வியாழன், 29 ஏப்ரல், 2021

அக இனத்தார் ! புற இனத்தார் !

 *அக இனத்தார் !  புற இனத்தார்* !  


*அக இனம்.புற இனம் என்னும் உண்மையை முற்றும் தெரிந்த அருளாளர் மரணத்தை வென்ற மகான் திருஅருட்பிரகாச வள்ளலார் சொல்வதை அறிவுக்கண் கொண்டு சிந்தித்து செவிசாய்க்க வேண்டும்*.


*வள்ளலார் பாடல்!*


 *உயிர்க் கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்*

*உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார்* அவர்க்குப்


பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே


நயப்புறு *சன் மார்க்கம்அவர் அடையளவும்* இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே


மயர்ப்பறு மெய்த் தவர்போற்றப் பொதுவில் நடம் புரியும்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.! 


*அக இனத்தார் என்பது ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் தகுதி பெற்றவர்கள்* என்பதாகும்  


*புற இனத்தார் என்பது ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் தகுதி அற்றவர்கள்* என்பதாகும். 


உயிர்க் கொலை செய்பவர்களும் அதன் புலாலை உண்பவர்களும். இறைவனை எவ்வளவு காலம் தொழுதாலும் பிரார்த்தனை செய்தாலும்.அன்னதானம் செய்தாலும் மற்றும் தவம்.தியானம் யோகம் பிரார்த்தனைகள் இடைவிடாது செய்தாலும் ஆண்டவர் ஏற்றுக் கொள்வதில்லை.


இறைவன் ஏற்றுக் கொள்ளாததால் அவர்களை புற இனத்தார் என்று வெளிப்படையாக வள்ளலார் சொல்லுகிறார்.


உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலால் உண்ணாமலும் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் குணம் உடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் தகுதியும் அனுமதியும் பெற்றவர்கள் என்பதால் அவர்களை அக இனத்தார் என்று வெளிப்படையாக சொல்லுகிறார்.


உயிர்க்கொலை செய்பவர்கள் புலால் உண்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்று தெரிந்தால் பசியை மட்டும் போக்குங்கள்.

மற்றபடி அவர்கள் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து அக இனத்தாராக மாறுகின்ற வரை அவர்களுக்கு பண்பை பற்றியும் அன்பை பற்றியும்.

அறிவைப்பற்றியும்.அருளைப்பற்றியும் மற்றும்  

நன்நெறிகளைப் பற்றியும் போதிக்காதீர்கள்.சொல்லாதீர்கள்

இது என் ஆணை என்று கட்டளை இடுகிறார் வள்ளலார்.


*ஏன் என்றால்?*  


*உயிர்க்கொலை செய்பவர்கள் அதன் புலால் உண்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த சாதி சமயம் மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஆன்ம விளக்கமும். அறிவு விளக்கமும். அருள் விளக்கமும் தோன்றாது என்பது வெளிப்படையான உண்மையாகும்.*  


*ஜீவகாருண்ய ஒழுக்கம்*! 


வள்ளலார் கொள்கையிலே மிகவும் முக்கியமானது *ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்*.


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பார் வள்ளலார்*


ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றாலே எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும். 


*வள்ளலார் பாடல்* !  


*எத்துணையும் பேத முறா தெவ்வுயிரும்*

*தம்உயிர்போல்* எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


*சித்துருவாய் எம்பெருமான்* *நடம்புரியும்*

*இடம்எனநான்* *தெரிந்தேன்* அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


மேலே கண்ட பாடலில்.யார் ஒருவர் ? எல்லா உயிர்களையும்  தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒருமையுடன் நினைந்து பாவித்து எந்த உயிர்களுக்கும்  தீங்கு செய்யாமல் வாழ்கின்றார்களோ அவர்கள் உள்ளத்தில் .

அவர்கள் ஆன்மாவில்  இறைவன் நடம் புரிகின்றார் என்பதை அறிவாலே அருளாலே அறிந்தேன் என்கிறார் வள்ளலார்.


எனவே அவர்கள் ஆன்மாவில் உள்ளத்தில் இறைவன் நடம் புரியும் இடம் என தெரிந்நதால் அவர்களை எல்லாம் தெரிந்த வித்தகர் என்றும்.உளவு தெரிந்த உத்தமர்  என்றும் அறிந்ததால் அவர்கள் இட்ட கட்டளையை சிரமேற் ஏற்றுக்கொண்டு அன்பு பணிசெய்ய காத்திருக்கின்றேன் என்கிறார் வள்ளலார்.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.....  அருளாளர்கள் மூலமாக அருளை வழங்கி தாம் படைத்த உயிர்களை காப்பாற்ற வெளிப்படையான உண்மைகளை வெளிப்படுத்துவார். 


*அவற்றை ஏற்றுக்கொண்டு மக்கள் பின்பற்றினால்* *துன்பம்.துயரம்.

அச்சம்.பயம்.மரணம் இல்லாமல்* *வாழ்வதற்கு வழிகிடைக்கும்*


உண்மை சொல்ல வந்த அருளாளர்கள் இரண்டு பேர்.!


*ஒருவர் திருவள்ளுவர். ஒருவர் வள்ளலார்*


திருவள்ளுவர் கொல்லாமை புலால் மறுத்தல் என இரண்டு அதிகாரங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.


*கொல்லாமை பற்றிய  முக்கியமான மூன்று குறள் !*


1.அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும் ! 


2.நல்லா றெனப்படுவதி யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி ! 


3.கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற் செல்லா துயிருண்ணும் கூற்று ! 


*புலால் உண்ணாமை பற்றிய முக்கியமான மூன்று குறள் !*


1.உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு.


2.தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி  தூனுண்பான் எங்கனும் ஆளும் அருள் ! 


3.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் ! 


*என கொல்லாமை பற்றியும் புலால் உண்ணாமை பற்றியும் அதனால் உண்டாகும் தீமைகள் பற்றியும் திருவள்ளுவரும். திருவருட்பிரகாச வள்ளலாரும் தெளிவாக வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்கள்*


மேலும் வன்புலால் உண்ணும் மனிதரைக்கண்டு என்பெலாம் கருக இளைத்தன்ன் என்று வள்ளலார் சொல்லுகிறார். மேலும்..


*கொலைபுரிவார் தவிரமற்றை* *எல்லாரும் நினது*

*குலத்தாரே* *நீ எனது குலத்துமுதல் மகனே*


மலைவறவே சுத்தசிவ சமரச சன் மார்க்கம்

வளர வளர்ந்திருக்க என வாழ்த்தியஎன் குருவே


நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா

நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற் குணனே


புலை யறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.! 


இதுபோல் நூற்றுக்கணக்கான பாடல்களில் கொலைசெய்வோர் பற்றியும் அதன் புலால் உண்போர் பற்றியும்.அவர்கள்  யாவரும் இறைவன் முன் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என கடுமையாக சாடியுள்ளார். 


வடலூரில் வள்ளலார் தோற்றுவித்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையின் வெளிபுறத்தில் *புலால் மறுத்தவர்கள் மட்டும் உள்ள பிரவேசிக்க வேண்டும்* என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார்.


அதன் உண்மை என்னவென்றால் புலால் உண்பவர்கள் இறைவனை வணங்கும் வழிபடும் அருள்பெரும் தகுதி அற்றவர்கள்.மேலும்

இறைவன் ஆசீர்வாதமோ அருளோ அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பது அதன் உண்மை பொருளாகும். 


*ஏன் இவ்வளவு கடுமையான கட்டளை பிறப்பிக்கிறார்* ? 


எல்லா உயிர்களையும் இறைவன் படைத்து அதன் உள்ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டுள்ளார்.

*அந்த உயிரைக் கொலை செய்கின்றபோது அதனுள் இருக்கும்  இறைவனையே துடிக்க துடிக்க பயமுறுத்தி வெளி யேற்றுவதாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்*


*வள்ளலார் பாடல் !*

*உயிருள் யாம் எம்முள் உயிர் இவை யுணர்ந்தே*

*உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே* !


மேலும்..


*உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்*

*ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்*


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

*சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்*


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!  


எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்பதை மனிதன் அறிவால் அறிந்து தெரிந்து உணர்ந்தால் நம் சகோதர உயிர்களை கொலை செய்யவோ ! அதன் புலாலை( மாமிசம்) உண்ணவோ மனம் வருவமா ?  


உடம்பு வேறு வேறாக இருந்தாலும் அதன் உள்ளே இருந்து இயங்கும் உயிர்.ஆன்மா 

ஒரேவிதமான ஒளித்  தன்மை உடையது என்பதை அறிவுள்ள மனிதகுலம் அறிந்து கொள்ள வேண்டும். 


இன்று உலகம் முழுவதும் வாய்பேசாத உயிர் இனங்கள் எண்ணில் அடங்காத கோடானகோடி உயிர் இனங்கள் உணவிற்காக அழிக்கப்படுகிறது.


இன்று உலகம்  முழுவதும் கொரோனோ தொற்றாலும் மற்றும் தீராத வியாதிகளாலும்   தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அலைந்து திரிந்து கொண்டு இருக்கும் மனித குலத்தை பார்க்கும் போதும் கேட்கும்போதும் மிகவும் வேதனையாக இருக்கிறது.


இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இறைவனால் படைத்த உயிர்களின் மேல் அன்பு தயவு கருணை இரக்கம் காட்ட தவறிய காரணத்தினால் நம்முள் இருக்கும் உயிரைக் காப்பாற்ற வேண்டி அளவில்லா துன்பப்பட நேர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


எனவே இனிமேலாவது மனிதகுலம் திருவள்ளுவர் திருஅருட்பிரகாச வள்ளார் அவர்கள் சொல்லும் உண்மை அறிந்து உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலாலை உண்ணாமலும் அக இனத்தாராகி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று அச்சம் பயம்.துன்பம்.துயரம் மரணம் நீங்கி வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

உயிரைக் காப்பாற்ற தெரியாத சமுதாயம் !

 *உயிரைக் காப்பாற்ற தெரியாத  சமுதாயம்*! 


இந்த பஞ்சபூத இவ்வுலகில் ஆன்மா என்னும் அணு ஒளியை. உயிர் உடம்பு எடுத்து வாழ வேண்டும்  என்பதற்காக ஆன்மாவை ஆணவத்தின் துணை கொண்டு தனியாக இறைவனால் அனுப்பப்பட்டு வந்துள்ளது. 


இவ்வுலகில் ஆன்மா தனித்து வாழமுடியாது. வாழ வேண்டுமானால் உயிரும் உடம்பும் அவசியம் தேவைப்படுகிறது. உயிரும் உடம்பும் பஞ்ச பூத அணுக்களைக் கொண்டு மாயையால் வாடகை என்னும் வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது. நாம் தினமும் கொடுக்கும் உணவுதான் வாடகை என்பதாகும். மாயை மாமாயை பெருமாயை என்னும் மூன்று மாயைகளையும் படைத்தவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! 


*உணவு இல்லாமல் உயிர் வாழமுடியாது.*

*உணவு உண்பதால் உயிரைக் காப்பாற்ற முடியாது.* 


*பொருள் உணவை நிறுத்தி அருள் உணவு உட்கொள்வதே மரணத்தை வெல்லும் வழியாகும்*


*ஆன்மாவின் ஒளித்தன்மை கோடி சூரிய பிரகாசம் உடையது.* ஆன்மா தங்கி வாழ்வதற்கு உயிர் உடம்பு என்னும் அணுக்களால் பின்னப்பட்ட வீடு தேவைப்படுகிறது.


ஆன்மாவிற்கு உயிரும் உடம்பும் எவரால் எந்த சக்தியால் எந்த எந்த அணுக்களால் பின்னப்பட்டு  கொடுக்கப்படுகிறது என்பதை எவராலும் காணமுடியாது. எவ்வாறு சேர்ந்தது என்பதை எந்த கொம்பனாலும் சொல்ல முடியாது. எந்த அருளாளர்களாலும் கண்ணால் கண்டு சொல்ல முடியவில்லை. 


*கண்களுக்குத் தெரியாமல் நடப்பதே  உயிர் தோற்றம் உடல் தோற்றமாகும்.*


அணு அறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்பாளர்களான அணு விஞ்ஞானிகளாலும்.அவர்கள் கண்டுபிடித்த எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கும் அவற்றில் சிக்கமுடியாத அளவிற்கும் மாபெரும் இருட்டு அறையில் அருள் ஆற்றல் எனும் அருள் சக்தியால் உயிர் உடம்பு படைக்கப்படுகிறது. 

இதுவே பிரம்மரகசியம் என்பதாகும்.  


*வள்ளலார் சொல்லுவதை கேளுங்கள்*


உள்ளொளி யோங்கிட உயிரொளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே!  


மெய் அருட்கனல் எனும் இறை ஆற்றலால் திருவருட் சத்தியால். சராசர ஜீவராசிகளின் உயிர் உடம்பு மற்றும் அனைத்தும்  மறைமுகமாக தோற்றுவித்தல்.வாழ்வித்தல்.குற்றம் நீக்குவித்தல்.

பக்குவம் வருவித்தல். விளக்கம் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்களும் பெருங் கருணையால் நடைபெறுகிறது.

இவை எல்லா உயிர் இனங்களான ஜீவராசிகளுக்கும் அதன் அதன் தகுதிக்கு தகுந்தவாறு ஒரே சீராக  நடைபெறுகின்றது.


அந்த *இறை உண்மையை கண்டுபிடிக்கும் உயர்ந்த அறிவு  அருள் ஆற்றல்  மனித குலத்திற்கு மட்டும் இறைவனால் வழங்கப்பட்டு வருகிறது.* அந்த அருள் ஆற்றலை முழுமையாக

( பூரணமாக ) பெற்றவர்கள் இவ்வுலகில் வள்ளலாரைத் தவிர வேறு எவரும் இல்லை என்றே சொல்லலாம்.


*அந்த இயற்கை உண்மை கடவுள் யார்?  என்பதையே  இந்த மனிதகுலம் இன்றுவரை அறிந்து கொள்ளவில்லை*.


*இந்த உண்மை தெரியாமல் பொய்யான தத்துவ கடவுள்களையே கற்பனைகளாக ஆன்மீகவாதிகள் படைத்துள்ளார்கள்*.

வள்ளலார் மட்டுமே அந்த இயற்கை உண்மை  மெய்ப்பொருளான 

அருட்பெருஞ்ஜோதி யைக்  

கண்டுபிடித்துள்ளார் அந்த மெய்ப்பொருளுக்கு


*அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோத*! என்றும் பெயர் வைத்துள்ளார்.


அந்த மெய்அருள் கனல் பற்றி வள்ளலார் சொல்லி உள்ளதை கவனிக்க வேண்டும்.


*உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட*

*வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே!* என்று தெளிவாக விளக்கி உள்ளார்.


*உயிரும் உடம்பும் எடுத்த வழியும் வந்த வழியும் தெரிந்து இருந்தால் உயிரையும் உடம்பையும் காப்பாற்றும் வழியும்  எளிதாக மக்களுக்குத் தெரிந்திருக்கும்*.


*வள்ளலார் பாடல் !*

என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே

இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே

பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடியே

புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடியே.!


அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே

அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே

பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே

பேசிப் பேசி வியக்கின்றேன் இப் பிறவி தன்னையே.! 


எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ ! என்று வள்ளலார் தான் கண்ட காட்சியை விளக்கி தெளிவுப் படுத்துகின்றார்


*உயிரும் உடம்பும் பிரியும் வகையும் பிரியா வகையும்!*


உயிருக்கும் உடம்ப்பிற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெரும்பிணி (நோய்) வந்துவிடும் அதுதான் மரணப் பெரும் பிணியாகும் . அந்த பிணியைத் தாங்கமுடியாமல் இயங்க முடியாமல் போனதால் ஆன்மாவை விட்டு விலகி பிரிந்து விடுகிறது.


*நோய் தீர்க்கும் மருந்து !* 


உடற்பிணியையும் உயிர் பிணியையும் காப்பாற்றும் மருந்தை கண்டு பிடித்தவர் *தமிழ்நாட்டில் தோன்றிய அருள் விஞ்ஞானி திருஅருட்பிரகாச வள்ளலார்*


*வள்ளலார் பதிவு செய்துள்ள திருஅகவல் வரிகள்*.!


*உடலுறு பிணியால்  உயிர் உடல் கெடாவகை*

*அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி!*


*உடற் பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்*

*மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே!* 


உயிர்ப்பிணியும் உடற்பிணியும் வருவதால் உயிரையும் உடம்பையும் விட்டு ஆன்மா  பிரிந்து விடுகிறது. அதற்கு மரணம் என்றும் இறப்பு என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

உயிர் போய்விட்டது என்றும் வழக்கத்தில்  சொல்லப்படுகிறது.


உயிர் உடம்பை காப்பாற்றத்  தெரியாமல் போனதால் உயிர்  உடம்பை விட்டு பிரியும் ஆன்மா என்னும் அணு மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும்.


*உயிரையும் உடம்பையும் அழிக்காமல் அப்படியே நூறு இருநூறு ஆண்டுகள்  வாழ்வதும் வாழ்க்கை அல்ல*.* *அப்படியே நீண்ட காலம்  வாழவும் முடியாது வாழ்ந்தாலும் மரணம் வந்தே தீரும்*  


மரணத்தை வெல்ல முடியாதவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாகவும் அனைவராலும் பாராட்டத் தக்கவர்களாகவும்.போற்றத் தகுந்தவராயினும் எப்படி இருந்தாலும் மரணம் வந்தால் அவர்கள் குற்றம் உடையவர்களே.

தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்பவர்களே ! தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்கள் என்று வள்ளலார் சொல்லுகிறார்.


மேலும் *பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்வார்கள்.*


மேலும் பல கர்ம சித்தர்கள்.யோக சித்தர்கள்.

நாயன்மார்கள் மற்றும் ஞானிகள்  உயிரை அடக்கி உடம்பை மாற்றி பஞ்ச பூதங்களில் கலந்து உள்ளவர்களும் மீண்டும் பிறப்பு எடுப்பவர்களே !  


*அருள் தேகம் பெறுவதே மரணத்தை வெல்லுவதாகும் !* அதாவது ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவது.

அதாவது ஊனினை உருக்கி உள் ஒளியை பெருக்குவதாகும்.


ஆன்மா உயிர் உடம்பு  மற்றும் அணுத்துகள்களால் பின்னப்பட்டு இணைந்துள்ள ஊன் தேகம்.நம்மை படைத்த   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று என்றும் எதனாலும் அழிக்க முடியாத அருள் தேகமான *சுத்த பிரணவ ஞானதேகம்* பெறுவதே மரணத்தை வென்று வாழும்  வாழ்க்கையாகும். *ஞான தேகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.*


*வள்ளலார் பாடல்* ! 


வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்


மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த

வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்ததனைப் பெறவே


மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே


செய்அகத்தே வளர் ஞான சித்திபுரந் தனிலே

சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.!  


உலகில் உள்ள மனித தேகம் பெற்ற அனைவரும் மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறவேண்டும்.என்பதே இறை ஆணையாகும்.


இறைவனை அறிந்து கொள்ள வேண்டும்.இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தனிப்பெருங் கருணையால் அருளை வழங்க *உத்தர ஞான சித்திபுரம் என்னும் வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்நடம் புரிகின்றார்* 


*பற்றுகள் அனைத்தும் பற்றுஅற விடவேண்டும்!*


உலகப் பற்றான பொருள்பற்றை விட்டு. *இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடித்து *அருள் பற்றை விரும்புபவர்கள்* மட்டும் வடலூர் வந்து வந்து நினைந்து நினைந்து. உணர்ந்து உணர்ந்து. நெகிழ்ந்து நெகிழ்ந்து. அன்பே நிறைந்து நிறைந்து. ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து   *சிற்சபை நடத்தை தெரிந்து துதித்து வேண்டுபவர்களுக்கு திரைகளை நீக்கி அருள்அமுதமான நந்நிதியை வாரி வாரி வழங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தயார் நிலையில் உள்ளார்*.


*அருள் பெறும் தகுதியை நாம் ஒவ்வொருவரும் வளர்த்தி கொள்ள வேண்டும். நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்*.


*என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்*!


*வள்ளலார் பாடல் !*

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன்அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்


கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும் 

சம்மதமோ


சற்றும் இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந் திடுமின்

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே! 


உலகில் உள்ள கற்றவர் கல்லாதார்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர்.ஏழை பணக்காரன் அனைவருக்குமே கண்முன்னே மரணம் வந்து அழிந்து கொண்டே உள்ளார்கள்.

அவற்றை எல்லாம் பார்த்து கொண்டே உள்ளீர்கள். கரணம் எல்லாம் கலங்க வரும் மரணம் உங்களுக்கு சம்மதமா ?  என ஒரு கேள்வி கேட்கிறார் வள்ளலார்.


என்மனமானது உங்களைப்போன்று  கன்மனமோ வன்மனமோ இல்லை எனக்கு இதில் சம்மதமும் இல்லை என்று வள்ளலார் சொல்லுகிறார்.


இந்த கொடூரமான மரணத்தை தடுத்திடலாம் தடுக்கும் வழியை கண்டு பிடித்துள்ளேன் என்னோடு அனைவரும் சேர்ந்து விடுங்கள் *என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்* என்று ஆன்மநேயத்துடன் அன்புடன் உலக மக்களை  அழைக்கிறார். 


*இறந்தார் பிறந்தார் வாழ்ந்தார்  இறந்தார் என்ற செய்தி கேட்டு கேட்டு சலிப்படைவதே உலகத்தின்  வழக்கமாகிவிட்டது*

*மேலும் வள்ளலார் பாடல்!*


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்த பிறப்பு இதில் தானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!  


*செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றது.*


மனித வாழ்க்கையில் பிணி மூப்பு இறுதியில் மரணம் வந்து விடுகிறது.மரணம் அடைந்தவர்களை பார்த்து அய்யோ அய்யோ !  அம்மா அப்பா தாத்தா பாட்டி எங்களை விட்டு போய்விட்டீர்களே என்றும் குய்யோ முறையோ என்றும் என்ன செய்வோம் என்றும் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொள்கிறீர்கள். நேற்று இருந்தவர் இன்று இல்லை.நேற்று பேசியவர் இன்று பேசவில்லை.

சற்று முன் பார்த்தவர்.அருகில் இருந்தவர்.

நடமாடியவர்.

கொடுத்தவர் வாங்கு சாப்பிட்டவர் மற்றும் எல்லா உணர்வும் உள்ளவர் இன்று உணர்வு இல்லாமல்.இயக்கம் இல்லாமல்  ஜடமாக கிடைக்கின்றாரே என்று பேசி பேசி அழுகின்ற காட்சிகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றது. 


*இந்த மரணப் பெரும்பிணியை தவிர்க்கும் மாமருந்தை கண்டு பிடித்தவர் வள்ளலார்.* 

இந்த பிறப்பிலேயே மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


இறவாத பெரும் வரத்தை நீங்கள் அனைவரும் பெற்றிடலாம் சந்தேகம் வேண்டாம் வாருங்கள் என அழைக்கின்றார்.


*நாம் செய்ய வேண்டியது* ! 


வள்ளலார் தோற்றுவித்த மார்க்கம் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற மிகச் சிறந்த ஒழுக்கம் நிறைந்த மார்க்கமாகும். இந்த மார்க்கத்தில் இணைந்து வள்ளலார் சொல்லியவாறு *உண்மை ஒழுக்கத்தோடு சாகாக்கல்வி கற்கவேண்டும்.*


சாகாக்கல்வி கற்பதற்கு எவை எவை எல்லாம் தடையாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் பற்றுஅற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அம்பலப் பற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும்.


*எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு என்பதை உணர்ந்து   *தன் உயிரைக் காப்பாற்ற பிற உயிர்களை காப்பாற்ற வேண்டும்*


*வள்ளலார் பாடல்*!


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் களானால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை


எற்றி நின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென் மொழிகொண் டுலகீர்


*பற்றிய பற் றனைத்தினையும் பற்றற விட்டு அருள் அம்*

*பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!* 


என்னும் பாடலில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.


*உலகிலே மிகவும் கொடுமையான வேதனையான சம்பவம் மரணம் மட்டுமே.*


மரணத்தை வெல்லும் தகுதி பெற்றவர்களையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். 


*ஆன்மீகம் என்ற விலாசத்தில் இருப்பதாலோ.

தத்துவ கடவுள்களை வழிபடுவதாலோ தவம் தியானம் யோகம் செய்வதாலோ கடவுளைக் காணவும் முடியாது. அருளைப் பெறவும் முடியாது.*


*உயிர்கள் இடத்தில் இரக்கமும் கடவுள் இடத்தில் அன்பு மட்டுமே மிகவும் முக்கியமானதாகும்.*


*மரணத்தை வென்றவர் மட்டுமே  கடவுளைக் காணும் தகுதி பெற்றவர். கடவுளைக் காணும் தகுதி பெற்றவர் மட்டுமே மரணத்தை வெல்லும்  தகுதி பெற்றவர்* என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


*இன்று உலகம் முழுவதும் கொரோனோ என்னும் கொடிய நோயால்  மரண ஓலங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன*. 


மரணத்தை வெல்லும் வழி தெரியாமல் மக்கள் தவித்துகொண்டு உள்ளார்கள். தினமும் வரும் செய்திகளை பார்க்கும்போதும் கேட்கும்போதும் மனம் மிகவும் வேதனை அடையச் செய்கின்றது.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

புதன், 7 ஏப்ரல், 2021

கடவுளை அறியாத மக்கள் !

 *கடவுளை அறியாத மக்கள் !* 

உலகம் உயிர்கள் பொருள்கள் யாவையும் படைத்தது கடவுள் தான் என்பது யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.அதுதான் உண்மை. 

அந்த கடவுள் யார்? என்பதுதான் பல்லாயிரம் ஆண்டுகளாக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.

ஆன்மீகவாதிகளான கடவுளை நம்புகிறவர்களாலும்.அறிவியல் அணு ஆராய்ச்சி வல்லுனர்களாலும்.

பகுத்தறிவு சார்ந்தவர்களாலும்.மற்றும் எவராலும் இன்றுவரை கடவுளின் உண்மைத் தன்மைப்பற்றி சரியான  விடை தரமுடியாமல் தவிக்கிறார்கள்.


*எவராயினும் கடவுளைக் கண்ணால் கண்டால்தானே உண்மையை வெளிப்படுத்த முடியும்* ஒருவரும் கடவுளைக் காண முடியவில்லை.

அதற்கு காரணம் கடவுளைக் காணும் தகுதி யாராலும் பெறமுடியவில்லை.


*கடவுளைக் காணும் தகுதி மனிதனுக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விபரமாகும்.* 


கடவுளைக் காணும் தகுதிப்பெற்றவரின் உடல் உயிர் ஆன்மா ஆகிய மூன்றும்  இறைவன் அருளைப்பெற்று ஒன்றைஒன்று பிரியாமல் மரணத்தை வென்று கடவுள் தேகமான அருள் தேகத்தைப் பெற்றவர்கள் மட்டுமே கடவுளின் உண்மையை காணமுடியும் என்பதை. *மரணத்தை வென்று கடவுளைக் கண்ட வள்ளலார் இதுதான் கடவுள். இதுதான் கடவுளின் உருவம் என்பதை தெளிவாக உலகிற்கு சொல்லுகிறார்*. 


*வள்ளலார் பாடல்!*


*கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டு கொண்டேன்*  *கோயில்*

*கதவுதிறந் திடப்பெற்றேன்* *காட்சியெலாம் கண்டேன்*


அடர்கடந்த திருஅமுதம் உண்டு அருள்ஒளியால் அனைத்தும்

அறிந்து தெளிந்து *அறிவுருவாய்* அழியாமை அடைந்தேன்


உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்

உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்


இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் 

ஓங்கினவே

இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.! 


மேலே கண்ட பாடலில் கடவுளைக் கண்ட விபரத்தை சொல்லுகிறார்.

கடவுள் என்ன வடிவமாக உருவமாக  இயங்கி கொண்டுள்ளார் என்னும் விளக்கத்தையும் கீழே உள்ள பாடல் வாயிலாகவும் சொல்லுகிறார்.


*வள்ளலார் பாடல்*


*அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை* 

என்அம்மையை 

என்அப்பனை 

என்ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் 

என்உயிரை 

என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்த சிகாமணியை


மருவு பெருவாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை 

மாமணியை என் கண்மணியைக்


கருணை நடம் புரிகின்ற கனக 

சபாபதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.! 


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி !  அதாவது அருள் நிறைந்த பெருஞ்ஜோதி வடிவமாக உள்ளார் என்பதுதான் கடவுளின் உண்மை வடிவம் உண்மை வண்ணமாகும்.*


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் என்னும் தலைப்பில்  வள்ளலார் சொல்வதைப் பார்ப்போம்*.


ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், 

பாச வைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுரபக்தியால் ருத்திரன் ஆயுசும். *பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம் என்கிறார் வள்ளலார்* 


*எப்படியெனில்:?* 


*கடவுள் சர்வ ஜீவதயாபரன்*, *சர்வ வல்லமை உடையவன்*; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயவு  உடையவர்களாய்ச் சர்வ வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி *மனித தேகத்தில் வருவித்தார்*. ஞானிக்குத் தயவு அதிகப்பட்டு இருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மகா அற்புதங்களான இறந்தார் எழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். 


*எந்த ஜீவர்களிடத்தில் தயா விருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாய் இருக்கும். மற்றவர்கள் இடத்தில் காரியப்படாது* 


ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், *கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும்*. 


ஆதலால் பக்தியென்பது 

*மன நெகிழ்ச்சி*, *மனவுருக்கம்*

*மனமகிழ்ச்சியை* உண்டாக்கும்., 


அன்பு என்பது *ஆன்ம நெகிழ்ச்சி*, *ஆன்மவுருக்கம்.*

*ஆன்ம மகிழ்ச்சியை* உண்டாக்குவதாகும். 


*எனவே ஜீவகாருயத்தின் லாபமே அன்பு அருள்  கருணை என்பதாகும்*


*எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பொது நோக்கமாகும் என்பதாகும்*.   


இந்திரியங்கள் வழியாக அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது.

 *ஜீவகாருண்யம் உண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்பு உண்டானால் சிவானுபவம் உண்டாகும்.* 


*கடவுளைக் காண்பதற்கும் அருளைப் பெறுவதற்கும் தடையாக இருப்பது.சாதி சமய மதங்களின் பிரிவினைக் கொள்கைகளாகும்*

*சாதி சமய மதங்கள் !*


தத்துவ ஒழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழில் ஒழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. மதங்கள்


ஆறு அந்தங்களைப்பற்றி மதங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. 


*தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்*. 


அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், 

ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால்


 *மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சமரச சுத்தசிவ சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.*


*உயர்ந்த அறிவுள்ள மனித பிறப்பின் லட்சியமே கடவுள் அருளைப்பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி*.

*என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதே வாழ்க்கையாகும்*  


ஆதலால் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து அறிந்து உணர்ந்து தொடர்பு கொள்வதற்கு *இடைவிடாது ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்*. மேலும் *இறைவன் மீது இடைவிடாது  அன்பு கொள்ள சிற்சபை நடத்தை தெரிந்து தோத்திரம் செய்ய வேண்டும்.*   


இந்த உண்மை நேர்வழியைத் தெரிந்து கொள்ள. வள்ளலார் தோற்றுவித்த உயர்ந்த சிறந்த தனித்தன்மை வாய்ந்த  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய கொள்கையை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

வியாழன், 1 ஏப்ரல், 2021

கடவுள் மனிதர்களைத் தேடுகிறார் !

 *கடவுள் மனிதர்களைத்  தேடுகிறார் !* 


உண்மை. நேர்மை. ஒழுக்கம்.

உயிர்இரக்கம்

பொதுநோக்கம் நிறைந்த மனிதர்களை கடவுள்  தேடுகிறார்.


உண்மை.நேர்மை.

ஒழுக்கம்.

உயிர்இரக்கம் பொதுநோக்கம் இல்லாமல் தவறு செய்பவர்கள் தங்களை காப்பாற்ற வேண்டும் என கடவுளைத் தேடுகிறார்கள்.  


*பாவம் செய்பவர்கள் கடவுளைத் தேடுகிறார்கள்*


*புண்ணியம் செய்பவர்களை கடவுள் தேடுகிறார்*


*கடவுளை ஏன்?  தேடுகிறார்கள் !*


அச்சம் பயம்.துன்பம்.துயரம் நிறைந்தவர்கள் துன்பத்தைப் போக்கிக்கொள்ள கடவுளைத் தேடுகிறார்கள். 


*புண்ணியம் பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன*? 


*மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும்*. 


மேலும் *எண்ணம் சொல் செயல்களின் வாயிலாகவும் பாவம் புண்ணியம் நம்மை வந்து அடைகின்றன*. 


மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடைகின்றது. 


*அவையாவன:-*


*மனத்தினால்* பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள். 


*வாக்கினால்* பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள். 


*தேகத்தினால்* (காயம் ) பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்கு செய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - 

இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள். 


இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - *இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.* 


பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - *இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள்.* 


அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் *தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.*) 


*மேலே கண்ட பாவங்கள் செய்பவர்களை கடவுள் கண்டு கொள்வதில்லை.*


*மேலே கண்ட புண்ணியங்களை செய்பவர்களை கடவுள் தானே வந்து அருள் வழங்கி ஆட்கொள்கிறார்*


*வள்ளலார் பாடல்!*


வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்

மாதவம் பன் னாட்புரிந்து மணிமாட நடுவே


தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே

திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்


நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந் தெனக்கே

*நல்லதிரு அருளமுதம் நல்கியதன்றியும்* என்


*ஊனிருக்கும் குடிசையிலும்* *உவந்துநுழைந் தடியேன்*

*உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.*! 


நாம் வணங்கும் தத்துவ தெய்வங்களான பிரம்மா.விஷ்ணு. நாரணர்.நான்முகர்.

சங்கரன்.மகாதேவன் போன்றவர்களும் மற்றும் பிறரும். *பல்லாயிரம் ஆண்டுகளாக கடுமையான மாதவம் செய்து அருள் வழங்க வேண்டுமாறு வேண்டிக் கொண்டு உள்ளார்கள்.* 


தேன் எடுக்கும் வண்டுகள் அமரும் மெல்லிய பூக்கள்போல் மலரணை அமைத்து இறைவன் திருவடி படுவதற்காக  காத்துக் கொண்டுள்ளார்கள்.


அவர்களைக் கண்டு கொள்ளாத இயற்கை உண்மை கடவுளான தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.


வடலூருக்கு அடுத்த மேட்டுகுப்பம் என்னும் சிறிய கிராமத்தில். வள்ளலார் அமர்ந்து இருக்கும் சிறிய குடிசையைத்  தேடிவந்து *வலிந்து உள்ளே நுழைந்து* அருளை வாரி வழங்கி *பஞ்சபூத அணுக்களால் பின்னப்பட்ட ஊன்  உடம்பின் உள் நுழைந்து*. உள்ளம் எனும் சிறு குடிசையிலும் *உள்ளே நுழைந்து கலந்து ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி என்றும் பிரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளாய் என்று வள்ளலார் போற்றி புகழ்கின்றார்*.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேடிவந்து அருள் வழங்க பெற்றுக்கொண்ட ஒரே புண்ணிய அருளாளர் வள்ளலார் ஒருவரே ! 


*என்ன புண்ணியம் செய்தேனோ..அம்மா என்ன புண்ணியம் செய்தோனோ !* 

என்று தன்னைத்தானே மகிழ்ந்து கொள்கிறார்.


*மேலும் வள்ளலார் பாடல் !* 


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்


சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை


*ஓதி முடியா தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.!*  


பாதிஇரவில் என்றால் இரவு 12 மணிக்கு எனை எழுப்பி அருள்ஜோதி அளித்து உள்ளகத்தே சூழ்ந்து கலந்து நிறைந்து துலங்குகின்றாய்.

நான் அடைந்த அந்த பெரும் பேற்றை  சொல்ல வார்த்தைகளே இல்லை என்கிறார்.


*மேலும் ஒரு பாடலில் பதிவு செய்கிறார்*


என்சாமி எனதுதுரை என்உயிர் நாயகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்


பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்


தன்சாதி உடைய பெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம் சத்தியமே


மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின் தனக்கே

வெளியாகும் இரண்டரை 

நாழிகை கடந்த போதே.!


என்னை ஆட்கொண்டு அருளை வழங்கி கலந்து பேரின்பத்தை கொடுத்து வாழ்ந்து இருந்தாலும் எனக்கு மட்டும் கிடைத்தது மகிழ்ச்சி அல்ல. *என்போல் இவ்வுலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் அந்த பேரின்ப சித்தி பெருவாழ்வு நிலையை பெறவேண்டும்.* என தன் விருப்பத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி விண்ணப்பம் செய்து முறையீடு செய்து கொள்கிறார் வள்ளலார். 


*அதுதான் அவரின் மனம் வாக்கு காயத்தால் செயலால் கிடைத்த  புண்ணியமாகும்*


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே முழுமையான புண்ணியத்தை செய்து. முழுமையான புண்ணியத்தை பெற்றுக் கொண்டுள்ள ஒரே ஒரு அருளாளர் வள்ளலார் ஒருவரே ! 


*வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார்.* 


*மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்*


*கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்*


எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்


*நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!* 


*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என எண்ணியவர் வள்ளலார்போல் உலகில் ஒருவரும் இல்லை.* என்றே சொல்லலாம்.


*அதனாலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து ஆட்கொண்டார்.*


மேலும் 

சொல்லுகிறார்.


*மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்*

*யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை!*


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி! 


சித்திகள் அனைத்தையுந் தெளிவித்து எனக்கே

சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை ! 


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி! 


*உலகினி லுயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்*

*விலக நீ யடைந்து விலக்குக மகிழ்க* ! 


*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை* ! 


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி ! 


அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ் ஜோதி ! 


மேலே கண்ட அகவல் வரிகளின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.


*வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றுபவர்கள். உண்மை நேர்மை ஒழுக்கத்தை கடைபிடித்து புண்ணியத்தை தேடிக்கொண்டால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நம்மைத் தேடிவந்து அருளை வாரி வழங்கி  ஆட்கொள்வார்* 


எனவே *பாவம் செய்யாமல் புண்ணியத்தை செய்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.