சனி, 6 ஏப்ரல், 2013

சுத்த சன்மார்க்க மரபு !

சுத்த சன்மார்க்க மரபு !

சுத்த சன்மார்க்க மரபு என்பது வள்ளலார் காட்டிய கடவுளின் உண்மை நெறியாகும்.அந்த நெறிக்கு வள்ளலார் வைத்த பெயர் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்பதாகும் .சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்ன என்பதை உலக மக்களுக்குத் தெளிவுப் படுத்தி உள்ளார்.

வள்ளல் பெருமானுக்கு  முன்பு உலகில் சுத்த சன்மார்க்கமும் இல்லை! சுத்த சன்மார்க்க மரபு என்பதும் இல்லை! சுத்த சன்மார்க்கத்தைப் பற்றியும் அதன் மரபு பற்றியும்,அறிந்து  தெரிந்து கொண்ட அருளாளர்கள் உலகில்,எவரும்   கிடையாது ;--சாதி சமயம்,மதம் சாத்திரம் போன்ற சார்பு உள்ள,சங்கங்கள்,மார்க்கங்கள்,பல அமைப்புகள் கடவுளைப் பற்றிய சாதாரண சன்மார்கத்தின் கொளகைகளைப் பற்றி சொல்லியும்,எழுதியும் பற்பல ஆலய வழிபாட்டு முறைகளையும்,தவம்,தியானம்,யோகம் போன்ற முறைகளையும் புறத்திலே படைத்து வைத்து உள்ளார்கள்.

அவைகளால் உலக மக்கள் ஏதாவது உண்மையும், நன்மையும், பெரும் பயனையும் அடைந்து உள்ளார்களா ? என்றால் இதுவரையில் எந்த உண்மையும்,எந்த நன்மையையும்,எந்த பயனையும் அடைந்து உள்ளார்களா ? என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது. ,வள்ளலாருக்கு முன்பு வரை மக்கள் இறைவனுடைய முழுமையான அருளைப் பெற்று,மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி உள்ளார்களா ? என்றால்  இல்லை !.சுத்த பிரணவ ஞானதேகம் என்னும் முத்தேக சித்தி பெற்று உள்ளார்களா > என்றால் இல்லை என்ற பதில்தான் வருகின்றது.

மேலும் இறைவனுடைய ஐந்தொழில் வல்லபத்தை பெற்று உள்ளார்களா என்றால் வள்ளல் பெருமானைத் தவிர வேறு யாரும் பெற்றுக் கொள்ளவில்லை.

வள்ளல்பெருமான வாழ்ந்து வழிகாட்டிய மார்க்கம்,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்னும் தனிநெறி.,பெருநெறி.புனிதநெறி,திருநெறி,அருள் நெறியாகும் ,மேலும் அனைத்து உலகத்திற்கும் பொதுவான நெறியாகும்.

அந்த புனித பொது நெறிக்கு ''சுத்த சன்மார்க்க மரபு '' என்ற கொள்கையை வகுத்து தந்துள்ளார் நமது வள்ளல்பெருமான் .

சன்மார்க்கம் என்பதில் பல மார்க்கங்கள் உள்ளன.;...
சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம்,வேத சன்மார்க்கம்,ஷடாந்த சன்மார்க்கம்,போன்ற சன்மார்க்கங்கள் உள்ளன.சன்மார்க்கம் என்றால் உயர்ந்த மார்க்கம் என்பதாகும்.

வள்ளலார் பல மார்க்கங்களை கடந்து, உண்மையான மார்க்கம் என்ன ? அது எங்கே இருந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதை ,அருளால் அறிந்து,அதன்படி வாழ்ந்து ,தான் அறிந்து வாழ்ந்த அருள் அனுபவத்தை   உலக மக்களுக்கு தெரியப் படுகின்றார்.

அவர் அறிந்த உண்மைக் கடவுள் ''அருட்பெருஞ்ஜோதி'' என்னும் தனிப்பெருங் கருணை உள்ள கடவுளாகும்..அந்தக் கடவுள் அருள் ஒளியாக உள்ளார்.எல்லா உயிர்களுக்கு உள்ளும், உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு உள்ளவராகும் அந்த ஒளியான அருட்பெருஞ்ஜோதி என்னும் கடவுள்,சத்தாகவும்,சித்தாகவும்,ஆனந்தமாகவும்,அனைத்து உயிர்களுக்கும் பேதம் இல்லாமல் வழங்கிக் கொண்டு உள்ளவராகும்.

இயற்கை உண்மையாக ..,இயற்கை விளக்கமாக ,..இயற்கை இன்பமாக என்றும் நிலையாக,தோற்றம் மாற்றம் இல்லாத  ஒரே கடவுள்தான் ,அருட்பெருஞ் ஜோதி என்னும் உண்மைக் கடவுளாகும்.

சாதாரண மார்க்கம் !

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட அண்டங்களையும்,உலகங்களையும்,உலகங்களில் உள்ள கிரகங்களையும்,பஞ்ச பூத அணுக்களின் தோற்ற மாற்றங்களையும்,செயல்பாடுகளையும்,அவற்றில் வாழும் உயிர்களையும், உயிர்களின் வாழ்க்கை முறையில் உண்டாகும் இன்பம் துன்பங்களையும்,துன்பத்தை நீக்கி,இன்பத்தை அடைந்து, அதாவது சிற்றின்பத்தை நீக்கி, பேரின்பத்தை  அடையும் வழி முறைகளை மக்களுக்குக் கற்பனைக் கதைகளாக காட்டி உள்ளார்கள். இதுவே மேலே கண்ட சாதாரண சன்மார்க்க கொள்கைகளின் வழி காட்டுதலாகும்.

வள்ளல்பெருமான் !

ஆனால் மேலே சொன்ன மார்க்கங்கள் ஏதாவது உண்மையான,நேர்மையான,ஒழுக்கமான, முழுமையான,எளிமையான  வழிமுறைகளைக் காட்டி உள்ளதா? என்றால் இல்லை எனற பதில் தான் வருகிறது.ஆதனால் தான் உண்மைக் கடவுளையும், உண்மையான வாழ்க்கை முறைகளையும்,அருளைப்பெரும் உண்மையான வழிமுறைகளையும்  மக்களுக்கு போதிக்க அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் உண்மை இறைவனால்  வருவிக்க உற்றவர் தான் இராமலிங்கம் என்னும் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

வள்ளல் பெருமான் அவர்கள் இறுதியாக பேருபதேசம் என்ற பகுதியில் மக்களுக்கு போதித்து உள்ளது .

இதுவரையில் நாம் நாமும்,பார்த்தும் ,கேட்டும்,லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனிலும் லஷியம் வைக்க வேண்டாம்,ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது வெளிப்படையாக,தெய்வம் இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் ,மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல் ,பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.அவை யாதெனில் ;--கைலாயபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும்,பெயரிட்டு,இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் ,முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து,உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.தெய்வத்துக்கு கை,கால்,வாய்,மூக்கு,காது,கண்கள் உடம்பு முதலியன இருக்குமா ?என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.

இஃது உண்மையாக இருப்பதாகவே --முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்.ஆனால் '''ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ''அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்ட பாடில்லை.அவர் யார் தெரியுமா ?அவர்தான் மகாபாரதம் எழுதிய ''வேத வியாசர்'' என்பவராகும். அவருக்குப் போட்டியாக வந்து  ராமாயணம் எழுதிய, வால்மீகி முனிவர் என்பவராகும்.மற்றும் உள்ள மதத் தலைவர்களாகும்.

அவர்களுக்கு பின்னாடி வந்த ஆன்மீகப் பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும்,உண்மைத் தெரியாமல் கண்ணை முடுக்கொண்டு உண்மையாக இருப்பதாகவே ஒன்று கிடக்க ஒன்றை உளறிக் கொண்டு உள்ளார்கள் .

அவர்கள்  பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை.இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை  என்கிறார் நமது வள்ளல்பெருமான் அவர்கள் ...அதன் உண்மை என்ன வென்றால் நான் வந்து விட்டேன் அந்த பூட்டை உடைத்து விட்டேன்.அவைகளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விட்டேன்.என்பதாகும்.உலக உண்மைகளையும், கடவுளின் உண்மைகளையும்,உயிர்களின் உண்மைகளையும் ,உயிர்களின் வாழ்க்கை முறைகளையும் ஆன்மாவின் உண்மைத் தன்மையை  அறிந்துக் கொள்வதற்கு தோற்றுவிக்கப் பட்டதுதான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்'',சுத்த சன்மார்க்க மரபு என்பதாகும்.    

வள்ளல்பெருமான் தோற்றுவித்த மார்க்கம் தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''எனற மார்க்கமாகும்.

வள்ளல்பெருமான் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திற்கு என்று ஒரு தனி மரபை வெளிப்படுத்தி உள்ளார்.அவை ''சுத்த சன்மார்க்க மரபு'' என்பதாகும்.அதில் சாகாதவனே சன்மார்க்கி என்றும்,சாகாமல் இருக்கும்  வழியை அறிந்து கொண்டவன் தெரிந்து கொண்டவன்,இறை நிலையை அறிந்தவனாகும் ,கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டவன் என்றும், அவனே சன்மார்க்கி என்றும் தெளிவுப் படுத்தி உள்ளார்.

முன்பு  இருந்த அருளாளர்கள் என்பவர்கள்,சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்னும் உருவ வழிப்பாட்டு முறைகளிலும்  கடவுளைக் காணலாம் என்பதை  மக்களுக்குக் காட்டி உள்ளார்கள்.மேலும் கடவுளைக் காண, தவம் ,தியானம்,யோகம் போன்ற வழி முறைகளையும் காட்டி உள்ளார்கள்.உருவ வழிபாட்டால் உடம்புக்கோ, உயிருக்கோ ,ஆன்மாவுக்கோ எந்த நன்மையும், மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை..மேலும்  மரணத்தை வெல்லும் வழிமுறைகளும்  அவர்களுக்குத் தெரியவில்லை.தெரிந்து கொள்ளவும் முயற்ச்சிக்க வில்லை.

உருவ வழிபாட்டால் மன உருக்கம் ,மன நெகிழ்ச்சி மட்டும் தான் உண்டாகும்.மனதில் பதிவது யாவும் உடனே அழிந்துவிடும.அவை ஜீவன் என்னும் உயிரையும் ஆன்மா என்னும் உள் ஒளியையும் காப்பாற்றாது .

தியானம்,தவம்,யோகம்,போன்ற செயல்களினால் ஏகதேச அற்ப அருள் கிடைத்து,  சமாதி நிலையை அடையலாமே தவிர வேறு எந்த ஆன்ம லாபமும் ,கடவுள் இன்பமும் ,கடவுளின் பூரண அருளும் கிடைக்காது.மறுபடியும் மரணம் அடைந்து,மறு பிறப்பு எடுத்து அருளைத் தேடி அலைய வேண்டும்.

கடவுளை அறிவது எப்படி அருளைப் பெறுவது எப்படி ?

கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆண்டவர் ஒருவரே உண்டு என்றும் அவர் அருள் ஒளியாக உள்ளார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் .அந்த ஒளிதான் எல்லா உயிர்களிலும் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளன என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும் .

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியின் இடத்தில் இடைவிடாத அன்பும்,அவரால் படைக்கப் பட்ட உயிர்கள் இடத்தில் இரக்கமும்,கருணையும்  தயவும், அவசியம் தேவை என்கிறார் வள்ளல் பெருமான் அவர்கள்..

நம்முடைய ஆன்மாவின் இயற்கை குணம் அன்பு தயவு கருணை,இரக்கம்  என்பதாகும்.நம்மிடம் உள்ள அன்பும் தயவும் எங்கே போனது.? சாதி மதம்,சமயம் போன்ற உதவாத கொள்கைகளை பின்பற்றியதால் இயற்கையாக உள்ள அன்பு,தயவு, கருணை,இரக்கம் போன்ற நற்பண்புகள் வெளியே தெரியாமல் தோன்றாமல் மறைந்து கொண்டு உள்ளது.அவை எங்கே மறைந்து கொண்டு உள்ளது.ஆன்மாவில் திரைகளாக மறைந்து கொண்டு உள்ளது.திரைகளால் மறைத்துக் கொண்டு உள்ள ஆன்மாவைத் தெரிந்து கொள்ளவும்,அத்திரைகளை நீக்கவும் வழி தெரியாமல்,மக்கள் துன்பமும் துயரமும்,அச்சமும் பயமும் சூழ்ந்து கொண்டு மரணம் என்னும் சாகரத்தில் அழிந்து கொண்டு உள்ளார்கள்.

சமய மதங்களின் பொய்யான கற்பனைக் கதைகள் !

ஆன்மா என்றும் அழியாது, உயிரும்  உடம்பும்  அழிந்து விடும்.ஆன்மா மோட்ஷம்,சொர்க்கம்,வைகுந்தம்.பரலோகம்,கைலாயம் போன்ற இடங்களுக்கு சென்று,ஆன்மா பின் கடவுளிடம் சென்று விடும் என்ற பொய்யான கற்பனைக் கதைகளை மக்களிடம் விதைத்து விட்டார்கள்.அதையும் உண்மை என்று நம்பி மக்கள், அறியாமையால்,வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.மேலும் அழிந்து கொண்டே உள்ளார்கள்.

மேலும் புண்ணிய தீர்த்தங்கள் என்று சொல்லி, கங்கை ,யமுனை,காவேரி.கோதாவரி,காசி,ராமேஸ்வரம்.போன்ற இடங்களில் மூழ்கினால் கர்மம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்ற பொய்யான வழிமுறைகளை காட்டி மக்களை பைத்தியக் காரர்களாக மாற்றி,சுற்ற விட்டு விட்டார்கள்.

அப்படிச் சுற்றி அலைந்து அழிந்து கொண்டுள்ள மக்களை,அந்த படு குழியில் இருந்து காப்பாற்ற ''சுத்த சன்மார்க்கம்'' என்னும் உண்மையான மெய் நெறியை,  தனி நெறியை,...சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான மார்க்கம் என்னும் அருள் நெறியை ...மனித குலத்திற்கு அறிமுகப் படுத்தி,அதன்படி வாழ்ந்தும் காட்டியுள்ளார் வள்ளல்பெருமான் அவர்கள் .  

வள்ளலார் சொல்லியது ஞான மார்க்கமாகும்.

முன்பு தோன்றிய அருளாளர்கள்  சொல்லி வைத்துள்ள சன்மார்க்க மரபுகள் என்ன ? வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,தோத்திரம் போன்ற கொள்கைகளை கூட்டி,பெருக்கி,வகுத்து,கழித்து,அழித்து, அமைத்து அதன் அதன் தன்மைக்குத் தகுந்தாற்  போல்,சமயத்திற்கு தகுந்தாற்போல்,நேரத்திற்கு தகுந்தாற்போல்  உண்மையான மரபுகளை,மாற்றி மாற்றி அமைத்து,மக்களுக்கு நிலையான,நேர்மையான ,ஒழுக்கமான,உண்மையான பொதுவான ஒரு மார்க்கம் இதுதான் என்னும் உண்மை நெறியை, மரபு மீறாமல் மக்களுக்கு காட்டி உள்ளார்களா? என்றால் இல்லை என்றுதான் விடை கிடைக்கும்.

சுத்த சன்மார்க்க மரபு.!

மரபு என்றால் ஒரு கொள்கையின்படி உண்மையான நேர்மையான வழியைக் காட்டும்,ஒழுக்கமான மார்க்கமாக இருக்க வேண்டும்.,அனைத்து உயிர்களுக்கும்,உயர்ந்த அறிவுள்ள மனிதர்களுக்கும்,உண்மை தெரியாமல் மரணம் அடைந்து சென்ற,சமய மத அருளாளர்களுக்கும்,ஒட்டு மொத்தமான உண்மை பொது மார்க்கமாக திகழ்வதுதான் வள்ளலார் காட்டிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்னும் ஞான மார்க்கமாகும்.அதுவே ''சுத்த சன்மார்க்க மரபு'' என்பதாகும்.

அவர் காட்டிய பொதுவான சுத்த சன்மார்க்கம் என்ற அமைப்பும் அதன்
சட்டதிட்டங்களும் யாவை எனில்;--அனைத்து ஆன்மாக்களையும் ,அனைத்து உயிர்களையும்,அனைத்து தர  மக்களையும்  காப்பாற்றும் கருணை நெறியாகும்,உயர்ந்த மனித குலத்தின், தனிமனித ஒழுக்க நெறியாகும்..அதுவே சுத்த சன்மார்க்க மரபின் சட்ட திட்டங்களாகும். அந்த சட்ட திட்டங்கள் வழியாக மக்களுக்கு முழுமையான உண்மையான ஒழுக்கமும்,உயர்வும்,நேர்மையும்,  நம்பிக்கையும்,அறிவு விளக்கமும்,அருள் விளக்கமும்,அதனால் பெரும் ஆன்ம லாபமும்.,அதனால் பெரும் அரிய பேரின்பமும் அடையமுடியும்.

மனிதனாக பிறப்பு எடுத்த மனிதன்  ''மரணத்தை வெல்ல முடியும்'' மரணத்தை வென்றால்தான் கடவுள் நிலையை அறியமுடியும்,அடையமுடியும்  என்ற உண்மையை மக்களுக்கு போதித்து உள்ளார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்..மனிதனும் கடவுள் நிலையை அறிந்து அம்மயமாகலாம் என்ற உயர்ந்த வாழ்க்கை முறைகளை மக்களுக்கு போதித்து  வாழ்ந்து காட்டி உள்ளவர்தான் வள்ளல் பெருமான் அவர்கள்.

வள்ளலாருக்கு முன்னாடி வந்த அருளாளர்கள் என்று சொல்பவர்கள்,அனைவரும்,உண்மைகளை மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.உண்மையை தெரிந்து கொள்ள,அறிந்து கொள்ள நினைந்து கேட்பவர்களுக்கு, பதில் சொல்லத் தெரியாது விழித்துக் கொண்டு உள்ளார்கள்...

பொய்யான கற்பனைக் கதைகளை, உண்மையாக இருபதாகவே ...முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களான   கர்ம சித்தர்கள்,யோக சித்தர்கள்,ஞான சித்தர்களாகிய வியாசமுனிவர் , வால்மீகி,சேக்கிழார், நாயன்மார்கள்,ஆழ்வார்கள். சங்கராச்சாரியார்,ஆதி சங்கரர்,குருநானக்,மத்துவஆச்சாரியர்,மகாவீரர், மேலும் புத்தர், இயேசுபிரான்,நபிகள்நாயகம் போன்ற பெரியவர்கள் எல்லாம் உண்மையை அறியாது கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கிறார்கள்.

ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன்.(வேதவியாசர் ) அவர் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவர்  பூட்டிய பூட்டை(மறைத்ததை ) ஒருவரும் திறக்க வரவில்லை.இது வரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய,அந்த பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார் .அதன் உண்மை என்ன? நான் அந்த பூட்டை திறந்து விட்டேன் உடைத்து விட்டேன்.இனிமேல் அந்த மேல்வீட்டுக் கதவை யாரும் பூட்டுப் போட முடியாது.பூட்டுப் போடும் சக்தி ,அருள், வல்லமை யாருக்கும் கிடையாது என்கிறார் வள்ளல் பெருமான்.

முன்பு  உள்ள அருளாளர்கள் எழுதி வைத்துள்ள,ஆன்மீக கதைகள்,கற்பனைகள்  எல்லாம் இனிமேல் மக்கள் நம்புவதாக இல்லை.மக்கள் விழித்துக் கொண்டார்கள்.மக்கள் அறிவு தெளிவுடன் சிந்திக்கும் திறன் வாய்ந்தவர்கள் இனி வருங்காலம் உயர்ந்த அறிவு விளங்கும் காலம்,அருள் விளங்கும் காலம்,விஞ்ஞானம் விளங்கும் காலம்,அறிவியல் விளங்கும் காலம்.அருள் ஞானம் விளங்கும் காலமாகும்.

இனிமேல் அனைத்து உலகிலும் உள்ள, எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் வழியை சுத்த சன்மார்க்க மரபு என்னும் உண்மை மார்க்கத்தில் கண்டு கொள்ளலாம்.

சுத்த சன்மார்க்க மரபு என்பது,'--உயர்ந்த அறிவுடைய மனிதன் மனிதனாக வாழ்ந்து,பின்  மரணத்தை வெல்லும் மார்க்கமாகும்.அதுவே சுத்த சன்மார்க்க மரபாகும்.அந்த மரபு வழியை  நாம் தெரிந்து கொள்வது  அவசியமாகும்.,

அவை யாதெனில் :--

சாகாத கல்வி கற்கும் கல்வி முறை ,!
கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை அறிவு !
மலம் ஐந்தும் வெல்லும் தனித்த பூரண வல்லபம்,!
ஐந்தொழில் நடத்தும் மெய்த்தொழிலே தொழில்  !
நிறைவான பூரண அருளைப் பெரும் இன்பமே பேர் இன்பம் !

இதுவே சுத்த சன்மார்க்க மரபாகும்.

முன்பு வாழ்ந்த அருளாளர்கள் இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தரத்தை அறிந்து கொள்ளவில்லை.அந்த கடவுளின் உண்மை நிறைவான  பூரண அருளைப் பெற முடியவில்லை.அவர்கள் எவருக்கும் பூரண அருள் கிடைக்கவில்லை என்கிறார் வள்ளலார்., உண்மைக் கடவுளால்  என்றும் அழியாத அருள் கிடைக்கவில்லை...எனவே மனிதர்கள் மரணம் அடையாமல் வாழும் வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை.

மரணம் என்பது இயற்கை என்று நினைத்தார்களே தவிர ,மரணம் என்பது செயற்கை என்பது வள்ளலாரைத் தவிர வேறு எவரும் தெரிந்து கொள்ளவில்லை. ''தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்'' என்பார் வல்ளலார்

ஆதலால் மக்களுக்கு புரியும்படி  தெளிவான,பொதுவான,உண்மையான,நேர் வழியைக் அவர்களால் காட்ட முடியவில்லை .ஏன் அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதை .வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பார்ப்போம்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
சிறந்த முனித் தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ
மூவர்களோ  அறுவர்களோ முதற் சத்தி யவளோ
முன்னிய நம் பெருங்கணவர் தம்மியலை உணர்ந்தோர்
யாவர்களும் அல்லவென்றால் யான் உணர்ந்து சொல்ல
அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலோடு அன்பர் தொழக் கனகசபை நடிப்பார்
அவர் பெருமை எவ்விதத்து அவரறிவார் தோழி !

என்று தான் கண்ட காட்சிகளை தன்னடக்கத்துடன் தெளிவுப் படுத்துகிறார்.

ஏன் என்றால்,அருளாளர்கள் என்று சொல்பவர்கள் அனைவரும் சாதி,சமயம்,மதம்,சாத்திரம் போன்ற கொள்கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு உள்ளவர்களாகும் அனைவரும் ஆண்டவருடைய {இறைவன் }முழுமையான அருளைப் பெறாதவர்கள். மாயை என்னும்,உலக போகத்தில் வாழ்ந்தவர்கள்.அவர்கள் அறியாமையில் சிக்குண்டவர்கள்.அவர்களை உண்மையான ஆன்மீக அருளாளர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டு உள்ளோம்.அவர்கள் இயற்றிய கவிதைகள்,கட்டுரைகள், கதைகள்  கருத்துக்கள்,எழுத்துக்கள்,போதனைகள்,ஆன்மீக சிந்தனைகள் யாவும்,மாயை என்னும்  ''சாத்தானின் வேதங்கள்''என்பதாகும்.

அதாவது மாயையின் உதவியைக் கொண்டு,ஐம்பூத அறிவைக் கொண்டு  எழுதியவைகளாகும்.அதாவது உலகப் பற்றுகளை வைத்துக் கொண்டு எழுதியவைகளாகும் ஆதலால் அவர்களுக்கு இறைவனுடைய முழுமையான அருளும் ஆற்றலும் கிடைக்கவில்லை.நேரடியாக  கடவுளின் அருளைப் பெற்றவர்களால் தான்,''செம்பொருள்''என்னும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மையை அறிந்து,அவர் கருணையால் அருளைப் பெற்றால் தான், மக்களுக்கு உண்மையான அருளைப் பற்றி போதிக்க முடியும்,என்கிறார் வள்ளலார் அவர்கள்.

முன்பு தோன்றிய அருளாளர்கள் அனைவரும்,பொய்யானக் கடவுளைப் பற்றி,அதாவது தத்துவங்களைப் பற்றி (உடம்பைப் பற்றி ) அறிந்து பாடி எழுதி இயற்றி வைத்து, பதிவு செய்துள்ள அனைத்து ஆன்மீகக் கொள்கைகளும், சட்ட திட்டங்களும்,சாதாரண சன்மார்க்க மரபுகள் என்பதாகும்.

அந்த அருளாளர்களால்  மக்களின் உயர்ந்த சகோதர உரிமை என்னும், ஆன்ம நேயத்தை அழித்து விட்டது., ஒற்றுமையை,நேர்மையை,ஒழுக்கத்தை,அழித்து விட்டது.ஆன்ம நேய ஒருமைப்பட்டு உரிமையை குழித் தோண்டிப் புதைத்து விட்டது.,..மனித குணங்களை,மனித மனங்களை,மனித புனித எண்ணங்கள் , யாவையும்  வேறுபடுத்தி நாசமாக்கி விட்டது ., ...மக்கள் மனங்களை மாசுபடுத்தி, வேறு வேறாகக்  கூறுகளாக கூறு போட்டு,தனிமைப் படுத்திவிட்டது.....அனைத்து உயிர்களையும்,அறியாமையில் சிக்க வைத்து,சிதறவைத்து சின்னா பின்னமாக்கி சிதறும்படி வைத்து விட்டார்கள்,....

ஒற்றுமையுடன் வாழ வேண்டிய உலக உயிர்களை,உயிர்களே  கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. ..அவர்கள் கண்ட பொய்யான நெறிகள் யாவும்,...அவர்கள் போதித்த சாதி, சமய, மத,சாத்திர,கோத்திர கொள்கைகள், நெறிகள்,மற்றும் மார்க்கங்கள் யாவும் ....கொலைக்கார கடவுள்களையே  மக்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டார்கள்,அவைகள் யாவும் சிறு தெய்வங்கள் என்பதாகும்.

அதனால்தான் சிறு தெய்வ வழிபாடுகள் வேண்டாம் என்றார் வள்ளல் பெருமான் அவர்கள....தாவரங்களை உணவாக உண்ண  வேண்டிய மனிதர்கள்,கடவுளின் பெயரால் ,வாயில்லாத உயிர்களை,உயிர் உள்ள ஜீவன்களை  கொன்று தின்னும் அளவிற்கு மனித அறிவை மழுங்க வைத்து விட்டார்கள்.சாதி, மதம்,சமயம்,சாத்திரம் ,கோத்திரம், போன்ற கொள்கைகள் யாவும்  உயிர் குலத்தை அழித்துக் கொண்டு உள்ளது.

மேலும் கடவுளை அடைவதற்கு,தவம்,யோகம், பிரணாயாமம்,ஆசனம், தியானம்,சமாதி போன்ற யோகமுறைகளும்,அதன் மூலம் காயசித்தி அடைவதற்கு,காயகற்பம்,குண்டலினி யோகம்,தவம்,போன்ற பொய்யான தியான முறைகளும்.மேலும் தத்துவங்களான,உருவங்களை ஆலயங்களாக தோற்றுவித்து ,உருவ வழிபாட்டு முறைகளைப் படைத்து சரியை,கிரியை,யோகம்,ஞானம்  போன்ற அற்ப வழிபாட்டு செயல்களை மக்களுக்கு போதித்து வைத்து உள்ளார்கள்.

மக்கள் செய்யும் குற்றங்கள் நீங்க வேண்டுமானால்,நீக்கிக் கொள்ள வேண்டுமானால் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும், பிராய்சித்தம் என்னும் பெயரில்,கடவுளின் பெயரால்,வாயில்லாத உயிர்களை உயிர்க்கொலை செய்தும் ,கடவுளுக்கு பொன் பொருள்,ஆபரணம் போன்றவைக் கொடுத்தும்,விரதம் என்ற பெயரில் உடம்பை வருத்தியும் ,பொய்யான உருவங்களைப் படைத்து,அறிவு விளக்கம் இல்லாத,சிறு குழந்தைகள் போல்,பொம்மைககளை வைத்து, உருவ வழிபாடு செய்து வருகிறார்கள். அப்படி செய்வதின் மூலம்,தாம் செய்யும் குற்றங்கள் நீங்கிவிடும் மனிதன் புனிதனாகி விடுவான் என்ற பொய்யான வழிமுறைகளை மக்களுக்கு போதித்து வைத்துள்ளார்கள்.அறிவு தெளிவு இல்லாத அறியாமையினால் மக்கள் அந்த மோசடியை நம்பி, பின்பற்றி செயல்பட்டுக் கொண்டு இன்றுவரை அழிந்து கொண்டு உள்ளார்கள்.

மேலும் இந்த பொய்யான வழிபாட்டு செயல்களினால் கடவுள் மன்னித்து விடுவாரா ? கடவுள் உங்கள் முட்டாள் தனமான செயல்களை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு கீழ்த்தர மாணவரா ? என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டும் வாய் மூடிக் கொண்டும்  உள்ளார்கள்.மேலும் சாதி,சமயம்,மதம்,சாத்திரம் போன்ற கொள்கைகளை பிடித்துக் கொண்டு கடவுளை அடைந்து விட முடியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத்  தெரியாமல் கண்ட கண்ட, பொய்யான வேதாந்தக் கதைகளையும்,சிந்தாந்தக் கதைகளையும்,போதாந்தக் கதைகளையும்,நாதாந்தக் கதைகளையும்,யோகாந்தக் கதைகளையும்,கலாந்தக் கதைகளையும்.மக்களுக்கு போதித்து உள்ளார்கள்.

 வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.!

ஆன்மீகம் என்ற போர்வையில்,பல ஆன்மீகவாதிகள்  சுயநலத்திற்காக,பொருளுக்காக அற்ப ஆசைகளுக்காக ...சாதி,மதம்,சமயம்,சாத்திரம்,கோத்திரம்,போன்ற வழிமுறைகளை தோற்றுவித்து உள்ளார்கள் , இன்று நேற்று அல்ல !ஆதி காலத்தில் இருந்தே இந்த கொடுமைகள் உலகம் முழுவதும் வேரூன்றி பரவி செயல்பட்டுக் கொண்டு உள்ளது. எல்லா மதங்களும் கொலைக்காரக் கடவுளையே அறிமுகப்படுத்தி உள்ளன.கொலைக்காரக் கூட்டத்தின் கதாபாத்திரங் களையே கதைகளாக வடித்து வகுத்து வைத்து உள்ளார்கள். ஆதலால் மக்கள் அந்த கொள்கைகளை உண்மை என்று நம்பிக் கொண்டு,குருடன் யானையைக் கண்ட கதைப்போல் பிடித்துக் கொண்டு அலைந்து அலைந்து வீணே அழிந்து கொண்டு உள்ளார்கள்.

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற  கலையும்
கள்ளமுறு அக்கலைகள் காட்டிய பல்கதியும்
காட்சிகளும்  காட்சி தரும் கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே
பிள்ளை எனக்கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்ற மணிமன்றில்
தனி நடஞ் செய் அரசே என் சாற்றும்  அணிந்தருளே !

கடவுளைப் பற்றிய உண்மை தெரியாமல்,மக்கள் சிறு குழந்தைகள் போல் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டு உள்ளார்கள் .அவைகள் யாவும் சிறு பிள்ளை விளையாட்டுகளாக சித்தரித்து வைத்து உள்ளார்கள்.அவர்களின் கூட்டுறவால் கூடிய பல சமய மத கூட்டங்க்கள் கூவுகின்ற கலைகள் யாவும் பொய்யான கற்பனைக் கதைகள் என்பதை வள்ளலார் வெளிப்படையாக மக்களுக்கு தெளிவு படுத்தி உள்ளார்.இனிமேல் அப்படி அலைந்து திரிந்து அழிந்து வீண் போக வேண்டாம் கடவுளின் உண்மையை அறிந்து,அருளைப் பெற்று வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொள்ளுங்கள் என்பதை சுத்த சன்மார்க்க மரபின் வழியாக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார்.

அப்படி அலைந்து,திரிந்து, அழிந்து கொண்டு உள்ள மக்களை நல்வழிப் படுத்த,உண்மைக் கடவுளான அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்னும் ''அருள் பேரொளி''என்னும் செம்பொருளின் தனிப்பெருங் கருணையுடன் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கருணைக்  கொண்டு, மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம் தேடி வீதிக்கே வந்து அருளைக் கொடுத்துக் கொண்டு உள்ளார்.

ஆதலால் நீங்கள் அனைவரும் அந்த அருட்பெருஞ் ஜோதியின் அருளைப் பெறுவது நிச்சயம்.என்று மக்களை கூவிக்கூவி,வடலூர் பெருவெளிக்கு  அழைக்கின்றார்,அங்கு இயற்கை உண்மையான கடவுளின் விளக்கத்தை,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் '' தோற்றுவித்து, கடவுள் ஒளியாக உள்ளார் என்ற உண்மையை விளக்கிக் காட்டும் வகையில் ''ஜோதி வழிபாட்டு'' முறையை  அமைத்து உள்ளார்.அங்கு  சாதி,சமயம்,மதம்,இனம்,நாடு,மொழி,என்ற வேறுபாடுகள் கிடையாது. அதுவே உலக மக்கள் அனைவருக்கும் உண்டான பொது வழிபாட்டு முறையாகும்.

ஆண்டவர் நேரடியாக இவ்வுலகத்திற்கு வரமுடியாது...ஏதாவது ஒரு பக்குவமுள்ள ஆன்மாவைத் தேர்வு செய்து அதன் உள்ளே புகுந்து கொண்டு , அதன் துணைக் கொண்டு,மனிதப் பிறப்பு எடுத்துத் தான் இந்த பஞ்ச பூத உலகத்திற்கு  வரமுடியும் .இதுவும் ஆண்டவரின் சட்டதிட்டங்களில் ஒன்றாகும்.அந்த பக்குவமுள்ள ஆன்மாதான் வள்ளல்பெருமான் என்பவராகும்.அந்த ஆன்மாவில் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளி அமர்ந்து கொண்டுதான் உலக மக்களுக்கு உண்மையை போதிகின்றது.அதனால்தான் வள்ளல்பெருமான் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்கிறார். நான் உரைக்கும் உண்மை எல்லாம் அருட்பெரும் ஜோதி ஆண்டவரின்  கட்டளைப்படி உரைக்கும் வார்த்தைகளாகும் என்கிறார் ...''அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே வள்ளலார் உருவில் அமர்ந்து வாழ்ந்து கொண்டு உள்ளார் ''அவர் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள் .

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வானுரைத்த மணிமன்றில் நடம்புரி எம்பெருமான்
வரவெதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேனுரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே !

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்
என்மையினால் எனை நினையீர் எல்லாஞ் செயவல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவீர்
தன்மையோடு சுத்தசிவ சன்மார்க்க நெறியிற்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்கக்
கண்மைதரும் மொரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

இதுவரைக்கும் மக்கள் அடைந்து வரும் துன்பங்கள்,துயரங்கள்,அச்சம்,பயம்,மரணம் போன்ற தீராத கொடுமைகளில்  இருந்து காப்பாற்ற இறைவனே நேரடியாக இவ்வுலகிற்கு வந்து உள்ளார் அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்,.அவர் வள்ளலார் என்னும் மனித உருவம் தாங்கி பிறப்பு எடுத்து செயல் பட்டுக் கொண்டு உள்ளார் .

ஆதலால் வள்ளல் பெருமான்.. நீதி தவறாமல்,நெறிதவராமல்,ஒழுக்கம் தவறாமல், பூரண் அருள் பெற்று உண்மையுடன் வாழ்ந்து,உலக மக்களுக்கு  நல் வழி காட்டுகிறார். மக்களை உண்மையான நல்வழியைப் பின்பற்றி,அதன்படி வாழ்ந்து அருளைப் பெற்று பேரின்ப பெருவாழ்வு என்னும்  ''மரணம் இல்லாப் பெருவாழ்வு '' வாழும் வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக, தோற்றுவிக்கப் பட்ட மார்க்கம்தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''என்னும் ஞான மார்க்கமாகும்.

அந்த உண்மையான மார்க்கத்தை ஆட்சி செய்பவர், செயல்படுத்துபவர் உலகின் ''ஒரே தலைவர்'' அவர்தான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

அவர் உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களையும் பக்குவப் படுத்துவதற்காக, வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிகின்றார்.நம்மை எல்லாம் அன்போடு அழைக்கின்றார் .அவர் அழைப்பை ஏற்று,..உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாகிய நாம் அவர் காட்டிய புனித நெறியான சுத்த சன்மார்க்க தனிமனித ஒழுக்க நெறியைக் கடைபிடித்து நேர்மையானப்  பாதையின் வழியாகச்  சென்று உண்மையான ஞான மார்க்கத்தில் சேர்ந்து,பேரின்ப லாபம் என்னும், பேரின்ப வாழ்வு வாழ்ந்து   பெரும் பயன் பெறுவோம் .

ஆகவே நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் இறைவன் உரைக்கும் வார்த்தையாகும்,உண்மையாகும் அனைத்து மக்களும் இதை நம்ப வேண்டும் என்று பறை சாற்றுகிறார் வள்ளல் பெருமான் அவர்கள்....மேலும் அவர் இந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நானே தலைமை ஏற்று  நடத்துகிறேன் என்றும் அழுத்தமாக சொல்கிறார் .

நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் !

உலகம் எலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே ....திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து .!

சன்மார்க்க சங்கத்தின் பொறுப்பை யாரிடமும் கொடுக்காமல் தானே நடத்துகிறேன் என்று சொல்லுவதின் உண்மை என்ன ? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.வேறு எவரிடம் கொடுத்தாலும் அவர்களால் இந்த உண்மை மார்க்கத்தை இயக்க இயலாது ,அவர்களுக்கு அந்த தகுதிகள் இல்லை என்பதை உணர்ந்து அவரே தலைமை ஏற்று நடத்திக் கொண்டு உள்ளார்.

வள்ளல் பெருமான் அவர்கள் .இதுவரை எவரும் சொல்லாத சுத்த சன்மார்க்க மரபைப் பற்றி நமக்கு தெளிவாகச் சொல்லி ''திருஅருட்பா''என்னும் அருள் நூலில் எழுதிப்  பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
அவைகளைப் பார்ப்போம் .

சாகாக் கல்வி !
உண்மைக் கடவுள் ஒருவரே !
உண்மை அறிவு !
தனித்த பூரண வல்லபம்.!
மெய்த் தொழில் !
மெய் இன்பம் !
என்பது சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்பதாகும் .

சுத்த சன்மார்க்க மரபு என்றால் என்ன ? பாடல் !

சாகாத கல்வியே கல்வி
ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவே தகும் அறிவு
மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு
எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலதாகும்
இந்நான்கையும்
ஒருங்கே வியந்து அடைந்து
உலகம் எல்லாம் மாகாதலுற
எல்லாம் வல்ல சித்தாகி நிறைவான வரமே இன்பமாம்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு
என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து
எனைத்தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே !

இதுவரையில் உலகில் உள்ள மக்கள் அனைவரும் சாகும் கலவியை மட்டும் கற்றுள்ளார்கள்,அப்படிப்பட்ட கல்வியை மக்களுக்கு தந்துள்ளார்கள்.,வள்ளல் பெருமான் அவர்கள்,சாகாத கல்வி என்பது ஒன்று உண்டு என்பதை அறிந்து சாகாக் கல்வியை போதிக்க வந்துள்ளார்.அவர் அந்தக் கல்வியைக் கற்றுத் தெளிந்து அதன்படி வாழ்ந்து மக்களுக்கு வழிக்காட்டி உள்ளார்கள்.

சாகாக் கல்வி;--

மனிதனாக பிறப்பு எடுத்த நாம் முதலில் கற்க வேண்டியது சாகாக் கல்வியாகும்.ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி என்பது மிகவும் அவசியமாகும் இதுவரையில் நாம் கற்றுக் கொண்டு இருந்தது சாகும் கல்வியாகும்.அதனால் நாம் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,அழிந்து கொண்டே உள்ளோம் இதுவரையில் சாகாக் கல்வியைத்  கற்றுத் தரும் தகுதி யாருக்கும் இல்லை.சாகாக் கல்வி என்றால் என்ன ?என்பதே தெரியாமல் இருந்தோம் சாகாக் கலவி கற்கும் தருணம் இத் தருணமேயாகும்.

பலகோடி பிறவிகள் எடுத்து பின் இந்த மனித தேகம் கிடைத்துள்ளது.இந்த மனித தேகம் அழிந்து விட்டால் மறுபடியும் இம்மனித தேகம் கிடைப்பது என்பது நிச்சயம் அல்ல.ஆதலால் இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொள்ளவேண்டும்.அதற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு எனற பெயர் வைத்துள்ளார் வள்ளல் பெருமான்..அதாவது ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவது, சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும்,இயற்கையான  இறை நிலையை அடைவதாகும்,[கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்}என்பதாகும்.  அதைக் கற்றுக் கொடுப்பதே சாகாக் கல்வியாகும்.

அக்கல்வியைக் கற்றுக் கொடுக்கும் இடம்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும்.அவற்றைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவ்ராகும் அவர் வள்ளலார் உடம்பில் அருள் உருவத்தில்
{ஒளி உருவம் } இருந்து கொண்டு மனித ஜீவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு உள்ளார்.அவை உலகில்உள்ள பொருள் ஈட்டும் கல்வி அல்ல ! இறைவனிடம் இருந்து அருள் ஈட்டும் கல்வியாகும்.இதுவே மனித பிறப்பின் முக்கிய லஷ்யமாகும் .

மனிதர்கள் யாவரும் அன்பு,தயவு,கருணை (உயிர் இரக்கம் ) என்னும் ஜீவ காருண்யத்தை கடைபிடித்து, இறைவன் மீது இடைவிடாத அன்பு வைத்து அன்பே வடிவமாகி,ஆன்மாவில் உள்ள அருளைப்  பெற்று,பஞ்ச பூத ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி ,(அருள் வடிவமாக்கி,)இயற்கை உண்மை,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம்,என்னும் சுத்த சன்மார்க்க ஒழுக்கமான ,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் ஒழுக்கத்துடன் வாழ்வதே சாகாக் கல்வியாகும்.

ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவே தகும் அறிவு !

அறிவு என்பது'--- கடவுள் ஒருவர்தான் என்பதை அறிவின் மூலமாக அறிந்து கொள்வதே உண்மை அறிவாகும். அந்த உண்மைக் கடவுள் யார் ? அவர் எங்கு உள்ளார் ? என்பதை அறிந்து கொள்வதாகும்.எப்படி அறிந்து தெரிந்து
கொள்வது ? என்பதை வள்ளலார் சொல்லும் பாடலைப் பாருங்கள் .

உருவராகியும் அருவினராகியும் உருஅருவினராகியும்
ஒருவரே உளார் கடவுள் கண்டறிமினோ உலகீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும்  இயலும் ஐவர்கள் என்றும்
இருவராய் உரைத்து உழல்வதேன் உடலுக்கு உயிர் இரண்டு மூன்று எனலாமோ !

கடவுள் உருவமாகியும், உருவம் அல்லாதவராகியும்,உருவமும் அருவமும் மாகி உள்ளவர், அவர் ஒருவரே !அந்த 'ஒரே கடவுள்தான்'' ...அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ... என்பதை நினைந்து உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.,

இந்த உண்மையை அறிந்து கொள்ளாத ஆன்மீக சிந்தனையாளர்கள்,

நம்முடைய உடம்பின் உள்ளே கண்களுக்குத் தெரியாமல் செயல்படும் கருவிகளான உறுப்புகளை,அதாவது தத்துவங்களை, சக்தி, சிவன், என்றும்,பிரம்மம் என்றும்,பிரம்மா .விஷ்ணு ,சங்கரன்,மகேஸ்வரன்,சாதாசிவம் என்றும்.ஏசு,அல்லா என்றும்,புத்தம் சரணம் கச்சாமி என்றும்,இராமர்,கிருஷ்ணர் என்றும்,முருகர் விநாயகர் என்னும் ஆண் தெய்வங்களையும்

மேலும் ஆதிபராசக்தி,லஷ்மி,பார்வது,சரஸ்வதி,போன்ற பெண் தெய்வங்களையும் அவரவர் அறிவுக்குத் தோன்றிய காட்சிகளை  கடவுள்களாக படைத்து வைத்து விட்டார்கள் .இதனால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தி எந்தக் கடவுள் உண்மையான கடவுள் என்பதை அறிந்து கொள்ளாமல்,அவரவர்களும்,எந்த மதத்தில் பிறந்தார்களோ  அந்த அந்த மதத்தை,சமயத்தை,மார்க்கத்தை  சார்ந்து உள்ளார்கள். அந்த மதத்ததையும்,சமயத்தையும் சார்ந்துள்ள கடவுள்களை பிடித்துக் கொண்டார்கள்.ஆதலால் உண்மையான கடவுளைக் கண்டு கொள்ள முடியவில்லை .

மனித உடலிலே ஒரு உயிர் இருக்குமா ? இரண்டு உயிர் இருக்குமா ? மூன்று,நான்கு  ஐந்து உயிர் இருக்குமா ?என்று கேட்டால் ஒரு உயிர்தான் இருக்கும் என்பதை படிக்காத பாமரன் முதல்,படித்த அறிவாளிகள் வரை ,ஒன்றும் அறியாத  குழந்தைகள் வரை சொல்லி விடுவார்கள் அதே போல்த்தான் உலகத்தை,அண்டத்தை  இயக்கிக் கொண்டு இருக்கும் கடவுள்... ஒரே கடவுள் ...என்பதாகும் .அவர்தான் அருட்பெருஞ் ஜோதி என்னும் அருள் நிறைந்த,ஒளி பொருந்திய அருள் ''அணுவாகும்''.அந்த பேரொளி இருக்கும் இடம் அருட்பெரு வெளியாகும்.அந்த அருட்பெருவேளியின் சமூகத்தில் ஆன்மாகாயம் என்னும் ஓர் இடம் இருக்கிறது.அங்கு ஆன்மாக்கள் நிறைந்து இருக்கின்றது அந்த இடத்தில் இருந்துதான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளால் அளவில் அடங்கா ஆன்மாக்கள் அனைத்து உலகங்களுக்கும்  அண்டங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகிறது.அந்த ஆன்மாக்கள் தான்,இவ்வுலகில் உயிர் எடுத்து ,உயிர் வாழ்வதற்காக,உடம்பு எடுத்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு வருகின்றன.

அந்த ஆன்ம அணுக்கள் தான் வாழ்வதற்கு பஞ்சபூத அணுவின் சேர்க்கையால் உயிர் தோன்றி உயிர் வாழ்வதற்கு உடம்பு என்னும வீடு கட்டிக் கொள்கிறது.அந்த வீட்டில் வாழ வேண்டுமானால் உயிர் என்னும் ஜீவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்,அந்த ஜீவன் என்னும் உயிரை எடுத்துக் கொண்டுதான் எல்லா ஆன்ம அணுக்களும் இந்த பஞ்ச பூத உலகில் வாழ்ந்து கொண்டு உள்ளது. அந்த ஆன்மா என்பதுதான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் குழைந்தைகளாகும்.எல்லா ஆன்மாக்களின் உள் இருந்து உயிர்களையும் காரணங்களையும்,இந்திரியங்களையும்  இயக்கிக் கொண்டு இருக்கும் ஒரே கடவுள்தான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

அந்தக் கடவுளின் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் ? அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் தயவும் கருணையும் இரக்கமும்,கொண்டு ஜீவ காருண்யம் செய்ய வேண்டும்.அடுத்து ஆண்டவரிடத்தில் உண்மையான அன்பும்,பண்பும் பாசமும் கொண்டு இறை அருளைப்பெற வேண்டும். அதற்கு சத்விசாரம்,பரோபகாரம் என்னும் இரண்டு வழிகளினால் தான் இறைவன் அருளைப் பெற முடியும் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப்பாருங்கள் !.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்சிந்தை மிக விழைந்த தாலோ !

எல்லா ஜீவன்களும் அதாவது உயிர்களும் ஒரே தன்மை உடையது என்பதை அறிந்து ,அந்த உயிரை இயக்கிக் கொண்டும்,இயங்க வைத்துக் கொண்டும்,புறத்தில் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் செயல் ஆற்றிக் கொண்டு உள்ளதுதான் ஆன்மா என்னும் உள் ஒளியாகும் அந்த ''மின் காந்த  ஒளி'' எல்லா உயிர்களின் உறுப்புகளுக்கும் தன்னுடைய கதிர் வீச்சை அனுப்பி இயங்க வைத்து கொண்டு உள்ளதாகும்.அந்த உயிர்க்கு வேண்டிய இயக்க சக்தியைக் கொடுத்துக் கொண்டு உள்ளதுதான் ''ஆன்மா'' என்னும் ஒளியாகும்.அதுவே அருட்பெருஞ் ஜோதியாகும். அந்த ஒளி என்னும் ஆற்றல்.சக்திதான் உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளதாகும்.

அக்கடவுள் சத்திதான், ஆன்ம ஒளியாக, உள் ஒளியாக இருந்து கொண்டு செயலாற்றிக் கொண்டுள்ளது.,உயிர் என்னும் ஜீவனையும்,... மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கரணங்களையும், கண்,காது,மூக்கு,வாய்,மெய் {உடம்பு }என்னும்   இந்திரியங்களையும்,
இயக்கிக் கொண்டு உள்ளது என்பதை அறிவால் அறிந்து கொள்வதே கடவுளை அறிந்து கொள்வதாகும்.

அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ''ஜீவ காருண்யம்''  என்னும் உயிர் இரக்கமும் , ''சத்விசாரம்''  என்னும் உலக உண்மைகளையும் ,உலக இயக்கங்களையும்,தெரிந்து கொள்வதாகும்.உலக இயக்கத்தை இயக்கிக் கொண்டு இருப்பவர் யார்? அவர் எங்கு இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் ? அவர் உருவமாக உள்ளாரா ?அருவமாக உள்ளாரா ?ஒளியாக உள்ளாரா ?என்பதை அறிவால் அருளால் அறிந்து கொள்வதாகும் .

கடவுள் எப்படி உள்ளார் என்பதை விளக்கும் பாடல் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள்
ஏது மிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கை யில்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும்
திரிபில்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புறு வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தரு மோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

அவர் என்னவாக உள்ளார் !

ஒன்றும் மலார் இரண்டுமலார் ஒன்றும் இரண்டுமானார்
உருவும் மலார் அருவுமலார் உரு அருவும் மானார்
அன்றும் உளார் இன்றும் உளார் என்றும் உளார் தமக்கோர்
ஆதி இலார் அந்தமும் இலார் அருட்பெருஞ் ஜோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார்
யாவும் மிலார் யாவும் முளார் யாவும் மலார் யாவும்
ஒன்றுறு தாமாகி நின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

கடவுள் எப்படி உள்ளார் என்பதை மேலே கண்ட பாடலில் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார் ,அந்த உண்மையான கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளி இருக்கும் கோட்டையின் கதவு பூட்டப் பட்டு இருக்கிறது ,அந்த பூட்டை திறப்பதற்கு சாவி என்னும் திறவுகோல் வேண்டும்.அந்த திறவுகோலை ஜீவ காருண்யத்தால் தான் மட்டுமே பெறமுடியும் .வேறுவழி களால் பெறமுடியாது.ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு,அன்பு உண்டானால் தயவு உண்டாகும் ,தயவு உண்டானால் கருணை உண்டாகும்,கருணை உண்டானால் அருள் உண்டாகும்.அருள் உண்டானால் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

ஜீவ காருண்யம் என்பது !ஜீவர்களுக்கு உண்டாகும் பசி,பிணி,கொலை ,தாகம்,இச்சை,எளிமை,பயம் போன்ற துன்பங்களை,கண்ட போதாயினும் அறிந்த போதாயினும்,கேட்டபோதாகினும்  தம்மால் முடிந்த அளவு உபகாரம் செய்து அவற்றை போக்குவதுதான் ஜீவகாருண்யம் என்பதாகும்.

சத்விசாரம் என்பது ,கடவுள் ஒருவரே என்பதும்,அக்கடவுள் என்னும் மெய்ப் பொருளையும்,அவரால் இயங்கிக் கொண்டு இருக்கும் பிரபஞ்சத்தின் உண்மை ரகசியங்களையும் உடம்பும் உயிரும் உண்டான விதங்களையும் தெரிந்து கொள்வதாகும்.இவற்றை பூரணமாக அறிந்து கொண்டவர்கள் உண்மையான அறிவைப் பெற்றவர்களாகும். அந்த உண்மை அறிவு உள்ளவர்கள் யாரோ அவரே உண்மையான கடவுளை அறிந்து கொண்ட ''வித்தகர்''என்பவராகும் .அந்த வித்தகரின் செயல் அனைத்தும் கடவுள் செயலாக இருக்கும்.அவரை வணங்குகிறேன்,அவர் இட்ட கட்டளையை சிரமேற்க் கொண்டு செயல்பட என்னுடைய சிந்தை மிகவும் ஆவலாக உள்ளன என்பதை தெளிவு படுத்துகிறார் நமது வள்ளல் பெருமான் அவர்கள்.இதுவே கடவுள் ஒருவரே என்பதை அறிந்து கொள்ளும் அறிவாகும்.
    
மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்.!

மலம் என்பது;-- ஆன்மாவின் உண்மையான செயல்பாட்டை,அதன் சக்தியை அதன் ஆற்றலை மறைத்துக் கொண்டும், பற்றிக் கொண்டும் இருப்பதற்கு மலம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.அதற்கு ஆணவம் ,மாயை கன்மம் என்று பல பெயர்கள் வைத்துள்ளார்கள்.ஆனால் வள்ளலார்,ஆன்மாவை மறைத்து கொண்டு இருப்பது  ஐந்து மலங்கள் என்கிறார் .

அவர் சொன்ன மலங்கள் .மண்,நீர்,அக்கினி,காற்று ,ஆகாயம் என்னும் ஐம் பூதங்களாகும்.அதாவது ஆண்வம் ,மாயை ,கன்மம்,மாமாயை ,பெருமையை, என்னும் ஐந்து மலங்களாகும்.அந்த மலத்தை ஆன்மாவில் இருந்து யார் வெளி யேற்று கிறார்களோ,நீக்குகிறார்களோ !கரைக்கிரார்களோ!ஒளியாக மாற்றுகிறார்களோ அவர்களே மலத்தை வென்றவர்களாகும்.எப்படி வெல்லமுடியும் என்றால்,உயிர்களுக்கு உண்டாகும் பசி,பிணி ,கொலை, தாகம்,இச்சை ,எளிமை ,பயம்,துன்பம் ,முதலிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதால்,அவர்களுடைய துன்பம் தொலைந்து இன்பம் உண்டாகும்.அந்த இன்பமான நெகிழ்ச்சி என்னும் மகிழ்ச்சி அணு ஆற்றல் அலைகளாக மாற்றம் அடைந்து ,நன்மை செய்தவர்களுடைய ஆன்மாவில் பதிந்து உள்ள மலம் என்னும் திரைகளை,அந்த நெகிழ்ச்சி என்னும் ஆற்றல் கதிர் அலைகளாக உள்ளே நுழைந்து அகற்றிவிடும் .அவையே மலம் ஐந்தும் வெல்லும் வல்லபம் என்பதாகும்.

அந்த மலங்களை மாயா மலங்கள் என்று சொல்வார்கள்.மாயையால் உண்டானது அல்ல ! நாமே உருவாக்கிக் கொண்டதாகும்,நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் காரியங்களும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.உயிர்களுக்கு நன்மை செய்தால் நல்லதாக பதிவாகும்.தீமை செய்தால் தீயவையாக பதிவாகும்.நன்மைசெய்தால் ஆன்மாவை திரைகள் மறைக்காது.தீயவை செய்தால் ஆன்மாவை திரைகள் என்னும் மலங்கள் அதாவது அழுக்கு(குப்பை ) மறைத்துக் கொள்ளும்.ஆதலால் எந்த உயிர்களுக்கும் துன்பம்,துயரம் அச்சம்,பயம் உண்டாக்காமல் இருக்க வேண்டும்.

ஆன்மாக்கள் யாவும் நம்முடைய சகோதர ஆன்மாக்கள் என்று அறிவால் அறிந்து ,அன்பு ,தயவு,கருணை கொண்டு, அந்த ஜீவன்களுக்கு உண்டாகும்  ஆபத்துக்களை நீக்க வேண்டும்,அதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யம் என்றும் அதன் வல்லபம் என்றும், வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்கள்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

எவ்வுயிரும் பொதுவெனக் கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த
வித்தகர் தஞ் செயல் அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வை யிலாத் திருநெறியத் திருவாளர் தமக்கேவல் களிப்பாற் செய்ய
ஒவ்விய தென் கருத்து அவர் சீர் ரோதிட என் வாய் மிகவும் மூரவதாலோ

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி யுள்ளே
ஒத்துரிமை உடையவராய்  யுவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைவதாலோ !

கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்முயிர் போல் கண்டு ஞானத்
தெருநெறியீற் சுத்த சிவ சன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற
பொருள் நெறி சற்குண சாந்தப் புண்ணியர் தந் திருவாயால் புகன்ற வார்த்தை
அருணெறி வேதாகமத்தின் அடிமுடி சொல் வார்த்தைகள் என்று அறைவறாலோ !

மேலே கண்ட பாடல்களில் சுத்த சன்மார்க்க பெருநெறியில் நின்று உண்மை  உணர்ந்து, அனைத்து உயிர்களும் இறைவன் படைப்பு ,ஆதலால் எவ்வுயிர்களுக்கும் துன்பம் தராமல் அன்பு தயவு கருணை கொண்டு வாழ்ந்தால் மட்டுமே,அருள் என்னும் திரவம் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அந்த அருள்தான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்  மலங்களை,அதாவது திரைகளை அகற்ற முடியுமே தவிர வேறு எந்த குறுக்கு வழியாலும் அகற்ற முடியாது என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தியுள்ளார்.இதுவே மலத்தை வெல்லும் வல்லபமாகும்.

மெய்த் தொழில் !

வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழில் எவை ?

சாகாக்கலை ,போகாப்புனல் ,வேகாக்கால் ,என்னும் தொழிலைக் கற்றுக் கொள்ளவேண்டும் அவை யாதெனில்,சாகாக்கலை என்பது ஜீவன் என்னும் உயிரை இறக்காமல்(மரணம்) பாதுகாப்பதாகும். ஆன்மா வாழ்வதற்கு உயிர் தேவைப்படுகிறது உயிர் இருக்கும் வரை,கரணம் ,இந்திரியங்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் .ஆன்மாவில் இருந்து வெளியே வரும் உயிர் என்பது ஜீவன் என்பதாகும் .ஆன்மா, தான் வாழ்வதற்கு துனைக்கருவிகளாக,உயிர் என்னும் ஜீவன்,....மனம்,புத்தி ,சித்தம்,அகங்காரம் போன்ற கரணங்களும்,..கண்,காத்து,மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பு போன்ற    இந்திரியங்கள் யாவும் கருவிகளாகும் ,இவைகள் யாவும் இயங்கிக் கொண்டு இருந்தால் தான் ஆன்மா உடம்பில் நிலைத்து இருக்கும் .கருவிகள் வேலை செய்து கொண்டே இருப்பதால் குறிப்பிட்ட காலத்தில் கருவிகள் தேய்ந்து செயல்பட முடியாமல் இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது.ஆதாலால் ஆன்மா உடம்பை விட்டு உயிரைத் தன்வசமாக வைத்துக் கொண்டு வெளியேறிவிடுகிறது .இதற்கு பெயர் சாகும் கலையாகும் .
சாகாக் கலை !

வள்ளலார் சொல்லும் சாகாக்கலை என்பது ,ஆன்மாவின் வாழ்க்கைக்காக துணைக் கருவிகளான ஜீவன் என்னும் உயிர்,கரணங்கள் என்னும் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம், மற்றும் இந்திரியங்கள் என்னும் கண்,மூக்கு காது,வாய்,உடம்பு போன்ற அனைத்தையும் ஆன்மாவை விட்டு தனித்தனியாக பிரிக்காமல், ஆன்மாவின் உண்மைத் தன்மையான அருள் ஒளி வடிவமாக மாற்றிக் கொள்வது தான் சாகாக் கலையாகும்.கலை என்பது தத்துவங்களின் செயல்பாடுகள் இவைகள் கண்களுக்குத் தெரியாமல் உடம்பை இயக்கிக் கொண்டு இருக்கும் சூக்கும செயல்களாகும்

இவையே கலைகள் என்பதாகும்.தத்துவங்களை இயங்க விடாமல் நிறுத்தி, ஆன்மா என்னும் உள்ளொளியை மட்டும் இயங்க வைப்பதாகும் அவை தத்துவங்களை கடந்த நிலையாகும்.ஆன்மாவிற்கு கட்டுப்பட்டு தத்துவங்கள் அமைதியுடன் செயல் படாமல் இருப்பதாகும் .தத்துவங்கள் செயல் பட்டால் மரணம் வந்துவிடும்.ஆன்மா மட்டும்  செயல்பட்டால் மரணத்தை வெல்லமுடியும்.ஆன்மாவில் உள்ள அருள் வெளிப்பட்டால் தத்துவங்கள் தானே அடங்கிவிடும்.  இதுவே சாகாக் கலையாகும் .இதுவே அக்கினி கலையின்  செயல்பாடுகளாகும் இதற்கு காரணாக்கினி.சிவாக்கினி,அருள் ஆனந்தம் என்பதாகும் .

வேகாக்கால் !

கால் என்பது காற்று ,நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாகவும் ,வாய் வழியாகவும்,உடம்பின் மயிர்க்கால் வழியாகவும், உடம்பின் உள் உறுப்புகளின்  இயக்கத்திற்கு உள்ளே செல்லுகிறது.நாம் சுவாசிக்கும் காற்று ஆன்மாவின் இருப்பிடத்திற்கு சென்று ஆன்மாவைச்  சுற்றி சூடாக்கிக் கொண்டு (வெந்து) உள்ளே சென்று எல்லா உறுப்புகளும் இயங்கக்  காரண காரியமாய் இருக்கிறது.அந்த காற்றை வேகாமல் சூடாக்காமல் ,காற்று தன்  விருப்பம் போல் உடம்பிற்குள் செல்லும் படி வாழ்வதுதான் வேகாக்கால் என்பதாகும்.

அந்தக் காற்று எதுவென்றால் அமுதக் காற்றாகும் ,அந்த அமுதக் காற்று வேகாத காற்றாகும்.அந்தக் காற்றுதான் அசுத்த பூதகாரிய உடம்பை சுத்த பூதகாரிய உடம்பாக மாற்றும் சக்தி கொண்டதாகும்.வேகாத காற்றான அமுதக் காற்றை சுவாசித்தவர்தான் நமது வள்ளல்பெருமான்.அப்படி தன்னுடைய உடம்பை மாற்றியவர் தான் நமது வள்ளலார்.

ஆன்மா என்னும் உள்ளொளியின் உள்ளே இருக்கும் அமுதம் என்னும் திரவத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால்,வெளியே வரவழைத்துக் கொள்பவர்களுக்கு ,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்துவிடும்.அந்த மாற்றம் அடைந்தவர்களுக்கு ...காற்று வேகாது,ஆன்மாவை சுற்றி  சூடு ஆகாமல் உள்ளே தன்னுடைய விருப்பம் போல் எந்த தடைகளும் இல்லாமல்..ஆகாயத்தில் காற்று செலவதுபோல்,அமுதக் காற்று  சென்று கொண்டு இருக்கும்
அதுவே வேகாக்கால் என்பதாகும்.இதற்கு மகேசுவரபாகம்,மகேசுவர தத்துவம்,சாந்திகலை,ஆன்மா ,அன்பு,காரணவாயு என்பதாகும்.

போகாப்புனல் !

போகாப்புனல் என்பது ;--புனல் என்பது நீர் சம்பந்தமுடையது.மனித உடம்பிற்கு உணவு என்பது முக்கியமானதாகும் .எந்த உணவாக இருந்தாலும்.நீர் இல்லாமல் உள்ளே செல்லாது நீர் இல்லாமல் உடம்பு இயங்காது.நீருடன் கலந்த பொருள்கள் யாவும் வேதியல் முறையில் மாற்றமாகி ரத்தமாக்கி உடம்புக்குள் இருக்கும் அனைத்து உறுப்புக்களின் வழியாகி நரம்பு,எலும்பு,தசைகளின் மூலமாக உடல் எங்கும் செலுத்தப் படுகிறது.நாம் பிறந்ததில் இருந்து மரணம் அடையும் வரை உணவு தேவைப்படுகிறது.உணவிற்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

உணவு இரப்பையில் சென்று,தத்துவ உறுப்புகளால் அரைத்து,திரவமாக்கி இரத்தமாக மாற்றி, அதன் மத்தியதரமாகிய திரவம் விந்துவாக அதாவது சுக்கிலமாக மாற்றமாகி வெளியே சென்று கொண்டு உள்ளது .இவை செல்லுகின்ற வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்.நாம் உண்ணும் உணவை அரைத்து திரவமாக்குவதற்கு,வெப்பமும்,காற்றும் விரையமாக்குகிறது.நாம் உண்ணும் உணவு உடம்பின் உள்ளேயும் போகாமல் வெளியேயும் போகாமல் பாது காத்துக் கொள்வதற்கு பெயர் போகாப்புனல் என்பதாகும்.பஞ்ச பூத உணவை  உண்ணாமல் அருளை உண்பதாகும்.

அதைத்தான் வள்ளலார்;---

சோற்று ஆசையோடு காம சேற்றாசைப் படுவாரை
துணிந்து கொள்ள கூற்று ஆசைப்படும் ...என்பார்.

விந்து என்னும் சுக்கிலம்.;--

நம் உடம்பில் உண்டாகும் சுக்கிலம் (விந்துப் பையில்) .விஷம்பாகம் ,பூதபாகம்,,அமுதபாகம்,எனற மூன்று கலவைகளாக உள்ளது , அதில் விஷபாகமாகிய சத்தி ஒன்று ;சாதாரண என்னும் பூதமாகிய அறிவு ஒன்று ; அசாதாரண அமுத பாகமாகிய விந்து அரை .ஆக இரண்டரை .இதுபோல் பெண்களிடத்தும்,உள்ளது.

மேற்கண்ட சுக்கில சுரோணிதம் இரண்டினும் கடவுள் ஆவி உள்ளது .கோசத்தின் முன் வருவது விஷம்,அதை அடுத்து வருவது பூதம்,அதற்கு மேல் அமுதம் உண்டு.இவ்வாறு பெண்பால் இடத்தும் உண்டு.முன்னுள்ள விஷம்பாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேக நஷ்டம்,,பூதம் வெளிப்பட்டால் வியாதி,அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி .

பஞ்ச பூதங்களால் உண்டாகும் விஷத்தையும்,உணவினால் உண்டாகும் பூதத்தையும்.கடவுளால் உண்டாக்கும் அமுதத்தையும்,,..மேற்கண்ட சுக்கிலத்தை வெளியே விடாமல் கீழே செலுத்தாமல் இருக்க வேண்டும். இதுவே போகாப்புனல் என்பதாகும்.இதுவே சுத்த சன்மார்க்கிகள் கடைபிடிக்க வேண்டியவையாகும்.

நம்முடைய மனத்தை ,ஆன்மா இருக்கும் இடமான புருவ மத்தியில் செலுத்த வேண்டும்.மனம் அடங்கும் போது சுக்கிலம் கீழே செல்லாது ஆன்மாவை நோக்கி மேலே தொடர்பு  கொள்ளும். அப்போது ஆன்மா என்னும் அருட்கனலால் சுக்கிலம் கொஞ்சம் கொஞ்சமாக பஸ்பமாகிவிடும் ,சுக்கிலத்தை மேலே ஏற்றுவதுதான் போகாப்புனல் என்பதாகும்.

அந்த சுக்கிலம் என்னும் விந்துவை நாம் மேலே ஏற்றமுடியாது.ஏற்றவும் கூடாது .தானே மேலே ஏறவேண்டும்.எப்படி தானே ஏறும் என்றால் ,கடவுளிடம் உண்மையான அன்பும்,சத்விசாரமும் ,ஜீவன் என்னும் உயிரகளிடத்தில் ஒருமையும், ஜீவகாருண்யம் என்னும் தயவும் இரக்கமும்.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்ற உறுதிப்பாடும் ,கடவுள் ஒருவரே என்ற உண்மை அறிவும் உள்ளவர்களின் உடம்பில் உள்ள புனல் என்னும் சுக்கிலம் கீழே போகாது .இதுவே போகாப்புனல் என்பதாகும்.அதற்கு சதாசிவ பாகம்,சதாசிவ தத்துவம்,பிரதிஷ்டாகலை ,ஜீவன்,இரக்கம் ,காரணோதகம் என்பதாகும்.ஆன்மநேய ஒருமைப்பாடு என்பதாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலே ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி !

மேலே உள்ள சாகாக்கலை ,வேகாக்கால் ,போகாப்புனல் போன்றவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை அறிவு விளக்கத்தோடு தெரிந்து, அறிந்து, அவற்றை கண்டு பிடித்து அவைகளை அடக்கி ஆன்மாவின் சொல்படி செயல்பட வைப்பதுதான் மெய்த் தொழிலாகும்.

அதாவது,சாகாத கல்வியே கல்வி  ,ஒன்றே சிவம் தான் என்ற அறிந்த அறிவே தகும் அறிவு,மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்,வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலதாகும். இந்த நான்கையும் தெரிந்து ஒருங்கே வியந்து அடைந்து மாகாதல் என்னும் இறைவனின் அன்பைப் பெற்று அருளை அடைந்து .கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு (ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு ) ஆன்மா ஐந்தொழில் வல்லபத்தை (எல்லாம் வல்ல சித்துக்கள் )பெற்றுக் கொள்வதுதான் சிறந்த தொழிலாகும்.அதுவே பேரின்பமாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்..அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்.அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

வள்ளல் பெருமானுக்கு இறைவன் அருள் கொடுத்து ,தன்னுடைய உடம்பை ஒளி உடம்பாக மாற்றிய பிறகு அடைந்த ஆற்றலைப் பற்றியும் அதன் சக்தியைப் பற்றியும் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர்
எந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

இதுவே சுத்த சன்மார்க்க மரபு என்பதாகும்.

இறைவன் காட்டிய சுத்த சன்மார்க்க மரபுப்படி வாழ்ந்து வழிகாட்டி வாழ்ந்து கொண்டு உள்ளவர்தான்,  நம்முடைய அருள் வள்ளல்,அருட் பிரகாச வள்ளல் பெருமான அவர்களாகும் .அவர்கள் காட்டிய புனிதமுறு சுத்த சன்மார்க்க மரபுப்படி நாம் அனைவரும் வாழ்ந்து,
சுத்ததேகம்,பிரணவதேகம்,ஞானதேகம்,பெற்று ஆண்டவரின் பூரண அருளைப் பெறுவோம் மரணத்தை வெல்வோம்.மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வோம். வாருங்கள் வடலூர் பெருவேளிக்கே,வந்தால் பெறலாம் நல்ல வரமே ! இது சத்தியம்,இது சத்தியம் !இது சத்தியம்,!.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கக் கொள்கையை கடைபிடிப்பவர்கள்.உலகில் உள்ள பற்றுகள் அனைத்தையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்று எனப்பற்றிக் கொண்டு வாழ்பவகள் மட்டும்தான் சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் என்பதை அறிந்து ,அதன்படி வாழ வேண்டும் என்பதை வள்ளல்பெருமான் அறுதி யிட்டு,உறுதி இட்டு  சொல்லி உள்ளார்கள்.ஆதலால் வள்ளல்பெருமான சொல்லிய கருத்துக்களை ஆன்மாவில் பதிய வைத்து அதன்படி வாழ்வோம். அருளைப்பெருவோம்.

மீண்டும் பூக்கும்

ஆன்மநேயன் ;--
ஈரோடு செ கதிர்வேல்
108,C,நந்தா இல்லம்.
வள்ளலார் வீதி,
வையாபுரி நகர்,
46,புதூர் அஞ்சல்.
ஈரோடு 638002,
தமிழ் நாடு, இந்தியா .
SELL ,9865939896.