ஞான மருந்து !
*ஞான மருந்து!*
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பார்கள்.
*உடம்பில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் மருந்தை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் சித்தர்கள்*
*சித்தர்கள் கண்டுபிடித்ததால் அதற்கு சித்த மருத்துவம் என்று பெயர் சூட்டப்பட்டது*.
அதன் பின்பு பல மருத்துவங்கள் தோன்றின.ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்துள்ளார்கள்.
விஞ்ஞான அறிவியல் அணு ஆராய்ச்சிகள் மூலமாக மனித உடம்பில் ஏற்படும் பிரச்சனைக்களை கண்டுபிடித்து அவற்றிற்கு தகுந்த மருந்துகளை ஊசிகள் மூலமாகவும் மாத்திரைகள் மூலமாகவும் கொடுத்து நோய்களை தீர்த்து வந்தார்கள்.
*உடம்பில் சிலபாகங்கள் பழுது அடைந்துவிட்டால் அவற்றை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றி மீண்டும் உருப்புகளை பொருத்தியும் இணைத்தும் குணமாக்கி வருகிறார்கள்* அதற்கு ஆங்கில மருத்துவம் என்றும் அலோபதி மருத்துவம் என்றும் சொல்லப்படுகிறது
*மனித உடம்பில் ஏற்படும் உடற்பிணியை தவிர்க்கும் மருந்தை கண்டுபிடித்தார்களேத் தவிர உயிரைக் காப்பாற்றும் மருந்தை கண்டுபிடித்தவர்கள் உலகில் ஒருவரும் இல்லை.( வள்ளலாரைத்தவிர)*
ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்!
*உடம்பின் பிணிகளை போக்க இவ்வுலகில் உள்ள பொருள்களைக் கொண்டு தயாரிக்கலாம்*.
*ஆனால் உயிர்ப்பிணியைப் போக்க இவ்வுலகில் மருந்து இல்லை*
*மனித உடம்பையும் உயிரையும் படைத்த ஆண்டவருக்கு உயிரைப் பாதுகாக்கும் வழித் தெரியாமலா படைத்திருப்பார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்*.
*வள்ளலார் பாடல் !*
உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉலகீரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!
மேலே கண்ட பாடலில் தெளிவாகச்சொல்லுகிறார்.
*உடம்பு வந்த வழியும் உயிர் வந்தவழியும் தெரியாமல் உடலைப் பருக்கவைக்கும் உணவு வகைகளை உட்கொண்டு அற்ப சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் தூங்குவதற்கு தெரிந்து கொண்டு உள்ளீர்கள்*.
மேலும் *மனத்தை தன்வசமாக வசப்படுத்தி மாற்றத் தெரியால் மனம் எனும் பேய்குரங்கின் துணைக் கொண்டு பொய்யுலகின் வாழ்க்கையிலே அலைந்து அலைந்து திரிந்து திரிந்து இன்பமும் துன்பமும் பின் தொடர்ந்து வருவதை எண்ணி எண்ணி இளைத்து இறுதியில் உயிரைக் காப்பாற்ற முடியாமல் மரணம் என்னும் பெரும்பிணி பெரும்பாவி வந்து இறந்து இறந்து பிறந்து பிறந்து அடுத்த பிறவி என்ன என்பதே தெரியாமலும். ஆன்மாவின் முடிவு என்ன என்பதே தெரியாமலும் வாழ்ந்து விருகிறோம்*
*ஞான மருந்து*!
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆன்மாவை இவ்வுலகிற்கு அனுப்பும் போதே ஆன்மாவின் சிற்றணுவின் உள்ளே அருள் என்னும் ஞானமருந்தை நிறைப்பித்து தான் அனுப்பி வைக்கிறார்.*
ஆனால் *நாம் அந்த இடத்தையோ அதில் உள்ள விலை மதிப்பில்லா ஞான பொக்கிஷத்தையோ கண்டு கொள்வதே இல்லை* வள்ளலார் *ஆன்ம சிற்சபையைக் கண்டு அதன் அப்பனைத் தொடர்புகொண்டு அனுமதிப் பெற்று அதில் உள்ள அருள்ஞான பொக்கிஷத்தை உட்கொண்டு உயிர்ப் பிணியையும் உடற் பிணியையும் நீக்கி மரணத்தை வென்று நம் ஊனக் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு சொல்லுகிறார்*.இனிமேலாவது நாம் வள்ளலார் சொல்வதைக் கேட்போமா ? அவர் காட்டிய பாதையில் செல்வோமா?
*நரை திரை பிணி மூப்பு மரணம் தானாக வருவதில்லை நாம் வாழும் தவறான வாழ்க்கை முறையினால்தான் மரணம் வருகிறது. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்பார் வள்ளலார்*
*வள்ளலார் பாடல்!*
செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
*மெய்தாவ நினைத்திடுக* சமரசசன் மார்க்கம்
மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.!
மேலே கண்ட பாடலில் *நீங்கள் அறியாமல் செய்த தீமைகள் எல்லாம் பொருத்து அருள்வான் (கருணையே வடிவமானவன்) ஆதலால் நான் சொல்வதைக் கேட்டு மெய்தாவ நினைத்திடுங்கள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்*.
*என்னை நீங்கள் திட்டினாலும் அவற்றை வாழ்த்துகளாக ஏற்றுக் கொள்வேன்*. *ஏன் என்றால்? நீங்கள் எல்லோரும் என்னுடைய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உடன் பிறப்புக்கள் என்பதால். நீங்களும் ஆன்மலாபம் அருள்லாபம் பெற்று மரணத்தை வென்று என்னைப்போல் பேரின்பலாபம் பெறவேண்டும் என்பதற்காகவே அன்புடன் சொல்கிறேன் என்கிறார்*
உடற்பிணியும் உயிர்பிணியும் நீக்கும் மருந்தை அருட்பெருஞ்ஜோதி அகவலில் சொல்லுகிறார்.
*உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி* *யனைத்தையு*
*மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே* !
*சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்*
*தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே* !
*இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்*
*சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே!*
*மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு*
*கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!*
*நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்*
*உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே!*
*என்றே யென்னினு மிளமையோ டிருக்க*
*நன்றே தருமொரு ஞானமா மருந்தே!*
*மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்*
*நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே!*
*சிற்சபை நடுவே திருநடம் புரியும்*
*அற்புத மருந்தெனு மானந்த மருந்தே!*
*நம் உடம்பின் தலைப்பாகத்தில் ஆன்மாவின் இருப்பிடமான சிற்சபையின் நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்தே அருள் ஞான மருந்தாகும்*.
*அந்த மருந்துள்ள பெட்டியைத் திறந்து அருளை எடுத்து பருகத் தெரிந்தவர் எவரோ அவரே சுத்த சன்மார்க்கி என்பவராகும்*.
*அவரேமரணத்தை வெல்லும் தகுதி பெற்றவராகும்*.
*அவனைத்தான் சாகாதவனே சன்மார்க்கி என்கின்றார்*.
*ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாகி இருப்பவர் எவரோ அவருக்கு மட்டுமே மாயா திரைகள் நீங்கப்பெற்று சிற்சபை பெட்டியின் கதவு திறக்கப்படும்* அருள் ஞான மருந்து அதில் இருந்து கிடைக்கப்பெறும். மரணத்தை வெல்ல முடியும்.
*வள்ளலார் பாடல் !*
பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்
உண்டு இது நீ
பெறுக என அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
எட்டிரண்டும் தெரியாதே என் என்கையிலே கொடுத்தீர்
இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
அரைக்கணத்துக் காயிரம் ஆ யிரங்கோடி ஆக
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.!
என்ற பாடல் வாயிலாக *பெட்டியில் உள்ள அரும்பெரும் பொருளான அருள் ஞான மருந்தைப் பற்றிச் சொல்லுகிறார்*
ஆனந்த களிப்பு என்ற தலைப்பில் ஞான மருந்தைப்பற்றி 33 பாடல்களில் தெரிவித்துள்ளார்.அவற்றை ஊன்றி படித்து பயன் பெறுங்கள்.
அதில் ஒருசில பாடல்கள்.
*எல்லாஞ்செய் வல்ல மருந்து என்னுள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து*.
*சொல்லால் அளவாம் மருந்து சுயஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி மருந்து* !
மேலும்.
*சுட்டபடாத மருந்து என்றன் தூக்கமுஞ் சோர்வுந் தொலைத்த மருந்து*
எட்டுதற் கொண்ணா மருந்து நான் எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து ! யாராலும் தொடமுடியாத மருந்து.
மற்றவர்களுக்கு கொடுக்க முடியாத மருந்து அதுவே அருள் ஞான மருந்து.
என்றும் பதிவு செய்கிறார்.
உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் ஞான மருந்து மருத்துவர்களிடத்தும் கிடைக்காது. வெளியில் எங்கு தேடினாலும் கிடைக்காது.அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே கொடுக்கப்படும் மருந்தாகும்.
*எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து!*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896