திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வள்ளல்பெருமான் எழுதிய அருட்பாவைப் படித்தால் !

வள்ளல்பெருமான் எழுதிய அருட்பாவைப் படித்தால் !

பக்தி வரும் பழ வினைகள் பறந்தோடும் மூலப் பகுதி மாயும்,

புத்தி வரும் புலை கொலைகள் புறம் போகும் ஆனந்தம் பொங்கும்,

சாந்த முத்தி வரும் அழியா நன் மோக்கமுறும் முது கடல் சூழ் உலகில் எல்லாச்

சித்திவரும் இராமலிங்க தேசிகன் தன் அருட்பாவைச் சிந்திப் போர்க்கே !

திரு அருட்பாவைப் ஊன்றிப் படித்தால்,பக்தி என்பது தானே வரும்.நம்மைப் பிடித்துள்ள பழைய வினைகள் யாவும் பறந்து போய் விடும்.

மேலும் தீராத நோய்கள் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்து விடும்.

புத்தி இல்லாது இருந்தால் புத்தி வரும்,கொலையும் புலையும் வெளியே போய் விடும்,அளவில்லா ஆனந்தம் பெருகும்.

கோபம் தொலைந்து அனைவரும் விரும்பும் சாந்தம் பெருகும்,

நீண்ட ஆயுளுடன் வாழும் முத்தி வரும்,நன்மை தரும் நோக்கம் உண்டாகும்.

மரணத்தை வென்று எல்லா உலகங்கள் தோறும் யாருடைய உதவிகளும் இல்லாமல் செல்லும் அருள் சித்தி கிடைக்கும்.

தினந்தோறும் திரு விளக்கை ஏற்றி வைத்து, திரு அருட்பாவைப் படியுங்கள் கிடைக்காத நன்மைகள் உங்களைத் தேடிவரும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 29 ஆகஸ்ட், 2015

கடவுள் காரியப்படும் இடங்கள்.!

கடவுள் காரியப்படும் இடங்கள்.!

கடவுளின் உண்மைத் தெரியாமல் காட்டு மிராண்டிகளாய், மக்கள் திரிந்து கொண்டு உள்ளார்கள்.

சாதி,சமயம்,மதங்கள் கடவுளைப் பற்றி ஏதும் தெரியாமல் கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கின்றார்கள்.மக்களும் அவர்கள் சொல்லியது உண்மை என்று நம்பிக் கொண்டு, கண் தெரியாத குருடர்கள் போல் அலைந்து கொண்டு உள்ளார்கள்.

 கடவுள் இந்த உலகத்தில் எப்படி காரிய காரணமாய் இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை வள்ளல்பெருமான் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார்.

உலகத்தைப் படைத்த இறைவன் ;--

இந்த உலகத்தில் அண்டத்திலும் ,உயிர்களின் பிண்டத்திலும் காரிய காரணமாய் விளங்கிக் கொண்டு உள்ளார்

அண்டத்திலும்,பிண்டத்திலும் ;--

அண்டத்தில் நான்கு இடத்திலும்,பிண்டத்தில் நான்கு இடத்திலும் கடவுள் காரிய பிரகாசம் உள்ளது.

அண்டத்தில் அகம்,..அகப்புறம் ..புறம்,..புறப்புறம் என்னும் நான்கு இடத்திலும் .உயிர்களின் பிண்டத்தில் ,அகம் ..அகப்புறம்,..புறம் ..புறப்புறம் என்னும் நான்கு இடத்தில் காரிய காரண பிரகாசமாய் விளங்கிக் கொண்டு உள்ளது.

அண்டத்தில் ;--அகம் என்பது அக்கினி ...அகப்புறம் என்பது சூரியன்,,,புறம் என்பது சந்திரன்,,,புறப்புறம் என்பது,நட்சத்திரங்கள் போன்ற நான்கு இடத்திலும்.

பிண்டத்தில் ;--''அகம்'' என்பது ஆன்மா ..''அகப்புறம்'' என்பது ஜீவன் என்னும் உயிர் ..''புறம்'' என்பது மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கரணங்கள்.புறப்புறம் என்பது ,கண்,மூக்கு,காது,வாய்,உடம்பு என்னும் இந்திரியங்கள்

அண்டத்தில் நான்கு இடத்திலும் ,பிண்டத்தில் நான்கு இடத்திலும் ஆக எட்டு இடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தால் உள்ளது.

காரணத்தால் உள்ள இடங்கள் ;--

பிண்டத்தில் புருவ மத்தியில்  ஆன்மா இருக்கும் இடம் , , அண்டத்தில் பரமாகாசம் என்னும் ஆகாயத்தின் மத்தியில்...

காரிய காரணமாய் உள்ள இடம் நான்கு  ;--

பிண்டத்தில்;-- ''விந்துவும்'' அதில் இருந்து உண்டாகும் ''நாதமும்'' (சப்தம் ) ஆகிய இரண்டு இடத்திலும் உள்ளது.

அண்டத்தில்;--மின்னல்,அதில் இருந்து உண்டாகும் இடி என்னும் சத்தம்,ஆகிய  இரண்டு இடத்திலும் உள்ளது.

அது அல்லாது சர்வ யோனிகள் இடத்தும் .

விந்து விளக்கமாகிய மின்னல் இடத்தும் நாத விளக்கமாகிய இடி இடத்தும்,இதல்லாது பாரோடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதியாக உள்ளதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அதுதான் ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாயும்,காரண காரியமாய் விளங்கிக் கொண்டு உள்ளது.

சத்திய ஞான சபை !

அதைக் கண்டு தெரிந்துதான் ''சத்திய ஞான சபையை ''வடலூரில் எண்கோண வடிவமாக வள்ளல்பெருமான் அமைத்துள்ளார் .

மேற்குறித்த ஆன்மப் பிரகாசமே ஞான சபை ,அதன் உள் ஒளியின் அசைவே நடம் என்பதாகும் அதைத்தான் ஞானாகாச நடனம் என்றும் ,அசைவு உற்றதே நடராஜர் என்றும்,ஆனந்த நடனம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதலால் ஏமம்,கனகம் ,ரஜிதம்,ரவுப்பியம் முதலாகச் சொல்லப்பட்டது.
அண்டத்தில் சூரியனிடத்தில் கனகமும்,சசி(சந்திரன் ) இடத்தில் ரஜிதமும் என்றும் சொல்லப்படுகின்றது..

அதேபோல் ,பிண்டத்தில் ஆன்மாகாசம் பொற்சபை என்றும்,ஜீவ ஆகாசம் ரஜிதசபை என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண இயற்கை விளக்கம் காரியமாயும்,காரணமாயும் ,காரண காரியமாயும் இருக்கின்றது.

முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நான்கு இடத்திலும்,அண்டத்தில் நான்கு இடத்திலும்,கடவுள் விளக்கம் விசேஷ மாக உள்ளது.

ஆதலால் நாம் மேற்குறித்த பிரகாசமே சபையாகவும்,அதன் உள் ஒளியே பதியாகவும் வணங்க வேண்டும்.

எக்காலத்திலும்,புருவ மத்தியின் கண்ணே நம்முடைய மனத்தை செலுத்த வேண்டும்.

முக்கியமான காலங்கள் ஆறு ;--

மேற்குறித்த காலங்கள் சூரிய உதயம்,..உச்சிப்போது ...சாயரஷை...மாலை..
யாமம்..வைகறை ஆகிய காலங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

ஞான சபையும் அருட்பெருஞ்ஜோதியும் ;--

பிண்டத்தில் ;--ஒரு பொருளினது நாமம்  ரூபம் ,குணம்,குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக் காட்சி,இந்திரிய அறிவு என்பதாகும்.

அதன் நாமம்,ரூபம்,குணம்,குற்றங்களையும் விசாரித்தல் கரணக்காட்சி மன அறிவு , என்பதாகும்.

அதன் பிரயோஜனத்தை அறிதல் ஜீவ காட்சி ஜீவ அறிவு என்பதாகும்.

அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம காட்சி ,ஆன்ம அறிவு என்பதாகும்.

இதேபோல் அண்டத்திலும்;- அக்கினி,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் உள்ளது

நட்சத்திரக் காட்சி,..சந்திரக் காட்சி,..சூரிய காட்சி,..அக்கினி காட்சிகளும் ..உண்டு.

பிண்ட ஒளியும் அண்ட ஒளியும்.;--

பிண்ட ஒளி ;--ஆன்ம ஒளி....ஜீவ ஒளி ...மன ஒளி ...கண்ணொளி யாகும்.

அண்ட ஒளி ;--அக்கினி ஒளி ..சூரிய ஒளி ...சந்திர ஒளி ...நட்சத்திர ஒளி..யாகும்.

கடவுள்;-- மேலே கண்ட எட்டு இடங்களிலும் காரணமாகவும் ,மற்ற இடங்களில் காரிய காரணமாகவும் பிரகாசமாய் விளங்கிக் கொண்டு உள்ளார் .
மேலும் விரிக்கில் பெருகும்.

இந்த உண்மையை அறியாத மக்கள் கடவுளைத் தேடிக் கொண்டு உள்ளார்கள்.
எங்குத் தேடினாலும் கடவுள் கிடைக்க மாட்டார்.நம்முள் இருக்கும் ஆன்மாவைத் தொடர்பு கொண்டால் கடவுளின் உண்மைப் பிரகாசம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்....

எல்லா ஆன்மாக்களிலும்,எல்லா உயிர்களிலும் அருட்பெருஞ்ஜோதிக் கடவுள்தான் உள்ளது என்பதை அறிவாலே அறிந்து கொள்ளுங்கள் .

ஆன்ம விளக்கமும் அறிவு விளக்கமும் ,அருள் விளக்கமும் என்னவென்று தெரிந்து கொண்டால் எல்லா உண்மைகளும் தன்னைத்தானே தெரியும்.

அதைத்தான் தன்னை அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்று வள்ளல்பெருமான் இறைவனிடம் வேண்டுகின்றார்.....நன்றி

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

.

  

குணம் இரண்டு வகைப்படும் !

குணம் இரண்டு வகைப்படும் !

ஒன்று பெருங்குணம் ! ,ஒன்று சிறுங்குணம் !.

பெருங்குணம் உள்ளவர்கள் எல்லா உயிர்களும் ஒன்று என்று நினைப்பவர்கள்.எந்த உயிர்களுக்கும் துன்பம் விளைவிக்காமல் .பொது நோக்கத்துடன் வாழ்பவர்கள்.

பெருங்குணம் உள்ளவர்கள் பேரும் புகழுடன் வாழ்பவர்கள்.அவர்களுக்கு துன்பம்,துயரம்,அச்சம், பயம்,என்பது எக்காலத்தும் வராது.என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

அவர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் துணையாக,பாது காப்பாக இருந்து,அறிவையும்,ஆற்றலையும் அருளையும்,தந்து கொண்டே இருப்பார்.அவர்களுடைய மரணம் நீட்டித்துக் கொண்டே இருக்கும்.அவர்களுக்கு அருள் பூரணமாக கிடைக்கும் போது மரணத்தை வென்று வாழும் வழியும்  கிடைக்கும்.

சிறு குணம் உள்ளவர்கள்.!

சிறு குணம் உள்ளவர்கள் ,சுய நலத்துடன் வாழ்பவர்கள்.மற்றவர்கள் பொருளை அபகரிக்க நினைப்பவர்கள்.அவர்கள் உயிர்களின் மேல் அன்பும் இரக்கமும் கொண்டு இருக்க மாட்டார்கள்.மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்து கொண்டே இருப்பார்கள்.

அவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம்,துயரம்,அச்சம் ,பயம்,போன்ற துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.

அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே இருக்காது.குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது.மற்றவர்களால் தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும்.

அவர்கள் இடத்தில் அன்பும்,தயவும்,கருணையும், எக்காலத்திலும் இருக்காது.துஷ்ட மிருக குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்

அவர்களை நோக்கி இறைவன் வரவே மாட்டார்.அவர்களை இறைவன் தள்ளி வைத்து விடுவார்.

அவர்களுக்கு இயற்கை மரணத்திற்கு மாறாக,தற்கொலை,விபத்துக்கள்,கொலைகள் போன்ற துர்மரணம் வந்து விடும்.

அன்பும் ,தயவும்,கருணையும் இல்லாத இடத்தில் கடவுளுக்கு வேலையே  இல்லை. இடமே இல்லை..

எனவே மனிதர்களின் இயற்கை குணம் பெருங்குணம்... ,இயற்கை குணத்திற்கு மாறுபட்டு வாழ்பவர்கள் மனிதர்கள் அல்ல .அவர்கள் சிறு குணம் உள்ள துஷ்ட மிருகத்திற்கு சமமானவர்கள்.

சிறு குணம் உள்ளவர்கள் உயிர்கள் மேல் ,அன்பும் தயவும், கருணையும்,கொண்டு வாழ்ந்தால் பெருங் குணம் உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

மனிதர்களே சிந்தித்து உண்மையை உணர்ந்து வாழுங்கள் .வாழ்க்கை என்பது புனிதமானது..மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் வாழும் வாழ்க்கையே இன்பம் நிறைந்த வாழ்க்கையாகும்.

மார்க்கம் இரண்டு ;--சன்மார்க்கம் .புன்மார்க்கம்,

சன்மார்க்கம் ,உயர்ந்த மார்க்கம்,
புன்மார்க்கம் ..தாழ்ந்த மார்க்கம்.

உலகியல் மார்க்கம்;-- புன்மார்க்கம்,
அருளியல் மார்க்கம்;-- சன்மார்க்கம்,

புன்மார்க்கத்தில்;-- கடவுள் அருள் கிடைக்காது.
சன்மார்க்கத்தில் ;--கடவுள் அருள் கிடைக்கிம்.

பெருங்குணம்;-- .சான்மார்க்கத்தில் கிடைக்கும்.
சிறு குணம்.-;--உலகியல் வாழ்வில் கிடைக்கும்.

வள்ளலார் பாடல்.;---

சன்மார்க்கப் பெருங் குணத்தார் தம் பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்த சபாபதியை
நன்மார்க்கத்தில் எனை நடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப்
புன்மார்க்கர்க் அறிவு அரிதாம் புண்ணியனை ஞான
பூரண மெய்ப் பொருளாகிப் பொருந்திய மாமருந்தை
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடஞ்செய்,
அருட்பெருஞ்ஜோதியை உலகீர் தெருட் கொளச் சார்வீரே

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

ஆன்மா தனியாகத்தான் வந்தது தனியாகத்தான் செல்லவேண்டும் !

ஆன்மா தனியாகத்தான் வந்தது தனியாகத்தான் செல்லவேண்டும் !

ஆன்மா இந்த உலகத்தில் வாழ்வதற்கு தனியாகத்தான் வந்தது.

இந்த உலகத்திற்கு வந்ததும் உயிரும் உடம்பும்,பஞ்ச பூதங்களால்  கொடுக்கப்படுகின்றது.

ஆன்மா சுய நலமில்லாமல் மற்ற உயிர்களுக்கும் உடம்பிற்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்துதான் மனிதப் பிறவி கிடைத்துள்ளது.

இந்த மனிதப்பிறவியில் அறம்,பொருள்,இன்பம்,என்பதை முழுமையாக அனுபவித்து மறுபடியும் வீடுபேறு அடைய வேண்டும்.

ஆனால் மனிதன் சுயநல எண்ணங்கொண்டு மற்ற உயிர்களுக்கும்,உடம்பிற்கும் துன்பம் கொடுத்து வாழ்வதால் அவனுக்கு தீராத துன்பம் வந்து விடுகின்றது.

அந்த துன்பத்தைப் போக்குவதற்கு,அறிவு தெளிவு இல்லாமல்,சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களை கடைபிடித்து,

பக்தி மார்க்கமான ,கோயில் குளங்களை சுற்றி கொண்டு ,அதற்கு உண்டான ஆச்சார ,சங்கற்ப,விகற்பங்களும்,வருணம்,ஆசிரமம்,முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் செய்து வருகின்றான் .

அதனால் துன்பம் நீங்கிவிடுமா என்றால் நீங்காது.இன்னும் அதிகமான துன்பங்கள்தான் வந்து சேரும்.

மற்ற உயிர்களுக்கும் உடம்பிற்கும் துன்பம் செய்ததால் தான் துன்பம் வந்தது என்று தெரியாமல்.அந்த துன்பத்தைப் போக்கும் உண்மையான வழி தெரியாமல் பைத்தியக் காரத்தனமாக அலைந்து கொண்டு உள்ளான் .

எவ்வகையிலும் தீராத துன்பத்தைப் போக்கும் ஒரே வழி ஜீவகாருண்யம் தான் என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக சொல்லி உள்ளார்.

தவறுகள் செய்து துன்பத்தில் வாழும் உயிர்களுக்கு உண்டாகும்,''பசி,''பிணி,''தாகம்,''இச்சை,''எளிமை,''பயம்,கொலை'' ,போன்ற துன்பங்களைப் போக்கினால் மட்டுமே ,மனிதனுக்கு வரும் துன்பத்தை போக்கிக் கொள்ள முடியும்.

அதேபோல் .ஆன்மாவுக்கு ,உயிரையும் உடம்பையும் கொடுத்த இந்த மாயை உலகிற்கு திருப்பிக்  கொடுத்து விட வேண்டும்.

உயிரையும் உடம்பையும்,திருப்பிக் கொடுத்தால் மட்டுமே வீடுபேறு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்.

மரணத்தை வென்றால் மட்டுமே ஆன்மா தனித்து பேரின்பத்தைப் பெற்று உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும்.

ஆன்மா தனித்து வந்தது,..ஆன்மா இந்த உலகத்தில் மற்ற உயிர்களுக்கு இன்பத்தைக் கொடுத்து, இன்பத்தைப் பெற வேண்டும்.அப்படியான இன்பத்தைப் பெற்றால் மட்டுமே,ஆன்மா தனித்து செல்லும்படியான அருள் இறைவனால் வழங்கப்படும்.

அந்த அருள்தான் இறைவன் கொடுப்பது.இறைவனிடம் அருளைப் பெருவதுதான் .ஆன்மாவின் இயற்கை குணம் .
இயற்கை குணம் வந்த ஆன்மா எதுவோ அதுவே தனித்து செல்லமுடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மனிதன் நல்லவனா? கெட்டவனா ?

மனிதன் நல்லவனா? கெட்டவனா ?

ஒரு மனிதன் நல்லவனா, கெட்டவனா என்பதை .தெரிந்து கொள்ள வேண்டுமா ?

ஒரு பெண் நல்லவளா ,கெட்டவளா ,என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா ?

ஒவ்வொருவரின் விந்துவை ( சுக்கிலத்தை ) பரிசோதனை செய்தால் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரின் விந்து அணுக்கள் ஏழு விதமாக உள்ளது.

ஏழு அணுக்களும் ஒன்று சேர்ந்துதான் உருவம் கொடுக்கப் படுகின்றது.
நாம் உண்ணும் உணவினால் விந்து உண்டாகின்றது.ஏழு அணுக்களுக்கும் ஒவ்வாத உணவை உட்கொள்ளுகின்ற போது,அறிவு விளக்கம் மாறுபடுகின்றது.

அறிவின் உயர்வு தாழ்ச்சியால் ஜீவ அறிவும் ஆன்ம அறிவும் பேதப்படுகின்றது.

அறிவு தாழ்ச்சி ஆவதற்கு காரணம் அவன் உண்ணும் உணவே காரண காரியமாக தோன்றுகின்றது.

அறிவு தாழ்ச்சி ஆகின்றபோது அவன் தவறுகள் செய்து கெட்டவனாகின்றான்.

அறிவு உயர்வு அடைகின்றபோது அவன் நல்லவனாகின்றான்.

எல்லா வற்றுக்கும் காரணம் அவன் உண்ணும் உணவேக் காரணம்.

உணவினால் உண்டாகுவது இரத்தம்,இரத்தத்தினால் உண்டாகுவது விந்து ,

எனவே விந்துவை பரிசோதனை செய்தால் அவன் நல்லவனா ? கெட்டவனா ? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

அபர விந்து அபரநாதம்,பரவிந்து பரநாதம் !

அபர விந்து அபரநாதம்,பரவிந்து பரநாதம் !

நாம் உண்ணும் உணவினால் உருவாகும் இரத்தம் ,இரத்தத்தினால் வருவது விந்துவாக்கும். ,விந்துவினால் வரும் ''சபதம்'',அதற்கு ''விந்து நாதம்'' என்று பெயர்.

விந்துவினால் வரும் நாதத்தினால்தான் நாம் பேசுகிறோம்,பாடுகிறோம்,உண்கிறோம்,செயல்படுகின்றோம்.விந்து நின்றுவிட்டால் ,நம்மால் எதுவும் செய்யமுடியாது,செயல்பட முடியாது,பேசவும் முடியாது..

விந்துவை வெளியே விடாமல்,செலவு செய்யாமல்,மிகவும் ஒருமை என்னும் நான்கு ஒழுக்கத்தினால், விந்துவின் சக்தியை ,ஆறு ஆதாரத்தின் வழியாக மேலே ஏற்ற வேண்டும்.மற்ற வழிகளால் ஏற்ற முடியாது.ஏற்றவும் கூடாது.

அப்படி மேலே ஏற்றி ஆன்மாவிடம் தொடர்பு கொண்டால் ,அதன் சுத்த உஷ்ணத்தால் ,ஆன்மாவின் உள் இருக்கும் ஒளியுடன் தொடர்பு கொண்டால், ,ஆன்மாவில் இருந்து ஒரு சபதம் உண்டாகும்,அதற்கு பரநாதம் என்றுபெயர்.

விந்துவினால் வரும் சப்தம்,அபர நாதம் என்றும் விந்து நாதம் என்றும் பெயர்.அருளினால் வரும் சப்தம் பரநாதம், என்று பெயராகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லியது.!

ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லியது.!

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து !

அச்சம் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக --நச்சரவம்
ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீண்டு !

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதிகாரக்
கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்த போதெல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை உலக நடை எலாங் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய் !

நாட்டை ஆளுகின்றவர்கள் .மக்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குகின்ற ''அருள்'' நிறைந்தவர்களாக அன்பு நிறைந்தவரகளாக ,கருணையும், தயவும்,உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாதவர்கள் அழிந்து போக வேண்டும் என்று கட்டளை இடுகின்றார்.

மக்கள் துன்பம் அச்சம் ,பயம், இல்லாமல் வாழ்வதற்கு வழிகாட்டிகளாக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும் என்கின்றார்.

எதிலும் பொது நோக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கின்றார்.

உயிர்களைக் காப்பாற்றும் தயவு,அன்பும்,கருணையும் உள்ளவகளாக இருக்கவேண்டும் என்கின்றார்.

மக்களுக்கு நல்வழியைக் காட்டி மக்களை புனித முள்ளவர்களாக மாற்றவேண்டும் என்கின்றார்.

நாட்டில் பஞ்சம் ,பட்டினி,வறுமை,சோகம்,துன்பம்,பயம்  இல்லாமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றார்.

நாட்டை ஆளுகின்றவர்களால் மக்களுக்கு துன்பம் வந்துவிடுமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டே இருந்தேன் என்கின்றார்.

வள்ளலாரின் கருத்துக்களை ஏற்று நாட்டை ஆளுகின்றவர்கள் கடைபிடித்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

தனி மனித ஒழுக்கம் என்றால் என்ன ?

தனி மனித ஒழுக்கம் என்றால் என்ன ?

நான் யார் ? நாம் யார் ? கோடானுகோடி உயிர் இனங்கள் தோன்றியது எப்படி ? உலகம் எப்படி தோன்றியது ?  ,

அனைத்தும் படைத்த இறைவன் அதாவது அந்த மெய்ப்பொருள் யார் ? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு .என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மா .உயிர்,உடம்பு,கொடுக்கப்பட்டதின் நோக்கம்
ஏன் ?

மனிதனுக்கு உயர்ந்த அறிவு கொடுக்கப் பட்டத்தின் நோக்கம் என்ன ?

உயர்ந்த அறிவு படைத்த மனிதன் தாழ்ந்த நிலைக்கு மாறுவதற்கு யார்? காரணம்.

மனித இனம் ஒழுக்கம் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன ?

ஒழுக்கம் என்றால் என்ன ? ஒழுக்கத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் .ஒழுக்கம் என்பதை நம்முடைய உடம்பில் எப்படி செலுத்த வேண்டும் ?

ஒழுக்கத்தை கடைபிடிக்கும் உறுப்புக்கள் என்ன ? என்ன ? என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே தனி மனித ஒழுக்கம் கை கூடும் .

மேலே கண்ட கேள்விகளுக்கு எல்லாம் சரியான விளக்கத்தை தந்தவர் ,அந்த ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர் ஒருவரே நமது ''வள்ளல்பெருமான்''

வள்ளல்பெருமான் சொல்லிய ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே தனிமனித ஒழுக்கம் என்ன என்பது விளங்கும்.

ஒழுக்கம் என்ன என்பதை வள்ளல்பெருமான் நான்கு வகைகளாக பிரித்து உள்ளார் .

அவைதான் ;-- இந்திரிய ஒழுக்கம்,...கரண ஒழுக்கம்..ஜீவ ஒழுக்கம் ..ஆன்ம ஒழுக்கம் .என்பதாகும்.

மேலே கண்ட ஒழுக்கத்தில் முதல் இரண்டு ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் என்பதை கடைபிடித்து அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே தனி மனித ஒழுக்கம் தானாக வந்துவிடும் .

அடுத்த இரண்டு ஒழுக்கங்களை முறையாக பின்பற்றினால் ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் ஒழுக்கங்கள் தானே கை கூடும் .

இந்த உலகத்தில் தனிமனித ஒழுக்கம் என்ன எனபதைப் பற்றி வள்ளலாரைப்போல் எவரும் சொல்லவில்லை .

இந்த உலகத்தில் சாதி,சமயம்,மதங்கள் சொல்லிய அனைத்து ஒழுக்கங்களும் பொய்யானது .

எனவே தனி மனிதன் ஒழுக்கமுடன் வாழ வேண்டுமானால்  வள்ளலார் எழுதி வைத்துள்ள ''திருஅருட்பாவில் '' உள்ள ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் பகுதியில் மிகவும் தெளிவாக எழுதி வைத்துள்ளார் ,

அவற்றில் உள்ள கருத்துக்களை,கொளகைகளை , நன்கு படித்து தெரிந்து கொண்டு அதன்படி வாழ்ந்தால்  மட்டுமே தனி மனித ஒழுக்கம் நிலைபெறும் .

அப்படி ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்தால் இந்த உலகம் புனிதத் தன்மை பெரும்.

சாதி,சமயம்,மதம்,போன்ற பொய்யான கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு,அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒழுக்கத்தை பின்பற்றினால் மட்டுமே புதிய பொற்கால சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

உலகம் முழுவதும் ஒரே வழிப்பாட்டு முறையை பின் பற்ற வேண்டும் ....

உலகம் முழுவதும் ஒரே வழிப்பாட்டு முறையை பின் பற்ற வேண்டும் ....

உலகில் உள்ள சர்ச் ,மசூதி,கோயில்கள,
ஆலயங்கள்.பிரமிட்டுகள், மற்றும் உள்ள வழிப்பாட்டுத் தளங்கள் அனைத்தையும் அழித்து விட்டால் நல்லது .ஆனால் அப்படி அழிக்க முடியாது .

ஆனால் எல்லா ஆன்மீக வழிப்பாட்டு இடங்களிலும் .எல்லோருக்கும் பொதுவான ஒளி வழிப்பாட்டு முறையை பின்பற்றினால் நல்லது .

எல்லா சாதி,சமய, மதத்தாருக்கும் பொதுவானது ''ஒளி'' வழிப்பாட்டு முறையாகும்.அந்த ஒளிக்கு சாதி சமயம்,மதம் என்ற வேறுபாடுகள் கிடையாது .

இருளைப் போக்குவது ஒளி ... ஒளிக்கு சாதி சமயம்,மதம்
தெரியாது .ஒளி இல்லை என்றால் எல்லா இடங்களிலும் எல்லா இல்லங்களிலும் இருள் சூழ்ந்து விடும்.

எனவே ஆலயங்களில் உள்ள உருவங்களை எடுத்துவிட்டு ஒளியே கடவுளாக வைத்து வழிப்பட்டால் சாதி ,சமய, மத பேதங்கள் தானே ஒழிந்துவிடும் .

எனவேதான் எல்லோருக்கும் பொதுவான வழிப்பாட்டு முறையை வள்ளல்பெருமான் கொண்டு வந்தார்.

மேலும் கடவுளும் ஒளியாக உள்ளார் .கடவுளால் படைத்த ஆன்மாக்களும்  ஒளியாக உள்ளன. எல்லா உயிர்களும் ஒளியாக உள்ளன .,உடம்பில் உள்ள அணுக்களும் ஒளியாக உள்ளன.

ஒளி ஒன்றே எல்லா அண்ட பகிரண்டங்களிலும் விளங்கிக் கொண்டு உள்ளன.என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளங்க வைத்துள்ளார் .

மனிதனாக பிறந்த நாம் அனைவரும் கடவுள் கொள்கையில் வேறுபட்டு இருக்கின்றோம்.

அந்த வேறுபாட்டை ஒழிக்க வேண்டுமானால் எல்லா வழிப்பாட்டு இடங்களிலும் பொதுவான ஒளி வழிப்பாட்டு முறையைக் கொண்டு வரவேண்டும்.

சாதி,சமய,மதம் என்ற வேறுப்பாட்டை ஒழித்து ,மனித இனைத்தை ஒன்று சேர்ப்பதற்கு இதுவே சரியான வழி முறையாகும்.

பூனைக்கு யார் மணிக்கட்டுவது ? உண்மையான இறைவன்தான் மணிக்கட்ட வேண்டும் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தன்னை அறிதல் வேண்டும் !

தன்னை அறிதல் வேண்டும் !

தான் யார் ? என்பதை அறிவதே அறிவு .

தனக்கு, உயிரையும் உடம்பையும் கொடுத்து இவ்வுலகில்   வாழ்வதற்கு அனுப்பியவர் யார் ? அவர் எங்கு இருந்து இயங்கிக் கொண்டு உள்ளார் .அவருக்கும் நமக்கும் உள்ள  தொடர்பு என்ன ? என்பதை அறிதலே தன்னை அறிதலாகும்.

தன்னுடைய உடம்பில் உள்ளே உறுப்புகளை அனைத்தும் தன்னைத்தானே இயங்க வைத்து,அவற்றை தோலினால் மறைத்து .ஒரு அழகான உடம்பு என்னும் வீட்டை கட்டிக் கொடுத்துள்ளார் .

அந்த உடம்பில் ஒன்பது வாயில்கள் என்னும் துவாரங்கள் வைத்து இயங்க வைத்துள்ளார் .

அந்த ஒன்பது வாயில்கள் வழியாகத்தான் உடம்பிற்கு  உள்ளே பொருள்களை அனுப்புவதும்,  உடம்பில் உள்ள கழிவுகளை வெளி ஏற்றப் படுவதும் நடந்து கொண்டே உள்ளது.

அதிலே ஒன்று வாய் என்னும் வாயில், அதன் வழியாத்தான் உணவுகள் உள்ளே அனுப்பப் படுகின்றது

அடுத்து உடம்பில் உள்ள உறுப்புகளை இயக்க காற்றுத் தேவைப்படுகின்றது ,அந்தக் காற்று மூக்கின் வழியாக அனுப்பப்டுகின்றது.

இந்த உலகத்தைப் பார்க்க கண்கள்  தேவைப் படுகின்றது.

உலகத்தில் உள்ள சப்தத்தை கேட்க காதுகள் தேவைப்படுகின்றது,

உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மலத் துவாரம் தேவைப்படுகின்றது.

கழிவு  நீரை அகற்ற ஆண்குறி ,பெண் குறி என்னும் துவாரம் தேவைப்படுகின்றது.

அதே நேரத்தில் ஆணும் பெண்ணும் இன்பத்தை அடைய ஆண் குறியும் பெண் குறியும் தேவைப் படுகின்றது..அந்த இன்பத்தினால் குந்தைகள் உருவாகின்றது.

இவ்வளவையும் அமைத்துக் கொடுத்த தலைவன் யார் ?

அந்த ஒன்பது வாயில்கள் கொண்ட ,உடம்பை இயக்கும் தலைவன் யார் ? என்பதை அறிதலே தன்னை அறிதலாகும்.

அந்த தலைவன் தான் ''ஆன்மா  என்னும் உள்  ஒளியாகும்''.அந்த ஒளியுடன் தொடர்பு கொள்ளுதலே தன்னை அறிதலாகும்.

அந்த ஒளியின் உள்ளேதான் பேரறிவு என்னும் பகுத்தறவு நிறைந்து இருக்கின்றது.

அந்த அறிவைத் தெரிந்து கொண்டவன் .ஒன்பது வாயில்களையும் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்வான்.அவன் சொல்படி அவைகள் கேட்கும்.

அந்த அறிவை அறிந்து அதன்படி வாழ்பவனே உயர்ந்த மனிதன் என்று போற்றப் படுகின்றான்.அவனுக்கு இன்பமும் துன்பமும் சரி சமமாகத் தெரியும்.

அவனுக்கு தோல்வியும் வெற்றியும் ஒன்றுதான்.

தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
தலைவனை அறிந்தவன் தன்னை அறிவான் .

தன்னை அறிந்தவனுக்கு தனக்கு ஒரு கேடும் இல்லை என்பார்கள் பெரியோர்கள்.

எனவே ஒவ்வொரு மனித ஜீவர்களும் தன்னை அறியவேண்டும்.

வள்ளல்பெருமான் தன்னை அறிய இறைவனிடம் வேண்டும் பாடல் ;--

தன்னை அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே !ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே !

என்பதை கேட்டுத் அறிந்து தன்னை அறிந்தார்,
தலைவனை அறிந்தார்,அண்ட பிண்டங்களை அறிந்தார் அதனுள் இயங்கும் அனைத்துப் பொருள்களையும் அறிந்தார் .அதன் கலைகளையும் அறிந்தார் .

எல்லா வற்றையும் இயக்கும் தலைவன் யார் ? என்பதை அறிந்தார் .அவர் யார் ? என்பதையும் மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

அவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி'' என்னும்.பொதுவான  
தனித்தலைமைத் தலைவன். அவர் அருட் பேரொளியாக உள்ளார் .

தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம், தலைவனை அறிந்தால் தனக்கு ஒரு கேடில்லை .அதாவது துன்பம் இல்லை.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

மகா ஆத்மாக்கள் !

மகா ஆத்மாக்கள் !

இந்த உலகத்தில் மக்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைவாக  ''மகா ஆத்மாக்கள் '' நிறை பேர் இருக்கின்றார்கள்.

அந்த மகா ஆத்மாக்கள் இறைவனின் அருளைப் பெற்று பல நல்ல காரியங்களை மறைமுகமாக செய்து கொண்டு வருகின்றார்கள் ..

அவர்களின் தூண்டுதலால் ,அவர்களுடைய ஆசிர்வாதத்தால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும்  நாட்டில் பல நல்ல தலைவர்கள் தோன்றிக் கொண்டே  இருப்பார்கள் .

அவர்கள் மறைந்தாலும் அடுத்து வந்து கொண்டே இருப்பார்கள்.எனவே மக்கள் எதையும்  நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கு பக்குவம் கொடுத்து அவர்களைத் தனித்து நின்று,மக்களுக்கு  செயல்பட வைப்பதுதான் ''இறை அருள்'' ஆற்றலின் வேலைகளாகும்.

ஆனால் அந்த மனிதர்கள் தன்னுடைய அறிவு ஆற்றலும்,திறமையும் எதனால் வந்தது என்று தெரியாமல்,சொல்லத் தெரியாமல்,மக்களுக்கு போதிக்காமல் மரணம் அடைந்து  மறைந்து போகின்றார்கள்.

மகா ஆத்மா காந்தி !

அந்த உண்மையைத் தெரிந்தவர் யார் என்றால் ?  நமது நாட்டிலே பிறந்து வாழ்ந்து நமது நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்கள்.

அவர் சொல்லுவார் ,நான் எதை செய்தாலும் என்னுடைய ''ஆத்மா'' எதை செய்யச் சொல்லுகின்றதோ அதைத்தான் செய்வேன் என்பார் .அதனால்தான் அவருக்கு சாதாரண ஆத்மா என்று பெயர சொல்லாமல் ''மகா ஆத்மா'' என்று பெயர் வந்தது .

அதே ஆத்மா எல்லா உடம்பிலும் உள்ளது.

எனவே மனிதர்களாக பிறவி எடுத்த நாம் மனிதர்களை பின் தொடராமல் உண்மையான இறைவனை தொடர்பு கொள்ளவேண்டும்.

அந்த உண்மையான இறைவன் யார் >என்பதை உலகுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் வள்ளல்பெருமான்.

அந்த இறைவன்தான் ;--''அருட்பெருஞ்ஜோதி'' என்பதாகும் அந்த ஜோதியின் தனிப் பெருங் கருணையால்தான் உந்த உலகமும் ,உலகில் உள்ள பொருள்களும் ,ஆன்மாக்களும் அதனால் தோன்றும் உயிர்களும் வாழ்ந்து கொண்டு உள்ளன் .

நாம் தொடர்பு கொள்ள வேண்டியது;--தாயாகவும் தந்தையாகவும் இருந்து  நம்மைத் தாங்கிக் கொண்டு உள்ள இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அந்த ஒளிதான் சிற்று அணு வடிவமாக நம்முடைய தலைப்பாகத்தில் உள் ஒளியாக இருந்து,நம்முடைய உயிரையும் உடம்பையும் இயக்கிச் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் உண்மையான தெய்வம்.

ஆதியும்  அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர் .

என்று உலக மக்களுக்கு பறை சாற்றி உள்ளார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

ஏன் அப்துல்கலாம் அவர்கள் சொல்லவில்லை !

ஏன் அப்துல்கலாம் அவர்கள் சொல்லவில்லை !

நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் .மாணவர்களை கனவு கானச்சொன்னார் .

இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று சொன்னார்

இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று சொன்னார்

அணு ஆராய்சியைப் பற்றி போதித்தவர் ,

குடியும்,கொலையும்.புலாலும்,உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்தும் ஏன் ? போதிக்கவில்லை.

தான் புலால் உண்ணாமலும்,மது அருந்தாமலும் வாழ்ந்துள்ளார் .தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மாணவர்கள் இடையே பகிர்ந்து கொண்டு வந்துள்ளார்.

ஆனால் மது அருந்துவதும்,புலால் உண்பதும் மிகவும் தவறானது அதனால் பல குடும்பங்கள் பாதித்து உள்ளது பாதித்து கொண்டும் உள்ளது ஆதலால் மாணவர்களாகிய நீங்கள் அந்த தவறை செய்யக் கூடாது என்று ஏன் சொல்லவில்லை..

அப்துல்கலாம் அவர்கள் திருக்குறளை நேசித்தவர் .அதில் குடிப்பதும் ,கொலை செய்வதும் புலால் உண்பதும் குற்றங்களிலே மிகவும் பெரிய குற்றமானது என்று நான்கு அதிகாரங்களில் திருவள்ளுவர் சொல்லி உள்ளார் .

மாணவர்களாகிய நீங்கள் மது அருந்துவதும் ,ஒரு உயிரைக் கொன்று அதன் புலாலை ( மாமிசம் ) உண்பதும் மிகவும் தவறானது என்று ''ஏன்'' வலியுறுத்தி போதிக்க வில்லை .

எண்ணக் காரணம் .?

அப்படி அதைப் பற்றி போதித்து இருந்தால் மக்களும் மாணவர்களும் அவரை நெருங்கி இருக்க மாட்டார்கள்,அவருடைய பேச்சை கேட்டு இருக்க மாட்டார்கள் என்ற பயத்தால் போதிக்க வில்லையா ?

ஒரு உலகம் ஒழுக்கமல் இல்லாமல் வாழ்வதற்கு கொலையும் புலையும்,மதுவும் தான் காரணம் என்று ,திருவள்ளுவரும் ,வள்ளல்பெருமானும் ஆணித்தரமாக மக்களுக்கு போதித்து உள்ளார்கள் என்பது .அப்துல்கலாம் அவர்களுக்கு நன்குத் தெரியும்.

தெரிந்தும் மக்களுக்கு அவற்றைப் பற்றி ஏன் அப்துல்கலாம் அவர்கள் போதிக்கவில்லை.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

காதல் கை மீறி போகின்றது !

காதல் கை மீறி போகின்றது !

காதல் என்பது ஆண் பெண் இணைவது தான் காதல் என்கின்றோம் அது உயர்ந்த காதல் அல்ல .

எல்லாம் வல்ல இறைவனைக் காதலிப்பதுதான் உண்மையானக் காதல் .உயர்ந்த காதல் .

ஆண் பெண் உறவு கொள்வதால் ஓர் இன்பம் கிடைக்கின்றது.அந்த இன்பம் நிலைத்து நிற்பதில்லை.

அந்தக் காதல் உணவின் உணர்ச்சியால் உண்டாகின்றது.

அந்தக் காதலுக்கு ஆசை இருந்தாலும் 72,வயதுக்கு மேல் ஆண் பெண் உறவு கொள்ள முடியாது.விந்துவின் வீரியம் சோர்ந்து குறைந்து விடும் .

ஆதலால் ஆண் பெண் உறவு கொளவதற்கு சிற்றின்பம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

நாம் அனைவரும் பெண்கள்.!

மேலும் ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.!

இந்த உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும் பெண் தன்மைக் கொண்டது .

இறைவன் ஒருவர்தான் ஆண் தன்மைக் கொண்டவர்..

உருவத்தால் வேறுபடுகின்றோம்,,அனைவருடைய ஆன்மாவும் ஒரே தன்மை உடையது.

நாம் காதல் கொள்வது பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வது போன்றது.ஆகையால் அவை உண்மையான காதல் அல்ல !

கடவுள் இன்பம் !

கடவுள் கொடுக்கும் விந்து, என்பது அமுதம் அதாவது அருள் என்பதாகும்.

ஆனால் இறைவனைக் காதலித்தால் இடைவிடாது இன்பம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.அதற்கு வயது வரம்பு கிடையாது.

இறைவனுடன் தொடர்பு கொள்வதால் அருள் என்னும் அமுதம் சுரந்து கொண்டே இருக்கும் .அதனால் வரும் இன்பம் அளவிடமுடியாது.அந்த சுகத்தை வெளியில் சொல்ல முடியாது .அதற்கு வார்த்தைகளே கிடையாது.

அந்த அமுதம் ஆன்மாவில் இருந்து கசிந்து கொண்டே இருக்கும் அதை அனுபவிப்பவர் தான் முற்றும் தெரிந்த ஞானி என்பவராகும்.

அதனால் தான் ஞானிகளை ,மனிதர்கள் வணங்குகிறார்கள். மனிதர்களை ஞானிகள் வணங்குவதில்லை..

இடைவிடாது இறைவனைக் காதலிப்பவர்களுக்கு மரணம் வராது.அதற்கு பூரண சுகம் என்பதாகும்.

இவ்வுலகில் இறைவனை பூரணமாக உள் அன்போடு காதலித்தவர் வள்ளல்பெருமான் அதனால்தான் அவருக்கு மரணம் இல்லை .

வள்ளலார் காதல் கொண்ட பாடல்.!

காதல் கைம் மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டு கொள் கணவனே என்றாள்

ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை இது என்றாள்

பேதை நான் பிறிதோர் புகல் இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள்

மா தயவுடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான்  பெற்ற மகளே !

அடுத்த பாடல் !

மயங்கினேன் எனினும் வள்ளலே உன்னை நான் மறப்பனோ கனவினும் என்றாள்

உயங்கினேன் உன்னை மறைந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள்

கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணைக் கடல் அமுதம் அளித்தருள் என்றாள்

வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே !

தாய் புலம்பல்.!

ஒரு தாய், தான் பெற்ற மகள் இறைவனை காதலிப்பதாக அறிந்து இறைவனிடம் சொல்லி மகிழ்கின்றாள்

என்மகள் உன்னையே நினைத்துக் கொண்டு உண்ணாமல்,உறங்காமல்,விழித்துக் கொண்டும்  வேண்டிக் கொண்டும்  இருக்கின்றாள்

உன்னையே நினைத்துக் கொண்டு இடைவிடாது காதலித்துக் கொண்டே இருக்கின்றாள்,உங்களுடைய பெருமையும் புகழையும் ஆற்றலையும் அறிந்து காதலிக்கும்,  என்மகளை ''ஈன்று'' எடுத்ததற்கு என்ன தவம் செய்தோனோ

உடனே என்மகளை ஏற்றுக் கொண்டு அவளுடைய காதலை நிறை வேற்ற வேண்டும் என்று, தனது  மகளுக்காக இறைவனிடம் வேண்டுகின்றார் .

நாமும் அப்படி இறைவனைக் காதலித்து அழியாப் பேரின்பம் பெறுவோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

ஆன்மா என்பது எது ?

ஆன்மா என்பது எது ?

ஆன்மா என்பது சிறிய அணு வடிவம் கொண்டது.அதன் சக்தி அதாவது ஆற்றல்  கோடி சூரிய பிரகாசம் உடையது.அந்த ஆன்மாவில் அமுதம் என்னும் அருள் நிறைந்து உள்ளது .

ஆன்மாவை  ஆன்மாகாயத்தில் இருந்து இறைவன் அனுப்பி வைக்கும் முன்,மீண்டும் திரும்பி வருவதற்காக அருளைப்  பதிய வைத்துதான் அனுப்பி வைக்கின்றார். 

இந்த பூத உலகத்திற்கு வந்ததும் ஆன்மா தனித்து வாழாது வாழ முடியாது  .உயிரும் உடம்பும் எடுத்துதான் வாழ வேண்டும் என்பது இறைவனின் சட்டமாகும்.

ஆன்மாவில் இருந்துதான் உயிர் உண்டாகிறது.இவை எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொதுவானதாகும்.ஆன்மா பல கோடிபிறவிகள் எடுத்து இறுதியில் ,மனித தேகம் கிடைத்து இருக்கின்றது. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார்கள் நம்முடைய பெரியவர்கள் .வள்ளலார் உயர்ந்த அறிவு படைத்த மனித தேகம் என்கின்றார்.

ஆன்மா மனித தேகத்தில் எப்படி காரியப் படுகிறது என்றால்,மனித தேகத்தில் புருவமத்தியில் உச்சிக்கும் கீழே  உள் நாக்கிற்கும் மேலே புருவ மத்தியின் உள்ளே இயங்கிக் கொண்டு உள்ளது .

புருவ மத்தியில் வெண்தாமரை மலர் போல் மலர்ந்து இருப்பதாக ,அதன் மத்தியில் சிறு அணு ஒளிவடிவமாக ஒரு பீடம் இருக்கின்றது அதன் மத்தியின் உள்ளே அசையாது விளங்குகின்ற ஒரு தீபம் இருப்பதாகவும்,அந்தத் தீப நடுவில் கடவுள் இருப்பதாகவும் பாவித்துக் கொண்டு அருட்பெருஞ் ஜோதி என்று நாவசையாமல் அமைதியாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி செய்து கொண்டே இருந்தால் யோகம் மாதி ஞான சித்திகளுக்கும் கிடைக்கும் இதை உண்மையாக நம்பி பயிற்சியில் ஈடு பாடு கொள்ளவேண்டும். 


அந்த ஆன்மா இருக்கும் இடத்திற்கு .புருவ மத்தி என்றும் ,முச்சந்தி என்றும் ,விந்து ஸ்தானம் என்றும்,ஆன்ம விளக்கம் என்றும்,ஆன்ம அறிவு என்றும்,மேலும் லலாடம் ஸ்தானம் என்பார்கள் .

அதன் வண்ணம் கால் பங்கு பொன்மை.முக்கால் பங்கு வெண்மை நிறம் கொண்டதாகும் பல பிறவிகள் எடுத்த பதிவுகள் ,அதன் செயல்பாடுகள் எல்லாம் அந்த ஆன்மாவில் பதிவாகி இருக்கும் .அந்த பதிவுகளை களைந்து ,[அதாவது நீக்கி ]உண்மையான அதன் தன்மையைத் தெரிந்துக் கொள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது .

ஆன்மாவின் செயல் பாட்டிற்க்காக உயிர் என்னும் ஜீவன் ,கரணங்கள் என்னும் மனம்,புத்தி ,சித்தம்,அகங்காரம் என்னும் கருவிகளும்,இந்திரியங்கள் என்னும் கண்,காது,மூக்கு,வாய்,உடம்பு என்னும் கருவிகளும் கொடுக்கப் பட்டுள்ளன் .

இவைகள் யாவும் ஆன்மா அனுபவிப்பதற்காக கொடுக்கப்பட்ட ,உபகாரக் கருவிகளாகும்.

கண், காது,மூக்கு,வாய்,உடம்பு போன்ற உறுப்புக்கள் மட்டுமே வெளியில் கண்களுக்குத் தெரியும் .இவைகளுக்கு உதவியாக உடம்பின் உள்ளே கண்களுக்குத் தெரியாமல் செயல்படும் கருவிகள் ஏராளம் .அதில் முக்கியமானது.கண்களுக்கு தெரியாமல் உள்ள சூச்சும இந்திரியங்கள் என்பதாகும்.

அவைகளுக்கும் மேலாக கரணங்கள் என்னும் ;--,மனம், புத்தி,சித்தம் .அகங்காரம் .ஆச்சர்யம் என்னும் கருவிகளாகும் .

அதற்கும் மேலே ,ஜீவன் என்னும் உயிராகும்..அதற்குமேலே ஆன்மா என்பது உள்ளது அந்த ஆன்மா அருள் நிறைந்த ஆற்றல் என்னும் ஒளி அணுவாகும்.ஆன்மா என்பது இல்லை என்றால் எதுவும் இயங்காது .

ஆன்மாவின் வாழ்க்கை தேவைக்காக அனைத்து கருவிகளும் மற்றும் ,ஜீவன், கரணங்கள்,மற்றும் இந்திரியங்கள் ,ஆன்மாவின் தன்மைக்குத் தக்கவாறு மாயையால் உருவாக்கிக் (கட்டிக் ) கொடுக்கப்படுகின்றது. 

ஆகவே இதில்  ''நான் என்பது ஆன்மாவே'' என்பது உண்மையாகும்.ஆன்மாவின் உண்மையை அறிந்து கொள்ள இந்திரியங்கள்,கரணங்கள், ஜீவன் என்னும் புறக் கருவிகளுக்கு வேலை கொடுத்துள்ளது.

ஆனால் புறத்தோற்றக் கருவிகளான ஐம்புலன்கள் கண் ,காத்து மூக்கு,வாய்,உடம்பு போன்ற கருவிகள், வெளியில் உள்ள மாயா தோற்றத்தின் அழகில் மயங்கி,மனம் புத்தி,சித்தம் அகங்காரம்,ஆச்சர்யம் .போன்ற கரணக் கருவிகளுக்கு அனுப்பி விடுகிறது .

இவற்றை ஜீவனும் ஆன்மாவும் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் உண்டாகி விடுகிறது .அந்த அளவிற்க்கு மாயா சக்தியின் பலம் அளவிட முடியாததாக உள்ளது, அந்த அளவிற்கு 'மாயா' சக்திக்கு அந்த அதிகாரம் கொடுக்கப் பட்டு உள்ளது [.இதை விரிக்கில் பேருக்கும் ].

அதனால்தான் புறக் கருவிகளை வெளியில் செல்ல விடாமல் உண்மையை அறிந்து கொள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உண்மையை அறிந்த ஞானிகள் மக்களுக்கு பல வழிகளை பலவிதமாக கோணங்களில் சொல்லி உள்ளார்கள் .

மண் ஆசை,பெண் ஆசை,பொன் ஆசை.இந்த மூன்று ஆசைகள்தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி உள்ளார்கள் .உடம்பின் முக்கிய கருவிகள் எது ? என்றால் .

இந்திரியங்களில் உள்ள கண்கள்  ,காரணங்களில் உள்ள மனம் ,இவை இரண்டும் மிக முக்கியமானதாகும்...கண்களில் பார்ப்பது மனதில் பதிவாகும் மனதில் பதிவானது யாவும் இந்திரியங்கள் வழியாக புறத்தில் செயல்படும் .

எனவே தான் மனதை அடக்க வேண்டும் என்கிறார்கள் .கண்ணும் மனமும் எப்படி அடங்கும் ?  .கண் போகும் இடம் மனம் போகும் .எனவே கண்களை வெளியே செல்ல வொட்டாமல்  புருவ மத்தியில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்..எப்படி தொடர்பு கொள்ள முடியும்? 

அதற்குத்தான் தியானம் ,தவம் .யோகம் ,வழிபாடு என்று வைத்துள்ளார்கள். இதனால் ஆன்மாவில் உள்ள பதிவுகள் நீங்கி விடுமா என்றால் நீங்காது என்கிறார் வள்ளலார் ஆன்மாவின் பதிவுகள் எப்படி நீங்கும் என்றால் உயிர்களுக்கு உபகாரம் செய்தால்தான் நீங்கும் என்கிறார் வள்ளலார் .ஏன் ? அப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எல்லாருடைய மனதில் உருவாகும் இல்லையா?

நாம் மாயா சக்திகள் மூலமாக பல உயிர்களின் உதவியால்தான் அனைத்தும் அனுபவித்து உள்ளோம் .அதை திருப்பி தரவேண்டும் இல்லையா ?அதுவே நாம் வாங்கியக் கடனாகும் ,அந்தக் கடனை திருப்பித் தராமல் .தியானம் , தவம் .யோகம்,வழிபாடு என்று செய்தால் .கடன் தீர்ந்து விடுமா ?தீராது .

அதைத் தீர்ப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார் வள்ளலார் .ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்,சாவி இல்லாமல் போனால் ஆண்டவரின் மேல் வீட்டுக்கதவு திறக்காது.உங்கள் ஆன்மாவை சுத்தமாக்க வேண்டுமானால் ஜீவ காருண்யமே வழியாகும் என்றார்.ஜீவ காருண்யமே,வழிபாடு என்றார் .வேறு எந்த வழிகளில் சென்றாலும் உண்மையான இறை நிலையை அறிய முடியாது என்று திட்டவட்டமாக ''திருஅருட்பா'' என்னும் நூலின் வாயிலாக பதிவு செய்துள்ளார்.

ஜீவ காருண்யம் விளங்கும் போது ;--அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்,அந்த உபகார சக்தியால எல்லா நன்மைகளும் தோன்றும்.

ஜீவ காருண்யம் மறையும் போது ;--அறிவும் அன்பும் உடனாக மறையும் .அதனால் உபகார சக்தி மறையும்.உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.

அந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள்; விளக்கம் என்றும் .அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும் அறிய வேண்டும் .

இவ்விளக்கத்தையும் இன்பத்தையும்,பலகால் அறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சாத்திய ஞானிகளே பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்றும்,அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறியவேண்டும் என்று வள்ளல்பெருமான் தெளிவாக சொல்லி  உள்ளார்.

சொல்லியதோடு இல்லாமல் தான் வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார் .அவரைப் போல் வாழ்ந்தால் தான்.மரணத்தை வென்று இறைவனை காண முடியும் .வேறு எந்த வழியாலும் அருள் பெற முடியாது ''நான் என்னும் ஆன்மாவை'' காண இதுவே வழியாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .