புதன், 22 பிப்ரவரி, 2017

சகலர்.பிரளயாகலர்..விஞ்ஞானகலர் !

சகலர்.பிரளயாகலர்..விஞ்ஞானகலர் !

சகலர் என்பவர்கள் சராசரி மனிதர்கள்....அவர்கள் ஆணவம், மாயை.கன்மம்.,என்னும் மூன்றும் உள்ளவர்கள் .

 அதாவது இயற்கையாகிய ஆணவமும் ...,இயற்கையில் செயற்கையாகிய மாயையும்,...,செயற்கையாகிய( காமியம் அல்லது ) கன்மமும் .. இம்மூன்றும் உள்ளவர்கள் .

ஆணவம் என்பது;-- இயற்கையாக ஆன்மாவுடன் கூடவே வந்தது,  இறுதிவரை  கூடவே இருக்கும்.. மாயை என்னும் உடம்பும் ,கன்மம் என்னும் வினைகளும் நீங்கியபின் ,முழுமையான அருளைப் பெற்று ,ஆன்ம தேகம் என்னும் சுத்த தேகம் ,பிரணவ தேகம்,ஞான தேகம் என்னும் முத்தேக சித்திப்   பெற்று,கடவுள் ஏற்றுக் கொள்ளுகின்ற வரையில் ஆணவம் ஆன்மாவிற்குத்  துணையாக இருக்கும்.அதன்பின்தான் ஆணவம் விலகும் ...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

ஆணவமாம் இருட்டு அறையில் கிடைந்த சிறியேனை
அணிமாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவளித்து
நீணவமாம் தத்துவப் பொன் மேடைமிசை யேற்றி
நிறைந்த அருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
மாணுற எல்லா நலமும் கொடுத்து உலகு அறிய
மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே
ஏணுற சிற்சபையின்  இடத்தும் பொற்சபையின் இடத்தும்
இலங்கு நடத்தரசே என் இசையும் அணிந்து அருளே !

என்னும் பாடல் வாயிலாக ஆணவத்தைப் பற்றி வள்ளலார்  தெளிவுப் படுத்துகின்றார் .


மாயை என்பது ;--ஆன்மாவிற்கு இயற்கையில் செயற்கையானது.  பஞ்ச பூதக் கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் செயல் புரிவது மாயை என்பதாகும் ,ஆன்மா வாழ்வதற்காக கட்டிக் கொடுப்பது தான் மாயையின் வேலையாகும்,அதனால்தான் அதற்கு இயற்கையில் செயற்கை என்று பெயர் ,....,நல்வினை ,தீவினை என்னும் கன்மம் நீங்காத வரை , இறப்பு பிறப்பை  உண்டாக்கி ,அதன் தன்மைக்குத் தகுந்தாற்போல் , ஐம்பூத உடம்பை கட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.ஆன்மாவில் பற்றி உள்ள,அதாவது  மறைத்து உள்ள,அறியாமை என்னும் மாயாத்  திரைகள் நீங்கி முழுமையான அருளைப் பெற்று ,இனி ஆன்மாவிற்கு உடம்பு தேவை இல்லை என்று ,.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இருந்து ,அனுமதிப் பெற்ற பின்தான்,ஆன்மாவிற்கு வீடு கட்டிக் கொடுக்கும், தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்ளும்,அதுவரை மாயையின் வேலை தொடர்ந்து கொண்டே இருக்கும்..இது எல்லா ஆன்மாக்களுக்கும் பொருந்தும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

பெருமாயை  என்னும் ஒரு பெண்பிள்ளை நீ தான்
பெற்ற உடம்பு இது சாகாத சுத்த உடம்பாக்கி
ஒரு ஞானத் திருவமுதம் உண்டு ஓங்குகின்றேன் நின்
உபகரிப்போர் அணுத் துணையும் உளத்திடை நான் விரும்பேன்
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ
அறியாயோ என்னளவில் அமைக அமர்க
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ
சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே !

மாயையால் கட்டிக் கொடுப்பட்ட உடம்பை அருள் ஒளியால் வேதித்து ஒளி உடம்பாக மாற்றிக் கொள்கின்றார் நமது வள்ளலார் .,சிறந்த பிள்ளை என்ற பட்டமும் பெற்றுக் கொள்கின்றார் .

கன்மம் என்பது ;--- ஆன்மாவானது உயிர் எடுத்து,உடம்பு எடுத்து இந்த உலகில் வாழ வருகின்றது,அதற்கு இறைவனால் மூன்று சுதந்திரம் கொடுக்கப் படுகின்றது.அவைகள் எனது யான் என்னும் தேக சுதந்திரம் போக சுதந்திரம் ஜீவ சுதந்திரம் என்னும் மூவகை சுதந்திரம் கொடுக்கப் படுகின்றது.

இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ''காமியம் என்றும்  கன்மம் என்றும்''' கர்மா என்றும்   பெயராகும் ,உயிருக்காகவும்,உடம்பிற்காகவும் போகத்திற் காகவும் ,வாழ்ந்து கொண்டு உள்ளது,அந்த போக வாழ்க்கையே,நல்வினைகளாக, தீய வினைகளாக மாற்றம் அடைந்து ஆன்மாவை சுற்றி திரைகளாக மறைத்துக் கொண்டு உள்ளது.அதற்குப் பெயர்தான் கன்மம் என்றும், காமியம் என்றும்,வினைகள் என்றும்  சொல்லப் படுகின்றது.

அந்த கன்மம் என்னும் காமியத்தின் வழியாக உலக  அற்ப இச்சைகளுக்கு ஆட்பட்டு ,இந்திரியங்களாலும்,கரணங்களாலும்,அதிகமாகப்  பெறப்பட்டு இறுதியில் மரணம் வந்து விடுகின்றது...இவை அனைத்திற்கும்  காரண காரியமாக இருப்பது ''மனம்'' என்னும் கருவிதான் ..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

மனம் எனும் ஓர் பேய்க்குரங்கு  மடைப்பயலே நீ தான்
மற்றவர்போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல் வழியே யிருத்தி எனில் சுகமாய்
இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை யானாலோ
தினை அளவும்  உன் அதிகாரம் செல்ல வொட்டேன் உலகம்
சிரிக்க உனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய்
ஞான சபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே !

என, மனத்தை அடக்கி ,புறத்திலே செல்ல விடாமல் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வைத்தவர் வள்ளலார் .அதனால் தான் சிற்சபையின் கண் மனதை செலுத்துங்கள் என்கின்றார் வள்ளலார் ..மேலும் ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கக் ''கருணையாலும்'',இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்ளும் ''சத் விசாரத்தாலும்'' மட்டுமே கன்மம் என்னும் வினைகள் நீங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து அருளைப் பெற முடியும்

மேலும் கன்மத்தை விரட்டும் பாடல் !

கன்மம் எனும் பெரும் சிலுகுக் கடுங் கலகப்பயலே
கங்கு கரை காணாத கடல்போலே வினைகள்
நன்மையொடு தீமை எனப் பல விகற்பங் காட்டி
நடத்தினை நின் நடத்தை எல்லாம் சிறிது நடவாது
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால்
இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல்
இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ
எல்லாஞ் செய் வல்லானுக்கு இனிய பிள்ளை நானே !

என கன்மம் என்னும் வினைகள் தன்னை வந்து சேரா வண்ணம் விரட்டி அடிக்கின்றார் ...எனவே செய்யும் ஒவ்வொரு காரியமும் வினைகளாக வந்து ஆன்மாவை மறைத்துக் கொள்கின்றன .எனவே தீவினைகள் சேராமல் நல் வினைகளை செயல்படுத்த வேண்டும்.

மேலே கண்ட செயல்கள் யாவும் சாதாரண ஜீவர்கள் என்னும் சகலர் என்பவர்களுக்கு ஆணவம், மாயை ,கன்மம் ,என்பது பொருத்தமானதாகும் ..

பிரளயாகலர் என்பவர்கள் ;---இயற்கையாகிய ஆணவமும்  ...இயற்கையில் செயற்கையாகிய மாயையும் மாத்திரம் உள்ளவர்கள் ...

உலக போகத்தை நீக்கி கன்மத்தை விளக்கி,காமத்தை நீக்கி  இறைவன் அருளைப் பெற காத்திருப்பவர்கள் பிரளயாகலர் என்பவர்கள் .இவர்கள் யோகிகள் எனப்படுபவர்கள் .

விஞ்ஞானகலர் என்பவர்கள் ;--இயற்கையாகிய ஆணவம் மாத்திரம் உள்ளவர்கள்..இவர்கள் உலக போகத்தை விளக்கி ,காமத்தை நீக்கி,உடல் மீதும்,உயிர் மீதும்,பற்று இல்லாமல் அதாவது .தேக சுதந்தரம் ,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் என்னும் மூவகை சுதந்தரமும் இல்லாமல் திருவருள் சுதந்திரத்திற்காக காத்துக் கொண்டு இருப்பவர்கள் ..இவர்களுக்கு ஞானிகள் என்று பெயர் ..அதற்கு மேல் நிறைய படிகள் உள்ளன ...

நாம் சகலர் என்பதை உணர்ந்து .வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க உண்மை  நெறியை உண்மையாகப் பின் பற்றி வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்,வேறு எந்த வழிகளில் சென்றாலும் அருளைப் பெற முடியாது என்பது திண்ணம் ..

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் --வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம் நீர்
நன்மார்க்கம் சேர்வீர் இந்நாள் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 .   


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு