ஆன்மநேய அன்புடையீர் வந்தனம் !
அண்டங்களைப் பற்றி வள்ளலார் அளித்துள்ள பதிலைப் பாருங்கள் .
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள்
ஆனவெலாம் இடங்கள் எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாங் கொண்டவெலாங் கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டம் எலாம் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !
என்றும்
ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்ன முடியா அவற்றின்
ஓராயிரம் கோடி மால் அண்டம் அரண் அண்டம்
உற்ற கோடா கோடியே
திருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதாசிவன்
அண்டம் எண்ணிறைந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தஞ்
சீரண்டம் என்புகலுவேன்
உருவுறு இவ்வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை யாட்கொண்டு மகனாக்கி அழியா
வரம்தந்த மெய்த் தந்தையே
மணிமன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜ பதியே !
மேலும்
குலவு பேரண்டப் பகுதி யோர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விளகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும்
மெய் அறிவு ஆனந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும்
அருட்பெருஞ்ஜோதி என்னரசே !
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் உண்மையான கடவுள் ! அவரால் இயங்கிக் கொண்டு இருக்கும் அண்டங்கள் அளவிட முடியாது கணக்கில் அடங்காது ,எண்ணிக்கையின் இலக்கம் கிடையாது ,சொல்லாலும் ,அறிவாலும் துணிந்து அளக்க முடியாதது ,அந்த அண்டங்கள் தனித்தனியே ,தன்னைத்தானே சுற்றிக் (இயங்கிக் ) கொண்டு உள்ளது .ஒவ்வொரு அண்டங்களுக்கும் உள்ள இடைவெளி அளவிடமுடியாது ,
அந்த அனைத்து அண்டங்களையும் தன்னுடைய அருட் செயலால் இயக்கிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் உள்ளவர்தான் ,...வள்ளலார் கண்ட அருட்பெருஞ் ஜோதி என்னும் பேரோளியாகும், அந்த இடத்திற்கு ''அருட்பெருவெளி ''என்பதாகும்.அந்த பெருவெளியைப் பார்த்தவர்கள் ..சென்றவர்கள் ..களித்தவர்கள்..வள்ளலாரைத் தவிர வேறு யாரும் இல்லை .
அதனால்தான் வள்ளலாரைத் தன்னுடைய அன்பு மகனாக்கிக் கொண்டு ..பூரண அருளைக் கொடுத்து...தன்னுடைய ''அருள் அரசை''ஒப்படைத்துள்ளார் ,
மேலும் வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !
சபை எனது உளம் எனத்தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !
அருள் அமுது அளித்தனை அருள்நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ் ஜோதி !
உலகு உயிர்த் திரள் எல்லாம் ஒளிநேறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செய்யத் தந்தனை
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி !
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும்
பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை !
சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் தந்தனை!
உலகினில் உயிர்களுக்கு வரும் இடையுறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !
சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக
உததமன் ஆகுக ஓங்குக என்றனை !
ஆதியில் அறியா அருள் அரசாட்சியில்
ஜோதி மாமகுடம் சுட்டிய தந்தையே !
தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே !
தன்கையில் பிடித்த தனிஅருட் ஜோதியை
என்கையில் கொடுத்த எனதணித் தந்தையே !
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்ப்ருஞ் ஜோதி !
மேலே கண்ட வரிகளில் தன்னுடைய அனுபவத்தையும் ,அருள் அனுபவத்தையும் ,தன்னுடைய ஆற்றல் களையும் ,கண்டு ...அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தனக்கு கொடுத்த பதவிகளைப் பற்றி தெளிவு படுத்தி உள்ளார் .
இப்போது எண்ணில் அடங்காத பலகோடி அண்டங்களையும் ,அதில் உள்ள இயக்கங்களையும் ..அதில் உள்ள ஆன்மாக்களையும் ..உயிர்களையும் ...அனைத்து கருவிகளையும் ..சத்தி சத்தர்களையும் ..கர்மசித்தி ...யோகசித்தி ..ஞானசித்தி ..பெற்ற அருளாளர்களையும் இயக்கிக் கொண்டு இருப்பவர் வள்ளலார் என்னும் அருட்பெரும் ஜோதியாகும் .வள்ளலார் இப்போது அருட்பெருஞ் ஜோதியாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து புரிந்து கொண்டால் நாம் மேல் நிலைக்கு செல்லுவதற்கு ஏதுவாக இருக்கும் .
மேலும் வள்ளலார் சொல்லியது !
அருட்ஜோதி யானேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு !
மேலும் பக்தியை நான் குறை சொல்லவில்லை ,பக்தி என்பது மனநெகிழ்ச்சி மன உருக்கம் ....அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம் .எல்லா உயிர்கள் இடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே சுத்த சன்மார்க்கம் .என்பதாகும் .
பக்தியால் இந்திரியம் கரணம் மகிழ்ச்சியடையும் ...ஜீவகாருண்யத்தால் ,உயிர் இரக்கத்தால்,இந்திரியம் கரணங்கள் ,ஜீவன் என்னும் உயிர் ,ஆன்மா அனைத்தும் மகிழ்ச்சி அடையும் .அதனால் அன்பு உண்டாகும்....அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் ,அறிவு உண்டானால் அனுபவம் உண்டாகும் ,அனுபவம் உண்டானால் அருள் உண்டாகும் .அருள் உண்டானால் ,சுத்ததேகம் ,பிரணவ தேகம் ,ஞானதேகம் என்னும் முத்தேக சித்தி என்னும் சுத்த பிரணவ ஞான தேகம் ...என்னும் அருள் தேகம் பெற்றுக் கொள்ளலாம் என்பது வள்ளலார் கண்ட சாகாக்கலை யாகும் .சாகாக்கல்வி யாகும் .
பக்தியினால் நாம் மேலே செல்ல முடியாது .பக்தி என்பது சாதி .சமய,மதம் சார்புடையது ....சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்பார் .இன்னும் எத்தனைப் பிறவிகள்தான் பக்தியில் இருப்பது ...நாம் சித்திக்க வேண்டும் .சாதியும்,மதமும் சமயமும் பொய் என்பதை உணர்ந்து கொண்டால்தான் நாம் மேலே ஏறமுடியும் ....அதைத்தான் ..ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் மாயா திரைகள் என்கிறார் வள்ளல் பெருமான் .ஆன்மாவின் திரைகள் நீங்க வேண்டுமானால் ..அன்பு ..தயவு ..கருணை ..என்னும் பொது நோக்கம் வேண்டும் .
கலை உரைத்த கற்பனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகளை முழுதும் விட்டுவிட்டு உண்மையான கடவுளின் வழிபாட்டு முறையான ,உயிர் இறக்கம் ,ஜீவ காருண்யம் ,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பொது உணர்வு வரவேண்டும் .
உண்மையை அறிந்து உண்மையுடன் வாழ்ந்து உயர்நிலையை அடைவோம் .
ஆண்மநேயன் ----கதிர்வேலு .