செவ்வாய், 25 ஜூன், 2013

பொருள் சிறந்ததா ?அருள் சிறந்ததா !

பொருள் சிறந்ததா ?அருள் சிறந்ததா !

பொருள் இந்த பஞ்ச பூத உலகத்தில் கிடைப்பது.மற்ற உயிர்களின் வழியாகவும் பல உடம்பின் வழியாகவும்,பல அணுக்களின் வழியாகவும் கிடைப்பதாகும்.இந்தப் பொருள் நம்முடைய உயிரையும் உடம்பையும் அழித்து,பின் மரணம் வந்து விடும்.மறுபடியும் உயிர் வேறு ஒரு உடம்பு எடுத்து தன்னுடைய வினைக்கு தகுந்தாற் போல் வாழ்ந்து வாழ்ந்து அழிந்து கொண்டே இருக்கும். இந்த உலகம் என்னும் எல்லைக் கோட்டிற்கு வெளியே செல்லமுடியாது இதுவே பொருளின் தன்மையாகும்.

அருள் என்பது நம்முடைய ஆன்மா என்னும் உள் ஒளியில் ஆண்டவரால் பதிய வைக்கப் பட்டுள்ளது.இதை எடுக்க வேண்டுமானால் உலக போகத்தில் உள்ள மனதை அடக்கி,ஆன்மா இருக்கும் இடமான சிற்சபையில் பதிய வைக்க வேண்டும்.அதனுடன் இடைவிடாமல் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.அப்படி மனதை ஆன்மாவில் பதிய வைத்தால் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகி,ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அதுதான் அருள் என்பதாகும் ,

அந்த அருளை யார் புசிக்கின்றார்களோ அவர்களுக்கு மரணம் இல்லை அழிவு இல்லை ,அவர்கள் தேகம் ஒளி உடம்பாக மாறிவிடும் .அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல்,எந்த துணைக் கருவிகளும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.பல கோடி அண்டங்களுக்கும் ,பலகோடி உலகங்களுக்கும் செல்லலாம்.அவர்கள்தான் கடவுளைக் கண்டவர்கள்.அவர்களை எவரும் எந்த சக்திகளும் அழிக்க முடியாது.

இதுவே பொருளுக்கும் அருளுக்கும் உண்டான வித்தியாசமாகும்.உங்களுக்கு எது தேவையோ அதை பின் பற்றுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

வியாழன், 20 ஜூன், 2013

நான் ஒரு ஆன்ம ஒளி ! பாகம் ஒன்று !

நான் ஒரு ஆன்ம ஒளி !வெண் தாமரை மலர் போல் உள்ள பீடத்தின் மத்தியில் ஆன்ம ஒளி .

நான் ஒரு புள்ளி வடிவமான ஆன்மா !நான் இருக்கும் இடம் தலைப்பாகத்தின் புருவ மத்தியில் அதாவது மூளையின் நடுவில் உள்ள இடம் வட்டவடிவமான ஓர் இடமாகும்.அதற்கு ஞான சிங்காதன பீடம் என்று பெயர் .அந்த  மேடையின் பீடத்தில் ,அதாவது அதன் மத்தியில் ஒளி வடிவமாக பொன் வண்ணமான ஒளியாக  இருக்கிறேன் .என்னுடைய தந்தை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகும.நான் என் தந்தையின் குணம் உடையவன் ,எனக்கு அழிவும் இல்லை மரணமும் இல்லை,நான் என்றும் நிரந்தரமானவன்.என் தந்தையும் அன்பு,தயவு, கருணை உள்ளவர், நானும் அன்பு, தயவு,கருணை உள்ளவன்.

நான் இந்த உலகத்திற்கு என் தந்தையின் அனுமதியுடன் வாழ வந்திருக்கிறேன்.நான் வேறு, என் தந்தை வேறு அல்ல! என்னுடைய உள் ஒளியின் வாயிலாக,இந்த உலகத்தில் உள்ள,அண்டங்களையும்,அண்டத்தில் உள்ள உயிர்களையும்,உயிர்கள் வாழும் வாழ்க்கை முறைகளையும்,அதனால் உண்டாகும் இன்பம் துன்பங்களையும் ,அணுக்களின் படைப்பும்,அதன் சேர்க்கைகளும்,மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்து செயல்பாட்டு முறைகளையும், என் தந்தை எப்படி செயல்படுத்துகிறார், என்ற உண்மையை அறிந்து கொள்வதற்கும்,மேலும் உள்ள அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராசையுடன், நம்பிக்கையுடன்,என்தந்தையின் அனுமதியுடன் இந்த பஞ்சபூத உலகத்திற்கு, வந்தேன்.

நான் என்னுடைய  விருப்பம் போல் இந்த பஞ்ச பூத உலகில் வாழ்வதற்கும் பல பிறவிகள் எடுப்பதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும்,மீண்டும் திரும்பி செலவதற்கும் எனக்கு முழு சுதந்திரம் என்னும் தேக சுதந்திரம் ,ஜீவ சுதந்திரம்,போக சுதந்திரம்,என்னும் மூவகை சுதந்தரங்களையும் என் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொண்டேன்..அதைப் பெற்றுக் கொண்டுதான் நான் இங்கு உயிர் பெற்று வாழ்ந்து வருகிறேன்.

இந்த உலகத்தில் ஆன்மாவாகிய நான் வாழ வேண்டுமானால் உயிரும் உடம்பும் எடுத்துதான் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதியாகும்.நான் எப்படி இந்த பூத உலகிற்கு வந்தேன் என்பதை பார்ப்போம்.

நான் முதலில் இருந்த இடம் ;--

என்னுடைய தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.அவர் இயற்கை உண்மை நிறைவாகி உள்ள, ஓர் சுத்த சிவானந்த அருட்பெருவெளியில்,இயற்கை விளக்க நிறைவாகி விளங்கி ''அருட்பெருஞ்ஜோதி'' சொரூப வடிவினராக,இயற்கை இன்ப நிறைவாக யோங்கி,ஒருமையில் திரு நடனம் செய்து கொண்டு உள்ளார். எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் வேண்டும் என்ற பெருங் கருணையால்,இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டே உள்ளவராகும்.

அவர் இருக்கும் இடம்;-- இயற்கை உண்மை என்னும் அருட் பெருவெளியில் இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிக் கொண்டும் ,இயற்கை இன்பத்தை அளித்துக் கொண்டும்  உள்ளவர்தான்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.அவர் இருக்கும் இடம், அளவில் அடங்காத அருள் நிறைந்த பெருவெளி யாகும்..அதாவது அருள் நிறைந்த வெற்று இடமாகும்.அந்த அருட்பெருவெளியின் கண்ணே அருட்பெருஞ்ஜோதி வடிவினராகி விகற்பமில்லாது விளங்குகின்ற மெய்ப் பொருளாக விளங்கிக் கொண்டும்  உள்ளவராகும். அவர் சமூகமான அருட்பெருவெளியில் ஆன்மா ஆகாயம் என்னும் ஒரு தனி இடம் உள்ளது.,அங்கே பக்குவ ஆன்மா,அபக்குவ ஆன்மா,பக்குவாபக்குவம் என்னும் மூன்று வித தகுதி வாய்ந்த ஆன்மாக்கள் உள்ளன்.

அந்த அருட்பெரு வெளியில் உள்ள,ஆன்ம ஆகாசத்தில் இருந்த என்னை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் அனுப்பப்பட்டு,அவர் அனுமதியின் பேரில்தான்  இங்கு வந்துள்ளேன்.நானஆன்மாக்களின்  கூட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனிமையில் வந்துள்ளேன்.நான் பஞ்ச பூத எல்லைக்குள் வந்தவுடன்,முதலில் உயிர் என்னும் ஒளியைப் பெற்று,அந்த உயிர் வாழ்வதற்கு பஞ்ச பூத அணுக்களான கருவிகளின் சேர்க்கையால் பூதஉடம்பு எடுத்து,வாழ வந்திருக்கிறேன் .

ஆன்மாவாகிய நான் வாழ்வதற்கு,மாயையின்உதவியால் உயிர் கொடுத்து , உடம்பு எடுத்துதான் வாழ வேண்டும் என்பது இயற்கையின் சட்டமாகும். நான் இங்கு வந்து வாழ்வதற்கும்,எனக்கு வழிகாட்டவும், என்னை விட்டு என்றும் பிரியாமல் எனக்குத் துணையாக,என்னைப் பாதுகாப்பதற்கு  ஆணவம் என்னும் ஆற்றல் மிகுந்த சக்தியை என்னுடைய ஆன்மாவில் ஆண்டவர் அழுத்தமாக பதிய வைத்து அனுப்பு உள்ளார்.ஆணவம் என்னும் துணைக்கருவியுடன் இந்த பஞ்ச பூத உலகிற்கு சுற்றுலாப் பயணம் போல் சுற்றிப் பார்க்க வந்துள்ளேன்.

என்னுடைய முதல் வாழ்க்கை தாவரம் என்னும் தேகம் !

நான் இவ்வுலகத்தில் வாழ வேண்டுமானால்,உயிரும் உடம்பும் எடுத்துக் கொண்டுதான் வாழ வேண்டும்.நான் முதலில் எடுத்துக் கொண்ட தேகம், உயிர் உள்ள புல்,நெல்,மரம்,செடி,கொடி,பூண்டு முதலாகவும்,கல்,மண் ,குன்று,முதலிய தேகங்கள் எடுத்து வாழ்ந்தேன்.அதில் பல்வேறு அவத்தைகளாலான களையுண்டல்,வெட்டுண்டல், அறுப்புண்டல்,கிள்ளுண்டல்,உலர்ப்புண்டல்,உடைப்புண்டல்,வெடிப்புண்டல்,போன்ற துன்பங்களால் இறந்து இறந்து அத்தாவர யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று,உழன்று உழன்று,அலுப்பும் சலிப்பும் அடைந்து,மற்ற உயிர்களுக்கு  நன்மை செய்து பின்னர் ஊர்வன என்னும் அடுத்தப் பிறப்பு கிடைத்தது .

இரண்டாவது வாழ்க்கை ஊர்வன என்னும் தேகம் !

ஊர்வன என்னும் உயிர் உள்ள தேகம எடுத்து,எறும்பு,செல்,புழு.பாம்பு,உடும்பு,பல்லி , முதலியவாகவும் தவளை,சிறுமீன் ,முதலை,சுறா,திமிங்கலம் முதலியவாகவும்,பிறந்து பிறந்து,பல்வேறு அவத்தைகளாலான,தேய்ப்புண்டல்,நசுக்குண்டல்,அடியுண்டல்,பிடியுண்டல் முதலிய அவத்தைகளில் இறந்து இறந்து அவ்வூர்வன,நீர் வாழ்வன போன்ற யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்பு அடைந்து மற்ற உயிர்களுக்கு நன்மை செய்து,அடுத்து வெளியில் பறக்கும் பிறப்பு கிடைத்தது.

மூன்றாவது தேகம் பறப்பன !

பின்னர் ஈ,வண்டு,தும்பி,குருவி,காக்கை,பருந்து,கழுகு,முதலிய வாகப் பிறந்து பிறந்து,அடியுண்டல்,பிடியுண்டல்,அலைப்புண்டல்,உலைப்புண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அப்பறவை யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,மற்ற உயிர்களுக்கு நன்மை செய்து அலுப்பு அடைந்து நான்காவதாக நடந்து செல்லும் பிறப்பு கிடைத்தது .

நான்காவது தேகம் நடப்பன !

பின்னர் நான்காவது பிறப்பான அணில்,குரங்கு,நாய்,பன்றி,பூனை ,ஆடு,மாடு,யானை,குதிரை,புலி,கரடி,சிங்கம்,முதலியவாகப் பிறந்து பிறந்து ,பிடியுண்டல்,அடியுண்டல்,குத்துண்டல்,வெட்டுண்டல்,தாக்குண்டல்,கட்டுண்டல்,தட்டுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்விலங்கு யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று உழன்று உழன்று,மற்ற உயிர்களுக்கு நன்மைகள் செய்து,அலுப்பு அடைந்து ஐந்தாவதாக தேவர் என்னும் பிறப்பு கிடைத்தது .

ஐந்தாவது தேகம் தேவர் !

பின்னர் ஐந்தாவது பிறப்பான ,பைசாசர்,பூதர,இராக்கதர்,அசுரர்,சுரர்,முதலியராகப் பிறந்து பிறந்து,அலைப்படுதல்,அகப்படுதல்,அகங்கரித்தல்,அதிகரித்தல்,மறந்து நிற்றல்,நினைந்து நிற்றல்,மயக்குறுதல்,திகைப்புறுதல்,போரிடுதல்,கொலைபடுதல்,முதலிய பல்வேறு அவத்தைகளால்இறந்து இறந்து அத்தேவ யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று,உழன்று,உழன்று ,மற்ற உயிர்களுக்கு நன்மைகள் செய்து அலுப்பு அடைந்து ஆறாவதாக நரகர் என்னும் பிறப்பு கிடைத்தது .

ஆறாவது தேகம் நரகர் !

பின்னர் ஆறாவது பிறப்பான,காட்டகத்தார்,கரவுசெய்வார்,கொலை செய்வார்,முத்லியராகப் பிறந்து பிறந்து ,பயப்படல்,சிறைப்பட்டால்,சிதைப்படல்,முதலிய அவத்தைகளால் இறந்து இறந்து அன்நரக யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று,மற்ற உயிர்களுக்கு நன்மைகள் செய்து அலுப்பு அடைந்து ஏழாவதாக உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்னும் மனிதப் பிறப்பு கிடைத்தது.

எழாவது தேகம் மனிதர் !

பின்னர் எழாவது பிறப்பு என்னும் மனித பிறப்பு இறுதியாக கிடைத்துள்ளது.ஆன்மாவாகிய நான் முன்னுள்ள பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும்,அச்சமும்,அவலமும்,களைப்பும் துன்பமும் கண்டு.என்னுடைய தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவர் கருணைக் கொண்டு இரங்கி அருளி ,அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயர்ந்த அறிவு உடைய மனித தேகத்தில் என்னை செலுத்தி அருளிய அந்த பெருங்கருணைக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ஒன்றும் தெரிந்தோம் இல்லை.

இந்த இறுதிப் பிறப்பாகிய மனித தேகப் பிறப்பு ,இந்த உலகத்தில் வாழ்வதற்கு அல்ல !என்பதை உணராமல் மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் வாழத் தொடங்கினேன் .

மனித பிறப்பு எடுத்து கொண்ட நான்,மனிதப் பிறப்பு எடுத்து துன்பம்,துயரம்,அச்சம்,பயம்  இல்லாமல் இன்பமுடன் வாழலாம் என்றால் முடியவில்லை.இந்த மனித வாழ்க்கையும் பசி,பிணி,கொலை,இச்சை எளிமை,தாகம்,பயம்,போன்ற துன்பங்கள் விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.ஆதலால் இந்த பஞ்ச பூத இவ்வுலகை விட்டு வெளியேறி விடலாம் என்றால் சரியான உண்மையான வழி தெரியவில்லை.

நான் மனித பிறப்பு எடுத்து குழந்தையாகி,
இளமையாகி,வாலிபனாகி,முதிர்ச்சியாகி வயது முதிர்ந்து இறுதியில் மரணம் வந்து விடுகிறது.மரணம் வந்து ,உடம்பை விட்டு உயிரும் ஆன்மாவும் பிரிந்து விடுகிறது.மறுபடியும் என்ன பிறவி கிடைக்கும் என்பது புரியாத புதிராகவே உள்ளன ,ஆன்மாவின் உண்மையைத் தன்மையை  தெரிந்து கொள்ள ஆர்வம் தூண்டியது.ஆதலால் எனக்கு முன்னாடி வாழ்ந்த அருளாளர்கள் என்று சொல்லப்படும் ஆன்மீகவாதிகள் எழுதிய அருள் நூல்களை வாங்கி படித்து தெரிந்து கொள்ளலாம் என்ற பேராவல் கொண்டு,பல ஆன்மீக நூல்களை வாங்கி படித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

சமய மத நூல்களின் விளக்கம் !

நான் இந்தியாவில் பிறந்ததால் இந்துமத சமய நூல்களை எல்லாம் படித்து அவைகள் காட்டிய வழபாட்டு முறைகளை எல்லாம் கடைபிடித்து அதன்படி வாழ்ந்து பார்த்தேன் எந்த ஒரு நன்மையையும் கிடைக்கவில்லை.எந்த ஒரு உண்மையும் தெரியவில்லை.

அடுத்து உலகில் உள்ள பவுத்தம், கிருத்தவும்,இஸ்லாம் போன்ற மதம்  சமயங்களின் நூல்களை வாங்கிப் படித்து பார்த்தேன் அதிலும் உண்மை விளங்கவில்லை.அவைகளை விட இந்து மத சமய நூல்கள் கொஞ்சம் பராவயில்லை என்பதை அறிந்தேன் ஆனாலும் அதில் உண்மைக்குப்  புறம்பான,உண்மைகளை மறைத்து, கற்பனைக் கதைகளாகவும்,,தத்துவங்களின்  விளக்கங்கள் யாவும்,ஆலயங்களை உருவாக்கி கோபுரங்களாக அமைத்து,அதில் கற்பனை உருவங்களான ஜடப்பொருள்களை பொம்மைகளாக கடவுள்கள் என்று பெயர் வைத்து, அவைகளை வழிபட்டால், கடவுள் அருள் பெற்று இறை நிலையை அடையலாம் என்பதை காட்டி உள்ளார்கள்.அந்த வழிபாட்டு முறைகளால்,கடவுளின் உண்மையை அறிய முடியாது என்பதை உணர்ந்தேன்.உண்மைக்கு புறம்பாக உடம்பின் தத்துவங்களை படைத்து பக்தி என்ற முறையில் வழிபாடு செய்து கொண்டு உள்ளார்கள் என்பதை உணர்ந்தேன்.

இப்படி ஒவ்வொரு மதங்களும்,ஒவ்வொரு சமயங்களும் அவர்கள் எழுதிய  ஒவ்வொரு நூல்களும்,உண்மையை தெரிந்து கொள்ளாமல், ஒவ்வொரு தனி வழியைக் காட்டுகின்றன.உண்மையான தெய்வத்தையும்  அதன் உண்மையான செயல் பாட்டையும் அதனுடைய உண்மையான அருள் விளக்கத்தையும்  யாரும் தெளிவாக விளக்கிக் காட்டவில்லை என்பதை உணர்ந்தேன்.

மேலும் வழிபாட்டு முறைகள் தவிர சித்தர்கள் ,யோகிகள்.ஞானிகள் போன்ற அருளாளர்களின் கர்ம .யோக,ஞான நூலகளின் வல்லபத் தரத்தை அறிந்து கொள்ள அவைகளையும் படித்து அதன்படியும் வாழ்ந்தும் பார்த்தேன்,நீண்ட காலம் வாழ்வதற்கும் நோய் இல்லாமல் வாழ்வதற்கும்,உணவு இல்லாமல் வாழ்வதற்கும்,சமாதி நிலையை அடைவதற்கும் வழி காட்டியதே தவிர,கடவுள் நிலையை அறிவதற்கும் அடைவதற்கும்,நான் வந்த இடத்திற்கு செலவதற்கு வழி காட்டவில்லை,அவர்கள் காட்டிய பாதையும் உண்மைக்கு புறம்பாகவே இருந்தது,அவர்களாலும் உண்மை புலப்படவில்லை.அனைத்தும் சாகும் கல்வியே போதிக்கின்றன.மீண்டும் பிறப்பதற்கே வழியைக் காட்டுகின்றன.ஆதலால் அவைகளையும் விட்டு விட்டேன்.

மனிதன் சாகாத கல்வி கற்கும் வழியும் ,ஆண்டவரை அடையும் வழியும் எவரும் முறையாக முழுமையாக தெளிவாக மக்களுக்கு சொல்லவில்லை என்பதை அறிந்து கொண்டேன்.மனிதன் மனிதனாக வாழ வழிக் காட்டி உள்ளார்களேத் தவிர மரணத்தை வெல்லும் வழியும் ,ஆண்டவர் அருளைப் பெரும் வழியையும்,கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வழியையும்,தெளிவாகச் சொல்லவில்லை என்பதை அறிந்து கொண்டேன்.மேலும் மனிதன் பிறந்து பிறந்து, இறந்து இறந்து வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் வேறு உண்மையான வழிகள் எதுவும் தெரியவில்லை ,புறத்தில் உள்ளதைப் பற்றி அதிகம் சொல்லி இருக்கிறார்கள் அகத்தில் உள்ள மெய்ப் பொருளைப் பற்றி முழுமையாக எவரும் சொல்லவில்லை,உண்மை தெரிந்த பெரியோர்களும்  இல்லை என்பதை உணர்ந்து மலத்தில் புழுத்த புழுவாக துன்பப்பட்டுக் கொண்டே இருந்தேன்.

திரு அருட்பா என்னும் அருள் நூல் கிடைத்தது !

ஆன்மாவாகிய நான் உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் துன்பமும்,துயரமும்,அச்சமும்,பயமும்,கொண்டு வாழ்ந்து வரும் காலத்தில்,அப்போது எனக்கு முப்பது வயது இருக்கும். சுமார் முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாடி சன்மார்க்க ஈடுபாடுள்ள ஒரு பெரியவர் மூலமாக ''திருவருட்பா'' என்னும் அருள் நூல் கிடைத்தது .அதில் உள்ள உண்மைகளைப் படித்து,உணர்ந்து அதன்படி வாழ்ந்து கொண்டு வருகின்றேன் அதில் நான் அறிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.      

திரு அருட்பா என்னும் அருள் நூலின் வாயிலாக உண்மைகளை அறிந்து கொண்டேன்., இந்த உலகத்தையும் இதேபோல் பலகோடி உலகத்தையும்,பலகோடி அண்டங்களையும் இயக்கிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் உள்ளவர் அருட்பெருஞ் ஜோதி என்னும் ''அருள் நிறைந்த ஆற்றல் மிக்க பேரணு '' என்பதை அறிந்து கொண்டேன். அந்த எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைதான் ''நான் என்னும் ஆன்மா''  என்பதை அறிந்து கொண்டேன்.

ஆன்மா என்னும் என்னை ஆண்டவர் இந்த பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பி பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து அனுபவித்து,பின் இறுதியாக மனிதப் பிறவி கிடைக்கும் என்பதையும்,அந்த மனிதப் பிறப்பில் அகத்தில் உள்ள ஆன்மா என்னும் ஒளி நிலையின் உண்மையை உணர்ந்து தெரிந்து அறிந்து, வாழ்க்கையில் விருப்பு  வெறுப்பு அற்று, ஆன்மாவில் உள்ள அறிவு தெளிவு ஏற்பட்டவுடன் ஆன்மாவில் உள்ள  அருளைப் பெற்று,அருளின் செய்கையால் அதன் ஆற்றலால்,பஞ்ச பூத  ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு,உயிர் இல்லாத ஆன்ம ஒளி உடம்பாக மாற்றி கொண்டால்தான்.மரணம் இல்லாத பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டேன்.இந்த மாபெரும் உண்மையை திருஅருட்பா என்னும் அருள் நூல் வாயிலாக அறிந்து கொண்டேன்.

ஆன்மாவாகிய நான் ஆன்மா ஆகாயத்தில் இருந்து, வரும்போதே மீண்டும் திரும்பி வருவதற்கு உண்டான ''அருள் அமுதம்'' என்னும் நல்ல அருள் நிதியை என்னுடைய ஆன்மாவில்,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் என்னுடைய அருள் தந்தை,அருளை நிரப்பி பதிய வைத்து அனுப்பி வைத்துள்ளார் என்பதையும் அறிந்து கொண்டேன்..அத்துடன் என்னை எங்கும் அழைத்து செல்ல ஆன்மாவின் துணைக் கருவியாக ''ஆணவம்'' என்னும் ஆற்றல் மிகுந்த பாதுகாப்புக் கருவியை ஆன்மாவின் துணைக்காக,துணைக்கருவியாக சேர்த்தும் அனுப்பி வைத்துள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்.அருள் உடம்பு என்னும் ஒளி உடம்பு பெற்றவுடன் ஆணவம் என்னும் துணைக்கருவி விலகி விடும் என்பதையும் அறிந்து கொண்டேன் .

திருஅருட்பாவின் வாயிலாக தெரிந்து கொண்டேன்.!

நான் பஞ்ச பூத உலகின் சுற்றுலா பயணியாக வந்தேன் தாவரங்களாக,ஊர்வனவாக,பரப்பனவாக,நடப்பவனாக,அசுரராக,தேவர்களாகஇறுதியில் மனிதனாக ஆக ஏழு வகையான பிறவிகளை எடுத்து வாழ்ந்து வந்துள்ளேன் ஒவ்வொரு பிறப்புக்கும் ஏழு பிறவிகளாக பிறந்து வாழ்ந்து  கடந்து வந்த பிறவிகளின் கணக்கைப் பார்த்தால் நூறு கோடி ஆண்டுகள் ஆகின்றன.

மனிதனாக பிறந்து,வளர்ந்து, வாழ்ந்து சலிப்பு உண்டாகி இந்த பஞ்ச பூத உலகை விட்டு,என் சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் முடியவில்லை.காரணம் இந்த உலகை ஆட்சி செய்யும் மாயை,மாமாயை,பெருமாயை என்னும் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டுமாம்.எப்படி அனுமதி பெற வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.என்னுடனே என்னைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கும் ஆணவத்திடம் கேட்டால் எனக்குத் தெரியாது, உன்னைப் பாதுகாப்பது மட்டும்தான் என்னுடைய வேலை.நீ எங்கு சென்றாலும் நான் உன்னுடனேயே இருப்பேன் வேறு எதுவும் எனக்குத் தெரியாது.என்று சொல்லிவிட்டது .

இந்த பஞ்ச பூத உலகில் இன்பம் துன்பம் என்னும் அனைத்து காரண காரியங்களையும் பற்றுக் கொண்டு அனுபவித்து விட்டேன்,என்னுடைய ஆசைகள் என்னும் அறம்,பொருள்,இன்பம் அனைத்தும் பூர்த்தியாகி விட்டது. இனிமேலும் இங்கு இருக்க எனக்கு விருப்பம் இல்லை .என் தந்தையைப் பார்க்க வேண்டும். என்னுடைய உண்மையான சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டும்,என்ன செயவதென்றே தெரியவில்லை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் ஆயிற்றே,நான் எங்கு செல்வேன் யாரைக் கேட்பேன்.யாரைத் துணைக்கொள்வேன் யாருக்கு என் குறையை எடுத்து உரைப்பேன், யார் எனக்கு சரியான வழியைக் காட்டுவார்கள், அருளைப் பெரும் உண்மையான வழியை யார் சொல்வார்கள் எப்படிப் பெறுவது.எப்போது பெறுவது,எப்போது என்னுடைய் சொந்த வீட்டிற்கு செல்வது.எப்போது என்னுடைய தந்தையைப் பார்ப்பது.எப்போது நான் பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வது.  என்பதை நினைந்து, தீராத வேதனையுடன்,வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டே இருந்தேன்.

சமயங்கள் மதங்கள் !

நம் உலகில் உள்ள சைவம்,வைணவம் ,சமணம், பவுத்தம், கிருத்துவம், இஸ்லாம் ,முதலாகப் பல பெயர கொண்டு பலப்பட விரிந்த அளவிறந்த சமயங்களும் .அச்சமயங்களில் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும், கதிகளும், தத்துவ சித்தி விகற்ப பேதங்கள் என்றும்,அவ்வச் சமயங்களில் பலப்பட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள், சாத்திரங்கள் ,புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,வேதாந்தம்,சித்தாந்தம் ,முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் அனைத்தும் உண்மைகளை உண்மையாக  உரைக்கவில்லை என்பதை சத்திய அறிவால் அறிந்து கொண்டேன்.

வள்ளலார் தோற்றுவித்த மார்க்கங்கள் !

வள்ளலார் தோற்றி வைத்துள்ள உண்மைப் பொது நெறியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்''வழியாகச் சென்று  அவர் எழுதி வைத்துள்ள அருள் நூலான ''திரு அருட்பா "'என்னும் உண்மை வாசகத்தால் அத்திரு வார்த்தைகளால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப் பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டும் என்ற தீராத ஆவல் கொண்டு,என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.மேலும் சமய மதங்களும் அவற்றில் விரிந்த கொள்கைகளும் ,சுத்த சன்மார்க்கத்தின் லேச சித்தி பேதங்கள் என்றும் உணர்ந்த படியால் அவற்றில் பற்று வைக்காமல் விலகி ''வள்ளல்பெருமான்'' காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் பற்று வைத்து வாழ்ந்து கொண்டு உள்ளேன்.
  
மேலும் ;--இந்த உலகில் தோன்றிய  பல பல சமயங்களும்,மதங்களும் மார்க்கங்களும். ஆன்மாக்களுக்கு பல பல பொய்யான வழிகளை காட்டி உள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, ஒவ்வொரு மதங்களையும் சமயங்களையும்,மார்க்கங்களையும் பற்றி தெரிந்து கொள்ள  அவ்விடங்களுக்கு சென்றேன்,அவைகள் தெளிவான நேர் வழியைக் காட்டவில்லை அவர்கள் காட்டிய வழிகள் எல்லாம் சூதாகவே இருந்தது.,உண்மைக்கு புறம்பான குறுக்கு வழிகளையே  சொல்லி  இருந்தது, உண்மையான வழியை அவர்களால் காட்டமுடியவில்லை,அவர்கள் காட்டிய பாதைகள் கரடு முரடான பாதைகளாக இருந்தன என்பதை அறிந்தேன்..அவர்களது மார்க்கங்கள் யாவும் துன்மார்க்க மாகவே இருந்தது.அங்கே சுத்த சன்மார்க்கம் இல்லை,சுத்த சன்மார்க்கம் அறிந்த பெரியோரும் இல்லை  என்பதை அறிந்து கொண்டேன்.

ஞானிகள் சொல்லியது !

எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும்,தோற்றுவித்தும். இயக்குவித்தும்,அடக்குவித்தும்,மயக்குவித்தும்,தெளிவித்தலுமாகிய ஐந்து தொழில்களை எளிதில் ஆண்டவர் இடத்தில் பெற்றுக் கொண்டு,தொழில் நடத்திக் கொண்டு இருக்கும்,ஷ்டாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்திவல்லப தரத்தை அறிந்து அவர்களிடம் சென்று உண்மை உரைத்தல் வேண்டும் என்று கேட்டேன்.

அவர்கள் அந்த உண்மையைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது...வார்த்தைகள் அளித்தல் இன்றி மவுனம் காத்து, பெருங் கருணைத் திருக் கண்களில் ஆனந்த நீர் பொழிந்து சும்மா இருக்கின்றோம்.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் யார்? அவர் எங்கு இருந்து செய்லபடுகிறார்? அவர் பல கோடி அண்டங்களையும் தன்னிடத்தே வைத்துக் கொண்டு,எப்படி இயக்கி இயங்கிக் கொண்டு உள்ளார் என்பது எங்களுக்குத் தெரிவில்லை,என்று அந்த ஞானிகள் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுது புலம்பிக் கொண்டு,பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டே உள்ளார்கள் என்பதை, அறிந்து கொண்டேன்.மேலும் அவர்களுக்கு கடவுளின் உண்மையான சமூகமும்,அவர் இருப்பிடமும்,இடமும் அவருடையப் தனித்தன்மை உருவமும் ,அந்த உருவத்திற்கு என்ன பெயர் என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை என்பதை  மூலமாக அறிந்து கொண்டேன்.அவர்களால் சொல்ல முடியவில்லை.

மேலும் அவர்கள் என்ன சொல்கிறார்கள்

இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாகிய கடவுளின் உண்மைத்தரம், அவரின் உண்மைத் தன்மை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.அவருடைய அருட் கருணையால் நாங்கள் தொழில் நடத்திக் கொண்டு உள்ளோம். இருப்பினும் அவருடைய் பெருங்கருணை பெரும் புகழை அறிந்து கொள்ள ஆசைப்பட்டோம் ,அவருடைய சமூகத்தின் வெளித் தோற்றம்  மட்டும் தெரிந்தது. அவருடைய சமூகம் என்பது அகண்ட பெருவெளித் தோற்றமாக உள்ளது. மேலும் அதன் வெளித் தோற்றம் மட்டும் தெரிகிறது. அதன் உள் தோற்றம்,அதன் உள்ளே என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. அதை சொலவதற்கு வார்த்தைகள் கிடையாது,அவ்வளவு பிரமாண்டமாக,செல்ல செல்ல,விரிந்து கொண்டே உள்ளது,அதன் அடி நடு.முடி என்னும் ஆதியும்,நடுவும்,அந்தமும் என்னவென்றே தெரியவில்லை, என்னும் குறிப்பை வெளிப் படுத்து கிறார்கள்.

நாங்கள் சிறிய தேக கரணங்களால் சிறிய முயற்சி செய்து அற்ப சித்திகளைப் பெற்று தொழில் செய்து கொண்டு உள்ளோம்.எங்களுக்குத  தொழில் செய்யும் காலம் முடிந்தவுடன் நாங்கள்,மேலே செல்ல முடியாமல் மீண்டும் கீழே வந்து மனிதப் பிறப்பு எடுத்து,பூரண அருள் சித்தியைப் பெற்றுதான்  மேலே செல்ல முடியுமே தவிர,இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு மேலே செல்ல முடியாது,என்று அவர்களே சொல்லி அழுது கொண்டு உள்ளார்கள்.அவர்களைப் பின்பற்றி எந்த பயனும் இல்லை என்பதை அறிந்து கொண்டேன்.

அவர்கள் சொல்வதைப் பாடல் வாயிலாக வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் !

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீத மேனிலையில்
சித்தியியல் முழுதும் தெரிந்தன அவைமேற்
சிவநிலை தெரிந்திடச் சென்றோம்
ஒத்த அந்நிலைக்கண் யாமும் எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்து போயின என்று
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்றோங்கும்
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !

என்றும்

ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
திகழ்ந்திடும் ஆண் அதோ அதுவோ
யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
உரைப்ப தெற்றோ என உணர்ந்தோர்
ஆகமோடு உரைத்து வழுத்த நின்றோங்கும்
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !

என அதன் உண்மை தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டு உள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

மேலும் சமய வாதிகளின் பொய்யான செய்திகள்.!

பஞ்ச பூத உலகத்திற்கும் மேலே ஒரு உலகம் உள்ளது, அதற்கு சொர்க்கம் ,வைகுண்டம்,கைலாயம்,பரலோகம், பரந்தாமம்,என்று பல பெயர் வைத்து உள்ளார்கள் அங்குதான் நமது தந்தையான  சிவபெருமான வீடு இருக்கிறது, நாம் சிவபெருமானை தினமும் வணங்கி தோத்திரம் செய்து வழிபட்டுக் கொண்டு வந்தால்,இறுதியில் நமக்கு மரணம் வந்து விடும், மரணம் வந்தால் உடம்பை விட்டு ஆன்மா மட்டும் அங்கு சென்றுவிடும்.அங்கு சென்றால்ஆன்மா வீடுபேறு அதாவது முக்தி அடைந்து விடும்.மறுபடியும் மீண்டும்  நமக்குப் பிறப்பு இல்லை,அதுவே பேரின்பமாகும். நமது உண்மையான சிவபெருமான் என்னும் தந்தையிடம் அடைக்கலம் ஆகிவிடலாம் என்று பொய்யான கற்பனைக் கதைகளை கற்பித்து வைத்து விட்டார்கள் .

அதையும் நம்பி ஏமாந்து,அறியாமையில் உள்ள மனிதர்கள், மூடத்தனமான பக்தியில் சென்று, பலப்பல வழிபாடுகள் செய்தும்,பலப்பல விரதங்களை கடைபிடித்தும்,பலப்பல தியானம்,தவம்,யோகம்,ஞானம் போன்ற செயல்களில் ஈடுபட்டும்  முயற்சி செய்தும், முயற்ச்சி பலன் அளிக்காமல்  இறுதியில் மரணம் வந்து விடுகிறது. உடம்பையும் உயிரையையும் விட்டு ஆன்மா எங்கு செல்கிறது என்று பார்த்தால் மறுபடியும் அதன் அதன்
செயல்பாட்டு வினைக்குத் தகுந்தாற் போல் கன்மம் (கர்மம் ) என்னும் வினைகள் ஆன்மாவில் பதிவாகி  பதிவிற்குத் தகுந்தாற் போல் வேறு வேறு உயிரும் உடம்பும் எடுத்து,இதே உலகத்தில் மீண்டும் பிறந்து பிறந்து,இறந்து இறந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறது என்பது சமய மத வாதிகளுக்குத் தெரியவில்லை.

சமயவாதிகள் மதவாதிகள் சொல்லியபடி சொர்க்கம் ,நரகம்,கைலாயம் வைகுண்டம்,பரலோகம்,பரந்தாமம் போன்ற இடங்கள் இருக்கின்றன், என்ற நம்பிக்கைக்  கொண்டு அங்கு சென்று பார்த்தால்,அங்கு ஒன்றுமே இல்லை,.அந்த இடம் பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் தான் உள்ளது. அங்கு வெற்று இடமாகத்தான் உள்ளன அங்கு அமைதி மட்டும்தான் உள்ளது அங்கே கடவுளும் இல்லை,ஆன்மாவும் இல்லை. வேறு யாரும் அங்கு இல்லை,எங்கு பார்த்தாலும் அணுக்களின் கூட்டமாகவே உள்ளன .இவைகள் யாவும்  அண்டத்தின் உள்ளே நடக்கும் செயல்களாகும்.கடவுளின் அருளைப் பெறாமல் அண்டத்தை விட்டு வெளியே எவராலும் செல்ல முடியாது.அப்படி செலவதாக சொல்வது எல்லாம் சுத்த பொய் என்பதை அறிந்து கொண்டேன்.

மேலும் அண்டத்தின் வெளியே சென்ற ஞானிகள்,;--ஒரு அண்டத்திற்கும் மற்றும் உள்ள வேறு வேறு அண்டத்திற்கும் இடைவெளி  பலகோடி மைல்கள் உள்ளன.அங்கு சில ஆன்மாக்கள் சென்று உள்ளன.அங்கு பஞ்ச பூத அணுக்கள் கிடையாது.அங்கு அருள் என்னும் சிறிய சக்தி செயல் பட்டுக் கொண்டு உள்ளன்.அங்கு சென்ற ஆன்மாக்கள் உண்ணாமல் உறங்காமல்,செயல்படாமல்,பேச்சு இல்லாமல்,எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக அங்கே இருந்து கொண்டு உள்ளன .

அங்கு உள்ள ஆன்மாக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து மனிதபிறப்பு எடுத்து ,உண்மையை அறிந்து பூரண அருளைப் பெற்று, மனித பூத உடம்பை அகற்றி ''உயிர் இல்லாத'' அருள் உடம்பு என்னும் ஒளி உடம்பாக மாற்றினால்தான் உண்மையான ஆண்டவர் இல்லத்திற்கு (சமூகம்) செல்ல முடியும் என்பது அவர்களுக்கும் தெரியவில்லை.அந்த உண்மையை   அவர்களால் அறிந்து கொள்ளவும் முடியவில்லை.அவர்களும் மீண்டும் இந்த உலகத்திற்கு வந்தே தீர வேண்டும் என்பதையும் அவர்கள் மூலமாகவே அறிந்து கொண்டேன்.

வள்ளலார் வருகை !

ஆன்மாவாகிய நான் உண்மை தெரியாமல்,மனித வாழ்க்கையின் லஷ்ணம்,லஷ்யம் தெரியாமல், நிலை தடுமாறி ஒன்றும் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் எனக்கு ஓர் உண்மை தெரிந்தது.

இந்த உலகில் மனிதனாக பிறந்து, மனிதனாக வாழ்ந்து இறைவனுடைய பூரண அருளைப் பெற்று, மரணத்தை வென்று,பின் கடவுள் நிலை அறிந்து அம்மயமான மாபெரும் அருளாளர் ''திருஅருட்பிரகாச வள்ளலார்'' என்னும் பெயருடைய ஒருவர்,வாழ்ந்து வழி காட்டி உள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்.அவர் அடைந்த அனுபவித்த அருள் உண்மையை, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய,ஒப்பற்ற அருளாளர் ''திரு அருட்பிரகாசர்'' என்னும்  ''வள்ளலார்'' அவர்கள் எழுதிய ''திரு அருட்பா''என்னும் அருள் நூல் ஒரு பெரியவர் வழியாக எனக்கு கிடைத்தது .அதைப் பெற்று படிக்கத் தொடங்கினேன்.

அதில் உள்ள தெளிவான முதல் ஐந்து திருமுறைகள் அடங்கிய, உண்மைத் தோத்திரப் பாடல்களும் ,மற்றும் உரைநடைப் பகுதிகளும்,வசனங்கள்,உபதேசங்கள் அடங்கிய வாக்கியங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்துப் பார்த்தேன்,அதற்கும் மேலாக ''ஆறாம் திருமுறை'' என்னும் அருள் அறிவு நூல் கிடைக்கப் பெற்றேன்.அதில் உண்மைக் கடவுளான ''அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும்  ''கடவுளும் வள்ளலாரும்''எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அதில் உள்ள உண்மைகள் யாவும் அறிந்து கொண்டேன்,ஒவ்வொரு எழுத்துக்களிலும் ஆண்டவரும் வள்ளலாரும்  இருப்பதை தெரிந்து கொண்டேன். பின் அவர் காட்டிய பாதையில் வாழத் தொடங்கி உள்ளேன்.நான் எப்படி வாழ்கிறேன் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் முதலில் ஜீவ காருண்யம் என்னும் உரைநடைப் பகுதியைப் படித்தேன்.அதில் அகம் என்னும் ஆன்மா ,அகப்புறம் என்னும் ஜீவன் (உயிர்) புறம் என்னும் காரணங்களான மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,மற்றும் புறப்புறம் என்னும் ஐம்பொறிகளான இந்திரியங்கள்,அவைகள் செயல்படும் செயல்பாடுகள் எல்லாம் அறிந்து கொண்டேன்.

அகம் என்னும் ஆன்ம ஒளி வாழ்வதற்கு,உயிர்,கரணங்கள் இந்திரியங்கள் என்னும் பஞ்ச பூதக் கருவிகளைக் கொண்டு உடம்பை உருவாக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன் .இந்த உடம்பை உருவாக்கும் திறன் படைத்தவர்கள் யார் என்பதை அறியத் தொடங்கினேன்.

சிருட்டி ஞாயம் !

ஆகாசம் அனாதி,அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அநாதி.அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி.அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ அப்படிக் கடவுள் இடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது.ஆகாயத்தில் அணுக்கள் ,நீக்கமற நிரம்பி இருக்கின்றன.அது போல் கடவுள் சமூகத்தில்....ஆன்ம ஆகாயம் ஒன்று இருக்கின்றது.அந்த ஆன்ம ஆகாசத்தில்..முன்று விதமான ஆன்ம அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன்.அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர் .

நாம் வாழும் பூத ஆகாயத்தில் இருக்கும்,சாதாரண அசாதாரண அணுக்கள் ஏழு வகையாகயாய்ப் பிரியும்...அவை யாவன  என்றால் ..வாலணு ,..திரவணு,..குருவணு,...லகுவணு,..அணு ,..பரமாணு ,..விபுவணு,..
என்பனவாகும்...மேற்படி அணுக்கள் அனந்த வண்ண பேதமாய் இருக்கும்.

இவற்றில் காரிய அணு ,..காரிய காரண அணு ...காரண அணு ,..என மூன்று வகையாய் இருக்கும்.அவை பக்குவஅணு  ,அபக்குவஅணு ,பக்குவா பக்குவ அணு  என நிற்கும்.
அவைப் போல் ஆன்மா ஆகாயமான கடவுள் சமூகத்தில்,ஆன்மாக்களும்
மூவகையாய் நிற்கும்...அவை யாவை எனில் ..பக்குவ ஆன்மா ..அபக்குவ ஆன்மா,..பக்குவாபக்குவ ஆன்மா என மூவகைப்படும்.

ஆகாயத்தில் அணுக்கள் மூவிதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றே யாம்.அதேபோல் ஆன்மாக்கள் மூவிதமானதற்கு காரணம் கடவுள் சமூகத்தில் உள்ள அருட்சத்தியே யாம்.என்ற உண்மையை அறிந்து கொண்டேன்.நான் எங்கு இருந்து வந்தேன் என்ற உண்மையும் அறிந்து கொண்டேன்.    

இந்த அண்டத்தை படைத்த இறைவன், தன்னுடைய சமூகத்தில் உள்ள ஆன்மாகாசமான இடத்தில் இருந்து ஆன்மாக்களை அனுப்பி வைத்தால் அவைகளுக்கு உயிரும் உடம்பும் கொடுத்து பாது காக்க வேண்டியப் பொறுப்புகளை முன்று பேரிடம் கொடுக்கப் பட்டுள்ளது. அண்டத்தையும்,அண்டத்தில் உள்ள கருவிகளையும்,ஏழு விதமான அணுக்களையும், அண்டத்தில் வாழும் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மிக்க அதிகாரங்களை அவர்கள் இடத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.அவர்களை மீறி அவர்களுக்குத் தெரியாமல் எந்த ஒரு சிறு துகள்களும்,அண்டத்தை விட்டு வெளியே செல்லமுடியாது.என்பதை என்னுடைய அறிவால் அறிந்து கொண்டேன்.

கடவுளின் அனுமதியோடு கடவுளின் ஆணையை ஏற்று அவர் படைத்துள்ள சட்டதிட்டங்கள் மாறாமல் நிர்வாகம் செய்பவர்கள் தான்   மாயை,மாமாயை,பெருமாயை என்னும் மூன்று விதமான  நிர்வாக அதிகாரிகளாகும். அவர்கள் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுதான் மனிதன் என்னும் உடம்பாகும்,அந்த வீட்டில் குடியிருக்க வேண்டுமானால் தினமும் வாடகைக் கொடுக்க வேண்டும்.அந்த வாடகை தான் உணவு என்பதாகும்.உணவு இல்லாமல் இந்த உலகத்தில் ஆன்மா செயல்பட முடியாது,அந்த உணவுக்கு பெயர் பொருள் உணவு என்பதாகும்..பொருள் உணவு உண்ணுகின்ற வரை இந்த அண்டம் என்னும் உலகத்தை விட்டு ஆன்மா வெளியே செல்லமுடியாது.

அருள் உணவு என்பது ஒன்று உண்டு,அவை இந்த உலகத்தில் எவராலும் கொடுக்க முடியாது. அந்த அருள், இயற்கை உண்மை என்னும்,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் மட்டுமே கொடுக்க முடியும். இந்த உலகத்தில் வாழும்  ஆன்மா என்னும் அணு ஒளி உண்மையான இறைவன யார் ?(தந்தை ) என்பதை அறிந்து,தெரிந்து உணர்ந்து அவருடன் உண்மையான அன்பு கொண்டு கருணை மேலீட்டால் மட்டுமே பெற முடியும் என்பதையும் அறிந்து கொண்டேன்.அந்த அன்பையும் கருணையும் எவ்வாறு பெற முடியும் என்று அறியத் தொடங்கிய தருணத்தே .

எல்லாம் வல்ல தனித்தலைமைப் பதியாகிய
அருட்பெருஞ் ஜோதி  ஆண்டவரே !

இவ்வுலகத்தின் இடத்தே உயர்ந்த அறிவுள்ள உயர்வுடைத்தாகிய தேகத்தைப் பெற்ற யான்,இத்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு ,எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே ;--எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்சி இங்கனமாக,அவத்தைகள் எல்லாவற்றையும் நீக்கி இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி ,எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் ..எதனால் பெறுதல் கூடும் என்று அறியத் தொடங்கிய தருணத்தே ;--

வேறு எந்த வழியாலும்பெறுதல் கூடாது.எல்லாம் வல்ல கடவுளது ''திருவருள் ''சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

பின்னர் திருவருட் சுதந்திரம் எனக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்தே --

எனது யான் என்னும் தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம்,என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று ''தேவரீர் திருவருளால் அறிவிக்க''உள்ளபடி அறிந்தேன்.ஆதலில் எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும் ,போக சுதந்தரத்தையும்,ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாக கொடுத்து விட்டேன்

கொடுத்த தருணத்தே இத்தேகமும் ,ஜீவனும்,போகப் பொருள்களும் ,சர்வ சுதந்தரராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப் பெற்றனம் அன்றி ,எனது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அருளால் அறிவிக்கவும் அறிந்து கொண்டேன்.இனிமேல் இத்தேகத்தின் இடத்தும் போகப் பொருகள் இடத்தும்,தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்ற மாட்டாது.ஆதலால் ஒரு விண்ணப்பம்.

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி ,மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி ,எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெரு வாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும். இத்தேகத்தைப் பெற்ற எல்லா ஜீவ ஆன்மாக்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் உரிமை உடையவர்ளாக்கி வாழ்வித்தல் வேண்டும் என்னும் உண்மையை வள்ளல் பெருமான் அருளிய உபதேசத்தால் அறிந்து கொண்டேன்..          

ஆன்மாவுக்கு மூன்று சுதந்திரம் என்னும் உரிமையை இறைவனால்  கொடுக்கப்பட்டு உள்ளது,அவைகள் தேக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம்,போக சுதந்திரம் என்பவைகளாகும் இந்த உரிமையைப் பெற்றுள்ள ஆன்மா இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம்,நல்லதும் செய்யலாம் கெடுதலும் செய்யலாம் அந்த உரிமை ஆன்மாவிற்கு வழங்கப் பட்டு உள்ளன், ஆனால் அவை மற்ற ஜீவன்களை,அதாவது உயிர்களை, பாதிக்குமானால் அவை எதிர் வினையாக மாறி துன்பத்தை உண்டு பண்ணும்,ஜீவன்களை பாதிக்காமல் செய்யப்படும் செயல்கள் நல்ல வினையாக மாறி இன்பத்தை உண்டு பண்ணும்,

இதைத்தான் நன்றும் தீதும் பிறர்தர வாராது என்பார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.அவைகள் தான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் என்பதாகும். இந்த மாபெரும் உண்மையை வள்ளல் பெருமான அவர்கள்.எழுதிய திருட்பா வாயிலாக அறிந்து கொண்டேன்.இந்த உண்மையை மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவரும்,அறிவின் வழியாக அறிந்து கொள்ள வேண்டும்.நானும் அறிந்து கொண்டேன்.

ஆன்மா !அறிவு !மனம் ! புத்தி !

நம் உடம்பில் நான்கு பிரிவுகள் உள்ளன,அகம் ,அகப்புறம்,புறம் புறப்புறம் என்பனவாகும்.அதில் அகம் அகப்புறம்  என்னும் இரண்டும் சேர்ந்தது ஒரு பிரிவு,புறம் புறப்புறம் என்ற இரண்டும் சேர்ந்தது ஒரு பிரிவாகும்.

அறிவு என்பது அகம் என்னும் ஆன்மாவில் தோன்றுவது,அதுதான் பகுத்தறிவு என்பதாகும் அதாவது உண்மை அறிவாகும் .

புத்தி என்பது புறம் என்னும் மனத்தினால் தோன்றுவது,மனத்தினால் அறிவது அனைத்தும் பொய்யான செய்திகளாகும் செயல்களாகும்..

ஆன்மாவின் சொல்படி அறிவு கேட்கும்...மனத்தின் சொல்படி புத்தி கேட்கும்.

அறிவு வழியாக சென்றால் உண்மையான வழியைக் காட்டும் ,

புத்தி வழியாக சென்றால் நன்மைபோல் தோன்றி துன்பமான பொய வழியைக் காட்டும்.

ஆதலால் புத்தி வழியாக செயல்படாமல் அறிவு வழியாக செயல்பட வேண்டும்.அறிவு வழியாக செயல்பட்டால் உயிரையும் உடம்பையும் காப்பாற்றும் அருள் என்னும் அமுதம் சுரக்கும்.

மனம் சொல்லும் புத்தி வழியாக செயல்பட்டால் அளவில்லா பொருள் கிடைக்கும்,பொருளால் உயிரும் உடம்பும் சீக்கிரம் அழிந்து விடும்.மீண்டும் வினைப்பயனுக்குத் தகுந்த பிறப்பு கிடைக்கும்..

அதனால்தான் அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை,பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார்கள்.

அருள் உள்ள இடத்தில் அழிவில்லாத அனைத்தும் கிடைக்கும்,பொருள் உள்ள இடத்தில்,அழிவில்லாத அருள் என்னும் அமிர்தம் என்றுமே கிடைக்காது

பொருளைத் தேடும் உலகில் அருளைத் தேடுபவனே மனிதன்.

இறைவன் தமக்கு கொடுத்த சுதந்தரத்தை அருளைத் தேடுவதற்கு மட்டுமே பயன் படுத்தியவர் வள்ளல் பெருமான் ஒருவரே !என்பதை அவர் எழுதிய அருட்பா வாயிலாக அறிந்து தெரிந்து புரிந்து கொண்டேன்.

நாம் பலகோடி பிறவிகள் எடுத்து,இறுதியாக உயர்ந்த அறிவுள்ள இந்த மனித பிறப்பு கிடைத்துள்ளது.இந்த பிறவி சாதாரணமாக கிடைக்கவில்லை.பல கோடி பிறவிகள் எடுத்து  மற்ற ஜீவன்களுக்கு நன்மையை செய்து நன்மையால் கிடைத்த உயர்ந்த பதவி என்னும் மனிதப் பிறப்பாகும். அதனால் தான் உயர்ந்த அறிவுள்ள மனிதப் பிறப்பு என்கிறார் வள்ளலார்.

மனிதப் பிறப்பு கொடுத்ததின் நோக்கம்,ஆன்மாவாகிய நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தை என்பதை அறிந்து அருட்பெருஞ்ஜோதி சமூகமான சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே ஆன்மாவின் உண்மையான குறிக்கோளாகும் இதுவே ஆண்டவரின் கட்டளையாகும் சட்டமாகும். சட்டத்தை மீறினால் கீழ்நிலைப் பிறவிக்குத் தள்ளப்படும்.அதற்குத் தண்டனை தேகங்கள் என்று பெயராகும்.தண்டனை தேகங்களுக்கு துன்பங்கள் சூழ்ந்து கொண்டே இருக்கும்.அதில் இருந்து தப்பித்து மீண்டும் மனித தேகம் கிடைப்பதற்கு பலகோடி ஆண்டுகள் தேவைப்படும்.

ஆதலால் பிறந்த இப்பிறப்பில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று,நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்து விரைந்து வாருங்கள் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அன்பு ,தயவு,கருணைக் கொண்டு அழைக்கின்றார் .அவர் காட்டிய உரிமையும் அன்பையும் ஏற்றுக் கொண்டு அவர்காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் வாழ்ந்து கொண்டு வருகிறேன்.

வள்ளலார் தோற்றுவித்துள்ள அமைப்புகள்

தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் வடலூர் என்னும் ஊரில் அவர் தோற்றி வைத்துள்ள அமைப்புகள்,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

என்பதாகும்.

அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி சித்திப் பெற்ற இடம்,வடலூருக்கு அடுத்த் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக் குப்பம் என்னும் சிற்றூராகும்.அந்த இடம்   ''சித்தி வளாகத் திருமாளிகை'' என்னும் பெயருடன் விளங்கிக் கொண்டு உள்ளது.        

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கைகள் !

சாதி ,சமயம்,மதம்,நாடு,இனம் ஜீவன்கள் போன்ற வேறுபாடுகள் இல்லாத  எல்லா உலகத்திற்கும் பொது நெறியாகிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமான உண்மைப் பொது நெறியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வள்ளல் பெருமான் உடல் பொருள் ஆவியைக் கொண்டு பெருங் கருணையுடன் தோற்றுவிக்கப் பட்டது தான் உயர்ந்த சுத்த சன்மாக்க திருநெறியாகும்.அந்த சங்கத்தின் வழியாக அவர் மக்களுக்கு போதித்த கொள்கைகள்.


கடவுள் ஒருவரே ! அவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் !
சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது !அத்தெய்வங்கள் பெயரால் உயிர் பலி செய்யக் கூடாது !
புலால் உண்ணக் கூடாது !
சாதி,மதம்,சமயம் முதலிய வேறுபாடுகள் கூடாது !
எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.!
ஏழைகளின் பசி தவித்தலாகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவு கோள் !
புராணங்களும் சாத்திரங்களும்,இதிகாசங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க வில்லை ஆதலால் அவைகளை நம்ப வேண்டாம்.!
இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !
கருமாதி ,திதி முதலிய சடங்குகள் வேண்டாம் !
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.!
மனிதனாக பிறந்தவர்கள் மரணம் அடையக் கூடாது ! 
கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழ வேண்டும் !

மேலே கண்ட கொள்கைகள் படி மனிதனாக பிறந்தவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதை வள்ளலார் வலியுறுத்தி உள்ளார்.   
       
இதனுடைய தொடர்ச்சி நான் ஆன்ம ஒளி என்ற தொடர்ச்சியின் இடண்டாம் பாகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும் .

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.
      

செவ்வாய், 18 ஜூன், 2013

அண்டமும் பிண்டமும் கடவுளும் !

அண்டமும் பிண்டமும் கடவுளும் !

அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள் எல்லாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாங் கொண்ட வெலாங்  கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவுங்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே யெல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளத்திடு மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை
விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே
அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திடக் கண்டாரேல்
அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார் இலையே
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன்
சொன்ன வெளிவரை யேனும் துணித்து அளக்கப் படுமோ !

மேலே சொன்ன பாடல்கள் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள்.!

நாம் வாழும் அண்டம் போல் பல கோடி அண்டங்கள் உள்ளன .அதில் உயிர்கள், உயிர்கள் வாழும் உடம்புகள்,அதற்கு தேவையான பொருள்கள்,அதற்கு உண்டான இடங்கள்,எல்லாம் இடைவெளி இல்லாமல் நிறைந்து கொண்டும் மேலும் மேலும் விரிந்து கொண்டும்,இடம் கொடுத்துக் கொண்டும் சலிப்பு இல்லாமல் கடந்து நின்றே செயல் பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு மெய்ப் பொருள் உண்டு.அது பலகோடி அண்டங்களிலும் பலகோடி வெளிகளில் உள்ள  எல்லா அணுக்களிலும், உள் இருந்து செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றது.அது இயங்கும் இயக்கம் இடமானது  அருள் பெரு வெளியில்,எல்லா அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு செயல்படும் சிற்றம்பலம் என்னும் இடத்தில் எல்லாம் வல்லவராய் ,ஓங்கி இடைவிடாது செயலாற்றிக் கொண்டு இருக்கும் தனிக் கடவுள் ஒருவரே !
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் ஒளிக் கடவுளாகும்.

மேலும் அந்த உண்மைக் கடவுளை அறிந்து கொள்ள,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் போன்ற மறைகளை இயற்றிய அருளாளர்கள் எல்லாம் அவரவர்களுக்கு கிடைத்த  அருளைக் கொண்டு,உண்மையான இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ள நெடுங்காலம் முயற்சி செய்தும்,அளந்தும் அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை,மேலும் அறிவியல்,விஞ்ஞானம்,வேதியல் போன்ற ஆராய்ச்சி யாளர்கள்,அணு ஆராய்ச்சியைக் கொண்டு அளந்து அளந்து பார்த்தும்,அவர்களது அளக்கும் கருவிகள் எல்லாம் தேய்ந்த்தே தவிர ஒருவரும் அளவை கண்டு கொள்ள வில்லை,என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்துகிறார்.நான் சொல்லிய சிறு குறிப்பிட்ட அளவையாவது உங்களால் அறிந்து கொள்ள முடியுமா என்றும் கேட்கின்றார்.

மனிதனாக பிறந்தவர்கள்  மட்டும் அறிந்து கொள்ள முடியும்,அந்த இடத்திற்கு செல்லமுடியும்.வள்ளலாரைப் போல் உலகப் பற்று இல்லாமல் கருணையே வடிவமாக வாழ்ந்தால் இறை உண்மையை அறிந்து கொள்ளலாம்.மரணத்தை வென்றவர்களால் தான் உலக உண்மையை அறிந்துகொள்ள முடியும் .பஞ்ச பூத உடம்பும்,அதனால் உண்டாக்கும் உயிருடன் வாழ்பவர்களுக்கு உண்மை விளங்காது,ஆன்மாவின் தன்மைக்கு தன்னை மாற்றிக் கொண்டு ஒளி உடம்பாக வாழ்பவர்கள் மட்டுமே அந்த இறை ஒளியை,உண்மையைக்  காணமுடியும்.என்கிறார் வள்ளல் பெருமான் அவர்கள்.

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதம் எனக்கு நல்கியதே --வானப்
பொருட் பெருஞ்ஜோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் ஜோதி யது,!

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகிறார் .

ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

சனி, 15 ஜூன், 2013

கடவுள் எங்கே ?

கடவுள் எங்கே ?

நாம் துன்பம் வரும்போது கடவுளைத் தேடுகிறோம்.அந்தக் கடவுள் புறத்தில் உள்ள ஆலயங்களில் மசூதிகளில்,சர்ச்சுகளில் போன்ற இடங்களில் இருபதாக எண்ணி அங்கு சென்று வழிபடுகிறோம் தோத்திரம் செய்கிறோம்.அங்கு கடவுள் இருக்கிறாரா?இல்லையா ?என்பதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை.அங்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதாக எண்ணி முறையிடுகிறோம்.இவை எல்லாம் நாம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளாகும்.அதையே நாம் எதையும் சிந்திக்காமல் பின்பற்றி வருகிறோம்.

நமக்கு நம் உடம்பில் தன்னைத்தானே இயங்கும் ,இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியின் ஆற்றலை சக்தியை நாம் அறிந்து கொள்வதில்லை.அவற்றை அறிந்து கொள்வதற்கு அறிவு என்னும் மிக உயர்ந்த கருவி ஆன்மாவில் பதிய வைக்கப் பட்டு உள்ளது.அது அணு சக்தியாக மின்காந்த அலைகளாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அந்த அறிவு என்னும் அணு ஆற்றலை, மனம் என்னும் புறக்கருவி உள்ளே தொடர்பு கொள்ளாமல்,வெளியே தொடர்பு கொண்டு உள்ளன் .மனதை வெளியே தொடர்பு கொள்ளாமல்.ஆன்மா என்னும் உள் ஒளியை தொடர்பு கொண்டால் அறிவு என்னும் அணு ஆற்றல் உண்மையான கடவுள் யார் என்பதை தெளிவுப் படுத்தும்.

ஆதலால் புறத்திலே கடவுளைத் தேடாமல் அகத்திலே உள்ள ஆன்மா என்னும் ஒளியைத் தொடர்பு கொண்டால் ,அவை துன்பங்களை தீர்க்கும் வழியைக் காட்டுவிடும்.அகத்திலே உள்ள ஆன்மாதான் கடவுளின் துகளாகும் .அதை அறிந்து கொள்ள அறிவு என்னும் கருவியைப் பயன்படுத்த வேண்டும்.அந்த அறிவின் வழியாக ஆன்மாவை அறிந்து அதில் உள்ள அருளைப் பெற்றால் துன்பங்கள் யாவும் தொலைந்து விடும்.

வள்ளலார் பதிவு செய்துள்ளதைப் பாருங்கள்.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு 
அனுபவம் ஆகின்றது என்னடித்தாயே 
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் 
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு 
அனுபவம் ஆகின்றது என்னடித்தாயே 
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் 
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே.

என்பதை மிகத்தெளிவாக மக்களுக்கு போதித்து உள்ளார்.புறத்தில் பேசாத இயங்கத சிலைகளில் கடவுள் இல்லை .எல்லா உயிர்களிலும் கடவுள் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் .அதலால் உயிர்களை நேசித்தால் கருணை புரிந்தால் அந்த உயிர்களின் உள் இருக்கும் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் .அந்த உயிர்களின் மகிழ்ச்சி அணு ஆற்றலாக வெளியே வந்து ,கருணை செயதவர்களின் அறிவையும் ஆன்மாவையும் திறக்கும் .அதுவே கடவுள் கடவுள் வழிபாடாகும்.அதிவே நமது துன்பத்தைப் போக்கும் சிறந்த வழியாகும்.

ஆன்மநேயன்.கதிர்வேலு.