சன்மார்க்கிகள் உயிர் பெற்று வருவார்கள்!
*செத்தவர்களில் யார் யாரெல்லாம் உயிரோடே மீண்டும் எழுப்பபடுவதற்கு இறைவனால் முன்குறிக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்*
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- அருட்பெருஞ்ஜோதி அகவல்
***********************************
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
- சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
***********************************
சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- சிவ தரிசனம்
***********************************
புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து.
செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
துன்மார்க்கம் போக தொலைந்து.
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
என்மார்க்கம் நின்மார்க்க மே.
- சன்மார்க்க உலகின் ஒருமைநிலை
***********************************
ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
- உத்திர ஞானசிதம்பரமாலை
***********************************
செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
- பேரருள் வாய்மையை வியத்தல்
***********************************
அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
- இறைவரவு இயம்பல்
***********************************
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.
இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்
சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்
உற்றவரை உற்றவர்கள் உற்று.
யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
கம்பலத்தால் ஆகும் களித்து.
- சுத்த சிவநிலை
***********************************
விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- மரணமிலாப் பெருவாழ்வு
***********************************
பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்தநிலை காரோ
கண்கெட்ட மாட்டி னீரே.
-சமாதி வற்புறுத்தல்
***********************************
இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- உலகப்பேறு
***********************************
வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
- தனித் திருஅலங்கல்
***********************************
சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- பந்தாடல்
***********************************
எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- ஜோதியுள் ஜோதி
***********************************
செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
- அருள் அற்புதம்
***********************************
சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
இதுவே தருணம்என்று சின்னம் பிடி.
- சின்னம் பிடி
***********************************
துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
- கண்புருவப் பூட்டு
***********************************
சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
- சத்திய அறிவிப்பு
***********************************
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு