அருள் பெறுவது எவ்வாறு !
*அருள் பெறுவது எவ்வாறு ?*
*உலக வரலாற்றில் அருள் பெறும் வழியைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவரே !*
*பொருள் நிறைந்த இவ்வுலகில் அருள் பெறுவது மிகவும் கடினமானதாகும்,உலகில் தோன்றிய அருளாளர்கள் என்னும் ஞானிகள்,இல்லறத்தை விட்டு உலக ஆசைகளை துறந்து, துறவறம் என்னும் சந்நியாசம் பூண்டு காவி ஆடை உடுத்தி தத்துவங்களை வென்று அருளைப் பெற்றுவிடலாம் என்ற ஆவலோடு யோகிகள் வனம்,மலை,முழை, காடு முதலியவற்றிற்குப் போய் நூறு,ஆயிரம் முதலிய வருஷகாலம் கடும் தவஞ் செய்து முயற்சி செய்தும், அருள் வழங்கும் கடவுளைக் காணமுடியவில்லை. இறைவன் அருளை முழுமையாக பெறவும் முடியாமல்,சிலர் உயிரை அடக்கி சமாதி ஆனார்கள்,சிலர் முக்தி எனும் வான் உலக பஞ்ச பூதங்களில் கலந்து அடங்கி விட்டார்கள் சிலர் சொர்க்கம், கைலாயம்,வைகுண்டம், பரலோகம் என்னும் கற்பனை உலகத்திற்கு சென்று திரும்பிவிட்டார்கள்,சிலர் மாண்டு போனார்கள்.பலர் மாண்டு கொண்டே உள்ளார்கள். எவருமே மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம் மயமாகவில்லை. அதாவது கடவுள் நிலைக்கு செல்லவில்லை என்பதே உண்மையாகும்.*
( *உடம்பு உயிரோடு ஆன்மா இறைவனை தொடர்பு கொள்ள முடியாது!*)
*மேலே சொன்ன அனைவருக்கும் இறப்பும் உண்டு,மீண்டும் பிறப்பும் உண்டு.ஆனால் என்ன பிறப்பு கிடைக்கும் என்பது எவருக்கும் தெரியாது*
*மனித உடம்பு*
*மனிதபிறப்பு மற்ற பிறப்புகள் போல் அல்லாமல், பேசும் திறன் சிந்திக்கும் திறன்,தெளிவடையும் திறன், எண்ணம் சொல் செயல் யாவும் தன்னைத் தானே செயல் படும் திறன்,மற்றும் புற உலகியல் நன்மை தீமைகள் அறிந்து செயல்படும் மனம், புத்தி,சித்தம்,அகங்காரம் போன்ற செயற்பாடுகளும்,புறப்புறம் என்னும் கண்,காது,மூக்கு,வாய்,மெய் என்னும் இந்திரியங்கள் யாவும் உலகியல் சம்பந்தம் உடையது..*
*உயர்ந்த பிறப்பு என்று சொல்லப்படுவது ஏன்?*
*மனிதபிறப்பு என்பது என்பது மற்ற ஜீவ தேகங்கள் போன்றது அல்ல! உயர்ந்த ஜீவ அறிவும், ஆன்ம அறிவும், அருள் அறிவும்,கடவுள் அறிவும் மிகுந்த அகம்,அகப்புறம் போன்ற ஆற்றல் மிகுந்த,தரம் மிகுந்த சத்தி பெறும் தகுதி உடையதே உயர்ந்த மனித தேகமாகும்.*
*பூத உடம்பை அருள் உடம்பாக மாற்றும் ஆற்றல் பெற்றதுதான் மனிததேகம்!*
*பஞ்ச பூத அணுக்களான வாலணு,திரவணு,குருவணு,லகுவணு,அணு,பரமாணு,விபுவணு போன்ற ஏழுவகையான அணுக்களால் பின்னப்பட்ட அசுத்த பூதகாரிய தேகமாகும். மனித தேகத்தில் உள்ள இந்திரியம்,கரணம், மற்றும் ஜீவ,ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்து, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று, சுத்த தேகம்,பிரணவதேகம்,ஞானதேகம் என்னும் மூன்று தேகங்களாக மாற்றும் ஆற்றல் பெற்றது, அந்த முத்தேக சித்தி பெறுதலே, மனித தேகத்திற்கு கொடுத்த இயற்கை வல்லபமாகும்*
*அசுத்த உஷ்ணம்! சுத்த உஷ்ணம் !*
*இவ்வுலகில் ஆன்மா வாழ்வதற்கு உயிர் உடம்பு தேவைப்படுகின்றது உயிரும் உடம்பும்,பஞ்ச பூதகாரிய அணுக்களைக் கொண்டு அசுத்த பூதகாரிய உஷ்ணத்தினால் மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகமே மனித தேகமாகும். இந்த பூத உஷ்ணம் சுடும் தன்மை உடையது.*
*உயிர் உடம்பு எடுத்து வாழும் ஆன்மாவின் உஷ்ணம் கோடி சூரியப் பிரகாசம் கொண்டதாகும்.அவை சுத்த உஷ்ணத்தை கொண்டதாகும்,இது சுட்டும் சுடாத தன்மை உடையதாகும்*
*அதன் ஆற்றல் வல்லபம் அளவிடமுடியாது.*
*சுடும் தன்மை உள்ள அசுத்த பஞ்சபூத காரிய உடம்பையும் உயிரையும் முதலில் சுத்த பூதகாரிய உடம்பாக மாற்ற வேண்டும், இந்த உண்மை தெரிய வேண்டுமானால் உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளலார்.*
*வள்ளலார் பாடல் !*
உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ் சார்வீரே.!
*ஆண் பெண் உணர்ச்சி வசத்தால் உடல் உறவு கொள்ளும்போது அசுத்த பூதகாரிய உஷ்ணம் உண்டாகும் போது ஆண் பெண் உறுப்புகளில் இருந்து வேளிப்படுவது விந்தும் நாதமும் ( சுக்கிலம் சுரோணிதம்) என்ற திரவ அணுக்கள் வெளிப்படும்,அந்த அணுக்கள் கூட்டத்தின் மத்தியில் ஆன்மா சென்றால், ஆன்மாவின் செயலுக்கும் தகுதிக்கும் தகுந்தவாறு உயிர் உடம்பு மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகிறது,அந்த வீட்டிற்கு வாடகை வீடு என்று சொல்லப்படுகின்றது, வாடகை என்பதே நாம் தினமும் உண்ணும் பூதகாரிய உணவாகும், பூதகாரிய உடம்பிற்கு பூதகாரிய உணவே பொறுந்துவதாகும்.*
சுதந்தரம்!
*ஆன்மாக்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு* தேகசுதந்தரம்! ஜீவசுதந்தரம்!
போகசுதந்தரம்!
*என்னும் மூவகை சுதந்தரம் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது,*
*இந்த சுதந்தரத்தை அனுபவிக்கின்றவரை ஆன்மாவிற்கு பிறப்பு இறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்*
*இந்த மூவகை சுதந்தரத்தையும், நம்மை அனுப்பிய இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவடிக்கே சர்வ சுதந்தரத்தையும் திருப்பி கொடுத்து விடவேண்டும்,கொடுத்துவிட்டப்பிறகு,தங்களின் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து ,இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும் என்று உண்மை உணர்வோடு இறைவனிடம் கேட்க வேண்டும்*
*வள்ளலார் பாடல்!*
படமுடியாது இனித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்து இப் பொழுதென்
உடல் உயிரா திய எல்லாம் நீ எடுத்துத் கொண்டு உன்
உடல் உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறு சிற் றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே என் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியே என் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.!
மேலே கண்ட பாடலில் உள்ளவாறு வள்ளலார் தன் உடல் பொருள் ஆவிகளை ஆண்டவரிடமே கொடுத்து விடுகிறார் கொடுத்த தருணத்தே இறைவன் தன் சுதந்தரத்தை வள்ளலாருக்கு தந்து விடுகிறார்
*வள்ளலார் பாடல்!*
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
தூயநல் உடம்பினில் புகுந்தேம்
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
பரிசுபெற்றிடுக பொற் சபையும்
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே.!
*வள்ளலார் போல் வாழ்ந்தால் மட்டுமே நமக்கும் திருவருட் சுதந்தரம் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் நினைவில் கொண்டு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும்*
இறைவனை தொடர்பு கொள்வது எவ்வாறு ?
*வள்ளலார் பாடல்!*
உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்
அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.!
மேலும்...
நான்மறந்தேன் எனினும் எனைத் தான்மறவான் எனது
நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
வான்மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை
மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என் னுடைய
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
பரிந்து நின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.!
*என்னும் பாடல்களின் வாயிலாக, இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒவ்வொரு ஆன்மாவின் உள் இருந்து இடைவிடாது இயங்கிக் கொண்டுள்ளார் என்பதை அறிந்தேன் ஆகையால் உன்னை மறக்க மாட்டேன் மறந்தால் உயிர்விடுவேன் என்கின்ற உணர்வோடு,ஊண் உறக்கமின்றி இடைவிடாது ஆண்டவரைத் தொடர்பு கொள்கின்றார்,அவரின் அன்பான நினைவு அலைகள் நேராக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்கிறது, அதே தருணம் ஆண்டவருடைய அன்பான கதிர் அலைகள் வள்ளலாரை இடைவிடாது தொடர்பு கொள்கிறது,அதனால் இருவருக்கும் இடைவிடாது காதல் மலர்கிறது*
வள்ளலார் பாடல்!
காதல் கைம் மிகுந்த தென்செய்வேன் எனை நீ
கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதலுன் புகழே அன்றி நான் ஒன்றும்
உவந்திலேன் உண்மையீ தென்றாள்
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
மாதய வுடைய வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே!
*இவ்வாறு ஆண்டவராகிய பரமான்வாவும் வள்ளலாருடைய ஜீவ ஆன்மாவும் உணர்ச்சி ததும்ப இணைபிறியா காதல் கொள்கின்ற தருணம் அங்கே சுத்த உஷ்ணம் உண்டாகி பரவிந்தாகிய அருளும்,பரநாதமாகிய பிரகாசமும் வெளிப்படும்*
*இதைத்தான் பேருபதேசத்தில் தெளிவாகச் சொல்கின்றார் வள்ளலார்.*
*சத்விசாரம் என்பது,இரண்டு வகையாக உள்ளது,ஒன்று பரலோக விசாரம்,ஒன்று இகலோக விசாரம்,இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல,சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானே என்றால் அவ்விசாரம் விசாரமாகாது,உண்மை விசாரமும் அல்ல*
*ஏனெனில் விசாரம் என்கின்றதற்குப் பொருள் சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது, அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது,ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல,நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத்திரையாகிய ராகாதிகளை "விசார அதி உஷ்ணத்தினால் அல்லாது மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது,அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும்.*
*அதை மனுஷய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது, அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்,தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். நூறு ஆயிரம் முதலிய வருடகாலம் தவஞ் செய்து இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்.இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறதைப் பார்க்கிலும்,தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்,நினைக்கின்றதிலும்,இதை விடக் கோடிப்பங்கு,பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்கின்றார்*
எவ்வாறு எனில் ?
*ஒரு ஜாம நேரம் மனத்தில் இக விசாரமின்றி, பர விசாரப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு,தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவதுஅல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்றார்*
*இவ்வாறு அருளைப் பெறுவதற்கு தகுதி எதுவெனில்,? எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமையுடன் இருக்கவேண்டும்,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் எல்லா ஆன்மாக்களையும் சகோதர ஆன்மாவாக பாவிக்க வேண்டும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். நமது தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும், மேலும் உலகியல் மனிதர்களை கவ்விக் கொண்டு இருக்கும் பொய்யான, சாதி சமய மதக் கொள்கைகளின் மேல் அணுஅளவும் பற்று வைக்ககாமல்சுத்த சன்மார்க்க கொள்கையில் முழுமையாக பற்று வைக்க வேண்டும்*
*இவற்றை அறிந்து உணர்ந்து தெரிந்து வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறைவனுடைய அருளைப் பெற்று சுத்த பிரணவ ஞான தேகமாக மாற்றிக் கொண்டு கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வாங்கு வாழ்வார்கள்*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*
*9865939896*
1 கருத்துகள்:
நன்றி
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு