வியாழன், 26 ஏப்ரல், 2012

மெய் மொழியும் ஒழுக்கமும் ! பாகம் ,4,

மெய் மொழியும் ஒழுக்கமும் ! பாகம் ,4,வடலூரில் வள்ளலார் அவர்கள் -சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ,--சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை,--சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் .என்ற அமைப்புகளை நிறுவி --இவைகள் யாவும் உலக பொது அமைப்பாக செயல்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார் .

சத்திய ''தருமச்சாலை'',சத்திய ''ஞான சபை'' இவை இரண்டையும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய அன்பர்கள் மேற் பார்வையில் செயல் பட வேண்டும் ,பாது காக்கப் பட வேண்டும்,நிர்வகிக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளையாகும் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை பாது காக்கும்,உரிமை உடையவர்களின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் !

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம்,மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்று அறக் கைவிட்டவர்களும்;காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்களும்,கொலை புலை தவிர்த்தவர்களும்,ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் .

சுத்த சனமார்க்க லட்சிய அனுபவ விருப்பம் உடையவர்களுக்கு கனவினும் மண்ணாசை,கனவினும் பெண்ணாசை ,சுழுத்தியுனும் பொன்னாசை முதலிய மூன்றும் கட்டாயம் இருக்கக் கூடாவாம்.அதே போல் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை அனைவரும்  எக்காலத்தும், எவ்விடத்தும்,எவ்விதத்தும் ,எவ்வளவும் விலகாமல் நிறைந்து ஆன்மாவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் அப்படி உண்மையுடன் இருந்தால் அவர்களுக்கு செயற்கையால்.உண்டாகும் ,-மரணம் ,பிணி,மூப்பு,பயம்,துன்பம் --இவை முதலியவைகளை தவிர்த்துக் கொள்வார்கள்.அதாவது --செயற்கையாகிய குணங்களை நன் முயற்சியால் தடுத்துக் கொலபவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்,

அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக் கூடும்.பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெற மாட்டார்கள்.என்பதை சுத்த சன்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்களுக்கும் சங்கம் சாலை,சபையை கவனித்துக் கொள்பவர்களுக்கும்,அழுத்தமான கட்டளையை பிறப்பிக்கிறார் வள்ளலார் .

சாதவனே சன்மார்க்கி .--சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே யன்றி வேறில்லை ,சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்--சாகாதவனே சன்மார்க்கி ,என்று அழுத்தம் திருத்தமாக தெரியப் படுத்தி உள்ளார் .

வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ,சாலை,சபையைப் ,பாதுகாக்கும் உரிமை உடையவர்களின் நன் நடத்தையைப் பற்றி மேலே தெளிவாக பதிவு செய்து உள்ளார் .

1865,ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்கம் என்று ஆரம்பித்து பின் ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்று வழங்கி,பின் ஞானசபை தோற்றுவித்து
ஞான சபை விளக்கப் பத்திரிக்கை வாயிலாக ;--

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் .

இன்று தொடங்கி,சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்,சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்,சங்கத்திற்கு ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும் பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார் .

சங்கத்தின் வாயிலாக சாலை,சபை செயல்பட வேண்டும் என்றும் ,அதை வழி நடத்துபவர்கள் வள்ளலார் சொல்லிய ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் கட்டளை பிரப்பிக்ககிறார் .ஆனால் அவர் சொல்லியபடி யாரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களாக இல்லை என்பதை அறிந்து கொண்டு ,சாலையை லகுவாக நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு சபையை பூட்டி,சாவியை எடுத்துக் கொண்டு வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் என்ற ஊருக்கு சென்றுவிடுகிறார் ,

அங்கு வள்ளலார் மக்களுக்கு பல வகைகளில் பல முக்கிய செய்திகளை,விண்ணப்பங்களாக,வேண்டுகோளாக ,போதித்தது மட்டும் இன்றி எழுதியும் வைத்துள்ளார்கள்,பல பல, அற்புதங்களை செய்து பல உண்மைகளையும் உபதேசங்களையும்,சொல்லிக் கொண்டே வந்துள்ளார்

அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அற்புதப் பத்திரிகையும் வெளியிடுகிறார் ;

ஆண்டவரின் ஆணைப்படி ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் ,புனர்பூச நட்சத்திரத்தில் .உள் இருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து ''தடைபடாது ஆராதியுங்கள் ' இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம்,இனி கொஞ்சம் காலம் எல்லோரும்,ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,

நினைந்து நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழுங் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து எத்துதுநாம் வம்மீன் உலகயிலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருணம் இதுவே .

என்னும் இருபத்திஎட்டு பாசுரங்ககளில் அடங்கிய பாடலில் கண்டபடி ,தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் ,நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் ,இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொவோம்.

நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம்,பார்த்து அவ நம்பிக்கை அடையாதீர்கள்,ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் ,யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் ,என்னைக் காட்டிக் கொடார்,சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம் ,நாம் திருக்கதவை மூடிஇருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார் .

தாம் சொல்லியபடியே திருஅறைக்குள் சென்று உள்ளே தாள் போட்டுக் கொண்டு,வெளியேயும் பூட்டுப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார் அவர் சொல்லியபடியே அன்பர்கள் செய்கிறார்கள் ,.வள்ளலார் திருஅறைக்குள் சென்று சொல்லிய வண்ணம் இறைவனுடன் கலந்து விட்டார் .

வள்ளலார் மேட்டுக்குப்பம் திருஅறைக்குள் சென்ற செய்தி தமிழகம் முழுவதும் பரவி விட்டது.,அப்போது உள்ள கடலூர்{ஆங்கிலேயர் ஆட்சி } ஆட்சியாளருக்கு விபரம் அறிந்து அதிகாரிகளுடன் வந்து மேட்டுக்குப்பத்தின் திருஅறையை திறந்து சோதனை செய்கிறார்கள் , வள்ளலார் சொல்லியபடி வெறு வீடாகத்தான் இருந்தது .ஆதிகாரிகள் மக்கள் சொல்லியதை கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள் .உண்மையிலே வள்ளலார் மிகப் பெரிய அருளாளர் என்பதை ஒப்புக் கொண்டார்கள் .

மேலும் அதிகாரிகள் --வள்ளலார் ஏற்படுத்திய தருமச்சாலை ,ஞான சபையைப் பார்த்துவிட்டு தருமச்சாலையில் உணவளிக்க பணம் கொடுத்துவிட்டு,பயபக்தியுடன் விடைப் பெற்று சென்று உள்ளார்கள் எனபது செவிவழிச் செய்திகளாகும்.

அவர் சித்திப் பெற்றப் பின் மக்கள் கண்களில் நீர் வழிய அழுது புலம்பி கதறி,துடிதுடித்து வேதனை அடைந்தார்கள் .மனம் உடைந்தார்கள் இனிமேல் வள்ளலாரை எங்கு காண்போம் ,எப்படி காண்போம்,அவர் இல்லாமல் எப்படி வாழ்வோம்,என்று புலம்பி புலம்பி அழுது, ஓய்ந்து ,அவரவர்களும் அவரவர் ஊருக்கு சென்று விட்டார்கள் பின் என்ன நடந்தது என்பதை யாரும் அறிகிலர் .  

ஞானசபை ஜோதி தரிசனம் !

கொஞ்சம் காலம் கழித்து ,வள்ளலார் உடன் இருந்த சபாபதி குருக்கள் தனக்கு சாதகமாக ,வடலூரில் உள்ள சத்திய ஞான சபையை கைப்பற்றிக் ஜோதி தரிசனம் காட்ட ஆரம்பித்து உள்ளார் .,ஆரம்பித்ததுடன் அல்லாமல் ஞான சபைக்குள் உருவ வழிப்பாட்டு முறையும் கொண்டுவந்து விட்டார் ,இதை யாரும் அப்போது கண்டு கொள்ளவில்லை .அவர் செய்வதே பெரும் பாக்கியமாக கருதி விட்டார்கள் .

வள்ளலார் கொள்கைக்கு விரோதமாக அன்று முதல் 2010,ஆம் ஆண்டு வரை ஞானசபையில் சமயக் கோயில்களில் நடப்பது போன்ற வழிபாட்டு முறைகள் நடைப் பெற்றுக் கொண்டு வந்துள்ளன ,

வள்ளலார் சித்திப் பெற்ற பின்பு கொஞ்சம் காலம் சன்மார்க்க அன்பர்கள் தருமச்சாலையையும்,சங்கத்தையும்.நடத்தி வந்தார்கள்.அவர்களால் திறம்பட நடத்த முடியாமல் .அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டார்கள்,அரசாங்கம் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைத்து விட்டது,அறநிலையத்துறை நிர்வாகம் சமயக் கோயில்கள் போல் வடலூர் தெய்வ நிலையங்கள் என்ற பெயரில் நிர்வாகம் செய்து வருகிறது .

சங்கம் சாலை சபை ,உலகப் பொது அமைப்பாக இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கைகளாகும் .அதற்கு உண்டான ஆதாரங்கள் அவர் எழுதிய திருஅருட்பாவில் தெளிவாக உள்ளது.இதை சன்மார்க்க அன்பர்கள் பலமுறை அரசாங்கத்திடம் போராடியும் ,அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை .

அரசாங்கம் சங்கம் சாலை,சபையைத் திருப்பிக் கொடுத்தாலும் யாரிடம் கொடுப்பது என்பது கேள்விக் குறியாக உள்ளது,சன்மார்க்க சங்க அன்பர்களிடம் ஒற்றுமை இல்லை ,வள்ளலார் சொல்லிய ஒழுக்கம் நிறைந்தவர்கள் வெளியே வருவதில்லை ,மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ முடியா விட்டாலும்,வள்ளலார் கொள்கைகளை முற்றும் தெரிந்தவர்களும் எதிலும் பற்று இல்லாதவர்களும் ,மேலே குறிப்பிட்ட ஒழுக்கம் உடையவர்கள் -- மனிதன் மனிதனாக வாழும் தகுதி உடையவர்கள் வசம வடலூர் சங்கம் சாலை சபையை ஒப்படைக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.அவர்கள் மனித தரத்தில் சங்கம் சாலை ,சபையை நடத்துவார்கள்.

ஏன் என்றால் வள்ளலார் சங்கம் சாலை சபை தோற்றுவித்த நாள் முதல் இன்று வரை ,வள்ளலார் கருத்துப்படியும் ,கட்டளைப் படியும் செயல் படுகிறதா என்றால் இல்லை என்ற பதில்தான் அனைவருடைய உள்ளத்தில் இருந்தும் வருகிறது .

இதற்கு என்ன செய்வது .வள்ளலார் தோற்றுவித்த சங்கம், சாலை சபை, இதை எப்படி காப்பாற்றுவது என்பது அனைத்து சன்மார்க்க அன்பர்களின் வேதனை நெருப்பாக கனைந்து கொண்டு உள்ளது .

வடலூர் நிர்வாகம் அறநிலையத்துறை வசம உள்ளது ,அதில் அரசியல் வாதிகள் உள்ளே நுழைந்து கொண்டு தவறான பாதையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .அதற்கு அரசாங்கமும் ,அறநிலையத்துறையும் துணை போகின்றன ,இதை தமிழக முதல்வர் கவனிக்க வேண்டியது அவசியமும் அவசரமும் என்பதை இதன் மூலம தெரிவித்துக் கொள்கிறேன் .

தொடரும் ;--


   

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் !

வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் !

கடவுள் ஒருவரே !அவர் ஒளியாக உள்ளார் !

அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் 

உருவ வழிபாடான சிறு தெய்வ வழிபாடு கூடாது!

கடவுள் பெயரால் உயிர் பலி செய்யக் கூடாது!

உயிர்க் கொலை செய்யக்கூடாது,புலால் உண்ணக் கூடாது!

சாதி சமய,மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது !

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்!

ஏழைகளின் பசியைப் போக்குவதே கடவுள் வழ்பாடு !

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !

ஜீவ காருண்யமே பேரின்ப வீட்டின் திறவு கோல்!

வேதங்களும், புராணங்களும்,சத்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டாது !

இறந்தவர் புதைக்க வேண்டும் எரிக்ககூடாது!

கருமாதி,திதி முதலிய சடங்குகள் வேண்டாம்,!

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது!

சாகாதவனே சன்மார்க்கி,!

மரணம் என்பது இயற்கை அல்ல !அவை செயர்க்கையாகும் !

எதிலும் பற்று அற்றவனே துறவி ! தன்னை வெளியே காட்டாதவனே துறவி !

பொருள் இருக்கும் இடத்தில் அருள் இருக்காது !அருள் இருக்கும் இடத்தில அனைத்தும் இருக்கும் !

எதிலும் பொது நோக்கம் வேண்டும் .


ஆன்மநேயன் ;;கதிர்வேலு .

புதன், 18 ஏப்ரல், 2012

மெய் மொழியும் ஒழுக்கமும் !பாகம் --3,

மெய் மொழியும் ஒழுக்கமும் !பாகம் --3,


வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது .

வள்ளலார் ஜோதி தரிசனம் காட்ட சொன்னாரா ? என்ற கேள்வி சுத்த சன்மார்க்க அன்பர்கள் மத்தியிலே மனதிலே தோன்றும் சந்தேகமாக உள்ளது .வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் உள்ள பாடல்களிலும்,உரை நடைப்பகுதிகளிலும் எந்த இடத்திலும் அதற்கு உண்டான ஆதாரங்கள கிடையாது என்பது தெரிய வருகிறது..

வள்ளலார் அவர்கள் சுத்த சன்மார்க்கம் என்ற உலகப் பொது நெறியை மக்களுக்கு போதித்து ,வந்து உள்ளார் .வள்ளலார் காட்டிய நெறியானது ''ஞான நெறி''யாகும் ,ஞான மார்க்கமாகும் .அதாவது சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்.

பழனிக் கோயில் போன்ற ஆலயங்களில் தைப்பூச காலங்களில் சாமி தரிசனம் மிகக் கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவை பக்தி மார்க்கமாகும் .அவைப் போலவே வடலூரிலும்,தைப்பூசத்து அன்று ஆறு காலங்களிலும் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கிறார்கள் ,அங்கும் ஜோதி தரிசனம் பார்க்க மக்கள் குவிந்து விடுகிறார்கள் .இது சரியா ?தவறா ?என்பதை வள்ளலார்தான் பதில் சொல்ல வேண்டும் .

இருந்தாலும் நம் அறிவைக் கொண்டு நாம் சிந்திக்க வேண்டும்,

பக்தி மார்க்கம் என்பது வேறு !ஞான மார்க்கம் என்பது வேறு !பல கோடி ஆண்டுகளாக நாம் அனைவரும் பக்தி மார்க்கத்தில்தான் இருந்து வருகிறோம் .அதனால் நாம் அடைந்த பயன் யாது ? அதனால் நமக்கு கிடைத்த லாபம் என்னவென்றால் மரணம் என்பதுதான் .''தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்பார் வள்ளலார் ''நாம் வாழ் நாள் முழுவதும் தவறு செய்து விட்டு பின் மரணம் அடைந்து விடுகிறோம் ,இருந்தவர்களுக்கு செத்தவர்களைப் பற்றித் தெரியாது .செத்தவர்களுக்கு இருப்பவர்களைப் பற்றித் தெரியாது .இதுதான் நம் வாழ்க்கையின் லட்சணம் .

வள்ளலார் இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கம் என்ன என்பதை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .வள்ளலாரை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்,- எதற்க்காக அவரே சொல்கிறார் பாருங்கள் கேளுங்கள்.

பாடல் ;--

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

அடுத்த பாடல் ;--

பேருற்ற உலகில் உறு சமயமத நெறி எல்லாம்
பேய் பிடிப்பு உற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் முற்று அங்கும் இங்கும்
போருற்று இரந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனிதம் உறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
எருற்ற சுகநிலை அடைந்திட புரித நீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு
எண்ணறக என்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிற்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கும்
நீதி நடராஜ பதியே !

இப்படி பல பாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் .

வள்ளலார் தான் வந்த நோக்கத்தை எப்படி தெரியப் படுத்தி உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும் .உலகில் உள்ள சமய ,மத நெறிகள் எல்லாம் ,பேய் பிடித்தது போல் பைத்தக்கார தனமாக உண்மைக்கு புறம்பாக செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது ,உண்மைக்கு புறம்பாக கடவுள் நிலையை கதைகளாக்கி,கற்பனைகளாக சொல்லி வைத்துவிட்டு சென்று விட்டார்கள்,அதை உண்மை என்று நம்பி இந்த உலக மக்கள்.--உம்மதம் பெரியது ,எம்மதம் பெரியது ,உம்சமயம் பெரியது ,எம்சமயம் பெரியது ,உம்கடவுள் பெரியது,எம்கடவுள் பெரியது ,என்று போட்டிப் போட்டு, சண்டைப் போட்டு மாண்டு கொண்டு இருக்கிறார்கள் .

இனியும் காலதாமதம் செய்தால் வீணே அனைவரும் அழிந்து விடுவார்கள் ஆதலால் விரைவாக சென்று ,. புனிதமான உண்மைப் பொது நெறியான சுத்த சன்மார்க்க நெறியை உலகுக்குக் காட்டி, உண்மையான கடவுளின் மெய்ப் பொருளை உணர்த்தி அனைவரையும் காப்பாற்றி நலவழி படுத்தி ,பேரின்ப பெருவாழ்வில் வாழ வைக்க வேண்டும் .

இதுவே உமது முக்கிய பணியாகும் என்று இறைவன் வள்ளலாரை இந்த உலகத்திற்கு அனுப்பிவைக்கிறார் ..

வடலூர் ;--

வள்ளலார் வடலூரில் உண்மை பொது நெறியாகிய --சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ! சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ! என்னும் உலக பொது அமைப்பை நிறுவி உள்ளார்கள் .

அதை உணராத சன்மார்க்க சங்கத்தவர்களும்,அரசாங்கமும்,அறநிலையத் துறையும், பொது மக்களும், சமயக் கோயில்கள் போல் வழிபாட்டு முறையை செய்து கொண்டு வருகிறார்கள் .இவை முற்றிலும் தவறானதாகும். சன்மார்க்கம் என்ற பெயரில் சமயவாதிகள் செய்யும் சூழ்ச்சியாகும்

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையால் .சமயமும் ,மதமும் அழிந்து விடும் என்ற உணர்வால் இப்படி செய்து வருகிறார்கள்.,அவர்களுக்கு வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல் இப்படி பக்தி மார்க்கம் போல் செய்து வருகிறார்கள் .

பக்தி மார்க்கம் என்பது யாது ?

பக்தி என்பது ;--தத்துவ உருவங்களை வழிபாடு செய்வது பக்தி மார்க்கம் என்பதாகும் அதனால் மனநெகிழ்ச்சி ,மன உருக்கம் மட்டுதான் உண்டாகும் .அதனால் என்ன கிடைக்கும் என்றால் அழிந்து போகும்,மண்,பெண், பொன் போன்ற பொருள்கள் தான் கிடைக்கும் அதனால் பல,பல இன்பம் துன்பம் வந்து கொண்டே இருக்கும்.அதையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் வயது முதிர்ந்து நோய்வாய்ப் பட்டு தீராத துன்பத்தில் அழுந்தி இறுதியில் மரணம் வந்து அழிந்து விடுகிறோம் .இவைதான் பக்தியில் கிடைக்கும் சிறிய அற்ப இன்பமாகும்,இதற்கு சிற்றின்பம் என்று பெயராகும் .

பக்தியால் இந்திரியமும் ,கரணங்கள் மட்டும் மகிழ்ச்சி அடையும் .ஜீவனும் ,ஆன்மாவும் மகிழ்ச்சி அடைவதில்லை ,

அதற்கு வள்ளலார் தரும் பாடல் வருமாறு ;--

கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானுங்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் நீண்டே
திர்ணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்குஞ்
சித்திபுரம் என ஓங்கும் உத்தம சிற் சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தானாக்க எனது
தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே !

இந்த பாடலில் உள்ள உண்மைகளை நன்கு கவனித்தீர்கள் என்றால் பக்தி மார்க்கம் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளது என்பது விளங்கும் ..

கடலையும் ,உலகத்தையும்,வானத்தையும் ,தன்னுடைய அதிகாரத்தினால் ஆளும் அதிபதியாக இருந்தாலும்,மரணம் வரும்போது அதிகாரத்தினால் மரணத்தை தடுக்க முடியுமா ? மரணத்தை தவிர்க்க முடியாமல் வாழ்வதனால் என்ன பயன் ? அத்தனையும் விட்டுவிட்டு சென்று விடுகிறாயே !,இதற்காகவா மக்களை ஏமாற்றி தன் வசமாக்கி ஆட்சி புரிந்து கொண்டு இருந்தாய் ,உன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா ? உங்களையே காப்பாற்றி கொள்ள முடியாமல் வாழும் நீங்கள் எப்படி மக்களை காப்பாற்ற முடியும் .,சிந்திக்க வேண்டும்.

அற்ப சுகத்திற்காக வாழும் வாழ்க்கையை விட்டு ,ஜீவனையும் ஆன்மாவையும் காப்பாற்றும் வாழ்க்கை வாழ்வதற்கு,- ஞான மார்க்கமான சுத்த சன்மார்க்கத்திற்கு வாருங்கள் என்று அனைவரையும் அழைக்கிறார் வள்ளல் பெருமான் அவர்கள் ,

ஞான மார்க்கம் என்பது யாது ?

ஞான மார்க்கம் என்பதும் ,சுத்த சன்மார்க்கம் என்பதும் .ஒன்றேதான். இவை அருளைத் தேடும் மார்க்கமாகும்.அருள் எப்படிக் கிடைக்கும் ,அருளைப் பெருவதற்கு உண்டான வழி யாது என்பதைப் பார்ப்போம் ,

பத்து ஆள்சுமை சேர்ந்தது ஒரு வண்டி பாரம்,நாநூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டி பாரம்.--சூல்வண்டிஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்பத்தில் ஒருவன் அதிதீவிர முயற்ச்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும்.அப்படிப் பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை ,ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவநோக்கத்தால் அறியத் தொடங்கினால் ,ஒரு கணத்தில் {ஒரு நொடியில் }படித்துக் கொள்ளலாம்.இது சத்தியம் என்று வள்ளலார் சொல்லுகிறார் .அருள் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று சொல்லமுடியாத அளவு உயர்ந்ததாகும் .அந்த அருளைப் பெறுவது தான் மனித வாழ்க்கையின் லட்சயமாகும் .

அன்பு ,தயவு,கருணை,!

அன்பு என்பது ;--ஆன்ம நெகிழ்ச்சி ,ஆன்ம உருக்கம் உண்டாக்குவதாகும் ,எல்லா உயிர்கள் இடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே கடவுள் பக்தியாகும் .அதுவே அன்பாகும், அதுவே அந்த கரண சுத்தியை விளைவிப்பதாகும் ,

தயவு ;--உயிர்களுக்கு துன்பம் வரும் போது உயிர் இரக்கம் என்னும் காருண்யம் உண்டாகி ,உயிர்களின் துன்பத்தைப் போக்குவது தயவாகும் .அந்த தயவு என்னும் ஜீவ காருண்யத்தால் உயிர்களின் துன்பம் நீங்கி ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடைகின்றன , அதனால் ஜீவகாருண்யம் செய்யும் மனிதர்களின் ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடைகின்றன,இதுவே தயவு என்பாதாகும் .

அன்பு உண்டானால் தயவு உண்டாகும்,--தயவு உண்டானால் உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்யம் உண்டாகும்.--உயிர்களின் மேல் காருண்யம் உண்டானால் இறைவனுக்கு நம் மீது அன்பு உண்டாகும் --இறைவனுக்கு அன்பு உண்டானால் கருணை என்னும் அமுதம்{அருள் } உண்டாகும் .--அருள் உண்டானால் கடவுள் அனுபவம் {சிவானுபவம் }உண்டாகும்.

கருணை ;--

இதை கவனித்துக் கொண்டு இருக்கும் இறைவன் நம் மீது கருணைக் காட்டத் தலைப்படுகிறார் , தயவு மிகுந்த ஜீவர்களின் ஆன்மாவில் அமுதம் என்னும் சக்தி வாய்ந்த திரவம் உள்ளது .அவை பல்லாயிரம் ஆண்டுகளாக திறக்க முடியாமல் பெட்டியில் வைத்து பூட்டப் பட்டுள்ளது .தயவு மிகுந்த ஜீவர்களின் ஆன்மாவில் உள்ள அமுதத்தை இறைவன் கருணைக் கொண்டு திறக்க-- அதில் இருந்து அமுதம் சுரக்கும் அதுவே தனிப் பெருங் கருணையாகும்..இந்தக் கருணையைப் பெற்றுக் கொண்டவர்கள் அருளாளர்கள் எனப்படுவார்கள்,அவர்களுக்கு சுத்த சன்மார்க்கிகள் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார் .அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு மட்டும்தான் அருளாளர் என்ற பெயர் பொருத்தமானதாகும் என்பார் வள்ளலார் .  
அருளைக் கொடுப்பவர் ஆண்டவர் ,அருளைப் பெறுபவர்கள் ஜீவர்கள் அதனால் அவருக்கு தனித்தலைமை பெரும்பதி என்பார் .

அவர்க்கு வள்ளலார் வைத்த பெயர் ;--

அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதி !-----என்பதாகும்.

அருட்பெரும்ஜோதி கடவுள் ஒருவரே! தனிப்பெருங்கருணை உடையவர் அவர் ஒருவரே ! அவருடைய தனிப்பெருங் கருணையால்,அருளைப் பெற்றவர்கள் மட்டும்தான் அவரைக் காண முடியும் .அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்,--அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்,--அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்,

தயவு உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே !
அருள் உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே !

அன்பு .தயவு,கருணை ,அருள் .இவை நான்கும் பெற்றால் தான் மனிதன் மனிதனாக வாழ்ந்து தெய்வ நிலையை அடைய முடியும் .அன்பையும் தயவையும் உயிர்கள் மேல் செலுத்தினால ,ஆண்டவர் அன்பும் கருணையும் நம்மீது செலுத்தி அருளை வாரி வழங்குவார் என்பது வள்ளலார் சொல்லும் சுத்த சனமார்க்க நெறியாகும்,

அன்பை அடைக்கும் சக்தி யாருக்கும் இல்லை ,அன்புடையார் எல்லாம் உடையார் ,அன்பிலார் ஏதும் இலார் என்பது வள்ளுவர் வாக்கு !அன்பு எப்படி உண்டாகும் ?,பற்று அற்றவன் இடத்தில்தான் ஆண்டவர் பற்று வைப்பார் .

பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடமுடியாது .பொருளை வைத்துக் கொண்டு பிறகு அருளைத் தேடலாம் என்று நினைத்தால் அருள் வராது ,மரணம்தான் வரும்.

வள்ளலார் தரும் பாடல் ;--

மற்று அறிவோம் எனச் சிறிது தாழ்ந்து இருப்பீர் ஆனால்
மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே
சமரச சன்மார்க்கத்தவர்கள் அல்லால் அதனை
ஏற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லை கண்டீர் சத்தியம் இது என்மொழி கொண்டு உலகீர்
பற்றிய பற்றினை அனைத்தினையும் பற்று அற விட்டு அருள்
அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே !

அடுத்து ;--

சாருலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே
சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை
நேர் உறவே எவராலும் கண்டு கொள்வதற்கு அரிதாம்
நித்தியவான் பொருளை எலாம நிலைகளும் தானாகி
ஏருறவே விளங்குகின்ற இயற்கை உண்மை தன்னை
எல்லாஞ் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பத்தியை
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடுமின்
உள்ளம் எலாங் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே !

என திரு அருட்பாவில் பதிவு செய்து உள்ளார் .

இதில் இருந்து நாம் அறிந்து தெரிந்து கொள்வது என்ன ?

உலக பற்றுகள் -அதனால் உண்டாகும் துன்பம் துயரம் அச்சம் பயம் போன்ற தீர்க்க முடியாத வாதனைகளில் இருந்தும் விலக வேண்டுமானால் ,அனைத்தையும் நம்மிடம் இருந்து விளக்கிவிட வேண்டும் .அனைத்தையும் தவித்தவர் உள்ளத்தில் ஆண்டவர் அமர்ந்து அருள் புரிவார் என்பது சத்தியமான உண்மை என்கிறார் வள்ளலார்.

அழிந்து போகும்,அழிவை உண்டாக்கும் --உலகப் போகப் பொருள்கள் மீது வைக்கும் ஆசையை மாற்றி அதே ஆசையை உண்மை இறைவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மீது செலுத்துங்கள் .என்றும் அழியாத அருளைத்தருவார் ,என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கை வாழலாம் .

இதுவே வள்ளலார் உணர்த்தும் "மெய் மொழியும் ஒழுக்கமும்"' ஆகும் .

அருளைப் பெறுவோம் ஆனந்தம் அடைவோம் .

அன்புடன் உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு

தொடரும் ;--

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

உயிர்க் கொலை என்பது யாது ?


உயிர்க் கொலை என்பது யாது ?


 உலகத்தில் உள்ள எல்லாமே உயிர் உள்ளவைகள்தான் எல்லா உயிருள்ள ஜீவன்களும் ஏதாவது ஒரு உயிரை கொன்றுதான் உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கின்றன இதில் எந்த சந்தேகமும் இல்லை .மனிதன் ஆடு ,மாடு,கோழி ,பன்றி பறவை போன்ற உயிர்களை கொன்று தின்பது குற்றம் என்றும் ஜீவ இமசை என்றும் சொல்லுகிறோம் ,இவை கண்களுக்கு தெரிந்து செய்யும் கொலையாகும் கண்களுக்கு தெரியாத உயிர்களை கொன்று தின்று கொண்டு இருக்கிறோம்,--நிலம் ,நீர் ,அக்கினி ,காற்று ,ஆகாயம்,போன்ற அனைத்திலும் உயிர்கள் உள்ளன ,அதனால் உண்டாகும் அனைத்திலும் உயிர்கள் உள்ளன தாவரம முதல் மனிதன் வரை அனைத்தும் உயிர் உள்ளவைகள் தான்,நாம் சுவாசிக்கும் காற்றிலும் உயிர் உள்ளன .நம் உடம்பில் உள்ள அனைத்து அணுக்களும் உயிர் உள்ளவைகள் தான் ,நாம் ஒவ்வொருவரும் தினமும் பல கோடி உயிர்களை கொன்றுக் கொண்டே இருக்கிறோம் ,உயிர் இல்லாத பொருள் ஒன்று உண்டு --அதுதான் அருள் என்பதாகும் ,அருளை உணவாக உட்கொண்டால் மட்டும் தான் உயிர்க் கொலை கிடையாது .அதனால்தான் வள்ளலார் எந்த உணவையும் உட்கொள்ளவில்லை .தன்னுடைய சுவாசத்தையும் நிறுத்தி விடுகிறார் , தன்னிடத்தில் உள்ள அருளை உணவாக உட்கொள்கிறார் .--நல்ல அமுதம் என் நாவுளம்காட்டி என் அல்லலை நீக்கிய அருட்பெரும்ஜோதி என்றும் .உயிர் உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே --என்று உணர்ந்து தன் உடம்பில் உயிர் உள்ளது ,உடம்பு எல்லாம் உயிராக உள்ளது .அதனால் உடம்பை அழிக்காமல் அமுதத்தால் உடம்பை பிரித்து உயிர்களைக் காப்பாற்றி மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து காட்டுகிறார்,உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் அதுவும் உயிர் கொலைதான ,உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை எந்த உயிர்களையும் உயிர் அணுக்களையும் கொலை செய்யாமல் வாழ்ந்தவர் வள்ளலார் ஒருவர்தான் .இதை சாதாரண அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாது .இதை விரிக்கில் இன்னும் பெருகும் .அதனால் இந்த அளவுடன் நிறுத்திக் கொள்கிறேன் ,

அன்புடன் --ஆன்மநேயன் கதிர்வேலு.

திங்கள், 9 ஏப்ரல், 2012

மெய் மொழியும் ஒழுக்கமும் ! 2 ,பாகம் !

மெய் மொழியும் ஒழுக்கமும் !


பல்லாயிரம் ஆண்டுகளாக பல நாடுகளில் பலப்பல அருளாளர்கள்,இறைவனைப் பற்றியும் இறைவனை அடையும் வழி,முறைகளைப் பற்றியும் அவரவர்களுக்கு தெரிந்தவைகளை சொல்லியும் எழுதியும் வைத்து விட்டு சென்று விட்டார்கள் ,அவர்கள் சொல்லியது எல்லாம் உண்மையா என்று உணரும் போது,தத்துவ உண்மைகளாக இருந்ததே தவிர,நேரடியாக உண்மையை சொல்லத் தவறிவிட்டார்கள் .

காரணம் அவர்கள் இறைவனை அடைய சிறு சிறு முயற்சிகள் மேற்க்  கொண்டார்களே தவிர முழுமையான ஒழுக்க நெறியை கடை பிடிக்கவில்லை என்பது வள்ளலார் எழுதிய அருட்பாவை படிக்கும் போது உணர முடிகிறது.

வள்ளலார் சொல்லும் விளக்கப்பாடல் !

அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலைமை பதத்தலைமை வாய்ந்தனர் அங்கு அவர்பால்
இறங்கிலில் என் பேசுதலால் என்பயனோ நடஞ் செய்
இறைவரடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

என்று தெளிவுப் படுத்துகிறார் வள்ளலார் .

ஆகாரம் ,மைத்துனம்,தூக்கம்,பயம்,இவைகளால் மரணம் வரும் இடைவிடாது உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களுக்கு,
ஆகாரம்,மைத்துனம்,தூக்கம்,பயம் வராது. உள் ஒளியில {ஆன்மாவில் }இருந்து அமுதம் என்னும் திரவம் வெளியே சுரக்கும்.அப்பொழுது உண்மை தானே விளங்கும் ,அப்போதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக முடியும் .  
 மனிதன் இறை நிலையை அடைய வேண்டுமானால் முதலில் வள்ளலார் சொல்லிய ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்தால் அன்றி வேறு வகையால் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறவும் முடியாது, அடையவும் முடியாது. அவை யாவை என்பதை முதலில் அறிந்து தெரிந்து,புரிந்து அதன்படி வாழ பழகிக் கொள்ள வேண்டும் ,

அந்த ஒழுக்க நெறிகள் ;-- இந்திரிய ஒழுக்கம் ,--கரண ஒழுக்கம்,--ஜீவ ஒழுக்கம் ,--ஆன்ம ஒழுக்கம் ,என்ற நான்கு ஒழுக்கங்களாகும்.

வள்ளலார் காலத்தில் தன்னுடன் இருந்த அன்பர்களுக்கு ஒழுக்க நெறிகளை மிகவும் வளியுறித்தி சொல்லி வந்தார் .சொல்லியதோடு அல்லாமல் ,தருமச்சாலையில் எழுதி வைத்துள்ளார் ,நீங்கள் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வந்தால் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வந்தவுடன் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் .

ஏன் அப்படிச சொன்னார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும் .!

வள்ளலார் ஞானசபை தோற்று வித்ததே அதாவது கட்டியதே இறைவன் ஆணைப்படிதான் -.இறைவன் வள்ளலாரை ஆட்கொண்டு தன்னை அழைத்து
செல்ல ஞான சபைக்கு வருவது குறித்து ஞான சபை விளக்கப் பத்திரிகையில் தெரியப்படுத்துகிறார்.அவர் மட்டும் செல்ல வேண்டும் என்பது அவருடைய நோக்கம் அல்ல,ஆசை அல்ல , மற்றவர்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதே அவருடைய பேராசையாகும்.அதற்காக ஒழுக்க நெறியை பின் பற்றுங்கள் என்று வலியுறித்திக் கொண்டே இருந்தார் , ஆனால் ஒருவரும் அவர் சொல்லியதை கடைபிடிக்கவில்லை, செவி சாய்க்கவில்லை, என்பது தெளிவாகிறது

ஞானசபையை தோற்றுவித்து ஞானசபை விளக்கப் பத்திரிகை வெளியிடுகிறார் அவர் விளக்கம் தந்து அதன்படி நடந்தார்களா என்றால் இல்லை என்பது புலனாகிறது --.எப்படி என்பதை கவனிப்போம் .

இன்று தொடங்கி ஆருட்பெரும்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞானசபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் என்றும், பித்தளை முதலியவற்றால் செயத குத்து விளக்கு வேண்டாம் மேலே ஏற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி ,கரணசுத்தி உடையவர்களாய் திரு வாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது ,எழுபத்தி இரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது ,உட்புற வாயிலில்களுக்குச சமீபங்களில் வைத்துவரச் செய்விக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார் வள்ளலார்

அடுத்து நாலு நாளைக்கு ஒருவிசை காலையில்,மேற்குறித்த சிரியரைக் கொண்டாயினும்,பெரியரைக் கொண்டாயினும்,உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும்,தூசு துடைப்பிக்கப் புகும் போது நீராடிச் ,சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் {துணி }சுற்றிக் கொண்டு புகுந்து ,முட்டிக் காலிட்டுக் கொண்டு ,தூசு துடைக்கச் செய்விக்க வேண்டும்.விளக்கு வைக்கின்ற போதும் இங்கணமே செய்விக்க வேண்டும் ,

விளக்கு வைத்ததற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவரும் ,எழுபத்தி இரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியரும்,பொருள்,இடம்,போகம்,முதலியவற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய் ,தெய்வ நினைப்பு உள்ளவர்களாய் ,அன்பு உடையவர்களாய் இருத்தல் வேண்டும்,விளக்கு வைக்கும் போதும் தூசு துடைக்கும் போதும் ,நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும் .

யாரும் யாதொரு காரியங் குறித்தும் தற்காலம் உள்ளே புகுதல் கூடாது.ஞான சபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருத்தல் கூடாது .அத் திறவுகோலை வேறு ஒரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவு கோலை ஆஸ்தான காவல் உத்தர வாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும் .

என்று ஞானசபை விளக்கப் பத்திரிகை எழுதி அங்கு உள்ள நமவர்களுக்கு தெரியப் படுத்தி கட்டளை இடுகிறார் .மேலும் இதன் தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன் என்று முடிக்கிறார் .வள்ளலார் எழுதி அறிவித்தபடி அங்கு உள்ளவர்கள் செயல் பட்டார்களா இல்லையா என்பதை கவனிக்கும் போது செயல்பட வில்லை என்பது அவர் எழுதிய அருட்பாவின் வாயிலாகவும் ,எச்சரிப்பு பத்திரிகை வாயிலாகவும் அரிய முடிகிறது .      

எச்சரிப்பு பத்திரிக்கை ;--

அவர் ஞானசபை விளக்கப் பத்திரிகை வெளியிட்டது ,{1873,ஆம் ஆண்டு } ஆங்கிரச வருடம் ,ஆடிமாதம் ஐந்தாம் தேதியாகும்

வள்ளலார் சொல்லியபடி அங்கு உள்ளவர்கள் செயல்பட வில்லை என்பது அவர் வெளியிட்ட எச்சரிப்புப் பத்திரிகையில் தெளிவுப் படுத்தி உள்ளார். அந்த வருடம் {1873,ஆம் ஆண்டு } ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் பணிரண்டாம் தேதியாகும் அதில் அவர் அறிவித்துள்ளதை நன்கு கவனிக்க வேண்டும் .

அன்பர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்பு பத்திரிகை ;--

ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும் ,அவர் பொதுப்பட உலகத்தில் உள்ள யாவரும் சன்மார்க்கப் பெரும் பயன் பெற்று ,நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப் படுகின்றனர் என்றும் ,அது காலையிற் நாமும் ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்வோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ,ஒத்து இருத்தல் அவசியம்.

அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷிகள் உண்டானாலும் அல்லது உண்டாகிறதா இருந்தாலும், உடனே ஜாகிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்து விடல் வேண்டும் .அப்படி இருந்தால் மேல் விளைவை உண்டு பண்ணாது இருக்கும் .அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைத்தாலும் அப்படி வைதவர் களையும் அந்த வைதலைக் கேட்டு சகிப்பவர்களோடு ,மறுத்தபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.

அப்படி மருவாதவர் களையும்,உடனே ஓதிக்கிவிட வேண்டுவது.அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டுத் தாங்கள் எதிர்த்து வார்த்தை யாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டு அல்லது ஒருவருக்குத் தெரிவித்தல் வேண்டும்.அப்படித் தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச சண்டை தொடுப்பவர்களும் இங்கு இருப்பது அனாவசியம் .அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சும் இல்லாமல் ,இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்ச்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்
என்று எச்சரிப்பு பத்திரிகையில் வெளியிடுகிறார் .

வள்ளலார் காலத்தில் நடந்த இக் கொடுமையை என்னவென்று சொல்வது .உலகத்தை திருத்த வந்த வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை உணர்வாரும் கேட்பாரும் இல்லாமல் போயிற்று இருந்தாலும் வள்ளலார் மனம் தளரவில்லை .இந்த மக்களை எப்படியாது திருத்தியே ஆகவேண்டும் ,கடவுளின் ஆணையை நிறைவேற்றியே யாகவேண்டும் என்ற கருணை உணர்வோடு உள்ளத்தோடு யாருடைய மனமும் நோகாமல் ஒரு வார்த்தையை சொல்லுகிறார் .
  • உங்களைத் தொட்டாலும் தோஷம் உறும் ,விட்டாலும் கதியில்லை .!
அந்த அளவிற்கு சாதி,சமயம்,மதம் என்னும் பேய் பிடித்து இவர்களை ஆட்டுகின்றன .இவர்களுக்கு ஒழுக்கம் ,உண்மை என்றால் என்னவென்றே தெரியவில்லை அந்த அளவிற்கு மூடமாக உள்ளார்களே இவர்களை விட்டு விட்டு எப்படி செல்வது என்று பரிதாபப் படுகின்றார் இவர்களைப் போன்றுதான் உலகில் உள்ள அனைவரும் இருப்பார்கள் என்று உள்ளும் புறமும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் முறை இடுகிறார் .
  • சத்திய ஞானசபையை பூட்டிவிடுகிறார் !
அருட்பெரும்ஜோதி ஆணைப்படி வள்ளலார் ஞானசபைக்கு உள் சென்று இறைவனோடு இரண்டற கலந்திருக்க வேண்டும்..அதற்கு உண்டான காலம் நேரம் எல்லாம் ஆண்டவரால் அறிவிக்கப் பட்டு உள்ளது ..

வடலூரில் தன்னுடன் இருந்த அன்பர்கள் வள்ளலார் அறிவித்தப்படி வழிபாட்டுக் கொள்கையை ,,முறையாக செய்யத் தவறி விட்டார்கள்.அப்படி செயல்படாத காரணத்தினால்
ஞானசபையை பூட்டிவிட்டு வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் சென்றுவிடுகிறார் .

அங்கு தனிமையில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் முறையிடுகிறார் .அருட்பெரும்ஜோதி ஆண்டவரும் தானும் பலமுறை சந்தித்து கலந்துரை செய்கின்றார்கள் ஆண்டவர் பல முறை வள்ளலாரை நேர்கான வந்து உள்ளார் .அதற்கு வள்ளலார் எழுதிய அருட்பாவில் ஆதாரங்கள் நிறைய உள்ளன .  
  • அருள்விளக்க மாலையில் உள்ள ஒரு பாடல் !;-
நீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்தோம் நினையே
நேர் காண வந்தனம் என்று என்முடிமேல் மலர்க்கால்
தான் நிலைக்க வைத்து அருளிப் படுத்திட நான் செருக்கித்
தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே
ஏன் நினைத்தாய் இவ்வளவு சதந்தரம் என் மகனே
எனக்கு இல்லையோ என்று அருளி எனை யாண்ட குருவே
தேன் நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
தெய்வ நடத்தரசே என் சிறு மொழி யேற்று அருளே .
  • அடுத்து ;--
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம
எதாக முடியுமோ என்று
எண்ணி இரு கண்ணிற் நீர் காட்டிக் கலங்கி நின்று
ஏங்கிய இரவில் ஒருநாள்
மின்செய் மெய்ஞ் ஞான உருவாகி நான் காணவே
வெளி நின்று அனைத்து என் உள்ளே
மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்கனே
விற்று இருக்கின்ற குருவே
நன்செய்வாய் இட்ட விளைவது விளைந்தது கண்டு
நல்கு உரைவினோடு நான் அடைந்த
நன் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகமாகவே
நான் கண்டு கொண்டு மகிழவே
வன் செய்வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை
வலிய வந்து ஆண்ட பரமே
மணிமன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜபதியே .!

என்ற பலபாட்ல்கள் வாயிலாக ,வள்ளலாரைத் தேடி அருட்பெரும்ஜோதி ஆண்டவர் சென்று உள்ளார் என்பதை அறிய முடிகிறது .அது மட்டும் அல்ல வள்ளலாரின் துயரங்களையும் துன்பங்களையும் போக்கி தான் நினைத்தையை எல்லாம் நிறை வேற்றி வைத்துள்ளார் எனபதும் தெளிவாகிறது,
  • அடுத்த பாடல் ஒன்று !;--
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே
தேன் இருக்கும் மலர் அணைமேல் பளிக்கறையின் யூடே
திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே
நல்ல திருவருள் அமுதம் நல்கியதும் அன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன்
உள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந்தனையே !

எனவும் பதிவு செய்துள்ளார் ,பலகாலமாக,உலகை நிர்வாகம் செய்யும், ஐந்து கர்த்தாக்களும் ஆண்டவர் என்றாவது ஒருநாள் வருகை புரிவார் என்ற நம்பிக்கையுடன் காத்து கிடக்கிறார்கள் .எப்படி அவர்கள் காத்து இருக்கிறார்களாம் ,அவர்கள் ஆட்சி புரியும் இடமான, மணிமாடத்தின் நடுவே ஆண்டவரின் கால் நோகாமல் இருக்க, அவர் வரும் போது,அவருடைய கால் பதியும் இடம் எல்லாம் ,தேன் இருக்கும் மலர் போல் விரிப்பு விரித்து திரு அருளுக்காக காத்துக் கொண்டு,ஆண்டவர் வருவார் வருவார் என்று நம்பிக்கையுடன் தோத்திரம் செய்தும் ,பக்தி செய்தும் வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள் ,

அப்படி எல்லாம் அவர்கள் இருக்க ,

நான் இருக்கும் இடமோ ஓட்டைக் குடிசையாகும் ,அந்த குடிசையில் அழைப்பு இல்லாமல் வலிந்து நுழைந்தது அல்லாமல் எனக்கு நல்ல திரு அருள் அமுதம் கொடுத்ததும் அன்றி, என் புன்னால் ஆன உடம்பு என்னும் குடிசையிலும் மகிழ்ச்சியுடன் நுழைந்து எளியேன் உள்ளம் எனும் சிறு குடிசையிலும் நுழைந்தனையே !உன் பெருமையை உன் ஆசையை .உன்னை நான் அடைந்த அந்த பெருமையை எப்படி எடுத்து உரைக்க முடியும் ,சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை சொல்லால் அளக்க முடியாது என்று மிகவும் பெருமைப் படுகிறார் வள்ளலார் .      
 
தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்திய போது அதனைத்
தன் வருத்தம் எனக் கொண்டு என்னுடயை வருத்தம் எல்லாம் நீக்கி என்னை என்றும் இடைவிடாது ஆண்டு கொண்டு இருக்கும் குருவே ! இச்சிறுவனுடைய சிறு உரையைக் கேட்டு நேரே காண வந்த உன் கருணையை, பெருமையை எதற்கு சமமாக, ஈடாக, எடுத்து உரைக்க முடியும் என்னை உன் உண்மையான மகனாகக் கருதி, நல்ல பிள்ளையாக ,செல்லப் பிள்ளையாக, சொல் கேட்கும் பிள்ளையாக,ஏற்றுக் கொண்டு ,என்றும் என்னை விட்டு பிரியாமல் இருக்கும் படியான அருளைத் தந்து வளர்க்கின்ற தெய்வ நடத்தரசே என்னை புரிந்து கொண்டு என்னுள் உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டு இருக்கின்றாய் . ஆகலின் தேவரீர் திருவருட் பெருங் கருணையை என்னவென்று கருதுவேன், என்னவென்று துதிப்பேன்,என்னவென்று போற்றி புகழ்வேன் ,
  • அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !.  
பாதி இரவில் எழுந்து அருளி இப்பாவி யேனை எழுப்பி அருட்
ஜோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே !

இந்த உலக மக்களை திருத்துவதற்கு என்னை அனுப்பி வைத்தாய் ,நான் எப்படி வாழ வேண்டும் என்ற வழியையும் காட்டி வைத்தாய் ,கோடு தவறாமல் உன்னுடைய பெருமையும் புகழையும் .உண்மையும் இந்த மக்களுக்கு சொல்ல வைத்தாய் ,உங்கள் கட்டளையை மீறாமல் அனைத்தும் எழுதி வைத்து விட்டேன் ,எழுதியது போல்,வாழ்ந்தேன்,வாழ்கிறேன் ,வாழ்ந்து கொண்டே இருப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார் ..

இப்போது என்னை ஏறா நிலைமிசை ஏற்றி வைத்துள்ளீர் எனக்கு இது போதும் .நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது {சொல்லமுடியாது }ஆனால் இருந்தாலும் இது எனக்கு மகிழ்ச்சி இல்லை --நான் உழைத்த உழைப்பிற்கு ,வாழ்ந்த வாழ்க்கைக்கு நான் போதித்த போதனைக்கு ,எனக்கு மட்டும் கிடைத்த இந்த பேரின்ப பெருவாழ்வு போதாது ,என்போல் இவ் உலகம் பெறுதல் வேண்டும் ,இதுவே என்னுடைய விருப்பமும் ,பேராசையும் ஆகும் .

என்று தன்னுடைய விருப்பத்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் சொல்லி வேண்டுகிறார் .

எப்படியாவது இந்த மக்களை ஒழுக்க நிலைக்கு கொண்டு வந்து அழைத்து செல்லலாம் என்று மக்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறார் .சன்மார்க்கத் சங்கத்தவர்களுக்கு வேண்டுகோள் தரும் ஒரு பாடல் ,

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்று கின்றேன் தயவினொடுங் கேட்பீர்
என் மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்குச் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்து அறிமின் நீண்டே !

உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல் இந்த மக்கள் என்னை கடவுள் என பாவித்து வணங்க்குகிறார்கள் ,இவர்களுக்கு எப்படி புரியவைப்பேன் ,என வருந்தி வேதனைப்படுகிறார் ,

ஆன்மநேய அன்புடைய நண்பர்களே! உங்கள் தாள் வணங்கிக் {காலைத்தொட்டு }கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள் ,--நானும் உங்களில் ஒருவன்தான் என்னைக் கடவுள் என நினைத்து வணங்க வேண்டாம் ,எல்லாம் வல்ல தனித் தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் உண்மையானக் கடவுளாகும் அவரை விட்டு வேறு எதையும் வணங்காதீர்கள் ,

உலகில் உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல், உண்மைக்கு புறம்பான பொய்யான கற்பனை உருவங்களை வணங்கும் புன்மார்க்கத்தவர்கள் {அறிவு இல்லாதவர்கள் } போல் நீங்களும் செயல்ப்பட்டு புத்தி மயங்கி அழிந்து விடாதீர்கள் ,

எங்கும் பூரணமாய் விளங்கி, எல்லார்க்கும் நன்மையே செய்யும், கருணையே வடிவமான ,அருளை வாரி வழங்கும் ஒப்பற்ற உயர்ந்த தெய்வம் ஒன்றே ---ஒன்று !அதுவே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தான் என்பதை அறிவால் அறிந்து உள்ளத்தால் உணர்ந்து, வணங்கவேண்டும் வழிபட வேண்டும் .இதுவே சத்தியம் ,என்மீது ஆணையாக-- உங்கள் மீது ஆணையாக-- சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள் என்று நம்மை எல்லாம் அன்புடன் அழைக்கிறார் வள்ளலார் .

அன்றும் யாரும் கேட்கவில்லை இன்றும் யாரும் தெரிந்து கொள்வார் இல்லை !

நாமும் நமக்கு முன் இருந்தவர்களும் இன்றுவரை யாரும் கேட்டதாக தெரியவில்லை அறிந்ததாக தெரியவில்லை,வாழ்ந்ததாக தெரியவில்லை சுத்த சன்மார்க்கம் என்ற போர்வையில் உலகியலில் உள்ளவர்கள் போல்தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்..
  • அடுத்து வேதனையுடன் பதிவு செய்துள்ள பாடல் !
சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம்
துரிசலவே சூதலவே தூய்மை யுடையனவே
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும் வார்த்தை என் வாய்
விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்ற படியால்
செல்லுகின்ற படியே நீ காண்பாய் இத்தினத்தே
தேமொழி அப்போது எனை நீ தெளிந்து கொள்வாய் -கண்டாய்
ஒல்லுகின்ற வகை எல்லாஞ் சொல்லு கின்றேனடி நான்
உண்மை இது உண்மை இது உண்மை இது தானே !

இப்படி பல கோணங்களில் வள்ளலார் மக்களுக்கு போதித்து கொண்டே இருந்தார் .ஆனால் அவருடன் இருந்தவர்கள் யாரும் அவர் சொல்லிய ஒழுக்கத்தை கடைபிடித்ததாக தெரியவில்லை ,வள்ளலார் உடன் இருந்தால் உலகியல் வாழ்க்கைக்கு ஏதாவது பொன் பொருள் போன்ற லாபம் கிடைக்கும் என்று நினைத்தார்களே ஒழிய, அருள் வேண்டும்,அருளைப்பெற வேண்டும் என்று யாரும் தங்களை தயார்ப் படுத்திக் கொள்ளவில்லை ,அதற்குத் தகுந்த ஒழுக்கத்தை யாரும் கடைப் பிடிக்கவில்லை என்பது நன்கு தெரிகிறது.

அன்றும் இல்லை, இன்றும் இல்லை ,வள்ளலார் வழியை பின் பற்றுகிறோம் என பலவழிகளில் பொருள் சேர்ப்பதிலே கவனத்தை செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள், அதைப்பற்றி நான் சொல்ல விரும்ப வில்லை ,

மரணத்தை வெல்ல தன்னாலே முடியவில்லை ,நரை திரை மூப்பு இல்லாமல் வாழ வழி தெரியவில்லை, மரணத்தை வெல்லுவது குறித்து மற்றவர்களுக்கு விளக்கம் சொல்லித் கொண்டு இருக்கிறார்கள் ,மரணத்தை வெல்லும் பயிற்சி என்ற பெயரில் பல தவறான வழியில் மக்களுக்கு போதித்துக் கொண்டு இருக்கிறார்கள் .அதுமட்டும் அல்ல மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் சாகாக்கலைஆராய்ச்சி என்றும் இன்னும் பல தலைப்புகளில் புத்தகம் எழுதி வெளியிட்டுக் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு உள்ளார்கள் .

வள்ளலார் எழுதிய திருஅருட்பா ஒன்றே போதுமானது அதைப் முழுமையாக படித்து அதில் உள்ள உண்மையான ஒழுக்க நெறிகளை கடைபிடித்து, அருள் நிலையை அறிந்து ,உணர்ந்து வாழ்ந்தாலே போதுமானதாகும் .வள்ளலாரை விட மற்றவர்கள் எழுதிய நூல்கள் உண்மையை தெரிவித்து விடுமா என்ன ?

உலகில்--நீங்கள் கண்டது கேட்டது,படித்தது ,களித்தது அனைத்து பொய் என்கிறார் வள்ளலார் .
  • பாடல் பாருங்கள் ;--
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !,

மரணத்தை வெல்வது என்பது சாதாரண காரியம் அல்ல ,! மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை !

அவர்களுக்கே கிடைக்கவில்லை என்றால் அவை எப்படிப்பட்ட நிலை என்பதை அறிய வேண்டும்..சுத்த சன்மார்க்கம் என்பது .சரியை,கிரியை ,யோகம ,ஞானம் எண்ணும் நாலாவது நிலையில் உள்ள ஞானத்தில் யோகம்  எண்ணும் பதினைந்தாம் நிலையில் உள்ளவர்களுக்கு சொல்லியது என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் ,அந்த நிலைக்கு வந்தவர்கள்தான் சுத்த சன்மார்க்கம் என்ன என்பதை அறிந்து,புரிந்து கொண்டு அருள் பெறுவதற்கு மேலும் முயற்சி செய்வார்கள் .அவர்களுககே சுத்த சன்மார்க்கம் நன்கு விளங்கும் ,அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை பின் வரும் பாடலில் தெளிவுப் படுத்துகிறார்
  • அந்த பாடல் ;--
ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர்
மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் முன்னும்
யோக மாந்தருக்குக் காலம் உண்டாகவே யுரைத்தேன் ..

வள்ளலார் காலத்திற்கு முன்னாடி வந்த அருளாளர்கள் ,மரணத்தை வெல்லும் வழிமுறையை யாரும் முறையாக மக்களுக்கு சொல்லவில்லை ,அவர்களும் கடைபிடிக்க வில்லை, யோக நிலையில் உள்ளவர்கள் சரியான யோக வழி தெரியாமல் முயற்சி செய்து வீணாக மாண்டு போய் விட்டார்கள் .இனிமேல் யோக நிலையில் உள்ளவர்கள் சமரச சுத்த சத்திய உண்மை சன்மார்க்கம் என்ன என்பதை அறிந்து ,அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங் கருணையால் அருளைப் பெற்று ,பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும்,மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து ,கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .

நாமும் முயற்ச்சி செய்தால் அந்த நிலைக்கு வரலாம் என்பதை வள்ளலார் அவர்கள் ,மெய் மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் நமக்குத் தெரியப் படுத்தி உள்ளார்கள் .

தொடரும் ;--

ஆன்மநேயன் கதிர்வேலு .

  •