வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

வடலூர் வள்ளலார் தெய்வநிலையங்களின் நிலைமை !

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தின் நிலைமை!

வள்ளலார் முடிந்த முடிவான  ஞான மார்க்கத்தை போதிக்க வந்தவர்.

அதனால்தான் மக்கள் பக்தி மார்க்கத்தை கடந்து ஞான மார்க்கத்தை பின்பற்றுவதற்காகவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்துள்ளார்.சிலை வழிப்பாட்டை தவிர்த்து ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்தார். 

வடலூர் ஞானசபை எண்கோண வடிவமாக அமைத்து எட்டுக் கதவுகள் ( எட்டு அம்பலம்) வைத்து அமைத்துள்ளார். சபையைச் சுற்றி இரும்பு கம்பிகளால் பின்னப்பட்ட சங்கிலியை இடைவிடாமல் வைத்துள்ளார்.இப்போது அந்த சங்கிலி துண்டிக்கப்பட்டு இரண்டு பக்கமும் தூக்கி போட்டுள்ளார்கள்.

ஞான சபையில் உள்ள எண்கோணத்தில் வைக்கப்பட்டுள்ள எட்டுக். கதவுகளும் திறந்து இருக்க வேண்டும்.எட்டு திக்கு மக்களும் வடலூர் வந்து எங்கிருந்து பார்த்தாலும் சிரமம் இல்லாமல் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்பதே வள்ளலாரின் முக்கிய நோக்கமாகும்.

இப்போது வடலூர் நிலைமை ஏழு கதவுகளை அடைத்து விட்டு ஒரு கதவை மட்டும் திறந்து வைத்து சமய வழிப்பாட்டு முறைபோல் செய்து வருகிறார்கள்.

*இது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு நேர் விரோதமானது !*

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் யாவும் வள்ளலார் சொல்லியவாறு எதுவும் நடைபெற வில்லை.சமய வழிபாடுகள்தான் நடைப்பெற்று வருகிறது. சுத்த சன்மார்க்க வழிபாடு மறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு யார் காரணம் *அரசு மட்டும் காரணம் அல்ல* அரசியல் வாதிகள்,அரசு அதிகாரிகள், சமயம் சார்ந்த சன்மார்க்கிகள், வடலூர் மக்கள் அனைவருமே காரணமாகும். 

மற்றும் எவருக்கும் வள்ளலார் கொள்கைகள் முழுமையாகத் தெரியாது, வடலூர் தெய்வ நிலையங்களை தவறான பாதையில் கொண்டு சென்றவர்கள்***வள்ளலார்  உடன் இருந்த *வேலாயுதமுதலியார், மற்றும் ஆடூர்சபாபதி குருக்கள்* அவர்களுக்கு துணையாக இருந்த வேட்டவலம் ஜமீன்தார், போன்ற சமய மதவாதிகளே காரணமாகும். அவர்களை பின் தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தந்தவர்கள், தந்து கொண்டு இருப்பவர்கள் இருந்தவர்கள்,இருந்து கொண்டுஇருப்பவர்கள், *ஞானசபையை திருப்பணி செய்த கிருபானந்தவாரியர் அவர்கள், பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள், மற்றும் ஊரன் அடிகள் அவர்கள்* மற்றும்
வடலூர் மக்களும் வடலூர் அரசியல்வாதிகளுமே முக்கிய காரணமாகும்.

*வள்ளலார் அறிவுறுத்திய சுத்த சன்மார்க்க கொள்கையை யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை, பின்பற்றவும் இல்லை, *தெரிந்து கொண்டவர்களை தொடர்பு கொள்வதும் இல்லை.* ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகளின் துணைக்கொண்டு, ஆட்சி அதிகாரத்தின் துணைக் கொண்டு தான்தோன்றித் தனமாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள்.

ஈரோடு கதிர்வேல் ஆகிய நான் சுமார் 45 ஆண்டுகளாக வடலூர் தெய்வ நிலையங்கள் வள்ளலார் எண்ணியவாறு தூய்மைபடுத்த பல அமைதி போராட்டங்கள் செய்துள்ளேன், அதனால் நிறைய எதிர்ப்புக்களை சந்தித்துள்ளேன். மேலும் மேலும் பல பல போராட்டங்கள் செய்து வந்துள்ளேன். சத்திய *ஞானசபை பூசகர் சபேசன் அவர்களிடம் இருந்து சாவியைப் பரித்து தெய்வ நிலையத்திடம் ஒப்படைத்து உள்ளேன்* உண்ணாநோம்பு இருந்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளேன்.ஒத்துழைப்பு கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. காரணம் எல்லோரும் சமயம் சார்ந்த சன்மார்க்கிகளே ஆவார்கள்.

சாதி சமயம் மதம் சார்ந்தவர்கள்.மற்றும் அரசியல் வாதிகள் உள்ளே நுழைந்துகொண்டு மக்களுக்கு தவறான சாதி சமய மத வழிபாட்டு முறையை காட்டிக் கொண்டு வருகிறார்கள். சுத்த சன்மார்க்க வழிபாடு மறைக்கப் பட்டுள்ளன. நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

வள்ளலார் எண்ணியபடி உலகம் முழுவதும் உள்ள மக்கள் சுத்த சன்மார்த்தைப் பின்பற்றி  வடலூர் வருவதற்கும் வடலூர்  முழுமையாக தூய்மை பெறுவதற்கும் இன்னும் சுமார் 500 ஐந்து நூறு ஆண்டுகள் கடக்க வேண்டும்.

*சுத்த சன்மார்க்கத்தை முழுமையாக கடைபிடிப்பவர் யார்?*

ஈரோடு கதிர்வேல் சுத்த தேகத்தோடு சீக்கிரம்  இறந்து மீண்டும் மறு பிறப்பு எடுத்து பிரணவ தேகம்.ஞானதேகம் பெற்று. வந்துதான் வடலூர் தெய்வ நிலையங்களை தூய்மை படுத்த முடியும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்பமாக உள்ளது.

இப்போது பொருப்பில் இருப்பவர்கள்அனைவரும் மறைந்து விடுவார்கள். புதிய சுத்த சன்மார்க்க அன்பர்கள் விரைந்து வருவார்கள் அதுவரை இப்படியே குழப்பமாகத்தான் இருக்கும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.பக்குவம் உள்ள ஆன்மாவை ஆண்டவர் தேர்ந்து எடுத்து அருள் வழங்கி துரிதமாகவும் தூய்மையுடனும் உண்மையுடனும், சத்தியவான் துணைக் கொண்டு புனிதமுறு சுத்த சன்மார்க்க கொள்கைகளை செயல்படுத்தி வைப்பார். 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எண்ணியவாறு எல்லாம் நல்லதே நடக்கும்,எவ்விதப்பட்ட தடைகளும் அகற்றப்படும். எல்லாம் இறை அருள் சம்மதம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் 
சுத்த சன்மார்க்க சுடர்.முனைவர் ஈரோடு கதிர்வேல் 
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.
9865939896

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

வள்ளலார் தனித் தன்மை உடையவர்!

வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..

பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..

உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.

கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..

கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..

சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.

கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.

சிம்மாசனத்தில் அமரமாட்டார்.

ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.

தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்..

அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.

உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..

கை நீட்டி பேசமாட்டார்.

எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..

எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..

தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..

சத்தம் போட்டு பேசமாட்டார்..

சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..

ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.

உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..

புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பணத்தை கையிலே தொடவே மாட்டார்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.

உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.

வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....

*ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.*

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..

*தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.*

கடவுளைத்தேடி காடு, மலை, குகை,
குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.

கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர். 

அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.

தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.

தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.

மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..

எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

*உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.*

பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .

எவரையும் தொடமாட்டார், தொட்டு பேசவும் மாட்டார்.

உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.

உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..

*நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..*

கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.

*ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.*

ஒளி வழிப்பாட்டிற்காக
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..

தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..

சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.

*மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.*

உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..

ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.

உலக மக்களுக்காக உண்மை நூலான *திருஅருட்பா* வைத் தந்தவர்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல .
செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.

*மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.*

இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..

மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.

தன் பெயருக்கு முன் *சிதம்பரம் இராமலிங்கம்* என்றே கையெழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்

அவர் பெருமையை சொல்லி மாளாது......

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர்
முனைவர் ஈரோடு கதிர்வேல்
9865939896

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

தைப்பூசம் மலர் கட்டுரை !

வடலூர் தைப்பூசத் திருவிழா !

 கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதுவே வள்ளல்பெருமானாரின் முடிந்த முடிவாகும். 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்காகவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்துள்ளார்!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெறுவதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய  ஒழுக்கநெறிகளைத் தெரிவித்துள்ளார்.

*மெய்மொழி ஒழுக்க நெறிகள்!*

*மனிதகுலம் பெற வேண்டிய நான்கு வகையான புருஷார்த்தங்கள்!*

*அவையாவன:?*

1,சாகாத கல்வி கற்றல்,
2,தத்துவங்களை நிக்கிரகம் செய்தல்,
3,ஏமசித்திபெறுதல், 
4,கடவுளின் நிலையறிந்து அம்மயமாகுதல்  
 *இந்நான்கையும் பூரணமாக அடைதல் வேண்டும்.*

*நான்கு வகை ஒழுக்கம்!*

 1. இந்திரிய ஒழுக்கத்தை கடைபிடித்தலே  சாகாக்கல்வி கற்பதாகும் 
2. கரண ஒழுக்கத்தை கடைபிடித்தலே தத்துவங்களை நிக்கிரகம் செய்வதாகும், 
3. ஜீவ ஒழுக்கத்தை கடைப்பிடித்தலே ஏமசித்தி பெறுவதாகும், 4. ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்தலே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்

1. இந்திரிய ஒழுக்கம் என்பது யாதெனில்?

*இந்திரிய ஒழுக்கம் என்பது!
நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் *ஞானேந்திரிய ஒழுக்கமும்;*

இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும்
 கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.*

*கரண ஒழுக்கம் என்பது !*

*சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் மனத்தை நிறுத்துதல்,( ஆன்மா இருக்கும் இடம்)
*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.*

*ஜீவ ஒழுக்கம் என்பது!*

*எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.*

*ஆன்ம ஒழுக்கம் என்பது !*

*எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.*

*இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்* 

*ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா.*

*ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.* அன்றியும்-

இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, *இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும்.* 

அன்றியும்-

*சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்* *அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம்*

*தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும்,வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம்.* 

*ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி*, *அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும்,*
*அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும்.* 

அன்றியும்-

*உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று,*
 *உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று, சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்;*

*உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய்,* 

*எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம்புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன் விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்;* 

*ஆண்டவனாரது அருளற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:*

*நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் -*

*வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.*

*இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.
இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி* யென்னும் *கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம்.*

*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை !*

*சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களே மரணத்தை வெல்லும் தகுதி பெற்றவரகளாவார்கள்,அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் 
கே,சுமதி 
தலைமை ஆசிரியர்,
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
SKC ரோடு,
ஈரோடு 
Sell
9942362100

திங்கள், 27 ஜனவரி, 2025

வடலூர் தைப்பூசத்தின் சிறப்பு! மலர் கட்டுரை !

வடலூர் தைப்பூசத்தின் சிறப்பு !

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உலக வாழ்க்கைக்கு பொருத்தமானகருத்தாகும், அருள் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல!* 

ஒவ்வொரு மாதமும் 27 நாட்களுக்கு ஒருமுறை பூசம் நட்சத்திரம் வருகிறது,அவற்றில் தைமாத்த்தில் வரும் பூசம் நட்சத்திரம் மிகச் சிறந்த நட்சத்திரமாகும்

ஸ்ரீமுக ஆண்டு தைத்திங்கள் 19 ஆம்நாள் 30-01-1874 ஆம் ஆண்டு வெள்ளிக்கியமை இரவு 12 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிமையில் தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி யானார் என்பது அனைவரும் அறிந்த்தே .

 ஆட்டத்தில் உள்ளது யாவும்  பிண்டத்தில் உள்ளது என்பார் வள்ளலார், 

இப் பிரபஞ்சத்தின் முக்கிய ஒளி கிரகங்களாகிய அக்கினி,சூரியன்,சந்திரன் ,நட்சத்திரங்கள் போல் நமது உடம்பில் அகத்தில் ஆன்ம ஒளியாகவும், அகப்புறத்தில் ஜீவ ஒளியாகவும் (உயிர்ஒளி) புறத்தில் மன ஒளியாகவும்,புறப்புறத்தில் கண் ஒளியாகவும் உள்ளன.

அண்டத்தில் ஒளிவட்டங்கள் யாவும் ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் சிறப்புடைய நாளை  முழு பவுர்ணமி நாளாகச் சொல்லப்படுகிறது. 

தைப்பூச பவுர்ணமி நாளை ஆண்டவர் அருள் பாலிக்கும் நாளாகக்கருதி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து கடவுளை வணங்கினால் நல்ல பலனைத்தரும் என்பது சைவச் சமய சான்றோர்களின் வழிபாட்டு முறையாகும்.

தைப்பூசம் என்றாலே உலகம் எங்கும் உள்ள  தமிழ்க் கடவுளான முருகக் கடவுளை தமிழ் சார்ந்த மக்கள் வழிபடும் விழாவாகத் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டும் நடைப்பெற்றும் வருகிறது.* 

*வடலூரில் தைப்பூசம்!*

154 ஆண்டுகளாக தைப்பூசத்தன்று  வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் ஜோதியை மறைத்து 7 ஏழு திரைகளை தொங்கவிட்டு,ஜோதி தரிசனம் காட்டும்போது ஒவ்வொரு திரைகளாக விலக்கிய பிறகு ஜோதி தரிதனம் காட்டப்படுகிறது. 

மேலும் ஒவ்வொரு மாதப் பூசத்தன்றும் இரவு எட்டு மணிஅளவில் 7 ஏழு திரைகளை  விலக்கிய பின்பு நீக்கி ஜோதி தரிசனம் காட்டப் படுகிறது 

கடவுள் தத்துவ உருவமாக இல்லை,அருள் ஒளியாக உள்ளார், ஒருவகையில்  தத்துவ உருவ வழிபாட்டை விட்டுவிட்டு  ஒளியை வழிபடுகிறார்கள் என்பது வரவேற்கக் கூடியதாகும்.ஒளியை வழிபட்டால் ஆன்மா பலம் பெறும், ஆன்ம அறிவு விளங்கும்,ஆன்ம அறிவு விளங்கினால் ஆன்ம லாபம் பெறப்படும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.* 

அருள் வழங்கும்  ஒரே இடமே வடலூர் சத்திய ஞானசபையாகும். அதனால்தான் அங்கு  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையுடன் அருள் வழங்கும் இடமாக சொல்லப்படுகின்றது.*

*வள்ளலார் தைப்பூசம் மற்றும் மாதப்பூசத்தில் மட்டும் 7 ஏழு திரைகளை நீக்கி  ஜோதி தரிசனம் காட்டச் சொன்னாரா என்று கேட்பவர்களுக்கு திருஅருட்பா பாடல்களிலோ,உரைநடைப் பகுதிகளிலோ எந்த விதமான ஆதாரமும் இல்லை.* 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுவதற்கு காலம் நேரம் தேவை இல்லை என்கிறார் வள்ளலார்*
*அதற்காகவே திருஅருட்பாவில் ஒரு பதிகம் பதிவு செய்துள்ளார். 
1. அடங்குநாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே
தொடங்குநாள் நல்லதன்றோ - நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன்றோ.

2. வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள்.
3. காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.*

4. ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.

5. தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடையாதும் இல்லை கண் டாய் - நெஞ்சே
தடையாதும் இல்லைகண் டாய்.

6. கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
பையுள் உனக்கென்னை யோ - நெஞ்சே
பையுள் உனக்கென்னை யோ.

7. என்னுயிர் நாதனை யான் கண்டு அணைதற்கே
உன்னுவ தென்னை கண் டாய் - நெஞ்சே
உன்னுவ தென்னை கண் டாய்.

8. நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
ஏன்பற்று வாயென்பதார் - நெஞ்சே
ஏன்பற்று வாயென்பதார்.

9. தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவ முன்னுவதேன் - நெஞ்சே
தத்துவ முன்னுவதேன்.

10. ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
விக்கல் வராது கண்டாய் - நெஞ்சே
விக்கல் வராதுகண் டாய்.!

என்னும் பாடல் வரிகளிலே தெளிவாக விவரிக்கின்றார்

திருஅருட்பா அகவல்!

மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை அஞ்ஞானம் என்னும் ஏழு திரைகளைப் பற்றியும் அவற்றை நீக்கும் வழிமுறைகளைப் பற்றியும் அகவல் வரிகளில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார் வள்ளலார், மற்றபடி இயற்கை விளக்கமான சத்திய  ஞானசபையில் இயற்கை விளக்கமாக  வைத்துள்ள ஞான தீபத்திற்கு திரைகளை மாட்டி விளக்கச் சொல்லவில்லை என்பதை சுத்த சன்மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்,*

வடலூர் தைப்பூசப் பெருவிழாவானது சமயம் மதம் சார்ந்த விழாவாக மாறிவிட்டது*

சாதி சமயம் மதம் கடந்து உலக மக்கள் அனைவரும் வந்து வழிபடும் பொதுவான இடமே வடலூரில் உள்ள இயற்கை விளக்கமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்.அச் சபையிலே அமர்ந்து அருள்பாலிக்கும் இயற்கை உண்மைக் கடவுளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்*

சாதியும் மதமும்  சமயமும் காணா

ஆதி அநாதியாம் அருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)

மேலும் வள்ளலார் பாடல்! 

சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே

ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

ஆருயிர்கள் அகம் புறம் மற் றனைத்தும் நிறைஒளியே

ஓதிஉணர்ந் தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்

ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே

சோதி மயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூய நடத்தரசே என் சொல்லும் அணிந் தருளே.! ( அருள் விளக்கமாலை)

மேலும்

சபையெனது யஉளமெனத் தான் அமர்ந்து எனக்கே

அபயம்  அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி! ( அகவல்) 

மேலும்

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமுதம் உண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் !

அற்புதம் அற்புதம் அற்புதமே என்பார் வள்ளலார்.*

சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியைக் கண்டேன் என்பார் வள்ளலார்*

சாதி சமயம் மதம் கடந்த வடலூர் சத்திய ஞானசபையில் சமயம் மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் அடங்கிய  விழாக்களை தந்திரமாக உள்ளே புகுத்து விட்டார்கள் என்பதே உண்மையாகும்*

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்!*

வள்ளலார் கொள்கைகளை  மக்கள் புரிந்து கொண்டு பின் பற்றினால் சாதி சமயம் மதம் சார்ந்த தத்துவக் கடவுள்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த சமய மதவாதிகள்,வள்ளலாரை சாதி சமய மதம் சார்ந்த மதவாதியாக  மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்அவை ஒருபோதும் நடைபெறாது*

இப்போது எல்லாம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளை மக்கள் தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு தங்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அடிமைகளாய் மாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்பதே சத்திய உண்மையாகும்.*

அதற்கு சாட்சியாக நாங்களும் எங்கள் குடும்பமும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை  பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்.*

வள்ளலார் வரிகள்!

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே!*

வடலூர் வந்தால் மட்டுமே நல்ல வரம் பெறலாம் என்று வெளிப்படையாக சொல்லுகி ன்றார் வள்ளலார்* 

இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,மற்றைய வழிப்பாட்டுத் தலங்களில் நல்ல வரம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது பொருளாகும்*

மேலும் வள்ளலார் சொல்வது ! 

சன்மார்க்கப் பெரும்பதி வருகை !*

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்,இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும். அதன்மேலும், அதன்மேலும் வழங்கும்.*

பல வகைப்பட்ட சமய பேதங்களும்,சாத்திர பேதங்களும்,சாதிபேதங்களும்,ஆசார பேதங்களும்போய்,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.*

இப்போது வந்திருக்கின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்த்தாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுளர்,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல,*

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும்,எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி "அருட்பெருஞ்ஜோதியாகும்"*
இது உண்மை அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன்,பெறுகின்றேன்,பெற்றேன். என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை. பெறுவீர்கள்,பெறுகின்றீர்கள்,பெற்றீர்கள்அஞ்சவேண்டாம் என உலக மக்களுக்காக வள்ளலார் பதிவு செய்கிறார்*

ஆகலின் இதுதொடங்கி ஞானசபையில் எழுந்தருளி அருள் வழங்கும் (நல்லவரம்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களானால் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள்*

எல்லோருக்கும் தாய், தந்தை,அண்ணன்,தம்பி,முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ,*

அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்* *வடலூர் சத்திய ஞானசபையாகும்* *மேலும் வள்ளலார் சித்திபெற்ற மேட்டுகுப்பம் சித்திவளாகமும் அதில் அடங்கும்.*

*இது சத்தியம் இது ஆண்டவர் கட்டளை*

எல்லோரும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு வடலூர் பெருவெளிக்கு வாருங்கள். தங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள்,உண்மை உணர்வோடு ஜோதி தரிசனம் காணுங்கள்*

வள்ளலார் பாடல்!*

ஜோதி எவையும் விளங்க விளங்குஞ் ஜோதி வாழியே ! 

துரிய வெளியில் நடுநின்று ஓங்கும் ஜோதி ஜோதியே!

சூதிலா மெய்ச் சிற்றம்பலத்து ஜோதி ஜோதியே !

துலங்கப் பொன்னம்பலத்தில் ஆடும் ஜோதி ஜோதியே !

மேலும்...

சுத்த சிவ சன்மார்க்க நீதி ஜோதி போற்றியே !

சுக வாழ்வளித்த சிற்றம்பலத்து ஜோதி போற்றியே !

சுத்த சுடர்ப் பொற்சபையிலாடுஞ் ஜோதி போற்றியே !

ஜோதி முழுதும் விளங்க விளக்குஞ் ஜோதி போற்றியே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

திங்கள், 18 நவம்பர், 2024

கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்!

[11/18, 8:30 PM] எல்லா உயிர்களும் இன்புற்ற தரேன் Malesiya மாணவன்: சாகாக்கல்வி

மாயை கலப்பு உடையவர்கள் (Matrix Minded /Materialistic Persons)
எழுதிய உலக நூல்களை படிக்காதிருத்தல்!
வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களை அப்படியே ஏற்காமல்!
அதற்கு பின்னால் உள்ள இரகசியங்களை ஆராய்தல்!
சாகாக்கல்வியை கூறும் அருளாளர்கள் (Higher Souls) அருளிய
மெய்ஞ்ஞான நூல்களை
ஊன்றி படித்தல்! பிறகு அதன்படி நிற்றல்!
அவையாவன : திருவருட்பா, திருமந்திரம், திருக்குறள், திருவாசகம்
[11/18, 8:30 PM] எல்லா உயிர்களும் இன்புற்ற தரேன் Malesiya மாணவன்: ஏமசித்தி


ஏமம் என்றால் தங்கம் (உறுதியாக்குதல்)
(தங்கம் உறுதியான உலோகம்)
நினைத்தது நினைத்தப்படி செய்து முடித்தால் அதற்கு பெயர் சித்தி (எ:கா)
“காரியம் சித்தியாயிற்று என்று கூறுவது வழக்கம்!”
ஏமசித்தி என்றால் பொன் செய்யும் வித்தை! அதாவது எந்த ஒரு
பொருளை கொடுத்தாலும் அந்த பொருளை அழியாது உறுதியாக்குதல் ஆகும்!
அதுபோல நம் உடம்பையும்
ஏம சித்தி (அழியாத உறுதிப் பொருள்) ஆக்க வேண்டும் என்று வள்ளலார் கூறுகிறார்!
அந்த உறுதியான சுத்ததேகத்தை பரோபகாரம், சத்விச்சாரம்  மூலமே பெற வேண்டும்!
வேறு வழியில் கூடாது என்றும் கூறுகிறார்!
(யோகம், தவம், மூலிகை, மணி, மந்திரம், ஔஷதி மூலம் அல்ல)
அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர தொடர் நாம ஜபம் இதுக்கு உதவும்!
[11/18, 8:32 PM] எல்லா உயிர்களும் இன்புற்ற தரேன் Malesiya மாணவன்: தத்துவ நிக்கிரகம்


தத்துவங்கள் என்றால் அது 36 தத்துவங்களை குறிக்கும்!
அதனை விரிக்கில் 96 தத்துவங்கள் ஆகும்!
 நிக்கிரகம் என்றால் ஒழுங்கு செய்து நிற்க செய்தல்!
எப்படி கிரகங்கள் (Planets) எல்லாம் ஒரு ஒழுங்கில்
நின்று செயல்படுகிறதோ அப்படி!
இந்த தத்துவங்களின் செயற்பாடுகளை எல்லாம் நாம்
அறிந்து, ஆராய்ந்து, அடக்கி ஆட்படுத்தல் வேண்டும்!
இப்போது நமது தத்துவங்கள் எல்லாம் அதனதன் போக்கில் உள்ளது!
அதனை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஒழுங்கு செய்து
சத்துவமய மாக்க வேண்டும்! அதுவே தத்துவ நிக்கிரம் ஆகும்
[11/18, 8:34 PM] எல்லா உயிர்களும் இன்புற்ற தரேன் Malesiya மாணவன்: கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
முடிவான ஆண்டவர் ஒருவரே உண்டு!
அவர் யார்? என்று அறிதல் வேண்டும்!
அவரின் தன்மை என்ன என்று அறிந்து நாமும் அவர் போல ஆக வேண்டும்!
எல்லா வல்ல அந்த ஏக இறைவன் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்குவது இல்லை!
அவர் அறிவு சொரூபமாக, தயவு வடிவமாக இருப்பதாலேயே
அவருக்கு எந்த துன்பமும் வருவது இல்லை!
அந்த விதியை அறிந்து நாமும் அவரை போல மாறுவதே!
நம்முடைய கடைசி புருஷார்த்தம் ஆகும்!
பிறப்பு, இறப்பு என்னும் இந்த துன்பச் சுழற்சியில் இருந்து முழுமையாக தப்பிக்க இது மட்டுமே ஒரே வழி!

வியாழன், 14 நவம்பர், 2024

தனித் தன்மை பெற்ற ஒரே அருளாளர் !

*அருட்பெருஞ்சோதி* *அருட்பெருஞ்சோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 

*🔥ஜீவர்களிடத்தில் பக்தியும் ஆண்டவரிடத்தில் அன்புமே இறைவனது அருளைப் பூரணமாக பெற்று தரும். என்னிடத்தில் உள்ள உயிர்இரக்கம் நீங்கில் எனதுஉயிரும் நீங்கும்🔥* 
        *.... அருட்ஜோதி வள்ளலார்.* 
 *************************** 
 *இரக்கத்திற்கு ஒரு வடிவம் உண்டென்றால் அவர் வள்ளல் பெருமான்தான்.* 

 *கருணைக்கு ஒருவடிவம் உண்டென்றால் அது வள்ளல் பெருமான்தான்.* 

 *தயவிற்கு ஒருவடிவம் உண்டென்றால் அதுவும் வள்ளல் பெருமான்தான்.* 

 *மேற்கண்ட இரக்கம் கருணை தயவு என்ற இவையெல்லாம்  ஒரே பொருளைத் தரும் அருளுக்கும் ஒருவடிவம் கொடுத்தால் அதுவும் வள்ளல் பெருமான் ஒருவரேதான்.* 

 *ஆம் ,* 
 *1: அருளே வடிவாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பரிபூரண அருளை எஞ்சல் இன்றி* *(அதாவது குறைவின்றி)* *பெற்றுக்கொண்ட நமது வள்ளல் பெருமான் ஒருவரே ஆண்டவரின் பரிபூரண அருளைப் பெற்றுக்கொண்ட இப்பிரபஞ்சத்தின் முதல் அருளாளர் ஆவார்கள்.* 

 *ஆதாரம் ;* 
 *தேவா நின்பேரருளை என்போல் பெற்றவர் எவ்வுலகில் யார்உளர் சற்றே நீ அறை...* 
       *..ஆறாம் திருமுறை.* 

 ************************* 
 *2: அதேபோன்று,* 
 *முத்தியைக் கடந்த எல்லாம் செய்ய வல்ல சர்வசித்தி வல்லபத்தைப் பெற்றுக்கொண்ட இப் பிரபஞ்சத்தின் முதல் சுத்த சன்மார்க்க மெய்ஞானச் சித்தரும்,நமது வள்ளல் பெருமான் ஒருவரேயாம்*

 *ஆதாரம்;* 
 *1: பூரண ஞானமும் பொருளும் உன்னிய எல்லாம் வல்ல சித்தியும் பேர்உவகையும் உதவினை எனக்கே..* 
 *......(ஆறாம் திருமுறை)* 

 *2: எல்லாம் வல்ல சித்தெனக்களித்து எனக்குனையல்லாது இலையெனும் அருட்பெருஞ்ஜோதி.* 
 *......(அகவல் வரி)* 

 *************************** *3:அண்டபிண்டத்தையெல்லாம் ஆக்கல் முதலாம் ஐந்தொழிலால் ஆளுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முதல் பிள்ளையும்,நமது வள்ளல் பெருமான் ஒருவரேயாம்* 
 
*ஆதாரம்;* 
*ஆக்கல்ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட வீக்கம்எல்லாம் சென்று உன்இச்சையின் வண்ணம் விளங்குக நீஏக்கமுறேல் என்றுரைத்து,* *அருட்சோதியும் ஈந்தெனக்கே ஊக்கமெலாம்உற உட்கலந்தான் என்உடையவனே.* 

 **************************** 
 *4: ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அடிமுடி கண்ட முதல் மகாபுருஷரும்,நமது வள்ளல் பெருமானேயாம்.* 

 *ஆதாரம் :* 
 *ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயேஆதி (முதல்வன்) என்றருளிய அருட்பெருஞ்ஜோதி.* 
 *.....(அகவல்)* 
 
 **************************** 
 *5: சுத்த பிரணவ ஞானமென்னும் முத்தேக சித்தியைப் பெற்ற முதல் சுத்த சன்மார்க்க மெய்ஞானியும், நமது வள்ளல் பெருமானேயாம்.* 

 *ஆதாரம்:* 
 *என்றும் இறவாநிலையில் இன்ப அனுபவனாகி இயல் சுத்தமாதி மூன்றும். எந்நாளும் உன்இச்சைவழி பெற்று வாழ்க.* *யாம்எய்தி நின்னுட் கலந்தேம்.இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈது எம்மாணை என்றகுருவே.* 
 *.....(ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை)* 

****************************
 *6:கருணையும் சிவமே பொருள் எனக்கண்டு கருணையே வடிவாய் நின்று அண்டகோடிகள் அனைத்தையும் தமது அருள் வல்லபத்தால் அருளாட்சி செய்கின்ற பிரபஞ்சத்தின் முதல் அருளாளரும் நமது வள்ளல் பெருமானேயாம்.* 

 *ஆதாரம்:* 
*அண்டகோடிகளெலாம் அரைக்கணத்தேகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே.* 
 *....(ஆறாம் திருமுறை அகவல்வரி)* 

 **************************** 
 *7: படிவான் முதல் (படி -மண், வான் -விண், முதல்) படைத்தல்  ஐந்து தொழிலையும், ஞானம் படைத்தல் முதல் ஐந்து தொழிலையும் ஒருங்கே நடத்துகின்ற பிரபஞ்சத்தின் முதல் பஞ்சகிருத்தியரும், ஒரு ஆன்மா மனிதப்பிறவி எடுத்து, தமது பரிபூரண ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொண்டு, அருட்பெருஞ்ஜோதியை அடைந்து , ஆண்டவரது புனித குலத்தின் முதல் அருள்பிள்ளையென்ற பட்டத்தையும் வென்ற இப்பிரபஞ்சத்தின் பெருமைக்குரிய முதல் ஆன்மாவும் நமது வள்ளல் பெருமான் ஒருவரேயாகும்;* 

 *ஆதாரம்;* 
*கொலைபுரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே.நீஎனது குலத்து முதல்மகனே. மலைவறவே சுத்தசிவ சமரசசன்மார்க்கம் வளர வளர்ந்திருக்க என வாழ்த்திய என்குருவே.* 
 *....ஆறாம்திருமுறை* 

 *எனவே.. ஆன்மநேய உயிர் உறவுகளே.. சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று அறிவோம், சுத்த சன்மார்க்க நிலையை பெறுவதற்கு முயல்வோம் . சுத்த சன்மார்க்க சுகநிலையை அடைந்து ஆன்மலாபமாகிய சுத்த சன்மார்க்கப் பெருவாழ்வாம் மரணம் இல்லாத பெருவாழ்வு என்னும் உன்னத பெருவாழ்வை பெற்று உய்வோம்.* ****************************
 *...தயவான நன்றிகள். வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,*
 *வள்ளல் அடிமை,* 
 *வடலூர் இரமேஷ்.*
 *7708490336.*

புதன், 30 அக்டோபர், 2024

முப்பொருளும் ஒன்றே !

*!தயவு!* 🙏
------------
**முப்பொருளும் ஒன்றதென்பார் வெண்ணிலாவே 
அந்த மூன்றும் ஒன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலாவே* 
*------------

-- இந்த வள்ளல் பெருமானின் வரிகளே, சமரச  சுத்த சன்மார்க்கத்தின் மூல சூத்திரம்!

அதாவது, "அருட்பெருஞ்ஜோதி" - அருளும் ஜோதியையும் தவிர இந்த மகா பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே இல்லை இல்லை இல்லை!

ஆண்டவரும் அவருடைய அருளும், இரண்டு தனித்தனி நபர்களா என்றால் இல்லை. சர்க்கரையின்  தன்மை or சுவை - இனிப்பு. அதுபோல *"ஆண்டவரின் தன்மைதான்  அருள் !"*

நாம் காணும், உணரும், வாழும் இப்பிரபஞ்சம் முழுவதும்- அகம் அருளாகவும், புறம் ஜோதியாகவும் சூழப்பெற்றது. "இங்கு ஆன்ம சிற்றணுக்களாக உள்ள நாம் அனைவரும் இறைவனின் சிறு கூறுகளே, சிற்றணுக்களே!"

இங்கு 'இருள்' என்று நாம் பொதுவாக சொல்லுவது *கார்ஒளி* யையே. இது ஆண்டவருடைய *அருவ நிலை* மட்டுமே!

இதுபோல் *அருவ, அருஉருவ, உருவ* இம் மூன்று நிலைகளிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையைத்தான் *சுத்த-பிரணவ-ஞான தேக* சித்தி எனும் "முத்தேக சித்தி" என்று கூறுகின்றோம். இந்த முத்தேக சித்தியே வள்ளலார் அடைந்த  *"இறப்பில்லா நிலை!"* . முன்னோர்கள் அடைந்த *பிறப்பில்லா நிலை* என்பது ஆண்டவருடைய அருவ நிலையை மட்டும் அடைவது.

*என்றும் வாழும் நிலை* or இறப்பில்லா நிலை என்பதுதான் *மரணமில்லாப் பெருவாழ்வு* or மூன்று தேகங்களையும் பரிபூரணமாக பெற்று சித்தி பெறுவது என்பது. இது !தயவு! என்னும் ஆண்டவருடைய தன்மை நமக்குள் (ஆன்ம சிற்றணுக்குள்) வெளியாகும் போதுதான் சாத்தியமாகிறது 🙏.

நம்முடைய - தூல *உடல்*, பிரணவ *உயிர் உணர்வு*, ஞான *மெய்யறிவு* என இம்மூன்றையும் இறைவனுடையதுபோல் அல்லது இறைவனாகவே ஆக்கும் சக்தி கொண்டது "தயவு" என்னும் அருட்பெருஞ்ஜோதியின் தன்மை அல்லது குணமே.

அந்த *தயவு* என்னும் குணம் நமக்குள்ளும் இருந்து செயலாக வெளிப்பட வேண்டும் - சிறுக சிறுக அதிகரித்து *கடவுள் தயவு* என்னும் நிலையை அடையும் பொழுது அதுவே முத்தேக சித்தியாக *சுத்த-பிரணவ-ஞான தேக* சித்தியாக வெளிப்பட்டு *இறப்பில்லா* நிலையாகிய மரணமிலாப் பெரு வாழ்வில் நம்மை வாழச் செய்கிறது.

"முப்பொருளும் ஒன்று..." என்று நம் பெருமானார் நமக்கு தெளிவுபடுத்திவிட்டார். அப்படியானால், ஒரு உதாரணத்திற்கு நாம் ஒருவருக்கு பசியாற்றுவித்தல் செய்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த செயல் நடைபெறும்போது என்ன நடைபெறுகின்றது? 

நாம் ஒருவருக்கு உணவை வழங்குகின்றோம், இன்னொருவர் அந்த உணவைப் பெற்றுக் கொள்கின்றார். சற்று யோசித்துப் பாருங்கள், நம் பெருமானார் உபதேசித்துள்ள மூல சூத்திரத்தோடு இந்த நிகழ்வை சற்று பொருத்திப் பாருங்கள்!

"முப்பொருளும் ஒன்று...", அதாவது அந்த உணவை கொடுப்பதும் நீங்கள்தான், அந்த உணவும் நீங்கள்தான், எதிரில் எளியவராக இருந்து அந்த உணவை பெற்றுக் கொள்வதும் நீங்கள்தான்! (இங்கு "நீங்கள்தான்" என்பதை, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆன்ம சிற்றணுவடிவமாகிய நீங்கள் என்று பொருள் கொள்ளவும்).

கொடுப்பவர், கொடுக்கப்படும் பொருள், பெற்றுக்கொள்பவர் - எல்லாம் ஒரே ஒரு நபர் அல்லது ஒரே ஒரு அருட்பெருஞ்ஜோதியின் வெவ்வேறு ரூபங்கள்! அப்படியானால் இந்த செயலின் மூலமாக என்னதான் நடக்கின்றது? 

*இங்கு 'தயவு' என்ற ஒன்றுமட்டும்தான் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது!* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னுடைய சிற்றணு வடிவங்களாக இருக்கும் ஆன்மாக்களை 'தயவு' என்னும் ஒரு சொல்லை செயலாக்கி, --"தயவிற்கு ஒருமை வரவேண்டும்!"-- என்ற பேருபதேசத்தில் வெளிப்படுத்திய உண்மையை நம்முடைய அனுபவத்திற்கு கொண்டுவர பயிற்சி தந்துவருகின்றார். இதற்குத்தான் ஐந்தொழில் காரியப்பாட்டால் இந்த மகாப் பிரபஞ்சத்தையே படைத்து தந்துள்ளார்.

நான்தான் எனக்கு எதிரில் இருக்கும் (அழுக்கு சட்டை அணிந்து எளியவர் ரூபத்திலிருக்கும்) எனக்கு நானே உதவி செய்து மேலேற்றிவிடுகின்றேன் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்து 'தயவு' செயல்புரிய வேண்டும். இவ்வாறு உணர்தலோடு தயவு தன்மையை நாம் வெளிப்படுத்தி, அதன் எல்லையை (செயல்புரியும் கால அளவிலும், இடங்களிலும், நபர்களிடமும் - in Space & Time) விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.

நான் வேறு, எனக்கு எதிரில் எளியவர் ரூபத்திலிருக்கும் நபர் வேறு என்ற சிந்தனை வந்துவிட்டால், நாம் செய்யும் செயல் தயவு செயலாகாது!

இதற்குத்தான் -- "எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கொள்ள வேண்டும்" -- என்று நம் பெருமானார் அருளியுள்ளார். ஏனென்றால் எல்லா உயிர்களாகவும் (முப்பொருளாகவும்) இருப்பது அந்த ஒரே ஒரு பொருளே - பரம்பொருளே - அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே.

அருட்பெருஞ்ஜோதி - அருளும் ஜோதியையும் தவிர இந்த மகா பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே இல்லை இல்லை இல்லை! *!தயவு!* 🙏