புதன், 7 ஏப்ரல், 2021

கடவுளை அறியாத மக்கள் !

 *கடவுளை அறியாத மக்கள் !* 

உலகம் உயிர்கள் பொருள்கள் யாவையும் படைத்தது கடவுள் தான் என்பது யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.அதுதான் உண்மை. 

அந்த கடவுள் யார்? என்பதுதான் பல்லாயிரம் ஆண்டுகளாக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.

ஆன்மீகவாதிகளான கடவுளை நம்புகிறவர்களாலும்.அறிவியல் அணு ஆராய்ச்சி வல்லுனர்களாலும்.

பகுத்தறிவு சார்ந்தவர்களாலும்.மற்றும் எவராலும் இன்றுவரை கடவுளின் உண்மைத் தன்மைப்பற்றி சரியான  விடை தரமுடியாமல் தவிக்கிறார்கள்.


*எவராயினும் கடவுளைக் கண்ணால் கண்டால்தானே உண்மையை வெளிப்படுத்த முடியும்* ஒருவரும் கடவுளைக் காண முடியவில்லை.

அதற்கு காரணம் கடவுளைக் காணும் தகுதி யாராலும் பெறமுடியவில்லை.


*கடவுளைக் காணும் தகுதி மனிதனுக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விபரமாகும்.* 


கடவுளைக் காணும் தகுதிப்பெற்றவரின் உடல் உயிர் ஆன்மா ஆகிய மூன்றும்  இறைவன் அருளைப்பெற்று ஒன்றைஒன்று பிரியாமல் மரணத்தை வென்று கடவுள் தேகமான அருள் தேகத்தைப் பெற்றவர்கள் மட்டுமே கடவுளின் உண்மையை காணமுடியும் என்பதை. *மரணத்தை வென்று கடவுளைக் கண்ட வள்ளலார் இதுதான் கடவுள். இதுதான் கடவுளின் உருவம் என்பதை தெளிவாக உலகிற்கு சொல்லுகிறார்*. 


*வள்ளலார் பாடல்!*


*கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டு கொண்டேன்*  *கோயில்*

*கதவுதிறந் திடப்பெற்றேன்* *காட்சியெலாம் கண்டேன்*


அடர்கடந்த திருஅமுதம் உண்டு அருள்ஒளியால் அனைத்தும்

அறிந்து தெளிந்து *அறிவுருவாய்* அழியாமை அடைந்தேன்


உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்

உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்


இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் 

ஓங்கினவே

இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.! 


மேலே கண்ட பாடலில் கடவுளைக் கண்ட விபரத்தை சொல்லுகிறார்.

கடவுள் என்ன வடிவமாக உருவமாக  இயங்கி கொண்டுள்ளார் என்னும் விளக்கத்தையும் கீழே உள்ள பாடல் வாயிலாகவும் சொல்லுகிறார்.


*வள்ளலார் பாடல்*


*அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை* 

என்அம்மையை 

என்அப்பனை 

என்ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் 

என்உயிரை 

என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்த சிகாமணியை


மருவு பெருவாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை 

மாமணியை என் கண்மணியைக்


கருணை நடம் புரிகின்ற கனக 

சபாபதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.! 


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி !  அதாவது அருள் நிறைந்த பெருஞ்ஜோதி வடிவமாக உள்ளார் என்பதுதான் கடவுளின் உண்மை வடிவம் உண்மை வண்ணமாகும்.*


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் என்னும் தலைப்பில்  வள்ளலார் சொல்வதைப் பார்ப்போம்*.


ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், 

பாச வைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுரபக்தியால் ருத்திரன் ஆயுசும். *பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம் என்கிறார் வள்ளலார்* 


*எப்படியெனில்:?* 


*கடவுள் சர்வ ஜீவதயாபரன்*, *சர்வ வல்லமை உடையவன்*; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயவு  உடையவர்களாய்ச் சர்வ வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி *மனித தேகத்தில் வருவித்தார்*. ஞானிக்குத் தயவு அதிகப்பட்டு இருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மகா அற்புதங்களான இறந்தார் எழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். 


*எந்த ஜீவர்களிடத்தில் தயா விருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாய் இருக்கும். மற்றவர்கள் இடத்தில் காரியப்படாது* 


ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், *கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும்*. 


ஆதலால் பக்தியென்பது 

*மன நெகிழ்ச்சி*, *மனவுருக்கம்*

*மனமகிழ்ச்சியை* உண்டாக்கும்., 


அன்பு என்பது *ஆன்ம நெகிழ்ச்சி*, *ஆன்மவுருக்கம்.*

*ஆன்ம மகிழ்ச்சியை* உண்டாக்குவதாகும். 


*எனவே ஜீவகாருயத்தின் லாபமே அன்பு அருள்  கருணை என்பதாகும்*


*எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பொது நோக்கமாகும் என்பதாகும்*.   


இந்திரியங்கள் வழியாக அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது.

 *ஜீவகாருண்யம் உண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்பு உண்டானால் சிவானுபவம் உண்டாகும்.* 


*கடவுளைக் காண்பதற்கும் அருளைப் பெறுவதற்கும் தடையாக இருப்பது.சாதி சமய மதங்களின் பிரிவினைக் கொள்கைகளாகும்*

*சாதி சமய மதங்கள் !*


தத்துவ ஒழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழில் ஒழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. மதங்கள்


ஆறு அந்தங்களைப்பற்றி மதங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. 


*தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்*. 


அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், 

ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால்


 *மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சமரச சுத்தசிவ சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.*


*உயர்ந்த அறிவுள்ள மனித பிறப்பின் லட்சியமே கடவுள் அருளைப்பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி*.

*என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதே வாழ்க்கையாகும்*  


ஆதலால் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து அறிந்து உணர்ந்து தொடர்பு கொள்வதற்கு *இடைவிடாது ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்*. மேலும் *இறைவன் மீது இடைவிடாது  அன்பு கொள்ள சிற்சபை நடத்தை தெரிந்து தோத்திரம் செய்ய வேண்டும்.*   


இந்த உண்மை நேர்வழியைத் தெரிந்து கொள்ள. வள்ளலார் தோற்றுவித்த உயர்ந்த சிறந்த தனித்தன்மை வாய்ந்த  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய கொள்கையை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு