞ்
ஜோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே !

நான் சிறு குழந்தையாக இருக்கும் போதே பூர்வ ஞான தில்லை சிதம்பரம் தலத்தில் திரை தூக்கிக் காட்டி உலகின் ரகசியங்கள் அனைத்தும்,ஒளிவு மறைவு இன்றி,திரையை அகற்றி வெட்டவெளியாக காட்டிவிட்டீர்கள்  என்னுடைய உடம்பின் உள்ளே உயிர் ஒளியாக,உள் ஒளியாக {ஆன்மாவாக } இருந்து  இயக்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தேன் அறிந்தேன் நீயே என்னுடைய உண்மைத்  தந்தையாகும் .என்னுடைய சொல்லும்,செயலும் அருளும் உன்னுடையதே என்பதை ,அருட்பெருஞ் ஜோதியின் நடனத்தால் (இயக்கத்தால் ) அறிந்து கொண்டேன் என்கிறார்.வள்ளல் பெருமான் .

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ? வள்ளல்பெருமான் வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட மரபை சார்ந்தவர் அல்ல என்பதை....

கல்வி !

வள்ளலார் அவர்கள் எப் பள்ளியிலும் கல்வி பயின்றது இல்லை,எந்த ஆசிரியர் இடத்திலும் பாடம் பயின்றது இல்லை,கற்க வேண்டுவன அனைத்தும்  எல்லாம் இறைவனிடமே கற்றார் ,கேட்க வேண்டுவன அனைத்தும் இறைவனிடமே கேட்டார்...வள்ளல் பெருமானின் கல்வியும் கேள்வியும் இறைவனிடம் பெற்றதே அல்லாமல் வேறு எவரிடமும் ,எந்த குருவிடமும் உபதேசம் பெற்றது இல்லை,..எந்த அருளாளரையும் பின்பற்றி செயல்படவில்லை, என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.வள்ளல் பெருமான் உரைநடைப்பகுதியில் {பெருவிண்ணப்பத்தில் )அவரே எழுதி வைத்துள்ளதை பாருங்கள்.

குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை
[சாகாக்கல்வி } எனது உள்ளத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் .என்று தெளிவுப் படுத்தி உள்ளார் .
மேலும் பல பாடல்களில் பதிவு செய்துள்ளதைப் பாருங்கள்.!

கற்றதும் நின்னிடத்தே ,பின் கேட்டதும் நின்னிடத்தே ,என்றும்

பள்ளியில் பயிற்றாது என்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்தாய் என்றும்,

ஓதாது உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீதான் என்றும் .

ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தினாய் என்றும் ..

ஓதி உணர்ந்தவகள் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் என்றும் ...

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி என்றும்...

யான் பாட நீ திருத்த என்னதவம் செய்தோனோ என்றும்.

என் சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்கின்றாய் என்றும்.

என்பன போன்ற அகச்சான்றுகள் திரு அருட்பா பாட்ல்களில் நிறைய உள்ளன.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் ,அவர் வாக்கால் பிறந்தவர்தான் வள்ளல் பெருமான் அவர்கள்.

இதற்கு முன்னாடி நிறைய அருளாளர்களை இறைவன் அனுப்பி உள்ளார் .அவர்கள் ஆண் பெண் உறவில் கருத்தரித்த வந்தவர்கள் .அவர்கள் எவ்வளவு அருள் பெற்று இருந்தாலும், மாயையில் சிக்குண்டு உண்மைக்கு புறம்பான கற்பனைச் செய்திகளையே மக்கள் மத்தியில் விதைத்து ,பரப்பி விட்டார்கள்.அவர்களுக்கும் உண்மை தெரியவில்லை ,அவர்களால் மற்ற ஆன்மாக்களுக்கும் உண்மையைத் தெரிவிக்க முடியவில்லை ,இன்றுவரை வள்ளலாரைத் தவிர வேறு யாரும் இறைவனுடைய கோட்டைக்குள் செல்ல முடியவில்லை,கோட்டையின் கதவை திறக்க முடியாமல் திண்டாடிக் கொண்டே உள்ளார்கள்.ஆண்டவருடைய உண்மையான விலாசமும் ,அவர் இருக்கும் கோட்டையின் கதவைத் திறக்கும் திறவு கோலும் கிடைக்காமல்,அந்த திறவு  கோளைப் பெரும் வழியும் தெரியாமல், ஆன்மாக்கள் திசைமாறி சென்று,அலைந்து ,திரிந்து வழி தெரியாமல் மறுபடியும்,இறந்தும் இறந்தும், மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜீவ காருண்யமே சாகாக் கலவி !

ஜீவகாருண்யம் என்னும் சாகாக்கல்வி பயின்று,பூரண அருளைப் பெற்று, மரணத்தை வென்றால் மட்டுமே ஆண்டவருடைய கோட்டையின் திறவு கோல்{சாவி } கிடைக்கும் ! கேளுங்கள் தரப்படும் ,தட்டுங்கள் திறக்கப்படும் என்பது எல்லாம் வாய் ஜாலங்களாகும், கதவை தட்டினால் திறக்காது.அருள் என்னும் திறவு கோல் கொண்டுதான் திறக்க முடியும்.

சாகாக் கல்வியை கற்பிக்கும் தரம் யாரிடத்திலும்,எவரிடத்திலும்  இல்லாததால் ,சொல்லிக் கொடுக்கும் வழி தெரியவில்லை. அதனால் மக்கள் பிறந்து பிறந்து, இறந்து இறந்து ,வீண் போய் கொண்டு உள்ளார்கள் என்பதால் .உண்மையான சாகாக் கல்வியை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால்,சாகாக் கல்வி பாடசாலையைத் தோற்றுவித்து ,அவற்றைக் கற்றுக் கொண்டு அதன்படி வாழ்ந்து ''மரணம் இல்லாத பெருவாழ்வு'' பெற்று ''பேரின்ப சித்திப் பெருவாழ்வு'' என்னும் ஆண்டவரின் ''அருள் பூரணம்'' அடைந்து,''கடவுள் நிலை அறிந்து அதன் மயமாகி ''ஐந்தொழில் வல்லபமும் பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் நமது வள்ளல் பெருமான் அவர்கள்...

அவர் தோற்றுவித்த சாகாக் கல்வி பாடசாலைதான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்னும் பாடசாலையாகும்.அந்த பாடசாலையில் சேர்ந்து சாகாக்கல்விக் கற்று தேர்வில் வெற்றிப் பெற்று ,வள்ளல்பெருமானைப் போல் அனைத்து ஆன்மாக்களும் அதே தகுதியைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் என அனைத்துலக மக்களையும் அழைக்கின்றார் 

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின்  தன்னுடைய நேரடிப் பார்வையில்,வள்ளலார் என்னும் ஆன்ம அணுவை இந்த உலகத்திற்கு அனுப்பு வைத்து.,அதன் உள் ஒளியாக இருந்து செயல்பட்டுக் கொண்டும் உள்ளார் என்பதை ,உலகில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவரால் அனுப்பி வைக்கப் பட்ட வள்ளல்பெருமான் எப்படி வாழை வாழை என வந்த திருக் கூட்ட மரபில் ஒருவர் ஆவார் ? சிந்திக்க வேண்டும்.

சிதம்பரம் இராமலிங்கம் !

வள்ளலார் தன்னுடைய பெயருக்கு முன்னால் சிதம்பரம் இரமாலிங்கம் என்றுதான் பெயர் எழுதுவார்.அவருடைய உண்மையான அப்பா அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்பது இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டும் .தன்னுடைய உபகாரத் தந்தைப் பெயரான இராமய்யா பெயரை எங்கும் எந்த இடத்திலும் அவர் சொன்னதும் இல்லை,எழுதியதும் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட்சாறு மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாநாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி யீந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு  எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் .

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமை தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்த்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்த பெரும் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !

என்று அருட்பெருஞ்ஜோதி தேய்வத்தைப் பற்றி புகழ்ந்து போற்றுகின்றார் .
தாயாகவும் தந்தையாகவும் குருவாகவும் இருந்து கொண்டு எனக்கு எந்த இடர்பாடுகளும் வராமல் ,எண்ணிய எண்ணம்  எல்லாம் நிறைவேற்றி கருணை நிதி என்னும் அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டு என்னுடைய தலைபாகத்தின் உள்ளே உள்ள நடுவில் சிற்சபையில் அமர்ந்து இயக்கிக் கொண்டும்  விளங்கிக் கொண்டும்  உள்ளீர்கள் என்று தெளிவுப் படுத்துகின்றார் .  

உங்களுக்கு நிகரான தெய்வம் உலகத்தில் எங்கும் இல்லை என்பதை தெரியப்படுத்தி தெளிவுப் படுத்தி விட்டீர்கள் .உன்னுடைய உண்மையான குழந்தை நான் தான் என்பதையும் ,நான் ஒருவன்தான் என்பதையும் நீ உரைக்க நான் அறிந்து கொண்டேன் . நீயே அனுப்பி வைத்தாய் என்பதையும் அறிந்து கொண்டேன்.

நான் யார் ? எனக்கு என ஓர் ஞான அறிவு ஏது  ? என்னுடைய ஆன்மாவில் அமர்ந்து இருந்து செயல்படுவது  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் அதனால்தான் அவரே சொல்லுகிறார் .

நானுரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வானுரைத்த மணிமன்றில் நடம்புரி எம்பெருமான்
வரவெதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேனுரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் கண்டீர்
யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே !

மேலும்

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனிற் சந்தேகித்து உளறி அழியாதீர்
என்மையினால் எனை நினையீர் எல்லாஞ் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றார் இது கேண்மின் நீவிர்
தன்மை யொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியிற்
சார்ந்து விரைந்து தேறுமினோ சத்திய வாழ்வளிக்கக்
கண்மை தரும் பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலுங்
கருணை நிதி வருகின்ற தருணம் இதுதானே !

இப்படி பல்லாயிரம் பாடல்களை வள்ளலார் பாடி உள்ளார் .நான் உரைக்கும் வார்த்தைகள்,நான் எழுதும் எழுத்துக்கள் ,நான் வாழும் வாழ்க்கை அனைத்தும் இறைவனுடைய அருட்செயலேயாகும் ,என்னுள் இருந்து இறைவன் தான் இயக்கிக் கொண்டு உள்ளார்.அதனால்தான் உண்மைகளை உரைக்கின்றேன் .''நான் சொலவதெல்லாம் உண்மை '' உண்மைத் தவிர வேறில்லை ...எல்லா உயிர்களும் இன்பம் அடையும் பொருட்டாகவே என்னை இறைவன் அனுப்பி வைத்து உள்ளார் . நான் வந்ததின் நோக்கமே ..அனைத்து உயிர்களும், அதன் உள்ளொளியாக இருக்கும் ஆன்மாக்களும் எல்லாம் இறைவனுடைய குழந்தைகள் என்பதை உணரந்து ,ஆன்மநேய நேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை தெரிவித்து ,அனைவரும் மரணத்தை வென்று ...நாம் எங்கு இருந்து வந்தோம் என்பதை அறிந்து ..மறுபடியும் அங்கே செல்ல வேண்டும் என்பதை தெரிவிக்கவே இறைவனால் வருவிக்க உற்றேன் என்கிறார் .

நாம் அனைவரும் அழிந்து போகும் பொருளை விரும்பாமல் ,என்றும் அழியாமல் இருக்கும் இறைவனுடைய அருளைப் பெறவேண்டும்,அருளைப் பெற்று சாகாக்கல்வியை கற்க வேண்டும்.சாகாக்கல்வியைக் கற்று தேர்ச்சிபெற்று,தத்துவங்களை நிக்கிரகம்  {விளக்கித்} செய்து ,பசித்திருந்து,..தனித்திருந்து,..விழித்திருந்து .இறைவனுடைய அருள் பூரணத்தைப் பெற்று பேரின்பசித்திப் பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று,கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வாழ்க்கையே ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் காட்டும் உண்மை பெருநெறி,அருள் நெறி ,தனிநெறி ,அனைத்து உலகிற்கும் பொது நெறியாகும்.அந்நெறியை பின்பற்றி வாழும் வாழ்கையே வாழ்க்கையாகும்.

கடவுளின் உண்மையைத் தெரிந்து கொள்ளவும்,உலகின் ரகசியங்களை தெரிந்து கொள்ளவும் .பொய்யான கற்பனைக் கதைகளை உரைத்த பொய்யான அருளாளர்களைக் கண்டுகொண்டு அவர்களிடத்தில் இருந்து விலகவும்  அவர்கள் கொள்கைகளில் இருந்து விலகவும் .இயற்கை உண்மையான கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்ளவும் ,இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் நம்முடைய அருட்தந்தை அருட்பிரகாச வள்ளலார் என்பதை அறிந்து கொண்டால் உண்மை அறிவு தன்னைத்தானே விளங்கும்..

ஆதலால் வள்ளல்பெருமானை  எவருடனும் இணைத்துப் பேசுவதும் சேர்த்து பேசுவதும் தவறான செய்கைகளாகும்.உண்மை அறியாத செய்கைகளாகும் வள்ளலாருக்கு இறைவனைத் தவிர வேறு யாரும் குரு அல்ல ! மருட்பகை தவிர்த்து வாழ்வித்து எனக்கு அருட் குருவாகிய அருட்பெருஞ் ஜோதி ..என்று வள்ளல்பெருமானே சொல்லுகின்றார் .அதேபோல் வள்ளலார் வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் வந்தவர் அல்ல .என்பதை வள்ளலாரே சொல்லுகிறார்.

உலகம் எலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே ....திலகன்என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் எம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.

நீயே என்பிள்ளை இங்கு நின் பாட்டிற் குற்றம் ஒன்றும்
ஆயேம் என்று அந்தோ அணிந்து கொண்டான் ...நாயேன் செய்
புண்ணியம் இவ்வாணின் பிவியின் மிகப்பெரிதால்
எண்ணிய எல்லாம் புரிகின்றான்.!

மாட்சி அளிக்குஞ் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்து தற்கோர்
சூழ்ச்சி அறியா உழ்ன்றேனைச் சூழ்ச்சி அறிவித்து அருள் அரசின்
ஆட்சி அடைவித்து அருட்ஜோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைமாறேது கொடுப்பேனே >

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல்  சார்ந்தவரும் ..தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே அறை !

என்னைப்போல் உண்மையை மக்களுக்கு போதித்தவர்கள் ,என்னைப்போல் என்றும் நிலைபெற்ற சாகாதவரம் பெற்றவர்கள்.உன்னுடைய உண்மையான பரிபூரண அருளைப் பெற்றவர்கள் யாராவது இந்த உலகத்தில் உண்டா ?  நீயே சொல் என்று இறைவனிடமே கேட்கின்றார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் சத்தியவான் வார்த்தையாகும் என்கிறார்.!

சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனிற் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட் ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் தினங்கள் எல்லாம் இன்பம் முறு தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை யுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லுகின்ற தாமே !

நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் உண்மையான சத்தியம் தவறாத  சத்தியவான் வார்த்தைகளாகும் .மெய்ப்பொருள் என்னும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருடைய வார்த்தைகளாகும்.இனிமேல் உலகம் முழுவதும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் செங்கோல் {ஆட்சி} நடக்கப் போகிறது .,இனிமேல் ஆன்மாக்கள் எல்லாம் இன்பம் அடைந்து கொண்டே இருக்கும்.உண்மை நெறியாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியாகிய புதிய அருள் பெரும் புனித நெறியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..வள்ளலார் முன்னிலையாக தோற்றுவித்து உள்ளார் .

ஆதலால் வள்ளல் பெருமான் சொல்லியது அனைத்தும் பலிக்கும் இதுவரையில் இறந்து போனவர்களையும் மீண்டும் எழுப்பி,மனித பிறப்புக் கொடுத்து  சமரச சுத்த சன்மார்க்கத்தில் சேர்த்து,அவர்களையும்  உண்மை ஒழுக்க நெறியைக் கடைபிடிக்க வைத்து ,உண்மை அடியார் களாக்கி ,உண்மை அறிவை விளக்கி,உண்மை இன்பத்தை அளித்து சத்திய வாழ்வைக் கொடுத்து நித்தியர்களாக்கி வாழ வைப்பார் இதில் எந்த சந்தேகமும் வேண்டியது இல்லை. 

உண்மையான கடவுளை அறிவால் அறிந்து,அவருடைய  அருள் ஞானத்தைப் பெற்று, துன்பம் என்னும் மரணத்தை வென்று, பேர் இன்பம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று அனைத்து உலக மக்களும் பேரின்ப பெருவாழ்வில் வாழ்வார்கள்.

இது சத்தியம்.இது சத்தியம் .இது சத்தியம் .

வள்ளலார் பிறந்தது ,வாழ்ந்தது,மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றது அனைத்தும்,உலக மக்கள் அனைவரும் சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கொள்கைகளை விட்டு உண்மைப் பொது நெறியாக விளங்கும் சுத்த சன்மார்க்கத்தின் கொள்கைகளை கடைபிடித்து ,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதற்காக, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கப்  பட்டவர்தான் அருட்தந்தை அருட்பிரகாச வள்ளல்பெருமான் ஆவார்கள்.

வள்ளல்பெருமான் நேரடியாக இறைவனால் வருவிக்க உற்றவர்.! வாழையடி வாழை என வந்த திருக் கூட்டம் என்னும் சாதி,சமய,மதங்களைத் தோற்றுவித்த அருளாளர்களின் வழியில் வந்தவர் அல்ல .அல்ல..அல்ல...என்பதை எல்லாம் அறிந்த சான்றோர்கள் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வள்ளல்பெருமான் எந்த சாதியையும்,எந்த சமயத்தையும்,எந்த மதத்தையும் சார்ந்தவர் இல்லை. வள்ளல்பெருமான் அருட்பெருஞ் ஜோதியாகி விட்டார் .அருட்பெருஞ்ஜோதி தான் வள்ளலார் .வள்ளளார்தான் அருட்பெருஞ் ஜோதியர் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமான் இறுதியில் அறிவித்த பாடல் !

அருட்ஜோதி யானேன் என்று அறையப்பா முரசு 
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு 
மருட்  சார்பு தீர்த்தேன் என்று அறையப்பா முரசு 
மரணம் தவிந்தேன் என்று அறையப்பா முரசு. !  

வள்ளல்பெருமான் ,அருட்ஜோதி ஆனேன் என்றும்,அருள் ஆட்சியைப் பெற்றேன் என்றும்,மருட் சார்பு தீர்ந்தேன் என்றும்,மரணம் தவிர்ந்தேன் என்றும் முரசு கொட்டி முழங்குகின்றார் .இந்த பாடல் ஒன்றே போதும் வள்ளல்பெருமானைப் பற்றி அறிந்து கொள்வதற்கு .... 

இதுவே வள்ளலாரின் பிறப்பின் இரகசியமாகும் உண்மையாகும்.மேலும் வள்ளலார் எழுதிய ''திருஅருட்பா ''என்னும் அருள் நூலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேலு.

மேலும் பூக்கும்.