திங்கள், 20 பிப்ரவரி, 2023

அருள் பெறுவது எவ்வாறு !

 *அருள்  பெறுவது எவ்வாறு ?* 


*உலக வரலாற்றில் அருள் பெறும் வழியைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவரே !* 


*பொருள் நிறைந்த இவ்வுலகில் அருள் பெறுவது மிகவும் கடினமானதாகும்,உலகில் தோன்றிய அருளாளர்கள் என்னும் ஞானிகள்,இல்லறத்தை விட்டு உலக ஆசைகளை துறந்து, துறவறம் என்னும் சந்நியாசம் பூண்டு காவி ஆடை உடுத்தி தத்துவங்களை வென்று அருளைப் பெற்றுவிடலாம் என்ற ஆவலோடு யோகிகள் வனம்,மலை,முழை, காடு முதலியவற்றிற்குப் போய் நூறு,ஆயிரம் முதலிய வருஷகாலம் கடும் தவஞ் செய்து முயற்சி செய்தும், அருள் வழங்கும் கடவுளைக் காணமுடியவில்லை. இறைவன் அருளை முழுமையாக பெறவும் முடியாமல்,சிலர் உயிரை அடக்கி சமாதி ஆனார்கள்,சிலர் முக்தி எனும் வான் உலக பஞ்ச பூதங்களில் கலந்து  அடங்கி விட்டார்கள் சிலர் சொர்க்கம், கைலாயம்,வைகுண்டம், பரலோகம் என்னும் கற்பனை உலகத்திற்கு சென்று திரும்பிவிட்டார்கள்,சிலர்  மாண்டு போனார்கள்.பலர் மாண்டு கொண்டே உள்ளார்கள். எவருமே மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம் மயமாகவில்லை. அதாவது கடவுள் நிலைக்கு செல்லவில்லை என்பதே உண்மையாகும்.*


( *உடம்பு உயிரோடு ஆன்மா இறைவனை தொடர்பு கொள்ள முடியாது!*)


*மேலே சொன்ன அனைவருக்கும் இறப்பும் உண்டு,மீண்டும் பிறப்பும்  உண்டு.ஆனால் என்ன பிறப்பு கிடைக்கும் என்பது எவருக்கும் தெரியாது*


*மனித உடம்பு*


*மனிதபிறப்பு மற்ற பிறப்புகள் போல் அல்லாமல், பேசும் திறன் சிந்திக்கும் திறன்,தெளிவடையும் திறன், எண்ணம் சொல் செயல் யாவும் தன்னைத் தானே செயல் படும் திறன்,மற்றும் புற உலகியல் நன்மை தீமைகள் அறிந்து செயல்படும் மனம், புத்தி,சித்தம்,அகங்காரம் போன்ற செயற்பாடுகளும்,புறப்புறம் என்னும் கண்,காது,மூக்கு,வாய்,மெய் என்னும் இந்திரியங்கள் யாவும் உலகியல் சம்பந்தம் உடையது..*


 *உயர்ந்த பிறப்பு என்று  சொல்லப்படுவது ஏன்?* 


*மனிதபிறப்பு என்பது என்பது மற்ற ஜீவ தேகங்கள் போன்றது அல்ல! உயர்ந்த ஜீவ அறிவும், ஆன்ம அறிவும், அருள் அறிவும்,கடவுள் அறிவும் மிகுந்த அகம்,அகப்புறம் போன்ற ஆற்றல் மிகுந்த,தரம் மிகுந்த சத்தி பெறும் தகுதி உடையதே உயர்ந்த மனித தேகமாகும்.* 


*பூத உடம்பை அருள் உடம்பாக மாற்றும் ஆற்றல் பெற்றதுதான் மனிததேகம்!*


*பஞ்ச பூத அணுக்களான  வாலணு,திரவணு,குருவணு,லகுவணு,அணு,பரமாணு,விபுவணு போன்ற ஏழுவகையான அணுக்களால் பின்னப்பட்ட அசுத்த பூதகாரிய தேகமாகும். மனித தேகத்தில் உள்ள இந்திரியம்,கரணம், மற்றும் ஜீவ,ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்து, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று,  சுத்த தேகம்,பிரணவதேகம்,ஞானதேகம் என்னும் மூன்று தேகங்களாக மாற்றும் ஆற்றல் பெற்றது, அந்த முத்தேக சித்தி பெறுதலே, மனித தேகத்திற்கு கொடுத்த இயற்கை வல்லபமாகும்*


*அசுத்த உஷ்ணம்! சுத்த உஷ்ணம் !*


*இவ்வுலகில் ஆன்மா வாழ்வதற்கு உயிர் உடம்பு தேவைப்படுகின்றது உயிரும் உடம்பும்,பஞ்ச பூதகாரிய அணுக்களைக் கொண்டு  அசுத்த பூதகாரிய உஷ்ணத்தினால் மாயையால் கட்டிக்  கொடுக்கப்பட்ட தேகமே மனித தேகமாகும். இந்த பூத உஷ்ணம் சுடும் தன்மை உடையது.*


*உயிர் உடம்பு எடுத்து வாழும் ஆன்மாவின் உஷ்ணம்  கோடி சூரியப் பிரகாசம் கொண்டதாகும்.அவை சுத்த உஷ்ணத்தை கொண்டதாகும்,இது சுட்டும் சுடாத தன்மை உடையதாகும்*

*அதன் ஆற்றல் வல்லபம் அளவிடமுடியாது.*


*சுடும் தன்மை உள்ள அசுத்த பஞ்சபூத காரிய  உடம்பையும் உயிரையும் முதலில் சுத்த பூதகாரிய உடம்பாக மாற்ற வேண்டும்,   இந்த உண்மை தெரிய வேண்டுமானால் உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளலார்.*


*வள்ளலார் பாடல் !*


உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்


மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்


இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே

எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே


நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ் சார்வீரே.! 


*ஆண் பெண் உணர்ச்சி வசத்தால் உடல் உறவு கொள்ளும்போது அசுத்த பூதகாரிய உஷ்ணம் உண்டாகும் போது ஆண் பெண் உறுப்புகளில் இருந்து வேளிப்படுவது விந்தும் நாதமும்  ( சுக்கிலம் சுரோணிதம்) என்ற திரவ அணுக்கள் வெளிப்படும்,அந்த அணுக்கள் கூட்டத்தின் மத்தியில் ஆன்மா சென்றால், ஆன்மாவின் செயலுக்கும் தகுதிக்கும் தகுந்தவாறு உயிர் உடம்பு மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகிறது,அந்த வீட்டிற்கு வாடகை வீடு என்று சொல்லப்படுகின்றது, வாடகை என்பதே நாம் தினமும்  உண்ணும் பூதகாரிய உணவாகும், பூதகாரிய உடம்பிற்கு பூதகாரிய உணவே பொறுந்துவதாகும்.*


சுதந்தரம்!


*ஆன்மாக்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு* தேகசுதந்தரம்! ஜீவசுதந்தரம்! 

போகசுதந்தரம்!

*என்னும் மூவகை சுதந்தரம் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது,*

*இந்த சுதந்தரத்தை அனுபவிக்கின்றவரை ஆன்மாவிற்கு பிறப்பு இறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்*



*இந்த மூவகை சுதந்தரத்தையும், நம்மை அனுப்பிய இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவடிக்கே சர்வ சுதந்தரத்தையும் திருப்பி கொடுத்து விடவேண்டும்,கொடுத்துவிட்டப்பிறகு,தங்களின் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து ,இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல்  வேண்டும் என்று உண்மை உணர்வோடு இறைவனிடம் கேட்க வேண்டும்*


*வள்ளலார் பாடல்!*


படமுடியாது இனித்துயரம் படமுடியா தரசே

பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்து இப் பொழுதென்


உடல் உயிரா திய எல்லாம் நீ எடுத்துத் கொண்டு உன்

உடல் உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்


வடலுறு சிற் றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்

மணியே என் குருமணியே மாணிக்க மணியே


நடனசிகா மணியே என் நவமணியே ஞான

நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.! 


மேலே கண்ட பாடலில் உள்ளவாறு வள்ளலார் தன் உடல் பொருள் ஆவிகளை ஆண்டவரிடமே கொடுத்து விடுகிறார் கொடுத்த தருணத்தே இறைவன் தன் சுதந்தரத்தை வள்ளலாருக்கு தந்து விடுகிறார்


 *வள்ளலார் பாடல்!*


சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் உடம்பினில் புகுந்தேம்


இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே

இன்புறக் கலந்தனம் அழியாப்


பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்

பரிசுபெற்றிடுக பொற் சபையும்


சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்

தெய்வமே வாழ்க நின் சீரே.! 


*வள்ளலார் போல் வாழ்ந்தால் மட்டுமே நமக்கும் திருவருட் சுதந்தரம் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் நினைவில் கொண்டு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும்*


இறைவனை தொடர்பு கொள்வது எவ்வாறு ? 


*வள்ளலார் பாடல்!* 


உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்

உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ


என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்

என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்


அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்

அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே


இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்

இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.! 


மேலும்...


நான்மறந்தேன் எனினும் எனைத் தான்மறவான் எனது

நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்


வான்மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை

மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என் னுடைய


ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்

உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்


பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே

பரிந்து நின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.! 


*என்னும் பாடல்களின் வாயிலாக, இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒவ்வொரு ஆன்மாவின் உள் இருந்து இடைவிடாது இயங்கிக் கொண்டுள்ளார் என்பதை அறிந்தேன் ஆகையால் உன்னை மறக்க மாட்டேன் மறந்தால் உயிர்விடுவேன் என்கின்ற உணர்வோடு,ஊண் உறக்கமின்றி இடைவிடாது ஆண்டவரைத் தொடர்பு கொள்கின்றார்,அவரின் அன்பான நினைவு அலைகள் நேராக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்கிறது, அதே தருணம் ஆண்டவருடைய அன்பான  கதிர் அலைகள் வள்ளலாரை இடைவிடாது தொடர்பு கொள்கிறது,அதனால் இருவருக்கும் இடைவிடாது காதல் மலர்கிறது*


வள்ளலார் பாடல்!


காதல் கைம் மிகுந்த தென்செய்வேன் எனை நீ

கண்டுகொள் கணவனே என்றாள்


ஓதலுன் புகழே அன்றி நான் ஒன்றும்

உவந்திலேன் உண்மையீ தென்றாள்


பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்


மாதய வுடைய வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே! 


*இவ்வாறு ஆண்டவராகிய பரமான்வாவும் வள்ளலாருடைய ஜீவ ஆன்மாவும் உணர்ச்சி ததும்ப இணைபிறியா காதல் கொள்கின்ற தருணம் அங்கே சுத்த உஷ்ணம் உண்டாகி பரவிந்தாகிய அருளும்,பரநாதமாகிய பிரகாசமும் வெளிப்படும்*


*இதைத்தான் பேருபதேசத்தில் தெளிவாகச் சொல்கின்றார் வள்ளலார்.*


*சத்விசாரம் என்பது,இரண்டு வகையாக உள்ளது,ஒன்று பரலோக விசாரம்,ஒன்று இகலோக விசாரம்,இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல,சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானே என்றால் அவ்விசாரம் விசாரமாகாது,உண்மை விசாரமும் அல்ல*


*ஏனெனில் விசாரம் என்கின்றதற்குப் பொருள் சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது, அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது,ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல,நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத்திரையாகிய ராகாதிகளை "விசார அதி உஷ்ணத்தினால் அல்லாது மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது,அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும்.*


*அதை மனுஷய தரத்தில் உண்டு  பண்ணுவதற்குத் தெரியாது, அந்த விசாரத்தைவிட  ஆண்டவரை     ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்,தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். நூறு ஆயிரம் முதலிய வருடகாலம் தவஞ் செய்து இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்.இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறதைப் பார்க்கிலும்,தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்,நினைக்கின்றதிலும்,இதை விடக் கோடிப்பங்கு,பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்கின்றார்*


எவ்வாறு எனில் ? 


*ஒரு ஜாம நேரம் மனத்தில் இக விசாரமின்றி, பர விசாரப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு,தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவதுஅல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்றார்* 


*இவ்வாறு அருளைப் பெறுவதற்கு தகுதி எதுவெனில்,? எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமையுடன் இருக்கவேண்டும்,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் எல்லா ஆன்மாக்களையும் சகோதர ஆன்மாவாக பாவிக்க வேண்டும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். நமது தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும், மேலும் உலகியல் மனிதர்களை கவ்விக் கொண்டு இருக்கும் பொய்யான, சாதி சமய மதக் கொள்கைகளின் மேல் அணுஅளவும் பற்று வைக்ககாமல்சுத்த சன்மார்க்க கொள்கையில் முழுமையாக பற்று வைக்க வேண்டும்*


*இவற்றை அறிந்து உணர்ந்து தெரிந்து வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறைவனுடைய அருளைப் பெற்று சுத்த பிரணவ ஞான தேகமாக மாற்றிக் கொண்டு கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வாங்கு வாழ்வார்கள்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

*9865939896*

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

சன்மார்க்கிகள் உயிர் பெற்று வருவார்கள்!

 *செத்தவர்களில் யார் யாரெல்லாம் உயிரோடே மீண்டும் எழுப்பபடுவதற்கு இறைவனால் முன்குறிக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்*



மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை

யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி


செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்

அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி


செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட

அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி


- அருட்பெருஞ்ஜோதி அகவல்


***********************************


அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்

செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்

எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.


- சுத்த சன்மார்க்க வேண்டுகோள்


***********************************


சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்

செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த

இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்

கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்

சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்

சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை

நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்

நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.


- சிவ தரிசனம்


***********************************


புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக

நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்

செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்

ஒத்தாராய் வாழ்க உவந்து.


செத்தார் எழுக சிவமே பொருள்என்றே

இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ

சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்

துன்மார்க்கம் போக தொலைந்து.


செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்

சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ

சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்

என்மார்க்கம் நின்மார்க்க மே.


- சன்மார்க்க உலகின் ஒருமைநிலை


***********************************


ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு

மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு

வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்

செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.


எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல

சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த

தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்

செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.


- உத்திர ஞானசிதம்பரமாலை


***********************************


செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே

இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்

எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை

வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.


- பேரருள் வாய்மையை வியத்தல்


***********************************


அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்

அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்

கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்

எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை

இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்

எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே

செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே

செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.


- இறைவரவு இயம்பல்


***********************************


செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்

கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்

அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்

தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.


இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்

எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்

சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்

உற்றவரை உற்றவர்கள் உற்று.


யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை

ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த

அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த

கம்பலத்தால் ஆகும் களித்து.


- சுத்த சிவநிலை


***********************************


விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே

மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்

திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்

செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய

வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே

வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்

கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்

கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.


களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்

களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்

தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே

செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்

ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்

ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்

அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே

ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.


- மரணமிலாப் பெருவாழ்வு


***********************************


பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப

ராதம்எனப் பகர்கின் றேன்நீர்

சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்

பற்பலரும் சித்த சாமி

உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்

தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்

வரனளிக்கப் புதைத்தநிலை கா­ரோ

கண்கெட்ட மாட்டி னீரே.


-சமாதி வற்புறுத்தல்


***********************************


இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன

மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்

திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்

நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.


- உலகப்பேறு


***********************************


வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்

மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்

எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி

தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்

செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று

நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது

நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.


செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்

ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே

சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்

இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.


- தனித் திருஅலங்கல்


***********************************


சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்

செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்

உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்

ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்

தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்

தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி

அவமேபோ காதென்னோ டாடேடி பந்து

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி


- பந்தாடல்


***********************************


எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே

எல்லா உலகும் இயம்புதல் சும்மா

செத்தாரை மீட்பது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி


- ஜோதியுள் ஜோதி


***********************************


செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது

சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது

இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது

இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்


- அருள் அற்புதம்


***********************************


சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி

செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி

இத்தா ரணியில்என்று சின்னம் பிடி

இதுவே தருணம்என்று சின்னம் பிடி.


- சின்னம் பிடி


***********************************


துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு

தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு

தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு

செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.


- கண்புருவப் பூட்டு


***********************************


சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.


- சத்திய அறிவிப்பு



***********************************

புதன், 15 பிப்ரவரி, 2023

மரணத்தை வென்றவர் வள்ளலார்!

 *மரணத்தை வென்றவர் வள்ளலார்!* 


*வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படித்து  தெரிந்து அறிந்து புரிந்து கொள்ளாத  மூடர்கள் சிலர் வள்ளலார் மரணம் அடைந்து விட்டார் என்றும்,பிராமணர்கள் வள்ளலாரைக் கொளுத்தி விட்டார்கள் என்றும்,தற்கொலை செய்து கொண்டார் என்றும் பலவாறான பொய்யான செய்திகளை திராவிடக் கழகத்தை சார்ந்தவர்கள்.மற்றும் பல கட்சிகளைச் சார்ந்த மூதேவிகள் திருஅருட்பாவை முழுமையாக படிக்காமல், உண்மைக்கு புறம்பாக செய்திகளை மேடைகளில் பேசிவருகிறார்கள்.* 


*12-02-2023 அன்று முத்தமிழ் பேரவை மன்றம், அடையாறு "T N ராஜரத்தினம்  கலை அரங்கில்" வள்ளலார் 200,விழாவில் "வள்ளுவர் வழியில் வள்ளலார்" என்ற தலைப்பில் பேசுவதற்கு பல கட்சிகள் சார்ந்த அறிஞர்கள் மத்தியில் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் ஈரோடு கதிர்வேல் ஆகிய  என்னையும்.மேலும் வடலூர் குரு பக்கிரிசாமி ஐயா, பிரமானந்த சுவாமிகள் ஐயா அவர்களையும் அழைத்திருந்தார்கள்.* 


*மேலும் பார்வையாளராக சென்னை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சென்னெரி தண்டபாணி ஐயா,திரு,புனிதன் ஐயா,திரு,திலீப்குமார் வழக்கறிஞர் ஐயா அவர்களும் வந்திருந்தார்கள்.மற்றும் பொதுமக்கள் பல கட்சியை சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள்*


*எனக்கு முன்னாடி பேசிய திரு, "வாலாசா வல்லவன்" என்பவர் வள்ளலாரைப் பற்றி பெருமையாக பேசி வந்தவர், திடீரென யாரோ ஒருவர் எழுதியதை சுட்டிக் காட்டி அவற்றைப் படித்துவிட்டு வள்ளலார் தற்கொலை செய்து கொண்டார் என்று பேசினார் ,உடனே எனக்கு கோபம் தலைக்கு ஏறியது,அவரை பேசவிடாமல் தடுத்து நிறுத்தினேன்,திருஅருட்பாவை முறையாக படிக்காமல் கண்ட கண்ட கழுதைகள் எழுதியதை படித்துவிட்டு மேடையில் பேசினால் தகுந்த சாட்டைஅடி கொடுக்கப்படும் என்று சொல்லி அவர் பேசியதை வாபஸ் வாங்க வைத்தோம். அவரும் சரிங்க தோழரே என்று பேச்சை சுருக்கிக் கொண்டார்.*


*அடுத்து பேசிய நான் வள்ளலாரின் மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பற்றி பேசி மக்களுக்கு புரிய வைத்தேன் மக்கள் ஏற்றுக்கொண்டு மேலும் பேசுங்கள் என்று ஆராவாரம் கொண்டார்கள், வாய்ப்பு கிடைக்கும் போது பேசுகிறேன் என்று எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தோடு நிறைவு செய்தேன்.* 


*சாகாக்கல்வியைப் போதிக்க வந்தவர் வள்ளல்பெருமான்!*


*உலக வரலாற்றில் உயர்ந்த அறிவுள்ள மனிதனாக பிறந்த எல்லோரும். உலகில் தோன்றிய சமய மதங்கள் போதித்த  சாகும் கல்வியை கற்று மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள் என்பதை அறிந்த, "இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்" சாகாக்கல்வியைக் கற்று கொடுக்கவே வள்ளல்பெருமானை இவ்வுலகிற்கு வருவிக்கவுற்றவர் தான் நமது அருட்தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்* 


*வள்ளலார் பாடல்!*


 பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற்று அங்கும் இங்கும்


போருற்று இறந்து வீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்


*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ*

*என்பிள்ளை ஆதலாலே*

*இவ்வேலை புரிகஎன் றிட்டனம்* மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.! 


என்றும் மேலும்..


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே!


*மேலே கண்ட பாடலில், தான் இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்கப்பட்ட உண்மையை வெளிப் படுத்துகின்றார்*


*மனிதன் மரணத்தை வெல்ல முடியாமைக்குக் காரணம் சாதி சமயம் மதங்கள் போதித்த பொய்யான,கலை உரைத்த கற்பனை தத்துவ கதைகளைப் பின்பற்றி வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளே மரணம் அடைவதற்கான காரணம் என்பதை விளக்குகின்றார்* *மேலும் பொய்யான சாதி சமய மதங்களை குழிதோண்டி புதைக்கவே என்னை இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  அனுப்பி வைத்தார் என்பதை தெளிவுப் படுத்துகின்றார்*


அதனால்தான் பள்ளிக்குச் செல்லாமல்,ஆசிரியரிடம் பாடம் கற்காமல் எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே கற்று தெரிந்து கொண்டவர் 


*ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி!*


*ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனக்கே ஓதாமல் உணர்த்திய என் மெய் உறவாம் பொருளே ! என்று சொல்லுகிறார்.*


*மேலும் சாகாக் கல்வி பாடல் !*


சாகாத கல்வியே கல்வி ஒன்றேசிவம்

தான் என அறிந்தஅறிவே

தகும்அறிவு மலம்ஐந்தும் வென்ற 

வல்லபமே

தனித்த பூரண வல்லபம்


வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும்

விளைய விளை வித்ததொழிலே

மெய்த்தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம்எல்லாம்


மாகாதலுற எலாம் வல்ல சித்தாகி நிறை

வானவரமே இன்பமாம்

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்

மரபென் றுரைத்தகுருவே


தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்

தேற்றி அருள் செய்தசிவமே

சிற்சபையின் *நடுநின்ற ஒன்றான கடவுளே*

தெய்வநட ராஜபதியே.! 


*என்றும்,, இதுபோன்ற நூற்றுக் கணக்கான பாடல்களில் சாகாக்கல்வி கற்கும் முறையைப் பற்றி திருஅருட்பா வில் பதிவு செய்துள்ளார்.*


*மேலும் வள்ளலார் பாடல்!*


சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்

தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்


மாகாதல் உடையவனா மனங்கனிவித் து *அழியா*

*வான்அமுதும் *மெய்ஞ்ஞான மருந்தும் உணப்புரிந்தீர்*


*போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்*

புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்


நாகாதி பதிகளும் நின் றேத்தவளர்க் கின்றீர்

நடராஜரே உமக்கு நான் ஏது செய் வேனே.! 


மேலும்


சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே

தனித்துன் *அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே!*


மேலும்


*மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!* என்றும்


*மரணத்தை விரட்டி அடித்தவர் வள்ளலார்!*


*மேலும் வள்ளலார் பாடல் !*


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி


நோவதின்று புதிதன்றே என்றும்உள தால் இந்த 


நோவை நீக்கி

ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவராலே


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.!


மற்றும்..


*சமயங்கள் மதங்கள் காட்டிய எந்த தெய்வங்களுக்கும் அருள் வழங்கும் தகுதி இல்லை வள்ளலார் காட்டிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருள் வழங்கும் தகுதி உடையதாகும்.மேலும் மரணத்தை வெல்லும் அறிவியல் சார்ந்த உடல் மாற்றத்தை, அதாவது அருள் ஆற்றலைத் தரமுடியும் என்பதை தெளிவாக விளக்குகின்றார்*


மேலும்....


மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே

வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே


பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்

பசைஅற நீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ


இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்

*என்னுடையான் அருள்ஆணை* என்குருமேல் ஆணை


அரணுறும் என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்

அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.! 


*மரணம் என்னும் பெரும்பாவியை விரட்டியவர் வள்ளலார்*


*மரணம் என்பது இயற்கை அல்ல,செயற்கையே மரணம் என்றார்,தப்பாலே சாவே துணிந்தார் என்பார்,பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாகும்*


*இறவாமை பெற்றேன் என்கின்றார்!*


*பெற்றேன் என்றும் இறவாமை* பேதம் தவிர்ந்தே இறைவன் எனை


*உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்*


எற்றே அடியேன் *செய்த தவம் யாரே புரிந்தார்* *இன்னமுதம்*

துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.!


*மேலும் பதிவு செய்கிறார்!*


*நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்*


*சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும்*- 


*தேவாநின்*

*பேரருளை என்போலப் பெற்றவரும்*


*எவ்வுலகில்*

*யார்உளர் நீ சற்றே அறை.!*


என்கின்றார் மேலும்..


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே


வேற்றாலே *எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்*

*மெய்அளிக்க வேண்டுமென்றேன்* *விரைந்தளித்தான் எனக்கே*


ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

*எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!*


*பஞ்ச பூதங்களாலும். கூற்றுவன் என்கின்ற எமனாலும், கொலைக் கருவிகளாலும், வேற்று வகையான எந்த தீய சக்திகளாலும்,அணு ஆற்றலாலும், அழிக்க முடியாத தேகம்  அளிக்க வேண்டும் என்று கேட்டேன் உடனே விரைந்து அளித்தான் எனக்கே  என்கிறார். இது நடக்குமா என்று நினைக்கலாம் ,என் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மனித தேகம் பெற்ற அனைவருக்கும் நிச்சியம்  கிடைக்கும் என்கின்றார்* 


*அதற்கு சிறந்த உயர்ந்த வழி,! உலகப் பொருள் பற்று அற்று, வள்ளலார் சொல்லியவாறு   ஒழுக்கம் நிறைந்து அன்பு,தயவு,கருணையுடன் வாழ்ந்து  அருள் பற்றைப் பற்ற வேண்டும்.*


*அருள் பெற்றால் மட்டுமே, சுத்ததேகம், பிரணவதேகம்,ஞான தேகம் என்கின்ற முத்தேக சித்தி என்னும் அருள் ஒளிதேகம் பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும், இதுவே முத்தேக சித்தி பெறும், தேகம் மாற்றம் என்பதாகும்*


*மேலும் மரணத்தை வெல்லுவதற்காண வழிமுறைகளை தெரிந்து கொள்ளவே திருஅருட்பாஆறாம் திருமுறையில் "ஞானசரியை" என்னும் தலைப்பில் 28 பாடல்கள் பதிவு செய்துள்ளார் அவற்றிற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றே தலைப்பும் கொடுத்துள்ளார்*


*அதில் முதல்பாடல் !*


நினைந்து நினைந்து   

உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து  தன்பே

நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு


நனைந்து நனைந்து *அருளமுதே நன்னிதியே* ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று


வனைந்து வனைந் தேத்துதும் நாம் வம்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்


புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.! 


*28 ஆவது கடைசிபாடல்!*


சார்உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை


நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி


ஏர்உறவே விளங்குகின்ற *இயற்கை உண்மை தன்னை*

எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை


ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றி மகிழ்ந் திடுமின்

உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.! 


என்னும் பாடல் வரிகளால் உண்மையை எடுத்து இயம்புகின்றார்


மேலும் *சத்திய அறிவிப்பு* என்னும் தலைப்பில், *மேட்டுகுப்பம் சித்திவளாக திருமாளிகையில் சித்தி பெருவதற்கு முன் ஆறாம் திருமுறையில் இறுதியாக  வெளியிட்ட 4 நான்கு பாடல்கள்*!


1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை

மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்

துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்

சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க

வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே

மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.


2.தனித்தலைமைப் பெரும்பதி என் தந்தைவரு கின்ற

தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்

இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம் தித் திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற

மனித்த உடம் பிதை அழியா வாய்மை உடம் பாக்கி

மன்னிய சித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே

கனித்த சிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே

களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.


3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள் எலாம் இன்பம்உறு தினங்கள்

*சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்*

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

*திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.*


4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்


பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்


தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே


மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே

வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.!


 *ஊன் உடம்பை அருள் நிறைந்த ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வென்று  இறைவனுடன் கலந்த உண்மை விளக்கத்தை மேலே கண்ட பாடல்கள் நான்கிலும் தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளல் பெருமான் அவர்கள்..*


*இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.*


*வள்ளலார் மரணத்தை வென்று இறைவனுடன் கலந்தார் என்பது வள்ளலார் பாடல்களே சான்றாகும்.*


*இனி வள்ளலார் மரணம் அடைந்தார் என்றோ! தற்கொலை செய்து கொண்டார் என்றோ! கொலை செய்யப்பட்டார் என்றோ ! மறைந்து விட்டார் என்றோ ! ஒளிந்து கொண்டார் என்றோ ! வள்ளலாரைப் பற்றிய தவறான செய்திகளை,எழுத்து மூலமாகவோ ! பேச்சு வழியாகவோ ! எவரும் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்  கொள்கிறோம்.*


*நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதீர்கள்!*


எல்லா உயிரும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

*9865939896*