புதன், 22 பிப்ரவரி, 2017

தீர்ப்பு வந்த அன்று எழுதிய கட்டுரை:

தீர்ப்பு வந்த அன்று எழுதிய கட்டுரை:( சாரு)
இந்நேரம் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நூற்றுக் கணக்கான பஸ்கள் எரிந்திருக்கும். சும்மாவா எரிப்பார்கள்? உள்ளே மாணவிகளையும் போட்டு எரிப்பார்கள். தமிழ்நாடு பூராவும் ஊரடங்கு உத்தரவு போட்டது போல் கடைகள் அடைத்திருக்கும். வெளியூர் செல்பவர்கள் ரயில் நிலையங்களிலும் பஸ் ஸ்டாண்டுகளிலும் கிடந்து அவதிப்பட்டிருப்பார்கள். சாப்பாட்டுக்கு ஓட்டலையே நம்பியிருப்பவர்கள் பட்டினி கிடந்திருப்பார்கள். கட்சித் தொண்டர்கள் விரலையும் நாக்கையும் இன்ன பிற அவயவங்களையும் அறுத்துப் போட்டிருப்பார்கள். இன்னும் தீவிரத் தொண்டர்கள் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு எரிந்திருப்பார்கள். இப்படிப்பட்ட அவல நாடகங்கள் எதுவும் இப்போது இல்லை. இது பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். நமக்குப் பிடித்த தலைவர்களையும் நடிகர்களையும் கடவுள் ரேஞ்சுக்கு வைத்துப் புகழ்ந்து கட் அவுட் வைக்கும் கலாச்சாரத்தை முதலில் ஒழிக்க வேண்டும். ஒருமுறை அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே அமெரிக்க அதிபருக்கு அறுபது அடி கட் அவுட் வைத்திருந்தார்கள். என்ன கொடுமை! கருணாநிதியை சோழ மன்னன் என்று புகழ்ந்து வாளும் மலர்முடியும் கொடுத்ததிலிருந்து துவங்கியது இது. பின்னர் ஜெயலலிதாவை கன்னி மேரியாகவும் மாரியம்மனாகவும் வரைந்து கட் அவுட் வைத்தார்கள். அதை விடக் கொடுமை என்னவென்றால், ஒருமுறை ஒரு அரசியல்வாதியின் பேரனுக்குப் பிறந்த நாள் வந்தது. அதற்காக சென்னை முழுவதும் பேனர் வைத்து அது வாகனங்களில் செல்வோரின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்தது. இனிமேலாவது அந்த முகஸ்துதி கலாச்சாரத்திலிருந்து நாம் வெளிவந்தாக வேண்டும். மேலும், முதல்வரின் காலில் அவர் கட்சித் தொண்டர்கள் விழுந்தால் கூடப் பரவாயில்லை. பெரிய போலீஸ் அதிகாரிகளும் அவர் காலில் விழுந்தால் என்ன அர்த்தம்? நாம் என்ன மன்னராட்சியிலா இருக்கிறோம்? போலீஸ் அதிகாரி ஒன்றும் முதல் மந்திரியின் எடுபிடி அல்லவே? அவர் ஏன் முதல்வர் காலில் விழ வேண்டும்? மேலும், எந்த அரசியல் சார்பும் இல்லாமல் இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் தங்கள் பணிக் காலத்துக்குப் பிறகு அரசியல் கட்சியில் சேர்வதை இனிமேலும் அனுமதிக்கலாகாது. அப்படி அனுமதிப்பதால் அவர்கள் ஏற்கனவே பணியில் இருந்த போது அந்தக் கட்சியின் சார்பாகவே பணியாற்றி இருப்பார்கள் என்றுதானே அர்த்தம்? அல்லது, குறைந்த பட்சம், அரசு அதிகாரிகள் அரசியலில் சேர்ந்தால் அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு ஊதியத்தையாவது நிறுத்த வேண்டும்.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மக்கள் எதிர்பார்ப்புக்கு இணங்கவே வந்துள்ளது. இந்திய அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பாக இதைக் கருதலாம். இரண்டு நீதிபதிகளும் ஊழலுக்கு எதிராக மிகக் கடுமையாக எழுதியிருக்கிறார்கள்; கவலைப்பட்டிருக்கிறார்கள். இனிமேல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஓரளவாவது பயம் இருக்கும். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு இந்திய அரசியலையே ஓரளவுக்கு மாற்றியமைக்கக் கூடியதாக இருக்கும். ஆனாலும் ஒரே ஒரு குறை, குன்ஹாவின் தீர்ப்பை மாற்றி எழுதி ஜெ., சசிகலா உள்ளிட்ட நால்வரையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பற்றி உச்சநீதிமன்றம் இன்னும் சற்று விமர்சித்திருக்கலாம். ”நால்வரின் சொத்துக் கணக்கை நீதிபதி குமாரசாமி தவறான முறையில் கணக்கிட்டு விட்டார் (Incorrect arithmatical calculations)” என்று மட்டுமே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அந்தக் கணக்கு ஏன் தவறாகப் போனது? 
 நீதிபதி குன்ஹாவை அப்போது எல்லோரும் திட்டினார்கள். ஆனால் நான் அவரை மகாத்மா என்று எழுதினேன். பலம் வாய்ந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரை ஒற்றை ஆளாக எதிர்த்துத் தீர்ப்பு எழுதுவதற்கு எவ்வளவு மனோதிடம் வேண்டும்? அதிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்காடிய ஆச்சார்யாவுக்கு எக்கச்சக்கமான மிரட்டல் வந்து கொண்டிருந்த வேளையில் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் குன்ஹா வரலாற்றுப் புகழ் மிக்க தன் தீர்ப்பை வழங்கினார். 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததால் அது வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்பு ஆகியது. நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் முற்றிலுமாக இழந்து போன மதிப்பீடுகளையும் அறத்தையும் நமக்கு தன் தீர்ப்பின் மூலம் நினைவூட்டினார் நீதிபதி குன்ஹா. 
 இந்த விஷயத்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொருவர், சுப்ரமணியம் சுவாமி. சுவாமி பற்றி எப்போதுமே மக்கள் மனதில் ஒரு எதிர்மறைச் சித்திரம்தான் தங்கியிருக்கிறது. ஆனால் சுவாமிதான் 19 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா, சசிகலா மீது ஊழல் வழக்கைத் தொடுத்தவர். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? தான் வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை மூன்று ஆண்டுகள் தேடிக் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் சுவாமி. அதற்காக அவர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள்தான் எத்தனை எத்தனை! 
 மற்றொரு விஷயம், நீதியின் மேலும் அறத்தின் மேலும் மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்யும் இந்தத் தீர்ப்பை நாம் பாராட்டலாம்; ஆனால் பன்னீர்செல்வம் எப்படிப் பாராட்டுகிறார்? தீர்ப்பில் நீதிபதிகள் இருவரும் கடுமையாகச் சாடியிருப்பது சசிகலாவை அல்ல; ஜெயலலிதாவை. சசியை வெறும் பொம்மையாக வைத்து இந்த ஊழலையெல்லாம் செய்தது ஜெ. தான் என்கிறது தீர்ப்பு. ஜெ. பற்றி தீர்ப்பில் எழுதியுள்ள வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுவதற்குக் கூடத் தயங்குகிறேன். அவ்வளவு கடுமையான வார்த்தைகள். அதைப் பன்னீரும் மற்ற சசிகலா எதிர்ப்பாளர்களும் பாராட்டுவது உச்சபட்ச காமெடி!
ஊழலைப் பொறுத்தவரை நம் அனைவருக்குமே அதில் பங்கு இருக்கிறது என்பது என் வாதம். ஊழல் என்றால் என்ன? அடுத்தவருக்குச் சொந்தமான பொருளைத் திருடுவது. நம்முடைய வரிப் பணத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திருடுகிறார்கள். அவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள்? நாம்தான் இவர்கள். நம்மிலிருந்துதான் இவர்கள் உருவாகிறார்கள். ஒட்டு மொத்தமாக அறமும், மதிப்பீடுகளும் சீரழிந்திருக்கின்றன. பந்தயக் குதிரைகளைப் பழக்குவதைப் போல் இளைஞர்களைப் பழக்குகிறோம். படி படி படி. முதல் மதிப்பெண் எடு. எதற்கு? நிறைய பணம் சம்பாதிப்பதற்கு. எதற்குப் பணம்? பணம்தான் வெற்றியின் அடையாளம். நம் வாழ்வின் தர்மம். ஆடம்பர மோகத்தின் காரணமாக எவ்வளவு பணம் வந்தாலும் போதவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு 40000 ரூபாயில் ஐஃபோன் வாங்கிக் கொடுக்கிறார் தகப்பனார். 
 பணம் ஈட்டுவதற்காக எதுவும் செய்யலாம் என்ற நிலையை நாம் அனைவருமே வந்தடைந்திருக்கிறோம். சமீபத்தில் அவந்திகாவின் கைபேசி தொலைந்து விட்டது. சிம் கார்டை நீக்காததால் நாம் பேசியதும் போனை எடுத்தவர் நமக்குப் பதில் சொன்னார். அத்தோடு சரி. அதற்கு மேல் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. ஒரு வாரம் போராடி வாங்கினோம். ஒரு பெரிய துப்பறியும் கதை போல் எழுதலாம். இன்னொருவரின் பொருளை நாம் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படை அறம் கூட யாருக்கும் இல்லை. பெங்களூர் சென்று நேரில் பெற்றுக் கொண்ட போது போனை வைத்திருந்தவர் ஒரு மேட்டுக்குடிப் பெண் என்று தெரிந்தது. ஏழை பணக்காரன் என்ற பேதமே இல்லாமல் எல்லோருமே அற உணர்வை இழந்திருக்கிறோம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். 
இது ஒரு பக்கம் என்றால் நாணயத்தின் மறு பக்கமும் இருக்கிறது. அது ஒரு பரிதாபமான பக்கம். என் நண்பரான ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரியுடன் இது பற்றி நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் ஊழல் இல்லை. காரணம், இந்தியாவில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஐந்து ஆண்டுகள் வாங்குகின்ற சம்பளம் அங்கே ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் ஒரு மாதச் சம்பளம். எப்படி ஊழல் செய்ய மனம் வரும்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு