வெள்ளி, 28 ஏப்ரல், 2017

51,ஆம் ஆண்டு திருமண நாள் !51,ஆம் ஆண்டு திருமண நாள் !

அன்புடையீர் அனைவருக்கும் அன்பு கலந்த வந்தனம் !

உங்கள் அன்புடைய ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ஆகிய நானும் என்னுடைய அன்பு  மனைவியாகிய அமுதா கதிர்வேல் ஆகிய இருவரும் சேர்ந்து அனைவருக்கும்  மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளாலும் உங்கள் அனைவரின் அன்பான

வாழ்த்துக்களாலும் நாங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

வருகின்ற 2-5-2017.ஆம் நாள் எங்களுக்கு திருமணம் நடைபெற்று 51, ஆண்டு தொடங்குகின்றது..என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று எங்களால் முடிந்த அளவு .ஈரோடு சன்மார்க்க சங்கத்திலும்,வடலூர் பூசத்தன்று வடலூரிலும் அன்னதானம் செய்கின்றோம்.

எப்போதும்  உங்களின் அன்பும் வாழ்த்துக்களும் வழங்க வேணுமாய் கேட்டுக் கொண்டு .நீங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ அருள் வழங்க வேண்டுமாய் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .அமுதா கதிர்வேல்.
9865939896..

வள்ளலார் பாடல்கள் !

106. சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென 
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி 

58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா 
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி 

791. மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும் 
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை 

மேலே கண்ட பாடல்கள் போல் ஆயிரக் கணக்கான பாடல்களின் வாயிலாக சமய மதங்களையும் ,அவற்றைத் தோற்று வித்தவர்களையும் ,அவற்றை  பின்பற்றுபவர் களையும் வள்ளலார் சாடுகின்றார் ..அதே உண்மையை நான் சொன்னால் என்மீது மக்கள் வருத்தபடுகின்றார்கள் ,எதிர்க்கின்றார்கள்.

வைத்தாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன் மனம் கோனேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்,பொய் தான் ஓர் சிறிது எனினும் புகலேன் நீவீர் எலாம் புனிதம் உறும் பொருட்டே என்பார் வள்ளலார் .

அதே பாணியைத் தான் நான் பின் பற்றுகிறேன்..எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் என்னுடைய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உடன் பிறப்புக்கள் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டு உள்ளேன். மெய்ப்பொருளின் உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 
9865939896,

வியாழன், 27 ஏப்ரல், 2017

கடவுள் ஒருவரே !

கடவுள் ஒருவரே !

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல ஞானிகள் தோன்றி உள்ளார்கள்.

ஞானிகளால் பல மதங்கள் சமயங்கள் சாதிகள் தோன்றி உள்ளன.

மதங்கள் சமயங்கள் எல்லாம் கடவுளைப் பற்றியும் ,ஒழுக்கத்தைப் பற்றியும் மக்களுக்கு போதிக்கத் தான் தொடங்கின .ஆனால் ஒரேக் கருத்தையோ ,ஒரே கடவுளைப் பற்றியோ போதிக்க வில்லை.

அவரவர்களுக்குத் தெரிந்ததை ,அறிந்ததை,கடவுளாக வழிபட காட்டிக் கொடுத்தார்கள்.ஒவ்வொருவர் காட்டிய கடவுள்களும் வெவ்வேறு விதமான தோற்றங்களும்,உருவங்களும் உள்ளதாகவே இருந்தன.கடவுள்களின் வழிபாட்டால் பிரிவினைகள் உண்டாயிற்று .

மதங்களாலும்,சமயங்களாலும் ,சாதிகளாலும், ஒரே இனமான மனித இனம் தனித்தனியாக பிரிந்து விட்டன.மனித இனம் பிரிந்ததற்கு காரணம் கடவுள் கொள்கைதான் என்பதை அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதற்குமேல் கடவுளைப் படைத்த குருமார்களையும்,போதகர்களையும் ,ஆன்மீக வழிக் காட்டியவர்கள் என்று அவர்களையே கடவுளாக பாவித்து வழிபட ஆரம்பித்து விட்டார்கள் .
கடவுளின் உண்மைத் தெரியாமல்,பொய்யான கடவுள்களை மக்கள் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால் அரசியல் கட்சிகள் போல் ஆன்மீகம் தனித்தனியாக பிரிந்து மக்களை திசை திருப்பி அழித்துக் கொண்டு உள்ளன.போரிட்டு அழிந்து கொண்டு உள்ளன.

வள்ளலார் சொல்லுகின்றார் !

நாம் நாமும் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம், இதிகாசம், முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம்,ஏன் என்றால் ?

அவைகளில் ஒன்றிலாவது கடவுளின் உண்மையை வெளிப்படக் காட்டி உள்ளதா ? தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் ,கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .

அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் ;-- கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு .இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

தெய்வத்துக்குக் கை,கால்,வாய்,மூக்கு,உடம்பு முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள் .இஃது உண்மையாக இருப்பதாகவே --முன்னும்,பின்னும்,உள்ள ஆன்மீக பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் ,உண்மைத் தெரியாமல் அப்படியே கண்ணை முடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள் என்கின்றார் வள்ளலார் .

கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கின்றார்கள் என்றால் என்ன ? குருடர் யானையைக் கண்டு சொன்னதுபோல் என்கின்றார் .அதாவது உண்மையான கடவுளைக் காணாத குருடர்கள் என்கின்றார்.

அதற்கு மேல் இவற்றை எல்லாம் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் என்கின்றார் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை என்கின்றார் .இவற்றை மறைத்தவன் வல்லவன் என்பதை சொல்லுகின்றார்

ஏன் என்றால் மக்கள் நம்பும்படி கற்பனைக் கதைகளை சிறப்பாக படைத்துள்ளான் என்கின்றார்.பொய் சொன்னாலும் பொருந்த சொல்வதுபோல் .கலைகளை வைத்து கற்பனையாக நிலைத்து இருப்பதுபோல் கதைகளை கட்டிவிட்டு இருக்கின்றார்கள்.

அவன் கற்பனையாக கதைகளை கட்டி விட்ட அந்த கற்பனைப் பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை,இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய உடைக்க ஒருவரும் வரவில்லை
( வள்ளலார் வந்து அந்த பூட்டை உடைத்து விட்டார்) அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள்.
ஞான சித்திகளை பெற வழிக் காட்டவில்லை.

அதற்காக ஒவ்வொரு சித்துக்கும்,பத்து வருடம்,எட்டு வருடம்,பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம் .அதற்காக லஷ்யம் வைத்தால் உண்மையான ஆண்டவராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் வைத்துக் கொண்டு இருக்கின்ற லஷியம் போய் விடும் என்கின்றார் வள்ளலார் .

ஆதலால் ''சுத்த சன்மார்க்கிகள் ''சைவம்,வைணவம்,முதலிய சமயங்களிலும்,,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,முதலியவைகளிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்கின்றார்..மேலும் சித்தாந்தம்,வேதாந்தம்,முதலிய மதங்களிலும்,லஷியம் வைக்க வேண்டாம் என்கின்றார்...

கடவுள் ஒருவரே உள்ளார் என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்றும் ,அறிந்து உண்மை அன்பால்,உண்மை இரக்கத்தால் உண்மையான தயவால் ,உயிர் இரக்கமான ஜீவ காருண்யம் கொண்டு,உண்மையாக வழிபாடு செய்ய வேண்டும் என்கின்றார் .அப்படி செய்தால் பெற வேண்டிய அருளைப் பெற்றுக் கொண்டு மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழலாம்..

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும் !,
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் !

என்றும் தெளிவாக சொல்லி உள்ளார் ...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

எய்வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள்

எடுத்து உரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர்

கரிபிடித்துக் கலகம் இட்டப் பெரியரினும் பெரியீர்

ஐவகைப் பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர்

அழி உடம்பை அழியாமை யாக்கும் வகை அறியீர்

உய்வகை என் தனித் தந்தை வருகின்ற தருணம்

உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே !

என்னும் பாடல் வாயிலாக நமக்குத் தெரிவிக்கின்றார் வள்ளலார் ....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 26 ஏப்ரல், 2017

வள்ளலார் எழுதிய திரு முறைகள் மூன்று !


வள்ளலார் எழுதிய திரு முறைகள் மூன்று !


ஒன்றிலிருந்து நான்கு  திருமுறை வரை ஒன்று ! ஐந்தாம் திருமறை ஒன்று !
ஆறாம் திருமுறை ஒன்று !

ஒன்றிலிருந்து நான்கு  திருமுறை எழுதிய போது  வள்ளலார் தேகத்தின் தன்மை;--''.சுத்த தேகம்'',சுத்த தேகத்தில் இருந்து போது எழுதியது நான்கு திரு முறைகளாகும்.

.ஐந்தாவது திருமுறை எழுதிய போது,வள்ளலார் தேகம் 'பிரணவ தேகம்'' முதல் நான்கு திரு முறைகளும் ஐந்தாவது திருமுறையும் எழுதியது,, அவருடன் இருந்த அன்பர்களுக்குத் தெரியும். நான்கு திருமுறை எழுதியதும்,  ஐந்து திருமுறை எழுதியதும்   சென்னையிலும்,கருங்குழியிலும்,வடலூரில் உள்ளபோதும் எழுதியதாகும். 

அன்பர்களின் விருப்பத்தாலும்,வேண்டு கோளாலும் .உண்ணா நோன்பு இருந்தும்,   வள்ளலாரின் விருப்படி  வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்கள் மற்றும்   வேலாயுதம் அவர்களால் 1867 ஆம் ஆண்டில் நான்கு திரு முறை வெளியிடப் பட்டது .வள்ளலார் சித்திப் பெற்ற பின் 1880 ஆம் ஆண்டில் ஐந்தாம் திருமுறை வெளியிடப் பட்டது.

அதன்பின்பு நான்கு திருமுறையும் ஐந்தாம் திருமுறையும் சேர்த்து ஒரே புத்தகமாகவும்..ஆறாம் திருமுறை தனிப் புத்தகமாகவும் வெளியிடப்படுகின்றது. 

ஆறாம் திருமுறை ! 

ஆறாம் திருமுறை எழுதிய போது வள்ளலார்  ''சுத்த பிரணவ ஞான தேகம்'' பெற்ற காலத்தில் எழுதியதாகும். ஆறாம் திருமுறை எழுதியது மேட்டுக்குப்பத்தில் தங்கி இருந்த காலத்தில்  எழுதியதாகும்.ஆறாம் திருமுறை எழுதியது அவருடன் இருந்த அன்பர்களுக்கோ,.மற்ற அணுக்கத் தொண்டர்களுக்கோ எவருக்கும் தெரியாது.

ஆறாம் திருமுறை முழுவதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்ல,மெய்மொழி  தமிழில் .எடுத்து கொடுக்க கொடுக்க வள்ளலார் எழுதியதாகும் .சரியாக சொல்வதானால்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எழுதியதாகும்.ஆறாம் திருமுறை எழுதியது வள்ளலாருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மட்டுமே தெரியும். 

வள்ளலார் சித்திப் பெற்றது 1874 -1-30.ஆம் ஆண்டாகும் .அதாவது ஸ்ரீ முக வருடம் தை மாதம் 19,ஆம் நாள் வெள்ளிக் கிழமை அன்று சித்திப் பெற்றார் ....

வள்ளலார் சித்திப் பெற்ற பின்பு 1885,ஆம் ஆண்டு ஆறாம் திருமுறை வெளியிடப்பட்டது
வள்ளலார் சித்திப் பற்ற பின் 11,ஆண்டுகள் கழித்து தான் ஆறாம் திருமுறை வெளியிடப்படுகின்றது..

ஐந்து திருமுறைகளும் வள்ளலார்  சமயம் சார்ந்து எழுதப் பட்ட பாடல்களாகும் ,சாதாரண நித்திய கரும விதிகளும் நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல் ஒழுக்க உப தேசங்களும் சுத்த பிரணவ தேகத்தில் இருக்கும் போது எழுதியதாகும்.

  ஆறாம் திருமுறை ,சாதி,சமயம்,மதம் கடந்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க''  பாடல்களாகும் ஆறாம் திருமுறை வெளியிடும் போது சமயம் சார்ந்த சில உரைநடைப் பகுதிகளை,அதனுடன் சேர்த்து  வெளியிட்டதால் மக்களிடம் குழப்பம் உண்டாகி விட்டது.....இவைகள் யாவும் புத்தகம் வெளியிட்டவர்களின் அறியாமை ஆகும்...அவர்கள் வேண்டும் என்று செய்யவில்லை.எல்லா உரைநடைகளும்  வள்ளலார் எழுதியது தானே என்ற கருத்தில் வெளியிட்டு விட்டார்கள்.

சில உரைநடைகள் வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்கள் வள்ளலார் சொல்லும் போது.அதைக் கேட்டு  எழுதி வைத்து இருந்ததையும்.சேர்த்து  பதிவு செய்து உள்ளார்கள்.

சன்மார்க்க சங்கம் !

வள்ளலார் முதலில் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று பெயர் வைத்து தொடங்குகின்றார் ..அதன்பின்பு 1865,ஆண்டு ஷ்டாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் பெயரில்  தொடங்குகின்றார் . 1867 ,ஆண்டு வடலூரில் சத்திய தருமச்சாலையை துவங்குகின்றார்..அதன்பின்பு வள்ளலாருக்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் அருள் ஆற்றல் பெறுகின்றார்.ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைகின்றார் .அப்படி இருந்தும் மக்களுக்கு தன்னுடைய அருள் ஆற்றலை,அருள் உடம்பை  வெளியேக் காட்டாமல் மனித தேகத்தையே காட்டிக் கொண்டு இருந்தார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி 1872.-1--25,ஆண்டு கடவுளின் உண்மையை வெளிப்படுத்த சத்திய ஞான சபையைக் கட்டி முடித்து கடவுளின் வழிபாட்டு   பூச விழாவைத் தொடங்கி வைக்கின்றார் .

பெயர் மாற்றம் செய்கின்றார்  ! 

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !

இன்று தொடங்கி ,சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்..
சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.
சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 
பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் கட்டளை இடுகின்றார் ,

இவைகள் அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உரைத்த வண்ணம் உரைக்கின்றேன் என்கின்றார் .

சாதி சமயம் மதம் கடந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து .வள்ளலார் சொல்லிய வண்ணம் உண்மையான  ஒழுக்க நெறிகளை கடைபிடித்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற முடியும் என்பதுதான் ஆண்டவர் கட்டளை .என்கின்றார் .

நான் உரைக்கவில்லை !

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை 
நம்புமினோ நமரங்காள் நற் தருணம் இதுவே 
வான் உரைத்த மணி மன்றில் நடம்புரி எம்பெருமான் 
வரவு எதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே 
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் 
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும் 
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் கண்டீர் 
யான் அடையும் சுகத்தனை நீர் தான் அடைதல் குறித்தே !

மேலும் உண்மை சொல்லுகின்றேன் என்னுள் இருந்து இறைவன் சொல்லுகின்றார் அதனால் உண்மையை சொல்லுகின்றேன் என்கின்றார்.

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர் 
உரை இதனில் சந்தேகித்து உளறி  அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாஞ் செய் வல்லான் 
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவீர் 
தண்மை யொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் 
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய  வாழ்வளிக்கக் 
கண்மை தரும் ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலுங் 
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

என்னும் பாடல் வாயிலாக எளிய தமிழ் நடையில் தெளிவாக தெரியப் படுத்துகின்றார் .ஆறாம் திருமறை முழுவதும் சாகாக் கல்வி கற்று அருளைப் பெற்று மரணம் இல்லாமல் வாழும் வழியைக் கற்றுக் கொள்ளும் உயர்ந்த  ஒழுக்க நெறியாகும் .

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்று கருணை நெறி 
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் 
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப் 
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே !

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க 
ஞான அமுதம் எனக்கு நல்கியதே --வானப் 
பொருட் பெருஞ் ஜோதிப் பொதுவில் விளங்கும் 
அருட்பெருஞ்ஜோதி அது !

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார 
நித்த வடவும் நிறைந்து ஓங்கும் --சித்து எனும் ஓர் 
ஞான வடிவும்  இங்கே நான் பெற்றேன் எங்கு எங்கும் 
தான விளையாட்டு இயற்றத் தான் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே 
கனலாலே புனலாலே கதிர் ஆதியாலோ 
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே 
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே 
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் 
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே 
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர் 
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

நோவாது நோன்பு  எனைப்போல் நோற்றவரும் எஞ் ஞான்றும் 
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின் 
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் 
யார் உளர் சற்றே அறை !

என ஆயிரக் கணக்கான பாடல்கள் வாயிலாக மரணம் இல்லாமல் வாழும் வழியையும்  தான் வாழ்ந்து காட்டிய வழி முறைகளையும் பாடல்கள் வாயிலாகவும்,உரைநடை விண்ணப்பங்கள் வாயிலாகவும்  ஆறாம் திருமுறையில் நிறைய  பதிவு செய்து உள்ளார் ..

ஆறாம் திருமுறையை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளாமல் வள்ளலாரைப் பற்றி அறிவு தெளிவு இல்லாமல் மக்கள் பலர் பலவிதமாக பேசிக் கொண்டு இருப்பதும்,எழுதிக் கொண்டு இருப்பதும் அறியாமையாகும்.வேதனைத் தருவதாகும்.இனிமேலாவது ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள் வள்ளலாரின் வாழ்க்கையின்  உண்மையை அறிந்து கொண்டு செயல்பட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் .

இது சுருக்கம் விரிக்கில் பெருகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 
9865939896. .

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சன்மார்க்க சங்கங்களில் விபூதி பிரசாதம் வழங்கலாமா !


சன்மார்க்க சங்கங்களில் விபூதி பிரசாதம் வழங்கலாமா !

சின்னகாவனத்தில் உள்ள முக்கியமான  நண்பர் ஒருவர் கேட்டார் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் .என்பது சாதி,.சமய .மதங்களை கடந்தது.அதில் எந்த சாதி,சமய மதங்களை சார்ந்த பிரசாதங்களையும் வழங்குவது அவ்வளவு நல்லதாக தெரியவில்லை...

வள்ளலார் ஆரம்ப காலத்தில் விபூதி வழங்கி உள்ளார் என்பதை பலர் பலவிதமாக விளக்கம் சொல்லுவார்கள்..விபூதி கொடுத்து பல நோய்களை நீக்கி உள்ளார் என்றும் சொல்லுவார்கள்...கண்நோய் உள்ளவர் ஒருவர்  வருகின்றார் .அப்போது வள்ளலார் அருகில் இருந்த வாழைப் பழத்தைக் கொடுத்து கண்ணில் வைத்து கட்டுங்கள் கண்நோய் நீங்கிவிடும் என்று சொல்லுகின்றார் அப்படியே கண்நோய்  நீங்கி விடுகின்றது.

எந்த நோய் நீங்குவதும் கொடுக்கும் பொருளில் இல்லை .கொடுப்பவரின் அருள் ஆற்றலில்தான் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அதே விபூதியை நாம் கொடுத்தால் நோய்கள்  நீங்கி விடுமா என்றால் நீங்காது.

வள்ளலார் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்த காலத்தில் விபூதி வழங்கினார் .பின்பு சமரச சுத்த சன்மார்க்க சத்திய  சங்கம் என்ற பொது நெறியை,பொது மார்க்கத்தை  உலகிற்கு அறிமுகப் படுத்து கின்றார் ,அதன் பின்பு அவர் தோற்றி வைத்த சுத்த சங்கத்திற்கு,எந்தவிதமான சாதி  சமய மதங்களின் சின்னங்கள் வேண்டாம் என்கின்றார்.அவைகள் யாவும் சுத்த சன்மார்க்கத்திற்கு தடையானவை என்கின்றார்.

மேலும் பெருபதேசத்தில் வள்ளலார்  சொல்லுவதை கவனிக்க வேண்டும் !

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் ,இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது ,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள் ஆனால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்திப் பெற்றுக் கொண்டார்களா ? பெற்றுக் கொள்ளவில்லை.நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்து இருந்த லஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ ,.அந்த லஷியம் தூக்கி விடவில்லை

மேலும் இவைகளுக்கு எல்லாம் சாட்சி நானே இருக்கின்றேன்,நான் முதலில் சைவ சமயத்தில் லஷியம் வைத்துக் கொண்டு இருந்தது,இவ்வளவு என்று சொல்ல முடியாது.அது பட்டினத்து சாமிகளுக்கும், வேலாயுதம்  அவர்களுக்கும் ,இன்னும் சிலருக்கும் தெரியும்.அந்த லஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டுவதில்லை .

நான் பாடி இருக்கின்ற திருவருட்பாவில் அடங்கி இருக்கின்ற நான் பாடி இருக்கின்ற பாடலையும்.மற்றவர்கள் பாடலையும் சபைக்கு கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும்.ஏன் ? அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு  கொஞ்சம்
அற்ப அறிவாக இருந்தது என்பதை வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

வள்ளலாருக்கு அற்ப அறிவு என்பது கிடையாது .நாம் திருந்த வேண்டும் என்பதற்காகவே அப்படி சொல்லுகின்றார்.எப்படியாவது எந்த விதத்திலாவது நம்மைத் திருத்த  வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் எண்ணம் ,சொல் .செயல் எல்லாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவரே வழிபாட்டு விஷயங்களில் ஒரு தடையும் செய்யாமல் நான் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும் என்கின்றார்,

ஒவ்வொரு சங்கங்களிலும் விண்ணப்பம் எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி வைத்து எழுதியும் வைத்துள்ளார் .

எல்லாம் உடையானுக்கு விண்ணப்பம் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார ,சங்கற்ப விகற்பங்களும் .வருணம் ஆசிரமும் முதலிய

உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்கின்றார் .

அதற்குமேலும் .சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் ,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எவ்வளவும்,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.என்று தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .

விபூதி என்பது சைவ சமய சின்னங்களில் ஒன்று .இப்படி.வைணவம்,கிருத்தவம்,இஸ்லாம் ,பவுத்தம் சமணம்,போன்ற  ஒவ்வொரு சமய மதங்களுக்கும் ஒவ்வொரு சின்னங்கள் உண்டு. எனவே எந்த ஒரு தனிப்பட்ட சமய மதங்களின் சின்னங்களை அடையாளங்களை  பிரசாதமாக வழங்க வேண்டிய அவசியம்.இல்லை.எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இனிப்பு வழங்கலாம்.கற்கண்டு,நாட்டு சர்க்கரை போன்றவற்றை  வழங்கலாம்..

இப்போது வடலூர் ஞான சபையில் நாட்டு சர்க்கரை மட்டுமே  வழங்கிக் கொண்டு உள்ளார்கள்.இன்னும் தருமச்சாலை,கருங்குழி,மேட்டுக்குப்பம் ,மருதூர் போன்ற இடங்களில் விபூதி வழங்கிக் கொண்டு உள்ளார்கள் .அவற்றையும் காலப் போக்கில் மாற்றும் வேலையை சுத்த சன்மார்க்கிகள் செயல்படுத்த வேண்டும். ஆரம்ப காலத்தில் இருந்தே சமய மத சன்மார்க்கிகள் அந்த பழக்கத்தை கொண்டு வந்து விட்டார்கள்.இன்னும் நிறைய வடலூர் தெய்வ நிலையங்களின் பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டி உள்ளது.

ஆச்சார சங்கற்ப விகற்பங்களில் விபூதியும் ஒன்று எனவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களில் விபூதிக்குப் பதிலாக இனிப்பு வழங்குவதே நல்லதாகும் ,நன்மையாகும்.

இதிலே வாதங்களை விட்டுவிட்டு வள்ளலார் சொல்லியுள்ள உண்மை நெறியான சுத்த சன்மார்க்க பெரு நெறியைப் பின்பற்றி ,சாதி  சமய,மத சின்னங்களை, சங்கற்ப விகற்ப  ஆசாரங்களை, வழங்காமல் இனிப்பு வழங்கினால் .வருங்கால சந்ததிகளுக்கு நல்ல வழிகாட்டுதலாக அமையும்....

குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்மின் இங்கே வம்மின்
கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது
மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர்
பொறித்த சமயம்,மதம் ,எல்லாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்
செறித்திடு சிற்சபை  நடத்தை தெரிந்து துதித்திடு மின்
சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே !

என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் ,

சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்
ஜோதியைக் கண்டேன் ....என்றும்
பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேன் என்கின்றார் .....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
நான் யார்?

நான் யார்?

ரமணர் நான் யார் நான் யார் ? என்று கேட்டுக் கொண்டே இருந்தார் முடிவில் நான் யார் எனபதை அறியாமலே நோய்வாய்ப் பட்டு மாண்டு போனார்.

அதேபோல் நாம் போற்றும் ஆன்மிகவாதிகள் நிறைய பேர் மாண்டு போனார்கள்

வள்ளலார் நான் யார் என்பதையும் அறிந்தார்.நாம் யார் என்பதையும் அறிந்தார்.நம்மை படைத்தவன் யார் என்பதையும் அறிந்தார்.

படைத்தவனைத் தொடர்பு கொண்டார் .அவரிடம் அருளைப் பெற்றார்.ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு மரணத்தை வென்று .கடவுள் நிலை அறிந்து அம்மயமானார்.

மனித தேகம் எடுத்த அனைவராலும் இறைவன் பெருங்கருணையால்.அருளைப் பெற முடியும் என்பதை மக்களுக்கு போதித்தார்.போதித்துக் கொண்டே இருக்கின்றார்.

நாமும் அவர் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதையைப் பின்பற்றி ஒழுக்கமுடன் வாழ்ந்து ஆன்ம லாபம் பெறுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அன்பு அறிவு அருள் !

அன்பு அறிவு  அருள் !

அன்பும், அறிவும் நமக்கு இருந்தால் நமக்கு எல்லா உண்மைகளும் தெரியும் .
நாம் யார் ? என்பதும் தெரியும் ,நம்மை அனுப்பியவர் யார் ? என்பதும் தெரியும்.நமது வாழ்க்கையின் லாபம் எவை  என்பதும் தெரியும் ,அவற்றை எப்படி பெற வேண்டும்  என்பதும் தெரியும்.அந்த லாபத்தினால் நாம் அடையும் பேரின்ப லாபம் எவை  என்பதும் தெரியும்.

அந்த பேரின்ப லாபம் எவை என்பது  தெரியாமல்,புரியாமல்,அறியாமல்  இருப்பதற்கு காரணம் ,நம்மிடம் அன்பும் அறிவும் இல்லை என்பதை வள்ளலார் தெரிந்து கொண்டு ,அன்பும் அறிவும் விளக்கம் அடைந்து விளங்குவதற்க்காக  உண்மையான வழியைக் காட்டுகின்றார். அதற்குப் பெயர்தான் சுத்த சன்மார்க்கம் ஒழுக்கம் என்பதாகும்.

அவைதான் ஜீவ காருண்யம்.!

அதற்கு ஜீவ காருண்ய வல்லபம் என்கின்றார்.ஜீவ காருண்ய வல்லபம் எவை    என்றால், பிற உயிர்கள் இடத்துப் பசி கொலை முதலியவற்றால் எதனால் காருண்யம் தோன்றியதோ அதனால் அவ்வுயிர் வருந்தாத படி அதை நீக்குதற்கு முயற்ச்சிப்பது அதன் வல்லபம் என்று அறிய வேண்டும்,என்கின்றார்..

இந்த வல்லபத்தால்  நமக்கு என்ன கிடைக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஜீவ காருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும் ,அதனால் உபகார சத்தி விளங்கும் அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் என்கின்றார்.வள்ளலார் ...

எனவே ஜீவ காருண்யத்தால் அன்பும் அறிவும் விளங்கும் என்கின்றார் ..அன்பும் அறிவும் விளங்குவதற்குத்தான் ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் .   அந்த ஜீவ காருண்யம்  மட்டுமே மரணத்தை வெல்ல முடியுமா ? என்றால் வெல்ல முடியாது .புறத்தில் செல்லும் மனத்தை அடக்குவதற்கு ,அன்பும் அறிவும் தேவைப்படுகின்றது

எனவேதான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் எனவும் என்றும் வள்ளலார் தெளிவுபட சொல்லி உள்ளார் ..ஜீவ காருண்யத்தால் அருள் என்னும் கோட்டையின் சாவி கிடைத்து விடும்.சாவி கிடைத்து  விட்டால் மட்டுமே கதவு திறக்க முடியுமா ? என்றால் திறக்க முடியாது...ஜீவ காருண்யத்தால் ஆன்ம நெகிழ்ச்சி ,ஆன்ம உருக்கம் உண்டாகும் .ஆன்ம நெகிழ்ச்சியால் ஆன்ம உருக்கத்தால் அன்பும் அறிவும் முழுமையாக வெளிப்படும்...

சத் விசாரம் !

அதற்குமேல் ஜீவ காருண்யம் என்ற  ஒழுக்கம் வேண்டும் என்கின்றார் அதாவது நம்முடைய,உடம்பையும்  உயிரையும் ஆன்மாவையும் காப்பாற்றும் ஒழுக்கமாகும்  அதற்கு சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்கின்றார்.சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்பது ,சத் விசாரம் என்பதாகும்.சத்விசாரம் என்பது,அன்பையும்,அறிவையும் கொண்டு உண்மையான .இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான்  என்பதை அறிவாலே அறிந்து இடைவிடாது தொடர்பு கொள்வதாகும்.

சத்விசாரத்தில் இரண்டு வகை உள்ளது என்கின்றார் .பரம் ,அபரம் என்று இரண்டு வகையாக உள்ளது.இவற்றில் பரம் பரலோக விசாரம்,அபரம் இகலோக விசாரம்.இவை இரண்டில் இகலோக விசாரம் விசாரம் அல்ல ,சாதாரணமாக ஒருவன் வி -சாரம் செய்து கொண்டு இருக்கின்றானே என்றால் அவ்விசாரம் விசாரம் ஆகாது.உண்மை விசாரமும் இல்லை .மேலும் பரலோக விசாரத்தையே குறிக்க வந்தது...இகலோக விசாரத்தை மறுக்க வந்தது என்கின்றார்.

அவ் விசாரத்தால் என்ன உண்டாகும் என்றால்,அன்பும் அறிவும் விளங்கி  ஆன்மாவை இடைவிடாது  தொடர்பு கொள்ளுகின்ற போது,அந்த மோதலால் சுத்த உஷ்ணம் உண்டாகும் என்கின்றார்.அந்த சுத்த உஷ்ணத்தால் .நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடி இருக்கின்ற,கருமையில் பச்சைவண்ணம் கலந்த  முதல் திரையாகிய பச்சைத் திரையை  நீக்கிக் கொள்ளலாம் என்கின்றார்.

இந்த உஷ்ணத்தை  சாதாரண மனித தரத்தில் உண்டு  பண்ணுவதற்குத் தெரியாது .இங்கே தான் நாம்  மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

உண்மையான ஆண்டவரை இடைவிடாது ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்,நினைக்கின்றதிலும்,அதிக உஷ்ணம் உண்டாகும் என்கின்றார்.இதற்கு சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்கின்றார்.,இதற்கு எவை எவைகள் தடையாக இருக்கின்றதோ அவற்றை எல்லாம் தூக்கி அப்புறப் படுத்திவிட வேண்டும் என்கின்றார். அதைத்தான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் என்று ஒரு பட்டியல் போடுகின்றார் ..

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய,சமயங்கள்  மதங்கள்,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம்,ஆசிரமம்,முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் ,

அதற்குமேல் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் ,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தல் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார்.இதற்குப் பெயர் சத்விசாரம்  என்பதாகும்

ஜீவ காருண்யம் என்பதைக் கருத்தில் கொண்டு  உணவு மட்டும் வழங்கிக் கொண்டு .சாதி,சமயம்,மதங்களில் பற்று வைத்து கொண்டு இருப்பதால் எந்த  பயனும் கிடைக்காது ஆன்ம லாபமும் கிடைக்காது.

சத் விசாரத்தைக்  கடைபிடிக்காமல் அருள்  கிடைக்காது ,அருள் சுரக்காது  மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்காது. இவற்றைத் தெரிந்து கொள்வதற்கு அன்பும் அறிவும் வேண்டும்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே !

என்கின்றார் .ஜீவ காருண்யத்தால் அன்பும் அறிவும் விளங்கும் ,அதற்குமேல் அறிவைக் கொண்டு அறிவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.அதாவது ஆன்ம அறிவைக் கொண்டு கடவுள் அறிவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.அப்போதுதான் உண்மையான அனுபவம் தோன்றும்.அந்த உண்மை அனுபவத்தால் அருள் உருவம் என்னவென்பதும்,அதன் தன்மை என்னவென்பதும்,தெரியும்.

அதற்குமேல் அருளைக் கொண்டு அருள் கொடுக்கும்  இறைவனைத் தொடர்பு கொள்ளவேண்டும்.அப்போதுதான் அருளின் நடமும்,ஆண்டவரின் நடனமும் உண்மையான அருட்பெருஞ்ஜோதி  உருவமும் தெரிந்து கொள்ள முடியும்   அவரின் அருளாலே அவர் தாள் வணங்கி அருள்பெற முடியும். அதன்பின்பு தான்,அருளைக் கொண்டு கோட்டையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய முடியும்.அதன் பின்பு தான்  பேரின்ப பெரு லாபமும், பேரின்ப பெரு வாழ்வும்,கிடைக்கும்,அதன்  பின்பு தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்.;;;

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்
அடர் கடந்த திருவமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
தெரிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடம் செய் இறைவன் இறைவன் அருட் செயலே !

என்ற பாடல் வாயிலாக வள்ளலார்  உண்மையை உரக்க சொல்லுகின்றார்

 மேலும்  வள்ளலார் பாடல் !

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே !

எனவே ஜீவ காருண்யத்தைக் கொண்டு அன்பும் அறிவையும் பெற வேண்டும்..சத் விசாரத்தால் கடவுள் அறிவையும்,கடவுள்  அருளையும் பெற வேண்டும்.எனவே தான் ஜீவ தயவைக் கொண்டு கடவுள் தயவைப் பெற வேண்டும் என்கின்றார் ..அன்பு,தயவு,அறிவு கருணை அருள் என்பது ஒரு பொருளையே குறிப்பதுபோல் தோன்றும்.,,ஒவ்வொன்றுக்கும்.வெவ்வேறு தன்மையும்,ஆற்றலும்,செயலும்  உண்டு.இவற்றை அறிவாலும்  அனுபவத்தாலும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.