மரணத்தை வென்றவர் வள்ளலார்!
*மரணத்தை வென்றவர் வள்ளலார்!*
*வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படித்து தெரிந்து அறிந்து புரிந்து கொள்ளாத மூடர்கள் சிலர் வள்ளலார் மரணம் அடைந்து விட்டார் என்றும்,பிராமணர்கள் வள்ளலாரைக் கொளுத்தி விட்டார்கள் என்றும்,தற்கொலை செய்து கொண்டார் என்றும் பலவாறான பொய்யான செய்திகளை திராவிடக் கழகத்தை சார்ந்தவர்கள்.மற்றும் பல கட்சிகளைச் சார்ந்த மூதேவிகள் திருஅருட்பாவை முழுமையாக படிக்காமல், உண்மைக்கு புறம்பாக செய்திகளை மேடைகளில் பேசிவருகிறார்கள்.*
*12-02-2023 அன்று முத்தமிழ் பேரவை மன்றம், அடையாறு "T N ராஜரத்தினம் கலை அரங்கில்" வள்ளலார் 200,விழாவில் "வள்ளுவர் வழியில் வள்ளலார்" என்ற தலைப்பில் பேசுவதற்கு பல கட்சிகள் சார்ந்த அறிஞர்கள் மத்தியில் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் ஈரோடு கதிர்வேல் ஆகிய என்னையும்.மேலும் வடலூர் குரு பக்கிரிசாமி ஐயா, பிரமானந்த சுவாமிகள் ஐயா அவர்களையும் அழைத்திருந்தார்கள்.*
*மேலும் பார்வையாளராக சென்னை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சென்னெரி தண்டபாணி ஐயா,திரு,புனிதன் ஐயா,திரு,திலீப்குமார் வழக்கறிஞர் ஐயா அவர்களும் வந்திருந்தார்கள்.மற்றும் பொதுமக்கள் பல கட்சியை சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள்*
*எனக்கு முன்னாடி பேசிய திரு, "வாலாசா வல்லவன்" என்பவர் வள்ளலாரைப் பற்றி பெருமையாக பேசி வந்தவர், திடீரென யாரோ ஒருவர் எழுதியதை சுட்டிக் காட்டி அவற்றைப் படித்துவிட்டு வள்ளலார் தற்கொலை செய்து கொண்டார் என்று பேசினார் ,உடனே எனக்கு கோபம் தலைக்கு ஏறியது,அவரை பேசவிடாமல் தடுத்து நிறுத்தினேன்,திருஅருட்பாவை முறையாக படிக்காமல் கண்ட கண்ட கழுதைகள் எழுதியதை படித்துவிட்டு மேடையில் பேசினால் தகுந்த சாட்டைஅடி கொடுக்கப்படும் என்று சொல்லி அவர் பேசியதை வாபஸ் வாங்க வைத்தோம். அவரும் சரிங்க தோழரே என்று பேச்சை சுருக்கிக் கொண்டார்.*
*அடுத்து பேசிய நான் வள்ளலாரின் மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பற்றி பேசி மக்களுக்கு புரிய வைத்தேன் மக்கள் ஏற்றுக்கொண்டு மேலும் பேசுங்கள் என்று ஆராவாரம் கொண்டார்கள், வாய்ப்பு கிடைக்கும் போது பேசுகிறேன் என்று எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தோடு நிறைவு செய்தேன்.*
*சாகாக்கல்வியைப் போதிக்க வந்தவர் வள்ளல்பெருமான்!*
*உலக வரலாற்றில் உயர்ந்த அறிவுள்ள மனிதனாக பிறந்த எல்லோரும். உலகில் தோன்றிய சமய மதங்கள் போதித்த சாகும் கல்வியை கற்று மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள் என்பதை அறிந்த, "இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்" சாகாக்கல்வியைக் கற்று கொடுக்கவே வள்ளல்பெருமானை இவ்வுலகிற்கு வருவிக்கவுற்றவர் தான் நமது அருட்தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்*
*வள்ளலார் பாடல்!*
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்
*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ*
*என்பிள்ளை ஆதலாலே*
*இவ்வேலை புரிகஎன் றிட்டனம்* மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே.!
என்றும் மேலும்..
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே!
*மேலே கண்ட பாடலில், தான் இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்கப்பட்ட உண்மையை வெளிப் படுத்துகின்றார்*
*மனிதன் மரணத்தை வெல்ல முடியாமைக்குக் காரணம் சாதி சமயம் மதங்கள் போதித்த பொய்யான,கலை உரைத்த கற்பனை தத்துவ கதைகளைப் பின்பற்றி வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளே மரணம் அடைவதற்கான காரணம் என்பதை விளக்குகின்றார்* *மேலும் பொய்யான சாதி சமய மதங்களை குழிதோண்டி புதைக்கவே என்னை இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுப்பி வைத்தார் என்பதை தெளிவுப் படுத்துகின்றார்*
அதனால்தான் பள்ளிக்குச் செல்லாமல்,ஆசிரியரிடம் பாடம் கற்காமல் எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே கற்று தெரிந்து கொண்டவர்
*ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி!*
*ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனக்கே ஓதாமல் உணர்த்திய என் மெய் உறவாம் பொருளே ! என்று சொல்லுகிறார்.*
*மேலும் சாகாக் கல்வி பாடல் !*
சாகாத கல்வியே கல்வி ஒன்றேசிவம்
தான் என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்ற
வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும்
விளைய விளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாதலுற எலாம் வல்ல சித்தாகி நிறை
வானவரமே இன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்தசிவமே
சிற்சபையின் *நடுநின்ற ஒன்றான கடவுளே*
தெய்வநட ராஜபதியே.!
*என்றும்,, இதுபோன்ற நூற்றுக் கணக்கான பாடல்களில் சாகாக்கல்வி கற்கும் முறையைப் பற்றி திருஅருட்பா வில் பதிவு செய்துள்ளார்.*
*மேலும் வள்ளலார் பாடல்!*
சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் து *அழியா*
*வான்அமுதும் *மெய்ஞ்ஞான மருந்தும் உணப்புரிந்தீர்*
*போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்*
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும் நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜரே உமக்கு நான் ஏது செய் வேனே.!
மேலும்
சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே
தனித்துன் *அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே!*
மேலும்
*மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!* என்றும்
*மரணத்தை விரட்டி அடித்தவர் வள்ளலார்!*
*மேலும் வள்ளலார் பாடல் !*
சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி
நோவதின்று புதிதன்றே என்றும்உள தால் இந்த
நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவராலே
ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.!
மற்றும்..
*சமயங்கள் மதங்கள் காட்டிய எந்த தெய்வங்களுக்கும் அருள் வழங்கும் தகுதி இல்லை வள்ளலார் காட்டிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருள் வழங்கும் தகுதி உடையதாகும்.மேலும் மரணத்தை வெல்லும் அறிவியல் சார்ந்த உடல் மாற்றத்தை, அதாவது அருள் ஆற்றலைத் தரமுடியும் என்பதை தெளிவாக விளக்குகின்றார்*
மேலும்....
மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
பசைஅற நீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
*என்னுடையான் அருள்ஆணை* என்குருமேல் ஆணை
அரணுறும் என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.!
*மரணம் என்னும் பெரும்பாவியை விரட்டியவர் வள்ளலார்*
*மரணம் என்பது இயற்கை அல்ல,செயற்கையே மரணம் என்றார்,தப்பாலே சாவே துணிந்தார் என்பார்,பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாகும்*
*இறவாமை பெற்றேன் என்கின்றார்!*
*பெற்றேன் என்றும் இறவாமை* பேதம் தவிர்ந்தே இறைவன் எனை
*உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்*
எற்றே அடியேன் *செய்த தவம் யாரே புரிந்தார்* *இன்னமுதம்*
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.!
*மேலும் பதிவு செய்கிறார்!*
*நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்*
*சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும்*-
*தேவாநின்*
*பேரருளை என்போலப் பெற்றவரும்*
*எவ்வுலகில்*
*யார்உளர் நீ சற்றே அறை.!*
என்கின்றார் மேலும்..
காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே *எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்*
*மெய்அளிக்க வேண்டுமென்றேன்* *விரைந்தளித்தான் எனக்கே*
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
*எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!*
*பஞ்ச பூதங்களாலும். கூற்றுவன் என்கின்ற எமனாலும், கொலைக் கருவிகளாலும், வேற்று வகையான எந்த தீய சக்திகளாலும்,அணு ஆற்றலாலும், அழிக்க முடியாத தேகம் அளிக்க வேண்டும் என்று கேட்டேன் உடனே விரைந்து அளித்தான் எனக்கே என்கிறார். இது நடக்குமா என்று நினைக்கலாம் ,என் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மனித தேகம் பெற்ற அனைவருக்கும் நிச்சியம் கிடைக்கும் என்கின்றார்*
*அதற்கு சிறந்த உயர்ந்த வழி,! உலகப் பொருள் பற்று அற்று, வள்ளலார் சொல்லியவாறு ஒழுக்கம் நிறைந்து அன்பு,தயவு,கருணையுடன் வாழ்ந்து அருள் பற்றைப் பற்ற வேண்டும்.*
*அருள் பெற்றால் மட்டுமே, சுத்ததேகம், பிரணவதேகம்,ஞான தேகம் என்கின்ற முத்தேக சித்தி என்னும் அருள் ஒளிதேகம் பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும், இதுவே முத்தேக சித்தி பெறும், தேகம் மாற்றம் என்பதாகும்*
*மேலும் மரணத்தை வெல்லுவதற்காண வழிமுறைகளை தெரிந்து கொள்ளவே திருஅருட்பாஆறாம் திருமுறையில் "ஞானசரியை" என்னும் தலைப்பில் 28 பாடல்கள் பதிவு செய்துள்ளார் அவற்றிற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றே தலைப்பும் கொடுத்துள்ளார்*
*அதில் முதல்பாடல் !*
நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து *அருளமுதே நன்னிதியே* ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந் தேத்துதும் நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!
*28 ஆவது கடைசிபாடல்!*
சார்உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற *இயற்கை உண்மை தன்னை*
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றி மகிழ்ந் திடுமின்
உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!
என்னும் பாடல் வரிகளால் உண்மையை எடுத்து இயம்புகின்றார்
மேலும் *சத்திய அறிவிப்பு* என்னும் தலைப்பில், *மேட்டுகுப்பம் சித்திவளாக திருமாளிகையில் சித்தி பெருவதற்கு முன் ஆறாம் திருமுறையில் இறுதியாக வெளியிட்ட 4 நான்கு பாடல்கள்*!
1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
2.தனித்தலைமைப் பெரும்பதி என் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம் தித் திக்க
இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
மனித்த உடம் பிதை அழியா வாய்மை உடம் பாக்கி
மன்னிய சித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
கனித்த சிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் அத் தினங்கள் எலாம் இன்பம்உறு தினங்கள்
*சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்*
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
*திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.*
4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.!
*ஊன் உடம்பை அருள் நிறைந்த ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வென்று இறைவனுடன் கலந்த உண்மை விளக்கத்தை மேலே கண்ட பாடல்கள் நான்கிலும் தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளல் பெருமான் அவர்கள்..*
*இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.*
*வள்ளலார் மரணத்தை வென்று இறைவனுடன் கலந்தார் என்பது வள்ளலார் பாடல்களே சான்றாகும்.*
*இனி வள்ளலார் மரணம் அடைந்தார் என்றோ! தற்கொலை செய்து கொண்டார் என்றோ! கொலை செய்யப்பட்டார் என்றோ ! மறைந்து விட்டார் என்றோ ! ஒளிந்து கொண்டார் என்றோ ! வள்ளலாரைப் பற்றிய தவறான செய்திகளை,எழுத்து மூலமாகவோ ! பேச்சு வழியாகவோ ! எவரும் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.*
*நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதீர்கள்!*
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.
*9865939896*
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு