சனி, 25 ஜூன், 2022

நித்திய தேகம்!

 *நித்திய தேகம்!*


மனித தேகத்திற்கு நித்திய தேகம் என்பதும் அநித்திய தேகம் என்பதுமான இரண்டு விதமான தேக வாழ்க்கை உள்ளன.


*உடம்பு உயிர் ஆன்மாவைப்  பிரிக்காமல், அழிக்காமல்  மரணத்தை வென்று சுதந்திரமாக எக்காலத்தும் அழியாமல் வாழ்வதே நித்திய தேகம் என்னும் அருள் தேக வாழ்க்கையாகும்.*


*உடம்பு,உயிர்,ஆன்மாவுடன் இணைந்து வாழ்ந்து இறுதியில் மரணம் என்னும் பெரும்பிணி வந்து மரணம் அடைந்து உடம்பு உயிர் ஆன்மா  தனித்தனியே பிரிந்து பிரிந்து இறந்து இறந்து  மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து  சுதந்தரம் இல்லாமல் வாழ்வதற்குப் பெயர் "அநித்திய" தேக வாழ்க்கை என்று பெயர்.* 


*வள்ளலார் பாடல் !* 


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி


நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி


ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.!


**மனிதன் செய்யும் பாவங்களிலே மிகவும் பெரிய பாவம்  சாவதும் பிறப்பதும் தான்.(பாவத்தின் சம்பளமே மரணம் என்பதுதான்) என்பதை எண்ணி வேதனைப்படுவது  (நோவது) இன்று புதியது அன்று.பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து சாவதும் பிறப்பதுமான அதே வாழ்க்கை தொடர்ந்து வாழ்ந்து கொண்டே வருகின்றான் மனிதன்.*


*இந்த நிகழ்வை சூழலை பெரும்பிணியை மாற்றுவதற்காக பல ஞானிகள், பல அருளாளர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து பார்த்தார்கள்.*

*பல தத்துவக் கடவுள்களைத் தொடர்பு கொண்டார்கள்.பல வகையான வேண்டுதல்கள் வழிபாடுகள்,இயற்கை மருத்துவ முறைகள் செய்தும்,காடு,மலை,குகை,குன்றுகளுக்கு சென்று கடுமையான தவம்,தியானம் யோகம் போன்ற தன்னிலை உணர்வுடன்  தனித்தும், நினைத்தும், துதித்தும் பல முயற்சிகள் செய்தும் எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை.* 


*அருள் வழங்கும் கடவுளைத் தொடர்பு கொண்டு அருள் பெற்றால் மட்டுமே.மரணம் என்னும் பெரும் பாவத்தை நீக்கி புண்ணியமாகிய நித்திய தேக வாழ்வு வாழலாம் என்ற உண்மை அறிந்தார்கள்.ஆனாலும் அவர்களால் அருள் வழங்கும் இயற்கை உண்மைக் கடவுளை அறிந்து தெரிந்து கொள்ளவும் முடியவில்லை, தொடர்பு கொள்ளவும் முடியவில்லை,அருள் பெறவும் முடியவில்லை, அதனால் பிறப்பும் இறப்பும் தொடர் கதையாகவே இருக்கின்றது.*


*காரணம் அவர்களின் ஆன்மாவைத் தெரியவொட்டாமல் அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் மறைத்துக் கொண்டுள்ளதே காரண காரியமாகும்.*


*சில ஞானிகள் இந்திரிய கரண ஒழுக்கத்தால்  ஏகதேச அருளைப் பெற்றார்கள்.* அதனால்

*மதத்தலைமை பதத்தலைமை பெற்றார்கள் இம்மை இன்ப வாழ்க்கை,மறுமை இனப வாழ்க்கை பெற்று பஞ்ச பூதங்களில் கலந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து  மீண்டும் பிறப்பு எடுத்து வாழ்வதற்கு இவ்வுலகிற்கே திரும்பி வந்துவிடுகிறார்கள்.*


*இயற்கை உண்மை கடவுளை அறிந்து பூரண அறிவும் பூரண அருளும் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகினால் மட்டுமே பிறப்பையும் இறப்பையும் தவிர்க்க முடியும்.*


*உலகப்பற்றை விடுத்து இந்திரிய,கரண,ஜீவ,ஆன்ம ஒழுக்கத்தை வள்ளல்பெருமான்  பூரணமாக கடைபிடித்து கருணையே வடிவமாகி பிறர்களுக்கு அடுத்த துன்பத்தை போக்கி வாழ்ந்த  காரணத்தினால்,ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருந்த அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் நீங்கி (கரைந்து) இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று அநித்திய தேகத்தை அழியாத நித்திய தேகமாக மாற்றிக் கொண்டார்.*


*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி!* (அகவல்)


*வள்ளலார் பாடல்!*


அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என்

அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை


மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை மா மணியை என் கண் மணியைக்


கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தேன்.!


என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தாம் கண்ட இயற்கை உண்மை கடவுளை,அவரிடம் பெற்ற அருள் அனுபவத்தை அருள் வாழ்க்கையை அதாவது நித்திய தேகத்தின் வழிமுறைகளை தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.


*உயர்ந்த அறிவு பெற்ற மனித வாழ்க்கை என்பதே மரணம் அடையாமல் ஆன்ம இன்ப லாபம் என்னும் அருள் தேகத்தை ( நித்திய தேகத்தை) பெற்று  பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*


(சுத்த சன்மார்க்கம் என்பதே மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டும் மார்க்கமாகும்)


மேலும் வள்ளலார் சொல்கிறார்!


*மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!*

 

மேலும்


உடலுறு பிணியால் உயிர் உடல் கெடாவகை

அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி! 


உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்

மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே! 


*என்று அகவல் வரிகளில் தெரியப் படுத்தி உள்ளார்.உடற் பிணிக்கு மருந்து உள்ளது போல் உயிர் பிணிக்கும்,*

*மரணப்பெரும் பிணிக்கும் மருந்து கண்டுபிடித்தவர் வள்ளலார்.* 


*அந்த மருந்திற்கு ஞான மருந்தும் என்றும் அருள் மருந்தும் என்றும் பெயர்.அந்த மருந்து வெளியில் எங்கும் கிடைக்காது எதனாலும் செய்யவும் முடியாது. அந்த மருந்து ஒவ்வொரு ஆன்மாவிலும் இறைவனால் வைக்கப்பட்டு உள்ளது* 


*உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்கள் ஆன்மாவில் வைக்கப்பட்டுள்ள அருள் மருந்தை எடுத்து அனுபவிக்க வழிதெரியாமல்  மாண்டு கொண்டே(இறந்துகொண்டே) இருந்தார்கள். இருக்கின்றார்கள்*

*ஆன்மாவில் இருக்கும் அருள் மருந்தை எடுத்து அனுபவிக்கும் வழிமுறையை காட்டிக்கொடுக்க வந்தவர்தான் வள்ளலார்.*


வள்ளலார் பாடல்!


உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண

உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்


கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்


தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி


எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!


ஆன்மாவின் கதவு திறந்து உள்ளே புகுந்து அருள் உணவு (ஞானமருந்து) உட்கொள்ளும் உளவை காட்டி உள்ளார்.


மேலும் வள்ளலார் பாடல்! 


திருத்தகும் ஓர் தருணம் இதில் திருக்கதவம் திறந்தே

திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்


கருத்து மகிழ்ந்து  என்உடம்பில் கலந்துளத்தில் கலந்து

கனிந்து உயிரில் கலந்தறிவிற் கலந்து உலகம் அனைத்தும்


உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா

தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே


திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!  


என்னும் பாடல்கள் வாயிலாக எளிய தமிழில் நித்திய வாழ்வு வாழ்வதற்கு உண்டான அருள் அமுதம் என்னும் ஞானமருந்து அருந்தி மரணத்தை வென்று நித்திய வாழ்வு வாழும் வழியை வெளிப்படுத்தி உள்ளார்..


நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய வழியில் நின்று சென்று நித்திய வாழ்வு வாழ்வோம்.


*வள்ளலார் பாடல்!*


இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம் நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்த பிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


மேலே கண்ட பாடலை பலமுறை ஊன்றி படித்து உணரவும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

செவ்வாய், 21 ஜூன், 2022

ஞான தேகம்!

 *ஞான தேகம்!*


*முத்தேக சித்தி என்னும் ஞான தேகத்தை பெற்றவர் வள்ளலார்.*


*உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் பெற்றவர்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று பஞ்சபூத தேகமான வாடகை வீட்டை    அருள் தேகமாக மாற்றம் செய்வதே சொந்த வீடாகும். சொந்த வீடான  முத்தேக சித்தி என்னும் அருள் ஒளி தேகம் பெற்றவர்களே மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடைய முடியும். இதுவே ஆன்மீகத்தின்இறுதி நிலையாகும்*


வள்ளலார் பாடல்!


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! 


*மேலே கண்ட பாடலில் என்போல் எல்லோரும் ஆண்டவரைத் தொட்பு கொண்டு அருள் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வேண்டும் என்ற பொது நோக்கமான ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் தான் பெற்ற நெடும் பெரும் பேற்றை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தி உள்ளார் வள்ளலார்*


*அருள் பெறும் பொழுது பஞ்ச பூத உடம்பு கரைந்து எவ்வாறு மாற்றங்கள் அடையும் என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் எளிய தமிழில் தெளிவாக பதிவு செய்து உள்ளார்!*


அகவல்!


725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்

மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட


726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட

மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட


727. இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்

உரத்திடை பந்தித்து ஒருதிர ளாயிட


728. *மடலெலாம் மூளை மலர்ந்திட* *அமுதம்*

*உடலெலாம்* *மூற்றெடுத் தோடி நிரம்பிட*


729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுகம் மலர்ந்திட

தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட


730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்

கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட


731. வாய்துடித்து  அலறிட வளர்செவித் துணைகளிற்

கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட


732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார்பு அசைந்திடக்

கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட


733. மனங்கனிந்து உருகிட மதி நிறைந்த்து ஒளிர்ந்திட

இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட


734. அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச்

சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட


735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்

பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்


736. தத்துவம் அனைத்துந் தாமொருங் கொழிந்திடச்

சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட


737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட

அலகிலா அருளின்  ஆசைமேற் பொங்கிட


738. என்னுளத் தெழுந்து உயி ரெல்லா மலர்ந்திட

என்னுளத் தோங்கிய என்றனி யன்பே


739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே

என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே


740. *தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்*

*என்னைவே தித்த என்றனி யன்பே*


741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை யன்பே


742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து

என்னுளே கனிந்த வென்னுடை யன்பே


743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே

என்னுளே நிறைந்த என்றனி யன்பே


744. *துன்புள வனைத்துந் தொலைத்து* *எனது உருவை*

*யின்புறு வாக்கிய என்னுடை யன்பே*


745. 

*பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா*

*என்னுளங் கலந்த என்றனி யன்பே!*


*இறைவனைபொன்னார் மேனியனே என்பார்கள் அதேபோல் மனிதனும் பொன்மேனியாக மாற்றம் அடைந்தால் மட்டும் இறைவன் ஏற்றுக்கொள்வார் தன்னுடன் இணைத்து கலந்து கொள்வார்* இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.


*ஞான தேகத்தின் வல்லபம்!*


பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டியது யாதெனில் ? 


1.*பொன் வடிவாகத் தோன்றுதல் மாத்திரமே அன்றி,ஆகாயம்போல் பரிசிக்கப்படாத சுத்த பூதகாரண பிரவண தேகத்தையும்,தோன்றுபடுதலும் இன்றி ஆகாயம் போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்*


2, *உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்.புறத்தே மண்,கல் முதலியவற்றால் எறியனும் அவை அவர் வடிவில் தாக்குவன அல்ல.*


3, *உள்ளே நீரினது தண்மையால் குளிரப்படார்கள்.புறத்தே நீரில் அழித்தினும் அவர் வடிவம் அழுந்தாது*


3, *உள்ளே நெருப்பினது வெம்மையில் சுடப்படார்கள்,புறத்தே நெருப்பில் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவம் தோன்றுவன அல்ல*


4, *உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்; புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித்து அசைக்க மாட்டாது.*


5, *உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்,புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்க மாட்டாது.*


6,*ஆதாரத்தில் அன்றி நிராதாரத்திலும்  அவர் தேகம் உலாவும்*


7,*அவரது கண்கள் முதலிய ஞானேந்திரங்களும்,வாக்கு முதலிய கர்மேந்திரங்களும்,பார்த்தல் முதலிய விஷயங்களையும்,பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவன அல்ல.தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில்,சுவர்,மலை முதலிய தடைகளும்,அவர் கண்களை மறைப்பன அல்ல,அண்ட பிண்டங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்து இடத்து இருந்தே கண்டறியும்.*


8,*அண்ட பிண்டங்களில் எவ்விடத்திலிருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்திருந்தே கேட்டறியும்.*


9,*எவ்விடத்து இருக்கின்ற ரசங்களையும் அவர் நா,இருந்த இடத்திருந்தே சுவைத்தறியும்.*


10,*எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும்,அவர் மெய் இருந்தவிடத்திருந்தே பரிசித்தறியும்*


11,*எவ்விடத்தில் இருக்கின்ற சுகந்தங்களையும் அவர் நாசி இருந்த இடத்திருந்தே முகந்தறியும்.*


12,*எவ்விடத்தில் இருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள்,இருந்த இடத்திடந்தே கொடுத்தல் கூடும்.*


13,*எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த இடத்திருந்தே நடத்தல் கூடும்.*


14,*அவரது வாக்கு எவ்விடத்தில் இருக்கின்ற எவ்வெவர்களோடும் இருந்த இடத்திருந்தே பேசுதல் கூடும்*


15,*மற்ற இந்திரியங்கள்,இருந்த இடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்திருத்தல் கூடும்.*


15,*அவரது. மனம் முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவன அல்ல; தயவினால் பற்றத் தொடங்கில்,எல்லா உயிர்களினது எல்லாச்  சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து  விசாரித்து நிச்சயித்துக் கொள்ளும்*


16,*அவர் அறிவு ஒன்றையும் சுட்டியறியாது: சுட்டியறியத் தொடங்கில் எல்லா அண்டங்களையும்,எல்லா உயிர்களையும்,எல்லாப் பண்புகளையும் எல்லா அனுபவங்களையும் எல்லாப் பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி அறியும்.*


17,*அவர்கள் நிர்க்குணத்தவராவார்கள் அல்லது,தாமசம் இராசதம் சாத்துவிகம் முதலிய முக் குணங்களாலும் உள்ளே விகாரப்படார்கள்; புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவன அல்ல.*


18,*உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள். புறத்தே அவரது  பிரகிருதி குணங்களைப் பற்றுவன அல்ல.*


19,*உள்ளே கால தத்துவத்தால் வேற்றுமைப்படார்கள்,புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது.*


20,*உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள்,புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது.*


21,*அன்றிக் காலம்,வித்தை,ராகம்,புருடன் முதலிய மற்றைத் தத்துவங்களும் தத்துவ காரியங்களும்,அவர்களுக்கு இல்லை.*


22,*மாயையால் பேதப்படார்கள்; சுத்த மகாமாயையைக் கடந்து,அதன் மேல் அறிவுருவாக விளங்குவார்கள்.ஆகாரம்,நித்திரை,மைத்துனம்,பயம் என்பவைகளால் தடை படார்கள்.*


23,*அவர்கள் தேகத்திற்குச் சாயை,வியர்வை,அழுக்கு,நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,இறப்பு முதலிய குற்றங்கள் உண்டாவன அல்ல.*


24,*பனி,மழை,இடி,மின்னல்,வெயில் முதலியவற்றாலும்,இராக்கதர்,அசுரர்,பூதம்,பசாசு முதலியவற்றாலும்,தேவர்,முனிவர்,மனிதர்,நரகர்,மிருகம்,பறவை,ஊர்வன,தாவரம் என்பவைகளாலும், எவ்விடத்தும்,எக்காலத்தும்,அவர் தேகம் வாதிக்கப்படாது.வாள்,கத்தி முதலிய எக் கருவிகளாலும் கண்டிக்கப்படாது.*


25,*எல்லா அண்டங்களும் அணுக்கள் போலச் சிறிதாகத் தோற்றலும்; எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரியதாகத் தோற்றலும்; அவர் தேகத்திற்கு உரித்து.*


25,*இறந்தோரை எழுப்புதல்,வார்த்திபரை வாலிபராக்கல் முதலிய கரும சித்திகளும்,யோக சித்திகளும்,ஞான சித்திகளும் அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்.*


26,*சிருட்டித்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அனுக்கிரகித்தல் என்கின்ற கிருத்தியங்களும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.பஞ்ச கர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள்*


27,*அவர்கள் அறிவு கடவுள் அறிவாக இருக்கும்; அவர் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும்.அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்.*


28,*சர்வ சத்தியும் உடையவர்களாய்,எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய் ஆணவம்,மாயை,கன்மம் என்னும் மும் மலங்களும்,அம்மல வாதனைகளும் இல்லாதவர்களாய்,பேரருள் வண்ணம் உடையவர்களாய் விளங்குவார்கள்.*


29,*சடமாகிய ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர்ப் பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்*


30,*அவரது பெருமை வேதாந்தம், சித்தாந்தம்,கலாந்தம்,போதாந்தம்,நாதாந்தம்,யோகாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும்; அவற்றைக் கடந்தும் விளங்கும் என்றும் அறிய வேண்டும்.*


31,*இவைகள் யாவும் பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை என்றுஅறிய வேண்டும்*


*இதுவே ஞான தேகத்தைப் பெற்ற அருளாளர்களின் சித்தி வல்லபமாகும்*

*இம்மை இன்ப லாபம்,மறுமை இன்ப லாபம்,பேரின்ப லாபம் என்ற மூவகை இன்ப லாபத்தையும், கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏக தேசத்தைக் கொண்டும் அருட் பூரணத்தைக் கொண்டும் அடையக்கூடும் என்று அறிய வேண்டும்.*


*ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உயிர் இரக்கத்தால் (பரோபகாரம்) ஏகதேச அருளும். ஆண்டவரிடத்தில் இடைவிடாத தொடர்பும்.இடைவிடாது அன்பும் கொண்டு ஸ்தோத்திரம் செய்கின்றதும், தெய்வத்தை நினைக்கின்றதிலும்  (சத் விசாரத்தால்) சுத்த உஷ்ணம்  உண்டாகி அறியாமை,அஞ்ஞானம் என்னும் திரைகள் விலகி பூரண அருளும் பெற்று, மேலே கண்டவாறு உயிர் உடம்பு அனைத்தும் வேதியல் மாற்றம் அடைந்து ஒளிதேகம் பெற்று, மரணத்தை வென்று முத்தேக சித்தி பெற்று பேரின்ப  பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதே ஞானதேக வாழ்க்கையாகும்*


வள்ளல்பெருமான் சுத்த பிரணவ ஞான தேகத்தில் இறைவனுடன் கலந்து  வாழ்ந்து கொண்டும் சுத்த சன்மார்க்கிகளை கண்காணித்து கொண்டும் உள்ளார் என்பதை தெரிந்து,அறிந்து,புரிந்து உலக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 19 ஜூன், 2022

மரணத்தை வெல்வது எவ்வாறு ?

 *மரணத்தை வெல்வது எவ்வாறு ?*


*ஆன்மாக்கள் யாவும் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் என்பதாகும். ஆகையால் ஆன்மாக்கள் யாவும் ஆண்டவருக்கு சமமான, எல்லாத் தகுதிகளும் உடையனவாகும் அதனாலே உயர்ந்த அறிவு பெற்ற ஆன்மாக்கள் என்று பெயர்* 


*உயர்ந்த அறிவுபெற்ற ஆன்மாக்கள் வாழ்வதற்காகவே இந்த பஞ்சபூத உலகம் படைக்கப்பட்டது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்* 


*ஆன்மாக்கள் தாவரம்,முதல் ஊர்வன,பறவை,மிருகம்,நரகர்,தேவர்,மனிதர் போன்ற ஏழுவகைகளான பலகோடி தேகங்கள் எடுத்து இறுதியாக மனிததேகம் எடுத்துள்ளது.*


*மனித தேகத்தில் வரும்போது மட்டுமே ஆன்மாவிற்கு அறிவு விளக்கமும் அருள் விளக்கமும்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப் படுகிறது. அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் தோன்றினால் மட்டுமே ஆண்டவரைத்தொடர்பு கொள்ள முடியும்*


மனித தேகம்!


*இவ்வுலகில் உயர்ந்த அறிவு பெற்ற ஆன்மா வாழ்வதற்காக உயர்ந்த தேகமான மனித தேகம் கொடுக்கப்பட்டது. எதற்காக என்றால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக*


*ஆன்மா வாழ்வதற்காக  இறைவன் துணை கொண்டு மாயையினால் பஞ்சபூத கருவிகளைக் கொண்டு கட்டிக்கொடுக்கப்பட்ட வாடகை வீடுதான் இம்மனித தேகம் என்பதாகும்.* 


( வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்ற வேண்டும்) 


*இத்தேகத்தின் அகத்தில்  ஆன்மாவும்,அகப்புறத்தில் ஜீவன் என்னும் உயிரும். புறத்தில் மனம், புத்தி, சித்தம்,அகங்காரம் என்னும்  சூக்கும கருவிகளும்,புறப்புறம் என்னும் இடத்தில் கண்,காது,மூக்கு,வாய்,கைகள் கால்கள் என்னும் மெய்யும் (உடம்பு) உள்ளன.* 


*இறைவனால் அனுப்பப்பட்ட ,ஆன்மாவும், ஜீவன் என்னும் உயிரும்,கரணம், இந்திரியம் என்னும் கருவிகளும், மற்றும்  முக்கியமான உள் உறுப்புகளான தத்துவங்கள் யாவும் ஒன்று சேர்ந்து, ஆன்மா சொல்வதை பின்பற்றினால் மட்டுமே உயிரை இழக்காமல் உடம்பை காப்பாற்ற முடியும்.*


 *உயிரைக் காப்பாற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதுவே கடவுள் வழிபாடாகும்* 


*உயிரைக் காப்பாற்றுவதற்காக பின் பற்றும், கடைபிடிக்கும்  ஒழுக்கத்திற்கு பெயர் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று பெயராகும்.*


*ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து இறைவனை தொடர்பு கொண்டு அருளைப் பெற  வேண்டும் என்பதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளையாகும். ஆணையாகும்.* 


*இறைவன் கட்டளைப்படி நான்கு வகையான  ஒழுக்கத்தை பூரணமாக கடைபிடித்தவர் இவ்வுலக வரலாற்றில் வள்ளலார் ஒருவரே!,*


*நான்கு வகையான ஒழுக்கங்களை பூரணமாக கடைபிடித்த காரணத்தினால், இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்ணால் கண்டவர் வள்ளலார் ஒருவரே !. மேலும் நேரிடையாக தொடர்பு கொண்டவரும் அவரே! ஆண்டவரிடம் பூரண அருளைப் பெற்றவரும் வள்ளலார் ஒருவரே!*.


*பொருள் வாழ்க்கை! அருள்வாழ்க்கை !*


*உலகப் பொருள் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டால்  நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் என்பதும் நிச்சயம், மறுபிறப்பு என்பதும் நிச்சயம் என்பதை அருளாலே அறிந்து கொண்டார் வள்ளலார்*


*மீண்டும் பிறப்பு இறப்பு எடுக்காமல் வாழ வேண்டும் என்றால்  மரணத்தை வெல்ல வேண்டும் என்ற உண்மையை தெரிந்துகொள்கிறார்.மரணத்தை வெல்ல வேண்டுமானால் உலகப் பொருள்களான மண்ணாசை பெண்ணாசை பொன்னாசைகளைப் புறம் தள்ளி அருள் ஆசையைப் பின்பற்ற வேண்டும் என்கின்ற உண்மையை உணர்கின்றார்* 


 *பின்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை*

நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து  நெகிழ்ந்து  அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அழுது புலம்பி *இறைவனை தன்பக்கமாக திரும்பி பார்க்க வைத்து விடுகிறார் வள்ளலார்.*


*என்றும் அழியாத நன் நிதியாகிய அருளை வாரி வாரி வழங்கி தன் குழந்தையாக ஏற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வைத்துக் கொண்டுள்ளார்*


*உலகப் பொருள் வாழ்க்கையில் ஈடுபாடு கொள்ளாமல் அருள் பெறும் வாழ்க்கையில் வாழவேண்டும் என்று உறுதி பூண்டார். பொருளைத் தவிர்த்து அருளைப் பெற்றார் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டுள்ளார் வள்ளலார்.*


தேகம் மாற்றம்!


*நாம் வாழும் இந்த பஞ்ச பூத காரிய அசுத்த உடம்போடு மரணத்தை வெல்ல முடியாது. அசுத்த பூதகாரிய தேகத்தை, இறைவனிடம் அருளைப் பெற்று அருள் தன்மைக்குத் தகுந்தாற்போல் மூன்று விதமான தேகமாக மாற்ற வேண்டும்.அதற்கு சுத்ததேகம், பிரணவதேகம்,ஞானதேகம் என்று பெயராகும்*


 *அருள் பூரணமாக பெற்றதால் அசுத்த பூதகாரிய  தேகமான பஞ்சபூத தேகத்தை சுத்த பூதகாரிய தேகமான சுத்ததேகம், அடுத்து பிரணவதேகம், அடுத்து ஞானதேகம் என்னும் தேகமாற்றத்தைப் பெற்று மூன்று தேகமும் கலந்த ஒரே தேகத்திற்கு முத்தேக சித்தி என்றும் பெயர்.அதுவே அருள் உடம்பு என்றும், ஒளிதேகம் என்றும் பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் பெயராகும். இவற்றை பெற்றவர் வள்ளலார் ஒருவரே!.*


*பஞ்ச பூத தேகத்தில் வாழும் ஆன்மா தன்னையும் தனக்கு உபகாரக் கருவிகளான உயிரையும் உடம்பையும் அழிக்காமல் அருள் ஒளிதேகமாக மாற்றி எக்காலத்தும் அழியாமல் வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். மரணத்தை வெல்வதாகும்.* 


*வள்ளலார் மரணத்தை வென்றவர் மட்டும் அல்ல.கடவுள் நிலை அறிந்து அம் மயமானவர், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி படைத்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல்,பக்குவம் வருவித்தல் போன்ற ஐந்தொழில் வல்லபத்தையும் பெற்றவர் வள்ளலார்.* 


*சுத்ததேகம்,பிரணவதேகம்,ஞானதேகம் என்கின்ற மூன்று தேகத்தின் மாற்றமே ஆன்ம இன்ப லாபம் என்று பெயராகும்*.


சுத்ததேகம் என்பது ? இம்மை இன்பவாழ்வு,இம்மை இன்ப லாபம் என்பதாகும், சிறிய தேக கரணங்களைப் பெற்றுச்  சிறிய முயற்சியால் சிறிய விடயங்களைச் சிலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை இம்மை இன்பம் என்று அறிய வேண்டும்.


1.*இம்மை இன்ப லாபமானது யாதெனில்?*


*மனிதப்பிறப்பில் தேகத்திலும் கரணங்களிலும்,புவனத்திலும்,போகங்களிலும்,குறைவின்றி நல்லறிவுடையவர்களாய் பசி,பிணி,கொலை,முதலிய தடைகள் இல்லாமல் உறவினர்,சினேகர்,அயலார்,முதலியருந் தழுவ சந்ததி விளங்கத்தக்க சற்குணமுள்ள மனைவியுடன்,விடயங்களைச்சிலநாள் அனுபவிக்கின்றதை இம்மை இன்ப லாபம் என்று அறிய வேண்டும்.*


*இம்மை இன்பத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டில்?*


*அன்பு ,தயை,ஒழுக்கம்,அடக்கம்,பொறுமை,வாய்மை,தூய்மை முதலிய சுபகுணங்களைப் பெற்று,விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிதல் வேண்டும்.*


2. மறுமை இன்ப வாழ்வு !


*உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்றுப் பெரிய முயற்சியால் பெரிய விஷயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை மறுமை இன்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.*


மறுமை இன்ப லாபமாவது!


உயர்பிறப்பைப் பெற்று இன்மையின்ப லாபத்தில் குறிக்கப்பட்ட நற்குணங்கள் எல்லாம் பொருந்த உயர் நிலையில் சுத்த விடயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமை இன்ப லாபம் என்று அறிய வேண்டும்.


மறுமை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை யாது என்று அறிய வேண்டில் ?


*அன்பு,தயை,முதலிய சுபகுணங்களைப் பெற்று சுத்த விடய இன்பங்களை எண்ணியபடி தடைபடாமல் முயன்று பலநாள் அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிய வேண்டும்*


3.பேரின்ப வாழ்வு !


பேரின்பமாவது; எல்லாக் கரணங்களையும்,எல்லா புவனங்களையும்,எல்லாப் போகங்களையும்,தமது பூரண இயற்கை விளக்கமாகிய *அருட்சத்தியின்* சந்நிதி விசேடத்தால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற பூரண இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று ,


எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப் படுகின்ற ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்பம் என்று அறிய வேண்டும்.


பேரின்ப லாபம் யாது எனில்? 


யாவும் தாமாய் விளங்குவதே என்பதாகும்.


பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டில்?


தோல்,நரம்பு,என்பு,தசை,இரத்தம்,சுக்கிலம் முதலிய அசுத்த பூத காரியங்களும்,அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி ,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்,


பொன் வடிவாகத் தோன்றுதல் மாத்திரமே அன்றி ஆகாயம் போல் பரிசிக்கப்படாத சுத்த பூதகாரண பிரணவ தேகத்தையும்,தோன்றபடுதலும் இன்றி ஆகாயம்போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்.


இதுவே முத்தேக சித்தி என்பதாகும்

இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். இதுவே பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.


*வள்ளலார் பாடல்! !*


காற்றாலே புவியாலே ககனம் அதனாலே

கனலாலே புனலாலே கதிராதியாலே


கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்களாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாத விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே


ஏற்றாலே  இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !


*என்னும் பாடல் வாயிலாக  அறியலாம்.மேலும் அருள் ஆற்றலால் இந்த தேகத்தின் அருள் வல்லப மாற்றங்களை அடுத்த கட்டுரையில் காணலாம்*


*இந்த இயற்கை உண்மை தெரியாத  அறியாத புரியாத அறிவு விளக்கம் இல்லாத பைத்தியக்காரர்கள், மூடர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கண்டபடி பேசியும் எழுதியும், மற்றும் வாட்ஸ்அப்,பேஸ்புக், யூடியூப் போன்ற வலைத் தளங்களிலும் பதிவு செய்தும் வெளியிட்டும், ஏதும் அறியாத அப்பாவி மக்கள் மத்தியில் விஷத்தை விதைத்து வருகிறார்கள்.*

*மேலும் சாதி சமயம் மதம் சார்ந்த பல பொய்யான தத்துவ கடவுள்களை வணங்கி வழிபாடு செய்யும், அருள் தன்மையின் பூரணத்தை அறியாத ஆன்மீகவாதிகளும்,கடவுள் இல்லை என்கின்ற  பகுத்தறிவுவாதிகளும்,* 


*மேலும் அருள் அறிவு அறியாமல் பொருள் அறிவைக் கொண்டு,ஆண்டவரால் படைக்கப்பட்ட பஞ்ச பூத அணுக்களைக் கொண்டு அணு  ஆராய்ச்சி செய்து நூதன நூதனமான பொருள்களை கண்டுபிடிக்கும் விஞ்ஞான அறிவியல் சார்ந்த புத்திசாலிகளும்,உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் ஆதாரத்தை தேடிக்கொண்டு உள்ளார்கள.*


*வள்ளலாரே தாம் சொல்லியவாறு வாழ்ந்து காட்டியும் ,மரணத்தை வென்றும் ஆதாரமாக திகழ்ந்து கொண்டுள்ளார்* 


*கடவுளுக்கும் அருளுக்கும் உண்டான இயற்கை உண்மை,இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் தத்துவ  ஆதாரங்களைத்  தேடி அறிவாளிகள் அலைகின்றார்கள்.* 


*வள்ளலார் எழுதிய திருஅருட்பா ஆறு திருமுறைகளையும்,உரைநடைப் பகுதிகளையும் முழுமையாக படித்தால்தான் வள்ளலாரின் வாழ்க்கையின் உண்மை என்ன? எனபது ஆன்ம அறிவில் தெளிவாக விளங்கும்.* 


*திருஅருட்பாவை அரைகுறையாக படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது  போல் எண்ணி அறிவு தெளிவு இல்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசுவதும் எழுவதும் மிகவும் கேவலமான, அநாகரியமான செயல்களாகும் என்பதை மக்கள்  தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்* 


வள்ளலார் பாடல்!


கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்


கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியும்

காட்சிகளும் *காட்சிதரு கடவுளரும் எல்லாம்*


*பிள்ளை விளை யாட்டென நன் கறிவித்திங் கெனையே*

*பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே*


தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!


*சாதி சமயம் மதம் சார்ந்த படுபாதகமான கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய,கலை உரைத்த  கற்பனை கதைகளால் ஜோடிக்கப்பட்ட ,வேதம், ஆகமம், புராணம்,இதிகாசம்,சாத்திரங்கள் போன்ற மூட நம்பிக்கை கொண்ட, அர்த்தமற்ற போலியான ஆன்மீக கொள்கைகளில் சிக்கி தவித்து வாழ்ந்து அழிந்து கொண்டு இருக்கும், உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றி உண்மை கடவுள் யார்? என்பதை உணர்த்தி அருள் பெறும் வழிகாட்டி நல்லொழுக்கத்தில் ஈடுபடுத்தி தெளிவித்து திருத்தி நல்வாழ்வு வாழ வழிகாட்டு வதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார், என்னும் உண்மையை முதலில் சன்மார்க்கிகளும் மற்றும் அறியாமையில் உள்ள மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்*


வள்ளலார் பாடல்! 


நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் *எஞ்ஞான்றும்*

*சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும்* - தேவா  நின்

*பேரருளை* என் போலப் பெற்றவரும் *எவ்வுலகில்*

*யார்உளர் நீ சற்றே அறை.!*


 *மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளார் வள்ளலார் என்பதை தெரிந்து கொள்ள *இந்த ஒரு பாடலே  வள்ளலாரை தெரிந்து கொள்ள போதுமானதாகும்* 


*இந்த உண்மை அறியாமல் வள்ளலாரை பிராமணர்கள் கற்பூரம் வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும்.  வள்ளலார் தற்கொலை செய்து கொண்டார் என்றும்.வள்ளலார் ஜோதியாகி விட்டார்  மரணத்தை வென்று விட்டார் என்று சன்மார்க்கிகள் பொய் சொல்கிறார்கள் என்றும் வதந்தியைப் பரப்பிக் கொண்டு உள்ளார்கள்.*


*சுத்த சன்மார்க்கம் வளர்ந்தால் சாதி,சமயம், மதங்கள் அழிந்துவிடும் என்கின்ற உண்மையை உணர்ந்த சமயம் மதத்தை சார்ந்த அரசியல் பின்புலத்தை  சார்ந்தவர்கள் மறைமுகமாக வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.*


*சுத்த சன்மார்க்கிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.*


*சுத்த சன்மார்க்கம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. ஆதலால் எவராலும் அசைக்க முடியாது*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வியாழன், 16 ஜூன், 2022

வள்ளலார் சொல்லித்தந்த நான்கு வகையான ஒழுக்கங்கள் !

 *வள்ளலார் சொல்லித்தந்த நான்கு வகையான ஒழுக்கம்!* 


*வள்ளலார் அருளிய மெய்ம்மொழியின் முன் கட்டுரையின் தொடர்ச்சி....*


*உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தை பெற்ற அன்பர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கங்கள்! நான்கு.இந்நான்கு வகையான ஒழுக்கத்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்லமுடியும்*


*சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள்....!*


 1.இந்திரிய ஒழுக்கம், 

2.கரண ஒழுக்கம், 

3.ஜீவ ஒழுக்கம், 4.ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்பட்ட ஒழுக்கமும் நம் உடம்பின் வழியாக கடைபிடிக்க வேண்டும்*


அவற்றுள் இந்திரிய ஒழுக்கம் என்பது யாதெனில்? 


*இந்திரிய ஒழுக்கத்தில் ஞானேந்திர ஒழுக்கம்.*

*கருமேந்திர ஒழுக்கம் என இருவகையாக உள்ளன.*


1.நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல்,

 2.கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல்,

 3.அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல்,


4.கொடூரமாகப் பாராதிருத்தல்,


5.ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல்,


6.சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் *ஞானேந்திரிய* ஒழுக்கமும்; 


1.இனிய வார்தையாடுதல், 


2.பொய் சொல்லாதிருத்தல்,


3.ஜீவஇம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், 


4.பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் சன்மார்க்க சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல்


5.உயிர்க்கு உபகரிக்கும் நிமித்தம் சஞ்சரித்தல், 


6.உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் (கொடுத்தல்) உபகரித்தல், 


7.மலஜல உபாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் *கருமேந்திரிய ஒழுக்கமும்* ஆகும்.


*கரண ஒழுக்கம் என்பது -!*


*சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல்,*


*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல்*


*செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல்*


*பிறர்மேற் கோபியா திருத்தல்,*


*தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்,*


*அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவை கரண ஒழுக்கம்.*


*ஜீவ ஒழுக்கம் என்பது !* 


*எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவை ஜீவ ஒழுக்கமாகும்.*


*ஆன்ம ஒழுக்கம் என்பது -!* 


*எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்தும் இரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவை ஆன்ம ஒழுக்கம்.*


*மேலே கூறிய ஒழுக்கங்களில் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னும் இரண்டு ஒழுக்கங்களை நாம் ஒவ்வொருவரும் உண்மை உணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்*


*ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட் துணை பெற்ற பின்னர் கைகூடும்.* 


*ஆதலால்,நாம் அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.* 


அன்றியும்-

இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, 


*இடந் தனித்திருத்தல்* *இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும்.*


அன்றியும்-


*சைவம், வைணவம், சமணம், பவுத்தம் கிருத்தவம்.இஸ்லாம்  முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும்*, 


*அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும்,* 


*வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம்.* 

*ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி, அவ்வச் சமயம் மதம் ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும்.*


அன்றியும்-


*உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிர் இரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று, உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று,*


*சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்; உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய்,* 


*எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம் புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன் விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்; ஆண்டவனாரது அருள் அற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:*


*நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்த காலம் முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் - வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன்*


*எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.*


*இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.*


*இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி யென்னும் கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம் முற்றிற்று*


அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை! 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

புதன், 15 ஜூன், 2022

வள்ளலார் அருளிய மெய்ம்மொழி !

 *வள்ளலார் அருளிய மெய்ம்மொழி !*


ஆன்நேய அன்புடையீர் வந்தனம்.


*நமது அருட்தந்தையார் திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருளிய அருள் மெய்மொழியை பொறுமையாக ஊன்றி படிக்கவும்.*


உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறிவேண்டுவதும் ஒழுகவேண்டுவதும் யாதெனில்:?


இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், 


எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும்.


தமது திருவருட் சத்தியால் 1.தோற்றுவித்தல், 2.வாழ்வித்தல், 3.குற்றம் நீக்குவித்தல், 4.பக்குவம் வருவித்தல், 5.விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், 


எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் *தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் *கடவுள் ஒருவரே!*


அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த *சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில்*, அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.


*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,*


*பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்; வீண்போகின்றோம்.*


ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், 


*எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் *உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்* *பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு -*


மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய *உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச்* சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் 


தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, *இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்* என்னும் திருக்குறிப்பை 


இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய

*அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார்* முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, *அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம்,*


எல்லா உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் - 


அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே, 


*சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்,*


*கடவுள் ஒருவரே ! என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது அவசியம்.*


அவ் வொழுக்கங்கள் என்ன என்ன என்பதை அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். 


வள்ளலார் சொல்லிய ஒழுக்கங்களை முழுதும் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896