கருணை உள்ளவன் கடவுள் ஆகலாம்!
*கருணை உள்ளவன் கடவுள் ஆகலாம்!*
எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே! ( அகவல்)
*அளவிடமுடியாத பலகோடி உலகங்களையும் பலகோடி அண்டங்களையும் தோற்றுவித்தும். விளக்கம்செய்வித்தும். துரிசுநீக்குவித்தும். பக்குவம்வருவித்தும். பலன்தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உள்ளார் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை ஐயம் திரிபு மயக்கம் இல்லாமல் அறிந்து கொண்டேன்.*
*கற்பனைக்கதைகளைச் சொல்லாமல் கடவுளின் உண்மையை மக்களுக்கு நேரடியாக உள்ளதை உள்ளபடி தெரிவித்தவர் வள்ளலார் ஒருவரே !*
*அந்த உண்மைக்கடவுளை அறிந்து தெரிந்து கொள்வதற்கும் தொடர்பு கொள்வதற்கும் கருணைத்தான் முக்கிய சாதனமாகும் அதுவே கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் நேரடியான பாலமாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்*
கருணை இல்லாமல் செய்யப்படுகின்ற சரியை கிரியை யோகம் போன்ற சாதனங்களால் சாதனைகள் செய்து உடம்பை வருத்தி கெடுத்து பல வருடங்களாக காடு மலை குகைகளில் சென்று பக்தி தவம் தியானம் யோகம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் செய்வதால் எக்காலத்திலும் கடவுளைக் காணமுடியாது அருளைப் பெறமுடியாது.
கருணை ஒன்றினால் மட்டுமே உயர்ந்த அருள் அறிவான ஞானத்தை பெற்று கடவுளைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக்கள் தன்னைத்தானே உண்டாகும்.
வள்ளலார் பாடல்!
கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
காடு மேடு
உழன்று உளம் மெலிந் தந்தோ
வருண நின்புடை வந்து நிற் கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
அருணன் என்றெனை அகற்றிடுவாயேல்
ஐயவோ துணை அறிந்திலன் இதுவே
தருணம் எற்ப அருள்வாய் வடல் அரசே
சத்தியச்சபைத் தனிபெரும் பதியே.!
மேலும் வள்ளலார் கடவுளிடம் வேண்டுதல் !
கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும் வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண்எந்தாய்.!
கடவுளைத் தெரிந்து கொள்வதற்கும் அருளைப் பெறுவதற்கும் கடவுளின் புகழை உலக மக்களுக்கு தெரிவிக்கவும் கடவுளால் படைத்தை உயிர்களுக்கு எந்தவிதமான துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம் உண்டாக்காமல் அனைத்து உயிர்களிடத்தும் உண்மையான அன்பு செலுத்தி மகிழ்ச்சி அடையச் செய்விக்க வேண்டும் அதற்கு கருணைதான் முக்கியம் சாதனம் என்பதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் எனவே என்னை கருணை நன்முயற்சியில் செல்ல வழிகாட்ட வேண்டும் அதுவே எனது இச்சையாகும் (விருப்பம்) என்கிறார்.
*ஒவ்வொருவரும் தன்னைப் படைத்த கடவுளை தெரிந்து கொள்வதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கடவுளால் கொடுக்கப்பட்டுஉள்ளதாகும்*
கடவுளின் பெருமையும் தரத்தையும் கீழே கண்ட பாடலில் தெரிவிக்கின்றார்.
*வள்ளலார் பாடல்!*
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!
*மேலே கண்ட பாடலில் எளிய தமிழில் எதார்த்தமாக புரியும்படி தெளிபடுத்துகிறார். கடவுள் யார்! என்பதையும் மனித தேகத்தில் எவ்வாறு விளங்குகின்றார் என்பதையும் தெரியப்படுத்துகிறார். அவர் *தாயாகவும் தந்தையாகவும் நமது சிரநடு சிற்சபையில் தனித்து விளங்கும் ஆன்ம ஒளியின் உள் ஒளியாக நிலைபெற்று அருள் நடம்புரியும் கருணை நிதிக் கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் அவர்தான் தன்னிகர் இல்லாத தனித்தலைமை பெரும்பதியாகும் அவரே தனிப்பெருங்கருணை உள்ள கடவுளாகும்.*
*அக்கருணை உள்ள கடவுளை தொடர்பு கொள்வதற்கு கருணைதான் முக்கியம்.* *கருணையைத் தொடர்பு கொள்ள கருணையினால் மட்டுமே முடியும் என்னும் உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.*
*வள்ளலார் பாடல்!*
கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுக மற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.!
*கருணை நெறி செல்லாமல் வேறு எந்த நெறியில் சென்றாலும் அது இருள் நெறி என்பதை அறிந்து மனம் கலங்கினேன் மேலும் மாயையால் கலங்கி வருந்தியபோதும் சிறுநெறியில் சென்றபோதும் சிறுநெறி பிடித்ததில்லை அருள் நெறியையே தேடினேன் அருள் நெறியே பிடித்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்*
கருணையும்
சிவமும் பொருள் எனக் காணும் காட்சியைக் கண்டேன் என்கிறார். கருணையும் சிவமும் ஒன்றே என்கிறார்.சிவம் என்பது ஆலய வழிபாட்டில் உள்ள சிவன் என்னும் சிலைஉருவம் அல்ல. இங்கே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையே சிவம் என்கிறார் மேலும் சுத்தசிவம் என்று புரிய வைக்கிறார்.
*சிவன்* என்றால் உருவத்தை குறிக்கும்.*சிவம்* என்றால் ஒளியை குறிக்கும்.
*ஜீவகாருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும். அன்பு உண்டானால் தயவு உண்டாகும். தயவு உண்டானால் கருணை உண்டாகும். கருணை உண்டானால் அருள் உண்டாகும். அருள் உண்டானால் மரணத்தை வெல்லலாம். மரணத்தை வென்றால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்*
*கருணை என்னும் ஞானத்தை பெறுவதற்கு ஜீவகாருண்யமே முதற்படியாகும்.*
*கடவுளைத் தொடர்பு கொள்வதற்கு இடைவிடாத நன்முயற்சி என்னும் சத்விசாரம் கடைசிபடியாகும்.*
கருணை அடைவதற்கு இந்த இரண்டு படிகளும் மிகவும் முக்கியமாகும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு