வியாழன், 28 மார்ச், 2013

அண்டமும் ! பிண்டமும்.! அமுதக் காற்றும் ! விஷக் காற்றும்.!


அண்டமும் ! பிண்டமும்.!
அமுதக் காற்றும் ! விஷக் காற்றும்.!

உலகம் என்னும் அண்டம் 

இந்த உலகத்தில் அண்டம் ,பிண்டம் எனற இருவகையாக பிரிக்கப்படுகின்றது .அண்டம் என்பது கடவுள் இருக்கும் இடம் .பிண்டம் என்பது உயிர்கள் இருக்கும் இடமாகும்.அண்டம் என்பது வெற்று இடம் ,பிண்டம் என்பது பஞ்ச 
பூதங்கள் சேர்ந்த இடம்.அதாவது உயிர்கள் வாழுவதற்கு கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பு என்னும் வீடாகும்..

அண்டம் !

அண்டத்தில் நான்கு இடத்தில் கடவுள் பிரகாசம் உள்ளது .அதாவது அகம்,அகப்புறம்,,புறம், புறப்புறம்,என்பதாகும் .இவை காரணத்தால் உள்ள இடமாகும்.அதாவது,அண்டத்தில் அகம் என்பது அக்கினி,... அகப்புறம் என்பது சூரியன் ....புறம் என்பது சந்திரன் ....புறப்புறம் என்பது நட்சத்திரங்கள்.இவை நான்கு இடத்திலும் கடவுள் பிரகாசம் காரணத்தால் உள்ளது.

பிண்டம் !

அதேபோல் பிண்டத்தில் நான்கு இடத்தில் கடவுள் பிரகாசம் காரியத்தால் உள்ளது.அதாவது ,பிண்டத்தில் அகம் என்பது ஆன்மா ...அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர்,...புறம் என்பது கரணங்கள் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்பதாகும்....புறப்புறம் என்பது இந்திரியங்கள் என்னும் கண்,காது,மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பு.,இவை நான்கு இடத்திலும் கடவுள் பிரகாசம்,காரியத்தால் உள்ளது.  

இதில் காரணம் ,காரியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.காரணம் என்பது இறைவனால் அமைக்கப் பட்டது ,காரியம் என்பது அவற்றின் வழியாக செயல்படுவது.ஆதலால் காரணம் இல்லாமல் காரியம் நடைபெறாது. 

பிண்டத்தில் உள்ள அகம் என்னும் ஆன்மா ,ஒரு பொருளின் உண்மையை அறிதலாகும் அதற்கு ஆன்ம அறிவு என்பதாகும்.

அகப்புறம் என்னும் ஜீவன் என்னும் உயிர் ஒரு பொருளின் பிரயோசனத்தை அறிதலாகும் அதற்கு ஜீவ அறிவு என்பதாகும்.

புறம் என்னும் மனம் முதலிய கரணங்கள்,-- ஒரு பொருளின் நாம ரூபத்தையும் குணம் குற்றங்களையும் விசாரித்து அறிதலாகும் அதற்கு கரண அறிவு என்பதாகும்.

புறப்புறம் என்னும் கண் முதலிய இந்திரியங்கள் ,ஒரு பொருளினது நாம ரூபத்தையும் குணம் குற்றங்களையும் விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் ,அதற்கு இந்திரிய அறிவு என்பதாகும்.

அதேபோல் ஆன்மாவால் காண்பது ஆன்ம காட்சி என்றும் ,ஜீவனால் அறிவது ஜீவ காட்சி என்றும் ,கரணங்களால் காண்பது கரணக் காட்சி என்றும்.இந்திரியங்களால் காண்பது இந்திரியக் காட்சி என்றும் வள்ளலார் தெளிவுப் படுத்துகிறார் .

கடவுள் காரியப்படும் இடங்கள் !

மேலே சொன்ன அண்டத்தில்,,,, அகம் என்னும் அக்கினி,அகப்புறம் என்னும் சூரியன்,புறம் என்னும் சந்திரன,புறப்புறம் என்னும் நட்சத்திரங்கள் நான்கு இடத்திலும் .. பிண்டத்தில் உள்ள அகம் என்னும் ஆன்மா ..அகப்புறம் என்னும் ஜீவன் ..புறம் என்னும் கரணங்கள் ...புறப்புறம் என்னும் இந்திரியங்கள் ,நான்கும், ஆக எட்டு இடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தால் உள்ளது .

இதில் காரணத்தால் உள்ள இடம்;--- அண்டத்தில் பரமாகாசம்...பிண்டத்தில் புருவ மத்தி என்னும் இடமாகும்.

காரிய காரணமாக உள்ள இடம் ;---அண்டத்தில் மின்னல் இடி ....பிண்டத்தில்.. விந்து ,நாதம் .

இதேபோல் சர்வ யோனிகளிடத்தும்,... விந்து விளக்கமாகிய மின்னல் இடத்தும்,நாத விளக்கமாகிய இடி இடத்தும் இது அல்லாது பாரோடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதியாகவும் ,ஜோதியுள் ஜோதியாயும்,...மேற் குறித்த அகமாகிய ஆன்மப் பிரகாசமே ''ஞான சபை ''. அந்தப் பிரகாசத்துக்குள் இருக்கும் பிரகாசமே ''கடவுள்''...அதன் உள் ஒளியின் அசைவு நடனம்...இதுதான் ஞானாகாச நடனம் என்றும் அசைவுறறதே நடராஜர் நடனம் என்றும் ..ஆனந்த நடனம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதலால் ஏமம் ,கனகம்,ரஜிதம், ரெவப்பியம் ,முதலாகச் சொல்வதில் சூரியனிடத்தில் கனகமும்,சசியிடத்தில் ரஜிதமும் ...இதுபோல் பிண்டத்தில் ஆன்மாகாசம் சிற்சபை என்றும் ஜீவாகாசம் ரஜிதசபை என்றும் சொல்வது ..ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண இயற்கை விளக்கம் காரியமாயும் காரணமாயும் காரிய காரணமாயும் இருக்கின்றது.
ஏமம் கனகம் என்பன சூரியனைக் குறிக்கின்றன சூரியனிடத்தில் பொன் (தங்கம் ) இருக்கின்றது.

முக்கிய இடங்களாகிய அண்டத்தில் நான்கு இடத்திலும் .பிண்டத்தில் நான்கு இடத்திலும் கடவுள் விளக்கம் விஷேசம் உள்ளது .அந்த எட்டு இடத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் நாம் தினமும் ஆறு காலத்திலும் மேற்குறித்த பிரகாசமே சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும் வணங்க வேண்டும்.

எகாலத்திலும் புருவ மத்தியின் கண்ணே நம்முடைய கரணம் என்னும் மனதைச் செலுத்த வேண்டும். 

மேற்குறித்த காலங்கள் சூரியஉதயம்,உச்சிப்போது, சாயரஷை ,மாலை,யாமம்,வைகறை ,ஆகிய காலங்களில் எல்லாம் வல்ல தலைவன் என்னும் அருட்பெருஞ் ஜோதியை வணங்குதல் வேண்டும். 

பிண்ட ஒளியும் அண்ட ஒளியும் .;--

பிண்ட ஒளி ;-- ஆன்ம ஒளி...ஜீவ ஒளி....மனஒளி...கண் ஒளி..என்பதாகும்.

அண்ட ஒளி;--.அக்கினிஒளி...சூரியஒளி...சந்திரஒளி...நட்சத்திரஒளி,,
என்பதாகும்.

இந்த எட்டு இடத்திலும் கடவுள் பிரகாசம் காரண காரியமாக உள்ளது.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைக் கொண்டு புறம் உள்ள காரியத்தை செய்யாமல் அகம் என்னும் ஆன்ம காரணமாய் இருப்பதுவே மரணத்தை வெல்லும் வழியாகும்.

பிண்டத்தில் உள்ள ஒளிநான்கும் அண்டத்தில் உள்ள ஒளிநான்கும் ஆக எட்டும் .மேலும் கடவுள் இடத்தில் உள்ள அருளும்,ஆன்மாவில் உள்ள அருளும் என இரண்டும் சேர்ந்து ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றுவதுதான் எட்டும் இரண்டும் என்பதாகும். உடம்பும் உயிரும், ஆன்மாவும் அருளும் இணைய வேண்டும் .

அமுதக் காற்றும்,விஷக் காற்றும் !

இவ்வுலகமும் இவுலகத்தில் உள்ள சராசர பேதங்களில் முக்கியாமாக உள்ள சரமாகிய ஜீவராசிகளும் (உயிர்கள் ) கற்ப பேதமும் தோன்றி உய்யும் (வாழும்)
பொருட்டு அநேக விதமான வாயு (காற்று )பேதங்கள் அனாதியில் கடவுளால் உண்டு பண்ணப்பட்டு இருக்கின்றன.

அவை ;--அமுதக் காற்று ...விஷக் காற்று ...பூதக் காற்று ...உஷ்ணக் காற்று.என்பதாகும். 

உயிர்களைக் காப்பாற்ற அமுதக் காற்று ஆண்டவரால் இயற்கையில் படைக்கப் பட்டதாகும்.விஷக காற்று உயிர்கள் வெளியே விடும் காற்று,பூதக் காற்று ஐம்பூதங்ககளில் ஒன்று....உஷ்ணக் காற்று என்பது செயற்கையால் உருவாகும் காற்று என்பதாகும்.  

இவற்றில் முக்கியமானது .அமுதக் காற்றும் விஷக் காற்றும்.நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் காற்றுகளாகும் .இவை இரண்டும் விஷேச வியாபகமா இருந்து கொண்டு இருக்கின்றன .இவற்றில் அமுதக் காற்று பிரமாண்ட பகிரண்ட கடாகத்தில் விஷேச வியாபகமாயும் ,இம்மகா அண்டத்திலும் ,பிண்ட சீவர்களிடத்திலும் ஏகதேச வியாபகமாயும் இருக்கின்றது .விஷக காற்று மேற்படி பிரமஅண்டாதி கடாகத்தில் ஏகதேசம் நிமிஷகாலம் அல்லது முகூர்த்தம்,அசாதாரணத்தில் ஜாமம் வரையில் வியாபகமாயும்,...இம்மகா அண்டாதி ஜீவராசிகள் இடத்தில் விஷேசமாக,  வியாபகமாயும் இருந்து கொண்டு இருக்கின்றது.

அதாவது அமுதக் காற்று பகல் நேரங்களில் பல கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அண்டத்தில் மேலே,அக்கினி சூரியன் ,சந்திரன்,நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தில் நிறைந்து இருக்கின்றது அங்கே வேறு எந்தக் காற்றும் இல்லை,இங்கே பூலோகத்தைக் நோக்கி இருக்கும் இருக்கும் விஷக் காற்று,பூதக் காற்று,உஷ்ணக் காற்றுடன்,அமுதக் காற்று பத்து சதவிகிதம் கலந்துக் கொண்டு உள்ளது.அமுதக் காற்று குறைவாக இருப்பதால் உயிர்கள் சொற்பகாலத்தில் சீக்கிரம் அழிந்து விடுகின்றது. 

பலகோடி கிலோ மீட்டர் தூரத்தில் பகிரண்டத்தில் அமுதக் காற்று நிறைந்து இருப்பதால் அங்குள்ள சூரியன், சந்திரன்,நடசத்திரங்கள்,போன்ற கிரகங்கள் சொற்பகாலத்தில் அழிவில்லாமல் நீடித்து இயங்கிக் கொண்டு உள்ளன.ஆதலால் மனித ஜீவர்களாகிய நாம் அமுதக் காற்றை சுவாசிக்க பழகிக் கொண்டோ மானால்,வள்ளலார் சொல்லியபடி மரணத்தை வென்று வாழலாம்.

மேற்படி விஷக்காற்று கருமை வண்ணமாயும் செம்மை வண்ணமாயும் இரண்டு பாகமாய்ப் பிரியும்.இவைகளை இராகு ,கேது என்பார்கள்.இது ஒரு முகூர்த்தம் ஒரு ஜாமம் அதற்கு மேல் இவ்வண்ணமாய் ,இவ்வண்ட கணிதப்படி ,அவ்வண்டங்களின் கணித காலத்தில் வியாபகமாய் இருப்பதுதான் சந்திராதித்த கிரகண தோஷ காலம் என்பதாகும்.தோஷகாலம் என்பது பிரகாசமின்றி இருள் வண்ணமாய்ச் சிலகாலத்தில் முற்றும் மறைந்தும் சிலகாலத்தில் ஏகதேசம் மறைந்தும் இருப்பதால் ,இவ்வண்ட புருஷனுக்குக் கரண ஸ்தானமாகிய சந்திரனும் ஜீவ ஸ்தானமாகிய சூரியனும் பிரகாசம் மழுகின்ற படியால் தோஷம் எனப்பெயர் வைத்துள்ளார்கள்.தோஷம் என்பது இருள் .அறியாமை,அஞ்ஞானம்,விஷக் காற்று வியாபகமாய் உள்ளது அதை சுவாசிப்பதால் ஜீவர்களிடத்திலும் மற்றும்  ஜீவகோடிராசிகள் சொற்பத்தில் அடிக்கடி நஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

ஜீவன்கள் மகிழ்ச்சியுடன் வாழும் பொருட்டு, அண்டத்தில் மேலே உள்ள அமுதக் காற்று ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன் காலை நான்கு மணியில் இருந்து ஆறு மணி வரை பூமியை நோக்கி கிழே வியாபகமாய் (நிறைந்து ) வரும்.அக்காலத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.   

உயர்ந்த அறிவு படைத்த மனிதர்களாகிய நாம் காலை நேரத்தில் தூங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும்....இரவு முடியும் காலம்,சூரியன் உதயமாகும் காலத்திற்கு முன் ..இரவு பகலற்ற சங்கம காலம் என்பதாகும் .அதை அமுதகாலம்,..அமிர்த யோகம் என்பார்கள்....அந்த நேரத்தில் நாம் தூங்காமல் விழிப்புடன் எழுந்து விடவேண்டும்.அக்காலத்தில் தகரக் கண்ணாடி விளக்கு வைத்து தீபம் ஏற்றி அதன் முன் அமர்ந்து கொண்டு,திருஅருட்பா பாடல்களையோ அகவல்வரிகளையோ மெல்லென தோத்திரம் செய்ய வேண்டும்.அதன்படி தினமும் பயிற்சியில் இருந்தோம் என்றால் அமுதக் காற்றை சுவாசிக்கப் பழகிக் கொள்ளலாம். அதேபோல் நாம் இரவில் தீபம் இல்லாமல் இருட்டில் உறங்க கூடாது ,அவை பிராணனை நஷ்டம் செய்யும் .

வள்ளலார் எப்படி எழுதி வைத்துள்ளார் என்பதைப் பாருங்கள் .

அமுதக் காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயம் தொடங்கி உதய பரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது .அக்காலத்தில் ஜீவர்கள் நன் முயச்சியில் இருப்பது விசேஷ நலம்.தேகாதி பிண்டத்தில் மேற்படி அமுதக் காற்று வியாப்பியமாய் இருக்கும்.ஒருகால் ஒரு ஷணநேரம் அந்தக் காற்று வியாபகமாய் இருக்குங் கால் ஜீவர்களுக்கு இதுவரையில் தாங்கள் அறியாத தான கடவுள் விளக்கம் உண்டாகும் .

மேற்படி காற்று வியாபகம் ஏகதேசமும் இல்லாவிடில் ஜீவர்கள் விஷக் காற்றினால் சதா வியாபகம் அடைதிலில்,இந்த சொற்ப ஜீவிப்பும் விருத்திக்கு வரமாட்டாது.அமுதக் காற்று வியாப்பியம் அன்றி வியாபகமாய் இருக்குங் காலத்தில் ஜீவர்களுக்கு அறிவு விளக்கம்,மனநெகிழ்ச்சி ,இந்திரிய அடக்கம்,கடவுள் பக்தி முதலியவும் விளங்கும் .அக்காலத்தை அமுதக் காற்றின் வியாபக காலம் என்று அறிய வேண்டும்.இதன்றி இருண்மயமாய் முன்பின் தோன்றாது அறிவின்றி இருக்குங் காலம் விஷக் காற்று வியாபகமாய் இருக்குங் காலம் என்று அறிய வேண்டும். என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

கடலில் தோன்றும் புயல் காற்றுக்கும் ,பூமியில் தோன்றும் பூமி அதிர்வுக்கும் காரணம் அமுதக் காற்று வேகமாக கீழே நோக்கி வருகின்ற போது,கீழே உள்ள விஷக காற்று,பூதக் காற்று,உஷ்ணக் காற்று மேலே செல்ல முடியாமல் சிக்கல் உண்டாகி ,கடலிலோ,பூமியிலோ வேகமாக உள்ளே செல்வதால் ,கடலில் புயலும், பூமியில் அதிர்வும் பிளவும் உண்டாகின்றது. என்பது காற்றின் அழுத்தத்தால் உண்டாவதாகும்.

வள்ளலார் !

வள்ளல்பெருமான் அவர்கள் அமுதக் காற்றை சுவாசிப்பதற்காக,தூங்காமல் விழித்து இருக்கும் ஸூது அறிந்து கொண்டார் .

தூங்காதே விழித்திருக்கும் ஸூது அறிவித்து எனையாண்ட துறையே என்னை
நீங்காதே என்னுயிரில் கலந்து கொண்ட பதியே கால் நீட்டிப் பின்னே
வாங்காதே விரைந்து நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என்மனந்தான் சற்றும்
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதந்தானே !

இரவு விடிந்த இணையடி வாய்த்தன
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீ பற
பாலமுதண்டேன் உந்தீ பற

பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்தன
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீ பற
தூயவன் ஆனேன் என்று உநதீ பற

தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீ பற
இன்னமுது உண்டேன் என்று உந்தீ பற

துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்தேன் என்று உந்தீ பற
எண்ணம் பலித்தது என்று உந்தீ பற

ஞானம் முதித்தது நாதம் ஒலித்தது
தீனம் தவிர்ந்தது என்று உந்தீ பற
சிற்சபை கண்டேன் என்று உந்தீ பற.

திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரைஒளி ஓங்கிற்று என்று உந்தீ பற
பலித்தது பூசை என்று உந்தீ பற.

காலையில் தூக்கத்தை நீக்கி, அமுதக் காற்றை சுவாசிப்பதால், உடம்பில் ஏற்படும் மாற்றங்களின் தன்மையைப் பற்றி வள்ளல்பெருமான் விரிவாக சொல்லுகிறார்  ,அமுதக் காற்று பால்போல் இருந்தது,அதனால் தூயவன் ஆனேன்,ஏக்கம் தவிர்ந்தேன்,இன்பம் கிடைத்தேன்,என் எண்ணம் பலித்தது,கோபம் தவிர்ந்தது,ஞானம்உதித்தது ,நாதம் ஒலித்தது,ஆண்டவர் இருக்கும் சிற்சபையைக் கண்டேன்,மாயா திரைகள் விலகி விட்டது.செஞ்சுடர் தோன்றிற்று,ஓங்கார நாதம் ஒலித்தது .நான் பண்ணிய பூசை அனைத்தும் பலித்தது ,என்று ஆனந்த கூத்தாடிப் வானில் கலந்து அண்டங்கள் எல்லாம் கடந்து அருட்பெரு வெளியெல்லாம் கடந்து அருட்பெருஞ்ஜோதி யுடன் கலந்து விட்டதாக மகிழ்ச்சியைத் தெரியப்படுத்துகிறார் ,அமுதக் காற்றை சுவாசித்து அனுபவித்த தால் மேலும் சொல்லுகிறார் .

காலையிலே நின் தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்---ஞாலமிசை
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கடிமை யேய்ந்து.

மேலும் அனுபவமாலை என்னும் பதிப்பில் தெரியப்படுத்துகிறார் வள்ளல்பெருமான் அவர்கள்.

காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்குக்
கழிறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ
வேலை இலாதவள் போலே வம்பு அளக்கின்றாய் நீ
விடிந்தது நான் தனித்திருக்க வேண்டும் ஆதலினால்
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில்
ஸூழ்ந்திருப்பாய் தோழி எந்தன் துணைவர் வந்த உடனே
ஓலை யுறாது யான் அவரைக் கலந்து அவரும் நானும்
ஒன்றான பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்து.

தன்னுடைய மனம் என்னும் தோழி இடம் சொல்லுகிறார் .காலையில் அமுதக் காற்று என்னும் என்னுடைய கணவர் காலையிலே வருவார் ,என்று பலமுறை சொல்கிறேன் உன்னுடைய காதில் விழவில்லையா,நான் வேலை இல்லாதவள் போல் என்னிடம் வம்பளக்க வருகின்றாய்,பொழுது விடியப் போகிறது ,நான் தனித்து இருக்க வேண்டும். நீ ஓலையில் எழிதி வைத்த சமயவாதிகள் போல் மலர் பறித்து புறத்தில் இருக்கும் பொம்மைகளுக்கு மாலையாக போட்டு மகிழ்ந்து இருப்பாய் .என் உளவு அறியாய், என் கணவர் என்னும் அமுதக் காற்றைக் அருந்தி கலந்து அவரும் நானும் ஒன்றான பின்னர் உன்னை அழைக்கின்றேன் அதுவரையில் எனக்கு தொல்லைத் தராது விலகிப் போய்விடு என்று தன்னுடைய மனதை அடக்குகிறார் வள்ளல் பெருமான் அவர்கள்.

மேலும் அருள் விளக்கமாலை என்னும் பதிகத்தில் ;--

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எல்லாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்தப் பதியே
சமரச சன்மார்க்கத் தலை யமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
மா நடத்து என்னரசே என் மாலை அணிந்தருளே !

கடவுளை காண்பதற்கும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதற்கும் இரண்டு வழிகளை மக்களுக்கு தெரிவிக்கின்றார் .ஒன்று சத்விசாரம்,மற்றொன்று ஜீவ காருண்யம் என்னும் பரோபகாரம்.இந்த இரண்டு வழிகளைத் தவிர வேறு வழிகளில் செல்லமுடியாது என்பது வள்ளலாரின் அழுத்தமான செய்திகளாகும்.சத்விசாரம் என்பது இறைவன் யார் ?அவர் நிலை எப்படிப்பட்டது.எதற்காக உலகைப் படைத்தார் ,எதற்காக ஆன்மாவைப் படைத்தார் ஏன் உயிர்கள் தோன்றுகின்றன, ஏன் உயிர்கள் அழிகின்றன,உயிர்களுக்கு இன்பம் துன்பம் எதனால் வருகின்றது,,உயிர்கள் அழியாமல் இருக்க என்ன வழி என்பன போன்றவற்றை விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதுதான் உயர்ந்த அறிவு படைத்த மனிதரின் செயல்களாகும்,

பரோபகாரம் என்றால் ,நம்மைப் போன்ற ஆன்மாக்களும் உயிர்களும் பசி,பிணி ,கொலை,தாகம்,இச்சை,எளிமை,பயம்,துன்பம்,போன்ற துயரங்களில் வாழ்வதை போக்கி அவைகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதாகும்,இந்த இரண்டு வழிகளில் கடவுள் நிலையை அறியலாம்,மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம் என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும். இந்த இரண்டு வழிகளிலும் வெற்றிக் கண்டவர் வள்ளல்பெருமான் அவர்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது.

மேலே கண்டபாடலில் அதை உறுதிப் படுத்துகிறார்.இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு இரண்டு வழிகளையும் அறிந்து முறைப்படுத்தி வாழ்ந்து மக்களுக்கு வழி காட்டுகிறார்.இறைவனையே நினைந்து வாழ்ந்த வள்ளலார் அருளைப் பூரணமாக பெறுவதற்கு பரோபகாரம் என்னும் ஜீவ காருண்யம் இல்லை என்றால் பெறமுடியாது என்பதை இறைவனால் அருள் அறிவைக் கொண்டு உணர்த்த வடலூரில் ''தருமச்சாலையை''தோற்று விக்கிறார், அதன்பின்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பூரணமான அருளைக் கொடுத்தார் என்பதை மேலே கண்ட பாடல் வாயிலாக மக்களுக்குத் தெரியப் படுத்துகிறார்.

காலையில் கடவுளால் வருவிக்கப் படும் அமுதக் காற்றை சுவாசித்து உடல் முழுவதும் நிரைப்பிக் கொண்டும் ஆண்டவர் ஆணைப்படி தருமச்சாலையை தோற்றுவித்ததாலும் ...அதனால் கிடைத்த உண்டான மாபெரும் சத்தியுள்ள அருள் உடம்பு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வை ,தனிப்பெருங் கருணையினால்  ஒரே பகலில் ஆண்டவர் எனக்கு வழங்கி விட்டார் என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்துகிறார்.அதுவும் எப்படி என்றால் பல பிறவிகள் முயற்சி செய்து முடியாமல்,  மேலையிலே,இம்மையிலே ,ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எல்லாம் தருமச்சாலையில் ஒரே பகலில் கொடுத்துவிட்டாய் உன்னுடைய பெருமையை,புகழை, செயலை எப்படி சொல்ல முடியும் எப்படி எழுத்தால் எழுதமுடியும் இருந்தாலும் என்னுடைய சிறந்த பாமாலையை ஏற்றுக் கொண்டு அணிந்து கொண்டு என்னை அணைந்து கொள்வாய்,மாபெரும் நடத்தரசே என் மாலை அணிந்தருளே என்று இறைவனை வேண்டிக் கொள்கிறார்.நமது வள்ளல் பெருமான் அவர்கள்.

சுத்த சன்மார்க்கம் என்னும் பெருநெறியை கடைபிடிப்பவர்கள் உயிர்க் கொலை செய்யாமலும்,புலால் உண்ணாமலும் ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து,அதி காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஆறுமணி வரை அருள் அமுதக் காற்றை சுவாசித்து, ஊனஉடம்பை, ஒளிஉடம்பு என்னும்  பொன் உடம்பாக்கி சுத்ததேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று வள்ளலாரைப் போல் ஒளிதேகம் பெற்று நிலைத்து வாழ்வோம்.

மீண்டும் பூக்கும்....

ஆண்மநேயன்;--கதிர்வேல்.