வெள்ளி, 31 ஜனவரி, 2014

சுத்த சன்மார்க்க மரபு !


சுத்த சன்மார்க்க மரபு !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாம்  நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில்.;--

எல்லா அண்டங்களையும் உலகங்களையும் உயிர்களையும் பொருள்களையும் ,தத்துவங்களையும், சத்தி சத்தர்களையும், கலைகளையும்,செயல்களையும்,இச்சைகளையும்,ஞானங்களையும்,
அனுபவங்களையும், பயன்களையும்,மற்றை எல்லாவற்றையும்,

தமது திருவருட் சத்தியால் ;--தோற்றுவித்தல் ,வாழ்வித்தல் ,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும் எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும், எல்லாம் உடையவ  ராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை கடவுள் ஒருவரே !

''அருட்பெருஞ் ஜோதியர்'' என்றும்,..சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் {அருட்பெருவெளி }அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .என்ற உண்மையை அறிந்து உலக மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்... நமது தாயினும் சிறந்த தயவு உடைய திரு அருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள் .

மனிதப்பிறப்பு !

மனித ஜீவர்களாகிய நாம் .உண்மை கடவுள் ஒருவரே ஆகிய அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரை அறிந்து, அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வாகிய ''மரணம் இல்லாத பெரு வாழ்வாகிய சுத்த பிரணவ ஞான தேகத்தை பெற்று '' வாழாமல் பலவேறு கற்பனைகளால் பலவேறு சமயங் களிலும்,பல்வேறு மதங் களிலும் ,பல்வேறு மார்க்கங் களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம் பிறந்து பிறந்து,  இறந்து இறந்து , அவத்தை வசத்தர் களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து  பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து,வின்போயினோம்,வின்போகின்றோம்.

ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் வின்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று  நற்செய்கை உடையவர்களாய் ,எல்லா சமயங்களுக்கும்,
மதங்களுக்கும், மார்க்கங் களுக்கும்,உண்மைப் பொது நெறியாக விளங்கும்

சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும்,பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ...மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு,சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ..

ஓர் ஞானசபையை,சித்திவளாகம் என்னும் இச்சன்னி தானத்திற்கு அடுத்த உத்தர ஞான சிதம்பரம்,அல்லது ஞான சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதி புரத்தில் ,தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ..,''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருளித் திருவிளையாடல் செய்து அருள்கின்றோம் "' ..என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெரும் தயவுடைய நமது கருனையாங் கடவுளாகிய அருமைத் தந்தையார் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிபடுத்துகின்றார் ....

நமது அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பல வாற்றாலும் பிரசித்திப்பட வெளிப் படுத்தி அருட்பெருஞ் ஜோதி சொருபராய் ..அப்பெருங் கருணை வள்ளலாரது உடல்,பொருள்,ஆவிகளைக் கொண்டு பொற்சபை,சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்தருளி ,அறிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்து அருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலம் கொண்டு அருள் அரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்து அருள்கின்றோம் என்னும் திரு குறிப்பை வெளிப்படுத்து கின்றார் .

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், வள்ளலார் வசம் ஐந்தொழில் வல்லபத்தையும்,அருள் அரசாட்சியும் அளித்து உள்ளார் .உலக மக்களை எப்படியாவது திருத்தியாக வேண்டும் என்றும் ...அதுவும் வெகு வேகமாக திருத்த வேண்டும் என்றும்.உன்னால்தான் இதை செய்ய முடியும் என்பதால் அம்பலத்து அரசாட்சி பொறுப்புகள் அனைத்தும் ஒப்படைக்கின்றேன் என்று  ஆணை இடுகின்றார்.

இறைவன் அனுமதியுடன் ஆணையை சிரமேற் கொண்டு வடலூரில்  ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற அமைப்பை உருவாக்குகின்றார் .அதற்கு தலைவர்  அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்தான் என்று பெயர வைக்கின்றார். வழி நடத்துபவர் வள்ளல்பெருமான்.

இறைவனை தெரிந்து கொள்வதற்கும்,இறைவனுடன் இணைவதற்கும் முதலில் ஒழுக்கம் வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு சமரச சுத்த சன்மார்க்க  சங்கத்தின் வழியாக முதலில் ஒழுக்கங்களைப் போதிக்கின்றார் .

ஒழுக்கம் நான்கு வகை !

மனித ஜீவர்களாகிய நாம் இறைவன் அருளைப் பெறுவதற்கு ,இறைவனால் தோற்று விக்கப் பட்ட ''சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பெரும் நெறியாகிய நான்கு ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டுவது அவசியமாகும் ''.அந்த ஒழுக்கங்கள்,..இந்திரிய ஒழுக்கம்,...கரண ஒழுக்கம்,,...ஜீவ ஒழுக்கம்,..ஆன்ம ஒழுக்கம்,என்பவைகளாகும்,அவற்றைப் பற்றி திருவருட்பா ஆறாம் திருமுறையில் ''மெய் மொழியும் ஒழுக்கமும் '' என்ற தலைப்பில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சுத்த சன்மார்க்க மரபு !

சுத்த சன்மார்க்க மரபு என்ன ? என்பதை வள்ளலார் மிகவும் வலியுறித்தி பதிவு செய்துள்ளார்..

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவேதகும் அறிவு
மலம் ஐந்தும் வென்ற வல்லபமேதனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலேமெய்த் தொழிதலாகும்  \
இந்நான்கையும் ஒருங்கேவியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எலாம் வல்ல சித்தாகி நிறைவான வரமே இன்பமாம்
மண்ணும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு 
என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்தேற்றி
அருள் செய்த சிவமே
சிற்சபையில் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜபதியே !

என்னும் பாடல் வாயிலாக வள்ளல்பெருமான் மக்களுக்கு சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்ன என்பதை தெளிவு படுத்தி உள்ளார்,

சாகாத கல்வியைக் கற்றுக் கொள்வது !.
கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதியர்  என்பதை அறிவால் அறிந்து கொள்வதே உண்மையான அறிவு !
ஆணவம்,மாயை,கன்மம்,மாமாயை,பெருமாயை.என்னும் ஐந்து மலங்களை வெல்லும் வல்லபத்தை பெறுவது !
மரணத்தை வென்று ஐந்தொழில் செய்யும் ஆற்றலைப் பெரும் தொழிலை இறைவனிடம் இருந்து பெறுவதே சிறந்த தொழிலாகும்.!

மேலே கண்ட நான்கையும் கைவரப் பெற்று உலகம் எல்லாம் உள்ள அணைத்து ஜீவராசிகளிடத்தும் கருணையும் இரக்கமும் பெற்று, ஆண்டவரிடத்தில் அன்பும் காதலும் கொண்டு எல்லாம் வல்ல பூரண சித்தியைப் பெறுவதே (மரணம் இல்லாப் பெருவாழ்வு } எவ்வகையிலும் அழிக்க முடியாத இன்பமாம்.! அதுவே பேரின்பமாம் !

அதாவது....சாகாக்கல்வி, ..உண்மை அறிவு ,...மலம் ஐந்தும் வெல்லும் வல்லபம்,...மெய்த்தொழில்,....அருட் சித்தி பெரும் பேர் இன்பம் .இவை பெறுவதுதான் சுத்த சன்மார்க்க மரபாகும்.

இதுவே ''சுத்த சன்மார்க்கத்தின் மரபு '' என்பதை வள்ளலார் கடைபிடித்து  வாழ்ந்து, அனுபவித்து தான் பெற்ற அனுபவத்தை   மக்களுக்கு போதிக்கின்றார்.

மரணம் !

இறைவன் மனிதப்பிறப்பு கொடுத்ததின் நோக்கம் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருப்பதற்கு அல்ல ,மனிதப் பிறப்பு ஒன்றினால் தான் இறைவன் அருளைப் பெற்று, மரணத்தை வென்று இறைவனோடு சேரமுடியும் சேரவேண்டும்  என்பது இறைவனுடைய சட்டமாகும்.

மரணம் என்பது இயற்கை என்று நினைத்து கொண்டு இருந்தோம்,மரணம் என்பது இயற்கை அல்ல,! நாம் செய்யும் தவறான செய்கையாலும் தவறான வழிபாட்டாலும் ,தவறான வாழ்க்கை முறையாலும், அறியாமையாலும் தான் மரணம் வருகின்றது என்பதை வள்ளல்பெருமான் திருஅருட்பாவில் பதிவு செய்கிறார்.

தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுள நாண நான் சாதலைத் தவிர்த்தேன்
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழி நீ என்னோடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க
ஜோதி என்று ஓதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் ஜோதி கண்டு ஆடேடி பந்து.

என்று விளக்கம் தந்து உள்ளார். ''சுத்த சன்மார்க்க மரபு ''என்பது உண்மையான இறைவனைக் கண்டு.அன்பெனும் பிடியுள் அடங்கி  அன்பு என்னும் காதல் கொண்டு,அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் மார்க்கமே ''சுத்த சன்மார்க்கத்தின் மரபு''  என்பதாகும்.

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி
நோவது இன்று புதியது அன்றே என்றும் உலதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே !

சாவதும் பிறப்பதும் போன்ற பாவச்செயல்கள் என்னும் நோய் , உலகம் தோன்றி மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே நடந்து கொண்டு வருகின்றது.இந்த நோயை நீக்குவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே முயுமே தவிர  வேறு எந்த இறைவனாலும் முடியாது,எந்த வழிபாட்டாலும் முடியாது.,தவம்,தியானம், யோகம் போன்ற செய்கையாலும் முடியாது, என்பதை அறிந்து ,சுத்த சன்மார்க்க மரபின் வாயிலாக தெளிவு படுத்துகிறார் .

பேருபதேசம் என்னும் பகுதியில் !

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள் .

நீங்கள் அனைவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள். நம் நம்முடைய நிலை எப்படிப் பட்டது,நமக்குமேல் நம்மை இயக்குகின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப் பட்டது என்று விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இவ் விசாரணையில் இருந்தால் நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டு இருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத் திரை முதலில் நீங்கிவிடும்.அது நீங்கினால் மற்ற திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப் பட்டது என்றால் கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டும் என தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும் நமது குறையை உன்னியும், இவ்வண்ணமாக இருக்கின்ற போதும்,படுக்கின்ற போதும்,இடைவிடாதும் ,இவ் அக விசாரத்தோடும்,ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.

விசாரம் !

விசாரம் என்பது,பரம்,அபாரம்,என்று  இரண்டு வகையாக இருக்கின்றது.இவற்றில் பரம் ...பரலோக விசாரம் ,அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல ..பரலோக விசாரமே விசாரமாகும்.இவ்விசார நிலையில் இருந்தால் .ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல்.நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடிக் கொண்டு  இருக்கின்ற பச்சைத் திரையாகிய இராகாதிகளை விசார அதி உஷ்ணத்தால் நீக்கிக் கொள்ளலாம். மற்ற உஷ்ணத்தால் நீக்க முடியாது .

அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும்.அதை மனித தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது.அந்த விசாரத்தைவிட ஆண்டவரை தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும்,கோடி கோடி பங்கு ,பத்துக்கோடி பங்கு அதிக உஷ்ணம் உண்டாகும் ,யோகிகள் வனம்,மலை,குகை,முதலிய இடங்களில் சென்று நூறு ,ஆயிரம்,முதலிய வருடங்கள் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள் நமக்கு அவை தேவை இல்லை என்கிறார் வள்ளல்பெருமான். இதுவே ..புற செய்கைகளை செய்யாமல் அகத்தில் உள்ள ஆன்மாவை இடைவிடாது தொடர்பு வைப்பதே சுத்த சன்மார்க்க மரபாகும்.

நாம் கடைபிடிக்க வேண்டுவது !

நாம் நாமும் ..இதுவரையில் பார்த்தும் ,கேட்டும்,லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம்.ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது வெளிப்படையாக தெயவத்தை இன்னபடி என்றும்,தெயவத்தின் உடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

அணு அளவாவது தெரிவிக்காமல், பிண்ட லஷ்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில் ;--கைலாயபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்திய லோகாதிபதி என்றும்,பெயரிட்டு ,இடம்,,,வாகனம் ...ஆயுதம்.... வடிவம்...ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகவே சொல்லி இருக்கின்றார்கள்.

தெய்வத்திற்கு கை ..கால்...உடம்பு முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்.இஃது உண்மையாகவே இருப்பதாகவே ..முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்.ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை என்கிறார் வள்ளலார்.

உண்மையை மறைத்து பூட்டியவன் ஓர் வல்லவன் என்கிறார் ...அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை என்கிறார் . .இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார்  .நான் உடைத்து விட்டேன் என்று சொல்லாமல் சொல்லுகின்றார் வள்ளலார் / இனிமேல் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்.கவலைப்பட வேண்டாம் ,துன்பப் படவேண்டாம் என்கிறார். .மேலும்  சாதி,சமயம்,மதம் போன்ற எதனினும் லஷியம் வைக்க வேண்டாம் .நீங்கள் அவற்றை விட்டு விடுவதால் உங்களுக்கு எந்த நட்டமும் இல்லை.அதையும் மீறி சாதி, சமய மத வழிபாட்டில் பற்று வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டு இருக்கின்ற உண்மையான பற்றுப் போய்விடும்.

உண்மையான ஆண்டவரிடத்தில் வைத்த லட்ஷியம்(பற்று ) போய் விட்டால் நீங்கள் அடையப் போகின்ற பெரிய ஆன்ம லாபம் போய்விடும் .அதனால் மரணத்தை வெல்லும் முக்கிய லாபம் போய்விடும்.

அதேபோல் சைவம் வைணவம் முதலிய சமயங் களிலும், வேதாந்தம், சித்தாந்தம்,முதலிய மதங்களிலும் பற்று  வைக்க வேண்டாம்.ஏன் எனில் ;--நமக்கு காலம் இல்லை,மேலும் இவைகளுக்கு எல்லாம் சாஷி நானே இருக்கின்றேன்.நான் முதலில் சைவ சமயத்தில் பற்று வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு அவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது.

அதைப் பற்றி நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.அந்த பற்று எப்படிப் போய்விட்டது.? பார்த்தீர்களா ? அப்படி பற்று  வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை.நான் பாடி இருக்கின்ற திருஅருட்பாவில் அடங்கி இருக்கின்ற பாடலையும், மற்றவர்கள் பாடியப் பாடலையும் பொதுவான சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும்.ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் ,அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது என்கிறார் வள்ளலார்.

வள்ளல்பெருமானுக்கு  அற்ப அறிவு என்பதில்லை ,மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் மக்களுக்காக அப்படி சொல்கிறார்.தான் எழுதிய சமய மத பாடல்கள் குற்றம் உடையது என்று வள்ளலாரைத் தவிர வேறு எவரும் சொன்னதாக வரலாறுகள் இல்லை,என்பதை அறிய வேண்டும்.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் தான் இது, ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள் என்றால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? பெற்றுக் கொள்ளவில்லை.

நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த பற்றே  என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டது என்றாலோ ,அந்த பற்று என்னை தூக்கி விடவில்லை.என்னை இந்த இடத்திற்குத் தூக்கி விட்டது யாதெனில்.;--அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார் என்று சத்திய பெரிய விண்ணப்பத்திலும் ,''எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே யன்றித் தலைவா வேறு எண்ணியதுண்டோ ''எனவும்,'' தேடியதுண்டு நின் திருஉரு உண்மை ''என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும்.விண்ணபித்து இருக்கின்றேன்.

மேலும் ஆண்டவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில் ''கருணையும் சிவமும் பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் தயவு,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது என்று மக்களுக்கு ''சுத்த சன்மார்க்க மரபை'' பற்றி தெளியாக பதிவு செய்கிறார் நமது வாளால்பெருமான் அவர்கள்.

கருணை உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார் .கருணை ஒன்றுதான் கடவுளை அடையும் துவாரமாகும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .
  
ஆன்மநேய ஒருமைப்பாடு !

நமக்கு தயவு வரவேண்டுமானால் ஒருமை வரவேண்டும்.அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும்.தயவு வந்தால் தான் பெரிய நிலைமேல் ஏறலாம் .இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கிறது.அது அந்த ஒருமை யினாலே தான் வந்தது .நீங்களும் என்னைப் போல் ஒருமையுடன் இருங்கள் .

அந்த ஒருமை என்னவென்றால் எல்லா உயிரகள் இடத்தும் இறைவன் இருக்கின்றார் .என்பதை உணர்ந்து எல்லா உயிர்களையும்  தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவர்களாகி அனைத்து உயிர்களையும் இயக்கும்  ஆன்மாவே {உள் ஒளி } கடவுளாகக் கருதி ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ்வதே மனித பண்பாகும் என்பதை வலியுறித்தி உள்ளார் .ஆதலால் எந்த உயிர்களையும் எக்காரணத்தைக் கொண்டும் கொலை செய்யக் கூடாது.அதன் புலாலை உண்ணக் கூடாது.என்பதை மிகவும் வலியுறித்தி உள்ளார் .

அனைத்து உயிர்களும் இறைவன் வாழும் ஆலயம் !

எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ !

எவ்வுயிரும் பொது எனக் கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த
செவ்வியர் தஞ் செயல் அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வை இலாத் திருநெறி  அத்திருவாளர் தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்விய தென் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ !

கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர்போல் கண்டு ஞானத்
தெரு நெறியில் சுத்த சிவ சன்மார்க்கப் பெரு நீதி செலுத்தா நின்ற
பொருள் நெறி சற்குணம் சார்ந்தப் புண்ணியர் தம் திருவாயால் புகன்ற
வார்த்தை
அருள் நெறி வேதாகமத்தின் அடிமுடிசொல் வார்த்தைகள் என்று அறை
வராலோ !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பராபரனின் உண்மையான இருப்பிடத்தை கண்டு களித்து ஆனந்தம் கொண்டு,அருள் பூரணத்தை அடைந்து  சுத்த பிரணவ ஞான தேகத்தைப் பெற்று, மரணத்தை வென்று ,ஐந்தொழில் வல்லபத்தை இறைவனிடம் பெற்று ,ஐந்தொழிலை நடத்திக் கொண்டு இருக்கும் நமது திருஅருட் பிரகாச வள்ளல்பெருமானை வாழ்த்தி வணங்குவோம்...மரணத்தை வெல்வதே சுத்த சன்மார்க்க மரபாகும்

சுத்த சன்மார்க்க மரபின் கொள்கைகள் !

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

சிறு தெய்வ வழிபாடுகள் செய்யவேண்டாம்.!

தெய்வங்கள் பெயரால் உயிர் பலி செய்யவேண்டாம்.!

சாதி,சமய,மதம் முதலிய வேறுபாடுகள் வேண்டாம்!

எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.!

ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

புராணங் களையும் ,இதிகாசங் களையும்,சாத்திரங் களையும் நம்ப வேண்டாம்!

இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !

கருமாதி ,திதி,முதலிய சடங்குகள் வேண்டாம் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம் !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம் !

எதிலும் பொது நோக்கம் வேண்டும் !

மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவும் .அனைவருக்கும் வந்தனம் .

ஆன்மநேயன்
ஈரோடு செ ,கதிர்வேல் .
அருட்பா ஆராய்ச்சி மையம்
108,c, நந்தா இல்லம்
வையாபுரி நகர் ,
வள்ளலார் வீதி
46,புதூர் அஞ்சல்
ஈரோடு 638002 ,,,
cell ;--9865939896,...land line;--0424 2401402 ,
    
.  


ஞாயிறு, 12 ஜனவரி, 2014

புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !

புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !

தமிழர் திருநாளான புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் என்பது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல .உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது.,ஏன் என்றால் தமிழ் என்பது இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மொழியாகும்..மாதங்களும் மனித வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் வகுக்கப்பட்டதாகும்.தமிழ் நாட்டில் இருந்து படைக்கப்பட்டதால் தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.தமிழும் தமிழால் வகுக்குப்பட்ட பண்பாடுகளும் உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாகும்.மனிதனாக பிறந்தவர்கள் எப்படி மனிதனாக வாழவேண்டும் என்பதை வகுத்து தந்த மொழி தமிழ் மொழியாகும்.

எல்லா உயிர்களுக்கும் உணவு மிகவும் முக்கியமானதாகும்.அதனால்தான் ''உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ,மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்'' .என்பது சான்றோர்களின் வாக்கு .உழவுத்தொழில் இல்லை என்றால் மனித உயிர்கள் வாழ்வதற்கு வழி இல்லை .ஆதலால் நாம் வணங்குவதும் வாழ்த்துவதும் உழவுத் தொழில் செய்யும் மனிதர்களையாகும்

வருடம் முழுவதும் உழைக்கும் விவசாயிகளுக்கு தைமாதம் என்பது உழவர்களுக்கு ஒய்வு காலமாகும்.ஆதலால் தைமாதத்தில் மக்கள் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதை வெளிப்படுத்த தைப்பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது..''தைபிறந்தால் வழிபிறக்கும்'' என்பது மறுபடியும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதாகும்.

வருகின்ற பொங்கல் நாளில் புத்தாடை உடுத்தி பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் .

அனைத்து உயிர்களுக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மநேயன்;--கதிர்வேலு ,ஈரோடு .

திங்கள், 6 ஜனவரி, 2014

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் !

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் !

ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று வடலூரில் உள்ள ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில்'',  ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

வடலூரில் காட்டப்படும் ஜோதி தரிசனம் வித்தியாசமானது

இந்த ஆண்டு 17--1--2014, ஆம் தேதி காலை 6.00,மணிக்கும் 10.00,மணிக்கும்,நண்பகல் 1.00,மணிக்கும்,இரவு 7.00,மணிக்கும் 10.00,மணிக்கும் ,மறுநாள் காலை 5.00,மணிக்கும் ,ஆக ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

அன்று காலை நேரத்தில் கிழக்கே சூரியன் தோன்றுவதும் ,மேற்கே சந்திரன நிறைவு பெறுவதும் ,மத்தியில் ஜோதி தெரிவதும்,ஒரே நேரத்தில் மூன்று ஜோதியைக்  காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுவே வடலூரின் தைப்பூச ஜோதி தரிசனத்தின்  தனிசிறப்பாகும் .

ஏழு திரைகள் என்பது மனிதனின் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகளாகும்.அந்த திரைகள் நீங்கினால்தான் கடவுளைக் காணமுடியும் என்பது வள்ளலாரின் கொள்கையாகும்.அதனால் வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.,

ஜோதி தரிசனத்தை காண்பதற்கு தமிழ் நாட்டில் இருந்தும் ,மற்ற மாநிலங்களில் இருந்தும்,வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் காண வருகின்றார்கள் .

அங்கே சாதி,சமயம்,மதம்,இனம்,நாடு,போன்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தர மக்களும் வந்து ஜோதி தரிசனம் கண்டு மனமகிழ்ச்சியுடன் செல்வார்கள்.மேலும் அங்கே அபிஷேகம் ஆராதனை,,மேளம்,தாளங்கள் போன்ற எந்த சமய, மத ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் எதுவும் இல்லாமல் ஜோதி தரிசனம்  மட்டுமே காண்பிக்கப்படும் .ஒத்தாரும் ,உயர்ந்தாரும் ,தாழ்ந்தாரும்  எவரும் ஒருமையுடன் வந்து வழிபடும் இடமாகும்.

வடலூர் வரும் பல லட்சக்கணக்கான மக்கள் அனைவருக்கும், வடலூரில், வள்ளலார் தோற்றுவித்த தருமச்சாலையிலும் , சன்மார்க்க சங்கங்களிலும் இடைவிடாது உணவு வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.மக்கள் அனைவரும் தங்களுடைய பசியை ஆற்றிக் கொண்டு ஜோதி தரினம் பார்க்க வேண்டும் என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையாகும் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பது வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க தனிப்  பெரும் நெறியாகும்.,அதை அனைத்து சன்மார்க்க சங்கங்களும் கடைபிடித்து நிறைவேற்றி வருகிறார்கள்.இவைகள் யாவும் வடலுரின் தனிச்சிறப்பாகும்.

அனைத்து உயிர்கள் இடத்தும் ஈரமும், கருணையும், இரக்கமும்,ஆண்டவர் இடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் வழிபாட்டு முறைகளாகும்,

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பது வள்ளலாரின் அழுத்தமான செய்தியாகும்.கடவுள் அன்பும், கருணை உள்ளவர் நாமும் கருணை உள்ளவர்களாக மாறினால்தான் இறைவன் அருளைப் பெறமுடியும்.வேறு எந்த செயல்களாலும் கடவுளின் அருளைப் பெறமுடியாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையின் செய்தியாகும் .

ஜோதி தரிசனம் !

பலகோடி அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கும் ஆற்றல் மிக்க ஒரே ஒரு சக்தி, அது ''அருட்பெருஞ்ஜோதி ''என்னும் அருள்
ஒளியாகும், அதுவே கடவுள் என்று சொல்லப்படும் ''அணு துகள் '' என்பதாகும்.அந்த அணுத்துகள் இல்லை என்றால் அண்டங்கள் உலகங்கள்,உயிர்கள்  இயங்காது .

அவர் (அவர் என்பது ஒளி ) எப்படி உள்ளார் எங்கு உள்ளார் என்பதை வள்ளல்பெருமான் கண்டு,களித்து அருளைப் பெற்று  அனுபவித்து மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் .

கடவுள் ஜோதிமயமானவர் !

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும்,

எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லா சத்தர்களையும்,எல்லா கலைகளையும்,எல்லா பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும்,எல்லா தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும் எல்லா ஞானங்களையும்,எல்லா பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,

மற்ற எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் ,தோற்றுவித்தல்,..வாழ்வித்தல்,..குற்றம் நீக்குவித்தல்,..பக்குவம் வருவித்தல்,..விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவர் என்றும் ,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும் ,சர்வ காருணயர் என்றும் சர்வ வல்லபர் என்றும், எல்லாம் உடையராயத் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத

தனிப்பெரும் தலைமை கடவுள் ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ,அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் ..

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய (மனிதர்கள் ) நாம் அறிந்து. அன்பு செய்து அருளை அடைந்து ,அழிவில்லாத சத்திய சுகப்பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக வடலூர் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத்  தோற்றுவித்து '' அதன் மத்தியில் இயற்க்கை விளக்கமாக ஜோதியை (ஒளியை ) வைத்துள்ளார் வள்ளல்பெருமான்.

ஆதலால் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும்  ஒவ்வொரு வருடமும் தைபூசத்தன்று ஏழு திரை நீக்கி  ''ஜோதி  தரிசனம்'' காட்டப்படுகிறது.,

எல்லா நாட்களையும் விட ''தைப்பூசம்'' என்னும் நாள்  அருள் நிறைந்த நாள் என்பதாலும் ,இறைவன், அன்று எல்லா உயிர்களுக்கும் நிறைவான அருள் வழங்கும்  நாள் என்பதாலும், இறைவன் உலகை நோக்கி வருகிறார் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

மேலும் முக்கியமானது ,இறைவன் உலகை நோக்கி வருவதால்,அந்த நாள் உயிர்களுக்கு நிறைவான இன்பம் தரும் நாள் என்பதாலும்  இயற்கையில் உள்ள கிரகங்கள் யாவும் தன்னுடைய பணிகளை (வேலைகளை ) செய்யாமல் உயிர்களுக்கு நன்மையே செய்யும் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது அதனால்தான் ''தைபிறந்தால் வழி பிறக்கும்' என்றார்கள் நம் முன்னோர்கள் .

தைப்பூசத் திருநாளில் மனிதர்களாகிய நாம் இறைவனுடைய அருளைப் பெற்று மகிழ்ச்சியான இன்பம் தரும் நாளாகக் கருதி வடலூர் ஜோதி தரிசனம் கண்டு இறைவனுடைய அருளைப் பெற்று ,நீண்ட ஆயுள்,நிறைந்த செல்வம்,அழியாப்புகழ் பெற்று நீடுழி வாழ்வோம்.

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !.....வள்ளலார் .

ஆன்மநேயன்;--செ,கதிர்வேல் ,ஈரோடு ,
கைபேசி ;--9865939896,      

வெள்ளி, 3 ஜனவரி, 2014

மனித பிறப்பு !

மனித பிறப்பு !

இவ்வுலகில் தோன்றிய மனிதன் ,அறம்,பொருள்,இன்பம் வீடு என்னும் நான்கையும் ,நான்கு காலங்களில் முழுமையாக அனுபவித்து,பின் அனைத்தையும் பற்று அற விட்டு இறைவனுடைய அருளைப் பெற்று வாழும் தகுதி படைத்தவன் மனிதன் என்பவனாகும்.

அதனால்தான் மனித பிறப்பு எல்லாப் பிறப்புகளிலும் உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்பதாகும். ..

அரை குறையாக வாழ்பவர்கள் மீண்டும் மீண்டும் உலகில் உள்ள  மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசைகள் மீது பற்று வைத்து உலகை விட்டு வெளியேற முடியாமல்  ,பிறந்து பிறந்து ,இறந்து,இறந்து திரிந்து திரிந்து ,அவஸ்தை வசத்தர்களாகி அலைந்து கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும், இந்த மாயை என்னும் உலக ஆசைகளை அடக்க முடியாது ,ஆசையை விடமுடியாது,ஆசையை முழுமையாக அனுபவித்து,பின் இவ்வளவுதான் இந்த உலகம்  என்பதை அறிவு பூர்வமாக அறிந்து,உணர்ந்து,வெறுப்பு உண்டாகிய பின்தான் ஆசையை ஒழிக்க முடியுமே தவிர வேறு வழிகளால் ஒழிக்க முடியாது.

 அதன் பின்  அதே ஆசையை இறைவன் மேல் செலுத்த வேண்டும்.மறுபடியும் .மாயையால் உண்டாக்கிய  உலகிலுள்ள  பொருள்கள்  மீது ஆசைவராது.

பொருள் மீது ஆசை வைத்த மனிதன்,அதை வெறுத்து ''அருள் '' மீது ஆசை வைக்க விரும்புகிறான் .அந்த அருள் எங்கு எப்படி கிடைக்கும் என்பதை தேடுகிறான் .அதனால் மனித பிறப்பு என்பது உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்பதாகும்.

பொருளை சம்பாதித்து சலித்துப் போன மனிதர்கள்,.. இறைவன் அருளைப் பெறுவதற்கு நம் முன்னோர்கள் ,சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்னும் பக்தி,யோகம்,ஞானம் என்னும் ஆன்மீக வழிமுறைகளை மக்களுக்கு காட்டியும், வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார்கள் .ஆனால் அவர்கள் காட்டிய பாதைகள் எல்லாம் கரடு முரடான,உண்மைக்கு புறம்பான பாதைகளாகவே இருந்தன.அதனால் மனிதர்கள் முழுமையான இறை அருளைப் பெற முடியாமல் திண்டாடிக் கொண்டு உள்ளார்கள்.

துன்பம் இல்லாமல் வாழ்வதற்கும்,நீண்ட நாள் வாழ்வதற்கும் பிறப்பு இல்லாமல் வாழ்வதற்கும், பலப்பல பக்தியும்,தவமும்,தியானமும் ,யோகமும், செய்து  உடம்பை வருத்தியும்,உணவு இல்லாமலும் ,மூச்சுப் பயிற்சி செய்தும்,மேலும் பற்பல உழைப்பும் முயற்சியும் எடுத்து,சமாதி நிலையும் ,ஜீவ சமாதி நிலையும் அடைந்து  ஆண்டவர் இடத்தில் அருளைக் கேட்டு அற்ப சுகத்தைப் பெற்றார்கள்.

இறந்தால் பிறப்பு உண்டு என்பதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை...நீண்ட காலம் பிறப்பு இல்லாமல் வாழலாம் ,ஆனால் அந்த காலம் முடிந்தால் மீண்டும் பிறப்பு உண்டு என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் அறிந்து தெரிந்து பெற்ற அருளை மக்களும் அடைய வேண்டும் என்பதற்காக வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,போன்ற கற்பனைக் கலைகளை,கதைகளை  எழுத்து மூலமாகவும்,ஆலய வழிபாட்டு மூலமும்,பக்தி,தியானம்,தவம்,யோகம், மூலமாகவும் நம்பகத் தன்மையாக உலகில் படைத்து உள்ளார்கள்,அதையும் உண்மை என்று நம்பி இதுவரையில் கடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள் .அதனால் மக்கள் ஏதாவது பயன் அடைந்து உள்ளார்களா என்றால் எந்த பயனும் அடையவில்லை.என்பதுதான் தெரிய வருகிறது.

இதை அறிந்த இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,உண்மையை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்ற காரணத்தைக் கருதி காரிய உருவமாக பக்குவமுள்ள ஆன்மாவை இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கின்றார்.அந்த ஆன்மாதான்,சின்னம்மை என்னும் பெண்ணின் உடம்பில் புகுந்து உயிராகி ,கருவாகி,உருவாகி மனிதப் பிறப்பு எடுத்து வந்த     வள்ளல்பெருமான் என்பவராகும். அவர்தான் மனிதப் பிறப்பு எடுத்த மனிதர்களுக்கு உண்மையைப் போதிக்க வந்த உத்தமராகும் ,உருவம்
 தாங்கி இந்த பூவுலகத்திற்கு வந்தவராகும். .

வள்ளல்பெருமான் !

வள்ளல்பெருமான அவர்கள் வந்துதான் இந்த உலகிற்கு ஒரு மாபெரும் உண்மையை மக்களுக்குத் தெரிவித்து உள்ளார். அவர் சொல்லால் எழுத்தால் தெரிவித்தது மட்டும் அன்றி ..மனிதனாகப் பிறந்தவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதையும் வாழ்ந்து காட்டி உள்ளார்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்றும். அனைத்து ஆன்மாக்களும் அனைத்து உயிர்களும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் என்பதை மக்களுக்குத் தெரியப் படுத்தினார்

மக்களுக்கு அருளைக் கொடுக்கும் தகுதி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு மட்டும்தான் உள்ளது, மனிதர்களால் தோற்றுவித்த அறிமுகப் படுத்திய தத்துவ தெய்வங்களால் எந்த நன்மையையும் இல்லை, அந்த தெய்வங்களால் அருளைக் கொடுக்க முடியாது என்பதை,உலகுக்கு பறை சாற்றினார் .

உலகில் உள்ள ,தாவரம்,ஊர்வன,பறப்பன,நடப்பன,நரகர் ,அசுரர் ,மனிதர் போன்ற ஏழு விதமான உயிர் உள்ள உடம்புகளும், அதை இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாக்களும் ''அருட்பெருஞ்ஜோதி ''ஆண்டவரின் அருட்பெருட் வெளியில் இருந்து வந்த ஆன்மாக்களாகும் அந்த ஆன்மாக்கள் மீண்டும் அங்கு செல்வதைத்தான் வீடு பேறு என்று சொல்லி வைத்தார்கள் .

உலகில் வாழ்வதற்கு வந்த ஆன்மா ,உயிர் எடுத்துதான் வாழ வேண்டும் என்பது ஆண்டவர் கட்டளையாகும்.உயிர் எடுத்தால் ,உயிர் செயல் படுவதற்கு உடம்பு என்னும் கருவிகள் கொடுக்கப் படுகிறது அந்த கருவிகளான,மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,உள்ளம் என்னும் கரணங்களும்,கண்,காது,மூக்கு,வாய்,உடல் என்னும் ,இந்திரியங்களும்,கொடுக்கப் படுகின்றன.அதைக் கொண்டுதான் ஆன்மா இந்த உலகில் வாழ்கின்றன.என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகிறார் .

பல பிறவிகள் எடுத்த ஆன்மாவுக்கு இறுதியில் மனித பிறப்பு கொடுக்கப் படுகிறது.மனிதப்பிறப்பின் நோக்கம்,உண்மையான இறைவனை அறிந்து அந்த  இறைவனிடம்  அருளைப் பெற்று ஆன்மா ,எங்கு இருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டும் என்பது இறைவன் ஆணையும் கட்டளையுமாகும் .ஆனால் ஆன்மாக்கள் இந்த உலகத்திற்கு வந்து பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து மனித தேகம் கிடைத்தும்,அருளைத் தேடும் மனிதன் பொருளைத் தேடிக் கொண்டு இருக்கின்றான்.

பொருளைத் தேடுவதால் இன்பமும், துன்பமும் சூழ்ந்து ,இறுதியில்  மரணம் அடைந்து  கொண்டே இருக்கின்றான் மனிதன்.அதைத்தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்கள். மரணம் வந்தால் மறுபடியும் பிறப்பு உண்டு என்பதை அறியாதவர்களாக வாழ்ந்து கொண்டே உள்ளார்கள்.

மறுபடியும் பிறப்பு இறப்பு இல்லாமல் வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளார் நமது அருட்தந்தை வள்ளல்பெருமான்.அதற்கு ''மரணம்,இல்லாப் பெருவாழ்வு ''
என்று பெயர் வைத்துள்ளார்.

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

நாம் சுற்றுலாப் பயணமாக வாழ வந்த ,இந்த உலக வாழ்க்கைக்கு , நமக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மூன்று சுதந்திரம் கொடுத்துள்ளார்.அவை ஜீவ சுதந்திரம்,தேக சுதந்திரம்,போக சுதந்திரம்.என்பவைகளாகும்.இந்த சுதந்திரம் நமக்கு இறைவன் கொடுத்தது என்பது தெரியாமல்,நாமே பெற்றுக் கொண்டதாக நினைந்து வாழ்ந்து கொண்டுள்ளோம்.

இந்த சுதந்தரத்தை கொண்டு ,அறம்,பொருள்,இன்பம் எனற உலக வாழ்க்கை வாழ்ந்து பின் பற்றிய பற்று அனைத்தும் பற்று அற விட்டு ,வீடுபேறு என்ற பேரின்ப நிலையை அடையவேண்டும் . இதுவே மனித வாழ்க்கையின் இலட்சியமும்,இலஷ்ணமுமாகும்.

இதற்கு மனிதன் செய்யவேண்டிய முக்கியமான காரியம்  என்ன வென்றால் .நமக்கு இறைவன் கொடுத்த முன்று சுதந்தரத்தையும்  இறைவனிடமே கொடுத்து விடவேண்டும்.அப்படி கொடுத்தது விட்டால் இறைவன் நம்மீது பற்று வைத்து கொள்வார் .அப்போது நமக்கும் இறைவனுக்கும் நேரடி தொடர்பு கிடைத்துவிடும் இடைத் தரகரான எந்தக் கடவுளும் நமக்கு தேவைப்படாது.

அடுத்து இறைவன் மீது தீராத அன்பு என்னும் காதல் கொள்ள வேண்டும்.அந்த காதல்,ஆசையாக, காமமாக,மயக்கமாக மாறி, மோகம் என்னும் இணைப்பு உண்டாக வேண்டும். அப்படி உண்டாவது கணவன் மனைவி உறவு  போன்றதாகும் .

ஆண் பெண் அனுபவிப்புது உடல் சுகம்,இறைவனும் மனிதனும் அனுபவிப்பது அருள் சுகம்.உடல் சுகம் அழிந்துவிடும் பிரிந்துவிடும்.அருள்சுகம் அழியாது பிரியாது.        

இறைவன் மீது அன்பு என்னும் ஆசைவைத்து அந்த அருள் சுகத்தை அனுபவித்தால், அந்த அருள் என்னும் திரவம் மனிதன் ஆன்மாவில் இருந்து சுரக்கும் ,அந்த அருள் சுகத்தை அனுபவித்தவன் ஆண்டவரை விடமாட்டான் .ஆண்டவரும் அவனை விடமாட்டார் .

அருள் கல்வியை கற்பிப்பது சாகாக் கல்வி என்று பெயர் வைத்துள்ளலார் வள்ளல்பெருமான் அவர்கள்.

சாகாக் கல்வி !

உலகத்திற்கு சாகாக் கல்வியை போதிக்க வந்தவர் நமது அருட்பிரகாச வள்ளல் ஒருவரே ! இதற்கு முன் வந்த அருளாளர்கள் இவ்வளவு தெளிவாக வெளிப்படையாக யாரும் போதிக்க வில்லை.''என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்பதோடு ,அழி உடம்பை அழியா உடம்பாக மாற்றும் வழியையும் சொன்னவர் வள்ளல்பெருமான் ஒருவரே ! சொன்னதோடு அல்லாமல் சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டியவரும் வள்ளல்பெருமான் ஒருவரே !

''உடற் பிணி அனைத்தையும் உயிர்ப்பிணிஅனைத்தையும்
அடர்ப்பற தவிர்த்த அருட்சிவ மருந்தே ! '' ...அகவல் வரிகள்

நமது உடம்பு அழிவதற்கு அறிகுறியாகத் திகழ்வது ,நரை,திரை,பிணி மூப்பு,என்னும் புறத் தோற்றமாகும்.அதற்கு உடற்பிணியின் வெளித் தோற்றமாகும்.அந்த தோற்றத்தையும் மாற்றி இளமையாக வாழமுடியும் என்பதை வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார் .

''என்றே என்னினும் இளமையோடு இருக்க
நன்றே தரும் ஒரு ஞான மாமருந்தே ''!...அகவல் வரிகள் ,

ஞான மருந்து என்பது அருள் என்னும் அமுதம் என்பதாகும்.!

வயது முதிர்ந்து மரணம் தருவாயில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் இறைவன் மீது உண்மையான அன்பும் உயிர்கள் மீது உண்மையான இரக்கமும் ,உண்மையான தயவும் ,உண்மையான  கருணையும் இருந்தால் அங்கே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
விளங்குவார்.

''எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் ஜோதி '' ! ...என்பார் வள்ளலார் . .

உடம்பிலே சுரக்கும் சுக்கிலம் என்னும் விந்து சக்தி சிறிய இன்பத்தைத் தரும்.அதற்கு சிற்றின்பம் என்று பெயர்,அது நீடித்து சுரக்காது.அது உணவிலே உண்டாவதாகும் .

அருள் என்னும் பரவிந்து சக்தி ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அவை இடைவிடாது சுரந்து கொண்டே இருக்கும். அதை அனுபவிப்பது பேரின்பமாகும்.அது தடை இல்லாமல் சுரந்து கொண்டே இருக்கும்.அவை பேரின்பமாகும்.அதற்கு சத்துநிறைந்த சித்துநிறைந்த ஆனந்தமாகும் அதுவே பேரின்பமாகும் .

அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும். இந்த பெருவாழ்வு அளவிட முடியாத இன்பத்தை தருவதாகும்.இதை அனுபவிக்க பிறந்தவன்தான் மனிதன்.

மனித பிறப்பு பேரின்பத்தை அனுபவிக்க கொடுக்கப்பட்ட பிறப்பாகும்.இதை உணர்ந்து அறிந்து வாழ்பவனே மரணத்தை வென்றவனாகும் அவனே மனிதன் என்பவன் .

கருணை .!

மனித ஆன்மாவில் உள்ள அருள் சுரக்க வேண்டுமானால் ''கருணை'' என்னும் கருவியால் மட்டுமே முடியும். மற்ற பக்தி,தவம்,தியானம்,யோகம் ,போன்ற எந்த செயல்களாலும் அருளைப் பெற முடியாது.

அருள் என்பது கடவுள் தயவு...கருணை என்னும் ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் தயவு..சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுவது போல் சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல் ,சிறிய தயாவாகிய ஜீவ காருண்யத்தைக் கொண்டு பெருந் தயாவாகிய கடவுள் அருளைப் பெறவேண்டும்.

மனிதனுக்கு அருளை இறைவனிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் சக்தி.ஆற்றல் ஏழை மக்களிடம்தான் உள்ளது ...ஏழை மனிதர்களே (ஜீவர்கள்)கடவுளாகும்
அதனால் கடவுள் இடத்தில் அன்பும் ,ஜீவர்கள் இடத்தில் இரக்கம் என்னும் கருணையும் காட்ட வேண்டும் .

அந்த ஏழைகளின் துன்பத்தையும்,துயரத்தையும்,அச்சத்தையும், பயத்தையும்,பசியையும்,போக்கு கின்றவர்களே கடவுளுக்கு பாத்திர மானவர்கள் ,அவர்களே கடவுளும் ஆவார்கள்.''கருணையும்,சிவமும் பொருள் எனக் காணும் காட்சியும் பெருக ''என்பது வள்ளல்பெருமான் வாக்கு அதை உண்மை என அறிந்து மனிதன் செயல்பட்டால் அருளை எளிதல் பெற்றுக் கொள்ளலாம்

இறைவனிடம் அருளைப் பெற்றுக் கொண்டவர்களே மனிதர்கள் !அருளைப் பெற்று மரணத்தை வென்று, மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கே கொடுக்கப் பட்ட தேகம்தான் மனித தேகமாகும் .

பேரின்பம் என்பதும்,பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதும்.மனிதனும் கடவுள் ஆகலாம் என்பதும், அனைத்தும் ஒன்றே என்பதை உணர்ந்து மனிதன் அழியாப் புகழ் என்னும் அருளைப் பெற்று வாழ்வதே மனிதப் பிறப்பின் நோக்கமாகும்.

ஆணவம்,மாயை,மாமாயை,பெருமாயை ,கன்மம்,என்னும் ஐம்மலங்கள் உயிரைப் பற்றிக் கொண்டு ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது.அந்த மலங்கள் நீங்கிய பின்தான் ''உயிர்க்கு ஆன்மா தெரியும் ''மறுபடியும் உயிருக்கு பிறப்பு கொடுக்காமல் அருளைக் கொடுத்து உயிரையும் ஊன உடம்பையும் ஒளிஉடம்பாக மாற்றி ஆன்மாவின் தன்மைக்கு அனைத்தையும்  தன்வசமாக மாற்றி சேர்த்துக் கொள்ளும்.அதுவே அருள் உடம்பாகும், அதுவே ஒளி உடம்பாகும் .அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

மனிதன் அருளைப்பெரும் நிலைகள் அந்த அருள் மனித உடம்பில் எவ்வாறு தோன்றுகின்றது,எவ்வாறு சுரக்கின்றது என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக அனுபவித்து மக்களுக்கு விளக்கி விளக்கம் தந்து உள்ளார்கள்

அமுத நிலைகள் !

முதல் அமுதம் ;--நாக்கு நுனியில் இனிப்புற்ற ஊற்று ஜலம் போல் இனிக்கும் இது பக்குவ ஞானத்தால் பெறுவதாகும்.

இரண்டாவது அமுதம் புவனா அமுதம்;--நாக்கு மத்தியில் இளகின சர்க்கரைப் பாகுபோல் இருக்கும் இவை பக்குவ கிரியையால் பெறுவதாகும்.

மண்டலா அமுதம் ;--நாக்கின் அடியில் குழம்பிய சர்க்கரை பாகுபோல் இருக்கும் ,இவை பக்குவ இச்சையால் பெறுவதாகும் .

ரகசியா அமுதம் ;--உள் நாக்கின் அடியில் முதிர்ந்த சர்க்கரை பாகுபோல் இருக்கும். இவை திரோபவத்தால் பெறுவதாகும்.

உண்ணாக்கு மேல் மகா இனிப்புள்ள மணிக்கட்டியாக குளிர்ச்சியாக இருக்கும் .இவை பக்குவ அனுகிரகத்தால் பெறுவதாகும்.இது மனித சுபாவத்தின் அனுபவமாகும் .

இந்த ஐந்து அமுதத்தை பூரணமாக உண்டவர்கள் என்றும் அழியாத தேகத்தை பெறலாம்.என்று வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார்.இதை பெறுவதற்கான முயற்சி செய்து, முயன்று வாழ்ந்து,இடைவிடாது  பழகி,  வாழ்க்கையில் வெற்றிப் பெற்று அருளைப் பெற்று மரணத்தை வெல்வோம். .

மேலும் அருளைப்பெரும் வாழ்க்கை வழிமுறைகளைப் பற்றி விரிவாக மேலும் சிந்திப்போம் .

மீண்டும் பூக்கும்,
ஆன்மநேயன்;--கதிர்வேலு ஈரோடு .