வெள்ளி, 20 ஏப்ரல், 2018

அகவல் நாள் உண்மைதான் ?.

ஆன்ம நேய அன்புள்ள நம்மவர்களுக்கு வந்தனம்.!

சித்திரை மாதம் 8 ஆம் தேதி.21-04-2018.ஆம் நாள் தான் ஒரே இரவில்  அருட்பெருஞ் ஜோதி அகவல் எழுதிய நாள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது.

யார் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை.
யூகத்தின் அடிப்படையில் சொல்லி உள்ளார்கள்....

ஆறாம் திருமறை  முழுவதும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்ல வள்ளலார் எழுதுகின்றார்...
அதனால்தான் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்கின்றார்...

ஆறாம் திருமுறை எழுதியது முழுவதும்.வள்ளலார் உடன் இருந்த சன்மார்க்க அன்பர்களுக்கும். வெளியில் உள்ள எவருக்கும் தெரியாது ..

வள்ளலார் சித்திபெற்ற பிறகு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்புதான் சன்மார்க்க சான்றோர்களால்.
திருஅருட்பா
ஆறாம் திருமுறை  வெளியிடப்பட்டது..

எனவே வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது தான் சன்மார்க்கிகளின் சத்திய ஒழுக்கம் நிறைந்த செயல்களாக இருக்க வேண்டும்..

சமய மத வாதிகள் போல் உண்மைத் தெரியாமல்.பொய் உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் போல் செயல் படுவது அறியாமையாகும்...

சுத்த சன்மார்க்கத்திற்கு தடையாக உள்ள எந்த காரியங்களையும் செய்தாலும் தவறான வழிகாட்டுதல் களாக மாறிவிடும்.

அகவல் படியுங்கள் நல்லது தான்..ஆதாரம் இல்லாமல் எதையும் செய்ய வேண்டாம் என்பது ஆண்டவரின் ஆணையாகும்...

அதனால்தான் ஆடாதீர் அசையாதீர் வேறு ஒன்றை நாடாதீர்.பொய் உலகை நம்பாதீர் என்கின்றார் வள்ளலார்...

சரியான விளக்கம் அடுத்த கட்டுரையில் வெளியிடுகிறேன்.

தொடரும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 18 ஏப்ரல், 2018

ஆன்மாவின் குடும்பம் !

ஆன்மாவின் குடும்பம் !

ஆன்மாவின் மனைவிமார்கள்   மூன்று பேர்

***அவர்களின் பெயர் ஆணவம் ,மாயை ,
கன்மம்***. . . . . .
இந்த மூவறைத்தான் மூன்று மலங்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஆன்மாவின் முதல் மனைவி ஆணவம். ஆணவத்திற்கு பிறந்தது ஒரு குழந்தை அதன் பெயர் அஞ்ஞானம் என்றும் ,   ஜீவன் என்றும் உயிர் .என்றும் சொல்வதாகும் .

இரண்டாவது மனைவி மாயை ! மாயையைக்குப்  பிறந்த குழந்தைகள் நான்கு பேர், அவர்கள் பெயர்  ,
மனம் புத்தி, சித்தம் ,அகங்காரம் என்பவர்களாகும்

மூன்றாவது மனைவி காமியம் என்றும் கன்ம்ம் என்று பெயர்.!

கன்மத்திற்குப் பிறந்த குழந்தைகள் சத்துவம் ,ராஜசம் ,,தாமசம் என்னும் மூன்று குழந்தைகள் அவைதான் மூன்று குணங்கள் .
என்பதாகும் ,

குடும்ப உறுப்பினர்கள் ஆன்மாவை சேர்த்து 12, பண்ணிரெண்டு நபர்கள் .

மாயையினால் தான் உடம்பு என்னும் வாடகை வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது

உடம்பு வாடகை வீடு !

இந்த உலகத்தில் ஆன்மாவின் குடும்பம் வாழவதற்கு வீடு வேண்டும் .வீடுதான் உடம்பு அதற்கு வாடகை வீடு(குடிக்கூலிவீடு) என்று பெயர் ,இந்த வீட்டின் தலைவர் கள் மூன்று பேர் ,
அவர்களின் பெயர் ,வாதம் பித்தம் சிலேஷ்மம் என்பதாகும் ,

ஆன்மா உடம்பு வீட்டில் குடித்தனம் நடத்த தினமும் மூன்று வேலையும் உணவு என்னும்  பொருள் வாடகையாக கொடுக்க வேண்டும் .

வாடகை வசூல் செய்பவர்கள் மூன்று பேர் ,அவர்கள் தான் வாதம் பித்தம் சிலேஷ்மங்கள் என்னும் தயவே இல்லாமல் வசூல் செய்பவர்கள் .

பிண்டம் என்னும் பெரும் கூலி வாங்குபவர்கள் .
இவர்கள் செய்யும் கொடுமைகள் அளவில் அடங்காதது ,இவர்களுக்காக உழைத்து உழைத்து வாழ்நாள் எல்லாம் வருந்தி வருந்தி ,அலைந்து அலைந்து ,திரிந்து திரிந்து ,வயது முதிர்ந்து நோய் வாய்பட்டு இறுதியில்.உணவு என்னும் வாடகை கொடுக்க முடியாமல் மரணம் வந்து விடுகின்றது.

மேலும் வழி தெரியாமல் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து வாழந்து வாழ்ந்து.பிறவி எடுத்துக்  கொண்டே உள்ளோம் .

உணவு என்னும் வாடகை கொடுக்காமல்.
அருளைப்பெற்று சொந்த வீடாக மாற்றுவதை சொல்லிக் கொடுப்பதுதான் .வள்ளலார் கற்றுக் கொடுக்கும் சாகாக்கல்வி என்பதாகும்.
சாகாக்கல்வி கற்று தேர்ச்சி பெற்றால் தான் அருள் என்னும் உணவு கிடைக்கும்.பொருள் உணவை நிறுத்தி அருள் உணவு உட்கொண்டால் மட்டுமே மரணத்தை வென்று.என்றும் அழியாத பேரின்ப சித்திப்  பெருவாழ்வில் வாழ முடியும்..

இந்த வாழ்வு வாழும் வகை தெரியாமல்.சமய  மதவாதிகள் வந்து மக்களைக் குழப்பி விட்டார்கள்.மக்களும் உண்மைத் தெரியாமல் இன்றுவரை பைத்தியம் பிடித்தவர்கள் போல் அலைந்து கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் சொல்லுவதை கவனியுங்கள்....

மதவாதிகள் வருகை !

மற்போர்க்கு கருதி வந்தவர் போல
ஒதும் வேதாந்தம் உரைப்பவர் சிலபேர்

வாள் போருக்கு வந்தவர் போல
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்

தண்டாயுதப் போர் தாங்குவர் போல
இதிகாசத்தை இசைப்பவர் சிலபேர்

உலக்கைப் போரை உற்றார் போல
 இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்

கற்போர் விளக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்

வாய்ப் போருக்கு வந்தவர் போல
விவகாரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போருக்கு வந்தவர் போல
மத தூஷணைகள் வழங்குவர் சிலபேர்

கட் குடியர் வந்து கலக்குதல் போலக்்
 காம நூலைக் கழற்றுவர் சிலபேர்

விழற்கு நீரை விடுவார் போல
வீண் கதை பேச விழைவார் சில பேர்

இவர்கள் முன்பு நான் என்ன செய்ய !

இவர்கள் முன்னே இவர்களுக்கு ஏற்ப குரல் கம்மிடவும் ,குறுநா உலரவும் ,அழலை எழவும் அவரவர் தம்பால்

சமயோதிதமாய்ச் சந்ததம் பேசி இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன் .என்று வள்ளலார் "குடும்ப கோரம் "என்ற தலைப்பில் பதிவு செய்து உள்ளார் .

அடுத்து நித்திய கருமம் !

இந்த ஆன்மா என்ற குடும்பத்தில் நித்தியம் செய்ய வேண்டிய கருமங்கள் உள்ளன .

தினமும் மனையின் பின் புறத்தே ஏகிக் கலக்கும் மலத்தைத் கடிதே கழித்துக்

கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று பல்லில் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல ,வெண் சோமனைத் துவைத்து ,நன்னீர் ஆடி நறுமலர் கொய்து .தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப்

பாவையை வைத்துப் பாடி ஆடும் சிறாரைப் போல செய்பணி யாற்றி ,

மண்ணின் சுவர்க்கு வண் சுதை தீட்டல் போல் வெண்ணீர் அதனை விளங்கப் பூசி ,புகழ் ருத்தராட்சி மாலையைப் உருட்டி உருட்டிக் குரண்டகம் போன்று குறித்த யோகம் செய்து

செய்த பின்னர் சிறிது நேரம் தூக்கம் வரும்போது பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி ,ஊன் பிண்டத்திற்கு உறு பிண்டம் ஈந்து ,குடிக்கூலிக் கடனை குறையறத் தீர்த்துப் பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றது இதுவே .தொடர்ந்து கொண்டே இருக்கும் மனித
வாழ்க்கை யாகும் .

இதுதான் இன்று உள்ள உலகியல் வாழ்க்கை ,

இந்த உலகியல் வாழ்க்கையில் இருந்து
விடுபட்டு.உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் என்றும் அழியாத பேரின்ப சித்தி பெரு வாழ்க்கை வாழ வேண்டும் எனபதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்தான வள்ளலார் .

வள்ளலார்  காட்டிய பாதை தான் நேர் பாதையாகும் .அதுதான் " சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்னும் திரு நெறியாகும். உண்மையான.தந்தையாகிய **அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை** அறிந்து அருளைப் பெற்று உயிரையும் உடம்பையும் அழியாமல் மாற்றிக் கொள்ளும் வழியாகும்.

இதுவே மரணத்தை வெல்லும்.
ஜீவகாருண்ய ஒழுக்க நெறியாகும்.

இந்தப் பாதையில் சாதி் சமயம். மதம் இனம் மொழி் நாடு போன்ற பேதங்கள் இல்லாத பொது நெறியாகும்.புதிய பாதையாகும்.

ஒரே கடவுள் என்ற கொள்கை உடையது .

***அந்த ஒரே கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்*** .அவர் உருவம் அற்றவர் ,அருள் ஒளியாக அருள் பிரகாசமாக விளங்கிக் கொண்டு உள்ளவர் .

அவரதான் தாயாக தந்தையாக நம்மை ஆண்டு கொண்டு உள்ளவர் .இதுவரையில் நமக்கு தெரியாமல் இருந்தவர் .வள்ளலார் வந்து தான் அருள் தரும் உண்மைத் தந்தையை நமக்கு காட்டி உள்ளார் .

இனிமேல் அவரை தொடர்பு கொண்டு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவோம் .

அவரிடம் அருள் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம் .

தொடரும்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தமிழ் மொழியின் சிறப்பு !


வள்ளலாரின் தமிழ் பற்று !

வள்ளல் பெருமானார் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 அருட்பெருஞ்ஜோதி  அகவல் எழுதும்போது ஒவ்வொரு பக்கத்திற்கும் தமிழிலேயே எண்களை குறித்துள்ளார்.இதன் மூலம் நமது வள்ளல் பெருமானாரின் தமிழ்ப் பற்றை உணர்ந்துகொள்ளமுடியும். மேலும் அகவலில் அ முதல் ஔ வரை அகவல் வரி வருமிடத்தில் ' இ' க்கு அடுத்து 'ஈ' என்பதற்கு பதிலாக இ யில் உள்ள மேல் கோட்டை மேல் பக்கமாக சுழித்து விட்டிருப்பார்.கி,கீ போல. இது அந்த காலத்தில் யாரும் எண்ணிப்பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை.

செந்நெறி பா.தண்டபாணி : தமிழ் என்ற சொல் 5 திருமுறைகளில் மாத்திரமே வள்ளல் பெருமானால் கையாளப்பட்டுள்ளது. உரைநடைப்பகுதியில் தமிழ் என்ற பதமும் விளக்கமும் விரிவாக வள்ளல் பெருமான் விளக்கியுள்ளார். 6ம் திருமுறை பாசுரங்களில் தமிழ் என்ற பதத்திற்கு பதிலாக தென்மொழி என்றே வள்ளல் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

செந்நெறி பா.தண்டபாணி: வள்ளல் பெருமான் தமிழை  தென்மொழி என்று  குறிப்பிடுவார். இங்கே தென் என்பதற்கு தெற்கு என்ற பொருள் கிடையாது.  இங்கே தென் என்பதற்கு அழகு, இனிமை என்றே பொருள் கொள்ளவேண்டும்.இப்பொருள் தமிழ் அகராதியிலும் உள்ளது.

