புதன், 14 அக்டோபர், 2015

பசி அதிகரித்த காலத்தில் உண்டாகும் அவத்தைகள் !

பசி அதிகரித்த காலத்தில் உண்டாகும் அவத்தைகள் !

உடலில் ஏற்படும் மாற்றங்கள் ;--

1,ஜீவ அறிவு விளக்கம் இல்லாமல் மயங்குகின்றன.

2,அது மயங்கவே அறிவுக்கு அறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றன.

3,அது மறையவே புருட தத்துவம் சோர்ந்து விடுகின்றது .

4,அது சோரவே பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது

5,அது மழுங்கவே குணங்கள் எல்லாம் பேதப்படுகின்றன.

6,மனம் தடுமாறிச் சிதறுகின்றது

7,புத்தி கெடுகின்றது.

8,சித்தம் கலங்குகின்றது .

9,அகங்காரம் அழிகின்றது.

10,பிராணன் சுழல்கின்றது .

11,பூதங்கள் எல்லாம் புழுங்குகின்றன.

12,வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை தடுமாறுகின்றன.

13,கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது.

14,காது கும்பென்று செவிடு படுகின்றது

15,நா உலர்ந்து வரளுகின்றது.

16,நாசி குழைந்து அழல்கின்றது .

17,தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது. .

18,கை கால் சோர்ந்து துவளுகின்றன

19,வாக்குத் தொனி மாறிக் குளறுகின்றது .

20,பற்கள் தளருகின்றன .

21,மல சல வழி வெதும்பு கின்றது ,

22,மேனி கருகுகின்றது ,

23,ரோமம் வெறிக்கின்றது

24,நரம்புகள் குழைந்து நைகின்றன .

25,நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன .

26,எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்கு விடுகின்றன .

27,இருதயம் வேகின்றன.

28,மூளை சுருங்குகினது .

29,சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது.

30,ஈரல் கரைகின்றது.

31,இரத்தமும் சலமும் சுவருகினறன .

32,மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றன .

33,வயிறு பகீல் என்று எரிகின்றது.

34,தாப சோபங்கள் மென்மேலும் உண்டாகின்றன .

35,உயிர் இழந்து விடுவதற்கு மிகவும் சமீபித்த அடையாளங்களும் ,அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன .

36,பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது ,ஜீவர்களுக்கு எல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.

இவ்வளவு அவத்தைகளும் ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசி நீங்க,, நீங்குகின்றன .

அப்போது தத்துவங்கள் எல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து ,அறிவு விளங்கி ,அகத்திலும்,முகத்திலும் ஜீவ களையும் கடவுள் களையும் துளும்பி ஒப்பில்லாத திருப்தி இன்பம் உண்டாகின்றது .

புண்ணியம் ;--

இப்படிப்பட்ட இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணை என்று சொல்லலாம் ?.சொல்லுவது ?

இந்த புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம் ? சொல்லுவது ?

''எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சம் என்றே சத்தியமாக அறிய வேண்டும்'''..

மேலே கண்ட, பசியினால் வரும் அவத்தைகளைப் போக்குவதே''கடவுள் வழிபாடு'' என்பதைத்தான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார் ..

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு  !.

ஜீவர்களின் பசியைப் போக்குவதே கடவுள் வழிபாடு !

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் கதவைத் திறக்கும் திறவு கோள் என்றார், நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

மோட்ச வீடு என்பது நம்முடைய தலைப்பாகத்தில் உள்ள ஆன்மாவின் இருப்பிடம்.

ஆன்மாவின் உள்ளேதான் அருள் என்னும் திரவம் நிரம்பி உள்ளது.அதை மறைத்துக் கொண்டு உள்ள அறியாமை என்னும் திரைகளை  நீக்கினால்தான் அமுதம் சுரக்கும்.

அதை நீக்கும் வழியைக் கண்டு பிடித்தவர்தான் வள்ளல்பெருமான்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே அத்திரைகளை நீக்க முடியும்.வேறு எந்த வழியாலும் நீக்க முடியாது என்பதை வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக மக்களுக்கு விளக்கி உள்ளார் .

மனிதர்களாகிய நாமும் வள்ளலார் காட்டிய புனிதமான சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி ஜீவ காருண்ய வழியில் நின்று அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்பம் என்னும் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு