திங்கள், 25 ஜனவரி, 2021

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே !

 *வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே* !


வடலூர் வடதிசைக்கே வாருங்கள் என அனைத்துலக மக்களையும் வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார். மேலும் வடலூருக்கு வருவதோடு மற்றவர்களையும் உடன் அழைத்து வாருங்கள் என அன்பு கட்டளை பிறப்பிக்கின்றார். 


*இயற்கை உண்மையாம் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மக்களுக்கு நேரிடையாக அருள் பாலிக்கும் இடமாக தேர்வு செய்து அமைக்கப்பட்ட இடம்தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதாகும்.*


வள்ளலார் பாடல்! 


1. வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே

வந்தாற் பெறலாம்நல்ல வரமே.

2. திருவார் பொன் னம்பலத்தே செழிக்கும் குஞ் சிதபாதர்

சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார் அழைத்துவாடி.

3. சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு

தெளிந்தோர் எல் லாரும் தொண்டு செய்யப் பவுரிகொண்டு

*இந்த வெளியில் நட மிடத்துணிந் தீரே*  *அங்கே*

*இதைவிடப்* *பெருவெளி இருக்குதென் றால்இங்கே* *வருவார்*

4. இடுக்கி லாமல் இருக்க இடமுண்டு நடஞ்செய்ய

இங்கம் பலம் ஒன்று அங்கே எட்டம்பலம் உண்டைய

*ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்*

*உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை என்றுசொன்னால் வருவார்*

5. மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து

விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து

எல்லையில் இன்பந்தரவும் நல்ல சமயந்தானிது

இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது

வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே

வந்தாற் பெறலாம்நல்ல வரமே.!


மேலே கண்ட பாடலின் விளக்கத்தையும் அதில் உள்ள கருத்துக்களையும் தெரிந்து கொண்டால் உண்மை தானே விளங்கும்.


உலகில் உள்ள ஆலயங்களில் கோயில்களில் சர்சுக்களில்.

மசூதிகளில். பிரமிடுகளில் கடவுள் இருப்பதாக சொல்வது நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை நல்வழிப்படுத்த செய்யும் உபகாரச் செயலாகுமேத் தவிர உண்மை அல்ல.


கடவுள் எல்லா இடங்களில் நீக்கமற நிறைந்து இருப்பதாக சொல்பவர்கள் ஓர் இடத்தில் இருப்பதாக சொல்லுவது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வது என்பதை சிந்திக்க வேண்டும்.


*சிதம்பர ரகசியம் !*


*சிதம்பரத்தில் உருவ வழிபாடு.அரு உருவ வழிபாடு.அருவ வழிபாடு என மூன்று வழிபாடுகள் உண்டு*. 

அதில் ஒன்று

. கடவுள் உருவம் அற்றவர் ஆகாயம்போல் விளங்குகின்றவர் என்பதை குறிக்கும் வண்ணம் *சிதம்பர ரகசியம்* என்பதை ஆலயத்தின் ஒரு சிறிய சுவரில் வில்வமாலைபோல் அமைத்து திரைகளால் மறைத்து வைத்து இருப்பார்கள்.

வழிபாடு நேரத்தில் திரைகளை நீக்கி குருக்கள் ஆராதனை செய்வார். மக்கள் அவற்றைக் கண்டு களித்து வணங்குவார்வள். 


சிதம்பரத்தில் மக்கள் வந்து வழிபாடு செய்ய வணங்க இடுக்கலான குறுகிய  நெருக்கமான இடமாக உள்ளது.

 ஒரே நேரத்தில் லட்சகணக்கான மக்கள் கண்டு களிக்க முடியாத இடமாகவும் உள்ளது. *வடலூரில் 80 காணி பெருவெளி உள்ளது* அதன் மத்தியில் சத்திய ஞானசபை எட்டு கதவுகள் வைத்து எண் கோணவடிவமாக அமைக்கப் பட்டுள்ளது.கோடிக்கணக்கான மக்கள் வந்தாலும் ஒரே நேரத்தில் எங்கிருந்து பார்த்தாலும்.எட்டு அம்பலத்தின் வழியாக ஜோதி தரிசனம் சிரமம் இல்லாமல் காணும் அளவிற்கு சத்திய ஞானசபையை அமைத்துள்ளார் வள்ளலார்.தற்சமயம் அங்கு எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதே அனைவருக்கும் தெரியும்.


எட்டுப்பக்கம் இருந்து காணும் ஜோதி தரிசனம் சமய மதங்களின் வழிபாடுகள்போல் ஒருபக்கமாக காண்பிக்கப்

படுகிறது.இவற்றை எல்லாம் மாற்ற காலம் தான் பதில் சொல்லனும் அதுவரையில் காத்திருப்போம்.


அதே நேரத்தில் கடவுளின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக காட்டாமல் ஆதியிலே ஞானிகள் சித்தர்கள். மற்றும் பெரியவர்கள் என்று பெயரிட்டுக்கொண்டவர்கள் மண்ணைப்போட்டு மறைத்து வைத்து விட்டார்கள் என்பதை வள்ளலார் தெரிந்து அறிந்து அதன் உண்மையை திரை மறைப்பு இல்லாமல் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்


*குழந்தை பருவத்திலே உண்மை அறிந்தவர்* 


வள்ளலார் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போதே தாய் தந்தையருடன் சிதம்பரம் சென்று வழிபட சென்றுள்ளார்கள்.

*இறைவனால் வருவிக்க உற்ற ஏதும் அறியாத அந்த சிறுவயதில் ஞான குழந்தையான  வள்ளலாருக்கு இயற்கை உண்மையை வெளிப்படையாக இறைவன் காட்டியுள்ளார்*

*என்பதை தனது 49 ஆம் ஆண்டில் அருள்விளக்கமாலை என்னும் தலைப்பில் பாடலாக பதிவு செய்துள்ளார்*.


*பாடல்!*


தாய் முதலோரொடு சிறிய பருவமதில் தில்லைத்

தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது


வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்

வெளியாகக் காட்டிய என் மெய்உறவாம் பொருளே


காய்வகை இல் லாதுளத்தே கனிந்த நறுங்கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே


தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்புரியும்

சோதி நடத்தரசே என் சொல்லும்அணிந் தருளே.!


மேலே கண்ட பாடலில் சிதம்பர ரகசியத்தின் மறைபொருளான இறை உண்மையை  ஜோதிவடிவமாக உள்ளார் என்பதை தனக்கு வெளிப்படையாக காட்டியதாக வள்ளலார் சொல்லுகிறார்.


*வள்ளலார் தான் அகத்தில் கண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை விளக்கத்தின் உண்மையை  புறத்தில் காட்டுவதே வடலூர் சத்திய ஞானசபையாகும்.* 


*சத்திய ஞானசபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்று கொண்டனன்* என்றும்.

*சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி!* என்றும் வெளிப்படுத்துகிறார்


*வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் !*


*வடலூரில் ஜோதி  தரிசனம் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே காணவேண்டும் என்று வள்ளலார் எங்கும்  சொல்லவில்லை*.

 *எப்போது வேண்டுமானாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை* *காணபதற்கு* வடலூர்

*வரவேண்டும்* *என்பதே வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையாகும்*


*சத்திய ஞானசபை விளம்பரம் பத்திரிகையில் 25-11-1872 ஆம் ஆண்டு வெளியிட்டது.*


சுருக்கமாக பதிவு செய்கிறேன்.


*கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர்*!  என்றும்.

அவர் எல்லாம் ஆனவர் என்றும்.ஒன்றும் அல்லாதவர் என்றும்.சர்வகாருண்யர் என்றும்.எல்லாம் உடையவராய் தமக்கு ஒருவாற்றானும் ஒப்புயர்வு இல்லாத  *தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக்கடவுள் ஒருவரே* அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.


*இயற்கை உண்மைக்கடவுள்*


அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம்  அறிந்து அன்புசெய்து  அருளை அடைந்து அழிவில்லாத சத்திய சுகப்பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் .


பல்வேறு கற்பனைகளாற் பல்வேறு சமயங்களிலும்.பல்வேறு மதங்களிலும் பல்வேறு மார்க்கங்களிலும் பல்வேறு லட்சியங்களைக் கொண்டு நெடுங்காலமும் பிறந்து இறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி  இறந்து இறந்து வீண்போகின்றோம்.


இனியும் இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்.

*உண்மை அறிவு.*

*உண்மை அன்பு*.

*உண்மை இரக்கம்*


முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் எல்லாச் சமயங்களுக்கும்.

எல்லா மதங்களுக்கும்.

எல்லா மார்க்கங்களுக்கும் *உண்மைப் பொது நெறியாகி விளங்கும்* சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று.பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும்அடைந்து வாழும் பொருட்டு


*மேற்குறித்த உண்மைக்கடவுள் ஒருவரே  தாமே திருவுளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற* *ஓர் ஞானசபை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து* 


*இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகிறோம்* *என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி.அருட்பெருஞ்ஜோதியராய்  வீற்றிருக்கின்றார்.* 

*இதுதான் முக்கிய வாக்குமூலம்*!


ஆதலின் இத்தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர்களாகில் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் இன்றி  இறந்தவர் உயிர்பெற்று எழுதல்.மூப்பினர் இளமைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பு அடைவீர்கள் என்று தெளிவாக சொல்லுகின்றார்.


*சமய மதங்களின் பிடியில் சிக்கிய வடலூர்*


வள்ளலார் சொல்லியவாறு வடலூர் சங்கம். சாலை. சபை  எதுவும் முழுமையாக நடைபெறவில்லை.


இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை யிடமும். சமய மதவாதிகளிடமும். மற்றும் அரசியல்வாதிகளிடமும் வடலூர் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது. சமய மதங்களின் வழிபாடு போலவே சாதி சமய மத சடங்குகள்.மற்றும் வேடிக்கை வினோதங்கள் யாவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. 


வள்ளலார் சொல்லியவாறு அருளாளர் ஒருவர் வருவார் அவர் வந்தவுடன் எல்லாமே மாற்றி அமைக்கப்படும் அதுவரையில் பொறுமையாக மக்கள் வேடிக்கைத்தான் காணவேண்டும்

வேறு வழியில்லை.


வடலூர் சங்கம்.சாலை.சபை

எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை பின்பு தெரியப் படுத்துகிறேன்.


காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன் ! ?


அடங்குநாள் இல்லாது அமர்ந்தானை காண்பதற்கே தொடங்குநாள் நல்லதன்றோ ? 


வல்லவா எல்லாமும் வல்லானைக் காண்பதற்கே நல்லநாள் எண்ணிய நாள் ?


என்ற பல கேள்விகளை எழுப்புகின்றார் வள்ளலார்.உலகியலில் உண்மை விளக்கத்தை ஒருவரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

பின்பற்றவும் இல்லை.காரணம் எல்லவரும் சாதி சமய மதவாதிகளே.


இவைகளை எல்லாம் பார்க்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.


*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.*

*எல்லாம் திருவருள் சம்மதமே..*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வியாழன், 21 ஜனவரி, 2021

இயற்கையும் செயற்கையும்!

 *இயற்கையும் செயற்கையும்* !


*இயற்கை என்பது என்ன ? செயற்கை என்பது என்ன ? என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஆன்மாவிற்கு  உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப்பட்டது.*


*இயற்கை என்பது இரண்டு மட்டுமே*

*ஒன்று அருட்பெருஞ்ஜோதி* *ஒன்று ஆன்மா என்னும் சிற்றணு பசு என்பதாகும் மற்றவையாவும் செயற்கையாகும்*


இவ்வுலகில் உள்ள ஆகாயம். காற்று. அக்கினி. நீர். மண் போன்ற பஞ்ச பூதங்களும் மற்றும் பிரகிருதி.மாயை சூரிய சந்திர நட்சத்திரங்களும்.  மற்றும் வாலணு.திரவவணு.குருவணு.லகுவணு.அணு.பரமாணு.விபுஅணு முதலிய ஏழுவிதமான அணுக்கள் யாவும் இறைவனால் படைக்கப்பட்ட செயற்கை பொருள்களேயாகும்.நாம் இயற்கை என்று நினைப்பது யாவும் இயற்கையினால் படைக்கப்பட்ட செயற்கையே ஆகும்.இறைவன் படைக்காமல் எதுவும் தோன்றுவதில்லை.

*படைக்கப்பட்டது யாவும் செயற்கையே* *படைத்தவன் மட்டுமே இயற்கை என்பதாகும்*


இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தோற்றுவித்தல்.

விளக்கம் செய்வித்தல்.

துரிசு நீக்குவித்தல்.

பக்குவம் வருவித்தல்.

பலன் தருவித்தல் போன்ற  ஐந்தொழில் செய்பவரும் அவரே. படைத்ததிலும் இரண்டுவகை உள்ளன.உயிர் உள்ளது. உயிர் இல்லாதது. அதாவது உயிர்ப்பொருள்.

ஜடப்பொருள் என இரண்டுவகையான படைப்புக்களாகும்


*தோற்றமுள்ளது யாவும் செயற்கையாகும் தோற்றம் இல்லாதது எதுவோ அதுவே இயற்கையாகும்.அதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.*


*இறைவன் ஒருவரான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே இயற்கை உண்மை என்பவராகும்* *அவருக்கு இயற்கை உண்மை வடிவினர் என்றும் பெயர் சூட்டுகின்றார் வள்ளலார்*. *இயற்கை உண்மையில் இயற்கைவிளக்கம் என்றும் இயற்கை இன்பம் என்றும் அதனுள் அடங்கி இருக்கிறது*.


இயற்கை உண்மை வடிவினரை கண்டுபிடித்தவர் வள்ளலார்.அந்த இயற்கை உண்மையோடு ஒன்றி வாழ்ந்தவர் வள்ளலார்.இயற்கை விளக்கமான அருளைப்பெற்றவர் வள்ளலார்.இயற்கை இன்பத்தை அனுபவித்து இயற்கையோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர் வள்ளலார்.இயற்கை உண்மையைத் தொடர்புகொண்டு வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டியவர் வள்ளலார்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மையைப்பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.


இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்


செயற்கை இல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்


வியப்புற வேண் டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்


உயத்தரும் ஓர் சுத்த சிவானந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.! 


மேலும் சொல்லுகிறார்.


ஒன்றும் அலார் இரண்டும் அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும் அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்


அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் *அரும்பெருஞ்சோ தியினார்*


என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்


ஒன்றுறு தாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!


மேலே கண்ட பாடல்களில் இயற்கைக்கு தெளிவான விளக்கத்தை தந்துள்ளார்.


ஆன்மாவும் இயற்கைதான் ஆனாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளாமல் தனித்து இருக்கின்றது. ஆன்மாவானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று அதன் மயமாவதற்காகவே இந்த பஞ்சபூத  உலகம் என்னும் செயற்கை பொருட்கள் யாவும் படைக்கப்பட்டது. செயற்கையான உலகில் செயற்கையான உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று இயற்கை உண்மையான  கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே ஆன்மாவிற்கு தந்த பரிட்சையாகும்.(தேர்வு) பரிட்சையில் 100% தேர்வு பெற்ற ஆன்மாவை மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்.


*இதுதான் ஆன்மா கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்* 

 

இந்த உண்மையை மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள் அறிந்து.தெரிந்து.

புரிந்து கொண்டு வெற்றிபெறவே  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வள்ளல்பெருமான் தோற்றுவித்துள்ளார்* 


இந்த சங்கத்தில் அங்கத்தினராகி உள்ளவர்கள் இயற்கை உண்மை வடிவினரான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  அருள் பெறுவதற்காக என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை சற்று சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும். 


ஒருவர் கூட இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் இடைவிடாது தொடர்பு கொள்ளவில்லை.

*இயற்கை உண்மையைத்  தொடர்பு கொள்ள தடையாக இருப்பதையே தொடர்புகொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.*


*மரணம் என்பது இயற்கை அல்ல செயற்கை தான் மரணம் என்கிறார் வள்ளலார்* உலகில் உள்ளவை யாவும் அனைத்தும்  நிரந்தரம் இல்லாத செயற்கையான பொருட்கள்.அந்த செயற்கையான பொருட்களைத் தொடர்புகொண்டு அனுபவிப்பதால் பிணி மூப்பு அடைந்து  உடம்பும் உயிரும் இயங்கமுடியாமல் ஆன்மாவை விட்டு விலகிவிடுகிறது.  செயற்கை யான உடம்பும் உயிரும் செயற்கையுடன் சேர்ந்துவிடுகிறது.

இதுவே மரணம் என்று சொல்லப்படுகிறது. மீண்டும் ஆன்மா செயற்கையான உயிரும் உடம்பும் எடுத்து வாழ்கிறது இது தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுவருகிறது.


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இயற்கையான அருள் பெற்று மரணத்தை வெல்லமுடியும்.*


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !*


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


இந்த மனித பிறப்பு கொடுத்தது இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு  அருளைப்பெற்று செயற்கை உடம்பை இயற்கை உடம்பாக மாற்றிக்கொண்டு நித்திய வாழ்வு வாழவேண்டும். இந்த உண்மையான வழிவகையைத்  தெரிந்து கொள்ளாமல் அறிந்து கொள்ளாமல் வீணான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இறுதியில் மரணம் வந்தவுடன் அய்யோ குய்யோ முறையோ என்று அடித்துக் கொண்டு அழுவதால் எந்த பயனும் இல்லை.

*செத்த பிணங்களைப் பார்த்து சாகும்  பிணங்கள் அழுகிறது* என்கிறார் வள்ளலார். 


வள்ளலார் பாடல்! 


இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்  *இந்த உடம்பே*

*இயற்கை உடம்பாக* அருள் இன்னமுதம் அளித்தென்


புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்

பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்


பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த

பேதையர் போல் எனைநினையேல் பெரிய திருக்கதவம்


திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


உலகியலில் உள்ளவர்கள் போல் பொய்யான வாழ்க்கை வாழ்ந்து  இறந்து இறந்து பிறந்து பிறந்து வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை.அகமும் புறமும் இடைவிடாது உன்னையே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து. வேண்டி விண்ணப்பம் செய்து போற்றி  வாடுகிறேன் வாழ்கின்றேன்  ஆன்ம சிற்சபை திருக்கதவும் திறந்து அருள் அமுதம் அளித்து என்னை அணைத்துக்  கொள்ளவேண்டும் என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் முறையிட்டு வேண்டிக் கொள்கிறார் வள்ளலார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த அருள் வல்லபம்* ! 


அஞ்சலை நீ ஒரு சிறிதும் என் மகனே

அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே


துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே

சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே


விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே

விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்


தஞ்சம் என் றவர்க்கருள் சத்திய முதலே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இரவு பகல் தெரியாமல். உலகியல் பற்றை சிறிதும் உளம் பிடியாமல்.செயற்கையைத் தொடர்பு கொள்ளாமல் இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி யைத்  தொடர்பு கொண்டு  சரணாகதி அடைந்து வாழ்ந்ததால் அருள் அமுதம் பெற்றார்.


*அஞ்ஞாதே ஒருசிறிதும் என் மகனே அருட்ஜோதியை அளித்தனம் உமக்கே என்று வாழ்த்தி ஊன   உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்து. பிறப்பு இறப்பு இல்லாத அருள் உடம்பாக்கி தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* இதுவே ஆண்டவர்தந்த அருட்கொடையாகும்.


வள்ளலார் மனித உருவத்தில்  வாழ்ந்த காலத்தில் அவருடன் இருந்தவர்களும் சரி. இப்போது வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சன்மார்க்கிகள் யாராக இருந்தாலும் சரி.வள்ளலார் கொள்கையை முழுவதும் அறிந்து முழுமையாக பின்பற்றும் சன்மார்க்கிகள் ஒருவரும் இல்லை என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.


முழுமையாக பின்பற்றி இருந்து இருந்தால் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருந்து இருப்பார்கள்.

மரணத்தை வெல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.மாபெரும் ஆற்றல் மிகுந்த உயர்ந்த நிலை விஷயமாகும்.

அவ்வளவு எளிதில் பெற்றுவிடமுடியாது.


*உண்மை உணரும் காலம் வரும் !*


*சுத்த சன்மார்க்க கொள்கையின் உண்மை அறிந்து உணர்ந்து அதி தீவிர முயற்சி செய்பவர்களுக்கு  மரணத்தை வெல்லும் வாய்ப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எளிமையாக விளக்கி அருள் வழங்கி  தன்னுடன் இணைத்துக் கொள்வார்*.  


வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கம். தருமச்சாலை. சத்திய ஞானசபை. சித்திவளாகம் போன்ற அமைப்புகள் வள்ளலார் சொல்லியவாறு அறிவித்து வெளியிட்ட கட்டளைபடி இயங்கவில்லை.

அரசாங்கத்தின் பிடியிலும் சமயமதவாதிகளின் நிர்வாகத்திலும் இருப்பதால் உண்மை அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் மக்கள் தெளிவுபெற முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளார்கள். 


மற்ற ஊர்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள சன்மார்க்க சங்கங்களும் வடலூரில் உள்ளவாறு சமய மத சடங்குகளில் சிக்கி உண்மைக்கு புறம்பாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள் உண்மை உணரும் காலம் வரும் என்பதை எதிர்பார்ப்போம்.


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்!* 


*ஜீவகாருண்யம் என்றால் என்ன ? தம் உயிரைக் காப்பாற்ற மற்ற உயிர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்க வேண்டும்.அதுவே ஜீவகாருண்யம் என்பதாகும்*.


வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும் பசி. பிணி. தாகம். இச்சை. எளிமை. பயம். கொலை போன்ற ஏழுவகையான துன்பங்கள் ஆன்மாவிற்கு நேரிடுகிறது. இதில் பசியை மட்டுமே சன்மார்க்கிகள் கடைபிடிக்கிறார்கள்.அதுவும் தாம் உழைத்த உழைப்பின் வருவாயைக் கொண்டு செய்வதில்லை.மற்றவர்களின் உதவியைக் கொண்டுதான் செய்கிறார்கள்.

இதனால் மரணத்தை வெல்ல முடியுமா என்றால் கண்டிப்பாக வெல்ல முடியாது.நம்மைவிட அதிகம் பேர் கண்களுக்குத் தெரியாமல் உலகில் உள்ளவர்களின் பசியைப் போக்கி கொண்டுதான் உள்ளார்கள்.


இங்கே வள்ளலார் சொல்லுவது ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கிறார்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார்.

ஆலயங்களில் உள்ள ஜட தத்துவ  சிலைகளை வணங்குவது வழிபாடு அல்ல.ஆன்மா உயிர் உடம்பு உள்ள ஜீவன்களுக்கு உபகாரம் செய்வதே கடவுள் வழிபாடு என்னும் உண்மையைச் சொல்லி.பொய்யான ஜட தத்துவ உருவ வழிப்பாட்டை மாற்றுகிறார். மேலும் கடவுளிடம் அருளைப்பெறுவதற்கு *சத்விசாரம் பரோபகாரம்* இரண்டு மட்டுமே போதும் என்கிறார். இதில் உள்ள உண்மையை எந்த அளவு தெரிந்து பின்பற்றி வருகிறோம் என்பதை அறிவாலே அறிந்துகொள்ள வேண்டும்.


*உணவு முறைகளால் அருள் பெற வாய்ப்பில்லை.!*


உணவு வகைகளில் இரண்டு வகை உண்டு.தாவர உணவு.மாமிச உணவு.உயிரைக்கொன்று உண்பது மாமிச உணவு. காய் கனி பழம் மற்றும் கீரைவகைகள் தானியங்கள் போன்றவைகளை பச்சையாகவோ அவித்தோ உண்பது  தாவர உணவாகும்.


*இவ்வுலகில் உள்ள உணவு வகைகள் யாவும் செயற்கை உணவுகள்தான்.* *இயற்கை உணவு என்பது அருள் மட்டுமே*


மாமிச உணவு உண்பவர்களுக்கு அவரவர்கள் செய்களுக்குத் தகுந்தவாறு அடுத்து கரடி சிங்கம் புலி பாம்பு போன்ற சண்டாளப்பிறவிகள் கிடைக்கும். தாவர உணவு உண்பவர்களுக்கு அவரவர்கள் செய்கைகளுக்குத் தகுந்தவாறு அடுத்து  ஆடு மாடு மனிதன் போன்ற தேகங்கள் கிடைக்கும்.

*பாவங்கள் கூட குறைய இருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்*. மாமிச உணவு உண்பவன் ஆண்டவரை தொடர்பு கொள்ளவும் அருள் பெறவும் தகுதி அற்றவன் என்கிறார் வள்ளலார்.


*உயர்ந்த அறிவுள்ள மனிதன் உணவைவிட்டு உறக்கத்தை விட்டு படைத்தவனை இடைவிடாது தொடர்பு கொண்டு அருள் பெறுவதற்கு உண்டான தகுதியை வளர்த்து கொள்வதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகளாகும்.*

*இயற்கை உண்மை கடவுளைத் தொடரபுகொள்ள இயற்கை உணவு அவசியம்*


இயற்கை உண்மை கடவுளைத் தொடர்புகொள்ளவும் மரணத்தை வென்று மரணம் இல்லாப்பெருவாழ்வு வாழவும்  *இயற்கை உணவான அருள் உணவு பெறவேண்டும்* இயற்கை உணவான அருள்தான் இயற்கை உடம்பாக மாற்றம் அடையச் செய்யும். இயற்கையோடு இணைய வைக்கும். மற்ற உணவுகள் யாவும் செயற்கை உணவாகும்.

*செயற்கை உணவே மரணத்திற்கு இட்டுச்செல்லும்.*


*வள்ளலார் பதிவுசெய்துள்ள பாடல்!*


இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும் இந்த உடம்பே

*இயற்கைஉடம் பாக அருள் இன்னமுதம் அளித்தென்*


புறந்தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டெந் நாளும்

பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்


பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த

பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்


திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


மேலே கண்ட பாடலில் செயற்கை உடம்பை இயற்கை உடம்பாக மாற்ற அருள்அமுதம் வழங்க வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் முறையிடுகிறார் வள்ளலார் .


உலகியலில் பொய்யான வாழ்க்கை வாழ்ந்து இறந்து பிறந்து வாழ்பவர்கள் போல் என்னை நினையேல் .பெரியதிருக்கதவைத் திறந்து அருளை வழங்கி ஆட்கொள்ள வேண்டும்.எனது சிறநடு சிற்சபையில் வாழும் சித்த சிகாமணியே  என். திருநடநாயகனே என்று போற்றி புகழ்ந்து அருள் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டுள்ளார் வள்ளலார்.


செயற்கை உணவை தவிர்த்து இயற்கை உணவாகிய அருள் உணவை உண்டு மரணத்தை வென்று சுத்த பிரணவ ஞானதேகமான அருள்ஒளி தேகத்தை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வெள்ளி, 15 ஜனவரி, 2021

திருந்துவோம் திருத்துவோம் !

 *திருந்துவோம் திருத்துவோம்*! 


*திருந்தியவன் மட்டுமே மற்றவர்களை திருத்த முடியும்.*


உத்தமர் தம் உறவு கொண்டு உத்தமர் போல் வாழ்வதே ஈடுசெய்ய முடியாத இயற்கை உண்மை வாழ்க்கையாகும். *உத்தமர் தம் உறவு கொண்டு வாழ்பவரே மற்றவர்களை திருத்தும் வல்லமை பெற்றவராகும்.* 


உத்தமன் என்பது யார் எனில் *எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உத்தமன் என்பவராகும்*. 


உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும். *ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்* என்பதே வள்ளலார் வாய்மொழியாகும்.


இயற்கை உண்மை. இயற்கை விளக்கம். இயற்கை இன்பம். எதுவோ அவற்றை தொடர்பு கொண்டு  அருளைப் பெற்றவர் எவரோ அவரே மற்ற உயிர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தும் அருளாளர் என்பவராகும். *அவரே உத்தமர் தம் உறவு கொண்டவர் என்பவராகும்*.


*மெய்ப்பொருள் கண்டு தெளிந்து திருந்தி வாழ்ந்தவர் வள்ளலார். திருந்தியபடி இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டியவர் வள்ளலார். உலகில் உள்ள அனைவரையும் திருத்த வேண்டும். என்பதற்காக அன்பும் தயவும் கருணையும் அருளும் வலிமையும்  பெற்றவராக திகழ்ந்து கொண்டு இருப்பவரும் வள்ளலார் ஒருவரே*


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்லாயிரம் அருளாளர்களையும் ஞானிகளையும்.போதகர்களையும் இவ்வுலகிற்கு அனுப்பிக் கொண்டே இருப்பவர்தான் *எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்* 


ஞானிகளும் யோகிகளும். சித்தர்களும் ஏகதேச அருளைப்பெற்று  மக்களுக்காக வாழ்ந்தும் காட்டி உள்ளார்கள். உலகியலில் வாழ்வதற்காக வழிகாட்டி உள்ளார்கள். *அருள் உலகில் வாழ்வதற்கு வழிகாட்ட தவறிவிட்டார்கள்*.


உலகியலில் வாழ்வதற்கு *வழிகாட்டிய ஞானிகளும் சித்தர்களும்.போதகர்களும் மற்றும் அருளாளர்கள் அனைவரும் மக்களுக்கு உண்மையை மறைத்து.உண்மைக்கு புறம்பான வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரம் போன்ற கற்பனை கதைகளைத் தோற்றுவித்து அதன்படி வாழ்வதற்கு வழிகாட்டி உள்ளார்கள் என்பதை துணிவுடன் வெளிப்படுத்தியவர் வள்ளலார்.* 


*வள்ளலார் பேருபதேசத்தில் சொல்லியது*


*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்*. *சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்து இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் *இத் தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்கக் காலம்*


*மேலும் சொல்லுகிறார்.*


நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.  ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.* என்னும் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். 


*அவர்கள் பூட்டிய பூட்டை திறந்துவிட்டேன் இனி பூட்டமுடியாதவாறு உடைத்து விட்டேன் என்கிறார். அவர்கள் மறைத்த உண்மையை  வெளிப்படையாக சொல்லிவிட்டேன் என்கிறார்*.


*தனித்து நின்று தனிவழி காட்டியவர்* 


*உலகத்தோடு  ஒத்துபோக வேண்டும் என்ற  உலக வழக்கில் உள்ள வார்த்தையை வள்ளலார் ஏற்றுக் கொள்ளாமல்*.

தனித்து நின்று ஈடுசெய்ய முடியாத தனிவழியை உண்மையை உணர்த்தும் ஜீவகாருண்ய பொதுவழியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க* கொள்கையை தோற்றுவித்து அதன்படி வாழ்ந்தவர் வள்ளலார்.

தனியாக நின்று தனிவழியைக் காட்டி.எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களின் மீதும் இடைவிடாத அன்பும். தயவும் கருணையும் . எல்லா ஆன்மாக்களும் ஒரேத்தன்மையான ஒளித்தன்மை உடையன என்ற உண்மையையும் அருளாலே அறிந்து அன்புகாட்டி ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் உறவு கொண்டு இவ்வுலகில் தனித்து நின்று போராடி  இறை அருளைப் பூரணமாகப் பெற்று அனுபவித்து வெற்றிப்பெற்று உலகத்திற்கு உண்மை சொல்லவந்த  ஒரே ஒரு அருளாளர் வள்ளல்பெருமான் ஆவார்கள்.


*உலகினில் உயிர்களுக்கு உறும்*

 *இடை யூறெலாம்*

*விலக நீ யடைந்து* *விலக்குக மகிழ்க!*

*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை!* 


மேலே கண்ட அகவல்  வரிகளை ஊன்றி படித்து அதன் உட்பொருளை அறிந்து உணர்ந்து தெரிந்து  தெளிவுபெற்று கடைபிடித்து வாழபவனே  உயர்ந்த சிறந்த உத்தமனாகும். உயர்ந்த சிறந்த பூரண அருள் பெற்று போற்றதகுந்த மனிதனாகும். 


*இறைவன் கொடுத்த அனுமதி* !  


உலகில் அருளாளர்களால் உண்மைக்கு புறம்பான சாதி சமயம் மதங்களும் அதன் கொள்கைகளும் தோற்றுவிக்கப் பட்டது. அவற்றை இருக்கும் இடம் தெரியாமல் அகற்ற வேண்டும் *அதற்கு தகுதியான தனி நபர் நீ ஒருவர் மட்டுமே* என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு அனுமதி வழங்குகிறார். 


*பாடலை பாருங்கள்*


பேருற்ற உலகில் உறு சமயமத நெறிஎலாம்

பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்

பிள்ளைவிளை யாட்டு என உணர்ந்திடாது  உயிர்கள் பல

பேதமுற்று அங்கும் இங்கும்


போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண்

போகாதபடி விரைந்தே

புனிதமுறு சுத்த சன் மார்க்க நெறி காட்டி மெய்ப்

பொருளினை உணர்த்தி எல்லாம்


*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ*

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில் வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும் ஒளியே

நிர்க்குணானந்த பர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.! 


மேலே கண்ட பாடலின் வாயிலாக  மக்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்துகின்றார். இதில் இருந்து *நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும். திருந்த வேண்டியதும் மற்றவர்களை திருத்த வேண்டியதும் சுத்த சன்மார்க்கிகளின் முக்கிய பொறுப்பு உள்ள கடமையாகும்*


ஒரு சுத்த சன்மார்க்கியானவர்  வள்ளலார் சொல்லியுள்ள கொள்கைகளை முழுவதும் கடைபிடித்து. இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார்.மேலும் தன் உண்மை உருவத்தை நேரிலே காண்பதற்கு காட்சியும் கொடுப்பார்.


*மேலும் வள்ளலார் பாடல்*


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


எல்லா உயிர்களையும் படைத்தவர் *இறைவன் ஒருவர் தான் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து உணர்ந்து நெகிழ்ந்து எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி பேதம் இல்லாமல் வாழ்பவர்களுக்கு சாதி சமயம் மதம் போன்ற வேறுபாடுகள் தோன்றாது. *இந்த உண்மை அறிந்தவர் எவரோ அவரே  உளவு தெரிந்த உத்தமர் வித்தகர் என்பதை கண்டுகொண்டு இறைவன் அவர் உள்ளத்திலே குடியிருப்பார்*.


*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வள்ளல்பெருமான் வாழ்ந்ததால்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமான் இருக்கும் இடம் தேடி அருள் வழங்கி ஆட்கொள்ள வந்துள்ளார்*


*வள்ளலார் பாடல்*.


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்


சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை


ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! 


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.


எனக்கு மட்டும் அருள் கிடைத்தால் போதாது.என் உள்ளத்தில் உயிரில் ஆன்மாவில் கலந்தால் போதாது. *நான் மட்டும் மரணத்தை வென்றால் போதாது.என்போல் இவ்வுலகில் உள்ள ஆன்மாக்கள் அனைத்தும்  அருள்பெற்று மரணத்தை வென்று பேரின்பசித்தி பெருவாழ்வில் வாழவேண்டும் என்பதே என் உயர்ந்த  விருப்பமும் பேராசையும் யாகும் என்கிறார். எனவேதான் *என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே* என்கிறார். 


எனவே *நாம் திருந்தினால் மட்டும் போதாது மற்றவர்களையும் திருத்த வேண்டும்.இதுவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்*. *இதுவே சுயநலம் இல்லாத  பொதுநலமாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

திங்கள், 4 ஜனவரி, 2021

கடவுளும் மனிதனும் !

 *கடவுளும் மனிதனும்* !


உலகம் உயிர்கள் பொருள்கள் மற்றும் எல்லாவற்றையும் தமது அருட் சத்தியால் தோற்றுவித்தல்.வாழ்வித்தல்.குற்றம்நீக்குவித்தல்.பக்குவம் வருவித்தல். விளக்கம் செய்வித்தல் என்னும் ஜந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத்தொழில்களை நடத்துபவர் யார்? என்ற உண்மைத் தெரியாமல் மனிதகுலம் வாழ்ந்து வருவதற்கு காரண காரியமாக இருந்தவர்கள் யார் ?யார் ? என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு  மனித குலம் வாழவேண்டும்.


மனிதகுலம் கடவுளின் உண்மைத்தன்மை தெரியாமல் வாழ்வதற்கு காரணம். *சாதி சமய மதங்களின் பொய்யான கடவுள்கொள்கையை* தோற்றுவித்தவர்கள் என்பதை மனிதன் தன்னுடைய உயர்ந்த அறிவால் சிந்தித்து தன்னைத்தானே உணர்ந்து  அறிந்து கொள்ள வேண்டும்.


*மனிதன் தன்னையும் தன்னை சார்ந்துள்ள அனைத்தையும் படைத்த கடவுளை தெரிந்து கொள்ளவே மனிதனுக்கு உயர்ந்த அறிவையும் உயர்ந்த சிந்தனையும்.எண்ணம்.சொல்.செயல் மூலமாக தன்னைத்தானே அறிந்து  சிந்தித்து உணர்ந்து தெரிந்து கொள்ளவே உயர்ந்த அறிவு கடவுளால் கொடுக்கப்பட்டு உள்ளது.* அந்த அறிவை மறைத்துக் கொண்டுள்ளது.சாதி சமயம் மதம் என்னும் பொய்யான கொள்கையின் அஞ்ஞானம் அறியாமை என்னும் திரைகளாகும். அந்த உண்மையை கீழ் கண்ட பாடலில் பதிவு செய்துள்ளார்.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்* !


*சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச் சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே*


ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே


நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே


வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.! 


மேலே கண்ட பாடலின் வாயிலாக சாதி.சமயம்.

மதங்களின் கொள்கைகளாலும் சாத்திரக் குப்பைகளாலும் ஆதியில் இருந்தே (பல ஆயிரம் ஆண்டுகளாக) மனிதன் வீணே அலைந்து வாழ்ந்து போது போக்கி கழித்துக்கொண்டு இருந்ததை வள்ளலார் வெளிச்சம் போட்டு காட்டுகின்றார்.


*மேலும் ஒரு பாடலில் பதிவு செய்கிறார்*


*எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்*

எடுத்துரைத்தே *எமதுதெய்வம் எமதுதெய்வம்* என்று


கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்


ஐவகைய பூதவுடம்பு அழிந்திடில் என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்


உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.! 


சமய மதங்கள் சொல்லிய பொய்யான சாத்திரங்கள் சடங்குகள் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் மேலும் சம்ரதாயங்களின் வழிகாட்டுதலின்படி உண்மைக்கு புறம்பான கற்பனை ஜட தத்துவ  கடவுள்களை  படைத்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்*


*ஆதலால் நேரிடையாக தொடர்பு கொள்ள வேண்டிய இயற்கை உண்மைக்கடவுளை அறிந்து கொள்ள முடியாமல்* அருளைப் பெற முடியாமல் இறந்து இறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள்.


இயற்கை உண்மை கடவுளின் தன்மை எவ்வாறு உள்ளது.எங்கே இருந்து செயல்பட்டு கொண்டுள்ளது என்பதை கீழே கண்ட பாடல் வாயிலாக வள்ளலார் பதிவு செய்கிறார்.


இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்


செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்


வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்


உயத்தரும்ஓர் சுத்த சிவானந்த சபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.! 


மேலே தான் கண்ட  

இயற்கை உண்மைக்கடவுளை நேரிடையாக தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று *மனிதனும் கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிகொள்ளலாம்* என்ற உண்மைத் தன்மையை வள்ளல்பெருமான் மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.


*இயற்கை உண்மைக் கடவுள் யார்* ?  


இயற்கை உண்மை கடவுள்தான் *அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை* என்னும் *அருட்பேரொளி  ஆண்டவர்* என்பவராகும்.


இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரிலே  கண்டுபிடித்தவர் வள்ளல்பெருமான் ஒருவரே என்ற உண்மையை எடுத்துச் சொன்னால் சில சாதி சமயம் மதம் சார்ந்த சன்மார்க்க அன்பர்களுக்கு வருத்தம் உண்டாகிறது.


*வள்ளலார் சொல்லுகிறார்*


அருளரசை அருட்குருவை *அருட்பெருஞ் சோதியை* என்

அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை


மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்


கருணை நடம் புரிகின்ற கனகசபா பதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.! 


மேலே கண்ட பாடலில் அருள்அரசை அருள்குருவை அருட்பெருஞ்ஜோதியை என்அம்மையை என்அப்பனை என் ஆண்டவனை அமுதை வாரி  கருணைநடம் புரிகின்ற கனகசபாபதியைக் கடவுளை கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் களித்தேன் என்கிறார் வள்ளலார்.


*அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் குணம் அனைத்தும் மனிதனுக்கு உண்டு.மனிதன் அக்கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டும்*. *இதுவே வள்ளலார் வகுத்துதந்த சாதி சமயம் மதம் சாராத சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையாகும்*


*நான்கு ஒழுக்கங்கள்*


வள்ளலார் வகுத்த தந்த சுத்த சன்மார்க்க முக்கிய ஒழுக்க நெறிகளான *இந்திரிய ஒழுக்கம்*.

*கரண ஒழுக்கம்* *ஜீவ ஒழுக்கம்* *ஆன்ம ஒழுக்கங்களை* முழுமையாக கடைபிடிப்பவர்கள் மட்டுமே இறைவன் அருளைப்பெற்று *மரணத்தை வென்று  கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டும்*. இதுவே மனிதனும் கடவுள் ஆகலாம் என்பதாகும்.


வள்ளலார் தான் பெற்ற அனுபவத்தை பதிவு செய்கிறார்.


*அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*

*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*

*மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு*  

*மரணம் 

தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு * ! 


*மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.*! 


ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி


காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி


ஊரமு துண்டு நீ ஒழியாதே அந்தோ

ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்


ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து

அருட்பெருஞ் சோதி கண்டு ஆடேடி பந்து ஆடேடி ! 


என்னும் பாடல் வாயிலாக ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தையும்.

இறைவன் மேல் இடைவிடாத அன்பும்.  மனிதன் கடைபிடிக்க வேண்டிய உணவு ஒழுக்க நெறிகளையும் தெளிவாக வெளிப்படையாக  வெளிச்சம் போட்டுகாட்டுகிறார்.


*சொல்லியவாறு வாழ்ந்தும் காட்டியுள்ளார்*


நாமும் வள்ளலார் வாழ்ந்து காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடித்து பூரண அருளைப்பெற்று. பஞ்சபூத தேகமான  அசுத்த பூதகாரிய தேகத்தை சுத்த பூதகாரிய தேகமாக மாற்ற வேண்டும். சுத்த பூதகாரிய தேகத்தின் தொடர்ச்சியாக சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் அடைந்து. *கடவுளின் இயற்கை உண்மை தேகமான ஞானதேகத்தில்* கலப்பதுவே   மரணத்தை வெல்லுவதாகும். ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக்கொண்டு கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடைந்து வாழ்வாங்கு வாழ்வோம்..


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.