சனி, 25 ஜூன், 2022

நித்திய தேகம்!

 *நித்திய தேகம்!*


மனித தேகத்திற்கு நித்திய தேகம் என்பதும் அநித்திய தேகம் என்பதுமான இரண்டு விதமான தேக வாழ்க்கை உள்ளன.


*உடம்பு உயிர் ஆன்மாவைப்  பிரிக்காமல், அழிக்காமல்  மரணத்தை வென்று சுதந்திரமாக எக்காலத்தும் அழியாமல் வாழ்வதே நித்திய தேகம் என்னும் அருள் தேக வாழ்க்கையாகும்.*


*உடம்பு,உயிர்,ஆன்மாவுடன் இணைந்து வாழ்ந்து இறுதியில் மரணம் என்னும் பெரும்பிணி வந்து மரணம் அடைந்து உடம்பு உயிர் ஆன்மா  தனித்தனியே பிரிந்து பிரிந்து இறந்து இறந்து  மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து  சுதந்தரம் இல்லாமல் வாழ்வதற்குப் பெயர் "அநித்திய" தேக வாழ்க்கை என்று பெயர்.* 


*வள்ளலார் பாடல் !* 


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி


நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி


ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.!


**மனிதன் செய்யும் பாவங்களிலே மிகவும் பெரிய பாவம்  சாவதும் பிறப்பதும் தான்.(பாவத்தின் சம்பளமே மரணம் என்பதுதான்) என்பதை எண்ணி வேதனைப்படுவது  (நோவது) இன்று புதியது அன்று.பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து சாவதும் பிறப்பதுமான அதே வாழ்க்கை தொடர்ந்து வாழ்ந்து கொண்டே வருகின்றான் மனிதன்.*


*இந்த நிகழ்வை சூழலை பெரும்பிணியை மாற்றுவதற்காக பல ஞானிகள், பல அருளாளர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து பார்த்தார்கள்.*

*பல தத்துவக் கடவுள்களைத் தொடர்பு கொண்டார்கள்.பல வகையான வேண்டுதல்கள் வழிபாடுகள்,இயற்கை மருத்துவ முறைகள் செய்தும்,காடு,மலை,குகை,குன்றுகளுக்கு சென்று கடுமையான தவம்,தியானம் யோகம் போன்ற தன்னிலை உணர்வுடன்  தனித்தும், நினைத்தும், துதித்தும் பல முயற்சிகள் செய்தும் எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை.* 


*அருள் வழங்கும் கடவுளைத் தொடர்பு கொண்டு அருள் பெற்றால் மட்டுமே.மரணம் என்னும் பெரும் பாவத்தை நீக்கி புண்ணியமாகிய நித்திய தேக வாழ்வு வாழலாம் என்ற உண்மை அறிந்தார்கள்.ஆனாலும் அவர்களால் அருள் வழங்கும் இயற்கை உண்மைக் கடவுளை அறிந்து தெரிந்து கொள்ளவும் முடியவில்லை, தொடர்பு கொள்ளவும் முடியவில்லை,அருள் பெறவும் முடியவில்லை, அதனால் பிறப்பும் இறப்பும் தொடர் கதையாகவே இருக்கின்றது.*


*காரணம் அவர்களின் ஆன்மாவைத் தெரியவொட்டாமல் அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் மறைத்துக் கொண்டுள்ளதே காரண காரியமாகும்.*


*சில ஞானிகள் இந்திரிய கரண ஒழுக்கத்தால்  ஏகதேச அருளைப் பெற்றார்கள்.* அதனால்

*மதத்தலைமை பதத்தலைமை பெற்றார்கள் இம்மை இன்ப வாழ்க்கை,மறுமை இனப வாழ்க்கை பெற்று பஞ்ச பூதங்களில் கலந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து  மீண்டும் பிறப்பு எடுத்து வாழ்வதற்கு இவ்வுலகிற்கே திரும்பி வந்துவிடுகிறார்கள்.*


*இயற்கை உண்மை கடவுளை அறிந்து பூரண அறிவும் பூரண அருளும் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகினால் மட்டுமே பிறப்பையும் இறப்பையும் தவிர்க்க முடியும்.*


*உலகப்பற்றை விடுத்து இந்திரிய,கரண,ஜீவ,ஆன்ம ஒழுக்கத்தை வள்ளல்பெருமான்  பூரணமாக கடைபிடித்து கருணையே வடிவமாகி பிறர்களுக்கு அடுத்த துன்பத்தை போக்கி வாழ்ந்த  காரணத்தினால்,ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருந்த அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் நீங்கி (கரைந்து) இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று அநித்திய தேகத்தை அழியாத நித்திய தேகமாக மாற்றிக் கொண்டார்.*


*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி!* (அகவல்)


*வள்ளலார் பாடல்!*


அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என்

அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை


மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை மா மணியை என் கண் மணியைக்


கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தேன்.!


என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தாம் கண்ட இயற்கை உண்மை கடவுளை,அவரிடம் பெற்ற அருள் அனுபவத்தை அருள் வாழ்க்கையை அதாவது நித்திய தேகத்தின் வழிமுறைகளை தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.


*உயர்ந்த அறிவு பெற்ற மனித வாழ்க்கை என்பதே மரணம் அடையாமல் ஆன்ம இன்ப லாபம் என்னும் அருள் தேகத்தை ( நித்திய தேகத்தை) பெற்று  பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*


(சுத்த சன்மார்க்கம் என்பதே மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டும் மார்க்கமாகும்)


மேலும் வள்ளலார் சொல்கிறார்!


*மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!*

 

மேலும்


உடலுறு பிணியால் உயிர் உடல் கெடாவகை

அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி! 


உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்

மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே! 


*என்று அகவல் வரிகளில் தெரியப் படுத்தி உள்ளார்.உடற் பிணிக்கு மருந்து உள்ளது போல் உயிர் பிணிக்கும்,*

*மரணப்பெரும் பிணிக்கும் மருந்து கண்டுபிடித்தவர் வள்ளலார்.* 


*அந்த மருந்திற்கு ஞான மருந்தும் என்றும் அருள் மருந்தும் என்றும் பெயர்.அந்த மருந்து வெளியில் எங்கும் கிடைக்காது எதனாலும் செய்யவும் முடியாது. அந்த மருந்து ஒவ்வொரு ஆன்மாவிலும் இறைவனால் வைக்கப்பட்டு உள்ளது* 


*உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்கள் ஆன்மாவில் வைக்கப்பட்டுள்ள அருள் மருந்தை எடுத்து அனுபவிக்க வழிதெரியாமல்  மாண்டு கொண்டே(இறந்துகொண்டே) இருந்தார்கள். இருக்கின்றார்கள்*

*ஆன்மாவில் இருக்கும் அருள் மருந்தை எடுத்து அனுபவிக்கும் வழிமுறையை காட்டிக்கொடுக்க வந்தவர்தான் வள்ளலார்.*


வள்ளலார் பாடல்!


உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண

உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்


கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்


தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி


எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!


ஆன்மாவின் கதவு திறந்து உள்ளே புகுந்து அருள் உணவு (ஞானமருந்து) உட்கொள்ளும் உளவை காட்டி உள்ளார்.


மேலும் வள்ளலார் பாடல்! 


திருத்தகும் ஓர் தருணம் இதில் திருக்கதவம் திறந்தே

திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்


கருத்து மகிழ்ந்து  என்உடம்பில் கலந்துளத்தில் கலந்து

கனிந்து உயிரில் கலந்தறிவிற் கலந்து உலகம் அனைத்தும்


உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா

தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே


திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!  


என்னும் பாடல்கள் வாயிலாக எளிய தமிழில் நித்திய வாழ்வு வாழ்வதற்கு உண்டான அருள் அமுதம் என்னும் ஞானமருந்து அருந்தி மரணத்தை வென்று நித்திய வாழ்வு வாழும் வழியை வெளிப்படுத்தி உள்ளார்..


நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய வழியில் நின்று சென்று நித்திய வாழ்வு வாழ்வோம்.


*வள்ளலார் பாடல்!*


இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம் நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்த பிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


மேலே கண்ட பாடலை பலமுறை ஊன்றி படித்து உணரவும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு