அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் !
அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் !
வள்ளல்பெருமான் 51 ஆண்டுகள் இவ்வுலகில் மனித தேகத்தோடு வாழ்ந்துள்ளார்.
வள்ளல்பெருமான் அவர்கள் குழந்தைப் பருவமான ஆரம்ப கால முதல் சித்தி பெறுகின்ற வரை தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டே வருகின்றார்.
வாழ்க்கை முறைக்குத் தகுந்தாற்போல்.அவருடைய செயல் மாற்றமும்.அவர்தம் உடம்பு மாற்றமும் மாறுபடுகிறது.
1823 ஆம் ஆண்டு முதல் 1867 ஆம் ஆண்டுவரை உலக சமய மத வழக்கப்படி பக்தி மார்க்கத்தில் மூழ்கியது போல் உருவ வழிப்பாட்டு முறைகளான தத்துவ தெய்வங்களை வணங்கியும் வழிப்பட்டும்.அத் தெய்வங்கள் பெயரால் பல ஆயிரம் பாடல்களை பாடியும் இயற்றியுள்ளார்.
*அதன் பயனாக இம்மை இன்பவாழ்வு என்னும் சுத்ததேகம் பெற்றுள்ளார்*.
25-05-1867 ஆம் நாள் தமிழ் வருடம் பிரபவ ஆண்டு வைகாசி 11 ஆம் நாளில் *வடலூரில் சத்திய தருமச்சாலை நிறுவினார்கள். 1867 முதல் 1870 ஆண்டு வரை.உருவ வழிப்பாட்டை தவிர்த்து விட்டு *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்*. *உயிர்இரக்கமே* *கடவுள் வழிபாடு* *என்றும்* *ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்* என்றும் அன்பு தயவு கருணையினால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று மரணத்தை வெல்ல முடியும் என்ற உறுதிப் பாட்டுடன் வாழ்கிறார்.
ஜீவ காருண்யத்தினால் அடையும் *ஆன்ம லாபத்தைப் பற்றியும்* .அதன் வல்லபத்தைப்பற்றியும். அதனால் கிடைக்கும் *இம்மை இன்பவாழ்வு.மறுமை இன்பவாழ்வு. பேரின்பவாழ்வு* போன்ற மூன்று லாபங்களைப் பெறலாம் என்ற உண்மையை மக்களுக்கு விளக்கமாக தெளிவாக போதிக்கிறார். *ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூல் வழியாக விளக்கமாக வெளியிடுகிறார்*.
*அதுசமயம் அந்த காலங்களில் மறுமை இன்பவாழ்வு என்னும் பிரணவதேகம் பெற்றுள்ளார்*.
1870 ஆம் ஆண்டு முதல் 1874 ஆம் ஆண்டு வரை *இயற்கை உண்மையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்* நேரிடையாக தொடர்பு கொண்டு. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியவாறு செயல்படுகிறார். அக்காலங்களில் *பூரண அருள் பெற்று *பேரின்ப வாழ்வு என்னும் ஞானதேகத்தில் வாழ்கிறார்*.
இயற்கை உண்மை கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காக.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வடலூரில் 1872 ஆம் ஆண்டு *இயற்கை விளக்கமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவிக்கிறார்*.
*ஞானதேகத்தில் வாழ்ந்து கொண்டு இருந்த வள்ளல்பெருமான் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியவாறு எழுதியதுதான்* *திருவருட்பா ஆறாம் திருமுறையாகும்.* அந்த அறிய ஆறாம் திருமுறையை மேட்டுகுப்பம் சித்திவளாக திருவரையில் தங்கி எழுதுகிறார். ஆகவேதான் *நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன்தன் வார்த்தை என்று மிகவும் அழுத்தமாகச் சொல்லுகின்றார்*.
ஒன்றுமுதல் ஐந்து திருமுறை வரை சுத்ததேகம்.பிரணவதேகத்தில் எழுதியது.
*ஆறாம் திருமுறை மட்டும் சுத்த பிரணவ ஞானதேகத்தில் எழுதியதாகும்*.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி பூரண அருள் பெற்று 30-01-1874 ஆம் நாள் (ஸ்ரீமுக ஆண்டு தைத்திங்கள் 19ஆம்நாள்) வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து தன்னுடன் கலந்து கொண்டார்..
*மகா மந்திரம்* !
22-10-1873 ஆம் நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைக்கு என மேட்டுகுப்பத்தில் சன்மார்க்க கொடியை ஏற்றி பேருபதேசம் அதாவது (மகா உபதேசம்) என்னும் உரை நிகழ்த்துகிறார்.
அந்த உபதேசத்தில் கடவுள் உண்மையும் அவற்றின் உண்மைத் தன்மையும். அதனால் அடையும் அருள் விளக்கமும்.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்.
அசுத்த சுத்த மாயா திரைகளும்.அவற்றை விலக்கும் வழிமுறைகளும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கும் வழிபடும் வழிமுறைகளையும்.ஆண்டவரை எவ்வாறு ஓதி துதிக்க வேண்டும் என்ற *மகா மந்திரச் சொல்லையும்* வெளிப்படுத்துகின்றார்..
உலகில் உள்ள எல்லா மந்திரச் சொற்களுக்கும். முதன்மையானதும் முக்கியமானதும் தலைமையானதும் ஆன மகா மந்திரச் சொல்தான்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!
என்னும் மகா மந்திரமாகும் இம் மகாமந்திர மகா வாக்கியத்தை ஆண்டவர் கட்டளைப்படி வெளியிடுகிறார்...
*வள்ளலார் வாக்குமூலம் !*
சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது *சிவாயநம என்றும், நமசிவாய என்றும்,* இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, *ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு* முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... *நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை*
*இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை.* சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை..
*இத் தருணம்* ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி *எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு* முடிவான இன்பானுபவத்திற்குச் *சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை* - *தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை*-
*எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்*, எனது *மெய்யறிவின்கண்* அனுபவித்தெழுந்த - உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய
*ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை* யைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். *நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்:*
நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக
*அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி*
என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். *தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.
மேலும், இதுகாறும் *தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்*. சுத்த மாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. *சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் *இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள்.*
ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் *இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்*.
இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் *சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது*. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நபியவர்கள் முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது;
*அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்;* அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
*உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்ல புகுந்தாலும் புரிந்து கொள்வாரில்லை.* கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.
*முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.* இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். *நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் *இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது*. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
எல்லோர்க்கும் *தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்.* *இது ஆண்டவர் கட்டளை.*! என நிறைவு செய்கிறார் வள்ளல்பெருமான்..
*நாம் எந்நேரமும் நல்ல உணர்வோடு நல்ல சிந்தனையோடு மகாமந்திரச் சொல்லை இடைவிடாது* *சிந்தித்து உச்சரிப்பவர்களுக்கு*
*அருள் வல்லபமும் ஆன்மலாபமும்* *கிடைக்கும் என்பது சத்தியமான உண்மையாகும்*
*நமக்கு சத்விசாரம் பரோபகாரம் எனும் இரண்டும் இரண்டு கண்கள் போல் பாதுகாத்து பாவிக்க வேண்டும்*. *அதாவது இரட்டை மாட்டு வண்டிபோல் சம்மாக கடைபிடித்து செல்ல வேண்டும்*
எல்லா மந்திரங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உயர்ந்து நிற்கும் ஒரே மகாமந்திரம்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!
என்னும் மகா மந்திரமாகும்.
*அகவல்*
வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்துநான்பெற வளித்த நாதமந் திரமே!
கற்பம் பலபல கழியினு மழியாப்பொ
ற்புற வளித்த புனிதமந் திரமே!
அகரமு முகரமு மழியாச் சிகரமும்
வகரமு மாகிய வாய்மைமந் திரமே!
ஐந்தென வெட்டென வாறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே!
வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு