புதன், 27 நவம்பர், 2013

தத்துவங்கள் (96) கடந்தது சுத்த சன்மார்க்கம் !

மனித உடலின் தத்துவங்கள் (96)

சிவதத்துவம் 5. + வித்தியா தத்துவம் 7+ ஆன்ம தத்துவம் 24 + மற்ற உட்பிரிவு 60
தத்துவங்கள் (36)
சிவ தத்துவம்
(சுத்த மாயை):
5
நாதம்,விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை
வித்யா தத்துவம் 

7
மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன்
ஆன்மதத்துவம்(24)
(அசுத்த மாயை - பிரகிருதி மாயை)

பஞ்ச பூதம் (5) + ஞானேந்திரியங்கள் (5) + கர்மேந்திரியங்கள் (5) + தன்மாத்திரை (5) + அந்த கரணங்கள் (4).
பஞ்ச பூதம்
5
1. மண் 2. நீர் 3. தீ 4. காற்று 5. ஆகாயம் 
ஞானேந்திரியங்கள்
5
1. செவி 2. கண் 3. மூக்கு 4. நாக்கு 5. மெய் 
கர்மேந்திரியங்கள்
5
1. வாக்கு 2. பாதம் 3. கை 4. எருவாய் 5. கருவாய்
தன்மாத்திரை
5
1. ச்ப்தம் 2. ஸ்பரிசம் 3. ரூபம் 4. ரசம் 5. கந்தம்
அந்த கரணங்கள்
4
1. மனம் 2. அகங்காரம் 3. புத்தி 4. சித்தம்,5,உள்ளம்  
புறக்கருவிகள் (60)
பிருதிவியின் காரியம்
5
1. மயிர் 2. தோல் 3. எலும்பு 4. நரம்பு 5. தசை
அப்புவின் காரியம்
5
1. நீர் 2. உதிரம் 3. மூளை 4. மச்சை 5. சுக்கிலம் 
தேயுவின் காரியம்
5
1. ஆகாரம் 2. நித்திரை 3. பயம் 4. மைதுனம் 5. சோம்பல்
வாயுவின் காரியம்
5
1. ஓடல் 2. இருத்தல் 3. நடத்தல் 4. கிடத்தல் 5. தத்தல்( குதித்தல் )
ஆகாயத்தின் காரியம்
5
1. குரோதம் 2. லோபம் 3. மோகம் 4. மதம் 5. மாற்சரியம்
வாசனாதி
5
1. வசனம் 2. கமனம் 3. தானம் 4. விசர்க்கம் 5. ஆனந்தம்
வாயு
10
1. பிராணன் 2. அபானன் 3. வியானன் 4. உதானன் 5. சமானன் 6. நாகன் 7. கூர்மன் 8. கிருதரன் 9. தேவதத்தன்
10. தனஞ்சயன்
நாடி
10
1. இடை 2. பிங்கலை 3. சுழுமுனை 4. காந்தாரி 5. அத்தி
6. சிங்குவை 7. அலம்புடை 8. புருடன் 9. சங்கினி 10. குரு
வாக்கு
4
1. சூக்குமை ,2. பைசந்தி 3. மத்திமை 4. வைகரி
ஏடணை ( விருப்பம்)
3
1. தாரவேடணை 2. புத்திர வேடணை 3. அர்த்தவேடணை 
குணம்
3
1. சாத்துவீகம் 2. இராசதம் 3. தாமதம்

தத்துவம்
குறிப்புகள்
காலம்

சென்றது, நடப்பது, வருவது
நியதி

அவரவர் வினையை அவரவர்களை அநுபவிப்பது
கலை

ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும், கிரியை எழுப்பும்
அராகம்

ஆசையை எழுப்பும்
புருடன்

விஷயங்களில் மயங்கும்
சூக்குமை
-சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது
பைசந்தி
-சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது
மத்திமை
-உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை
வைகரி
-சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை
வாயு
எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பலப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன. வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்). புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்குமதுவே காரணம். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. இவை 5ம் பிரதான வாயுக்கள். மற்றவை உபவாயுக்கள்.
பிராணவாயு
உயிர்வளி : இது இரு உதய தானத்திலிருந்து நாசிவழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களையுண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.
அபானன் 
மலக்காற்று:இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் ஆகியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது.
வியானன்
தொழிற்காற்று : இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.
உதானன் 
ஒலிக்காற்று : இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.
சமானன்
நிரவுகற்று : இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு,இரத்தமாக்கி எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும். இவ்வாறே மற்றவையும். ஆயினும், இவ்வாயு எங்கிருந்து வருகிறது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் உண்டு . அது மாமிச பிண்டம். ஆனால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது.அதன் தொடர்பு தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தையின் தொப்புள் கொடி வழியாக அமுதக் காற்று அனுப்பபடுகிறது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, வெளிக் காற்றுவான பூதக் காற்றை சுவாசிக்க அக்குழந்தை துடிக்கிறது.தாயின் தொப்புள் கொடியை துண்டிக்கும் போதுதான் குழந்தை வெளிக்காற்றை சுவாசிக்கிறது  சடாரென வெளியில் இருந்து சுவாசிக்கும் காற்று மரணம் அடையும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் .

வெளியே வந்ததும் மண்,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம்,என்னும் ஐந்து பூதங்களும் இணைந்து செயல்படுகின்றன .இதனால் காற்றுக்கு என தனி மரியாதை இல்லை.ஐந்து பூதங்களும் சேர்ந்துதான் உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளது .

நாகன்
தும்மற்காற்று

கூர்மன்
விழிக்காற்று :இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும். மயிர்க்கூச்சல், சிரிப்பு, புளகம், முகச் சேட்டைகள் ஆகியவைகளைச் செய்யும். இதை அடக்க இமையா நாட்டம் கிடைக்கும்).
கிருகரன்
கொட்டாவிக்காற்று
தேவதத்தன்
இமைக்காற்று
தனஞ்செயன்
வீங்கற்காற்று
இடைகலை

பிங்கலை

சுழுமுனை

காந்தாரி
இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்)
அத்தி
வலது காது நரம்பு
சிங்குவை
உள்நாக்கு நரம்பு.
அலம்புடை
இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்)
புருடன்
வலக்கண் நரம்பு.
சங்கினி
மருமத்தான நாடி
குகு
மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்தவியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)

மேலே சொலப்பட்ட தத்துவங்கள் அனைத்தையும் செயல்பட வைக்கும் மூலமானது ஒவ்வொரு ஆன்மாவிலும் உள்ள அருள் என்னும் அமுதக் காற்றாகும்.மின் ஒளி போன்றது. இவை தத்துவங்களைத் இயக்கம் தனித் தலைமை பெரும் பதியின் ஆற்றலாகும் .இதற்கு இயற்கை விளக்கம் என்பதாகும்.

இயற்கை உண்மையாக உள்ள அருட்பெரும்பதியின் கருணையினால் ,இயற்கை விளக்கமாக தோன்றும் அருளே அனைத்தையும் இயக்குவதற்கு துணை புரிகின்றது..

இயற்கை உண்மை இடம் இருந்து, இயற்கை விளக்கம் என்னும் அருளைப் பெற்று உயிர் இயங்குவதால் ,இயற்கை இன்பம் என்னும் உடம்பு இயங்குகின்றது.இந்த உண்மையை அறிந்து கொண்டால் உடம்பையும் உயிரையும் அழிக்காமல் ,இயற்கை உண்மை என்னும் ஆன்மாவின் உள் இருந்து வரும் அருளை வெளியே விரையம் செய்யாமல் ,உயிரையும் உடம்பையும் பாது காக்கும் வழியைத் தெரிந்து கொள்ளலாம் .

இதுவே சாகாத்தலை ,போகாப்புனல்,வேகாக் காலாகும்.

ஆன்மா உயிரையும்,உடம்பையும் விட்டு வெளியே போகாமல் ,தன அருளாலே உயிரையும்,உடம்பையும் ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றமுடியும் என்பதுதான் வள்ளலார் சொல்லித்தந்த சாகாக் கலையாகும்..இதுவே சாகாக் கல்வியாகும் .

தத்துவங்கள் ஜடங்கள், ஜடங்கள் என்னும் தத்துவங்களை தனித்தனியாக கடந்து தத்துவத்தின் மேலே உள்ள சித்து என்னும் சத்தை பெற்று, அதற்கும் மேல் உள்ள சிவநிலையை தெரிந்து அதன் மயமாகி,உயிரும் உடம்பும் கரைந்து அருள் மயமாவதே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும் .

இந்த உண்மையான அருள்நிலைக் கண்டவர் ஒருவரே நம்முடைய அருள் தந்தை திரு அருட்பிரகாச வள்ளல்பெருமானாகும் .கண்டது மட்டும் அல்லாது அதன்படி வாழ்ந்து காட்டியுள்ளார் .அவர் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையை விட்டு விலகாமல் நாமும் அதன்படி வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழியைக் காட்டுவோம்.

ஆன்மநேயன்;--கதிர்வேல்.

     

சனி, 16 நவம்பர், 2013

இறை நிலை என்றால் என்ன ?

இறை நிலை என்றால் என்ன ?

இறை என்றால் கடவுளைக் குறிப்பதாகும் .அந்த கடவுள் எங்கே இருக்கிறார் அவர் யார்,?என்ன உருவமாக இருக்கிறார் ?அவரை எப்படி அறிந்து கொள்வது.? இதற்கு பல ஞானிகள் ,யோகிகள் பலவிதமான வழிமுறைகளை சொல்லி மக்களை குழப்பி விடுகிறார்கள்.

இறை என்னும் சக்தி வாய்ந்த கடவுள் உருவமாகவும் இல்லை,அருவமாகவும் இல்லை,அவர் மனித உருவமோ,மாயா சக்தி உருவமோ கிடையாது. அளவிட முடியாத மாபெரும் சக்தி வாழ்ந்த ஒரு ''பேரணுவாகும்''.அந்த அணுதான் பல கோடி அண்டங்களையும் இயக்கி இயங்கிக் கொண்டு இருப்பதாகும்.அதை யாரும் நம்முடைய மாயைத் தோற்றமுடைய புறக்கண்ணால் பார்க்க முடியாது.''அருள்'' என்னும் அகக் கண்ணாலதான் பார்க்க முடியும்.

அந்த அணுவின் ஒவ்வொரு துகள்களும் ''ஆன்ம'' ஒளியின் வாயிலாக உயிர் ஒளியைத் தந்து தாவரம் முதல் ,அனைத்து ஜீவராசிகளின் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளதாகும் .அந்த ஆன்ம ஒளி இல்லாத ஜடப்பொருட்களில் இறைத் தன்மை இல்லை.இயங்குகின்ற ஜீவராசிகளின் உடம்பின் உள்ளே கடவுள் ஒளித் துகள் உள்ளது அதுதான் ஆன்மா என்பதாகும் .

மனித தேகம் படைத்தவர்கள் மட்டுக்கும் தான் அந்த ஆன்ம ஒளியைக் கண்டு கொள்ளும் அறிவும் ஆற்றலும் வழங்கப் பட்டுள்ளன.அந்த ஆன்ம ஒளியை காண்பதற்கு பல ஆன்மீக வழிகளை அருளாளர்கள் காட்டி உள்ளார்கள் ,அவர்கள காட்டிய வழியில் சென்று அந்த இறை உண்மையை இதுவரையில் யாரும் கண்டு கொள்ளவில்லை.

வள்ளல் பெருமான் ஒருவர்தான் ஆன்ம ஒளியையும்,இறை ஒளியையும் கண்டுள்ளார்கள்.அவர்கள் சென்ற பாதையைத்தான் மக்களுக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்.

எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பு என்பதை உண்மை அறிவால் அறிந்து ,எந்த உயிர்களுக்கும் துன்பம் செய்யாமல்,அந்த உயிர்களுக்கு வரும் இடையூரான,துன்பங்களை உயிர் இரக்கம் கொண்டு கருணையோடு யார் நீக்குகிறார்களோ அவர்களுடைய ஆன்மாவில் இருந்து அருள் என்னும் திரவம் சுரக்கும் .அந்த அருளைக் கொண்டுதான் ஆன்மாவையும்,இறைவனையும் காண முடியுமே தவிர வேறு வழிகளாலும் இறைவனைக் காணமுடியாது.

கருணை ஒன்றுதான் இறைவனைக் காணும் துவாரமாகும்.

ஆண்மநேயன் ;--கதிர்வேலு.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

மரணமிலா பெருவாழ்வு - சில சந்தேககங்கள்

மரணமிலா பெருவாழ்வு - சில சந்தேககங்கள்

அன்பர்களே! வள்ளற்பெருமான் அடைந்த மரணமிலா பெருவாழ்வு உண்மையா! பொய்யா! என்பதனை சில கேள்வி பதில் வடிவில் இப்பதிப்பில் பார்க்கலாம் வாருங்கள்.

1. வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் என்பதற்கு என்ன ஆதாரம்?

தான் பெற்ற முத்தேக சித்தியைப் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார். உதாரணத்துக்கு ஒரு பாடல்,

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு (5513)

ஆடுகின்ற சேவடிக்கே அளானேன் மாளாத யாக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழைப் பாடிப்பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன் எண்ணமெலாம் நிரம்பினேனே (56)

இந்தப் பாடலாலும், இவை போன்ற பலப் பல பாடல்களும் அவர் பெற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பறை சாற்றுகின்றன.

இந்த உடம்பை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்காமல் 1874ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் அவர் கதவைத் தாளிட்டுக் கொண்டதின் மூலம் அவர் பெற்ற மரணமிலாப் பெருவாழ்வு உறுதியாகிறது.

2. வள்ளலார் அடைந்த உண்மையான நிலைதான் என்ன?

வள்ளலார் தான் செய்த தவத்தாலும், ஜீவகாருண்யத்தாலும், தன் தூல தேகத்தை ஒளியுடம்பாக மாற்றினார். சுத்த தேகமாக முதலில் அவர் தேகம் மாறியது. பிறகு அதே தேகம் பிரணவ தேகமாகியது. கடைசியாக அவர் ஞான தேகம் பெற்றார். அவர் ஞான தேகத்தோடு என்றும் அழியாத நிலையில் நமக்குத் துணையாக இருக்கின்றார்.

3. அவர் ஒளியுடம்பு பெற்றதற்கு என்ன ஆதாரம்?

வள்ளலாரின் சம காலத்தவர்களாகிய இராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர் ஆகியோரின் நிழல் படங்கள் உள்ளன.அவர்கள் படங்கள் யாவும் போட்டோவில் விழுந்துள்ள நிழல் படங்களாகும்.அவர்கள் யாவரும் நல்ல போதகர்கள் ஆனால் அருள் பெறாதவர்கள் நரை திரை,பிணி,மூப்பு போன்ற மாற்றங்கள் உண்டாகி ,நோய்வாய்ப் பட்டு ,சராசரி மனிதர்கள்போல் இறந்து போனார்கள்.


ஆனால் பல முறை முயன்றும் வள்ளலாரை நிழற் படம் எடுக்க முடியவில்லை. இப்போது உள்ள வள்ளலார் படங்களெல்லாம் மனிதர்களால் வரைந்த உருவப் படங்களே யொழிய அவரது உண்மையான நிழற்படங்கள் அல்ல. அவரது தூல தேகம் ஒளியுடம்பாக மாறி விட்டதால் அவரை நிழற்படம் எடுக்க முடியாது போய்விட்டது. இதுவே அவர் ஒளியுடம்பு பெற்றதற்கு ஆதாரம். அவரும் பல பாடல்களில் தான் ஒளி உடம்பு பெற்றதை அறிவிக்கின்றார்,

கற்றேன் சிற்றம் பலக்கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே (4745)

4. வள்ளல்பெருமானுக்கு  மற்றவர்கள் போல்,நரை,திரை,பிணி,மூப்பு உண்டாகவில்லை. அவர் மீது மழை படாது,வெய்யில் படாது,அவர் நடந்தால் அவர் நிழல் தரையில் விழாது,அவர் நடந்தால் பாத சுவடு விழாது,அவரை யாரும் தொடமுடியாது 
தொட்டு பேசமுடியாதுஅவருக்கு என்றும் இளமை மாறாத உடம்பு,அவர் சிலநேரம் மக்கள் கண்களுக்குத் தெரிவார்,சிலநேரம் யாருக்கும் தெரியாமல் இருப்பார்.அவர் எப்போதும் இறைவனிடம் பேசிக் கொண்டே இருப்பார் அது யாருக்கும் தெரியலே இருக்கும்.அவர் என்ன செய்வார் என்ன செய்யப் போகிறார் என்பது அவருடன் இருந்த சீடர்களுக்கேத் தெரியாது .அவருடைய கண்களை நேராக யாராலும் பார்க்க முடியாது.அந்த அளவிற்கு அவருடைய கண்கள் ஒளி வீசிக் கொண்டே இருக்கும். அவருக்கு மற்றவர்கள் போல் மரணம் வரவில்லை .

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப் பிணி அனைத்தையும் 
மடர்ப்பறத் தவிர்த்த அருட் சிவ மருந்தே .

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகும் 
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே 

நரை திரை மூப்பவை நண்ணா வகைதரும் 
உரைதரும் பெருஞ் சீர் உடைய நன்மறுந்தே

என்றே எனினும் இளைமை யோடு இருக்க 
நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே

சிற்சபை நடுவே திருநடம் புரியும் 
அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே !

என்னும் அருருஞ்ஜோதி அகவல் வரிகளில் தெரியப் படுத்தி உள்ளார் .   

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் என்றும்,

காற்றாலே, புவியாலே, ககனமதனாலே,
கனலாலே, புனலாலே, கதிராதியாலே,
கூற்றாலே, பிணியாலே, கொலைக் கருவியாலே,
கோளாலே, பிறவியற்றுங் கொடுஞ்செயல்களாலே,
வேற்றாலே, எஞ்ஞான்றும் அழியாத விளங்கும்
மெய்யளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

என்றும்

வாழி என் தோழி யென் வார்த்தை கேளென்றும்
மரணமில்லாப் பெரு வரம் யான் பெற்றுக் கொண்டேன்

என்றும், இப்படிப் பலப்பல பாடல்களிலே தான் பெற்ற மரணமிலாப் பெருவழ்வைப் பறை சாற்றுகின்றார்.

1874ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் தம் அன்பர்களை அழைத்துப் பின்வருமாறு கூறினார்,

'நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை யடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்.'

தான் அறைக்குள்ளெ நுழைந்து அறையைத் தாளிட்டுக் கொண்டார்கள். வெளிக் கதவைப் பூட்டிக் கொள்ளும்படி அன்பர்களிடம் கூறினார்கள். அதன்படியே அன்பர்களும் வெளிக்கதவைப் பூட்டி விட்டார்கள்.

இந்த அறிவிப்பைப் கூர்ந்து நோக்கினால் அந்த அறைக்குள்ளே பத்துப் பதினைந்து தினங்கள் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளதும், யாராவது திறந்து பார்த்தால் வெறு வீடாக இருக்கும் என்றதும், மறைந்தது அவர் விருப்பம் போல என்பதும் யாரும் காரணமல்ல என்பதும் விளங்கும். என்னைக்காட்டிக் கொடார் என்ற வாசகம் அது வெறு வீடாகத் தோன்றினாலும் நான் உள்ளேதான் இருப்பேன் என்பது பொருளாகிறது.

காட்டிக்கொடார் என்ற சொல், தான் உள்ளே இருப்பேன் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. உண்மையிலேயே அவர் உள்ளே இல்லை என்றால் காட்டிக் கொடார் என்ற சொல்லுக்கே அவசியமில்லை. காட்டிக் கொடார் என்ற வார்த்தை மிக மிக முக்கியமான ஒன்றாகும். உள்ளே இருந்தாலும் கண்ணுக்குத் தோன்றாமல் இருப்பார் என்பதை இவ்வார்த்தை உறுதிபடுத்துகிறது.

மேலும் அவர் 1874ல் மறைந்தது, முதல் முறை அல்ல. அதற்கு முன் எத்தனையோ முறைகளில் அவர் மறைந்து மறைந்து மீண்டும் தோன்றியிருக்கின்றார். தொழுவூர் வேலாயுதம் அவர்கள் பிரம்ம ஞான சமாஜத்தார்க்கு அளித்த குறிப்பில் 'எங்கள் குருநாதர் பல நேரங்களில் யார் கண்களுக்கும் தோன்றாமல் மறைந்துவிடுவது உண்டு. அந்தச் சமயங்களில் அவர் என்ன ஆனார் எங்கு போனார் என்பது ஒருவருக்கும் தெரிய மாட்டாது' என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து 1874ல் மறைந்தது போல் பல முறை அதற்கு முன்பும் வள்ளலார் மறைந்திருக்கின்றார் என்பது புலனாகிறது. இதற்கு ஆதாரமாக 26.10.1870ல் சன்மார்க்க அன்பர்கட்கு வள்ளலார் இட்ட கட்டளை அறிவிப்பு அடியில் வருமாறு உள்ளது.

அருட்பெருஞ்ஜோதி

அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது

ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாய் நம்பியிருங்கள் என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில் தானே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்.

இவ்வாறு 26.10.1870ல் அறிக்கை வெளியிட்டு மறைந்திருக்கின்றார். பின்னர் வெளி வந்திருக்கின்றார். முன்பெல்லாம் மறைந்தபோது பத்து அல்லது பதினைந்து தினங்களுக்குள் வெளிவந்திருக்கிறார். 1874 ஜனவரி 30ஆம் நாள் மறைந்தவர் இன்னும் வெளிவரவில்லை. மறைவதும் வெளிவருவதும் அவருடைய விருப்பம்.

வள்ளலார் அவர்கள் எல்லாச் சித்துக்களும் கைவரப் பெற்றவர். நினைத்த இடத்துக்கு நினைத்தவுடன் செல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். ஆண்டவனோடு அவர் நேரடியாக உறவாடியவர். 22.10.1873 அன்று சித்திவளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து அவர் ஆற்றிய பேருரையில் ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றார்.

அதாவது 21.10.1873 அன்று அவருடன் ஆண்டவன் பேசியதாகவும் அவரை இவ்வுலகில் வேறு இடத்திலோ அல்லது வேறு உலகிலோ சென்று வருமாறு பணியிட்டதாகத் தெரிகிறது. அவரது வாசகத்தை அப்படியே படித்துப் பாருங்கள்.

'என்னிடத்தில் ஒருவன் வசப்படாது முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன். மிரட்டிச் சொல்லுவேன், தெண்டன் விழுந்து சொல்லுவேன். அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன், அல்லது ஆண்டவரை நினைத்துப் பிராத்தனை செய்வேன். நீங்கள் எல்லோரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் சஷண நேரம் இருக்க மாட்டார்களே என்று ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன், அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் அல்ல."

நான் இல்லாமல் இந்த ஜனங்கள் சஷண நேரங்கூட இருக்க மாட்டார்களே என்று வள்ளலார் ஏன் சொல்ல வேண்டும்? ஆண்டவனின் கட்டளைப்படி அவர் எங்கோ செல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஜனங்களை விட்டு எப்படி பிரிவது என்று யோசித்திருக்கிறார். ஆண்டவர் அதற்கும் ஏதாவது சமாதானம் சொல்லியிருக்கக்கூடும். 21.10.1873 அன்றே இந்த ஜனங்களை விட்டு எங்கோ செல்ல வேண்டிய கட்டளை ஆண்டவனால் வள்ளலாருக்குத் தரப்பட்டு விட்டது.

தந்தைசொல் தட்டாத வள்ளற் பெருமான் அதற்குரிய நாளாகக் கார்த்திகை பெளர்ணமியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தான் வெளியே செல்ல வேண்டிய வேலையிருப்பதால் இது வரை தான் பராமரித்து வந்த திருவிளக்கைப் புறத்தில் வைத்து இதனை தடைபடாது ஆராதியுங்கள் என்று கட்டளையிட்டார். உள்ளே சென்று கதவையும் தாளிட்டுக்கொண்டார்.

பின்னர் ஏதோ காரணத்தால் மீண்டும் அறையை விட்டு வெளியே வந்து வந்தார். வந்த பிறகு தைப்பூசத்தன்று 30.01.1874ஆம் ஆண்டு கதவை சாத்தி அறைக்குள்ளே சென்றார். திருக்காப்பிட்டுக் கொண்டது, அவர் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்த செயலே தவிர மற்றவர்க்கு ஏற்பட்ட எந்த துர்நிலையும் அவருக்கு ஏற்படவில்லை என்று அறிய வேண்டும்.

மேலும் அறிவுக் கூர்மையோடு அவரது நிலைமையை ஆய்ந்தால் அவர் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்ததை உணரலாம்.

ஒரு குடும்பத்தலைவன் இறந்து விட்டால் அவனது வாரிசான அவனுடைய மகனோ, அல்லது மற்றவர்களோ சட்டப்படி அந்தக் குடும்பத் தலைவனின் சொத்தை உடனே அனுபவிக்கலாம். அதே நேரத்தில் அவன் எங்காவது காணாமல் போய் விட்டால், ஏழு ஆண்டுகள் வரை அந்தக் குடும்பத்தினர் காத்திருந்து பிறகு தான் அனுபவிக்க முடியும். இது தான் சட்டம். அதே போல வடலூர் கிராம வாசிகள் இனாமாகக் கொடுத்த நிலமும் தருமச்சாலை முதலிய கட்டிடங்களும் வள்ளலார் பேரில் பட்டா செய்யப்பட்டிருந்தன. வரியும் செலுத்தப்பட்டு வந்தது. 1874ல் அவர் திருக்காப்பிட்டுக்கொண்டபிறகு யாரும் வரி செலுத்தவில்லை. ஒன்றும் தெரியாத ஒரு சிலர் கூறுவதுபோல் அவருக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அவர் பேரிலிருந்த பட்டாவை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றியிருக்கலாம். அவர் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்று பிறர் கண்களுக்குக் காணாமல் மறைந்துவிட்டதால், சட்டப்படி அவர் பேரிலிருந்த பட்டாவை மாற்ற ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1874 ஜனவரி 30ல் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டார்கள். அடுத்து 11.10.1880 அன்று சிதம்பரம் தாசில்தார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் தேவஸ்தான தருமஸ்தானங்களின் ஸ்தாபகராகிய சிதம்பரம் இராமலிங்க பிள்ளை என்பவர் ஏழு வருஷகாலமாய் பகிரங்கத்தில் நமூது இல்லாமல் இருப்பதினாலே மேற்படி 302 நம்பர் பட்டாவை 1. ஆறுமுக முதலியார், 2. வக்கீல் வெங்கிடேச ஐயர், 3. சபாபதி குருக்கள், 4. நயினா ரெட்டியார் ஆகிய நால்வரையும் ஏஜண்டுகளாக நியமிக்கப் போவதாக சிதம்பரம் தாசில்தார் ஓர் அறிக்கை வெளியிடுகிறார்.

பின்னர் 01.03.1881ல் பசலி 1290-91ல் மேற்குறித்த நான்கு ஏஜென்டுகள் பேரில் பட்டா மாற்றம் செய்யப்படுகின்றது. ஏழு ஆண்டுகள் சட்டப்படிப் பட்டா மாற்றம் செய்ய ஏன் காலதாமதம் ஆகியது? சிதம்பரம் தாசில்தாரின் அறிக்கை துல்லியமாகச் சிதம்பரம் இராமலிங்க பரதேசி என்பவர் ஏழு ஆண்டுகளாகப் பகிரங்கத்தில் நமூது இல்லாததினால் என்று கூறுவது ஒன்று போதாதா! மற்றவர்கள் கூறுவது போல வள்ளலாருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் சிதம்பரம் தாசில்தார் "பகிரங்கத்தில் காணவில்லை" என்று ஏன் அறிக்கை வெளியிடுகிறார். அவர் அறிக்கையும், ஏழு ஆண்டுகள் காத்திருந்ததும் வள்ளலார் கதவைச் சாத்திக் கொண்டு அறைக்குள்ளே மறைந்ததற்குச் சான்றாக நிற்கின்றனவே.

இதுவரை கூறி வந்த அனைத்தையும் ஆழ்ந்து படித்தால் மறையவும், வெளித் தோன்றவும் ஆற்றல் பெற்றிருந்த வள்ளலார் அவர்கள், ஆண்டவனிட்ட கட்டளைப்படி மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் தாமே திட்டமிட்டு அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்கும்.

5. 1874-ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் திருக்காப்பிட்டுக் கொண்ட அன்றுதான் வள்ளாலார் ஆண்டவனோடு இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று கூறுவது சரியா?

அப்படிக்கூறுவது தவறு. வள்ளலார் ஆண்டவனோடு கலந்தார் என்று சொல்வதை விட ஆண்டவன் வள்ளலாரை நாடி அவருடன் இரண்டறக் கலந்தான் என்றுதான் கூற வேண்டும். அதை வள்ளலாரே பல பாடல்களில் கூறியுள்ளார். உதாரணமாக,

அருட்ஜோதியானே னென்றறையப்பா முரசு
அருளாட்சிபெற்றே னென்றறையப்பா முரசு
மருட்சார்புதீர்த்தே னென்றறையப்பா முரசு
மரணந்தவிர்த்தேன னென்றறையப்பா முரசு

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணை மேற் பனிக் கறையினூடே
திருவடி சேர்த்தருள்க வெனச் செப்பி வருந்திடவும்
நானிருக்கும் குடிசியிலே வலிந்து நுழைந்தெனக்கே
நல்ல திருவருளமுதம் நல்கிய தன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன்
உள்ளமெனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே

இறைவன் என்றைக்கோ வள்ளலாரைக் கலந்து விட்டான். இறைவன் வேறு வள்ளலார் வேறு என்று இருந்த துவைத நிலை மாறி, வள்ளலாரும் ஆண்டவனும் ஒன்றான அத்வைத நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆணிப் பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி என்ற பாடலில்

அம்மையைக் கண்டேன் அவனருள் கொண்டேன் அமுதமுமுண்டேனடி என்றும் தாங்கும் அவனருளாலே நடராசர் சந்நிதி கண்டேன் என்றும் சந்நிதியிற் சென்று நான் பெற்ற பேறது சாமியறிவாரடி என்றும் பாடுகின்றார். இப்படி ஆண்டவனுடன் கலந்த பிறகு, தான் பாடிய பாடலை மக்கள் அலட்சியம் செய்யக் கூடாதே என்பதற்காகவே 'நானுரைக்கும் வார்த்தை யெலாம் நாயகன்தன் வார்த்தை நம்புமினோ' என்று பாடினார். இறைவனுடன் என்றைக்கோ கலந்தவர் வள்ளலார். ஒளியுடம்பு என்றோ பெற்றுவிட்டார். சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் ஆகிய முத்தேக சித்திகளையும் கூட வள்ளலார் என்றோ பெற்றுவிட்டார். அதனையடைந்தப்பிறகுதான் அருட்பாக்கள் முத்தேகத்தின் அனுபவமாக அவரால் பாடப்பட்டன. போதனையாக பாடப்பட்டன அல்ல. 1870 அக்டோபர் 26ந்தேதி அவர் மறைந்து பின்னர் வெளி வந்திருக்கின்றார். 30.01.1874 அன்று திருக்காப்பிட்டுக் கொண்டார் என்று கூறுவதே சரியானது.

6. வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொண்டார் என்று சிலர் கூறுவது சரியா?

அவர் கூறிய அர்த்தம் வேறு நாம் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு ,ஆதாவது எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்பது ,எல்லா உயிர்களிலும் ஆண்டவர் ஆன்ம ஒளியாக விளங்கிக் கொண்டு உள்ளார் அதுபோல் நான் ஒளியாக ஒளிதேகம் பெற்றுக் கொண்டேன் என்பதை இனிமேல் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்பதாகும் . 


முன்பே கூறியதுபோல 1873 கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று தான் வழிபட்டு வந்த திருவிளக்கை வெளியில் வைத்துக் கீழ்கண்டவாறு அருளுரையாற்றினார்கள்,

'இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவை சாத்திவிடப் போகிறேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும், ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் உங்களுடைய காலத்தை வீணில் கழிக்காமல் நினைந்து நினைந்து என்றும் தொடக்கமுடைய 28 பாசுரமடங்கிய பாடறிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொள்வேன்'

எனக்கூறி அறைக்குள்ளே சென்ற வள்ளலார் யாது காரணம் பற்றியோ மீண்டும் வெளிவந்து மார்கழி மாதம் முழுவதும் பிரசங்கம் செய்தார். பின்னர் தை மாதம் மறுபடி அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.


அதாவது மக்களுக்கு இன்னும் சொல்லவேண்டிய விஷயங்கள் இருப்பதால் அதையும் சொல்லிவிடலாம் எனதைக் கருத்தில் கொண்டு காலதாமதம் செய்து இருக்கலாம் .எனக் கருதுகிறேன்.

கார்த்திகை மாதம் எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொள்வேன் என்று கூறினாலும் அவர் வெளியே வந்து விட்டதால் அவ்வாறு செய்யவில்லை என்று உணர வேண்டும். அவர் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டிருந்தால் அவரால் வெளிவந்திருக்க முடியாது. அவர் தேகம் அணு அணுவாகச் சிதைந்து எல்லா உடம்பிலும் புகுந்துக்கொண்டால் அவர் மரணமிலாப்பெரு வாழ்வு பெற்றது பொய்யாகிவிடும். ஆதலால் வள்ளல்பெருமான் அணு அணுவாக சிதைந்து விடவில்லை ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டார் என்பதே உண்மையாகும்.மரணமிலா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் நமக்குத் துணையாய் ஞான தேகத்துடன் தன்னிச்சை போல் இயங்கி வருகிறார் என்பதே உண்மை.

7. அப்படியென்றால் எல்லா உடம்புகளிலும் வள்ளலார் புகுந்து கொண்டார் என்று இன்றும் சிலர் பேசிவருவது பற்றி என்ன சொல்வது?

கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று வள்ளலார் கூறிய வாசகத்தையும் தை மாதம் திருக்காப்பிட்டுக்கொண்ட போது வெளியிட்ட வாசகத்தையும் திருஅருட்பா புத்தகத்தில் ஒரே பக்கத்தில் அச்சிட்டுவிட்டதால் எந்த நாளில் எதைச் சொன்னார் என்று சரியாகக் கவனியாமல் இரண்டு வாசகங்களும் திருக்காப்பிட்டுக் கொண்ட அன்று வெளியிட்டவை என்ற தவறான எண்ணந்தான் இப்படிக் கூற வைக்கின்றன. நாளோடு ஒப்பிட்டுச் சரியாக ஆய்வு செய்தால் உண்மை விளங்கும்.

8. அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்றோர் எப்படித் திரும்ப வருவார்கள் என்ற பேச்சிற்கே இடமில்லையோ, அது போல் வள்ளலாரும் திரும்ப வருவார் என்ற பேச்சிற்கே இடமில்லையென்று சொல்வது சரியா?

ஒருபாதி உண்மை, மறு பாதி பொய். அதாவது அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றோர் திரும்ப வரமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உண்மையில் மனிதரல்லர் என்றும் தத்துவங்களே யென்றும் வள்ளலாரே கூறுகிறார். எனவே அவர்கள் வரமாட்டார்கள்.

05.10.1823ல் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கும், தவத் திருமகள் சின்னம்மைக்கும் பிறந்த வள்ளலார் சரித்திர நாயகர், வரலாற்று மனிதர்,வாழ்ந்து காட்டிய ஞானி மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர்  எனவே அவர் வருவார், தன்னை வெளிப்படுத்துவார்.

ஏற்கனவே விளக்கியுள்ளது போல வள்ளலார் பல முறை மறைந்திருக்கின்றார். ஒவ்வொரு முறையும் வெளி வந்திருக்கின்றார். அப்போது அடிக்கடி வெளிவந்தார். இப்போது கொஞ்ச காலதாமதம் ஆகிறது. அதாவது மறைந்த நாள் முதல் - தோன்றிய நாள் வரை உள்ள இடைவெளி அப்போதெல்லாம் குறைவாக இருந்தது. இப்போது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இதுவே உண்மை.

9. வள்ளலார் இப்போது என்ன செய்துக்கொண்டிருப்பார்?

எதற்காக ஆண்டவர் அவரை நம்மை விட்டு வரச் சொன்னாரோ அந்தப் பணியைச் செய்து வருகிறார். நமக்காக பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றார். மேலும் இறைவன் தன்னை ஐந்தொழிலையும் செய்யுமாறு பணித்ததாக பல பாடல்களில் பாடியுள்ளார்.

மன்னுகின்ற பொன்வடிவம் மந்திரமாம் வடிவும்
வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ் செய்திடவே பணித்துப்
பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே. (4150)

10. தான் திரும்பி வருவதாக எங்காவது வள்ளலார் கூறியிருக்கிறாரா?

22.10.1873 புதன் கிழமை காலை 8 மணிக்கு மேட்டுக் குப்பத்தில் சன்மார்க்க கொடி கட்டி உபதேசம் செய்து ஆற்றிய பேருரையில் அவர் கூறிய வாசகம் இதுதான்,
'இப்போது நீங்கள் இது வரைக்கும் ஒழுக்கத்திற்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் சாலைக்குப் போகக் கொஞ்ச தினமிருக்கிறது. அதற்குள்ளாக நீங்கள் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்திற்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் கேட்டுக் கொண்டும் வருகின்றேன். ஆதலால் நீங்கள் அப்படி செய்து கொண்டிருங்கள்.'

தான் வருவதாக வள்ளலார் அளித்த வாக்குறுதியும் அதுவரை நாம் செய்ய வேண்டிய பணி இன்னதென்பதனையும் மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் அறியலாம். அவர் அப்படிக் கூறியது 22.10.1873 புதன் கிழமை காலை 8 மணிக்கு மேல்.

11. வள்ளலாரின் ஞான தேகத்தை நம்மால் பார்க்க முடியுமா?

'காரணப் பிரகிருதி மகா காரணப் பிரகிருதியங்கங்கள் மனதிற்கே விஷயமாகுமென்றும் இவை சாதாரண லட்சணம் என்றும் அசாதாரண லட்சணத்தில் கண்ணறிவு பலமுறை சாதன லட்சியத்தால் நுட்பறிவாகி மனதிற்கு விஷயமாகின்ற காரண மகாகாரணப் பிரகிருதி யங்களையும் அறியும் என்றும், இவ்வாறு அறிவது சாத்தியமே என்றும் இதனை யோக சாதன முதலிய வழிகளாலும் தத்துவ சாத்திரங்களாலும் அனுமான முதலிய பிரமாணங்களாலும் அறிந்து கொள்ளலாம்' என்றும் வள்ளற் பெருமானார் தம்மிடம் வாதிட்ட பிரம்ம சமாஜம் சம்பேடு ஸ்ரீதர நாயக்கர் அவர்களிடம் கூறியுள்ளார். சாதனா சகாயத்தால் கண் நுட்ப அறிவு பெறுமானால் காணலாம். அல்லது ஞானதேகிகளே வெளிப்பட்டால் அனைவரும் காணலாம்.

நாம் இவ்வுலகில் காண்பவையெல்லாம் முப்பரிமானத்துள் அடங்கிவிடும். அதாவது மெல்லிய நூல் என்பது நீளத்தை மட்டும் கொண்ட ஒரு பரிமானமாகும். நாம் படுக்கும் பாய் என்பது நீளம், அகலம் ஆகிய இரு பரிமாணங்களைக் கொண்டதாகும். செங்கல் என்பது நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்று பரிமானங்களைக் கொண்டதாகும். இவ்வாறு இவ்வுலகில் மனிதன் உட்படி எந்தத் தோற்றமும் இந்த முப்பரிமானத்தில் அடங்கிவிடும். நான்காவது பரிமானம் எப்படி இருக்கும் என்பது எவருக்கும் தெரியாது. மனித அறிவைக் கடந்ததாக உள்ளது. ஆனால் மொத்தம் ஏழு பரிமானங்கள் உள்ளதாக ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஏழு பரிமானங்களுக்கும் அப்பால் பட்டது இறைவன் வடிவம். ஞான உடம்பும் அவ்வாறே. ஆகையால் நமக்கு இறையருளால் முப்பரிமானத்தைத் தாண்டிய வடிவைக் காணுகின்ற கண் அமையப்பெற்றால் காணலாம். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞஜோதி

சனி, 9 நவம்பர், 2013

ஞானம் என்பது யாது ?

ஞானம் என்பது யாது ?

ஞானம் என்பது ஒன்றும் இல்லாதது .அருளைப்பெற்று தன்னை ஒன்றும் இல்லாது மாற்றிக் கொள்வது ஞானம் என்பதாகும்.இறைவனுக்கு ஞான தேகம் என்று பெயர் உண்டு .

ஜோதிமலை மேல் வீட்டில் தூய திருவமுதம் 
மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன் --ஓதரிய 
ஏகா அனேகா எழிற் பொதுவில் வாழ'' ஞானதேகா ''
தகவைத் திற !

என்று வள்ளலார் பதிவு செய்துள்ளார் , ஆதலால் ஞானம் என்பது ஊன கண்களுக்குத தெரியாத அருள் ஒளியாகும அதுவே தனிப் பெருங் கருணையாக செயல் பட்டுக் கொண்டு உள்ளது. அந்த கருணை உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் இருந்து பெறுவதுதான் அருள் என்பதாகும்.ஜோதி மலை என்பது இறைவன் இருக்கும் கோட்டையாகும் அது அருள் பெருவெளியாகும் .

அதனால்தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் 
ஞான வீட்டின் கதவைத் திறக்க வேண்டுமானால் ஜீவ காருண்யம் என்னும் சாவியை முதலில் நாம் பெற வேண்டும்.அதற்கு மேல் நிறைய தடைகள் இருக்கிறது அந்த தடைகள் எல்லாம் சத்விசாரம் என்னும்,தன்னை அறிந்து இன்பமுற தந்திரங்கள் அறிந்து கொள்ள வேண்டும் .

ஞானம் அடைய பெற வழி நம்முடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் உள்ள நடுக்கண்ணில் உள்ள ஒளியை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.அதுதான் சிற்சபை என்பதாகும்.
சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தி எல்லாம் சத்தியம் சேர்ந்திடும் என்கிறார் வள்ளலார்.

உடம்பை இயக்குவது மனம் ,உயிரை இயக்குவது ஆன்மா என்னும் நடுக்கண் ஒளியாகும் .அந்த ஒளியை தொடர்பு கொள்ளுவதே .உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் ஞானம என்னும் அமுதமாகும்.அந்த ஞானத்தைப் பெறுவதே இறைவனை அடைவதாகும் .

அதற்கு மனதை அடக்கி சிற்சபைக் கண் மனத்தை செலுத்த வேண்டும்.மனத்தை அடக்கத் தெரிந்தவன் மனிதனாகும் .அவனே ஞானத்தைப் பெரும் வழியைத் தெரிந்தவன்.

உங்கள் ஆன்மநேயன்;--கதிர்வேல் .

வெள்ளி, 8 நவம்பர், 2013

பணம் எதையும் செய்யும் !

பணம் எதையும் செய்யும் !

அறிவு சார்ந்த ஆசான்களும்,அறிவு சார்ந்த சிந்தனையாளர்களும்,பணம் படைத்தவர்களுக்கு அடிமை யாகிவிடுகிரார்கள்.பணம் படைத்தவர்கள் அவர்களை தன்வழிக்கு கொண்டு சென்று அற்ப பேரும் புகழ்க்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்க முற்படுகிறார்கள்.ஆசான்களும் அற்ப மகிழ்ச்சிக்கு கட்டுப்பட்டு அழிந்து போய் விடுகிறார்கள்.அப்பேற்பட்ட ஆசான்களின் வழியைப் பின்பற்றினால் நம்முடைய வாழ்க்கை என்னவாவது என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

அதனால்தான் வள்ளலார் --கண்டது எல்லாம் அனித்தியமே ,கேட்டது எல்லாம் பழுதே,கற்றது எல்லாம் பொய்யே ,நீர் களித்தது எல்லாம் வீணே,உண்டது எல்லாம் மலமே,உட்கொண்டது எல்லாம் குறையே உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே, என்று நமக்கு அறிவு புகட்டுகிறார். அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்ளுங்கள் ,

எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் திறமையும் அறிவும் ஆற்றலும் உள்ளவர் வள்ளலார்மேல் மிகவும் பற்று உள்ளவர் .சென்னையை சேர்ந்தவர் .யோகமுறைகளை நன்கு அறிந்தவர் தன்னலம் கருதாத தவசீலர்.அவர் ஒரு பணக்காரரிடம் வந்து மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு இறந்து விட்டார்.ஆதலால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அறிவையும் ஞானத்தையும் பணத்தைக் கொண்டு பெறமுடியாது.என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் ஆண்மநேயன் ;--கதிர்வேல்