செவ்வாய், 25 ஜூலை, 2023

சுத்த சன்மார்க்கம்!

 *சுத்த சன்மார்க்கம்!*


*அருட்பெருஞ்ஜோதி* 

*அருட்பெருஞ்ஜோதி* 

*தனிப்பெருங்கருணை* 

*அருட்பெருஞ்ஜோதி* 


*உலகில் உள்ள சமய மதங்களில் அனைத்திலும் சன்மார்க்கம் என்பது பொதுவான வார்த்தையாகப் பயன் படுத்தி உள்ளார்கள்*


*சன்மார்க்கம் என்றால் உயர்ந்தது என்று பொருள்படும்,எல்லாவற்றுக்கும் உயர்ந்தது வள்ளலார் வெளிப்படுத்தியமார்க்கம் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்னும் பொது மார்க்கமாகும் அவற்றை சுருக்கி சுத்த சன்மார்க்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது.*


*சுத்த சன்மார்க்கத்திற்கு என தனிக் கொள்கைகளை வகுத்து தந்துள்ளார் வள்ளல்பெருமான்*


*சுத்த சன்மார்க்க கொள்கைகள்!*


1,கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! அவரை உண்மை அன்பால் ஒளி(ஜோதி) வடிவில் வழிபட வேண்டும் !


2, சிறு தெய்வ வழிபாடு கூடாது!


3, தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது! 


4, புலால் உண்ணல் ஆகாது !


5, சாதி,சமயம் முதலிய எவ்வகை வேறுபாடுகளும் கூடாது !


6,எவ்வுயிரையும்  தம் உயிர்போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கைகொள்ளல் வேண்டும்! 


 7, ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய சீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் !


8,வேதம்,ஆகமம்,புராணங்களும்,இதிகாசங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாது !


9, இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது ! 


10,கருமாதி,திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்!


11, கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம் ! 


11, மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்! 


12, அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு, ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !( உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு ) 


13,எவ்வகையிலும்  உயிர்கொலை செய்யக் கூடாது ! புலால் உண்ணல் ஆகாது !


14, எதிலும் பொது நோக்கம்  வேண்டும்!


*முதலியவை சுத்த்சன்மார்க்க கொள்கைகள்*

**வள்ளலார் உரைநடைப் பகுதியில் சுத்த சன்மார்க்கம் பற்றி தெளிவாகப் பதிவு செய்துள்ளார்*!


*சுத்த சன்மார்க்கப் பெரு நெறி ஒழுக்கம் நான்கு வகைப்படும் அவை*


1,இந்திரிய ஒழுக்கம் 

2,கரண ஒழுக்கம்

3,ஜீவ ஒழுக்கம்

4, ஆன்ம ஒழுக்கம்

என்பதாகும்*


*இந்த ஒழுக்கத்தினால் நாம பெறும் புருஷார்த்தங்கள் நான்கு வகைப்படும்*


இந்திரிய ஒழுக்கத்தால் சாகாக்கல்வி கற்க வேண்டும்!


கரண ஒழுக்கத்தால் தத்துவங்களை நிக்கிரகம் செய்ய வேண்டும்!


ஜீவ ஒழுக்கத்தால் ஏமசித்தி பெற வேண்டும் ! 


ஆன்ம ஒழுக்கத்தால்  கடவுள் நிலை அறிந்து அம்மயதால்  வேண்டும் !


*இந்திரிய,கரண,ஜீவ, ஆன்ம ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே இறைவன் பூரண அருளைப் பெற முடியும்,*  *அருளைப் பெற்றால் மட்டுமே பஞ்ச பூதகாரிய உடம்பானது அருளினால்  கரைந்து கரைந்து ஒளி உடம்பாக மாற்றம் அடையும்* 


*ஒளி உடம்பு பெற்றவர்கள் மட்டுமே மரணத்தை வென்று  கடவுள் நிலை அறிந்து அம்மயமாவார்கள் என்பதுவே,வள்ளல்பெருமான் வகுத்து தந்த சுத்த சன்மார்க்கத்தின் அழுத்தமான கொள்கையாகும்*


*வள்ளலார் பாடல்!*


ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க

ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்

பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்

அருட்பெருஞ் சோதி அது.! 


என்கிறார் மேலும்....


ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்


தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே


நானே அழியா வாழ்வுடையேன் 

நானே நின்பால் வளர்கின்றேன்


தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.! 


*மேலே கண்ட பாடலில் தான் அனுபவித்த அனுபவத்தை வெளிப்படுத்துகின்றார்*


*நித்திய தேகம் என்னும் அருள் தேக வாழ்வே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்*

 

*சமய மதங்களில் சொல்லிய கடவுள் கொள்கைகள் யாவும் பிறப்பு அறுக்கும் நிலையேயாகும்,வள்ளலார் அவற்றை மறுக்கின்றார்.இறப்பை ஒழித்தால்தான் பிறப்பை ஒழிக்க முடியும்,*


*வள்ளலார் சொல்லிய சுத்தசன்மார்க்க கொள்கை  ஒன்றே பிறப்பு இறப்பு என்னும் தொடர் சங்கிலியை துண்டித்து  நித்திய சத்திய பேரின்ப சித்திப் பெருவாழ்வே மரணமிலாப் பெருவாழ்வு என்னும் சாத்திய நிலையாகும்*

  


 *திருஅருட்பா உரைநடைப் பகுதி,* 


 *சுத்தசன்மார்க்கம் என்பது யாதெனில் ?* 


*சுத்தம் என்பது ஒன்றும் அல்லாதது.*


 *சுத்தம் என்ற வார்த்தை சன்மார்க்கம் என்பதிற்கு பூர்வம் (முன்பு) வந்ததால்,* 


 *எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலாகிய வேதம் கூறுகின்ற* 

*தாசமார்க்கம்,* 

*சற்புத்திர மார்க்கம்,* 

*சகமார்க்கம்,* 

*சன்மார்க்கம்* என்ற சமய

 மத மார்க்கங்களில் ,* *நான்காவது மார்க்கத்தின் அனுபவமாகிய சன்மார்க்கத்திற்கு முன்னர் சுத்தம் என்பது சேர்ந்து சுத்த சன்மார்க்கம் என்று வந்ததினால் ,* 

*மேற்கூறிய சமயமத சன்மார்க்கங்களின் அனுபவங்களைக் கடந்தது சுத்தசன்மார்க்கம் என்பதாகும்.*


 *ஆகலில் இதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் மார்க்கம் என்பதாகும்*   


 *சத் என்றால் அனேக தாத்பரியங்களை(உட்பொருள்)கொண்ட ஒரு குழூஉக்குறிப் பெயராகும்* .


*மார்க்கம் என்பது துவாரம் அல்லது வழியென்பதாகும்.*ஆகலில்,* 

 *சத்மார்க்கம் என்பது ,* *சத்தென்னும் மெய்ப்பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம் என்பதாகும்.* 


 *ஆகையால்,* *எவ்வகையிலும் சுத்தசன்மார்க்கமே உயர்வுடையதாகும்.* 


 *திருவருட்பா உரைநடை பக்கம்,* 

     *பரிபாஷையும் சுத்தசன்மார்க்கமும்*!

 

*சமயமதங்களின் பரிபாஷைகளாகிய அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி,  ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம் ,சோகம்  முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அசஷர தத்துவ பவுதிக முதலிய யாவுமே பரிபாஷைகளேயாகும்.* 


 *மேற்குறித்த வண்ணம் ஜபம்செய்தும், தியானம் செய்தும், அர்ச்சனை செய்தும், உபாசனை செய்தும், சமாதி செய்தும், சுவாசத்தை அடக்கியும்,* *விரதமிருந்தும் இவை போன்ற வேறுவகையில் தொழிற்பட்டும் பிரயாசையெடுப்பது (முயற்சி மேற்கொள்வது) வியர்த்தமாகும்.(பயனற்றதும் பொருளற்றதுமாகும்).* 


*ஆகலில் எவ்வகையிலும் சுத்தசன்மார்க்கமே சிறந்ததாகும்.* 

 *பாவனாதீதாதீதம்,* *குணாதீதாதீதம்,* *வாச்சியாதீதாதீதம்,* *லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்தசன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனிவரும் சுத்தசன்மார்க்க காலத்தில் திருவருளால் வெளிப்படும்* 

     

*சமய மத மார்க்கங்கள் எல்லாம் சுத்தசன்மார்க்கத்திற்கு  கீழ்படிகள்*     

            


 *சாத்திய நிலை!* 

 

*சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும்.* 

 *என்றும் சாகாத நிலையைப் பெற்று எல்லாவற்றையும் செய்யவல்ல சர்வ சித்தி வல்லபத்தையும் பெறக்கூடும்* 


 *இப்பொழுது நீங்கள் பிடித்துள்ள மற்றையச் சமய மத மார்க்கங்களெல்லாம் மேலான சுத்தசன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்படிகளாதலால் ,* *அவற்றில் ஐக்கியம் என்பதே இல்லை (ஒருமை என்பதே இல்லை);* 


 *தாயுமானவர் முதலானவர்கூட சுத்தசன்மார்க்கிகள் அல்லர்;* 

 *மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு கூறலாம் என்கின்றார் வள்ளலார்* 


 *ஏனென்றால் சமய மத சன்மார்க்கத்தில் நித்தியதேகம் கிடையாது . ஏமசித்தியும் தேகசித்தியும் மட்டுமே கைகூடும்,ஞானசித்தி கைகூடாது.* 

 

*ஆகவே, இது சாதகத்திற்குரிய மார்க்கமேயன்றிச் சாத்தியத்திற்குரிய மார்க்கம் அல்ல என்று தெளிவாகச் சொல்லுகின்றார்* 


 *நாளை சுத்தசன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீண்டும் வருவார்கள் .முன்பு இருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்களாய் வருவார்கள்.* 

 

*அப்பொழுது சாத்தியர்களாய் இறைவனுடன் இரண்டறக் கலப்பார்கள*   *என்கின்றார் , வள்ளற் பெருமான் ,*


*சமய மத சன்மார்க்கங்களின் அனுபவநிலைகள் யாவும், சுத்தசன்மார்க்கத்தின் அனுபவ நிலைகளுக்கு  கீழ்படிகளே ஆகும்,* 

 *அவற்றில் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை நிலை அறியாமையால் அவற்றில்  ஐக்கியம் என்பது இல்லாமல் போயிற்று.*


*சமய மதங்களில் தத்துவக் கடவுள்களையே  வழிப்பட்டு பின்பற்றி வாழ்ந்து வருவதால் உண்மை அறிவு விளக்கம் தோன்றாமல் மறைக்கப்பட்டு விட்டது* 


*வள்ளலார் பாடல்!*


தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்

தத்துவா தீதமேல் நிலையில்


சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்


ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம் என்று


அத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


என்றும் மேலும்...


தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்


சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா


சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே


ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.! 


என்னும் பாடல் வரிகள் வழியாகச் சொல்கின்றார்


 *தத்துவம் கடந்த இயற்கை உண்மைக் கடவுளைக் கண்டு வெளிப்படுத்தியது  சுத்தசன்மார்க்கம் ஒன்றிற்கே சாத்தியமாகும்* 


 *ஆகலில் சமய மதங்களை முறிறிலும் கைவிட்டு, சுத்தசன்மார்க்க நெறி ஒன்றையே கடைபிடித்து அதில்கூறியுள்ளவாறு ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழ்ந்து நித்தியதேக அனுபவத்தைப் பெறுவதே சுத்தசன்மார்க்க கொள்கையாகும்* 


*என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்றே வள்ளலார் தெளிவுபட சொல்லி உள்ளார்*


*சுத்த சன்மார்க்க ஒன்றே சாதி சமயம்,மதங்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை பெற்றதாகும்*


*வள்ளலார் பாடல்ல்!*


ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே

ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்


பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்

பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்


அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி

அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே


இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி

என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.!


தொடரும்...


அன்புடன் ஆன்மநேயன்

முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

இருளும் ஒளியும் !

 இருளும் ஒளியும்!


இருள் வரும்போது ஒளி மறைகிறது!

ஒளி வரும்போது இருள் மறைகிறது!


இருளில் உயிர்கள் தோன்றுகிறது !


ஒளியில் உயிர்கள் வாழ்கிறது !


இருளும் ஒளியும் கலந்ததே இவ்உலகம் !


இருளும் ஒளியும் நெருங்காதவனே ஞானி !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் 

ஈரோடு கதிர் வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896

தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்!

 *தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் !*   


             *நமது மனத்தினால்  எண்ணங்களினால் உலக இன்பத்தில்  வாழ்ந்த வாழ்க்கை பதிவுகள் அனைத்தும் ஆன்மாவில் பதிந்துள்ளது. அந்த அசுத்த குப்பைகள் யாவும் ஆன்மாவில் பதிவாகி ஆனமாவை தெரிய வொட்டாமல் மறைத்துக் கொண்டு இருப்பதே அசுத்த காரிய மாயா திரைகள் என்னும் அஞ்ஞான திரைகள் என்பதாகும்* 


*மனத்தால்  எண்ணங்களினால் பதிவான அசுத்த பதிவுகளான குப்பைகளை அகற்றி  சுத்தமான மனத்தையும் சுத்த எண்ணங்களையும்  உருவாக்குவதற்கு நாம் தினமும்  ஆன்மாவில் மனத்தை செலுத்தி தொடர்பு கொள்வதே தியானம் என்பதாகும்*...


*ஆனால் நாம் அவ்வாறு செய்கிறோமா என்றால் இல்லை என்பதே விடையாகும்.*

*புற வழிபாட்டில் தொடர்ந்து அலைந்து கொண்டே இருக்கிறோம்*


*ஒரே மனமானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது ஒன்று அகத்திலும் ஒன்று புறத்திலும் செயல் படுகிறது*


*புறத்தில் செல்லும் மனம், அசுத்த  எண்ணங்களினால் விகாரமான குணங்களைக் கொண்டு மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற அசுத்த குப்பைகள் ஆன்மாவில் நிறைந்துள்ளது. புறத்தில் செல்லும் அதே மனத்தை அகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியை இடைவிடாமல் தொடர்பு கொண்டால் அங்கே சுத்த உஷ்ணம் உண்டாகும், அந்த சுத்த உஷ்ணத்தினால் அசுத்த குப்பைகளை  அகற்றி விடலாம் அதாவது கரைத்து விடலாம்.*


*எவ்வாறு என்றால் ஆன்மாவில் இருந்து சுரக்கும் இறை ஆற்றல் எனும் அருள் என்ற சக்தியால் மட்டுமே அசுத்த மாயா திரைகளைக் கரைக்க முடியும்.*


*ஆதலால் புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் உள்ள ஆன்மாவை இடைவிடாது தொடர்பு கொள்வதே யோகம் என்பதாகும்.* 


*அகத்தில் உள்ள ஆன்மாவில் இடைவிடாமல் மனத்தை செலுத்தும் போது ஒரு மயக்க நிலை உண்டாகும் ஆழ்ந்த மயக்க நிலை வரும்போது விழிப்புநிலை குறைந்து தூக்கம் வந்துவிடும்,தூக்கம் வராமல் விழிப்பு நிலைக்கு கொண்டு செல்வதே ஞான யோகம் என்பதாகும்*.


*நீங்கள் விழித்துக் கொண்டு இருக்கும் போது மனம் அடங்கி எண்ணங்கள் மறைந்து குணங்கள் மறைந்து சுழித்தி நிலைக்கு வர வேண்டும்*..


*எண்ணங்கள் மறைந்து குணங்கள் மறைந்த*

*அதே நேரத்தில் விழிப்புணர்வு இல்லாமல்* *சுழுத்தி நிலை இல்லாமல்  இருந்தால் தன்னை மறந்த ஆழ்ந்த தூக்கம் என்பதாகும்*


  *அதே சமயத்தில் நீங்கள் தூக்கத்தை அடக்கி ஜீவ உணர்வோடு விழிப்புணர்வுடன் தூங்காமல முழு ஓய்வில் இருப்பது ஞானயோகம்..*


*இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே ஆன்ம இன்ப லாபம் பெறும் நிலையாகும்.* 


*ஆன்ம இன்ப லாபத்தைப் பெறும் சூழல் வரும் போது தூக்கம் மயக்கம் சுழுத்தி துரியம் துரியாதீதம் போன்ற நிலைகள் எல்லாம் கடந்து ஆன்ம விழிப்புடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடரபு கொள்வதே தூங்காமல் தூங்கி சுகம் பெறும் நிலையாகும*


   **இந்த நிலையில்  அண்ட பிண்ட பிரபஞ்ச ரகசியங்கள் யாவும் நமது அகக் கண்ணான நெற்றிக் கண்ணில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.*



*தன்னைத்தான் அறிந்து தன்னில் தானாயிருப்பதுதான்*

*சும்மாயிருப்பது,* *இதைத்தான் சுகமாயிருப்பதே சுகம் என்பார் வள்ளலார் !*


*நினைப்பு மறைப்பு, பிறப்பு இறப்பு, இரவு பகல் எதுவும் இல்லாததே, சுத்த மெய்ஞானம் ஞானம்,சுத்த மெய் அறிவு என்பதாகும்*

  

*எப்போதும் சத்து பெற்று சித்தி அடைந்து பேரின்ப லாபம் என்னும் நித்திய ஆனந்தமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்*


*வள்ளலார் பாடல்!*


தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது

துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ


ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்

என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி


ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி

என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே


ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்

ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.! 


மேலும்.....


தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை


நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே


வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்


தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.!


மேலும்.....


தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே

ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - 


ஆக்கமிகத்

தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க

வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.!


*என்னும் பாடல்கள் வாயிலாக அனுபவித்து தெரியப்படுத்துகிறார் வள்ளல்பெருமான் அவர்கள்*


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* *இயங்கிக் கொண்டு இருக்கும்* *ஆன்மாவில் மனத்தை இடைவிடாது* *செலுத்தி விழிப்பு நிலையில் இருப்பதே தூங்காமல் தூங்கி சுகம் பெறும் நிலையாகும்*


*அவ்வாறு இருந்தோமானால் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே எந்நேரமும்  தோன்றா துணையாக இருந்து நம்மைக் காப்பாற்றுவார்!*


*நாம் அடைய வேண்டுவது ஆன்ம இன்ப லாபம் என்பதாகும்*


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வியாழன், 13 ஜூலை, 2023

மாநாட்டு வாழ்த்து மடல் !

 *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்தி நெறி மாநாட்டு வாழ்த்து மடல்!*


*ஆன்மநேய அன்புடையீர் வந்தனம்..*


*மலேசியா நாட்டில் 09-09-2023 முதல் 10-09-2023 வரை இரண்டு நாட்கள், திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற 200 வது ஆண்டை முன்னிட்டு முதலாவது உலக அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்திநெறி மாநாடு, "மலாயா பல்கலைக்கழக துங்கு வேந்தர் மண்டபத்தில்" மிகவும் சீரும் சிறப்புடனும் நடை பெற உள்ளது* 


*இந்த மாபெரும் மாநாடு சிறப்புடன் நடைபெறுவதற்காக ஒரு வருட காலமாக இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து வருபவர் மாநாட்டுத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருள்திரு இந்துபாபா அவர்களுக்கும்,அவருக்கு உற்ற துணையாக எல்லா வகையிலும் பெரிய அளவில் பொறுப்பு ஏற்று மகிழ்ச்சியோடு கடினமாக உழைத்து வருபவர்,உலக மாநாட்டு ஏற்பாட்டுக் குழு செயலாளர், அன்பு சகோதரி அருள்திரு திருமதி ,வனிதா திருமலை அவர்களையும்,மற்றும் மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் நெஞ்சார்ந்த உளமார்ந்த அக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்*


*குறிப்பு..இந்து பாபா அவர்கள் திருஅருட்பிரகாச வள்ளலார் கொள்கையில் மிகுந்த அளவற்ற ஈடுபாடு கொண்டவர், 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2023 வரை தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகளும் ஆண்டு விழாக்களும், ஜீவகாருண்ய தொண்டும் இடைவிடாது மிகச் சிறப்புடன் பணியாற்றி செய்து நடத்தி வருகிறார்கள்* 


*மேலும் "அருட்பெருஞ்ஜோதி குழந்தைகள் கருணை இல்லம்" என்ற பெயரில் ஆதரவு அற்ற ஏழை குழந்தைகளை தங்கள் பெற்ற குழந்தைகள் போல் பாவித்து  பாதுகாத்து படிக்கவைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியும் மற்றும்  திருமணம் காலங்களில் திருமணம் செய்து வைத்தும்,அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் "புத்தோங்,ஈப்போ பேராக் மலேசியா" என்னும் இடத்தில் கருணை இல்லத்தை அருள்திரு இந்து பாபா அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்,அவர்களுக்கு உற்ற துணையாக அருள்திருமதி வனிதா திருமலை அவர்கள் பொருளாலும் உழைப்பாலும் தொண்டு செய்து வருகிறார்கள்*


*அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை !*


*மலேசிய நாட்டில்,"பெக்கான் கர்ணி(சிம்பாங் தீகா) சித்தியவான் பேராக்",என்னும் இடத்தில் பல் கோடி செலவில் மிகவும் அழகிய தோற்றத்தில் பிரமாண்டமான "அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை" தோற்றுவித்தள்ளார்கள்*


*14-12-2019 முதல் 15-12-2019 ஆகிய இருநாட்களில் சபை நன்நீராட்டு விழாவும் சன்மார்க்க சான்றோர்களின் சொற்பொழிவும் மற்றும் திருஅருட்பா இசை நிகழ்ச்சி,நாடகம் நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் ஜீவகாருண்ய தொண்டும் மிகச் சிறப்பாக செய்து சபை திறப்பு விழா  நடைபெற்றது, அந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் *ஈரோடு கதிர்வேல் ஆகிய அடியேனும்  கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றியது மகிழ்ச்சியான தருணமாகும்*


*உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி போற்றும் அளவிற்கு *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்திநெறி மாநாடு* *வெற்றிபெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்புரிவார். மாநாடு சிறப்புடன் நடைபெற வாழ்த்தி வணங்குகின்றோம்*


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

ஞாயிறு, 9 ஜூலை, 2023

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்டிய பக்தி நெறி !

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்டிய பக்தி நெறி !*


*பகதி என்பது மனிதர்கள் இறைவனை தொடர்பு கொள்ளும் பாலமாக இருப்பதே பக்தி என்பதாகும், இவை உலகில் உள்ள எல்லா ஆன்மீகத்திற்கும் பொதுவான வார்த்தையாகும். மற்றும் எல்லா சாதி சமயம் மதங்களுக்கும் பொதுவான கடவுள் வழிபாடே பக்தி என்பதாகும்* 


*பக்தி நான்கு வகை்படும் !*


*நம் அருளாளர்கள் பக்தியை நான்கு வகையாக பிரித்து வைத்துள்ளார்கள் அவை* 1,சரியை 2,கிரியை 3,யோகம் 4,ஞானம் 

*என்பனவாகும்,இவற்றில் நான்கிலும் நான்கு நான்கு படித்தரங்கள் உண்டு*


1,*அவை சரியையில் சரியை,சரியையில் கிரியை,சரியையில்யோகம்,சரியையில் ஞானம்!*


2,*கிரியையில் சரியை,கிரியையில் கிரியை,கிரியையில் யோகம்,கிரியையில் ஞானம்!* 


3,*யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை,யோகத்தில் யோகம்,யோகத்தில் ஞானம் !*


4,*ஞானத்தில் சரியை,ஞானத்தில் கிரியை,ஞானத்தில் யோகம்,ஞானத்தில் ஞானம் !*


*இந்த 16 படிகளிலும் பக்தி வைத்து, பயிற்சி செய்து  கடந்து இறைவனைத் தொடர்பு கொண்டால் இறைவன் அருளை வழங்குவார், அருளைப் பெற்று முக்தி அடையலாம் என்பது சமயம் மதக் கொள்கைகளாகும்*


*சுத்த சன்மார்க்கத்தில் பக்தி கொள்கை !*


*மேலே கண்ட 16 படிநிலைகளில் ஞானசரியையில் தொடங்கி ஞானகிரியை,*ஞானயோகம்,ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு படிநிலைகளில் பக்தியோடு பயிற்சி *போதுமானதாகும் என்கிறார் *,அந்த பயிற்சிக்குப் பெயர்தான் சாகாக்கல்வி என்பதாகும்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரிடம் எளிய முறையில் அருளைப் பெறும் பக்தி நெறியைப்பற்றி விளக்குகின்றார். வள்ளலார் தான் பெற்ற அனுபவத்தைஉலக மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்*


*வள்ளலார் பாடல்!*


*பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்*


*சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்*


*நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை*


*ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.!*


*என்னும் பாடல் வாயிலாக என் போல் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஆன்ம இன்ப லாபம் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்கிறார்* 


*வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கியது  சித்தி என்பதாகும்*


*முக்தி என்பது வேறு ! சித்தி என்பதுவேறு!*


*முகதி என்பது சாதனம்! சித்தி என்பது சாத்தியம்!*


*வள்ளலார் அகவல்!*


முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்

அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி!


சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்

அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி ! 


*என்னும் அகவல் வரிகளில் வேறுபட்ட ஆன்மீக நிலைகளை மக்களிடம் சொல்லி தெளிவுபடுத்தி புதிய சுத்த சன்மார்க்க பக்திக் கொள்கைகளை  ஆன்மாவில் பதிய வைக்கிறார்* 


*அருள் பெறுவது எவ்வாறு ?*


*அருள் பெறும் புதிய எளிமையான வழிகளை மக்களுக்கு சொல்லுகின்றார்*


*அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.*


*அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது?*


*நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.*


*அத் தன்மையான அருள் பிண்ட அண்டத்தில் எவ்வண்ணமாய் விளங்குகின்றது?* 


*காண்பார் காணுமிடம் காணப்படுமிடம், அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம், தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம், சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம், அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம், கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம், முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம், கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம் முதலியவாய் விளங்கும்.*


*இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன?* 


*புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம்.*


*நன்மை தீமை என்பவை யாவை?*


*நன்மை தீமை யென்பவை புண்ணிய பாவம்.*

 *புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.*


*புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன?* 


*மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும்.*


*மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும்.* 


*அவையாவன:-?*


*மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் - இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள்.*


*வாக்கினால் பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.*


 *தேகத்தினால் பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள்.*


*இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்*


*பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள்*

 *அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்*


*அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்?* 


*அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், "நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாக்ஷிண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!" என்று பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களை யடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச்சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வதுமன்றி; யாத்திரையாதிய மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென்று வசித்து, இயன்ற அளவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும்*


*மேலும், சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ளவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தால் நீங்கும். மகான்கள் நேரிடாத பக்ஷத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைந்து சிரநடு சிற்சபையில் மனதை நிறுத்தி, இடைவிடாமல்  சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.*


*அறியாத பாவங்கள் யாவெனில்,?*


*நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் நேரிடும் பாவங்களாம். இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும். இவைகள் யாவும் தினஞ் செய்யுஞ் ஜபத்தாலும், பாராயணத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், விருந்துபசரித்தலாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.*


*பிராயச்சித்த முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களாலடையுங் கதி யென்ன?*


*மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும். வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும். தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.*


*வேதாந்திகள் "பாவம் முதலிய கருமங்களும், புண்ணியம் முதலிய ஏதுக்களும் நமக்கில்லை, நாம் சர்வசாக்ஷி" என்கின்றார்களே -அஃதென்ன?*


 *தேகவாசனை, இந்திரியவாசனை, கரணவாசனை, பிராணவாயுவின் செயற்கையிலுண்டாகும் வேறுபாடு முதலிய நன்மைகளில் சலிப்பற்று ஆகாரம், நித்திரை, பயம் முதலியவைகளில் தாம் சலித்தும் சோர்ந்தும் திடுக்கிட்டும் இல்லாமல், நிவாததீபம் போல் விளங்கும் ஜீவன் முத்தர்கள் சமூகத்தில் பாவ கிருத்தியங்கள் நடவா; புண்ணியங்களும், பிரயோஜனம் பற்றிச் செய்யார்கள்; பொன்னும் ஓடும் சரியாகக் காண்பார்கள்.* 


*அத் தன்மையுடைய நித்திய முத்த சுத்த ஞான தேக சித்தர்கட்குப் பாவ புண்ணியமில்லையென்று அவர்கள் சொல்ல வேண்டியதில்லை; நமக்கே தெரியும்.*


*மேலும், அவர்கள் இந்தப் பவுதிக சரீரத்தில் வசித்தாலும், சரீரமாகிய தத்துவ தாத்விகங்கள் இப்போது நமக்கு அசுத்த தேகமாயும் அசுத்தப் பொறியாயும் அசுத்தக் கரணமாயும் அசுத்த அனுபவமாயும் அசுத்த அறிவாயும் இருப்பது போல் இரா. தத்தபடத்தைப் போல் காரியத்தில் இலதாயும் காரணத்தி லுளதாயும், அறிவேவடிவாய் அறிவேபொறியாய் அறிவேமனமாய் அறிவேயழகாய் அறிவேயுருவாய் அறிவேயுணர்வாய் அறிவேயனுபவமாய் அறிவேயறிவாய் விளங்கும் !* 


*மேலே கண்ட ஒழுக்க நெறிகளை  கடைபிடித்து பக்தியுடன் வாழ்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப  சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்* 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

சனி, 8 ஜூலை, 2023

வள்ளலார் அகவல்!

 *வள்ளலார் அகவல்!*


*சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில்  உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!* 


*இதற்குமேல் வருங்காலத்திலாவது பொய்யான ஜாதி சமயம் மதம் என்ற வெறி பிடித்த *பைத்தியக் காரர்கள் கொஞ்சமாவது *திருந்துவார்களா ? திருந்தியே ஆக வேண்டும், இது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சம்மதம்* 



 *மதுக் கடைகளில் தண்ணி அடிக்கும் போது ஜாதி பார்ப்பதில்லை !*


*வாய் பேசாத அப்பாவித்தனமான பாபபட்ட உயிர்களை கொன்று உண்பதில் சாதி பார்ப்பதில்லை !*

 *விலைமாதர்களிடம் தொடர்பு கொள்ளும் போது ஜாதி பார்ப்பதில்லை! மாற்றான் மனைவியை அடையும்போது சாதி பார்ப்பதில்லை !,கன்னிப்பெண்களைக் கற்பழிக்கும் போது சாதி பார்ப்பதில்லை!* 


*காதலிப்பதில் சாதி பார்ப்பதில்லை!*



 *ரத்தம் தேவைப்படும்போது ஜாதி பார்ப்பதில்லை* 


*மருத்துவத் துறையில் சாதி பார்ப்பதில்லை!* 


*சினிமாத் துறையில் சாதி பார்ப்பதில்லை!*


*உணவுப் பொருள்களில் சாதி பார்ப்பதில்லை !* 


*உணவுப்பொருள் கொடுப்பதில் வாங்குவதில் சாதி பார்ப்பதில்லை ,!*



 *பணம் தங்கம் வெள்ளி வைரம் போன்ற பொருள்களில்  ஜாதி பார்ப்பதில்லை!* 


*மண்ணாசை பெண்ணாசை பொன் ஆசை யில் சாதி பார்ப்பதில்லை!*


*வேறுபட்ட கடவுள் கொள்கையில் மட்டும் பொய்யான ஆச்சார சங்கற்ப விகற்பங்களில் மட்டும் சாதி சமயம் மதங்களில் வேறுபட்ட பேதம் பார்ப்பது ஏன்?மேலும் பொய்யான வேதம்,ஆகமம்,புராணம் இதிகாசம்,சாத்திரம்,வருணம் ஆசிரமம் போன்றவற்றில் மட்டும் சாதி வேறுபாடு பார்ப்பது ஏன்!*


*ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மை அறிந்து தெரிந்து புரிந்து உணர்ந்தால் சாதி சமயம் மதம் என்ற பொய்யான, கொடூரமான பைத்தியக்காரத் தனமான வேறுபாடுகள் ஒழிந்துவிடும்*

 *இனிமேலாவது உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் போலியான, பொய்யான வாழ்க்கை வாழாமல் இந்த உலகத்தின் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் எல்லா உயிர்களையும் ஒன்றுபோல் நேசிப்போம். ஜாதி சமயம் மதம் என்ற பெயரால் செல்லரித்துக் கொண்டிருக்கும் இந்தக் *கரையான்கள் விரைவாக அழிந்துவிடும்,அழித்து விடும் காலம் நெருங்கி கொண்டு இருக்கின்றது!* 


*இனி வருங்கால தலைமுறையினர்களின் தெளிவான அறிவால்,தெளிவான சிந்தனையால், ஜீவகாருண்ய ஒழுக்கத்தால்,பொய்யான சாதி சமயம் மதங்கள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து மறைந்து விடு்ம்* 


*வள்ளலாரின் உண்மைக் கொள்கையான சமரச சுத்த சன்மார்க்க சத்திய கொள்கை ஒன்றே,,பொய்யான சாதி சமயம் மதங்களை இருக்கும் இடம் தெரியாமல் ஒழிக்கும் அழிக்கும் வல்லமை உடையதாகும்*


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!* 


*எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் பல் வேறுபட்ட வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்வற்றின் பல்வகை வேறுபட்ட மூட நம்பிக்கைகளின் கடவுள் கொள்கையே காரண காரியமாகும்!*


*மேலே கண்ட உண்மையை அறிந்து,தெரிந்து உணர்ந்து வாழ்ந்தால் மக்களைத் தொற்றி கொண்டு இருக்கும் சாதிவெறி, சமயவெறி, மதவெறி இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்*


*மக்கள் ஏற்றத் தாழ்வு அற்ற ஒத்தாரும் உயர்ந்தாரும்,தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தும் காலம் வந்தே தீரும்,*


*வள்ளலார் பாடல்!*


ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் *பொய்உலகை நம்பாதீர்* - 


வாடாதீர்

*சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து* இனி இங்கு

என் மார்க்கமும் *ஒன்றாமே !*


*பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்றில் ஆடும் ஐயரைக் கண்டேன்* என்கிறார் வள்ளலார்...


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*