திரு அருட்பா ! சன்மார்க்க அன்பர்கள் வழிபாட்டு பாடல்கள் !
அன்பெனும் பிடியுள் அகப்படும்மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம்அருட்பெருஞ்ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி
எங்கெங்கு இருந்து உயிர் ஏதெது வேண்டினும்
அங்கங் கிருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழையது என்று
அதுவது வாய்த்திகழ் அருட்பெருஞ்ஜோதி
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி
எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு
அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி
எச்சோ தனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்றருள் அருட்பெருஞ்ஜோதி
எவையெலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின
அவையெலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற அடக்கம் அருட்பெருஞ்ஜோதி
உயிருறும் மாயையின் உறுவிரிவு அனைத்தும்
அயிரற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
உயிருறும் இருவினை உறுவிரிவு அனைத்தும்
அயர்வுற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.
படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மானை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிருவருளாலே நான்தான்ஆ னேனே.
மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருத்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
இறக்கவும் ஆசை இல்லை; இப்படிநான்
இருக்கவும் ஆசை இன்றி; இனிநான்
பிறக்கவும் ஆசை இலை; உலகெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலை துயர்அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி யேகஜோதி யேகஜோதி யேகஜோதி
நான்செயும் பிழைகள்பலவும் நீபொறுத்து
நலம்தரல் வேண்டுவன் போற்றி
ஏன்செய்தாய் என்பார்இல்லைமற் றெனக்குஉன்
இன்னருள் நோக்கசெய் போற்றி
ஊன்செய் நாவால்உன் ஐந்தெழுத்து எளியேன்
ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயம் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
வள்ளலே போற்றிநின் னருளே.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில் யான் ஒருவனன்றோ வகையறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யா உனக்கு
மகனலனோ நீயெனக்கு வாய்ந்ததந்தை யலையோ
கோழையுலகு உயிர்த்துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருளொளியைக் கொடுத்தருள் இப்பொழுதே.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெரு மான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தை மிக விழைந்த தாலோ
வள்ளற் பெருமாளின் திருநெறிகள்
1. கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக் கொள்ளாதீர்கள்.
4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவ தன்னையும் விலக்குக.
5. புலால் உண்ணற்க எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை வழிபாடாகக் கொள்க.
7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக.
8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய ஒழுக்கங்களைப் பின்பற்றுக.
9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க.
10. உயிர்க்குலமே கடவுள் வாழும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.
திருப்பள்ளி எழுச்சி
திருச்சிற்றம்பலம்
1. பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்ஒளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
முழுதும்ஆ னான்என ஆகம வேத
முறைகள்எ லாம்மொழி கின்றமுன் னவனே
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
2. துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
3. நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
4. கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
5. புன்மாலை இரவெலாம் புலர்ந்த்து ஞானப்
பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே
6. ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினார் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
7. சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
நினைப்பள்ளி உண்ணத்தெள் ஆரமு தளிக்கும்
நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
8. மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
9. மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
இருள்அறுத் தெனைஆண்ட அருட்பெருஞ் சோதி
என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
10. அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
-
திருச்சிற்றம்பலம்
திருவடிப் புகழ்ச்சி
பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக
பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப்
பரமஏ காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம் மகத்துவம்
பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிர தி சயநிட்க ளம்பூத
பௌதிகா தாரநிபுணம்
பவபந்த நிக்ரக வினோதச களம்சிற்
பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம்
பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த ஆகமாந் தாந்தநிரு
பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம்
பகிரங்கம் அந்தரங்கம்
பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம்
பரம்பரம் அனந்தம்அசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம்
பரபதம் பரமசூக்ஷ்மம்
பராபரம் அநாமய நிராதரம் அகோசரம்
பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம்
பரசுகோ தயம்அக்ஷயம்
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்
பதித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப
ரம்சிதம் பரவிலாசம்
பகர்சுபா வம்புனிதம் அதுலம்அது லிதம்அம்ப
ராம்பர நிராலம்பனம்
பரவுசா க்ஷõத்கார நிரவய வம்கற்ப
னாதீத நிருவிகாரம்
பரதுரிய அநுபவம் குருதுரிய பதம்அம்
பகம்அம்பகா தீதவிமலம்
பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற்
பதாதீதம் இன்பவடிவம்
பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு
பவவிலாசப் பிரகாசம்
பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த
பதமகா மௌனரூபம்
பரமபோ தம்போத ரகிதகசி தம்சம்ப
வாதீதம் அப்பிரமேயம்
பகரனந் தானந்தம் அமலம்உசி தம்சிற்ப
தம்சதா னந்தசாரம்
பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம்
பாகார நிருவிகற்பம்
பரசுகா ரம்பம் பரம்பிரம வித்தம்
பரானந்த புரணபோகம்
பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம்
பரபரீணம் பராந்தம்
பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச
பாவனம் பரமமோக்ஷம்
பரமானு குணநவா தீதம்சி தாகாச
பாஸ்கரம் பரமபோகம்
பரிபாக வேதன வரோதயா னந்தபத
பாலனம் பரமயோகம்
பரமசாத் தியவதீ தானந்த போக்கியம்
பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த
பாதாக்ர சுத்தபலிதம்
பரமசுத் தாத்விதா னந்தஅனு பூதிகம்
பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த
பரமானு பவவிலாசம்
தரமிகும் சர்வசா திட்டான சத்தியம்
சர்வவா னந்தபோகம்
சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ
சத்திதர மென்றளவிலாச்
சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத்
தன்மைபல வாகநாடித்
தம்மைநிகர் மறையெலாம் இன்னுமள விடநின்ற
சங்கரன் அநாதிஆதி
சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட
சசிகண்ட சாமகண்ட
சயசய வெனும் தொண்டர் இதயமலர் மேவிய
சடாமகுடன் மதன தகனன்
சந்திரசே கரன் இடப வாகனன் கங்கா
தரன்சூல பாணிஇறைவன்
தனிமுதல் உமாபதி புராந்தகன் பசுபதி
சயம்புமா தேவன்அமலன்
தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழும்அன்பர்
தங்களுக் கருளாண்டவன்
தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச்
சைலம்எனும் ஒருவில்லவன்
தக்ஷிணா மூர்த்திஅருள் மூர்த்திபுண் ணியமூர்த்தி
தகும்அட்ட மூர்த்தியானோன்
தலைமைபெறு கணநாய கன்குழகன் அழகன்மெய்ச்
சாமிநம் தேவதேவன்
சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான்
தாணுமுக் கண்களுடையான்
சதுரன் கடாசல உரிப்போர்வை யான்செந்
தழல்கரத் தேந்திநின்றோன்
சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ
சம்பிரமன் சர்வேச்சுரன்
தகைகொள்பர மேச்சுரன் சிவபிரான் எம்பிரான்
தம்பிரான் செம்பொற்பதம்
தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா
சத்திவடி வாம்பொற்பதம்
தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற்
சத்திவடி வாம்பொற்பதம்
சாற்றரிய இச்சைஞா னங்கிரியை என்னுமுச்
சத்திவடி வாம்பொற்பதம்
தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த
சத்திவடி வாம்பொற்பதம்
தகுவிந்தை மோகினியை மானைஅசை விக்குமொரு
சத்திவடி வாம்பொற்பதம்
தாழ்வில்ஈ சானமுதல் மூர்த்திவரை ஐஞ்சத்தி
தம்சத்தி யாம்பொற்பதம்
சவிகற்ப நிருவிகற் பம்பெறும் அனந்தமா
சத்திசத் தாம்பொற்பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திருவருட்
சத்திஉரு வாம்பொற்பதம்
தவாதசாந் தப்பதம் துவாதசாந் தப்பதம்
தரும்இணை மலர்ப்பூம்பதம்
சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலர்இதய
சாக்ஷியா கியபூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களில்
சமரச முறும்பூம்பதம்
தருபரம் சூக்குமம் தூலம்இவை நிலவிய
தமக்குள்உயி ராம்பூம்பதம்
சரஅசர அபரிமித விவிதஆன் மப்பகுதி
தாங்கும் திருப்பூம்பதம்
தண்டபிண் டாண்டஅகி லாண்டபிர மாண்டந்
தடிக்கவரு ளும்பூம்பதம்
தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார
சகலகர்த் துருபூம்பதம்
சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா
சங்குலவு நற்பூம்பதம்
மரபுறு மதாதீத வெளிநடுவில் ஆனந்த
மாநடன மிடுபூம்பதம்
மன்னும்வினை ஒப்புமல பரிபாகம் வாய்க்கமா
மாயையை மிதிக்கும்பதம்
மலிபிறவி மறலியின் அழுந்தும்உயிர் தமைஅருளின்
மருவுற எடுக்கும்பதம்
வளர்ஊர்த்த வீரதாண் டவமுதல் பஞ்சக
மகிழ்ந்திட இயற்றும்பதம்
வல்லமுய லகன்மீதில் ஊன்றிய திருப்பதம்
வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாம்தவிர்த் தழியாத சுத்தநிலை
வாய்த்திட வழங்கும்பதம்
மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம்
மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம்
மறைப்பரி உகைக்கும்பதம்
மறையவன் உளங்கொண்ட பதம் அமித கோடியாம்
மறையவர் சிரஞ்சூழ்பதம்
மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொள்
மறையவன் வாழ்த்தும்பதம்
மறையவன் செயஉலகம் மாக்கின்ற அதிகார
வாழ்வைஈந் தருளும்பதம்
மறையவன் கனவினும் காணாத பதம்அந்த
மறையவன் பரவும்பதம்
மால்விடை இவர் ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடு
மால்அருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிரு
மால்விழிஇ லங்கும்பதம்
மால்தேட நின்றபதம் ஓரனந் தம்கோடி
மால்தலை அலங்கற்பதம்
மால்முடிப் பதம்நெடிய மால்உளப் பதம்அந்த
மாலும்அறி வரிதாம்பதம்
மால்கொள் அவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு
வாய்மைபெற நிற்கும்பதம்
மால்உலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின்
வதிந்திட அளிக்கும்பதம்
வரையுறும் உருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி
வயஉருத் திரர்சூழ்பதம்
வாய்ந்திடும் உருத்திரற்கியல்கொள் முத்தொழில் செய்யும்
வண்மைதந் தருளும்பதம்
வானஇந் திரராதி எண்திசைக் காவலர்கள்
மாதவத் திறனாம்பதம்
மதிஇரவி ஆதிசுரர் அசுரர் அந் தரர்வான
வாசிகள் வழுத்தும்பதம்
மணிஉரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர்
மாமுனிவர் ஏத்தும்பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள்
மதித்துவர மேற்கும்பதம்
மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர்
மற்றையர்கள் பற்றும்பதம்
வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கள்
மனக்கோயில் வாழும்பதம்
மாதேவி எங்கள்மலை மங்கைஎன் னம்மைமென்
மலர்க்கையால் வருடும்பதம்
மறலியை உதைத்தருள் கழற்பதம் அரக்கனை
மலைக்கீழ் அடர்க்கும்பதம்
வஞ்சமறு நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன்
மஞ்சுற விளங்கும்பதம்
வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடஉள்
மந்தணந விற்றும்பதம்
மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட
மாறிநட மாடும்பதம்
மறக்கருணை யும்தனி அறக்கருணை யும்தந்து
வாழ்விக்கும் ஒண்மைப்பதம்
இரவுறும் பகலடியர் இருமருங் கினும்உறுவ
ரெனவயங் கியசீர்ப்பதம்
எம்பந்த மறஎமது சம்பந்த வள்ளல்மொழி
இயல்மண மணக்கும்பதம்
ஈவரசர் எம்முடைய நாவரசர் சொற்பதிக
இசைபரி மளிக்கும்பதம்
ஏவலார் புகழ்எமது நாவலா ரூரர்புகல்
இசை திருப் பாட்டுப்பதம்
ஏதவூர் தங்காத வாதவூர் எங்கோவின்
இன்சொல்மணி அணியும்பதம்
எல்லூரு மணிமாட நல்லூரி ல்அப்பர்முடி
யிடைவைகி யருள்மென்பதம்
எடுமேல் எனத்தொண்டர் முடிமேல் மறுத்திடவும்
இடைவலிந் தேறும்பதம்
எழில்பரவை இசைஆ ரூர்மறுகின் அருள்கொண்டி
ராமுழுதும் உலவும்பதம்
இன்தொண்டர் பசிஅறக் கச்சூரின் மனைதொறும்
இரக்கநடை கொள்ளும்பதம்
இளைப்புறல் அறிந்தன்பர் பொதிசோ றருந்தமுன்
னிருந்துபின் நடக்கும்பதம்
எறிவிறகு விற்கவளர் கூடல் தெருத்தொறும்
இயங்கிய இரக்கப்பதம்
இறுவைகை யங்கரையில் மண்படப் பல்கால்
எழுந்துவிளை யாடும்பதம்
எங்கேமெய் அன்பருளர் அங்கே நலந்தர
எழுந்தருளும் வண்மைப்பதம்
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே
இரங்கிஈந் தருளும்பதம்
என்போன்ற வர்க்குமிகு பொன்போன் கருணைதந்
திதயத் திருக்கும்பதம்
என்னுயிரை யன்னபதம் என்னுயிர்க் குயிராய்
இலங்குசெம் பதுமப்பதம்
என்னறிவெ னும்பதம் என்அறிவினுக் கறிவாய்
இருந்தசெங் கமலப்பதம்
என் அன்பெ னும்பதம்என் அன்பிற்கு வித்தாய்
இசைந்தகோ கனகப்பதம்
என்தவ மெனும்பதம்என் மெய்த்தவப் பயனாய்
இயைந்தசெஞ் சலசப்பதம்
என்இருகண் மணியான பதம்என்கண் மணிகளுக்
கினியநல் விருந்தாம்பதம்
என்செல்வ மாம்பதம்என் மெய்ச்செல்வ வருவாய்
எனும்தாம ரைப்பொற்பதம்
என்பெரிய வாழ்வான பதம்என்க ளிப்பாம்
இரும்பதம்என் நிதி யாம்பதம்
என்தந்தை தாயெனும் இணைப்பதம் உறவாம்
இயற்பதம்என் நட் பாம்பதம்
என்குருவெ னும்பதம்என் இட்டதெய் வப்பதம்
எனதுகுல தெய்வப்பதம்
என்பொறிக ளுக்கெலாம் நல்விடய மாம்பதம்என்
எழுமையும் விடாப்பொற்பதம்
என்குறையெ லாம்தவிர்த் தாட் கொண்ட பதம்எனக்
கெய்ப்பில்வைப் பாகும்பதம்
எல்லார்க்கும் நல்லபதம் எல்லாம்செய் வல்லபதம்
இணையிலாத் துணையாம்பதம்
எழுமனம் உடைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட்
கின்னமுத மாகும்பதம்
எண்ணுறில் பாலில்நறு நெய்யொடு சருக்கரை
இசைந்தென இனிக்கும்பதம்
ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே
னென்னமது ரிக்கும்பதம்
எங்கள்பதம் எங்கள்பதம் என்றுசம யத்தேவர்
இசைவழக் கிடுநற்பதம்
ஈறிலாப் பதம்எலாந் தருதிருப் பதம் அழிவில்
இன்புதவு கின்றபதமே.
- திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஜோதி
ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
உரைமனம் கடந்த ஒருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஜோதி
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ் ஜோதி
ஐயமும் திரிபும் அறுத்தென துடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
ஒன்றென இரண்டென ஒன்றிரண் டெனஇவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஜோதி
ஓதா துணர்ந்திட ஒளிஅளித் தெனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
ஒளவியம் ஆதிஓர் ஆறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தம் அருட்பெருஞ் ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி
சுத்தசன் மார்க்கச் சுகத்தனி வெளிஎனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுத்தமெய்ஞ் ஞானச் சுகோதய வெளிஎனும்
அத்துவி தச்சபை அருட்பெருஞ் ஜோதி
தூய கலாந்தச் சுகந்தரு வெளிஎனும்
ஆயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
ஞானயோ காந்த நடத்திரு வெளிஎனும்
ஆனியில் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்
அமலசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுத்தசித் தாந்தத் சுகப்பெரு வெளிஎனும்
அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளிஎனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ் ஜோதி
தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்
அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சச்சிதா னந்தத் தனிப்பர வெளிஎனும்
அச்சியல் அம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளிஎனும்
ஆகா யத்தொளிர் அருட்பெருஞ் ஜோதி
காரண காரியம் காட்டிடு வெளிஎனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும்
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
வேதாக மங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாம்சபை அருட்பெருஞ் ஜோதி
என்றா தியசுடர்க் கியனிலை ஆய் அது
அன்றாம் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி
சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி
முச்சுடர் களும்ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுட ராம்சபை அருட்பெருஞ் ஜோதி
துரியமும் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்
அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
இயற்கைஉண் மையதாய் இயற்கைஇன் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளிஎனும்
அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
நவந்தவிர் நிலைகளும் நண்ணும்ஓர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
உபயபக் கங்களும் ஒன்றெனக் காட்டிய
அபயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாம்சபை அருட்பெருஞ் ஜோதி
மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
ஓதிநின் றுணர்ந்துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
வாரமும் அழியா வரமும் தரும்திரு
ஆரமு தாம்சபை அருட்பெருஞ் ஜோதி
இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்
அழியாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி
எனைத்தும் துன்பிலா இயல்அளித் தெண்ணிய
அனைத்தும் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி
பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொன் னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எம்பலம் எனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய் அருட்பெருஞ் ஜோதி
தம்பர ஞானசி தம்பரம் எனும்ஓர்
அம்பலத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் ஜோதி
வாடுதல் நீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல அருட்பெருஞ் ஜோதி
நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர்
ஆடகப் பொதுஒளிர் அருட்பெருஞ் ஜோதி
கற்பனை முழுவதும் கடந்தொளி தரும்ஓர்
அற்புதச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
ஈன்றநற் றாயினும் இனிய பெருந்தய
வானறசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
இன்புறு நான்உளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை அருட்பெருஞ் ஜோதி
எம்மையும் என்னைவிட் டிறையும் பிரியா
தம்மை அப்பனுமாம் அருட்பெருஞ் ஜோதி
பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக் கறிவாம் அருட்பெருஞ் ஜோதி
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதிஅ னாதியாம் அருட்பெருஞ் ஜோதி
தனுகர ணாதிகள் தாங்கடந் தறியும்ஓர்
அனுபவம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
உனும்உணர் வுணர்வாய் உணர்வெலாம் கடந்த
அனுபவா தீத அருட்பெருஞ் ஜோதி
பொதுவுணர்வு வுணரும் போதலால் பிரித்தே
அதுஎனில் தோன்றா அருட்பெருஞ் ஜோதி
உளவினில் அறிந்தால் ஒழியமற் றளக்கின்
அளவினில் அளவா அருட்பெருஞ் ஜோதி
என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
தன்னையில் உவந்த அருட்பெருஞ் ஜோதி
ஓதிஓ தாமல் உறஎனக் களித்த
ஆதிஈ றில்லா அருட்பெருஞ் ஜோதி
படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் ஜோதி
பவனத்தின் அண்டப் பரப்பின்எங் கெங்கும்
அவனுக் கவனாம் அருட்பெருஞ் ஜோதி
திவள்உற்ற அண்டத் திரளின்எங் கெங்கும்
அவளுக் கவளாம் அருட்பெருஞ் ஜோதி
மதன்உற்ற அண்ட வரைப்பின்எங் கெங்கும்
அதனுக் கதுவாம் அருட்பெருஞ் ஜோதி
எப்பாலு மாய்வெளி எல்லாம் கடந்துமேல்
அப்பாலும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
வல்லதாய் எல்லாம் ஆகிஎல் லாமும்
அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர்
அப்பொருள் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்
தத்திசை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
சக்திகள் எல்லாம் தழைக்கஎங் கெங்கும்
அத்தகை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ் ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகஎன்
றன்புடன் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
இறவா வரமளித் தென்னைமேல் ஏற்றிய
அறவாழி யாம்தனி அருட்பெருஞ் ஜோதி
நான்அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ் ஜோதி
எண்ணிய எண்ணியாங் கியற்றுக என்றெனை
அண்ணிஉள் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீஅது
ஆயினை என்றருள் அருட்பெருஞ் ஜோதி
எண்ணிற் செழுந்தேன் இனியதெள் ளமுதென
அண்ணித் தினிக்கும் அருட்பெருஞ் ஜோதி
சிந்தையில் துன்பொழி சிவம்பெறு கெனகத்தொழில்
ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
எங்கெங் கிருந்துயிர் ஏதேது வேண்டினும்
அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ் ஜோதி
சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம்புறம் முற்றுமாம் அருட்பெருஞ் ஜோதி
சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்
அகரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
உபரச வேதியின் உபயமும் பரமும்
அபரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
மந்தணம் இதுஎன மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி
எம்புயக் கனிஎன எண்ணுவார் இதய
அம்புயத் தமர்ந்த அருட்பெருஞ் ஜோதி
செடிஅறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி
துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
அன்பருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி
பொதுஅது சிறப்பது புதியது பயைழதென்
றதுஅது வாய்த்திகழ் அருட்பெருஞ் ஜோதி
சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை
ஆதனத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
ஓமயத் திருவுரு உவப்புடன் அளித்தெனக்
காமயத் தடைதவிர் அருட்பெருஞ் ஜோதி
எப்படி எண்ணிய தென்கருத் திங்கெனக்
கப்படி அருளிய அருட்பெருஞ் ஜோதி
எத்தகை விழைந்தன என்மனம் இங்கெனக்
கத்தகை அருளிய அருட்பெருஞ் ஜோதி
இங்குறத் திரிந்துளம் இளையா வகைஎனக்
கங்கையில் கனியாம் அருட்பெருஞ் ஜோதி
பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளிஎன்
ஆருயிர்க் குள்ஒளிர் அருட்பெருஞ் ஜோதி
தேவியுற் றொளிர்தரு திருவுரு உடன்என
தாவியில் கலந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி
எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்
அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்
ஐயறி வளித்த அருட்பெருஞ் ஜோதி
சாமா றனைத்தும் தவிர்த்திங் கெனக்கே
ஆமா றருளிய அருட்பெருஞ் ஜோதி
சத்திய மாம்சிவ சத்தியை ஈந்தெனக்
கத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ் ஜோதி
சாவா நிலைஇது தந்தனம் உனக்கே
ஆவா எனஅருள் அருட்பெருஞ் ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய்என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
மயர்ந்திடேல் சிறிதும் மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தெரித்த அருட்பெருஞ் ஜோதி
காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருட்பெருஞ் ஜோதி
எங்குலம் எம்மினம் என்பதொண் ணூற்றா
றங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
எம்மதம் எம்இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறியல் எனஉரை அருட்பெருஞ் ஜோதி
எண்தர முடியா திலங்கிய பற்பல
அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி
சாருயிர்க் கெல்லாம் தாரக மாம்பரை
ஆருயிர்க் குயிராம் அருட்பெருஞ் ஜோதி
வாழிநீ டூழி வாழிஎன் றோங்குபேர்
ஆழியை அளித்த அருட்பெருஞ் ஜோதி
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திகை
ஆய்ந்திடென் றுரைத்த அருட்பெருஞ் ஜோதி
எச்சம் நினக்கிலை எல்லாம் பெறுகஎன்
றச்சம் தவிர்த்தஎன் அருட்பெருஞ் ஜோதி
நீடுக நீயே நீள்உல கனைத்தும்நின்
றாடுக என்றஎன் அருட்பெருஞ் ஜோதி
முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்துறும்
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
கருமசித் திகளின் கலைபல கோடியம்
அரசுற எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
யோகசித் திகழ்வகை உறுபல கோடியும்
ஆகஎன் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய அருட்பெருஞ் ஜோதி
முத்திஎன் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றஎன் அருட்பெருஞ் ஜோதி
சித்திஎன் பதுநிலை சேர்ந்த அனுபவம்
அத்திறம் என்றஎன் அருட்பெருஞ் ஜோதி
ஏகசிற் சித்தியே இயல்உற அனேகம்
ஆகிய தென்றஎன் அருட்பெருஞ் ஜோதி
இன்பசித் தியின் இயல் ஏகம்அ னேகம்
அன்பருக் கென்றஎன் அருட்பெருஞ் ஜோதி
எட்டிரண் டென்பன இயலும்முற் படிஎன்
அட்டநின் றருளிய அருட்பெருஞ் ஜோதி
இப்படி கண்டனை இனிஉறு படிஎலாம்
அப்படி யேஎனும் அருட்பெருஞ் ஜோதி
படிமுடி கடந்தனை பார்இது பார்என
அடிமுடி காட்டிய அருட்பெருஞ் ஜோதி
சோதியுட் சோதியின் சொரூபமே அந்தம்
ஆதிஎன் றருளிய அருட்பெருஞ் ஜோதி
இந்தசிற் ஜோதியின் இயல்உரு ஆதி
அந்தம்என் றருளிய அருட்பெருஞ் ஜோதி
ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதிஎன் றருளிய அருட்பெருஞ் ஜோதி
நல்அமு தென்ஒரு நாஉளம் காட்டிஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
கற்பகம் என்உளங் கைதனில் கொடுத்தே
அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி
கதிர்நலம் என்இரு கண்களிற் கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி
அருள்ஒளி என்தனி அறிவினில் விரித்தே
அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ் ஜோதி
பரைஒளி என்மனப் பதியினில் விரித்தே
அரசது இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி
வல்லப சத்திகள் வலைஎலாம் அளித்தென
தல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
சூரிய சந்திர சோதியுட் சோதிஎன்
றாரியர் புகழ்தரும் அருட்பெருஞ் ஜோதி
பிறிவே தினிஉனைப் பிடித்தனம் உனக்குநம்
அறிவே வடிவெனும் அருட்பெருஞ் ஜோதி
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
ஆண்டுகொண் டருளிய அருட்பெருஞ் ஜோதி
பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றுமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ் ஜோதி
வாய்தற் குரித்தெனும் மறைஆ கமங்களால்
ஆய்தற் கரிய அருட்பெருஞ் ஜோதி
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
அல்லா திலைஎனும் அருட்பெருஞ் ஜோதி
நவைஇலா உளத்தில் நாடிய நாடிய
அவைஎலாம் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
கூற்றுதைத் தென்பால் குற்றமும் குணங்கொண்
டாற்றல்மிக் களித்த அருட்பெருஞ் ஜோதி
நன்றறி வறியா நாயினேன் தனையும்
அன்றுவந் தாண்ட அருட்பெருஞ் ஜோதி
நாயினும் கடையேன் ஈயினும்இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ் ஜோதி
எச்சோ தனைகளும் இயற்றா தெனக்கே
அச்சோ என்றருள் அருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைநடு ஏற்றிஎன் றனைஈண்
டாறாறு கடத்திய அருட்பெருஞ் ஜோதி
தாபத் துயரம் தவிர்த்துல குறும்எலா
ஆபத்து நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
அருட்குரு வாகிய அருட்பெருஞ் ஜோதி
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள்நிலை தெரித்த அருட்பெருஞ் ஜோதி
இருளறுத் தென்உளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த அருட்பெருஞ் ஜோதி
தெருள்நிலை இதுவெனத் தெருட்டிஎன் உளத்திருந்
தருள்நிலை காட்டிய அருட்பெருஞ் ஜோதி
பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய
அருட்பதம் அளித்த அருட்பெருஞ் ஜோதி
உருள்சக டாகிய உளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ் ஜோதி
வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள்
அருள்விளக் கேற்றிய அருட்பெருஞ் ஜோதி
சுருள்விரி வுடைமனச் சுழல்எலாம் அறுத்தே
அருள்ஒளி நிரப்பிய அருட்பெருஞ் ஜோதி
விருப்போ டிகல்உறு வெறுப்பும் தவிர்த்தே
அருட்பே றளித்த அருட்பெருஞ் ஜோதி
அருட்பேர் தரித்துல கனைத்தும் மலர்ந்திட
அருட்சீர் அளித்த அருட்பெருஞ் ஜோதி
உலகெலாம் பரவஎன் னுள்ளத் திருந்தே
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஜோதி
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட்பெருஞ் ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி
காற்றுறு காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
அனலினுள் அனலாய் அனல்நடு அனலாய்
அனலுற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
அனலுறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனலுற வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனைஎன வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
புனலுறு புனலாய்ப் புனல்நிலைப் புனலாய்
அனைஎனப் பெருகும் அருட்பெருஞ் ஜோதி
புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரிந்த அருட்பெருஞ் ஜோதி
விண்ணிலை சிவத்தின் வியனிலை அளவி
அண்ணுற அமைந்த அருட்பெருஞ் ஜோதி
வளிநிலைச் சத்தியின் வளர்நிலை அளவி
அளிஉற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நெருப்பது நிலைநடு நிலைஎலாம் அளவி
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளவி
அவையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் திண்மையை வகுத்ததிற் கிடக்கை
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திரம்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் நாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் பற்பல வகைகரு நிலஇயல்
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல்பயன்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணிடை அடிநிலை வகுத்ததில் பல்நிலை
அண்னுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணில்ஐந் தைந்து வகையும் கலந்துகொண்
டண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணியல் சத்திகள் மண்செயல் ஜோதி
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவர
அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணிணிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
றண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன்பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் தண்மையும் நிகழ்ஊ றொழுக்கமும்
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் பசுமையை நிறுத்தி அதிற்பல
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் சுவைநிலை நிறைத்ததில் பல்வகை
ஆருறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை நான்கியல் நிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை அடிநடு நிலைஉற வகுத்தனல்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல
ஆர்கொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்இயல் பலபல நிறைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
தீயினில் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவாய்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பூஎலாம் திகழுறு திறல்எலாம்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை ஒளியே திகழுற அமைத்ததில்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை அருநிலை திருநிலை கருநிலை
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயினில் பக்குவம் சேர்குணம் இயற்குணம்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீஇயல் பலபல செறித்ததில் பலவும்
ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல்
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைப் பூவியல் கருதுறு திறஇயல்
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் பெருநிலை கருநிலை அளவில
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை ஈரியல் காட்டி அதிற்பல
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் இடைநடு கடைநடு அகப்புறம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்திகள் கணக்கில் உலப்பில
ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் செயல்எலாம் கருதிய பயன்எலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் பக்குவக் கதிஎலாம் விளைவித்
தாற்றிலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியினில் ஒலிநிறை வியனிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை
அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஜோதி
வெளியினில் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடை ஒன்றே விரித்ததில் பற்பல
அளிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பலவே விரித்ததில் பற்பல
அளிதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடை உயிரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியின் அனைத்தையும் விரித்ததில் பிறவும்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
புறநடு வொடுகடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறத்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்
அகப்பட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை
அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி
கருதக நடுவொடு கடைஅணைந் தகக்கடை
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தணிஅக நடுவொடு தலைஅணைந் தகக்கடை
அணியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகநடு புறக்கடை அணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகநடு புறத்தலை அணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகநடு அதனால் அகப்புற நடுவை
அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி
புறநடு அதனால் புறப்புற நடுவை
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புகலரும் அகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புறம்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்
அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகக்கடை முதல்புணர்ப் பதனால் அகக்கணம்
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும்
அனல்மேல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பகுதிவான் வெளியில் படர்ந்தமாபூத
அகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில்
அயலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பரவெளி அதனைப் பரம்பா வெளியில்
அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
இவ்வெளி எல்லாம் இலங்கஅண் டங்கள்
அவ்வயின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டிஅண் டங்களை
அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காவல் செய் தலைவரைக் காவல்அண் டங்களை
ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
அழித்தல்செய் தலைவரை அவரண் டங்களை
அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றும்அண் டங்களை
அறத்தொடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தெளிவுசெய் தலைவரைத் திகழும்அண் டங்களை
அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
விந்துவாம் சத்தியை விந்தின்அண் டங்களை
அந்திறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
ஓங்கார சத்திகள் உற்றஅண் டங்களை
ஆங்காக வமைத்த அருட்பெருஞ் ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றும்அண் டங்களை
அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நாதமாம் பிரமமும் நாதஅண் டங்களும்
ஆதரம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பகர்பரா சத்தியைப் பதியும்அண் டங்களை
அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
எண்ணில்பல் சத்தியை எண்ணில்அண் டங்களை
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அளவில்பல் சத்தரை அளவில்அண் டங்களை
அளவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உயிர்வகை அண்டம் உலப்பில் எண்ணில
அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
களவில கடல்வகை கங்கில கரைஇல
அளவில வகுத்த அருட்பெருஞ் ஜோதி
கடலவை அனைத்துங் கரைஇன்றி நிலையுற
அடல்அனல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்
அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
கடலிடைப் பல்வளங் கணிதத்திற் பல்உயிர்
அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்உயிர்
அலைவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
அன்றற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பத்திடை ஆயிரம் பகரதில் கோடி
அத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நூற்றிடை இலக்கம் நுவலதில் அனந்தம்
ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
கோடியில் அனந்த கோடிபல் கோடி
ஆடுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவாய்
அத்தகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க
அளவுசெய் தமைத்த அருட்பெருஞ் ஜோதி
வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
அத்திறல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
முளையதின் முளையும் முளையினுள் முளையும்
அளைதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்
அற்றென வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உறவினில் உறவும் உறவினில் பகையும்
அறனுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பகையினிற் பகையும் பகையினில் உறவும்
அகைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும்
ஆதியும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும்
அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உருவதின் உருவும் உருவினுள் உருவும்
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
அருவினுள் அருவும் அருவதில் அருவும்
அருளியல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
கரணமும் இடமும் கலைமுதல் அணையுமோர்
அரணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உருவதில் அருவும் அருவதில் உருவும்
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
அண்மையின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மெண்மையில் மென்மையும் மென்மையில் வண்மையும்
அன்மையற் றமைத்த அருட்பெருஞ் ஜோதி
அடியினுள் அடியும் அடியிடை அடியும்
அடியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும்
அடர்வுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
முடியினுள் முடியும் முடியினில் முடியும்
அடர்தர அமைத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்பூ அகவுறுப் பாக்க அதற்கவை
அகத்தே வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
அறத்துடன் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்புறப் பூஅகப் புறவுறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற
அறத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி
ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல
அசலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அறிவொரு வகைமுதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெவ்வே றியலொடு வெவ்வேறு பயன்உற
அவ்வா றமைத்த அருட்பெருஞ் ஜோதி
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணியல் ஆணும் ஆணியல் பெண்ணும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும்
அண்டுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணியல் மனமும் ஆணியல் அறிவும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தனித்தனி வடிவினும் தக்கஆண் பெண்இயல்
அனைத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உனற்கரும் உயிருள உடலுள உலகுள
அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்
ஆவகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தாய்கருப் பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை
அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
உடலுறு பிணியால் உயிர்உடல் கெடாவகை
அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
சிசுமுதல் பருவச் செயல்களின் உயிர்களை
அசைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
முச்சுட ராதியால் எச்சக வுயிரையும்
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
வான்முகில் சத்தியால் மழைபொழி வித்துயிர்
ஆனறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித்
தன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
எண்இயல் சத்தியால் எல்லா உலகினும்
அண்உயிர் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
அண்டப் புறப்புற அமுதம் பொழிந்துயிர்
அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
தேவரை எல்லாம் திகழ்புற அமுதளித்
தாவகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
அகப்புற அமுதளித் தைவரா திகளை
அகப்படக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
தரும்அக அமுதால் சத்திசத் தர்களை
அருளினிற் காக்கும் அருட்பெருஞ் ஜோதி
காலமும் நியதியும் காட்டிஎவ் வுயிரையும்
ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
விச்சையை இச்சையை விளைவித் துயிர்களை
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
போகமும் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
ஆகமுட் காக்கும் அருட்பெருஞ் ஜோதி
கலைஅறி வளித்துக் களிப்பினில் உயிரெலாம்
அலைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
விடய நிகழ்ச்சியால் மிகும்உயிர் அனைத்தையும்
அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
கரணேந்தி யத்தால் களிப்புற உயிர்களை
அரணேர்ந் தளித்தருள் அருட்பெருஞ் ஜோதி
எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்
கத்தகை அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி
எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்
கப்படி அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி
ஏங்கா துயிர்த்திரள் எங்கெங் கிருந்தன
ஆங்காங் களித்தருள் அருட்பெருஞ் ஜோதி
சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
அல்லலில் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
சுத்தமும் அசுத்தமும் தோய்உயிர்க் கிருமையின்
அத்தகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
வாய்ந்திடும் சுத்த வகைஉயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
எவைஎலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின
அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
உயிருறு மாயையின் உறுவிரி வனைத்தும்
அயிரற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
உயிர்உறும் இருவினை உறுவிரி வனைத்தும்
அயர்வற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
காமப் புடைப்புயிர் கண்தொட ராவகை
ஆமற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்
அங்கற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்
கதம்பெற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்
அடர்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
சுத்தமும் அசுத்தமும் தோய்ந்தவா தனைகளை
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் றுரிசு நண்ணுயிர் ஆதியில்
ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும்
ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடத் தடக்கும் அருட்பெருஞ் ஜோதி
மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
சுத்தமா நிலையில் சூழ்வுறு விரிவை
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையால் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
திரைமறைப் பெல்லாம் தீர்த்தாங் காங்கே
அரைசுறக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி
தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
அத்தகை காட்டும் அருட்பெருஞ் ஜோதி
எனைத்தா ணவமுதல் எல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்புரி அருட்பெருஞ் ஜோதி
விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
சொருப மறைப்பெலாம் தொலைப்பித் துயிர்களை
அருளினில் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே
அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கம் அருட்பெருஞ் ஜோதி
காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ் ஜோதி
அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்
அடப்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறம் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
ஐந்தொழி லாதிசெய் ஐவரா திகளை
ஐந்தொழி லாதிசெய் அருட்பெருஞ் ஜோதி
இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்
அறந்தலை அளித்த அருட்பெருஞ் ஜோதி
செத்தவர் எல்லாம் சிரித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய அருட்பெருஞ் ஜோதி
இறந்தவர் எழுகஎன் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
செத்தவர் எழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
சித்தெலாம் வல்ல திறல்அளித் தெனக்கே
அத்தன்என் றோங்கும் அருட்பெருஞ் ஜோதி
ஒன்றதி ரண்டது ஒன்றின்இ ரண்டது
ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே
ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல
ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே
ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில
ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே
களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி
விளங்கஎன் உள்ளே விளங்குமெய்ப் பொருளே
மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கும் ஒருமைமெய்ப் பொருளே
எழுநிலை மிசையே இன்புரு வாகி
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
ஏகா தசநிலை யாததின் நடுவே
ஏகா தனமிசை இருந்தமெய்ப் பொருளே
திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
ஈரெண் நிலைஎன இயம்புமேல் நிலையில்
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
எல்லா நிலைகளும் இசைந்தாங் காங்கே
எல்லா மாகி இலங்குமெய்ப் பொருளே
மணாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதிஉண் மையதாய் அமர்ந்தமெய்ப் பொருளே
தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளங்கும் ஒருதனிப் பொருளே
அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்
உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே
அருவினுள் அருவாய் அருஅரு அருவாய்
உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே
அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய்
உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே
பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளாய்
ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே
ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே
கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கும் அருட்பெரும் பொருளே
அறிவுறு சித்திகள் அனந்த கோ டிகளும்
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே
பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க
உற்றரு ளாடல்செய் ஒருதனிப் பொருளே
பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
பரம்பதம் பரமே பரஞ்சிதம் பரமே
பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
பரங்கொள்சிற் பரமே பரஞ்செதற் பரமே
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே
வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே
சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே தற்பத பதமே
தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே அருட்பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே
நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே
பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தரும் சிவமே
அவனோ டவளாய் அதுவாய் அலவாய்
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
எம்பொரு ளாகி எமக்கருள் புரியும்
செம்பொரு ளாகி சிவமே சிவமே
ஒருநிலை இதுவே உயர்நிலை எனும்ஒரு
திருநிலை மேவிய சிவமே சிவமே
மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே
புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே
கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருளமு தெனக்கே அளித்தருள் நெறிவாய்த்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே
சத்தெலா மாகியும் தான்ஒரு தானாம்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே
ஆரே என்னினும் இரங்குகின் றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தா தெனைஅருள்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப்
பல்கால் எனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச் சிவமே
உயிருள்யாம் எம்முள் உயிர்இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவு கென் றுரைத்தமெய்ச் சிவமே
இயலருள் ஒளிஓர் ஏகதே சத்தினாம்
உயிர்ஒளி காண்கஎன் றுரைத்தமெய்ச் சிவமே
அருளலா தணுவும் அசைந்திடா ததனால்
அருள்நலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
அருளுறின் எல்லாம் ஆகும்ஈ துண்மை
அருளுற முயல்கஎன் றருளிய சிவமே
அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம்
இருள்நெறி எனஎனக் கியம்பிய சிவமே
அருள்பெறில் துரும்பும்ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள்இது எனவே செப்பிய சிவமே
அருளறி வொன்றே அறிவுமற் றெல்லாம்
மருளறிவென்றே வகுத்தமெய்ச் சிவமே
அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறஎன வகுத்தமெய்ச் சிவமே
அருட்பே றதுவே அரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறக்கும்என் றியம்பிய சிவமே
அருட்டனி வல்லபம் அதுவே எலாம்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
அருளறி யார்தமை அறியார் எம்மையும்
பொருளறி யார்எனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
பொருள்நிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்வடி வதுவே அழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
அருளே நம்மியல் அருளே நம்உரு
அருளே நம்வடி வாம்என்ற சிவமே
அருளே நம்அடி அருளே நம்முடி
அருளே நம்நடு வாம்என்ற சிவமே
அருளே நம்அறி வருளே நம்மனம்
அருளே நம்குண மாம்என்ற சிவமே
அருளே நம்பதி அருளே நம்பதம்
அருளே நம்இட மாம்என்ற சிவமே
அருளே நம்துணை அருளே நம்தொழில்
அருளே நம்விருப் பாம்என்ற சிவமே
அருளே நம்பொருள் அருளே நம்ஒளி
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே
அருளே நம்குலம் அருளே நம்இனம்
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே
அருளே நம்சுகம் அருளே நம்பெயர்
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே
அருள்ஒளி அடைந்தனை அருள்அமு துண்டனை
அருண்மதி வாழ்கஎன் றருளிய சிவமே
அருள்நிலை பெற்றனை அருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே
உள்ளகத் தமர்ந்தென துயிரில் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே
நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்கும் தனிச்சிவ பதியே
சுத்தசன் மார்க்கச் சுகநிலை தனில்எனைச்
சத்தியன் ஆக்கிய தனிச்சிவ பதியே
ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருள்என்
கைவரப் புரிந்த கதிசிவ பதியே
துன்பம் தொலைத்தருட் சோதியால் நிறைந்த
இன்பம் எனக்கருள் எழிற்சிவ பதியே
சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய ஒருசிவ பதியே
கையற வனைத்தும் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியேன் எண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடென் கண்ணுறும் அருட்சிவ பதியே
பிழைஎலாம் பொறுத்தெனுள் பிறங்கிய கருணை
மழைஎலாம் பொழிந்து வளர்சிவ பதியே
உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே
பரமுடன் அபரம் பகர்நிலை இவையெனத்
திரமுற அருளிய திருவருட் குருவே
மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின்
திதிநிலை அனைத்தும் தெரித்தசற் குருவே
கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலைஎலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசிஎன் உளத்தே
தரமுற விளங்கும் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
சிவரக சியம்எலாம் தெரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும்
அத்தகை தெரித்த அருட்சிவ குருவே
அறிபவை எல்லாம் அறிவித்தெனுள்ளே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
கேட்பவை எல்லாம் கேட்பித் தெனக்கே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை எல்லாம் காட்டுவித் தெனக்கே
மாண்பதம் அளித்து வயங்குசற் குருவே
செய்பவை எல்லாம் செய்வித் தெனக்கே
உய்பவை அளித்தெனுள் ஓங்குசற் குருவே
உண்பவை எல்லாம் உண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் தரம்எலாம் கற்பித்
தேகாக் கரப்பொருள் ஈந்தசற் குருவே
சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த்தகை அளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம்
வல்லான் எனஎனை வைத்தசற் குருவே
சீருற அருளாம் தேசுற அழியாப்
பேருற என்னைப் பெற்றநற் றாயே
பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப்
பெருந்தய வால்எனைப் பெற்றநற் றாயே
ஆன்றசன் மார்க்கம் அணிபெற எனைத்தான்
ஈன்றமு தளித்த இனியநற் றாயே
பசித்திடு தோறும்என் பால்அணைந் தருளால்
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே
தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த ஒருமைநற் றாயே
அருளமு தேமுதல் ஐவகை அமுதமும்
தெருளுற எனக்கருள் செல்வநற் றாயே
இயலமு தேமுதல் எழுவகை அமுதமும்
உயலுற எனக்கருள் உரியநற் றாயே
நண்புறும் எண்வகை நலவகை அமுதமும்
பண்புற எனக்கருள் பண்புடைத் தாயே
மற்றுள அமுத வகைஎலாம் எனக்கே
உற்றுண வளித்தருள் ஓங்குநற் றாயே
கலக்கமும் அச்சமும் கடிந்தென துளத்தே
அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத் தாயே
துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக்
கெய்ப்பெலாந் தவிர்த்த இன்புடைத் தாயே
சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே
சத்தியை அளித்த தயவுடைத் தாயே
சத்தினி பாதந் தனைஅளித் தெனைமேல்
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
சத்திசத் தர்கள்எலாஞ் சார்ந்தென தேவல்செய்
சித்தியை அளித்த தெய்வநற் றாயே
தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமேல் ஏற்றிய இனியநற் றாயே
வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே
அளித்தளித் தின்புசெய் அன்புடைத் தாயே
எண்ணகத் தொடுபுறத் தென்னைஎஞ் ஞான்றும்
கண்எனக் காக்கும் கருணைநற் றாயே
இன்னருள் அமுதளித் திறவாத் திறல்புரிந்
தென்னை வளர்த்திடும் இன்புடைத் தாயே
என்னுடல் என்னுயிர் என்னறி வெல்லாம்
தன்னஎன் றாக்கிய தயவுடைத் தாயே
தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்
தரியா தணைத்த தயவுடைத் தாயே
சினமுதல் அனைத்தையுந் தீர்த்தெனை நனவினும்
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
தூக்கமும் சோம்பும்என்துன்பமும் அச்சமும்
ஏக்கமும் நீக்கிய என்தனித் தாயே
துன்பெலாம் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப
இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே
எல்லா நன்மையும் என்தனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்தனித் தந்தையே
நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே
அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருள் தந்தையே
புன்னிகர் இல்லேன் பொருட்டிவண் அடைந்த
தன்நிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே
அகத்தினும் புறத்தினும் அமர்ந்தருட் ஜோதி
சகத்தினில் எனக்கே தந்தமெய்த் தந்தையே
இணைஇலாக் களிப்புற் றிருந்திட எனக்கே
துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே
ஆதியீ றறியா அருளர சாட்சியில்
சோதிமா மகுடம் சூட்டிய தந்தையே
எட்டிரண் டறிவித் தெனைத்தனி ஏற்றிப்
பட்டிமண் டபத்தில் பதித்தமெய்த் தந்தையே
தங்கோல் அளவது தந்தருள் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
தன்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே
என்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே
தன்வடி வனைத்தையும் தன்அர சாட்சியில்
என்வடி வாக்கிய என்தனித் தந்தையே
தன்சித் தனைத்தையும் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்தனித் தந்தையே
தன்வச மாகிய தத்துவம் அனைத்தையும்
என்வசம் ஆக்கிய என்உயிர்த் தந்தையே
தன்கையில் பிடித்த தனிஅருட் ஜோதி
என்கையில் கொடுத்த என்தனித் தந்தையே
தன்னையும் தன்அருட் சத்தியின் வடிவையும்
என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே
தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல்
என்ன இயற்றிய என்தனித் தந்தையே
தன்உரு என்உரு தன்உரை என்உரை
என்ன இயற்றிய என்தனித் தந்தையே
சதுரப் பேரருள் தனிப்பெருந் தலைவன்என்
றெதிரற் றோங்கிய என்னுடைத் தந்தையே
மனவாக் கறியா வரைப்பினில் எனக்கே
இனவாக் கருளிய என்னுயிர்த் தந்தையே
உணர்ந் துணர்ந் துணரினும் உணராப் பெருநிலை
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே
துரியவாழ் வுடனே சுகபூ ரணம்எனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
எவ்வகைத் திறத்தினும் எய்துதற் கரிதாம்
அவ்வகை நிலைஎனக் களித்தநல் தந்தையே
இனிப்பிற வாநெறி எனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
சற்றும்அஞ் சேல்எனத் தாங்கிய துணையே
தளர்ந்தஅத் தருணம்என் தளர்வெலாம் தவிர்ந்துட்
கிளர்ந்திட எனக்குக் கிடைத்தமெய்த் துணையே
துறைஇது வழிஇது துணிவிது நீசெயும்
முறைஇது எனவே மொழிந்தமெய்த் துணையே
எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை
கங்குலும் பகலும்மெய்க் காவல்செய் துணையே
வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே
ஈண்டிருந் தருள்புரி என்னுயிர்த் துணையே
இகத்தினும் பரத்தினும் எனக்கிடர் சாரா
தகத்தினும் புறத்தினும் அமர்ந்தமெய்த் துணையே
அயர்வற எனக்கே அருட்டுணை ஆகிஎன்
உயிரினும் சிறந்த ஒருமைஎன் நட்பே
அன்பினில் கலந்தென தறிவினில் பயின்றே
இன்பினில் அளைந்தஎன் இன்னுயிர் நட்பே
நான்புரி வனஎலாம் தான்புரிந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநல் நட்பே
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்
டெள்ளுறு நெய்யில்என் உள்ளுறு நட்பே
செற்றமும் தீமையும் தீர்த்துநான் செய்த
குற்றமும் குணமாக் கொண்டஎன் நட்பே
குணங்குறி முதலிய குறித்தியா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்கும் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே
சவலைநெஞ் சகத்திகன் தளர்ச்சியும் அச்சமும்
கவலையும் தவிர்த்தெனைக் கலந்தநல் நட்பே
களைப்பறிந் தெடுத்துக் கலக்கம் தவிர்த்தெனக்
கிளைப்பறிந் துதவிய என்உயிர் உறவே
தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
என்னைத் தழுவிய என்உயிர் உறவே
மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
எனக்குற வாகிய என்உயிர் உறவே
துன்னும் அனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
தென்உறவாகிய என்உயிர் உறவே
என்றும்ஓர் நிலையாய் என்றும்ஓர் இயலாய்
என்றும்உள் ளதுவாம் என்தனிச் சத்தே
அனைத்துல கவைகளும் ஆங்காங் குணரினும்
இனைத்தென அறியா என்தனிச் சத்தே
பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுஎனற் கரிதாம் என்தனிச் சத்தே
ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும்
ஏகுதற் கரிதாம் என்தனிச் சத்தே
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே
இத்தகை வழுத்தம் என்தனிச் சத்தே
துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருள்என
உரைசெய்வே தங்கள் உன்னும்மெய்ச் சத்தே
அன்றதன் அப்பால் அதன்பரத் ததுதான்
என்றிட நிறைந்த என்தனிச் சத்தே
என்றும்உள் ளதும்வாய் எங்கும்ஓர் நிறைவாய்
என்றும் விளங்கிடும் என்தனிச் சித்தே
சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே
படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளங்கிடும் என்தனிச் சித்தே
உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடும் என்தனிச் சித்தே
அறிவவை பலவாய் அறிவன பலவாய்
எறிவற விளக்கிடும் என்தனிச் சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடும் என்தனிச் சித்தே
காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடும் என்தனிச் சித்தே
செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வற விளக்கிடும் என்தனிச் சித்தே
அண்ட சராசரம் அனைஹத்தையும் பிறவையும்
எண்தர விளக்கும் என்தனிச் சித்தே
எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
எல்லாம் விளக்கிடும் என்தனித் சித்தே
ஒன்றதில் ஒன்றென் றுரைக்கவும் படாதாய்
என்றும்ஓர் படித்தாம் என்தனி இன்பே
இதுஅது என்னா இயலுடை அதுவாய்
எதிர் அறநிறைந்த என்தனி இன்பே
ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த என்தனி இன்பே
அறிவுக் கறிவினில் அதுவது அதுவாய்
எறிவற் றோங்கிய என்தனி இன்பே
விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை
இடைஇடை ஓங்கிய என்தனி இன்பே
இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்
எம்மையும் நிரம்பிடும் என்தனி இன்பே
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமாம் என்தனி இன்பே
எல்லா நிலைகளின் எல்லா உயிர்உறும்
எல்லா இன்புமாம் என்தனி இன்பே
கரும்புறு சாறும் கனிந்தமுக் கனியின்
விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும்
குணங்கொள்கோற் றேனும் கூட்டிஒன் றாக்கி
மனங்கொளப் பதஞ்செய் வகையுறு இயற்றிய
உணவெனப் பல்கால் உரைக்கினும் நிகரா
வணம்உறும் இன்ப மயமே அதுவாய்க்
கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
நலத்தரு விளக்கமும் நவில்அருந் தண்மையும்
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்
உள்ளதாய் என்றன் உயிர்உளம் உடம்புடன்
எல்லாம் இனிப்ப இயலுறு சுவைஅளித்
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்
சாகா வரமும் தனித்தபேர் அறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்தென தறிவாம் கனமேல் சபைநடு
நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞான ஆரமுதே
சத்திய அமுதே தனித்திரு அமுதே
நித்திய அமுதே நிறைசிவ அமுதே
சச்சிதா னந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதா காச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருள்ஒளி அமுதே
தானந்த மில்லாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்லதெள் ளமுதே
சிவநிலை தனிலே திரண்டஉள் ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வான் அமுதே
அகம்புறும் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்தநான் கிடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதல் லாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே
அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே
பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே
விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும்
கண்பெற நடத்தும் ககனமா மணியே
பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும்
சார்புற நடத்தும் சரஒளி மணியே
அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடஒளிர் கலைநிறை மணியே
சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே
தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா
வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே
நவமணி முதலிய நலம்எலாம் தரும்ஒரு
சிவமணி எனும்அருட் செல்வமா மணியே
வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்து
நான்பெற அளித்த நாதமந் திரமே
கற்பம் பலபல கழியினும் அழியாப்
பொற்புற அளித்த புனிதமந் திரமே
அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்
வகரமும் ஆகிய வாய்மைமந் திரமே
ஐந்தென எட்டென ஆறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
உயற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே
சித்திக்கு மூலமாம் சிவமருந் தெனஉளம்
தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்தே
இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்
சிறந்தவல் லபம்உறு திருவருள் மருந்தே
மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீர் உடையநல் மருந்தே
என்றே என்னினும் இளமையோ டிருக்க
நன்றே தரும்ஒரு ஞானமா மருந்தே
மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை அதுஎன நாட்டிய மருந்தே
சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே
இடையுறப் படாத இயற்கை விளக்கமாய்த்
தடைஒன்றும் இல்லாத் தகவுடை யதுவாய்
மாற்றிவை என்ன மதித்தளப் பரிதாய்
ஊற்றமும் வண்ணமும் ஒருங்குடை யதுவாய்க்
காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
ஆட்சிக் குரியபன் மாட்சியும் உடைத்தாய்க்
கைதவர் கனவினும் காண்டற் கரிதாய்ச்
செய்தவப் பயனாம் திருவருள் வலத்தால்
உளம்பெறும் இடம்எலாம் உதவுக எனவே
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே
புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
மும்மையும் தரும்ஒரு செம்மையை உடைத்தாய்
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே
எடுத்தெடுத் துதவினும் என்றும் குறையா
தடுத்தடுத் தோங்குமெய் அருளுடைப் பொன்னே
தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேம்எனக்
கிளர்ந்திட உரைத்துக் கிடைத்தசெம் பொன்னே
எண்ணிய தோறும் இயற்றுக என்றெனை
அண்ணிஎன் கரத்தில் அமர்ந்தபைம் பொன்னே
நீகேள் மறக்கினும் நின்னையாம் விட்டுப்
போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே
எண்ணிய எண்ணியாங் கெய்திட எனக்குப்
பண்ணிய தவத்தால் பழுத்தசெம் பொன்னே
விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப்
புண்ணியப் பயனால் பூத்தசெம் பொன்னே
நால்வகை நெறியினும் நாட்டுக எனவே
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
எழுவகை நெறியினும் இயற்றுக எனவே
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
எண்ணிய படிஎலாம் இயற்றுக என்றெனைப்
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே
ஊழிதோ றூழி உலப்புறா தோங்கி
வாழிஎன் றெனக்கு வாய்த்தநல் நிதியே
இதமுற ஊழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
குதவினும் உலவா தோங்குநல்நிதியே
இருநிதி எழுநிதி இயல்நவ நிதிமுதல்
திருநிதி எல்லாம் தரும்ஒரு நிதியே
எவ்வகை நிதிகளும் இந்தமா நிதியிடை
அவ்வகை கிடைக்கும்என் றருளிய நிதியே
அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே
கற்பனை கடந்த கருணைமா நிதியே
நற்குண நிதியே சற்குண நிதியே
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே
பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
வளம்எலாம் நிறைந்த மாணிக்க மலையே
மதியுற விளங்கும் மரகத மலையே
வதிதரு பேரொளி வச்சிர மலையே
உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
துரியமேல் வெளியில் சோதிமா மலையே
புற்புதம் திரைநுரை புரைமுதல் இலதோர்
அற்புதக் கடலே அமுதத்தண் கடலே
இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய
அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே
பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே
என்றுயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம்
நன்றுற விளங்கிய நந்தனக் காவே
சேற்றுநீர் இன்றிநல் தீஞ்சுவை தரும்ஓர்
ஊற்றுநீர் நிரம்ப உடையபூந் தடமே
கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
களைப்பறக் கிடைத்த கருணை நன் னீரே
இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே
தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
தென்னைவான் பலத்தில் திருகுதீம் பாலே
நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே
கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
இட்டநற் சுவைசெய் இலந்தையங் கனியே
கனிஎலாம் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே
இதந்தரு கரும்பில் எடுத்ததீஞ் சாறே
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே
சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக் கினியகற் கண்டே
உலப்புறா தினிக்கும் உயர்மலைத் தேனே
கலப்புறா மதுரம் கனிந்தகோற் றேனே
நவைஇலா தெனக்கு நண்ணிய நறவே
சுவைஎலாம் திரட்டிய தூயதீம் பதமே
பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே
உலர்ந்திடா தென்றும் ஒருபடித் தாகி
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே
இகந்தரு புவிமுதல் எவ்வுல குயிர்களும்
உகந்திட மணக்கும் சுகந்தநல் மணமே
யாழுறும் இசையே இனியஇன் இசையே
ஏழுறும் இசையே இயல்அருள் இசையே
திவள்ஒளிப் பருவம் சேர்ந்தநல் லவளே
அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே
நாதநல்வரைப்பின் நண்ணிய பாட்டே
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே
நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே
என்மனக் கண்ணே என்அருட் கண்ணே
என்னிரு கண்ணே என்கணுள் மணியே
என்பெருங் களிப்பே என்பெரும் பொருளே
என்பெருந் திறலே என்பெருஞ் செயலே
என்பெருந் தவமே என்தவப் பலனே
என்பெருஞ் சுகமே என்பெரும் பேறே
என்பெரு வாழ்வே என்றன்வாம் முதலே
என்பெரு வழக்கே என்பெருங் கணக்கே
என்பெரு நலமே என்பெருங் குலமே
என்பெரு வலமே என்பெரும் புலமே
என்பெரு வரமே என்பெருந் தரமே
என்பெரு நெறியே என்பெரு நிலையே
என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
என்பெருந் தயவே என்பெருங் கதியே
என்பெரும் பதியே என்னுயிர் இயலே
என்பெரு நிறைவே என்தனி அறிவே
தோலெலாம் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாம் கட்டவை விட்டுவிட் டியங்கிட
என்பெலாம் நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசைஎலாம் மெய்உறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும்உள் இறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
மடம்எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல்எலாம் ஊற்றெடுத் தோடி நிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட
உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில்நீர் பெருகிக் கால்வழிந் தோடிட
வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளில்
கூயிசைப் பொறிஎலாம் கும்மெனக் கொட்டிட
மெய்எலாம் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கைஎலாம் குவிந்திடக் கால்எலாம் சுலவிட
மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட
அறிவுரு அனைத்தும் ஆனந்த மாயிடப்
பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத்
தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட
உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசைமேற் பொங்கிட
என்னுளத் தெழுந்துயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்தனி அன்பே
பொன்னடி கண்டருள் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த என்னுடை அன்பே
தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால்
என்னைவே தித்த என்தனி அன்பே
என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை அன்பே
என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே
தன்னுளே நிறைவுறு தரம்எலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே
துன்புள அனைத்தும் தொலைத்தென துருவை
இன்புரு வாக்கிய என்னுடை அன்பே
பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளங் கலந்த என்தனி அன்பே
தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
என்வசங் கடந்த என்னுடை அன்பே
தன்னுளே பொங்கிய தண்அமு துணவே
என்னுளே பொங்கிய என்தனி அன்பே
அருளொளி விளங்கிட ஆணவம் எனும்ஓர்
இருளற என்னுளத் தேற்றிய விளக்கே
துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கிநல்
இன்புற என்னுளத் தேற்றிய விளக்கே
மயலற அழியா வாழ்வுமேன் மேலும்
இயலுற என்னுளத் தேற்றிய விளக்கே
இடுவெளி அனைத்தும் இயல்ஒளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
கருவெளி அனைத்தும் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே ஒளிர்தரு விளக்கே
தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞானி இயல்ஒளி விளக்கே
ஆகம முடிமேல் அருள்ஒளி விளங்கிட
வேகம தறவே விளங்கொளி விளக்கே
ஆரியர் வழுத்திய அருள்நிலை அனாதி
காரியம் விளக்கும்ஓர் காரண விளக்கே
தண்ணிய அமுதே தந்தென துளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே
உய்தர அமுதம் தந்தென துளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே
பதிஎலாம் தழைக்கப் பதம்பெறும் அமுத
நிதிஎலாம் அளித்த நிறைதிரு மதியே
பால்எனத் தண்கதிர் பரப்பிஎஞ் ஞான்றும்
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
உயங்கிய உள்ளமும் உயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே
என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே
உளங்கொளும் எனக்கே உவகைமேற் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
நலத்தர உடல்உயிர் நல்அறி வெனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல்
வாய்மையால் கருணை மழைபொழி மழையே
வெம்மல இரவது விடிதரு ணந்தனில்
செம்மையில் உதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
திரைஎலாம் தவிர்த்துச் செவ்விஉற் றாங்கே
வரைஎலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
அலகிலாத் தலைவர்கள் அரசுசெய் தத்துவ
உலகெலாம் விளங்க ஓங்குசெஞ் சுடரே
முன்னுற மலஇருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரைமேல் எழுந்தசெஞ் சுடரே
ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
சோதியாய் என்உளம் சூழ்ந்தமெய்ச் சுடரே
உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட
வெள்ஒளி காட்டிய மெய்அருட் கனலே
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
வேதமும் ஆகம விரிவும் பரம்பர
நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே
எண்ணிய எண்ணிய எல்லாந் தரஎனுள்
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலம்எலாம் அளித்த ஞானமெய்க் கனலே
இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே
வாநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
சபைஎன துளம்எனத் தான்அமர்ந் தௌக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி
மருள்எலாம் தவிர்த்து வரம்எலாம் கொடுத்தே
அருள்அமு தருத்திய அருட்பெருஞ் ஜோதி
வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழிஒன் றளித்த அருட்பெருஞ் ஜோதி
என்னையும் பொருள்என எண்ணிஎன் உளத்தே
அன்னையும் அப்பனும் ஆகிவீற் றிருந்து
உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை
அலகில்பேர் அருளால் அறிவது விளக்கிச்
சிறுநெறி செல்லாத் திறன்அளித் தழியா
துறுநெறி உணர்ச்சிதந் தொளிஉறப் புரிந்து
சாகாக் கல்வியின் தரம்எலாம் உணர்த்திச்
சாகா வரத்தையும் தந்துமேன் மேலும்
அன்பையும் விளைவித் தருட்பேர் ஒளியால்
இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும்
ஓர்உரு ஆக்கியான் உன்னிய படிஎலாம்
சீர்உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா
அருளமு தளித்தனை அருள்நிலை ஏற்றினை
அருள்அறி வளித்தனை அருட்பெருஞ் ஜோதி
வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கல்இன் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
உலகுயிர்த் திரள்எலாம் ஒளிநெறி பெற்றிட
இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றிலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
உலகினில் உயிர்களுக் குறும்இடை யூறெலாம்
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்ச் சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
- திருச்சிற்றம்பலம்.