வியாழன், 28 பிப்ரவரி, 2013

வள்ளலாரின் பிறப்பின் ரகசியம் !

வள்ளலாரின் பிறப்பின் ரகசியம் !

வள்ளலார் மற்ற ஞானிகள் போல் (அருளாளர்கள் ) ஆண் பெண் உறவு கொண்டு பிறந்து  வந்தவர் அல்ல ! என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .

வள்ளலார் வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட மரபினில் வந்தவர் என்று, விபரம் தெரியாதவர்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள்.வள்ளலார் எழுதிய திரு அருட்பாவில் ''பிரியேன் என்றல்''என்ற தலைப்பில் எழுதியுள்ள பாடலை வைத்து கருத்து தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.அந்தப் பாடலில் வரும் வார்த்தைகள் கருத்துக்களை ஊன்றி பார்க்க வேண்டும் .

பாடல் !

வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட
மரபினில் யான் ஒருவன் அன்றோ ? வகையறியேன் இந்த
ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ ?
இது தகுமோ ?இது முறையோ ?இது தருமம் தானோ ?
மாழைமணிப் பொதுநடஞ் செய் வள்ளால் யான் உனக்கு
மகன் அலனோ ?நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ ?
கோழை உலகுயிர்த் துயரம் இனிப் பொருக்க மாட்டேன்
கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே !

என்று இறைவனிடம் கேட்கிறார் வள்ளலார் ....இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன ? நான் மற்றவர்கள் போல் வந்தவர்களில் ஒருவன் அல்ல ! அப்படி வந்தவன் போல் நினைத்து எனக்கு அருளைக் கொடுக்க தாமதம் செய்கிறாயா?  என்று ஒரு கேள்வியை இறைவனிடம் எழுப்புகிறார்.  அப்படி வந்தவன் நான் அல்ல ! என்கிறார்  ...இறைவா நான் யார் என்பது உமக்குத் தெரியாதா ? தெரிந்தும் கால தாமதம் செய்வது சரியா ?இது உனக்குத்  தகுமோ, இது முறையா ? இது தருமம் தானோ ! ...எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள்களையும் ,மற்றும் உள்ள அனைத்து இயக்கங்களையும் ,தோற்றுவித்து,  வாழ்வித்து,  குற்றம் நீக்குவித்து ,  பக்குமவம் வருவித்து,   விகக்கம் செய்வித்து,அனைத்து செயல் பாடுகளையும் நேர்மையாகவும் சரியாகவும், ஒழுங்காகவும், பாராபட்சமின்றி,அனைத்து இயக்கங்களையும்,  பொதுவாக இயக்கிக் கொண்டு இருக்கும் கருணை மிகுந்த அருள் வள்ளல் அல்லவா ? நான் உன்னுடைய மகன் என்பதை மறந்து விட்டாயா?

நீதான் என்னை அனுப்பி வைத்தாய் என்பதை மறந்து விட்டாயா? நீதான் எனக்கு உண்மையான தந்தை என்பதை மறந்து விட்டாயா ? இந்த உலக உயிர்களின் துன்பங்களை ஒழித்து,நன்மை உண்டாக்குவதற்குத்  தானே என்னை அனுப்பி வைத்தாய் .  இனியும் உலக உயிர்களின் துன்பத்தை பார்த்துக் கொண்டு இருக்க என்னால் இயலாது.,அதனால் உடனே உங்களிடம் உள்ள அருள ஒளியை கொடுத்து அருளல் வேண்டும்,அருள் கிடைத்தால் தானே நீங்கள் கொடுத்த பணியை என்னால் முழுமையாக செய்யமுடியும் .ஆதலால் காலம் தாழ்த்தாமல் இப்பொழுதே உன்னுடைய முழுமையான தயவு,கருணை என்னும் அருளை எனக்குக்  கொடுத்தருளல் வேண்டும் என்று கேட்கிறார் வள்ளலார் .

மற்ற அருளாளர்களுக்கு சோதனைக் கொடுத்து,...வேதனையைக் கொடுத்து, துன்பத்தைக் கொடுத்து.. துயரத்தைக் கொடுத்து,அச்சத்தைக் கொடுத்து,பயத்தைக் கொடுத்து,பின் அவரவர் தகுதிக்குத் தகுந்தாற்ப்போல்  அருளைக் கொடுத்தது போல் ..என்னை நினைத்து விடாதே .நானோ நீ அனுப்பியவன் என்பதை மறந்து விட்டாயா ? நான் உன் மகன் என்பதை மறந்து விட்டாயா ? நான் உன் மகன் அல்லவா , நீ எனக்கு வாய்த்த தந்தை அல்லவா ? ஏன் காலம் தாழ்த்துகிறாய் என்று ஆண்டவரையே கேள்வி கேட்கிறார் இவைதான் அந்த பாடலில் உள்ள கருத்துக்களாகும்.

பக்குவம் உள்ள ஆன்மா !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பி  வைக்கப்பட்டவர் தான்  வாள்ளலார் என்னும் உயர்ந்த பக்குவம் உள்ள ஆன்மா என்னும் ...அணு ஒளியாகும்.! அதுவே உயிரையும் உடம்பை இயக்கம் உள் ஒளியாகும்.

வள்ளலார் என்ற பெயரைத் தாங்கி உள்ளது  உயர்ந்த பக்குவம் உள்ள  ஆன்ம அணுவாகும் இந்த உலகத்திற்கு,எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய ''அருட்பெருஞ்ஜோதி '' {அருள் அணுவால் }ஆண்டவரால்  அனுப்பி வைக்கப்பட்டதாகும்  ...ஏன் ? எதற்காக? அனுப்பி வைக்கிறார் .

பாடலைப் பாருங்கள் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும் அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

இந்த பாடல் வாயிலாக இறைவனே இந்த உலகத்திற்கு வள்ளலார் என்னும் உருவம் தாங்கிய அருளாளரை  அனுப்பி வைத்து உள்ளாறேத் தவிர,வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் ஒருவராக வந்தவர் அல்ல என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.மேலும் ஒரு பாடலைப் பாருங்கள்.

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் மோர்
பவநெறி இதுவரை பரவியது ஆதலினால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான்
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற என்னரசே
தனி நடராஜ என் சற்குரு மணியே !...

என்றும் மேலும் ஒருபாடலைப் பாருங்கள் ,

தெய்வங்கள் பலபல் சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்புகின்றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றும் இல்லார்
மேல்விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

பொய்யான சாதி,சமயம்,மதம்,போன்ற கொள்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து, தாம் யார் ? என்ற உண்மை தெரியாமல் பிரித்து வைத்து விட்டார்கள்.மேலும் பொய்யான தத்துவ உருவங்களை தெய்வங்களாகப்  படைத்து கற்பனைக் காட்சி பொருள்களாக  வைத்து, ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள்.உண்மையானக் கடவுளைக் காட்டாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.அதனால் மக்கள் தன்னுடைய ஆன்மாவில் உள்ள அருளைப் பெரும் தகுதியை இழந்து அறியாமையால் சரியை,கிரியை,யோகம்  போன்ற கர்மங்களை செய்து வீணாக வாழ்க்கையை அழித்துக் கொண்டு உள்ளார்கள்.ஞானத்தை பற்றி தெரிந்து கொள்ளவில்லை.

ஆன்மீக சிந்தனையாளர்கள்,அருளாளர்கள்  என்று சொல்பவர்களுக்கும் உண்மையான அறிவு தெளிவு இல்லை,அதைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களுக்கும் உண்மையான அறிவு தெளிவு வெளிப்பட வில்லை .ஆதலால் அவர்கள் அனைவருக்கும் உண்மையான அறிவை தெளிவுப் படுத்த வேண்டும் என்பதற்காக என்னை இறைவன், மிக மிக முக்கிய அவசியத்தைக் கருதி  அவசரமாக அனுப்பி வைத்துள்ளார் .நான் நேரடியாக ஆண்டவர் அருளால் மனிதப் பிறப்பை பெற்றுக் கொண்டவன்.

எனக்கு முன் பிறப்பும் இல்லை,பின் பிறப்பும் இல்லை.நான் இறைவனால் வருவிக்க உற்றவன் ,அவருடைய உண்மையான அருளைப் பெற்றவன் என்பதால்,நான் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் இறைவனுடைய வார்த்தைகளாகும் என்பதை தெளிவாக விளக்கம் அளிக்கிறார் வள்ளல் பெருமான் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள்.!

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை
நம்பும்மினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான் உரைத்த மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான்
வரவெதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேனுரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினை நீர் அடைதல் குறித்தே !

நான் யார் ?எனக்கு என ஒரு ஞான அறிவு ஏது ? நான் உரைக்கும் செய்திகள் எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய ,எந்தந்தையாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லும் வார்த்தைகளாகும்.
என்னுடைய தலையின் மத்தியில் ஆன்மா என்னும் ஒளியில் அமர்ந்து கொண்டு ,தேன்போல் இனிக்கும் திருஅருட் பாசுரங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டு உள்ளார்.

அதனால் என உயிர் இனிக்க உளம் இனிக்க உடல் பொருள் ஆவி எல்லாம் இனிக்க எழுதுகின்றேன் ,ஏன் எழுதுகின்றேன் உரைக்கின்றேன் என்றால் ஆன்ம நேய உரிமை முள்ள என்னுடைய சகோதர மனிதர்கள் என்பதால் உரைக்கின்றேன்.யான் அடையும் அருள் சுகத்தினை நீங்கள் அனைவரும் அறிந்து கொண்டு அனுபவிக்க வேண்டும் என்ற அன்பினால் தயவால்,கருணையால் இரக்கத்தால் நீங்கள் அடைய வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றேன் என்கின்றார்.

மேலும் ஒரு பாடலைப்பாருங்கள் !

உண்மை உரைக்கின்றேன் இங்குவந்து அடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாம் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவிர்
தணமையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியிற்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்கக்
கண்மை தரும் ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகழும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

என்னை இந்த உலகத்திற்கு அனுப்பியவன் இறைவன் .அனுப்பியதோடு அல்லாமல் என்னுள் இருந்து செயல் பட்டுக் கொண்டு உள்ளார் .அதனால் நான் உரைக்கும் வார்த்தைகள் எல்லாம் என்னுடைய நாயகன் என்னும் இறைவனுடைய வார்த்தைகளாகும்.அதனால் நான் உண்மையை உரைக்கின்றேன்.

மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளில் பொய்யே இருக்கும்  என்னுள் இருந்து இறைவன் உரைப்பதால்,புனைந்து உரையேன் ,பொய் புகலேன் சத்தியம் சொல்கிறேன்.  உண்மையைத் தவிர பொய்யேதும் என்னுடைய வார்த்தையில் வாராது.அதனால் என்னுடைய உரையில் உங்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது.என்னுள் இறைவன் இருந்து இசைக்கின்றான்.ஆதலால் நீங்கள் இந்த உண்மையை உணர்ந்து அவசியம் தெரிந்து அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப் பட்ட ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற ஒரு உண்மையான அமைப்பு உள்ளது .அதைக் கடவுள் தலைமை ஏற்று இயக்கிக் கொண்டு உள்ளார் அதில் சேர்ந்து உறுப்பினராகி அன்பையும் தயவையும்,கருணையும் ,அருளையும்,பெற்று, சாகாக் கல்விக் கற்று பேரின்பம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம் வாருங்கள் .இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து ,அருள் என்னும் கருணை நிதி வருகின்ற ,வழங்குகின்ற தருணமாக உள்ளது என அழைக்கின்றார்.  

வள்ளலார் பிறப்பின் ரகசியம் !

இறைவன் என்பவர் சர்வ வல்லமைப் படைத்தவர்,சர்வ சித்தியை உடையவர் என்பது ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த உண்மையான இறைவன் இருக்கும் இடம் அருள் நிறைந்த அருள் பெரு வெளியாகும் . அந்த பெருவெளியின் நடுவில் உள்ள அருட்பெரும் பீடத்தில் அமர்ந்துள்ளவர் தான்  அருடபெருஞ் ஜோதியாகும். அந்த அருட்பெரு வெளி அருள் நிறைந்து அனாதியாக இருக்கிறது.அதுபோல் அதற்குக் காரணமான அருட்பெருஞ் ஜோதிக கடவுள் அனாதியாக இருக்கின்றது. அதற்கு கடவுள் சமூகம் என்று பெயர்...அந்த கடவுள் சமுகம் என்னும் இடத்தில் ஆன்ம ஆகாசம் என்னும் ஓர் தனி கூடம் இருக்கிறது .அங்கேதான்  ஆன்மாக்கள் என்னும் அணுக்கள் நீக்கமற  நிறைந்து இருக்கின்றன...அங்குள்ள அணுக்கள் மூன்று விதமான மூன்று குணங்கள் உடையதாகும்.1,பக்குவ ஆன்மா ..2,பக்குவ அபக்குவ ஆன்மா ..3,அபக்குவ ஆன்மா என்பதாகும்.

உலகின் சிருஷ்டிகள் ஐந்து வகைப்படும் . 1,அணுபட்ஷம,2,பரமாணு பட்ஷம்,3,சம்பு பட்ஷம்,4,விபு பட்ஷம்,5,பிரகிருதி பட்ஷம்,
இவற்றில் சம்பு ,விபு இவ்விரண்டிற்கும் அபக்குவம் இல்லை ...மற்ற மூன்றிற்கும் பக்குவ அபக்குவம் உள்ளது . சம்பு ,விபு என்ற இரண்டும் இறைவனால் நேரடியாக உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ,பக்குவமுள்ள ஆன்ம அணுககளாகும் .  

1, அணு பட்ஷம் என்பது ;--அபக்குவ ஆன்மாக்கள் தாவரங்கள்,(பவுதிகங்களாலும் ),ஆகார மூலமாய் மிருகங்கள்,மற்றும்  பெண் ஆண் சம்பந்தத்தோடு உண்டாக்குவது.
மேற்படி பக்குவ அபகுக்குவ சிருஷ்டியாவது புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பது போல் தன அஸ்தத்தால் ஸ்திரீயைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு தேக சம்பந்தஞ் செய்வித்து உண்டாக்குவது.

2,பரமாணு பட்ஷம்  அபக்குவ சிருஷ்டி தேகத்தைக் கரத்தால் பரிசித்து ஊன்றிப் பார்த்த உடனே கருத்தரித்தல்.

மேற்படி பட்ஷத்தில் பக்குவம் என்பது  கண்ணால் பார்த்தவுடனே புணர்ச்சியின்றிக் கருத்தரித்தல்.

3,, சம்பு பட்ஷம் என்பது அருள் நிறைந்தவர்கள் (ஆண்டவர் ) வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல்....

4,பிரகிருதி பட்ஷத்தால் ...சங்கற்பித்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிண்டம் கீழ்த் தோன்றல்.

5,விபு பட்ஷ சிருஷ்டி ...பார்த்தவுடன் திரண முதலானவற்றையும்  நரனாகச் செய்வித்து அநேக விசித்திரங்கள் உண்டு பண்ணுவது .

மேற்கண்ட இவைகள் கடவுளால உண்டாக்கப்பட்ட சிருஷ்டி முறைகளின் வழிகளாகும்.

இந்த சிருஷ்டி முறைகளில் வள்ளலார் சம்பு பட்சத்தில் பிறந்தவராகும்...கடவுள் நேரடியாக இந்த உலகத்திற்கு வந்து ஒரு தகுதி உடைய பெண்ணை தேர்வு செய்து, அந்த பெண்ணிடத்தில் உனக்கு ஒரு ஆண் குழைந்தை பிறக்கும் என்று வாக்கால் சொன்னவுடன் கருத் தரித்தவராகும்,அந்தப் பெண்தான் சின்னம்மை என்பவராகும்.   .

மருதூர் ....

உலகத்தை திருத்துவதற்கு ஒரு பக்குவமுள்ள ஆன்மாவைக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிவனடியாராக உருவங் கொண்டு ,தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்திற்கு வருகின்றார்....மருதூர் கணக்குப் பிள்ளையாக ராமைய்யாவும் .அவரது ஆறாவது மனைவியாக சின்னம்மை யாரும் வாழ்ந்து வரும் காலத்தில்,அவர்களுக்குச சபாபதி,பரசுராமன் ,என்னும் இரு ஆண்குழந்தைகளும் ,உண்ணாமலை,சுந்தராம்பாள் ,என்னும் இரு பெண்மக்களும் பிறந்து உள்ளனர் ..

1822 ,ஆம் ஆண்டு மருதூருக்கு ... சிவனடியாராக இராமய்யா வீட்டிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார் .அப்போது இராமைய்யா மனைவி சின்னம்மை  மட்டும் வீட்டில் இருக்கிறார்.அம்மா பசிக்கிறது என்று ஒரு குரல் கேட்டு சின்னம்மை வெளியே வருகிறார்.அழகிய கம்பீர தோற்றமுடன் காவி உடை அணிந்து நிற்கும் சிவனடியாரைப் பார்த்து கைக்கூப்பி வந்தனம் சொல்லி,மகிழ்ச்சியுடன்  வாருங்கள் வாருங்கள் ,என்று அழைத்து அவரது இல்லத்தில் பாய் விரித்து அமரச்சொல்லி ,அறுசுவை உணவு படைக்கிறார் .உணவு உண்டு பசியாறிய சிவனடியார் .எனக்கு பசியாற உணவு அளித்த உனக்கு

உலகத்தில் உள்ளோர் அனைவருடைய பசியையும் போக்க வல்ல ஒரு அருள் ஞானமுள்ள  ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

கள்ளம் கபடம் அற்ற ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண்ணாக,யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் உணவு வழங்கும் கருணை நிறைந்த பெண்ணாக இருக்கும் சின்னம்மை அவர்கள், சிவனடியாரைப்  கண் இமைக் காமல் உற்றுப் பார்த்து கொண்டு கைக்கூப்பி வணக்குகிறார். .அவர்
சொல்வதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தார் ,திடீர் என்று சிவனடியார் மறைந்து விட்டார் என்பது வரலாறு .

.சிவனடியாராக உருவம் தாங்கி வந்தவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் . அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு பிறந்த குழந்தைதான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனுப்பிய பக்குவமுள்ள ஆன்ம அணுவை தன வயிற்றில் சுமந்தவர் சின்னம்மையாகும் அந்த வயிற்றில் கருவாகி,பிண்டமாகி,உருவாகி  முழு குழந்தையாகி இவ்வுலகத்திற்கு கொண்டு வந்தவர்தான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகும் .வள்ளலார் இந்த உலகத்தில் வருவதற்கு  உபகாரக் கருவியாக இருந்தவர் தான் சின்னம்மையாகும் .அப்பா அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகும் என்பதை நாம் அறிந்து,தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் சிவனடியாராக வரவேண்டும் ..சின்னம்மைக்கு சிவனடியார்கள் என்றால் தெரியும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தெரியாது ,ஆதலால் சின்னம்மை புரிந்து கொள்ளும் பொருட்டு தன்னுடைய உருவத்தை சிவனடியாராக மாற்றிக் கொண்டு வருகிறார் என்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சிதம்பரம் கோவில் !

ஆண்டவர் அருள் சத்தியால், அவர் அருள் வாக்கால், சொன்ன மாத்திரத்தில் ''சம்பு பட்சத்தால்'' கருவாகி பிறந்த ஞானக் குழந்தைதான் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் ..குழந்தை பிறந்ததும் கோவிலுக்கு எடுத்து செல்வது வழக்கம் அதேபோல் அக்குழந்தை ஐந்து மாதம் இருக்கும் போது ,பெயரளவில் இருந்த தந்தை இராமய்யாவும் ,உபகாரக் கருவியான அம்மா சின்னம்மையும் பூர்வ ஞான சிதம்பரம் என்னும் கோவிலுக்கு,..தங்களுடைய குடும்பத்துடன், அருள் வள்ளல் என்னும் இராமலிங்கத்தையும்,மற்ற குழந்தைகளையும்   அழைத்துக் கொண்டு செல்கின்றனர் .அங்கே கண்ட காட்சி மிகவும் அதிசயமானது,ஆதாரமானது ,அற்புதமானதாகும்..

சிதம்பரக் காட்சி !

சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜர் சிலைக்கும்,பெருமால்சிலைக்கும் மற்றும் உள்ள சிலைகளுக்கு எல்லாம் அபிஷேக ஆராதனை  செய்து விட்டு ,இறுதியாக நடராஜ சன்னதியின் சுவற்றில் திரையால் மறைத்து வைக்கப்  பட்டு இருக்கும், சிதம்பர ரகசியத்தை அப்பையா தீட்சதர் என்பவர்  திரை தூக்கி தரிசனம் காட்டியபோது,...சின்னம்மை கையில் உள்ள அந்த சிறு குழந்தை கல கல வென்று கணீர் கணீர் என்ற குரலில் சிரித்தது ,அங்குள்ள மக்கள் அனைவரும் அந்த குழந்தையைக் கண் கொட்டாமல் பார்த்தனர். அதைக் கண்ட அப்பைய்ய தீட்சதர் ,அதிசயமும் ஆச்சரியமும் அடைகின்றார் .

இராமய்யா சின்னம்மையிடம் வந்து ஐயா அம்மா நீங்கள் இந்த குழந்தையை எடுத்துக் கொண்டு எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றார்.அவருடைய அன்பை ஏற்றுக் கொண்டு அப்பய்ய தீட்சதர் வீட்டிற்கு செல்கிறார்கள். குழந்தையை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து ,பாய் விரித்து குழந்தையை படுக்கவைத்து,சாஸ்டாங்கமாக குழந்தையின் காலில் விழுந்து வணங்கி...ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டு , இக்குழந்தை உங்கள் குழந்தை அன்று, ஆண்டவரின் ஞானக் குழந்தை,இக்குழந்தை என்வீட்டிற்கு வருவதற்கு நான் பலகோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.நான் புண்ணியம் செய்தவன் என்று ஆனந்த கண்ணீர் மல்கி பிரசாதம் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியை வள்ளலார் தன்னுடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் தான் எழுதிய திருஅருட்பாவில்  பதிவு செய்துள்ள ''அருள் விளக்க மாலையில்'' 44,வது பாடலாக பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

தாய் முதலோரோடு சிறு பருவத்தில் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கித் தரிசித்த போது
மேய் வகைமேல் காட்டாதே என்தனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய்யுருவாம் பொருளே
காய்வகை இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியுஞ்
ஜோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே !

நான் சிறு குழந்தையாக இருக்கும் போதே பூர்வ ஞான தில்லை சிதம்பரம் தலத்தில் திரை தூக்கிக் காட்டி உலகின் ரகசியங்கள் அனைத்தும்,ஒளிவு மறைவு இன்றி,திரையை அகற்றி  வெட்டவெளியாக காட்டிவிட்டீர்கள்  என்னுடைய உடம்பின் உள்ளே உயிர் ஒளியாக,உள் ஒளியாக {ஆன்மாவாக } இருந்து  இயக்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தேன் அறிந்தேன் நீயே என்னுடைய உண்மைத்  தந்தையாகும் .என்னுடைய சொல்லும்,செயலும் அருளும் உன்னுடையதே என்பதை ,அருட்பெருஞ் ஜோதியின் நடனத்தால் (இயக்கத்தால் ) அறிந்து கொண்டேன் என்கிறார்.வள்ளல் பெருமான் .

கல்வி !

வள்ளலார் அவர்கள் எப் பள்ளியிலும் கல்வி பயின்றது இல்லை,எந்த ஆசிரியர் இடத்திலும் பாடம் பயின்றது இல்லை,கற்க வேண்டுவன அனைத்தும்  எல்லாம் இறைவனிடமே கற்றார் ,கேட்க வேண்டுவன அனைத்தும் இறைவனிடமே கேட்டார்...வள்ளல் பெருமானின் கல்வியும் கேள்வியும் இறைவனிடம் பெற்றதே அல்லாமல் வேறு எவரிடமும் ,எந்த குருவிடமும் உபதேசம் பெற்றது இல்லை,..எந்த அருளாளரையும் பின்பற்றி செயல்படவில்லை, என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.வள்ளல் பெருமான் உரைநடைப்பகுதியில் {பெருவிண்ணப்பத்தில் )அவரே எழுதி வைத்துள்ளதை பாருங்கள்.

குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை
[சாகாக்கல்வி } எனது உள்ளத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் .என்று தெளிவுப் படுத்தி உள்ளார் .
மேலும் பல பாடல்களில் பதிவு செய்துள்ளதைப் பாருங்கள்.!

கற்றதும் நின்னிடத்தே ,பின் கேட்டதும் நின்னிடத்தே ,என்றும்

பள்ளி பயிற்றாது என்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்தாய் என்றும்,

ஓதாது உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீதான் என்றும் .

ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தினாய் என்றும் ..

ஓதி உணர்ந்தவகள் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் என்றும் ...

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி என்றும்...

யான் பாட நீ திருத்த என்னதவம் செய்தோனோ என்றும்.

என் சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்கின்றாய் என்றும்.

என்பன போன்ற அகச்சான்றுகள் திரு அருட்பா பாட்ல்களில் நிறைய உள்ளன.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் ,அவர் வாக்கால் பிறந்தவர்தான் வள்ளல் பெருமான் அவர்கள்.

இதற்கு முன்னாடி நிறைய அருளாளர்களை இறைவன் அனுப்பி உள்ளார் .அவர்கள் ஆண் பெண் உறவில் கருத்தரித்த வந்தவர்கள் .அவர்கள் எவ்வளவு அருள் பெற்று இருந்தாலும், மாயையில் சிக்குண்டு உண்மைக்கு புறம்பான கற்பனைச் செய்திகளையே மக்கள் மத்தியில் விதைத்து ,பரப்பி விட்டார்கள்.அவர்களுக்கும் உண்மை தெரியவில்லை ,அவர்களால் மற்ற ஆன்மாக்களுக்கும் உண்மையைத் தெரிவிக்க முடியவில்லை ,இன்றுவரை வள்ளலாரைத் தவிர வேறு யாரும் இறைவனுடைய கோட்டைக்குள் செல்ல முடியவில்லை,கோட்டையின் கதவை திறக்க முடியாமல் திண்டாடிக் கொண்டே உள்ளார்கள்.ஆண்டவருடைய உண்மையான விலாசமும் ,அவர் இருக்கும் கோட்டையின் கதவைத் திறக்கும் திறவு கோலும் கிடைக்காமல்,  தெரியாமல் ஆன்மாக்கள் திசைமாறி சென்று,அலைந்து ,திரிந்து வழி தெரியாமல் மறுபடியும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜீவகாருண்யம் என்னும் சாகாக்கல்வி பயின்று,மரணத்தை வென்றால் மட்டுமே ஆண்டவருடைய கோட்டையின் திறவு கோல்{சாவி }கிடைக்கும் ! கேளுங்கள் தரப்படும் ,தட்டுங்கள் திறக்கப்படும் என்பது எல்லாம் வாய் ஜாலங்களாகும், கதவை தட்டினால் திறக்காது.அருள் என்னும் திறவு கோல் கொண்டுதான் திறக்க முடியும்.

சாகாக் கல்வியை கற்பிக்கும் தரம் யாரிடத்திலும் இல்லாததால் ,மக்கள் பிறந்து பிறந்து, இறந்து இறந்து ,வீண் போய் கொண்டு உள்ளார்கள் என்பதால் .உண்மையான சாகாக் கல்வியை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால்,சாகாக் கல்வி பாடசாலையைத் தோற்றுவித்து ,அவற்றைக் கற்றுக் கொண்டு அதன்படி வாழ்ந்து ''மரணம் இல்லாத பெருவாழ்வு'' பெற்று ''பேரின்ப சித்திப் பெருவாழ்வு'' என்னும் ஆண்டவரின் ''அருள் பூரணம்'' அடைந்து,''கடவுள் நிலை அறிந்து அதன் மயமாகி ''ஐந்தொழில் வல்லபமும் பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் நமது வள்ளல் பெருமான் அவர்கள்...அவரைப்போல் அனைத்து ஆன்மாக்களும் அதே தகுதியைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே ..

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தன்னுடைய நேரடிப் பார்வையில்,வள்ளலார் என்னும் ஆன்ம அணுவை இந்த உலகத்திற்கு அனுப்பு வைத்து.,அதன் உள் ஒளியாக இருந்து செயல்பட்டுக் கொண்டும் உள்ளார் என்பதை ,உலகில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

சிதம்பரம் இராமலிங்கம் !

வள்ளலார் தன்னுடைய பெயருக்கு முன்னால் சிதம்பரம் இரமாலிங்கம் என்றுதான் பெயர் எழுதுவார்.அவருடைய உண்மையான அப்பா அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்பது இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டும் .தன்னுடைய உபகாரத் தந்தைப் பெயரான இராமய்யா பெயரை எங்கும் எந்த இடத்திலும் அவர் சொன்னதும் இல்லை,எழுதியதும் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட்சாறு மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாநாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி யீந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு  எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் .

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமை தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்த்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்த பெரும் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !

என்று அருட்பெருஞ்ஜோதி தேய்வத்தைப் பற்றி புகழ்ந்து போற்றுகின்றார் .
தாயாகவும் தந்தையாகவும் குருவாகவும் இருந்து கொண்டு எனக்கு எந்த இடர்பாடுகளும் வராமல் ,எண்ணிய எண்ணம்  எல்லாம் நிறைவேற்றி கருணை நிதி என்னும் அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டு என்னுடைய தலைபாகத்தின் உள்ளே உள்ள சிற்சபையில் அமர்ந்து இயக்கிக் கொண்டு விளங்கிக் கொண்டு உள்ளீர்கள் .  

உங்களுக்கு நிகரான தெய்வம் உலகத்தில் எங்கும் இல்லை என்பதை தெரியப்படுத்தி தெளிவுப் படுத்தி விட்டீர்கள் .உன்னுடைய உண்மையான குழந்தை நான் தான் என்பதையும் ,நான் ஒருவன்தான் என்பதையும் நீ உரைக்க நான் அறிந்து கொண்டேன் .நீயே அனுப்பி வைத்தாய் என்பதையும் அறிந்து கொண்டேன்.

நான் யார் ?எனக்கு என ஓர் ஞான அறிவு ஏது  ? என்னுடைய ஆன்மாவில் அமர்ந்து இருந்து செயல்படுவது  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் அதனால்தான் அவரே சொல்லுகிறார் .

நானுரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வானுரைத்த மணிமன்றில் நடம்புரி எம்பெருமான்
வரவெதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேனுரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் கண்டீர்
யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே !

மேலும்

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனிற் சந்தேகித்து உளறி அழியாதீர்
என்மையினால் எனை நினையீர் எல்லாஞ் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றார் இது கேண்மின் நீவிர்
தன்மை யொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியிற்
சார்ந்து விரைந்து தேறுமினோ சத்திய வாழ்வளிக்கக்
கண்மை தரும் பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலுங்
கருணை நிதி வருகின்ற தருணம் இதுதானே !

இப்படி பல்லாயிரம் பாடல்களை வள்ளலார் பாடி உள்ளார் .நான் உரைக்கும் வார்த்தைகள்,நான் எழுதும் எழுத்துக்கள் ,நான் வாழும் வாழ்க்கை அனைத்தும் இறைவனுடைய அருட்செயலேயாகும் ,என்னுள் இருந்து இறைவன் தான் இயக்கிக் கொண்டு உள்ளார்.அதனால்தான் உண்மைகளை உரைக்கின்றேன் .''நான் சொலவதெல்லாம் உண்மை '' உண்மைத் தவிர வேறில்லை ...எல்லா உயிர்களும் இன்பம் அடையும் பொருட்டாகவே என்னை இறைவன் அனுப்பி வைத்து உள்ளார் . நான் வந்ததின் நோக்கமே ..அனைத்து உயிர்களும், அதன் உள்ளொளியாக இருக்கும் ஆன்மாக்களும் எல்லாம் இறைவனுடைய குழந்தைகள் என்பதை உணரந்து ,ஆன்மநேய நேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை தெரிவித்து ,அனைவரும் மரணத்தை வென்று ...நாம் எங்கு இருந்து வந்தோம் என்பதை அறிந்து ..மறுபடியும் அங்கே செல்ல வேண்டும் என்பதை தெரிவிக்கவே இறைவனால் வருவிக்க உற்றேன் என்கிறார் .

நாம் அனைவரும் அழிந்து போகும் பொருளை விரும்பாமல் ,என்றும் அழியாமல் இருக்கும் இறைவனுடைய அருளைப் பெறவேண்டும்,அருளைப் பெற்று சாகாக்கல்வியை கற்க வேண்டும்.சாகாக்கல்வியைக் கற்று தேர்ச்சிபெற்று,தத்துவங்களை நிக்கிரகம்  {விளக்கித்} செய்து ,பசித்திருந்து,..தனித்திருந்து,..விழித்திருந்து .இறைவனுடைய அருள் பூரணத்தைப் பெற்று பேரின்பசித்திப் பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று,கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வாழ்க்கையே ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் காட்டும் உண்மை பெருநெறிக் காட்டும் வாழ்க்கையாகும்.

கடவுளின் உண்மையைத் தெரிந்து கொள்ளவும்,உலகின் ரகசியங்களை தெரிந்து கொள்ளவும் .பொய்யான கற்பனைக் கதைகளை உரைத்த பொய்யான அருளாளர்களைக் கண்டுகொண்டு அவர்களிடத்தில் இருந்து விலகவும்  அவர்கள் கொள்கைகளில் இருந்து விலகவும் .இயற்கை உண்மையான கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்ளவும் ,இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் நம்முடைய அருட்தந்தை அருட்பிரகாச வள்ளலார் என்பதை அறிந்து கொண்டால் அறிவு தன்னைத்தானே விளங்கும்..

ஆதலால் வள்ளல்பெருமானை  எவருடனும் இணைத்துப் பேசுவதும் சேர்த்து பேசுவதும் தவறான செய்கைகளாகும்.உண்மை அறியாத செய்கைகளாகும் வள்ளலாருக்கு இறைவனைத் தவிர வேறு யாரும் குரு அல்ல ! வள்ளலார் வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் வந்தவர் அல்ல .என்பதை வள்ளலாரே சொல்லுகிறார்.

உலகம் எலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே ....திலகன்என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் எம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.

நீயே என்பிள்ளை இங்கு நின் பாட்டிற் குற்றம் ஒன்றும்
ஆயேம் என்று அந்தோ அணிந்து கொண்டான் ...நாயேன் செய்
புண்ணியம் இவ்வாணின் பிவியின் மிகப்பெரிதால்
எண்ணிய எல்லாம் புரிகின்றான்.!

மாட்சி அளிக்குஞ் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்து தற்கோர்
சூழ்ச்சி அறியா உழ்ன்றேனைச் சூழ்ச்சி அறிவித்து அருள் அரசின்
ஆட்சி அடைவித்து அருட்ஜோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைமாறேது கொடுப்பேனே >

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல்  சார்ந்தவரும் ..தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே அறை !

என்னைப்போல் உண்மையை மக்களுக்கு போதித்தவர்கள் ,என்னைப்போல் என்றும் நிலைபெற்ற சாகாதவரம் பெற்றவர்கள்.உன்னுடைய உண்மையான பரிபூரண அருளைப் பெற்றவர்கள் யாராவது உண்டா நீயே சொல் என்று இறைவனிடமே கேட்கின்றார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் சத்தியவான் வார்த்தையாகும் என்கிறார்.!

சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனிற் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட் ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் தினங்கள் எல்லாம் இன்பம் முறு தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை யுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லுகின்ற தாமே !

நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் உண்மையான சத்தியம் தவறாத  சத்தியவான் வார்த்தையாகும்.மெய்ப்பொருள் என்னும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருடைய வார்த்தைகளாகும்.இனிமேல் உலகம் முழுவதும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் செங்கோல் {ஆட்சி} நடக்கப் போகிறது .,இனிமேல் ஆன்மாக்கள் எல்லாம் இன்பம் அடைந்து கொண்டே இருக்கும்.உண்மை நெறியாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியாகிய புதிய புனித நெறியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..வள்ளலார் முன்னிலையாக தோற்றுவித்து உள்ளார் .

ஆதலால் வள்ளல் பெருமான் சொல்லியது அனைத்தும் பலிக்கும் இதுவரையில் இறந்து போனவர்களையும் மீண்டும் எழுப்பி,மனித பிறப்புக் கொடுத்து  சுத்த சன்மார்க்கத்தில் சேர்த்து,அவர்களும் உண்மை ஒழுக்க நெறியைக் கடைபிடித்து, ..உண்மையான கடவுளை அறிவால் அறிந்து,அவருடைய  அருள் ஞானத்தைப் பெற்று, துன்பம் என்னும் மரணத்தை வென்று, பேர் இன்பம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று பேரின்ப பெருவாழ்வில்  வாழ்வார்கள்.
இது சத்தியம்.இது சத்தியம் .

வள்ளலார் பிறந்தது ,வாழ்ந்தது,மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றது அனைத்தும்,உலக மக்கள் அனைவரும் சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கொள்கைகளை விட்டு உண்மைப் பொது நெறியாக விளங்கும் சுத்த சன்மார்க்கத்தின் கொள்கைகளை கடைபிடித்து ,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதற்காக, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கப்  பட்டவர்தான் அருட்தந்தை அருட்பிரகாச வள்ளல்பெருமான் ஆவார்கள்.

வள்ளல்பெருமான் நேரடியாக இறைவனால் வருவிக்க உற்றவர்.!

இதுவே வள்ளலாரின் பிறப்பின் இரகசியமாகும் உண்மையாகும்.மேலும் வள்ளலார் எழுதிய ''திருஅருட்பா ''என்னும் அருள் நூலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேலு.

மேலும் பூக்கும்.


     

                  

வியாழன், 21 பிப்ரவரி, 2013

பொருள் தேடும் உலகில் அருள் தேடும் ஆன்மாக்கள் !.


 பொருள் தேடும் உலகில் அருள் தேடும் ஆன்மாக்கள் !.

பொருள் தேடும் உலகில் அருளைத் தேடும் மனித ஆன்மாக்கள் சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது உண்மையாகும் ..

வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கம் ஒன்றே ,அருளைத தேடும் வழியைக் காட்டுவித்துள்ளது .

பொருளை விட்டு அருளை ஏன் தேட வேண்டும் .?

பொருள் என்பது இவ்வுலகில் வாழும் ஆன்ம உயிர் இனங்களுக்கு கடவுளால் படைக்கப் பட்டதாகும்.அதிலே உயிர் உள்ளப் பொருள் ,உயிர் அற்றப் பொருள்கள் என இரண்டு வகைகள் உண்டு .கல்லு ..மண் ..போன்ற உயிர் அற்ற பொருள்களும்,அதில் இருந்து உண்டாக்கும் உலோகங்களும்,மற்றும் உள்ள காய்ந்த மரம்,கட்டை,கோல்,குச்சிப் போன்ற,ஜடப் பொருள்களையும், எந்த ஆன்ம உயிர்களும் உணவாக உட் கொள்வதில்லை.உயிர் தோன்றப் படக் கூடிய, பொருள் களையும் ,உயிர் உள்ளப் பொருள்களையும் எல்லா ஆன்மாக்களும் உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன .

இவ்வுலகில் ஆன்மாக்கள் வந்து வாழ்வதற்காக இவ்வுலகத்தை...இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்,இயற்கை விளக்கம் என்னும் அருளைக் கொண்டு படைக்கப் பட்டதாகும்.

ஆன்மாவில் இருந்து உயிர்கள் தோன்றி வாழ்வதற்காக,,ஐந்து பஞ்ச பூதங்கள் என்னும் ..மண் ...நீர் ...அக்கினி ...காற்று ...ஆகாயம் போன்ற பஞ்ச பூத அணுக்கள்...உருவமுள்ள பொருள்களாகவும்,உருவம் அற்ற அணுத்துகள் போன்ற பொருள்களாகவும் , அதற்கு துணையான எங்கும் நிறைந்த,ஏழு விதமான அணுக் கூட்டங்களும் படைக்கப் பட்டுள்ளன .

முதல் பிறவி .....

ஆன்மாக்கள் இந்த உலகத்திற்கு வந்ததும் ,ஆன்மா வாழ்வதற்கு முதல் பிறவி என்னும் தாவர உயிர்கள் கொடுக்கப்படுகிறது .அந்த தாவர உயிர்கள் புல்...நெல் ...மரம் ...செடி ...பூண்டு முதலிய வாகவும்,கல்...மலை ...குன்று ...முதலியவாகவும்,பிறந்து பிறந்து ,களையுண்டல்....அறுப்புண்டல்....வெட்டுண்டல்....கிள்ளுண்டல்... உலர்ப்புணடல் ...உடைப்புண்டல் ...வெடிப்புண்டல் ...முதலிய பல்வேறு அவத்தைகளால் ..இறந்து இறந்து ,அத்தாவர யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்பு அடைந்து அடுத்த பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

இரண்டாம் பிறவி .....

அடுத்த பிறவியாக ..எறும்பு ...செல் ...புழு ...பாம்பு ...உடும்பு ....பல்லி முதலியவாகவும் ,தவளை ...சிறுமீன் ...பெருமீன் ....முதலை ....சுறா...திமிங்கலம் முதலியவாகவும் ;,பிறந்து பிறந்து ,தேய்ப்புண்டல்...நசுக்குண்டல் ....அடியுண்டல் ...பிடியுண்டல் ...முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து ,அவ் ஊர்வன ...நீர் வாழ்வன போன்ற யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்பு அடைந்து அடுத்தப் பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

மூன்றாம் பிறவி ;----

அடுத்த பிறவியாக ,ஈ ...வண்டு ...தும்பி ...குருவி ....காக்கை ....பருந்து ....கழுகு ...முதலியவாக பிறந்து பிறந்து ,...அடியுண்டல் ...பிடியுண்டல் ...அலைப்புண்டல் ....உலைப்புண்டல்....முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து ,அப்பறவை யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று,..உழன்று உழன்று அலுப்பு அடைந்து அடுத்தப் பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

நான்காம் பிறவி ;----

அடுத்த பிறவியாக ,..அணில்....குரங்கு ...நாய் ....பன்றி ....பூனை ...ஆடு ...மாடு....யானை ....குதிரை ....புலி .....கரடி ....சிங்கம் ....முதலியவாக பிறந்து ,பிடியுண்டல் ...அடியுண்டல் ....குத்து உண்டால் ...வெட்டு உண்டல் ...தாக்குண்டல் ...கட்டுண்டல் ....தட்டுண்டல் ...முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து ,அவ்விலங்கு யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்படைந்து பின் அடுத்த பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

ஐந்தாம் பிறவி ;---

அடுத்து ,பசாசர் ....பூதர்....இராக்கதர் ...அசுரர் ....சுரர் ...முதலியராகப் பிறந்து பிறந்து ,அலைப்படுதல் ....அகப்படுதல் ...அகங்கரித்தல் ...அதிகரித்தல் ....மறந்து நிற்றல் ...நினைந்து நிற்றல் ...மயக்குறுதல்....திகைப்புறுதல்....போரிடுதல் ...கொலைப்படுதல் ...முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து ,அத்தேவ யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்படைந்து பின அடுத்த பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

ஆறாம் பிறவி ;----

அடுத்து ;--காட்டகத்தார் ...கரவுசெய்வார் ....கொலை செய்வார் ...முதயராகப் பிறந்து பிறந்து ,இறந்து ,இறந்து ,அந்நரக யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்படைந்து மேலும் ஆன்மாக்கள் ,அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் ..அச்சமும் ...அவலமும் ...களைப்பும் ...துன்பமும் அடைந்து அடுத்த பிறவி எதுவென்று தெரியாமல் ஆன்மா திகைத்து கொண்டு இருந்ததை கவனித்த... அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ...

ஏழாம் பிறவி ;----மனித தேகம் !

நம்முடைய கருணைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவுளத் தடைந்து, இரங்கிஅருளி ,அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய ..உயர்ந்த அறிவு உடைய மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது இந்த மனித தேகத்தில் செலுத்தி அருளிய தேவரீரது பெருங் கருணைக்கு ,மனிதனாக பிறந்த நாம் என்ன கைம்மாறு செய்துள்ளோம் ..ஒன்றும் செய்தோம் இல்லை ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !இம்மனித தேகத்தில் செலுத்திய காலத்தும் ,தாய் வயிற்றிலும் ...சிசு பருவத்திலும் ...குமார பருவத்திலும் ....பல்வேறு அவத்தைகளால் அறிவின்றி இருந்தோம் .ஆகலின் தேவரீர் பெருங் கருணைத் திறத்தை அறிந்து கொள்ளாமல் வீண் போது கழித்துக் கொண்டு இருந்தோம் .அப்பருவம் கழிய இப்பருவத்தின் இடத்தே உண்மைத் தெரியாமல் அலைந்து கொண்டு இருந்தோம் .இருக்கின்றோம் .

இறைவனால் கொடுக்கப் பட்ட , உயர்ந்த அறிவுடைய  மனிதப்பிறவி கொடுத்ததின் நோக்கம் என்னவென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறோம். நாம் உலக வாழ்க்கையில் கடந்து வந்த உயிர்த் தோற்றங்களின் வரிசையில் பொருளை உண்டு (புசித்து )வாழ்ந்து வந்ததால் அதே போல் மனிதப் பிறப்பிலும் தொடர்ந்து பொருள் உணவை உண்டு வாழ்ந்து வருகிறோம்.இவை சரிதானா ?தவறானதா ?என்பதை நம்முடைய அறிவைக் கொண்டு அறிந்து கொள்ளுதல் வேண்டும் .

மனித தேகம் கிடைத்தும் ,அதன் உண்மை தெரியாமல் மனிதனாக பிறந்த அனைவரும் பொருள் தேடும் வாழ்க்கையிலே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள்.அதனால் என்ன பயன் என்றால் ? நமக்கு மரணம் என்னும் முடிவுதான் வருகிறது.மரணம் வந்து விட்டால் நாம் என்ன செய்ய முடியும்.பொருளை வைத்து மரணத்தை வெல்ல முடியுமா ?என்றால் முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

உலகத்தையும்,அண்டத்தையும்,நாட்டையும்,ஆளுகின்ற அதிகாரத் தலைவர்களும் ,பட்டம் பதவி ,புகழ் அறிவு ஆற்றல் படைத்த அறிஞர் பெருமக்களும்,சித்தர் ,யோகி,ஞானி போன்ற அருளாளர்களும்,அறிவியல் விஞ்ஞானிகளும்,மற்றும் உள்ள ஆராய்ச்சி யாளர்களும்,  மற்றும் உள்ள ஒன்றும் தெரியாத மக்களும் மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் இறந்து கொண்டே இருக்கிறார்கள் .இறந்து போனபிறகு அவர்கள் எங்கு உள்ளார்கள்,என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

மரணம் என்பது இயற்கை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.மரணம் என்பது இயற்கை அல்ல !அவை செயற்கையே என்று வள்ளலார் தெளிவு படுத்துகிறார் ,தப்பாலே சகத்தவர் சாகவே துணிந்து உள்ளார்கள்  ,மனித பிறவியில் நாம் தவறு செய்வதால் தான் மரணம் வருகிறது ,ஆதாலால் மரணம் என்பது செயற்கை அல்ல ,அவை செயற்கையே யாகும் என்கிறார் வள்ளலார் அவர்கள்.

வள்ளலார் பாடிய பாடலைப் பாருங்கள் !

கனமுடையோம் கட்டுடையோம் என்று நினைத்து இங்கே
களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினமுடைய கூற்றுவரும் செய்தி அறியீரோ
செத்த உமது இனத்தாரைச் சிறிது நினையீரோ
தினகரன் போல் சாகாத தேகம் உடையவரே
திருவுடையார் என அறிந்தே சேர்ந்திடுமின் நீண்டே
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே
வழங்குதற்கு என் தனித்தந்தை வரும் தருணம் இதுவே !

என்கிறார் வள்ளலார் .நாம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் எமன் என்னும் கூற்றுவன் வருகின்ற போது என்ன செய்யப் போகின்றீர்கள் இதே போல் நம்முடைய மனித இனம் அனைத்தும் போய் கொண்டேதான் உள்ளன ,நாமும் பார்த்துக் கொண்டேதான் உள்ளோம்.மரணம் ஏன வருகிறது என்பதை நாம் சிறிதாவது நினைத்துப் பார்த்தது உண்டோ !ஏன நாம் மரணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்தோம் .இயற்கைதான் மரணம் என்பதால் சிந்திக்க தவறி விட்டோம்.

நமக்கு முன்னாடி வாழ்ந்த அருளாளர்களும்,மரணத்தை தவிர்க்கும் ,மரணத்தை வெல்லும் வழிமுறைகளை சொல்லித் தரவில்லை,காரணம் அவர்களுக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மையாகும்.

இனிமேல் நீங்கள் வருத்தமே ,துன்பமோ, அச்சமோ ,பயமோ .படதேவை இல்லை .மரணத்தை வெல்லும் வழியை நான் சொல்லித் தருகிறேன் ,நான் காட்டும் உண்மையான மெய்ந்நெறியைக் கடைபிடித்து ,மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து இறைவனுடைய உண்மையான அருளைப் பெற்று ,இறவாத வரம் பெறலாம் இன்பமுடன் வாழலாம் .என்று மனித தேகம் படைத்த அனைவரையும் அன்புடன் அழைக்கிறார் நமது அருளாளர் வள்ளல் பெருமான் அவர்கள்,அவர் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமான புனித  பாதையில் சென்று மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் வாழலாம் .அதன் வழியைப் பார்ப்போம் .

பொருள் உணவு ! அருள் உணவு !

பொருள் உணவு என்பது பஞ்ச பூதங்களால் உருவாக்கப் பட்டவைகளாகும் ,அதிலே இரண்டு விதமான உணவு வகைகள் உள்ளன .அசுத்த பூதகாரிய உணவு ,சுத்த பூதகாரிய உணவு என இரண்டு வகைப்படும் .

உயிர்களையும் ,உயிர் உண்டாகும் பொருள்களையும் அபகரித்து உண்பது அசுத்த பூதகாரிய உணவாகும் .,உயிர்களை கொன்று உண்ணாமலும் ,உயிர்கள் தோன்றுவதற்கு உண்டான வித்துக்களை உண்ணாமலும் ,..பூ ...காய் ...கனி...பழம் ...இலை ... தானியங்கள் போன்றவற்றை உண்பது சுத்த பூத காரிய உணவாகும் .இந்த இரண்டு விதமான உணவு வகைகளும் இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு மாயையால் கொடுக்கப்படும் பொருள் உணவாகும் .

இந்த இரண்டு விதமான உணவுகளும் நம்முடைய உடம்பையும்,உயிரையும் ,ஆன்மாவையும் ,எப்படி பாது காக்கிறது என்பதைப் பார்ப்போம் .

தாவர உணவு !

மனித உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் ,நோய்கள் தாக்காமல், உடம்பு வலுவு உள்ளதாக்கி எலும்பு ,நரம்பு,தசை போன்ற உறுப்புகளை பாதுகாத்தும்,தாது விருத்தியும்,தத்துவ விருத்தியும் இல்லாத படியாலும் ,  ,இரத்தம் சீர் கெடாமல் ,தங்கு தடை இல்லாமல் உடம்பில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று உடம்பை இயக்கிக் கொண்டு, உடம்பையும் உயிரையும் பாது காக்கும் உணவுதான் தாவர உணவாகும் .இதனால் அறிவு தெளிவு உண்டாகும் .இதுவும் ஒரு பொருள் உணவுதான் .இதற்கு சுத்த பூதகாரிய உணவு என்பதாகும் .

மாமிச உணவு !

உணவுக்காக உயிர்களைக் கொன்று,அதனுடைய மாமிசத்தை (இறைச்சியை )சமைத்து உண்பது அசுத்த பூதகாரிய உணவாகும் .இதனால் எலும்பு ,நரம்பு ,தசை போன்ற உறுப்புகள் சீக்கிரம் செயல் இழந்து ,இரத்தம் சீர் கெட்டு,இரத்த குழாய் அடைப்பு ஏற்ப்பட்டு ,அதனால் பல நோய்கள் உண்டாகி துன்பம் துயரம்,அச்சம்,பயம் உண்டாகி ,அறிவு இழந்து துன்பப்பட நேரிடும் .இதுவும் பொருள் உணவுதான் .இதற்கு அசுத்த பூதகாரிய உணவு என்பதாகும் .

ஒரு ஜீவனைக் கொன்று மற்றொரு ஜீவனுக்கு பசி ஆற்றுவித்தல் கடவுளுக்கும் சம்மதம் இல்லை ,உடம்பிற்கும் சம்மதம் இல்லை.ஜீவ காருண்ய ஒழுக்கமும் இல்லை .என்பதை சத்தியமாக அறிய வேண்டும்.

இந்த இரண்டு வகையான உணவு வகைகளும் மனித வாழ்க்கைக்கு தேவையான உணவு வகைகள் அல்ல ! இந்த உணவு வகைகள் இரண்டும் முன் பிறவியில் உண்ட உணவுகள் ,எனபதை அறிந்து கொள்ள வேண்டும் .மிருக வாழ்க்கை உணவை நாம் இப்போது புசித்துக் கொண்டு உள்ளோம் .

இந்த இரண்டு வகையான உணவும் மரணத்தை வெல்ல முடியாத உணவாகும் .
மனிதனாக பிறவி எடுத்த நாம்,மரணம் அடையும் வாழ்க்கைக்காக ,பொருளைத் தேடிக் கொண்டு உள்ளோம் .வாழ்நாள் முழுவதும் ,மண்ணாசை ...பொன்னாசை ....பெண்ணாசை க்காக உழைத்து உழைத்து பொருளைத் தேடிக் கொண்டு உள்ளோம் .அதனால் ஆசை தீர்ந்து விடுகிறதா ? என்றால் இல்லை .மனிதனுக்கு உயர்ந்த அறிவுக் கொடுத்து இருந்தும் சிந்திக்க நேரம் இல்லாமல் பொருளைத் தேடி வைத்து விட்டு , அதனால் எந்த பயனும் இல்லாமல் மரணம் அடைந்து விடுகிறோம் .

நாம் சம்பாதித்த பொருளை ஏழை ,எளிய ,,வறுமையுற்ற மக்களுக்கும் கொடுத்து உதவாமல்,இரக்கம்,அன்பு ,தயவு,கருணை இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு திரிகின்றோம்.அதனால் என்ன பயன் அடைந்தோம்.பொருள் நம்மை அழித்து விடும் எனற உண்மை தெரியாமல் ,பொருள் மீது அளவு கடந்த பற்று வைத்து பொருளைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

பொருளைத் தேடுவதால் என்ன பயன் என்பதைப் பற்றி வள்ளலார் சொல்லும் கருத்தைப் பாருங்கள் .

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங் காண்கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துனை கொள்கின்றீர் பித்துலகீரே !

பொருளை சம்பாதித்து வைத்துக் கொண்டு மதிப்போடும் ,மரியாதையோடும் வாழ்கின்றோம் என்கின்றீர் ,விலை உயர்ந்த பட்டுத் துணிகளும் ,நகைகளும் அணிந்துக் கொண்டும் திரிகின்றீர் ,பசி என்று வந்தோரை பார்க்க கூட மனம் செல்லாமல் இருக்கின்றீர் ,உங்களுக்கு எப்போது மரணம் வருகின்றது என்பதும் தெரியாமல் வாழ்கின்றீர் .திடீர் என்று மரணம் வந்து கொட்டோடும் (மேளம் )முழக்கோடும (அழுகுரல் சத்தம்) பிணக்கோலம் காண்கின்றீர்,இதுவா வாழ்க்கை ? சிந்திக்க வேண்டும்.

மனிதன் வாழ்க்கை என்பது வாழ் நாள் முழுவதும் பொருள் தேடி அலைந்து அழிந்து விடுவதில்லை,இறைவன் நம்முடைய ஆன்மாவில் வைத்திருக்கும் அருளைப் பெற்று அழியாமல் வாழ்வதுதான் மனித வாழ்க்கையாகும்.

உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் ,நல்ல குணமும் ,நல்ல அறிவும் ,நல்ல அருளும் பெற்று மரணத்தை தவிர்க்கும் வழி தெரியாமல் ,பொருளைத்தேடும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது ,பைத்தியக் காரர்கள் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார் வள்ளலார் .

மேலும் வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை யறியீர்
பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டியுள் இருந்தீர்
பட்டினிக் கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர்
எட்டிப்போல் வாழ்கின்றீர் கொட்டிபோல் இளைத்தீர்
எத்துனை கொள்கின்றீர் பித்து உலகீரே !

மனிதன் எப்படி வேண்டுமானாலும் பொருள் சம்பாதிக்க ஆசைப்படுகிறான் .மக்களின் ஏழ்மை நிலையை புரிந்து கொண்டு,வட்டிக்கு பணம் கொடுத்து வட்டிக்கு வட்டி என்று, பணம் சம்பாதிக்கும் வழியைக் கற்றுக் கொண்டான் .பணப்பெட்டியை நிரப்புவதிலும்,மேலும் பெட்டிகளை வாங்கி நிரப்புவதிலும் அதிகம் அக்கறை செலுத்துகிறான் பெட்டிமேல் பெட்டிவைத்து ஆள்கிறான் .வறுமையில் ஏழ்மையில் வாழும் மக்கள் ,பசியோடு வாழ்ந்து பட்டினி கிடைபாரை பார்க்கவும் அஞ்சுகிறான்,பழம் கஞ்சியையும் கொடுக்க மனம் தளருவதில்லை,எட்டி மரம் போல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

பணம் என்னும் பொருளைக் காப்பாற்றும் வழியைத் தெரிந்து கொண்டவர்கள் ,உடம்பையும் ,உயிரையும் காப்பாற்றும் வழியை மட்டும் கற்றுக் கொள்ளாமல்,பைத்தியகாரர்கள் போல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் ,உயிரைக் காப்பாற்றும் சுத்த சன்மார்க்கம் என்னும் மார்க்கத்தை அறிந்து கொள்வாரும் இல்லை .இவர்களை மனிதர்கள் என்று எப்படி சொல்வது ?உயர்ந்த அறிவுடையவர்கள் என்று எப்படி சொல்வது ? அறிவு படைத்த மனித பிறப்புக் கொடுத்தது பணம் என்னும் அழியும் பொருளை சம்பாதிக்கவா ! சிந்திக்க வேண்டும்.

அருளைப் பெரும் வழி !

நாம் அருள் அருள் என்று சொல்லுகிறோம் அருள் எங்கு இருக்கிறது என்பது இதுவரையில் நமக்கு தெரியாமலே இருக்கிறோம்.அருள் இருக்கும் இடத்தைப் பற்றி நம் முன்னோர்கள் முறையாக ,சரியாக ,உண்மையாக யாரும் நமக்கு சொல்லித் தரவில்லை.பல அருளாளர்கள் பல வழிகளை காட்டி உள்ளார்கள்.அதனால் நாம் ஏதாவது பயன் அடைந்து மரணம் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறோமா ? என்றால் இதுவரையில் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

சரியை ,கிரியை,யோகம்,ஞானம்,என்ற நான்கு வகை ஆன்மீக வழிகளைக் காட்டி உள்ளார்கள் .அதில் ஒவ்வொன்றிலும் நான்கு படித்தரங்கள் இருக்கின்றன,சரியையில் சரியை,சரியையில் கிரியை,சரியையில் யோகம்,சரியையில் ஞானம்,...கிரியையில் சரியை,கிரியையில் கிரியை,கிரியையில் யோகம்,கிரியையில் ஞானம் ,யோகத்தில் சரியை,யோகத்தில் கிரியை,யோகத்தில் யோகம்,யோகத்தில் ஞானம்,...ஞானத்தில் சரியை,ஞானத்தில் கிரியை,ஞானத்தில் யோகம்,ஞானத்தில் ஞானம் ,...என்னும் பதினாறு படித்தரங்கள் காட்டி உள்ளார்கள்.

இந்த பதினாறு படித் தரங்களையும் கடந்தால் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்,அதுவே ஞானம் என்னும் அருளைப் பெற்று இறைவனோடு கலந்து விடலாம் என்பதை மக்களுக்கு போதித்து உள்ளார்கள்.ஆனால் மக்கள் அந்த வழிகளை பின்பற்றி வருகிறார்களா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.மக்கள் முதல்படியான சரியை கிரியை ,என்ற பக்தி என்ற படிகளை தாண்டி மேலே வருவதில்லை.

அப்பாவி மக்களை பயன்படுத்தி ,தவம், யோகம்,ஞானம் என்ற வழி முறைகளை சொல்லித் தருகிறேன் என்று,பல அமைப்புகள் மக்களை  ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு உள்ளார்கள் .அதையும் உண்மை என்று நம்பி மக்கள் பணத்தையும்,நேரத்தையும் விரையம் செய்து கொண்டு உள்ளார்கள்.

பக்தி என்ற பெயரில் ஆலய வழி பாட்டிலும்,தவம்,யோக,ஞானம்,என்ற ஏமாற்றி பேர் வழிகளாலும் அருளைப் பெற முடியுமா ?என்றால் பெற முடியாது.

வள்ளலார் காட்டும் உண்மையான வழி !

மனிதனாக பிறந்த நாம் உயர்ந்த அறிவைப் பெற்றவர்கள்.மனிதனுக்கு மட்டும் உயர்ந்த அறிவை இறைவன் கொடுத்து இருக்கிறார் .என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.,அந்த அறிவை முறையாக ஒழுக்கத்தோடு கடை பிடித்தால் போதும் அருளைப் பெற்றுக் கொள்ளலாம்.அந்த ஒழுக்கம் என்னவென்றால்,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம்,இவை நான்கும் முக்கியமானதாகும்,இதில் இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் என்ற இரண்டு ஒழுக்கங்களை கடைபிடித்தால் போதும் மற்ற,ஜீவ ,ஆன்ம  இரண்டு ஒழுக்கங்களும் சிரமம் இல்லாமல் வந்து விடும்.

இந்திரியம் என்பது,கண்,மூக்கு ,வாய்,செவி ,உடம்பு ,என்பதாகும்.இதற்கு உருவம் உண்டு.கரணம் என்பது மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்பதாகும்.இதற்கு உருவம் கிடையாது மின்சாரம் போல் வேலை செய்யும்.ஜீவன் என்பது உயிர் என்பதாகும்,இதற்கும் உருவம் கிடையாது ஆனால் உயிருக்கு துணையாத தான் இந்திரியம்,கரணம் என்னும் கருவிகள் வேலைசெய்கின்றன,ஆன்மா என்பது அருள் பெற்ற ஒளியாகும் ,ஆன்மா இல்லை என்றால் உயிரும்,கரணமும்,இந்திரியமும் வேலை செய்யாது.உடம்பு செயல் இழந்து விடும் அதற்கு பெயர்தான் மரணம் என்பதாகும். .

ஆன்மா இல்லை என்றால் எதுவும் இயங்காது.உடம்பை விட்டு வெளியே சென்ற ஆன்மா எங்கு சென்றது,என்ன பிறப்பு எடுத்தது என்பது யாருக்கும் தெரியாது.இதுதான் ரகசியம்,அருளைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் உண்மைத்  தெரியும்,உண்மை தெரிந்தவர்கள் மரணத்தை வேன்றவர் களாகும் .

இந்த உலகத்தில் அருளைப் பெற்றவர்கள் யார் ? சித்தர்கள் ,யோகிகள் ,ஞானிகள் என்பவர்கள் சிறிது அற்ப அருளைப் பெற்று இருக்கிறார்கள்.அந்த அற்ப அருளைப் பெற்று சில சித்துக்களை செய்து,அவர்களுக்கும் பயன் இல்லாமல்,மற்றவர்களுக்கும் பயன் இல்லாமல் சமாதி அடைந்து விட்டார்கள்.அவர்களும் மீண்டும் பிறப்பு எடுப்பார்கள்.அவர்கள் உண்மையான பரிபூரண இறை அருளைப் பெற முடியவில்லை,ஏன் என்றால் அவர்களுக்கு உண்மை தெரியவில்லை.அவர்களையும் மாயா திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளது .ஆன்மாவில் உள்ள அருள் அமுதத்தை ஏழு திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளது .அனைத்து திரைகளும் நீங்கினால்தான் உண்மையான அருள் வெளிப்படும்.

ஏழாவது அமுதம் பற்றி வள்ளலார் சொல்லுகிறார் .

ஏழ் நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வனடி ..அம்மா
என்னென்று சொல்வனடி .

ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்த பொற் றம்பமடி...அம்மா
இசைந்த பொற் றம்பமடி.

பொற்றம்பங் கண்டேறும் போது நான் கண்ட
புதுமைகள் என் சொல்வனடி ...அம்மா
புதுமைகள் என் சொல்வனடி !

என்று விளக்கம் அளிக்கிறார் வள்ளலார்.அவர் கண்ட காட்சி ,அவர் உண்ட அமுதம், அவர் அடைந்த மகிழ்ச்சி ,அவர் அடைந்த பேரின்பம்,அவர் அடைந்த முத்தேக சித்தி,அவர் அடைந்த சுத்த பிரணவ ஞான தேகம்,அவர் அடைந்த பேரின்ப பெருவாழ்வு,அவர் அடைந்த மரணம் இல்லாத பெருவாழ்வு,மற்றும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.போன்ற அனைத்து வல்லபங்களையும் பெற்றவர் நமது அருட் தந்தை வள்ளல்பெருமான ஒருவரே !என்பதை அருள் அனுபவம் பெற்றவர்கள் நன்கு அறிவார்கள்.மற்றவர்கள் அவரை அறிந்து கொள்ளும் அறிவு அருள் அனுபவம் கிடையாது.

அந்த கருணை வள்ளல் தான் அடைந்த அருள் அனுபவத்தை எல்லா மனித தேகம் படைத்தவர் களுக்கும் சொல்ல வேண்டும் ,அவர்களும் அந்த பேரின்ப பெருவாழ்வில் வாழ வேண்டும் ,என்கிற பெருங் கருணையுடன் ,என்போல் இவ்வுலகம் பெற வேண்டும் உலக உயிர்த் திரள் எல்லாம் ஒளிநெறி பெற வேண்டும் என்பதனால் அருள் பெரும் வழியை நமக்கு இலவசமாக சொல்லிக் காட்டி உள்ளார் .அவர்காட்டிய வழியை பின்பற்றி அருள் பெறுவோம்.

அருள் தேடும் ஆன்மாக்கள் ! வழி !

நாம் புண்ணிய தீர்த்தங்கள் என்னும் கங்கை,காவிரி,யமுனை ,கோதாவரி,போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை,புனித ஆலயங்கள் என்று சொல்லப்படும் ,காசி,ராமேஸ்வரம்,மெக்கா மதினா ,புத்தகயா,தெருசலம்,பிரமிடு ,போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை .சமய மத ஏற்பாட்டில் காட்டி உள்ள ஆலய உருவ வழிபாட்டு முறைகளும் தேவை இல்லை.இந்த வழிபாட்டு முறைகளால் நமக்கு எந்த பயனும் இல்லை,அதனால் நம்முடைய ஆன்மாவில் இருந்து அருள் சுரந்து வெளியே வருவதில்லை ,நாம் மரணத்தை வெள்ளப்  போவதில்லை.இது சத்தியமான உண்மையாகும்.

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள்.!

நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்த்தருளி இருக்கும் கோட்டையின் கதவு சாத்திப் பூட்டப்பட்டு இருக்கிறது.அந்த பூட்டை திறப்பதற்கு சாவியாகிய ''அருள் '' வேண்டும்.இவ்வருள் அன்பினால் அல்லாது வேறு வகையால் அடைவது அரிது.இவ்வன்பு ஜீவ காருண்யத்தால் அல்லாது வேறு வகையால் வராது.ஜீவ காருண்யத்தின் லாபமே அன்பு.

ஜீவ காருண்யம் உண்டாவதற்கு வழி அல்லது துவாரம் யாதெனில் ;--

கடவுள் உடைய பெருமையும்,தரத்தையும் ...நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே யாகும். அன்னிய உயிர்களுக்கு இமசை உண்டாகாது நடத்தலே ,ஜஈ காருண்யம்.இதுதான் அருளப் பெறுவதற்கும் முத்து அடைவதற்கும் முதற் படியாக இருக்கிறது.ஆதலால் இதைப் பாது காத்தல் வேண்டும்.இப்படியே பழகிப் பழகிப் மேலே ஏற வேண்டும்.அப்படி பழகினால் .

ஜீவ காருண்யத்தால் பிரமன் ஆயுளும் .பாச வைராக்கியத்தால் விஷ்ணு ஆயுளும்,ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுளும்,பிரம்ம ஞானத்தால் என்றும் அழியாத சுவர்ண தேகம் முதலியவைகளும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.

எப்படி எனில் ;--

கடவுள் சர்வ ஜீவ  தயாபரன்,சர்வ வல்லமை உடையவன்,ஆகையால் நம்மையும் சர்வ ஜீவ தயவு உடையவர்களாய்ச் சர்வ வல்லமையும் பெற்றுக் கொள்ளும்படி ,...மனித தேகத்தில் வரிவித்துள்ளார் ,ஞானிக்குத் தயவு அதிகப்பட்டு இருக்கிறபடியால் ,கேளாத கேள்வி முதலிய மகா அற்புதங்களான ,இறந்தார் எழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்று இருக்கின்றார் .

எந்த ஜீவர்கள் இடத்தில் தயவு விருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ அந்த ஜீவர்கள் இடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாய் இருக்கும் ,மற்றவர்கள் இடத்தில் காரியப்படாது.ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில்,கடவுள் இடத்தில் பக்தியும் (அன்பு )ஜீவர்கள் இடத்தில் ஜீவகாருண்யம் என்னும் இரக்கமும் செலுத்த வேண்டும்.இதுவே ஆண்டவரின் கோட்டையின் பூட்டைத் திறக்க அருள் என்னும் சாவியாகும்.

கடவுள் தயவும் ஜீவ தயவும்;--

தயவு என்பது இரண்டு வகைப்படும் ,யாதெனில் ;--கடவுள் தயவு,,ஜீவ தயவு ஆகிய இரண்டு ....கடவுள் தயவு என்பது ;--1,இறந்த உயிரை எழுப்புதல் ,2,தாவரங்களுக்கு மழை பெய்வித்தல்,3,முருக,பட்சி,ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி,அருட்சக்தியால் ஊட்டிவைத்தல் என்பவையாலும்.4,சந்திரன்,சூரியன்,அக்கினிப் பிரகாசங்களைக் கால ,தேச ,வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல்.5, பக்குவிகளுக்கு அநுக்கிரகித்தல்,6, அபக்குவிகளைச் செய்யவேண்டிய அருள் நியதியின்படி ,தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல் இவைகள் யாவும் கடவுள் தயவாகும்.

ஜீவ தயவு என்பது ;--மனிதர்கள் தயவாகும்.தன்னுடைய சத்தியின் அளவு உயிர்களுக்கு உபகாரம் செய்தல் ,ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயவு வண்ணமாக இருத்தல்.இப்படி இருந்தால் அருள் காரியப்படும்.

கடவுள் மனித தேகத்தில் காரியப்படுதல் .;--

கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமமாக இருக்க சமய,மத ஏற்பாட்டில் மகான்கள் தத்துவ அடையாளங்களாகப் பெயரிட்ட விக்கிரம பேதமாகிய சிலைகளை ,தங்கம் ,வெள்ளி,வைரம்,கோமேதகம்,இரும்பு,மண்ணு,ஈயம் ,பஞ்ச்லோகங்கள் முதலியவற்றால் கடவுள் காரியப்படுவது சரியை,கிரியை,யாதி பேதம் எட்டில் சரியையில் சரியை,கிரியையில் சரியை, இவ்விரண்டையும் செய்கின்ற மனிதர்களது ஞாயம் ,

மேலும் அதில் தோன்றி அனுக்கிரகம் செய்விப்பது என்பது மாயா ஜாலம்,மாயா ஞாயம்..அருள் உருவமான அறிவே ,உருவங் கொண்ட சிவத்தை ,அறிவாலே அறிவது உண்மையாகும்...மேலும் அனலுக்குச் சரியான கற்பூரம் ,பஞ்சு,கரி,காய்ந்த கட்டை முதலிய வஸ்துக்களில் அக்கினி சீக்கிரம் பற்றுவது போல் காரியப்படும்.கதலி (பச்சை வாழமட்டை ) முதலிய காரியப்படுவது தாமசமாகும்( தாமதம் )அதுபோல் ஜீவ காருண்யமுள்ள பக்குவ ஆன்மாக்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால் .சுத்தமாதி தேகம் மூன்றும் ( சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம்.)அத்தருணமே வரும் .

அதேபோல் ஜீவ காருண்யம் இல்லாத பக்குவ இல்லாதவர்களுக்கு அருள் செய்தால் ,வாழையின்  இடத்தில் அக்கினி காரியப்படுவது போலாகும்.ஆதலால் கடவுள் அருள் வெளிப்படுவதற்கு அபக்குவிகள் தங்கள் செயற்கை குணங்களாகிய ராகத் துவேஷங்களை நீக்கல் வேண்டும்.சினம்,காமம்,வெகுளி,மயக்கம்  முதலிய வற்றையும் நீக்கி ,உயிர்களுக்கு உபகாரம் செய்தல் வேண்டும்.

சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சம் உண்டாக்குவது போல் .மனித சிறிய தயாவாகிய அன்பு,தயவு,கருணைக் கொண்டு,,,கடவுளின் பெரிய தயாவாகிய அன்பு ,அறிவு,ஆற்றல் அருள் என்னும் பெரிய தயவைப் பெற வேண்டும்.இதுவே பொருளைத் தேடாமல் அருளைத் தேடும் வழியாகும்.மேலும் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் உள்ள ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடைப் பகுதியில் விரிவாக எழுதி வைத்துள்ளார் .ஊன்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதப் பிறப்பு எடுத்ததின் நோக்கமே அருளைப் பெறுவதற்கே ! என்பதை தெரிந்து,அறிந்து,புரிந்து கொண்டு இப்பிறப்பிலே அருளைப் பெற்று மரணத்தை வென்று,பேரின்ப பெருவாழ்வு வாழ்வோம்.வளமுடன் வாழ்வோம்.

உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .

மேலும் பூக்கும்;--

புதன், 20 பிப்ரவரி, 2013

ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி ?


ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி ?

ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானாக விளங்கும் அதனால் உபகார சக்தி விருத்தியாகி ,மகிழ்ச்சியுடன் வாழலாம்.வினையால் வரும் துன்பங்களான அச்சம்,துன்பம் ,துயரம்,பயம்,வியாதி ,அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் விலகிவிடும்.இல்லத்தில் தாய்,தந்தை,மனைவி,மக்கள்,உறவினர்,நண்பர் அனைவரும் வாழ்த்தும் அளவிற்கு மகிழ்ச்சியுடன் வாழலாம்.

ஜீவகாருண்யம் இல்லாத இல்லத்தில் அன்பு ,அறிவு விளக்கம் இல்லாமல் மறைந்து விடும்.அதனால் உபகார சக்தி மறைந்து விடும்.அதனால் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்.வியாதி போன்ற துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.இல்லத்தில் மகிழ்ச்சி இல்லாமல் வேதனை அதிகரித்துக் கொண்டே இருக்கும் .அதனால் தாய்,தந்தை,மனைவி,மக்கள்,உற்றார் ,உறவினர்,நண்பர் அனைவரும் மகிழ்ச்சி இல்லாமல் துன்பம் நிறைந்த சோகத்துடன் வாழ நேரிடும் .அற்றை தீர்பதற்கு எந்த வழிபாடும் செல்லுபடி ஆகாது.இவை இயற்கையின் சட்டம் .

ஆதாலால் நாம் ஒவ்வொருவரும் அன்பு,இறக்கம்,தயவு,கருணை என்னும் ஜீவகாருண்யத்தை உண்டுபண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்.அப்படி வாழ்ந்தால் என்றும் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழலாம்.

ஆண்மநேயன் ;--கதிர்வேலு.

மலிவு விலை உணவு திட்டம் பாராட்ட வேண்டியது !


மலிவு விலை உணவு திட்டம் பாராட்ட வேண்டியது !

வள்ளலார் கொள்கைக்கு தொடர்பு உடையதாகும்.நாங்கள் ஈரோட்டில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு ஐந்து வருடத்திற்கு முன் முயற்சி செய்தோம்.காலதாமதமாகிக் கொண்டே வந்தது.இப்போது அரசாங்கமே கொண்டு வந்துள்ளது பெருமையாகவும் பாராட்டும்படியாக உள்ளது.இந்த திட்டம் வரவேற்க வேண்டிய திட்டம் .இதை தொய்வு இல்லாமல் நடத்த அரசாங்கம் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்..

பட்டினி உற்றார் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே ஒட்டிய பிறராற் கேட்ட போதெல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் ,இட்ட இவ்வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவது இயல்பே ..வள்ளலார்

இறைவன் படைத்த உலகில் எந்த உயிர்களும் பசியோடு வருந்து கின்றதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்பதால்தான் ,1867,ஆம் ஆண்டு வடலூரில் இலவச தருமச்சாலையை தோற்றுவித்து இன்றுவரை தொடர்ந்து தொய்வு இல்லாமல் நடந்து வருகிறது.

அதேபோல் இந்த மலிவு விலை உணவு சாதாரண ,அசாதாரண மக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.இவை ஓர் அற்புதமான திட்டம்.இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் ,வாழ்த்துகளையும் ,சன்மார்க்கி எனற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன் .வாழ்க பல்லாண்டு.

ஆண்மநேயன் ;--கதிர்வேலு.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஆரியர்கள் என்பவர்கள் யார் ?
ஒரு நண்பர் எழுதிய கட்டுரை ! நான் எழுதவில்லை !


ஆரியர்கள் என்பவர்கள் யார் ??

ஆரியர்கள் என்பவர்கள் யூதர்களே ! அங்கு மட்டுமே யூதர்களுக்கு வேதத்தை இறக்கிய மோசேயின் குலத்தினர் மட்டுமே பூசை மட்டும் செய்கிற குலம் என்ற வழக்கத்தை முதன்முதலில் கொண்டுவந்தார்கள் ! மொத்தம் 12 குலம் அங்கு இருக்கிறது ! அதில் லேவி கோத்திரத்தார் மட்டுமே இன்றளவும் பூசை செய்வார்கள் !!
அதுவரையும் அதன்பின்னரும்  உலகில் எங்கும் பூசைக்கென்று தனி குலம் இருக்கவில்லை !

இஸ்ரேல் தேசத்திலே இன்றளவும் ஒரே கோவில் மட்டுமே ! அதனால் லேவி கோத்திரத்தார் எண்ணிக்கை பெருத்த போது பிழைப்பு போதவில்லை !வேறு தொழிலும் செய்ய அறியாது ‘ எனவே மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து அங்கிருப்போர் கோவிலில் அவர்களின் வேதங்களை கற்று கொண்டு பூசைத்தொழில் செய்தார்கள் !

அவர்கள் எங்கு சென்றார்களோ அவர்களின் வேதங்களை மொழிகளை கற்று சுவீகரித்து கொண்டார்கள் !!
அவ்வாறு இந்தியாவில் கைபர்போலன் கணவாய் வழியாக உள் நிழைந்த யூதர்களே - ஆரியர்கள் !

இந்தியாவில் வந்து இங்கிருந்த ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களை கற்றுக்கொண்டார்கள் ! சமஸ்கிரதம் என்பது திராவிட ஞானிகளால் வேதங்களுக்கென்று உருவாக்கபட்ட ஒரு மொழி ! இந்தியா முழுவதும் தமிழ் முதலாக பலவாராக மறுவியிருந்த கிரதங்களை சமப்படுத்தி திராவிடர்களால் உருவாக்கபட்ட கிரதம் சம கிரதம் ! இதில் வேதங்கள் வேதவியாசரால் ஒழுங்கு படுத்தப்பட்டன ! சிவன் . நாராயணன் இந்திரன் 

அனைவரும் திராவிட கண்டுபிடிப்புகளே !

வேதங்களுக்கென்று உருவக்கபட்ட சமஸ்கிரதத்தை - அது யாராலும் பேச்சு வழக்கில் இல்லாததால் திராவிடர்கள் மறந்து விட ஆரியர்கள் மட்டும் மணனம் செய்து கொண்டுள்ளனர் ! அது அவர்களின் வீடுகளில் பேசப்படுவதில்லை என்பதிலிருந்தே அது அவர்களின் மொழி அல்ல என்பதை உணரலாம் ! பிராமணர்கள் இந்தியாவின் ஏதாவது ஒரு மொழியைத்தான் வீடுகளில் பேசுகிறார்களே தவிற சமஸ்கிரதத்தை அவர்கள் பேசுவதில்லை !
சமஸ்கிரதம் திராவிடர்களால் மறக்கபட்ட மொழி !!

சமஸ்கிரதமே வட இந்திய மொழிகளுக்கு - இந்திக்கு மூலமான திராவிட மொழி !! இந்தி திராவிட மொழி என்பதை தவறாக வியாக்கியாணம் செய்ததால் இன்று தமிழ் மோசமான கலப்படத்தை சந்திக்கிறது ! 
ஐரோப்பிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழின் ஜீவனே கெடுவதைக்காட்டிலும் இந்தி கலந்திருந்தாலும் இவ்வளவு கேடு நிச்சயம் வராது !!

யூதர்களான ஆரியர்களின் சிறப்பு என்னவென்றால் எங்கு போனாலும் தங்களின் அடிப்படையை அப்படியே விட்டுவிட்டு அங்குள்ளதை அப்படியே சூவீகரித்து அதை ஆழ்கிறவர்களாக மாறிவிடுவதுதான் !!

வந்த இடத்தில் திராவிட தெய்வங்களை பிடித்துக்கொண்டு திராவிடர்களான ராமரையும் கிருஷ்ணரையும் உயிராக பாவிக்கிற அவர்கள் பிறப்பால் அவர்களுக்கு சொந்தக்காரரான இயேசுவின் பெயரைக்கேட்டதும் வாந்தி எடுப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும் ! 
இயேசு சிலுவைக்கு பின்பும் ; பரமேறிய பின்பும் இயேசுவின் நேரடி சீடரல்லாத பவுல் அவர்களால் கிருஷ்தவம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது ! அது ஐரோப்பியர்களால் சுவீகரிக்கப்பட்டு ஐரோப்பிய மதமாக்கபட்டது !!

ஆனால் இயேசு பூமியில் நடமாடியபோது தனது பணி என்பதாக `` காணாமல் போன இஸ்ரவேலர்களை மீட்டு கொண்டுவருவதே தனது பணி என்றார் ! அந்த காணாமல் போன இஸ்ரவேலர்கள் உலகம் முழுவதும் பரவிய யூதர்கள் - அதாவது நமது இந்திய பிராணர்களைப் போன்றவர்களே !!

அந்தப்பணி நிச்சயமாக உலக முடிவில் நிறைவடையும் !

திராவிடர்களாக பூமிக்கு வந்த ராமரும் கிருஷ்ணரும் யாரோ அந்த நாராயணன்தான் இயேசுவாகவும் பூமிக்கு வந்தார் ! அவர் கல்கியாக பூமிக்கு வந்து இந்த உண்மையை சொல்லும்போது நம்மூர் பிராமணர்கள் உடனே போய் ஒட்டிக்கொள்வார்கள் !!
ராமர்தான் கிருஷ்ணராக பூமிக்கு வந்தார் என்பதை யார் சொல்லி இந்தியா ஏற்றுக்கொண்டது ?
பின்னாளில் ஆழ்வார்கள் சொல்லித்தான் உலகம் ஏற்றுக்கொண்டது !!

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன்

மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
 

பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,
 

இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே  

                -- மங்கையாழ்வாரின் திருவாய் மொழி பாசுரம் 1060.
ஆழ்வார்கள் சொன்னபோது உலகம் ஏற்றுக்கொண்டது ! 

அதுபோலவே அவரே இயேசுவாக வந்ததும் உண்மை ! கல்கியாகவும் வந்து சத்திய யுகத்தை நிறுவப்போகிறவரும் அவரே !!

அதை எதிர்பார்த்தே உலகமே காத்துக்கிடக்கிறது !!

அப்போது எல்லா மதபேதங்களும் நீங்கி சமரச சுத்த சண்மார்க்கம் தளைக்கும் !! நீதி செழிக்கும் !! கலியுகமும் கலிபுருஷர்களான அசுர ஆவிகளின் மாய்மாலங்களும் முடிவுக்கு வரும் !!

அதுவரை இறைவனுக்கு பூசை செய்ய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே தகுதி இருப்பதாக பொய்யாக புணைந்துரைக்கபட்டதை திராவிட சமுதாயத்தில் குருனாதர்கள் ராமாணுஜரும் வள்ளலரும் ஏற்கனவே மாற்றியமைத்து விட்டனர் !

யார் பக்தி தொண்டால் இறைவனை நெருங்கியவர்களோ அவர்களே ஆசாரியார்கள் அல்லது பாகவதர்கள் , அவர்களே பாசுரங்களை பாடி பூசை செய்யலாம் என்பதை 1000 வருடங்களுக்கு முன்பே ராமானுஜர் வழி திறந்ததால் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் பெருமாள் கோவில்களும் வைஸ்ணவமும் பல்கி பெருகிற்று ! இந்தியரின் இதயத்தில் ராமரும் கிருஷ்ணரும் நீங்காத இடத்தை பெற்றனர் !

சைவமரபில் அதை நிலைனாட்ட வள்ளலாராக அவதரித்து மரணமில்லா பெருவாழ்வு மற்றும் ஏக இறைவனை அருட்பெருஞ்சோதியாக ஏத்தும் சமரச சுத்த சண்மார்க்க நெறி பற்றவைக்கபட்டுள்ளது !

ஆண்டவர் வருவார் எனவும் அப்போது மரித்தவர் எழுந்திரிப்பார்கள் எனவும் வைணவ நெறிக்கு சைவர்களை வள்ளலார் கொண்டுவந்து சேர்த்திருப்பது அதன் ரகசியமாகும் !! ஆதி மனிதனான சிவனால் உபதேசிக்கபட்ட ``சற்குருவைப்பற்றிய உபதேசம்`` பின்னாளில் மறைந்து திரிந்து போனாலும் வள்ளல் பெருமானால் சைவம் மீண்டும் வைணவத்தில் கொண்டுவந்து சேர்க்கபட்டுவிட்டது ! 

சமரச சுத்த சண்மார்க்கமே உலகம் உய்யும் வழி !!

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே   
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

உலகின் உண்மைப் பொது நெறி !

உலகின் உண்மைப் பொது நெறி !


உலகின் உண்மைப் பொது நெறியாக விளங்குவது ,வள்ளலார் தோற்றுவித்த ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,'' என்ற பொது நெறியாகும். இதை தமிழக அரசு சட்ட பூர்வமாக,உலகின் பொது நெறியாக கொண்டு வரவேண்டும்.இதுவே எங்களது வேண்டுகோளாகும் .

உலகில் உள்ள அனைத்து மனித குல வாழ்க்கைக்கும் ,ஆன்மீகத் தேடலுக்கும் கடவுளின் பொதுவான  வழிபாட்டு முறைகளுக்கும் ,மனிதநேய தனிமனித ஒழுக்க நெறி முறைகளுக்கும்,ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமைக்கும் ,எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் மனப்பாங்கை உண்டாக்குவதற்கும், மனிதன் பசி ,பிணி,தாகம்,இச்சை ,எளிமை,பயம்,கொலைப் போன்ற துன்பங்கள் நேரிடாமல் பாது காப்பதற்கும் நீண்ட வருடங்கள் உயிருடன் வாழ்வதற்கும்,மேலும் மரணமே இல்லாமல் வாழ்வதற்கும் ,கடவுள் நிலை அறிந்து அம்மயமாகத்,தன்னை மாற்றிக் கொண்டு பேரின்ப வாழ்வு வாழ்வதற்கு தகுதியும் வாய்ப்பும் உள்ள நெறியாகும்.

ஓர் உண்மைப் பொது நெறியாக,அனைத்து உலகத்திற்கும்,அனைத்து நாட்டிற்கும்,அனைத்து மக்களுக்கும்,ஒரு பொதுவான வழிகாட்டும் நெறிமுறைகள்,இல்லாமல் இருந்தது , இல்லை என்பதை அறிவு சார்ந்த பெரியோர்கள் அறிவார்கள் அவற்றை போக்குவதற்கு வள்ளல் பெருமான் அவர்களால் தோற்றுவிக்கப் பட்டதுதான்.சாதி,சமயம்,மதம் சாராத ஓர் உண்மைப் பொது நெறியாகும் .

உலகில் உள்ள ஒவ்வொரு சாதி,சமயம்,மதம் போன்ற மனித வாழ்க்கை நெறி முறைகளை,கடைபிடித்து வருபவர்கள்,ஆன்மநேயம் ,மனித நேயம் இல்லாமல்  வெறிபிடித்த மிருகங்கள் போல் செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள். மேலும் கொள்ளை  வினை(திருட்டுத்தனம் ) கூட்டு உறவாக உள்ளனர் .அந்த கூட்டத்தில் உரைக்கின்ற கலைகளும் ,கள்ளத்தனமான காட்சிகளும்,கதிகளும்,விதிகளும்,பதிகளும் அதில் காட்சிதரும் கடவுளர்களும் எல்லாம் குழைந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள் போல்,சித்தரித்து உள்ளார்கள்,உள்ளன என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகிறார் .

அதற்கும் மேலாக வேதங்கள் ,ஆகமகங்கள் ,புராணங்கள்,இதிகாசங்கள் அனைத்தும், இந்திர மாயா ஜாலங்கள் போல் உள்ளன அவரவர்களும் அவரவர்,ஆன்மீக தலைவர்கள் எழுதிய நூல்கள் மட்டும்தான் உண்மை என்றும்,  மற்றவர்கள் எழுதிய நூல்கள் பொய் என்ற கோணத்தில்,கண்மூடித் தனமாக கடைபிடித்து ,பேய்பிடித்த பித்துப் பிள்ளை விளையாட்டுகள்  என உணராமல் பல பல பேதங்கள் உற்று அங்கும், இங்கும், எங்கும் போரிட்டு,சண்டை இட்டு அழிந்து வீண் போய்  கொண்டு உள்ளார்கள் .என்பதை தெளிவு படுத்தி உள்ளார் வள்ளல் பெருமான்அவர்கள்.

மேலும் இறைவனுடைய அடியார்கள்,அவதாரங்கள்,தூதுவர்கள்,தீர்க்க தரிசிகள் என்று சொல்லப்படும் ஆன்மீக வாதிகள்  எல்லாம், உண்மை தெரியாமல் உளறிக் கொண்டு உள்ளார்கள்.மேலும் ஆன்மீகம் என்ற பெயரில் கடவுள் உண்மைகளையும்,ஆன்மாவின் உண்மைகளையும்,அவற்றால் பெரும் சக்தி வாய்ந்த அருள் உண்மைகளையும்,  மறைத்து ,உண்மைக்கு புறம்பான தத்துவங்களை,கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும்,சொர்க்கம் என்றும்,நரகம்,பரலோகம் என்றும் ,பெயரிட்டு ,இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து ,உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்,

கடவுளுக்கு உடலும்(உடம்பு ) உயிரும் உண்டா ?

தெய்வத்திற்கு கை,கால்,மூக்கு,வாய்,கண்,உடம்பு தலை,முதலியன் இருக்குமா ?என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள்,இஃது உண்மையாக இருப்பதாகவே...முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் (ஆதிசங்கரர் ,இராமானுஜர்,காமகோடி பீடாதிபதி,இன்னும் பலபெரியவர்கள் ) என்று பெயர் வைத்து கொண்டவர்களும்,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கிறார்கள்.உண்மையாக இருப்பது போலவே பல பல உருவங்களைக் கடவுளாக படைத்து வைத்து விட்டார்கள்.

ஆனால் அவற்றை மறைத்தவன் ஓர் வல்லவன்,( வேத வியாசர்,வால்மீகி போன்றவர்கள் )அவர்கள்  மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவர்கள் பூட்டிய {மறைப்பை }பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை.இதுவரைக்கும் அப்படிப் பட்டவர்கள் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை,

அவர்கள் மறைத்து வைத்து இருந்த,உண்மைக்கு புறம்பான தத்துவங்கள் அனைத்தையும், உடைத்து பொடி பொடியாக்கி,உண்மையை  வெட்ட வெளிச்சமாகக் காட்டி ,மக்கள் மத்தியில் போட்டு உடைத்தவர் தான் நமது வள்ளல் பெருமான் அவர்கள்.பொய்யான சமய மதங்களை,பொய்யான தத்துவங்களை குழி தோண்டி புதைக்க வந்தவர்தான் நமது வள்ளலார் அவர்கள்.    

உலக மக்களை,... அந்த படு குழியில் இருந்து எடுத்து ,காப்பாற்ற வேண்டும் என்ற பெருங் கருணைக் கொண்டு ,உண்மைப் பொது நெறியாகிய,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்னும் பொது நெறியை, தனிப்பெரும் பனித நெறியைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற அவசியத்தால்,அவசரத்தால்,... மெய்ப் பொருளாகிய இயற்கை உண்மையான இறைவர் என்னும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்!,ஓர் மனித உருவம் தாங்கி இவ்வுலகத்திற்கு வருகிறார் .அவர்தான் நமது அருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்கள். அவர்கள் இந்த உலகத்திற்கு  வந்ததின் அவசியத்தை பல பாடல் வழியாக தெரியப் படுத்துகின்றார்.

இறைவன் வருவிக்க உற்ற பாடலை பாருங்கள் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந் திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

இவ்வுலகத்திற்கு வள்ளலார் மூலமாக உண்மைப் பொது நெறியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்ற பெயரில்,அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தோற்றுவித்து உள்ளார், என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.அறிந்து கொண்டும் வருகின்றார்கள்.மேலும் அம் மெய்ந் நெறியைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும்,உலகப் பொது நெறி ,அனைவருக்கும் பொதுவான  மார்க்கமாகும். வள்ளலார் என்னும் மனிதன் தோற்றுவிக்க வில்லை ,வள்ளலார் என்னும் உடம்பில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அமர்ந்து செயல்பட்டுக் கொண்டு தோற்றுவித்து உள்ளார் என்பதை,சன்மார்க்க அன்பர்கள் முதலில் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.பின்பு மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு
வருநெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங் கொண்டு அருளிப்
பெருங் கருணை வடிவினோடு வரு தருணம் இதுவே
கருநெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்
கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

என்கிறார் வள்ளலார் ...இந்த உண்மையினால் .யாருக்கும் கலக்கமோ ,தயக்கமோ,பயமோ,வருத்தமோ வேண்டாம். என்னுடைய சகோதர ஆன்மாக்கள் என்ற முறையில் ஒருமையினால்,உரிமையினால்  உண்மைகளை வெளிப் படுத்துகிறேன் .ஆண்டவர் எனக்கு அருளை வாரிவழ்ங்கிக் கொண்டு உள்ளார் .அந்த அருளை நீங்களும் பெற்றுக் கொள்வதற்கு யாதொரு தடையும் இல்லை,நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்  எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும் ..ஆதலால் நீங்கள் அனைவரும் சாதி,சமய,மத நெறிகளை விட்டு உண்மை நெறிக்கு வாருங்கள் என்று உலகில் உள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார் .நானும் சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியைப் பெற்றேன்,நீங்களும் எளிதில் பெறலாம்  என்கிறார் வள்ளல் பெருமான் .

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வானாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

என்னும் பாடல் வாயிலாக உறுதிப் படுத்துகிறார் .

இனிமேல் இந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய உண்மை மெய் நெறியின் வழியாகத்தான் உலக மக்கள் அனைவரும் வரவேண்டும்.வந்தாக வேண்டும் .வேறு உண்மை நெறியோ ! உண்மையான மார்க்கமோ ! இதை விட்டால் வேறு வழி எதுவும் இல்லை என்கிறார் வள்ளலார்.

மேலும் வள்ளலாருக்கு இறைவனே நேரில் வந்து... தான் இருக்கும் இடத்தையும் இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கும் இடத்தையும்  உண்மையான அருட்பெரு வெளியையும் காண்பித்து ,அங்கு இருந்து தான் அருட்சக்தி எங்குமாய் பூரணமாய் விளங்கிக் கொண்டு இருப்பதையும் .அனைத்து அண்ட கோடிகளும்,பிண்டப் பகுதிகளும் ,அதன் உள்ளே நிகழ்ந்த பற்பல பொருள் திரள்களும் ,விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் மெய் அறிவு ஆனந்தம் விளங்க, எதுவும் அழியாது,அதன் அதன் அறிவுக்குத் தகுந்தால் போல் விளங்கிக் கொண்டு உள்ளவர் நான் ஒருவரே !நானே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ! என்பதை, வள்ளலாருக்கு தன்னை ஆறுமுகப் படுத்திக் கொள்கிறார்.அவரே (அருட்பெருஞ்ஜோதி ) நேரில் வந்து காட்டியதால் அறிந்து கொண்டேன் என்கிறார் . .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது ;-- என்னுடைய உண்மை இருப்பிடத்தை உனக்கு மட்டும் தான் காண்பித்து உள்ளேன் ,அந்த இடத்தைக் கண்டவன் நீ ஒருவன் தான், அந்த இடத்திற்கு செல்வதற்கும்,மற்றும் உள்ள அனைத்து அண்டங்களுக்கும் தங்கு தடையின்றி செல்வதற்கும்,ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் காண்பதற்கும்,அனைத்தையும் செயல் படுத்துவதற்கும்,அனைத்து உயிர்களும் உம சொல் வழி கேட்டு நடப்பதற்கும் உண்டான  தகுதிப் பெற்று உள்ளவன், நீ ஒருவன்தான் என்பதாலும் ,என்னுடைய அருளை பரிபூரணமாக பெற்றவன் என்பதாலும்.,என்னுடைய உரிமைகள் அனைத்தும் பெற்றவன் '' நீ ஒருவன் தான்'' என் பிள்ளை,என் செல்லப்பிள்ளை, என் நல்லப்பிள்ளை,நான் சொன்னபடி  வாழ்ந்தும்,,மக்களுக்கு போதித்தும்,போதித்தது போல் எழுதி வைத்தும் உள்ளதால் என்னுடைய பூரண அருளை உமக்குத் தந்துள்ளேன் உன்னுடைய உடம்பை ஒளி உடம்பாக மாற்றி உள்ளேன்.இனிமேல் நீ இங்கு இருக்க வேண்டாம் என்னுடைய இடத்திற்கு அழைத்து செல்ல வந்துள்ளேன். நீ   என்னுடைய சொந்தப் பிள்ளை என பல பெயரிட்டு அழைத்து செல்கிறார் இறைவன் .

இறைவனே வந்து வள்ளலாரை அழைத்து செல்வதைப் பார்த்து தேவர்களும்,மூவரகளும்,சித்தர்களும்,முத்தர்களும்,சத்தி சத்தர்களும், மற்றும்  மூர்த்திகளும்,யோகிகளும்,நிர்வாகத் தலைவர்களும்,ஞானிகளும், மற்றும் உள்ள கடவுளர்களும் ,அருளாளர்களும் அனைவரும் அதிசயிக்கின்றனர்,ஆச்சரியப் படுகின்றனர் என்கிறார் வள்ளல் பெருமான்.பாடலைப் பாருங்கள்.

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் கழிக்கும் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனி உனை நான் கை விடோம் என்றும்
மைபிடித்த விழி உலகர் எல்லாருங் காண
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !;----மேலும்  

உலக உயிர் திரள்கள் எல்லாம் ஒளிநெறி பெற்றிட
இலகும் ஐந்து தொழிலையும் யான் செய்யத் தந்தனை !
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக் அளித்தனை
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி !
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !
சுத்த சன்மார்க்கச் சுக நிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக  எந்தனை

இன்னும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.

அனைத்து ஆன்மீக அடியார்களும்,பெரியோர்களும் ,அருளாளர்களும்,கர்ம,யோக,ஞான சித்தர்களும்   வள்ளலாரைப் பார்த்து போற்று கின்றதையும் ,பாராட்டு கின்றதையும் ,வணங்கு கின்றதையும் வள்ளலாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இறைவனைப் பார்க்க முடியாமல் வள்ளலாரைப் பார்த்துப் போற்றுகின்ற,அளவிற்கு இறைவன் வள்ளலாருக்கு  அருளைக் கொடுத்து,உள்ளதை நினைந்து வள்ளலார் என்னே அதிசயம் !என்னே அதிசயம் !என்று ஆச்சர்யப் படுகிறார் .

நான் பாடிய பாடல்கள் அனைத்தும் இறைவன் சொல்லியது !

நானுரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை யன்றி
நானுரைக்கும் வார்த்தை யன்று நாட்டீர் நான் ..ஏனுரைப்பேன்
நான் யார் எனக்கு என வோர் ஞான உணர்வு வேது சிவம்
ஊநாடி நில்லா வுழி !

இயற்கை உண்மைத்  தனிப்பெரும் தெய்வம்,அருள் நடம் புரிகின்ற  நடராஜ பதியாகிய அருட்பெரும் ஜோதி ஆண்டவரே! என்னுடைய பாடல்களை எல்லாம் தன்னுடைய பாடல்களாக அணிந்து அருள்கின்றீர் .என்னே உங்கள் பெருங் கருணை என நெகிழ்ந்து,மகிழ்ந்து ,உணர்ந்து ,புணர்ந்து போற்றுகிறார்  வள்ளல் பெருமான !என்னே அவருடைய பெரும் தன்மை !, என்னே அவர் பெருங்கருணை !,என்னே அவருடைய தனிப்பெருங் கருணையான அரும் பெரும் அருள் அமுதம்! அந்த அளவிற்கு உண்மை ஒருபுறம் மறைந்து இருக்க,பொய்யான கற்பனைக் கடவுள்களை மக்கள் மத்தியில் பரப்பி உள்ளார்கள்.பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

உண்மைக் கடவுளின் உண்மையைத் தெரிந்து கொள்ளாத மதவாதிகள்.சமயவாதிகள்.எப்படிக் கடவுளைப் பின்பற்றி வழிபாடு செய்கிறார்கள் என்பதை பின்வரும் பாடல்கள் வாயிலாகத் தெரியப்படுத்துகிறார்.

கொள்ளை வினக் கூட்டு உறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையுங்
கள்ளமுறு அக் கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சி தரும் கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே
பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்ற மணி மன்றில்
தனி நடஞ் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே !

உலகத்தில் தோன்றிய மதவாதிகள் சமயவாதிகள் அனைவரும் உண்மைக்கு புறம்பான செய்திகளையே மக்களிடம் போதித்து  விஷத்தை விதைத்து விட்டார்கள்,அதனால் உலகம் முழுவதும் விஷம் பரவி விட்டது..அதனால் மக்கள் உண்மை தெரியாமல் பொய்யான கொள்கைகளை கடைபிடித்து,பொய்யான விஷத்தை உண்டு வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

கொள்கை என்பதும், வாழ்க்கை நெறி என்பதும்,இயற்கை என்னும் கடவுள் உண்மைகளை ,கடவுளால் கற்பிக்க பட்டது என்று மக்களுக்கு போதித்து உள்ளார்கள் .அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றன என்பதை அக்காலம் முதல் இக்காலம் வரை, மக்கள் அறிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு ஏற்று கொண்டு உள்ளார்கள் அவர்கள் காட்டிய பொய்யான  பாதையில்,பொய்யான நெறியில்,உண்மையான விபரம் தெரியாமல்,அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.அவை எல்லாம் உண்மையா?பொய்யா ? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.உணர வேண்டும் .அறிவால் அறிய வேண்டும் .அதனால்தான் மனிதனுக்கு உயர்ந்த அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பஞ்ச பூத உலகத்தை, அண்டத்தை, சூரியன் ,சந்திரன் நட்சத்திரம்,போன்ற கிரகங்களையும்,அதில் உள்ள பொருள்களையும், அதில் வாழும் உயிர்களையும்,மற்றும் உள்ள அணுத் தோற்றங்களையும்,அனைத்திற்கும் முக்கிய காரண காரியமாகிய ''ஆன்மாக்களையும்'' '''',தோற்றிவித்தும்,...வாழ்வித்தும் ....,குற்றம் நீக்குவித்தும்...,பக்குவம் வருவித்தும் ,...விளக்கம் செய்வித்தும் ....பெருங் கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெருந் தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர் ! என்பதை சத்திய அறிவால் அறிந்து கொள்ளாமல்,இந்த உலகத்தில் தோன்றிய சமய மதவாதிகள் பொய்யே மெய்யாக இருப்பது போல்,கற்பனை காவியங்களை  பாவனை செய்து படைத்து வைத்துள்ளார்கள் ,    

இன்று வரையில் வள்ளலாரைத் தவிர ,வேறு எவராலும் உண்மையான அருள் பெருவெளியை,அருட்பெருஞ்ஜோதியை, அங்கு செயல்படும் அருள் ஆற்றலை,அருள் சக்தியை,அங்கு இருந்து இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கும் ,உண்மையான இறைவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.உண்மையான அருள் ஆற்றல் என்னும் சக்தி ,யாரால் ? எங்கு இருந்து இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.அறிவியல் விஞ்ஞானி களாலும்,ஆன்மீக அருளாளர்  களாலும்.இன்றுவரை  கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..

இப்போது உலகில்,மக்களால் பேசப்படும், போற்றப்படும் .பெரிய மதங்களான இந்துமதம்,கிருத்தவ மதம் ,இஸ்லாம் மதம்,புத்தமதம்,போன்ற மதங்களும் ,அவற்றால் தோற்றுவித்த சமயங்களும்,சாத்திரங்களும் ,சாதிகளும்,சங்கற்ப விகற்பங்களும், எல்லாம் கற்பனையே ! இந்த உலகத்தில் உள்ள மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அறியாமையால் அழைத்து சென்று அழிக்கின்ற மதங்கள் இவைகளே யாகும்....மனித அறிவு மேம்பட்டு ஆன்ம அறிவை அறிந்து, அருள் அறிவினால் அறிகின்ற போதுதான் உண்மைகள்,தன்னைத்தானே விளங்கி வெளிப்படும் . என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள் .

மதம் என்றும் சமயம் என்றும்  சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும்
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்
பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்தனக்கே
வெட்ட வெளியாய் அறிவித்திட்ட அருள் இறையே
சதமென்றுஞ் சுத்த சன்மார்க்கப் பொதுவில்
தனி நடஞ் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே !

மதவாதிகள் சொல்லிய அனைத்து பொய்யுரை களையும் ,பொய் என்பதை உணர்த்தி தெளிவுபடுத்தி,அதில் செல்ல வொட்டாமல் தடுத்து நிறுத்திய கடவுளின் பெருங்கருணையை போற்றிப் புகழ்கின்றார் வள்ளலார்...மற்றும்  எந்த தடையும் இல்லாமல் வெட்ட வெளியாக உண்மையை அறிவித்த உன்னுடைய பெருமையை,பெருங்கருணையை எப்படி போற்றுவேன்.போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை என்பதை வள்ளலார் விளக்கம் அளிக்கிறார் .

அதுமட்டும் அல்ல உன்னுடைய உண்மையான பொது நெறி, ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறி'' என்பதையும் அறிந்தேன்.அந்த உண்மையை உலக மக்களுக்கு பறை சாற்றப் போகிறேன்.என்பதையும் அறிவிக்கிறார் .இந்த மார்க்கம் என்னுடைய மார்க்கம் அல்ல ! எல்லாம் வல்ல இறைவனுடைய மார்க்கமாகும் என்கிறார் வள்ளலார் .மேலும் இந்த மார்க்கத்தை அவசிய அவசரமாக தோற்றுவித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள்.

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடு மோர்
பவநெறி இதுவரை பரவியது அதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான்
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற என் அரசே
தனி நடராஜ என் சற்குரு மணியே !

என்றும்.

பேருற்ற உலகில் உறு சமயமத நெறி எல்லாம்
பேய்ப் பிடிப்பு உற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதமுற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாதபடி விரைந்து
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு
எணணற்க எனற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்குண ஆனந்த பர நாதாந்த வரை ஓங்கும்
நீதி நடராஜ பதியே !

உண்மைப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத் தனிநெறியை, மக்களுக்கு உணர்த்த வேண்டும்,போதிக்க வேண்டும் ,மக்கள் அதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்,மேலும் உணர்ந்து உணர்ந்து,நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பு நிறைந்து நிறைந்து பேரானந்த கண்ணீர் கொண்டு,ஆன்மாவில் இருந்து உற்றுப் போல் வெளியே வரும் அருளைப் பெற்று, ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் கொண்டு,பெருஞ் சுகமான, மகிழ்ச்சியான,மரணம் இல்லாத பேரானந்த பெருவாழ்வு வாழ வேண்டும்.அகில உலக அனைத்து மக்களும் பெற வேண்டும் எனற, பெருங் கருணையோடு ''அருட்பெருஞ் ஜோதி'' ஆண்டவர் வள்ளலாரிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து உள்ளார் . .

சத்திய தருமச்சாலை !

வள்ளல் பெருமான அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆணைப்படி, வடலூரில்  1865,ஆம் ஆண்டு,.. முதன் முதலில் ''சமரச வேத சன்மார்க்க சங்கம்'' என்று பெயர் வைத்து சங்கம் நடந்து வரும் காலத்தில் ,சில மாதங்கள் கழித்து ''ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ''என்று பெயர் மாற்றம் செய்கிறார் அந்த சங்கத்தின் பெயரால் சங்கம் நடந்து வருகையில் ... 23...5....1867,ஆம் ஆண்டு ஏழைகளின் பசிப் பிணியை  போக்க சத்திய தருமச்சாலையை தொடங்கி வைக்கிறார் .தருமச்சாலை திறம்பட செயல்பட்டுக் கொண்டு வரும் காலத்தில்,..உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியான, ஒரு பொதுவான கடவுள்  வழிபாட்டு முறையை உருவாக்க திட்டமிடுகிறார்,அச்செயலுக்கு இறைவனுடைய அனுமதியைப் பெறுகிறார் .இறைவனுடைய முழு அனுமதியைப் பெற்று ''ஞானசபை''யைக்  கட்டத் தொடங்குகிறார் .

ஞான சபை !

1871,ஆம் ஆண்டு வடலூர்.. ஊர் மக்களின் உதவியால் 80,..என்பது காணி நிலம், பெறப்பட்டுஅதன் மத்தியில் எண்கோண வடிவமுள்ள ஒரு ஞான சபையை, கட்டத் தொடங்கி 25...1....1872,,ஆம் ஆண்டு நிறைவு செய்கிறார்.அந்த நாளில் ஞான சபை முதல் தைப்பூச் பூசை விழா நடந்தாக,வள்ளலாரே நடத்தி வைத்தாக எழுதி வைத்துள்ளார்கள்.அதற்கு திரு அருட்பாவில் எந்த ஆதாரமும் இல்லை .

1873,ஆம் ஆண்டு தமிழ் வருடம்,பிரமோதூத ஆண்டு ,மார்கழி மாதம் 21,..இருபத்தி ஒன்றாம் நாள் ஒரு அறிவிப்பை வள்ளலார் வெளியிடுகிறார் அதன் விபரம் வருமாறு .---

ஞான சபை விளக்கப் பத்திரிக்கை !

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !

இன்று தொடங்கி ,சபைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை''என்றும்,சாலைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை'' என்றும் சங்கத்திற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்றும்  பெயர்  வழங்குதல் வேண்டும் .என்று கட்டளை இடுகிறார் . அத்துடன் நிற்கவில்லை ஞான சபையை  எப்படி பாது காக்க வேண்டும் !யார் உள்ளே செல்ல வேண்டும் !,உள்ளே சென்று என்ன செய்ய வேண்டும்!,எது வரைக்கும்,எந்த காலம் வரை  அப்படி செய்ய வேண்டும் !,என்பதை மிகத் தெளிவாக எழிதி வைத்துள்ளார் .

சன்மார்க்க நம்மவர்கள்,மற்றும் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகிகள்   அவசியம் கவனிக்க வேண்டியதாகும்.வள்ளலார் ''தைப் பூச ஜோதி தரிசனம்''காட்டினார் என்பதும் முதற் பூச விழா தொடங்கி வைத்தார் என்பதும் தவறான செய்திகளாகும் .திரு அருட்பாவில் எந்த இடத்திலும் அதற்குண்டான ஆதாரங்கள் இல்லை .

வள்ளலாருடன் இருந்த அணுக்கத் தொண்டர்களில் ஒருவரான சபாபதி குருக்கள் செய்த சூழ்ச்சியாகும்.

மேலும் ஞான சபை விளக்கப் பத்திரிகையில் விளக்கமாக பதிவு செய்துள்ளார் நமது வள்ளல் பெருமான் அவர்கள்.

இன்று தொடங்கி ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது '''அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்''' ,ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும்.பித்தளை முதலிய வற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம்.மேலே ஏற்றுகிற ''குலோப்பு ''  முதலிய விளக்குகள் வேண்டாம் .
தகரக் கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதி உள்ள நம்மவர்கள் தேகசுத்தி ,கரணசுத்தி,உடையவர்களாய் ,திருவாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது ,எழுபத்தி இரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது ,உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும்.      

அடுத்து ;--நாலு நாளைக்கு ஒருவிசை காலையில் ,மேற்குறித்த சிரியரைக் கொண்டாவதும்,பெரியரைக் கொண்டாயினும் ,உள்ளே தூசு துடைப்பிக்கப் புகும் போது நீராடிச் சுத்த தேகத்தோடு கால்விரல்களில் வத்திரம் {துணி }சுற்றிக் கொண்டு புகுந்து ,முட்டிக் கால் இட்டுக் கொண்டு தூசு துடைப்பிக்க செய்ய வேண்டும்.விளக்கு வைக்கின்ற போதும்,இங்கனமே செய்விக்க வேண்டும்.

விளக்கு வைத்ததற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதுக் குட்பட்ட சிறுவரும் ,எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியரும் பொருள் ,போகம்,இடம்,போகம்,முதலியவற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய் ,தெய்வ நினைப்பு உள்ளவர்களாய்,அன்பு உடையவர்களாய் இருத்தல் வேண்டும் ,விளக்கு வைக்கும் போதும் தூசு துடைக்கும் போதும் ,நம்மவர்களில் நேர்ந்தவர்கள் .புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும்.

யாரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே புகுதல் கூடாது,ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருத்தல் கூடாது.அத்திறவு கோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி பொற்சபைக்குள் வைத்து ,அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தான காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.

என்பதை ஞானசபையின் விளக்கப் பத்திரிகையில் அழுத்தம் திருத்தமாக எழுதி வைத்துள்ளார் .''அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்''என்பதை நாம் கவனிக்க வேண்டும், இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது
என்ன ? இதனுடைய விபரம் அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன் .

வள்ளலாரின் உண்மைப் பொது நெறி !

வள்ளலாரின் முடிவான முக்கிய கொள்கை யான,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்ற பொதுவான தனி நெறியானது என்ன என்றால் , அவரது முடிவான கொள்கையானது அவருடைய முந்தைய கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.அவர் சமயத்தின் மீது வைத்திருந்த பற்றை முழுதும் பற்று அற கைவிட்டு விட்டு ஒரு புதிய வழியை கண்டு பிடித்து அவ் வழிக்கு ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்று பெயர் வைத்து உலகிற்கு வெளிப் படுத்தி உள்ளார் .

அவர் இளம் பருவத்தில் சமயத்தில் பற்று வைத்து பாடிய சமயம் சார்ந்த பாடல்கள் பாடியதற்கு காரணம் ,தனக்கு அப்போது ''கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது ''என்கிறார் வள்ளலார் .அவர் சொல்லியது .

சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ''ஒருவரே''என்பது அவர் கண்ட ''அருட்பெருஞ்ஜோதி "'ஆண்டவர் என்பது அவர் கண்ட உண்மையாகும்.

தான் கண்ட கடவுள் உலகில்,சாதி,சமயம்,மதம் போன்ற சாத்திர ,புராண ,இதிகாசங்களில் ,வந்ததாக சொல்லுகின்ற பலவகைப் பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுளர் ,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல என்பதை திட்டவட்டமாக 12...04...1871,ஆம் ஆண்டு தன்னுடைய அறிவிப்பின் மூலமாக அறிவித்துள்ளார் .

அந்த ஒருவரே ஆகிய கடவுளை நாம் அடைவதற்கு ,உண்மையான ஆன்ம அறிவு , உண்மையான கடவுள் பக்தி,உண்மையான உயிர் இரக்கம்,உண்மையான அன்பு,உண்மையான தயவு,உண்மையான கருணை ,உண்மையான பொது நோக்கம், மற்றும் திரிகரண அடக்கம்,முதலிய நற்குண ஒழுக்கங்களையும்,உண்மை உரைத்தல் இன்சொல்லாடல்,உயிர்களுக்கு உபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் கடைபிடித்து ,''சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகி இருத்தல் வேண்டும் .என்கிறார் வள்ளலார் .
மேலும் அவர் வெளிப்படுத்தியது !

இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது!,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர் களானால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்றால் பெற்றுக் கொள்ளவில்லை .நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லஷ்யமே என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டது என்றாலோ ,அந்த லஷ்யம் தூக்கி விடவில்லை.என்னை இந்த இடத்திற்குத் தூக்கிவிட்டது யாதெனில் ;--அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார் என்று ''சத்திய பெருவிண்ணபத்திலும் ''எத்தேவரையும் ,நின் சாயையாய்ப் பார்த்தேன் அன்றித் தலைவா வேறு எண்ணியது உண்டோ ''எனவும் .

''தேடியது உண்டு நின்து உரு உண்மை " என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்து இருக்கின்றேன்.மேலும் அவர் தெரிவித்த ''உண்மைப் பெருநெறி ''பொது நெறி ஒழுக்கம் யாதெனில் ,''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக''.என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றி விட்டது ,அது யாதெனில் தயவு,''தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது .என்பதை தெளிவு படுத்தி உள்ளார் நமது வள்ளல் பெருமான் அவர்கள்.

அன்பு,தயவு,கருணை என்னும் சாதனத்தை கடைபிடித்து,...என்னை ஏற்றிவிட்டது யாதெனில்  தயவு என்னும் ''கருணை '' தான் என்னை மேலே ஏற்றிவிட்டது, என்கிறார் .கருணை என்னும் ஒரே சாதனைத்தால் மட்டுமே கடவுள் என்னும் உண்மையை அறிந்து ''இறை அருள்'' பெற்று பேரின்ப பெருவாழ்வு என்னும் ''மரணம் இல்லாப் பெருவாழ்வை ''பெறமுடியும் என்கிறார்.

அன்பு,தயவு,கருணை ,என்னும் வளர்ச்சிக்கு,விருத்திக்கு,எது தடையாக இருக்கிறது என்றால் சாதி,சமயம்,மதம் போன்ற கட்டுப்பாட்டு ஆசாரங்கள்,தடையாக உள்ளன .எனவே மேபடி ஆசாரங்களை முழுதும் விட்டு ஒழித்து ,சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கம் வருவித்துக் கொள்ள வேண்டும்.என்பதே வள்ளலார் காட்டிய உண்மைப் பொது நெறியாகும்.

சாதி,சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார் வள்ளலார் .

மேலும் வள்ளலார் காட்டிய தனி நெறியானது,எல்லா சாதி, சமய,மதம்,போன்ற மார்க்கங் களுக்கும்,உண்மைப் பொது நெறியாக விளங்குகின்றது.மற்ற மார்க்கங்களுக்கு விரோதமான மார்க்கம் அல்ல !அந்நிய மானதல்ல,அனநின்னிய மானதாகும்  என்பதையும் விளக்குகிறார் எல்லா மார்க்கங்களும் இதனுள் அடங்கி உள்ளன என்கிறார்.இதில் உள்ளது வேறு எதிலும் இல்லை,வேறு எதிலும் இல்லாதது இந்த மார்க்கத்தில் உள்ளன என்கிறார் .அதனால்தான் உலகின் உண்மைப் பொது நெறி ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய '' நெறியாகும் ,                

சன்மார்க்கத்தின் முக்கிய கொள்கைகள் !

 நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லஷ்யம் வைத்துக் கொண்டு இருந்த ,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷ்யம் வைக்க வேண்டாம்,ஏன் என்றால் ,அவைகளில் ஒன்றிலாவது உண்மையை தெரிவிக்காமல் தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தின் உடைய உண்மை இன்ன தென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .

மேலும் ;--சைவம்,வைணவம்,முதலிய சமயங்களிலும் ,வேதாந்தம் ,சித்தாந்தம்,{கிருத்தவம்,இஸ்லாம்,)முதலிய மதங்களிலும்,லட்சியம் வைக்க வேண்டாம் .அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழுஉக் குறியாக குறித்து இருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.அவ்வாறு பயிலுவோமே யானால் நமக்கு காலம் இல்லை.

ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் ஏனெனில் ,அவைகளிலும் அவ் அச்சமய மதங்களிலும் அற்ப பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே அல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய ,''இயற்கை உண்மை ''என்னும் ஆன்மா அனுபவத்தைப் பெற்று கொள்ளு கின்றதற்கு முடியாது.ஏனெனில் நமக்கு காலம் இல்லை .என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .

மேலும் ஒரு விளக்கம் தந்துள்ளார் !

நாம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடத்தில் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி உள்ளார் .

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !இது தொடங்கி எக்காலத்தும் ''சுத்த சன்மார்க்கத்தின் ''முக்கியத் தடையாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,வருணம்,ஆசிரமம்,முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனத்தில் பற்றாத (பதியாத) வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை ''எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !தேவரீர் திருஅருட் பெருங் கருணைக்கு வந்தனம்  ! வந்தனம் !

இந்த விண்ணப்பத்தை ஒவ்வொரு நாளும் வழிபாட்டுக் காலத்தில் சன்மார்க்க அன்பர்கள் சொல்லிக் கொண்டே உள்ளார்கள் .ஆனால் அவர்கள் சாதி,சமயம்,மதம் போன்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்க்களை விட்டு விட்டார்களா என்றால்,அப்படி யாரும் விட்டுவிட்டதாக தெரியவில்லை ,இனிமேலாவது சிந்தித்து செயல்படுங்கள்..பற்றிய பற்றுகள் அனைத்தும்,பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுங்கள்.பயன் அடைவீர்கள்.

மேலும் , வள்ளலார் சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது ,நேர்மையானது,ஒளிவு மறைவு இல்லாதது ,அருளால் சொல்லப் பட்டது என்பதை உணர்ந்து நாம் எல்லவரும் ,உலக உண்மைப் பொது நெறியாக விளங்கும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் ''கொள்கைகளை கடைபிடித்து, ஆன்மநேய ஒருமைப் பாட்டுடன் வாழ்வோம். உலகில் உள்ள அனைத்து ஆன்மாக் களையும் நம்மவர்களாக ஆக்கிக் கொள்வோம்.துன்பம்,துயரம்,அச்சம்,பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் நலமுடன் வாழ்வோம்.

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன்;--கதிர்வேலு.

மேலும் வளரும் ;--
       .