வியாழன், 1 ஏப்ரல், 2021

கடவுள் மனிதர்களைத் தேடுகிறார் !

 *கடவுள் மனிதர்களைத்  தேடுகிறார் !* 


உண்மை. நேர்மை. ஒழுக்கம்.

உயிர்இரக்கம்

பொதுநோக்கம் நிறைந்த மனிதர்களை கடவுள்  தேடுகிறார்.


உண்மை.நேர்மை.

ஒழுக்கம்.

உயிர்இரக்கம் பொதுநோக்கம் இல்லாமல் தவறு செய்பவர்கள் தங்களை காப்பாற்ற வேண்டும் என கடவுளைத் தேடுகிறார்கள்.  


*பாவம் செய்பவர்கள் கடவுளைத் தேடுகிறார்கள்*


*புண்ணியம் செய்பவர்களை கடவுள் தேடுகிறார்*


*கடவுளை ஏன்?  தேடுகிறார்கள் !*


அச்சம் பயம்.துன்பம்.துயரம் நிறைந்தவர்கள் துன்பத்தைப் போக்கிக்கொள்ள கடவுளைத் தேடுகிறார்கள். 


*புண்ணியம் பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன*? 


*மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும்*. 


மேலும் *எண்ணம் சொல் செயல்களின் வாயிலாகவும் பாவம் புண்ணியம் நம்மை வந்து அடைகின்றன*. 


மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடைகின்றது. 


*அவையாவன:-*


*மனத்தினால்* பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள். 


*வாக்கினால்* பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள். 


*தேகத்தினால்* (காயம் ) பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்கு செய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - 

இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள். 


இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - *இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.* 


பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - *இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள்.* 


அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் *தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.*) 


*மேலே கண்ட பாவங்கள் செய்பவர்களை கடவுள் கண்டு கொள்வதில்லை.*


*மேலே கண்ட புண்ணியங்களை செய்பவர்களை கடவுள் தானே வந்து அருள் வழங்கி ஆட்கொள்கிறார்*


*வள்ளலார் பாடல்!*


வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்

மாதவம் பன் னாட்புரிந்து மணிமாட நடுவே


தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே

திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்


நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந் தெனக்கே

*நல்லதிரு அருளமுதம் நல்கியதன்றியும்* என்


*ஊனிருக்கும் குடிசையிலும்* *உவந்துநுழைந் தடியேன்*

*உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.*! 


நாம் வணங்கும் தத்துவ தெய்வங்களான பிரம்மா.விஷ்ணு. நாரணர்.நான்முகர்.

சங்கரன்.மகாதேவன் போன்றவர்களும் மற்றும் பிறரும். *பல்லாயிரம் ஆண்டுகளாக கடுமையான மாதவம் செய்து அருள் வழங்க வேண்டுமாறு வேண்டிக் கொண்டு உள்ளார்கள்.* 


தேன் எடுக்கும் வண்டுகள் அமரும் மெல்லிய பூக்கள்போல் மலரணை அமைத்து இறைவன் திருவடி படுவதற்காக  காத்துக் கொண்டுள்ளார்கள்.


அவர்களைக் கண்டு கொள்ளாத இயற்கை உண்மை கடவுளான தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.


வடலூருக்கு அடுத்த மேட்டுகுப்பம் என்னும் சிறிய கிராமத்தில். வள்ளலார் அமர்ந்து இருக்கும் சிறிய குடிசையைத்  தேடிவந்து *வலிந்து உள்ளே நுழைந்து* அருளை வாரி வழங்கி *பஞ்சபூத அணுக்களால் பின்னப்பட்ட ஊன்  உடம்பின் உள் நுழைந்து*. உள்ளம் எனும் சிறு குடிசையிலும் *உள்ளே நுழைந்து கலந்து ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி என்றும் பிரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளாய் என்று வள்ளலார் போற்றி புகழ்கின்றார்*.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேடிவந்து அருள் வழங்க பெற்றுக்கொண்ட ஒரே புண்ணிய அருளாளர் வள்ளலார் ஒருவரே ! 


*என்ன புண்ணியம் செய்தேனோ..அம்மா என்ன புண்ணியம் செய்தோனோ !* 

என்று தன்னைத்தானே மகிழ்ந்து கொள்கிறார்.


*மேலும் வள்ளலார் பாடல் !* 


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்


சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை


*ஓதி முடியா தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.!*  


பாதிஇரவில் என்றால் இரவு 12 மணிக்கு எனை எழுப்பி அருள்ஜோதி அளித்து உள்ளகத்தே சூழ்ந்து கலந்து நிறைந்து துலங்குகின்றாய்.

நான் அடைந்த அந்த பெரும் பேற்றை  சொல்ல வார்த்தைகளே இல்லை என்கிறார்.


*மேலும் ஒரு பாடலில் பதிவு செய்கிறார்*


என்சாமி எனதுதுரை என்உயிர் நாயகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்


பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்


தன்சாதி உடைய பெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம் சத்தியமே


மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின் தனக்கே

வெளியாகும் இரண்டரை 

நாழிகை கடந்த போதே.!


என்னை ஆட்கொண்டு அருளை வழங்கி கலந்து பேரின்பத்தை கொடுத்து வாழ்ந்து இருந்தாலும் எனக்கு மட்டும் கிடைத்தது மகிழ்ச்சி அல்ல. *என்போல் இவ்வுலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் அந்த பேரின்ப சித்தி பெருவாழ்வு நிலையை பெறவேண்டும்.* என தன் விருப்பத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி விண்ணப்பம் செய்து முறையீடு செய்து கொள்கிறார் வள்ளலார். 


*அதுதான் அவரின் மனம் வாக்கு காயத்தால் செயலால் கிடைத்த  புண்ணியமாகும்*


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே முழுமையான புண்ணியத்தை செய்து. முழுமையான புண்ணியத்தை பெற்றுக் கொண்டுள்ள ஒரே ஒரு அருளாளர் வள்ளலார் ஒருவரே ! 


*வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார்.* 


*மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்*


*கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்*


எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்


*நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!* 


*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என எண்ணியவர் வள்ளலார்போல் உலகில் ஒருவரும் இல்லை.* என்றே சொல்லலாம்.


*அதனாலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து ஆட்கொண்டார்.*


மேலும் 

சொல்லுகிறார்.


*மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்*

*யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை!*


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி! 


சித்திகள் அனைத்தையுந் தெளிவித்து எனக்கே

சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை ! 


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி! 


*உலகினி லுயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்*

*விலக நீ யடைந்து விலக்குக மகிழ்க* ! 


*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை* ! 


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி ! 


அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ் ஜோதி ! 


மேலே கண்ட அகவல் வரிகளின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.


*வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றுபவர்கள். உண்மை நேர்மை ஒழுக்கத்தை கடைபிடித்து புண்ணியத்தை தேடிக்கொண்டால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நம்மைத் தேடிவந்து அருளை வாரி வழங்கி  ஆட்கொள்வார்* 


எனவே *பாவம் செய்யாமல் புண்ணியத்தை செய்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு