புதன், 30 செப்டம்பர், 2020

வாழ்விக்க வந்த வள்ளல் ! பாகம் 1

வாழ்விக்க வந்த வள்ளல்.!

05-10-1873 ஆம் நாள் ஓர் புனித ஆன்மா தமிழ்நாட்டில் உதயமானது.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு தமிழ்மாநிலம் கடலூர் மாவட்டத்தில்.சிதம்பரம் வட்டம் மருதூர் என்னும் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்த கிராம கணக்கராகிய இராமய்யா அவர் துனைவியார் சின்னம்மை என்னும் பெண்ணின் கருவறையில் ஓர் புனித பக்குவ ஆன்ம ஒளி நுழைந்து பத்தாவாது மாதத்தில் பஞ்சபூத உலகில் மனிதவடிவில் உதயமானது.

அந்த ஆன்மாவிற்கு இராமலிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது.அவருடைய ஆன்மா அருள் பூரணமாக(முழுமையாக) நிறைந்த பின் திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயர் நிலைபெற்றது. 

ஆன்மீகம் என்ற போர்வையில் மனிதகுலத்தை மூடநம்பிக்கையால் உயர்ந்தகுலம்.தாழ்ந்தகுலம் என்றும்.உயர்ந்தசாதி.தாழ்ந்தசாதி எனவும் கடவுளால் கொள்கையான சாதி சமய மதங்களால் ஒதுக்கப்பட்டவர்கள். பிரிக்கப்பட்டவர்கள்.தீண்டத்தகாதவர்கள் எனவும் பலவகையான வேதம் ஆகமம். புராணம்.இதிகாசம்.சாத்திரங்கள் வாயிலாக  கொடுமைப்படுத்திய சாதி சமய மதங்களின் கொள்கைகளை.முல்லை முல்லால் எடுப்பதுபோல் .புதிய பகுத்தறிவு சார்ந்த.அருள் அறிவு சார்ந்த.தனிமனித ஒழுக்கம் சார்ந்த  பொதுவான தெளிவான ஆன்மீகத்தை தொடங்கி வைக்க இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளல்பெருமான் அவர்கள்.

  பழைய ஆன்மீகத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் குழிதோண்டிப் புதைக்கவும்.இருக்கும் இடம் தெரியாமல் அகற்றவும் வந்தவர்தான் ஆன்மீக புரட்சியாளர் வள்ளலார் அவர்கள்.அறியாமையில் அவதிப்பட்டு அல்லல்பட்டு தாங்கமுடியாத துன்பத்தினால் அழிந்து கொண்டு கிடக்கும் அனைத்து உலக மனித சமுதாயத்தை அழியாமல் புதிப்பிக்க வந்த புத்துலக புனித சிற்பி தான் வள்ளலார்.

*போரிட்டு அழிந்து கொண்டுள்ளார்கள்!*

மனிதகுலம் ஒற்றுமை இல்லாமல் போரிட்டு அழிந்து கொண்டு இருக்கும் காரிய காரணத்தை ஆண்டவர் துணையால் கண்டுபிடித்தார் வள்ளலார்.

உலகில் எண்ணற்ற ஞானிகளும் சித்தர்களும் தோன்றினார்கள். அவ்வாறு தோன்றிய சில  ஆன்மீக ஞானிகளால்.அருளாளர்களால்.சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது தான் சாதி.சமயம்.மதம் போன்ற ஆன்மீக கற்பனை கதைகளாகும்.அவற்றின் கொள்கை கோட்பாடுகளை வெளிப்படுத்த தோன்றியதுதான் பல சாதி சமய மதம் போன்ற பழைய நெறிகளாகும்.

அந்நெறிகளின்  கடவுள் கொள்கைகளால் உண்மை தெய்வம் எது ? என்று உணராமல் அறியாமல் அருள் வழங்கும் தெய்வத்தை தொடர்பு கொள்ளாமல்.  ஒவ்வொருவரின் கருத்துகளின் வேறுபாட்டால் ஒற்றுமை குலைந்து விட்டது.சாதி வேற்றுமை.சமய வேற்றுமை.மத வேற்றுமை போன்ற பிரிவினை ஏற்பட்டு. போரிட்டு இறந்து வீண் போனார்கள்.போகின்றார்கள் என்னும் அடிப்படை உண்மையை இறைவன் உணர்த்த வள்ளலார் அறிந்து கொண்டார்.

வள்ளலார் பாடல் ! 


என்னும் பாடல்கள் வாயிலாக இறைவன் தெரிவித்ததாகவும். மக்கள் சுகநிலை அடைந்திட .நீ என்பிள்ளை் என்பதாலே இவ்வேலையை செய்திட வேண்டும் என்பதை அன்புடன் உரிமையுடன் வள்ளல்பெருமானுக்கு அனுமதி வழங்குகிறார்.

*மக்கள் யாவரும் நல்லவர்கள் அப்பாவிகள் மக்களை மடைமாற்றம் செய்தவர்கள். கலை உரைத்த கற்பனைக் கதைகளையும் அதில் உள்ள தத்துவ தெய்வங்களையும் நிலையானது என்று கண்மூடித்தனமாக போதித்தவர்கள் ஆன்மீக சூழ்ச்சியாளர்கள் *.

மக்களை குறை சொல்வதை விட  சாதி சமயம் மதங்களையும். அவற்றின் கொள்கைகளையும் அவற்றில் உள்ள சூதுவாதுகளையும் அடியோடு அகற்றிவிட்டு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர் வள்ளலார்.

அதற்கு தாம் *அருள் பெறுவதே சரியான வழி என்பதை அறிந்து கொண்டு அருள் பெறும் வழியைத் தேடினார். 

இந்த பஞ்சபூத உலகில் அருள் பெற்றால் மட்டுமே மக்களை தன்வசமாக மாற்ற முடியும் என்பதை அறிந்து அருள் பெற முயற்சி செய்தார். அருள் வழங்கும் கடவுள் யார் என்பதை கண்டுபிடிக்க படாதபாடுபட்டார்.

முந்தைய அருளாளர்களுக்கு அற்ப  அருள் வழங்கிய தெய்வங்களைப் பின்பற்றி பல ஆயிரம் அருட்பாடல்கள் பாடினார் அவர்களைவிட உயர்ந்த கருத்து ஆழம் உள்ள பாடல்களை எல்லாம் பாடினார் துதித்தார் அழுதார் புலம்பினார். எந்த கடவுளும் அருள் வழங்கவில்லை.அக்கடவுள்களுக்கு அருள்வழங்கும் தகுதியும் இல்லை என்பதை தனது உயர்ந்த பகுத்தறிவைக் கொண்டு அறிந்து கொண்டார்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டுகொண்டார்* ! 

எல்லா ஆன்மாக்களுக்கும். எல்லா கடவுள்களுக்கும்.எல்லா உயிர்களுக்கும்.எல்லாக். கடவுள்களுக்கும். எங்கு எங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருள் வழங்கும் ஒரே கடவுள் தான் உள்ளார் என்பதை அறிந்துகொண்டார்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடம்* !

அவர் இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில்.இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய *அருட்பெருஞ்ஜோதி சொரூபராய்*. இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடனச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் பொருட்டுத்

திருவுளக் கருணையாற் செய்து அருள்கின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மைக் கடவுளைத் தெரிந்து கொண்டேன் என்கிறார்.

வள்ளலார் பாடல்!   

அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என் அம்மையை என்அப்பனை என் ஆண்டவனை அமுதைத்

தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்யவல்ல தனித்தலைமைச் சித்த சிகா மணியை

மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்

கருணை நடம் புரிகின்ற கனகசபா பதியைக் கண்டுகொண்டேன்   கலந்து கொண்டேன் களித்தே.!

என்னும் பாடல்வாயிலாக உண்மைக் கடவுளை கண்டுகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தேன் என்கிறார். கலந்து கொண்டேன் என்றால் அருள்பூரணத்தைபெற்று மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதியுடன் கலந்து நிலைத்து இருப்பதாகும்.மேலும் எவராலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒளி உடம்புடன் வாழ்கிறேன் என்பது பொருளாகும். 

இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.எல்லா அண்டங்களையும்.எல்லா உலகங்களையும். தோற்றுவித்தல்.இயக்குவித்தல்.அடக்குவித்தல்.மயக்குவித்தல்.தெளிவித்தலும் ஆகிய ஐந்தொழில்களையும் இயக்குகின்ற ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! 

வள்ளலார் பாடல் ! 

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்ன முடியாது அவற்றின் ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே


இவ்வளவு பெரிய அளப்பரிய மாபெரும் அருள் ஆற்றல் கொண்டது.தனக்கு நிகர் இல்லாத தனித்தலைமைப் பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரேயாவார். அவர் தான் வள்ளல்பெருமானை ஆட்கொண்டு மகனாக்கி  என்றும் அழியா அருள்வரம் தந்துள்ளார் என்பதை ஒவ்வொரு மனிததேகம் கொண்டவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த உலக சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக திருத்தி ஒருகுடையின் கீழ்  கொண்டுவந்து அன்பும் தயவும்.கருணையும்.அருளும்  ஒவ்வொரு ஆன்மாவும் அதன் உயிரும் உடம்பும் அழியா அருள் ஒளி பெற்று மரணத்தை வென்று  நிலைபெற்று வாழவைக்க வேண்டும் என்பதே ஆண்டவர் கட்டளையாகும். ஆண்டவர் கட்டளை சிரமேற் கொண்டு செயலாற்றிக் கொண்டு இருப்பவர் தான் வள்ளலார்.  

புதிய சங்கம் சாலை சபையைத் தோற்றுவிக்கிறார்.

இரண்டாம் பாகம் தொடரும்...

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ஓர் ஒளி உதயமானது ! பாகம் 3.

 

ஓர் ஒளி உதயமானது ! பாகம் 3

*வள்ளலார் கொள்கைகள்*

1.கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! அவரை உண்மை அன்பால் ஒளி ( ஜோதி) வடிவில் வழிபடவேண்டும்.

2.சிறிய தெய்வ வழிபாடுகள் கூடாது.அத்தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக்கூடாது.

3. புலால் உண்ணல் ஆகாது.

4.சாதி.சமய.மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது.

5. எவ்வுயிரையும் தம் உயிர்போல் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கைகொள்ள வேண்டும்.

6.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்சவீட்டின் திறவுகோல்.

7.வேதங்கள்.ஆகமங்கள்.புராணங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்கள் யாவும் உண்மையைத் தெரிவிக்க மாட்டாது.

8.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது.கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்.

9.கணவன் இறந்தால் மனைவி தாலிவாங்க கூடாது.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது.

10.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

போன்ற புரட்சிகரமான கொள்கைகளை வெளியிடுகிறார். 

*சாதி சமயம் மதங்கள் யாவும் பொய்யானது என்று உலகில் முதன்முதலில் குரல் கொடுத்தவர்தான் வள்ளல்பெருமான்*

*தருமச்சாலை தொடக்கம்* 

வள்ளலார் கொள்கையில் முதன்மையானது் சீவகாருண்யம். சீவகாருண்யத்தை இருவகையால் வற்புறுத்துவார்.

ஒன்று கொலை தவிர்த்தல் புலால் மறுத்தல்.

மற்றொன்று அற்றார் அழிபசி தீர்த்தல் என்பதாகும்.

ஏழைகளின் பசிப்பிணியைப் போக்குவதற்காக  வடலூரில் சத்திய தருமச் சாலையை 23-05-1867 இல் பிரபவ வைகாசி 11 ஆம் நாளில் நிறுவினார்கள்.

வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பு இன்றுவரை ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகிறது.1870 ஆம் ஆண்டுவரை தருமச்சாலையிலேயே வள்ளல்பெருமான்  தங்கினார்கள்.தருமச்சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாகவே வடலூருக்குத் தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்திற்கு சென்று அங்கேயே தங்கி விடுகின்றார்.

அவர் தங்கிய அந்த இடத்திற்கு *சித்தி வளாகம்* என்ற பெயரை வள்ளலாரே  சூட்டுகின்றார்.

1870 ஆண்டுமுதல் 1874 ஆம் ஆண்டு சித்தி பெறுகின்றவரை மேட்டுக்குப்பத்திலே உறைவிடமாக கொள்கிறார்கள்.

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை*

இயற்கை உண்மைக் கடவுளான  அருட்பெருஞ்ஜோதி யை ஒளிவடிவில் கண்ட வள்ளல்பெருமான். ஒளி வழிபாட்டிற்காக வடலூரில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* *எண்கோண வடிவில் உலக அதிசயத் தோற்றத்துடன் கூடிய சத்திய ஞான சபையை*. 25-01-1872. பிரசோற்பத்தி தைமாதம் 13 ஆம்நாள் வியாழக்கிழமை பூச நன்னாளில் தொடங்கி வைத்துள்ளார்.

சாதி.சமயம்.மதம் போன்ற கொள்கைகள் இல்லாத. அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒளி வழிப்பாட்டு முறையை. உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைத்துள்ளார். அங்கே சாதி சமய.மதம் போன்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்கள்.

அபிஷேகங்கள் ஆராதனைகள்.படையல்கள்.மாலை மரியாதைகள்.மணிஓசைகள் எதுவும் கிடையாது. உண்மை அன்பால் சோதிதரிசனம் மட்டுமே கண்டு களிக்க வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு ஒளி வழிபாட்டுத் தரிசனம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

*மரணம் இல்லாப் பெருவாழ்வு*

*மனிதன் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்* என்பதற்காகவே மனிதனுக்கு உயர்ந்த அறிவை இறைவன் படைத்துள்ளார். உயர்ந்த அறிவை பயன்படுத்தி இறைவன் சொல்லியவாறு  வாழ்ந்தும் காட்டுகிறார் வள்ளல்பெருமான்.

மேட்டுக்குப்பத்தில் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நான்கு ஆண்டுகளாக  இடைவிடாது தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று *ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்து கொள்கிறார்.*

ஒளி உடம்பு பெற்றால் மட்டுமே இறைவனைக் காண முடியும். இறைவனுடன் கலந்து கொள்ள முடியும் என்பது வள்ளலார் காட்டிய புதிய ஆன்மீக  நற்சிந்தனையாகும்.

மனித தேகமானது இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து இறை அருள் பெறுகின்ற போது சுத்த தேகம்.பிரணவ தேகம்.ஞானதேகம் என்ற மூன்றுவகையான தேக மாற்றங்கள் பெறமுடியும்.

அதற்கு *முத்தேக சித்தி என்று பெயர்*.வள்ளலார் முத்தேக சித்திப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் பெற்று மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து *பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்.*

*சாகாத்தலை.வேகாக்கால்.போகாப்புனல் அறிந்து சாகாக்கல்வி கற்று சாகாதவனே சன்மார்க்கி என்பது வள்ளலார் வாக்குமூலமாகும்.* இவ் உண்மைகள் யாவும் *ஆறாம் திருமுறையில்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்ல வள்ளல்பெருமான் எழுதியதாகும். எனவேதான் நான் உரைக்கும் வார்த்தையாவும் நாயகன்தன் வார்த்தை என்று சொல்லுவார்.

ஒன்றில் இருந்து ஐந்து திருமுறைவரை வள்ளலார் சுத்ததேகம்.பிரணவ தேகத்தில்  எழுதியது.ஆறாம் திருமுறை மட்டும் ஞானதேகத்தில் எழுதியது.

மனித்தேகம் பெற்ற அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை முழுமையாக கடைபிடித்து. இறை அருள் பெற்று  என்போல்  இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்பதே வள்ளலாரின் அன்பான தயவான கருணையான வேண்டுதலாகும்.

வள்ளல்பெருமான் 647 கோடி சித்துக்கள் கைவரப்பெற்றவர் அவரின் அருள் வாழ்க்கையில் உலக மக்களின் நன்மைக்காக பல அற்புதங்களை செய்துள்ளார்.சுயநலத்திற்காக எந்த சித்துக்களையும் செய்தது இல்லை.

*நேரடி ஒலி ஒளி பரப்பு செய்த்து.!*

சிதம்பரம் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா ஒவ்வொரு வருடமும்சிறப்பாக நடைபெறுவது வழக்கம் தருமச்சாலை அன்பர்களுடன் வள்ளலார் சென்றுவருவது பழக்கமாக இருந்தது வள்ளலார் அருள் பெற்றவுடன் வெளியில் எங்கும் செல்வதில்லை.சிதம்பரம் திருவிழாவைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த அன்பர்களின் மனநிலையை அறிந்து கொண்ட வள்ளலார்.

தருமச்சாலை சுவற்றில் ஒரு வேட்டியை கட்டச்சொல்லி அன்பர்களை முன்னால் அமரவைத்து சிதம்பரத்தில் தடந்துகொண்டு இருந்த நிகழ்ச்சியை வடலூர் தருமச்சாலையில் எந்தவிதமான கருவிகள் மின் இனைப்புகள்  இல்லாத அக்காலத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து காட்டினார் வள்ளல்பெருமான்.வள்ளலாரின் அருள் ஆற்றலுக்கு இதுவே மாபெரும் சான்றாகும்.

*கொடியேற்றி உபதேசம் !*

22-10-1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 ஆம்நாள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முதன் முதலாக சுத்த சன்மார்க்க சங்கத்தின் உண்மைக் கொள்கையை  வெளிப்படுத்தும் முகமாக. மஞ்சள் வெண்மை கலந்த வண்ணங்களான *ஆன்மாவின் தன்மையை உணர்த்தும்* கொடியை வெளிமுகத்தில் கட்டி  நீண்ட உபதேசம் ஒன்றையும் செய்து அருளினார்கள்.

முடிந்த முடிபான சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கொண்ட அருள் நிறைந்த  உண்மை மகாஉபதேசமாகும்.திருஅருட்பாவில் உள்ளது படித்து தெரிந்து கொள்ளவும்.

*இறைவனுடன் கலந்தார்*

30-01-1874 ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாத்த்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து.இதைத் தடைபடாது ஆராதியுங்கள்.

இந்தக்கதவைச் சாத்திவிடப் போகின்றேன்.இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது  தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் *நினைந்து நினைந்து* என்னும் தொடக்கமுடைய ஞானசரியை 28  பாசுரங்கள் அடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவனையை இந்த தீபத்திற் செய்யுங்கள்.நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.

நான் உள்ளே பத்து பதினைந்து தினம் இருக்கப் போகின்றேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு  வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.

என்னைக் காட்டிக்கொடார் என்று சொல்லிவிட்டு  திரு அறைக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து கொள்கிறார்.

*வள்ளலாருக்காக  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் (வெயிட்டிங் ) காத்திருக்கும் அதிசயம்* நடந்தது

வள்ளலார் பதிவுசெய்துள்ள பாடல் ! 

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் இன்று வந்து நான்இருக்கும் இடத்தில் அமர் கின்றார்

பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனது பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்

தன்சாதி உடைய பெருந் தவத்தாலே நான்தான் சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே

மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின் தனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே.! 

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார். 

மேலும்...

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு

மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு!  

என்றும் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத தேகம் பெற்றேன் என்றும் பதிவு செய்கின்றார்.

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே

கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் என்தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே ! 

என்பன போன்ற பல நூறு பாடல்களின் வாயிலாக திருஅருட்பா ஆறாம் திருமுறையில் மரணத்தை வென்ற வள்ளலார்.அனைவரும் வெல்ல முடியும் என்ற உண்மை அனுபவங்களை தெரியப்படுத்துகின்றார். 

வள்ளலார் 51 ஆம் வயதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் அருள் ஒளி தேகத்தோடு கலந்து கொண்டார். நாமும் வள்ளலார் கொள்கைகளை பின்பற்றி மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதே வள்ளல்பெருமானுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 9865939896.

திங்கள், 28 செப்டம்பர், 2020

ஒரு ஒளி உதயமானது ! பாகம் 2

 ஓர் ஒளி உதயமானது ! பாகம் 2.

*சென்னையில் 35 ஆண்டுகள்*

சென்னையில் வாழ்ந்த காலத்தில் பல சமய தெய்வங்களை வணங்கியும் போற்றியும் பல ஆயிரம் திருஅருட்பா பாடல்களை இயற்றியுள்ளார்.

அவர் அறிவுத் திறமையும் அருள் வல்லபத்தையும் உணர்ந்த.தமிழ் பண்டிதர்கள் திரு. வேலாயும்.திரு. இறுக்கம்இரத்தினம்.திரு.வீராசாமி. திரு.பொன்னேரி சுந்தரம்.திரு.காயாறு ஞானசுந்தர்ர்.திரு.கிரியாயோக சாதகர் திரு.பண்டார ஆறுமுகம் போன்ற  நிறைய தமிழ் அறிஞர் பெருமக்கள் இராமலிங்கத்தின் சீடர்களாய் அவருடன் சென்னையில் இருந்து தொடர்ந்து வந்துள்ளார்கள்.

இவர்களால் இராமலிங்கம் என்ற பெயரை மாற்றி திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற பட்டப்பெயரை வழங்கினார்கள். ஆனாலும் சித்திபெருகின்ற வரை அவர் அந்தப்பெயரை ஏற்றுக்கொள்ளவே இல்லை.அது ஆராவாரத்திற்கு அடுத்தபெயர் என்றும்.அப்பெயர் அருட்பெருஞ்ஜோதிஆண்டவருக்கே சொந்தமானது பொருத்தமானது என்பதைக் கருத்தில் கொண்டு. சிதம்பரம் இராமலிங்கம் என்றே கைஏழுத்து போடுவார். 

இருந்தாலும் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதிவாகிவிட்டது.

பிள்ளைப்பருவத்திலேயே மூவாசைகளையும் முற்றும் துறந்த வள்ளல்பெருமான் இல்லறவாழ்வை விரும்பவில்லை.

தாய் அண்ணார் அண்ணி.அக்காள்கள் உற்றார் உறவினர் வற்புறுத்தலாலும்.திருமணத்திற்கு இசைய வேண்டியவராய் ஆனார்.தனது தமக்கை உண்ணாமலை அம்மையாரின் மகள் தனம்மாள் என்பவரை மணம் புரியவைத்தனர். பெருமான் தொட்டு தாலி கட்டினார்களே அன்றி இல்லறவாழ்வில்  ஈடுபடவில்லை.ஒருத்தியைக் கை தொட்ச்சார்ந்தேன்..தொட்டனன் அன்றி கலப்பிலேன் என்பது வள்ளலார் திருஅருட்பாவில் எழுதி வைத்துள்ள திருவாக்காகும். மனைவி தனம்மாள் அனுமதியோடு இல்லறவாழ்வை விட்டு இறைஉணர்வில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

சென்னையில் வாழ்கின்றபோது.

உரைநடை நூல்கள் அரிதாகத் தோன்ற தொடங்கிய காலத்தில். வள்ளலார் எழுதிய உரைநடை நூல்கள் *சின்மய தீபிகை என்றநூல் 1857 ஆம் ஆண்டு வெளிவந்த்து. *மனுமுறைகண்டவாசகம்*  என்ற நூல் 1854 ஆம் ஆண்டு வெளியாயிற்று. ஜீவகாருண்ய ஒழுக்கம்.1879 ஆம் ஆண்டு வெளியாயிற்று.பின்பு திருஅருட்பா ஐந்து திருமுறைகளும் வெளியாயிற்று.

சமய தெய்வங்களைப்பற்றி பாடி எழுதிய பாடல்களில் உள்ள தெய்வங்கள் யாவும் தத்துவங்களே என்பதை தன் அருள் அறிவு அனுபவத்தால் உணர்ந்து சென்னையை விட்டு வெளியேறுகிறார்.

ஆராவாரம் நிறைந்த சென்னை வாழ்க்கையை விரும்பாததாலும்.

வீட்டில் இருப்பதையும் விரும்பாமல் அதன் விளைவாக தனது 35 ஆம் வயதில் 1858 ஆம் ஆண்டு சென்னை வாழ்வை நீத்து தலயாத்திரை மேற்கொண்டு தில்லை சிதம்பரம் வந்து அடைந்தார்கள்.

கருங்குழி செல்லுதல்.!

சிதம்பரத்தில் கருங்குழி மணியக்காரர் திரு வேங்கடம் அய்யாவைச் சந்தித்து அவர்களின் அன்பான  வேண்டுகோளின்படி சென்று கருங்குழி இல்லத்திலே தங்குகிறார்.

அவருக்கு என்று தனிஅறை கொடுக்கப்பட்டது...1858 முதல் 1867 ஆண்டுவரை கருங்குழியிலே தங்கி திருஅருட்பா ஐந்து திருமுறைகளும் எழுதிமுடிக்கிறார்.

கருங்குழி வீட்டின் அறையில் ஒருநாள் இரவு வள்ளலார் திருஅருட்பா எழுதிக்கொண்டு இருக்கும்போது.எண்ணெய் இல்லாமல் அகல் விளக்கு மங்கவே.எண்ணெய் சொம்பென எண்ணித் தண்ணீர் சொம்பில் உள்ள தண்ணீரை எடுத்து விளக்கில் வார்த்தார்.விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கு எரிந்த இவ் அற்புதத்தை பற்றி வள்ளலாரே ஒருபாடல் வாயிலாக சென்னையில் உள்ள  அன்பர்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.

*வள்ளலார் பாடல்*! 

மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லை என்றார் மேலோர் நானும்

பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே

செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்

நெய்விளக்கே போன்றொரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந் நிதியின் முன்னே.! 

என்னும் பாடல் வாயிலாகத் தெரியப்படுத்துகின்றார்.

*வள்ளலார் கொள்கைகள்* 

உலகம் முழுவதும் ஒரே கடவுள் என்ற உண்மையை உணர்த்த வேண்டும்

உலகம் முழுவதும் உள்ள உயர்ந்த அறிவுபெற்ற மனித குலத்தை மரணம் அடையாமல் காப்பாற்ற வேண்டும். சாதி சமயம் மதம் அற்ற.ஏற்ற தாழ்வு அற்ற.உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள் என்னும் பேதம் இல்லாமல். மனித நேயத்தோடு.ஜீவநேயத்தோடு.ஆன்ம நேயத்தோடு ஒற்றுமையாக வாழவைக்க வேண்டும்.

பசி.பட்டினி.வறுமை இல்லாத புதிய  சமுதாயத்தை உருவாக்க வேண்டும் போர் இல்லாமல்.தீவிரவாதம். பயங்கரவாதம் இல்லாமல் உலக ஒற்றுமையை நிலை நாட்டவேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும் தடையின்றி  கிடைக்க வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு மக்களை  வாழவைக்க வேண்டும்.அனைத்து உயிர்கள் மீதும் அன்பு.தயவு.கருணையுடன் நேசிக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் அடிப்படை கொள்கையாகும்.

உலகில் தோன்றிய ஞானிகள் ஆன்மீகம் என்ற பெயரில் இறைவன் தொடர்பு கொண்டு அருள்பெற்று முக்தி அடைந்தால் போதும் என்று வாழ்ந்த காலகட்டத்தில். 

*வள்ளலார் ஒரு சமுதாய புரட்சியாளர்* 

இறைவனால் படைத்த மனித குலத்தை காப்பாற்றவும் ஒழுங்குபடுத்தவும்.நேர்மறையான கொள்கைகளை மக்கள்ஆன்மாவில் பதிய வைக்கவும். அவற்றை எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லவும் 1872 ஆம்ஆண்டு வடலூரில்  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*   என்ற ஒரு புதியதோர் தனி நெறியைத் தோற்றுவிக்கிறார். இச் சங்கத்தின் வாயிலாக  பல புரட்சிகரமான கொள்கைகளை வெளியிடுகிறார்.

*வள்ளலாரின் கொள்கைகள்*..

ஒரு ஒளி உதயமானது ! பாகம் !

 *ஒரு ஒளி உதயமானது* பாகம் 1

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!!

ஒவ்வொரு யுகத்திற்கும் மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயற்கை உண்மையாம்  அருட்பெருஞ்ஜோதி அருட்பேரொளி என்னும் ஆண்டவரால் பக்குவம் உள்ள ஆன்ம ஒளியை இவ்வுலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

உலக வரலாற்றில் மிகச்சிறந்த ஆன்மீக புண்ணிய பூமியாம் இந்தியாவின் தெய்வத்திரு தமிழ்நாட்டிலுள்ள  கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு வடமேற்கில் 20 கி.மீ தொலைவில் உள்ள மருதூர் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் கணக்குப் பிள்ளையாக பணியாற்றிவந்த இராமய்யா அவரது மனைவி சின்னம்மையார் என்பவருக்கும் சபாபதி.பரசுராமன் என்னும் இரு ஆண் மக்களும்.

உண்ணாமலை.சுத்தரம்பாள் என்னும் இரு பெண் மக்களும் பிறந்தனர்.

*சிவனடியார் வேடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*

ஒருநாள் மருதூரில் உள்ள இராமய்யா வீட்டிற்கு சிவனடியார் வேடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார். அம்மா பசிக்கிறது உணவு இருந்தால் கொஞ்சம் போடுங்கள் என்று கேட்கிறார்.. அக்குரல் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்க்கிறார் சின்னம்மையார். சிவனடியாரைக் கண்டதும் கைகூப்பி வணங்கி வீட்டின் உள்ளே அழைத்து பாய்விரித்து அமரவைத்து தலைவாழை இலைப்போட்டு பயபக்தியுடன் உணவு பரிமாறுகிறார்.

அக மகிழ்ச்சியுடன் பசிஆற  உணவு உண்டு சிவனடியார் ஒருவரம்  வழங்குகிறார். சின்னம்மையார் ஆச்சரியத்துடன் கவனிக்கிறார். என்னுடைய பசியைப்போக்கிய உமக்கு.உலக உயிர்களின் பசியைப்போக்க ஒரு ஞானக்குழந்தை பிறக்கும் என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு சின்னம்மையார் கண்களுக்குத் தெரியாமல் சென்று விடுகின்றார்.

சிவனடியார் சொல்லிய வண்ணம்.

05- 10-1823 ஆம்நாள் சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5-30 மணிஅளவில்  ஐந்தாவது குழந்தையாக *இறைவனால் வருவிக்க உற்றவர்தான் பக்குவம் உள்ள ஆன்மாவாகிய  இராமலிங்கம் என்னும் வள்ளல்பெருமான் ஆவார்கள்*

*திருஅருட்பா பாடல்*!

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித் திட அவரும்

இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந் திடுதற் கென்றே எனை இந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்னும் பாடல்வாயிலாக *தான் இவ்வுலகிற்கு இறைவனால் எதற்காக வருவிக்க உற்றேன் என்ற உண்மையை வெளிப்படையாக  தெரியப் படுத்துகின்றார்*.

*குழந்தை சிரித்தது*

குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில்.தந்தை இராமைய்யாவும் தாய் சின்னம்மையாரும் தங்கள் ஐந்தாவது குழந்தையான இராமங்கத்தை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு.சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்கிறார்கள்.

நடராசர் தரிசனம் முடிந்ததும் இறைவன் சந்நிதிக்கு வலது பக்கத்திலுள்ள சிதம்பரம் ரகசியம் காண நகர்கிறார்கள்.ரகசியங்களுக்கு எல்லாம் ரகசியமானது அது.அந்த ரகசியம் ஒருதிரையினால் மூடப்பட்டு இருக்கிறது.தினந்தோறும் நடைபெறும் ஆறுகாலப் பூசைகளின் இறுதியில் சிதம்பர ரகசியத்தை மறைத்துள்ள திரை விளக்கப்பட்டு தரிசனம் காட்டுவது  வழக்கம்.

அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் மிகுந்த பக்தி பரவசத்தோடு திரையை விளக்கி சிதம்பர ரகசியத்தை  காட்டுகிறார். அங்கே கூடியிருந்த பக்தர்கள் சிதம்பர ரகசியத்தை பார்த்து கைகூப்பி வணங்குகின்றனர்.தாயார் சின்னம்மையாரின் கையிலிருந்த *ஐந்துமாதக் குழந்தையான இராமலிங்கம் அந்த ரகசிய வெட்ட வெளியைப் பார்த்து கலகல என்று சிரித்தது*.

*அந்த சிரிப்பு சாதாரண குழந்தை சிரிக்கிற சிரிப்புபோன்றது அல்ல.தெய்வீக மணம் கமழும் பேரின்பம் பொங்கும்  சிரிப்பாக ஒலித்தது*.

அந்த சிரிப்பு ஒலி அங்குள்ள பக்தர்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. அச்சிரிப்பு ஒலியை கண்டு கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பரவசமாயினர்.ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது தான் கண்ட காட்சியை பின்னாளில் ஆறாம் திருமுறை அருள்விளக்கமாலை என்னும் தலைப்பில் பாடலாக பதிவுசெய்கிறார்.

*பாடல் *! 

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத் தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது

வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே

காய்வகை இல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே

தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும் சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.! 

என்னும்பாடலின் வாயிலாக. இராமலிங்கம் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோதே... கடவுள் உருவமாக இல்லை.அருள் நிறைந்த வெட்ட வெளியில் அருள் ஒளியாக உள்ளார்என்பதை அச்சிறு குழந்தைக்கு இறைவன் காண்பித்தார் என்பதை பாடலின்வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

*குடும்பம் சென்னைக்கு செல்லுதல்*

இராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதம் தந்தை இராமைய்யா காலமாகிறார்.சின்னம்மையார் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தாம் பிறந்த ஊரான. சென்னைக்கு அடுத்த பொன்னேரிவட்டம் சின்னகாவனம் என்னும் சிறிய கிராமத்திற்கு சென்றுவிடுகின்றார். அங்கே சிலகாலம் வாழ்ந்தபின் தம்மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்கிறார்.

மூத்த பிள்ளையாகிய சபாபதி காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி அவர்களிடம் பயின்று புராணச் சொற்பொழிவு செய்வதில். வல்லவராகிக் குடும்பத்தை நடத்தி வந்தார்.

*கன்னி சொற்பொழிவு!*

இராமலிங்கம் பள்ளிப்பருவம் எய்தியதும் தமையனார் சபாபதிஅவர்கள் தாம்கற்ற ஆசிரியர் காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பினார்.

இளைய இராமலிங்கத்தின் அறிவுத் தரத்தையும்.பக்குவநிலையையும். சென்னை கந்தகோட்டம் சென்று கவிபாடும் திறைமையும் கண்ட மகாவித்வான்.இவ் இளைஞர் கல்லாது உணரவும்.சொல்லாது உணரவும் வல்லவர் என்று உணர்ந்து உமக்கு ஏட்டுக்கல்வி வேண்டாம். ஞானக்கல்வியை இறைவனே வழங்கியுள்ளார் என்பதை அறிந்த மகாவித்வான் கற்பிப்பதைக் கைவிட்டுவிடுகிறார்.

இராமலிங்க பெருமகனார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை.எவ்வாசிரியர் இடத்தும் படித்தது இல்லை.கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார்.கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்.

வள்ளல்பெருமானின் கல்வியும் கேள்வியும் இறைவனிடத்துப் பெற்றதேயொழிய வேறு எவ்வாசிரியிடத்தும் பெற்றதன்று. *இறைவன் பள்ளியில் பயிற்றாது  தானே கல்வி பயிற்றினான் என்பதற்கு அவர் எழுதிய திருஅருட்பா ஆறாம் திருமுறையில் நிறைய சான்றுகள் உள்ளன*. *உலகில் உள்ள எல்லா மொழிகளும் இராமலிங்கப் பெருமகனார்க்குத் தெரியும்*. எல்லா மொழிகள் தெரிந்து இருந்தாலும்.

தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றார்.

டம்பத்தையும்.ஆரவாரத்தையும்.பிரயாசத்தையும்.பெருமறைப்பையும். உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. *பயிலுதற்கும்.அறிதற்கும்.மிகவும் லேசுடையதாய் பாடுதற்கும் துதிப்பதற்கும் மிகவும் இனிமை யுடையதாய்* *சாகாக்கல்வியை இலேசிலே பயிற்றுவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றிடத்தே மனம் பற்றச்செய்து* *அத்தென் மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடவித்து அருளினீர்* *என்று போற்றுகிறார்.*

* இதுவே உலகளாவிய செம்மொழியாம் தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகும்*

*கன்னி சொற்பொழிவு*

சென்னையில் சோமு ஐயா என்பவர் மிகப்பெரிய தனவந்தர்.

அவர்வீட்டில் ஒவ்வொருவருடமும் தம் அண்ணார் சபாபதி அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு செய்வது வழக்கம்.சபாபதி அவர்களுக்கு நோய்வாய்ப்படவே அவ்வருடம் சொற்பொழிவு தடைப்பட நேர்ந்த்து.தம்பி இராமலிங்கத்தை அனுப்பி ஓரிரு பாடல்களைப்பாடி வழிபாடு செய்து நிகழ்ச்சியை ஆரம்பித்துவரும்படி அண்ணார் சபாபதி அனுப்பிவைத்தார்.

அன்று இராமலிங்கம்  ஆற்றிய கன்னிச் சொற்பொழிவைக் கேட்ட அவையோர்கள். ஆனந்த பரவசம் அடைந்து  அவரையே தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்த்தும்படி வேண்டினர். அதற்கிசைந்து சிலநாட்கள் தொடர்ந்து சொற்பொழிவு செய்தார். 

உலகு எல்லாம் உணர்ந்து ஓதற்கு அறியவன் என்னும் சேக்கிழார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடலுக்கு உலகு என்ற வார்த்தைக்குக்குமட்டும் அவர் ஆற்றிய முதற்  கன்னி சொற்பொழிவு மக்களை மயக்கம் அடைய செய்வித்துவிட்டது. அந்த நிகழ்ச்சி சென்னை மாநகரம் முழுவதும் புயல்மழை காற்றுபோல் பரவி இராமலிங்கத்திற்கு பெரும்புகழைத் தேடி தந்த்து.

தொடரும்..

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

இறந்தவரை பார்த்து ஏன் அழுகின்றீர் !

 *இறந்தவரை பார்த்து ஏன் அழுகின்றீர்.!*


உடலைவிட்டு உயிர் பிரிந்தால் அதற்கு மரணம் என்று பெயர். எமன் என்னும் கூற்றுவன் வந்து உயிரைப் பரித்துக் கொண்டான் என்றும் சொல்லுகின்றார்கள்


உயிரைக் கொடுத்த கடவுளே உயிரைப் பரித்துக்கொண்டார் என்றும். கடவுள் மீதே பழியைப் போட்டுவிடுகின்றார்கள். மேலும் அவற்றிற்கு விதிஎன்றும் வினைப்பயன் என்றும்.பாவம் புண்ணியம் என்றும். பலப்பல ஆன்மீகப் பெரியோர்களால் கற்பனையாக சொல்லி வைத்து உள்ளார்கள். 


*கடவுள் கருணை உள்ளவர் சோதனையும் தரமாட்டார் வேதனையும் தரமாட்டார்*


நன்மை தீமை என்பது நாமே உருவாக்கிக் கொள்வதாகும்.


மேலும் மரணம் என்பது இயற்கையானது என்றும் ஆறிலும் சாவு.நூரிலும் சாவு என்றும் சொல்லுவார்கள். இறந்தவர்களை விதிவசத்தால் நேர்ந்தது எனபாடல்தி.நல்வினை.தீவினைப்போன்ற வினைப்பயன்களால் மரணம் அடைகிறார்கள் என்றும் சொல்லப் படுகின்றது. 


இறந்தவர்கள் சொர்க்கம்.

கைலாயம்.வைகுண்டம்.பரலோகம்.

சிவலோகம் நரகம். போன்ற இடங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்ற கற்பனையான கட்டுக்கதைகளைக் கட்டிவிட்டு  பெரியோர்கள் சென்றுவிட்டார்கள்.அவையாவும் உண்மை என்றே மக்கள் நம்பிக்கொண்டு உள்ளார்கள்.


மேலும் இறந்த பிணங்களை வைத்துக்கொண்டு ஆசார.சங்கற்ப விகற்பங்கள்.சாங்கியம்.சடங்குகள் சம்பரதாயங்கள் செய்வதும் வழக்கமாக உள்ளது.மேலும் தேவை இல்லாத சாதி சமய மதச் சடங்குகள் மற்றும் பலவகையான மந்திரங்கள் ஓதி மண்ணைப்போட்டு மறைத்தோ.அல்லது தீயிட்டு கொளுத்தியோ சாதி சமய மதச் சடங்குகளைச் செய்து முடித்து விடுகிறார்கள்.


இவைகளை எல்லாம் அவரவர்கள் தரத்திற்கும் வசதிக்கும் தகுந்தாற்போல் தொன்றுதொட்டு இன்றுவரை நம்பிக்கையோடு செய்து வருகிறார்கள்.

*இவைகள் யாவையும் வள்ளல்பெருமான் மறுக்கிறார்*


அறியாமையாலும்.

அஜாக்கிறதையாலும். பயத்தாலும்.அச்சத்தாலும் பலநூறு ஆண்டுகளாக.

 மக்கள் மூட நம்பிக்கைகளைப் பின்பற்றி தொடர்ந்து  செயல்பட்டுக் கொண்டே வருகின்றார்கள்.


*குழந்தை பிறக்கும்போது சிரிக்கின்றீர். அதே குழந்தை இறக்கும்போது அழுகின்றீர்*.


பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் என்ன நடக்கின்றது என்பது எவருக்கும் தெரிவதில்லை.தெரிந்துகொள்வதும் இல்லை.இதுவே பெரிய மறைப்பு.இதுவே அறிவின் அறியாமையாகும்.


குழந்தை பிறக்கும் போது சிரிக்கின்றீர் மகிழ்ச்சி அடைகின்றீர் ஆனந்தம் அடைகின்றார்.வரம் என்கின்றீர்.


அதே குழந்தை பிறந்து வளர்ந்து வாழ்ந்து முதிர்ச்சிபெற்று நரை திரை பிணி மூப்பு வந்து இறுதியில் மரணம் வந்துவிடுகின்றது. உடம்பைவிட்டு உயிர் பிரிந்து விடுகின்றது


பின்பு இறந்தவரை அடக்கம் செய்ய எடுத்திடும் போது எல்லோரும் சேர்ந்து மாளாத துயரம் துன்பம் வந்ததுபோல் அழுகின்றீர் உலகீர்.கொஞ்சம் நாளில் சமநிலைக்கு வந்துவிடுகின்றீர்.


*செத்த பிணங்களைப் கலந்து சாகும் பிணங்கள் அழுகின்றது வேடிக்கையாகும்*.


*மரணம் வராமல் அதாவது இறவாத பெருவரம் ஒன்று உண்டு* அவற்றை ஏன் அடைய முடியாமல் பெறமுடியாமல் தவிக்கின்றீர் என்று மனித குலத்தை பார்த்து கேட்கின்றார் வள்ளல்பெருமான்.


*வள்ளலார் பாடல்* ! 


*இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர்* *உலகீர்*


*இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்*


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு


மறந்தும்இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


*சிறந்திடு* *சன் மார்க்கம்ஒன்றே* *பிணிமூப்பு மரணம்*


*சேராமல்* *தவிர்த்திடுங்காண்* *தெரிந்துவம்மின் இங்கே*


பிறந்தபிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வுபெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


என்னும் திருஅருட்பா பாடல் வாயிலாக தான் அடைந்த அனுபவத்தையும்.

நித்தியமான வாழ்க்கை வாழமுடியும்.

 இறை அருள் வல்லபத்தால் மரணத்தை வென்று அதன் உண்மைகளை உலக மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.


பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்று பல்லாயிரம் ஆண்டுகளாக பார்த்து பார்த்து பழகிப்போன மனிதர்கள் மத்தியில் இறக்காமல் மீண்டும் பிறக்காமல் வாழும் வாழ்க்கைக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயர் சூட்டுகின்றார்.


*மரணம் என்பது இயற்கையானது அல்ல.செயற்கையானது என்கிறார் வள்ளலார்* *தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்.* தவறான வாழ்க்கை வாழ்வதால்  மரணம் வருகிறது என்கிறார்.


*மரணம் வராமல் வாழும் வழியைக் கண்டு பிடித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் வள்ளல்பெருமான் அவர்கள்*.


தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து மரணத்தை வெல்லும் வழியைக் கண்டுபிடித்து மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான்  வள்ளலார் என்பவராகும்.


இயற்கையால் (அதாவது கடவுளால்)  உயர்ந்த அறிவு மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதின் நோக்கமும் அதன் உண்மையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற உயர்ந்த குணம் மனிதனுக்கு உண்டு.


மனிதன் மரணத்தை வென்று உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவு மனிதனுக்கு கொடுக்கப் பட்டதாகும். 


மனிதன் தன் உயர்ந்த அறிவை வெளிப்படுத்தி கொள்ளாமல்.அதன் உண்மைசெயலை அறிந்து கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும்  இறந்தும் பிறந்தும் குடும்ப சாகரத்தில் சிக்கி அருள் பெறும் வழி தெரியாமல்.சிறிய இன்பம்  துன்பமே வாழ்க்கை என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லித் தேற்றிக்கொண்டு அற்ப வாழ்க்கையில் இச்சைவைத்து கண்தெரியாத குருடனைப்போல் வாழ்ந்து கொண்டே உள்ளான்.


*மனிதனுக்கு மட்டுமே அகம் என்னும் ஆன்மாவில் அறிவு வைக்கப்பட்டுள்ளது*


*அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளால் ஆன்மாவில் உள்ள அறிவு மறைக்கப்பட்டுள்ளன.அத் திரைகளை நீக்கி ஆன்மாவை புதுப்பிக்க வந்தவர்தான் வள்ளல்பெருமான் அவர்கள்.* 


அகம் கருத்து புறம் வெளுத்து இருந்த உலக மக்களை திருத்தி இகத்தே பரத்தை பெறவேண்டும் என்பதற்காகவே இறைவன் என்னை வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் என்கிறார்.


திருஅருட்பா பாடல்!


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!


மேலே கண்ட பாடல்வாயிலாக தான் வந்த நோக்கத்தைப்பற்றி தெரிவிக்கின்றார்.


*உலகியல் வாழ்க்கை* !


*உலகியலில் பட்டம் பதவி புகழுக்காக பொருள் ஈட்டுவதே வாழ்க்கை என வாழ்ந்து அழிந்து கொண்டுள்ளான் மனிதன்*


ஆன்மீகம் என்ற பெயரில் உலகில் உள்ள எல்லா மதங்களும். ஆன்மீக அடையாளமாக வேதம் ஆகமம்.

புராணம்.இதிகாசம்.சாத்திரம் போன்ற கலைகளை இயற்றி வைத்துள்ளார்கள்.


ஆன்மீக சம்பந்தமான

அதில் உள்ள கற்பனை கதைகளையும். அதில் உள்ள கதாபாத்திரங்களான  தத்துவங்களையும் தெய்வங்களாக படைத்துள்ளார்கள்.


இயற்கை உண்மைக்கு புறம்பாக செயற்கையான வகையில் படைத்து மக்களை நம்ப வைத்து அலையவிட்டு விட்டார்கள். 


மக்கள் கோயில்.ஆலயம்.

சர்ச்.மசூதி.பிரமிட்.

புத்தகயா மற்றும் புண்ணிய ஸ்தலங்கள்.காடு.

மலை.குகைகள் போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்று எதாவது ஆறுதல் கிடைக்காதா?  அமைதி கிடைக்காதா? மகிழ்ச்சி கிடைக்காதா ? என்று தேடித் தேடி அலைந்து கொண்டே உள்ளார்கள்.


*அறிவியல் வல்லுநர்கள்*


அறிவியல். விஞ்ஞானம்.

வேதியலில் தேர்ச்சி பெற்ற ஆராய்ச்சியாளர்கள். இறைவன் படைத்தை பஞ்சபூதக் கருவிகளைக் கொண்டு.பல அறிவியல் ஆராய்ச்சிகளால் பலவிதமான அளவற்ற அணு ஆராய்ச்சிகளை கண்டுபிடித்துள்ளார்கள்.


*ஆனாலும் தன் உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் அறிவியல் ஆராய்ச்சியால் கண்டுபிடிக்க தவரிவிட்டார்கள்*. 


மாயையின் ஆதிக்கத்தில் உள்ள பஞ்சபூத பொருள்களை வைத்து அறிவியல் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.

செய்து கொண்டே உள்ளார்கள்.


ஆனாலும் அருள் பெறும் வழியைக்  கண்டுபிடித்து மரணத்தை வெல்லும் வழியை கண்டுபிடிக்க தவரிவிட்டார்கள்.


இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணயால் மட்டுமே அருள் பெறமுடியும்.

 

மாபெரும் சக்தி ஆற்றல் கொண்ட  அருள் விஞ்ஞான அறிவியல் ஆராச்சியால் மட்டுமே மரணத்தை வெல்லும் வழியைக் கண்டுபிடிக்க முடியும்.அதற்கு சாகாக்கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.


அவற்றை பெறுவதற்கு சாதி.சமயம்.மதம் அற்ற இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கமான தனிமனித ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே அருளைப்பெற்று மரணத்தை வெல்ல முடியும்.


*அருள் பெறுவதற்கு  உண்டான தகுதியும் சக்தியும் ஆற்றலும் மனிதனுக்கு மட்டுமே இறைவனால் கொடுக்கப்பட்டு உள்ளது.*


உலகியல் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த பட்டம் பதவி புகழுடன் வாழ்ந்த மனிதர்களாய் இருந்தாலும். இறந்துவிட்டால் மீண்டும் அவர்கள் பிறப்பு எடுத்து இங்கே வேறுஒரு உருவத்தில் வந்தே ஆகவேண்டும்.வேறு எங்கும் செல்ல வாய்ப்பே இல்லை.


*இறந்தவர்களைப் பற்றி இருப்பவர்களுக்குத் தெரியாது*.


*இருப்பவர்களைப்பற்றி இறந்தவர்களுக்குத் தெரியாது*. இதுதான் இறை ரகசியம்.


இறந்தவர்களின் உடம்பானது. உயிர் இயக்கம் இல்லாத ஜடப்பொருளுக்குச் சமம்.அவர்களுக்கு தேவை இல்லாத சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்வது அறியாமையின் உச்சகட்டமாகும் என்கிறார் வள்ளலார்.


ஒருவர் இறந்துவிட்டால் தீயிட்டு எரிக்காமல் மண்ணில் அடக்கம் செய்வதே சிறந்த செயலாகும் என்கிறார் வள்ளலார்.


அதே சமயம் அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இறை உணர்வோடு உயிர் நேயத்தோடு ஜீவ உரிமையோடு மனிதநேயத்தோடு அவர்நினைவாக ஏழை எளிய ஆதரவு அற்ற மக்களுக்கு தங்கள் தகுதிக்குத் தக்கவாறு உணவு வழங்கி பசியைப் போக்குவதே புண்ணிய செயலாகும் என்கிறார்.


உயர்ந்த அறிவு உடைய  மனித தேகம் பெற்றவர்கள்.

பொருள் ஈட்டி பட்டம் பதவி புகழ் பெற்று இறுதியில் மரணம் அடைந்து வாழ்வது உயர்ந்த வாழ்க்கை அல்ல.  


இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதே பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்.

அதுவே உயர்ந்த வாழ்க்கையாகும்.


இறக்கபோகும் மனிதர்களால்.இறந்தவர்களைப் பற்றி போற்றி புகழ்வதும் பாராட்டுவதும் இறந்தவர்களிடம் போய் சேராது .அவர்களே உயிர் அற்றவர்கள் அவர்கள் எப்படி அறிவார்கள் என்பதை அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்.


என்றும் அழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கும். எல்லா ஆன்மாக்களையும் எல்லா உயிர்களையும் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் புகழ் பெறவேண்டும்.  


*தந்தையால் மகன் பாராட்டு பெறவேண்டும்*.

*தந்தை பாராட்டும் அளவிற்கு மகன் தகுதி உள்ளவனாக வாழவேண்டும்*


அதேபோல் நம்மைப்படைத்த இறைவனால் நல்லபிள்ளை என்ற பாராட்டை பெற வேண்டும்.போற்ற வேண்டும்.


*ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே என்பார் வள்ளலார்*.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  அருள் வழங்கி மரணத்தை வென்றவர் புகழ்ந்து மகிழ்ச்சி அடைய செய்விப்பதே சிறந்த புகழ்ச்சியாகும்.

சிறந்த மகிழ்ச்சி யாகும். சிறந்த ஆனந்தமாகும்.


அருள் பெற்றவரை அருள் பெற்றவர் புகழ்ந்தால் அருள் பெற்றவர் அறிவார்.

ஆண்டவரே அறிவார் புகழ்வார்.அதுவே உண்மையான அருள் இன்ப மகிழ்ச்சியாகும்.


*இந்த உண்மையை தெரிந்து கொண்டு வாழ்பவர்கள் எவரோ அவரே உயர்ந்தமனிதர்கள்ஆவார்கள்*


உயிர் வந்தவழியும். உடம்பு வந்த வழியும் தெரியாமல்  மாண்டுபோவது அறியாமையாகும்.


*வள்ளலார் பாடல்!*


உடம்பு வரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்


மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தைவசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்


இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தேஎண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே


நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.! 


என்னும் பாடல் வாயிலாக எளிய தமிழில் விளக்கமாக பதிவு செய்துள்ளார். 


உடம்பு வந்த வழியும் .உயிர்வந்த வழியும் தெரிந்துகொண்டு. எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதியான தனித் தந்தையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று பஞ்ச பூத உடம்பை.அருள் ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு வாழ்வாங்கு வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும்.


மனிதன் உலக வாழ்க்கையான மரணம் அடையும் பொய் வாழ்க்கை வாழாமல்.சாதாரண இன்பம் துன்பத்திற்கு ஆசைபடாமல் பேரின்ப சித்தி பெருவாழ்வு பெறவேண்டும்.


மீண்டும் உயிர் உடம்பு எடுக்காமல்.  மெய்ப்பொருளான அருளைப் பெற்று பேரின்ப பெரு வாழ்க்கை வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.  


 அருளைப்பெற்று மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து வாழ்வதே சிறந்த மனிதகுல அருள்  வாழ்க்கையாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்


9865939896

வியாழன், 24 செப்டம்பர், 2020

அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் !

 அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ! 


வள்ளல்பெருமான் 51 ஆண்டுகள் இவ்வுலகில் மனித தேகத்தோடு வாழ்ந்துள்ளார்.


வள்ளல்பெருமான் அவர்கள் குழந்தைப் பருவமான ஆரம்ப கால முதல் சித்தி பெறுகின்ற வரை தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டே வருகின்றார்.


வாழ்க்கை முறைக்குத் தகுந்தாற்போல்.அவருடைய செயல் மாற்றமும்.அவர்தம் உடம்பு மாற்றமும்  மாறுபடுகிறது.


1823 ஆம் ஆண்டு முதல் 1867 ஆம் ஆண்டுவரை உலக சமய மத வழக்கப்படி பக்தி மார்க்கத்தில் மூழ்கியது போல்  உருவ வழிப்பாட்டு முறைகளான தத்துவ தெய்வங்களை வணங்கியும் வழிப்பட்டும்.அத் தெய்வங்கள் பெயரால்  பல ஆயிரம் பாடல்களை பாடியும் இயற்றியுள்ளார்.


*அதன் பயனாக  இம்மை இன்பவாழ்வு என்னும் சுத்ததேகம் பெற்றுள்ளார்*.


25-05-1867 ஆம் நாள் தமிழ் வருடம் பிரபவ ஆண்டு வைகாசி 11 ஆம் நாளில் *வடலூரில் சத்திய தருமச்சாலை நிறுவினார்கள்.    1867 முதல் 1870 ஆண்டு வரை.உருவ வழிப்பாட்டை தவிர்த்து விட்டு *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்*. *உயிர்இரக்கமே* *கடவுள் வழிபாடு* *என்றும்*  *ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்* என்றும் அன்பு தயவு கருணையினால் மட்டுமே  இறைவனைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று மரணத்தை வெல்ல  முடியும் என்ற உறுதிப் பாட்டுடன் வாழ்கிறார். 


ஜீவ காருண்யத்தினால் அடையும் *ஆன்ம லாபத்தைப் பற்றியும்* .அதன் வல்லபத்தைப்பற்றியும். அதனால் கிடைக்கும் *இம்மை இன்பவாழ்வு.மறுமை இன்பவாழ்வு. பேரின்பவாழ்வு* போன்ற மூன்று லாபங்களைப் பெறலாம் என்ற உண்மையை  மக்களுக்கு விளக்கமாக தெளிவாக போதிக்கிறார். *ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூல் வழியாக விளக்கமாக வெளியிடுகிறார்*.


  *அதுசமயம் அந்த காலங்களில் மறுமை இன்பவாழ்வு என்னும் பிரணவதேகம் பெற்றுள்ளார்*. 


1870 ஆம் ஆண்டு முதல் 1874 ஆம் ஆண்டு வரை *இயற்கை உண்மையாம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்* நேரிடையாக தொடர்பு கொண்டு. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியவாறு செயல்படுகிறார்.  அக்காலங்களில் *பூரண அருள் பெற்று *பேரின்ப வாழ்வு என்னும் ஞானதேகத்தில் வாழ்கிறார்*.


இயற்கை உண்மை கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காக.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வடலூரில் 1872 ஆம் ஆண்டு  *இயற்கை விளக்கமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவிக்கிறார்*.

*ஞானதேகத்தில் வாழ்ந்து கொண்டு இருந்த வள்ளல்பெருமான் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியவாறு எழுதியதுதான்* *திருவருட்பா ஆறாம் திருமுறையாகும்.*  அந்த அறிய ஆறாம்  திருமுறையை மேட்டுகுப்பம் சித்திவளாக திருவரையில் தங்கி எழுதுகிறார்.  ஆகவேதான் *நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன்தன் வார்த்தை என்று மிகவும் அழுத்தமாகச் சொல்லுகின்றார்*.

ஒன்றுமுதல் ஐந்து திருமுறை வரை சுத்ததேகம்.பிரணவதேகத்தில் எழுதியது.

*ஆறாம் திருமுறை மட்டும் சுத்த பிரணவ ஞானதேகத்தில் எழுதியதாகும்*.  

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி பூரண அருள் பெற்று 30-01-1874 ஆம் நாள் (ஸ்ரீமுக ஆண்டு தைத்திங்கள் 19ஆம்நாள்) வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து தன்னுடன் கலந்து கொண்டார்..

*மகா மந்திரம்* ! 

22-10-1873 ஆம் நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைக்கு  என   மேட்டுகுப்பத்தில் சன்மார்க்க கொடியை ஏற்றி பேருபதேசம் அதாவது (மகா உபதேசம்)  என்னும் உரை நிகழ்த்துகிறார்.  

அந்த உபதேசத்தில் கடவுள் உண்மையும்  அவற்றின் உண்மைத் தன்மையும்.  அதனால் அடையும் அருள் விளக்கமும்.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்.

அசுத்த சுத்த மாயா திரைகளும்.அவற்றை விலக்கும் வழிமுறைகளும். 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கும் வழிபடும் வழிமுறைகளையும்.ஆண்டவரை எவ்வாறு  ஓதி துதிக்க வேண்டும் என்ற *மகா மந்திரச் சொல்லையும்* வெளிப்படுத்துகின்றார்..

உலகில் உள்ள எல்லா மந்திரச் சொற்களுக்கும். முதன்மையானதும் முக்கியமானதும் தலைமையானதும் ஆன மகா மந்திரச் சொல்தான்.

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி!!

என்னும் மகா மந்திரமாகும் இம் மகாமந்திர மகா வாக்கியத்தை ஆண்டவர் கட்டளைப்படி வெளியிடுகிறார்...

*வள்ளலார் வாக்குமூலம் !*

சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது *சிவாயநம என்றும், நமசிவாய என்றும்,* இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, *ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு* முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... *நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை* 

*இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை.* சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை..

*இத் தருணம்* ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி *எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு* முடிவான இன்பானுபவத்திற்குச் *சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை* - *தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை*-

 *எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்*, எனது *மெய்யறிவின்கண்* அனுபவித்தெழுந்த - உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய

 *ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை* யைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். *நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்:*

நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

*அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி*

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். *தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

மேலும், இதுகாறும் *தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்*. சுத்த மாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. *சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் *இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள்.* 

ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் *இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்*.

இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் *சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது*. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நபியவர்கள் முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; 

*அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்;* அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

*உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்ல புகுந்தாலும் புரிந்து  கொள்வாரில்லை.* கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். 

*முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.* இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். *நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் *இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது*. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

எல்லோர்க்கும் *தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்.* *இது ஆண்டவர் கட்டளை.*!  என நிறைவு செய்கிறார் வள்ளல்பெருமான்.. 

*நாம் எந்நேரமும் நல்ல உணர்வோடு நல்ல சிந்தனையோடு  மகாமந்திரச் சொல்லை இடைவிடாது* *சிந்தித்து உச்சரிப்பவர்களுக்கு*  

*அருள் வல்லபமும்  ஆன்மலாபமும்* *கிடைக்கும் என்பது சத்தியமான உண்மையாகும்*

*நமக்கு சத்விசாரம் பரோபகாரம் எனும் இரண்டும் இரண்டு கண்கள் போல் பாதுகாத்து பாவிக்க வேண்டும்*. *அதாவது இரட்டை மாட்டு வண்டிபோல் சம்மாக கடைபிடித்து செல்ல வேண்டும்*

எல்லா மந்திரங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உயர்ந்து நிற்கும் ஒரே மகாமந்திரம்

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி!!

என்னும் மகா மந்திரமாகும்.

*அகவல்*

வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்துநான்பெற வளித்த நாதமந் திரமே!

கற்பம் பலபல கழியினு மழியாப்பொ

ற்புற வளித்த புனிதமந் திரமே!

அகரமு முகரமு மழியாச் சிகரமும்

வகரமு மாகிய வாய்மைமந் திரமே!

ஐந்தென வெட்டென வாறென நான்கென

முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே!

வேதமு மாகம விரிவுக ளனைத்தும்

ஓதநின் றுலவா தோங்குமந் திரமே!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

வள்ளலாரின் தனிச்சிறப்பு !

 *வள்ளலாரின்_தனிச்சிறப்பு*


வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..


பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..


காவி ஆடை உடுத்த மாட்டார்.


உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.


உடம்பில் எந்த மத அடையாளங்களை அணிந்து கொள்ள மாட்டார்.


ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.


கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..


கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..


சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.


கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.


சிம்மாசனத்தில் அமரமாட்டார்.


ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.


தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்..


அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.


உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..


கை நீட்டி பேசமாட்டார்.


எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..


எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..


தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..


சத்தம் போட்டு பேசமாட்டார்..


சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..


ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.


உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..


புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.


மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.


பணத்தை கையிலே தொடவே மாட்டார்.


தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.


உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.


எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.


வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....


ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.


உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.


ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..


வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சாஸ்த்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.


கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க கூடாது என்றவர்.


மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்..


தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.


கடவுளைத்தேடி காடு, மலை, குகை,

குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.


கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர். 


அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.


தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.


தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.


மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..


எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.


ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.


மூச்சி பயிற்சி, வாசியோகம், தியானம், தவம், யோகம், குண்டலினி போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.


தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.


உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.


ஆலய வழிபாடு, உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.


பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .


எவரையும் தொடமாட்டார் , தொட்டு பேசவும் மாட்டார்.


உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.


உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..


நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..


கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.


ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.


ஒளி வழிப்பாட்டிற்காக

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..


தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..


சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.


மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.


உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..


ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.


உலக மக்களுக்காக உண்மை நூலான *திருஅருட்பா* வைத் தந்தவர்.


மரணம் என்பது இயற்கையானது அல்ல .

செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.


மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.


இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..


மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.


தன் பெயருக்கு முன் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்து போடுவார்.


இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்


அவர் வாழ்ந்த மண்ணில் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதில்தான் எத்தனை எத்தனை பெருமைகள்


அருட்பெருஞ்ஜோதி! 

அருட்பெருஞ்ஜோதி! தனிபெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896

திங்கள், 21 செப்டம்பர், 2020

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !

 *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !*

சாதி.சமயம்.மதம் அற்ற பொது நோக்கமுள்ள் ஒரே  மார்க்கம்தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்.

*1872 ஆம் ஆண்டு  எல்லா உலகிற்கும் பொதுவான ஒரு மார்க்கத்தை ஒரு இயக்கத்தை தோற்றுவிக்கிறார் வள்ளல் பெருமான் அவர்கள்*.

*அதற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் சூட்டுகின்றார்*.

உலகில் உயர்ந்த அறிவுள்ள உயர்ந்த மனிதப் பிறப்பை பெற்றுள்ள நாம் தெரிந்து கொள்வதும் அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும். 

உயர்ந்த அறிவு பெற்ற ஒவ்வொரு மனிதர்களும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.ஆன்மாவின் இயற்கை குணமும் அதன் இயற்கை செயலுமாகும்.

அருட்பெருஞ்ஜோதி அகவல்!

சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்

சத்திய னாக்கிய தனிச் சிவ பதியே ! 

*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை!* 

ஒரு மனிதன் சுகநிலை அடைந்து வாழ்வதற்கு சத்திய நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

*என்றும் நிலையான சத்திய நிலையில் வாழ்வதற்கு உத்தமர் தம் உறவு வேண்டும்*.

*உத்தமன் யார் ?* அவரை தொடர்பு கொள்ளும் வழி யாது என்று தெரிந்து கொண்டு வாழ்வதே மனிதனின் பிறவிப் பயனாகும். நாம் உண்மைத் தெரிந்து கொள்ளாமல். *உத்தமர் யார் என்பது தெரியாமல்.யார் யாரையோ உத்தமர் என நினைந்து பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்.*

ஏன் என்றால்  உண்மை அறிந்துகொள்ளும்  சுத்த சன்மார்க்கம் இல்லை.முன்னமே இருந்து இருந்தால் உண்மையான உத்தமரைத் தெரிந்து அறிந்து தொடர்பு கொண்டு மேல்நிலைக்கு சென்று இருப்போம்.

இக்காலமே உண்மை அறிந்து கொள்ளூம் சுத்த சன்மார்க்க காலம்.

*உத்தமன் யார் என்பதை வள்ளலார் சொல்லுகின்றார்.*

*பலகோடி அண்டங்களையும் பலகோடி உலகங்களையும்*. *அதில் உள்ள மண்.நீர்.அக்கினி.காற்று.ஆகாயம்* *மேலும் உள்ள அனைத்து தத்துவங்களையும்*. *அனைத்து உயிர்களையும் படைத்தவர் எவரோ அவரே உத்தமர் என்பவராகும்*.

அந்த உத்தமர் இருக்கும் இடத்திற்கு பெயர் தான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்பதாகும். அவை எங்கு உள்ளது.

 *அருட்பெரு வெளியில் உள்ள *அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி* என்னும் பெயருடன் விளங்கி கொண்டுள்ளது.

அந்த உத்தமரைத் தொடர்பு கொள்வதே உத்தமமாகும்.

வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும்.

இயற்கை உண்மையரென்றும்,

இயற்கை அறிவினரென்றும்,

இயற்கை இன்பினரென்றும்,

நிர்க்குணரென்றும்,

சிற்குணரென்றும்,

நித்தியெரென்றும்,

சத்தியரென்றும்,

ஏகரென்றும்,

அநேகரென்றும்,

ஆதியரென்றும்,

அமலரென்றும்,

*அவரே*

*அருட்பெருஞ்ஜோதியரென்றும்*

அற்புதரென்றும்,

நிரதிசயரென்றும்,

எல்லாமான வரென்றும்,

எல்லாமுடைய வரென்றும்,

எல்லாம் வல்லவரென்றும்,

குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த

*திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்*

துதித்தும்,

நினைத்தும்,

உணர்ந்தும்,

புணர்ந்தும்,

அனுபவிக்க விளங்குகின்ற *தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே!*

தேவரீரது திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோமாகிய யாங்கள் சிற்றறிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக்கேற் பித்தருளி யெங்களை பாதுகாத்து அருளல்  வேண்டும்.

எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லாத் தலைவர்களும் அறிந்து கொள்வதற்கு மிகவும் அரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த *ஞான வெளியில்* தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதுங் குறிக்கப்படாத *தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி* விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட *வேதாகமங்களும் பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன* என்றால், மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பித்தற் குரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறறிவோம்! எங்ஙனஞ் செய்வோம்! ஆகலில், கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.  

*என்று சொல்லி விளங்க வைக்கிறார்*  இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருந்து இயங்கிக் கொண்டு உள்ள இடத்திற்கு பெயர் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற தலைப்பை வைத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி பெயர் மாற்றம் செய்து பெயர் சூட்டுகிறார்.

அந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய *சங்கத்திற்கு தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே* என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்கின்றார். 

மேலும் இச்சங்கத்தை  இயக்கும் நடத்தும் பொருப்பை வள்ளலார் இடமே ஒப்படைக்கின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

வள்ளலார் பாடல் !

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே 

*திலகன்என*

*நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.! 

வள்ளலாருக்கு முன்பு வரை பல சன்மார்க்க சங்கங்கள்  இருந்துள்ளன. அவற்றில் சமரசமும். சுத்தமும். சத்தியமும் இல்லை. மனித நேயம் இல்லாமல் ஆன்மநேயம் தெரியாமல். ஒற்றுமை இல்லாமல் வேற்றுமையை உருவாக்கிக் கொண்டே எல்லா மார்க்கமும் செயல்பட்டு கொண்டு உள்ளன. அதனால் உயிர்கள் போரிட்டு மாண்டு கொண்டே உள்ளன. ஆதலால் ஆன்ம இன்ப லாபம் பெறமுடியாமல்.

ஆன்மாக்கள் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளன.

*மனித குலத்தை காப்பாற்ற வேண்டும்*.

மனித குலத்தை காப்பாற்றுவதே புதிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகளாகும்.

வள்ளலார் பாடல் ! 

*பன்னெறிச் சமயங்கள்* *மதங்கள் என் றிடும்ஓர்*

*பவநெறி இதுவரை* *பரவியது* அதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

*செறிஇருள் அடைந்தனர்* ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற 

*சுத்தசன் மார்க்கத்*

*தன்னெறி* *செலுத்துக என்றஎன் அரசே*

*தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!* 

என்னும் பாடல்வாயிலாக தெரிவிக்கின்றார். 

மனிதகுலம்  இதுவரையில் மரணத்தை வெல்ல முடியாமல் இறந்து இறந்து.பிறந்து பிறந்து கொண்டே உள்ளன

  மரணம் இல்லாமலும் மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமலும் ஆன்மாக்கள் பேரின்ப பெருவாழ்வு வாழ்வதற்கு.

வழி காட்டும் மார்க்கமே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மார்க்கமாகும்.*

மனித வாழ்க்கையில் உடல் உயிர்.ஆன்மா தனித்தனியே பிரியாமல். மரணம் என்னும் பெம்பாவி வந்திடாமல்.

அவற்றை தடுத்து நிறுத்தும் வழியைக் கண்டுபிடித்து.

துன்பம் துயரம் அச்சம் பயம் இல்லாமல் தைரியமாக  வாழ்வதற்கு  கற்றுத்தரும் கல்விக்கு *சாகாக் கல்வி* என்றும் பெயர் வைக்கிறார்.சாகாத கல்வி கற்றுத்தரும் ஒரே மார்க்கம்.வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கமாகும். *சாகாத கல்வியினால் பெரும் உயர்ந்த பட்டம் எதுவென்றால் மரணத்தை வெல்லும்  அருள் என்னும் பட்டமாகும் .*

*வள்ளலார் பாடல்* ! 

கற்றேன் சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி

உற்றேன்  *எக் காலமும் சாகாமல்* *ஓங்கும் ஒளிவடிவம்*

*பெற்றேன்* *உயர்நிலை* 

*பெற்றேன்* உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே.! 

மேலும்...

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்

தான் என அறிந்த அறிவே

தகும்அறிவு *மலம் ஐந்தும் வென்றவல் லபமே*

*தனித்த பூரண வல்லபம்*

வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்

விளைய விளை வித்ததொழிலே

மெய்த்தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம் எல்லாம்

மா காதலுற எலாம் வல்ல சித்தாகி நிறை

வான வரமே இன்பமாம் 

*மன்னும்இது நீ பெற்ற* *சுத்தசன் மார்க்கத்தின்*

*மரபு* *என்று உரைத்தகுருவே*

தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்

தேற்றி அருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே

தெய்வநட ராஜபதியே.! 

என்னும் பாடல் வாயிலாக சுத்த சன்மார்க்கத்தின் மரபைப்பற்றியும் அதனால் கற்கும் *சாகாக்கல்வி* பற்றியும் விளக்கமாக விளங்க வைக்கிறார்.

*சுத்த சன்மார்க்கம் என்பது எந்த சமய மதங்களையும் சாராத பின் பற்றாத  தனித்த தனி மார்க்கமாகும்.*

வள்ளலார் பாடல் ! 

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன் மார்க்கச்

சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனை யாட்கொண்டு *அருளமுதம் அளித்து*

வல்லப சத்திகள் எல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண்டு அருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

*கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்*

கண்மையினால் கருத்தொருமித் துண்மை உரைத்தேனே .! 

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் தந்து மக்களை ஆன்மநேயத்தோடு அழைக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்.

சுத்த சன்மார்க்கம் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமாகும். என்றும் நிலைத்து நிற்கும் மார்க்கமாகும். 

*வள்ளலார் சொல்வதை கவனிக்கவும்.* 

பிரஜோற்பத்தி வருடம் சித்திரை மாதம்  12 .4 . 1871 ஆம் நாள் வெளியிட்டது.

சுத்த சிவ சன்மார்க்கம் ஓன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் . இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை . தடையற்ற பெருநெறி வழக்கம் *இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும் . அதன்மேலும் வழங்கும்*.

பலவகைப்பட்ட சமய பேதங்களும். சாத்திர பேதங்களும்.ஜாதி பேதங்களும்.ஆசார பேதங்களும் போய் சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும் . அது கடவுள் சம்மதம் . இது 29 மாதத்திற்கு மேல் .

*இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட *ஏற்பாட்டுக் கா்த்தா்கள் , மூா்த்திகள், கடவுளா் , தேவா் , அடியார் , யோகி , ஞானி முதலானவா்களில் ஓருவரல்ல* . இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் , எல்லாத் தேவா்களும் , எல்லாக் கடவுளரும் , எல்லாத் தலைவா்களும் , எல்லா யோகிகளும் , எல்லா ஞானிகளும் , தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிற்பார்க்கின்றபடி எழுந்தருளு கின்ற தனித்தலைமைப் பெரும்பதி .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் . பெறுகின்றேன் . பெற்றேன் . *என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை*. பெறுவீர்கள் .பெறுகின்றீா்கள்.பெற்றீா்கள் அஞ்சவேண்டாம். என்னும் அறிவிப்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.

 உலகில் உள்ள பலதரப்பட்ட ஆன்மீக மார்க்கங்களைப் பின்பற்றி நாம் கடைபிடிப்பதாலும்.

அவற்றில் உள்ள தத்துவ கடவுள்களை வணங்கி வழிபடுவதால்  எந்த பயனும் இல்லை.அருள் பெறவும் வாய்ப்பு இல்லை. என்பதை தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு.

அருட்பெருஞ்ஜோதிஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்ட சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைபிடித்து  பின்பற்றி வாழ்ந்தால் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம். 

*அருள் வழங்கும் தகுதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் மட்டுமே உண்டு*  

வள்ளலார் பாடல் ! 

ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்

சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்

நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும்

வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.! 

என்பதை அறிவால் அறிந்து கொள்வதே உயர்ந்த அறிவாகும்.

துன்மார்க்கங்களை எல்லாம் தொலைத்து விட்டேன் என்கிறார்.

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் -  

*என்மார்க்கம்*

*நன்மார்க்கம்* என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்*

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.! 

உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் வையகத்தில்.

வானகத்ததில்.

மெய்யகத்தில் உள்ள அருளாளர்கள் எல்லாம் சுத்தசன்மார்க்கம் ஒன்றே நன்மார்க்கம் என்று மகிழ்ந்து போற்றி புகழ்கின்றார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே உயர்ந்த அறிவு பெற்ற மனிததேகம் கிடைத்த நாம் உண்மை அறிந்து உண்மை நெறியான *சுத்த சன்மார்க்க மெய்நெறி ஒழுக்கமான இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை* கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து. அவற்றைத் தொடர்புகொண்டு  அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்ப லாபத்துடன் வாழ்வாங்கு வாழ்வோம்.

*என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்பார் வள்ளலார்*

வள்ளலார் பாடல் ! 

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனி நீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன் குணர்ந்தே

எண்டகு சிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

மேலும்...

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

எல்லாம் செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியே சிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.! 

மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்.தெளிவு பெறவும். 

சுத்த சன்மார்க்கத்தின் உள் நுழைந்து அருளைப் பெறுவதற்கு தடையாக இருப்பவை எவை எவை என்பதை வள்ளலார் சொல்லுகின்றார்.

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி *எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்* எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்*.

எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

*தடைகளை தவிர்போம் அருளைப் பெறுவோம்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896

சனி, 19 செப்டம்பர், 2020

 *விசாரம் செய்வோம் மரணத்தை வெல்வோம்!*

 

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உடைய  சுத்த சன்மார்க்க சகோதர சகோதரிகளின் கவனத்திற்கு ஒரு சிறு விண்ணப்பம்

*அனுபவித்தால் அனுபவம் விளங்கும்*

எந்த ஒரு பதார்த்தத்தையும் உண்டு அனுபவிக்காமல், பார்த்தவுடன் அதன் சுவையை சொல்ல இயலுமா ?

அப்படி உண்டு அனுபவிக்காமல் அதன் சுவையை சொன்னால் அது வெறும் கற்பனை கணிப்பாகத்தான் இருக்குமே தவிர உண்மையை அடுத்தவர்களுக்கு விளக்கி சொல்ல முடியாததாகத்தானே இருக்கும்  

அனுபவித்து அறிந்துகொள்ள வேண்டிய ஒருபொருளை அனுபிவிக்காமலேயே பேசி பேசி வீண் விவாதம் செய்து வீண்போவதே நம் வாழ்க்கையாக உள்ளது.

எந்தப் பொருளையும்  அனுபவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டால் அதன் பயன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ?

நமது வள்ளல் பெருமான் இப்புவியில் வருவிக்கவுற்றதின்  நோக்கம்.

 அனைவருக்கும் பொதுவான ஒரேக் கடவுளை சாதி சமயம் மதம் என்ற பெயரால் கூறுபோட்டு..

அவரவருக்கு ஏற்றவாறு ஜட தத்துவங்களின்  பெயரை கடவுளுக்கு வைத்து ஒற்றுமை இன்றி போரிட்டு சிதைந்து கிடக்கும் உயர்ந்த பிறப்பான மானிடப்பிறவிகளை எல்லாம்.

சுத்தசன்மார்க்கம் என்ற பொதுக் கொள்கையால்  ஒன்றுபடுத்தி.ஒற்றுமை உண்டாக்கி.ஜீவ நேயத்தையும்.ஆன்மநேயத்தையும் புரிய வைத்து. இயற்கை உண்மையாய் என்றும் விளக்கமாய்   விளங்கி கொண்டு உள்ளதாய். இயற்கை இன்பத்தை வழங்குவதாய் உள்ள எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய

அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரே கடவுளை அனைவரும் ஒருமையுடன் வணங்கி வழிபட்டு அவரவர்களின் வாழ்வும் நிலைக்க வைக்க வேண்டும்.

அதற்கு சிற்றம்பலக் கல்வியாம் சாகாக் கல்வி கற்று தேர்ச்சி பெற்று தெளிவடைய வேண்டும்.

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்ற பெருங்கருணை பெரும் நோக்கத்தில், இவ்வுலகிற்கு திருவருளால் வருவிக்கவுற்றவர்தான் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள்.

 இகத்தே பரத்தைப் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். சொல்லிய வண்ணமே அருள் பூரணத்தைப்பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் நமது அருட்தந்தை வள்ளல்பெருமான் ஆவார்கள்.

அப்படி வந்த நமது வள்ளல்  பெருமான் தாம் வருவிக்கவுற்ற நோக்கத்தையும்,

அதன்படி தாம் அடைந்த அருள் அனுபவத்தையும் இறையனுபவத்தையும்  இவ்வுலகவர்களுக்கு விளக்கி வெளிப்படக் கூறியது மட்டும் இல்லாமல்... ,

அதை அடைவதற்கான வழிதுறையையும் நமக்கு தெளிவாக சொல்லி வைத்து உள்ளார்கள்.

அதன்படி வாழ்ந்தும் உள்ளார்கள்.

அந்த வகையில் நாம் பெருமான் கூறிய சுத்தசன்மார்க்க சுகப் பெரும்நிலையாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை அனுபவ நிலையை பெற வேண்டியதற்கான  நன் முயற்சியை அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றாகத்தான் நாம் கடந்து வரவேண்டும்  .

*ஒரு ஜாமநேரம்*

 நாம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு ஜாமநேரம் போதும் என்கின்றார்கள் அதாவது மூன்று மணிநேரம் .


 *இதில் நாம் ஊன்றி கவனிக்க வேண்டியது அங்கு சொல்லபட்ட வார்த்தைகளின் பொருளைத்தான் .* 

அதன்படி தற்போது,  நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் தரத்திற்கும் நமது அறிவின் பக்குவ நிலைக்கும் இது சாத்தியமாகுமா ? 

என்று சற்று சிந்தித்து அதைப்பற்றிய தயவான விவாதம் செய்திடல் வேண்டும் .


 *அப்படி என்னதான் பெருமான் கூறியிருக்கின்றார்கள் என்றால் ;* 


நாம் இதுவரை கண்டது.கேட்டது.  கற்றது. களித்து.கேட்டது.

உண்டது.உட்கொண்டது எல்லாம் பொய் என்பதை உணர்ந்து அனைத்தையும் தள்ளிவிட முயற்சி செய்ய வேண்டும்.


வள்ளலார் பாடல் ! 


கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே


உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என் இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாதர வரம்பெறலாம் இன்பமுற லாமே.! 


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.இனிமேல் நாம் சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து

மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளைப்படி ஒழுகவேண்டும்.

ஒழக்கம் நிறைந்து கருணையே வடிவமாக மாறும்போது இறைவன் அருளைப்பெற்று மரணத்தை வெல்லலாம் என்கிறார்.

  

அன்பான ஆன்மநேய  சகோதர சகோதரிகளே ,

நமது ஆன்மாவை தெரியவிடாமல் மறைத்திருக்கும் அறியாமை என்னும் மாயை திரைகளை அகற்ற வேண்டுமென்றால் அது உயிர்க்கருணை கொண்டு *பரவிசாரம் என்ற சுத்த உஷ்ணத்தால் மட்டுமே நீக்கமுடியும்* என்பதும்.


 *அந்த சுத்த உஷ்ணம் எப்படிப்பட்டதென்று* 

 *தெரிய வேண்டுமென்றால்*

 *அது ஒரு யோகியினுடைய அனுபவத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்பதுவாம்.* 


 *அப்படிபட்ட உஷ்ணத்தை மனுஷ தரத்தில் இருந்து உண்டுசெய்வதற்கு தெரியாது என்பதுவாம் .* 


*ஒரு யோகி காடு மலை குகை முதலியவற்றிற்கு சென்று நூறு வருடம் ஆயிரம் வருடம் தவம் செய்து*

உண்டாக்கிக் கொள்ளும் ,

 *இந்த உஷ்ணத்தைக்காட்டிலும் கோடி பத்துக்கோடி பங்கு அதிகமான உஷ்ணத்தை நாம் உண்டுபண்ணிக்கலாம்* .

எப்படி என்னில் ,


 *ஒரு ஜாம நேரம் மனத்தில் "இக விசாரம் இன்றி பர விசாரிப்புடன்" ஆன்ம நெகிழ்ச்சியோடு"* *தெய்வத்தை சிந்தித்துக்கொண்டாவது  அல்லது ஸ்தோத்திரம் செய்துகொண்டாவது இருந்தால்,* 

 *நாம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம் .* 

என்று பெருமான் கூறுகின்றார்கள் 🌺


 *இதில் கூறப்பட்ட நேரம் என்னவோ வெறும் மூன்று மணிநேரம்தான் .* 

 

*ஆனால் அதில் சொல்லப்பட்ட நியதிகள்தான் இமயத்தை ஒத்ததாக எட்டாத உயரத்தில் உள்ளது.* 


*ஆம் சகோதரர்களே!* 

*மனத்தில் இகவிசாரிப்பு இன்றி பரவிசாரிப்புடன் ஒரு ஐந்து நிமிடம் நம்மால் ஒரு இடத்தில் உட்கார இயலுமா ?* என்றால் ரொம்ப கஷ்டம் தான்.ஆனாலும் அதிதீவிர முயற்சியுடன் இருந்தால் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்.


இக விசாரிப்பு என்பது என்ன ? 

இகலோக இல்லற வாழ்வில் நம்மை சார்ந்துள்ள விஷயங்களைப் பற்றிய விசாரிப்புகளே ஆகும்.


 மனம் வேறு எந்த விஷயங்களையும் நினைக்காமல் ஆண்டவர் ஒருவரையே நினைத்து அவரது அருளையே வேண்டி ,

ஆன்ம நெகிழ்வோடு அழுத கண்ணீர் மாறாமல் ஆகாரத்தில் இச்சை இல்லாமல் இறை உணர்வோடு நினைந்து நினைந்து. உணர்ந்து உணர்ந்து. நெகிழ்ந்து நெகிழ்ந்து்

அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றுபோல் எழும் கண்ணீர் ஆறாய் பெருகி உடம்பெல்லாம் நனைந்து ஓடவும்வேண்டும்.


ஆகாரம் என்ற நினைப்பே இல்லாத வண்ணம் இருந்து ஆண்டவரை சிந்தித்தோ அல்லது ஸ்தோத்திரம் செய்துகொண்டோ இருந்தால் வள்ளல்பெருமான் கூறுகின்றபடி பெற்றுக்கொள்வது சாத்தியம்தான்.


*அவ்வாறு செய்வதற்கு தடையாக இருப்பது*


*வள்ளலார் பாடல்* !


புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்

புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்


உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்

உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே


மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே

மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே


தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே

சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.! 


மேலே கண்ட பாடலில் சொல்லியவண்ணம் எதுவும் துணைஇல்லை என்பதை உணர்ந்து ஒதுங்கி கொள்ள வேண்டும்.


 *ஆனால், நம்முடைய பக்குவம் தற்போது எந்தவண்ணம் உள்ளது ?* 


 *இவ்வுலக விடய ஆசைகளில் நிராசையுற்று , சதா சர்வகாலமும் ஆண்டவரை நினைத்து அழுது புலம்புகின்றோமா ?* 


 *நமது மனம் வேறு எந்த விஷத்தையும் பற்றாமல் ஆண்டவரையே பற்றிக்கொண்டு சுற்றி வருகின்றதா ?* 


இல்லையே !

நாம் இன்னும் குடும்ப பந்தத்திலும் , இவ்வுலக பந்தத்திலும் மூழ்கி கிடக்கின்றோமே,

அந்தப் பற்றையே இன்னும் விடமுடியவில்லையே !


நமக்கு அடுத்தடுத்து  நடப்பதெல்லாம் இறைவன் செயலாலேயே நடக்கும், *அவரே நமது பசியறிந்து உணவளிப்பார்*,

*உணவு கிடைத்தால் உண்போம்* ,

இல்லை என்றால் ஆண்டவரை நினைத்துக்கொண்டே *பசி என்ற உணர்வு இல்லாமல்  உறங்குவோம்  *தற்சுதந்திரம் இன்றி,* 

நம்மிடம் உள்ள பணத்தை அடுத்த வேலைக்கு தேவை என்று வைத்துக்கொள்ளாமல் கேணியிலும் குளத்திலும் கிணற்றிலும் பணத்தாசை இல்லாமல் வீசிவிட்டோமா ?


இல்லையே !

 *இன்னும் அடுத்தவேலை உணவுக்காகத்தானே ஊர்ஊராக வேலையைத் தேடி பணத்தக்காக பதறி ஓடுகின்றோம் ,* 

இன்னும் ஓடிக்கொண்டே இருக்கின்றோம் .


 *ஓய்ந்து ஒரு இடத்தில் அமர்ந்து கண்ணை மூடினாலே மனம் ஒரு நிமிடத்தில் ஓராயிரம் எண்ணங்களை அசைபோடுகின்றதே* *


அவ்வளவு ஏன் ! சன்மார்க்க அருமை சகோதர சகோதரிகள் சுத்தசன்மார்க்க வழிபாட்டிலும்,

சன்மார்க்க நிகழ்ச்சிகளிலும் அருட்பெருஞ்ஜோதி அகவலை படிப்பதை பழக்கமாகவும், வழக்கமாகவும் படித்து வருகின்றோம் என்பது அனைவரும் அறிந்தது;


*சிலர் நாள் தவறாமல் அகவலை படிக்கின்றார்கள்.* 


*பலர் அகவலை பார்க்காமலேயே 1596 அடிகளையும் படிக்கின்றார்கள் .* 


 *ஆனால் ,அகவல் படிக்கின்ற அந்த ஒன்றரை மணிநேரம் நமது மனம் வேறு எதையும் நாடாமல் , வேறு எதையும் நினைக்காமல்  , வேறு எதையும் வேண்டாமல் அகவலின் உட்கருத்தை மட்டுமே உன்னிநின்று ஆண்டவரையே நினைத்துக்கொண்டு படித்து முடிக்க நமது மனம் ஒத்துழைக்கின்றதா?* என்பதை சிந்திக்க வேண்டும்.


*அப்படி நாம் படித்துவிட்டாலே மனம் நமது பக்குவத்திற்கு வரக்கூடிய தன்மையில் இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாமே* 


சுத்தசன்மார்க்கத்தில் பெருமான் , நாம் அடையவேண்டிய லஷியமாக கூறிய கருத்தை எல்லாம்  அறிந்துகொண்டு...,


அதற்கு என்னென்ன உபாயமாக கூறினார்களோ அவற்றை எல்லாம் 

தெரிந்து கொண்டு... ,

ஒவ்வொன்றையும் வரிசைப்படி கடந்து வந்து , ஒவ்வொரு படியிலும் கிடைக்கும் அனுபவங்களே நமக்கு அடுத்தடுத்த நிலைக்கு செல்வதற்குரிய அறிவைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து... ,  


 *தற்போது நமது பக்குவத்திற்கு தக்கவாறு விசாரம் செய்வோம் அதைப்பற்றி மட்டுமே விசாரிப்போம் என்பதுதான்* 


 *அந்த விசாரம்கூட , நமது பக்குவத்திற்கும் தரத்திற்கும் ஒத்தவர்களாக உள்ளவர்களுடன் விசாரனை செய்வேண்டும் .* 


 *நம்மைவிட மிகவும் மேலான தரத்தவர்களுடனும் விசாரம் செய்தல் கூடாது, அல்லது நம்மைவிட தாழந்த தரத்தில் இருப்பர்களுடனும் விசாரம் செய்தல் கூடாது ;* 

 

அப்படி நமது தரத்திற்கு மாறுபட்டு உள்ளவர்களுடன் விசாரம் செய்தால் ,

நமது மனத்தில் எழும் அறியாமை கேள்விகளுக்கு நமக்கு அன்புடனும் தயவுடனும் பதில்சொல்லும் பொறுமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடலாம்...,


 *அது அவரவர்களின் தயவைப் பொறுத்து கருணையைப் மாறுபட்டதாய் உள்ளது;* 


 *இதனால் நமக்கு தேவையான விளக்கம் கிடைக்காது  என்பதை உணர்ந்து ,* 

 *நம்தரத்திற்கு ஒத்தவர்களை அறிந்து விசாரனை செய்வோம் அல்லது தனித்து இருந்து கேள்விகளை நமக்குநாமே கேட்டுக்கொண்டும்விசாரம் செய்யலாம் ,* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமான் துணைக்கொண்டு விசாரம் செய்வோம் ;* 


 *அந்த விசாரனை எப்படி இருக்கவேண்டும் என்றால்... ,* 

*நமது பக்குவத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும் .* 


ஆம் ,

 *விடய ஆசைகளையே அடக்கமுடியாத நாம் மரணமிலாப் பெருவாழ்வை  அடைவது எப்படி என்றும், இன்னும் ஏன் யாரும் அடையவில்லை என்றும் விசாரம் செய்வது அறியாமை .* 


அவற்றைதான் வள்ளல்பெருமான் விளக்கமாக கூறியுள்ளார்களே ! 

அவற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான் .


அதை விடுத்து அதைப்பற்றிய காரசாரமான விவாதம் கூடாது ,

ஏனென்றால் அதை அடைந்த ஒருவரிடம் விசாரம் செய்தால் அதற்கான விளக்கம் கிடைக்கும் .


*ஆனால் நாமோ,*

*ஆசையை ஒழிக்க இன்னும் எத்தனைப்பிறவிகள் எடுக்க வேண்டுமோ*?


*மனத்தை வசப்படுத்த இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்கவேண்டுமோ?*


*தன்னை அறிந்துகொள்ள இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ* ?


*ஆண்டவரின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்கவேண்டுமோ.* *?


*மரமிணலாப் பெருவாழ்வு என்ற இலக்கை அடைய இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்க இருக்கின்றோமோ தெரியவில்லையே* ? .

*என்ற அவநம்பிக்கை இல்லாமல் அருளைப் பெற்றே ஆகவேண்டும் என்ற அதி தீவிர முயற்சி யில் விசாரம் செய்ய வேண்டும்*


 *ஆனால் இவற்றை எல்லாம் அருளொளி கிடைக்கப் பெற்றால் கணத்தில் பெற்றுக்கொள்ளலாம் .* 


 *அருளொளி கிடைப்பதற்கான  தயவைப் பெறுவதுதானே நமது நோக்கம்.* 


 *ஆகலில் விசாரம் என்ற பெயரில், அனுபவித்து அறியாத ஒரு நிலையைப்பற்றி அனுபவித்தறியாத மற்றொருவரிடம் விவாதம் செய்கின்றபோது அது பலனற்று விகாரப்பட்டு நிற்கும் .* 


எனவே பெருமான் கூறிய அத்தனை அனுபவங்களையும் படித்து தெரிந்துகொள்வது நமது கடமை.


 *ஆனால் விசாரம் செய்வது என்பது நமது பக்குவத்திற்கு தக்கவாறு , நம்மால் அறிந்து கொள்ளக்கூடிய செயல்களான* 

ஜீவகாருண்யம் என்பது எப்படிப்பட்டது என்றும் ,

*இகலோக வாழ்வு என்றால் என்ன* *? 

*பரலோக வாழ்வு என்றால் என்ன* ?*


*இம்மை இன்ப லாபம்* 

*மறுமை இன்ப லாபம்*

*?பேரின்ப லாபம் என்றால் என்ன* ?

 

*அண்டம் பிண்டம்* 

*அகம் அகப்புறம் புறம்* *புறப்புறம் இவற்றில் கடவுட்* *பிரகாசம் எப்படி விளங்குகின்றது* *என்பது பற்றி தனக்குள் கேள்விகளை எழுப்பி, அதனால் உண்டாகும் பல்வேறு கேள்வியாலும் பதில்களாலும் பல மறைப்புகளை நமக்குள் விலக்கிக்கொள்ளலாம்.* 


*இந்திரிய ஒழுக்கம்,

கரண ஒழுக்கம்,

ஜீவ ஒழுக்கம்,

ஆன்ம ஒழுக்கம் என்பது என்ன* ?


 *இவற்றில் கூறப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன என்று ஆராய்ந்து ,* 


 *முதலில் ஒழுக்கத்தை வகைபடுத்தி அதன்படி வாழும்போது , அவ்வொழுக்கம் ஒத்த இடத்தில் ,* 

*நமது அறிவு தானே வந்து கூடி அடுத்தடுத்த நிலைக்கு தேவையானவற்றை நமக்கு அறிவுறுத்தும்.* 


 *அதன்படி நாம் ஒவ்வொன்றாய் கடந்து செல்வதுதான் நிலையான ஏற்றத்தைக் கொடுக்கும் .* 

எனவே ,

பெருமான் கூறிய மேல்நிலை அனுபவங்களை அனுபவித்த சுத்தசன்மார்க ஞானிகள் நம்மை சார்ந்து தற்போது இல்லாத காரணத்தினால் ,

துரியம் துரியாதீதம் குருதுரியம் சுத்த சிவதுரியம் இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி யாரிடமும் விசாரனை செய்யாமல் நாமே  விசாரம் செய்வது உத்தமம்.


 *மரணமிலாப் பெருவாழ்வு என்பது பற்றிய விஷயங்களில் ஆரோக்கியமான விசாரம் யாரிடம் செய்வது ?* 


அவற்றை அடைந்தவர்கள் 

யாரும் நமது கண்ணுற இருந்து அவர்களது தலைமையில் சுத்தசன்மார்க்கம் வழிநடத்தப்பட்டால் இங்கு மாறுபட்ட விவாதம் எழும்பாது ,


ஆனால் அப்படி யாரும் இன்னும் தோன்றவில்லை என்பதாலும் ,

பெருமான் ஒருவரே நம் அனைவருக்கும் தோன்றாத் துணையாக நின்று நம்மை வழிநடத்துகின்றார்கள் என்பதாலும்.


முதலில் நாம் அனைவரும் ,

 *நமக்குள் தயவை வளர்ப்பதற்கு தேவையான சுத்தசன்மார்க்க ஒழுக்கத்தை ,* 


இந்திரிய ஒழுக்கத்தில் இருந்து ஒவ்வொன்றாய் கடைபிடித்து ஒழுகினால் ,

 *அவ்வொழுக்கத்தின் வாயிலாக எல்லா நிலைகளும் கைகூடும்* என்பதை உணர்ந்து ,


*நம்முள் அன்பை தயவை கருணையைப் பெருக்குவோம் .* 

பெருமான் கொடுத்துள்ள திருவருட்பா பாடல்களையும் கருத்துகளையும் உள்ளதை உள்ளபடி படித்து பதிவுசெய்வோம் .


அருட்பாவில் எதுபற்றி கூறினாலும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்படி வள்ளல்பெருமான் கூறியுள்ளார்கள் என்பதை நமது அகங்காரம் வெளிப்படா வண்ணம் தயவுடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  பெயரை முன்வைத்து எழுதி பேசி பழகுவோம் 👏


 இக் கருத்தின் உண்மை அறிந்து

எல்லாரும் எல்லா நிலைகளும் அடையவேண்டும் என்ற பொது நோக்கத்தோடு பதிவு செய்துள்ளதாகும்.


இப் பிறவியை முடித்துவைக்கும் அருட்பெருஞ்ஜோதிஆண்டவரின் கட்டளைப்படி.சோதனைகளைத் தவிர்த்து சாதனையில் ஈடுபடுவோம். வெற்றி பெறுவோம்.


*ஆகவே அருமை சகோதர சகோதரிகளே முதலில் நாம் சன்மார்க்க ஒழுக்கத்தின்படி வாழ முற்படுவோம் ,* 

*ஒழுக்கத்தின் வாயிலாகவே எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.* 


*ஒழுக்கம் சார்ந்து நெறியில் பயணித்தால் மட்டுமே அந்நெறிக்குரிய நிலையை அடைய முடியும் என்று கூறி நிறைவு செய்கிறோம்.


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

பால் சைவமா அசைவமா !?

 *என் அறிவுக்கு கிடைத்த விளக்கம்* 


பால் சைவமா ? 

அசைவமா ?


சைவம் அசைவம் என்பதை விட தாவர உணவா?  மாமிச உணவா ? என்பதே சன்மார்க்க கேள்வியாகும்.


இறைவனால்  படைக்கப்படும் உயிர்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய் உடம்பில் இயற்பையால் மாற்றம் செய்து கொடுக்கப்படக் கூடிய உணவு தாய்ப்பால்தான்.இது எல்லா உயிர் இனங்களுக்கும் பொதுவானதாகும்.


ஒரு குழந்தை வாழ்நாள் முழுவதும் தாய்ப்பால் குடிக்காது கொடுக்கவும் கூடாது. திட உணவு உட்கொள்ள ஆரம்பித்தால் திரவ உணவான பால் நின்றுவிடும்.


எல்லா உயிர் இனங்களுக்கும் பொதுவான உணவு தாவர உணவாகும்..


பழக்கத்தின் காரணமாக.காட்டில் வாழும் துஷ்ட மிருகங்களும்.அறிவுபெற்ற மனிதர்களும் மாமிச உணவு உண்டு பழகி விட்டார்கள். 


பல மதங்களும் மாமிச உணவு உட்கொள்ள அனுமதித்து உள்ளன.ஆனால் நம் இந்திய நாட்டில் மட்டுமே சைவம் அசைவம் என  பிரித்தார்கள். *இறைவனை தொழுவதற்கு மாமிசம் உண்ணக்கூடாது என்றும் அதை தீட்டு என்றே ஒதிக்கி வைத்தார்கள்* .

இன்று சைவ சமயமும்.

வைணவ சமயமும்.பின்பற்றும் மனிதர்களில் ஒருசிலர் பழக்கத்தின் காரணமாக மாமிசம் உண்கிறார்கள். 


வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சன்மார்க்கிகள் எங்கு வாழ்ந்தாலும் மாமிசத்தை உண்ணமாட்டார்கள் என்பது உறுதியானதாகும்.


திருவள்ளுவர் வள்ளலார் போன்ற ஞானிகள் மட்டுமே மாமிசம் உண்பவர்களை கடுமையாக சாடுகிறார்கள். 


ஒரு உயிரை உணவுக்காக கொன்று உண்பதும். இறந்த உடம்பை உண்பதும் ஆன்மாவின் அறிவை மழுங்கச் செய்யும் உணவு என்பதால் மாமிச உணவை உட்கொள்ளக் கூடாது என்று *வள்ளுவர் வள்ளலார்* மிகவும் அழுத்தமாக சொல்லி உள்ளார்கள். 

ஏன் என்றால் ?  *உயர்ந்த அறிவுபெற்ற மனிதன் மாமிசத்தால் இறைவனிடம் அருளைப் பெறும் வாய்ப்பை இழந்து விடுவார்கள்*.


நம் சிந்திக்க வேண்டும்.


பால் வெண்ணிறமானது. தூய்மையாக்கப்பட்டது. இரத்தம் கலவை இல்லாதது..


இரத்த கலவை உள்ள எந்த உயிர் இனங்களையும் கொன்றோ அல்லது இறந்து போன மாமிசத்தை உண்ணுவதோ கூடாது என்பதாகும்.


அருள் பெறும்வரை உடம்பையும் உயிரையும் நீட்டிக்க தாவர உணவு தேவைப்படுகிறது.


அருள் பெறுவதற்கு எந்த உணவுமே தடைதான். என்பதை சுத்த சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.


பால் சைவமா அசைவமா என்பதைவிட ஏகதேசம் பால் தேவைதான்.தொடர்ந்து பால் அருந்தக்  கூடாது என்கிறார் வள்ளலார். 


நாம் இறை உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் எதுதேவை எது தேவை இல்லை என்பதை நம் அறிவே நமக்கு விளக்கி காட்டும்


நன்றியுடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 17 செப்டம்பர், 2020

கடவுளின் அருளைப் பெறுவது எங்கனம் !

 *கடவுளின் அருளைப் பெறுவது எவ்வாறு ?*


முதலில் கடவுள் யார் என்பது தெரிந்து கொண்டால்தான் அருளைப்பெற  வசதியாக இருக்கும்.


அருள் வழங்கும் கடவுளை உலக மக்களுக்கு வள்ளலார் அறிமுகப் படுத்துகின்றார்.

அவர்தான்

*அருட்பெருஞ்ஜோதி*

*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோதி!!* 


என்னும் இயற்கை உண்மைக் கடவுளாகும்.

இயற்கை உண்மைக் கடவுளைத் தொடர்பு கொள்ள இயற்கை உண்மையுடன் வாழ்ந்து தொடர்பு கொள்ள வேண்டும்.


இயற்கை உண்மையுடன் வாழ்வதற்கு.

*இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்* 

என நான்கு ஒழுக்கங்களை பின்பற்றி கடைபிடித்து வாழவேண்டும்.


 *நம் முன்னோர்கள் காட்டிய வழி முறைகள்!*


சரியை .கிரியை.யோகம்.ஞானம் என்னும் நான்கு வழிமுறைகளை சொல்லி வைத்துள்ளார்கள்.


சரியை சரியை.

சரியையில் கிரியை.

சரியையில் யோகம்.

சரியையில் ஞானம் என்னும் முதற்படி  *உருவ வழிப்பாட்டு முறையாகும்*


கிரியையில் சரியை.

கிரியையில் கிரியை.

கிரியையில் யோகம்.

கிரியையில் ஞானம் என்னும் உருவ வழிப்பாட்டு முறையாகும். *உருவக்கடவுளை தாமே தொட்டு அலங்காரம் செய்து வழிபடும் முறையாகும்.*


யோகத்தில் சரியை.

யோகத்தில் கிரியை.

யோகத்தில் யோகம்.

யோகத்தில் ஞானம்.

என்பதாகும்.உருவக்கடவுளின் நாமத்தை மந்திரங்களாக சொல்லி தனியாக அமர்ந்து *தவம்.தியானம்*

*யோகம்* போன்றவைகளைச் செய்தல் ஆகும்*.


ஞானத்தில் சரியை.

ஞானத்தில் கிரியை.

ஞானத்தில் யோகம்.

ஞானத்தில் ஞானம்.

என்பது உருவ வழிபாடு அற்று அறிவு தெளிவடைந்து உண்மை அறிந்து.உண்மை  உணர்ந்து மேலே சொல்லியுள்ள இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து. அக அனுபவத்தில் *கடவுள் ஒளியாக உள்ளார்* என்பதை அறிந்து

அருளைப் பெறும் வழியாகும்.


*வள்ளலார் பாடல்* 


*சரியைநிலை நான்கும்* *ஒரு கிரியை நிலை நான்கும்*

*தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்*


உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்

ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மைநிலை பெற்றேன்


அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்


பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்

பெற்றேன் இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! 


மேலே கண்ட நான்கு நிலைகளையும் அருள் ஒளியால் ஒன்று ஒன்றாய் அறிந்தேன்.அதற்குமேல் உண்மை நிலை அறிந்தேன்.


வேதாந்தம்.

சித்தாந்தம்.

போகாந்தம்

யோகாந்தம் நாதாந்தம்

கலாந்தம் 

என்னும் ஆறு அந்தங்களையும் அறிந்தேன்.

 

*அதற்கு அப்பால் நின்று ஓங்கும் பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இறவாமை உற்றேன் என்கிறார்*.


இவ்வளவு பெரிய நிலையை அடைந்தால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும் என்கிறார். 


மேலும் ஒரு பாடல் ! 


சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்


புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்


பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்


உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்.! 


மேலே கண்ட வழிகளில் சென்றால் முக்திதான் கிடைக்கும்.எமக்கு சித்திதான் வேண்டும். எமக்கு  நேர்வழியைக் காட்ட வேண்டும் என்கிறார். முத்தி என்பது முன்னுறு சாதனம்.சித்தி என்பது நிலைசேர்ந்த அனுபவம்.என்பார்.


*நேர்வழியைக் காட்டுகிறார் வள்ளலார்*.


மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் சித்தி பெறுவதற்கு முன்பாக உள்ளே இருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து இடைவிடாது ஆராதியுங்கள் என்று   சொல்லிவிட்டு.


ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால்.உங்களுடைய நேரத்தை வீணில் கழிக்காமல்.


ஞானசரியை  ( மரணம் இல்லாப் பெருவாழ்வு) என்னும் தலைப்பில் உள்ள 28. பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி தெய்வ பாவனையை இந்த தீபத்தில் செய்யுங்கள் என்று இறுதியாக ஒரு வாக்குமூலத்தை அறிவிக்கின்றார்.


*கொடியேற்றி பேருபதேசம் (மகாஉபதேசம்) செய்கின்ற போது*

ஒரு செய்தியைச் சொல்லுகின்றார்.


சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய *ஞானத்தில் யோகம்*  செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.


இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள் என்கிறார்.


மேலே குறிப்பிட்டது ஞானத்தில் ஞான யோகம் என்னும் மூன்றாவதுபடி என்கிறார்.ஞானயோகம் என்பது ஆன்மாவைத் தொடர்பு கொண்டு அக அனபவத்தை பெறுவதாகும்.


*சுத்த சன்மார்க்கத்திற்கு இரண்டே படிகள்  தான். ஒன்று ஜீவகாருண்யம். ஒன்று சத்விசாரம் என்பதாகும்*


*சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள்*


 இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.


அவற்றுள் *இந்திரிய ஒழுக்கம் என்பது* *ஜீவகாருண்யம் ஞானசரியை குறிப்பதாகும்*


ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் உடனாக விளங்கும் அதனால் உபகார சக்தி விளங்கும்.


*ஜீவ காருண்ய ஒழுக்கம் சன்மார்க்கம் என்று அறிய வேண்டும்*.


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்*.


* *இந்திரிய ஒழுக்கம்*


நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றி யிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும். 


 இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், *உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல்* மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.


*கரண ஒழுக்கம் என்பது* - *ஞான கிரியை என்பதாகும்*  அதாவது *சத் விசாரத்தை குறிப்பதாகும்.*


 சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், 


பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.


*ஜீவ ஒழுக்கம் என்பது* - *ஞானத்தில் யோகம் என்பதாகும்.*


எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் 

.

*ஆன்ம ஒழுக்கம்* *என்பது ஞானத்தில் ஞானம் என்பதாகும்*


எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்தும் இரங்கி, *ஆன்மாவே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும்* கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.!


இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே *இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம்* என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; 

ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா. ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.


எனவே ஞானசரியை என்னும்  தலைப்பில் உள்ள 28 பாடல்களில் கண்டுள்ளபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.


அதில் உள்ள முதல் பாடலே மிகவும் அரிய பெரிய பாடலாகும்.


நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து ஊற்றெழுங் கண்ணீர் அதனால் உடம்பு


நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று


வனைந்து வனைந்து ஏத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்


புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.! 


என்றும் இறுதியாக 28 ஆவது பாடல்..


சார்உலக வாதனையைத் தவிர்த்தவர் உள் ளகத்தே

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை


நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி


ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை

எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை


ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்

உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!  


எல்லோருக்கும் புரியும் வகையில் சாதாரண எளிய தமிழில் பதிவு செய்துள்ளார்.


இயற்கை உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !  


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896

புதன், 16 செப்டம்பர், 2020

ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் !

 *ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்.*


பக்தியை குறை சொல்லும் நோக்கம் அல்ல.சிந்திக்கவும்.


திருவண்ணாமலை கோயிலில் பக்தி என்னும் பெயரால் அங்குள்ள *நந்தி சிலைக்கு* ஆயிரம் லிட்டர் பால் மற்றும் பல திரவியங்கள் ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள். அதேபோல் எல்லா ஆலயங்களிலும் அபிஷேகம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளன.


இன்று கொரோனோ சூழ்நிலையில் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் *வறுமையில் வாடும் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் சிரமப்படுகிறார்கள். மரணம் அடைந்து கொண்டுள்ளார்கள்*.


பேசாத தெய்வங்களுக்கு வீண் விரயம் செய்யும் உணவுப் பொருள்களை *பேசும் தெய்வங்களான ஏழை எளிய மக்களுக்கு உதவிசெய்தால் அளவுகடந்த புண்ணியங்கள் வந்து சேரும்* என்பது வள்ளலார் வாக்கு.


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்*. *உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு  என்றும்*. *ஜீவகாருண்மே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும்*  வள்ளலார் அழுத்தமாக சொல்கிறார்.


வள்ளலார் பாடல் ! 


வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே 


*வீடு தோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்*


*நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேருறக் கண்டு உளம் துடித்தேன்*


*ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்* ! 


என்கிறார் வள்ளலார்.


வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்


பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப் பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டிஉள் இருந்தால்


*பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர்*


எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோற் கிளைத்தீர் எத்துனை கொள்கின்றீர் பித்துலகிரே ! 


இதுபோல் நூற்றுக்கணக்கான பாடல்களின் வாயிலாக விழிப்புணர்வை மக்களுக்கு போதிக்கின்றார்.


சிந்தித்து செயல்பட்டால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு வழிகிடைக்கும்.


*பக்தியின் பெயரால் பொருள்களை விரயம் செய்யாமல் மக்களுக்கு பயன்படும் வகையில் செய்வதே அறிவுசார்ந்த ஆன்மீகமாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அனபுடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் மாற்றிக் கொண்டார் !

 *அருட்பெருஞ்ஜோதி இடம் மாற்றிக் கொண்டார்*.!


வள்ளல்பெருமான் பல தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்து அத்தெய்வங்கள் பெயரால் பல ஆயிரம் பாடல்களை இயற்றியும் பாடியும் வந்துள்ளார்.இறுதியாக *உண்மைக் கடவுள் ஒருவர் உள்ளார்* *அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்பதை தமது அருள் அறிவால் அகத்தில் உள்ள ஆன்ம அறிவின் வழியாக அறிந்து கொள்கிறார்.


அகத்தில் அறிந்த ஆன்மாவின் இயற்கை உண்மை கடவுளின் தன்மையை *இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம்* என்னும் தகுதியை உடையது என்பதை அறிந்து

அவற்றிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பெயர் சூட்டுகின்றார். 

அக் கடவுளின்  உண்மையை புறத்தில் காட்ட வேண்டும் என்பதற்காக வடலூர் மக்களிடம்  சுமார் 80 காணி இடம் பெற்று வடலூரில் *சத்திய ஞான சபையை* *18-7-1872 ஆம் ஆண்டு தோற்றுவிக்கின்றார்*


*சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்*

*சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்*

*நித்திய ஞான நிறையமு துண்டனன்*

*நிந்தை உலகியற் சந்தையை விண்டனன்* ! அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே.என்றும்


*சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி!* 


அனுபவத்தை பாடல்கள் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வடலூர் பெருவெளியில் 1871 ஆம் ஆண்டு தொடங்கி 1872 இல்  சத்திய ஞானசபையை பூர்த்தி செய்கின்றார்.


*சத்திய ஞானசபை செயல்பாடுகள் பற்றிய விதிமுறைகளைப் பற்றி சன்மார்க்க அன்பர்களுக்கு தெரியப்படுத்துகின்றார்*.


18-7-1872 ஆம் ஆண்டு  வள்ளலார் வெளியிட்ட *ஞானசபை விளக்க விபவ பத்திரிகை!*


அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் ! 


இன்று தொடங்கி சபைக்கு *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்* சாலைக்கு *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* என்றும் *சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்.


*இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்* ஞான சபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். 


(மேலே கண்ட வாக்கியத்தை ஊன்றி கவனிக்க வேண்டும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும் வள்ளலார் சொல்லியவாறு செயல்பட வேண்டும் என்பது பொருள். )


பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலே ஏற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரணசுத்தி உடையவர்களாய் திரு வாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி 12 பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது. 72 எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது *உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில்  வைத்து வரச் செய்வித்தல் வேண்டும்*

 

*நான்கு நாளைக்கு ஒருவிசை* காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும்.


தூசு துடைப்பிக்க புகும்போது *நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து முட்டிக்கால் இட்டுக்கொண்டு தூசு துடைப்பிக்கச் செய்விக்க வேண்டும்*. *விளக்கு வைக்கின்ற போதும் இங்கனமே செய்விக்க வேண்டும்*.


விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற 12. பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவரும்.72.எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் *பொருள். இடம். போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய்  தெய்வ நினைப்பு உடையவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும்*.


விளக்கு வைக்கும்போதும் தூசு துடைக்கும்போதும்.

*நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும்*.


*யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது.ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருக்கப்படாது.*

அத் திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தான காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.


தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன்.


இங்கனம்

சிதம்பரம் இராமலிங்கம்.


என்று கையொப்பம் இட்டு  தெரிவிக்கின்றார்..


மேற்குறித்தபடி ஞானசபையில் உட்புற வாயில்களுக்குச் சபீபங்களில் வைத்து வரச் சொன்னாரேத் தவிர.சபையின்  மத்தியில் வைக்க சொல்லவில்லை. 


இந்த செயல்பாடுகள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ்ஜோதி சித்தி வெளிப்படும் வரைக்கும் இவ்வாறு செய்து வரவேண்டும் என்று வள்ளலார்  கட்டளை இடுகின்றார்.


*வள்ளலார் சொல்லியப்படி  ஒருவரும்  பின்பற்றவில்லை. கடைபிடிக்கவில்லை. ஆதலால் கோபமாக வெளியில் சொல்லாமல் சத்திய ஞானசபையை பூட்டிக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிடுகின்றார்*


வடலூரில் தைப்பூச ஜோதிதரிசனம் வள்ளலார் காட்டவும்இல்லை.

காட்ட சொல்லவும் இல்லை. பின்னாளில்  சமய மதம் சார்ந்த ஆடூர் சபாபதி குருக்கள் அவர்கள் வேட்டவலம் ஜமீன்தார் மற்றும் சில அன்பர்கள் துணைக் கொண்டு.  சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோதமாய் தைப்பூச ஜோதிதரிசனம் காட்டும் பழக்கம் உருவானதாகும்.அது இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.


இந்த உண்மைக்கு புறம்பான பழக்க வழக்கங்கள் சுத்த சன்மார்க்கிகளால் அருள் உண்டாகும் காலத்தில்  மாற்றம் உண்டாகும் காலம் வந்தே தீரும்.இது ஆண்டவர் கட்டளை.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் விருப்பத்தை மாற்றிக் கொண்டார்*.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்பபடி சத்திய ஞானசபைக்குள் வள்ளலார் சென்று அருட்பெருஞ்ஜோதி யுடன் கலந்து இருக்க வேண்டும். 


இதற்கு மேட்டுகுப்பத்தில் சன்மார்க்க  கொடியேற்றி பேருபதேசம் செய்யும் தொடக்கத்திலேயே  கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்.


*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள்.*


 *இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள்*.


இதனுடைய விளக்கம் என்னவென்றால்.? 


சாலைக்கு போகும் என்பது வடலூர் சத்திய தருமச்சாலை அருகில் உள்ள ஞானசபையை குறிப்பதாகும்.

இதுவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை என்று பேருபதேசத்தை நிறைவு செய்கிறார்.


1865 ஆம் ஆண்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தொடங்கியது.


23--5--1867 சத்திய தருமச்சாலை தொடங்கியத்.


18-7-1872 ஆம் நாள் ஞானசபை வழிபாட்டு விதி விபரம்  வெளியிட்டது..சங்கம் சாலை சபை பெயர் மாற்றம் செய்த்து.


25-11-1872 ஆம் நாள் சத்திய ஞானசபை விளம்பர பத்திரிகை வெளியிட்டது.


22-10-1873.ஆம் நாள் கொடி ஏற்றி உபதேசம் செய்த்து.


30-1-1874 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு சித்தி பெற்றது.


*இடையில் நடந்தது என்ன ?*


25-1-1872 ஆம் ஆண்டு சத்திய ஞானசபை முதற்பூசை தொடங்கியதாக திருஅருட்பாவில் எழுதி வைத்துள்ளார்கள்.


(முதற்பூசை என்பது முன்னுக்குபின் முரண்பாடாக உள்ளது. அவற்றைப்பற்றி பிறகு சிந்திப்போம்.)


வள்ளல் பெருமான் பேருபதேசத்தில் சொல்லியவாறு பத்து நாட்கள் கழித்து ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் தங்கி இருக்கும் இடமான மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் வந்து அமர்ந்து கொண்டார்.


*ஞானதீப விளக்கம் என்னும்*

தலைப்பில் 


ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து தடைபடாது ஆராதியுங்கள்.


இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம்.இனி கொஞ்சகாலம் எல்லோரும்.ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் உங்களுடைய காலத்தை வீணே கழிக்காமல்.


நினைந்து நினைந்து  என்னும் தொடக்கம் உடைய *ஞானசரியை 28 பாசுரங்கள் அடங்கிய பாடலிற் கண்டபடி* தெய்வப் பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் .


நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.


*ஸ்ரீமுக வருடம் தைமாதம் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் மரணம் வெளியிட்டவை..*


நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறுவீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.

என்னைக் காட்டிக்கொடார்.


சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.

நாம் திருக்கதவை மூடியிருக்கும்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார். என்று அன்பர்களுக்குத்  தெரியப்படுத்துகின்றார்.


மேலும் இதற்கு ஆதாரமான சத்திய அறிவிப்பு என்னும் தலைப்பில் 4 நான்கு பாடல்களை பதிவுசெய்கின்றார்.


1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை


மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன்


துய்யன் அருட் பெருஞ்சோதி துரிய நடநாதன்

சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க


வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே

மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.! 


2. தனித்தலைமைப் பெரும்பதி என் தந்தை வருகின்ற

தருணம் இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்


இனித்த நறுங் கனிபோன்றே என்னுளம் தித்திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற


மனித்தஉடம்பு இதைஅழியா வாய்மை 

உடம்பாக்கி

மன்னிய சித் தெல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே


கனித்த சிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே

களித்திட வைத் திடுகின்ற காலையும் இங்கிதுவே.!


3. சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!


4. என்சாமி எனதுதுரை என்உயிர் 

நாயகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில் அமர் கின்றார்


பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்


தன்சாதி உடைய பெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம் சத்தியமே


மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின் தனக்கே

வெளியாகும் இரண்டரை 

நாழிகை கடந்த போதே.!


 இத்திருப்பாட்டின் கீழ்  *சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை* என அடிகளால் எழுதப்பெற்றுள்ளது.

 இத்திருப்பாட்டின் கீழ் *இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துளேன்* என அடிகளால் எழுதப்பெற்றுள்ளது.


வள்ளல் பெருமான் சத்திய ஞானசபையின் உள் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து இருக்க வேண்டியது. வள்ளல்பெருமான் இருக்கும் இடத்திற்கே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து கலந்து கொண்டது உலகின் பெரிய அதிசயம் அற்புதமாகும்.


*வள்ளலார் பாடல்*! 


ஐயுறேல் இதுநம் ஆணை நம் மகனே

அருள்ஒளித் திருவை நின் தனக்கே


மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்

விரைந்து இரண் டரைக்கடி கையிலே


கையற வனைத்தும் தவிர்ந்து நீ மிகவும்

களிப்பொடு மங்கலக் கோலம்


வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக

என்றனர் மன்றிறை யவரே.!


#6-103 ஆறாம் திருமுறை / தலைவி கூறல்


ஐயர் எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை

யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்


பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே

புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்


மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்

மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே


தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம் சத்தியமே.!


இந்த உண்மை சம்பவம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் வள்ளல் பெருமானுக்கும் மட்டுமே தெரியும்.வேறு எவருக்கும் தெரியாது இது சத்தியம் என்கிறார்.


எது எப்படியோ வள்ளல் பெருமான் உலகிற்கு போதித்த சுத்த சன்மார்க்க கொள்கையானது.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று சுத்த பிரணவ ஞானதேகத்தோடு பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழவேண்டும் என்பதேயாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

9865939896.