செவ்வாய், 27 அக்டோபர், 2020

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் !

 *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்*


மனிதன் மிகவும் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்.? *உண்மையான கடவுள் யார்*? என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.அவரை உண்மை அன்பால் நேசித்து தொடர்பு கொள்ள வேண்டும்.அவரிடம் பெற வேண்டிய *அருள்அமுதைப்*? பெற்றுக்கொள்ள வேண்டும்.அந்த அருள் அமுதத்தால் *பொய்யான மனித உடம்பை மெய்யாக்க வேண்டும்*.

மெய்யான உடம்புதான் மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று வாழ்வு முடியும். 


இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமல்.பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளாமல்.மரணத்தை வெல்லும் வழிதெரியாமல். பொய்யான வாழ்க்கையில் வாழ்ந்து. காலத்தையும் நேரத்தையும் வீண் விரையம் செய்து அழிந்து கொண்டே உள்ளது மனித இனம்.


மனித குலத்தை நல்வழிப்படுத்தி நல்வாழ்வு வாழும் வழியைத் தெரிந்து கொள்ளவே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற உண்மை நெறியான தனித்தன்மை வாய்ந்த நெறியைத் தோற்றுவித்துள்ளார் வள்ளல்பெருமான் .


*வள்ளலார் சொல்லுவதை கேளுங்கள்*


உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாகிய நீங்கள் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள். *வாழ்க்கையில் பிடிக்க வேண்டியதைப் பிடித்துக்கொண்டு விடவேண்டியதை விட்டுவிடவேண்டும்*. உண்மையை அறிந்து கொள்ள எவை எவை தடையாக இருக்கின்றதோ அவற்றை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் தடை செய்ய வேண்டும்.


*முக்கிய தடைகள்*


சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். *மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.* 


*அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்*.


 *அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள்*. 

அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள். என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்து உள்ளார்கள்.


* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் என்னும்  சித்தி வளாகத்தையும்.வடலூரில் உள்ள தருமச்சாலையும் சத்திய ஞானசபையும் குறிக்கும்.


*சுத்த சன்மார்க்க சாதனம்*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்*


 *திருஅருட்பா*


*சன்மார்க்க சாதனம். சத்விசாரம் பரோபகாரம் இரண்டு மட்டுமே*.


 வேறு சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது *எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்*. 


*இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்*.


 *சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை!*


ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி ஆவிடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.


*வள்ளலார் பாடல்* !


பாதி இரவில் எழுந்தருளி இப் பாவி யேனை யெழுப்பியருட்


சோதி யளித்து என் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை


ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*


என்பதே சுத்த சன்மார்க்க  பிரார்த்தனை யாகும். 


வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க  கொள்கையைப் பின்பற்றாமல் அவரவர்கள் விருப்பத்திற்கு தகுந்தவாறு.சாதி.

சமய மதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் செயல்படுபவர்கள் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.


*நாம் பெற வேண்டியது ஆன்மலாபம் மட்டுமே*


எனவே காலத்தையும் நேரத்தையும் வீண் விரையம் செய்யாமல் வள்ளலார் சொல்லிய இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை முழுமையாக  பின் பற்றினால் மட்டுமே பெறவேண்டியதைப் பெற்றுக் கொள்ளமுடியும்.


*வள்ளலார் பாடல்*


உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன்அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்


கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண் கின்றீர்

கரணம் எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ


சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


*இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந் திடுமின்*

*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே*.!


மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும். வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையானது.

இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

இரவு பகல் அற்ற இடம் !

 *இரவும் பகலும் இல்லாத இடம்* ! 

*இன்று  மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் வெளிப்புறத்தில். வள்ளல்பெருமான் மரணத்தை வென்று சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டநாள்*

*ஒவ்வொரு உலகமும் மண்.நீர்.அக்கினி. காற்று.ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும். வாலணு.திரவவணு. குருஅணு.லகுஅணு.அணு.பரமாணு.விபுஅணு.போன்ற ஏழு விதமான ஆணுக்களும்  நிறைந்ததாகும்.*

*மாயையின் ஆதிக்கம் !* 

இவ்வுலகங்களை கடவுள் படைத்தாலும் பஞ்சபூதஉலகத்தின் நிர்வாகப் பொறுப்பை.

*ஆளுமை பொருப்பை மாயை மாமாயை.பெருமாயை என்னும் மூன்று மாயா சக்திகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. உலகில் தோன்றிய ஏழுவிதமான உயிர் இனங்களில் மனித இனம் மிகவும் உயர்ந்தது. *தன்னைப் படைத்த இறைவனை அறிந்து அருளைப்பெற்று  இறைவனுடன் கலந்து இன்பமுடன் வாழ்வதற்கு மனித இனமே தகுதி உள்ளப்பிறவியாகும்*.

கடவுளைக் காண்பதாக இருந்தாலும் தொடர்பு கொள்வதாக இருந்தாலும்.மிகவும் சக்தி வாய்ந்த அருள் பெறுவதாக இருந்தாலும் *மாயையின் அனுமதி இல்லாமல் எதுவும் பெறமுடியாது. மாயையை எல்லா ஞானிகளும் தவறான கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்கள்.ஆன்மாவிற்கு *மாயை தாய் போன்றது.*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தந்தை போன்றவர்*. 

ஆன்மா இவ்வுலத்திற்கு வந்ததும் வீடு இல்லாமல் தனித்து செயல்பட முடியாது தனித்து வாழமுடியாது.ஆன்மாவிற்கு வீடு என்பதுதான் பஞ்சபூதகங்களின் அணுக்கூட்ட சேர்க்கையாகும்.

அந்த அணுக்களால் பின்னப்பட்டதே இம்மனித தேகமாகும். அவ் அணுக்களால் கர்மதேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் மூன்று விதமான மாற்றங்கள் பெறவேண்டும்.

ஆன்மா வந்ததும் முதன் முதலில் கர்மதேகம்( கன்மதேகம்) என்னும் தேகத்தை அசுத்த பூதகாரிய சாதாரண அணுக்களைக் கொண்டு *மாயையால்* கட்டிக்கொடுக்கப்பட்ட தேகமே ஊன் உடம்பு என்னும் மனித தேகமாகும்.இவை கற்பனையால் சொல்லவில்லை.

எல்லாம் வள்ளல்பெருமான் ஞான அறிவால் சொல்லுகின்றார்.

வள்ளலார் பாடல் !

பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை நீதான் பெற்ற உடம்பு இதுசாகாச் சுத்தவுடம் பாக்கி

ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்

அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின் றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல்அமர்க

தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந் திலையோ *சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே*.! 

என்னும் பாடலின் வாயிலாக (வள்ளல்பெருமான் தெளிவாகப் பதிவு செய்கிறார். எனவேதான் ஆன்மாவைப் பற்றிக் கொண்டுள்ளது. 

*ஆணவம்* *மாயை* *கன்மம்*  என்று சொல்லுவதாகும். ஏழுவிதமான அணுக்களால் பின்னப்பட்ட இவ்வுடம்பில்.கோடி சூரிய பிரகாசம் உள்ள ஆன்மா தனித்து இயங்கிக் கொண்டுள்ளது.அவ் ஆன்மாவை ஏழுவிதமான அணுக்களின் வண்ணங்களான மாயா திரைகளால் ஆன்மாவின் உண்மைத்தன்மையை வெளியே காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டுள்ளன.  வள்ளலார்  மாயா திரைகளைப்பற்றி அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்துள்ளார். 

*அகவல் !* 

1.கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

2. பேருறு நீலப் பெருந்திரை யதனால் ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

3.பச்சைத் திரையாற் பரவெளி யதனைஅச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

4. செம்மைத் திரையாற் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

5.பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

6. வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

7. கலப்புத் திரையாற் கருதனு பவங்களை அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி! 

மேலே கண்ட ஏழு மாயா திரைகளால் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகளை ஒவ்வொன்றாக அகற்றும் அதாவது நீக்கும் வழியைத் தெரிந்து கொண்டால் மட்டுமே நம் உண்மைத் தந்தையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். வள்ளலார் ஒருவரே திரை மறைப்பெல்லாம் தீர்த்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரில் தொடர்பு கொண்டு பூரண அருள் பெற்று மரணத்தை வென்று கடவுள் மயமானவராகும்.

*அருளினால் மட்டுமே திரைகளை அகற்றமுடியும்* .

அருளை வழங்கும் ஒரே தெய்வம் தான் அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை ! என்னும் தெய்வமாகும். அந்த தெய்வம் மனித தேகத்தில் எவ்வாறு எங்கே இயங்குகிறது என்பதை எளிய முறையில் தெரிவிக்கின்றார்.

*வள்ளலார் பாடல்* ! 

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம் எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் *சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*

எந்த தொடர்பும் இல்லாமல் அம்பலத்தில் ஆடுகின்ற தெய்வம்தான் மனித தேகத்தின் சிரநடு சிற்றம்பலச் சிற்சபையில் ஆன்ம ஒளியாக விளங்கி கொண்டுள்ளன என்பதை எளிய முறையில்  தமிழில் பதிவு செய்துள்ளார்.

*இரவும் பகலும் இல்லாத இடம்* !

*இரவும் பகலும் உள்ள பஞ்ச பூத உலகில் வாழ்ந்து வந்த ஆன்மா. இரவு பகல் இல்லாத இடமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான அருட்பெருவெளிக்கு செல்ல வேண்டும் என்பதே வள்ளலார் கண்டு பிடித்த உளவாகும். வேண்டுகோளாகும்*

*இராப்பகல் இல்லாவிடத்தே வெண்ணிலாவே இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.!*

*இரவொடு பகல் இலா இயல்பொது நடமிடுபரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே*! என்றும்.

இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணியே இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணியே

அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் லமுதம் ஊட்டி யே.!

இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவனே எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவனே

கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவனே.!

எனக்கும் உனக்கும்! இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் உலகில் பிறர்க்கு எய்தும் பொருத்தமோ என்று தனக்கு கிடைத்த அனுபவத்தை சொல்கிறார்.! 

*இரவு பகல் இல்லாத இடம் இறைவன் இருக்கும் இடம்.*

ஆன்மா வாழும் இந்த உலகமோ இரவு பகல்.நினைப்பு மறைப்பு.இறப்பு பிறப்பு.உண்ணுவது உறங்குவது விழிப்பது.போன்ற மாற்றங்கள் மாறிக்கொண்டே இருக்கும் பஞ்சபூத உலகமாகும். இரவு பகல் அற்ற இடமான அருட்பெரு வெளிக்குச் செல்ல உளவு (வழி) தெரியாமல் ஆன்மா பிறந்து பிறந்து.இறந்து இறந்து கொண்டே உள்ளது.

இரவு பகல் அற்ற இடத்திற்கு செல்லவேண்டுமானால்.இவ்வுலக வாழ்க்கையில் எவ்விதப் பற்றும் இல்லாமல். பஞ்ச பூதங்களால் உண்டான உணவு வகைகளை உண்ணாமல் உறங்காமல்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது அளவில்லா பற்று வைக்க வேண்டும். *ஆன்மா பற்று அற்று வாழ்ந்தால் பற்று அற்ற இறைவனை தொடர்பு கொள்ள முடியும்.*

*வள்ளலார் பாடல்*!

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ

சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை

எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்

*பற்றிய பற்றனைத் தினையும் பற்றற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ எற்றும் இறவீரே.*!

இந்த உலகப்பற்றை விட்டு அம்பலத்தில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்ற வேண்டும்.

அப்பற்றுதான் மிகவும் உயர்ந்த பற்றாகும். நாம் அப்பற்றை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து   அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீரைக் கொண்டு  இடைவிடாது தொடர்ந்து உண்மையாக  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேசிக்க வேண்டும் அதாவது காதலிக்க வேண்டும்.அப்படி இடைவிடாது தொடர்பு  கொள்ளும் தருணம். *உடம்பைக் கொடுத்த  மாயை என்னும் தாயானவள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் தடையை நீக்கிவிடுவார்.*

*பஞ்சபூத அணுக்களால்  ஆன்மாவை மறைத்து கொண்டு இருக்கும் தடை நீங்கி வாழும் வாழ்க்கைக்கு ஆன்ம இன்ப வாழ்க்கை என்று பெயர்.*

*அதன்பின் என்றும் அழியாத எதனாலும் அழிக்க முடியாத உயர்ந்த அருள் அமுதமான நன்நிதியை வாரி வழங்குவார்*.

அந்த நன்நிதியான அருள் அமுதைக்கொண்டு.முதலில் அசுத்தபூத காரிய அணுக்களால் பின்னப்பட்ட உடம்பை சுத்த பூதகாரிய அணுக்களாக மாற்ற வேண்டும். அவற்றிற்கு ஆன்ம இன்பலாபம் என்று சொல்லப்படும்.

மேலும் இம்மை இன்பவாழ்வு. இம்மை இன்ப லாபம் என்றும் *சுத்த தேகம் சுவர்ணதேகம்.காரியரூபம் என்றும் பெயராகும்*.  நரை. திரை. பிணி. மூப்பு. மலம். ஜலம். வியர்வை.ஆகாரம்.நித்திரை.தாகம்.சாயை .பயம் முதலியன இல்லாமை.ரோம வளர்ச்சி தாழ்ச்சி இல்லாமல் இருக்கும். கர்ம சித்தி.கல்பதேகி அபரமார்க்கி உடையது. *அந்த சுத்த தேக உடம்பு கையில் பிடிபடும் அழிக்க முடியாது*.

அடுத்த மாற்றம். *பிரணவ தேக மாற்றம்.மறுமை இன்பலாபம் மறுமைஇன்ப வாழ்வு* *காரியகாரண ரூபம்* என்றும் பெயராகும்.பரம்பர தேகம்.பரம்பர  பிராண கல்பதேகி. உணர்ச்சி.பரம்பர அறிவு.பரம்பர தத்துவம்.சர்வ சித்தி பர அபர மார்க்கம் உடையது. *பொன் தேகம் உரைபடாதது. தோற்றம் கையில் பிடிபடாது*.எக்கருவியாலும் அழிக்க முடியாது.

*அடுத்த மாற்றம். ஞானதேகம். காரணரூபம் எங்கும் பூரண வியாபகம்* பராபர அறிவு.பராபர தத்துவம்.அளவு கடந்த மாற்று. சப்த மயதரிசனம்.உருவம் தோற்றியும் தோற்றாமலும் இருக்கும்.

சர்வ மகாசக்தி.சர்வ சுதந்தரம்.காலாதீதன் என்றும் பெயர். அவ் உடம்பு நினைத்த மாத்திரத்தில் எல்லா உலகமும் உலாவும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலக்கும் தகுதி உடையதாகும்.

சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்தியும் பெற்றவர்கள் மட்டுமே இரவு பகல் அற்ற இடமான அருட்பெரு வெளிக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதி யுடன் கலந்து   பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் மரணம் அடையாமல் வாழ்வதே மனித தேகம் கிடைத்த ஆன்ம லாபமாகும்.

*இரவு பகல் அற்ற ஆன்மாதேகம் மட்டுமே இரவு பகல் அற்ற அருட்பெருஞ்ஜோதி யுடன் கலக்க முடியும்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

செவ்வாய், 20 அக்டோபர், 2020

சாதி சமய மதத்தை ஒழித்தவர் !

 *சாதி சமய மதத்தை ஒழித்தவர்* ! 


உலக வரலாற்றில்  சாதி சமய மத ஒழிப்பிற்கு முதன் முதலில்  வித்திட்டவர் தமிழ் நாட்டில் பிறந்த வாழ்ந்து மரணத்தை வென்ற மகான் வள்ளல் பெருமானாகும். 


வள்ளலாருக்கு பின்னாடிதான் சாதி சமய மதச் சீர்திருத்தங்கள்.  பல பெரியோர்களால் பேசப்பட்டது.மூட நம்பிக்கையை முதன் முதலில் வேரோடு சாய்த்தவர் வள்ளலார்.


*சாதி சமய மதங்களை ஏன் அழிக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுகின்றது அல்லவா ?*.

மனிதகுலத்தின் ஆன்மாவில் உள்ள இயற்கை குணமான  அன்பை தயவை.

கருணையை மறைத்துக் கொண்டு இருப்பதே பொய்யான சாதி சமய மதக்கொள்கைகளாகும்.எனவேதான் அவற்றை அகற்ற வேண்டும் என்பதாகும்.

இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள நேரடித்தொடர்பை தடைசெய்து ஆன்ம அறிவை வெளிப்பட காட்டமுடியாமல் மறைத்துக் கொண்டு இருக்கும் மாயா திரைகளே சாதி சமய மதக் கொள்கைகளாகும்.


*அறிவின் வேறுபாடுகள்*


பகுத்தறிவு சிந்தனை.நாத்திக சிந்தனை.கடவுள் மறுப்புக் கொள்கைகள்

சமூகநீதி  போன்ற முற்போக்கு சிந்தனைகள் பல அறிஞர்களின் அறிவு விளக்க துணிச்சலோடு உலகம் எங்கும் 

மக்கள் மத்தியிலே பேசப்பட்டது. 


ஆன்மநேயத்தையும் ஆன்மநேய கொள்கைகளையும் வள்ளலாரைத்தவிர வேறு எவராலும் பேசப்படவில்லை. 


ஆன்மீகம் இல்லாத முற்போக்கு சிந்தனை.பகுத்தறிவு சிந்தனை.கடவுள் மறுப்புக் கொள்கைகள் எதுவானாலும் பெருமளவு மக்களிடம் சென்று சேரவில்லை என்பது உண்மையாகும்.


ஆன்மீக வழியிலே உண்டான மூட நம்பிக்கைகளான சாதி சமய மதக் கொள்கைகளை 

புதிய ஆன்மீக கொள்கைகளை படைத்து. பழையவைகளை வேரோடு பிடுங்கி  எறிய பாடுபட்டவர்களில் முதன்மையானவர் முக்கியமானவர் வள்ளலார்தான் என்பதில் சந்தேகமே தேவையில்லை.


*கடவுள் என்றால் அவர்  யார்* ? 


ஆன்மீக வழியில் பகுத்தறிவை விதைத்தவர் வள்ளலார்.பகுத்தறிவை உயர்ந்த அறிவு என்றும். உண்மை அறிவு என்றும். ஆன்ம அறிவு என்றும் சொல்லுவார் வள்ளலார். உண்மையான உயர்ந்த அறிவை தெரிந்து கொள்ளவும். வளர்த்திக்

கொள்ளவும் உருவாக்கியதே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்*.


இங்கே கடவுள் மறுப்பு கொள்கை என்பதே கிடையாது.நாத்திகமும் கிடையாது. 100% கடவுள் உண்டு என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். உண்மையாகும்.


*ஆனாலும் உலகில் வழிபடும் கடவுள்கள் எல்லாம் உண்மையான கடவுள்கள் இல்லை என்பதை வெளிப்படையாக சொன்னவர் வள்ளலார்*.


கடவுளுக்கு மனிதர்கள் போல் கை கால் கண் காது மூக்கு வாய் உடம்பு போன்ற உருவம் கிடையாது.

உருவம் உள்ள கடவுள்கள் யாவும் ஜட தத்துவங்களே தவிர உண்மையான கடவுள்கள் அல்ல.  மனிதர்களால் கடவுளைப் படைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


கடவுள் பஞ்சபூதங்களில் உள்ள அக்கினி சூரியன் சந்திரன்.நட்சத்திரங்கள் போன்ற ஒளியும் உண்மையான கடவுள் அல்ல. *கடவுள் உருவம் அற்ற அருள் ஒளியாக உள்ளார்*.அவர் இருக்கும் இடம் இயங்கும் இடம்.இயக்கும் இடம் *அருள்நிறைந்த அருட்பெருவெளி என்னும் ஞானவெளியாகும்* 

அங்கு இயற்கை உண்மையாக.

இயற்கை விளக்கமாக.

இயற்கை இன்பம் வழங்கும் பூரண அருள் ஆற்றல் மிகுந்த அருட்பெருஞ்ஜோதி யாக தனிப்பெருங்கருணயாக  உள்ளவரே உண்மைக் கடவுளாகும்.


மக்கள் மத்தியில் சாதாரண ஆன்மீகவாதியாக. பக்தியாளராக மட்டுமே பார்க்கப்படுபவர் வள்ளலார் அல்ல.அருள் பெற்ற அருள் நிறைந்த  அருட்பேரொளியே வள்ளல் பெருமானாகும்.


தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 

மருதூர் என்னும் சிறிய கிராமத்தில் 

05 -10-1823 அக்டோபர் மாதம் இறைவனால் வருவிக்க உற்றவரே வள்ளலார் சிவபக்தராகவும், சிவ பக்தியை வலியுறுத்தக் கூடிய முற்றும் துறந்த ஒரு துறவியாக மட்டுமே  மக்கள் பின்பற்றி வந்துள்ளார்கள் வருகின்றார்கள் அவருடைய சுயரூபம் சுய சிந்தனை என்னவென்று எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.


தன் வாழ்க்கையை ஆன்மீக அருள்வடிவம் கொண்ட  முற்போக்கு வாதியாக  வடிவமைத்துக் கொண்டவர்.அவரை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. முக்காடுபோட்டுள்ள சாதாரண துறவியாகவே மக்களுக்கு காட்சிக் கொடுத்துள்ளார். 


அவர் உடம்பு எந்த சக்தியாலும் அழிக்க முடியாத அருள் உடம்பாகும்.


ஆனாலும் அவருக்குள் இருந்த பகுத்தறிவு.

அருள்அறிவு.கடவுள் அறிவு. கடவுளின் குணம் மக்களிடம் வெளிப்படையாக  காட்டாமல் மறைத்துக் கொண்டே வந்துள்ளார்.அவர் பாடிய திருஅருட்பா பாடல்களை ஊன்றி படித்துபார்த்தால் மனித தரத்தில் ஓர் அளவு தெரிந்து கொள்ளலாம். 


*மூட மதங்கள்* !


 மனிதர்களை *முட்டாள்களாக்கி மூட நம்பிக்கை கொள்கைகளை ஆன்மாவில் பதிய வைத்து. சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திய சாதி சமய மதங்களின் அமைப்புகளுக்கும் அவற்றின் கொள்கைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்க ஒருபோதும் அவர் தயங்கியதில்லை!*


வள்ளல்பெருமானுக்கு இளமையிலே கல்வி கற்காமலே ஞானம் உண்டாயிற்று.

உலகில் உள்ள எல்லா மொழிகளும் கற்காமலே கற்றவர்.தமிழ் நாட்டில் தமிழ்மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றி சொன்னவர்.  ஆனால், சிறு வயதிலிருந்தே பல தெய்வங்கள் பெயரால் பக்திப் பாடல்களைத் தமிழ்மொழியில் பாடியவர்.

மற்றவர்கள் பாடிய பக்தி பாடல்களை விட வள்ளலார் இயற்றிய பக்திப் பாடல்கள் மிகவும் உயர்ந்த கருத்து ஆழம் உள்ளதாகும். கல்வி கற்காமலே பாடல்கள் இயற்றும் அருள் ஆற்றல் வள்ளபெருமானுக்கு ஆன்மாவிலே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. 


பல  கோயில்களுக்குச் சென்று பாடும் வழக்கத்தைக் கொண்ட வள்ளலார் சிதம்பரம் நடராஜர் கோயில் மீது அளவுகடந்த பற்று வைத்திருந்தார். *ஏன் என்றால் அங்கேதான் உண்மையை மறைத்து சிதம்பர ரகசியம் என்ற வெற்று இடத்தை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.*


பின்னாளில் கடவுளின் ரகசியத்தை வெளிப்படுத்த  வடலூரில் சத்திய ஞானசபையைத் தோற்றுவித்து ஒளியே கடவுள் வடிவம் என்பதை மக்களுக்கு காட்டினார். *வடலூருக்கு உத்தர ஞான சித்திபுரம் என்றும்.உத்தர ஞான சிதம்பரம் என பெயர் சூட்டினார்*.


*உலகின் வறுமையை போக்கியவர்* ! 


மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்


கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்


எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்


நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.! 


மேலே கண்ட பாடலில் தன் விருப்பத்தை இறைவனிடம் சொல்லி மக்களின் துன்பங்களைப் போக்க அருள் வழங்க வேண்டும் என்பதே என் விருப்பம் என வேண்டுகின்றார்.


உலகில் மக்கள் பசி பட்டினி வறுமைகள் மேலோங்கி ஏழைகளாக. நோயாளிகளாக.அடிமைகளாக. அனாதிகளாக ஆதரவற்றவர்களாக.உண்ண உணவில்லாமல்  வாடி வருந்தி இறந்து கொண்டு இருந்த மக்களைப்பார்த்து காப்பாற்ற கொதித்து எழுந்து  களத்தில் இறங்க தொடங்கினார்.

ஒரு துறவியால் இது சாத்தியமாகுமா என நினைத்து கிண்டலும் கேலியும் செய்துள்ளார்கள். ஆன்மீகவாதிகளும்.ஆட்சியாளர்களும் செய்ய முடியாத காரியத்தை துறவியாக இருந்து செய்து காட்டியவர் வள்ளலார்.


*தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தை அழித்திடுவோம் என வாய்வார்த்தை கூறாமல்*.ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க வடலூரில் 1867 ஆம் ஆண்டு தருமச்சாலையை தொடங்கிவைத்தார்.இன்றுவரை ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கிவருகின்றது.இன்று உலகம் முழுவதும் பின்பற்றி நடைபெற்று வருகிறது.


சாதி சமய மதங்களை அப்புறப்படுத்த 1872 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய  சங்கத்தை தொடங்கி வைத்தார்.


*வள்ளலார் பாடல் !* 

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகி அழிந் திடவும் ஒரு மோசமும்இல் லாதே


இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்


துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்றஎழு கின்றதிது தொடங்கி நிகழ்ந் திடும்நீர்


பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!


மக்களுக்கு பயன் அளிக்காமல் செயல்படுகின்ற எந்த இயக்கமாக இருந்தாலும். எந்த மார்க்கமாக இருந்தாலும். எந்த ஆட்சியாக இருந்தாலும்.

அவற்றை இருக்கும் இடம் தெரியாமல் அகற்றிவிட்டு.

மக்களுக்கு பயன் தரும் நன்மைபயக்கும்

*புதிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமான ஞான மார்க்கத்தை தோற்று வித்தவர்தான் வள்ளலார்*. 


எனவேதான் இதுவரையில் எவரும் படிக்காத.படிக்கமுடியாத புதிய படிப்பை படித்திடலாம். உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே என உலக மக்களை சன்மார்க்க சங்கத்திற்கு அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.


 *இந்த சங்கமானது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல.அனைத்து உலகத்திற்கும் சொந்தமானதாகும்*

*வள்ளலார் பாடல்* !


உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே 


திலகன் என

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.! 


என்னும் பாடலிலே  சன்மார்க்க சங்கத்தை நீங்கள் யாரும் நடத்தவேண்டாம் நானே நடத்துகிறேன் என்று தெளிவாக பதிவு செய்கிறார்.


சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நடத்தும் முழு பொருப்பையும் வள்ளல்பெருமான் இடமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொடுத்துள்ளார் என்பதை சன்மார்க்கம் சார்ந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டும்.


நம்முடைய பணி ஜீவகாருண்யத்தையும்.ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும்.

இறைவனை தெரிந்து கொள்ளும் சத்விசாரத்தையும். முழுமையாக கடைபிடித்து.

இதுவரையில்  படியாத படிப்பான சாகாக்கலை. சாகாக்கல்வி கற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு அருள் பூரணம் பெற்று.ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வென்று  பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையாகும்.


*மரணத்தை வென்று வாழ்பவர்களுக்கே சங்கத்தை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்படும்.*


வள்ளலார் கொள்கையிலே முக்கியமானது உயிர்க்கொலை செய்யக்கூடாது.

அதன் புலால் உண்ணக்கூடாது.


வள்ளலார் தோற்றுவித்த சங்கம் சாலை.சபையில்  வேலை செய்பவர்கள்.

சன்மார்க்க சங்கங்கள் வைத்து நடத்துபவர்கள். அவற்றில் உறுப்பினராக உள்ளவர்கள் கண்டிப்பாக மது மாமிசம் உண்ணாதவர்களாகவே இருக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமான செயலாகும்.


1872 ம் ஆண்டு பொதுமக்கள் வழிபடுவதற்காக.

சாதி சமயம் மதங்கள் சாராத. சத்தியஞான சபையை அமைத்த வள்ளலார், அங்கு பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார். அன்றைய காலகட்டத்தில் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் சில பிற்படுத்தப்பட்ட மக்களும் நுழைவதற்குத் தடை இருந்தது. கடவுளுக்கு முன் அனைவரும் சமமானவர்கள்.

கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்.

கடவுளை வழிபடுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் எந்த விதமான தடையும் இருக்ககூடாது என்றும் அனைவரும் வந்து வழிபடலாம் என்ற அமைப்பே சத்திய ஞானசபையாகும்.


 சாதி சமய மதங்கள் கடைபிடித்து வந்த அந்தத் தடையை முதலில் நொறுக்கியவர்.

அகற்றியவர். மாற்றியவர் 

வள்ளல்பெருமான் ஒருவரே. அனைவரும் வழிபடும் பொது தளமாக *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்தார்*.


*கலையுரைத்த கற்பனையை அகற்றியவர்*


கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக! என குரல் கொடுத்தவர் வள்ளலார்.


தெய்வங்களின் பெயரால் ஆன்மீக மூடநம்பிக்கைகள், அதன் விளைவாக கட்டமைக்கப்பட்ட ஆச்சார சங்கற்ப விகற்பங்கள்.மேலும் சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு எதிராக பொது நோக்கமுள்ள  புரட்சி கொள்கைகளை வெளியிட்டார்.


வள்ளலார் எழுதிய திருஅருட்பா பாடல்களைத் தொகுத்த அன்பார்கள் அவரது பாடல்களை 6 திருமுறைகளாக வகுத்தனர். அதில் ஒன்று  முதல் ஐந்தாம் திருமுறை வரையில் சமயம் மதம் சார்ந்த  பக்தி நிறைந்த ஆன்மிகப் பக்தி பாடல்களாகும்.


ஆறாம் திருமுறையில் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற உண்மையும். சாதி சமயம் மதம் சாராத புதிய கொள்கைகளும். சமூகம் நல்லிணக்கம் சார்ந்த புரட்சிப் பொது பாடல்களும்.அருள் சார்ந்த உண்மைப் பாடல்களும். மக்களை வழிதடத்தும் அருள் ஆட்சி நடத்தும்  வழிமுறைகளையும் பாடல்களின் வாயிலாகவும் உரைநடைப்பகுதி வாயிலாகவும் தெளிவாக ஆறாம் திருமுறையில் வெளியிடப் பட்டுள்ளது.


ஆறாம் திருமுறையில் நூற்றுக்கணக்கான பாடல்களில் சாதி சமய மதங்களை அழுத்தமான வார்த்தைகளால்  சாடியுள்ளார்.


*உதாரணத்திற்கு ஒருபாடல்*!


கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்


கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்


பிள்ளைவிளை யாட்டென நன் கறிவித்திங் கெனையே

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே


தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!


என்றும் .


மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்

மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ


சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே

சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ


பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்

பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்

சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று

தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.! 


போன்ற பாடல்கள் ஆறாம் திருமுறையில் நிறைந்து உள்ளன.


முதல் ஐந்து திருமுறைப் பாடல்களும் ஆன்மிக வாதிகளாலும், பக்தர்களாலும் இன்றளவும் போற்றிக் கொண்டாடப்படுகின்றன. 


ஆனால், ஆறாம் திருமுறையில் உள்ள பாடல்களில் உள்ளபடி.இந்திரிய கரண. ஜீவ. ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து வாழ முடியாமையால். மக்கள் உலக வாழ்க்கையிலே  கவனம் செலுத்திக் கொண்டுள்ளார்கள்.  


உலக உண்மைகளையும் கடவுள் உண்மைகளையும் வெளிப்படுத்தும் உயர்ந்த பகுத்தறிவு ஆன்மஅறிவு அருள்அறிவு.கடவுள் அறிவை அறிந்து கொள்ளும்  பாடல்கள் யாவும் ஆறாம் திருமுறையில் நிறைந்துள்ளன. 


ஆறாம் திருமுறை போதிய அளவு மக்கள் கவனத்தைப் பெறவில்லை என்பதே உண்மை. அதற்குக் காரணம், அதில் உள்ள சாதி சமய மத ஒழிப்பு.  ஒரே கடவுள் என்ற உண்மை கொள்கை. உயிர்கொலை செய்யாதிருத்தல் புலால் உண்ணாமல் இருத்தல்  போன்ற உயர்ந்த பண்புகளையும் ஜீவகாருண்ய ஒழுக்கங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால்  ஆறாம் திருமுறையை பின்பற்றும் மக்கள் குறைவாகவே உள்ளனர். 


வரும் காலங்களில் மக்கள் அனைவரும்  உண்மை உணர்ந்து  தெளிவடைந்து சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றுவார்கள் என்பதே சத்திய வாக்கு.


*வள்ளலார் பாடல்*


சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!


என்பதே சத்திய வாக்காகும்.மேலும். 


பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம் இங் கிதுநான்

புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே


மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே

மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே


பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்

பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே


அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை

அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.! 


சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றுபவர்களை ஆதரிப்பார்களேத்  தவிர தடுப்பவர்கள் எவ்வுலகில் எவரும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றார்.உலகில் உள்ள நெறிகளிலே சிறந்து விளங்கும்

திருநெறி ஒன்றே சுத்த சன்மார்க்கமாகும்.


திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

9865939896.

புதன், 14 அக்டோபர், 2020

வடலூர் சங்கம் சாலை சபை !

 *வடலூர் சங்கம் சாலை சபை*! 


இயற்கை உண்மையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தொடர்பு கொள்வதற்கும் அருள் பெறுவதற்கும் சங்கம். சாலை.சபை என்ற மூன்று அமைப்புகளை வள்ளல்பெருமான் வடலூரில் அமைத்துள்ளார். 1865 ஆம் ஆண்டு சங்கம் ஆரம்பிக்கிறார்.1867 ஆம் ஆண்டு தருமச்சாலையை தோற்றுவித்து திறப்புவிழா செய்கிறார் வள்ளலார்.


1872 ஆம் ஆண்டு சபை திறப்புவிழா அன்று. *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்றும். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* என்றும். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை* என்றும். சங்கம் சாலை சபைக்கு நிலையான புதியதோர் பெயர் மாற்றம் செய்து புதிய அறிவிப்பை வெளியிடுகிறார். 


*சங்கம் சாலை சபை மூன்றும் இறைவன் அறிவித்த வண்ணம் வள்ளல்பெருமானே அருள் அறிவாலே அமைத்துள்ளார்*.


உலகின் புதியதோர் சமுதாயத்தை உருவாக்க. சாதி சமயம் மதம் அற்ற பொதுவான ஆன்மீகப் புரட்சிக் கொள்கைகளை உலக மக்களுக்காக  படைத்திருக்கின்றார்வள்ளலார். அவர் கொள்கையின் முக்கிய குறிக்கோள். *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்.*


காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்த மனிதன்.எல்லா உயிர்களும் ஒன்று என்று தெரியாமல் உணவிற்காக  உயிர்களைக் கொன்று தின்னும் பழக்கத்துடன் வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.


மனிதனுக்கு கொஞ்சம் அறிவு வளர்ச்சி உண்டான காலக்கட்டங்களில்.நாகரீகம் என்ற பெயரில் பலநாடுகளில் பல விதமான நாகரீகங்களைத் தோற்றி வைத்தார்கள். அவற்றைப் பின்பற்ற  பல தத்துவ தெய்வங்களை படைத்தார்கள். தெய்வங்கள் பெயரால்  வேதங்கள். ஆகமங்கள். புராணங்கள்.இதிகாசங்கள். சாத்திரங்கள் போன்றவற்றின் மூலமாக  கொள்கைகளை உருவாக்கினார்கள்.


கொள்கைகளின் வாயிலாக பல மதங்கள் தோன்றின.

மதங்களின் பெயரால் சமயங்கள் தோன்றின.தொழில்களின் பெயரால் சாதிகள் தோன்றின.


சாதி சமயம் மதம் என்ற பிரிவினையால் மனித நேயம் இல்லாமல்.

ஜீவநேயம் இல்லாமல்

ஆன்மநேயம் தெரியாமல்.உண்மையான மெய்ப்பொருளைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல்

சுயநலத்தால்.

போட்டியால் பொறாமையால்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள்  போரிட்டு அழிந்து கொண்டு இருந்தார்கள்.

இதற்கு எல்லாம் காரண காரியமாக இருந்தது இருக்கின்றது பலப்பல ஆன்மீக கடவுள் கொள்கைகளாகும். 


*மனிதகுலம்*!


எல்லா பிறப்புகளிலும் மிகவும் உயர்ந்த பிறப்பும் உயர்ந்த அறிவும் பெற்ற மனிதன்.

*தன்பெருமையைத் தான் அறிந்து கொள்ள முடியாமலும் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியாமலும்*  அழிந்து கொண்டே உள்ளார்கள்.


இறைவனால் படைத்த மனித குலத்தையும்.

உயிர்குலத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற தனிப்பெருங்கருணை உள்ளத்தோடு இறைவனால் வருவிக்க உற்றவர்  தான் வள்ளலார்.


உயர்ந்த அறிவு பெற்றுக் கொண்ட மனிதன் இறந்து இறந்து பிறந்து பிறந்து கொண்டே இருப்பதற்காக அல்ல. உண்மையான இறைவனைத் தொடர்பு கொண்டு என்று அழியாமல் வாழ்வதற்கு. அருள் பூரணம் பெற்று மரணத்தை வென்று *இறைவனுடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே மனிதகுலத்தை இறைவன் படைத்துள்ளார்* என்னும் உண்மையை *அணு அறிவியல் அருள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் வள்ளலார்*.


மனிதகுலத்தை காப்பாற்றுவதற்காகவே சாதி சமயம் மதம் அல்லாத சங்கம். சாலை. சபையை பொதுமை உணர்வோடு வடலூரில்  அமைத்துள்ளார்.


*இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை!*


எந்த நோக்கத்திற்காக.

சாதி சமயம் மதக்கொள்கைகள்  வேண்டாம் என்று வள்ளலார் சொன்னாரோ அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல். *இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை யிடம்* வடலூர் சங்கம்.சாலை.சபையை சிக்க வைத்து விட்டார்கள்.அதனால் வடலூர் சமய மதக் கோயில்கள் போல் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.


சங்கம் சாலை சபை பல ஆண்டுகளாக *வள்ளலார் தெய்வ நிலையம்* என்ற பெயரில் 

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உள்ளே புகுந்து வள்ளலார் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சமய மதக் கொள்கை போல் நடைபெற்று வருகிறது. 


வள்ளலாரின்  சுத்த சன்மார்க்க புதிய புரட்சி கொள்கைகளை வள்ளலார் உடன் இருந்த அறிவாளிகளும் பின்பற்றவில்லை. மக்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லவும் ஆள்இல்லை. 


வள்ளலார் சொல்லிய இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கமும். உண்மையான அறிவில் சிறந்தஒழுக்கம்   ஆர்வம் உள்ளவர்கள்  இல்லாமலும இருந்துள்ளார்கள்.


 வள்ளலார் கொள்கை புரியாமலும்.புரிந்து கொண்டாலும் கடைபிடிக்க முடியாமலும்.

கண்டும் காணாதது போல் இருந்துகொண்டு வந்துள்ளார்கள். தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமலும்.  *சமய மத வழிபாடுகள் போல் வடலூர் சங்கம் சாலை சபை நடைபெற்றுக் கொண்டு வருகிறது* *. 


*சுத்த சன்மார்க்கிகள்* ! 


வடலூர் சங்கம் சாலை.சபை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை  வள்ளலார் பாடல்கள் மூலமும்.உரைநடைப்பகுதி வாயிலாகவும் தெளிவாக எழுதிவைத்துள்ளார். 


பெருமான் சொல்லிய வண்ணம் சாதி சமய மத ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இல்லாமல்.அவற்றை சார்ந்து செயல்படாமல் சுத்த சன்மார்க்க கொள்கைப்படி தூய்மையாக நடைபெற வேண்டும்.அவ்வாறு செயல்பட வேண்டும்  என்ற ஆர்வமும் அக்கறையும்  துடிப்பும் மிகுந்த அறிவு சார்ந்த சுத்த சன்மார்க்க அன்பர்கள். சன்மார்க்க சாதுக்கள் போன்றவர்கள் வந்து கொண்டே உள்ளார்கள்.

சன்மார்க்க கொள்கைகளை ஓர்அளவு தெளிவாக புரிந்து கொண்டும் செயல்பட்ட்டுக்கொண்டும் வருகிறார்கள். .


*அறநிலையத்துறை யிடம் இருந்து சங்கம் சாலை சபையை மீட்கவேண்டும்.சுத்த சன்மார்க்கிகளே நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  மேலோங்கி வளர்ந்து வருகிறது.*


இந்து சமய அறநிலையத்துறையை எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்ற குழப்பம் சன்மார்க்கிகளிடம். நிலவி வருகிறது.


சன்மார்க்கிகளிடம் ஒற்றுமை இல்லை என்றும். பல கருத்து வேறுபாடும் உண்டு என்ற எண்ணமும் வலுத்து வருகிறது. காரணம்.சுத்த சன்மார்க்கத்தில் ஒத்த கருத்து உடையவர்கள் ஒற்றுமையாய் இணைந்தால் எதையும் நிறைவேற்றுவது எளிதாகிவிடும்.


சன்மார்க்கத்தில் சாதி.சமயம் மதம் சார்ந்த சன்மார்க்கிகள் தான் எல்லா ஊர்களிலும் சங்கம் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

ஜீவகாருண்யம் செய்து கொண்டு வருகிறார்கள்.

வழிப்பாட்டு விஷயத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள்.


வள்ளலார் சொல்லியவாறு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று  பெயர் வைக்காமல் அவரவர்கள் விருப்பபடி சங்கத்திற்கு பெயர்வைத்து நடத்திவருகிறார்கள்.


இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து உறுப்பினர் ஆக்குவதும். வடலூரைத் தூய்மைபடுத்துவதும் மிகவும் கடினம்.


வள்ளலார் கொள்கையின் சுத்த சன்மார்க்கத்தின்  முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்து அறிந்து தெரிந்து முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் ஒத்த கருத்துடன்  ஒன்று சேர்ந்தால் மட்டுமே  வெற்றி நிச்சயம்.


இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உயர் அதிகாரிகளிடமும் மத்திய மாநில அமைச்சர்களிடமும் வள்ளலார் கொள்கையின்  தனித்துவத்தின் உண்மையை எழுத்து மூலமாகவும்.

நேரிலும்  பக்குவமான முறையில்  எடுத்து சொல்லி வடலூரை தூய்மை படுத்தலாம்.அதில் சிரமம் ஒன்றும் இல்லை.


*சண்டை தகராறு மறியல் போராட்டம் எதுவும் தேவை இல்லை*. 


வடலூர் சங்கம் சாலை.சபை ஞானத்தை போதிப்பதாகும் சாதாரண மனித்தரத்தில் உள்ளவர்களால் வெற்றி கிட்டாது.அருள் அறிவு தரத்தில் உள்ளவர்கள் முயற்சி செய்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையுடன் நிச்சயம் வெற்றி கிட்டும்.


உலகியல் பற்று அற்ற தூய்மை உடையவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையுடன்  நல்லதே நலமுடன்  நடக்கும்.


காலத்தின் கட்டாயம் காலம் கனிந்து வருகிறது நல்லோர் நினைத்த நலம் பெறுகும் எல்லோரும் இசைந்து வாழ்ந்து இன்பம் பெருகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

கடவுள் வழிபாடு !

 *கடவுள் வழிபாடு* ! 


வள்ளலார் ஆரம்ப காலத்தில் பல தெய்வங்களைப் பற்றி பாடியும் வணங்கி வந்தாலும் இறுதியாக அருள் அறிவால் கடவுளின் உண்மைத் தெரிந்து அறிந்து கொள்கிறார். 


வள்ளலார் பாடல் !


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொது என அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லது ஒன்று என்று அறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின்றேன் பொதுப் பாட்டே.! 


கடவுள் யார் ? என்ற உண்மையை உலகம் முழுவதும் தெரிந்து.அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்  என்பதற்காகவும் சுத்த சன்மார்க்க பயிர் எலாம் கண்டு களிக்கவும் எல்லவருக்கும் பொதுவான  திருஅருட்பா பாடலை பதிவு செய்துள்ளேன் என்கிறார் வள்ளலார்


*கடவுளின் ரூபம் ஒளி* ! 


கடவுள் வெளியில் எந்த ரூபத்திலும் தனியாக இல்லை. எல்லா உடம்பிற்குள்ளும் இருக்கும் உயிர்களிலும்  உள் ஒளியாக அகம் என்னும் ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார்.


அக்கடவுள் அருட் பெரு வெளியில் இயற்கை உண்மையாக.

இயற்கை விளக்கமாக.

இயற்கை இன்பமாக சாதாரண மனிதர்கள் எவரும் காணமுடியாத அருட்பெருவெளி என்னும்  இடத்தில் இருந்து இயங்கி கொண்டு. எல்லாவற்றையும் சமமாக பாவித்து இயக்கிக் கொண்டே உள்ளவர் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்பவராகும்.


வள்ளலார். தான் கண்ட உண்மைக் கடவுளை ஒரு பாடல் மூலமாக தெரிவிக்கின்றார்.


*வள்ளலார் பாடல்* ! 


அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்

தருட்பெருந் தலத்துமேல் நிலையில்


அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்

அருட்பெரும் திருவிலே அமர்ந்த


அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே


அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.! 


என்னும் பாடல்வாயிலாக தெரிவிக்கின்றார்.


அருட்பெரு வெளியில் அருட்பெரும் பீடத்தில்.அருட்பெரு வடிவில் அமர்ந்து. *தோற்றுவித்தல்.இயக்குவித்தல்.அடக்குவித்தல்.மயக்குவித்தல்.தெளிவித்தலுமாகிய* ஐந்தொழில்களை  இயக்கிக் கொண்டு இருப்பவரே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.


வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையில் முதன்மையானது முக்கியமானது.

*கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!* என்பதாகும்.


எல்லா உலகிற்கும் எல்லா அண்டங்களுக்கும்.  ஒரே கடவுள் தான் உள்ளார். அவர் ஒளியாகத்தான் உள்ளார்.சாதி.சமயம்.மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.

அவர் சாதி சமய மதங்களில் சொல்லிய கடவுளர் அல்லர். அவரை அனைவரும் *உண்மை  அன்பால். தயவால்.கருணையால் வழிபட வேண்டும்* என்பதற்காகவும். *அருள் நடம் புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபை காணுதல் வேண்டும்*  என்ற அருள் வாக்கின்படி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி  *வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவிக்கிறார்*.

*அங்கே ஒளி தான் கடவுளாக வைக்கப்பட்டுள்ளது*.


சன்மார்க்க சங்கத்தார்களுக்கு தெளிவாக சொல்லி உள்ளார்.


பழக்க விதி - 25.11.1872


*ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் ஒளியாக உள்ளார் என்றும்*.

பொதுப்பட உலகத்திலுள்ளார் யாவரும் சன்மார்க்க பெரும்பயன் பெற்று *நித்திய வாழ்வு* வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர்என்றும், அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் 

நம்பி இங்கே வசிக்கும் யாவரும் *வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம் என்றும் சொல்லுகின்றார். *ஏன் அப்படி சொல்லுகின்றார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்*.


சுத்த சன்மார்க்கத்தில்.

கடவுள் வழிபாடு விஷயத்தில்.சாதி.

சமய.மதங்கள் சார்ந்த எந்த விதமான ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் பின்பற்றக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக முன் கூட்டியே தெளிவாக சொல்லியும்.வற்புறுத்தியும் வந்துள்ளார்.


*வள்ளலார் உடன் இருந்தவர்கள் ஒருவர் கூட வள்ளலார் சொல்லியதைப் பின்பற்றவில்லை* என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.


*இப்போதுள்ள சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நாம் ஒவ்வொருவரும்* *வள்ளலார் சொல்லிய உண்மையைக் கருத்துக்களை*.

*அதன்*

*கொள்கைகளை* *சிரமேற்கொண்டு பின்பற்ற வேண்டும்*.


சாதி.சமய மத மார்க்கங்களில் வழிபாடுகள் செய்வதுபோல். கடவுளுக்கு மாலைபோடுதல்.  இலையைப்போட்டு பலபொருள்கள் வைத்து உணவு படையல்வைத்தல். தேங்காய் உடைத்தல். சூடம் கொளுத்துதல். மணிஅடித்தல்.

அபிஷேகம் செய்தல் ஆராதனைசெய்தல்.ஜோதிக்கே ஜோதிகாட்டுதல் கண்டாமணி அடித்தல் போன்ற எந்தவிதமான ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் சார்ந்த வழிபாட்டு முறைகளும் செய்ய வேண்டாம் என்பதை அழுத்தமாக தெரிவிக்கின்றார்..


மேலும் மொட்டை அடித்தல்.காதுகுத்துதல்.பாதயாத்திரை செய்தல் படத்தை வைத்து ஊர்வலம் செல்லுதல் போன்ற சில சமய மத  சடங்குகள்போல்  எதுவும் செய்ய வேண்டியதில்லை. 


சுத்த சன்மார்க்கத்தில் அருள் பெறுவதற்கு

தடைகளாக இருப்பதே சாதி சமய மத சடங்குகள் வழிபாட்டு முறைகள் என்பதை தெளிவாக விளக்குகின்றார்.


வள்ளலார் சொல்லுவதை நன்கு கவனித்து ஊன்றி படித்து பார்த்து மாற்றிக் கொள்ளவேண்டும்.


*வள்ளலார் சொல்லிய விண்ணப்பம்.*


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!


இது தொடங்கி எக்காலத்தும் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.


எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்! என்று வேண்டுதல் செய்யச் சொல்லி தெளிவாக எழுதி வைத்துள்ளார்.


நாம் தினமும் வழிபாட்டில் இந்த விண்ணப்பத்தை சொல்லுகிறோம்.

அதில் உள்ளவாறு பின்பற்றுகிறோமா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


*சுத்த சன்மார்க்க வழிபாடு !* 


தீபம் ஏற்றிவைத்து நீங்கள் ஒருமித்தாவது அல்லது .தனித்தனியாகவாவது உங்கள் அறிவிற்கும்.ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன்  கூடியாவது மெல்லென துதி செய்தல் வேண்டும்.அதாவது ஆன்ம விசாரம் செய்ய வேண்டும். 


அவ்வாறு செய்வதால் ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக்கொண்டு இருக்கின்ற அனந்த திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.அது நீங்கினால் மற்றைத் திரைகள் அதிகவிரைவில் நீங்கிப்போய்விடும். 


அந்த பசுமை வர்ணம் எப்படிப்பட்டது என்றால்.கருமைக்கு முதல் வர்ணமான பசுமை இருக்கின்றது.

இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டும் என தோத்திரித்தும்.தெய்வத்தை நினைத்தும் நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இருக்கின்றபோதும்.படுக்கின்றபோதும்.இடைவிடாது இவ்விசாரத்தோடு *ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால்* தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் என்பதே சுத்த சன்மார்க்க வழிபாடாகும்.சுத்த சன்மார்க்க சத்விசாரமாகும். என்பதே  வள்ளலாரின் அழுத்தமான சுத்த சன்மார்க்க வழிப்பாட்டு முறைகளாகும்.


சுத்த சன்மார்க்கிகள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்கள் வழிப்பாட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.


*ஜீவகாருண்யம்*

*சத்விசாரம் என்பது* *இரண்டு கண்கள் போன்றது*. இதுவே முக்கியமான வழிபாடாகும்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஜோதி வழிப்பாடு தவிர வேறு தெய்வங்களை   கனவில் கூட நினைக்க கூடாது வழிபடக்கூடாது*. ஏன் என்றால் அவைகள் யாவும் தத்துவங்களேத் தவிர உண்மையான தெய்வங்கள் அல்ல என்பதை தெரிந்துகொண்டு இயற்கை உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே என்னும் அறிவு விளக்கம் பெற வேண்டும்


பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற துன்பங்களை போக்கும். ஜீவகாருண்யமே முழுமையான செயல்பாடாக இருக்க வேண்டும்.


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாகும்*


வள்ளலார் பாடல் ! 


ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்

சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்


நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர்மேல் ஏறும்

வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செல்லும் வீதி.! 


மேலும் ..


ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்


சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும் ஒன்றாமே.! 


மேலும்...


கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே


உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என்இனி நீர் சமரச சன்மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன் குணர்ந்தே


எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.! 


மேலே கண்ட பாடல்களில் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்..


மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்து உயிர் ஆன்மா இரண்டும் உடம்பை விட்டு வெளியே போகாமல்  மரணத்தை வென்று வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.


மரணத்தை வெல்லுவதற்கு முக்கியத்  தடைகளாக இருப்பது சாதி சமயம் மதம் போன்ற கொள்கைகளும் அவற்றில் உள்ள தெய்வங்களும்.

அத்தெய்வங்களின் பெயரால் செய்யும் வழிப்பாட்டு முறைகளுமேயாகும்.


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பம்*

அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற *அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார்* என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித் தருளினீர். 


வாலிபப்பருவம் தோன்றிய போதே *சைவம் வைணவம் சமணம் பவுத்தம்* முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் *அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,* உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர். 


அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர். என்னும் குறிப்பை வெளிப்படையாக சொல்லுகின்றார்.


வள்ளலார் பாடல் ! 


சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது


மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் அற்புதமே !


சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்

சோதியைக் கண்டேன டி - அக்கச்சி

சோதியைக் கண்டேன டி.!


என்னும் பாடல்கள்வாயிலாக சொல்லுகின்றார்.


வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சுத்த சன்மார்க்கிகள் வழிபாட்டு விஷயத்திலும் ஜீவகாருண்ய ஒழுக்கத்திலும்  மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

அருள் பெற்று மரணத்தை வெல்லுவதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக் ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

திங்கள், 5 அக்டோபர், 2020

05-10-1823.ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினம் !

 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

           *திருஅருட்பிரகாச*

         *வள்ளல்பெருமான்*

  *வருவிக்கவுற்ற பெருநாள்* 

                 *05-10-1823*

               *ஆன்மநேய*

     *ஒருமைப்பாட்டு தினம்*

               ஓர் சிறு குறிப்பு

🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦

*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும்* இது இறைவனுக்கு வள்ளல்பெருமான் விடுத்த விண்ணப்பம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~

*விண்ணப்பம் என்பது பணிவான வேண்டுகோள்.* எனவே *எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க* என்ற ஒரு குறிக்கோளை மட்டுமே செயலாக்க முனைந்த வள்ளல்பெருமான், இந்த அப்பட்டமான உண்மையை, எவரும் எழுதத் துணியாததை எழுதுகிறார். மனித உயிர்கள் எதனாலெல்லாம் துன்புறுகின்றன என்று பார்த்தால் பசி, பட்டினி, நோய், அறியாமை, பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றம், கொடுங்கோல் ஆட்சி, நாடுகட்கிடையிலான போர், கொலை, கொள்ளை, ஏமாற்றம், அற்ப சுகத்துக்கு அடிமையாதல் போன்றவை நமக்கு தெரிகின்ற காரணங்கள். ஆனால் வள்ளல்பெருமான் இவைகள் எதுவுமே முதல் காரணமல்ல. சமய, மத, மார்க்க, வர்ணாசிரமங்களை ஆணித்தரமாக்க முனைந்த உலகாசார சங்கற்ப விகற்பங்களே முக்கிய தடையென்கிறாரே!

 இதை எப்படி ஏற்பது?

~~~~~~~~~~~~~~~~~~~~~

*வருணம்* (வர்ணம்) என்பது -- அறவோர், அரசர், வணிகர், வேளாளர் என மனித இனம் நான்காக பிரிக்கப்பட்டது. (பிற இதற்கு இணையான பெயரில் பிரிக்கப்பட்டிருக்கிறது.) *ஆசிரமம்* என்பது -- குருமார்களின் இருப்பிடம், அவர்களின் வழிகாட்டுதலில் நடத்தப்படுவது.

*ஆசாரம்* என்பது -- அனுஷ்டானம், ஒழுக்கம், நெறி.

*சங்கற்பம்* என்பது -- மனோ நிச்சயம், நியமம், எண்ணம், மனோ கற்பனை. 

*விகற்பம்* என்பது -- வேற்றுமை, தவறு, ஐயம், வித்தியாசப்படுத்துதல்.

~~~~~~~~~~~~~~~~~~~~~

மனித இனம் நால்வகை வருணமாக உலகர்களால்தான் (பிரிக்கப்பட்டது) விகற்பமானது. இது நம்மை படைத்த இறைவனுக்கு ஏற்புடையதல்ல. எனவேதான் இன்றைய உலக சமாதானத்திற்கு ஊறு செய்ய இது காரணமாகிவிட்டது. இறைவன் படைப்பில் கூட உடலிலுள்ள கால்கள் ஓடியாடி உழைத்து மனித இனத்திற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை தர உறுதுணை நிற்கிறது. *(இது வேளாண்மை)* வயிற்றுப் பகுதி உடலுக்கு தேவையான உணவை (வாய் வழியாக) கொள்முதல் செய்து ஜீரண உறுப்புகள் மூலம் உதரமாக்கி உடல் முழுவதுவற்கும் விநியோகம் செய்கிறது. *(இது வணிகம்)* மார்புப் பகுதியில் உள்ள இருதயம், நுரையீரல் இரத்தத்திலுள்ள உள்ள அழுக்கை நீக்கி (சமுதாயத்தில் குற்றம் நீக்குதல் போல) சுத்தப்படுத்தி உடலில் பரவச் செய்வதுடன், உடலை காப்பாற்ற கைகள், எதிரிகளுடன் போரிட அக்காலத்தில் வில்லேந்தவும், இக்காலத்தில் துப்பாக்கி  தொங்கவிடவும் தோள்களை கொண்டுள்ளது. *(அரசர்)* கழுத்திற்கு மேலுள்ள பகுதியால் இங்கே உணவு இருக்கிறது அங்கே எதிரி வருகிறான் போன்றவற்றை காண கண்கள், பிறரை அழைக்க, கல்வி கற்க,  உரையாட, அறிவை வளர்க்க வாயும், செவியும் உறுதுணையாய் நிற்கும். நன்மை, தீமையறிய, அனுபவத்தை சேமிக்க மூளை உண்டு. *(அறவோர்)*. 

~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த நான்கையும் தனித்தனியாகப் பிரித்து ஒன்றையொன்று தொடாமல் விகற்பமானால் உடம்பில் உயிர் தரிக்காது. பறந்துவிடும். காலுக்கு பாய்ந்த உதரம் (இரத்தம்) அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தலைக்கும் பாய்கிறதே! இதில் எப்படி பேதம் இல்லையோ அதே நிலையை நாம் இதுவரை வருணாசிரமத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. எல்லா மனிதர்களிடமும் அவர்களை வழிநடத்தும் குருமார்கள் இந்த சாதி, மத உட்பிரிவுகளை காட்டியே தத்தம் ஆசிரமங்களை தக்கவைத்துக் கொள்கின்றனர். எல்லா மகான்களும் *அன்பாயிரு* என்பதை அடிப்படையாகக் கொண்டே மதங்களை உருவாக்கினர். ஆனால் வழிநடத்துபவர்கள் அதை விகர்பமாக்கிவிட்டனர். 

~~~~~~~~~~~~~~~~~~~~~

உலகத்தையும் அதிலுள்ள சுகங்களையும் உன் சந்ததி மற்றும் சுற்றத்தவர்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் கூட அதை இப்போது அனுபவிக்கிறார்கள். அவர்களை ஓரங்கட்டு,  ஒதுக்கிடு அல்லது ஒழித்திடு என்பதுதான் இன்றைய வரை மனிதனுக்கு வழிகாட்டும் மந்திரமாகிருக்கிறது. சமயவாத போரில் நாலாயிரம் சமணர்கள் கழு ஏற்றப்பட்டனர். பசி, பட்டினி, இயற்கை சீற்றத்தால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கையை விட சாதி, மத வேறுபாடுகளால் அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஆறு இலட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்றதை சரித்திரம் சொல்கிறது. நான்கு இலட்சத்திற்கும் மேலான மஞ்சள் இனத்தவரை ஹிரோஷிமா, நாகசாகியில் அடுத்தடுத்த நாளில் அணுகுண்டை போட்டு அழித்தது வெள்ளையினத்தினர். பலநாடுகளில் மெத்தப் படித்தவர்கள் ஆட்சி செய்தாலும் இந்த நிலை மாறவேயில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~

இதற்கு ஒரு முடிவு காண 24-10-1945 ல் ஐக்கிய நாடுகள் சபை (United Nations Organisation-UNO) தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைமை பொறுப்பில் வெள்ளை, கருப்பு, மஞ்சள் நிறத்தவர் இருந்தனர். இருக்கின்றனர். ஆனால் இன்றைய தேதியில் கூட 

*இராக்-இரான் போர்*

*இஸ்ரேல் - பாலஸ்தீன போர்*

*வடகொரியா - தென்கொரியா போர்*

*சிரியா - அமெரிக்க போர்*, பல நாடுகளில் உள்நாட்டில் வாழும் வேறு வேறு சாதி இனத்தவரிடையே போர்.  இவைகளெல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைந்த பாடில்லை.  ஐக்கிய நாடு சபையால் இரும்புக் கரம் கொண்டு அடக்கவோ, பிற நாடுகளின் மூலம் நெருக்கடியை கொடுத்தோ போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. அதன் அதிகாரம் அறுதியிடப்பட்டுள்ளது. எனவே வேறு விதமாக UNO, UNESCO, WHO போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து, மனித இனத்திற்கு தொண்டு செய்ய அதை மகிழ்விக்க முனைந்தது.

உதாரணமாக: புகையிலை மறுப்பு தினம், தற்கொலை தடுப்பு தினம் போன்றவற்றை ஆண்டிலுள்ள 365 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிரகடனம் செய்கிறது. Valentine Day, Father's Day,  Senior Citizens Day போன்றவைகள் எதை பெரிதாக சாதிக்க போகிறது? ஏற்கெனவே தனிமனிதர்கள் இதை கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

*ஒட்டு மொத்த மனித இனம் (எல்லா உயிர்களும்) இன்புற்று வாழ ஒரே வழி மனிதரிடையே ஆன்மநேயத்தை விதைத்து வளர்ப்பதுதான்.* எல்லாம் அதில் அடங்கிவிடும். உதாரணமாக புகை பிடிப்பவர்களிடம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அறிவுறுத்தப்படும் போது அதில் புகை பிடிக்கும் அந்த உயிரும் சேர்ந்து தான். அப்போது அவரும், அவரின் உயிரை நேசித்து அதை தன் உடலில் இருந்து பறந்து விடாமல் நிறுத்தி உடலுடன் நீண்ட காலம் உறவாட வைக்க முடியும். பிறகு பிற ஆன்மாக்களையும் நேசிக்கும் எண்ணம் உருவாகி அதுவும் என்னை போன்றது தானே என்ற எண்ணத்தை விதைத்து வளர்க்க *ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினம்*  *UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION DAY* என்பதை பிரகடனம் செய்ய வேண்டும். அதை எந்த நாளில் செய்யலாம்? 

~~~~~~~~~~~~~~~~~~~~~

திருஅருட்பிரகாச வள்ளாரெனும் இராமலிங்க பெருமானார் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தடையாயிருப்பது சாதி, மத, சமயத்தினால் ஏற்பட்ட விகற்பத்தால்தான் -- இது எங்கள் மனதில் பற்றக்கூடாது என்ற ஒன்றை மட்டும் விண்ணப்பத்து கேட்டாரே (உணவு, உடை, இறந்த பிறகு சொர்க்கம் கொடு என்று கேட்கவில்லையே) அவரின் பிறந்த நாளான இந்நிலவுலகிற்கு வருவிக்கவுற்ற நன்னாளான *அக்டோபர் 5-ம் நாள்*. அந்த நாளே ஆன்மநேய ஒருமைப்பாட்டு நாள். அதில் இன்னொரு விளக்கத்தையும் உலகர் பெறுவர். உலகில் இதுவரை வாழ்ந்த எல்லோருக்கும் பிறந்த நாள்,  மறைந்த நாள் என இரண்டு நாள் வரும். ஆனால் வள்ளல்பெருமானுக்கு பிறந்த நாள் மட்டுமே வரும். *இன்னொரு நாள் எப்போதும் வராது* .இதை அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் *கலெக்டர் G.H.கார்ஸ்ட்டின்* தெளிவாக கெசட்டில் பதிவு செய்திருக்கிறார்.  

*Saint Ramalingam Disappeared from this small room of Mettukuppam and proved His claim of Deathiessness.* 

எனவே எதிர்வரும் அக்டோபர் ஐந்து முதல் ஆண்டுதோறும் இது *ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினமாக* அழைக்கப்பட வேண்டும். UNO-வும் இதற்கு ஆவண செய்யட்டும். 

Let all Humans hall *UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION DAY*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

ஆக்கம் 

*K.N.உமாபதி*

K.K.நகர், சென்னை

*"தீப நெறி"* ஆசிரியர்

தீபம் அறக் கட்டளை

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 05-10-2020.அன்று வள்ளலார் அவதார தினம்.! 


ஒவ்வொருவரும் வீட்டில் விளக்கேற்றி வைத்து அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் சொல்லுங்கள்.

உங்களால் முடிந்த அளவு ஏழை எளிய ஆதரவற்ற அன்பர்களின் பசியைப் போக்குங்கள்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு எல்லாவகையிலும். தோன்றா துணையாக இருந்து காப்பாற்றுவார்.


இது சத்தியம்.

இது சத்தியம்.

இது சத்தியம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !

 *வள்ளலார் வருவிக்க உற்ற நாள்* !


*எல்லாம் செயல் கூடும் எம்மாணை எல்லாம் வல்லான் தனையே ஏத்து* ! 


05-10-1823 ஆம் ஆண்டு இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி இறைவனால்  வள்ளலார் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற நாள்..


05-10-1823 இல் இருந்து 05-10-2020 ஆண்டுவரை 197 ஆண்டுகள் ஆகிறது.ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் வருவிக்க உற்ற நாளை உலக ஒருமைப்பாட்டு தினமாக உலகம் எங்கும் உள்ள  சன்மார்க்க சங்கங்களும் சன்மார்க்க அன்பர்களும் அன்னதானத்துடன் சிறப்பாக விழா எடுத்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.


வள்ளலார் காட்டிய. போதித்த கொள்கையை பின்பற்றி வாழ்கிறார்களா ? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.


இயற்கை உண்மையாம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு இயற்கை விளக்கமான பூரண அருளைப்பெற்று மரணத்தை வென்று.இயற்கை இன்பமாம் இகத்தே பரத்தைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.


*வள்ளலார் ஆன்மீகத்தின் தனி ஒரு அருளாளர் தனி ஒரு ஆன்மீகப் புரட்சியாளர்*.  


உலகில் ஆன்மீகம் என்னும் பெயரில் தோன்றிய  வேதங்கள். ஆகமங்கள். புராணங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்கள். போன்றவற்றின் வழியாக உருவாக்கிய சாதி சமய மதங்களின் கடவுள் கொள்கைகள் யாவும் உண்மைக்கு புறம்பானவைகள் என்னும் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் வள்ளலார்.


ஆன்மீகத்தின் பெயரில்  பொய்யான கொள்கைகளால்.பொய்யான வாழ்க்கை வழிப்பாட்டு முறைகளால் மனிதகுலத்தை  மூடநம்பிக்கையில் மூழ்கவைத்து படுகுழியில் தள்ளப்பட்டு அறியாமையில் அழிந்து வருகிறார்கள்.


ஆன்மீகத்தில் பலவகையான புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார்.


இதுவரை உலகில் தோன்றிய சீர்திருத்தவாதிகளுள் வள்ளலாருக்கு நிகர் உலகில் ஒருவரும் இல்லை. சீர்திருத்தவாதிகளுக்கு எல்லாம் முதன்மை  சீர்திருத்த வாதியாகும்.


உலகியல் அறிவியல். விஞ்ஞானம் ஆன்மீகம்.அரசியல் எல்லாவற்றிலும் தனிமுத்திரைப் பதித்தவர்.


*தனிக்கொள்கை கண்டவர்* ! 


பன்முகத்தன்மை கொண்டவர். வள்ளலாருக்கு குருவாக இருந்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்பதை அவரேத் தெரிவிக்கின்றார். மருடபகை தவிர்த்து வாழ்வித்து எனக்கே அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதி ! என்பார்.  இயற்கையிலே முழுமையான ஞானம் பெற்றவர்.உலகில் உள்ள எல்லா மொழிகளும்.எல்லா கலாச்சாரமும்.எல்லா நாகரீகமும் காணாமலும் கற்காமலும் வள்ளலாருக்குத் தெரியும்.


*பலவகையிலும் முதன்மையும் தனிச்சிறப்பும் பெற்றவர்*.!


நூலாசிரியராய்.உரையாசிரியராய்.பதிப்பாசிரியராய்.பத்திரிகை ஆசிரியராய்.போதகாசிரியராய்.ஞானாசிரியராய்.வியாக்கியானகர்த்தராய்.சித்தமருத்தவராய்.சீர்சிருத்தவாதியாய்.அருட்கவிஞராய்.அருண்ஞானியாய்ப் பன்முகத் தன்மைக் கொண்டவர் வள்ளலார்.


தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.முதன் முதலில் முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர்.


முதன் முதலில் கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்.புதைப்பொருள் ஆராய்ச்சி யாளர்.


உரைநடை நூல்கள் அரிதாக உள்ள அக்காலத்தில் சின்மயதீபிகை. மனுமுறைகண்டவாசகம்.ஜீவகாருண்ய  ஒழுக்கம்.ஒழிவியல் ஒடுக்கம் போன்ற உரைநடைநூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.


*உலகின் பொதுக் கொள்கைக்காக பொது வாழ்க்கைக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்தியசங்கம். சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை வடலூரில் தலைமை இடமாக வைத்து தோற்று வித்துள்ளார்*


*மக்களை துண்டாடிய சாதி.சமயம் மதங்கள்* ! 


ஒற்றுமையைக் குலைத்து பிரிவினையை உண்டாக்கிய சாதி சமயம் மதக் கொள்கைகளைப் பின்பற்றி அழியும் மனித குலத்தை அழியாமல் காப்பாற்ற வந்தவர் தான் வள்ளலார். உலகின் முதன்முதலில் சாதி சமய மதக் கொள்கைகளுக்கு சாவு மணி அடித்தவர் வள்ளலார்.


வள்ளலார் பாடல் ! 


திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனை யாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


உலகின் திருநெறி பொதுநெறி தனிநெறி ஒன்றே ஒன்று அதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும்.


*வள்ளலாரின் முக்கிய கொள்கைகள்!*


கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! அவரை உண்மை அன்பால் ஒளிவடிவில் வழிபட வேண்டும்.


சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது.அத்தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது. புலால் உண்ணலாகாது.


சாதி.சமய.மதம் போன்ற வேறுபாடுகள் கூடாது.


எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கைக்கொள்ள வேண்டும்.


ஏழைகளின் பசிதவிர்த்தலாகிய சீவகாருண்ய ஒழுக்கமே பேரின்பவீட்டின் திறவுகோல்.


வேதம். ஆகமம்.புராணம்.இதிகாசம்.சாத்திரங்கள் யாவும் உண்மையைத் தெரிவிக்க மாட்டாது.


இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக்கூடாது.கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.


பெரியவர்கள். குழந்தைகள் இறந்தால் அழுகுரல் செய்ய வேண்டாம்.முடிந்த அளவு அன்னவிரயம் செய்ய வேண்டும்.


கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.


சாகாக்கலை.சாகாக்கல்வி கற்று இறைவன் பூரண அருள் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும்.இறைவனுடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் நிலைத்து வாழ்வாங்கு வாழ வேண்டும்.


சாகாதவனே சன்மார்க்கி என்பதுதான் வள்ளலாரின் முக்கிய கொள்கையாகும்.


*எதிலும் பொதுநோக்கம் வேண்டும்*.


என்பனவெல்லாம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகள்யாகும்.


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை*


காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் 


தருமச்

சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே


மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.! ....


என்னும் பாடல்வாயிலாக தருமச்சாலையின் வல்லபத்தை வெளிப்படுத்துகின்றார். 


சீவகாருண்யமும்.

உயிர் இரக்கமும் .அற்றார் அழிபசி தீர்த்தல் மட்டுமே புறம் புறப்புற கடவுள் வழிபாடாகும் என்பதை மக்கள் மனிதில் பதிய வைக்கவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை 23-05-1867 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்றுவரை அனையாமல்  பசிப்பிணியைப் போக்கிக்கொண்டு வருகிறது.


*சமரச சுத்த சன்மார்கக சத்திய ஞானசபை* ! 


உலகமெலாந் தொழ உற்றது எனக்குண்மை ஒண்மைதந்தே


இலக எலாம் படைத்து  ஆருயிர் காத்தருள் என்றது என்றும்


கலகமிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்


திலகம் எனாநின்றது உத்தர ஞான சிதம்பரமே.! 


*பூர்வஞான சிதம்பரத்தை உத்தரஞான சிதம்பரமான வடலூரில் தோற்றுவித்தது தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்*.


கடவுள் தத்துவ உருவமாக இல்லை.இயற்கை உண்மையாக.இயற்கைவிளக்கமாக.

இயற்கை இன்பத்தை அளிக்ககூடிய அருள் வல்லபம் பொருந்திய அருட்பெருஞ்ஜோதியாக தனிப்பெருங்கருணையாக அருள் ஒளி பிரகாசமாய் விளங்கிக் கொண்டு இருப்பவரை.உலக மக்கள் யாவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அகம் அகப்புறத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதியைத் புறத்தில் காட்டவே   25-1-1872 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவிக்கிறார்.

அங்கு ஒளிதான் சோதி தரிசனமாக காட்டப்படுகிறது.


சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றும் பின்பற்ற வரும் அன்பர்கள் வள்ளலார் சொல்லிய கருத்துக்களை ஆன்மாவில் பதியவைத்து அறிவின் வழியாக.இந்திரிய.

கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வதே வள்ளல் பெருமான் அவர்களின் அவதாரதினத்திற்கு நாம் செய்யும் கடமையாகும். அருள் பெறும் ஒழுக்கம் நிறைந்த  தொண்டாகும்.


*சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு  முக்கிய தடையாக உள்ளதை அகற்ற வேண்டியதே நம் ஒவ்வொருவரின் செயலாக இருக்க வேண்டும்*.


*சுத்த சன்மார்க்கத்தின் தடைகள்*


சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே!


எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்து *சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.*


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!


இது தொடங்கி எக்காலத்தும் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்*. *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்*.


எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!


தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

வாழ்விக்க வந்த வள்ளல் ! பாகம் 2.

புத்தம் புதிய சமுதாயத்தை உருவாக்க சங்கம்.சாலை.சபை என்ற மூன்று அமைப்புக்களையும் வடலூரில் தோற்றுவிக்கிறார்.

1872 ஆண்டு   *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்றும்

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்*

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும்  

பெயர் சூட்டுகிறார்...

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக புதிய கொள்கைகளையும் தனிமனித ஒழுங்கங்களையும். இயற்கை உண்மை கடவுளின்  வழிப்பாட்டு முறைகளையும்.புதிய கல்விக் கொள்கையான சாகாத்தலை.வேகாக்கால்.போகாப்புனல்.போன்ற உண்மை வழிகளைத் தெரிந்து. சாகாக்கலை. சாகாக்கல்வி கற்று பூரண அருள் பெற்று மனிதன் மரணத்தை வெல்ல வேண்டும். 

மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து கொண்டு பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கு போதிக்கும் கல்விக்கூடம்தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முக்கிய பணியாகும்.

*வள்ளலார் பாடல்* !


இறைவன் அருளைப்பெற சாதி சமயம் மதம் அல்லாத ஒரு நெறியே..  இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட. தனிப்பெரும்நெறி  உயர்ந்த திருநெறி உலகப்பொதுநெறியே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும்  நெறியாகும்.

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* !  

23-05-1867 ஆம் ஆண்டு வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தோற்றுவிக்கிறார்..

கடவுள் வழிபாட்டை இரண்டாகப் பிரிக்கின்றார் வள்ளலார்.ஒன்று புறவழிபாடு.ஒன்று அகவழிபாடு என இரண்டு வழிபாடு மட்டுமே இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் வழியாகும்... 

சத்தியச் தருமச்சாலை தோற்றுவித்ததின் நோக்கம். உயிர்களுக்கு பயன் இல்லாத.பயன் அளிக்காத ஆலய வழிப்பாட்டையும் உருவ வழிப்பாட்டையும் தவிர்த்து மக்களுக்கு நன்மைதரும் பயன் அளிக்கும் வழிப்பாட்டை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக சத்திய தருமச்சாலை தோற்றுவிக்கப்பட்டதாகும். 

வள்ளல்பெருமான் கொள்கையில் தலையானது.ஜீவகாருண்யம்.ஜீவகாருண்யத்தை இருவகையால் வற்புறுத்துவார்.அவை அற்றார் அழிபசி தீர்த்தல்.கொலை தவிர்த்தல் புலால் மறுத்தல் என்பதாகும். அதாவது ஏழைகளின் பசியைத் தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் தெளிவாக புரிய வைக்கிறார்..

இறைவனால் படைத்த வாய்பேசாத உயிர்களை கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்வது மன்னிக்க முடியாத பெரிய குற்றமாகும் என்பார்.

உருவ வழிப்பாட்டினால் மன நெகிழ்ச்சியும்.மனமகிழ்ச்சியும்.மன உருக்கமும் உண்டாகும் கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடும். 

ஜீவகாருண்யத்தால் ஆன்ம நெகிழ்ச்சியும் ஆன்மமகிழ்ச்சியும் ஆன்மஉருக்கமும் உண்டாகும். மேலும் அன்பும்.ஆன்ம அறிவும் அருள் விளக்கமும் தன்னைத்தானே விளங்கும்.இந்த உண்மை தெரியாமல் மக்களை பக்தி மார்க்கத்தில் அலைய விட்டுவிட்டார்கள்.ஆதலால் உருவ வழிப்பாட்டைவிட ஜீவகாருண்யமே சிறந்த புறவழிபாட்டு முறையாகும் என்ற புதிய நேர் வழியை மக்களுக்கு காட்டவே சத்திய தருமச்சாலை தோற்றுவிக்கிறார்..

சத்திய தருமச்சாலை வழியாகத்தான் இறைவனைத் தொடர்பு கொள்ள முடியும்.உண்மை அன்பு.உண்மைஇரக்கம். உண்மை தயவு .உண்மை ஒழுக்கம்.உண்மைக் கருணையுடன் வாழ்ந்தால் தான். இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையால் ஆட்கொள்வார் என்பது சத்தியம்.

வள்ளலார் பாடல் !    

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


காலம் எல்லாம் கடுமையான தியானம்.தவம்.யோகம் பக்தி செய்து கிடைக்கின்ற பெரும்பயனாம் விளைவை எல்லாம். இம்மை இன்பவாழ்வு.மறுமை இம்மைவாழ்வு.பேரின்பவாழ்வு போன்ற அனைத்தையும் தருமச்சாலையில் ஒரே பகலில் தந்த தனிப்பெருங்கருணை தந்தையே என்று போற்றி புகழ்கின்றார்.  

எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி!  என்பார் வள்ளலார். ஆன்மீகத்தின் அனைத்துலக கருணை வள்ளலாக திகழ்ந்தவர் வள்ளலார். அன்பு.தயவு.கருணை இல்லாத  சாதி சமய மதக் கொள்கைகளுக்கு மூடுவிழா கொண்டு வந்தவர் வள்ளலார்.

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை*  

கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! அவர் சாதி சமயம் மதங்களில் சொல்லும் கடவுள் அல்ல.அருள் நிறைந்த பேரொளியாக உள்ளவரே உண்மையான கடவுள். அவர் எல்லா உயிர்களிலும் ஆன்ம ஒளியாக உள்ளார் என்பதை வெளிப்படையாக காட்டுவதற்காக *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை* வடலூரில் தோற்றுவிக்கிறார். 

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை யான் பெற்றுக் கொண்டனன் என்றும்.

சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி! என்பதை வெளிப்படையாக சொல்லுகின்றார்.

ஒவ்வொரு மனிதனின் சிரநடு சிற்றம்பலமான ஆன்ம சிற்சபையில் விளங்கும் ஆன்ம ஒளியைப் புறத்தில் காட்டுவதற்காக அமைக்கப்பட்டதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்.

சத்திய ஞானசபையில் ஒளியே கடவுள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவே இயற்கை விளக்கமான சபையில்  ஒளியை இடைவிடாது பிரகாசிக்கும் வகையில் தீப ஒளி வழிபாட்டை தொடங்கி வைத்துள்ளார்.

தொடரும்