செந்நெறி பா.தண்டபாணி: தென்மொழி என்று தமிழை சொன்னதற்கு காரணத்தை வள்ளல் பெருமான் உரைநடைப்பகுதியில்,
ஆரிய பாஷையும் மற்ற பாஷைகளும் டம்பமும் ஆரவாரமும் உடையது என்றும் வெளிப்படக்காட்டாமல் பெருமறைப்பை உடையது என்றும்,கற்பதற்கு மிகவும் பிரயாசை தேவைப்படும் எனவும் பொழுது போக்கிற்கே இம்மொழி பயன்படுகிறது என்றும் சொல்லிவிட்டு தென்மொழியான நமது தமிழ் மொழி பயிலுதற்கு மிகவும் இலேசாக உள்ளது என்றும்,மிகவும் இனிமை உடையது என்றும் ,சாகாக்கல்வியை அறிவிப்பதற்கு திருவருளால் கிடைத்த     தென்  மொழி என்றும் அதாவது தமிழ்தான் தேவ பாஷை என்று  "திருவருளால் " என்ற சொல்லின் மூலம் நமக்கு வள்ளல் பெருமான் குறிப்பிட்டுள்ளதை நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். மேலும் நமது தமிழை தந்தை மொழி  என்று குறிப்பிட்டது எல்லா மொழிகளுக்கும் வித்து போன்றது நமது மொழி,அதாவது நம்மொழியிலிருந்து பல மொழிகள் தோன்றியுள்ளதை குறிப்பிடவே நமது மொழியை தந்தை மொழி என மொழிந்துள்ளார் வள்ளல் பெருமான்.

 செந்நெறி பா.தண்டபாணி: வள்ளல் பெருமான் அகவல் எழுதும்போது  தமிழின் இனிமையில் மயங்கி, தமிழ் அமிழ்தை உண்ட காரணத்தினால் அகவலை ஆசிரியப்பா வகையில் எழுதுவதையும் மறந்து, தொல் காப்பியம் ஆசிரியப்பாவிற்கு இலக்கணமாக குறைந்த அளவு 3 அடிகள் அதிகபட்ச அளவு 1000 அடிகள் என குறிப்பிட்டதையும் தமிழின் இனிமை காரணமாக இலக்கணத்தை மீறி 1596 அடிகள் கொண்ட அகவலை நமக்கு தந்ததே வள்ளல் பெருமானுக்கு  தமிழ் மீதிருந்த அளவில்லாத பற்றின் காரணமாகவே என நாம் நன்றாக உணர முடிகிறது.

மேலும் வேறு மொழிகளில் பிறப்பிக்காமல் தென்மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றார்.

இறைவன் உள்ளவரை இறைவனால் படைத்த உலகம் உள்ளவரை தமிழ் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஏன் என்றால்.தமிழ் இறை மொழி...மற்றைய மொழிகள்.தேவர் மொழி மனிதர் மொழி.இறை மொழி என்பது இறைவனால் படைக்கப்பட்ட மொழியாகும்.

இறவா மொழி என்றே தமிழுக்கு பெயராகும்.

எனவேதான் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பல மொழிகளைக் கற்ற சான்றோர்கள் சொல்லுகின்றார்கள்.

தமிழில் தான் தன்மை.முன்னிலை.படர்க்கை என்ற இலக்கணம் உள்ளன.

தன்னைப் பற்றி அறிந்து கொள்வது தன்மை என்பதாகும்

கண்களுக்கு தெரிந்தவைகள் எல்லாம் அறிந்து கொள்வது முன்னிலை என்பதாகும்.

தன்னையும்.கண்களுக்குத் தெரிந்த அனைத்தும்.கண்களுக்குத் தெரியாத உலகங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டுவதே படர்க்கை என்பதாகும்.

இவை யாவும் தமிழில் தான் உள்ளன.

தொடரும்...

சனி, 14 ஏப்ரல், 2018

மதம் என்னும் பேய் பிடித்தவர்கள் !

மதம் என்னும் பேய் பிடித்தவர்கள் !

வள்ளலார் பாடல் !

மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ

சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ

பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்

சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்றுதோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.

வள்ளலார் பாடல்.....

நம் நாட்டை.உலக நாட்டை ஆண்டு கொண்டு உள்ளவர்கள் மதம் என்னும் பேய் பிடித்தவர்கள்  உண்மையான மாநடம் புரியும் அருட்பெருஞ்ஜோதி  இறைவனைப் பற்றி அறிய மாட்டார்கள்.இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களின் மேல் அன்பு.தயவு.கருணை காட்டும் அறிவு அவர்களுக்கு விளங்காது.

உலகத்திற்கு பின்னாடி வரும் துன்பங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள மாட்டார்கள்.

எனவே அவர்களைப் பேய் பிடித்தவர்கள் என்கிறார் வள்ளலார்

இவர்கள் மூடமான தெய்வங்களைப் பிடித்துக் கொண்டு ஆடுகின்றார்கள்.உண்மையான கடவுள் யார் ? என்பது தெரியாமல் மனம் போனபடி ஆடிக் கொண்டு உள்ளார்கள்.

அவர்களை ஆன்மீகவாதிகள் என்று சொல்வது அறியாமையாகும்.அவர்கள் மனித உயிரைப்பற்றியும்.மனித வாழ்க்கை முறைப்பற்றியும் அறியாதவர்கள்.ஆன்மீகம் என்ற பெயரிலும்.அறிவியல் என்ற பெயரிலும் மனித உயிரைப் பறிக்கும் குணம் உடையவர்கள்.

ஏன் என்றால் அவர்களை அறியாமை என்னும் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டு உள்ளது.அற்பத் தனமான பட்டம் பதவி புகழுக்கு அலைந்து கொண்டு உள்ளவர்கள்.உயிர்களைக் காப்பாற்றும் ஆன்மீக அருள் அறிவு இல்லாதவர்கள்.

மனிதன் சாகாமல் வாழும் கல்விப் பற்றி அறியாதவர்கள்.சாகாக்கல்வி கற்கும் தரம் அவர்களுக்கு கிடையாது.எனவே மதவாதிகள் பின் செல்லாதீர்கள்.என்று ஆணை யிடுகிறார் வள்ளலார்.

மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் ஒரே மார்க்கம் வள்ளலார் தோற்றிவைத்துள்ள **சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் **என்னும் மார்க்கம் மட்டும் தான் உலக உயிர்களைக் காப்பாற்றும் மார்க்கமாகும்.

இந்த தமிழ் புத்தாண்டில் தொடர்ந்து
வள்ளலார் காட்டிய உயிர் இரக்கமான ஜீவகாருண்யத்தைக் கடைபிடித்து.உலகில் உள்ள எல்லா உயிர்களையும் காப்பாற்றுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஆனந்த கூத்து வள்ளலார் !

வள்ளலார் மரணத்தை வென்று ஆனந்த கூத்தாடுகின்றார்.

அந்த ஆனந்த களிப்பு பாடல்கள் தான் இங்கு பதிவு செய்துள்ளன.

இந்த பாடல்களில் உள்ள ஒவ்வொரு வரியும் வார்த்தைகளையும் ஊன்றி படித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

பாடல்கள் !

ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து.
கண்ணிகள்

2. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

3. இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

5. சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

7. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

8. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

10. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
ஆடேடி பந்து ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.

கலிவிருத்தம்

12. பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே. !

மேலே கண்ட பாடல்கள் ஒவ்வொன்றிலும் தன் அனுபவத்தின் அழுத்தமான உட்பொருள் உண்மைகளைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார் படித்து பயன் பெற வேண்டுமாய் அன்புடனும் தயவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 11 ஏப்ரல், 2018

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர் !

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர் !

வள்ளலார் பாடல்.!

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்

கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோகூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே

வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்

சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்றதருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.!

உலகில் பயிர்கள் மழை  இல்லாமல் வாடிக்கொண்டு கொண்டு உள்ளது.நினைத்துப் பார்க்க முடியாத அளவு மழையோ கொட்டோ கொட்டு என்று மழை கொட்டுகின்றது.ஒருவாரத்தில் மழையினால் வந்த தண்ணீர் எல்லாம் கடலில் சென்று கலந்து விடுகின்றது.மறுபடியும் மழை இல்லாமல் பயிர்கள் வாடி விடுகின்றது...

உயர்ந்த அறிவை இறைவன் மனிதர்களுக்கு கொடுத்து இருந்தும். அறிவுள்ள மனிதர்கள்  மழை வருவதற்கு முன் மழை நீரை தேக்கி வைக்க அணைக் கட்டி இருந்தால்.அடுத்த மழை வரும் வரைக்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு பயிர்களைப் பாதுகாத்து வளர்த்து அறுவடை செய்து.பன்படுத்தி எல்லா உயிர்களுக்கும் உணவு கொடுத்து பாதுகாத்து இருக்கலாம்.நாமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்

எனவே மழையின் குற்றமா ? மனிதனின் குற்றமா ? பயிர்களின் குற்றமா  ? சிந்திக்க வேண்டும்.

மழையானது  உயிர்களுக்குத் தேவையான அளவிற்கு.இறைவனின் தனிப்பெரும் கருணையால் காலம் கருதிக் கொடுக்கப் படுகின்றது.

அவற்றை சேமித்து வைக்காத்து
அறிவுள்ள மனிதனின் குற்றம் என்பது நன்றாக தெளிவாகத் தெரிகிறது. இதைத்தான் அற்று வெள்ளம் வருவதுமுன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய் பிடித்து ஆடுதற்கே அறிந்தீர் என்று வள்ளலார் மக்களை அன்புடன் எச்சரிக்கை செய்கிறார்.

அறிவுள்ள மனிதர்கள்.ஆட்சியாளர்கள்.அதிகாரிகள் அறிவைப் பயன்படுத்தி செயல் பட்டு  இருந்தால் இன்று தண்ணீருக்காக.மக்கள் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது..

அதேபோல் உயர்ந்த அறிவுள்ள மனிதர்களுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை செய்கிறார் வள்ளலார்.!

உயர்ந்த தெளிவான அறிவை மனிதனுக்கு மட்டும்  ஏன்?  இறைவன் கொடுத்துப் படைக்க வேண்டும் என்பதை மனிதன் அறிந்து.தெரிந்து. புரிந்து கொள்ள வேண்டும்..

எழுவகைப் பிறப்புகளிலே இறுதி பிறப்பு மனிதப் பிறப்பு..  இந்த பிறப்பானது கீழ்நோக்கிச் செல்லாமல் மேல் நோக்கி செல்ல வேண்டும் என்பதுதான் இறைச்சட்டம்.

இறைச் சட்டம் என்பது!

மனிதன் மரணம் அடைந்து கீழே மண்ணுக்குச் செல்லாமல் .இறைவன் திருஅருளைப் பெற்று மரணத்தை வென்று.மேல்நோக்கிச் சென்று இறைவனுடன் கலந்து கொள்ள வேண்டும்.என்பதுதான் இயற்கையின் சட்டம்.

இறைவன் அருளைப் பெற்றுக் கொள்ளாமல் வாழ்வதால் எமன் என்னும் கூற்றுவன் வந்து உங்கள் உயிரைப் பறித்துக் கொண்டு போக வரப்போகிறானே அவனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார் வள்ளலார்.

எமன் என்னும் கூற்றுவன்  வந்து அழைத்துப் போகாமல்  மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் என்று வாயே பறையாய் அறைகின்றேன். நீங்கள் கேட்காமல் மரணத்தை நோக்கியே வாழ்கின்றீர் என்கின்றார்.

நான் சொல்வதை கேட்காமல் உங்கள் விருப்பம் போல் கண்டதை எல்லாம் பேசி வினைகளைப் பெருக்கிக் கொண்டு வீண் காலம் கழித்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.

இந்த வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்மீன். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள் உங்கள் நன்மைக்காக சொல்லுகிறேன்.

இறைவன் அருளைப் பெருவதற்காக.
இறைவனே அருளை வழங்குவதற்காக.இறைவனே இங்கு வந்துள்ளார்.எனக்கு பூரண அருளை வழங்கியதால் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

உங்களுக்கும் அருள் நிச்சயம் வழங்குவார் இது நல்ல சமயம் இது நல்ல சமயம்.இவற்றை தவரவிட்டால் வேறு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதை சத்தியம் வைத்து தெரியப் படுத்துகின்றார்...

ஆற்று வெள்ளம் வருவதற்கு முன் அணை போடுவது போல் .எமன் என்னும் கூற்றுவன் வருவதற்கு முன் நீங்கள் அருளைப் பெற்றுக் கொண்டால் எமன் உங்களை நெருங்க மாட்டான் என்பதை மேலே கண்ட பாடல் வாயிலாக தெளிவாக தெரியப் படுத்துகின்றார் வள்ளலார்.

நாம் என்ன செய்து கொண்டுள்ளோம். தேவை இல்லாத வீண் வாதங்களைப் பேசி காலத்தை வீணே கழிக்கின்றோம்..
இனியும் வீண் காலம் கழிக்காமல் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடித்து இறைவன் அருளை பூரணமாகப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திங்கள், 9 ஏப்ரல், 2018

ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு வந்தனம் !

ஆன்ம நேய அன்பு உள்ளங்களுக்கு அனந்த கோடி வந்தனம்.

சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும்.கிராமங்களிலும்.வெளிநாடுகளிலும் .சன்மார்க்க சங்கம் சாலை.சபை என்ற பெயரில்..பலப்பல தலைப்புகளில் பெயர் வைத்து சன்மார்க்க சங்கப் பணிகள் செய்து கொண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

ஆனாலும் வள்ளலார் சொல்லுயுள்ள தலைப்பில் பெயர் வைப்பதுதான் சன்மார்க்கத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்.அதுவே வள்ளலாரின் விருப்பமாகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்..

வள்ளலார் ஆரம்ப காலத்தில்.வேத சன்மார்க்கம் என்றும்.அடுத்து ஷடாந்த சன்மார்க்க சங்கம் என்றும் பெயர் வைத்து இருந்தார்.அதற்கு அடுத்தபடியாக. வடலூரில் சபையைக் கட்டி முடித்த பின்பு.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கட்டளைப்படி சங்கம்.சாலை.சபைக்கு பெயர் மாற்றங்கள் செய்கின்றார்

18-7-1872 ஆம்  நாள் ஞானசபை விளக்கப் பத்திரிகையில் வெளியிடுகிறார்.

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்.

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்.

சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.

சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் ஆணை இடுகின்றார்.

நாம் வள்ளலார் சொல்லிய வண்ணம் பெயர் வைக்காமல் நம் விருப்பம் போல் வைப்பது வள்ளலார் திருவார்த்தையை மீறிய செயலாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா !

எனவே இனிமேல் வள்ளலார் சொல்லிய வண்ணம் எல்லா சன்மார்க்க சங்கங்களிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாய் பனிவாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல ..
வள்ளல்பெருமான் வேண்டுதலாகும்..

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம். சாலை சபை என்று பெயர் மாற்றம் செய்தாலே போதும்

எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் எல்லாச் சங்கம்.சாலை.சபையிலும் மறைமுகமாக இருந்து நல்ல முறையில் முன்னேற்றம் அடையச் செய்விப்பார்.

வள்ளலார் பாடல் !

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன்

கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவுகின்றேன்

பாடுகின்றேன் என் தந்தை பிரான் பதப்புகழை அன்பினொடும் பாடிப்பாடி

நீடுகின்றேன் இன்பக் கூத்து ஆடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே !

என்கின்றார் வள்ளலார்.நம் எண்ணம் எல்லாம் அருள் நிரம்ப வேண்டும் என்றால் .வள்ளலார் சொல்லிய வண்ணம் நாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆகையால் சன்மார்க்க ஆன்மநேய சகோதர்கள் அனைவரும். அவரவர்கள் வைத்திருக்கும் சங்கங்களுக்கு .**சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்**என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.