மனமே மனிதன்!
*மனமே மனிதன் !*
மனம் என்ற சொல் எல்லோராலும் உபயோகிக்கும் சொல்லாக ஆன்மீக அருளாளர்களால் வழங்கப்பெற்று நிலைபெற்று உள்ளன.
மனிதன் என்ற உருவம் மனத்தை மையமாக வைத்து படைக்கப்பட்டதாகும் மனம் ஓர் உயர்ந்த ஆற்றல்கள் மிகுந்த அருள் காந்த சக்தி அலைகளால் பின்னப்பட்ட கருவியாகும். அக்கருவிக்கு துணைக்கருவிகளாக புத்தி சித்தம் அகங்காரம் என மூன்று கருவிகள் உள்ளன. மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கருவிகளுக்கு கரணங்கள் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக் கரணங்கள் சாதாரண புறப்புற இந்திரியங்களான கண் காது மூக்கு வாய் உடம்பு களுக்குத் புலப்படாது.
ஆனாலும் கரணங்களினால்தான் இந்திரியங்கள் இயங்குகின்றன. அதேபோல் ஆண்டவரும் ஆன்மாவும் ஜீவனும் கண்களுக்குப் புலப்படாது. ஆனாலும் மனம் உள்ளவரை உடம்பை இடைவிடாது இயக்கிகொண்டே இருக்கின்றன.
*மனம் சார்ந்த மனித உருவத்தில் ஆன்மா ஜீவன் கரணங்கள் இந்திரியங்கள் என நான்கு பிரிவுகள் உள்ளன.நான்கு பிரிவுகளையும் இயக்குவது கடவுளின் அருள் சக்தியாகும்.*
ஆன்மா அகமாகவும் ஜீவன் அகப்புறமாகவும்.
கரணங்கள் புறமாகவும் இந்திரியங்கள் புறப்புறமாகவும் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் எண்ணிபார்க்க முடியாத. எவராலும் உருவாக்கமுடியாத அதிசயமான அற்புதமான நூதனமான சுத்த பூதகாரிய அணுத் துகள்களைக் கொண்டு மனித உடம்பும் அதனுள் எலும்பு நரம்பு தசை தோல் ஜவ்வு மூளை போன்ற அணுக்கருவிகளும் அதற்குத் தகுந்த கலைகளும் மற்றும் தத்துவங்களும் தத்துவங்களை இயக்கும் ஆதாரங்களும் மற்றும் பலகோடி அணுத்துகள்களால் பின்னப்பட்ட உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று சிக்கல் இல்லாத தொடர்புடன் மிக நேர்த்தியாக கடவுளின் அருள் சக்தியால் பின்னப்பட்டுள்ளன.
*மனித உடம்பே உலக அதிசயங்களில் ஒன்றாகும்* ஆகையினால் உயர்ந்த அறிவுபெற்ற தேகம் மனித்தேகம்.
உடம்பை இயக்குவதற்கு கடவுளால் படைத்த ஆன்மா என்ற உள் ஒளியும் மாயையினால் கொடுத்த உயிர் ஒளியும் (ஜீவஒளி) இணைந்தால்தான் கரணங்கள் மற்றும் இந்திரியங்கள் மற்றைய தத்துவங்கள் ஆதாரங்கள் கலைகள் யாவும் தடுமாற்றம் இல்லாமல் நன்மை தீமைக்குத் தகுந்தாற்போல் இயங்கும்.
*இவ்வுலகில் ஆன்மா வாழ்வதற்கு மனத்துடன் கூடிய எண்ணம் சொல் செயல் சார்ந்த மூன்று வகையான இயக்கம் மிகவும் அவசியமாகும்.* அதாவது *மனம் வாக்கு காயத்தால்தான் நன்மை தீமைகளும் நல்வினை தீவினைகளும் அறியாமை அஞ்ஞானங்களும் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளன* அதுதான் திரைமறைப்பு என்பதாகும்.
*மனமானது உலகியல் சார்ந்த பொருள் பற்று உள்ளவரையிலும் ஆண்டவரையும் ஆன்மாவையும் தொடர்பு
கொள்ளவே முடியாது* *ஆண்டவரை ஆன்மாவை தொடர்பு கொள்ளாதவரை அருள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. மனித தேகத்திற்கு பிறப்பு இறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்*.
*ஆன்மா அருள் பெறுவதற்காகவே மனம் என்ற கருவி மனிதனுக்கு தேவைப்படுகிறது.* மனம் இல்லையானால் மனித பிறப்பு தேவை அற்றது. மனத்தை வெளியில் செல்ல அனுமதித்தால் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்
*மனம் அடங்கும் இடம் !*
*உலகில் தோன்றிய அருளாளார்கள் மனத்தை அடக்க வேண்டும் என்பதற்காக சரியை கிரியை யோகம் ஞானம் போன்ற ஆன்மீக வழிமுறைகளை எல்லாம் மக்கள் பின்பற்றினார்கள்*
*மேலும் காடு மலை குன்று குகை முழைகளுக்கு சென்று புதிய புதியதான தவச்சாலைகள் அமைத்தும் குகைகளை அமைத்தும் கடுமையான அமைதியான நூதனமான தியானம் தவம் யோகம் செய்து வந்தார்கள்.
தலைகீழாக நின்று கடுமையான உடற்பயிற்சிகளும் செய்து மனத்தை அடக்கி பார்த்தார்கள்.
மேலும் பலவிதமான மந்திர தந்திரங்களைச் சொல்லியும் பார்த்தார்கள்.
மேலும் பலவிதமான மணிமாலைகளைக் கொண்டு உண்ணாமல் உறங்காமல் இரவு பகலாக உருட்டி உருட்டி எண்ணி எண்ணி மனத்தை அடக்கி பார்த்தார்கள் எதனாலும் எவராலும் மனத்தை அடக்க முடியவில்லை*.
இறுதியாக சிலர் மனதை அடக்கமுடியாமல் அருள் பெறமுடியாமல் சமாதி நிலை அடைந்தார்கள்.
மற்றும் மேலும் இன்றுவரை மனத்தை மாற்றத் தெரியாமல் அனைவரும் மாண்டுகொண்டே உள்ளார்கள்.
இறுதியாக மனம் ஒரு குரங்குகுணம் உடையது.குரங்குபோல் ஒன்றை விட்டு ஒன்றை பிடித்து தாவிக் கொண்டே இருக்கும் அதனால் மனதை அடக்கவே முடியாது என்றார்கள். *மனம் பேய்பிடித்த குரங்கு போன்ற குணம் உடையது என்றார் வள்ளலார்.*
*மனத்தை அடக்க முடியாது மனத்தை மாற்றமுடியும் என்ற ஒரு புதிய கோணத்தை கண்டுபிடித்தார் வள்ளலார்.*
*வள்ளலார் பாடல்!*
மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருந்திடு நீ என்சொல்வழி ஏற்றிலை
ஆனாலோ
தினையளவுன் அதிகாரம் செல்ல வொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் *திருவருளால்* கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்என இங் கிருந்தாய்
*ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.!*
*மேலே கண்ட பாடலில் ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை நான் அதனால் உன் அதிகாரம் என்னிடத்தில் செல்லுபடியாகாது.* *மற்றவர்களை ஏமாற்றுவது போல் என்னை ஏமாற்ற முடியாது* *உலகம் சிரிக்க உனை நான் அடக்கி விடுவேன் சாக்கிரதையா இரு உன்சேட்டை என்னிடம் பலிக்காது அதனால் நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் என்கிறார் வள்ளலார் . கேட்கவில்லை என்றால் உன்னை எவ்வாறு என்வசமாக மாற்றுவேன் என்பது எனக்குத் தெரியும் என சொல்லி தன்னுடைய மனத்தை மிரட்டுகிறார் வள்ளலார்.*
*வள்ளலார் கரண ஒழுக்கத்தில் சொல்லியது.*
*சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்று எந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் இடைவிடாது செலுத்தவேண்டும் என்று தெளிவாகச் சொல்லுகின்றார்*
*நம் உடம்பின் தலைபாகத்தில் உச்சிக்கும் கீழே உள்நாக்கிற்கும் மேலே மத்தியில் சிற்சபை என்னும் இடத்தில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் ஒளிக்கு பெயர்தான் ஆன்மா என்பதாகும்.*
*நம்முடைய மனத்தை வெளியே செல்ல வொட்டாமல் இடைவிடாது ஆன்மாவைத் தொடர்புகொண்டால் மட்டுமே மனம் அடங்கும் அதனால் மனதை கட்டவேண்டிய இடத்தில் கட்டிபோட வேண்டும்* *ஆன்மாவிற்குள் மனதை செலுத்திவிட்டால் ஆன்மா மனத்தை வெளியே விடாது இறுக்கி பிடித்திக் கொள்ளும்.* இதுவே மனத்தை மாற்றும் உளவு எனும் தந்திரமாகும்.
