வெள்ளி, 28 டிசம்பர், 2012

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

உலகில் உள்ள அனைவரும் ஒருதாய் மக்கள் ,நம்முடைய ஒரே தந்தை ''அருட்பெருஞ்ஜோதி'' ஆண்டவர் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் .இந்த உலகம் நம் அனைவருக்கும் சொந்தம்.இதுவரையில் இருந்தது போல்,இனிமேலும் வீண்காலம் கழிக்காமல் , இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்.

இறைவன் படைத்த இவ்வுலகில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சமமானதாகும் .அனைவரும் சமமாக பகிர்ந்து வாழ்ந்தால் ,நம்மை படைத்த இறைவன் மகிழ்ச்சி அடைவார் .உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் எனற பேதம் இல்லாமல் பகிர்ந்து உண்டு ,அனுபவித்து,மகிழ்ந்து ஒற்றுமையுடன் வாழ்வோம்.

வருகின்ற புத்தாண்டு, அனைவருக்கும். மகிழ்ச்சியும் ,ஆனந்தமும், நிறைந்து வழங்க ,எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய ,''அருட்பெரும்ஜோதி ''ஆண்டவர் அருள்புரிவார் .அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.தீயவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகட்டும் ,அவர்களுக்கு இறைவன் அறிவைக் கொடுத்து புனிதர்களாக மாற்றட்டும் .,உண்மை ,நேர்மை,ஒழுக்கம் ,உழைப்பு,ஓங்கட்டும்.

அனைத்து இல்லங்களிலும் இருள் ஒழிந்து, ஒளி வீசட்டும் ! ....தீவிரவாதம் ..,பயங்கரவாதம்,..அணுஆயுத புரச்சி,..எல்லைத் தகராறு,..சாதி சமய மத வேறுபாடுகள்,..அரசியல் காழ்புணர்ச்சி ,..அதிகார துஷ்பிரயோகம்.. ,போன்ற கொடுஞ் செயல்கள் ஒழிந்து ,மக்கள் ஒழுக்கமுடன் ,ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ,அனைவரும் வருகின்ற புத்தாண்டில் சபதம் எடுப்போம்.சத்தியத்தை கடைபிடிப்போம்,சமரசம் காண்போம்.புனிதமுறு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை'' படைத்து புதிய உலகத்தை காண்போம் . .

நாடும், நாமும் ,எல்லா உலக உயிர்களும் ,வருகின்ற புத்தாண்டு முதல் அழிவில்லாத நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.இறைவன் நம்மை என்றும் இடைவிடாது ,துணையாக இருந்து வாழ வைப்பார்,என்ற முழு நம்பிக்கையுடன் வாழ்வோம்.

வருக ! வருக ! புத்தாண்டு என வணங்கி வரவேற்போம் .

உங்கள் அன்பில் வாழும் ஆண்மநேயன் ;--கதிர்வேலு.

வியாழன், 20 டிசம்பர், 2012

உலகம் அழியும் என்பதை யாரும் நம்ப வேண்டாம் !


உலகம் அழியும் என்பதை யாரும் நம்ப வேண்டாம் !

உலகம் அழியும் எனபது, உலகம் மனிதர்களால் செய்த பொம்மை அல்ல !

உலகம் அழியும் என்ற வதந்தியை பரப்பியது முட்டாள்கள் சொன்ன கதையாகும்..கதைகளையும் கற்பனைகளையும் மூட நம்பிக்கைகளையும் ,மக்கள் மனதில் விதைத்த ஆன்மீகவாதிகளின் அறியாமை செயல்களாகும் .

உலக ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் ,அருள் பெற்ற ஞானசித்தர்களால் மட்டுமே அறியமுடியும் .அந்த ஞானசித்திப் பெற்ற அருளாளர் ,உலகிலேயே வள்ளல்பெருமான் ஒருவர்தான் .மற்றவர்கள் எல்லாம் ,கருமசித்தி,யோகசித்திப் பெற்றவர்கள் .அவர்கள் சொல்லுவது யாவும் உண்மைக்கு புறம்பானதாகும் .

உலகம் மாபெரும் அருள் இயக்கம் ! அதை கணிக்க அறிவியலாலும் முடியாது,ஆன்மீக சிந்தனை யாளர்களாலும் முடியாது.இந்த உலகம்போல் (அண்டம் ) பலகோடி உலகங்கள் உள்ளன .அத்தனை உலகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் ,இயங்கிக் கொண்டும் உள்ளன .இதை எல்லாம் இயக்கிக் கொண்டு உள்ளது எது ?யார் ? அது எங்கு இருந்து இயக்கிக் கொண்டும், இயங்கிக் கொண்டும் உள்ளது என்பதை வள்ளலார் என்னும் அருளாளர் வெளிப்படையாக சொல்லி ,மக்களுக்கு பதிவு செய்து உள்ளார் .அந்த பாடலைப் பாருங்கள் ...

அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள் எல்லாம் பொருள்கள்
ஆனவெல்லாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாம் கொண்டவெலாம் கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு சலிப்பு இன்றிக்
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியே அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒன்டகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

உலகில் உள்ள அண்டங்களையும் ,தோற்றங்களையும் ,அதன் உள் இருந்து இயங்கும் உயிர்களையும்,மற்றும் உயிர் அற்ற பொருள்களையும் , பஞ்ச பூத் அணுக்களையும் (மண்,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம்,) படைத்து ஆடல் (இயக்கம் )செய்து நடத்துகின்ற ,,,அந்த ஈடு இணையற்ற மாபெரும் சக்திதான் ''அருட்பெருஞ் ஜோதி "'என்னும் பெரோளியாகும் ,அந்த பேரொளி இருக்கும் இடம் ,''அருட்பெருவெளி '' என்பதாகும்..அந்த பேரொளியைக் கண்டவர்கள்தான் ஞான தேகம் படைத்தவர்கள் ,ஞானதேகம் படைத்தவர்களுக்கு மரணம் கிடையாது ,உடம்பு உயிர் கிடையாது ,அதற்குப் பெயர் ''சுத்த பிரணவ ஞான தேகம் ''என்பதாகும்.அதற்கு மேலும் சொல்ல வேண்டுமானால் ''ஒளிதேகம் ' பெற்றவர்கள் என்பதாகும்.

உலக வரலாற்றில் ஒளிதேகம் பெற்ற ஒரேஒரு மனிதர் தமிழ் நாட்டில் தோன்றிய ''திருஅருட் பிரகாச வள்ளலார் ''என்பவராகும்..

அவர் சொல்லுகிறார் உலகம் என்றைக்கும் அழியாது ! அழிக்கவும் யாராலும் முடியாது. இனிமேல் வரப்போகிறது ஞான சித்தன் காலம்.,இனிமேல் சுத்த சன்மார்க்கம் என்னும் உண்மைப் பொது நெறி ஒன்றே ,எல்லா உலகத்தும் விளங்கும்.

இதற்கு எவ்விதப் பட்ட தடைகளும் கிடையாது.தடையற்ற பெருநெறி ,இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும் .அதன் மேன்மேலும் வழங்கும்.

இப்போது உள்ள பலவகைப் பட்ட சமய பேதங்களும் ,சாத்திர பேதங்களும் ,ஜாதி பேதங்களும் ,ஆசார பேதங்களும் போய் ,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்,இது கடவுள் சம்மதம்,விருப்பம்.என்கிறார் .
இப்போது வருகிற நமது கடவுள் ,இதற்கு முன் சமய ,மத,சாத்திர ,புராணங்களில் வந்ததாகச் சொல்லப் படுகின்ற பலவகைப் பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி,முதலானவர்களில் ஒருவர் அல்ல ! என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

மேலும் இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் ,எல்லாத் தேவர்களும்,எல்லா ஞானிகளும்,,தங்கள்,தங்கள்,தரத்திற்கு ,தகுந்த அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க் கினறபடி எழுந்து அருள்கின்ற தனித்தலைமைப் பெரும்பதி ''அருட்பெருஞ் ஜோதி ''என்னும் ஒரே அருள் ஒளிதான் என்பதை அனைத்து உலகமும் அறிந்து,தெரிந்து,புரிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவு படுத்தி உள்ளார்.

ஆதலால் உலகம் என்றும் அழியாது ,உண்மையை அறிந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.கடவுள் ''அருட்பெரு ஒளியாக'' உள்ளார் என்பதை அறிவு தெளிபட உணர்ந்து ,ஒளியையே கடவுளாக நினைந்து வழிபாடு செய்து ஒளிபெற்று ஆனந்தமாக வாழுங்கள் .

உங்கள் அன்புள்ள ஆண்மநேயன் ;--கதிர்வேலு

திங்கள், 17 டிசம்பர், 2012

சாத்தானின் வேதங்கள் !


சாத்தானின் வேதங்கள் !

உலகில் தோன்றிய மதங்கள் ,சமயங்கள் ,சாதிகள், சாத்திரங்கள்,புராணங்கள்  யாவும் சாத்தானின் வேதங்களாகும் ..சாத்தான்என்பதும்  .சைத்தான்என்பதும், மாயைஎன்பதும் அனைத்தும் ஒன்றை பற்றியே குறிப்பதாகும்

உலக வாழ்க்கையில் சிக்குண்டவர்கள் எழுதிய நூல்கள்,அவர்கள் போதித்த போதனைகள் அனைத்தும்  உலகில் உள்ள அனைத்து வேதங்களும் ஆகும். மாயையில் சிக்குண்டவர்கள் மரணத்தை வெல்ல முடியாது .மரணத்தை வெல்ல முடியாதவர்கள் உண்மையான செய்திகளை தரமுடியாது.மாயையில் சிக்குண்டவர் களால் சுத்தமான உண்மையை தெரியப் படுத்த முடியாது /

சாத்தானின் வேதங்கள் என்று இஸ்லாம் மதத்தை பற்றி இஸ்லாம் மதத்தை சேர்ந்த சாலமன் ருஷ்டி என்பவர் தெளிவாக விளக்கி உள்ளார்.அவர் அப்படி எழுதி உள்ளதால் அவரை எங்கு இருந்தாலும் சுட்டு கொலை செய்ய அரேபிய நாட்டு இஸ்லாம் மதத தலைவர்கள் ஆணை இட்டார்கள் அதனை கேள்வியுற்ற சாலமன் ருஷ்டி தலை மறைவானார் அவர் எழுதிய புத்தகத்தை வெளியே வராமல் அழித்து விட்டார்கள் உண்மையை சொல்பவர்களை இந்த உலகம் அழித்து விடுகிறது .

சமயங்கள் மதங்கள் யாவும் பொய்யான கற்பனைகள் ..கொலை செய்யும்  கொலைககாரக் கடவுள்களையே அறிமுகப் படுத்தி உள்ளது கொல்லும் கடவுளைப் பற்றியே பேசுகிறது அந்த கடவுள் யாவும் கோபம உடையது என்றும் கூறுகிறது .இதற்கு சமய ,மத வேதங்களும் சாத்திரங்களே ஆதாராமாகும்.

எல்லா மதங்களும் உண்மையான  கடவுளுக்கு களங்கம் கற்பித்து உள்ளன உண்மையான கடவுளை யாரும் கண்டதில்லை, காரணம் அனைவரும் மாயையில் சிக்குண்டவர்கள் அவர்கள் கண்டது எழுதியது அனைத்தும் குற்றம் உடையதே .உண்மையான கடவுளை கண்டவர்களுக்கு மரணம் வராது, எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது .மரணம் அடைந்தவர்கள் எழுதியது அனைத்தும் சாத்தானின் வேதங்கள் என்பதை மனிதகுலம் அறிந்து கொள்ள வேண்டும் .

இன்றுவரை சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே ஆதியிலே அபிமாநித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே என்று வள்ளலார் அனைத்து மதங்களையும் சாடி உள்ளார்.
நமது வள்ளல பெருமான் அவர்கள் உண்மையான கடவுளை அறிந்து உணர்ந்து கண்டு கலந்து இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் என்பது மாபெரும் உண்மையாகும்

அந்த உண்மையானக் கடவுள்தான் '''அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி என்பதாகும் .

.ஏன் அவர் மட்டும் உண்மையான கடவுளைக் கண்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அவர் மாயையில் அதாவது சாத்தானின் வழியில் வலையில் சிக்க வில்லை .உலகில் உள்ள எந்த பொருளையும் அவர் அனுபவிக்க வில்லை நமது உயிரையும் உடம்பையும், என்றும் அழியாமல் காக்கும் அருள் என்னும் பொருளை கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான் என்பவராகும்.அந்த அருளைத் தரக்கூடிய ஒரே ஒரு கடவுள்  'அருட்பெரும் ஜோதி ''என்னும் பெரோளியாகும் .

அந்த ஒப்பற்ற பேரொளி என்னும் ஆண்டவரிடம் முழுமையாக அருள் என்னும் திரவத்தைக் பெற்றுக் கொண்டவர் வள்ளலார் ..அந்த அருளைப் பெற்றவர்கள்தான் உண்மையை உணரமுடியும் உரைக்க முடியும் எழுத முடியும் ..அப்படி அவர் எழுதியதுதான்,''திருஅருட்பா' என்னும் ஞான நூலாகும்.
வள்ளலாருக்கு மரணம் என்பது கிடையாது கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் அதாவது ஒளி தேகம் பெற்றவராகும்.அவர் அருள் ஞானத்தால் மக்களுக்கு காட்டிய தெய்வம் அருளாகவும் கருனையாகவும் விளங்கிக் கொண்டு உள்ளது அதுவே அருட்பெரும்ஜோதி என்னும் கடவுளாகும் .அது எங்கும் உள்ளது அது எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளது ஆதலால் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும் .

அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பெயர் வைத்தார் வள்ளலார் .

ஆதாலால் தான் கொல்லாமையும் புலால் உண்ணாமையும் வேண்டும் என்று மிகவும் கடுமையாக வலியுறுத்தி உள்ளார் எந்த உயிர்களையும் அழிக்காமல் வாழும் வாழ்க்கையே மனித வாழ்க்கையாகும்.அதற்கு ஜீவ காருண்யஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார் .கடவுள் இருக்கும் இடம் அருள் என்னும் கோட்டையாகும்,அந்த கோட்டைக்கு  உள்ளே போகவேண்டும் என்றால் கோட்டையின் கதவைத் திறக்க சாவி என்னும் திறவுகோல் வேண்டும்.

அந்த திறவுகோல் ஜீவ காருண்யம் என்னும் அன்பு ,தயவு,கருணை கொண்டு உயிர்கள் மகிழ்ச்சி அடைய செய்வித்தால் அந்த ஜீவ காருண்ய உபசரிப்பே அருள் என்னும் கோட்டையைத் திறந்து உள்ளே செல்லும் திறவுகோல் கிடைக்கும் .  அதுவே கடவுளை அறிய முக்கிய திறவு கோலாகும் என்றார் வள்ளலார்  .அவர் காட்டிய மார்க்கம் புனிதமானது உண்மையானது .அதுவே சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

சுத்த சன்மார்க்கம் ;--சமயம் மதம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம்;---சாகாக் கல்வி கற்கும் மார்க்கம்.

ஆதலால் சாத்தானின் வேதங்களான,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் ,சாத்திரங்கள் போன்ற பொய்யான நூல்களை  ஓதாமல் உணராமல் ,உண்மையான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சார்ந்து ,உணர்ந்து, ஆன்ம நேயத்தோடு ஜீவ காருண்யத்தோடு.உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .

வள்ளலார் அழியாத் தேகம் பெற்ற பாடல் ஒன்று ;--

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக கருவியாலே
கோளாலே பிறர இயற்றும் கொடுஞ் செயல் களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெரும் ஜோதி இறைவனைச சார்வீரே !

வள்ளலார் மரணத்தை வென்றவர் என்பதற்கு மேலே கண்ட பாடல் பொருத்தமான சான்றுகளாகும் .

ஆதலால் நாம் ..எல்லா மனித குலத்துக்கும் பொதுவான, உண்மையான ,''அருட்பெரும் ஜோதி '' என்னும் ஒளியானக் கடவுளை ,ஆண்டவரை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீரால் அழுது அழுது தேடுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு ...

மேலும் பூக்கும் .....

செவ்வாய், 11 டிசம்பர், 2012

இன்பம் எங்கே இருக்கிறது தேடுங்கள் !


இன்பம் எங்கே இருக்கிறது தேடுங்கள் !

உலக உயிர்கள் வாழ்வதற்கு பஞ்ச பூத அணுக்கள் இறைவனால் படைக்கப்பட்டு உள்ளது .மேலும் நவ கிரகங்கலும்,அவைகள் இயங்குவதற்கு ,அக்கினி ,சூரியன் ,சந்திரன் ,நட்சத்திரங்கள் ,போன்ற ஒளி சக்தி கிரகங்கள் படைக்கப்பட்டு உள்
ளன.அதில் முக்கியமான மாற்றம் இரவு, பகல் .இரவில் உறங்கும் உயிர்கள் தன்னுடைய ஆற்றலைப் பெறுவதற்கு,காலை நேரம் மிகவும் அத்தியா அவசியமானதாகும்,அந்த அதிகாலை நேரத்தில் அமுதக் காற்று,பூதக்காற்று விஷக்காற்று,போன்ற காற்று அலைகள் பூமியை நோக்கி வந்து எல்லா உயிர்களும் இன்பம் அடைய செய்யும் .அதில் பூத்க்காற்று,விஷக்காற்று,சுவாசிக்கும் உயிர்கள் சீக்கிரம் நஷ்டம் அடையும்.அமுதக் காற்றை சுவாசிக்கும் உயிர்கள் இன்பத்தை அனுபவித்து,மகிழ்ச்சியுடன் வாழும் .உயிர்கள் வாழ்வதற்கு சூரிய ஒளி மிகவும் முக்கியமானதாகும் ,அதனால்தான் நாம் அனைவரும் காலை வணக்கம் சொல்கிறோம் (good morning)காலையில் இருந்து மாலை வரையில் உயிர்கள் தன்னுடைய வாழ்க்கைக்காக உணவுவகைகள் தேடி உண்டு வாழ்ந்து வருகின்றன.சுக்கிலம் உண்டாகும் விதம் !

தினம் ஆகாரம் கொள்வதால் அவ்வாகாரம் மார்பிடத்தில் ஓர் தட்டில் தங்கும் .அந்த தட்டின் மேல் இரண்டு நரம்புகள் கடவுள் ,கடவுளி என்று இருக்கின்றன.நாம் உண்ட அன்னத்தை ஒருமணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய தத்துவ உறுப்புகளுக்கு ஊட்டுகின்றது .மறுபடியும் இரண்டு மணி நேரத்தில் மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியை இரத்தமாக மாற்றி அதை சுக்கிலமாக்கி (விந்து )இரண்டரை  ஸ்பூன் அளவு கோச நுனியில் ஒன்றும் ,நாபியில் ஒன்றும்.பிரமந்திரத்தில் அறையுஞ் ...சேர்த்து மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ,ஈளை ,குறும்பை,நகத்தூசு,தொப்புள் அழுக்கு,கண்பீளை,முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது.மேற்படி அன்னத்தை மூன்று மணி நேரத்தில் அதில் உள்ள திரவ அம்சத்தைப் பிரித்து உதிரமாக்கி ஊட்டுகின்றது,அதன் பின் சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது இதுபோல் எந்த வஸ்துவையும் பிரிக்கின்றது .ஆதலால் ஆகாரங் கொண்ட மூன்று மணி நேரங் கழித்து ஆகாரம் உட்கொள்ள வேண்டும் .
         
உணவைத் தேடி அனுபவிக்கும் போது,உயிர்கள் தன்னுடைய உடம்பில் ஏற்படும் உணவின் ரசாயன மாற்றத்தால் குள்கோஸ் இரத்தமாக மாற்றம் அடைந்து உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பபடுகிறது .இரத்தத்தில் உள்ள மத்திய தரமான சக்தி சுக்கிலமாக (விந்து)சேர்க்கப் படுகிறது .இந்த சுக்கிலத்தின் தன்மைக்கு தகுந்தவாறு ,ஆண் பெண்களையும் ,பெண் ஆண்களையும் விரும்புகிறார்கள் இதற்கு அன்பு ,காதல் என்று பெயர் வைத்துள்ளார்கள் .அந்த உணர்ச்சிக்கு சாதி,மதம் என்ற பேதம் தெரியாது.

நம்மிடம் உள்ள உணர்ச்சி என்னும் சுக்கிலம் சுரக்கும் போது,அவை வெளியே சென்று  அனுபவிக்க விரும்புகிறது. அது எதை,எங்கே விரும்புகிறதோ அங்கே அன்பு,காதல் என்னும் பற்று வெளிப்படுகிறது ,அந்த சுக்கிலத்தின் தன்மை மிகவும் உயர்ந்தது .அதன் அதன் பற்றுகளுக்கு தகுந்த,தன்மை மாறாமல் ஒன்றோடு ஒன்று சேர்கின்றபோது அங்கே ஒற்றுமை ,மகிழ்ச்சி,ஆனந்தம்,இன்பம் பொங்கி ஓங்குகிறது .அவை தொடர்கின்ற போது,அவை நிலைத்து நிற்கின்றது,அதுவே சிறந்த வாழ்க்கையாக அமைந்து விடுகின்றது .

அந்த உணர்ச்சியின்(சுக்கிலம் ) ஒற்றமை இல்லாமல் சேர்கின்ற போது குழப்பம் ,துன்பம்,சோகம்,தோல்வி, வெறுப்பு ,உண்டாகிறது .அதனால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவரவர்கள் தேர்வு செய்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிகச்சிறந்த வாழ்க்கையாகும் .இந்த கொள்கை ,உடன்பாடு ஏற்ப்பட்டால் மக்கள் நலமுடன் வாழ்வார்கள் .

அனைத்திற்கும் காரணம் உணவு ,உணவின் தன்மைக்குத் தகுந்தாற்போல் இரத்தம், சுக்கிலமாகி மாற்றம் அடைந்து உடம்பில் உருவாக்கப் படுகிறது.நம்முடைய உடம்பு மின்சாரம் இல்லாத ஒரு தொழிற்ச்சாலை ,அனைத்து சக்திகளும் தலைப்பாகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியில் இருந்து இயக்கப்படுகிறது .அந்த இயக்கம் நீடித்து இயங்க வேண்டுமானால் நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானதாகும்.அதனால்தான் ,தாவர உணவு மிகவும் முக்கியமானதாகும் .தாவர உணவு சுத்த பூதகாரிய உணவாகும்.புலால் உணவு அசுத்த பூதகாரிய உணவாகும் . ஆதலால் ஒரு உயிரைக் கொண்டு அதன் புண்புலால் உணவை உண்ணவேண்டாம் என்பதாகும் .இந்த உண்மையை மக்கள் புரிந்து கொண்டால் .மக்கள் மகிழ்ச்சியுடன்,நோயற்ற இன்பம் நிறைந்த நீடித்த இன்ப வாழ்க்கை வாழலாம் .

அன்புடன் ;--ஆனமநேயன்.;--கதிர்வேலு..

சனி, 8 டிசம்பர், 2012

அண்டங்கள் !

ஆன்மநேய அன்புடையீர் வந்தனம் !

அண்டங்களைப் பற்றி வள்ளலார் அளித்துள்ள பதிலைப் பாருங்கள் .

அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் 
ஆனவெலாம் இடங்கள் எலாம் நீக்கமற நிறைந்தே 
கொண்டவெலாங் கொண்டவெலாங் கொண்டு கொண்டு மேலும் 
கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டம் எலாம் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும் 
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய் 
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

என்றும் 

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே 
உன்ன முடியா அவற்றின் 
ஓராயிரம் கோடி மால் அண்டம் அரண் அண்டம் 
உற்ற கோடா கோடியே 
திருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதாசிவன் 
அண்டம் எண்ணிறைந்த 
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தஞ் 
சீரண்டம் என்புகலுவேன்
உருவுறு இவ்வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் 
உருசிறு அணுக்களாக 
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும் 
ஒரு பெருங் கருணை அரசே 
மருவி எனை யாட்கொண்டு மகனாக்கி அழியா 
வரம்தந்த மெய்த் தந்தையே 
மணிமன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம் 
வல்ல நடராஜ பதியே !

மேலும் 

குலவு பேரண்டப் பகுதி யோர் அனந்த 
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும் 
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் 
விளகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் 
மெய் அறிவு ஆனந்தம் விளங்க 
அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும் 
அருட்பெருஞ்ஜோதி என்னரசே !  

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் உண்மையான கடவுள் ! அவரால் இயங்கிக் கொண்டு இருக்கும் அண்டங்கள் அளவிட முடியாது கணக்கில் அடங்காது ,எண்ணிக்கையின் இலக்கம் கிடையாது ,சொல்லாலும் ,அறிவாலும் துணிந்து அளக்க முடியாதது ,அந்த அண்டங்கள் தனித்தனியே ,தன்னைத்தானே சுற்றிக் (இயங்கிக் ) கொண்டு உள்ளது .ஒவ்வொரு அண்டங்களுக்கும் உள்ள இடைவெளி அளவிடமுடியாது ,

அந்த அனைத்து அண்டங்களையும் தன்னுடைய அருட் செயலால் இயக்கிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் உள்ளவர்தான் ,...வள்ளலார் கண்ட அருட்பெருஞ் ஜோதி என்னும் பேரோளியாகும், அந்த இடத்திற்கு ''அருட்பெருவெளி ''என்பதாகும்.அந்த பெருவெளியைப் பார்த்தவர்கள் ..சென்றவர்கள் ..களித்தவர்கள்..வள்ளலாரைத் தவிர வேறு யாரும் இல்லை .

அதனால்தான் வள்ளலாரைத் தன்னுடைய அன்பு மகனாக்கிக் கொண்டு ..பூரண அருளைக் கொடுத்து...தன்னுடைய ''அருள் அரசை''ஒப்படைத்துள்ளார் , 

மேலும் வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

சபை எனது உளம் எனத்தான் அமர்ந்து எனக்கே 
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !

அருள் அமுது அளித்தனை அருள்நிலை ஏற்றினை 
அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ் ஜோதி !

உலகு உயிர்த் திரள் எல்லாம் ஒளிநேறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செய்யத் தந்தனை 

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி !

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் 
பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை !

சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே 
சத்திய நிலைதனைத் தயவினிற் தந்தனை!

உலகினில் உயிர்களுக்கு வரும் இடையுறு எல்லாம் 
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக
உததமன் ஆகுக ஓங்குக என்றனை !

ஆதியில் அறியா அருள் அரசாட்சியில் 
ஜோதி மாமகுடம் சுட்டிய தந்தையே !

தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே !   

தன்கையில் பிடித்த தனிஅருட் ஜோதியை 
என்கையில் கொடுத்த எனதணித் தந்தையே ! 

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்ப்ருஞ் ஜோதி !

மேலே கண்ட வரிகளில் தன்னுடைய அனுபவத்தையும் ,அருள் அனுபவத்தையும் ,தன்னுடைய ஆற்றல் களையும் ,கண்டு ...அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தனக்கு கொடுத்த பதவிகளைப் பற்றி தெளிவு படுத்தி உள்ளார் .

இப்போது எண்ணில் அடங்காத பலகோடி அண்டங்களையும் ,அதில் உள்ள இயக்கங்களையும் ..அதில் உள்ள ஆன்மாக்களையும் ..உயிர்களையும் ...அனைத்து கருவிகளையும் ..சத்தி சத்தர்களையும் ..கர்மசித்தி ...யோகசித்தி ..ஞானசித்தி ..பெற்ற அருளாளர்களையும் இயக்கிக் கொண்டு இருப்பவர் வள்ளலார் என்னும் அருட்பெரும் ஜோதியாகும் .வள்ளலார் இப்போது அருட்பெருஞ் ஜோதியாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து புரிந்து கொண்டால் நாம் மேல் நிலைக்கு செல்லுவதற்கு ஏதுவாக இருக்கும் .

மேலும் வள்ளலார் சொல்லியது !

அருட்ஜோதி யானேன் என்று அறையப்பா முரசு 
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு 
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு 
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு !

மேலும் பக்தியை நான் குறை சொல்லவில்லை ,பக்தி என்பது மனநெகிழ்ச்சி மன உருக்கம் ....அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம் .எல்லா உயிர்கள் இடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே சுத்த சன்மார்க்கம் .என்பதாகும் .

பக்தியால் இந்திரியம் கரணம் மகிழ்ச்சியடையும் ...ஜீவகாருண்யத்தால் ,உயிர் இரக்கத்தால்,இந்திரியம் கரணங்கள் ,ஜீவன் என்னும் உயிர் ,ஆன்மா அனைத்தும் மகிழ்ச்சி அடையும் .அதனால் அன்பு உண்டாகும்....அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் ,அறிவு உண்டானால் அனுபவம் உண்டாகும் ,அனுபவம் உண்டானால் அருள் உண்டாகும் .அருள் உண்டானால் ,சுத்ததேகம் ,பிரணவ தேகம் ,ஞானதேகம் என்னும் முத்தேக சித்தி என்னும் சுத்த பிரணவ ஞான தேகம் ...என்னும் அருள் தேகம் பெற்றுக் கொள்ளலாம் என்பது வள்ளலார் கண்ட சாகாக்கலை யாகும் .சாகாக்கல்வி யாகும் .

பக்தியினால் நாம் மேலே செல்ல முடியாது .பக்தி என்பது சாதி .சமய,மதம் சார்புடையது ....சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்பார் .இன்னும் எத்தனைப் பிறவிகள்தான் பக்தியில் இருப்பது ...நாம் சித்திக்க வேண்டும் .சாதியும்,மதமும் சமயமும் பொய் என்பதை உணர்ந்து கொண்டால்தான் நாம் மேலே ஏறமுடியும் ....அதைத்தான் ..ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் மாயா திரைகள் என்கிறார் வள்ளல் பெருமான் .ஆன்மாவின் திரைகள் நீங்க வேண்டுமானால் ..அன்பு ..தயவு ..கருணை ..என்னும் பொது நோக்கம் வேண்டும் .

கலை உரைத்த கற்பனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகளை முழுதும் விட்டுவிட்டு உண்மையான கடவுளின் வழிபாட்டு முறையான ,உயிர் இறக்கம் ,ஜீவ காருண்யம் ,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பொது உணர்வு வரவேண்டும் .

உண்மையை அறிந்து உண்மையுடன் வாழ்ந்து உயர்நிலையை அடைவோம் .

ஆண்மநேயன் ----கதிர்வேலு .

வெள்ளி, 7 டிசம்பர், 2012

நண்பருக்கு பதில் கடிதம் !

ஆன்மநேய அன்புடைய சகோதரர் அவர்களுக்கு வந்தனம் !.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து அருளாளர்களும் இறைவனை தேடி உள்ளார்கள் .யாரும் இறைவனை காண முடியவில்லை .காரணம் அவர்கள் இறைவனை காணும் தகுதியை பெறவில்லை .அவர்களுடைய நிலை வேறு வள்ளலார் அடைந்த நிலை வேறு...வள்ளலார் அனைத்து உயிர்களையும் தன்னுடைய உயிர்களாக கண்டவர் ..வாடிய பயிரைக் கண்டு வாடியவர் .,ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் உயர்ந்த கொள்கையை உடையவர் .அதுவும் தவிர மரணத்தை வென்ற மகான் ! கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர் .ஐந்தொழில் வல்லபத்தை இறைவனிடம் பெற்றவர் .இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன.

வள்ளலார் சொல்லும் பாடலைப் பாருங்கள் .

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் 
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் ....தேவா நின் 
பேரருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில் 
யார் உளர் சற்றே அறை !

மேலும் 

நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே 
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் 
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்கி 
கோன் செயவே பெற்றுக் கொண்டேன் உண்டேன் அருள் கோனமுதே !   
என்று இறைவனிடம் கேட்கிறார் அதற்கு இறைவன் பதில் சொல்லுகிறார் 

மேலும் ..

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்து இருக்க நான்போய் 
பொது நடங்கண்டு உலங் களிக்கும் போது மணவாளர் 
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் 
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது 
கைபிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன் 
களித்திடுக இனி உனை நாங் கைவிடோம் என்றும் 
மைபிடித்த விழி உலகர் எல்லோரும் காண 
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !

எல்லா அருளாளர்களும் உண்மை தெரியாமல் பொய்யான கடவுளைக் அறிமுகப் படுத்தி உள்ளார்கள் .அவர்கள் முன்னிலையில் வள்ளலாரை அமர்த்தி அடையாளம் காட்டி உள்ளார் .வள்ளலார் காட்டிய உண்மையான கடவுளை அப்போதுதான் அவர்கள் (அருளாளர்கள் )எல்லோரும் அறிந்து கொண்டார்கள் .அதுவரையில் அவர்களுக்கு உண்மையான கடவுள் யார் என்பது தெரியாது.

முன்னாடி வந்த அருளாளர்கள் எல்லோரும் தத்துவங்களை கடவுள்களாக அறிமுகப் படுத்தி உள்ளார்கள் .வள்ளலார் வந்து தான் உண்மையான கடவுளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .சாதி ,சமயம்,மதம் அற்ற உண்மை பொது நெறியாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .

எல்லோருக்கும் பொதுவான உண்மைக் கடவுளான ''அருட்பெருஞ் ஜோதி ''கடவுள் ஒருவரே என்பதை மக்களுக்கு தெளிவுப் படுத்தி உள்ளார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்...கோவில் ,ஆலயம் ,சர்ச்சு ,மசூதி ,பிரமிட் ,என்று அமைக்காமல் .எல்லோருக்கும் பொதுவான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ''என்னும் பொது வழிபாட்டு முறையை வடலூரில் அமைத்து உள்ளார் .என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .

கடவுளை அடைவதற்கு ..பக்தி,தவம்,யோகம்,தியானம் ,சந்நியாசம்,துறவறம் ,போன்ற எதுவும் வேண்டாம்,''ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கமே ''கடவுள் வழிபாடு என்பதை மக்களுக்கு தெரியப் படுத்த வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை ''தோற்றுவித்து உள்ளார் .என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவர் துன்பத்தை போக்கியவர் வள்ளலார் !

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை 
சூழ்ந்த அருள் ஒளி நிறைந்தே 
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே 
சுதந்திரம் ஆனது உலகில் 
வன்பெலாம் நீக்கி நல்வழி எலாம் ஆக்கி மெய் 
வாழ்வெலாம் பெற்று மிகவும் 
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தினை உன்றன் 
மனம் நினைப்பின் படிக்கே 
அன்பை நீ பெருக உலவாது நீடுழி விளையாடுக 
''அருட்ஜோதியாம் ''
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம் 
ஆணை நம் ஆணை என்றே 
இன்புறத் திரு வாக்களித்தே என்னுள்ளே கலந்து 
இசைவுடன் இருந்த குருவே 
எல்லாம் செய் வல்ல சித்தாகி மணிமன்றில் 
இலங்கு நடராச பதியே !

என்று தெளிவுபட விளக்கி உள்ளார் என்பதை நாம் அறிவாலே அறிந்து கொள்ள வேண்டும் .

வள்ளலார் ஏன் இந்த உலகத்திற்கு வந்தார் ,எதற்க்காக இறைவன் அவரை வருவிக்க உற்றார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார் ,அந்த பாடலைப் பாருங்கள் .

பேருற்ற உலகில் உறு சமயம் மத நெறிஎலாம் 
பேய் பிடிப்புறற பிச்சுப் 
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல 
பேத முற்று அங்கும் இங்கும் 
இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாத படி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப் 
பொருளினை உணர்த்தி எல்லாம் 
ஏருற்ற சுக நிலை அடைந்திட புரித நீ 
என்பிள்ளை யாதலாலே 
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு 
என்னற்க எனற குருவே .
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் 
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 
நிர்க்குனானந்த பர நாதாந்த வரை யோங்கும் 
நீதி நடராஜ பதியே !

என்று இறைவன் வருவிக்க உற்ற செய்தியினை மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?மற்ற அருளாலர்களுக்கும் ,வள்ளலாருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.வள்ளலார் காட்டிய பாதை உண்மையான பாதை என்பதை அறிந்து அவர் காட்டிய ...அன்பு,தயவு,கருணை நெறியில் வாழ்ந்து பயன் பெறுவோம் .மேலும் திருஅருட்பாவில் நிறைய ஆதாரங்கள் உள்ளன ,தெளிவுபட படித்து அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

நன்றி வந்தனம் .

அன்புடன் ஆன்மநேயன் ;---கதிர்வேலு ....    


6 டிசம்பர், 2012 10:50 am அன்று, Kamal Kannan <lakankamal1983@gmail.com> எழுதியது:
மதிப்பிற்குரிய கதிர்வேலு அவர்களே,

வள்ளலார் மட்டும் தான் அருட்பெரும் ஜோதி ஆண்டவரை கண்டுள்ளார் என்று தாங்கள் கூறுவதை சற்று நன்றாக சிந்தித்து பாரும்.  இப்படி கூறுவது ஆண்மிகவதியின் ஆன்மிக வார்த்தைகளாக கருதப்பட மாட்டது. வள்ளலார் போன்ற பல மகான்கள் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தேசம்  நமது பாரதம்.  இதை என்றும் மறவாதீர்.  இராமலிங்க சுவாமிகளை நாம் போற்றுகின்றோம், அவருடைய உயர்வான ஆன்மிக கருத்துகளை உணர முற்படுகின்றோம். நாம் அனைவரும் அந்த (இறைவன்) மெய்பொருளை அடைய  அவர் விருப்பபட்டார்.  இன்றும் உலகம் அறிப்படா இப்படைப்பின் நலனுக்காக இதுபோன்ற மகான்கள்  வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

விரைவில் இவ்வுலகம் பொன்னுலகமாக மாறப்போகின்றது, அருட்பெரும் ஜோதியை தன்னுள்ளே காண உடனே முற்படுங்கள் அவர் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார். 

தங்களின்  ஆன்மிக கருத்துக்கு மிக்க நன்றி. 

"ஓம் பரம்பிரம்ம சக்ரதார்"