புதன், 22 பிப்ரவரி, 2017

சகலர்.பிரளயாகலர்..விஞ்ஞானகலர் !

சகலர்.பிரளயாகலர்..விஞ்ஞானகலர் !

சகலர் என்பவர்கள் சராசரி மனிதர்கள்....அவர்கள் ஆணவம், மாயை.கன்மம்.,என்னும் மூன்றும் உள்ளவர்கள் .

 அதாவது இயற்கையாகிய ஆணவமும் ...,இயற்கையில் செயற்கையாகிய மாயையும்,...,செயற்கையாகிய( காமியம் அல்லது ) கன்மமும் .. இம்மூன்றும் உள்ளவர்கள் .

ஆணவம் என்பது;-- இயற்கையாக ஆன்மாவுடன் கூடவே வந்தது,  இறுதிவரை  கூடவே இருக்கும்.. மாயை என்னும் உடம்பும் ,கன்மம் என்னும் வினைகளும் நீங்கியபின் ,முழுமையான அருளைப் பெற்று ,ஆன்ம தேகம் என்னும் சுத்த தேகம் ,பிரணவ தேகம்,ஞான தேகம் என்னும் முத்தேக சித்திப்   பெற்று,கடவுள் ஏற்றுக் கொள்ளுகின்ற வரையில் ஆணவம் ஆன்மாவிற்குத்  துணையாக இருக்கும்.அதன்பின்தான் ஆணவம் விலகும் ...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

ஆணவமாம் இருட்டு அறையில் கிடைந்த சிறியேனை
அணிமாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவளித்து
நீணவமாம் தத்துவப் பொன் மேடைமிசை யேற்றி
நிறைந்த அருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
மாணுற எல்லா நலமும் கொடுத்து உலகு அறிய
மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே
ஏணுற சிற்சபையின்  இடத்தும் பொற்சபையின் இடத்தும்
இலங்கு நடத்தரசே என் இசையும் அணிந்து அருளே !

என்னும் பாடல் வாயிலாக ஆணவத்தைப் பற்றி வள்ளலார்  தெளிவுப் படுத்துகின்றார் .


மாயை என்பது ;--ஆன்மாவிற்கு இயற்கையில் செயற்கையானது.  பஞ்ச பூதக் கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் செயல் புரிவது மாயை என்பதாகும் ,ஆன்மா வாழ்வதற்காக கட்டிக் கொடுப்பது தான் மாயையின் வேலையாகும்,அதனால்தான் அதற்கு இயற்கையில் செயற்கை என்று பெயர் ,....,நல்வினை ,தீவினை என்னும் கன்மம் நீங்காத வரை , இறப்பு பிறப்பை  உண்டாக்கி ,அதன் தன்மைக்குத் தகுந்தாற்போல் , ஐம்பூத உடம்பை கட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.ஆன்மாவில் பற்றி உள்ள,அதாவது  மறைத்து உள்ள,அறியாமை என்னும் மாயாத்  திரைகள் நீங்கி முழுமையான அருளைப் பெற்று ,இனி ஆன்மாவிற்கு உடம்பு தேவை இல்லை என்று ,.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இருந்து ,அனுமதிப் பெற்ற பின்தான்,ஆன்மாவிற்கு வீடு கட்டிக் கொடுக்கும், தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்ளும்,அதுவரை மாயையின் வேலை தொடர்ந்து கொண்டே இருக்கும்..இது எல்லா ஆன்மாக்களுக்கும் பொருந்தும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

பெருமாயை  என்னும் ஒரு பெண்பிள்ளை நீ தான்
பெற்ற உடம்பு இது சாகாத சுத்த உடம்பாக்கி
ஒரு ஞானத் திருவமுதம் உண்டு ஓங்குகின்றேன் நின்
உபகரிப்போர் அணுத் துணையும் உளத்திடை நான் விரும்பேன்
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ
அறியாயோ என்னளவில் அமைக அமர்க
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ
சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே !

மாயையால் கட்டிக் கொடுப்பட்ட உடம்பை அருள் ஒளியால் வேதித்து ஒளி உடம்பாக மாற்றிக் கொள்கின்றார் நமது வள்ளலார் .,சிறந்த பிள்ளை என்ற பட்டமும் பெற்றுக் கொள்கின்றார் .

கன்மம் என்பது ;--- ஆன்மாவானது உயிர் எடுத்து,உடம்பு எடுத்து இந்த உலகில் வாழ வருகின்றது,அதற்கு இறைவனால் மூன்று சுதந்திரம் கொடுக்கப் படுகின்றது.அவைகள் எனது யான் என்னும் தேக சுதந்திரம் போக சுதந்திரம் ஜீவ சுதந்திரம் என்னும் மூவகை சுதந்திரம் கொடுக்கப் படுகின்றது.

இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ''காமியம் என்றும்  கன்மம் என்றும்''' கர்மா என்றும்   பெயராகும் ,உயிருக்காகவும்,உடம்பிற்காகவும் போகத்திற் காகவும் ,வாழ்ந்து கொண்டு உள்ளது,அந்த போக வாழ்க்கையே,நல்வினைகளாக, தீய வினைகளாக மாற்றம் அடைந்து ஆன்மாவை சுற்றி திரைகளாக மறைத்துக் கொண்டு உள்ளது.அதற்குப் பெயர்தான் கன்மம் என்றும், காமியம் என்றும்,வினைகள் என்றும்  சொல்லப் படுகின்றது.

அந்த கன்மம் என்னும் காமியத்தின் வழியாக உலக  அற்ப இச்சைகளுக்கு ஆட்பட்டு ,இந்திரியங்களாலும்,கரணங்களாலும்,அதிகமாகப்  பெறப்பட்டு இறுதியில் மரணம் வந்து விடுகின்றது...இவை அனைத்திற்கும்  காரண காரியமாக இருப்பது ''மனம்'' என்னும் கருவிதான் ..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

மனம் எனும் ஓர் பேய்க்குரங்கு  மடைப்பயலே நீ தான்
மற்றவர்போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல் வழியே யிருத்தி எனில் சுகமாய்
இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை யானாலோ
தினை அளவும்  உன் அதிகாரம் செல்ல வொட்டேன் உலகம்
சிரிக்க உனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய்
ஞான சபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே !

என, மனத்தை அடக்கி ,புறத்திலே செல்ல விடாமல் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வைத்தவர் வள்ளலார் .அதனால் தான் சிற்சபையின் கண் மனதை செலுத்துங்கள் என்கின்றார் வள்ளலார் ..மேலும் ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கக் ''கருணையாலும்'',இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்ளும் ''சத் விசாரத்தாலும்'' மட்டுமே கன்மம் என்னும் வினைகள் நீங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து அருளைப் பெற முடியும்

மேலும் கன்மத்தை விரட்டும் பாடல் !

கன்மம் எனும் பெரும் சிலுகுக் கடுங் கலகப்பயலே
கங்கு கரை காணாத கடல்போலே வினைகள்
நன்மையொடு தீமை எனப் பல விகற்பங் காட்டி
நடத்தினை நின் நடத்தை எல்லாம் சிறிது நடவாது
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால்
இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல்
இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ
எல்லாஞ் செய் வல்லானுக்கு இனிய பிள்ளை நானே !

என கன்மம் என்னும் வினைகள் தன்னை வந்து சேரா வண்ணம் விரட்டி அடிக்கின்றார் ...எனவே செய்யும் ஒவ்வொரு காரியமும் வினைகளாக வந்து ஆன்மாவை மறைத்துக் கொள்கின்றன .எனவே தீவினைகள் சேராமல் நல் வினைகளை செயல்படுத்த வேண்டும்.

மேலே கண்ட செயல்கள் யாவும் சாதாரண ஜீவர்கள் என்னும் சகலர் என்பவர்களுக்கு ஆணவம், மாயை ,கன்மம் ,என்பது பொருத்தமானதாகும் ..

பிரளயாகலர் என்பவர்கள் ;---இயற்கையாகிய ஆணவமும்  ...இயற்கையில் செயற்கையாகிய மாயையும் மாத்திரம் உள்ளவர்கள் ...

உலக போகத்தை நீக்கி கன்மத்தை விளக்கி,காமத்தை நீக்கி  இறைவன் அருளைப் பெற காத்திருப்பவர்கள் பிரளயாகலர் என்பவர்கள் .இவர்கள் யோகிகள் எனப்படுபவர்கள் .

விஞ்ஞானகலர் என்பவர்கள் ;--இயற்கையாகிய ஆணவம் மாத்திரம் உள்ளவர்கள்..இவர்கள் உலக போகத்தை விளக்கி ,காமத்தை நீக்கி,உடல் மீதும்,உயிர் மீதும்,பற்று இல்லாமல் அதாவது .தேக சுதந்தரம் ,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் என்னும் மூவகை சுதந்தரமும் இல்லாமல் திருவருள் சுதந்திரத்திற்காக காத்துக் கொண்டு இருப்பவர்கள் ..இவர்களுக்கு ஞானிகள் என்று பெயர் ..அதற்கு மேல் நிறைய படிகள் உள்ளன ...

நாம் சகலர் என்பதை உணர்ந்து .வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க உண்மை  நெறியை உண்மையாகப் பின் பற்றி வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்,வேறு எந்த வழிகளில் சென்றாலும் அருளைப் பெற முடியாது என்பது திண்ணம் ..

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் --வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம் நீர்
நன்மார்க்கம் சேர்வீர் இந்நாள் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 .   


தீர்ப்பு வந்த அன்று எழுதிய கட்டுரை:

தீர்ப்பு வந்த அன்று எழுதிய கட்டுரை:( சாரு)
இந்நேரம் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நூற்றுக் கணக்கான பஸ்கள் எரிந்திருக்கும். சும்மாவா எரிப்பார்கள்? உள்ளே மாணவிகளையும் போட்டு எரிப்பார்கள். தமிழ்நாடு பூராவும் ஊரடங்கு உத்தரவு போட்டது போல் கடைகள் அடைத்திருக்கும். வெளியூர் செல்பவர்கள் ரயில் நிலையங்களிலும் பஸ் ஸ்டாண்டுகளிலும் கிடந்து அவதிப்பட்டிருப்பார்கள். சாப்பாட்டுக்கு ஓட்டலையே நம்பியிருப்பவர்கள் பட்டினி கிடந்திருப்பார்கள். கட்சித் தொண்டர்கள் விரலையும் நாக்கையும் இன்ன பிற அவயவங்களையும் அறுத்துப் போட்டிருப்பார்கள். இன்னும் தீவிரத் தொண்டர்கள் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு எரிந்திருப்பார்கள். இப்படிப்பட்ட அவல நாடகங்கள் எதுவும் இப்போது இல்லை. இது பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். நமக்குப் பிடித்த தலைவர்களையும் நடிகர்களையும் கடவுள் ரேஞ்சுக்கு வைத்துப் புகழ்ந்து கட் அவுட் வைக்கும் கலாச்சாரத்தை முதலில் ஒழிக்க வேண்டும். ஒருமுறை அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே அமெரிக்க அதிபருக்கு அறுபது அடி கட் அவுட் வைத்திருந்தார்கள். என்ன கொடுமை! கருணாநிதியை சோழ மன்னன் என்று புகழ்ந்து வாளும் மலர்முடியும் கொடுத்ததிலிருந்து துவங்கியது இது. பின்னர் ஜெயலலிதாவை கன்னி மேரியாகவும் மாரியம்மனாகவும் வரைந்து கட் அவுட் வைத்தார்கள். அதை விடக் கொடுமை என்னவென்றால், ஒருமுறை ஒரு அரசியல்வாதியின் பேரனுக்குப் பிறந்த நாள் வந்தது. அதற்காக சென்னை முழுவதும் பேனர் வைத்து அது வாகனங்களில் செல்வோரின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்தது. இனிமேலாவது அந்த முகஸ்துதி கலாச்சாரத்திலிருந்து நாம் வெளிவந்தாக வேண்டும். மேலும், முதல்வரின் காலில் அவர் கட்சித் தொண்டர்கள் விழுந்தால் கூடப் பரவாயில்லை. பெரிய போலீஸ் அதிகாரிகளும் அவர் காலில் விழுந்தால் என்ன அர்த்தம்? நாம் என்ன மன்னராட்சியிலா இருக்கிறோம்? போலீஸ் அதிகாரி ஒன்றும் முதல் மந்திரியின் எடுபிடி அல்லவே? அவர் ஏன் முதல்வர் காலில் விழ வேண்டும்? மேலும், எந்த அரசியல் சார்பும் இல்லாமல் இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் தங்கள் பணிக் காலத்துக்குப் பிறகு அரசியல் கட்சியில் சேர்வதை இனிமேலும் அனுமதிக்கலாகாது. அப்படி அனுமதிப்பதால் அவர்கள் ஏற்கனவே பணியில் இருந்த போது அந்தக் கட்சியின் சார்பாகவே பணியாற்றி இருப்பார்கள் என்றுதானே அர்த்தம்? அல்லது, குறைந்த பட்சம், அரசு அதிகாரிகள் அரசியலில் சேர்ந்தால் அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு ஊதியத்தையாவது நிறுத்த வேண்டும்.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மக்கள் எதிர்பார்ப்புக்கு இணங்கவே வந்துள்ளது. இந்திய அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பாக இதைக் கருதலாம். இரண்டு நீதிபதிகளும் ஊழலுக்கு எதிராக மிகக் கடுமையாக எழுதியிருக்கிறார்கள்; கவலைப்பட்டிருக்கிறார்கள். இனிமேல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஓரளவாவது பயம் இருக்கும். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு இந்திய அரசியலையே ஓரளவுக்கு மாற்றியமைக்கக் கூடியதாக இருக்கும். ஆனாலும் ஒரே ஒரு குறை, குன்ஹாவின் தீர்ப்பை மாற்றி எழுதி ஜெ., சசிகலா உள்ளிட்ட நால்வரையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பற்றி உச்சநீதிமன்றம் இன்னும் சற்று விமர்சித்திருக்கலாம். ”நால்வரின் சொத்துக் கணக்கை நீதிபதி குமாரசாமி தவறான முறையில் கணக்கிட்டு விட்டார் (Incorrect arithmatical calculations)” என்று மட்டுமே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அந்தக் கணக்கு ஏன் தவறாகப் போனது? 
 நீதிபதி குன்ஹாவை அப்போது எல்லோரும் திட்டினார்கள். ஆனால் நான் அவரை மகாத்மா என்று எழுதினேன். பலம் வாய்ந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரை ஒற்றை ஆளாக எதிர்த்துத் தீர்ப்பு எழுதுவதற்கு எவ்வளவு மனோதிடம் வேண்டும்? அதிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்காடிய ஆச்சார்யாவுக்கு எக்கச்சக்கமான மிரட்டல் வந்து கொண்டிருந்த வேளையில் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் குன்ஹா வரலாற்றுப் புகழ் மிக்க தன் தீர்ப்பை வழங்கினார். 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததால் அது வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்பு ஆகியது. நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் முற்றிலுமாக இழந்து போன மதிப்பீடுகளையும் அறத்தையும் நமக்கு தன் தீர்ப்பின் மூலம் நினைவூட்டினார் நீதிபதி குன்ஹா. 
 இந்த விஷயத்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொருவர், சுப்ரமணியம் சுவாமி. சுவாமி பற்றி எப்போதுமே மக்கள் மனதில் ஒரு எதிர்மறைச் சித்திரம்தான் தங்கியிருக்கிறது. ஆனால் சுவாமிதான் 19 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா, சசிகலா மீது ஊழல் வழக்கைத் தொடுத்தவர். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? தான் வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை மூன்று ஆண்டுகள் தேடிக் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் சுவாமி. அதற்காக அவர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள்தான் எத்தனை எத்தனை! 
 மற்றொரு விஷயம், நீதியின் மேலும் அறத்தின் மேலும் மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்யும் இந்தத் தீர்ப்பை நாம் பாராட்டலாம்; ஆனால் பன்னீர்செல்வம் எப்படிப் பாராட்டுகிறார்? தீர்ப்பில் நீதிபதிகள் இருவரும் கடுமையாகச் சாடியிருப்பது சசிகலாவை அல்ல; ஜெயலலிதாவை. சசியை வெறும் பொம்மையாக வைத்து இந்த ஊழலையெல்லாம் செய்தது ஜெ. தான் என்கிறது தீர்ப்பு. ஜெ. பற்றி தீர்ப்பில் எழுதியுள்ள வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுவதற்குக் கூடத் தயங்குகிறேன். அவ்வளவு கடுமையான வார்த்தைகள். அதைப் பன்னீரும் மற்ற சசிகலா எதிர்ப்பாளர்களும் பாராட்டுவது உச்சபட்ச காமெடி!
ஊழலைப் பொறுத்தவரை நம் அனைவருக்குமே அதில் பங்கு இருக்கிறது என்பது என் வாதம். ஊழல் என்றால் என்ன? அடுத்தவருக்குச் சொந்தமான பொருளைத் திருடுவது. நம்முடைய வரிப் பணத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திருடுகிறார்கள். அவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள்? நாம்தான் இவர்கள். நம்மிலிருந்துதான் இவர்கள் உருவாகிறார்கள். ஒட்டு மொத்தமாக அறமும், மதிப்பீடுகளும் சீரழிந்திருக்கின்றன. பந்தயக் குதிரைகளைப் பழக்குவதைப் போல் இளைஞர்களைப் பழக்குகிறோம். படி படி படி. முதல் மதிப்பெண் எடு. எதற்கு? நிறைய பணம் சம்பாதிப்பதற்கு. எதற்குப் பணம்? பணம்தான் வெற்றியின் அடையாளம். நம் வாழ்வின் தர்மம். ஆடம்பர மோகத்தின் காரணமாக எவ்வளவு பணம் வந்தாலும் போதவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு 40000 ரூபாயில் ஐஃபோன் வாங்கிக் கொடுக்கிறார் தகப்பனார். 
 பணம் ஈட்டுவதற்காக எதுவும் செய்யலாம் என்ற நிலையை நாம் அனைவருமே வந்தடைந்திருக்கிறோம். சமீபத்தில் அவந்திகாவின் கைபேசி தொலைந்து விட்டது. சிம் கார்டை நீக்காததால் நாம் பேசியதும் போனை எடுத்தவர் நமக்குப் பதில் சொன்னார். அத்தோடு சரி. அதற்கு மேல் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. ஒரு வாரம் போராடி வாங்கினோம். ஒரு பெரிய துப்பறியும் கதை போல் எழுதலாம். இன்னொருவரின் பொருளை நாம் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படை அறம் கூட யாருக்கும் இல்லை. பெங்களூர் சென்று நேரில் பெற்றுக் கொண்ட போது போனை வைத்திருந்தவர் ஒரு மேட்டுக்குடிப் பெண் என்று தெரிந்தது. ஏழை பணக்காரன் என்ற பேதமே இல்லாமல் எல்லோருமே அற உணர்வை இழந்திருக்கிறோம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். 
இது ஒரு பக்கம் என்றால் நாணயத்தின் மறு பக்கமும் இருக்கிறது. அது ஒரு பரிதாபமான பக்கம். என் நண்பரான ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரியுடன் இது பற்றி நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் ஊழல் இல்லை. காரணம், இந்தியாவில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஐந்து ஆண்டுகள் வாங்குகின்ற சம்பளம் அங்கே ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் ஒரு மாதச் சம்பளம். எப்படி ஊழல் செய்ய மனம் வரும்?

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

விந்து நாதம்,பரவிந்து பரநாதம் இரண்டு வகை !

விந்து நாதம்,பரவிந்து பரநாதம்  இரண்டு வகை !

நமது உடம்பில் இரண்டு விந்து ,இரண்டு நாதம் உள்ளது ,...
ஒன்று பொருளினால் உண்டாவது ,ஒன்று அருளினால் உண்டாவது.
ஒன்று ஆன்மா என்னும் உள் ஒளியில் தோன்றுவது .
ஒன்று உடம்பில் உள்ள மூல ஆதாரத்தில் உள்ள  குண்டலினியில் இருந்து  தோன்றுவது.

மனிதர்களின்  ஆண், பெண் உறவினால்,அன்பு மிகுந்த காதல் என்னும் காமத்தினால்,உயிர் இன்பம் உடல் இன்பம் வெளிப்பட்டு ,இடைவிடாத சேர்க்கையால் அங்கே உஷ்ணம் உண்டாகி ,அந்த உஷ்ண   இன்பத்தினால் வெளியே வருவது விந்துவும்,நாதமும் ..அதனால் கரு உண்டாகி குழந்தை பிறக்கும்., அந்த இன்ப சேர்க்கை  இல்லாமல் எந்த உயிரும் தோன்றாது.இதற்கு சிறிய இன்பம் ,அதாவது சிற்றின்பம் என்று சொல்லப்படுவதாகும்.அதன் துணை இன்பங்கள் நிறைய உள்ளன.

 அந்த  இன்பத்தினால் உண்டான உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்து  கொண்டே உள்ளன ஏன்?

அந்த சிற்றின்பம் அனைத்து மக்களுக்கும் ,அனைத்து உயிர் இனங்களுக்கும்,ஒரே  தன்மை உடையன, இந்த இன்பம் அனுபவிக்கின்ற வரை,பசி,பிணி,தாகம்,இச்சை எளிமை,பயம்,கொலை ,மரணம் , பிறப்பு இறப்பு போன்ற துன்பங்கள்  வந்து கொண்டே இருக்கும்.இது எதனால் வருகின்றது என்றால் நாம் உண்ணும் பொருள் உணவினால் ,விந்தும்,அதனால் தோன்றும் நாதம்  என்னும் சப்தமும்   நம் உடம்பில் தோன்றுகின்றது..அடுத்து அடுத்து   விந்து வெளியே வர வர ,உடம்பும் அதில் உள்ள உறுப்புக்களும் தேய்மானம் உண்டாகி வயது முதிர்ந்து இறுதியில் விந்தும் நாதமும் நின்றுபோய்,அதாவது அடைப்பட்டு உயிர் பிரிந்து மரணம்  வந்து விடுகின்றது..

இதைத்தான் வள்ளலார் பாடலில் பதிவு செய்கின்றார் !

சோற்றாசை யோடு காமச் சேற்றாசைப் படுவாரைத் துணிந்து கொள்ளக்
கூற்றாசைப் படும் என நான் கூறுகின்றது உண்மை இனிற் கொண்டு நீவிர்
நேற்றாசைப் பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த வாங்கே
பேற்றாசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி புகழைப் பெசுவீரே ! .......என்றும்.

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன்
துன்னு நற் தவம் எலாம் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளி எனப் போம் என்
அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையிற்
பொருந்திய கார சாரஞ் சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
தங்கினேன் என்செய்வேன் எந்தாய் !

என்று வள்ளலார் மக்களுக்குத் தெரியப் படுத்து கின்றார் .
நாம் உண்ணும் உணவினால் விந்து நாதம் உண்டாகி இறைவன் இடத்தில் தொடர்பு கொள்ள முடியாமல் ,சிறிய இன்பத்தை அனுபவித்து மரணத்தை தழுவிக் கொண்டே உள்ளோம் .

மரணத்தை வெல்ல வேண்டுமானால் பர விந்துவையும், பர நாதத்தையும் பெற வேண்டும் அவற்றை அனுபவிக்க வேண்டும்.

பரவிந்து ,பரநாதம் எங்கு உள்ளது ?

நமது உடம்பில் நம்மை இயக்கும் , அகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியில் பரவிந்து உள்ளது ..ஆணும் பெண்ணும் உடல் உறவு கொண்டு இன்பத்தை அனுபவிப்பது போல் ,ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும்  உறவு கொள்ள வேண்டும்.இடைவிடாது  தொடர்பு கொள்ள வேண்டும் ,அந்த உறவினால் அங்கே சுத்த உஷ்ணம் உண்டாகி,திரைகள் விலகி  ஆன்மாவில் பரநாத ஒளி உள்ளே  நுழையும் ,அந்த பர நாத ஒளியால் பரவிந்து சுரக்கும் அதற்குப் பெயர்தான் அருள் என்பதாகும்,.அருள் சுரக்கும் போது அனுபவிக்கும்  இன்பத்தை பேரின்பம் என்று சொல்லப்படும்.,அதற்கு இயற்கை இன்பம் என்றும் சொல்லப்படும்.

அந்த அருள் இன்பத்தினால் இந்திரியம் ,கரணம்,ஜீவன்,ஆன்மா என்னும் நான்கு பகுதிகளும் இன்பம் அடைந்து ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.அதுவே மரணம் இல்லாப் பேரு வாழ்வாகும் .

இயற்கை இன்பம் எது என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

இடம் பெறும் இந்திரிய இன்பம், கரண இன்பம், உலக
இன்பம், உயிர் இன்பம், முதல் எய்து இன்பமாகித்
தடம் பெறுமோர் ஆன்ம இன்பம், தனித்த அறிவு இன்பம்
சத்திய பேரின்பம்,முத்தி இன்பமுமாய்,அதன்மேல்
நடம் பெறும் மெய்ப் பொருள் இன்பம்,நிரதிசிய இன்பம்
ஞான சித்திப் பெரும் போக நாட்டரசின் இன்பமுமாய்த்
திடம் பெற வோங்கிய '''இயற்கைத் தனி இன்ப மயமாம்'''
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

இயற்கை  உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதியைத் தொடர்பு கொண்டு அனுபவிப்பதே உண்மையான  இன்பம் என்றும்,அந்த இயற்கை  இன்பத்தை அனுபவிப்பவர்களுக்கு என்ன என்ன இன்பங்கள் கிடைக்கும் என்பதை வள்ளலார் மேலே கண்ட பாடலில் விளக்கமாகத் தெரியப் படுத்தி உள்ளார்.

மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அணைந்து அடைந்த சுகத்தை அனுபவமாலை என்ற பகுதியின் இரண்டாவது பாடலில் தெரியப் படுத்து கின்றார் .

கண்ணுறங்கேன் உறங்கினும் என் கணவரோடு கலக்கும்
கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவின்
எண்ணடங்காப் பெருஞ்ஜோதி என்னிறைவர் எனையே
இணைந்து இரவு பகல் காணா இன்புறச் செய்கின்றார்
மண் உறங்கும்,மலை உறங்கும் ,மலை கடலும் உறங்கும்
மற்றும் உள எல்லாம் உறங்கும் மாநிலத்தே நமது
பெண் உறங்காள் எனத்தாயார் பேசி மகிழ்கின்றார்
பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்திலரே !

மேலும் என்னைப்போல் எவரும் அருட்பெருஞ்ஜோதியை அனுபவிக்க வில்லை என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள் என்பதனை விளக்கும் பாடல்.

எல்லாம் செய் வல்லதுரை என்னை மணம் புரிந்தார்
எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடுரை நீ தோழி
நல்லாய் மீக் கூற்று உடையார் இந்திரர் ,மாமுனிவர்
நான்முகர் ,நாரணர் எல்லாம் வான் முகராய் நின்றே
பல்லாரில் இவள் புரிந்த பெருந்தவத்தை நம்மாற்
பகர்வது அரிது என்கின்றார் சிற்பதியில் நடம்புரியும்
வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே
வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே !

என்னும் பாடல்வாயிலாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

எனவே விந்து நாதம் ,என்பதும் பரவிந்து பரநாதம் என்பதும் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்..இரண்டிற்கும் வீரியம் உண்டு .இரண்டிற்கும் இன்பம் உண்டு ,ஒன்று அழியும் இன்பம் ,...ஒன்று அழியா இன்பம்
ஆண் பெண் இருவரும்  அனுபவிப்பது சிற்றின்பம் அவற்றில் விந்து நாதம்  சுரக்கும் குழந்தைப் பிறக்கும்...அருட்பெருஞ்ஜோதியும்  ஆன்மாவும் அனுபவிப்பது பேரின்பம் அவற்றில் அருள் சுரக்கும் மீண்டும் பிறப்பு இல்லாமல் மரணத்தை வெல்லலாம் .

அகவலில் வள்ளலார் பதிவு செய்து உள்ளது !

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்றெலாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே !
அருள் பெறின் ஒரு துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருளிது எனவே செப்பிய சிவமே !
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எலாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !
அருள் சுகம் ஒன்றே அரும் பெறற் பெருஞ்சுகம்
மருட் சுகம் பிற வென வகுத்த மெய்ச்சுகமே !

அருளே நம்குலம் அருளே நம் இனம்
அருளே நாமறிவாம் என்ற சிவமே
அருளே நம் சுகம் அருளே நம் பெயர்
அருளே நாமறிவாம் என்ற சிவமே
அருள் ஒளி அடைந்தனை அருள் அமுதம் உண்டனை
அருண்மதி வாழ்க என்று அருளிய சிவமே
அருள் நிலை பெற்றனை அருள் வடிவு உற்றனை
அருள் அரசு இயற்றுக என அருளிய சிவமே !

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி யோடு கலந்து,இன்பத்தை அடைந்து அருளைப் பெற்று,ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு,மரணத்தை வென்று  பேரின்ப பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு ஐந்தொழிலையும் செய்து கொண்டு உள்ளார் .நாமும் அவர் காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் சென்று அருட்பெருஞ்ஜோதி யுடன் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று,பேரின்பத்தை அடைந்து மரணத்தை  வென்று வாழ்வோம் ..

விரிக்கில் பெருகும் ....தொடரும் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஒன்பது ஓட்டையை அடைப்பவனே மனிதன் !

ஒன்பது ஓட்டையை அடைப்பவனே மனிதன் !

உலக போகத்திற்கு மனித உடம்பில் ஒன்பது துவாரம மாயையால் படைக்கப் பட்டு உள்ளது, அந்த துவாரங்களை அடைக்கத் தெரிந்தவன் எவனோ அவனே மனிதன்,

 ஒன்பது துவாரங்களின் செய்கையால், ஒன்பது திரைகளாக ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது், திரைகளை நீக்க வேண்டுமானால் ஒன்பது துவாரங்களை அடைக்க வேண்டும்.

 அதன்பின்தான் உச்சி திரக்கும் , விந்து நாதம் அடைப்பட்டு, பரநாதம் தோன்றும், பரநாதம் ஆன்மாவில் இரங்கி தொடர்பு கொள்ளும் போது,அதாவது அணைகின்ற போது அருள் சுரக்கும் ,அந்த அருள் பேராற்றல் உடம்பு முழுதும் நிரம்பி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

ஒன்பது துவாரத்தையும் அடைத்தவர்  வள்ளல்பெருமான் ஒருவரே. எனவேதான் அவருக்கு அருள் அறிவு தோன்றிற்று,

ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமுது உண்டு நீ யொழியாதே அந்தோ ஊழி தோறு ஊழியும் உலவாமை நல்கும்

ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருட்பெரும்சோதி கண்டு ஆடேடி பந்து !

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

மேலும் சோற்றாசை யோடு காமச் சேற்றாசைப் படுவோரை கூற்று ஆசைப்படும் என்கிறார்.கூற்றுவன் என்றால்  எமன். ஆசையோடு வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான் .

எனவே ஒன்பது துவாரத்தையும் அடைத்து  உச்சி துவாரத்தை திறக்கும் வழியைக் காட்டுவதுதான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்.

அதுதான் திருக்கதவு திறத்தல் !

திருக்கதவும் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருவுருக் காட்டாயோ

உருக்கி அமுது ஊற்று எடுத்து என் உடம்பு உயிரோடு உளமும் ஒளிமயமே யாக்குற மெய் உணர்ச்சி அருளாயோ

கருக்கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுட் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ

செருக்கு கருதாதவர்க்கு அருளும் சித்தி புரத்து அரசே சித்த சிகா மணியே திருநட நாயகனே!

ஒன்பது கதவையும் அடைத்தால் தான் திருக்கதவு திறக்கும். திருக்கதவுத் திறந்தால் தான் அருள் சுரக்கும் அருள் சுரந்தால்தான் மரணத்தை வெல்ல முடியும்.

சுத்த சன்மார்க்கிகள் ஒன்பது துவாரத்தை அடைக்கும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 வள்ளலார் சொல்லி உள்ள உண்மையான சீவகாருண்ய ஒழுக்கம், உண்மையான சத்விசாரம் என்ற இரு வழிகளினால்தான் ,ஒன்பது துவாரத்தை அடைக்க வேண்டும்...

மேலும் தொடரும்....

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896,

திங்கள், 6 பிப்ரவரி, 2017

தந்தி டிவி யா.?அல்லது சின்னம்மா டிவி யா ?

தந்தி டிவி யா.?அல்லது சின்னம்மா டிவி யா ?

என்பது தெரியவில்லை.பாண்டே. சசிகலாவிடமும் அஇஅதிமுக விடமும் எத்தனை கோடி பணம் வாங்கினார் என்பது தெரியவில்லை.

நான் தந்தி டிவி பார்ப்பதில் மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருப்பேன்.நல்ல செய்திகளையும்.நல்ல வாதங்களையும் ஒளிப்பரப்பிக் கொண்டு இருப்பார்கள்.பாண்டேவின் கேள்விக் கணைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.அவர்மீது அளவில்லா மதிப்பு வைத்து இருந்தேன்.

ஜெயலலிதா அப்போல்லா மருத்துமணையில் சேர்ந்ததில் இருந்தே.அஇஅதிமுகாவுக்கு ஆதரவாகவும்.சசிகலாவுக்கு ஆதரவாகவும்.கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல் துதிபாட ஆரம்பித்து விட்டார்.நான் மட்டும் அல்ல.தமிழகத்தில் உள்ள அனைத்து நேயர்களும் வேதனைப் படுகிறார்கள்.வெட்கப்படுகிறார்கள்.

தந்தி டிவி யில் பாண்டே இருந்தால்.தந்தி டிவியின் தரம் குறைந்து விடும்.தமிழக மக்கள் தந்தி டிவியை பார்க்காத நிலை வந்துவிடும்.

தந்தி டிவி நிர்வாகம் உடனே கவனிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தந்தி டிவி. தந்தி தினசரி  போன்ற பத்திரிகைகள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளன.அதைக் காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளன.

பாண்டே போன்ற புல்லுருவுகளை உடனே நீக்கிவிடுவது நல்லது எனக் கருதுகிறேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தந்தியின் வாசகன் என்ற முறையில் இதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

தைப்பூசம் என்றால் என்ன ?

தைப்பூசம் என்றால் என்ன ?

பூசம் என்றால நிறைவு என்று பெயர். அதாவது பூரண சந்திரன் தோன்று நாளை பூச நாளாக வைத்துள்ளார்கள்.ஒவ்வொரு மாத பூச நந்நாளிலும் வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கிறார்கள்.

தைப்பூசத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.

தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்தில் உள்ள உயிர்களுக்கு நன்மை பயக்கவும்.பக்குவம் உள்ள ஜீவர்களுக்கு அருள் வழங்கவும் நேரடியாக வந்து காட்சி தரும் திரு நாளாகும்.

ஆண்டவர் உலகு நோக்கி வருவதால் அன்று கிரகங்கள் உயிர்களுக்கு துன்பம் தராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும்.  அன்று சுதந்திரமாக இறைவன் அருளைப்பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருளைப் பெற்றுக் கொள்ளும் தகுதி எவருக்கும் கிடைக்கவில்லை.

30-1-1874. ஸ்திரீமுக ஆண்டு தைத்திங்கள் 19.ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12.மணிக்கு சித்திவளாகத் திருமாளியின் திருவரைக்குள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சென்று வள்ளலாருக்கு பூரண அருளை வழங்கி அருட்பெருஞ்ஜோதியாக்கி அழைத்துக் கொண்டார் என்பது வரலாற்று உண்மையாகும்.

அந்த உண்மை நடப்பதற்கு முன்னமே வள்ளலார் பதிவு செய்து உள்ள அருட்பாடல்...

வருதருணப்பாடல் என்ற தலைப்பில் நான்கு பாடல்கள் மிகவும் முக்கியமான பாடல்கள்.அதிலே நான்காவது பாடல்...

என்சாமி எனது துரை  என் உயிர் நாயகமே இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்

பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேருடம்பிற் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்

தன்சாதி உடையப் பெரிய தவத்தாலே நான்தான் சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியம் சத்தியமே

மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின்தனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே....

என்ற பாடல் வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வரும் நேரத்தையும்.காலத்தையும் முன்கூட்டியே தெரியப் படுத்துகின்றார்.

சித்திவளாகத்திற்கு வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  இனி வருங்காலங்களில் வந்து அமர்ந்து அருள் வழங்கும் இடமாக சத்திய ஞானசபையை.ஆண்டவர் அருள் வாக்கின்படி வடலூரில் வள்ளலார் தோற்றிவைத்துள்ளார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல் பேருபதேசத்திலும் பதிவு செய்கின்றார்.

மேலும் சிலர்...இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே ! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன் ?,ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக்கொள்ளபடாதோ ? என்று வினவலாம்

ஆம்.இஃது தாம் வினவியது நலந்தான்.ஆண்டவர் வரப்போகின்றதும் சத்தியந்தான்.நம்மவர்கள் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான்.நீங்கள் பெற வேண்டியதைப்பெற்றுக் கொள்கின்றதும் சத்தியந்தான்.ஆனால்....
முன் சொன்ன ரக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது .யாவெனில்...அசுத்த மாயா திரை.சுத்த மாயதிரை...என இரண்டுமாம்.இவை கீழ் பாகத்தில் ஒரு கூறூம் மேல் பாகத்தில் ஒரு கூறுமாய் இருக்கும்.கீழ் பாகத்தில் உள்ளது அசுத்த மாயாத்திரை.மேல் பாத்தில் உள்ளது சுத்த மாயாத்திரை இருக்கும்.

இவற்றில் அசுத்த மாயாத்திரை இகலோக போக லஷியமுடையது.சுத்த மாய திரை பரலோக சாத்தியத்தை உடையது.

இவற்றில் ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது.முயற்சி இல்லாத சாதாரண மனுஷயர்களுடைய கீழ்பாகத்தில் இருக்கின்ற அசுத்த மாயை என்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார் ஆதலால் அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமே அல்லது பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளுதற்குக் கூடாது என்று திட்டவட்டமாக வள்ளலார் தெரியப்படுத்தி உள்ளார்.

வருகின்ற 9-2-2017.அன்று வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து காட்சித் தருகின்ற நாளாகும். இந்த நாளை விட்டால் மீண்டும் ஒரு ஆண்டு காலம் கழித்துதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார் என்பதை கருத்தில் கொண்டு தைப்பூச ஜோதிதரிசனம் காண வாருங்கள் வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறோம்.

எல்லோருக்கும் தாய்.தந்தை.அண்ணன்.தம்பி.முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ.அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் வடலூர் சத்திய ஞானசபை ஜோதி தரிசனமாகும்.

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

போலி ஆன்மீகம்.தவிர்த்து உண்மை ஆன்மீகம் அறிவோம் !

போலி ஆன்மீகம்.தவிர்த்து உண்மை ஆன்மீகம் அறிவோம் !

உலகில் பல்லாண்டு காலமாக போலி ஆன்மீகம் பரவி கொண்டு வருகின்றன.

அவற்றை பின் பற்றுபவர்களை உண்மைத் தெரியாமல்  பாராட்டுகிறார்கள்.போற்றுகிறார்கள்.காலில் விழுந்து வணங்குகிறார்கள்.

அளவில் அடங்காத பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு.ஆண்டவருக்கு.அபிஷேகம்.செய்வதும். காணிக்கை.கொடுப்பதும்.தவம்.தியானம்.யோகம் செய்வதாலும்.குகைகளில் சென்று அமர்ந்து கொள்வதாலும் .உண்மையான ஆன்மீகவாதி ஆகிவிட முடியாது.

இந்த உலகத்தில் உண்மையான ஆன்மீகம் என்ன என்பதை போதிக்க .உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்ட ...வருவிக்க உற்ற ஒரே அருளாளர் வள்ளலார் மட்டுமே என்பதை இறைவனே சொல்லுகின்றார்.

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எல்லாம்

பேய் பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது

உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும் போருற்று இரந்து வீண் போயினர்

இன்னும் வீண்போகாதபடி விரைந்தே சுத்த சன்மார்க்க நெறிகாட்டி

மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம் ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ

என் பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே.

நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே

நிர்க்குணானந்த பர நாதாந்தவரை ஓங்கும் நீதி நடராஜ பதியே !.

என்னும் பாடல்வாயிலாக வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார்.

எனவே போலியான ஆன்மீகத்தை விட்டு உண்மையான ஆன்மீகத்திற்கு வாருங்கள் என உலக மக்களை கூவி கூவி அழைக்கின்றார் வள்ளலார்.

எனவேதான்

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே !

என்கிறார் .

உண்மையான ஆன்மீகத்தை தெரிந்து கொள்ளவும். அருட்பெருஞ்ஜோதி ஆண்வரின் அருளைப் பெறவும் .வடலூருக்குச் செல்வோம்.வாருங்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 4 பிப்ரவரி, 2017

பசிக்கு சாதி சமயம் மதம் என்ற பேதம் தெரியாது.!

பசிக்கு சாதி சமயம் மதம் என்ற பேதம் தெரியாது.!


பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம் - சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசிநிவர்த்தி செய்து கொள்ளத் தக்க மிருகம் பறவை ஊர்வன தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசிவந்தபோது பசிநிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம்.

பசியை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க புவனபோக சுதந்தரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும் பூர்வகர்மத்தாலும் அஜாக்கிரதையாலும் அச்சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும். ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

மோட்ச வீட்டின் கதவை திறக்க சாவி வேண்டும்.சாவியைப் பெற்றுக் கொள்வது தான் ஜீவகாருண்யம்.ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யப் படுகின்ற.பக்தி தியானம்.தவம்.யோகம் போன்ற எச்செயல்களாக இருந்தாலும் வெற்று மாய ஜாலங்கள் என்கிறார் வள்ளலார்.

பசி என்பது. எல்லா உயிர்களுக்கும் பொதுவாக. இறைவனால் கொடுக்கப்பட்ட உபகாரக்கருவி. எனவே ஜீவர்களுக்குப் பசியைப் போக்குகின்ற போது.நம்முடைய பசியை இறைவன் போக்குவார்.

நம்முடைய பூத உணவான பொருள் உணவு உட்கொள்ளுகின்ற வரை.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகாது.திரைகள் விலகாதவரை. அருள் உணவு ஆன்மாவில் இருந்து சுரக்காது.

ஜீவகாருண்யம் என்பது இயற்கையாக செயல் பட வேண்டும். செயற்கையாக செயல்படக்கூடாது.

அதனால் தான் வள்ளலார் "' எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞாஜோதி'''  என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

இயற்கை என்பது சாதி.சமயம்.மதம்.உற்றவர்.பெற்றவர்.் உறவினர் நண்பர்.போன்ற எந்த பேதமும்் இல்லாமல் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்ன என்பதை அறிந்து செயல்படுவதுதான் இயற்கை என்பதாகும்.

இறைவன் இயற்கை உண்மையானவன்.அதேபோல் நாமும் இயற்கை உண்மையுடன். பின்பற்ற வேண்டும்.

அருள் இயற்கை விளக்கமானது.இயற்கை இன்பமானது.

இயற்கை உண்மையுடன் ஜீவகாருண்யம் செய்தால் மட்டுமே இயற்கை விளக்கமான அருள் சுரக்கும்.அருள் கிடைத்தால் மட்டுமே.இயற்கை இன்பம் கிடைக்கும். செயற்கை உடம்பானது இயற்கை உடம்பான ஒளிதேகமாக மாற்றம் அடையும்.

அதன் பின்பு கிடைக்கும் இன்பம்தான் இயற்கை இன்பம் என்பதாகும்.அதற்கு பெயர்தான் .பேரின்ப பெருவாழ்வு என்பதாகும்.மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

இந்த இன்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்பது தான் வள்ளலாரின் பேராசையாகும். இறைவன் விருப்பமும் இதுவேயாகும்.

வள்ளலாரின் அருள் வாய்மையை பின்பற்றி வாழ்ந்து காட்டுவோம்.மற்றவர்களுக்கும் வழி காட்டுவோம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

விபூதி வைக்கலாமா ? வேண்டாமா ?

விபூதி வைக்கலாமா ? வேண்டாமா ?

வள்ள்லார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுபவர்கள்.விபூதி மட்டும் அல்ல . எந்த சின்னங்களும் அணியக்கூடாது.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.மற்றைய  மார்க்கங்கள்.சொல்லியுள்ள.ஆச்சார .சங்கற்ப விகற்பங்கள் .எவற்றையும் பின் பற்றுவது .அறியாமையாகும் .தவறானதாகும்.

நாம் தினமும் சன்மார்க்க சங்கங்களில் வள்ளலார் சொல்லி உள்ள. மிகவும் அழுத்தமாக  அறிவுறுத்திய  விண்ணபங்களை அனைவரும் சொல்லிக் கொண்டே வழிபாடும் செய்கிறோம். வழிபாடு செய்து கொண்டே தவறும் செய்து கொண்டு வருகிறோம்.

வள்ளலார்.தன்னுடைய உருவப் படமே வேண்டாம் என்று சொல்லி. மண்ணால் செய்து கொண்டுவந்த தன்னுடைய உருவத்தை கிழே போட்டு உடைத்தார்.மறைத்தார் வள்ளலார்.

 மீண்டும் அவர் உருவத்தை அன்பினாலும்.அறியாமையாலும். செய்து.அவருக்கே விபூதி அடித்து .சமய மதவாதி ஆக்கி.அழகுபார்த்து அசிங்கப் படுத்தியவர்கள் நமது சைவ சமயத்தவர்கள்.கேட்டால் விபூதிக்கு ஆயிரமாயிரம் விளக்கம் சொல்லி கேட்வர்களை அடக்கி விடுவார்கள்.

விபூதியின் கொள்கையே சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானது. மரணம் அடைந்தால் பிணத்தை எரித்து சாம்பலாக்குவது .சமய மதங்களின் கொள்கை.அந்த சாம்பலின் அடையாளம்தான் விபூதி. முடிசான்ற மன்னர் எல்லாம் ஒரு பிடி சாம்பலாகிவிடுவான்.என்பதாகும்.மேலும் ஆறிலும் சாவு.நூறிலும் சாவு என்பதாகும்.மேலும் பிறக்காமல் இருக்க வேண்டும் எனறு இறைவனிடம் கேட்பது சமய மதக் கொள்கைகளாலும்.

இறந்தால் மீண்டும் பிறப்ப உண்டு என்பதே தெரியாமல் வேண்டிக் கொண்டு உள்ளார்கள்.

நமது வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை.மரணம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதாகும்.அப்படி முயற்சி தவறி அஜாக்கிறதையால் மரணம் வந்தாலும் எரிக்கக்கூடாது .புதைக்க வேண்டும் என்கிறார். ஆண்டவர் மீண்டும் எழுப்பித்தருவார் அதனால் எரிக்காதீர்கள்.

இந்த உண்மை தெரிந்து இருந்தால் பிணத்தை எரிக்கவும் மாட்டார்கள்.சாம்பலை நெற்றியில் உடம்பு எல்லாம் அணிந்து கொள்ளவும் மாட்டார்கள்.இந்த மூடநம்பிக்கையை ஒழிக்கவும்.அழிக்கவும் தான் வள்ளலார் வந்தார்.இறுதியில் அவருக்கே நெற்றியில் பட்டையை அணிவிக்க துணிந்து விட்டோம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு விபூதி இல்லாத வள்ளலார் படம் உலகம் மழுவதும். எங்குமே இல்லை.நான் ஈரோடு சன்மார்க்க சங்கத் தலைவராக இருந்த போது.நானும் விபூதி அடிப்பதை நிறுத்தினேன்.வள்ளலார் உருவத்திற்கும் விபூதி அடிக்காத  ஸ்டீலினால் செயத கட்அவுட் செய்து சன்மார்க்க சங்கத்தில் வைத்தேன்.அந்த படம் இன்னும் என் வீட்டில் உள்ளது.அந்த படத்தையும் சத்திய ஞானசபை படத்தையும்  வேனில் வைத்து தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றேன்.அப்போது எனக்கு வயது முப்பது.

தமிழ் நாட்டில் வள்ளலாருக்கு விபூதி வைக்காத முதல் படம் செய்து வைத்தது ஈரோடு கதிர்வேல் ஆகிய நான்தான் என்பது நிறைய பேருக்கு இன்னும் தெரியாது.

பெரிய போராட்டம்.!

விபூதி இல்லாத வள்ளலார் படத்தைப் பார்த்ததும்.ஈரோடு சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் எனக்கு அளவில்லாத மறைமுகமானத் தொல்லைகளைக் கொடுத்தார்கள்.என்னை கொலை செய்யவும் துணிந்தார்கள்.நான் ஏதற்கும் அஞ்சவில்லை பயப்படவும் இல்லை.வள்ளலாரின் திருஅருட்பா ஆதாரங்களையும் சுத்த சன்மார்க்கத்தின் விளக்கங்களையும் எடுத்துச் சொல்லி அவர்களின் உணர்வுகளையும்.எதிர்ப்புகளையும் சிதரடித்தேன்.பின்பு என்னிடம் நெருங்கவே பயந்தார்கள் இவைகள் யாவும் தமிழ்நாடு முழுவதும்  தீ போல் பரவியது தமிழகம் எங்கும் பரவியது.வடலூர் தெய்வ நிலையத்திற்கும் சென்றது.

அடுத்து ஈரோட்டில் மூன்றுநாள் சன்மார்க்கசங்க முப்பெரும் விழா பிரமாண்டமான முறையில் எடுத்தோம்.அந்த விழாவிற்கு தமிழ் நாட்டில். அப்போது உள்ள சன்மார்க்கத்தில் முக்கியமான..மகாலிங்கம்.கிரிதாரிபிரசாத்.ஊரன் அடிகள்.துறவி கந்தசாமி.மு.பாலு.விழுப்புரம் கோவிந்தசாமி.டாக்டர் ராஜமாணிக்கம்.சேலம்டாக்டர் துரைசாமி.பழ சண்முகனார்.ஓம் தத்பத்அடிகள்.சங்கரய்யா .நீதிபதி பழனிச்சாமி.பஞ்சாச்சரம்.முத்துக்குமார்.மணி.பாண்டுரங்கன்.கருனாநிதி.மற்றும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோட்டு மாவட்ட தலைமை நீதிபதி.மாவட்ட ஆட்சியர் .மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.திரு பாஸ்கரன். போன்ற உயர் அதிகாரிகளின் தலைமையில் மூன்று நாட்கள் விழா அனைவரும் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக நடத்தினோம்.

அந்த விழாவில் தான் வடலூரில்்  வள்ளலார் தெய்வ நிலையங்களின் மிகவும் முக்கியமான சீர் சிருத்த பணிக் கொள்கைகள் ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது.

அதில் மிகவும் முக்கியமானது வள்ளலார் படத்திற்கு விபூதியோ.வேறு சின்னங்கள் எதுவுமே அணிவிக்கக்் கூடாது.

அடுத்து மகாமந்திரமான."அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞாஜோதி!'' என்னும் மந்திரத்தை பிரித்து பிரித்து சொல்லாமல்  ஒரே முறையில் சொல்ல வேண்டும் என்றும்.. வடலுர் தெய்வ நிலையங்கள் வெளியிடும் புத்தகங்கள்.பத்திரிகைகளில்.எவற்றிலும் வள்ளலார் உருவ படத்திற்கு விபூதி போன்ற சமய சின்னங்கள் உள்ள படங்களை வெளியிடக்கூடாது என்றும் பல முக்கியமான தீர்மாணங்களுடன் விழா நிறைவு பெற்றது.

அடுத்து மகாலிங்கம் அவர்கள் இராமலிங்க பணிமன்றம் சார்பில் ஆயிரக்கான .விபூதி இல்லாத வள்ளலார் படங்கள் வெளியிட்டார்.அதன் பின்னர்தான் விபூதி இல்லாத படங்கள் வெளிநாடு. தமிழகம் எங்கும் வந்தன.

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களிலூம் வள்ளலார் படங்களுக்கு விபூதி இல்லாத படங்களே இன்று வரை வெளியிடப்படுகின்றது.அதன் பின்பு தான் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பது பேசத் தொடங்கினார்கள்.எனக்கு உற்ற துணையாக துறவி கந்தசாமி அய்யா அவர்கள். தோள் கொடுத்தார்.இது வரலாற்று உண்மைகள்.

மேலும் ஞானசபையில் சபேசன் என்ற ஐயர் நடராஜர் சிலை வைத்து உருவ வழிபாடும் ஜோதி வழிபாடும் செய்து வந்தார் அவரை எதிர்த்து போராடி.உருவ வழிபாடு ஞானசபையில் செய்யக்கூடாது.என்று  ஞானசபை சாவியை பிடுங்கி அவரை வெளியே ஏற்றுவதில் தொடங்கி வைத்தவன் ஈரோடு கதிர்வேல் ஆகிய நான்தான்.வடலூர் மக்கள் சிலபேர் அய்யருக்கு ஆதரவாக என்னை அடிக்க துறத்திக் கொண்டு வந்தார்கள்.அதையும் முறிஅடித்தேன்.அதற்கு பிறகுதான் விழிப்பு உணர்வு சன்மார்க்கிகளிடம் ஏற்பட்டது. அவற்றை விரிக்கில் பெறுகும்.

தமிழ் நாட்டில் சுத்த சன்மார்க்கம் பற்றி மேடையில் முழங்குவதற்கு.துறவி கந்தசாமி.ஈரோடு கதிர்வேல் விட்டால் ஆட்கள் இல்லை.இன்று உலகம் முழுவதும். ஆன்ம நேய உடன் பிறப்புக்கள் புற்று ஈசல் போல் வந்து கொண்டு உள்ளார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகவும்.மன நிறைவாகவும் உள்ளன.

ஞான சபையிலும் விபூதி பிரசாதம் வழங்க வேண்டாம் என்று இனிப்பு வழங்கப் பட்டு வருகின்றது.

இன்னும் தருமச்சாலையிலும்.மருதூரிலும்.கருங்குழியிலும்.மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திலும்.விபூதி வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது. அவற்றையும் தூய்மை படுத்த வேண்டிய கடமை சுத்த சன்மார்க்கிகளிடம் உள்ளது.

வள்ளலார் சொல்லிய சுத்தசன்மார்க்கம் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மறைமுகமான முறையில் சமய மதவாதிகளின் சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு உள்ளது . எல்லாமே சன்மார்க்கத்தில் இருந்து கொண்டே சன்மார்க்க வேடம் போட்டுக் கொண்டு சமயவாதிகளினால்  மறைமுகமான சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

அவர்களை இனம் கண்டு சுத்த சன்மார்க்கிகள்  அவர்களை விளக்காமல் புத்தி புகட்டவேண்டும்.

இதை எல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால்.சுத்த சன்மார்க்கம் வளர்ந்தால்தான் .வள்ளலார் சொன்ன சாதி.சமய. மத  மூட நம்பிக்கையான ஆச்சார சங்கற்ப விகற்பங்களை அகற்ற முடியும்.

தயவு செய்து சொல்லுகிறேன் .நீங்கள் விபூதி அணிந்து கொள்ளுங்கள்.நாமம் போட்டுக் கொள்ளுங்கள்.குல்லா அணிந்து கொள்ளுங்கள்.சிலுவை அணிந்து கொள்ளுங்கள்.அது உங்கள் விருப்பம். வள்ளலார் உருவப் படத்திற்கு எந்த சமய.மத சின்னங்களையும் அணிவிக்காதீர்கள்.

அணிவித்து வள்ளலார் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.அந்த பாவம் உங்களை சும்மா விடாது.

இப்படி எல்லாம் இந்த மக்கள் அறியாமையாலும்.ஆர்வத்தாலும் செய்வார்கள் என்பதால்தான் தன்னுடைய உருவ படமே வேண்டாம் என்றார் வள்ளலார்.

இறந்தவர்களுக்குத்தான்.படம் வைத்து மாலைபோட்டு மரியாதை செலுத்துவார்கள்.வள்ளலார் மரணத்தை வென்றவர்.அவருக்கு உருவமே கிடையாது.அவர் உருவம் ஒளி உருவம் .என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த உண்மையே தெரியவில்லை என்றால்.சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து. எப்படி அருளைப் பெறப் போகிறீர்கள்.மரணத்தை வெல்லப் போகிறீர்கள்.

சின்ன சின்ன விஷயமே தெரிந்து கொள்ளாமல் இருந்தால் பெரிய விஷயம் எப்படி சாத்தியமாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதினியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் அற்புதமே.என்கிறார் .

அந்த அற்புதத்தை நாமும் பெற வேண்டும். பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கம். உலகத்தில் உள்ள அனைவருக்கும் போதிக்கின்றது.

எனவே அற்ப விஷயங்களுக்கு உங்கள் மனதை செல்லவிடாமல்.அருளைப் பெறும் .தீவிர முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 1 பிப்ரவரி, 2017

குரு வேண்டுமா ? வேண்டாமா ?

குரு வேண்டுமா ? வேண்டாமா ? என ISO அண்ணா துரை அய்யா அவர்கள் கேட்டு உள்ளார்.

வள்ளலார் வாழ்ந்து காட்டிய வழியில் செல்வதற்கும்.சாகாக்கல்வி கற்பதற்கும்.குரு என்பவர் ஒருவர் வேண்டுமா ? வேண்டாமா ? என்ற கேள்வி. எண்ணம் நிறைய சன்மார்க்க அன்பர்கள் உள்ளத்திலே சந்தேகம் நிறைந்து உள்ளது.

மேலும் சன்மார்க்க சங்கம் வைத்துக் கொண்டுள்ள சில சன்மார்க்க அன்பர்கள்.குரு உபதேசம் செய்வதும்.தீட்ஷை கொடுப்பதும்.சாகாக்கல்வி சொல்லிக் கொடுக்கிறேன் என்றும்.உடம்பை மரணம் அடையாமல் நீடிக்க காயகல்பம் செய்து தருகிறேன் என்றும்.பணம் பறிக்கும் நோக்கத்துடன் .சமயவாதிகள்போல் செயல் பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.அவர்கள் மரணத்தை வெல்லும் தகுதி உடையவர்களா என்பதை ஊன்றி கவனிக்க வேண்டும்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைக்கு .குருவோ.குரு உபதேசமோ.தீட்ஷையோ தேவையே இல்லை....இவைகள் யாவும் சமய.மதங்களைச் சார்ந்தது.

சாதியும்.மதமும்.சமயமும் பொய் என்றார் வள்ளலார்.அப்படி இருக்க சமய மதங்கள் சொல்லி உள்ள.அவர்கள் பின் பற்றிய குருவை.குரு  தீட்ஷை பெற வேண்டும் என்ற பழக்கத்தை எப்படி வள்ளலார் ஏற்றுக் கொள்வார்.சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் காட்டியுள்ள சுத்த சன்மார்க்கம் என்பது ஞான மார்க்கம்.மரணத்தை வெல்லும் மார்க்கம்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்  நேரடி தொடர்பு கொண்டு அருளைப் பெறும் மார்க்கம்.அதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம். இது தனி மார்க்கம். புதிய மார்க்கம். எனவே இந்த மார்க்கத்தைப் பற்றி வள்ளலாரைத் தவிர வேறு எந்த ஞானிகளுக்கும்.வேறு எவருக்கும் தெரியாது.

வள்ளலாருக்கு குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை அவசியம் சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலாரே திருஅகவலில் பதிவு செய்து உள்ளார்.

மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !

என்னும் அருள் வரிகள் வாயிலாக தெரிவித்து உள்ளார்.

மேலும்.கற்றதும் நின்னிடத்தே.பின் கேட்டதும் நின்னிடத்தே.களித்ததும் நின்னிடத்தே என்கின்றார்.ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீதான் என்றும்.ஒதி உணர்ந்தவர்கள் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து உணர்வுர செய்தாய் என்றும்.ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் என்றும் நிறைய அருட்பா பாடல்களிலே தெரிவித்து உள்ளார்.

மேலும் உபாய மார்க்கம்.உண்மை மார்க்கம்.அனுபவ மார்க்கம் என பிரித்து.உபாய மார்க்கத்தை நம்பாதீர்கள்.உண்மை மார்க்கத்தை தெரிந்து அனுபவ மார்க்கத்திற்கு வாருங்கள் என்கின்றார்.சமய மத மார்க்கங்கள் யாவும் உபாய மார்க்கம்.அவற்றை பின் பற்றாதீர்கள் என்கின்றார்.அதில்தான் குரு என்ற உபாயத்தை வைத்து ஏமாற்றி உள்ளார்கள்.அதனால் எந்த பயனும்.எந்ந லாபமும் இல்லை என்கின்றார்.

அனுபவத்தால் அறிந்து கொள்வதுதான் சுத்த சன்மார்க்கம்.அனுபவத்தால் அறிக என்று அருட்பாவில் பல இடங்களில் பதிவு செயது உள்ளார்.

மேலும் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய சாதனம் என்னவென்றால்.எல்லா ஜீவர்கள் இடத்தும் தயவும்.ஆண்டவர் இடத்தில் அன்புமே முக்கிய சாதனமாகும் என்கின்றார்.உபாய குருவோ.உபாய சாதனமோ சுத்த சன்மார்க்கத்திற்கு தேவை இல்லை.

புதியதாக  சன்மார்க்கத்திற்கு வரும் அன்பர்களுக்கு அனுபவம் உள்ள மூத்த சன்மார்க்கிகள் உண்மையான வழியைக் காட்டலாம்.குரு உபதேசம என்னும் சமய.மத செயல்களை பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

சுத்த சன்மார்க்கம் ஜீவ காருண்ய ஒழுக்க மார்க்கம்.அவரவர்கள் ஒழுக்கத்திற்குத் தகுந்தாற் போல் ஆன்ம லாபமும்.அருள் லாபமும் கிடைக்கும்.

வள்ளலார் பேருபதேசத்தில் கீழ் கண்டவாறு பதிவு செய்து உள்ளார்.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. என்பதை தெளிவாக தெரிவித்து உள்ளார்.

எனவே சன்மார்க்கிகளுக்கு குரு உபதேசமோ.தீட்ஷையோதேவை இல்லை.சாகாக்கல்வி என்பது வள்ளார் சொல்லியுள்ள நான்கு ஒழுக்கங்கள் மூலமாக பெற வேண்டியதாகும்.ஒழுக்கங்களை அனுபவம் உள்ள சன்மார்க்கிகள் சொல்லித்தரலாம். கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைவருக்கும் குரு எல்லாம் வல்ல  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் என்பதை வள்ளலார்.

ஆதி அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்.இது நீவீர் மேலே ஏறும் வீதி.மற்றைய வீதிகள் எல்லாம் கீழ் செல்லும் வீதி என்கின்றார்.

கீழே என்பது மரணம் அடைந்து மண்ணிற்கு போவது.மேலே என்பது மரணம் அடையாமல் அருட்பெருஞ்ஜோதியுடன் கலப்பது.என்பதாகும்.

இன்னும் விரிக்கில் பெறுகும்.

ஞானசரியை நான்காவது பாடல்...

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே.கற்றது எல்லாம் பொய்யே நீர் கழித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே.உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே.

விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே.

எணடகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே..!

என்னும் பாடல் வாயிலாக சாட்டை அடிக் கொடுத்து புதிய சுத்த சன்மார்க்கப் புரட்சி செய்து உள்ளார்.

இந்த ஒருபாடலே போதும் என நினைக்கிறேன்.

தொடரும்....

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.