ஞாயிறு, 14 மே, 2017

எந்த நாள் சிறந்தநாள் !

எந்த நாள் சிறந்தநாள் !

மனிதர்கள் சிறந்த நாட்களாக நிறைய நாட்களைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள் .

பிறந்த நாட்களை கொண்டாடுகின்றார்கள்..இறந்த நாட்களைக் நினைவு நாட்களாக கொண்டாடி மகிழ்கின்றார்கள் .

அன்னையர் தினம்,..தந்தையர் தினம்,காதலர் தினம் .சுதந்திர தினம்,குடியரசு தினம் என பல்வேறு தினங்களை கொண்டாடி மகிழ்கின்றோம்.

மேலும் அறிவும் அன்பும் நிறைந்த மனிதர்கள்,நல்ல ஒழுக்கம் நிறைந்து வாழ்வில் நல்ல செயல்களைப் புரிந்து அறம் செய்த மகாத்மாக்கள்,மற்றும் நற்குணம் கொண்ட தலைவர்கள்..,செயற்கரிய செயல் புரிந்த செம்புலச் செலவ ஞானியர்கள்,திருவடி மறவாத அடியார்கள்,இறைவன் திருவடியில் சரணாகதி அடைந்த பரம பக்தர்கள்,

மற்றும் யோக ஞான சித்திகள் பெற்ற சித்தர்கள், யோகிகள், இந்திராதி தேவப் பதவிகள்,பெற்ற தேவர்கள்,கடவுள் அருளால் ஆக்கல் ,காத்தல்,அழித்தல் தொழில் நடத்தும் அருள பெற்ற மூர்த்திகள்,முத்தொழில்,ஐந்தொழில்ஆற்றல் பெற்று கர்ம சித்தி யோக சித்தி ,ஞான சித்திப் பெற்று கொண்டு என்றும் இன்பத்தில் வாழும் சுத்த சன்மார்க்க ஞான சித்தர்கள் .போன்ற அனைத்து அருளாளர்களையும் அவர்களின் ஆற்றல் பெற்ற நாட்களை,சித்திப் பெற்ற நாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். உண்மையில் மகிழ்ச்சிதான் .

எல்லாம் வல்லவரை மறந்து விட்டோம் !

மேலே சொல்லி உள்ள உயர்ந்த அறிவும் ஆற்றலும்,அருளும் பெற்ற அனைத்து ஜீவர்களும் அவர்களே அந்தப் பெருமையைக் பெற்றுக் கொள்ளவில்லை.அவர்களுக்கு மேல் எல்லாம் வல்லவர் ஒருவர் உள்ளார். அவரவர்களின் தகுதிக்குத் தகுந்தவாறு அன்பும்,அறிவும்,அருளும் ,கருணையும் வழங்கியவர் ஒருவர் உண்டு என்பதை நாம் எல்லோரும் நினைந்து ,நினைந்து ,உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அறிந்து கொள்ளவில்லை ...

அவர்தான் எல்லாம வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

அவர்தான் எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு உள்ளவர்.அவர் அருள் இல்லை என்றால் உலகமே செயல்படமுடியாது அவர் இல்லை என்றால்,நாமும் இல்லை, நாம் எவரையும் போற்றிப் புகழ முடியாது .சிறந்த நாட்களாக கொண்டாட முடியாது.

அந்த உண்மைக் கடவுளை கண்டு பிடித்தவர்தான் நமது அருட்பிரகாச வள்ளலார் .

அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றி பதிவு செய்த பாடல்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன .அதிலே ஒருபாடல் '--

அகர நிலை விளங்கும் சத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்த சத்தி மார்கள் அனைவருக்கும் அவராற்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும்
இகரமுறு உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும்
எப் பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும்
சிகரமுதற் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

என்ற பாடலின் வாயிலாக நமக்குத் தெரியப்படுத்து கின்றார் .

மேலே கண்ட போற்றுதலுக்கு உரிய அனைவருக்கும் ஒளி வழங்கிக் கொண்டு இருப்பவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .

அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் அனைத்து உயிர்களையும் ,தாயாகவும்,தந்தையாகவும் உள் ஒளியாக (ஆன்மாவாக ) இருந்து இயக்கி இயங்கிக் கொண்டு உள்ளவராகும் .அவரை இடைவிடாது நினைந்து தொடர்பு கொள்ளும் நாட்கள் எல்லாம் சிறந்த நாட்களாகும்...

வள்ளலார் பாடல் ;--

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்த பெரும் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வ மகா தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !

என்னும் பாடல் வாயிலாக மிகத் தெளிவாக எளியத் தமிழில் பதிவு செய்து உள்ளார் நமது அருட்பிரகாச வள்ளல்பெருமான் ..

எனவே நமது உடம்பில் உள் ஒளியாக இருந்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நாளும் சிறந்த நாட்களே ஆகும்.

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

அடங்கு நாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே
தொடங்கு நாள் நல்லதன்றோ --நெஞ்சே
தொடங்கு நாள் நல்லதன்றோ...

வல்லவா எல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்ல நாள் எண்ணிய நாள் ---நெஞ்சே
நல்ல நாள் எண்ணிய நாள் ...

காலம் கடந்த கடவுளைக் காணற்க்கு
காலம் கருதுவதேன் --நெஞ்சே ---
காலம் கருதுவ தேன் !

என்னும் பாடல் வரிகளின் வாயிலாகத் தெரியப் படுத்தி உள்ளார் .

காலங்கள் எல்லாம் கடந்தவர் ,காலத்தை உண்டாக்கியவர் காலத்தை கடந்து நின்று இயங்கிக் கொண்டு உள்ளவர் , அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..அவரை நினைக்கும் தொடர்பு கொள்ளும்,ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நாளும் சிறந்த நாட்களே ஆகும்.

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என்னுளத்தே
நீதியிற் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்து !...வள்ளலார் ..

மேலும் இவ்வுலகில் சிறந்த நாளாக நாம் கொண்டாட வேண்டிய ஒரு நாள் உள்ளது அந்த நாள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவ்வுலகிற்கு வந்த நாள் .அந்தநாள் வள்ளலார் சித்திப் பெற்ற நாள் ..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து வள்ளலார் உடம்பில் கலந்த நாள் ...அந்தநாள் தான் 1874 -1-30, தமிழ் ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19.ஆம் நாள் வெள்ளிக் கிழமை இரவு 12,மணியாகும்.

அந்த நாளை ஆண்டவர் வருகை புரிந்த சிறந்த நாளாகக் போற்றி புழ்ந்து கொள்ளலாம் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்த அந்த நாளில் வள்ளலார் பதிவு செய்து உள்ள இறுதிப்பாடல் ;--

என்சாமி எனது துரை என் உயிர் நாயகனார்
இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக் குள்ளே எனது
பேர் உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான் தான்
சாற்றுகின்றேன் அறிந்தது இது தான் சத்தியமே
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின் தனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

மேலே கண்ட பாடல் வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து தம்மை ஆட்கொண்டு தம் உடம்பின் உட் புகுந்து கலந்து கொண்டு ..வள்ளலாரும் அருட்பெருஞ்ஜோதியாக மாற்றம் கொண்ட நாளாகும் .அந்த நாளை சிறந்த நாளாக போற்றி புகழ்ந்து வணங்கி ..நமக்கும் இதுபோன்ற சிறந்த நாள் கிடைக்க வேண்டும் என்றும் வழங்க வேண்டும் என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது வேண்டி விரும்பி,கேட்டு அவர் திருவடியில் சரண் அடைவோம் ...அதுவே சிறந்த நாளாகும் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு