ஞாயிறு, 2 ஜூன், 2024

யோகம் சிறந்ததா தோத்திரம் சிறந்ததா ?

"யோகம்" சிறந்ததா ?" தோத்திரம்" சிறந்ததா ?
================= ========================
ஒருநாள் வள்ளல் பெருமானை அன்பர்கள் ''யோகம் முதலியன செய்ய எங்களால் இயலாதனவா இருக்கின்றன ; ஆதலால் நாங்கள் ஈடேறுதற்கு உரிய ஒரு இலகுவான மார்க்கத்தைத் தேவரீர் திருவாய் மலர்ந்து அருளால் வேண்டும் ''என்று விண்ணப்பித்தார்கள்
வள்ளலாரும் அதற்கு விளக்கம் சொன்னார் '' இது இக்காலம் கடையுகமாகிய கலியுகத்தில்'' உங்களால் யோகம் முதலிய சாதனங்களை இயற்ற முடியாது,ஆதலால் நீங்கள் தொத்திரத்தையே ஈடேறும் மார்க்கம் எனக் கொள்ளுங்கள் என்று இசைத்தனர்.
================================================
ஞான தீப விளக்கம் !
====================
இதையே சித்தி விளாகத்தில் ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் உள்ளிருந்த விளக்கைத் திரு மாளிகைப் புறத்தில் வைத்து ' தடைபடாது ஆராதியுங்கள் '' இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம்,இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் இந்த பாடலில் உள்ளபடி தோத்திரம் செய்யுங்கள்

 என்று ;--
================================================
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே 
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான 
நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர் 
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் 
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !
=================================================
என்னும் 28, பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி ,தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் ,நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் ,இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்,;--
மேலும் ஸ்ரீமுக வருடம் தை மாதம் வள்ளலார் திருகாப்பிட்டுக் கொள்ளும் தருணம் வெளியிட்டவை யாகும்.
=================================================
நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம் .பார்த்து அவ நம்பிக்கை அடையாதீர்கள் .ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் .என்னைக் காட்டி கொடார் ,
சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம் .நாம் திருக்கதவை மூடி இருக்கும் காலத்தில் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார்.
என்று மண்ணுலகை விட்டு அருள் ஜோதி மயமானார்.இப்போது ஒளி உடம்பாக அருட்பெருஞ்ஜோதியாக இவ்வுலகை ஆண்டு கொண்டு உள்ளார் .
====================================================
ஞான சித்தர் காலம் !
=====================
வள்ளலாருக்கு முன்னாடி இருந்த காலம் ;--
==========================================
இதுவரையில் கர்ம சித்தர்கள் உடைய காலம் அதனால் சமயங்களும் மதங்களும் மதங்களும்,பரவி இருந்தன ,
இப்போது வரப்போகிறது (இப்போது நடைபெறுகின்றது ) ஞான சித்தருடைய காலம்,இனிமேல் ஜாதி ,சமயம்,மதம் முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆசாரம் ஒன்றே விளங்கும்.
சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்கள்,மூர்த்திகள்,ஈசுரன்,பிரம்மா,சிவம்,முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருக்குமே ஒழிய அதற்கு மேல் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும்.

========================================
சமய மதங்களில் சொல்லிக்கிற கர்த்தாக்கள் உடைய சித்திகள் யாவும் ,சர்வ சித்திகள் உடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சித்தியின் லேசங்கள்.
அந்த சர்வ சித்தி உடைய கடவுளுக்கு ஒப்பு ஆகமாட்டார்கள் ,கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.
இப்போது இருக்கும் வேதம், ஆகமம்,புராணங்களிலும் சமய ,மதங்களிலும் லட்சியம் வைக்காதீர்கள்.அப்படியும் வைத்தால் சமரச சுத்த சன்மார்க்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது.வராவிட்டால் நீங்கள் அடையப் போகிறது ஒன்றுமே இல்லை.
ஆதலால் அதுகள் எல்லாம் பற்று அற விட்டுவிட்டு ,சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ்ஜோதி கடவுள் ஒருவரே என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்ய வேண்டும்...என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.
====================================================
வழிபாடு செய்வது எப்படி ?
==========================
அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரிய கடவுளை வழிபாடு செய்வதற்குச் சாதனம் இருவகை ;;ஒன்று பர உபகாரம் ..ஒன்று சத்விசாரம் ,,
====================================================
பர உபகாரம் என்பது ;-- 
====================

தேகத்தாலும்,வாக்காலும்,திரவியத்தாலும் உயிர்களுக்கு உபகாரம் செய்வதாகும்.
சத் விசாரம் என்பது ;--
===================
நேரிட்ட பஷத்தில் --ஆன்ம நேய சம்பந்தமான தயா விசாரத்தொடு இருப்பது..கடவுளது புகழை விசாரித்தல்,ஆன்மாவின் உண்மையை விசாரித்தல்,தன்னுடைய சிறுமையைக் கடவுள் இடத்தில் விண்ணப்பம் செய்தல்.இந்த மார்க்கத்தால் தான் சுத்த தேகம் பெற வேண்டும்.
என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் ..
எனவே நாம் யோகம் முதலிய சாதனங்கள் எதுவும் செய்ய வேண்டாம் .ஒவ்வொரு வீட்டிலும் அருள் ஞான தீபம் ஏற்றி தோத்திரம் செய்யுங்கள் .கடவுள் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் தீபத்தின் முன் அமர்ந்து உங்களின் குறைகளை சொல்லி வழிபடுங்கள் .உங்களால் முடிந்தால் ஜீவ காருண்யம் என்னும் பரோபகாரம் செய்யுங்கள் இந்த இரண்டு வழியைத் தவிர வேறு வழிகளில் சென்று காலத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள் .
================================================
எல்லாம வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நம்புங்கள் எல்லாம நல்லதே நடக்கும் .
============================================
.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ..
======================================
அன்புடன் ஆனம்நேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 21 மே, 2024

158 ஆவது சத்திய தருமச்சாலை தொடக்க விழா !

*158 ஆம் ஆண்டு தொடக்க விழா !*

அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்ஜோதி! 

பசித்த ஏழைகளின் பசிப்பிணியை தவிர்க்க 25-5-1867 ஆண்டு (வைகாசி 11 ஆம் நாள்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் *வள்ளல் பெருமான் அவர்களின் திருக்கரங்களால் தீ மூட்டி துவங்கி வைக்கபட்டதுதான் வடலூரில் இயங்கிவரும் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்பதாகும்.*"

*உலக அதிசயம் !*

*உலக வரலாற்றில் ஆதரவு அற்ற ஏழை எளிய  மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை" என்பது உலக அதியங்களில் ஒன்றாகும்*

*வழிப்பாட்டு முறையை மாற்றிய புரட்சியாளர்!*

*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும், உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்னும் புதிய ஆன்மீக வழிப்பாட்டு புதிய புரட்சி கருத்தாழம் உள்ள முறையை, அதன் உண்மையை வெளிப்படுத்திவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தோற்றுவித்துள்ளார் வள்ளல்பெருமான் அவர்கள்*

*மேலே கண்ட உண்மையை கருத்தில் கொண்டு வழிப்பாட்டு விசயத்தில் சன்மார்க்கிகள் ஒத்த கருத்தோடு ஒத்துரிமையோடு கவனமாக செயல்பட வேண்டும்*

*வடலூரில் சத்திய தருமச்சாலை விழா !*

*வருகின்ற 24-5-2024 ஆம் தேதி வைகாசி மாதம் 11 ஆம்நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யானது 157 ஆம் ஆண்டுகள் நிறைவு அடைந்து 158 ஆம் ஆண்டு துவக்கவிழா சிறப்பாக கொண்டாடப் படஉள்ளது*

அனைவரும் தருமச்சாலை விழாவில் கலந்து கொண்டு அவரவர்களால் இயன்றஅளவு உதவி செய்தி  அதனால் கிடைக்கும் ஆன்ம லாபத்தை பாகம் செய்துகொண்டு ஆன்ம லாபம் அடைந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அன்புடன் அழைக்கிறோம் 

அன்புடன் ஆன்மநேயன் *"முனைவர் சுத்தசன்மார்க்க சுடர்" ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
வடலூர்
*9865939896*

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வழிப்பாட்டு விஷயத்தில் ஒத்து இருப்பது அவசியம்!

*வழிபாடு விஷயத்தில் ஒத்து இருத்தல் அவசியம்!*

*வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைப்பதற்கு முன் வள்ளலார் சொல்லியவாறு வழிப்பாட்டு முறைகளை முதலில் மாற்ற வேண்டும் என்பதை திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்*

25-11-1872 ஆம் ஆண்டு ( ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம்தேதி) சித்தி வளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு *எச்சரிப்புப் பத்திரிகை* என்னும் பத்திரிகையில் வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக சொல்லி பதிவு செய்துள்ளார்

சன்மார்க்க அன்பர்கள் அவரவர்கள் விருப்பம் போல் வழிபாடு செய்யாமல் *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்னும் அழுத்தமான கொள்கையை வெளிப்படுத்தி உள்ளார்.*
மேலும் *புறத்தில்  தீபஒளி வழிபாடு மட்டுமே வைத்து தோத்திரம் மற்றும்  பிரார்த்தனை செய்தல் வேண்டும்* என்பதை எச்சரிப்புப் பத்திரிகையாக வெளிப்படுத்தி உள்ளார்.

அதன் விபரம் !

சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை!

ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள்,

*ஆண்டவர் ஒருவர் உள்ளார்* என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றார் என்றும்,

அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் *வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்.*

அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்றவகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும்.

அப்படி யிருத்தல் மேல்விளைவையுண்டுபண்ணா திருக்கும்.

அப்படி இனிமேல் ஒருவரை யொருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடு மறுபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.

*அப்படி மருவாதவர்களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது.*

அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும்.

*அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம்.*
 அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சு மில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி *ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.*

*சிதம்பரம் இராமலிங்கம் (வள்ளலார்)* 

மேலே கண்ட செய்திகளை எச்சரிப்புப் பத்திரிகையாக வள்ளல்பெருமான் வெளிப் படுத்தி உள்ளார்.

வள்ளல்பெருமான் மேற்கண்டவாறு எச்சரிப்பு பத்திரிகையில் தெரிவித்தும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களான *மருதூர், வடலூர் தருமச்சாலை, சத்திய ஞானசபை, கருங்குழி, மேட்டுகுப்பம் சித்திவளாகம்* போன்ற புனித இடங்களில் வள்ளலார் சொல்லியவாறு இந்து சமய அறநிலைய துறை வழிப்பாட்டு முறைகளை செயல் படுத்த வேண்டும். 
 
 *மேலும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் உள்ள எல்லாப்  புனித  இடங்களிலும் மது மாமிசம் இல்லாமல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய புனித பூமியாக, புனித இடமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் அழுத்தமான முக்கிய கோரிக்கையாகும்*

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள்  வள்ளலார் சொல்லியவாறு வழிப்பாட்டு முறைகளை மாற்றினால் மட்டுமே எல்லா சன்மார்க்க சங்கங்களும் ஒத்த கருத்தோடு ஒரே வழிபாட்டு முறையை பின் பற்றுவார்கள் என்பதை திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் "சுத்த சன்மார்க்க சுடர்" முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை விளம்பர பத்திரிகை!

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை !*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் சத்திய ஞானசபைக்கு வரப்போகிறார் அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் ஞானசபையில் அமர்ந்து  அளவு குறிக்கப்படாத அற்புத சித்தியெல்லாம்  வழங்கப்போகிறார் என்பதை முன் கூட்டியே விளம்பரப் படுத்தியுள்ளார் வள்ளல்பெருமான்!* 

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை விளம்பரம் !  25-11-1872,ஆம் ஆண்டு !*

*உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !*

*அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்.கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்.செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்.என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்*

*நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு  அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லஷியமாகிய ''ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப்'' பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்*

*இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இடண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும்,எல்லா அண்டங்களையும் .எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,,*

*எல்லாத் தத்துவங்களையும் ,எல்லாத் தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாச் செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும்*

*தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை ,இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,*

*எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்புயர்வு இல்லாத் தனிபெருந்தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே'' அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.*

*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் (மனிதர்கள் ) அறிந்து,அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகப்பூரணப்  பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,*

*நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.*

*இனி இச்சீவர்கள் ( மக்கள் ) விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,*

*எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்கத்தைப் பெற்று ''பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு......*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சமமதத்தால் இயற்று வித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்'' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,அருட்பெருஞ் ஜோதியராய் வீற்று இருக்கின்றார்.*

*ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர் களாகில்  கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி,இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பல்வகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள்.*

இங்கனம்
சிதம்பரம் இராமலிங்கம்.

*எல்லா ஜீவர்களும் அருள் பெற வேண்டும் இன்புற்று வாழவேண்டும், மரணத்தை வெல்ல வேண்டும் என்ற பெருந்தயவு பெருங்கருணையோடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வடலூர் சத்திய ஞானசபைக்கு அழைத்து வருகின்றார் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் எல்லாம் கலங்குகிறது,ஆச்சரியம் அலைமோதுகிறது,அளவில்லா மகிழ்ச்சி ஆனந்தம் கொள்கிறது,வள்ளல்பெருமான் அவர்களை நினைந்து நினைந்து, உணர்ந்து உணரந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து,ஊற்றெழும் ஆனந்த கண்ணீரால் அழுது அழுது போற்றி போற்றி  வணங்கி வணங்கி வாழ்த்தி மகிழ்வதைத் தவிர வேறு வார்த்தைகளே இல்லை*

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

சனி, 2 மார்ச், 2024

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ! பாகம் 3.

*முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது!* 

பாகம்- 3...

*சுத்த சன்மார்க்கக் கொள்கையை தெரிந்து கொள்ள வருபவர்கள், வள்ளலார் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ள உண்மை ஒழுக்க நெறிகளை முதலில் ஊன்றி படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்*

*முன் தேகம், பின் தேகம் உண்டு என்பது எவ்வாறு என்பதை வள்ளலார் சொல்லுவதை கவனித்து ஜாக்கிரதையாக வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்*

*வள்ளல்பெருமான் கேள்வி பதில்!* 

12,*முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:-?*

*ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்;* 

*இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும்.*

*ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்றறியவேண்டும்.*

13,*சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:-?* 

*ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள்.*

*அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்.*

கீழே உள்ள நீண்ட  கேள்வி பதிலை ஊன்றி கவனிக்கவும் !

14,*முன் பிறப்பில் சீவகாருணிய ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களை இந்தப் பிறப்பில் பசி தாகம் பயம் முதலிய வற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதியென்றால், அந்தச் சீவர்கள் விஷயத்தில் காருணியம் வைத்து ஆகாரம் முதலியவை கொடுத்து அவர்கள் துக்கத்தை மாற்றுவது கடவுள் அருளாக்கினைக்கு விரோதமாகாதோ என்னில்:-?* 

*ஆகாது. அரசன் தன் கட்டளைக்கு முழுதும் விரோதித்து, கால்களுக்கு விலங்கிடப் பட்டுச் சிறைச்சாலையில் இருக்கின்ற பெரிய குற்றவாளிகளுக்கும் தன் சேவகர்களைக் கொண்டு ஆகாரங்கொடுப்பிக்கின்றான்.* 

*அதுபோல், கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தஞ் செய்யப்பட்டு நரகத்திலிருக்கின்ற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக் கின்றார்.*

*அரசன் தன் கட்டளைப் படி நடவாமல் வேறுபட்ட சாதாரண குற்றமுடையவர்களைத் தன்னாலவர்கள் பெறத்தக்க லாபத்தைப் பெறவொட் டாமல் உத்தியோகத்தினின்றும் நீக்கி அவர்களுக்கு நல்லறிவு வருவிக்கின்ற நிமித்தம் அவ்விடத்தைவிட்டு வேறிடங்களில் வெளிப்படுத்துகின்றான்.*

*அவர்கள் உத்தியோக மிழந்தபடியால், சுகபோஜன முதலிய போகங்களை இழந்து ஊர்ப்புறங்களிற் போய் ஆகாரம் முதலியவை குறித்து அலைந்து வருந்துகின்ற போது, தயவுள்ளவர்கள் கண்டு ஆகார முதலியவை கொடுக்கின்றார்கள்.* 

*அதை அரசன் கேட்ட காலத்திலும் கண்ட காலத்திலும் கொடுத்தவர்களை இரக்கமுள்ள நல்ல சமுசாரிகளென்று சந்தோஷ’த்து உபசரிக்கின்றானே யல்லது கோபிக்கின்றானில்லை. அதுபோல், கடவுள் தம் கட்டளைப்படி நடவாத சாதாரண குற்றமுடைய சீவர்களைத் தமது சத்தியால் அவர்கள் பெறத்தக்க சுகங்களைப் பெறவொட்டாமல் தாம் கொடுத்த சௌக்கிய புவனபோகங்களை விடுவித்து, அந்தச் சீவர்களுக்கு நல்லறிவு வருவிக்கும் நிமித்தம் அந்தத் தேகத்தினின்றும் நீக்கி வேறொரு தேகத்தில் விடுகின்றார்.*

*அந்தச் சீவர்கள் சௌக்கிய புவன போகங்களை இழந்தபடியால், சௌக்கிய போஜன முதலியவற்றை இழந்து வேறு வேறிடங்களில் ஆகார முதலியவை இல்லாமல் வருந்தும்போது, தயவுள்ளவர்கள் அந்த வருத்தத்தைக் கண்டு ஆகார முதலியவை கொடுத்தால் அப்படிக் கொடுத்தவர்களை நல்ல இரக்கமுள்ளவர்கள் மேன்மேலுஞ் சுகத்தையடையக் கடவார்களென்று சந்தோஷ’த்து உபசரிப்பாரல்லது கோபிக்கமாட்டார்.* 

*ஆதலால், கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்துச் சீவர்கள் காருணியம் வைப்பதே சம்மதவென்று உண்மையாக அறியவேண்டும்.*

*அறிவும் அன்பும் தோன்றுவது எவ்வாறு என்பதை கீழே விளக்குகின்றார்!*

15,*இந்தச் சீவகாருணியத்தால் இகலோக ஒழுக்கம் வழங்குகின்றது. சீவகாருணிய மில்லையாகில், இகலோக ஒழுக்க மெவ்வளவும் வழங்கமாட்டாதென்று அறியவேண்டும். எப்படியென்னில்:-?*

*சீவகாருணிய மில்லாதபோது அறிவும் அன்புந் தோன்றா;*

*அவை தோன்றாதபோது கண்ணோட்டமும் ஒருமையும் உபகாரமும் விளங்கா;*

*அவை விளங்காதபோது வலியசீவர்களால் எளிய சீவர்களொழுக்கம் பொறாமை முதலானவைகளால் தடைப்பட்டழிந்து போம். பின்பு வலியசீவர்கள் ஒழுக்கங்களும் தாமச ஒழுக்கங்களாகி ஒருவ ரொழுக்கத்தால் மற்றொருவரொழுக்கம் மதத்தினால் சோர்ந்தவிடதில் மாறுபட்டழிந்து போம்.*

*சீவகாருணிய ஒழுக்கஞ் சிறிது மில்லாத புலி சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவேயில்லை அது போல் சீவகாருணிய மில்லாத மனிதர்கள் வழங்குமிடத்திலும் இகலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்*

16,*பரலோக ஒழுக்கமுஞ் சீவகாருணியத்தால் வழங்குகின்றது. அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்கமாட்டாது எப்படியென்னில்;-?*

*சீவகாருணியமில்லாத போது அருள்விளக்கந் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாதபோது முத்தியின்பம் ஒருவரும் அடையமாட்டார்கள். அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்*

17,*சீவகாருணிய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துன்மார்க்கப் பிறவியே பெருகி, எங்கும் புல்லொழுக்கங்களே வழங்குகின்றன. எப்படியென்னில்:-?*

*சீவகாருணிய மில்லாத கடின சித்தர்க ளெல்லாம் அவரவர் கடின செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரணியவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை, முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள் முதலிய விஷசெந்துக்களாகவும், சிலர் முதலை சுறா முதலிய கடின செந்துக்களாகவும் சிலர் காக்கை கழுகு முதலிய பக்ஷி சண்டாளங்களாகவும், சிலர் எட்டி கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள்.*

*ஆதலால், புல்லொழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன என்றறிய வேண்டும்.*

*சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும்.*

*சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது* 

தொடரும்....

*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று உலக வழிபாட்டையே மாற்றியவர் நமது வள்ளல்பெருமான்*

*அடுத்து ஜீவகாருண்யத்திற்கு முக்கியமான லட்சியம் எது என்று தெரிந்து கொள்வோம்!*

அன்புடன் ஆன்மநேயன் சுத்தசன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

வியாழன், 29 பிப்ரவரி, 2024

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாகம் 2,

*முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது !*

 *பாகம்-2* 

*சுத்த சன்மார்க்கத்திற்கு வருபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஜீவகாருண்ய ஒழுக்கம்  என்ற நூலில் உள்ள உண்மை ஒழுக்கங்களை ஊன்றி படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் முதல் பகுதியை வெளியிட்டோம் அதன் தொடர்ச்சி இரண்டாம் பாகம் கீழே !*

*கேள்வி பதில்!*

8,*சீவர்கள் துக்கப் படுகின்றதைக் கண்டபோதும், சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாயிருக்கின்றார்கள்; இவர்களுக்குச் சகோதர உரிமை இல்லாமற் போவது ஏனெனில்:-?*
 *துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரரென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க "ஆன்ம அறிவு என்கிற கண்ணானது" அஞ்ஞானகாசத்தால் மிகவும் ஒளி மழுங்கினபடியாலும், அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்த படியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று.* 

*அதனால், சகோதர உரிமையிருந்தும் சீவகாருணியம் உண்டாகாம லிருந்ததென்று அறிய வேண்டும். இதனால் சீவகாருணியமுள்ளவர் ஆன்ம திருஷ்டி விளக்கமுள்ளவர் என்று அறியப்படும்.*

9,*சீவர்களுக்குப் பசி தாகம் பயம் முதலியவற்றால் வருந் துன்பங்களெல்லாம் மனம் கண் முதலிய கரணேந்திரிய அனுபவங்களல்லது, ஆன்ம அனுபவங்கள் அல்ல; அதனாற் சீவகாருணியங் கொள்வதில் விசேஷ பிரயோசனம் இல்லையே என்னில்:-?* 

*இந்தத் தூலதேகத்தில் சீவனாக இருக்கிற ஆன்மாவும் அறிவுக்கறிவாயிருக்கிற கடவுள் இயற்கை விளக்கமுந் தவிர, கரணம் இந்திரியம் முதலிய மற்றவைகளெல்லாம் கருவிகளாகிய தத்துவ தசடங்களே யல்லது சித்துக்களல்ல. ஆகலில் சுகதுக்கங்களைச் சடங்கள் அனுபவிக்க அறியா. செம்மண் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது. அதுபோல், மனஞ் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது*
 *செம்மண்ணினால் தேகவாழ்க்கைக்கு வீடுகட்டிக்கொள்வது போல, மன முதலான நகரணேந்திரியங்களால் சீவவாழ்க்கைக்குக் கடவுளால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம் ஒரு சிறிய வீடாகும். இன்பதுன்பங்களை வீட்டிலிருக்கின்றவன் அனுபவிப்பானல்லது, வீடு அனுபவிக்கமாட்டாது.*

*அன்றியும் காசத்தினால் ஒளி மழுங்கப்பட்டு உபநயனங்களாகிய கண்ணாடிகளால் பார்க்கின்ற கண்கள் துன்ப விஷயத்தைக் கண்டபோது, அக்கண்கள் நீர்சொரியுமே யல்லது, கண்ணாடி நீர் சொரிய மாட்டாது* 

*ஆகலில் ஆன்ம திருஷ்டிக்கு உபநயனங்களாக இருக்கின்ற மனம் முதலான கருவிகள் சுகதுக்கங்களை அனுபவிக்க மாட்டா; ஆன்மாவே அனுபவிக்குமென்று அறியவேண்டும்.*

*10,ஒரு சீவனுக்குச் சுகம் நேரிட்டபோது மனம் மகிழ்கின்றது; துக்கம் நேரிட்டபோது மனம் தளர்கின்றது; ஆகலில், சுகதுக்கங்களை அம்மனம் அனுபவிப்பதாக அறியப்படாதோ என்னில்:-?*

 *அறியப் படாது. பளிங்கினாற் செய்த வீட்டினுள் இருக்கின்ற வீட்டுத் தலைவனுடைய தேகவிளக்கமும் தேகச் சோர்வும் அந்தப் பளிங்கு வீட்டில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், கண்களின் மலர்ச்சியும் சோர்வும் அக்கண்களிலிட்ட உபநயனங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும்,* 

*சுகதுக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகிற மகிழ்ச்சியும் தளர்வும் மனம் முதலான கரணேந்திரியங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுகின்றன. ஆகலில் சுகதுக்கங்கள் ஆன்மாவுக்கே அனுபவமென்றும், சுகதுக்கங்களை அறிந்தனுபவிப்பதற்குக் கரணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகாரக் கருவிகளாகுமென்று அறிய வேண்டியது.*

11,*கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:-?* 

*முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப்படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும்.* 

*மேலே கண்ட உண்மை விளக்கத்தை ஊன்றி  படித்து தெளிவு பெறவும்*

தொடரும்....

*அடுத்துவருவது முன் தேகம் உண்டு என்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்* 

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாகம் 1

*முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை !*

*சுத்த சன்மார்க்கத்திற்கு வருபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது* 

*வள்ளல்பெருமான் எழுதி வெளியிட்ட ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ள உண்மை ஒழுக்க நெறிகளை படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்* 

*கேள்வியும் நானே, பதிலும் நானே என்பது போல் வள்ளல்பெருமானே கேள்வி கேட்டு பதில் சொல்லி புரிய வைப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பகுதி நூலாகும்* 

*ஜீவகாருண்ய ஒழுக்கம் முதற்பிரிவு !*

*ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு!*

*உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.*

1,*அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:-?*

 *எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று*

 *எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.*

2,*இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று அறியவேண்டில்:-?* 

*கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.*

3,*கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:-?*

*சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.*

4,*கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடா தென்பது எப்படி என்னில்:-?*

*அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம். சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.*

*அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும்.*

*சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும்.*

*சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும்.*

*ஆகலின் புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே என்றும், பாவமென்பது சீவகாருணிய மில்லாமையொன்றே என்றும் அறியப்படும்.*

*சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்*

5,*ஆனால், சீவகாருணிய ஒழுக்கமென்பது என்னெனில்:-?*

*சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலென்று அறிய வேண்டும்.*

6,*சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகுமெனில்:-?*

*சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.*

7,*சீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்:-?*
 *சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வசக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால், ஓருரிமையுள்ள சகோதரர்களேயாவர் சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்* 

*ஜீவகாருண்ய ஒழுக்கத்தை படித்து பயன் பெறுவோம்*

தொடரும்....

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
   *9865939896*