திங்கள், 22 மே, 2017

கதவுத் திறக்கப்படும் !

கதவுத் திறக்கப்படும் !

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் ஏசுபிரான் !

கேட்டாலும் கிடைக்காது ! தட்டினாலும் திறக்காது ! என்கின்றார் வள்ளலார் !

இறைவன் கொலுவிருக்கும் கோட்டையின்  மேல் வீட்டுக் கதவு சாத்தப்பட்டு ,வெளியில் பூட்டுப் போடப்பட்டு உள்ளது .உள்ளே தாள் போட்டு உள்ளது.!

அந்தக் கதவைத்  தட்டினால் எப்படித் திறக்கும்.? வெளியே தான்  பூட்டுப் போட்டு உள்ளதே ! பூட்டைத் திறக்க சாவிதானே வேண்டும் .சாவி இல்லாமல் கதவைத் தட்டினால் எப்படி கதவு திறக்கும் .கதவைத் திறக்க வேண்டுமானால் முதலில் பூட்டைத் திறக்க ,திறவு கோல் என்னும் சாவி வேண்டும் என்கின்றார் வள்ளலார் .

ஒன்றைக் கொடுத்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பதை ஏசுபிரான் அவர்கள்,தானும் உணரவில்லை, மக்களுக்கும்  தெரிவிக்க வில்லை.!

வள்ளல்பெருமான் ஒருவர்தான் மக்களுக்கு தெளிவான அறிவு விளக்கமும்,அருள் விளக்கமும்  தந்து உள்ளார் !

ஜீவ காருண்யம் !

ஜீவர்கள் எல்லாம் ,ஒரு தன்மையாகிய இயற்கை உண்மை ஏக தேசங்களாய்ச் சர்வ சத்தி உடைய கடவுளால் சிருஷ்டிக்கப் பட்டபடியால் ஓர் உரிமை உள்ள சகோதரர்கள் ஆவார்கள் .ஆதலால் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப் படுகின்ற போதும் ,துக்கப்படுவார் என்று அறிந்த போதும்,அவரைத் தமது சகோதரர் என்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கம் உண்டாவது சகோதர உரிமை ஆகலின்

ஒரு ஜீவன் ( உயிர் ) துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதும் ,துக்கப் படும் என்று அறிந்த போதும்,மற்றொரு ஜீவனுக்கு உருக்கம்( இரக்கம் ) உண்டாவது பழைய ஆன்ம உரிமை என்று அறியவேண்டும் .

அந்த ஆன்ம நேய ஒருமைக் கொண்டு துன்பப்படும் ஜீவர்களுக்கு உயிர் இரக்கம் கொண்டு உபகாரம் செய்தால் மட்டுமே , ''இறைவன் கொலுவிருக்கும்,அருள்  கோட்டையின் கதவைத் திறக்கும் திறவு கோல் என்னும் சாவி கிடைக்கும்''' எனவே முதலில் சாவி என்னும் திறவு கோல் நம் கையில் கிடைக்க ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் வேண்டும் ..

இவைதான் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவதாகும்.எனவே தான் ''ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்'' என்றார் வள்ளலார் .அதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் என்று பெயர் வைத்து உள்ளார் !

சாவி கிடைத்தால் மட்டுமே கதவு திறக்குமா ? என்றால் பூட்டுத்தான் திறக்கும்.கதவுத் திறக்காது , கோட்டையின் கதவுக்கு வெளியே ஒரு பூட்டும்  உள்ளே ஒரு  தாள்( தாழ் ) போட்டு இருக்கின்றது .

கோட்டைக்குள் இருக்கும் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' வந்து உள்ளே தாழ்ப்பாளை திறந்தால்  மட்டுமே கதவுத் திறக்கப் படும்.அவர் அனுமதி இன்றி உள்ளே செல்ல முடியாது .அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார் .

சத் விசாரம் !

''சத் விசாரம்'' என்பது ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை என்பதாகும் ,ஜீவ காருண்ய ஒழுக்கத்தால் சாவி கிடைத்து விடும் .அதற்குமேல் நான்கு ஒழுக்கங்கள் இருக்கின்றது ,அவைதான் இந்திரிய ஒழுக்கம்,,,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் ,என்பதாகும்.இறைவனை இடைவிடாது நினைந்து கொண்டு இருப்பதாகும் .அதற்கு ஞான சரியை ,கிரியை,யோகம்,ஞானம் என்பதாகும் .அதற்கு ஞான சரியை என்னும் 28.பாடல்கள் எழுதி வைத்துள்ளார் வள்ளலார் .அதில் கண்டுள்ளபடி நாம் சத்விசாரம் செய்து நமது வாழ்க்கையை நெறி படுத்திக் கொள்ள  வேண்டும்.

அவற்றில்  உள்ள முதல்  பாடலே மிகவும் அழுத்தமான பாடலாகும்.!

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து உற்று எழுங் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந் தருணம் இதுவே !

தன்னையும்,தன்னைப் படைத்த  இறைவனையும் இடைவிடாது நினைந்து, உணர்ந்து, நெகிழ்ச்சி அடைகின்ற போது தான்,நாம் யார் ? என்பதும்,நம்மைப் படைத்த இறைவன் யார் ? என்பதும் அறிந்து, இறைவன் மேல் அளவில்லாத  அன்பு கொண்டு  அதன் உண்மை தெரிந்து இடைவிடாத அழுகை உண்டாகி உடம்பு முழுவதும் கண்ணீர் வடிந்து நனைந்து நனைந்து  உடம்பின் உள்ளே அசுத்த நீர் வெளியேறி விடும்,அதன்பின் அசுத்த நீர்  இல்லாத வெற்று உடம்பாக மாற்றம் அடைகின்றது.

அப்போதுதான் உடம்பின் உள்ளே அன்பு நிறைந்து ,ஆன்ம உஷ்ணம் என்னும் சுத்த உஷ்ணம் உடம்பு முழுவதும் பரவுகின்றது.அகத்தில் இருக்கும், ஆன்ம உஷ்ணமானது,அதாவது  சுத்த  உஷ்ணமானது  அனகமாக விரிந்து உடம்பு முழுவதும் நிறைகின்றது.  அந்த சுத்த உஷ்ணத்தினால் அசுத்த பூத காரிய தேகம், சுத்த பூத காரிய தேகமாக மாற்றம் அடையச் செய்யும். அந்த சுத்த உஷ்ணத்தினால் சூடு அதிகமாக ,அதிகமாக திரைகள் எல்லாம் விலகி ,முளை மலர்ந்து ஆன்மா விரிந்து ,அதனுள் இருக்கும் அமுதம் சுரக்கும்,.அந்த அமுத சுரப்பினால் ,காகாத் தலையாக ,வேகாக் காலாக ,போகப் புனலாக மாற்றம் அடைகின்றது.அதன்பின் ஆன்ம தேகமாக மாற்றம் அடையும் .அதற்கு பின்  சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்ற மாற்றம் அடைகின்றது .

ஐந்து  பூதங்களும் விலக ஐந்து வகையான அமுத ஸ்தானங்கள் சுரக்கும் ,ஐந்தாவது அமுதத்தை உண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள் என்கின்றார் வள்ளலார் ..அதை விரிக்கில் பெருகும்.

இந்த அருள் சுரப்பினால் உண்டாகும்  மாற்றத்தை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவுப் படுத்துகின்றார் வள்ளலார் ....


 • 725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் 
  மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட 
 • 726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட 
  மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட 
 • 727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம் 
  உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட 
 • 728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம் 
  உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட 
 • 729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட 
  தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட 
 • 730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக் 
  கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட 
 • 731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற் 
  கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட 
 • 732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக் 
  கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட 
 • 733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட 
  இனம்பெறு சித்த மியைந்து களித்திட 
 • 734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச் 
  சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட 
 • 735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப் 
  பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் 
 • 736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச் 
  சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட 
 • 737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட 
  அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட 
 • 738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட 
  என்னுளத் தோங்கிய என்றனி யன்பே 
 • 739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே 
  என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே 
 • 740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால் 
  என்னைவே தித்த என்றனி யன்பே 
 • 741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து 
  என்னுளே விரிந்த என்னுடை யன்பே 
 • 742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து 
  என்னுளே கனிந்த வென்னுடை யன்பே 
 • 743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே 
  என்னுளே நிறைந்த என்றனி யன்பே 
 • 744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை 
  யின்புறு வாக்கிய என்னுடை யன்பே 
 • 745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா 
  என்னுளங் கலந்த என்றனி யன்பே 
 • 746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி 
  என்வசங் கடந்த என்னுடை யன்பே 


 மேலே கண்ட  மாற்றம் அடைந்தவர்களுக்கு மட்டுமே ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்  கோட்டையின் ''உள் தாள்'' நீக்கப் பட்டு  கதவுத் திறக்கப்படும் அதற்குப் பெயர்தான் பேரின்ப சித்திப்  பெரு வாழ்வு என்பதாகும் .அந்தப் பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்றவர்தான் நமது அருட்பிரகாச வள்ளலார் ...

கேட்டால் கிடைக்காது !,..தட்டினால் திறக்காது ! .அருள் பெற்றால் மட்டுமே கதவுத் திறக்கப்படும் ! என்பதை வள்ளலார் அருள் பெற்று  வாழ்ந்து காட்டி உள்ளார்.

ஜோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம்
மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன் --ஓதரிய
ஏகா அனேகா எழிற் பொதுவில் வாழ ஞான
தேகா கதவைத் திற ! .

என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான்
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் --என்னிடத்தே
தந்தான் அருட் சிற்சபை அப்பா என்று அழைத்தேன்
வந்தான் வந்தான் உள் மகிழ்ந்தே !

நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் சற்றே அறை !

என்ற பாடல்களின் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

இன்னும் விரிக்கில் பெருகிக் கொண்டே இருக்கும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.    


   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு