ஞாயிறு, 31 ஜூலை, 2016

இறைவன் இடம் கேட்டேன் !


இறைவன் இடம் கேட்டேன் !

என்னைப் படைத்த இறைவா !
இறைவா நான் எங்கு செல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை .
நான் கீழே செல்லவா ? அல்லது மேலே செல்லவா ? என்று கேட்டேன் !
கீழே சென்றால் அதற்கு மரணம் என்று பெயர் .மேலே சென்றால் மரணம் இல்லை என்பது தெரிந்து கொண்டேன் .
மண் எல்லாவற்றையும் தாங்குகிறது என்று சொல்லுகிறார்கள் .அதில் எனக்கு உடன்பாடு இல்லை !.
என்னைத் தாங்கிக் கொண்டு உள்ளது ஆன்மா என்பதை உணர்ந்தேன் ! .
எல்லா உயிர்களையும் ஆன்மாதான் தாங்கிக் கொண்டு உள்ளது என்ற உண்மையை அறிந்தேன் !.
உயிர் இல்லாத பொருள் கீழ் நோக்கி செல்கின்றது !.
உயிர் உள்ளது யாவும் மேல் நோக்கியே செல்கின்றது !.
உயிருக்கும் ஆன்மாவிற்கும் எடை(கணம் ) இல்லை என்பதை அறிந்து கொண்டேன் !
உடம்பிற்கு எடை உண்டு என்பதை அறிந்து கொண்டேன் !
எடை இல்லாத உடம்பு மேல் நோக்கி செல்லும் என்றார் கடவுள் !.
எடை உள்ள உடம்பு கீழ் நோக்கி செல்லும் என்றார் கடவுள் !.
எடை உள்ள உடம்பை எடை இல்லாமல் ஆக்கும் வழியை சொல்லித் தரல் வேண்டும் என்றேன்!..
கருவிகளை தாங்கி வாழும் ஆன்மா கருவிகள் இல்லாமல் வாழும் வகை அறிந்து கொண்டேன் !.
கருவிகளுக்கு எடை உண்டு .ஆன்மாவிற்கும் உயிருக்கும் எடை இல்லை என்பதை அறிந்து கொண்டேன்/!.
எடை உள்ள உடம்பை, எடை இல்லாத உடம்பாக மாற்றிக் கொள்வது எப்படி ? என்று கேட்டேன்.!
ஒளிக்கு எடை இல்லை ,அதுபோல் உடம்பையும் ஒளியாக மாற்றிக் கொண்டால் எடை இல்லை என்பதை அறிந்து கொண்டேன்.!.
எடை உள்ள உடம்பை எடை இல்லாமல் மாற்றிக் கொண்டால் எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்லலாம் .என்பதை அறிந்து கொண்டேன்.
ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டால் அதற்கு மரணம் இல்லை யென்பதை அறிந்து கொண்டேன் !.
ஒளி என்பது வெளிச்சம் என்பது அல்ல,நெருப்பும் அல்ல ! அது ஆற்றல் மிகுந்த அருள் ஒளி என்பதை அறிந்து கொண்டேன் !
அது சூடும் தரும் ஒளி அல்ல அது சுடாத ஒளி என்பதை அறிந்து கொண்டேன் !
கருவிகளைக் கொண்டு எரியும் ஒளி அல்ல .எந்தக் கருவிகளும் இல்லாமல் எரியும் ஒளி என்பதை அறிந்து கொண்டேன் !
அருளைப் பெற்றால் உடம்பை எடை இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொண்டேன் !
அருளைப் பெற்றால் ஒளி உடம்பு ! பொருளைப் பெற்றால் ஊன உடம்பு என்பதை தெரிந்து கொண்டேன் !
அருள் உடம்பு என்பது ஆன்ம தேகம் ! பொருள் உடம்பு என்பது பொருள் தேகம் ( பஞ்ச பூத உடம்பு ) என்பதை அறிந்து கொண்டேன் ! 
அருள் தேகம் பெறுவது எப்படி ? என்று கேட்டேன் !
உயிர்கள் இடத்தில் இரக்கமும் .கடவுள் இடத்தில் அன்பும் செலுத்தினால் அருள் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டேன் !.
இரக்கமும் அன்பும் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன் !.
ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்று இறவாமல் வாழும் வகையை அறிந்து கொண்டேன் !
எங்கே கருணை இயற்கையில் உள்ளதோ அங்கே விளங்கும் அருள் பெருஞ் ஜோதி  என்பதை அறிந்து கொண்டேன் ! .
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்பதை அறிந்து கொண்டேன் ! .
அறிவு என்பது எங்கு உள்ளது என்பதைத் தேடினேன் !.
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்ற எல்லாம்
மருள் அறிவு என்பதை அறிந்து கொண்டேன் ! .
அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெரும் நிலை என்பதை அறிந்து கொண்டேன் ! .
அருள் வடிவே ஒளி வடிவம் என்பதை தெரிந்து கொண்டேன் !.
அருள் அமுதை உண்டால் ஒளி வடிவம் பெறலாம் என்பதை அறிந்து கொண்டேன் ! .
ஒளி வடிவம் பெற்றால் மரணம் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன் ! .
அருளைப் பெருவதற்கு உன்னுடைய அருள் வேண்டும் என்பதை தெரிந்து உம்மை வேண்டுகின்றேன் என்றேன் ! .
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்.
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே 
என் தந்தை நினது  அருட் புகழை இயம்பி இடல் வேண்டும் 
செப்பாத மேனிலை மேல் சுத்த சிவ மார்க்கம் 
திகழ்ந்து ஒங்க அருட்ஜோதி செலுத்தி இடல் வேண்டும் 
தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தால் வேண்டும் .
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

இதை எல்லாம் நான் தெரிந்து கொண்டது எப்படி எனில் ;--வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றியதால் தெரிந்து கொண்டேன்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி 
தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர் 
நீதி கொண்டு உரைத்தேன் நீவீர் எல்லாம் மேலே ஏறும் வீதி,
மற்றை வீதிகள் கீழ் செல்லும் வீதி !

நீங்களும் வள்ளலார் காட்டிய  சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றுங்கள் .மரணத்தை வென்று வாழலாம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 30 ஜூலை, 2016

மரணம் அடைவதற்கு முக்கிய காரணம் !

மரணம் அடைவதற்கு முக்கிய காரணம் !

மரணம் அடைவதற்கு முக்கிய உண்மையான காரணம் என்னவென்று  தெரியாமல்,சமயங்கள் மதங்கள்,விஞ்ஞானம்,அறிவியல்கள் போன்ற கண்டுபிடிப்புக்கள்  யாவும்    கண்டபடி உளறிக் கொண்டு உள்ளார்கள் .

மரணத்தை தடுக்க முடியாதலால் மரணம் என்பது  இயற்கை என்று  சொல்லி மக்களை நம்ப  வைத்து விட்டார்கள். ..மரணம் என்பது இயற்கை அல்ல ,மரணம் என்பது செயற்கையால் தான் வருகின்றது என்ற உண்மையைக் கண்டு பிடித்தவர் தான் ஆன்மீக பூரண அருள் பெற்ற  அருளாளர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மனித பிறவியால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.,வேறு எந்த பிறவியாலும் மரணத்தை வெல்ல முடியாது..அதனால்தான் மனிதப் பிறப்பு என்பது எல்லா பிறப்புகளிலும் உயர்ந்த பிறப்பு என்று சொல்லப் படுகின்றது.உயர்ந்த அறிவு உள்ள பிறப்பும் மனிதப் பிறப்பே யாகும்.

சமய மதம் பொய்யானது !

சமாதி அடைவதும்,முத்தி அடைவதும் உயர்ந்த வாழ்க்கை என்றும், ,ஆன்மா அழியாதது   உடம்பு அழிந்துவிடும் ,,ஆன்மா .சொர்க்கம்,கைலாயம், வைகுண்டம்,பரலோகம்  நரகம் போன்ற இடங்களுக்கு ஆன்மா சென்று விடும் என்பது சமய மதக் கொள்கைகளாகும்.அத்தனையும் பொய்யான கற்பனைக் கதைகளாகும்.

மனிதன் (ஆன்மா ) சமாதி அடைந்தாலும்,முத்தி அடைந்தாலும் ,மறுபடியும் ஆன்மாவிற்கு  பிறப்பு உண்டு என்பதை வள்ளலார் ஆதாரத்துடன் தெரியப் படுத்தி உள்ளார் .

உண்மையான கடவுள் யார் ? என்பதே தெரியாமல் பொய்யான கற்பனைக் கடவுள்களைச்  சமயங்களும்,மதங்களும் படைத்து உள்ளன,என்பதை வள்ளலார் வெளிப் படுத்தி உ;ள்ளார் ..

திருஅருட்பா அனுபவமாலை 87,வது பாடல்

எவ்வுலகில் எவ் எவர்க்கும் அருட்பெருஞ்ஜோதியரே
இறைவர் எனபது அறியாதே இம் மதவாதிகள்
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே
கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார்
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றாய் என்றாய்
ஞான நடங் கண்டேன் மெய்த் தேன் அமுதம் உண்டேன்
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம் தனிலே
சேர்ந்தேன் அத் தீ மொழியும் தேமொழி ஆயினவே !

என்று பதிவு செய்துள்ளார் ....குருடர்கள் யானையைக் கண்ட கதைப்போல்  சமயங்களும் ,மதங்களும் பொய்யானக் கற்பனைக்  கடவுள்களை  இந்த உலகத்தில்  அறிமுகப் படுத்தி உள்ளார்கள் .அதனால் மக்கள் உண்மை என்னவென்று தெரியாமல் அறியாமையில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அருள் பெரும் வழியே சுத்த சன்மார்க்கம் !

மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருள் என்னும் திரவம் வேண்டும்,அந்த அருளைக் கொடுக்க கூடிய ஒரே கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  என்னும் அருள் ஒளியாகும். அந்த ஒளிதான் உலகில் உள்ள எல்லா வற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்து கொண்டு உள்ளவராகும்.

அந்த உண்மைக் கடவுளைத்  தொடர்பு கொண்டால் மட்டுமே,அருள் பெரும் வழி கிடைக்கும்.அருள் பெற்றால் மட்டுமே  மரணத்தை வெல்ல முடியும்.அந்த மெய்ப் பொருளை  தொடர்பு கொள்ள தடையாக இருப்பதுவே  சமய மதம் போன்ற தவறான கொள்கைகள் ஆகும்....சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கொள்கைகளை விட்டு வெளியே வந்தால்தான் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள முடியும் ....

தொடரும் ;--

இது வரையில் நாம் உடம்பு எடுத்த வழியும்,உயிர் எடுத்த வழியும்,ஆன்மா வந்த வழியும் தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள் ;--

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்கு தற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்கு கின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி  துறை கற்று அறியீர்
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீரே ஏழை உலகீரே
நடம் புரி என்  தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

உடம்பு வந்த வழியும் ,உயிர் வந்த வழியும் தெரியாமல் ,தினமும் வயிறு புடைக்க உண்டுவிட்டு உறங்கிவிட்டு ,எழுந்து ,குரங்கு மனம் போன போக்கில் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.மனத்தை அடக்கும் வழியைக் கற்றுக் கொள்ளாமல்,இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் மரணம் வந்து சென்று விடுகின்றீர்கள் .

தொடரும் ;--

 


ஜீவ காருண்யத்தின் வல்லபம் !

ஜீவ காருண்யத்தின் வல்லபம் !
ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையாலும் ஊழ் வினையாலும் சத்தியமாக வராது ?
ஜீவர்களுக்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனை மனைவி தடுத்தாலும்.பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,தந்தையைப் பிள்ளைத் தடுத்தாலும் ,சிஷ்யரை  ஆசாரியர் தடுத்தாலும்,---அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,--குடிகளை அரசன் தடுத்தாலும்,;--அந்த தடைகளால் சிறிதும் தடைபடாமல் அவரவர்  செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லாது வேறிடத்தில் போகாது என்பதை ,உண்மையாக நம்பி,ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்த வேண்டும் என்றும் அறிய வேண்டும்.
உள்ளபடி பசியால வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுக்க நினைத்த போது,நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால் ,அந்தப் புண்ணியரகளை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது,அவர் உண்ணுவது தாம் உண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால் ,ஜானிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரம் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறமும், கீழும் மேலும்,நடுவும் பக்கமும்,நிறைந்து கரண முதலிய தத்துவங்கள் எல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுவதும் சில்லென்று தழைய ,முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற ,''கடவுள் விளக்கத்தையும்'' ,''திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும்'' பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்கள்.
ஆதலால் அந்தப் புண்ணியர்கள் ''கடவுளைக் கண்டவர்கள்'' என்றும்,கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும்,அறிய வேண்டும்.பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால் இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறியவேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவர்களாகி சீவர்களைப் பசி என்கின்ற அபாயத்தில் நின்றும் நீங்கச செய்கின்ற உத்தமர்கள் எந்த ஜாதியாராயினும் ,எந்தச் சமயத்தாராயினும் எந்தச் செய்கையை உடையவர்களாயினும்,... தேவர்,.முனிவர்..சித்தர் ..யோகியர்..முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்பு உடையவாகள் என்று சர்வ சக்தியை உடைய கடவுள் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படும் என்று அறியவேண்டும்.;---
ஜீவ காருண்யத்தின் வல்லபம் யாது ? என்று அறிய வேண்டில் !
உயிர்களுக்கு இன்பம் உண்டு பண்ணுவதே அதன் பிரயோஜனம் என்று அறிய வேண்டும்.
ஜீவ காருண்யத்தின் சொரூப ரூப சுபாவம் வியாபகம் ''அருளைப் பெரும் வழியாகும் "' அதற்கு மேல் மோட்ச வீட்டின் திறவு கோல் ,ஜீவ காருண்யத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அதற்கு மேல் இறைவன் மீது அசைக்க முடியாத அன்பு வேண்டும்.அந்த தெய்வம் சமய மதங்களில் சொல்லும் தெய்வங்கள் அல்ல என்பதை உண்மை அறிவால்  அறிந்து கொள்ள வேண்டும்.அந்த உண்மையான தெய்வம் வள்ளலார் காட்டிய ,அறிமுகப் படுத்திய  ''அருட்பெருஞ் ஜோதி '' ஆண்ட்வராகும்.
அந்த தெய்வம்தான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் .அந்த தெய்வத்தை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்...அந்த தெய்வம் நமது சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் .
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின் 
கோணும் மனக் குரங்க்காலே நாணுகின்ற உலகீர் 
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது 
மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர் 
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் 
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின் 
செரித்திடு ''சிற்சபை'' நடத்தைத் தெரிந்து துதித்திடுமின் 
சித்தி எலாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே !
மேலே கண்ட பாடலில் சத்தியம் வைத்து வள்ளலார் சொல்லுகின்றார் .ஒரே கடவுள் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,அவர் சிற்சபை என்னும் ஆன்மாவில் ஒளியாக விளங்கிக் கொண்டு உள்ளார் அவரைத் தொடர்பு கொண்டு துதிக்க வேண்டும் என்கின்றார் ..
சுத்த சன்மார்க்கிகள் உண்மையைப் புரிந்து கொண்டு செயல் பட்டால் எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும் ..புரிந்து கொண்டால் சரி ....  .  
திருஅருட் பிரகாச வள்ளலார் . 
ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

வியாழன், 28 ஜூலை, 2016

சத்விசாரம் என்றால் என்ன ?

சத்விசாரம் என்றால் என்ன ?

வள்ளலார் பேருபதேசம் என்ற பகுதியில் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.வள்ளலார் ஆண்டவர்  கட்டளைப் படி இறுதியாக மக்களுக்கு அறிவித்த உண்மை செய்திதான் பேருபதேசம் என்பதாகும்.

வள்ளலார் முதலில் சொல்லிய வாசகம் மிகவும் அழுத்தமானது ! நாம் அனைவரும் அந்த வாசகம் எவ்வளவு முக்கியமானது என்று இடைவிடாது படித்து சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் சொல்லியது !

இங்குள்ள நீங்கள் எல்லாவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள். என்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்லுகின்றார்.

ஏன் இதை சொல்லுகின்றேன் என்றால் ...ஆண்டவர் வருகின்ற தருணம் அதனால் உங்கள் அனைவருக்கும் உண்மையையைச்  சொல்லுகின்றேன் எனவே இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள் என்பது பொருளாகும்.

ஆண்டவர் வருகின்ற தருணத்தை நேரத்தை  வள்ளலார் இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முன் கூட்டியே சொல்லியதால்,ஆண்டவர் வருகின்ற போது  நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற விபரத்தையும் விளக்கத்தையும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .

இதுமுதல் சாலைக்கு ஆண்டவர் போகிற --பத்துத் தினமாகிய கொஞ்சம் காலம் --வரையில் .நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள் என்கின்றார் .

இதே செய்தியை சமரச சுத்த சன்மார்க்க சத்திய   ''ஞானசபை'' விளக்கப் பத்திரிகையில் தெரியப் படுத்துகின்றார் .

ஞான சபையை கட்டி முடித்தவுடன் ஞான சபையின் சட்டதிட்டங்களை வகுத்து எழுதி தெரியப் படுத்துகின்றார் ...

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் .

இன்று தொடங்கி சபைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ''  என்றும் .சாலைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ''என்றும்,சங்கத்திற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''பெயர் வழங்குதல் வேண்டும் என்று பெயர் மாற்றம் செய்கின்றார் ..

அதன் பின்பு இன்று தொடங்கி ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்,ஞான சபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் ,பித்தளை முதலிய வற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம் ,மேலே ஏற்றுகிற ''குளோப்''முதலிய விளக்குகளும் வேண்டாம் ,தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதி உள்ள நம்மவர்கள் தேக சுத்தி ,கரண சுத்தி உடையவர்களாய் ..''திரு வாயிற் படிப் புறத்தில் ''இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது,எழுபத்திரண்டு வயதுக்கு மேற் பட்ட பெரியவர் கையில் கொடுத்தாவது ,''உட்புற வாயில் களுக்குச் சமீபத்தில் வைத்து வரச் செய்விக்க வேண்டும் என்கின்றார்.

அதன் உண்மை விளக்கம் என்ன ? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஞான சபைக்கு உள்ளே மத்தியில் விளக்கு வைக்க சொல்ல வில்லை .அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும் ..வாயிற்படி புறத்தில் விளக்கு வைக்க வேண்டும் என்று  சொன்னார்,அப்போது இருந்த தொண்டர்களுக்கு ஏன் ? எதற்க்காக வள்ளலார் அப்படி  சொன்னார் என்பதை  புரிந்து கொள்ளும் அனுபவம் இல்லாது இருந்தது.

அதனால் சத்திய ஞான சபையை பூட்டிக் கொண்டு சித்திவளாகம் சென்று விடுகின்றார் .

( வள்ளலாருக்கு ஆண்டவர் அறிவித்த வண்ணம் ஞான சபையில் வள்ளலார் உட் சென்று கதவை தாளிட்டுக் கொள்ள சொல்லி சித்திப் பெற்று இருக்க வேண்டும் .ஆனால் எல்லாமே மாற்றப் பட்டு விட்டது ).

பேருபதேசத்தில் என்ன சொல்லுகின்றார் ''இது முதல் ஆண்டவர்  சாலைக்கு போகிற'' --பத்துத் தினமாகிய கொஞ்ச காலம் --வரையில் நீங்கள் எல்லாவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள் என்கின்றார் .

அந்த விசாரணை எது என்றால் ;--

நம் நம்முடைய நிலை எப்படிப் பட்டது ? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெயவத்தின் உடைய நிலை எப்படிப் பட்டது ? என்று விசாரிக்க வேண்டியது.அதற்குத் தக்கபடி நீங்கள் ஒருமித்தாவது அல்லது  தனித்தனியாகவாவது ,உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது அல்லது ---வேலாயுதனார் அவர்களை கேட்டால் மனுஷிய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் --அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையில் இருங்கள் என்று சொல்லுகின்றார் .

வள்ளலாரின் முதல் சீடரான வேலாயுதம் அவர்கள் மனித தரத்தில் சொல்லுவார் என்று சொல்லுகின்றார் .அப்படி  சொல்லுவதின் அர்த்தம் என்ன ? வேலையும் அவர்களுக்கு வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கம் என்னவென்று அவருக்குத் தெரியாது  என்பது பொருளாகும்..ஏன் என்றால் வள்ளலார் உடன் இருந்தும் அவர் சமய மதக் கொள்கைகளை விட்டு வெளியே வரவில்லை என்று வள்ளலார் வருத்தப் படுகின்றார்..

ஓர் இடத்தில் வேலாயுதம் அவர்களும் கை விட்டு விட்டார் என்று வேதனைப் படுகின்றார் வள்ளலார் .....  இருந்தாலும் மனித தரத்தில் சொல்லுவார் என்கின்றார் .மனித தரம் என்பது ''இம்மை இன்ப வாழ்வு'' என்பதாகும்.அதற்குமேல் அவருக்கு அருள் விளக்கம் என்ன என்பது தெரியாது  என்பது பொருளாகும்.

இப்போது சுத்த சன்மார்க்கம் என்ன என்பது தெரிந்த அளவிற்கு அப்போது வள்ளலார் உடன் இருந்தவர்களுக்கு சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பது யாருக்குமே தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.வள்ளலார் உடன் இருந்தவர்கள் அனைவருமே சமயம் ,மதம்,சார்ந்த வர்களாகவே இருந்தார்கள்.

வள்ளலார் உடன் இருந்தவர்கள் அவருடைய சித்து விளையாட்டுகளைத் தெரிந்து கொள்வதற்கும்,அவரால் ஏதாவது பொருள் லாபம் கிடைக்கும் என்றே அவரை சுற்றிக் கொண்டு இருந்தார்கள்.அருளைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ ,மரணத்தை வெல்லும் வழியைப் பற்றியோ தெரிந்து கொள்ள எவரும் முன் வரவில்லை. அதை நினைத்து வள்ளலார் மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தார் என்பது உண்மை ...

இருந்தாலும் வள்ளலார் சொல்ல வேண்டியதை சொல்லிக் கொண்டே இருந்தார் என்பது உண்மையிலும் உண்மை .

எனவே தான் நீங்கள் உண்மையை அறிந்து கொள்ள ஒருமித்தாவது தனித் தனியாகவாவது நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள் என்கின்றார் ..

சத் விசாரணை முகத்தில் இருந்தால்,நமது ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக் கொண்டு இருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத் திரை முதலில் நீங்கிவிடும்.அது நீங்கினால் ,மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.அந்த பசுமை வர்ணம் எப்படிப் பட்டது என்றால் .

கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது .இப்படிப் பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டும் என '' தோத்திரித்தும் ,தெய்வத்தை நினைத்தும் நமது குறையை உன்னியும்,இவ் வண்ணமாக இருக்கின்ற போதும்,படுக்கின்ற போதும் ,இடைவிடாதும்,இவ் விசாரத்தோடும்,ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால்,தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் ...

அவ் விசாரம் --பரம் ,அபரம்,என்று இரண்டு வகையாக இருக்கின்றது. இவற்றில் 1, பரம் --பரலோக விசாரம் . 2,அபரம் -இக லோக விசாரம் . இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரம் அல்ல ...

தொடரும் ......


தொடர்ச்சி ...2, ஆம் பாகம் !

சத் விசாரம் என்றால் என்ன ?

விசாரணையில்  பரம் ,அபரம், என்று இரண்டு வகையாக இருக்கின்றது.இவற்றில் பரம் --பரலோக விசாரம்,....அபரம் --இகலோக விசாரம் என்ற இரண்டு விசாரணையில் இகலோக விசாரம் என்பது விசாரம் அல்ல என்றும் , பரலோக விசாரமே உண்மையான விசாரம் என்றும் மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார் ..

அதற்கு வள்ளலார் சொல்லும் விளக்கம் !

சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டு இருக்கின்றானே என்றால் அவ்விசாரம் விசாரம் ஆகாது.அது  உண்மை விசாரமும் அல்ல ,என்கின்றார் .

ஏன் என்றால் ;--விசாரம் என்பதற்குப் பொருள் ;--வி --சாரம் என்பதில் ,வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது ...அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும்.பொருட்டு வந்தது.மேலும் ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல் ,நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடி இருக்கின்ற பச்சைத் திரையாகிய இராகாதிகளை ,விசார அதி உஷ்ணத்தால் அல்லது மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது .

தவத்தினால் கிடைக்கும் உஷ்ணம் வேறு ! ஆண்டவரை இடைவிடாது தோத்திரம் செய்வதாலும்,நினைப்பதாலும் கிடைக்கும் உஷ்ணம் வேறு என்பதை  பிரிக்கின்றார் வள்ளலார் .!

அந்த உஷ்ணம் யோகியின் உடைய அனுபவத்தில் தெரியும்.,அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது .

அந்த விசாரத்தை விட ''ஆண்டவரை தோத்திரம் செய்கின்றதிலும் ,தெய்வத்தை நினைக்கின்றதிலும்,அதிக உஷ்ணம் உண்டாகும்'' என்கின்றார் .மேலும் யோகிகள் வனம்,மலை,முழை,அதாவது குகைகளில் போய் நூறு,....ஆயிரம்,,,,முதலிய வருஷ காலம்,தவம் செய்து இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்.

இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும்,தெய்வத்தைத் தோத்திரம் செய்கின்றதிலும்,..நினைக்கின்றதிலும் --இதைவிடக் கோடி கோடிபங்கு பத்துக் கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் ..

அந்த உஷ்ணம் எப்படி உண்டாகும் என்பது எவ்வாறெனில் ;--ஒரு ஜாம நேரம் மனத்தில் இக விசாரம் இல்லாமல் பர விசாரிப்பும்,அத்துடன் ஆன்ம நெகிழ்ச்சியுடன் தெயவத்தைச் சிந்தித்துக் கொண்டாவது ,அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால் நாம் ,பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் .ஆதலால் இவ் வுலகில் வி-- சாரம் என்கின்ற உண்மை தெரியாது விசாரம் என்று வழங்கி ,அதை துக்கம் என்றே சொல்லுவார்கள் .நாம் அப்படி அர்த்தம் பண்ணக் கூடாது .

வள்ளலார் விசாரத்தை இரண்டாகப் பிரிக்கின்றார் .''விசாரம்''என்பது வேறு .. ''சத்விசாரம்'' என்பது வேறு , சாதாரண விசாரம் என்பது ,துக்கம்
( துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,மரணம்  ) என்பதாகும்...சத்விசாரம் என்பது துக்கம் நிவர்த்தி ,(அதாவது துன்பம்,துயரம்,அச்சம,பயம்,மரணம்  இல்லாமல் வாழ்வது ) என்பதாகும்.

மேலும் வள்ளலார் சொல்லியது;--அவர்கள் என்பது ...,சமய மத வாதிகள் பண்ணுகின்றது --துக்கமே விசாரம் என்று சொல்லுகின்றார்கள் .அது தப்பு ; சாரம் என்றால் துக்க நிவர்த்தி ,வி,உபசர்க்கம் ,,சாரம் என்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி,என்பதாகும்.ஆதலால் விசாரம் என்கின்றது ..முன் குறித்தபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது.

ஆதலால் நாம் இடைவிடாது விசார வசத்தராய் இருக்க வேண்டும்.மேலும் ,வி --சாரம் என்பது ;--வி-விபத்து சாரம்,---நீக்குதல் ,நடத்தல்,ஆதலால் இடைவிடாது நன் முயற்ச்சியின் கண் ...பயிலுதல் வேண்டும் என்று மக்களுக்கு போதிக்கின்றார் வள்ளலார் .

அப்படி வள்ளலார் சொல்லியும் யாரும் வள்ளலார் சொல்லிய வண்ணம் கடைபிடிக்க வில்லை என்பதே வருத்தமான செய்தியாகும்.

மேலும் ஆண்டவரை நினைக்கின்றதிலும்,தோத்திரம் செய்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும் என்கின்றார் வள்ளலார் .வள்ளலார் சொல்லிய உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது மக்களுக்கு புரியவில்லை விளங்கவில்லை. இன்னும் அப்படித்தான் சில சன்மார்க்கிகள் உண்மைத் தெரியாமல் இருக்கின்றார்கள் .

''பேருபதேசம்'' வெளியிடுவதற்கு,இரண்டு ஆண்டுகளுக்கு  முன்னாடியே கடவுள் உண்மையை வெளிப் படுத்துகின்றார்.!

வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவதற்கு முன்னாடியே! எதற்க்காக ?ஞான சபையை நிறுவுகிறேன் என்ற உண்மையை மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.

மெய் மொழியும் ஒழுக்கமும் !

மெய் மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் வள்ளலார்  எழுதி வெளியிட்ட உண்மையை சுத்த சன்மார்க்கிகள் ஒவ்வொருவரும் பல முறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.அவ்வளவு பெரிய  உண்மைக் கருத்துக்களை வெளிப் படுத்தி உள்ளார் ..

தயவு செய்து பொறுமையாக படித்து பாருங்கள்.!

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும்,ஒழுக வேண்டுவதும் யாதெனில் ;----

இயற்கையில் தானே விளங்கு கின்றவராய் உள்ளவர் என்றும்...
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்கின்றவர் என்றும்.
இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்.

எல்லா அண்டங்களையும் ,..எல்லா உலகங்களையும் ,...எல்லாப் பதங்களையும்...எல்லாச்சத்திகளையும்,,,,,எல்லாச் சத்தர்களையும்,,,எல்லாக்  கலைகளையும்,,,எல்லாப்  பொருள்களையும்,,,,எல்லா தத்துவங்களையும்,,,எல்லாத்  தத்துவிகளையும் ....எல்லா  உயிர்களையும்....எல்லாச் செயலகளையும்...எல்லா இச்சைகளையும்,,,எல்லா ஞானங்களையும்,,,எல்லாப்  பயன்களையும்,,,எல்லா அனுபவங்களையும்,,,மற்றை எல்லா  வற்றையும் ,,,

தமது திருவருள் சத்தியால் ;--1, தோற்றுவித்தல் ...2,.வாழ்வித்தல் ,,,3,குற்றம் நீக்குவித்தல் ,,,,4,பக்குவம் வருவித்தல்,,,5,விளக்கஞ் செய்வித்தல் .. என்னும் ஐந்து தொழில்கள் முதலிய பெருங்  கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,,..எல்லாம் ஆனவர் என்றும் ,,..ஒன்றும் அல்லாதவர் என்றும்....சர்வ காருண்யர் என்றும்...சர்வ வல்லபர் என்றும் ...

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெரும் தலைமை '''அருட்பெருஞ்ஜோதியர் ''என்றும் --சத்திய அறிவால் அறியப்  படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' அகம் ,புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த ''சுத்த மெய்யறிவு ''என்னும் பூரணப் பொது வெளியில் ,அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

உண்மைக் கடவுள் யார் ? அவர்  எங்கு உள்ளார் ? அவர் செயல்கள் என்ன ? அவர் பெயர் என்ன ? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன ? அவரிடம் அருளைப் எவ்வாறுப் பெறுவது ? மரணம் இல்லாப் பெரு வாழ்வை எவ்வாறு அடைவது ?  பேரின்ப  சித்தி பெருவாழ்வு எப்படிப் பெறுவது ? ஒழுக்கம் என்றால் என்ன ?  என்பதை  எல்லாம் விளக்கமாக  சொல்லியும்,சொல்லியபடி வாழ்ந்தும் காட்டி உள்ளார் நமது வள்ளல்பெருமான் ...


தொடரும் ;---

மேலும் வள்ளலார் சொல்லியது ;--  


புதன், 27 ஜூலை, 2016

வள்ளல்பெருமான் ஏன் வந்தார் ?

வள்ளல்பெருமான் ஏன் வந்தார் ?

வள்ளலார் தானாக இந்த உலகத்திற்கு வரவில்லை..தந்தை தாய் உறவால் வரவில்லை உண்மையான .இறைவனால் வருவிக்க உற்றவர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவரே சொல்லுகின்றார் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும் அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்கின்றார் ,அதற்கு அர்த்தம் என்ன ? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,மனிதர்கள் உயர்ந்த அறிவு படைத்தவர்கள் அவர்களை சமயங்களும் மதங்களும் தவறான வழிகளைக் காட்டியதால் உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் ,அகம் கருத்து புறம் வெளுத்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெருங் கருணைக் கொண்டுதான் வள்ளல்பெருமானை இந்த உலகத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  அனுப்பி வைத்துள்ளார் .

 மனிதர்கள் இந்த பிறவியிலே இந்த உலகத்திலே  பரத்தை பெற வேண்டும் என்பதுதான் சுத்த சன்மார்க்க கொள்கைகயாகும் .அதாவது மரணத்தை வென்றால் மட்டுமே இறைவன் இருக்கும் இடமான பரத்திற்கு செல்ல முடியும் .அங்குதான் இறைவன் இருக்கின்றார் .

அதாவது பரம் என்றால் பரவெளி என்பதாகும்.அருள் வெளி என்பதாகும்.அருட் பெருவெளி என்பதாகும்,அதுவே தனி இயற்கை உண்மை வெளியாகும்.அதுவே திருச்சிற்றம்பலம் என்பதாகும்...அங்கு இருந்துதான் ஆன்மாக்கள் எல்லாம் இந்த பஞ்ச பூத  உலகத்திற்கு இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வண்ணமிகு பூத வெளி பகுதி வெளி முதலாய்
வகுக்கும் அடி வெளிகள் எல்லாம் வயங்கு வெளியாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைத்த பரவேளியாகி இயல் உபய வெளியாய்
அன்னுறு சிற்பர வெளியாத் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்த பெரு வெளியாகி அருள் இன்ப வெளியாய்த்
திண்ணம் உறும் தனி இயற்கை உண்மை வெளியான
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

அந்த தனி இயற்கை உண்மை அருள்  வெளியான திருச் சிற்றம்பலத்தில் இருந்துதான் இங்கு வந்து உள்ளோம்.

இங்கு வந்த ஆன்மாக்கள் உயிர், உடம்பு எடுத்து வாழ்ந்து கொண்டு உள்ளன .வாழ்க்கை முடிந்தவுடன் திரும்பவும் எங்கு இருந்து வந்ததோமோ ,அங்கே செல்ல வேண்டும் என்பதுதான் இறைவன் கட்டளை .இறைவன் ஆணை யாகும்.

இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்த ஆன்மாக்கள் ஒன்று கூட திரும்பவும் செல்லவில்லை .ஏன் செல்லவில்லை என்றால் ,,ஆன்மா எப்படி வந்ததோ அப்படி சென்றால் தான் இறைவன் ஏற்றுக் கொள்வார் .

உயிரும் உடம்பும் எடுத்து வாழ்ந்த ஆன்மா ,உயிரையும்,உடம்பையும், அழித்துவிட்டு செல்ல முடியாது .உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் திரும்ப மாயையிடம் ஒப்படைத்தால் மட்டுமே பரத்திற்கு செல்ல முடியும்..

ஏன் மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்.? மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வாடகை வீடுதான் உயிர் உடம்பாகும்..பஞ்ச பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப் பட்ட அழகான வீடுதான் மனித உடம்பாகும்.அந்த வீட்டை அழிக்காமல் அணு ஒளித் துகள்களாக மாற்ற வேண்டும்.அப்படி மாற்றி மாயை இடம் ஒப்படைத்தால் மட்டுமே,ஆன்மா பரலோகத்திற்கு   திரும்பச் செல்ல முடியும். வேறு குறுக்கு  வழியால் செல்ல முடியாது என்பதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும் ...

ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.என்பதுதான் சுத்த சன்மார்க்கம் சொல்லும் மரணம் இல்லாப் பெரு வாழ்வாகும்.

அதற்குப் பெயர்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்,பேரின்ப பெரு வாழ்வு என்பதாகும்.பேரின்ப லாபம் என்பதாகும்.அந்த தேகத்திற்குப் பெயர்தான் சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்...

பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டுவது !

தோல் ,நரம்பு,எலும்பு ,சதை,இரத்தம்,சுக்கிலம்,முதலிய அசுத்த பூத காரியங்களும்,அவற்றின் காரணங்களும் ஆகிய பிரகிருதி அணுக்களும் ஆகிய தேகத்தை,மாற்றி,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய ''சுத்த பூத காரிய சுத்த தேகத்தையும்'',''பொன் வடிவாகத் தோற்றுதல்,மாத்திரமே அன்றி ஆகாயம் போல் பரிசிக்கபடாத சுத்த பூத காரண பிரணவ தேகத்தையும்''',''தோன்றப் படுதலும் இன்றி  ஆகாயம் போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்''

என்று வள்ளலார் தெளிவாக விளக்கி விளக்கம் தந்து உள்ளார் .

மரணத்தை வென்று வாழ்வதற்கு வள்ளலார் சொல்லி உள்ளது ..''ஒழுக்கம் மட்டுமே'' அந்த ஒழுக்கம் தான் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.ஜீவ காருண்யம் ஒழுக்கம் என்றால் உயிரைக் காப்பாற்றும் ஒழுக்கம் .மற்ற உயிர்களைக் காப்பாற்றும் போது நம்முடைய உயிர் பாது காக்கப் படும்.

அதற்குப் பெயர்தான் ,இந்திரிய ஒழுக்கம் ,,,கரண ஒழுக்கம்,...ஜீவ ஒழுக்கம் ,,,ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.  .

இந்திரிய ஒழுக்கம் என்பது பரோபகாரம் ....கரண ஒழுக்கம் என்பது சத்விசாரம் என்பதாகும்.இந்த இரண்டு ஒழுக்கங்களும் முற்றுப் பெற்றால் ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் தானே செயல்படும்...

ஆன்மநேய உடன் பிறப்புகளே வள்ளல்பெருமான் சொல்லிய உண்மையான சுத்த சன்மார்க்க கருத்துக்களை சிரமேற் கொண்டு வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிக் காட்டுங்கள் .செயல்படுங்கள் .

இதுவே எனது பணிவான வேண்டுகோள் ....

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896...


செவ்வாய், 26 ஜூலை, 2016

தவம் சிறந்ததா ? தியானம் சிறந்ததா ?

தவம் சிறந்ததா ? தியானம் சிறந்ததா ?

வள்ளலார் சொல்லிய, காட்டிய  சுத்த சன்மார்க்க கொள்கையை  பின் பற்றுபவர்கள்,கடைபிடிப்பவர்கள்  ஆகிய சுத்த சன்மார்க்கிகள் தவம் செய்வது சிறந்ததா ? தியானம் செய்வது சிறந்ததா ? என்பதில் குழப்பமாக உள்ளார்கள் .

முதலில் தவம் என்றால் என்ன ? தியானம் என்றால் என்ன ? என்பதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே உண்மை விளங்கும்..

தவம்,  தியானம்  இரண்டுமே இறைவனிடம் தொடர்பு கொள்ளும் முறைகளாகும்.

''தவம்'' என்பது இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்பதாகும் , கேட்டுப் பெறுவதாகும்.அதற்கு தவம் என்று பெயர் ..அப்படி கேட்பதால் இறைவன் நமக்குக் கொடுத்து விடுவாரா ? என்றால் ,நம்முடைய தகுதி என்னவென்று தெரியாமல் எதையும் கொடுக்க மாட்டார் .

''தியானம் '' என்பது இறைவனிடம் இடைவிடாது தொடர்பு கொள்ளுவது.அப்படி  தொடர்பு கொள்ளுவதால் இறைவன் நமக்கு என்ன வேண்டுமோ அதை அவரே கொடுப்பார் .

இதில் நாம் கேட்டுப் பெறுவது சிறந்ததா ? இறைவன் கொடுப்பது சிறந்ததா ?  என்றால் இறைவன் கொடுப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.நமக்கு என்ன வேண்டும் என்பது   இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

நிறைய அருளாளர்கள் இறைவனிடம் ''தவம்'' செய்து அவர்களுக்கு வேண்டியதை  பெற்று உள்ளார்கள் .அவர்களால் கேட்டுப் பெறுவது எதுவும் நிரந்தரம் இல்லை.

 இறைவனிடம் இடைவிடாது தொடர்பு கொண்டு சரணாகதி அடைந்து  ''தியானம்'' செய்பவர்களுக்கு என்றும் அழியாத இறைவன் ''அருளை'' வழங்குவார் என்பதுதான் சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறையாகும்.

தியானம் என்பது தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் என்னும் மூன்று சுதந்தரத்தையும் இறைவன் இடம் ஒப்படைப்பது  ஆகும்..அப்படி ஒப்படைத்தால் மட்டுமே இறைவன் அருள் சுதந்தரத்தை வழங்குவார் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் எந்த இடத்திலும் தவம் செய்ய சொல்லவில்லை .தியானம் செய்ய சொல்லி உள்ளார் .

பரசிவ விலை என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.!

எவ்வகைதான் தவம் செய்யுனும் மெய் அரிதாம் தெய்வம்
எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடங் கொண்ட தெய்வம்
அவ்வகைத் தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம்
அப்பாலும் பெரு வெளிக்கே அப்பாலாம் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம்
செவ்வகைத் தென அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் .

என்று வள்ளலார் மேலே கண்ட பாடலில் விளக்கம் தந்து உள்ளார் .பலகோடி காலம் தவம் செய்தாலும் உண்மையான இறைவனைக் காணமுடியாது.என்றும் ,தவம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்றும் .தெளிவாக விளக்கி உள்ளார் .

ஆன்மா இருக்கும் (இறைவன்)   இடமான  சிற்சபையில் மனத்தை வைத்து தியானம் செய்ய வேண்டும் என்கின்றார் ...மேலும் கரண ஒழுக்கத்தில் சிற்சபையின் கண் மனத்தை செலுத்துவது தவிர மற்ற எந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் மனத்தை நிறுத்துங்கள் என்கின்றார் .

மேலும் ஜீவ காருண்யத்தில் !

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும் அறியவேண்டும் என்கின்றார் .சுத்த சன்மார்க்கத்திற்கு முதல்படி ஜீவ காருண்யம் என்பதாகும் .அதுதான் இந்திரிய ஒழுக்கம் என்பதாகும்.அடுத்து கரண ஒழுக்கம் என்பது .இறைவனை இடைவிடாது தொடர்பு கொள்ளுவதாகும்.

ஜீவ காருண்யம் என்னும் இந்திரிய ஒழுக்கம் இல்லாமல்,கரண ஒழுக்கம் என்னும் ,மனத்தை சிற்சபையின் கண் வைத்து  தியானம் செய்தாலும் இறைவன்  ஏற்றுக் கொள்ள மாட்டார் .

ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் பதிவு செய்துள்ளதைப் பாருங்கள். !

ஜீவ காருண்ய ஒழுக்கம் இல்லாமல் ஞானம்,யோகம்,தவம்,விரதம்,ஜெபம், தியானம், முதலியவைகளைச் செய்கின்றவர்கள் ,கடவுளுக்குச் சிறிதும் பாத்திரம் ஆகார்கள்.அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும், நினைக்கப் படாது என்றும்.ஜீவ காருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோசனம் இல்லாத மாயா ஜாலச் செய்கைகளே ஆகும் என்று அறிய வேண்டும்.தெளிவாக விளக்கி உள்ளார் .

நமக்கு உண்மை  அறிவு எப்போது விளங்கும் ?

நாம் உண்மையான அறிவு விளக்கம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது.உண்மையான அன்பு இல்லாமல் எதையும் செய்யக் கூடாது .உண்மையான அறிவும் உண்மையான அன்பும் எப்போது விளங்கும் என்பதையும் வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்தி உள்ளார் .

ஜீவ காருண்யம் விளங்கும் போது ;--அறிவும் ,அன்பும் உடனாக விளங்கும்,அதனால் உபகார சக்தி விளங்கும் ,அந்த உபகார சக்தியால ,எல்லா நன்மைகளும்,தோன்றும் என்கின்றார்.

அதேபோல் ;--ஜீவ காருண்யம் மறையும் போது;-- அறிவும்,அன்பும் உடனாக மறையும்,அதனால் உபகார சக்தி மறையும்,உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.என்று அழுத்தமாக சொல்லி உள்ளார் .

பாவம் எது ? புண்ணியம் எது ?

புண்ணியம் என்பது ஜீவ காருண்யம் ஒன்றே என்றும்,பாவம் என்பது ஜீவ காருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும்.என்றும் விளக்கம் தந்து உள்ளார் .

அன்றி ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும்,அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும்.;--இவ்விளக்கத்தையும் இன்பத்தையும்,பலகால் அறிந்து அடைந்து அணிபவித்து ,நிறைவு பெற்ற சாத்திய ஞானிகளே மேற் குறித்த பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்றும் .அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும் என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் .

வள்ளலார் இவ்வளவு பெரிய உண்மையை தெளிவுப் படுத்தியும்,சொல்லியும் உள்ள நிலையில் .நாம் அவரவர்கள் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் சொல்லியும் எழுதியும், மக்களை குழப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இறைவனால் படைத்த  உயிர்கள் மேல் உண்மையான இரக்கமும்,தயவும்,கருணையும்,கொண்டு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

அதேபோல் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் உண்மையான அன்பு வைத்து இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.அப்போதுதான் கடவுளின் அருள் விளக்கம் உண்டாகும்..

ஜீவ காருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும். அன்பு  உண்டானால் அருள் உண்டாகும் .அருள் உண்டானால் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழலாம் .என்று வள்ளலார் வெளிச்சம் போட்டு சொல்லி உள்ளார் .

ஜீவ காருண்யமே முத்திக்கு முதற்படி !

நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்து அருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும்.இவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது .இந்த அன்பு ஜீவ காருண்யத்தால் அல்லது வேறு வகையால் வராது.ஜீவ காருண்யத்தின் லாபமே அன்பு என்கின்றார் ....

இறைவன்மேல் அன்பு செலுத்தினால் மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்கும் .அதாவது அன்பு என்பது தீராத காதல் என்பதாகும்.இறைவன் மேல் அசைக்க முடியாத காதல் கொள்ள வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பு எனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்கு உட்படும் பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்து உள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளி அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேர் ஒளியே
அன்பு உருவாம் பர சிவமே !

சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுபவர்கள் .மனம் போனபடி போகாமல் வள்ளலார் சொல்லியதை மட்டும் கடை பிடியுங்கள் .

நமக்கு வள்ளலார் மேலும் சொல்லி பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

என்னும் பாடலில் நாம் செய்வது அனைத்தும்  பொய் என்கின்றார் .
இது வரையில் நாம்  கண்டது,...கேட்டது,....கற்றது,....களித்தது ..,உண்டது,...உட் கொண்டது,....எல்லாமே ...குற்றம் உள்ளது என்கின்றார் .

எனவே நாம் தவம் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.சகஜ வாழ்க்கை வாழ்ந்தால் போதும்..சகஜ வாழ்க்கையே சன்மார்க்க வாழ்க்கையாகும்..

உண்மை ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ்வதுதான் சுத்த சன்மார்க்கம் .யாராவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் எதோ ஒரு நன்மைக் கிடைப்பதுபோல் தோன்றும்.அதனால் பல் இளித்து இறுமாந்து கேட்டுப் போக நேரிடும்.ஆதலால் யார் எது சொன்னாலும் கேட்காமல் வள்ளலார் சொல்லியதை மட்டுமே பின் பற்றி வாழ்வதுதான் சுத்த சன்மார்க்க திரு நெறியாகும்.

சுத்த சன்மார்க்க நெறி என்பது இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட பொது நெறியாகும்.என்று வள்ளலார் சொல்லி உள்ளார் .எனவே  இறைவன் சொல்படி கேட்பதுதான் சிறந்த வழியாகும்..

மகாதேவ மாலையில் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.!

அளவிறந்த நெடுங் காலம் சித்தர் யோகர்
அறிஞர் மலரோன் அயன் முதலோர் அனந்த வேதங்கள்
விறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடும் ''தவத்தும்'' காண்பது அரிதாம் கடவுளாகி
உளவிறந்த எம் போல்வார் உள்ளத்துள் உள்ளே
ஊருகின்ற தெள்ளமுத ஊறலாகிப்
பிளவிறந்து பிண்ட அண்டம் முழுவதும் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங் கருணைப் பெரிய தேவே !

என்று பதிவு செய்துள்ளார் / மேலும்

கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
கனலின் நடு ஊசியின் மேல் கால் ஊன்றிப்
பொற்பற மெய் உணர்வு இன்றி உறக்கம் இன்றிப்
புலர்ந்து எலும்பு புலப்பட ஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக
நீண் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாஞ்
சிற்பதத்திற் சின்மயமாய் நிறைந்த ஞானத்
திருவாளர் உட் கலந்த தேவதேவே !

ஜீவ காருண்யம் இல்லாமல் எத்தனை கோடி காலம் தவம் செய்தாலும் இறைவன் அருளைப் பெற முடியாது.இறைவன் அருளை வழங்கவே மாட்டார் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .

எனவே நமக்கு தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு கருணையோடு வாழுங்கள் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !

கருணை உள்ள இடத்தில் கடவுள் நிறைந்து  இருப்பார் என்பதை உணர்ந்து கருணையோடு வாழுங்கள் ..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.


புதன், 20 ஜூலை, 2016

அருள் எங்கே இருக்கிறது.? எப்படிப் பெறுவது.?

அருள் எங்கே இருக்கிறது.? எப்படிப் பெறுவது.?
அருள் நம் சிரநடுவில் மூலையின் மத்தியில் ஆன்மாவின் ஒளியின் உள்ளே இறைவனால் பதிய வைக்கப்பட்டுள்ளது.கண்களுக்குத் தெரியாத ஒரு சிறிய துகள் போன்றது.அதில் உள்ள அருள் ஆற்றல் அளவிடமுடியாதது.அவை வெளியே வந்து தன சுய தன்மையைக் காட்டினால் உலகமே அதிசயிக்கும்படி பல அற்புதங்களைக் காட்டும் .அவை இறைவனுக்கு சமமானது.உலகை படைக்கும் தன்மையுடையது.ஐந்தொழில் வல்லமைப் பெற்றது.
அந்த மாபெரும் சக்திவாய்ந்த அருளைப் பெறுவது என்றால் சாதாரண விஷயமல்ல.அதில் ஏழுவகையான அருள் சுரப்பிகள் உள்ளன. ஒருசில சுரப்பிகளில் தோன்றும் அருளப் பெற்றவர்கள்,சுத்த தேகிகள்,பிரணவ தேகிகள்,அவர்கள் இம்மை இன்ப வாழ்வு,மறுமை இன்பவாழ்வு வாழ்ந்தவர்கள்.அவர்கள் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கத்தை மட்டும் கடைபிடித்தவர்கள். அதற்கு மேல் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கத்தை அவர்களால் கடைபிடிக்க முடியவில்லை.
ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் ஏழு படிகளான ஏழு திரைகளும் நீக்கி பரிபூரண அருளைப் பெற்றவர்தான் வள்ளலார் என்பவராகும்.அவர் இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் எனற நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தவர்.
இவ்வுலகில் முழுமையான பூரண ஆருளைப் பெற்றதினால் வள்ளலாருக்கு ஐந்தொழில் வல்லபத்தை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கொடுத்துள்ளார்.இவை யாவும் இறைவன் செய்யும் தொழில்.அத்தொழிலை அச்சுதந்தரத்தை வள்ளலாரிடம் ஒப்படைத்து உள்ளார்.
சுதந்திரம் உனக்கே கொடுத்தனன் உனது
தூய உடம்பினுள் புகுந்தோம்
இதந்தரு உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ்ஜோதிப்
பரசு பெற்றிடுக பொற்சபையுஞ்
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே >
மேலே கண்ட பாடல்படி இறைவன் முழு சுதந்தரத்தையும் வள்ளலார் இடம்  கொடுத்ததோடு ஆல்லாமல்.அவர் உடம்பினுள் இறைவன் புகுந்து கொண்டார் கலந்து கொண்டார் ,மேலும் என்றும் அழியாமல் வாழ வாழும்  அருட்பெருஞ் ஜோதிப் பரிசும் கொடுத்துள்ளார்.பரிசு என்பது ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.ஐந்தொழில் வல்லபம் என்பதாகும். 
இதுவே அருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியுமாகும்.வள்ளலார் போல் வாழ்ந்தால் நாமும் அருளைப் பெறலாம்.வேறு குறுக்குவழியில் பெறமுடியாது அருள் .கிடைக்காது.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் என்னும்  ''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை'' என்னும் உணர்வை,ஆன்ம   ஒழுக்கத்தை வரவழைத்துக் கொண்டால் அருளப் பெறலாம்.
நம்மைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது இடைவிடாத அன்பும்,அவரால் படைக்கப் பட்ட உயிர்கள் மீது கருணையும்,இரக்கமும் கொண்டால் மட்டுமே என்றும் அழியாத அருளைப்   பெற்று மரணத்தைப் வென்று மரணம் இல்லாப் பெரு வாழ்வில் வாழலாம் .
ஆன்மநேயன்;-ஈரோடு -கதிர்வேலு.
9865939896 .