வெள்ளி, 31 மார்ச், 2017

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கை !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கை !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ! என்பது  வள்ளலார் தோற்றுவித்த மார்க்கமாகும்.இந்த மார்க்கம் உண்மையான இறைவன்   அருட்பெருஞ்ஜோதி    ஆண்டவரின் ஆணைப்படி வள்ளல்பெருமான்  தோற்றுவித்து  உள்ள  மார்க்கமாகும் .

இந்த புதிய மார்க்கத்திற்கு  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் தலைவர் இந்த மார்க்கத்திற்கு  செயல் தலைவர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பதை அனைத்து  உலக  மக்களும் அறிந்து, தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

வள்ளலார் பதிவு செய்துள்ள  பாடல் !

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வரச்
சித்தம்   வைத்துச்   செய்கின்ற  சித்தியனே -- சுத்தசிவ
சன்மார்க்க சங்கத்   தலைவனே  நிற்போற்றும்
என் மார்க்கம்   நின் மார்க்கமே !

இந்த மார்க்கத்திற்கு  சுருக்கமாக   சுத்த சன்மார்க்கம்  என்று பெயர் வைத்து
உள்ளார்    வள்ளலார் .  இந்த மார்க்கம் இறைவனோடு நேரிடையாக தொடர்பு
 கொள்ளும் ஞான  மார்க்கமாகும்..   இந்த மார்க்கத்தின் முக்கிய கொள்கை சாகாக் கல்வி கற்றுத் தரும் மார்க்கமாகும் .  சாகாக்கல்வி  என்பது மரணம் இல்லாமல் வாழும் ,மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதாகும்..

மரணம் இல்லாப்  வாழ்வு என்பது  !

மனித தேகம் மண்ணுக்கோ ,நீருக்கோ,  நெருப்புக்கோ ,காற்றுக்கோ,ஆகாயத்திற்கோ இறை ஆகாமல்,மரணத்தை வென்று ''ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகம்'' பெற்று பேரின்ப சித்திப் பெரு வாழ்வில் வாழ்வதாகும் .

பேரின்ப சித்தி  பெருவாழ்வு  என்பது !

கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.   அதாவது நமது உண்மையான  தந்தை அருட்பெருஞ்ஜோதி   ஆண்டவரின் பரி பூரண  அருளைப் பெற்று , மீண்டும்  பிறப்பு இறப்பு  இல்லாமல்  என்றும் அழியாத தேகம் பெற்று வாழ்வதாகும் .அந்த தேகத்திற்கு  ஞான தேகம் என்று பெயர் ....அந்த ஞான தேகம் தான் கடவுளின் தேகம் .அந்த ஞான தேகத்தைப்  பெறுவதுதான்  சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

கடவுளின் ஞான தேகம் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சோதி மலை மேல்   வீட்டில்   தூய  திரு அமுதம்
மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன் ---   ஓதரிய
ஏகா அனேகா எழிற் பொதுவில் வாழ்  ''ஞான
தேகா'' கதவைத் திற !...........என்கின்றார்     வள்ளலார் .

மனித தேகம் கொடுத்ததின் நோக்கமே.,,வாடகை வீட்டில் குடி இருக்கும் நாம்
( அதாவது அசுத்த பூத காரிய தேகம் )   அந்த வாடகை வீட்டை இறைவன் அருளைக் கொண்டு  சுத்த தேகமாக மாற்றி,,,பின் பிரணவ தேகமாக மாற்றி...மேலும் ஞான தேகமாக மாற்றினால் தான் சொந்த வீடான ஆன்ம தேகம் கிடைக்கும் ..ஆன்ம தேகம் கிடைத்தால் மட்டுமே   ஆண்டவரின் மேல்வீட்டுக் கதவு திறக்கப்படும் ..அதன் பின்புதான இறைவனால் கொடுக்கப்படும்  சுத்த பிரணவ  ஞான தேகம் கிடைக்கும்.

இதுவரையில் ஞான தேகம் கிடைத்த அருளாளர்கள் எவ்வுலகிலும்   எவரும்      இல்லை ! என்கின்றார் வள்ளலார் .

நோவாது நோன்பு   எனைப்போல் பெற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் ----தேவா நின்
பேரருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் சற்றே அறை !......என்பதை பதிவு செய்கின்றார் .

எந்த அருளாளர்களுக்கும்   கிடைக்காத  இந்த அறிய வாய்ப்பை      சுத்த சன்மார்க்கத்தின் கொள்கைகளை முழுமையாக  கடைபிடிப்பவர்களுக்கு நிச்சயம்  கிடைக்கும் என்கின்றார் வள்ளலார் .

சுத்த சன்மார்க்க கொள்கைகள் எவை ?

1,..கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  என்பதை உண்மையாக ஏற்றுக்  கொண்டு பின் பற்ற வேண்டும் !.

2,..சிறு தெய்வ வழிபாடு கூடாது.....அந்த    தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி
செய்யக் கூடாது !

3,..எக்காரணம் கொண்டும் புலால் உணவு உண்ணலாகாது !

4,..சாதி,சமயம் ,மதம் ,இனம் ,மொழி ,நாடு  முதலிய வேறுபாடுகள் கூடாது !

5,..எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !

6,.ஏழைகளின் பசி தவிரத்தலாகிய  ஜீவ காருண்ய  ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பதை உண்மையில் உணர்ந்து செயல்பட வேண்டும் !

7,.வேதம் ,ஆகமம்,புராணம், இதிகாசம், சாத்திரம் முதலிய எதிலும் லஷியம்
வைக்க வேண்டாம் !

8,.இறந்தவரை புதைக்க வேண்டும் !..எரிக்கக் கூடாது 1

9,.கருமாதி ,திதி  முதலிய சடங்குகள் செய்ய  வேண்டாம் !

10,.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது !

11,.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம்  செய்யக் கூடாது !

12,.எதிலும் பொது நோக்கம் வேண்டும்

மேலே கண்ட கொள்கைகளை முழுமையாக  கடைபிடிப்பவர்கள்   எவர்களோ அவர்களே சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் !.அவர்களே  இறைவன்
அருளைப்  பெறுவதற்கு தகுதியானவர்கள் .  மரணத்தை வெல்லும் தகுதிப் பெற்றவர்கள்  ஆவார்கள் .

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை ,விட்டுவிட்டு ,ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால்  வைத்துக் கொண்டு,,,சமயத்தையும் .பிடித்துக் கொண்டு,    மதத்தையும் பிடித்துக் கொண்டு,    சன்மார்க்கத்தையும்      பிடித்துக் கொண்டு  சன்மார்க்கத்தில்  இருப்பவர்களுக்கு எந்த பயனும்
எப்போதும் கிடைக்காது .

அன்புடன் ஆன்மநேயன்  ஈரோடு கதிர்வேல்.
9865939896. 

வியாழன், 30 மார்ச், 2017

சுத்த சன்மார்க்க கொள்கை !சுத்த சன்மார்க்க கொள்கை !

வள்ளலார் காட்டிய சுத்த   சன்மார்க்க  கொள்கையானது ,  கடவுளின்    உண்மையைத்  தெரிந்து கொள்ளும் மார்க்கமாகும் .

 இதுவரை,மாயையால்    உருவாக்கப்பட்ட பஞ்ச பூத  கர்த்தாக்களாகிய ,பிரம்மா ,விஷ்ணு ,சங்கரன்,மகேச்வரன்,சதாசிவம்,போன்ற,  தத்துவங்களையும்,...தத்துவங்களைப் பின்பற்றி தொடர்பு  கொண்ட ,சித்தர்கள்,யோகிகள், ஞானிகள்,போன்ற அருளாளர்கள் காட்டிய ஆன்மீக வழியில் மனித சமுதாயம்  பின் பற்றி பின் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.மேலும் புத்தர்,ஏசு ,நபிகள் போன்ற மதத் தலைவர்கள் காட்டிய வழியிலும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றோம். இவை எல்லா வற்றிற்கும் வேதங்கள் என்று பெயராகும் .

வேதங்கள் அனைத்தும் உண்மையான கடவுளைக் காண முடியவில்லை,அதற்கு உண்டான  தகுதியை  அவர்களால்,பெற முடியவில்லை .காரணம் அவர்கள் இறைவனைக் காணும்  ''அருள் பூரணத்தைப்'' பெறவில்லை .. ஏகதேசம் பெற்று உள்ளார்கள் .

அதற்கு வள்ளலார்  பதிவு  செய்துள்ள   பாடல் !

அறங்குலவு  தோழி  இங்கே  நீ யுரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை   எதனால் எனில் இம்  மொழிகேள்
உறங்குவதும் விழிப்பதும் பின்  உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன்    பிறத்தல்   பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலைமை பதத்தலைமை  வாய்த்தனர் அங்கவர்பால்
இரங்கல் எனில்    பெசுததால் என்  பயனோ  நடஞ் செய்
இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

என்கின்றார் வள்ளலார் .

அவர்கள் உண்மை    அறியாமல் சில சில விரதங்களை கடைபிடித்து ,       உண்ணுவதும் ,உறங்குவதும்,விழிப்பதும்,பிறப்பதும், இறப்பதும் மாய்
இருந்து மதத்தலைமை,பதத்தலைமை பெற்றார்களே ஒழிய வேறு ஒன்றும் காணவில்லை.ஆதலால் அவர்களைப் பின் தொடர்ந்து செலவதால் எந்த பயனும்  இல்லை..நான் உண்மையான இறைவனைக் கண்டு அவர் புகழ் பேசிக்  கொண்டு இருக்கின்றேன் .அந்த உண்மையான   இறைவன்தான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் '' என்பதை தெரிவிக்கின்றார் .

அந்த உண்மையான அருட்பெருஞ்ஜோதி   ஆண்டவரைத் தெரிந்து கொள்வது தான் சுத்த சன்மார்க்க கொள்கையாகும் ..

மரணத்தை வென்றவர்களால்   மட்டுமே  உண்மையான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக்   காண முடியும் .

சுத்த சன்மார்க்க கொள்கை என்ன என்பதை வள்ளலார் சொல்லுகின்றார் !

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி - தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர் ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் - இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள அணுக்கள் மேற்குறித்தவர்களது பதப்பிராப்தியை - மேற்படி அணுக்கள் - லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள. ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை யுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள். ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை. மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
இதற்குப் பிரமாணம்: "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், "அறங் குலவு தோழி இங்கே"* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். இதன்றி, திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் "இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்" என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.

சுத்த சன்மார்க்கிகளின் கடமை,கொள்கை என்ன என்பதை  வள்ளலார் தெளிவாக  விளக்கம் தந்து உள்ளார் .
இனிமேலாவது  வள்ளலார் சொல்லியவாறு எல்லாம் வல்ல தனித்தலைமைப்                   பெரும்பதி    அருட்பெருஞ்சோதி ஆண்டவரைத் தொடர்பு  கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம் ..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 29 மார்ச், 2017

மக்களை ஒன்று படுத்த முடியுமா ?


மக்களை ஒன்று படுத்த முடியுமா ?

பல்லாயிரம்
ஆண்டுகளாக    சாதி ,சமயம்,மதம் என்ற   பிரிவினையால்   மக்கள் அழியாத துன்பத்தில் வாழ்ந்து  கொண்டு உள்ளார்கள்... மக்களைப் . பிரித்தவர்கள் யார் ?  என்றால் அருள் பெற்ற ஆன்மீக வாதிகள் 

,மதங்களின் பெயரால் சமயங்களைப் பிரித்தார்கள்,சமயங்களின் பெயரால் சாதிகளைப் பிரித்தார்கள்.  சாதிகளின்  பெயரால் வேற்றுமையைப் பிரித்தார்கள் .

பின் வேற்றுமையில்  ஒற்றுமைக் காணுங்கள் என்கின்றனர் .இது நடக்ககூடிய   காரியமா ?என்றால் எக்காலத்திலும். நடை முறைக்கு ஒத்து   வராது.என்பது அறிவு சார்ந்த  அனைவருக்கும்  தெரியும் ,

வள்ளலார் வந்ததின்   நோக்கம் !

சாதி , சமயம்,  மதங்களை  ஒழித்துக் கட்டவே   அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ..வள்ளலாரை  இவ் உலகத்திற்கு அனுப்பி  வைத்துள்ளார் ...

எனவே தான்   இனி  வருவது சுத்த சன்மார்க்க காலம்  என்கின்றார் ..


சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திரபேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 26மாதத்திற்கு மேல். இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெருகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.

பிரஜோற்பத்தி வருடம்

சித்திரை மாதம் 1ஆம் நாள்


மேலே கண்ட   உண்மையை  மக்களுக்குத்    தெரியப்    படுத்துகின்றார் .

மேலும் பாடல் வாயிலாகத் தெரியப் படுத்து கின்றார் ..

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த  சிவ
சன்மார்க்க  சங்கம்   தலைப்பட்டேன் ---என்மார்க்கம் 
நன்   மார்க்கம்  என்றே  வான்  நாட்டார்   புகழ்கின்றார் 
மன்  மார்க்கத்தாலே   மகிழ்ந்து  !

இனி  வள்ளலார்  தோற்றுவித்த   சுத்த   சன்மார்க்கம்  ஒன்றினாலே  மக்களை  ஒன்று  படுத்த  முடியும்.!

மேலும் அகவலில் தெளிவாக  விளக்கி    உள்ளார் ..!

உலகினில்    உயிர்களுக்கு   உறும்  இடை யூறு எல்லாம் 
விலக   நீ    அடைந்து    விளக்குக     மகிழ்க 

சுத்த   சன்மார்க்கச    சுக நிலை பெறுக
உத்தமன்  ஆகுக   ஓங்குக    என்றனை 

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.


வியாழன், 23 மார்ச், 2017

நல்லவரா? கெட்டவரா ?எப்படி தெரிந்து கொள்வது ?

நல்லவரா? கெட்டவரா ?எப்படி தெரிந்து கொள்வது ?
ஒவ்வொரு மனிதர்களும் நல்லவரா .கெட்டவரா என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும் .?
ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி நல்லவர்கள் போல் நடித்து வாழ்வார்கள்.மக்களையும் ஏமாற்றுவார்கள்,மக்களும் அவர்களை நல்லவர்கள் என்று நம்பிக் கொண்டு அவர்களை ஆதரிப்பார்கள். .ஆனால் அவர்கள் நல்லவர்களா ? கெட்டவர்களா ? என்று அறிந்து கொள்ளவே முடியாது.
ஆனால் இறைவன் பார்வையில் இருந்து அவர்கள் தப்பவே முடியாது.
மக்களின் ஆதரவு உள்ளதால் அவர்களை நல்லவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
எல்லோருக்கும் இறைவன் கொடுக்கும் தண்டனை இறுதியில் மரண தண்டனை ...
அந்த மரண தண்டனை எப்படி வருகின்றது என்பதை வைத்து அவர்கள் நல்லவரா கெட்டவரா என்று அறிந்து கொள்ளலாம்..
உடம்பை விட்டு உயிர் பிரிகின்ற போது,உடம்பிற்கு எந்த துன்பமும் இல்லாமல் .எந்த துன்பமும் கொடுக்காமல்,எந்த பிணியும் இல்லாமல், உயிர் உடம்பை விட்டு பிரிந்தால் அவர்கள் நல்லவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு மீண்டும் நல்லதொரு மனித பிறப்பு கிடைக்கும்.
கெட்டவர்களுக்கு மரணத்திற்கு பின்பு எந்த பிறப்பு கிடைக்கும் என்பது சொல்ல முடியாது.ஆனால் மனித பிறப்புக்கு கீழ் உள்ள பிறப்பு அவரவர்கள் தகுதிக்குத் தகுந்தவாறு கிடைக்கும். இதை அறிந்து உணர்ந்து மக்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
இதுதான் இறைவன் தீர்ப்பு !
இதைத்தான் வள்ளலார் சொல்லுகின்றார் !
ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்.
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்து ஒழுக வேண்டும் மதமான
பேய் பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
என்று வள்ளலார் இறைவனிடம் கேட்கின்றார் ..இறுதியில் நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் என்பதை பதிவு செய்கின்றார் ..
அதேபோல் வாள்ளலார் வாழ்ந்தும் காட்டுகின்றார்.அதற்கு மேலும் .மரணத்தை வென்றும் வாழ்ந்து காட்டுகின்றார் .
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முன்னோர்கள் வார்த்தைகளாகும்.
மேலே கண்ட பாடலில் உள்ளபடி,மனிதர்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்வதுதான் மனித குலத்தின் உன்னதமான வாழ்க்கையாகும்.
நல்லவர்களுக்கு நோய் வராமல் வாழ்வதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கையாகும் .நோய் என்னும் பிணி வராமல் மரணம் அடைவதே நல்லவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் ... .
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ...

செவ்வாய், 21 மார்ச், 2017

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்பது சாகாக்கல்வி கற்கும் மார்க்கமாகும்.

சாகாக்கல்வி என்பது மரணத்தை வெல்லும் வழியைக் காட்டும் உண்மையான மார்க்கமாகும்.

மரணத்தை வெல்வதற்கு அருளைப் பெற வேண்டும்.

அருளைப் பெறுவதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ அவற்றை விட்டு விலகிவிட வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள் என்ன என்பதை வள்ளலார்  தெரிவிக்கின்றார்.அவற்றை கவனமாக படித்துப் பார்த்து விட்டு விட்டால் மட்டுமே சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்க தகுதி உள்ளவர்களாவார்கள்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.

இவ்வளவு தெளிவாக வள்ளலார் சொல்லி உள்ள போதிலும்.சில சன்மார்க்க அன்பர்கள் .ஆற்றில் ஒரு காலும்.சேற்றில் ஒரு காலும் வைத்துக் கொண்டு. தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுத்துக் கொண்டு உள்ளார்கள்

அதற்கு வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்.!


ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோகூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரேவேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்றதருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.!

என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்.

மேலும்

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையேபிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியேதள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

சமய மதங்களின் வழியாக கொலைக்கு காரணமான.மரணத்திற்கு காரணமான வினைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன.எனவே சாதி்.சமயம்.மதங்களை பின் பற்ற வேண்டாம் என்பதை கண்டிப்பாக சொல்லுகின்றார்.

சாதி சமய சழக்கை விட்டேன் அருட்சோதியைக் கண்டேன் என்கின்றார் வள்ளலார்.

நாமும் சாதி்.சமய.மதங்களை பற்று அற விட்டு்.கருணைக் கொண்டு.அருளைப் பெற்று.மரணத்தை வென்று சுத்த சன்மார்க்கிகளாய் வாழ்ந்து காட்டுவோம்....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

வெள்ளி, 17 மார்ச், 2017

தமிழ் நாட்டின் பட்ஜெட் !

தமிழ் நாட்டின் பட்ஜெட் !

தமிழ் மாநிலத்தின் பட்ஜெட்டில்
கடன் 3,16,366 கோடியாம்.பற்றாக்குறை . 
மேற்கொண்டு 42,000 கோடி கடன் வாங்க போறாங்களாம் .
கடன் யாரிடத்திலும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை .
அ இ அ திமுக மந்திரிகள் .எம் எல்,ஏ க்கள் வட்டம் மாவட்டம்,.சசிகலா, ஜெயலலிதா .போன்றோர் கொள்ளை அடித்த பணம்,மற்றும் .மணல், கொள்ளையில் கிடைத்த பணம்..மேலும் வெளி நாட்டில் பதுக்கி வைத்துள்ள பணம்.
மேலும் தி மு க ஆட்சியில் அவர்கள் கொள்ளை அடித்த பணம் முழுவதும்,தமிழக மக்களின் பணம் , ,தமிழ் நாட்டின் சொத்துக்கள் அதில் யாருக்கும் சந்தேகம் தேவை இல்லை.
இவை அனைத்தும் வெளியே கொண்டு வந்தால் ,தமிழ் நாட்டின் கடனை சரி செய்து,தமிழ் நாட்டு மக்களை கடன் இல்லாமல் காப்பாற்றலாம். .மற்ற மாநிலங்களுக்கு நாம் கடன் கொடுக்கலாம் .
அவர்கள் சொந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டாம்.கொள்ளை அடித்த பணத்தை மட்டும் கொடுத்தாலே போதும்.
இதை தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் செய்வார்களா ? அப்படி செய்தால் உண்மையிலேயே அவர்கள் மனிதர்கள் .இல்லையேல் அவர்கள் ......
வள்ளலார் பாடல் ;--
பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே
பகராத வன்மொழி பகரு கின்ரீரே
நண்ணாத தீயின நண்ணுகின்றீரே
நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்ததனை நினைந்தே
கண்ணார நீர் விட்டுக் கருத அறியீரே
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம்
எத்துனை கொள்கின்றீர் பித்துலகீரே !
மேலும் சொல்லுகின்றார் ..
வட்டிமேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டி உள் இருந்தீர்
பட்டினிக் கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங் கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர் எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர்
எத்துனை கொள்கின்றீர் பித்து உலகீரே !
நீங்கள் எவ்வளவு கொள்ளை அடித்தாலும்,மரணம் வருகின்ற போது எதையும் கொண்டு போக முடியாது .என்பதை தெரிந்தும்.பைத்தியக் காரத் தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்கின்றார் வள்ளலார் ..
மக்களுக்கு நல்லதை செய்யுங்கள் நல்லவர்களாக வாழுங்கள் .இல்லையேல் முடிவு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நரகத்திற்கு தள்ளப் படுவீர்கள்.
மறைமுகமாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டு உள்ளார் ஒருவர் ! அவர்தான் கடவுள் !
அவரை எவராலும் ஏமாற்ற முடியாது...
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 15 மார்ச், 2017

ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா என்பதை  ''சிற்றணு பசு' என்கின்றார் வள்ளலார் ! அந்த சிற்றணு பசு ஆவி  தன்மை உடையது .அதற்கு உருவம் கிடையாது.அந்த  சிற்றணு பசு என்பது எங்கு இருந்து இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்தது ?   எப்படி வந்தது ? என்பதை வள்ளலார் விளக்குகின்றார் ,

அறிவு என்பது ஓர் சிறிதும் தோன்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்த காரத்தில் நெடுங்காலம்,சிற்றணுப் பசுவாகி அருகிக் கிடந்த அடியேனுக்குள் உள் ஒளியாகி இருந்து அப் பாசாந்தகாரத்தின் நின்றும் எடுத்து ,எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வு உடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள இம் மனித பிறப்பு உடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங் கருணைத் திறத்தை எங்கணும் அறிவேன் ! எவ்வாறு கருதுவேன் !! என்னென்று சொல்வேன் ! ! !  என்கின்றார் ..

பெரிய  பாசாந்தகாரம் என்றால்  என்றால் என்ன ?

இயற்கை உண்மையனர் என்றும்,
இயற்கை அறிவினர் என்றும்,
இயற்கை இன்பினர் என்றும்
நிர்க்குணர் என்றும் சிற்குணர் என்றும்
நித்தியர் என்றும்
சத்தியர் என்றும்
ஏகர் என்றும்
அநேகர் என்றும்
ஆதியர் என்றும்,
அனாதியர் என்றும்
அமலர் என்றும்
அற்புதர் என்றும்,
நிரதிசயர் என்றும்,
எல்லாம் ஆனவர் என்றும்,
எல்லாம் உடையவர் என்றும்,
எல்லாம் வல்லவர் என்றும்,
அருட்பெருஞ்ஜோதியர் என்றும்

அளவு கடந்த திருக் குறிப்புத் திரு வார்த்தைகளால் ,சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும்,நினைத்தும்,உணர்ந்தும்,புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற ,
தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுள் ,இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் ''பேரம்பலம்'' என்பதாகும்..

அம்பலம் என்றால் வெளி என்பதாகும்.பேரம்பலம் என்றால் பெரிய வெளி என்பதாகும்.அந்த அம்பலத்தில்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கிக் கொண்டு உள்ளார் .

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே--அவர்
ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே !

அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே --அவர்
ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே !

அணுவில் அணுவாய் இருந்தார் வெண்ணிலாவே --எங்கும்
ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே !

அண்ட பகிரண்டம் எல்லாம் வெண்ணிலாவே --ஐயர்
ஆட்டம் என்று சொலவதென்ன வெண்ணிலாவே !

அம்பரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே ---என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே !

என்று அந்த பெருவெளியான பேர் அம்பலத்தைப் பற்றித் தெளிவாக தெரியப் படுத்துகின்றார் ...அந்த அம்பலத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,உருவம் இல்லாமல் பேர்அணுவாக,அனாதியாக உள்ளார் ! அவர்  இயற்கை உண்மையாக ..இயற்கை விளக்கமாக..இயற்கை இன்பமாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை மனித குலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மா என்னும்  சிற்றணு பசு !

வள்ளலார் சொல்லும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடத்திற்கு கடவுள் சமூகம்  என்று பெயர் ...அந்த சமூகம் அனாதியாக இருக்கின்றது.அனாதி என்றால்,எந்த ஆதாரமும் இல்லாமல் தன்னைத்தானே இயங்கிக் கொண்டு உள்ள இடத்திற்கு அனாதி  என்று பெயர் ...

சிருட்டி ஞாயம் என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்து உள்ளது !

ஆகாசம் அனாதி .அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி ..அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி ..அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ அப்படிக் கடவுள் இடத்தில் அருட் சத்தி அனாதியாய் இருக்கின்றது .ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றன.

அதேபோல் கடவுள் சமூகத்தில் ஆன்மாக்கள் என்னும் அணுக்கள் நிறைந்து இருக்கும் இடத்திற்கு ஆன்ம ஆகாயம் என்றுபெயர் ...அங்கு அணுக்கள் சந்தான மயமாய் நிரம்பி இருக்கின்றன...அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர் ..அங்குதான் நாம், நான் என்னும் அனைத்து ஆன்மாக்களும் இருக்கும் சொந்த இடமாகும்.

அங்கு இருந்துதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பப் படுகின்றன..ஆன்மா என்னும் அணு இங்கு  வருகின்ற போது,ஆன்ம தேகத்தோடுதான் வருகின்றது ..அந்த ஆன்ம அணுக்களுக்கு அருளை நிரப்பிக் கொண்டுதான் அனுப்பி வைக்கப்படுகின்றன ஏன் ? என்றால் அருள் இல்லை என்றால் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது ..

ஆன்ம அணுக்கள் இங்கு வந்தால் ஆன்ம தேகத்தோடு வாழ முடியாது...ஆண்டவர் கட்டளைப்படி பஞ்ச பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட பூத காரிய தேகத்தில் தான் வாழ வேண்டும்....அந்த பஞ்ச பூத காரிய தேகத்தை ...இங்கு ஆட்சி செய்யும் மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகின்றது....

தான் பெற்ற பேறு என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

பெரு மாயை என்னும் ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்ற உடம்பு இது சாகாத சுத்த உடம்பாக்கி
ஒரு ஞானத் திருஅமுதம் உண்டு ஓங்குகின்றேன்  இனி நின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ
அறியாயோ என்னளவில் அமைக அமர்க
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ
சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே !

என்னும் பாடல் வாயிலாக மாயையினால் கட்டிக் கொடுக்கப்பட்ட,பஞ்ச பூத  வீட்டைப் பற்றி வள்ளலார்  தெரிவிக்கின்றார்....

இந்த  பஞ்ச பூத உலகத்தில்,ஆன்மா என்னும் அணுவானது  84,லட்சம் யோனி பேதங்களிலும் பிறப்பு எடுத்து வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறப்பு கொடுக்கப் படுகின்றது,.மனிதப் பிறப்பை நீக்கி மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்றால்,உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அன்பால்,தயவால்,கருணையால்,ஆன்மாவில் உள்ள அருளைப் பெற்று,அசுத்த பூத காரிய தேகத்தை,சுத்த பூத காரிய தேகமாக மாற்றி ,,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று,ஆன்ம  தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்த உலகத்தை விட்டு தன்னுடைய சொந்த வீட்டிற்கு செல்ல முடியும்....இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சட்டமாகும்,கட்டளை யாகும்....

உடம்போடவோ,மரணம் வந்தோ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் செல்ல  முடியாது...ஆன்மா என்னும் அணு தன்னை உணர்ந்து ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி  செல்ல முடியும்.

மேலே கண்ட ஆன்ம அணுக்கள் இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து ஒரு அணுக்கள் கூட வெளியே செல்ல முடியாமல்,வழி தெரியாமல்  தவித்துக் கொண்டு உள்ளது ...

இந்த உண்மையை ஆன்மாக்களுக்குத் தெரியப்படுத்தவே வள்ளலாரை இந்த உலகத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  வருவிக்க உற்றார் .என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்\
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தை அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று  மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்றும்

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடுமோர்
பவ நெறி இதுவரை பரவியது அதனால்
சென்னெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறி இருள் அடைந்தனர் ஆதலில் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான்
புத்தமுது அருள் கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற என்னரசே
தனி நடராஜ என் சற்குரு மணியே !

என்றும்

பேருற்ற உலகில் உறு சமயமத நெறி எலாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் உற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாதபடி விரைந்தே
புனிதம் முறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ
என் பிள்ளை ஆதலாலே
இவ் வேலை புரிக என்று இட்டனன் மனத்தில்
வேறு எண்ணற்க என்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க் குணானந்த பர நாதாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே !

என்னும் பாடல்களின் வாயிலாக வள்ளலார் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ..

எனவே உடம்பை எடுத்து வராத ஆன்ம அணுவானது,  உடம்பு எடுத்து வாழ்ந்து வந்ததால் மீண்டும் உடம்பை,மண்ணுக்கோ ,தீயுக்கோ,இரை ஆக்காமல் உடம்பைப் பற்றிக் கொண்டு உள்ள ,பஞ்ச பூத அணுக்களை,அருளைக் கொண்டு  பிரித்து,எடுத்து மாயையிடம் கொடுத்து விட்டு,பூதகாரிய உடம்பு  இல்லாத ஆன்ம தேகமான,ஒளி தேகமாக  மாற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பது  ஆண்டவர் ஆணையாகும்.

ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் வாழ்ந்து வழிக் கட்டி உள்ளார்.....

வள்ளலார் பெற்ற பேறு பாடல் !

வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தைச்
சேதித்து என் உள்ளம் திருக் கோயிலாகக் கொண்டு சித்தி எலாம்
போதித்து உடம்பையும் பொன்னுடம்பாக்கி நற் புத்தமுதம்
சாதித்து அருளிய நின் அருளுக்கு  யான் செய்யத்  தக்கதென்னே !

நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன்
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
கோன் செய்யவே பெற்றுக் கொண்டேன் உண்டேன் அருள் கோனமுதே !

ஊன் செய்த தேகத்தை ஒளி தேகமாக மாற்றிக் கொண்ட வள்ளலார் .என்போல் இந்த உலகம் பெறுதல் வேண்டும் என்கின்றார்..நாமும் வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து,ஊன் தேகத்தை நீக்கி,  ஆன்ம தேகம் பெற்று அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம் .

இன்னும் விரிக்கில் பெருகும் ...தொடரும்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 ..

செவ்வாய், 14 மார்ச், 2017

வள்ளலார் சொல்லிய உளவு !

வள்ளலார் சொல்லிய உளவு !

இந்த உலகத்தில் பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

நமக்கு அறிவு வந்த காலம்  முதல் ''அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்'' ''அடைந்து அறியாத அற்புத அறிவுகளையும்'',...அடைந்து அறியாத குணங்களையும்,..கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,...செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,...கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,...அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,...பெற முடியாமல் வீணாக அழிந்து கொண்டு உள்ளோம்.

1,அறிந்து அறியாத அற்புத அறிவு,
2,அடைந்து அறியாத அற்புத அறிவு,
3,அடைந்து அறியாத அற்புத குணம்,
4,கேட்டு அறியாத அற்புத கேள்விகள்,
5,செய்து அறியாத அற்புத செயல்கள்,
6,கண்டு அறியாத அற்புதக் காட்சிகள்,
7,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்கள்,

மேலே கண்ட அனைத்தும் மனித தேகம் எடுத்த நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..ஆனால் அறிந்து  தெரிந்து கொண்டு உள்ளோமா ? என்றால் இல்லை என்பதுதான்,அனைவரிடமும்  பதிலாக வருகின்றது ..

மேலே கண்ட அனைத்தும் அறிந்து தெரிந்து கண்டு ,கேட்டு, பெற்று, அனுபவித்து நமக்குத் தெளிவாக விளக்கி விளக்கம் தருகின்றார் .நமது அருட்தந்தை வள்ளல்பெருமான் அவர்கள்....

வள்ளலார் இவைகளை எல்லாம்  எங்கு இருந்து பெற்றார் ? யார் இடம் இருந்து பெற்றார்? எவ்வாறு பெற்றார் ? என்னும் உண்மையைத்  தெரிந்து கொண்டால் மட்டுமே நாம் வள்ளலார் போல் மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்திப் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழமுடியும் ./

அதை விடுத்து பழைய சமய மதக் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டும்  .வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வதால் எந்தப்  பயனும்,எப்போதும் கிடைக்காது என்னும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்...

உண்மைக் கடவுள் யார் ?

நாம் இதுவரை சமய மதங்கள் காட்டிய  பொய்யானக் கடவுள்களை வணங்கியும்,வழிபட்டும் சிற்றறிவு பெற்று வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளோம்....நாம் முதலில் உண்மைக் கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளலார் ..

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ....
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்க்குகின்றவர் என்றும்.
இரண்டும் படாத பூரண இன்பம் ஆனவர் என்றும் ...
எல்லா அண்டங்களையும்,...
எல்லா உலகங்களையும்,...
எல்லாப் பதங்களையும்,....
எல்லாச் சத்திகளையும் ...
எல்லாச் சத்தர்களையும் ...
எல்லாக் கலைகளையும் ...
எல்லாப் பொருள்களையும் ...
எல்லாத் தத்துவங்களையும் ...
எல்லாத் தத்துவிகளையும் ...
எல்லா உயிர்களையும் ....
எல்லாச் செயல்களையும்...
எல்லா இச்சைகளையும் ...
எல்லா ஞானங்களையும் ...
எல்லாப் பயன்களையும் ....
எல்லா அனுபவங்களையும் ....
மற்றும் எல்லா வற்றையும் ...

தமது திருவருட் சத்தியால்,தோற்றுவித்தல்..வாழ்வித்தல் ...குற்றம் நீக்குவித்தல் ...பக்குவம் வருவித்தல்...விளக்கஞ்செய்வித்தல் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்..எல்லாம் ஆனவர் என்றும் ..ஒன்றும் அல்லாதவர் என்றும்.சர்வ காருண்யர் என்றும் ..சர்வ வல்லவர் என்றும்..எல்லாம் உடையவராய் ..

தமக்கு ஒருவரும் ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெரும் தலைமை '''அருட்பெருஞ்ஜோதியர் "'என்றும் சத்திய அறிவால் ஆறியப் படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்து விளங்குகின்றார் ..

அவர் இருக்கும் இடம் !

சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் ...அந்த இடத்திற்கு  அருட்பெரு வெளி என்னும் பெயராகும் ...நாம் காணும் பஞ்ச பூத வெளி அல்ல ! நாம் காணும் ,அக்கினி,சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் போன்ற ஒளிகளில் ஒன்று அல்ல ! அவை அருள் ஒளியாகும் ,அவை இயங்கும் இடம்  அருள் நிறைந்த பெரு வெளியாகும் ..

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் என்னும் தலைப்பில் வள்ளலார் தெளிவாக பதிவு செய்துள்ள பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெரும் தலத்து மேன் நிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரு திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெரும் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என் அரசே !

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை ,இவ் உலகத்தின் இடத்தே ஜீவர்கள் ஆகிய நாம் அறிந்து, அன்பு செய்து ,அருளை அடைந்து அழிவு இல்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,

பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும் பலவேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம்,பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இல்லாமல் விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.

இனிமேல் நாம் இறந்து இறந்து ,பிறந்து பிறந்து .வீண் போகாமல் .உண்மையான கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு ,,வள்ளலார் சொல்லிய வண்ணம் .உண்மை அறிவு..உண்மை அன்பு..உண்மை இரக்கம் அதாவது ஜீவ காருண்யம் ..முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் வாழ்ந்து காட்ட வேண்டும் ..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தெரிந்து கொள்வதற்குத் தகுந்த இடம்;---  ,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுக் கடவுளாக விளங்குபவரை  ,,தமிழ் நாட்டில் உள்ள  கடலூர் மாவட்டம் வடலூரில்,''சமரச சுத்த சன்மார்க்க  சத்திய ஞான சபையில்''கடவுளை  ஜோதி வடிவில் ,இயற்கை விளக்கமாக புறத்திலே வைத்து உள்ளார் ....அதேபோல் உண்மைப் பொது நெறியாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும் வடலூரில் தோற்றுவித்து உள்ளார் . அதேபோல் அருளைப் பெறுவதற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையும்,வடலூரில் தோற்றி வைத்து உள்ளார் ..

அந்த உண்மையான உளவைத் தெரிந்து கொண்டால்...அவற்றை தொடர்பு கொண்டு, அதன்படி வாழ்ந்தால் இத்தருணமே தொடங்கி கருதிய வண்ணம் பெற்றுக் பெரும் களிப்பை அடைவீர்கள்

நாம் எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன் .தம்பி,உற்றார் ,உறவினர்,நண்பர்கள் .மற்றும் பழைய,சமய,மத  தெய்வங்கள் ,முதலானோர் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கும் மேலாக கோடி கோடி பங்கு அதிகமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வாரி வாரி வழங்குவார் ..இது சத்தியம் ..இது சத்தியம்,இது சத்தியம்...

திருவடிப் புகழ்ச்சி பாடல் !

உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண
''உளவு'' எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என் பாட்டைக் குறிக் கொண்டானைக்
கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலை புலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி
எள்லானை இடர் தவிர்த்து இங்கு என்னை யாண்ட
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !

மேலும் ஒரு உளவு சொல்லுகின்றார் !

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்க சங்கத்து தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து தாடும்
மாநடத்து அரசே என் மாலை அணிந்து அருளே !

 சேர்ந்திடுவே யொருப்படுமின்  சமரச சன்மார்க்கத்
திரு நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம்
ஒர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே
வார்ந்த கடல் உலகறிய மரணம் உண்டோ அந்தோ
மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணும் சம்மதியாது
சார்ந்திடு அம் மரணம் அதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே !

மேலே கண்ட பாடல்களுக்கு விளக்கம் தர வேண்டியது இல்லை என நினைக்கிறேன்.அதிலே தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார் ...                    
மேலே கண்ட கருத்துக்களின்  வாயிலாக அருளைப் பெரும் ''உளவை'' மேலே சொன்ன விளக்கத்தாலும்,பாடல்களாலும் ,வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .நாமும் அந்த உளவைத் தெரிந்து கொண்டு ,வள்ளலாரைப்  போல் வாழ்ந்து மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று என்றும் அழிவில்லாமல் வாழலாம்.அதற்கு  எல்லாம் வல்ல,உண்மைக் கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  வாழ்வாங்கு  வாழ்வோம்...இதுவே உளவாகும் ....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

சனி, 11 மார்ச், 2017

குடும்பம் நடத்தும் கடவுள்கள்!

குடும்பம் நடத்தும் கடவுள்கள் !

சமயங்கள்.மதங்கள் எல்லாம் குடும்பம் நடத்தும் கடவுள்களையே மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்கள்.உண்மையான கடவுள் யார்? என்பது தெரியாமல்.அழிந்துபோகும் தத்துவங்களான.பிரம்மா.விஷ்ணு,.சங்கரன்.மகேச்சுவரன்.சதாசிவன்.ஏசு.அல்லா.புத்தன்.கிருட்டிணன்.ராமன்,முருகன், போன்ற பல ஆண் தெய்வங்களும்.பார்வதி்.சரஸ்வதி.லட்சுமி்.சீதை,வள்ளி தெய்வானை. ,அன்னை,    ஆதிபராசக்திகள் போன்ற பல பெண் தெய்வங்களையும். உண்மையாக இருப்பது போலவே .இடம.வாகனம்.ஆயுதம்.வடிவம்.ரூபம்.முதலிய பொம்மைகளை வடிவம் அமைத்து, ஆலயங்களை எழுப்பி ,அதன் மத்தியிலே   .உணர்ச்சி.இல்லாத,உயிர் இயக்கம் இல்லாத,கருணை இல்லாத . ஜட.விக்கிரங்களை வைத்து கடவுள் என்று பெயர ்வைத்து,குடும்பம் நடத்தும் தெய்வங்களை  அடையாளமாக வைத்து,  அலைய விட்டு விட்டார்கள்.அதையும் உண்மை என்று நம்பி.அன்றிலிருந்து இன்றுவரை      மக்கள் அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.பலன் ஒன்றும் இன்றுவரை அடைந்தார்கள்  இல்லை .அதைத்தான வள்ளலார் கீழே கண்ட பாடல் வரிகளில். தெரிவிக்கின்றார்.

ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
மன்றினை மறந்தது இங்கு உண்டோ
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
பரிந்தருள் புரிவதுன் கடனே.


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண் மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெற எவ்வுலகும்
வாழ்ந்து ஒங்கக்  கருதி யருள் வழங்கினை என் தனக்கே
உலைவறு இப்போழுதே நற் தருணம் என  நீயே
உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மை உரைத் தவனே
சிலைநிகர் வன்  மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்த சிகா மணியே என் திருநடநா யகனே !

உண்மையான கடவுள் யார் ? என்பது தெரியாமல் தத்துவக் கலைகளை கற்பனைகளாக வடிவம் அமைத்து ,.இதுதான கடவுள்கள் என்று ,மக்களை நம்ப வைத்த... கண் மூடித்தனமான வழக்கத்தை   எல்லாம்,ஆழமான குழியைத் தோண்டி  மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும் என்கின்றார் வள்ளலார் .

உண்மையான,... என்றும் நிலையான கடவுள் ஒருவர் உள்ளார் அவரே ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்பதனை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,மக்கள்  என்றும் அழியாத அருளைப் பெற்று பேரின்பம் அடைய வேண்டும் என்பதற்காகவே ,''சுத்த சன்மார்க்கம்'' என்ற தனித் தன்மை வாய்ந்த மார்க்கத்தை தோற்றி வைக்க,இதுவே நல்லத் தருணம் எனக்கருதி  இப்பொழுதே அருள் வழங்கினாய் ...ஆதலால்  சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தைத்  தோற்றுவித்துள்ளேன் என்கின்றார் .

1872.ஆம் ஆண்டு தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற புதிய தலைப்பை வைத்து, உலக மக்களுக்கு  வெளிப் படுத்துகின்றார் .

இந்த மாபெரும் உண்மையைத் தெரிவித்து உணர்த்தி, என்னையும் என்றும் அழியாமல் வாழும் அருளை வழங்கி,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி    மரணத்தை வெல்லும் வழியையும் காட்டி,ஆட்கொண்ட ,சித்த சிகாமணியே திருநடநாயகனே என்று .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார் நமது அருட்தந்தை வள்ளலார் ...

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! அவர் குடும்பம் நடத்தும் கடவுள் அல்ல ! அவர்  அண்டங்கள் உலகங்கள், ஆன்மாக்கள்
உயிர்கள்,கிரகங்கள் அனைத்திற்கும் இயங்கும் சக்தியாக, இயக்கும் சக்தியாக,அருள் அணு ஒளியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பேரோளியாகும். அந்த ஒளியே கடவுளாகும்.

இனிமேல் நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க புதிய,தனி நெறியைப் பின்பற்றி,வள்ளலார் காட்டிய  ஒழுக்க நெறியில் நின்று,என்றும் அழியாத அருளைப் பெற்று மரணத்தை வென்று .ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு ,பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் சுத்த பிரணவ  ஞான தேகம் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...