*குரங்கு எங்கு தாவினாலும் அதன் குட்டி விடாமல் குரங்கை கட்டி பிடித்துக் கொள்வதுபோல் ஆன்மாவை மனம் இடைவிடாது கட்டிபிடித்துக் கொள்ள வேண்டும்.*
*வள்ளலார் பாடல்!*
நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம் ஈந் தாண்ட பதிக்கொடியே
தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.!
*ஒரே மனம் பல இடங்களில் பல வகையாக பல குணங்களாக இடத்திற்கு தக்கவாறு செயல்படுகிறது*.*புறத்தில் வெளியே மனம் செல்லும் போது கொடிய மனமாக வெவ்வேறு விதமாக சூழநிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொண்டு செயல்படுகிறது.*
*அதே மனம் சிற்சபையைத் (உள்ஒளியை) தொடர்பு கொள்ளும்போது நல்ல மனமாக நல்ல குணமாக உண்மைத் தன்மையுடன் தன்னை மாற்றிக் கொள்கிறது*
*உலக போகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஆன்மாவின் குணத்திற்கு தக்கவாறு மனம் ஆன்மாவை சார்ந்த வண்ணமாக மாறிவிடுகிறது*
மனம் ஆன்மாவில் லயித்துவிட்டால் மனிதன் உயர்ந்த இடத்திற்கு செல்லும் வாய்ப்பு உடனடியாக கிடைத்துவிடும்.பொருளைப் பற்றும் மனம் அருளைப்பற்றத் தொடங்கிவிடுகிறது.
*மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டியதில்லை.*
*வள்ளலார் பாடல்!*
குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எலாம் பொய்பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
*செறித்திடு *சிற் சபைநடத்தைத்* *தெரிந்துதுதித் திடுமின்*
*சித்திஎலாம் இத்தினமே* *சத்தியம்சேர்ந் திடுமே.!*
மேலே கண்ட பாடலில் வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவர் சிற்சபையில் நடம்புரியும் சிவமாகும்.
அவற்றை தெரிந்து மனத்தை அங்கே செலுத்த வேண்டும் என்கிறார்.
உலகில் உள்ள பொறித்த சமயங்கள் மதங்கள் யாவும் மனதை அடக்குவதற்கு தவறான வழிமுறைகளையே சொல்லி உள்ளன ஆகையினால் அவற்றில் உள்ள வழிமுறைகளை எதையும் நம்ப வேண்டாம். அவற்றை குறித்து
தெளிவான உண்மையைச் சொல்லுகிறேன்.
அவைகள் யாவும் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் என்கிறார். உங்களால் எனக்கு ஒருபயனும் வேண்டியதில்லை.எனது மெய் உரையை பொய் உரையாக எண்ணாதீர்கள் தயவு செய்து கேளுங்கள்.
குரங்கு போன்ற மனத்தை நன்மனமாக்க இதுவே நல்ல தருணம் வாருங்கள் என ஆன்மநேயத்தோடு அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.
இதுநல்ல தருணம் அருள் செய்ய இதுநல்ல தருணம் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி அழைக்கிறார்.
மனித மனத்தை நன்மயமாக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் இடைவிடாது தொடர்பு கொண்டு உணர்வுபூர்வமாக நினைக்கின்றதாலும் தோத்திரம் செய்கின்றதாலும் நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது விசாரம் செய்வதோடு ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற நன் முயற்சி யுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்.
ஆண்டவரை மனத்தினால் தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் கோடிப் பங்கு பத்துகோடிபங்கு அதிகமான சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்கிறார்.
எவ்வாறு எனில்?
ஒரு ஜாமநேரம் மனத்தில் இகவிசாரம் இன்றிப் பரவிசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால் நாம் பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்.
பெறவேண்டியது எது எனில்? அருள் அருள் அருள் பெற்றால் மனிதனின் பூத உடம்பு சுத்த பிரணவ ஞானதேகமாக மாற்றம் அடைந்து மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்.
வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கத்தின் பெருநெறியின் ஒழுக்கங்களான இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து மனத்தை அகத்தில் தொடர்பு கொண்டு திரைகளை விலக்கி ஞானசபாபதியின் நல் அருளைப் பெறுவோம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896