செவ்வாய், 26 ஜூலை, 2016

தவம் சிறந்ததா ? தியானம் சிறந்ததா ?

தவம் சிறந்ததா ? தியானம் சிறந்ததா ?

வள்ளலார் சொல்லிய, காட்டிய  சுத்த சன்மார்க்க கொள்கையை  பின் பற்றுபவர்கள்,கடைபிடிப்பவர்கள்  ஆகிய சுத்த சன்மார்க்கிகள் தவம் செய்வது சிறந்ததா ? தியானம் செய்வது சிறந்ததா ? என்பதில் குழப்பமாக உள்ளார்கள் .

முதலில் தவம் என்றால் என்ன ? தியானம் என்றால் என்ன ? என்பதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே உண்மை விளங்கும்..

தவம்,  தியானம்  இரண்டுமே இறைவனிடம் தொடர்பு கொள்ளும் முறைகளாகும்.

''தவம்'' என்பது இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்பதாகும் , கேட்டுப் பெறுவதாகும்.அதற்கு தவம் என்று பெயர் ..அப்படி கேட்பதால் இறைவன் நமக்குக் கொடுத்து விடுவாரா ? என்றால் ,நம்முடைய தகுதி என்னவென்று தெரியாமல் எதையும் கொடுக்க மாட்டார் .

''தியானம் '' என்பது இறைவனிடம் இடைவிடாது தொடர்பு கொள்ளுவது.அப்படி  தொடர்பு கொள்ளுவதால் இறைவன் நமக்கு என்ன வேண்டுமோ அதை அவரே கொடுப்பார் .

இதில் நாம் கேட்டுப் பெறுவது சிறந்ததா ? இறைவன் கொடுப்பது சிறந்ததா ?  என்றால் இறைவன் கொடுப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.நமக்கு என்ன வேண்டும் என்பது   இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

நிறைய அருளாளர்கள் இறைவனிடம் ''தவம்'' செய்து அவர்களுக்கு வேண்டியதை  பெற்று உள்ளார்கள் .அவர்களால் கேட்டுப் பெறுவது எதுவும் நிரந்தரம் இல்லை.

 இறைவனிடம் இடைவிடாது தொடர்பு கொண்டு சரணாகதி அடைந்து  ''தியானம்'' செய்பவர்களுக்கு என்றும் அழியாத இறைவன் ''அருளை'' வழங்குவார் என்பதுதான் சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறையாகும்.

தியானம் என்பது தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் என்னும் மூன்று சுதந்தரத்தையும் இறைவன் இடம் ஒப்படைப்பது  ஆகும்..அப்படி ஒப்படைத்தால் மட்டுமே இறைவன் அருள் சுதந்தரத்தை வழங்குவார் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் எந்த இடத்திலும் தவம் செய்ய சொல்லவில்லை .தியானம் செய்ய சொல்லி உள்ளார் .

பரசிவ விலை என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.!

எவ்வகைதான் தவம் செய்யுனும் மெய் அரிதாம் தெய்வம்
எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடங் கொண்ட தெய்வம்
அவ்வகைத் தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம்
அப்பாலும் பெரு வெளிக்கே அப்பாலாம் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம்
செவ்வகைத் தென அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் .

என்று வள்ளலார் மேலே கண்ட பாடலில் விளக்கம் தந்து உள்ளார் .பலகோடி காலம் தவம் செய்தாலும் உண்மையான இறைவனைக் காணமுடியாது.என்றும் ,தவம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்றும் .தெளிவாக விளக்கி உள்ளார் .

ஆன்மா இருக்கும் (இறைவன்)   இடமான  சிற்சபையில் மனத்தை வைத்து தியானம் செய்ய வேண்டும் என்கின்றார் ...மேலும் கரண ஒழுக்கத்தில் சிற்சபையின் கண் மனத்தை செலுத்துவது தவிர மற்ற எந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் மனத்தை நிறுத்துங்கள் என்கின்றார் .

மேலும் ஜீவ காருண்யத்தில் !

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும் அறியவேண்டும் என்கின்றார் .சுத்த சன்மார்க்கத்திற்கு முதல்படி ஜீவ காருண்யம் என்பதாகும் .அதுதான் இந்திரிய ஒழுக்கம் என்பதாகும்.அடுத்து கரண ஒழுக்கம் என்பது .இறைவனை இடைவிடாது தொடர்பு கொள்ளுவதாகும்.

ஜீவ காருண்யம் என்னும் இந்திரிய ஒழுக்கம் இல்லாமல்,கரண ஒழுக்கம் என்னும் ,மனத்தை சிற்சபையின் கண் வைத்து  தியானம் செய்தாலும் இறைவன்  ஏற்றுக் கொள்ள மாட்டார் .

ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் பதிவு செய்துள்ளதைப் பாருங்கள். !

ஜீவ காருண்ய ஒழுக்கம் இல்லாமல் ஞானம்,யோகம்,தவம்,விரதம்,ஜெபம், தியானம், முதலியவைகளைச் செய்கின்றவர்கள் ,கடவுளுக்குச் சிறிதும் பாத்திரம் ஆகார்கள்.அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும், நினைக்கப் படாது என்றும்.ஜீவ காருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோசனம் இல்லாத மாயா ஜாலச் செய்கைகளே ஆகும் என்று அறிய வேண்டும்.தெளிவாக விளக்கி உள்ளார் .

நமக்கு உண்மை  அறிவு எப்போது விளங்கும் ?

நாம் உண்மையான அறிவு விளக்கம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது.உண்மையான அன்பு இல்லாமல் எதையும் செய்யக் கூடாது .உண்மையான அறிவும் உண்மையான அன்பும் எப்போது விளங்கும் என்பதையும் வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்தி உள்ளார் .

ஜீவ காருண்யம் விளங்கும் போது ;--அறிவும் ,அன்பும் உடனாக விளங்கும்,அதனால் உபகார சக்தி விளங்கும் ,அந்த உபகார சக்தியால ,எல்லா நன்மைகளும்,தோன்றும் என்கின்றார்.

அதேபோல் ;--ஜீவ காருண்யம் மறையும் போது;-- அறிவும்,அன்பும் உடனாக மறையும்,அதனால் உபகார சக்தி மறையும்,உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.என்று அழுத்தமாக சொல்லி உள்ளார் .

பாவம் எது ? புண்ணியம் எது ?

புண்ணியம் என்பது ஜீவ காருண்யம் ஒன்றே என்றும்,பாவம் என்பது ஜீவ காருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும்.என்றும் விளக்கம் தந்து உள்ளார் .

அன்றி ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும்,அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும்.;--இவ்விளக்கத்தையும் இன்பத்தையும்,பலகால் அறிந்து அடைந்து அணிபவித்து ,நிறைவு பெற்ற சாத்திய ஞானிகளே மேற் குறித்த பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்றும் .அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும் என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் .

வள்ளலார் இவ்வளவு பெரிய உண்மையை தெளிவுப் படுத்தியும்,சொல்லியும் உள்ள நிலையில் .நாம் அவரவர்கள் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் சொல்லியும் எழுதியும், மக்களை குழப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இறைவனால் படைத்த  உயிர்கள் மேல் உண்மையான இரக்கமும்,தயவும்,கருணையும்,கொண்டு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

அதேபோல் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் உண்மையான அன்பு வைத்து இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.அப்போதுதான் கடவுளின் அருள் விளக்கம் உண்டாகும்..

ஜீவ காருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும். அன்பு  உண்டானால் அருள் உண்டாகும் .அருள் உண்டானால் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழலாம் .என்று வள்ளலார் வெளிச்சம் போட்டு சொல்லி உள்ளார் .

ஜீவ காருண்யமே முத்திக்கு முதற்படி !

நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்து அருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும்.இவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது .இந்த அன்பு ஜீவ காருண்யத்தால் அல்லது வேறு வகையால் வராது.ஜீவ காருண்யத்தின் லாபமே அன்பு என்கின்றார் ....

இறைவன்மேல் அன்பு செலுத்தினால் மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்கும் .அதாவது அன்பு என்பது தீராத காதல் என்பதாகும்.இறைவன் மேல் அசைக்க முடியாத காதல் கொள்ள வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பு எனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்கு உட்படும் பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்து உள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளி அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேர் ஒளியே
அன்பு உருவாம் பர சிவமே !

சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுபவர்கள் .மனம் போனபடி போகாமல் வள்ளலார் சொல்லியதை மட்டும் கடை பிடியுங்கள் .

நமக்கு வள்ளலார் மேலும் சொல்லி பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

என்னும் பாடலில் நாம் செய்வது அனைத்தும்  பொய் என்கின்றார் .
இது வரையில் நாம்  கண்டது,...கேட்டது,....கற்றது,....களித்தது ..,உண்டது,...உட் கொண்டது,....எல்லாமே ...குற்றம் உள்ளது என்கின்றார் .

எனவே நாம் தவம் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.சகஜ வாழ்க்கை வாழ்ந்தால் போதும்..சகஜ வாழ்க்கையே சன்மார்க்க வாழ்க்கையாகும்..

உண்மை ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ்வதுதான் சுத்த சன்மார்க்கம் .யாராவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் எதோ ஒரு நன்மைக் கிடைப்பதுபோல் தோன்றும்.அதனால் பல் இளித்து இறுமாந்து கேட்டுப் போக நேரிடும்.ஆதலால் யார் எது சொன்னாலும் கேட்காமல் வள்ளலார் சொல்லியதை மட்டுமே பின் பற்றி வாழ்வதுதான் சுத்த சன்மார்க்க திரு நெறியாகும்.

சுத்த சன்மார்க்க நெறி என்பது இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட பொது நெறியாகும்.என்று வள்ளலார் சொல்லி உள்ளார் .எனவே  இறைவன் சொல்படி கேட்பதுதான் சிறந்த வழியாகும்..

மகாதேவ மாலையில் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.!

அளவிறந்த நெடுங் காலம் சித்தர் யோகர்
அறிஞர் மலரோன் அயன் முதலோர் அனந்த வேதங்கள்
விறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடும் ''தவத்தும்'' காண்பது அரிதாம் கடவுளாகி
உளவிறந்த எம் போல்வார் உள்ளத்துள் உள்ளே
ஊருகின்ற தெள்ளமுத ஊறலாகிப்
பிளவிறந்து பிண்ட அண்டம் முழுவதும் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங் கருணைப் பெரிய தேவே !

என்று பதிவு செய்துள்ளார் / மேலும்

கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
கனலின் நடு ஊசியின் மேல் கால் ஊன்றிப்
பொற்பற மெய் உணர்வு இன்றி உறக்கம் இன்றிப்
புலர்ந்து எலும்பு புலப்பட ஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக
நீண் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாஞ்
சிற்பதத்திற் சின்மயமாய் நிறைந்த ஞானத்
திருவாளர் உட் கலந்த தேவதேவே !

ஜீவ காருண்யம் இல்லாமல் எத்தனை கோடி காலம் தவம் செய்தாலும் இறைவன் அருளைப் பெற முடியாது.இறைவன் அருளை வழங்கவே மாட்டார் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .

எனவே நமக்கு தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு கருணையோடு வாழுங்கள் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !

கருணை உள்ள இடத்தில் கடவுள் நிறைந்து  இருப்பார் என்பதை உணர்ந்து கருணையோடு வாழுங்கள் ..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு