ஞாயிறு, 11 அக்டோபர், 2020

கடவுள் வழிபாடு !

 *கடவுள் வழிபாடு* ! 


வள்ளலார் ஆரம்ப காலத்தில் பல தெய்வங்களைப் பற்றி பாடியும் வணங்கி வந்தாலும் இறுதியாக அருள் அறிவால் கடவுளின் உண்மைத் தெரிந்து அறிந்து கொள்கிறார். 


வள்ளலார் பாடல் !


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொது என அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லது ஒன்று என்று அறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின்றேன் பொதுப் பாட்டே.! 


கடவுள் யார் ? என்ற உண்மையை உலகம் முழுவதும் தெரிந்து.அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்  என்பதற்காகவும் சுத்த சன்மார்க்க பயிர் எலாம் கண்டு களிக்கவும் எல்லவருக்கும் பொதுவான  திருஅருட்பா பாடலை பதிவு செய்துள்ளேன் என்கிறார் வள்ளலார்


*கடவுளின் ரூபம் ஒளி* ! 


கடவுள் வெளியில் எந்த ரூபத்திலும் தனியாக இல்லை. எல்லா உடம்பிற்குள்ளும் இருக்கும் உயிர்களிலும்  உள் ஒளியாக அகம் என்னும் ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார்.


அக்கடவுள் அருட் பெரு வெளியில் இயற்கை உண்மையாக.

இயற்கை விளக்கமாக.

இயற்கை இன்பமாக சாதாரண மனிதர்கள் எவரும் காணமுடியாத அருட்பெருவெளி என்னும்  இடத்தில் இருந்து இயங்கி கொண்டு. எல்லாவற்றையும் சமமாக பாவித்து இயக்கிக் கொண்டே உள்ளவர் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்பவராகும்.


வள்ளலார். தான் கண்ட உண்மைக் கடவுளை ஒரு பாடல் மூலமாக தெரிவிக்கின்றார்.


*வள்ளலார் பாடல்* ! 


அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்

தருட்பெருந் தலத்துமேல் நிலையில்


அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்

அருட்பெரும் திருவிலே அமர்ந்த


அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே


அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.! 


என்னும் பாடல்வாயிலாக தெரிவிக்கின்றார்.


அருட்பெரு வெளியில் அருட்பெரும் பீடத்தில்.அருட்பெரு வடிவில் அமர்ந்து. *தோற்றுவித்தல்.இயக்குவித்தல்.அடக்குவித்தல்.மயக்குவித்தல்.தெளிவித்தலுமாகிய* ஐந்தொழில்களை  இயக்கிக் கொண்டு இருப்பவரே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.


வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையில் முதன்மையானது முக்கியமானது.

*கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!* என்பதாகும்.


எல்லா உலகிற்கும் எல்லா அண்டங்களுக்கும்.  ஒரே கடவுள் தான் உள்ளார். அவர் ஒளியாகத்தான் உள்ளார்.சாதி.சமயம்.மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.

அவர் சாதி சமய மதங்களில் சொல்லிய கடவுளர் அல்லர். அவரை அனைவரும் *உண்மை  அன்பால். தயவால்.கருணையால் வழிபட வேண்டும்* என்பதற்காகவும். *அருள் நடம் புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபை காணுதல் வேண்டும்*  என்ற அருள் வாக்கின்படி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி  *வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவிக்கிறார்*.

*அங்கே ஒளி தான் கடவுளாக வைக்கப்பட்டுள்ளது*.


சன்மார்க்க சங்கத்தார்களுக்கு தெளிவாக சொல்லி உள்ளார்.


பழக்க விதி - 25.11.1872


*ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் ஒளியாக உள்ளார் என்றும்*.

பொதுப்பட உலகத்திலுள்ளார் யாவரும் சன்மார்க்க பெரும்பயன் பெற்று *நித்திய வாழ்வு* வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர்என்றும், அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் 

நம்பி இங்கே வசிக்கும் யாவரும் *வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம் என்றும் சொல்லுகின்றார். *ஏன் அப்படி சொல்லுகின்றார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்*.


சுத்த சன்மார்க்கத்தில்.

கடவுள் வழிபாடு விஷயத்தில்.சாதி.

சமய.மதங்கள் சார்ந்த எந்த விதமான ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் பின்பற்றக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக முன் கூட்டியே தெளிவாக சொல்லியும்.வற்புறுத்தியும் வந்துள்ளார்.


*வள்ளலார் உடன் இருந்தவர்கள் ஒருவர் கூட வள்ளலார் சொல்லியதைப் பின்பற்றவில்லை* என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.


*இப்போதுள்ள சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நாம் ஒவ்வொருவரும்* *வள்ளலார் சொல்லிய உண்மையைக் கருத்துக்களை*.

*அதன்*

*கொள்கைகளை* *சிரமேற்கொண்டு பின்பற்ற வேண்டும்*.


சாதி.சமய மத மார்க்கங்களில் வழிபாடுகள் செய்வதுபோல். கடவுளுக்கு மாலைபோடுதல்.  இலையைப்போட்டு பலபொருள்கள் வைத்து உணவு படையல்வைத்தல். தேங்காய் உடைத்தல். சூடம் கொளுத்துதல். மணிஅடித்தல்.

அபிஷேகம் செய்தல் ஆராதனைசெய்தல்.ஜோதிக்கே ஜோதிகாட்டுதல் கண்டாமணி அடித்தல் போன்ற எந்தவிதமான ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் சார்ந்த வழிபாட்டு முறைகளும் செய்ய வேண்டாம் என்பதை அழுத்தமாக தெரிவிக்கின்றார்..


மேலும் மொட்டை அடித்தல்.காதுகுத்துதல்.பாதயாத்திரை செய்தல் படத்தை வைத்து ஊர்வலம் செல்லுதல் போன்ற சில சமய மத  சடங்குகள்போல்  எதுவும் செய்ய வேண்டியதில்லை. 


சுத்த சன்மார்க்கத்தில் அருள் பெறுவதற்கு

தடைகளாக இருப்பதே சாதி சமய மத சடங்குகள் வழிபாட்டு முறைகள் என்பதை தெளிவாக விளக்குகின்றார்.


வள்ளலார் சொல்லுவதை நன்கு கவனித்து ஊன்றி படித்து பார்த்து மாற்றிக் கொள்ளவேண்டும்.


*வள்ளலார் சொல்லிய விண்ணப்பம்.*


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!


இது தொடங்கி எக்காலத்தும் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.


எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்! என்று வேண்டுதல் செய்யச் சொல்லி தெளிவாக எழுதி வைத்துள்ளார்.


நாம் தினமும் வழிபாட்டில் இந்த விண்ணப்பத்தை சொல்லுகிறோம்.

அதில் உள்ளவாறு பின்பற்றுகிறோமா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


*சுத்த சன்மார்க்க வழிபாடு !* 


தீபம் ஏற்றிவைத்து நீங்கள் ஒருமித்தாவது அல்லது .தனித்தனியாகவாவது உங்கள் அறிவிற்கும்.ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன்  கூடியாவது மெல்லென துதி செய்தல் வேண்டும்.அதாவது ஆன்ம விசாரம் செய்ய வேண்டும். 


அவ்வாறு செய்வதால் ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக்கொண்டு இருக்கின்ற அனந்த திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.அது நீங்கினால் மற்றைத் திரைகள் அதிகவிரைவில் நீங்கிப்போய்விடும். 


அந்த பசுமை வர்ணம் எப்படிப்பட்டது என்றால்.கருமைக்கு முதல் வர்ணமான பசுமை இருக்கின்றது.

இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டும் என தோத்திரித்தும்.தெய்வத்தை நினைத்தும் நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இருக்கின்றபோதும்.படுக்கின்றபோதும்.இடைவிடாது இவ்விசாரத்தோடு *ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால்* தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் என்பதே சுத்த சன்மார்க்க வழிபாடாகும்.சுத்த சன்மார்க்க சத்விசாரமாகும். என்பதே  வள்ளலாரின் அழுத்தமான சுத்த சன்மார்க்க வழிப்பாட்டு முறைகளாகும்.


சுத்த சன்மார்க்கிகள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்கள் வழிப்பாட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.


*ஜீவகாருண்யம்*

*சத்விசாரம் என்பது* *இரண்டு கண்கள் போன்றது*. இதுவே முக்கியமான வழிபாடாகும்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஜோதி வழிப்பாடு தவிர வேறு தெய்வங்களை   கனவில் கூட நினைக்க கூடாது வழிபடக்கூடாது*. ஏன் என்றால் அவைகள் யாவும் தத்துவங்களேத் தவிர உண்மையான தெய்வங்கள் அல்ல என்பதை தெரிந்துகொண்டு இயற்கை உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே என்னும் அறிவு விளக்கம் பெற வேண்டும்


பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற துன்பங்களை போக்கும். ஜீவகாருண்யமே முழுமையான செயல்பாடாக இருக்க வேண்டும்.


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாகும்*


வள்ளலார் பாடல் ! 


ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்

சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்


நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர்மேல் ஏறும்

வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செல்லும் வீதி.! 


மேலும் ..


ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்


சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும் ஒன்றாமே.! 


மேலும்...


கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே


உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என்இனி நீர் சமரச சன்மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன் குணர்ந்தே


எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.! 


மேலே கண்ட பாடல்களில் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்..


மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்து உயிர் ஆன்மா இரண்டும் உடம்பை விட்டு வெளியே போகாமல்  மரணத்தை வென்று வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.


மரணத்தை வெல்லுவதற்கு முக்கியத்  தடைகளாக இருப்பது சாதி சமயம் மதம் போன்ற கொள்கைகளும் அவற்றில் உள்ள தெய்வங்களும்.

அத்தெய்வங்களின் பெயரால் செய்யும் வழிப்பாட்டு முறைகளுமேயாகும்.


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பம்*

அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற *அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார்* என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித் தருளினீர். 


வாலிபப்பருவம் தோன்றிய போதே *சைவம் வைணவம் சமணம் பவுத்தம்* முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் *அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,* உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர். 


அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர். என்னும் குறிப்பை வெளிப்படையாக சொல்லுகின்றார்.


வள்ளலார் பாடல் ! 


சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது


மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் அற்புதமே !


சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்

சோதியைக் கண்டேன டி - அக்கச்சி

சோதியைக் கண்டேன டி.!


என்னும் பாடல்கள்வாயிலாக சொல்லுகின்றார்.


வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சுத்த சன்மார்க்கிகள் வழிபாட்டு விஷயத்திலும் ஜீவகாருண்ய ஒழுக்கத்திலும்  மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

அருள் பெற்று மரணத்தை வெல்லுவதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக் ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு