புதன், 18 ஏப்ரல், 2012

மெய் மொழியும் ஒழுக்கமும் !பாகம் --3,

மெய் மொழியும் ஒழுக்கமும் !பாகம் --3,


வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது .

வள்ளலார் ஜோதி தரிசனம் காட்ட சொன்னாரா ? என்ற கேள்வி சுத்த சன்மார்க்க அன்பர்கள் மத்தியிலே மனதிலே தோன்றும் சந்தேகமாக உள்ளது .வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் உள்ள பாடல்களிலும்,உரை நடைப்பகுதிகளிலும் எந்த இடத்திலும் அதற்கு உண்டான ஆதாரங்கள கிடையாது என்பது தெரிய வருகிறது..

வள்ளலார் அவர்கள் சுத்த சன்மார்க்கம் என்ற உலகப் பொது நெறியை மக்களுக்கு போதித்து ,வந்து உள்ளார் .வள்ளலார் காட்டிய நெறியானது ''ஞான நெறி''யாகும் ,ஞான மார்க்கமாகும் .அதாவது சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்.

பழனிக் கோயில் போன்ற ஆலயங்களில் தைப்பூச காலங்களில் சாமி தரிசனம் மிகக் கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவை பக்தி மார்க்கமாகும் .அவைப் போலவே வடலூரிலும்,தைப்பூசத்து அன்று ஆறு காலங்களிலும் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கிறார்கள் ,அங்கும் ஜோதி தரிசனம் பார்க்க மக்கள் குவிந்து விடுகிறார்கள் .இது சரியா ?தவறா ?என்பதை வள்ளலார்தான் பதில் சொல்ல வேண்டும் .

இருந்தாலும் நம் அறிவைக் கொண்டு நாம் சிந்திக்க வேண்டும்,

பக்தி மார்க்கம் என்பது வேறு !ஞான மார்க்கம் என்பது வேறு !பல கோடி ஆண்டுகளாக நாம் அனைவரும் பக்தி மார்க்கத்தில்தான் இருந்து வருகிறோம் .அதனால் நாம் அடைந்த பயன் யாது ? அதனால் நமக்கு கிடைத்த லாபம் என்னவென்றால் மரணம் என்பதுதான் .''தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்பார் வள்ளலார் ''நாம் வாழ் நாள் முழுவதும் தவறு செய்து விட்டு பின் மரணம் அடைந்து விடுகிறோம் ,இருந்தவர்களுக்கு செத்தவர்களைப் பற்றித் தெரியாது .செத்தவர்களுக்கு இருப்பவர்களைப் பற்றித் தெரியாது .இதுதான் நம் வாழ்க்கையின் லட்சணம் .

வள்ளலார் இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கம் என்ன என்பதை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .வள்ளலாரை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்,- எதற்க்காக அவரே சொல்கிறார் பாருங்கள் கேளுங்கள்.

பாடல் ;--

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

அடுத்த பாடல் ;--

பேருற்ற உலகில் உறு சமயமத நெறி எல்லாம்
பேய் பிடிப்பு உற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் முற்று அங்கும் இங்கும்
போருற்று இரந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனிதம் உறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
எருற்ற சுகநிலை அடைந்திட புரித நீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு
எண்ணறக என்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிற்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கும்
நீதி நடராஜ பதியே !

இப்படி பல பாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் .

வள்ளலார் தான் வந்த நோக்கத்தை எப்படி தெரியப் படுத்தி உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும் .உலகில் உள்ள சமய ,மத நெறிகள் எல்லாம் ,பேய் பிடித்தது போல் பைத்தக்கார தனமாக உண்மைக்கு புறம்பாக செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது ,உண்மைக்கு புறம்பாக கடவுள் நிலையை கதைகளாக்கி,கற்பனைகளாக சொல்லி வைத்துவிட்டு சென்று விட்டார்கள்,அதை உண்மை என்று நம்பி இந்த உலக மக்கள்.--உம்மதம் பெரியது ,எம்மதம் பெரியது ,உம்சமயம் பெரியது ,எம்சமயம் பெரியது ,உம்கடவுள் பெரியது,எம்கடவுள் பெரியது ,என்று போட்டிப் போட்டு, சண்டைப் போட்டு மாண்டு கொண்டு இருக்கிறார்கள் .

இனியும் காலதாமதம் செய்தால் வீணே அனைவரும் அழிந்து விடுவார்கள் ஆதலால் விரைவாக சென்று ,. புனிதமான உண்மைப் பொது நெறியான சுத்த சன்மார்க்க நெறியை உலகுக்குக் காட்டி, உண்மையான கடவுளின் மெய்ப் பொருளை உணர்த்தி அனைவரையும் காப்பாற்றி நலவழி படுத்தி ,பேரின்ப பெருவாழ்வில் வாழ வைக்க வேண்டும் .

இதுவே உமது முக்கிய பணியாகும் என்று இறைவன் வள்ளலாரை இந்த உலகத்திற்கு அனுப்பிவைக்கிறார் ..

வடலூர் ;--

வள்ளலார் வடலூரில் உண்மை பொது நெறியாகிய --சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ! சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ! என்னும் உலக பொது அமைப்பை நிறுவி உள்ளார்கள் .

அதை உணராத சன்மார்க்க சங்கத்தவர்களும்,அரசாங்கமும்,அறநிலையத் துறையும், பொது மக்களும், சமயக் கோயில்கள் போல் வழிபாட்டு முறையை செய்து கொண்டு வருகிறார்கள் .இவை முற்றிலும் தவறானதாகும். சன்மார்க்கம் என்ற பெயரில் சமயவாதிகள் செய்யும் சூழ்ச்சியாகும்

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையால் .சமயமும் ,மதமும் அழிந்து விடும் என்ற உணர்வால் இப்படி செய்து வருகிறார்கள்.,அவர்களுக்கு வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல் இப்படி பக்தி மார்க்கம் போல் செய்து வருகிறார்கள் .

பக்தி மார்க்கம் என்பது யாது ?

பக்தி என்பது ;--தத்துவ உருவங்களை வழிபாடு செய்வது பக்தி மார்க்கம் என்பதாகும் அதனால் மனநெகிழ்ச்சி ,மன உருக்கம் மட்டுதான் உண்டாகும் .அதனால் என்ன கிடைக்கும் என்றால் அழிந்து போகும்,மண்,பெண், பொன் போன்ற பொருள்கள் தான் கிடைக்கும் அதனால் பல,பல இன்பம் துன்பம் வந்து கொண்டே இருக்கும்.அதையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் வயது முதிர்ந்து நோய்வாய்ப் பட்டு தீராத துன்பத்தில் அழுந்தி இறுதியில் மரணம் வந்து அழிந்து விடுகிறோம் .இவைதான் பக்தியில் கிடைக்கும் சிறிய அற்ப இன்பமாகும்,இதற்கு சிற்றின்பம் என்று பெயராகும் .

பக்தியால் இந்திரியமும் ,கரணங்கள் மட்டும் மகிழ்ச்சி அடையும் .ஜீவனும் ,ஆன்மாவும் மகிழ்ச்சி அடைவதில்லை ,

அதற்கு வள்ளலார் தரும் பாடல் வருமாறு ;--

கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானுங்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் நீண்டே
திர்ணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்குஞ்
சித்திபுரம் என ஓங்கும் உத்தம சிற் சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தானாக்க எனது
தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே !

இந்த பாடலில் உள்ள உண்மைகளை நன்கு கவனித்தீர்கள் என்றால் பக்தி மார்க்கம் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளது என்பது விளங்கும் ..

கடலையும் ,உலகத்தையும்,வானத்தையும் ,தன்னுடைய அதிகாரத்தினால் ஆளும் அதிபதியாக இருந்தாலும்,மரணம் வரும்போது அதிகாரத்தினால் மரணத்தை தடுக்க முடியுமா ? மரணத்தை தவிர்க்க முடியாமல் வாழ்வதனால் என்ன பயன் ? அத்தனையும் விட்டுவிட்டு சென்று விடுகிறாயே !,இதற்காகவா மக்களை ஏமாற்றி தன் வசமாக்கி ஆட்சி புரிந்து கொண்டு இருந்தாய் ,உன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா ? உங்களையே காப்பாற்றி கொள்ள முடியாமல் வாழும் நீங்கள் எப்படி மக்களை காப்பாற்ற முடியும் .,சிந்திக்க வேண்டும்.

அற்ப சுகத்திற்காக வாழும் வாழ்க்கையை விட்டு ,ஜீவனையும் ஆன்மாவையும் காப்பாற்றும் வாழ்க்கை வாழ்வதற்கு,- ஞான மார்க்கமான சுத்த சன்மார்க்கத்திற்கு வாருங்கள் என்று அனைவரையும் அழைக்கிறார் வள்ளல் பெருமான் அவர்கள் ,

ஞான மார்க்கம் என்பது யாது ?

ஞான மார்க்கம் என்பதும் ,சுத்த சன்மார்க்கம் என்பதும் .ஒன்றேதான். இவை அருளைத் தேடும் மார்க்கமாகும்.அருள் எப்படிக் கிடைக்கும் ,அருளைப் பெருவதற்கு உண்டான வழி யாது என்பதைப் பார்ப்போம் ,

பத்து ஆள்சுமை சேர்ந்தது ஒரு வண்டி பாரம்,நாநூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டி பாரம்.--சூல்வண்டிஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்பத்தில் ஒருவன் அதிதீவிர முயற்ச்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும்.அப்படிப் பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை ,ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவநோக்கத்தால் அறியத் தொடங்கினால் ,ஒரு கணத்தில் {ஒரு நொடியில் }படித்துக் கொள்ளலாம்.இது சத்தியம் என்று வள்ளலார் சொல்லுகிறார் .அருள் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று சொல்லமுடியாத அளவு உயர்ந்ததாகும் .அந்த அருளைப் பெறுவது தான் மனித வாழ்க்கையின் லட்சயமாகும் .

அன்பு ,தயவு,கருணை,!

அன்பு என்பது ;--ஆன்ம நெகிழ்ச்சி ,ஆன்ம உருக்கம் உண்டாக்குவதாகும் ,எல்லா உயிர்கள் இடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே கடவுள் பக்தியாகும் .அதுவே அன்பாகும், அதுவே அந்த கரண சுத்தியை விளைவிப்பதாகும் ,

தயவு ;--உயிர்களுக்கு துன்பம் வரும் போது உயிர் இரக்கம் என்னும் காருண்யம் உண்டாகி ,உயிர்களின் துன்பத்தைப் போக்குவது தயவாகும் .அந்த தயவு என்னும் ஜீவ காருண்யத்தால் உயிர்களின் துன்பம் நீங்கி ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடைகின்றன , அதனால் ஜீவகாருண்யம் செய்யும் மனிதர்களின் ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடைகின்றன,இதுவே தயவு என்பாதாகும் .

அன்பு உண்டானால் தயவு உண்டாகும்,--தயவு உண்டானால் உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்யம் உண்டாகும்.--உயிர்களின் மேல் காருண்யம் உண்டானால் இறைவனுக்கு நம் மீது அன்பு உண்டாகும் --இறைவனுக்கு அன்பு உண்டானால் கருணை என்னும் அமுதம்{அருள் } உண்டாகும் .--அருள் உண்டானால் கடவுள் அனுபவம் {சிவானுபவம் }உண்டாகும்.

கருணை ;--

இதை கவனித்துக் கொண்டு இருக்கும் இறைவன் நம் மீது கருணைக் காட்டத் தலைப்படுகிறார் , தயவு மிகுந்த ஜீவர்களின் ஆன்மாவில் அமுதம் என்னும் சக்தி வாய்ந்த திரவம் உள்ளது .அவை பல்லாயிரம் ஆண்டுகளாக திறக்க முடியாமல் பெட்டியில் வைத்து பூட்டப் பட்டுள்ளது .தயவு மிகுந்த ஜீவர்களின் ஆன்மாவில் உள்ள அமுதத்தை இறைவன் கருணைக் கொண்டு திறக்க-- அதில் இருந்து அமுதம் சுரக்கும் அதுவே தனிப் பெருங் கருணையாகும்..இந்தக் கருணையைப் பெற்றுக் கொண்டவர்கள் அருளாளர்கள் எனப்படுவார்கள்,அவர்களுக்கு சுத்த சன்மார்க்கிகள் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார் .அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு மட்டும்தான் அருளாளர் என்ற பெயர் பொருத்தமானதாகும் என்பார் வள்ளலார் .  
அருளைக் கொடுப்பவர் ஆண்டவர் ,அருளைப் பெறுபவர்கள் ஜீவர்கள் அதனால் அவருக்கு தனித்தலைமை பெரும்பதி என்பார் .

அவர்க்கு வள்ளலார் வைத்த பெயர் ;--

அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதி !-----என்பதாகும்.

அருட்பெரும்ஜோதி கடவுள் ஒருவரே! தனிப்பெருங்கருணை உடையவர் அவர் ஒருவரே ! அவருடைய தனிப்பெருங் கருணையால்,அருளைப் பெற்றவர்கள் மட்டும்தான் அவரைக் காண முடியும் .அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்,--அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்,--அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்,

தயவு உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே !
அருள் உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே !

அன்பு .தயவு,கருணை ,அருள் .இவை நான்கும் பெற்றால் தான் மனிதன் மனிதனாக வாழ்ந்து தெய்வ நிலையை அடைய முடியும் .அன்பையும் தயவையும் உயிர்கள் மேல் செலுத்தினால ,ஆண்டவர் அன்பும் கருணையும் நம்மீது செலுத்தி அருளை வாரி வழங்குவார் என்பது வள்ளலார் சொல்லும் சுத்த சனமார்க்க நெறியாகும்,

அன்பை அடைக்கும் சக்தி யாருக்கும் இல்லை ,அன்புடையார் எல்லாம் உடையார் ,அன்பிலார் ஏதும் இலார் என்பது வள்ளுவர் வாக்கு !அன்பு எப்படி உண்டாகும் ?,பற்று அற்றவன் இடத்தில்தான் ஆண்டவர் பற்று வைப்பார் .

பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடமுடியாது .பொருளை வைத்துக் கொண்டு பிறகு அருளைத் தேடலாம் என்று நினைத்தால் அருள் வராது ,மரணம்தான் வரும்.

வள்ளலார் தரும் பாடல் ;--

மற்று அறிவோம் எனச் சிறிது தாழ்ந்து இருப்பீர் ஆனால்
மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே
சமரச சன்மார்க்கத்தவர்கள் அல்லால் அதனை
ஏற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லை கண்டீர் சத்தியம் இது என்மொழி கொண்டு உலகீர்
பற்றிய பற்றினை அனைத்தினையும் பற்று அற விட்டு அருள்
அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே !

அடுத்து ;--

சாருலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே
சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை
நேர் உறவே எவராலும் கண்டு கொள்வதற்கு அரிதாம்
நித்தியவான் பொருளை எலாம நிலைகளும் தானாகி
ஏருறவே விளங்குகின்ற இயற்கை உண்மை தன்னை
எல்லாஞ் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பத்தியை
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடுமின்
உள்ளம் எலாங் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே !

என திரு அருட்பாவில் பதிவு செய்து உள்ளார் .

இதில் இருந்து நாம் அறிந்து தெரிந்து கொள்வது என்ன ?

உலக பற்றுகள் -அதனால் உண்டாகும் துன்பம் துயரம் அச்சம் பயம் போன்ற தீர்க்க முடியாத வாதனைகளில் இருந்தும் விலக வேண்டுமானால் ,அனைத்தையும் நம்மிடம் இருந்து விளக்கிவிட வேண்டும் .அனைத்தையும் தவித்தவர் உள்ளத்தில் ஆண்டவர் அமர்ந்து அருள் புரிவார் என்பது சத்தியமான உண்மை என்கிறார் வள்ளலார்.

அழிந்து போகும்,அழிவை உண்டாக்கும் --உலகப் போகப் பொருள்கள் மீது வைக்கும் ஆசையை மாற்றி அதே ஆசையை உண்மை இறைவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மீது செலுத்துங்கள் .என்றும் அழியாத அருளைத்தருவார் ,என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கை வாழலாம் .

இதுவே வள்ளலார் உணர்த்தும் "மெய் மொழியும் ஒழுக்கமும்"' ஆகும் .

அருளைப் பெறுவோம் ஆனந்தம் அடைவோம் .

அன்புடன் உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு

தொடரும் ;--

2 கருத்துகள்:

25 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:29 க்கு, Blogger Sivamjothi கூறியது…

சன்மார்க்கிகளே ஒரு வேண்டுகோள் ! http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_25.html

 
26 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:03 க்கு, Blogger செ.கதிர்வேலு கூறியது…

சிவம்ஜோதி அய்யாவுக்கு அன்புடன்

ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம் ,வள்ளலார் பிறந்த நாளை ஆங்கில வருடம் கொண்டாடுவது சரி இல்லை என்றும் தமிழ் மாதம் புரட்டாசி ,சித்திரையில் கொண்டாட வேண்டும் சொல்கிறீர்கள் .உங்கள் விருப்பம் மகிழ்ச்சி தரக்கூடியதுதான் ,இருப்பினும் .வள்ளலார் பிறப்பு இறப்பு அற்றவர் .மரணத்தை வென்றவர் ,எங்கும் நிறைந்து இருப்பவர் ,இறைவன் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டவர் ,அவருக்கு காலம் நேரம் ,மாதம் ஆண்டுகள் கிடையாது ,அவரே சொல்லுவார் .

காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன்,என்றும் ,அடங்கு நாள் இல்லாத அமர்ந்தானைக் காண்பதற்கு தொடங்கு நாள் நல்லதன்ரோ !என்பார் .வள்ளலாரை வழிபடுவதற்கும்.போற்றுதற்கும் சமயவாதிகள் போல் செய்து வருகிறார்கள் ,அதில் வள்ளலாருக்கு உடன்பாடு இருக்காது.நாம் இறைவனைக் கொண்டாடுவதற்கு காலம் நேரம் கருத வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகின்றேன்.

எந்நேரமும் இறை சிந்தனையுடனும் உயிர் இரக்கமானஜீவ காருண்யத்தை கடைப் பிடிப்பதுதான் சன்மார்க்கிகளின் கடமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.இதுவே நாம் இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும் .இறைவன் ஒரு நொடி நம்மை மறந்தால் நம் நிலை எப்படியாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் .நம்மை இடைவிடாது இயக்கிக் கொண்டு இறைவனை நாம் இடைவிடாது கருத்தில் கொள்ளவேண்டும் என்பது இச்சிறுவனின் வேண்டு கோளாகும்.

அன்புடன் ஆண்மநேயன் கதிர்வேலு. பதில் .

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு