வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வழிப்பாட்டு விஷயத்தில் ஒத்து இருப்பது அவசியம்!

*வழிபாடு விஷயத்தில் ஒத்து இருத்தல் அவசியம்!*

*வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைப்பதற்கு முன் வள்ளலார் சொல்லியவாறு வழிப்பாட்டு முறைகளை முதலில் மாற்ற வேண்டும் என்பதை திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்*

25-11-1872 ஆம் ஆண்டு ( ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம்தேதி) சித்தி வளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு *எச்சரிப்புப் பத்திரிகை* என்னும் பத்திரிகையில் வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக சொல்லி பதிவு செய்துள்ளார்

சன்மார்க்க அன்பர்கள் அவரவர்கள் விருப்பம் போல் வழிபாடு செய்யாமல் *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்னும் அழுத்தமான கொள்கையை வெளிப்படுத்தி உள்ளார்.*
மேலும் *புறத்தில்  தீபஒளி வழிபாடு மட்டுமே வைத்து தோத்திரம் மற்றும்  பிரார்த்தனை செய்தல் வேண்டும்* என்பதை எச்சரிப்புப் பத்திரிகையாக வெளிப்படுத்தி உள்ளார்.

அதன் விபரம் !

சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை!

ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள்,

*ஆண்டவர் ஒருவர் உள்ளார்* என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றார் என்றும்,

அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் *வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்.*

அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்றவகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும்.

அப்படி யிருத்தல் மேல்விளைவையுண்டுபண்ணா திருக்கும்.

அப்படி இனிமேல் ஒருவரை யொருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடு மறுபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.

*அப்படி மருவாதவர்களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது.*

அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும்.

*அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம்.*
 அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சு மில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி *ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.*

*சிதம்பரம் இராமலிங்கம் (வள்ளலார்)* 

மேலே கண்ட செய்திகளை எச்சரிப்புப் பத்திரிகையாக வள்ளல்பெருமான் வெளிப் படுத்தி உள்ளார்.

வள்ளல்பெருமான் மேற்கண்டவாறு எச்சரிப்பு பத்திரிகையில் தெரிவித்தும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களான *மருதூர், வடலூர் தருமச்சாலை, சத்திய ஞானசபை, கருங்குழி, மேட்டுகுப்பம் சித்திவளாகம்* போன்ற புனித இடங்களில் வள்ளலார் சொல்லியவாறு இந்து சமய அறநிலைய துறை வழிப்பாட்டு முறைகளை செயல் படுத்த வேண்டும். 
 
 *மேலும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் உள்ள எல்லாப்  புனித  இடங்களிலும் மது மாமிசம் இல்லாமல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய புனித பூமியாக, புனித இடமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் அழுத்தமான முக்கிய கோரிக்கையாகும்*

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள்  வள்ளலார் சொல்லியவாறு வழிப்பாட்டு முறைகளை மாற்றினால் மட்டுமே எல்லா சன்மார்க்க சங்கங்களும் ஒத்த கருத்தோடு ஒரே வழிபாட்டு முறையை பின் பற்றுவார்கள் என்பதை திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் "சுத்த சன்மார்க்க சுடர்" முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

1 கருத்துகள்:

20 ஏப்ரல், 2024 அன்று PM 9:21 க்கு, Blogger ஆர். எஸ். பாஸ்கரன் கூறியது…

வள்ளலார் தெய்வ நிலையங்கள் உள்ள எல்லா இடங்களிலும் மது மாமிசம் இல்லாமல் ஆக்குவது என்பது அரசாங்கத்தால் சாத்தியப்படாத ஒன்று.ஏனெனில் இது ஜனநாயக நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, அதுதான் நமது அரசமைப்புச் சட்டம்.சுத்த சன்மார்க்கிகளால் மட்டுமே தாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க இயலும் அகத்தே கருத்து புறத்தேவெளுத்து இருக்கின்ற சன்மார்க்கிகள் (அசுத்த சன்மார்க்கிகள்)பலர் உளர். ஆகையால் தான் சுத்த சன்மார்க்கிகள் என்று குறிப்பிட்டேன்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு