முப்பொருளும் ஒன்றே !
*!தயவு!* 🙏
------------
**முப்பொருளும் ஒன்றதென்பார் வெண்ணிலாவே
அந்த மூன்றும் ஒன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலாவே*
*------------
-- இந்த வள்ளல் பெருமானின் வரிகளே, சமரச சுத்த சன்மார்க்கத்தின் மூல சூத்திரம்!
அதாவது, "அருட்பெருஞ்ஜோதி" - அருளும் ஜோதியையும் தவிர இந்த மகா பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே இல்லை இல்லை இல்லை!
ஆண்டவரும் அவருடைய அருளும், இரண்டு தனித்தனி நபர்களா என்றால் இல்லை. சர்க்கரையின் தன்மை or சுவை - இனிப்பு. அதுபோல *"ஆண்டவரின் தன்மைதான் அருள் !"*
நாம் காணும், உணரும், வாழும் இப்பிரபஞ்சம் முழுவதும்- அகம் அருளாகவும், புறம் ஜோதியாகவும் சூழப்பெற்றது. "இங்கு ஆன்ம சிற்றணுக்களாக உள்ள நாம் அனைவரும் இறைவனின் சிறு கூறுகளே, சிற்றணுக்களே!"
இங்கு 'இருள்' என்று நாம் பொதுவாக சொல்லுவது *கார்ஒளி* யையே. இது ஆண்டவருடைய *அருவ நிலை* மட்டுமே!
இதுபோல் *அருவ, அருஉருவ, உருவ* இம் மூன்று நிலைகளிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையைத்தான் *சுத்த-பிரணவ-ஞான தேக* சித்தி எனும் "முத்தேக சித்தி" என்று கூறுகின்றோம். இந்த முத்தேக சித்தியே வள்ளலார் அடைந்த *"இறப்பில்லா நிலை!"* . முன்னோர்கள் அடைந்த *பிறப்பில்லா நிலை* என்பது ஆண்டவருடைய அருவ நிலையை மட்டும் அடைவது.
*என்றும் வாழும் நிலை* or இறப்பில்லா நிலை என்பதுதான் *மரணமில்லாப் பெருவாழ்வு* or மூன்று தேகங்களையும் பரிபூரணமாக பெற்று சித்தி பெறுவது என்பது. இது !தயவு! என்னும் ஆண்டவருடைய தன்மை நமக்குள் (ஆன்ம சிற்றணுக்குள்) வெளியாகும் போதுதான் சாத்தியமாகிறது 🙏.
நம்முடைய - தூல *உடல்*, பிரணவ *உயிர் உணர்வு*, ஞான *மெய்யறிவு* என இம்மூன்றையும் இறைவனுடையதுபோல் அல்லது இறைவனாகவே ஆக்கும் சக்தி கொண்டது "தயவு" என்னும் அருட்பெருஞ்ஜோதியின் தன்மை அல்லது குணமே.
அந்த *தயவு* என்னும் குணம் நமக்குள்ளும் இருந்து செயலாக வெளிப்பட வேண்டும் - சிறுக சிறுக அதிகரித்து *கடவுள் தயவு* என்னும் நிலையை அடையும் பொழுது அதுவே முத்தேக சித்தியாக *சுத்த-பிரணவ-ஞான தேக* சித்தியாக வெளிப்பட்டு *இறப்பில்லா* நிலையாகிய மரணமிலாப் பெரு வாழ்வில் நம்மை வாழச் செய்கிறது.
"முப்பொருளும் ஒன்று..." என்று நம் பெருமானார் நமக்கு தெளிவுபடுத்திவிட்டார். அப்படியானால், ஒரு உதாரணத்திற்கு நாம் ஒருவருக்கு பசியாற்றுவித்தல் செய்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த செயல் நடைபெறும்போது என்ன நடைபெறுகின்றது?
நாம் ஒருவருக்கு உணவை வழங்குகின்றோம், இன்னொருவர் அந்த உணவைப் பெற்றுக் கொள்கின்றார். சற்று யோசித்துப் பாருங்கள், நம் பெருமானார் உபதேசித்துள்ள மூல சூத்திரத்தோடு இந்த நிகழ்வை சற்று பொருத்திப் பாருங்கள்!
"முப்பொருளும் ஒன்று...", அதாவது அந்த உணவை கொடுப்பதும் நீங்கள்தான், அந்த உணவும் நீங்கள்தான், எதிரில் எளியவராக இருந்து அந்த உணவை பெற்றுக் கொள்வதும் நீங்கள்தான்! (இங்கு "நீங்கள்தான்" என்பதை, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆன்ம சிற்றணுவடிவமாகிய நீங்கள் என்று பொருள் கொள்ளவும்).
கொடுப்பவர், கொடுக்கப்படும் பொருள், பெற்றுக்கொள்பவர் - எல்லாம் ஒரே ஒரு நபர் அல்லது ஒரே ஒரு அருட்பெருஞ்ஜோதியின் வெவ்வேறு ரூபங்கள்! அப்படியானால் இந்த செயலின் மூலமாக என்னதான் நடக்கின்றது?
*இங்கு 'தயவு' என்ற ஒன்றுமட்டும்தான் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது!* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னுடைய சிற்றணு வடிவங்களாக இருக்கும் ஆன்மாக்களை 'தயவு' என்னும் ஒரு சொல்லை செயலாக்கி, --"தயவிற்கு ஒருமை வரவேண்டும்!"-- என்ற பேருபதேசத்தில் வெளிப்படுத்திய உண்மையை நம்முடைய அனுபவத்திற்கு கொண்டுவர பயிற்சி தந்துவருகின்றார். இதற்குத்தான் ஐந்தொழில் காரியப்பாட்டால் இந்த மகாப் பிரபஞ்சத்தையே படைத்து தந்துள்ளார்.
நான்தான் எனக்கு எதிரில் இருக்கும் (அழுக்கு சட்டை அணிந்து எளியவர் ரூபத்திலிருக்கும்) எனக்கு நானே உதவி செய்து மேலேற்றிவிடுகின்றேன் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்து 'தயவு' செயல்புரிய வேண்டும். இவ்வாறு உணர்தலோடு தயவு தன்மையை நாம் வெளிப்படுத்தி, அதன் எல்லையை (செயல்புரியும் கால அளவிலும், இடங்களிலும், நபர்களிடமும் - in Space & Time) விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.
நான் வேறு, எனக்கு எதிரில் எளியவர் ரூபத்திலிருக்கும் நபர் வேறு என்ற சிந்தனை வந்துவிட்டால், நாம் செய்யும் செயல் தயவு செயலாகாது!
இதற்குத்தான் -- "எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கொள்ள வேண்டும்" -- என்று நம் பெருமானார் அருளியுள்ளார். ஏனென்றால் எல்லா உயிர்களாகவும் (முப்பொருளாகவும்) இருப்பது அந்த ஒரே ஒரு பொருளே - பரம்பொருளே - அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே.
அருட்பெருஞ்ஜோதி - அருளும் ஜோதியையும் தவிர இந்த மகா பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே இல்லை இல்லை இல்லை! *!தயவு!* 🙏
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு