புதன், 15 மார்ச், 2017

ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா என்பதை  ''சிற்றணு பசு' என்கின்றார் வள்ளலார் ! அந்த சிற்றணு பசு ஆவி  தன்மை உடையது .அதற்கு உருவம் கிடையாது.அந்த  சிற்றணு பசு என்பது எங்கு இருந்து இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்தது ?   எப்படி வந்தது ? என்பதை வள்ளலார் விளக்குகின்றார் ,

அறிவு என்பது ஓர் சிறிதும் தோன்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்த காரத்தில் நெடுங்காலம்,சிற்றணுப் பசுவாகி அருகிக் கிடந்த அடியேனுக்குள் உள் ஒளியாகி இருந்து அப் பாசாந்தகாரத்தின் நின்றும் எடுத்து ,எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வு உடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள இம் மனித பிறப்பு உடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங் கருணைத் திறத்தை எங்கணும் அறிவேன் ! எவ்வாறு கருதுவேன் !! என்னென்று சொல்வேன் ! ! !  என்கின்றார் ..

பெரிய  பாசாந்தகாரம் என்றால்  என்றால் என்ன ?

இயற்கை உண்மையனர் என்றும்,
இயற்கை அறிவினர் என்றும்,
இயற்கை இன்பினர் என்றும்
நிர்க்குணர் என்றும் சிற்குணர் என்றும்
நித்தியர் என்றும்
சத்தியர் என்றும்
ஏகர் என்றும்
அநேகர் என்றும்
ஆதியர் என்றும்,
அனாதியர் என்றும்
அமலர் என்றும்
அற்புதர் என்றும்,
நிரதிசயர் என்றும்,
எல்லாம் ஆனவர் என்றும்,
எல்லாம் உடையவர் என்றும்,
எல்லாம் வல்லவர் என்றும்,
அருட்பெருஞ்ஜோதியர் என்றும்

அளவு கடந்த திருக் குறிப்புத் திரு வார்த்தைகளால் ,சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும்,நினைத்தும்,உணர்ந்தும்,புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற ,
தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுள் ,இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் ''பேரம்பலம்'' என்பதாகும்..

அம்பலம் என்றால் வெளி என்பதாகும்.பேரம்பலம் என்றால் பெரிய வெளி என்பதாகும்.அந்த அம்பலத்தில்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கிக் கொண்டு உள்ளார் .

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே--அவர்
ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே !

அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே --அவர்
ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே !

அணுவில் அணுவாய் இருந்தார் வெண்ணிலாவே --எங்கும்
ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே !

அண்ட பகிரண்டம் எல்லாம் வெண்ணிலாவே --ஐயர்
ஆட்டம் என்று சொலவதென்ன வெண்ணிலாவே !

அம்பரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே ---என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே !

என்று அந்த பெருவெளியான பேர் அம்பலத்தைப் பற்றித் தெளிவாக தெரியப் படுத்துகின்றார் ...அந்த அம்பலத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,உருவம் இல்லாமல் பேர்அணுவாக,அனாதியாக உள்ளார் ! அவர்  இயற்கை உண்மையாக ..இயற்கை விளக்கமாக..இயற்கை இன்பமாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை மனித குலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மா என்னும்  சிற்றணு பசு !

வள்ளலார் சொல்லும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடத்திற்கு கடவுள் சமூகம்  என்று பெயர் ...அந்த சமூகம் அனாதியாக இருக்கின்றது.அனாதி என்றால்,எந்த ஆதாரமும் இல்லாமல் தன்னைத்தானே இயங்கிக் கொண்டு உள்ள இடத்திற்கு அனாதி  என்று பெயர் ...

சிருட்டி ஞாயம் என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்து உள்ளது !

ஆகாசம் அனாதி .அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி ..அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி ..அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ அப்படிக் கடவுள் இடத்தில் அருட் சத்தி அனாதியாய் இருக்கின்றது .ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றன.

அதேபோல் கடவுள் சமூகத்தில் ஆன்மாக்கள் என்னும் அணுக்கள் நிறைந்து இருக்கும் இடத்திற்கு ஆன்ம ஆகாயம் என்றுபெயர் ...அங்கு அணுக்கள் சந்தான மயமாய் நிரம்பி இருக்கின்றன...அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர் ..அங்குதான் நாம், நான் என்னும் அனைத்து ஆன்மாக்களும் இருக்கும் சொந்த இடமாகும்.

அங்கு இருந்துதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பப் படுகின்றன..ஆன்மா என்னும் அணு இங்கு  வருகின்ற போது,ஆன்ம தேகத்தோடுதான் வருகின்றது ..அந்த ஆன்ம அணுக்களுக்கு அருளை நிரப்பிக் கொண்டுதான் அனுப்பி வைக்கப்படுகின்றன ஏன் ? என்றால் அருள் இல்லை என்றால் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது ..

ஆன்ம அணுக்கள் இங்கு வந்தால் ஆன்ம தேகத்தோடு வாழ முடியாது...ஆண்டவர் கட்டளைப்படி பஞ்ச பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட பூத காரிய தேகத்தில் தான் வாழ வேண்டும்....அந்த பஞ்ச பூத காரிய தேகத்தை ...இங்கு ஆட்சி செய்யும் மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகின்றது....

தான் பெற்ற பேறு என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

பெரு மாயை என்னும் ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்ற உடம்பு இது சாகாத சுத்த உடம்பாக்கி
ஒரு ஞானத் திருஅமுதம் உண்டு ஓங்குகின்றேன்  இனி நின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ
அறியாயோ என்னளவில் அமைக அமர்க
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ
சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே !

என்னும் பாடல் வாயிலாக மாயையினால் கட்டிக் கொடுக்கப்பட்ட,பஞ்ச பூத  வீட்டைப் பற்றி வள்ளலார்  தெரிவிக்கின்றார்....

இந்த  பஞ்ச பூத உலகத்தில்,ஆன்மா என்னும் அணுவானது  84,லட்சம் யோனி பேதங்களிலும் பிறப்பு எடுத்து வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறப்பு கொடுக்கப் படுகின்றது,.மனிதப் பிறப்பை நீக்கி மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்றால்,உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அன்பால்,தயவால்,கருணையால்,ஆன்மாவில் உள்ள அருளைப் பெற்று,அசுத்த பூத காரிய தேகத்தை,சுத்த பூத காரிய தேகமாக மாற்றி ,,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று,ஆன்ம  தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்த உலகத்தை விட்டு தன்னுடைய சொந்த வீட்டிற்கு செல்ல முடியும்....இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சட்டமாகும்,கட்டளை யாகும்....

உடம்போடவோ,மரணம் வந்தோ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் செல்ல  முடியாது...ஆன்மா என்னும் அணு தன்னை உணர்ந்து ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி  செல்ல முடியும்.

மேலே கண்ட ஆன்ம அணுக்கள் இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து ஒரு அணுக்கள் கூட வெளியே செல்ல முடியாமல்,வழி தெரியாமல்  தவித்துக் கொண்டு உள்ளது ...

இந்த உண்மையை ஆன்மாக்களுக்குத் தெரியப்படுத்தவே வள்ளலாரை இந்த உலகத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  வருவிக்க உற்றார் .என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்\
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தை அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று  மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்றும்

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடுமோர்
பவ நெறி இதுவரை பரவியது அதனால்
சென்னெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறி இருள் அடைந்தனர் ஆதலில் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான்
புத்தமுது அருள் கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற என்னரசே
தனி நடராஜ என் சற்குரு மணியே !

என்றும்

பேருற்ற உலகில் உறு சமயமத நெறி எலாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் உற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாதபடி விரைந்தே
புனிதம் முறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ
என் பிள்ளை ஆதலாலே
இவ் வேலை புரிக என்று இட்டனன் மனத்தில்
வேறு எண்ணற்க என்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க் குணானந்த பர நாதாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே !

என்னும் பாடல்களின் வாயிலாக வள்ளலார் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ..

எனவே உடம்பை எடுத்து வராத ஆன்ம அணுவானது,  உடம்பு எடுத்து வாழ்ந்து வந்ததால் மீண்டும் உடம்பை,மண்ணுக்கோ ,தீயுக்கோ,இரை ஆக்காமல் உடம்பைப் பற்றிக் கொண்டு உள்ள ,பஞ்ச பூத அணுக்களை,அருளைக் கொண்டு  பிரித்து,எடுத்து மாயையிடம் கொடுத்து விட்டு,பூதகாரிய உடம்பு  இல்லாத ஆன்ம தேகமான,ஒளி தேகமாக  மாற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பது  ஆண்டவர் ஆணையாகும்.

ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் வாழ்ந்து வழிக் கட்டி உள்ளார்.....

வள்ளலார் பெற்ற பேறு பாடல் !

வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தைச்
சேதித்து என் உள்ளம் திருக் கோயிலாகக் கொண்டு சித்தி எலாம்
போதித்து உடம்பையும் பொன்னுடம்பாக்கி நற் புத்தமுதம்
சாதித்து அருளிய நின் அருளுக்கு  யான் செய்யத்  தக்கதென்னே !

நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன்
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
கோன் செய்யவே பெற்றுக் கொண்டேன் உண்டேன் அருள் கோனமுதே !

ஊன் செய்த தேகத்தை ஒளி தேகமாக மாற்றிக் கொண்ட வள்ளலார் .என்போல் இந்த உலகம் பெறுதல் வேண்டும் என்கின்றார்..நாமும் வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து,ஊன் தேகத்தை நீக்கி,  ஆன்ம தேகம் பெற்று அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம் .

இன்னும் விரிக்கில் பெருகும் ...தொடரும்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 ..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு