ஆன்மா உயிர் உடம்பு !
*ஆன்மா உயிர் உடம்பு !*
*ஆன்மா உயிர் உடம்பு இவை மூன்றும் இணைந்து வாழ்வதே மனித தேகமாகும்.*
*இவை போன்றே தாவரம்,ஊர்வன,பறப்பன, நடப்பன, அசுரர், தேவர் முதலிய எல்லா உயிர் இனங்களுக்கும் பொதுவான படைப்பு முறையாகும்*
*எல்லா ஆன்மாக்களின் எல்லா உயிர்களின் இவ்வுலக வாழ்க்கை தத்துவமே ஆன்மா உயிர் உடம்பு இணைப்பாகும்*
*தாவரம் முதல் மனிததேகம் வரை உடம்பை விட்டு ஆன்மா உயிர் பிரிவதால், ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் வேறு வேறு உடம்பை எடுத்துக் கொண்டு வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.*
*ஆன்மா !*
*ஆன்மா இவ்வுலகிற்கு வரும்போது உயிர் உடம்பு இல்லாமல் ஆணவத்தின் துணைக் கொண்டு வந்தது.இங்கு வந்த ஆன்மா உயிர் உடம்பு எடுத்து எடுத்து வாழ்ந்து வாழ்ந்து இறுதியாக மனிததேகம் எடுத்துள்ளது.*
*மனித தேகம் எடுத்த ஆன்மாவிற்கு உயர்ந்த அறிவு வழங்கப் படுகிறது, பேசும் திறன், சிந்திக்கும் திறன், செயல்படும் திறன்,தன்னை அறியும் திறன் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் வழங்கப்பட்டு உள்ளன.*
*மனித வாழ்க்கையில் உயர்ந்த அறிவைக் கொண்டு அறம்,பொருள்,இன்பம் வீடூ என்கின்ற நான்கையும் நான்கு காலங்களில் அனுபவித்து பின்பு பற்று அற்று இறைவனைத் தொடர்பு கொண்டு அருள் பெற வேண்டும் என்பதே மனித வாழ்க்கையின் ஆன்மாக்களின் முடிந்த முடிவாகும்*
*சமயம் மதங்கள்!*
*இறைவனுடன் தொடர்பு கொண்டு அருள்பெற்று இறைவனுடன் ஐக்கியமாவதே ஆன்மாவின் இறுதியான வாழ்க்கை என்பதை சமயங்கள் மதங்களைச் சார்ந்த ஆன்மீக அருளாளர்களும் சொல்லியுள்ளார்கள்,அதற்காக ஆலயங்கள், மசூதிகள்,சர்ச்சு போன்ற கட்டிடங்களை தோற்றுவித்து சரியை, கிரியை போன்ற வழிப்பாட்டு முறைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.சரியை,கிரியை யோகத்தினால் அடையும் லாபம் முக்தி நிலையோடு நின்று விடுகின்றது. அதற்குமேல் சென்று அருள் பூரணத்தை பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் சித்தி நிலையைப் பெற வேண்டும். சமய மதவாதிகளால் மேல் நிலைக்கு செல்ல முடியவில்லைஎன்பதே உண்மையாகும்.*
*முத்தி நிலை பெற்றவர்களுக்கு மீண்டும் பிறப்புண்டு*
*சித்தி நிலை பெற்றவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை*
*முத்தி என்பது முன்னுறு சாதனம்*
*சித்தி என்பது நிலை சேர்ந்த்து நிலை சேர்ந்த அனுபவம்*
முத்தி சாதனம்,
சித்தி சாத்தியம் என்பார் வள்ளலார்.
*வள்ளலார்.!*
*சமயங்கள் மதங்கள் சார்ந்த கொள்கைகளை வள்ளலார் ஏற்றுக் கொள்ளவில்லை. சாதியும் மதமும் சமயமும் பொய் என்றார். முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றார் கலை உரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக வேண்டும் என்று ஆணை யிடுகின்றார்*
*ஆன்மாக்களுக்கும் உயிர்களுக்கும் துன்பம் கொடுக்கும் ஆட்சி அதிகாரங்களை சாடுகின்றார்*
*வள்ளலார் பாடல்!*
கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
*அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க -*
தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து.!
மேலும்
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் *சுத்தசன் மார்க்கம்*
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.!
என்னும் பாடல்கள் மிகவும் முக்கியமானதாகும்
*ஆன்மாக்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு மிகவும் துணையாக இருந்த ஆணவம் உயிர் உடம்பு என்னும் கருவிகளை அழித்துவிட்டு, கழட்டிவிட்டு விட்டு இறைவனிடம் செல்வதற்கு இறைவன் அருள் வழங்கமாட்டார் என்பதை அறிவுள்ளவர்கள் சிந்தித்து யோசிக்க வேண்டும்*
*வாடகை வீடு !
*ஆன்மாக்கள் உயிர் எடுத்து இவ்வுலகில் குடியிருந்து வாழ்வதற்கு பஞ்சபூத அணுக்களைக்கொண்டு மாயையால் கட்டிக்கொடுக்கப்பட்ட உயர்ந்த அழகான "வாடகை வீடுதான் உடம்பாகும்." வாடகை வீட்டை அழித்துவிட்டு இறைவனுடன் செல்ல மாயை அனுமதி வழங்காது. இறைவனும் அருள் வழங்க சம்மதிக்க மாட்டார். ஆதலால் வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும்.*
*ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று வாடகை வீட்டை அருள் என்னும் அழியாத நன்நிதியைக் கொடுத்து சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும்*
*அதன்பின்தான் ஆணவம் மாயை, மாமாயை, பெருமாயை, கன்மம் (கர்மவினை) என்னும் ஐந்து மலங்கள் ஆன்மாவை விட்டு விலகும் இதுவே ஆன்மாவின் தனித்த பூரண வல்லபம் என்பதாகும்*.
*வள்ளலார் பாடல்!*
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்தான் என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
*தனித்தபூ ரணவல்லபம்*
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்தெனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
*சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே*
தெய்வநட ராஜபதியே.!
மேலே கண்ட பாடல் அற்புதமான அழகு தமிழ் பாடல்*
*ஆன்மாவுடன் இறைவன் இனைய வேண்டும்!*
( *இறைவனிடம் அருள் பெற்றுத்தான் உயிர் உடம்பு உள்ளம் யாவையும் அழிக்காமல் (வேதியல் முறைப்படி) ஒளிமயமாக மாற்றினால் மட்டுமே "கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறமுடியும்".*)
*(தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என் தனி அன்பே ! திருஅகவல )*
*உயிர்உடம்பு உள்ளம் போன்ற உள் உருப்புக்கள் வெளி உருப்புக்கள் யாவும்,1,வாலணு,2,திரவவணு,3,குருவணு,4,லகுஅணு,5,அணு,6,பரமாணு, 7,விபுஅணு என்னும் ஏழுவிதமான சாதாரண அசாதாரண அணுக்களைக்கொண்டு தன்னைத்தானே இயங்கும் தன்மையுடன் கட்டிக்கொடுக்கப்பட்ட அழகான மெய் உடம்புதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாடகை வீடாகும்.*
*தனித்தனி அணுக்களாக இருந்த அனைத்து அணுக்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து, ஆன்மா வாழ்வதற்காக கட்டிக்கொடுத்து,தன்னைத் தானே இயங்கும் அழகான உடம்பாக படைத்துள்ளவர் யார் ? என்பதை தெரிந்து கொண்டால் உயிரையும் உடம்பையும் அழிக்க மனமோ துணிவோ வருமா சிந்திக்க வேண்டும் ?*
*வீட்டின் உரிமையாளர்!*
*இவ்வுலகை நிர்வாகம் செய்யும் மாயை, மாமாயை, பெருமாயை என்னும் மூன்று மாயா சத்திகளே வீட்டின் உரிமையாளர்களாகும்.*
*(இதுவே கல்வி, செல்வம், வீரம் அதாவது சரஸ்வதி, லட்சுமி,பார்வதி என்று மூன்று பெண் தெய்வங்களாக படைத்தார்கள்.)*
*ஆன்மா குடியிருந்த வாடகை வீட்டை அழித்துவிட்டு, ஆன்மா இறைவனுடன் செல்வதற்கு வீட்டின் உரிமையாளர் சம்மதிப்பாரா? இறைவன் தான் வாடகை வீட்டிற்கு அருள் வழங்குவாரா என்ற அறிவு சமய மதவாதிகளான தலைவர்களுக்குத் தெரியவில்லை தோன்றவில்லை.*
*அப்படியும் இறைவன் அருள் வழங்கினால் இறைவன் நேர்மையானவரா ? என்பதை உற்று நோக்கி சிந்திக்க வேண்டும்*
( சமய மதங்கள் இறைவனையே குற்றவாளிகளாககாட்டும் கொள்கையாகும்)
*சொந்த வீடாக மாற்ற வேண்டும்!*
*ஆன்மா வாழும் வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும் ! அதற்குண்டான விலையைக் கொடுத்து சொந்த வீடாக மாற்றும் வழியைக் கண்டுபிடித்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார்.*
*ஆன்மா வாழ்ந்து கொண்டு இருந்த அழியும் பூத உடம்பை அழியாமை ஆக்கும் வகையைக் கண்டு பிடித்தவர் வள்ளலார்.*
*ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் உளவைக் கண்டு பிடித்தவர் வள்ளலார்*
*வள்ளலார் பாடல்!*
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
*திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ*
உருக்கிஅமு தூற்றெடுத்தே *உடம்பு உயிரோடு உளமும்*
*ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அரு ளாயோ*
கருக்கருதாத் தனிவடிவோய் *நின்னை என்னுட் கலந்தே*
*கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய் யாயோ*
செருக்கருதா தவர்க்கு அருளும் சித்திபுரத் தரசே
சித்த சிகா மணியே என் திருநடநா யகனே.!
என்னும் பாடலில் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.
*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் செங்கோல் ஆட்சி செய்யும் இடத்தை அறியாமை அஞ்ஞானம், என்னும் ஏழு திரைகளால் ஆன்மாவை மறைத்து கொண்டு உள்ளன.*
*திரை மறைப்பை எல்லாம் நீக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவுருவைத் தொடர்பு கொள்ள வேண்டும்*
*அழியும் வாடகை உடம்பாகிய ஊன் உடம்பை அழியாமல் பாதுகாக்க வேண்டுமா னால்,சொந்த வீடாக மாற்ற வேண்டுமானால். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு துணைக் கொண்டு அருளைப் பெற்று அருளின் சுத்த உஷ்ணத்தினால் அழிக்காமல் திரைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்*,
*ஊன் உடம்பை முழுவதுமாக உருக்கி உயிர், உடம்பு, உளம் யாவையும் ஒளிமயமாக ஆக்கி ஆன்ம உணர்ச்சியை ஆன்ம நெகிழ்ச்சியை ஆன்ம மகிழ்ச்சியான ஆன்ம இன்ப லாபத்தையும்,ஆன்ம பூரண அருள் இன்பத்தையும் இனைத்து சுத்த பிரணவ ஞான தேகமாக மாற்ற வேண்டும், அதற்கு அருள் தேகம்,ஒளிதேகம்,ஞானதேகம் என்று பெயர்.*
*மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட அசுத்த பூதகாரிய தேகத்தை, சுத்த பூதகாரிய தேகமாக மாற்றி, சுத்த தேகத்தையும் பின் மாற்று குறையாத சுத்த பசும் பொன்னாகிய சுத்த பிரணவ தேகத்தையும்,மாற்று இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாத சுத்த பிரணவ ஞான தேகத்தையும் பெற்றால் மட்டுமே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடையமுடியும்.*
*மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட பஞ்சபூத அணுக்கள் அடங்கிய பொருட்களின் கலவையால் கட்டிக்கொடுக்கப்பட்ட வாடகை வீட்டை,விலை மதிப்பில்லா அருள் என்னும் விலை கொடுத்து,ஆன்மா சொந்த வீடாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் மாயையின் தடையில்லா சான்று வழங்கப்படும்.மாயையே ஆசீர்வதித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கப்படும்*
*வள்ளலார் பாடல்!*
*சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு--சித்தெனும் ஓர்
ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான விளையாட்டு இயற்றத்தான்!*
*ஆன்மா உயிர் உடம்பு பிரியாமல் இருக்க இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டலரைத் தொடர்பு கொண்டு ஊன உடம்பை ஒளி உடம்பாகிய அருள் தேகமாக மாற்றி வாழ்வாங்கு வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும். இதுவே சாகாக்கல்வி கற்கும் முறையாகும்*
*வள்ளலார் பாடல்!*
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
அடைந்திடுமின் *அகவடிவிங் கனகவடி வாகிப்*
பொன்புடை நன் கொளிர் ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியே சிற் சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!
மேலே கண்ட பாடல்களை ஊன்றி படிக்கவும் அதிலே உண்மைகள் நிறைந்துள்ளது
*வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்கம் மரணத்தை வெல்லும் மார்க்கமாகும்*
தொடரும்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896